ஒத்தக்கை இபுராஹிம்

by மானசீகன்
2 comments

1

‘எலா நவீஸா, ஒத்தக்கை இபுராஹிமு மவுத் ஆயிட்டானாம். இன்னிக்குக் காலைல வெள்ளன சுருளிப்பட்டில வச்சு காட்டு யானை மிதிச்சிருச்சாம். அவுஹ அண்ணன் மகன் வீட்ல ஜனாஸாவ போட்ருக்காஹ. எல்லாவளும் தீதார் பாக்கப் போறாளுஹ. என்னா பெரிய தீதாரு? துணி மாதிரில்ல வாரிச் சுருட்டி எடுத்து வந்திருக்காஹ. மூஞ்சிய மட்டும் விட்டுப்போட்டு மிச்சத்தையெல்லாம் யானை பிதுக்கி எடுத்துக் கூழாக்கிருச்சு.’

நபீஸா அந்தச் சிறிய வீட்டை மௌனமாகக் கூட்டிக்கொண்டிருந்தாள். வலதுகையால் நெற்றி வியர்வையை வழித்துத் தன் சேலையில் துடைத்துக்கொண்டாள். எதிர்ப்புறத்தில் இருந்த ரசம்போன கண்ணாடியில் அவள் முகம் யாரோ போல் தெரிந்தது. இவ்வளவு நரைகள் வந்துவிட்டனவா தலையில்? ‘அது நிகழ்ந்து  இருவது வருஷம் ஆயிருக்கும்ல?’ அவள் மனமே விரல்களாகி வருடங்களைக் கூட்டிப் பார்த்தன‌.

‘ஏலா இப்பிடி ஊமைக்கொத்தா மாதிரி நிக்கிறவ. எம்மாம் பெரிய விஷயம் நடந்திருக்கு. சந்தோஷப்படாம…’

‘ஓனக்கு டீ போடவா ரஹிமா? சீனி கம்மிதானே?’

‘ம், போடு. சீனி கம்மியா போட எனக்கென்ன அல்லா சக்கர வியாதியவா தந்து வச்சுர்க்கான்? நா எவ குடிய கெடுத்தீ? நல்லா அள்ளிப்போடு சீனிய. நல்ல சேதில்ல வந்திருக்கு. அந்தக் கழிச்சல்ல போனவன்..’

‘மருமகன் துபாய்ல இர்ந்து ஜெய்புன்னுக்குக் கடுதாசி போட்டாரா?’

‘பேச்ச மாத்றியாக்கும்? நிசமாவே ஒனக்கு சந்தோஷமா இல்லியா நவிஸா? இது அல்லா கொடுத்த தண்டனைதேன்னு புரியலையா ஒனக்கு? ஆன அறிவான ஜீவனு பாத்துக்க. பொம்பளையாளுக்கு கெடுதல் பண்ணவனை குண்டி வாசத்துலயே மோப்பம் புடிச்சிரும். பின்ன என்ன நினைச்ச? கெட்ட கழுதைல அது. ஆனைக்கு மதம் பிடிக்குதுங்கறாகளே அது என்னன்னு தெரியுமா? நஜீஸ் ஆன பொம்பளையவோ தல தெறிச்சுத் திறியற ஆம்பளையவோ பாத்தா ஆனைக்கு செவிட்டுல ஒலக்கைய போட்ட மாதிரி வெறி கிளம்பிரும். இது அல்லா உத்தரவாக்கும். எங்க நன்னா ஆனைய கறுத்த மலக்கும்பாஹ.’

நபீஸா மௌனமாக அடுப்படியை நோக்கி நகர்ந்தபடி சத்தமாகக் கேட்டாள். ‘இஞ்சி தட்டிப் போடட்டுமா?’

‘எனக்கு டீ வேணாண்டிம்மா. நீயே குடி. மக தனியா இர்ப்பா. நா வாறீ.’

நபீஸா பதில் சொல்வதற்குள் ரஹீமா புளியமரத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தாள்.

ரஹீமா தொடங்கி வைத்துப் போயிருக்கிறாள். மௌத் அடக்கி மூன்றாம் நாள் ஃபாத்திஹா ஓதுவதற்குள் இன்னும் நிறையப் பேர் வரலாம். இன்னொரு வீட்டுப் பொறணி பேசிப் பேசித்தானே எல்லாப் பெண்களும் தம் வெறுமையை ஆற்றிக்கொள்கின்றனர்! இல்லாவிட்டால் அந்த வெறுமை பூதமாகி அவர்களையே விழுங்கிவிடும். தன்னை நோக்கி வரும் பூதங்களைத்தானே ஒவ்வொருத்தியும் மடியில் கட்டி வந்து இன்னொரு வீட்டில் இறக்கிவிடுகிறாள்.

‘ஊர்ப் பொறணி பேசறத கேட்டுக் கேட்டு அலுப்பாகுது மாமி’ என்று போன வாரம் கமலம் மாமியிடம் சொன்னபோது அவள் சொன்னதை மறக்கவே முடியவில்லை.

