அப்போது நான் புதிய பணியில் சேர்ந்திருந்த சமயம். என்னுடைய அலுவலகத்தில் உடன்பணிபுரிகிறவர் வழியாகத் திருவல்லிக்கேணி மேன்சன் ஒன்றில் அறை எடுத்தேன். அதற்கு முன் நண்பர்களோடு இணைந்து ஒரு ஒண்டுக் குடித்தன அறையில் தங்கியிருந்தேன். ஊரில் விரிந்த தாழ்வாரம் கொண்ட வீட்டில் இருந்த எனக்கு அந்த அறைக்குள் மூச்சு முட்டியது. அழைத்துப்போன நண்பர் என்னுடைய மனநிலையைப் புரிந்துகொண்டார். “நல்லவேளை உதவியா வந்தீங்க. இல்லாட்டி இந்தப் பொந்துக்குள்ள மூச்சு முட்டிச் செத்திருப்பேன்” என்றேன் அவரிடம்.
“இப்ப போறதுமே பொந்துதான். ஆனா என்ன? உங்களுக்குன்னு ஒரு தனிப் பொந்து” என்றார் பதிலுக்கு. அவர் சொன்னது எனக்கு அப்போது விளங்கவில்லை. மேன்சன் என்று ஒரு கட்டடத்திற்கு முன்பு நின்றபோதுதான், அதன் அமைப்பைப் புரிந்துகொண்டேன். ஊரில் அப்படியான கட்டுமானத்தைப் பார்த்ததே இல்லை. உள்ளே நுழைந்ததுமே இருளிற்குள் வரிசையாய்ப் பொந்துகள் தெரிந்தன. பிளாஸ்டிக் வாளியைக் கையில் பிடித்தபடி இடுப்பில் வெறும் துண்டைக் கட்டியபடி, நிறைய எலிகள் உலவிக்கொண்டிருந்தன. எனக்கான பொந்தில் ஒரு கட்டில், மேலே ஒரு மின்விசிறி. ஒரு ஆள் நடந்துபோகும் அளவிற்குக் குறுகலான சந்து. அதைத்தான் அறை என்றார்கள். பதிமூன்றாம் எண் கொண்ட அறையை எனக்காக ஒதுக்கினார்கள். “பதிமூணாம் நம்பர். பேய் வீடு அப்படிங்கற பயம் ஏதாச்சும் இருக்கா உங்களுக்கு?” என்றார் நண்பர்.
“ஏன் எப்ப பார்த்தாலும் நமக்குத் தெரியாத ஒன்னு நம்மளை அச்சப்படுத்த வருதுன்னே நினைக்கிறோம்? அப்படியே வந்தா என்ன? உக்காந்து பேசுவேன். துணைக்கு இருந்துட்டு போகட்டும்” என்றேன் வரவேற்பறை மேசையில் இருந்தவரைப் பார்த்து.
“நமக்கு மேல ஏதாச்சும் பேய் உண்டுமா?” என்றார் அங்கிருந்த வயதானவர். அவரைத்தான் மேன்சன் பொறுப்பாளராகப் போட்டிருந்தார்கள். ஊர் அறந்தாங்கிப் பக்கத்தில் என்று சொன்னார். அவர் அதற்கு மேலும் பேசுவதற்கு விருப்பமாகத்தான் இருந்தார். பொறுத்துப் பேசிக்கொள்ளலாம் என நானும் நண்பரும் ஆந்திரா மெஸ்ஸில் போய்ச் சாப்பிடலாம் எனத் திட்டமிட்டு, விக்ரமைத் தொலைபேசியில் அழைத்தார் அவர்.
”என்னோட க்ளோஸ் ப்ரெண்டு. சின்னப் பையந்தான். ஆனா முக்கியமான வழீல பழக்கம் ஆனவன். அவனுக்கு இந்தப் பக்கத்தில இருக்க எல்லா மெஸ்ஸூம் நல்ல பழக்கம். பிராமணால்கள்ளயும் மோசமா சோத்துக்கே கஷ்டப்படுறவங்க இருக்காங்கங்கறத அவனைப் பார்த்துத்தான் தெரிஞ்சுகிட்டேன்” என்றார்.
எதிர்வெயிலில் கைக்குட்டை ஒன்றை எடுத்து முகத்தை மறைத்தவாறு, எலும்பும் தோலுமாய் நடந்துவந்த ஒரு இளைஞனைப் பார்த்து, “இதோ வந்திட்டான்” என்றார். அறிமுகப் படலங்களுக்குப் பின்பு மூவரும் விக்ரமின் யோசனைப்படி காசிவிநாயகா மெஸ்ஸிற்குச் சாப்பிடப் போனோம். ஏதோ திருமண வீட்டுப் பந்தியில் காத்திருப்பதைப் போல ஆள்கள், கையில் இரண்டு மூன்று நிறங்களில் டோக்கன் வாங்கி நின்றது எனக்கு வியப்பாக இருந்தது.
ஹாஸ்டலில் பரிமாறுவதைப் போல, வரிசையாய் அமரவைத்து இலைபோட்டுப் பரிமாறினார்கள். எலும்பும் தோலுமாய் இருக்கிறானே, என்ன சாப்பிட்டுவிடப் போகிறான் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். நாங்கள் ரசத்திற்குப் போனபோதுதான் அவன் பருப்பை முடித்துவிட்டுச் சாம்பாருக்கு வந்தான். இது வேலைக்கு ஆகாது என அவனைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு என்னுடைய இலையில் கவனம் செலுத்தினேன்.
“இங்கதான் மேன்சன்ல இருக்கார். அடிக்கடி போய் பார்த்துக்கோ. ஏதாச்சும் உதவி கேட்டா செஞ்சு கொடு” என விக்ரமிடம் என்னை ஒப்படைத்துவிட்டுக் கிளம்பிப் போனார் என்னுடைய நண்பர். பிறகு நான் பல சமயங்களில் யோசித்து இருக்கிறேன், அவர் அவனைத்தான் என்னிடம் ஒப்படைத்துச் சென்றாரென. அறைக்குத் திரும்பும்போது அவனும் உடன்வந்தான்.
“இந்த மாதிரி ரூம்ல இருக்கேன்னு தெரிஞ்சா எங்க வீட்டில வேலைக்கே போகவேண்டாம், இங்க வந்து ஏதாச்சும் தொழிலப் பாருன்னு சொல்லிடுவாங்க” என்றேன். “பாஸ் இக்கரைக்கு அக்கரை பச்சை. எனக்கெல்லாம் இப்டீ ஒரு ரூமு கிடைச்சா ஹாயா படுத்துக்குவேன். எங்க வீட்டுக்கு வந்து பாருங்க” என்றான். சென்னையில் ஏன் எல்லோரும் தங்களது வசிப்பிடம் குறித்த மனக்குறையுடனேயே இருக்கிறார்கள் என்கிற கேள்வி எனக்குள் வந்தது. ஊரில் குடிசையாகத்தான் இருக்கும் என்றாலும், காலார நடந்துவிட்டுவரக் கூடுதலாகத் துண்டு நிலமாவது அதையொட்டி இருக்கும்.
காங்கிரீட் காடு அது என்றுதான் ஆண்டாண்டு காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். புதிதாய் நானென்ன கண்டுபிடித்துவிட்டேன் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, “கட்டாயமா ஒருநாள் நீங்க என்னோட வீட்டுக்கு வரணும். அதுக்குப் பிறகு சமாதானம் ஆயிடுவீங்க. எந்தப் பேய் வந்தாலும், தெரியாத அளவுக்கு அடிச்சுப்போட்ட மாதிரி நிம்மதியா தூங்குவீங்க” என்றான் விக்ரம்.
