செஸ் உலகக்கோப்பை இறுதிச்சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் 2.5 – 1.5 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் ஆனார். அப்போது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் பார்த்தேன்.
‘மேக்னஸ் கார்ல்சன் போன்ற உலகத் தரமான வீரரை அலறவிட்டதே பதினெட்டு வயதுடைய பிரக்ஞானந்தாவுக்குப் பெரிய வெற்றிதான். மேக்னஸ் உயர்மட்ட வகுப்பைச் சேர்ந்தவர். சிறு வயது முதலே அவருக்கு நல்ல பயிற்சியாளர் கிடைத்தார். அவர் செஸ்ஸை ஆழ்ந்து கற்றுக்கொண்டார். அவர் சென்னையில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்ட தந்தைக்கும், வீட்டில் இரு பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் தாய்க்கும் பிறந்திருந்தால் உலகத்திற்கு அவரை யாரென்றே தெரிந்திருக்காது’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதில் எனக்குச் சற்றும் உடன்பாடு இல்லை. ஆனால் ஒரு துறையை ஓரளவேனும் புரிந்துகொண்ட பிறகே அதில் எதிர்வினைகளை முன்வைக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தேன். இப்போதும் நான் செஸ் மேதையல்ல எனினும், ஒரே மாதத்தில் பூஜ்ஜியத்திலிருந்து 600 ELO-வுக்கு முன்னேறிய ஆரம்பநிலை செஸ் வீரன் என்ற அடிப்படையில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.
பிற எந்த விளையாட்டுகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பு செஸ்ஸுக்கு உள்ளது. இதற்குச் சாதி, மதம், இனம், பாலினம், வயது என எதுவுமே கிடையாது. இது எல்லோரும் தங்களுக்குப் பிடித்த விளையாட்டைப் புகழ்பாடும்போது சொல்லும் தேய்வழக்கான வாக்கியம் எனினும் செஸ்ஸில் இதை என்னால் நிரூபிக்கவே முடியும்.
உதாரணமாக, கிரிக்கெட்டில் பெண்களால் ஆண்களின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்கவே முடியாது. கால்பந்திலும் அப்படித்தான். அவை உடலால் இயங்கி விளையாடக்கூடிய ஆட்டங்கள். இயற்கையாகவே ஆண்களைக் காட்டிலும் உடலளவில் சற்றுப் பலவீனமாக இருக்கும் பெண்களால் எதிர்பாலினத்தவருடன் போட்டியிட முடியாது. செஸ்ஸில் அப்படியில்லை. இதில் ஆணும் பெண்ணும் சமம். யாரையும் இங்கு குறைத்து மதிப்பிடவே முடியாது. நான்கூட ஒருமுறை chess.com தளத்தில் 570 ELO கொண்ட கொரியப் பெண்ணிடம் தோல்வியடைந்திருக்கிறேன்.
ஒருமுறை பாபி ஃபிஷர், “செஸ் என்பது பெண்களுக்கான விளையாட்டு அல்ல. பெண்களால் ஆண்களைத் தோற்கடிக்கவே முடியாது” என்று கூறினார். பிறகு அவரே தன் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டார். ஹங்கேரி, ரஷ்யாவைச் சேர்ந்த சிறந்த பெண் செஸ் வீராங்கனைகளைப் பாராட்டிப் பேசியுள்ளார். ‘செஸ்ஸுக்குப் பாலினம் இல்லை’ எனப் பகிரங்கமாகத் தெரிவித்துத் தன் முந்தைய நிலைப்பாட்டினை அகங்காரமின்றி மாற்றினார்.
அதேபோல் கிரிக்கெட், கால்பந்து, ஓட்டம், இன்ன பிற ஆட்டங்களுக்கு இனம் சார்ந்த பலம் உள்ளது. உலகில் அதிகப்படியான தரமான கிரிக்கெட் வீரர்கள் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள். கால்பந்தில் ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஓட்டத்தில் கறுப்பினத்தவர்களின் வேகத்திற்கு யாராலும் ஈடுகொடுக்க முடிவதில்லை. செஸ்ஸில் அப்படி எதுவுமில்லை. உலகில் எந்த மூலைமுடுக்கிலிருந்தும் கிராண்ட்மாஸ்டர்ஸ் உருவாகலாம்.