‘நவிஸா, ஒன்னு தெரிஞ்சிக்க. பொம்பளையால தவிர்க்கவே முடியாதது ரெண்டு. ஒன்னு தீட்டுத் துணி அலசுறது. இன்னொன்னு ஊர்ப்பொறணி பேசறது. இதுல எவளும் விதிவிலக்கில்ல. அப்பிடி விதிவிலக்கா எவளாச்சும் இருந்தான்னு வை.. அவளுக்கு நல்ல புருஷன் வாச்சிருக்கணும். இல்லாட்டி எவளோ ஒருத்தியோட நல்ல புருஷனை இவ வளைச்சு மடில போட்ருக்கணும். மத்தது ஒழுங்கா வேலை செய்யலங்கிற ஆதங்கத்துலதானே இந்த நாற வாயிக்கு ஓயாம வேல கொடுக்குறாளுஹ.’

‘ஏம் மாமி.. ஒரு சந்தேகம். ஊர் மேயறவ வளைச்சு மடில போடற மாதிரி இருக்கிற ஒருத்தன் எப்புடி நல்ல புருஷன் ஆவான்?’ 

இது ரசியா. அதைக் கேட்டு எல்லோரும் கலகலவென்று சிரித்தார்கள். 

‘அடி போங்கடி போக்கத்தவளுஹளா. ஆம்பளைல ‘நல்லவன்’ங்கிறதுக்கு அர்த்தமே வேற. இந்த விஷயத்துல எல்லா ஆம்பளையும் தூத்தேறி கர்மம்தேன்.’

‘அப்ப பொம்பளைஹல்ல?’

‘ந்தா நெருப்பு மாதிரி நம்ம நவிஸா வாழலயா? பொம்பளையால எப்பிடியும் இருக்க முடியும். பொட்டப்பொறப்பு வாங்கி வந்த வைராக்கியம் அப்பிடி.’

இவர்கள் பேசுகிறபோது ரைஹானாவும் உடனிருந்தாள். அதனைத் தாமதமாகக் கவனித்த நபீஸா, ‘ந்தா வாயி பாக்காதன்னு எத்தன வாட்டி சொல்லிருக்கேன்? உள்ள போயி படி.’

ரைஹானாவுக்கு இந்தச் சித்திரை வந்தால் இருபது ஆகப்போகிறது. பாளையம் கல்லூரியில் கம்ப்யூட்டர் படிக்கிறாள். ‘அது படிச்சா ஒடனே வேலை கெடைச்சிரும்னு ஜப்பார் மாமு சொன்னாஹ. கலைஞரு மெட்ராசுல ஏதோ கம்பூட்டரு பார்க்கெல்லாம் தொறந்திருக்காராம்ல? பார்க்னா செடி, கொடிதானே இருக்கும்? இதென்ன கம்ப்பூட்டர் பார்க்கு?’ அதற்கு மேல் அவளுக்கு அவரிடம் எதுவும் கேட்கவும் வெட்கமாக இருந்தது. ‘அவரு என்னா நம்மள மாதிரி ஆறாப்புல உக்காந்த தற்குறியா? அந்தக் காலத்திலேயே பத்தாப்பு தாண்டுனவரு. அவரு சொன்னாச் சரியாத்தானே இருக்கும்?’ என்று ஜலஜாவிடம் கட்டியிருந்த மாசச் சீட்டை ஒலச்சு மகளைக் ‘கம்பூட்டர் படிப்பு’ சேர்த்துவிட்டாள். அவளும் நன்றாகத்தான் படிக்கிறாள். இனி அவளுக்கு நகை சேர்த்து ‘எவங் கைலயாவது புடிச்சுக் கொடுக்க வேண்டும். அல்லா அவ தலைல என்ன நஸீப எழுதிருக்கானோ?’

நபீஸா எப்போதும் தன் நிலையை நினைத்துப் பெரிதாய்க் கவலை கொள்வதில்லை. அவள் எல்லாத் தருணங்களிலும் அடுத்து வரப்போவதை மட்டுமே யோசிக்கிறவள். ஆயிஷா வீட்டுத் தொலைக்காட்சியில் ‘இன்று முதலிரவு.. இன்று முதலிரவு’ என்று ஏதோ ஒரு பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அவள் மனத்தில் தன் முதலிரவு நினைவில் ஆட, பலவந்தமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு காரணமே இல்லாமல் கசப்பாகிவிட்ட வாயிலிருந்து ‘த்தூ த்தூ’வென எச்சிலைக் கூட்டி வெளியில் போய் துப்பினாள்.

வாசலில் மீண்டும் கூட்டம் சேர்ந்திருந்தது. நபீஸாவுக்குப் பேசுவதற்கே அலுப்பாக இருந்தது. பேசாமல் துப்பட்டி போட்டுக்கொண்டு பஸ் ஏறிச் சின்னமனூர் போய் இறங்கிவிடலாமா? தம்பியும் அம்மாவும் வருகிறபோதெல்லாம் அழைத்துக்கொண்டுதானே இருக்கிறனர்? நபீஸாதான் அங்கே செல்வதில்லை. மே மாசம்கூட அவளும் ரைஹானாவும்தான் வெறும் வீட்டைப் பார்த்தபடி இங்கேயே உட்கார்ந்திருப்பார்கள்.