விக்ரம் அப்போது எம்.ஏ படிப்பைப் பாதியில் விட்டிருந்தான். என்ன காரணம் என்று அடுத்தத் தடவை வந்திருந்தபோது கேட்டேன். “சொந்தக்காரங்க ஸ்பான்ஸர்லதான் படிச்சேன். இப்ப திடீர்னு தரமுடியாதுன்னு நிறுத்திட்டாங்க. அம்மா அப்பா வயசானவங்க. நான் பிறந்தப்பயே ரெண்டு பேருக்கும் வயசு நாற்பத்தஞ்சை தாண்டிருச்சு. நான் பிறந்ததே எதிர்பாராத கணிக்கவே முடியாத விபரீதம்” என்றான். அந்தக் கதையை அப்படியே பாதியில் முறித்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
ஆரம்பத்தில் சோற்றுக்காக என் தலையில் நண்பர் அவனைக் கட்டிவிட்டுச் சென்றாரோ என்கிற எண்ணமே இருந்தது. ஆனால் விக்ரம் ஒருபோதும் என்னிடம் அதைக் கோரிவந்து நின்றதில்லை என்பதைச் சில நாள்களிலேயே உணர்ந்தேன். நானாக அழைக்காமல் அவன் என்னைப் பார்க்க வந்ததே இல்லை. பட்டன் போன் ஒன்றை வைத்திருந்தான். அதை மாற்றித் தரவா எனக் கேட்டபோது, “பாஸ் அவரு பேச்சு தொணைக்குத்தான் அனுப்பி இருக்காரு. இதுக்கெல்லாம் இல்லை” என்றான் சுருக்கமாக.
நன்றாகக் கவனித்துப் பார்த்த வகையில், அவனைப் பற்றிய கதைகளை அவனாகவே சொன்னதில்லை. அறையில் பேச்சினிடையில் ஒரு அமைதி வந்துவிட்டால், அதை மறுபடி குத்திக் கிழிக்கிறவன் நானாகத்தான் இருக்கும். விக்ரம் அந்த அமைதியைக் குலைக்காமல் சத்தமில்லாமல் என்னுடைய முகத்தையே பார்த்து அமர்ந்துகொண்டிருப்பான், அடுத்து என்ன என்பதைப் போல. வலியப்போய் நானாக அடுத்த பேச்சைத் துவக்க வேண்டியிருக்கும்.
பொதுவாகவே அமைதியாக இருப்பவர்களை எங்களூர் பக்கத்தில் கல்லூளிமங்கன் என்று சொல்வார்கள். “குசு மாதிரி மெல்ல மெல்லமா சுத்திமுத்தி பாத்திட்டு பேச்சை விடறவனை மட்டும் நம்பக்கூடாது. சத்தமா பிரியிற காத்துல அடர்த்தி இருக்காது” என்று சொல்வார்கள். அதற்காக அதிகமும் பேசிவிடக் கூடாதுதான். எல்லா ஊருக்குப் போவதற்கும் நடுவில் ஒருபாதை இருக்குமே? அதுதான் சிறந்தது என்பது என்னுடைய நினைப்பு.
ஆனால் விக்ரம் நன்றாகப் பேசக் கூடியவன்தான் என்பதைப் பேச்சின் சரளத்தில் அறிந்தேன். ஏதோ புதிய தயக்கம் அவனுக்குள் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அவன் குடிப்பானா என்கிற சந்தேகமும் இருந்தது. மெதுவாக அதைப் பற்றிச் சுற்றி வளைத்துக் கேட்டபோது, “பாஸ் இப்ப குடியெல்லாம் அன்றாட நடவடிக்கையில ஒன்னா ஆயிருச்சு. நான் அப்படிக் குடிக்கிறது இல்லை. ஆனா உங்களை மாதிரி கிராமத்துக்காரங்க அதைப் பார்த்து எப்பவும் ஏன் பயந்துகிட்டே இருக்கீங்க? அதனாலதான் வாய்ப்பு கிடைச்சா மொடா குடியனா மாறிப் போயிடறாங்க சிலர். அது என்ன பாஸ்? கொஞ்ச நேரத்துக்கு உடம்புக்குள்ள நடக்கிற கெமிக்கல் ரியாக்ஷன். அதுக்கு ஏன் இவ்ளோ முக்கியத்துவம் தர்றீங்க? அரைமணி நேரம் கழிச்சு ஒன்னுக்கடிச்சா போயிடப் போகுது” என்றான் விளக்கமாக. அவன் அவ்வாறெல்லாம் பேசுவான் என்பதே அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.
இரண்டு பேருக்கும் சேர்த்து ஓல்டு மங்க் அரைப்பாட்டிலை வாங்கிக்கொண்டு வந்தேன். அறையில் கட்டிலுக்குக் கீழே கால்பரப்பி அமர்ந்து பாட்டிலை வைத்துவிட்டு, இலையைப் பிரிக்கத் தயங்கி, “சிக்கனு இருக்குது” என்றேன். “ஏன் என்ன பிரச்சினை? நான் சாப்பிடுவேன். நல்ல புரோட்டின். ஆனா வீட்டுல இதுவரைக்கும் சொன்னதில்லை. எதுக்கு அவங்க நம்பிக்கையை இடிக்கணும்னு விட்டுட்டேன்” என்றான்.
விக்ரமின் தோழமையான அணுகுமுறையைக் கண்டு உற்சாகமாகிப் பொட்டலத்தைப் பிரித்தேன். ஆனால் அதிலிருந்து அவன் எடுக்காமல் இருந்ததைச் சுட்டிக் காட்டியபோது, “நான் சாப்பிடுவேன்னுதானே சொன்னேன்? இப்ப சாப்பிடறேன்னு சொல்லலையே? இன்னைக்கு ஏகாதசி. எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனா எங்க அப்பா அம்மாவுக்காகச் சாப்பிடலை” என்றான். அவன் என்னை ஏமாற்றுகிறானா என நினைத்து நிமிர்ந்து பார்த்தேன். சத்தியமாகச் சொல்கிறேன் என்பதைப் போல நெஞ்சில் கை வைத்துத் தலையை ஆட்டிச் சொன்னான். பிறகு என்ன நினைத்தானோ, அதிலிருந்து ஒரு நுனியளவு கோழிக்கறியை எடுத்து, நாக்கின் நுனியில் வைத்துவிட்டு அதைக் குப்பையில் போட்டான்.
“இப்ப உங்களுக்காகவும் இதைச் செய்றேன்” என்றான். “நிச்சயமா இது போங்காட்டம். ரெண்டு தரப்புக்குமே இதுல சமாதானம் இல்லை” என்றேன். “என்ன பண்றது பாஸ்? இப்பிடி எதையாச்சும் பிடிச்சுத் தொங்காட்டி எனக்கும் தூக்கம் வரமாட்டேங்குது. எல்லாரும் ஒரே ரோட்டில போனா, எனக்குக் குறுக்க மறுக்க சுத்தி நடக்கணும்னு தோணுது. கவனிச்சுப் பாத்து இருக்கீங்களா? பைத்தியங்க என்னைக்கும் நேர் ரோட்டில நடக்க மாட்டாங்க. அவங்க மூளைக்குள்ள வளைவு நெளிவுதான் சிலந்தி வலைமாதிரி இருக்கும்” என்றான். அப்போது அவன் முதல் சுற்றை முடித்து இருந்தான்.