தமிழ் ரசிகர்கள் பிரக்ஞானந்தாவின் குடும்பச் சூழலைக் கருதி அவருக்கு அனுதாபம் காட்டுகிறார்கள். ஆனால் போராட்டத்தில் வங்க தேச அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டவரின் மகனான ஃபஹிம் முகமது ஓர் அற்புதமான செஸ் வீரர். அவரால் கிராண்ட்மாஸ்டர் ஆக முடியவில்லை எனினும், FIDE மாஸ்டர் ஆனார். ஃப்ரான்ஸுக்குத் தன் தந்தையுடன் அகதியாகச் சென்று மொழி தெரியாமல் தத்தளித்து, இரவில் சாலையோரம் உறங்கி, பிறகு அந்நாட்டு அரசு ஆதரவில்லத்தில் தங்கி, முன்னாள் செஸ் வீரரிடம் நுணுக்கங்களைப் பயின்று வெற்றி பெற்றவர்தான் ஃபஹிம். இப்படி உலகில் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. இவை எதுவுமே ஒருவரின் ஆட்டத்தைப் பாதிக்காது. போட்டி ஆரம்பமான நொடியிலிருந்து வீரனின் மொத்தக் கவனமும் அந்த அறுபத்து நான்கு சதுரங்கத்தில் மட்டுமே இருக்கும். ஆகவே பிரக்ஞானந்தாவின் தோல்விக்காக அவரது குடும்பச் சூழலைக் காரணமாகக் காட்டி அனுதாபம் காட்டுவதெல்லாம் முட்டாள்தனம். அதைப் பிரக்ஞானந்தாவே விரும்ப மாட்டார்.
அதேபோல், செஸ்ஸுக்கு வயது ஒரு பொருட்டல்ல. விதிமுறைகளைப் பின்பற்றுவதும், சரியான நகர்வுகளை வைப்பதுமே இந்த ஆட்டத்தின் சவால் என்பதால் ஐந்து வயது சிறுவனால் ஐம்பது வயது முதியவருடன் போட்டியிட முடியும். உலகின் நம்பர் 3 வீரரான கிராண்ட்மாஸ்டர் ஹிகாருவை எட்டு வயதுச் சிறுவன் வீழ்த்தியிருக்கிறான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுதான் செஸ்ஸின் அழகு! ஆகவே வெறும் பதினெட்டு வயதுடைய பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸை அலறவிட்டார் எனச் சொல்வதெல்லாம் வெட்டிப் பெருமை. ஒருமுறை இந்திய வீரர் குகேஷ், மேக்னஸை வீழ்த்தினார். அந்த ஆட்டத்திற்குப் பிறகு குகேஷ் சொன்னது இதைத்தான், “இந்த வெற்றியில் எனக்கு எந்தப் பெருமையுமில்லை. மேக்னஸ் போன்ற ஒரு ஜாம்பவானைத் தோற்கடித்ததில் மகிழ்ச்சிதான். ஆனால் இந்த ஆட்டத்தில் எனது நகர்வுகள் மோசமாக இருந்தன”. இதுதான் செஸ்ஸின் யதார்த்தம்.
உண்மையில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தது எதனால்?
முதல் இரு சுற்றுகளும் சமநிலையில் முடிந்தன. மூன்றாம் சுற்றில் இருவரும் வழக்கமான E4, E5 தொடக்கங்களை விளையாடி, பிறகு குதிரைகளை ஆட்டத்தில் கொண்டுவந்தனர். சிப்பாய்களை இழப்பதற்கு முன்பாகவே கறுப்புச் சதுரங்கத்திலுள்ள பிஷப்பைப் பரிமாறிக்கொண்டனர். ஆட்டம் மத்திய நிலைக்கு வந்த பிறகும்கூட இருவரிடமும் தலா எட்டு சிப்பாய்கள் இருந்தன. அப்போது பிரக்ஞானந்தா மிகப்பெரிய தவறொன்றைச் செய்தார். எந்தப் பரிமாறலுமின்றி தனது குதிரையை விட்டுக்கொடுத்தார்.