பசுலுர் ரஹ்மான் செத்து இரண்டு வருஷமாகிறது. போன வருஷத்துக்கு முந்தின சூட்டுக்கறி நோன்பு முடிந்த மறுநாள்தான் திடீரென்று செத்துப் போனான். அன்றைக்கு நபீஸா அனுபவித்தது தீராத சித்திரவதை. மணிக்கொருமுறை ஒவ்வொருத்தியாகக் கிளம்பி வந்து ‘ஊர்நாயம்’ பேசிப் பேசி அவளைச் சோதித்தார்கள்.

பசுலுர் ரஹ்மானைவிட்டு இவள் விலகிவந்த சில மாதங்களிலேயே அவன் இன்னொருத்தியை நிக்காஹ் செய்துகொண்டான். நபீஸா தன் துணிமணிகளை அள்ளி வைத்து ஒரு கையில் மஞ்சள்பையும் மறுகையில் கைக்குழந்தையுமாக வாசல்படி தாண்டிய அன்றே ‘தலாக் தலாக் தலாக்’ என்று கப்பங்கிழங்குக்காரன் விலை சொல்லிக் கூவி விற்பதைப் போலப் பலர் பார்க்க, வீதியில் நின்று சத்தம் போட்டுச்சொல்லி அவளைத் தீர்த்துவிட்டான். ஆனாலும் பிலால் அசரத்து, ‘மார்க்கச் சட்டப்படி இது தப்புப்பா’ என்று சொன்னதால்தான் அந்த ஆறு மாசம் காத்திருந்தான். தூரத்துச் சொந்தக்காரி யாஸ்மினோடு இரண்டாம் திருமணம் ஜாம்ஜாமென்று நடந்தது. வத்தலக்குண்டில் வாழ்க்கைபட்ட யாஸ்மின் புருஷன் ஒரு விபத்தில் செத்துப்போக, அவள் தன் மூன்று வயது மகனோடுதான் பசுலுர் ரகுமான் பேர் சொல்லி அவன் பெத்தம்மா அணிவித்த கருகமணியைக் கழுத்தில் வாங்கிக்கொண்டு அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.

பசுலுர் ரஹ்மான் செத்ததாக வந்துசொன்னபோது நபீஸா யாரோ தர்மமாகக் கொடுத்த குர்பானிக் கறியில் திக்கடி செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவர்கள் அவன் படுக்கையில் பட்ட பாட்டையும், அவளை நினைத்துப் புலம்பியபடியே மூச்சை விட்டதையும் உணர்ச்சியோடு சொல்லிக்கொண்டிருக்கும்போது, ‘ம்’கூடப் போடாமல், சலனமே இல்லாமல், சூப்பி எலும்பை உறிஞ்ச ஆரம்பித்திருந்தாள்.

‘இவ்வளவு வன்மம் ஆகாதும்மா இவளுக்கு’. அவள் காதுபடப் பேசிக்கொண்டார்கள். யார் சொல்லியும் அவள் அசையவேயில்லை. அன்று முழுவதும் ரைஹானா அழுதுகொண்டேயிருந்தாள். மவுத்துக்குப் போய்விட்டு வந்த தம்பி, ‘தீதாராவது பாத்துட்டு வந்திருக்கா? இந்த ஊரு பேசியே கொன்னுரும்.’

‘ஊரு எப்பத்தான் பேசல?’

‘சரி, ரைஹானாவாவது போயிட்டு வரட்டும்.’

‘அவள என்னா குப்பத் தொட்டில இர்ந்தா தூக்கிட்டு வந்தீ? ந்தா இந்தப் பாழும் வயித்துலதானே பொறந்து தொலைச்சா?’

‘அது சரிதேன். என்னதேன் நீ அறுத்துக்கிட்டு வந்தாலும் அந்தப் புள்ளைக்கு அத்தா இல்லன்னு ஆயிருமா?’

‘இத்தோட இந்தப் பேச்ச விட்ருத்தா.’

உடன் வந்த அம்மா அவளிடம் எதுவுமே பேசவில்லை. மௌனமாக மகளைப் பார்த்தபடி விசும்பி விசும்பி அழுதாள்‌. அவள் முடிவெடுத்துவிட்டால் அதுதான் இறுதி. யார் சொன்னாலும் கேட்க மாட்டாள். ‘அவ அவங்க ராதி மாதிரி அழுத்தக்காரி.’ அம்மா பலமுறை அழுதுகொண்டே புலம்பியிருக்கிறாள்.

திருமணம் ஆனபோது அவளுக்குப் பதினாறு வயது. நான்கு ஆண்டுகளாகக் குழந்தை பிறக்கவில்லை. ஊரே படுத்தி எடுத்ததால் போகாத தர்ஹா இல்லை. ‘ஆஸ்பத்திரிக்குப் போகலாமா மச்சான்?’ என்று கேட்ட அடுத்த நொடியே பசுலுர் ரஹ்மான் தன் மச்சினனைச் செருப்பால் அடித்துவிட்டான். அதுவரை பொதுவெளியில் கணவனை எதுவும் சொல்லாத நபீஸா அன்றுதான் தெருவே பார்த்துக்கொண்டிருக்கையில், ‘நீ அழிஞ்சு நாசமாத்தேன் போவ. பாத்துக்கிட்டே இரு. எந்தம்பிய அடிச்ச கையில நீ புத்து வச்சிதேஞ் சாவ.’