அடுத்தச் சுற்றை ஊற்றப் போகையில் தடுத்துவிட்டு, “வேண்டாம் பாஸ். எப்பவும் ஒரு ரவுண்டுதான் அடிப்பேன். அதிலயே போதை ஆயிட முடியும் என்னால. ஆனா முதல்லயே கொஞ்சம் டைட்டா ஊத்தி அடிச்சுக்குவேன். ரெண்டு அடிச்சாலும் மூணு அடிச்சாலும் அதான் இருக்கப் போகுதுன்னு தெரியும். அப்புறம் எதுக்குன்னு விட்டிருவேன். அப்புறம் என்னோட எகனாமிக் ஸ்டேட்டஸையும் பார்க்கணும்ல? பழகிட்டோம்னா காசுக்கு எங்க போறது?” என்றான்.
“பரவாயில்லை அடிங்க. வாங்கிக்கலாம்” என்றதற்கு, “வயித்தைக்கூட இன்னைக்கு கொஞ்சம் குறைச்சலா கொடுத்து நாளைக்கு அதிகமா கொடுத்து ஏமாத்தலாம். ஆனா போதை விஷயத்தில மனசை ஏமாத்த முடியாது. மூளை குறிச்சு வச்சுக்கும் அளவை. இன்னைக்கு இப்டீ. நாளைக்கு அப்டீன்னு மனசை போதை விஷயத்தில ஏமாத்த முடியாது. இப்படி இருந்துக்கறதுதான் பெட்டர்” என்றான்.
மூன்றாவது சுற்றில் நான் இருந்தபோது அவனை நிமிர்ந்து பார்த்தேன். நான்காவது சுற்றில் இருப்பதைப் போலப் போதையுடன் இருந்தான் விக்ரம். “என்னைப் பத்தி கேட்கணும்னு உங்களுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு. அதுக்குத்தான் குடிக்கக் கூப்டீங்கன்னு தெரியும். நானே சொல்றேன்” என்று சொல்லிவிட்டுச் சட்டையைக் கழற்றி ஓரமாக வைத்தான். கழுத்து எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. மஞ்சள் பூத்திருந்த ஓட்டைகளுடன்கூடிய வெள்ளைப் பனியன் அணிந்து இருந்தான். அந்தக் காட்சியில் ஏதோ ஒன்று விடுபட்டு இருந்ததைப் போலவும் தோன்றியது.
அவனுடைய கழுத்து எலும்புகளை உற்றுப் பார்ப்பதைப் பார்த்துவிட்டு, “எங்கப்பாவும் அம்மாவும் என்னை மாதிரி ஒல்லியாத்தான் இருப்பாங்க. இது குடும்ப உடல்வாகு. ஆனா இப்ப எங்கப்பா அம்மா ரெண்டு பேரையும் வந்து பாருங்க. வறுமை ரெண்டு பேரையுமே உருக்கிருச்சு. ரெண்டு பேரும் திடீர்னு சுருங்கிக்கிட்டே போறாங்க. எனக்கு அதைப் பார்க்கப் பார்க்க துயரமா இருக்கு” என்று சொல்லிவிட்டுப் போதையில் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டு இருந்தான்.
வாரேல் என்பதைப் போலவா அது என நினைத்தேன். அவனாகவே மடைவெள்ளம் மாதிரி அவனுடைய கதையை என்ன நினைத்தானோ, என்னிடம் சொல்லத் தொடங்கினான். விக்ரமுடைய அப்பா ஒரு ஆடிட்டர் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக இருந்தவர். “அவர் நெனைச்சா அவருக்கு இருந்த ஞாபக சக்திக்கு அரசாங்கத்தில பெரிய ஆபிஷரா போயி உக்காந்திருக்கலாம். ஆனா அவருக்கு தோணவே இல்லன்னு சொன்னார். நான் அழுத்தி அழுத்தி கேட்டப்ப, என்னால கூட்டத்தில போயி நிக்க முடியலை. ஒதுக்குப்புறமா வாழ்ந்துட்டு போயிடணும்னு தோணுச்சு அப்படின்னார். என்னால அதை கடைசிவரை புரிஞ்சுக்கவே முடியலை” என்றான் விக்ரம்.
அவனுடைய அப்பா சொற்பச் சம்பளத்திலேயே தன்னுடைய வாழ்வை முடித்துக்கொள்வது என வேண்டி விரும்பி இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாராம். விக்ரமின் அம்மாவும் அப்பாவும் திருமணம் செய்துகொண்டபோது, இருவருக்குமே வயது நாற்பது. அவனுடைய அம்மாவுமே வறுமைப்பட்ட குடும்பத்தில் பிறந்த மூத்த பெண். இருவருமே அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே படித்திருக்கிறார்கள்.
விக்ரமின் அம்மா பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு டியூசன் எடுப்பார், பாட்டு கற்றுக் கொடுப்பார். “உடல்வாகுன்னு சும்மா பொய் சொன்னேன். எங்கப்பா அம்மா ரெண்டு பேரோட சின்ன வயசு போட்டோ பாத்திருக்கேன். நல்லாத்தான் இருந்தாங்க. நான் பெறந்தப்பயே வறுமைதான் தாண்டவம் ஆடிக்கிட்டு இருந்துச்சு. என்கூடப் படிச்ச பசங்க எல்லாம் பார்த்தசாரதியைத் தூக்கிட்டு போற அளவுக்கு பலசாலிங்க. என்னால ஊதுபத்தியைக்கூட சின்ன வயசில இருந்து தூக்க முடியாது. எந்நேரமும் பசி இருந்துகிட்டே இருக்கும். அதுக்காக பிச்சை எடுத்தேன்னு சொல்லலை. சாப்பாட்டுல ஒரு குறை இருந்துச்சு, அவ்ளோதான்” என்றான்.
அவன் பிச்சையெடுக்கவில்லை என்று உபயோகப்படுத்திய வார்த்தை எனக்குச் சங்கடத்தைத் தந்தது. “எல்லாரும் ஒருகாலத்தில பிச்சைதான் எடுத்தோம். எங்களையே எடுத்துக்கிட்டாலும் வசதி வாய்ப்பு எல்லாம் இப்பத்தான் வந்திருக்கு” என அவனைச் சமாதானப்படுத்தும் விதத்தில் சொன்னேன்.
“பிச்சைங்கறது தப்பான வார்த்தை ஒன்னும் கிடையாது. காசு வாங்கறாங்க. அவ்ளோதான். ஆனா ஒன்னு தெரியுமா, இங்க நாங்க பிச்சை எடுக்கக்கூட போக முடியாது. அந்தா பாரு, ஐயரு பிச்சை எடுக்கிறாருன்னு வேடிக்கை பொருளாத்தான் பார்ப்பாங்க. நிம்மதியா பிச்சைகூட எடுக்க முடியலை. அதை செஞ்சிரக் கூடாதுன்னு ஒன்னு தடுக்குது பாருங்க. அதைப் பிடிச்சுக்கிட்டுதான் பல பேர் இங்க எங்களை மாதிரி இருக்கறாங்க. அதை உதர்ற அன்னைக்கு நாங்களும் தெருவில இறங்கிடுவோம்” என்று அவன் சொன்னபோது கவனமாக உற்றுப் பார்த்தேன்.