“அவர் சிப்பாய்களை முன்னகர்த்தி பரிமாறியிருந்தால்கூடச் சதுரங்கத்தில் கூடுதல் வெளி கிடைத்திருக்கும். ஆனால் கொடுக்கல் வாங்கல் இல்லாமல் வெறுமனே குதிரையை இழந்தது பிரக்ஞானந்தா செய்த பெரிய தவறு” என விமர்சகர் லெவி கூறுகிறார். “எதிராளியை செக்மேட் செய்வதற்கான வழிகளைக் கண்டுபிடிக்காத வரை ஒருவர் குதிரையை இழக்கவே கூடாது” என்கிறார் கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுரா.
அந்த ஆட்டம் மேக்னஸுக்கு அனுகூலமாக அமைந்தது இதனால்தான். அவர் கடைசி வரை இரு குதிரைகளையும் களத்தில் தக்க வைத்தார். குதிரைகளின் சாமர்த்தியம் எதிராளியை நீண்ட நேரம் யோசிக்க வைக்கும். மேக்னஸ், பிரக்ஞானந்தாவைத் தன் குதிரைகளைக் கொண்டு யோசிக்கவிட்டார். பிரக்ஞானந்தாவுக்கு நேரம் போதவில்லை; இருபது விநாடிகளே மிச்சமிருந்தன. மேக்னஸுக்கு நான்கு நிமிடங்கள் இருந்தன. தன்னால் வெல்ல முடியாதென நினைத்த பிரக்ஞானந்தா, அப்போட்டியிலிருந்து ராஜினாமா செய்துகொண்டார்.
கடைசிச் சுற்றில்கூட மேக்னஸ்தான் வெற்றிக்கான அடுக்குகளில் இருந்தார். மேக்னஸை வீழ்த்த முடியாது என எண்ணிய பிரக், சமநிலைக்கு முன்மொழிய, மேக்னஸும் அதை ஒப்புக்கொண்டார்.
மேக்னஸ் தனது முதல் உலகக்கோப்பையை வென்றார். அவர் அதுவரை வென்றிடாத ஒரே தொடர் இதுவாகத்தான் இருந்தது. உலகக்கோப்பை வென்ற அந்த இரவில் அவர், ‘நான் செஸ்ஸில் முழுமையடைந்துவிட்டேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.
மேக்னஸ் செஸ் உலகை ஆள்வதற்காகவே பிறந்தவர். பாபி ஃபிஷருக்குப் பிறகு செஸ்ஸில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உண்டாக்கியிருக்கிறார். அவர் நார்வேயில் உயர்மட்டக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் மட்டுமே இச்சாதனையை எட்டவில்லை. ஃபஹிம் போல வங்க தேசத்தில் கலவரத்திற்கு மத்தியில் பிறந்திருந்தாலும் இந்த இடத்தை வந்தடைந்திருப்பார். அடுத்தப் பத்தாண்டுகளில் பிரக்ஞானந்தாவோ அல்லது குகேஷோ உலகக் கோப்பை சாம்பியன் ஆவார்கள்; அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இது மேக்னஸ் கார்ல்சனின் தசாப்தம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
1 comment
“பிஷர் தன்னிடம் இருக்கும் அனைத்து காய்களையும் பயன்படுத்தி வெற்றி பெற நினைப்பவர். கார்போவ் ஒவ்வொரு காய்களின் முழுப் பயன்பாட்டையும் செய்து பார்ப்பவர். கார்ல்சன் பிஷர் மற்றும் கார்போவ்வின் கொடிய கலவை” – கார்ல்சன் பற்றி முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ்
செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் முதல் இருஆட்டங்கள்(கிளாசிக் வகை தொண்ணூறு நிமிடங்கள் என நினைக்கிறேன்) ட்ராவில் முடிவடையக் காரணம் கார்ல்சன் உணவு ஒவ்வாமையினால் முழுவதுமாக பங்கேற்க முடியவில்லை. அடுத்த இரு ஆட்டங்கள் ராபிட் வகையில் பதினைந்து நிமிடங்கள், அதில் முதல் போட்டியில் வென்று பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாம் போட்டியில் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தினார். இரண்டாம் போட்டி ட்ராவில் முடிவடைந்ததால் 2.5 – 1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் கார்ல்சன். பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தின் உச்சம் உண்மையில் வெளிப்பட்டது ஹிக்காருவுக்கு எதிராகவும், பாபியானோ கறுவானாவிற்கு எதிராகவும் தான். நான் அரையிறுதியில் கறுவானாவிடம் தோற்றுப்போவார் என்றே நினைத்தேன். அதே போல் உலகக் கோப்பையில் கார்ல்சனின் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது குகேஷ் தொம்மராஜூக்கு எதிராகத் தான். கார்ல்சனே இதை ஒப்புக்கொண்டார். (கொசுறுத் தகவல் பிடெ(FIDE) ரேட்டிங்படி ஹிக்காரு உலகின் இரண்டாம் இடத்திலும், கறுவானா மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள். எனக்கு பிடித்த ஆட்டக்காரர்கள் கச்சிதம் வெளிப்படும் கறுவானாவும், தவறுகளும் குறைவாக செய்யும் குகேஸும் தான்). இதை சொல்லவேண்டிய கட்டாயம் எதற்கு என்றால் நான் சிறுவயது செஸ் விளையாடுகிறேன் என்பதும், இப்போட்டிகளை கவனமாக பின்தொடர்ந்தேன் என்பது மட்டுமே.