பசுலுர் ரஹ்மான் தன்னுடைய 46வது வயதில் செத்துப்போனது புற்றுநோயால்தான். ஊரே அவள் வார்த்தைகளின் சக்தியை வியந்து பாராட்டியபோதும் நபீஸா மௌனமாகவே இருந்தாள். அவள் மனதில்கூட அப்படி ஒரு பெருமிதம் வந்துபோகவில்லை. ‘அல்லா கொடுத்த தண்டனை’ என்றுகூட அவள் நம்பத் தயாரில்லை. ‘நாமளும் ஒரு நா போகத்தானே போறம்? பொறக்கிறப்பவே அல்லா இப்பிடித்தான்னு அத்தனை பேர் தலையிலயும் எழுதிர்றான். காரணம்லாம் நாமா கண்டுபிடிச்சுக்கிறதுதானே? எல்லாச் சாவும் சாவுதேன். பெருசா பேசிக்க வேறொன்னுமில்ல’ என்று முடித்துவிட்டாள்.

‘அப்ப ஏண்டி தீதார் பாக்கக்கூடப் போகாமக் கெடக்க?’ 

‘போகத் தோனல. அம்புட்டுதேன்.’

இளைய குடியாளோட மகன் அபு தேடிவந்து மூன்றாம் நாள் பாத்திஹாவுக்குச் சொன்னபோது, ‘இருக்கட்டும்தா. நீ டீ சாப்பிடுறியா?’ எனக் கேட்டாள்.

‘வேணாம்…. வந்துருங்க….’

அவளை என்ன முறை சொல்லிக் கூப்பிடுவதென்று அவனுக்குக் குழப்பமாகியிருக்க வேண்டும். அப்படியே அவன் அம்மாவின் ஜாடை. வழுவழுப்பான நீண்ட முகம். அவள்தான் மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல் மூத்த குடியாளையும் மதித்துப் பாத்தியாவுக்குச் சொல்ல மகனை அனுப்பி வைத்திருக்க வேண்டும். அவளுக்கு நபீஸா மீது எப்போதும் வெறுப்பு இருந்ததேயில்லை. பொது இடங்களில் எங்கு சந்தித்தாலும் இலேசாகப் புன்னகைத்துப் பேச முயல்வாள். நபீஸாதான் ரைஹானா கைகளை அழுத்திப் பிடித்தபடி அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவாள். என்ன பேசுவது அவளிடம்?

நாட்டு வைத்தியர் தந்த உருண்டையோ, போடி அசரத் இரகசியமாகத் தந்து வீட்டில் தெளிக்கச் சொன்ன ஓதிய தண்ணீரோ, அக்கம் பக்கத்துக்குக்கூடத் தெரியாமல் குடுகுடுப்பைக்காரன் சொன்ன பரிகாரத்தை நபீஸாவின் அம்மா செய்து முடித்த பக்குவமோ, மூன்று முறை பீமா பள்ளிக்குப் போய் தொட்டில் கட்டி மாலையாய் வடித்த கண்ணீரோ, எல்லாம் தாண்டிய இறையருளோ அல்லது இவை எவற்றிலுமோ சம்பந்தப்படாத தற்செயலோ, ரைஹானா நான்கு வருஷத்திற்குப் பிறகுதான் நபீஸா வயிற்றுக்குள் கருவாக வந்தாள்.

‘இஷாவுக்குப் பெறகுதே பெரிய பள்ளில அடக்கம் பண்ணப் போறாஹ போலிருக்கு. பள்ளிவாசல்ல சொன்னதா ஜெயினு சொன்னான்.’

அவள் குடியிருக்கும் வாடகை வீட்டில் ஒரு திண்ணை உண்டு. அதை ஒட்டி ஒரு பிரம்மாண்டமான புளிய மரமும் அதற்கடுத்து வைக்கோல் படப்புகள் நிறைந்திருக்கும் மைதானமும் உண்டு. யாரோ ஒரு பெரிய வீட்டுக்காரவுஹ இடம். அவர்களுடைய பங்காளிச் சண்டையில் தெருவில் நான்கைந்து வீடுகளுக்கு ஓசியில் புளி கிடைக்கிறது. உச்சி வெயிலடித்தாலும் நபீஸா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ஊர்பலா பேச முடிகிறது. பொம்பளைஹலெல்லாம் அந்தப் பெரிய வீட்டு அண்ணன், தம்பி சேரவே கூடாதென்று காசு வெட்டிப் போடக்கூடத் தயார். திண்ணை முக்கியம். அதைவிட நிழல் முக்கியம்.

இரண்டு பேர் வயிற்றைக் கழுவி இப்போது ரைஹானா படிக்கப் போயிருப்பது வரை எல்லாமே இந்தத் திண்ணையின் தயவுதான். ஏழு மணிக்கெல்லாம் திண்ணை ஓரத்தில் ஸ்டவ்வைப் பற்ற வைத்து நபீஸா இட்லி சுட ஆரம்பித்துவிடுவாள். இரண்டு சட்னியோடு சாம்பார் கிடைக்கும். அவள் ரேசன் கடையின் சிக்கனத்தோடு தரும் கெட்டிச் சட்னிக்குத் தெருவில் நல்ல கிராக்கி. சமயங்களில் இனிப்புப் பனியாரம், ஆப்பம்கூடச் சுடுவாள். பெரும்பாலும் தெருவில் பலரும் காலை டிபன் செய்வதில்லை. நபீஸாதான் அந்தத் தெருவின் காலை நேரத்து அன்னபூரணி. பகலில் இரண்டு வீடுகளில் வேலை செய்தாள். முறுக்கு, பூரணம் எது போட வேண்டும் என்றாலும் எல்லோருக்கும் நபீஸா ஞாபகம் வந்துவிடும். பிரியாணி ஆக்கக்கூடப் பீரம்மாவோடு ஒத்தாசைக்குப் போவாள்.