அவனுக்கு இருப்பது ஆழமான பிரச்சினை எனப் புரிந்துகொண்டேன். அவன் சிந்திப்பதிலோ நடந்துகொள்வதிலோ எந்தப் பிசகும் இல்லை. ஆனால் அவன் தன்னை உச்சாணிக் கொம்பில் வைத்துக்கொண்டெல்லாம் ஒருத்தரிடம் இருந்து விலகிப் போவதில்லை. தன்னை ஏகத்துக்கும் கடைசி இடத்தில் வைத்துப் புழுங்கி ஒதுங்கி இருப்பது போலத் தெரிந்தது. அவனுக்குள் நுழைந்து ஆராய்ச்சிகள் செய்கிற மாதிரி அவனளவிற்குச் சிந்திக்கவில்லை என்றாலும், ஏதோ தோன்றியது அப்போது.
கல்லூரியின் இளங்கலைப் படிப்பு வரை அவனது அம்மா வழியில் சித்தி ஒருத்தர் அமெரிக்காவில் இருந்து பணம் அனுப்பி இவனைப் படிக்க வைத்திருக்கிறார். ஆனால் இப்போது அந்தம்மா அமெரிக்காவில் பக்கவாதம் வந்து படுக்கையில் படுத்துவிட்டதால், பண வரவு நின்றுவிட்டது. மீதிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குப் போகலாம் என அந்தரத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தான், என்னோடு பழக்கமான சமயத்தில்.
“ஏன் உங்கப்பாதான் விட்டிட்டாரு. உங்களுக்கு இருக்க நாலேட்ஜூக்கு நீங்க இப்ப சிவில் சர்வீஸ் படிக்கலாம்ல?” என்றேன். “பாஸ் ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க. ஒரு நாயை சின்ன வயசில இருந்தே பசியைக் காட்டி அடிமையா வாழப் பழக்கிட்டு திடீர்னு அதை வேட்டை நாயா மாறுன்னு சொன்னா எப்டீ மாறும்? என் அடிப்படையே கூனிக் குறுகி இருக்கு பாஸ். தன்னிரக்கம்லாம் இல்ல. அதுக்கும் கூடுதலா. அதை எப்டீ உங்களுக்கு கன்வர்ட் பண்றதுன்னு எனக்குத் தெரியலை” என்றான்.
“சும்மா உங்களை ஏமாத்திக்கறீங்க. ஏன் நாங்கள்ளாம் இங்க வேலைக்குப் போகலை. வேலைக்கு போகாம இருக்கறதுக்கு ஒரு சாக்கு” என்றேன் போதையின் உச்சத்தில் தூண்டலாக.
“ஆமா அதுக்கும் வாய்ப்பு இருக்கு. எங்கப்பாம்மா ரெண்டு பேருமே தடங்கலா இருக்காங்கன்னுகூட எனக்கு தோணிருக்கு. ரெண்டு பேரும் சீக்கிரம் செத்துட்டா எனக்கு அடுத்த வழி கிடைச்சிரும். அது எனக்கு விருப்பமானதா, இல்லையாங்கறது வேற பிரச்சினை” என்று சொல்லிவிட்டு ஆழமாகக் காயம்பட்ட வெண்கொக்கினைப் போலத் தலையைக் குனிந்துகொண்டான்.
சங்கடமாக இருந்தது எனக்கு. “சாதாரணமா கேட்டேன். அதுக்காக அப்பா அம்மா சாகறதை பத்தி எல்லாம் பேசற. இல்லை பேசறீங்க” என்றேன். “சும்மா வா போன்னே கூப்டுங்க. உங்களைவிட சின்னப் பையன்தானே? உண்மை முகத்தில அறையத்தான் செய்யும். அதோட கையால அடிவாங்காம யாராலயும் தப்பிச்சு ஓட முடியாது. ரெண்டு பேர் மட்டும்தான் இந்த உலகத்தில எனக்குன்னு இருக்காங்க. ஆனா ரெண்டு பேருமே துயரம். இனிமே கோடி கோடியா நான் சம்பாதிச்சாகூட அவங்களை என்னால புஷ்டியா மாத்த முடியாது. ஏற்கெனவே புழு கடிச்சு தின்னு முடிச்ச பழமா கடைசி ஸ்டேஜ்ல இருக்காங்க. நீங்களே வந்து பாருங்க” எனச் சொல்லிவிட்டு எழுந்து நின்று சட்டையைப் போட்டான்.
”தண்ணியடிச்சிட்டு ஒருநாளும் வேற வீட்டுக்கு நாங்க போக மாட்டோம். இது எங்களோட கஸ்டம்ஸ். அதை புரிஞ்சுக்கணும் விக்ரம்” என்றேன் அவனை அமரவைக்கும் நோக்கில். “வேண்டாம்னு சொன்னாலே விட்டிருவேன். அதுக்காக எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க” என்று சொல்லிவிட்டு மறுபடியும் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு அமர்ந்தான்.
“இன்னைக்கு போதும். வேற என்னைக்காச்சும் மீதியை சொல்றேன். இன்னைக்கு வண்டு குடைஞ்ச பழம்ங்கறதுலயே மனசு நின்னிருச்சு” என்று சொல்லிவிட்டு, தரையில் கிடந்த விளக்கமாறைத் தள்ளிவிட்டு அப்படியே சாய்ந்து படுத்தான். நந்தினியில் வாங்கிய உயர்தரச் சைவச் சாப்பாடு ஒன்று அவனருகே அதுபாட்டுக்குப் பிரிக்காமலேயே கிடந்தது. அது அவன் பிரச்சினை எனக் கட்டிலில் ஏறிப் படுத்துவிட்டேன்.
மாலை உறக்கம் கலைந்து எழுந்தபின், அவனை அங்கே காணவில்லை, கூடவே சைவச் சாப்பாட்டுப் பார்சலையும். சாப்பிட்டு முடித்து தூக்கிப் போட்டிருப்பானோ என நினைத்து அறை வாசலில் இருந்த குப்பைத் தொட்டியில் பார்த்தபோது, அதற்கான தடயமே இல்லை. வீட்டிற்கு எடுத்துப் போயிருப்பானோ? யோசிக்கவே சங்கடமாக இருந்தது எனக்கு.
இரண்டுநாள் கழித்து அவனே எனக்குத் தொலைபேசி செய்து, “பாஸ் நைட் இன்னைக்கு வர்றேன். பேசிக்கிட்டு இருக்கணும்னு தோணுச்சு” என்றான். அவனே அழைத்திருப்பதால், அப்படி என்ன பேசப் போகிறான் என்கிற ஆர்வம் எனக்குள் எட்டிப் பார்த்தது. மாலையில் பழைய மாதிரியே ஓல்ட் மங்க் வாங்கிக்கொண்டு அறைக்குப் போனேன்.
எனக்கு முன்னமே மேன்சனில் வந்தமர்ந்து, தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு புள்ளி விபரமாகச் சொல்வதைப் பார்த்து, என்னுடைய மேன்சன் நண்பர்கள் அவனுடன் ஒட்டிக்கொண்டார்கள். நான் போவதற்கு முன்பே சிலரிடம் அவன் அறிமுகமும் ஆயிருந்தான். போனபோது, “நல்ல மூளைக்காரரு. எவ்ளோ விஷயத்தைக் கொட்டுறாரு. இவ்ளோ ஞாபக சக்தி இருக்கற ஆளை நான் பார்த்ததே இல்லை. அநியாயத்துக்கு நல்லா இங்கலீஸ் பேசறாரு. பாரீன்காரரு ஒருத்தர் வழி தெரியாம வந்து நின்னப்ப அருவி மாதிரி கொட்டினாரு” என்றான் அருப்புக்கோட்டைக்காரன்.