அடுத்து பாலின சமத்துவம், வயது வித்தியாசமின்மை மற்றும் இனப்பாகுபாடுற்றதன்மை குறித்து எவ்வாறு சொல்கிறார் என்பதை இன்னும் தெளிவாகி இருக்கலாம். பிடெ ரேட்டிங்கில் பெண்களின் முதல் நிலை ஆட்டக்காரருக்கும் ஆண்களின் முதல் நிலை ஆட்டக்காரருக்கும் கிட்டத்தட்ட 100 புள்ளிகள் வித்தியாசம் இருக்கிறது. மேலும் ஒருவர் எந்த வயதில் செஸ் விளையாட்டை ஆடத் துவங்குகிறார் என்பது மிக முக்கியம். முப்பதுகளில் இருக்கும் ஒருவர் செஸ் ஆடத் துவங்கி கிராண்ட் மாஸ்டர் ஆவது சாத்தியமில்லை என்றே சொல்லிவிடலாம். அதேபோல் உங்களின் பின்புலம் முக்கியம், செஸ் பாரம்பரியம் இல்லாத நாட்டில் இருந்து உலகின் சிறந்த ஆட்டக்காரர் இன்னும் மகுடம் சூடவில்லை என்பதே உண்மை.
“பாபி ஃபிஷருக்குப் பிறகு செஸ்ஸில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உண்டாக்கியிருக்கிறார்” இது உயர்வு நெவிற்சி அல்லது முழுத் தவறு என்றே சொல்லவேண்டும். ஃபிஷருக்குப் பிறகு காஸ்பரோவ் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்து காட்டியவர், அவரின் முதல் செஸ் தோல்வி 90களில் டீப் ப்ளூ என்ற ஐபிஎம் சூப்பர் கம்ப்யூட்டருக்கு எதிராக. உலகின் முதல் நிலை ஆட்டக்காராக பல ஆண்டுகள் நீடித்து தனக்கு அடுத்த தலைமுறை வீரர்களையும் தோற்கடித்தவர் காஸ்பரோவ். ஆக பிஷரைவிட காஸ்பரோவே சிறந்த வீரர் என்று சொல்பவர்கள் உண்டு, நானும் அதில் அடக்கம். காஸ்பரோவ் பற்றி ஒரு வரிகூட வராமல் நேரடியாக ஃபிஷருக்குப் பிறகு கார்ல்சன் என்பது சரியல்ல. இறுதியாக கார்ல்சனின் தசாப்தம் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். 2013 ஆனந்தை தோற்கடித்து உலக சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சன் கடந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கவில்லை அடுத்த ஆண்டுப் போட்டியிலும் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்து விட்டார். நடப்பு சாம்பியன் லின் டிரென் ஆட்டத்தில் உச்சம் தொடுவார் அடுத்த சில ஆண்டுகளில் என கணிக்கிறேன். பிற குகேஷ் அல்லது பிரக்ஞானந்தா அல்லது வேறு எவராகவும் இருக்கலாம். அடுத்த ஆண்டு உலக சாம்பியன் போட்டிகளில் அவர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதே சிறந்த அளவுகோலாக இருக்கும்.
Comments are closed.