எவ்வளவு சம்பாதித்தும் அவள் நல்ல புடவை கட்டுவதில்லை. தலையை ஒழுங்காய்ச் சீவுவதில்லை. எண்ணெய் வழியும் முகத்தோடும் அழுக்குச் சீலையோடும்தான் இருப்பாள். ஆனால் அவளோடு உடன் பிறந்த எழில் எந்தக் கஷ்டத்திலும் அவளைவிட்டுப் போகவேயில்லை.

‘நாப்பது வயசாடி ஆகுது ஒனக்கு? அப்படியே கட்டு குலையாம இருக்கியே’ என்று பார்ப்பவர்கள் எல்லாம் கண் வைப்பார்கள். ரைஹானா ஒரு வயசாய் இருக்கும்போது புருஷன் வீட்டைவிட்டு இறங்கி வந்தவள், அதற்குப் பிறகு மகளே வாழ்க்கை என்று வைராக்கியத்தோடு தனியாகவே இருந்துவிட்டாள். தம்பியும் அம்மாவும் ‘புள்ளைய நாங்க வளத்துக்குறோம்’ என்று சொல்லி மறுகல்யாணத்துக்காக எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள். நபீஸா பிடியே கொடுக்கவில்லை. தம்பிக்குப் பாரமாக இல்லாமல் மூன்றே மாதத்தில் இந்த வீட்டுக்கு வந்து இட்லி ஆவியில் வேக ஆரம்பித்துவிட்டாள். அவள் மீது எல்லா ஆண்களுக்கும் கண்தான். ஆனால் கதவைத் தட்ட எவனுக்கும் தைரியமில்லை. நபீஸா என்றால் அவ்வளவு பயம். எல்லாப் பெண்களும் அவளில்லாத பொறணித் தருணங்களில் அந்தத் திண்ணையில் கிடத்தப்பட்டு ஊர் வாயால் மீண்டும் மீண்டும் துணி உருவப்பட்டிருக்கிறார்கள். நபீஸாவை எவருமே தவறாக யோசித்ததுகூட இல்லை. ‘அவ வெள்ளைத் துப்பட்டி போட்ட கண்ணகிடி. அவ ஊரை எரிச்சா. இவ இட்லிச் சட்லிய எரிச்சுக்கிட்டே பத்தினியா வாழுறா’ என்று ஹவுஸ் ஓனர் கமலம் மாமி அடிக்கடி சொல்லிக்கொள்வாள். அது மாதிரி நேரங்களில் நபீஸா சிரிக்கவோ வெட்கப்படவோ மாட்டாள். ‘யாரைப் பற்றிய பேச்சோ?’ என்பதைப் போல அவள் பாட்டுக்குத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

‘எந்தப் பொண்டாட்டி வரணுமாம்? இஷா வரைக்கும் அந்த நாற ஒடம்ப வச்சிருக்கானுஹ. ஒத்தைக் கை இபுராஹிமு தனிக் கட்டதான?’

‘அவுஹ அண்ணன் மகன் மெட்ராஸில் இருந்து வரணுமாம்’.

‘யானை மிதிச்ச சாணில அவன் என்னத்த கண்டு மயிரப் புடுங்கப் போறான்? ஆனா கமலம் மாமி சொல்றது நிசம்டி. இவ பத்தினிதே போல. இவ சொல்லுதேன் அந்த நாசமாப் போன ஒத்தக் கையனுக்கு இப்பிடி ஒரு சாவத் தந்திருக்கு. அத்துவிட்டவன் நடுவாந்திர வயசுலயே படுக்கைல நாயா சீப்பட்டு உடம்பு புழுத்து அழுகிச் செத்தான். இவ நெஞ்சுல தீயோட காத்துல தூத்திவிட்ட ஆத்தாமையெல்லாம் யானைய எழுப்பி இவன மிதிக்கக் கூட்டியாந்திருக்கு பாரேன்.’

‘பின்ன.. பொம்பள சாபம்னா சும்மாவா? ஆமா, அறுவைக் கொட்டரைக்கு தூக்கிட்டுப் போனாஹளா?’

‘இனி அறுக்க என்னருக்கு? பட்டாளத்து மொஹம்மதுக்கு போலீசு, டாக்டருமாரெல்லாம் பழக்கம்னாஹ. அந்தாளு தலையிட்டதால ஆனஸ்டா வீட்டுக்குக் கொண்டுவந்திட்டாஹ.’