“எல்லார்ட்டயும் ப்ரெண்ட்ஸ் ஆகியாச்சு போல” எனப் படியில் ஏறும்போது விக்ரமிடம் கேட்டேன். “பாஸ் அதெல்லாம் உங்க லிங்கை உதற மாட்டேன். எது வந்தாலும் உங்கட்ட சொல்லாம செய்ய மாட்டேன். அவரோட தீஸிசுக்கு வொர்க் பண்ணித்தர முடியுமா, பணம் தரேன்னு கேட்டாரு. நீங்க சொன்னா பண்ணித் தர்றேன்னு சொன்னேன்” என்றான்.
அங்கே திருவல்லிக்கேணியில் அதுவொரு வியாபாரமாகவே நடந்துகொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்புப் படிப்பவர்கள் வெளியே கொடுத்து தீஸிஸ் எழுதி வாங்கிக்கொள்வார்கள். அதற்குப் பணம் கொடுத்துவிடுவார்கள். ஆய்வை வழிநடத்தும் பேராசிரியர்கள் சிலரே அப்படியான ஆள்களைக் காட்டிவிடுவார்கள். அதில் அவர்களுக்குமே கமிஷன் போய்விடும் என்றும் கேள்விப்பட்டிருந்தேன். விக்ரம் அந்தக் கூட்டத்தில் ஒருத்தனோ என்று நினைத்துக்கொண்டே கதவைத் திறந்து அறைக்குள் போனேன்.
“ஏன் பணம் வருதுன்னா பண்றதுதானே? என்னோட அனுமதி எதுக்கு?” என்றேன். “அதெல்லாம் உயிர் போனாலும் செஞ்சு தர மாட்டேன். சரஸ்வதியை விக்க மாட்டேன். சின்ன வயசில இருந்து எனக்குப் பிடிச்ச ஒரே சாமி அதுதான். லட்சுமியைப் பொறுத்தவரை அது நமக்கு இல்லைன்னு ஆயிடுச்சு. எங்கம்மாட்ட ஒருநாள் இதைச் சொன்னப்ப செருப்பைக் கழட்டி அடிக்க வந்திருச்சு” என்று சொல்லிவிட்டுக் குனிந்து சிரித்தான்.
அவன் அப்படிச் சிரித்ததை முதன்முறையாகப் பார்த்தேன். “சொல்லு சொல்லு சொல்லு” என நாடகத்தனமாக நானும் சிரித்துக்கொண்டே கேட்டேன். “அதாவது லட்சுமி எனக்கு கோவிச்சுக்கிட்டு போன பொண்டாட்டி மாதிரி. ஆனா சரஸ்வதி எனக்கு வந்துசேர்ந்த வைப்பாட்டி மாதிரி. நான் சொல்றதையெல்லாம் கேட்பான்னு சொன்னேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.
“இப்படி உதாரணம் சொல்றதுக்கு வெளக்குமாத்துல சாத்துனாலும் தகும். நாங்கள்ளாம் நோட்டு புக்கை மிதிச்சாலே கண்ல தொட்டுக் கும்பிட்டுக்குவோம்” என்றேன். “தெரியுது. ஆனா எனக்கு அப்டீத்தான் தோணுச்சு. ஆனா வெறும் சரஸ்வதி மட்டும் வீட்டுக்குள்ள நடமாடறதும் தரித்திரியம்தான். ஏன் இங்க ஒருத்தர் யானைட்ட மிதி வாங்குனாரே. அவர் கணக்கும் அதுதானே?” என்றான் விக்ரம். அவன் யாரைச் சொல்கிறான் என நீண்ட நேரமாக யோசித்துவிட்டு, “அட பாரதியை சொல்றீயா?” என்றேன். ஆமாம் என்று தலையாட்டினான்.
“விக்ரம் அதுக்காக நீயும் அவரும் ஒன்னா?” என்றேன் உண்மையான எள்ளலுடன். “ஆமா முப்புரிநூலை கழட்டி எறிஞ்சதுல நானும் அவரும் ஒன்னுதான்” என்றான். அப்போதுதான் அவனது நெஞ்சைக் கவனித்தேன். கூடவே, “ஏன் உங்க பேச்சு வழக்கெல்லாம் நார்மலா இருக்கு. கேட்கணும்னு நெனைச்சிருந்தேன்” என என்னுடைய இன்னொரு சந்தேகத்தையும் கேட்டேன்.
“வேண்டாம்னு பயந்துகிட்டு என்னோட அடையாளத்தையே அழிச்சுக்க விரும்பினேன். எங்கப்பாம்மா மாதிரி எனக்கு மட்டும் அது தொயரமாத்தான் இருந்ததா உணர்ந்தேன். காலேஜ்ல பசங்களோட சேர்ந்து பொதுவான மொழியை வலுக்கட்டாயமா பேசிப் பழகிட்டேன். அப்புறம் இதுவே இயல்பாவும் மாறிடுச்சு” என்றான். முன்பைப் போலவே ஒரு சுற்று மட்டுமே அருந்தினான். அந்த முறை அவனாகவே பேசட்டும் எனக் காத்திருந்தேன். அவனுமே அதை உணர்ந்து தனக்குள் திரட்டிக்கொண்டிருப்பதைப் போல அமர்ந்திருந்தான்.
“பாஸ் ஒருநாள் எங்க வீட்டுக்கு வாங்க. எனக்கு யோசனை சொல்லுங்க. வேலைக்குப் போகலாம்ணு தோணுது. வாய்ப்பு ஏற்படுத்தித் தாங்க. உங்க பேரைக் காப்பாத்துவேன். வேற எதுவும் பேசற மனநிலையில இப்ப இல்லை. வீட்டுக்கு எனக்காக வர்றீங்களா? குடிச்சாத்தான் யாரையாச்சும் வீட்டுக்குத் தைரியமா கூப்ட தோணுது. அவங்க மண்டைக்குள்ளல்லாம் எங்களைப் பத்தி வேற ஒன்னு இருக்கு” என்றான்.
மறுப்பு சொல்லாமல் சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு அவனோடு கிளம்பினேன். கோவிலுக்குப் பின்புறம் இருந்த சந்தின் வழியாக அழைத்துப்போய், மாடிப் படிக்கட்டுகளின் வழியாக ஏற்றி, ஒரு வீட்டிற்கு அழைத்துப் போனான்.
சத்தியமாக அதை வீடு என்று சொல்லவே முடியாது. ஒளியே இல்லாமல் இருட்டான எலிப்பொந்தைப் போலவே இருந்தது. “அன்னைக்கே நான் சொன்னேன்ல? பாத்துப் பத்திரமா உள்ள வாங்க” என்று சொல்லி முன்னே போனவன், அறைக்குள் யாரிடமோ பேசிய சத்தம் கேட்டது.
வீட்டின் வாசலைக் கடந்து நின்றுகொண்டிருந்தபோது, அந்தக் குறுகலான அறையில் இருந்து தவழ்ந்து வந்தார் அவனுடைய அப்பா. கைக்கு அடக்கமான கவட்டையைப் போல முக்கோணமாகச் சுருங்கி ஊர்ந்து வந்தார். “அவரால எந்திச்சு நிக்க முடியாது. காது கொஞ்சமா கேட்கும். நல்லா பேசுவார். ஆனா உங்கட்ட சத்தியமா ஒருவார்த்தைகூட பேச மாட்டார்” என்றான். அவனுடைய அப்பாவையே கூர்ந்து பார்த்தேன். அவருடைய கைகள் புடலைங்காய்க்கும் கீழாகச் சுருங்கி இருந்தன. கை, கால்களைவிடக் கொஞ்சம் பெரிதான உடல் மீது தலையை ஒட்டி வைத்த மாதிரி இருந்தது. நின்றால் அவர் உயரமாகவே இருப்பார். ஆனால் குனிந்து குனிந்து அவர் ஒரு புளியோதரைப் பொட்டலத்தைப் போலவே, அவன் ஏற்கெனவே என்னிடம் சொல்லி இருந்த மாதிரிச் சுருங்கி இருந்தார்.
நான் குனிந்து அமர்ந்து அவரோடு பேச்சுக் கொடுக்கப் போகையில், “வேண்டாம் பாஸ். கடுமையா காயப்படுத்திருவாரு. யார்ட்ட கொட்டன்னு காத்துக்கிட்டு இருக்காரு. நீங்க வெறுத்திருவீங்க என்னை. அன்னைக்கு நல்ல சாப்பாடுன்னு கொண்டு வந்தப்பயே அதை பார்வையாலகூட தொட்டுப் பார்க்கலை. இப்பவும் வீம்பு” என்றான்.
உண்மையாகவே நான் பயந்து விலகிவிட்டேன். நாங்கள் இருவரும் தூரத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபோது குறுகுறுவென எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார். “இங்க இருந்து பேசுனா அவருக்குக் கேட்காது. தைரியமா பேசுங்க” என்றான். அப்போது டியூசன் முடித்துவிட்டு அவனுடைய அம்மாவும் படியேறி வந்தார். அவரைப் போலவே அந்த அம்மாவுமே சீக்கிரம் மேலும் சுருங்கிப் போய்விடுவார் என்று தெரிந்தது.
உடலில் எலும்பைத் தவிர சதையென்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. இருக்கிற சதையும் வெண்மையாய் அதனுடன் மஞ்சள்பாவி, கண்ணாடியை மீறிக் கண்ணில் ஒளி மங்கத் தொடங்கி இருப்பது தெரிந்தது. பசி வந்தால் காதடைக்கும் என்பார்கள். அங்கே இரு உடல்கள் பஞ்சின் கனத்திற்கு மாறி இருந்ததைக் கண்ணால் பார்த்தேன். அந்த நிமிடத்தில் விக்ரமின் மீது எனக்குப் பரிவு ஏற்பட்டது. “அவங்க டியூசன் எடுக்கற வீட்டுக்காரங்க தூரத்து சொந்தம்தான். தானமா கொடுக்க முடியாதுங்கறதால சும்மா வேலைன்னு சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க. அதையும் எங்கம்மா நம்புது. இல்லாட்டி நம்புன மாதிரி நடிக்குதான்னு தெரியலை” என்றான். அவரைப் பற்றித்தான் பேசுகிறோமென அறிந்து, அவனது அம்மா ஆமாமாம் என்கிற மாதிரி அங்கே இருந்தே மையமாகத் தலையை ஆட்டினார். அதற்கு மேல் அங்கே என்னை நிற்கவிடவே இல்லை அவன்.
கிளம்புவதற்கு முன்பு அவனுடைய அப்பா இருந்த இடத்திற்குப் பக்கத்தில் போய் நின்று, அறைக்குள் எட்டிப் பார்த்தேன். சுவரில் ஹிந்து பேப்பரில் புகைப்படத்தோடு வந்த செய்தியொன்றைக் கத்தரித்துச் சட்டகம்போட்டு மாட்டியிருந்தார்கள். கீழே வரும்போது, “ஆமா அந்தக் காலத்தில ஏதோ செஸ் போட்டில ஜெயிச்சப்ப எடுத்த படமாம். அதை மாதிரியே ஹிந்து பேப்பர்ல நானும் நியூஸா வரணும்னு சின்ன வயசில இருந்து நசநசன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். அதனாலேயே அதுமேல எனக்கு வெறுப்பு வந்திருச்சு. அதைப் படிக்கறதையே நிறுத்திட்டேன். ஆமா அப்ப ஜெயிச்சாரு. இப்ப குப்புற விழுந்து தோத்துட்டாருல்ல? பழைய கௌரவத்தை வச்சு அரை பாக்கெட் பால் வாங்க முடியுமா? இன்னுமே பழைய ஆளாவே இருந்து தொலைக்குறாரு. எங்கம்மாகூட பரவாயில்லை. இவர வச்சுக்கிட்டு என்னால முடியலை. ஆள்களை பார்த்தாதான் உங்களுக்கு என் நிலை தெரியும். அதுக்குத்தான் கூப்டு வந்தேன். பாருங்க, பெத்தவங்களை விளம்பரமா காட்டுற மாதிரி வச்சிருச்சு நிலைமை” என்று சங்கடமான தொனியில் சொல்லிக்கொண்டு கீழே வந்தான்.
“வீட்டுக்கு வீடு வாசல்படி. எங்க அப்பத்தா ஒன்னு கடைசி வரைக்கும் ஊசியே போட மாட்டேன்னு அடம்பிடிச்சு செத்துச்சு. என்ன பண்றது? காந்தியைக்கூட அப்டீ சொல்வாங்க. கடைசி வரை அவரு ஊசி போட்டுக்கவே இல்லையாமே?” என்றேன், அதுவரை பேசிய ஆழத்திற்குச் சம்பந்தமே இல்லாமல் அவனிடம்.
அதையெல்லாம் அவன் காதில் வாங்காமல் என்னுடைய அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தான். இடையில் தேநீர் குடிக்க நிற்கையில், “உண்மையைச் சொல்லணும்னா நீங்க சொன்ன பிறகுதான் நானுமே எங்கப்பா மாதிரி பிடிவாதமா இருக்கேன்னு தோணுச்சு. அவர் பிள்ளை எப்படி இருப்பேன்? அதான் கொஞ்சம் விசாலமா யோசிக்கத் தோணுச்சு. என்னால என்ன பண்ண முடியும்னு நீங்களே சொல்லுங்க” என்றான்.
திடீரென, “ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டேன். எங்கப்பா இந்த நிலைமைலகூட எங்கம்மாவ கீழ உக்காரச் சொல்லி அடிப்பாரு. அது உடம்பால நிச்சயமா வலிக்கவே வலிக்காது. அந்தளவுக்கு அவரோட உடல் பலகீனமா இருக்கு. நீங்கதான் பார்த்தீங்கள்ள? ஆனா எங்கம்மா உக்காந்து மனசால வாங்கும் அதை” என்றபோது எனக்கு விசித்திரமாக இருந்தது. என்ன மனிதர் அவர்? மனதால்கூட அந்த அம்மாவை அடிக்க முடியாதே? அத்தனை பூஞ்சையாக, பரிதாபமாக இருக்கிறார் என நினைத்துக்கொண்டேன்.
“எங்கம்மா நடமாடற வரைக்கும் பிரச்சினை இல்லை. திடீர்னு அதுவும் இப்படி உக்காந்திருச்சுன்னா சோறு தண்ணி எல்லாம் நாந்தான் பாத்துக்கணும். என்னைத் தவிர இந்த உலகத்தில யாருமே இல்லை அவங்களுக்கு. பேசாம அவங்களையும் கொன்னுட்டு நானும் தற்கொலை பண்ணிக்கலாம்னு பல தடவை தோணியிருக்கு” என்று சொல்லிவிட்டுக் கண்கள் கலங்க என்னையே பார்த்தான்.