‘ஆமா.. பட்டாளம்.. பெரிய பட்டாளம்.. நீட்டத் துப்பாக்கியைத் தூக்கி சைனாக்காரனை சுட்ட பெரியாம்பள மாதிரி பேசற. பஞ்சத்துக்கு மாவிடிக்க பட்டாளத்துக்குப் போனவன்தானடி. இவுஹ அம்மா சொல்லும் பாத்துக்க. முன்னாடி குண்டித் துணிகூட இல்லாம சீப்பட்ட லோலாயிக் குடும்பமாம்ல? இப்ப பவிசக் கேளு. பட்டாளத்தான். பல்லு புடுங்கினான்னு.’

‘அவனை ஒரு நா யான மிதிக்கனும்டிம்மா. வீட்டுல தண்ணி புடிக்க போனா நெஞ்சு ரெண்டையும் கண்ணாலேயே பீ வண்டு மாதிரி உருட்டிட்டுப் போயிருவாம் போல. அப்பிடி பொசக்கெட்டதனமா பாக்குறான்.’

‘நீ ஏன் அவந் தண்ணியத் தேடிப் போனவ?’

யாரோ ஆபாசமாகக் கையை ஆட்டிக் கிண்டல் செய்ய, இவர்களின் சிரிப்புச் சத்தம் மவுத் இருக்கிற தெருவுக்கே கேட்டிருக்கும். இதே பெண்கள் சற்று நேரத்தில் தலையில் முக்காடு போட்டபடி ஒத்தைக் கை இபுராஹிமின் வயசான அம்மாவைக் கட்டிப்பிடித்து, தான் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் இடி விழுந்ததைப் போல் மூக்கை உறிஞ்சி அழுவார்கள்தானே? அது நடிப்புக்கூட இல்லை. நிஜம்தான். இதுவும் நிஜம். தனக்குத்தான் அந்தந்த நேரங்களில் அந்தந்த நிஜங்களில் வாழத் தெரியவில்லை. முதலில் கமலம் மாமியிடம் சொல்லி இந்தத் திண்ணையை இடிக்கச் சொல்ல வேண்டும். இட்லிதானே, உள்ளேயே ஊற்றிக்கொள்ளலாம்.

அந்தத் திண்ணை தெருவின் பொதுச் சொத்தாகி பல வருஷங்களாகியிருந்தது. பெண்கள் அமர்ந்து பொறணி பேசுவதைத் தாண்டி சின்னப் பசங்கள் அவ்வப்போது அமர்ந்து ஏதாவது விளையாடுவார்கள். நபீஸாவும் முகம் காட்டாமல் பொறுத்துக்கொள்வாள். ஒரு முறை அமீர்தீனின் மாமா பையன்கள் வந்தபோது எல்லாச் சிறுவர்களும் அங்கே அமர்ந்து சீட்டாடினார்கள். அப்போதுதான் நபீஸாவுக்கு அப்படி ஒரு வேகாளம் வந்தது. கொதிக்கும் சுடு தண்ணியை எடுத்துச் சின்னப் பிள்ளைகள் மீது ஊற்றப் போய்விட்டாள். ஆனால் எல்லோருக்கும் இது தெரிந்த விஷயம் என்பதால் தெரு நபீஸாவை எதுவும் சொல்லாமல் அந்தப் பையன்களைத்தான் திட்டி விரட்டியது. தொலைக்காட்சியில் மகாபாரதம் ஒளிபரப்பானபோது ஆயிஷாக்கா வீட்டில் பார்க்கப்போன நபீஸா, பாஞ்சாலியை வைத்து ஆடும் சூதாட்டக் காட்சியில் சத்தமில்லாமல் எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டாள். மறுநாளில் இருந்து மகாபாரதம் பார்க்கப் போகவில்லை.

‘நவிஸா ஒங்கம்மா மவுத்துக்கு வருமா? என்னதான் ஒத்தக்கை இபுராஹிம் பொச கெட்டவனா இருந்தாலும் நீங்க எல்லாம் தாய் புள்ளைஹதானே? ஒந் தம்பியாச்சும் வருவாப்லயா இருக்கும்.’

நபீஸா இதற்குப் பதில் சொல்லாமல் அடுப்பை ஊதிக்கொண்டிருந்தாள். ‘ஏன் இன்னமும் ரைஹானா காலேஜ்ல இருந்து வராம இருக்கா?’ என்கிற கேள்விதான் அவள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

2

நபீஸாவுக்குச் சிறு வயதிலிருந்தே திருமணம் குறித்த பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இருந்ததில்லை. ‘புகுந்த வீட்டுக்குப் போய்விட்டால் அம்மா திட்டாமலிருப்பாள். நிம்மதியாக இருக்கலாம்.’ இவ்வளவுதான் அவள் எண்ணம். நூரம்மா எப்போதும் மகளைக் கண்காணித்துக்கொண்டேயிருந்தாள்‌ . ‘ஆளானதில் இருந்து தன்னுடைய நிழல் தன்னுடையதாக இல்லை’ என்று நபீஸாவிற்கு அடிக்கடி தோன்றும். அவள் 11 வயதிலேயே ஆளாகிவிட்டாள். ஐந்து வருடங்கள் அவளுக்குப் பிறந்த வீட்டில் மூச்சு முட்டியது. பசுலுர் ரஹ்மான் பக்கத்தில் மாலையும் கழுத்துமாக நின்றபோது அவன் அவளுக்கு ஜன்னலாகவே தோன்றினான். அம்மாடி இனி மூச்சு முட்டாது. அம்மா தன்னை வேவு பார்க்க மாட்டாள். விடிந்த பிறகும் மாராப்பு பற்றிய கவலைகள் இன்றி மல்லாந்தபடி காலை விரித்துத் தூங்கலாம்.