“விக்ரம், என்ன பேச்சு இது? நீ நினைச்சிருந்தா எப்பவோ இதுல இருந்து ஓடி இருக்கலாம். ஆனாலும் செய்யலை. உன் மேல எனக்கு அது சம்பந்தமா நிறைய மதிப்பு இருக்கு. இப்படிப் பேசி அதை கெடுத்துக்காத. உனக்கு நல்ல வாய்ப்பா அமைச்சுத் தர்றேன். பொறுமையா இரு” என அவன் திரும்பவும் இதுமாதிரி பேசிவிடக் கூடாது என்கிற திட்டத்தில் சொன்னேன். அவனை அறைக்கு அழைத்துப் போக அன்றைக்குத் தோன்றவில்லை. “விக்ரம் எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நாம அடுத்து எப்பவாச்சும் மீட் பண்ணலாம். ஆனா கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவேன். பிராமிஸ். உன் நிலையை பாத்திட்டேன்ல?” என்றேன். அவனுமே புரிந்துகொண்டு, எனக்கு முன்னமே போய் தேநீருக்கான காசைக் கொடுத்துவிட்டுக் கோவிலின் வடக்குப்புற வாயிலை நோக்கி நடந்தான்.
விக்ரமைக் காட்டிவிட்ட நண்பர் அன்றைக்கு என்னை அழைத்திருந்தார். இருவரும் அவன் குறித்துப் பேசிக்கொண்டோம். “நல்ல பையன். என்ன பிரச்சினைன்னா இந்த மாதிரி ஆட்களோட இருந்தோம்னா நாமளும் டிப்ரஷன் ஆயிடுவோம். ஆனாலும் அவனை விடமுடியலை. நீங்க ஏதாச்சும் பாத்து பண்ணிவிடுங்க” என்றார்.
“எனக்கு முதல்லயே அது தெரிஞ்சுருச்சு. அதனால வெறுமனே கதை கேட்கற மாதிரி வெளியில இருந்துதான் பழகறேன். அவரோட அடிப்படைக் கதை தெரிஞ்சப்பறம் வேற இண்டரஸ்ட் எதுவும் வரலை. ஆனா பாவமாவும் இருக்கு. ஒரிஜினலா பழகுறாரு. ஏதாச்சும் செய்யணும்னு எனக்கே தோணுது. என்ன இருந்தாலும் நம்மகூட உக்காந்து கை நனைச்சிட்டாப்ல” என்றேன். எங்களை மாதிரித் தெற்கத்திக்காரர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. நம்பி வந்து வீட்டில் கை நனைத்துவிட்டால் எப்பாடுபட்டாலும் கேட்டதைச் செய்து கொடுத்துவிடுவோம்.
என்னுடைய அலுவலகத்தில் விக்ரமிற்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்தேன். அவனுக்கு வேலையை ஏற்பாடு செய்து தந்த பிறகே அழைக்க வேண்டுமென முன்பே நினைத்தும் இருந்தேன். வேலை கிடைத்துவிட்டது என்பதைச் சொல்வதற்காக விக்ரமை அழைத்தபோது, எதிர்முனையில் முனகியபடி, கடுமையான காய்ச்சல் என்றான். மாலையில் அவனது வீட்டிற்கு என்னுடைய நண்பன் ஒருத்தனை அழைத்துக்கொண்டு போனேன்.
கட்டிலில் படுத்துக் கிடந்த விக்ரமைப் பார்த்தபோது, எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. பத்து நாள்கள் இடைவெளியில் ஒரு மனிதனால் இவ்வாறு சுருங்க முடியுமா? விக்ரம் நெஞ்சில்கூடு விழுந்து பழைய கரித்துண்டைப் போல ஓரத்தில் சுருண்டு கிடந்தான். அதற்குப் பக்கத்தில் அவனது அப்பா ஒரு தம்ளரைப் போலக் குறுகி அமர்ந்திருந்தார். பெரிய பழமொன்றும் சின்னதொன்றும் வாடி வதங்கிக் கிடந்தன அங்கே. இரண்டையுமே இரு கைகளாலும் எளிதாக, கட்டைப் பைகளைத் தூக்குவதைப் போலத் தூக்கிவிட முடியும் என்னால் எனத் தோன்றியது.
என்னுடன் வந்த நண்பர் இயல்பிலேயே நெகிழ்ச்சியானவர் என்பதால், உடனே ஓடிப்போய் அவனைத் தூக்கி அமர வைத்து மருத்துவமனைக்குச் செல்ல ஆயத்தம் ஆனார். “டோண்ட் டச் ஹிம்” என அவருடைய அப்பா முனகியபோது எனக்குக் கோபம் வந்துவிட்டது.
ஏற்கெனவே அப்படி ஒரு செய்தியைப் படித்திருந்தேன். ராஜஸ்தான் பக்கத்தில் கடவுள் வந்து காப்பார் என்று சொல்லி ஒரு குடும்பம் சீக்கு வந்த தன் பிள்ளையை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தது. பிறகு எல்லோரும் செய்தி கேட்டுப் போய்ப் பார்த்தபோது, அந்தப் பையனின் உடல் அழுகத் தொடங்கி இருந்தது. அந்தக் கதை எனக்கு அப்போது நினைவிற்கு வந்ததால், அவனுடைய அப்பாவை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், அவனைத் தூக்கிக்கொண்டு இருவரும் மருத்துவமனைக்கு விரைந்தோம். போகையில் திரும்பிப் பார்த்தபோது, எதுவுமே விளங்கிக்கொள்ள முடியாத பாவனையில் குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டிருந்தார்.
என்னுடைய நண்பர் கீர்த்தி ஸ்கேனில்தான் வேலை பார்த்தார் என்பதால், தெரிந்த மருத்துவமனைக்கு அழைத்துப் போனார். அங்கே பல்வேறு கட்டப் பரிசோதனைகள் நடந்து கடைசியில் அவனுக்கு நுரையீரலில் நீர் கோர்த்திருக்கிறது என்றார்கள். அது ஒருவகையிலான பூஞ்சைத் தொற்று என விளக்குகையில், “உசுருக்கு ஒன்னும் பிரச்சினையில்லையே” என்று கேட்டபோது, யாரும் உடனடியாகப் பதில் சொல்லவில்லை.
விக்ரமைப் பெரிய மருத்துவமனையில் சேர்த்தால் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்றார்கள். என்னுடைய நண்பரும் அப்போது நெகிழ்வெல்லாம் அடங்கி யதார்த்தத்திற்கு வந்துசேர்ந்திருந்தார். இன்னொரு நண்பனை விக்ரமின் வீட்டிற்கு அனுப்பி அவனுடைய அம்மாவிடம் பேசிவிட்டு வரச்சொன்னோம்.
“அவங்க சித்தி ஒருத்தங்க இருக்காங்களாம். அவங்க பிள்ளைங்களே டாக்டர்ஸா இருக்காங்களாம். நாங்களே பாத்துக்குறோம். கொண்டுவந்து விட்டிருங்கன்னு அவங்க ரிலேஷன் ஒருத்தர் சத்தம் போடறாரு. பயங்கரமா ரூல்ஸ் பேசறாரு” என்றான் திரும்பி வந்து.
எல்லோரும் சேர்ந்து அதுதான் சரியென்று முடிவிற்கு வந்து விக்ரமை ஆட்டோவில் வைத்து அழைத்துக்கொண்டு வீட்டிற்குப் போனோம். பேசவே முடியாமல் சோர்ந்து துவண்டு போயிருந்தான். இடையில் விழிப்பு வந்தபோது, “பாஸ் திரும்பி வந்திருவேன். அப்டீலாம் ஈசியா போகவிட்டிராது வாழ்க்கை” என்றான்.
வீட்டின் மேலே செல்ல விரும்பாமல், உடனிருந்தவர்களைப் போகச் சொன்னேன். பக்கத்து வீட்டில் இருந்த ஒருத்தரைப் பழக்கம் பிடித்து, ஏதாவது தகவல் என்றால் அழைக்கச் சொல்லித் தொலைபேசி எண்களைக் கொடுத்துவிட்டு வந்தோம்.
இரண்டுநாள் கழித்துவந்த தொலைபேசி அழைப்பில், “அவங்க எங்கயும் அந்தப் பையனை கூப்ட்டு போகலை. வீட்டுக்குள்ள வச்சே கொன்னுட்டாங்க. சித்தியும் வரலை. சித்தப்பாவும் வரலை” என எரிச்சலுடன் சொன்னது அந்தக் குரல்.
உடனடியாக நான் பதற்றத்திற்கு ஆட்பட்டு, என் உள்ளங்கைகள் வியர்த்தன. அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு ஏற்கெனவே அவனை அறிந்திருந்த மேன்சன் நண்பர்கள் மேலும் சிலரை அழைத்துக்கொண்டு ஓடினேன் அங்கே. வீட்டின் உள்ளே வெறும் பாயில் விக்ரமைக் கிடத்தி இருந்தார்கள். சொந்தம் என்று சொல்லி ஒரு பத்து பேருக்கு மேல் நின்றார்கள். ஆனால் ஒரு ஊதுபத்தியைக்கூடக் கொளுத்தி வைக்கவில்லை.
யாரும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தார்கள். நாங்கள் நண்பர்களாகப் பேசிக் கையில் இருந்து ஒரு தொகையைக் கொடுத்து, அவனை வழியனுப்புகிற வேலைகளைத் தொடங்கினோம். வந்தவர்களுக்குக் கறுப்புத் தேநீர் போட்டுக் கொடுக்கக்கூட அங்கே யாரும் முன்வரவில்லை. எதிர்வீட்டில் இருந்து பரிதாபப்பட்டுத் தயார்செய்து கொடுத்தார்கள். அதையேந்தி வந்த அந்த வீட்டுக்காரர், “இனிமே அவங்க ரெண்டு பேரும் என்ன ஆகப் போறாங்கன்னு தெரியலை. எங்ககூடல்லாம் அவங்களுக்குப் பேச்சுவார்த்தையே கிடையாது. நாங்களும் போயி பேசினதில்லை. இருந்தாலும் மனுஷங்க நிலையை நினைச்சா ரெம்ப கஷ்டமா இருக்கு” என்றார்.
விக்ரமின் சொந்தக்காரர் என வந்துநின்ற மத்திய வயதுக்காரரின் கையில் பணத்தைக் கொடுத்தோம். அவர் பூஜை புனஸ்காரங்களை எல்லாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று குரல் உயர்த்தியபோது, “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. பழக்கத்துக்கு வந்திருக்கோம். புண்ணியத்துக்குத் தானம் கொடுக்கிற மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பதம் பார்க்காதீங்க. கிளம்பிப் போய்க்கிட்டே இருப்போம்” என்றான் அருப்புக்கோட்டைக்காரன் சுருக்கென.
எல்லாம் நடந்து முடிந்து மேன்சனுக்கு வந்த பிறகும் எனக்கு நிலைகொள்ளவில்லை. விக்ரமே எதிரே அமர்ந்து என்னோடு குடித்துக்கொண்டிருப்பதைப் போலப் பிரமை உருவானது. கழிவறைக்குப் போனாலும் வாளியோடு பக்கத்தில் நின்றான். என்னுடைய அப்பாவிற்குத் தொலைபேசி செய்தபோது, “ஏதாச்சும் அவங்களுக்கு உதவியா பண்ணிவிட்டிருப்பா. ஆத்மா சாந்தியடைஞ்சிரும். அப்புறம் அது கண்லயே தட்டுப்படாது” என்றார். இருந்தாலும் பயந்துபோய் நண்பர்களின் அறைக்குப் போனேன். நாளைச் சோற்றிற்கு அவனது பெற்றோர்களுக்கு வழி இருக்குமா எனக் கேள்வி எழுந்தது. ஏதாவது உடனே செய்ய வேண்டும் எனத் தோன்றி, நண்பர்களிடம் பேசி முப்பதாயிரம் ரூபாய் பணத்தை ஏற்பாடு செய்து மறுநாள் விக்ரமின் வீட்டிற்குப் போனபோது, அவனுடைய அம்மா இல்லை. ஏன், யாருமே இல்லை அங்கே.
கதவு திறந்தே கிடந்தது. தலையை உள்ளே நுழைத்து எட்டிப் பார்த்தபோது, உள்ளே விழுந்த குறைந்த வெளிச்சத்தில், ஏதோ ஊர்வதைப் போல நிழலசைவு தெரிந்தது. அவனுடைய அப்பா அதுவென உணர்ந்தேன். அவரிடம் என்ன பேசுவது என்கிற குழப்பம் வந்தது. கையில் கொண்டுபோன பணம் அடங்கிய கவரை அவர்முன் வைத்தபோது, அவரது முகத்தைப் பார்த்தேன்.
கண்கள் சுருங்கி அதன் ஓரத்தில் நீர்த்தாரை தெரிந்தது, வற்றிப்போன ஊற்றோரத்தில் ஒட்டியிருக்கிற, காய்ந்து போகக் காத்திருக்கிற கடைசி நீர்த்தடம் போல. கையில் வைத்திருக்கிற பழைய துணியால் ஒரு கண்ணை அழுத்தித் தேய்த்துவிட்டு தலையை நிமிர்த்தாமல் அமைதியாய் அமர்ந்திருந்தார். அதற்குமேல் அங்கே நிற்கத் தோன்றவில்லை எனக்கு.
திரும்புகையில் அவருக்குக் கேட்கிற சத்தத்தில், “முப்பதாயிரம் ரூபாய் பணம் இருக்கு இதுல. என்ட்ட விக்ரம் கொடுத்து வச்ச காசுதான் இது. விக்ரமோட அம்மாட்ட கொடுத்திருங்க. உங்கட்ட இதைத் தவிர காசு இல்லைன்னு தெரியும். கடைசியா உங்க பையன் வழீல வர்ற பணம். செலவுக்கு வச்சுக்கோங்க” என்று சொல்லிவிட்டு, படியிறங்கி நடந்து வந்தேன். கோவிலில் ஏதோ உற்சவம்போல, கூட்டமாக இருந்தது.
இரண்டொருநாள் கழித்து வழக்கமான தேநீர்க் கடையில் நின்றிருந்தபோது, சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்கும் நண்பன் ஒருத்தன் கையில் இருந்த ஹிந்து பேப்பரைத் தற்செயலாக வாங்கி மேய்ந்தேன். விக்ரமின் புகைப்படத்தோடு இரங்கல் செய்தி முக்கியமான பக்கத்திலேயே மிகப் பெரியதாக அவனது தந்தை பெயரைப் போட்டு வந்திருந்தது. ”பணம் கட்டிப் போடறதுதானே இது?” என்றேன் நண்பனிடம் உடனடியாக. ஆமாம் என்றான் அவன்.
இந்த விளம்பரத்திற்கு எவ்வளவு கட்டணம் ஆகும் என நான் கேட்பதற்கு முன்பே, அவன் சொன்னான்.
“முப்பதாயிரம் ரூபாய்க்கு பக்கத்தில இருக்கலாம்.”அந்த விளம்பரப் புகைப்படத்தில் விக்ரம் புஷ்டியாகத் தட்டுப்பட்டான்.