பசுலுர் ரஹ்மானுக்கு அத்தா அம்மா இருவருமே சின்ன வயதிலேயே போய்விட்டார்கள். உடன் பிறந்த பெண் பிள்ளைகளும் இல்லை. இரண்டு அண்ணன்கள் மட்டுமே. அவர்களும் டெய்லர்கள் என்பதால் மனைவி, பிள்ளைகளோடு திருப்பூரில் செட்டிலாகியிருந்தார்கள். ‘நபீஸாவுக்கு மாமியா நாத்தனா கொடுமை இல்லை’ என்று பிறந்த வீடு சந்தோஷப்பட்டுக்கொண்டது.

முதலிரவன்று அவள் உள்ளே நுழைந்தபோது பசுலுர் ரஹ்மான் எச்சில் வழியத் தூங்கிக்கொண்டிருந்தான். இடையிடையே ‘புர் புர்’ என்று குறட்டையும் ‘டர் டர்’ என்று அபான வாயுவும் பிரிய, பெரிய தொந்தி ஏறி இறங்க உறங்கிக்கொண்டிருந்தவனை அருவருப்பாகப் பார்த்தாள். எப்போதும் நாசூக்காக நடந்துகொள்ளும் தம்பியின் முகமும் உடற்கட்டும் நினைவுக்கு வந்தது. என்ன செய்வதென்றே தோன்றாமல் மௌனமாகக் கட்டிலில் அமர்ந்திருந்தாள்‌. இது மாதிரி தருணங்களில் அவள் பார்த்திருந்த சினிமா கதாநாயகிகள் மேக்கப் கலையாமல் அழுவார்கள். அவளுக்கு அழத் தோன்றவில்லை. சின்ன வயதில் அப்பாஸூடன் ஆடிய அப்பா அம்மா விளையாட்டு நினைவுக்கு வந்தது. அதை நினைத்துக்கொண்டே லேசான புன்னகையுடன் தூங்கிப்போனாள்.

பாதித் தூக்கத்தில் எதுவோ தன் மீது ஏறி படுத்திருப்பது போல் ஓர் உணர்வு தோன்ற, பதறிப்போய் கண்விழித்தாள்‌. அவள் சேலை மேலே ஏறியிருந்தது. முகத்துக்குப் பக்கத்தில் பசுலுர் ரஹ்மான் ‘ஈ’ என்று இளித்தபடி அவளை எருமை மாடு மாதிரி அழுத்திக்கொண்டிருந்தான். அந்தப் பூர்வீக வீட்டின் உத்திரக் கட்டைகள் கொஞ்சம் இற்றுப்போய்தான் இருந்தன. நீண்ட நாள்களாக அடிக்கப்படாமல் நூலாம்படை கொசகொசவென்று கிடந்தது. சுவர்க்கோழியின் சத்தமும் நாய்கள் குரைப்பதும் அவள் உடம்பின் அதிர்வுகளோடு இணைந்துகொண்டது. கத்தாழை வீச்சத்தின் நடுவே சர்ப்பத்தின் சீறல்.

‘சுகமா இருந்துச்சாடி?’ 

‘……………………….’

‘போயி எனக்குத் தண்ணி மெத்திட்டு வா. தாகமா இருக்கு.’

அடுப்படியில் தண்ணீர் இல்லை. வெளி டிரம்மிலிருந்து நீர் எடுத்து ஊற்றினாள். குடத்தைத் தூக்கிப் பழக்கமில்லை. இழுத்துக்கொண்டே அடுப்படிக்குப் போக வேண்டும். செம்புகளும் டம்ளர்களும் தின்று எறிந்த தட்டுகளும் உணவின் மிச்சங்களோடும் எஞ்சிய தேநீரோடும் அப்படியே கிடந்தன. அவளுக்கு அதைக் காணவே அருவருப்பாக இருந்தது. செத்த எலியை எடுப்பது போல் ஒரே ஒரு செம்பை எடுத்து ஒற்றைக் கையால் பிடித்தபடி தண்ணீரால் அலசினாள். அந்த இடத்தில் கால் வைக்கவே முடியவில்லை. அவர்கள் வீடு அவ்வளவு சுத்தமாக இருக்கும். பாவாடையைத் தூக்கிப் பிடித்தபடியே செம்புத் தண்ணீரோடு வந்தபோது பசுலுர் ரஹ்மான் மீண்டும் தூங்கிப் போயிருந்தான்.

தெருவில் இருக்கும் எல்லாப் பொம்பளைகளும் ‘இந்த மாசமும் வந்திருச்சா?’ என்று கேட்கும்போதெல்லாம் இரவுகளில் அடுப்படியில் அமர்ந்தபடி புணரும் பல்லிகளையோ கரப்பான்பூச்சிகளையோ வெறித்துக்கொண்டிருப்பாள். அழத் தோன்றாது. மகனோ மகளோ உண்டாகி வெளியே வந்தவுடன் தொப்புள் கொடி அறுக்கும் முன்னரே ‘நல்லா முதுகில் ஒன்னு ஒன்னு வைக்க வேண்டும்’ என்று நினைத்துக்கொள்வாள்.

‘ஒம் புருஷன் பகலெல்லாம் சீட்டாடறானாம்ல? நீ என்னன்னு கேக்க மாட்டியா?’ என்று அம்மா கேட்டபோதுதான் அவன் சீட்டாடுவதே அவளுக்குத் தெரிய வந்தது. அம்மா இப்போது அவனையும் சேர்த்துக் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதுதான் அப்போதைக்கு எரிச்சலாக இருந்தது.

‘பொழுது போகாட்டி என்ன செய்வாஹ?’

‘ம்… புடுங்குவாஹ. ஏன் நீயும் போயி குத்த வச்சு விளையாடறதுதானே?’

நபீஸாவுக்குச் சிறு வயதில் இருந்து சீட்டாட்டத்தின் மீது வெறுப்பெல்லாம் கிடையாது. சிங்கப்பூரில் வேலை பார்த்த ஒன்னுவிட்ட தாய்மாமன் அவளுக்கும் தம்பிக்கும் அத்தாவுக்குத் தெரியாமல் சீட்டாடச் சொல்லித் தந்திருக்கிறார். அவர் வந்திருக்கும்போது வாங்கி வைத்துப்போன மூன்று சீட்டுக் கட்டுகள் இப்போதும் சின்னமனூர் வீட்டின் அடுப்படி ஸ்லாப்பில் கோணிச்சாக்கிற்குப் பின்புறம் நைந்து போய் கிடக்கலாம்.

பசுலுர் ரஹ்மான் ரெடிமேட் கம்பெனிகளுக்கு வெளியூரில் லயன் பிடித்துத் தரும் வேலையிலிருந்தான். மாதத்தில் பாதி நாள்கள் கேரளா போக வேண்டியதிருக்கும். மீதி நாள்கள் இங்கேதான். பொழுதுபோவதற்காக நைனாரத்தா தோப்பில் சீட்டாடிப் பழகியவன் காலப்போக்கில் அதற்கு அடிமையாகிவிட்டான். இத்தனைக்கும் பசுலுர் ரஹ்மானுக்குச் சீட்டாட்டத்தில் இருந்தது திறமையில்லாதவனுக்கு இருக்கிற வீம்பான மோகம் மட்டுமே. நன்றாகச் சம்பாதித்து அதில் பெரும்பகுதியைச் சீட்டாட்டத்தில் இழந்தான். வீட்டுச் செலவுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதால் நபீஸா ஆரம்பத்தில் இதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. வேறு கெட்ட பழக்கம் இல்லாமல் பகல்களில் மட்டும் சீட்டாடிக்கொண்டிருந்தவன், பின்னர் இரவுகளிலும் கொஞ்சம் தண்ணி போட்டபடி சீட்டாட ஆரம்பித்துவிட்டான். ‘பாவம்.. குழந்தை இல்லாத கவலை அவனுக்கு. பூக்காத வயித்தோட குடும்பம் நடத்துறவன் வேறென்னத்த நொட்ட  முடியும்?’ என்று ஊர் அவளையே நொடித்துப் பேசியது.

ஒரே ஒரு முறை, ‘கேரளா போகாம ஊர்ல இருக்கப்ப கட கன்னிக்குப் போகலாம்ல?’ என்று மெதுவாகத்தான் கேட்டாள்.

‘ஏன் ஒன் ஆத்தாக்காரி கேக்கச் சொன்னாளா? நா யானை மாதிரிடி. எப்பவாவது கரும்புத் தோட்டத்துக்குப் போனா போதும். மிச்ச நேரமெல்லாம் ஊரு அண்ணாந்து பார்க்க உலாவிக்கிட்டுக் கெடப்பேன். பொச்ச அமுக்கிக்கிட்டு இருக்குதுன்னா இரு. இல்லாட்டி ஒங்காத்தாட்டயே போயிரு.’

‘இப்ப என்ன சொல்லிட்டேன்? நாள பின்ன நமக்குன்னு எதுவும் வேணாமா? கம்பெனில பார்ட்னர் ஆகப்போறேன்னு கழுத்துல போட்டதையும் வாங்கிட்டீஹ.’

‘ஆமா. நீ பத்து பெத்து வச்சிருக்க. நீயே மலட்டுச் சிறுக்கி. காச பூட்டி வச்சு புள்ளைக்கு நகை வாங்கியா போடப் போற? ஆனா அடுத்த முறை லயனுக்குப் போறப்ப ஒன் பீத்த நகைய தூக்கி மூஞ்சில எறியல நா ஆம்பள இல்லடி.’

அதற்குப் பிறகும் எத்தனையோ தடவை லயனுக்குப் போய்விட்டான். ஆனால் அந்தப் பீத்த நகை அவள் கழுத்துக்கு வரவேயில்லை.

முதன்முதலாகக் குடித்துவிட்டு வந்தபோது கதவைத் திறந்த உடனே அவள் மீதே வாந்தி எடுத்தான். அவள் அங்கேயே சீலையை உதறி தரையை அலசிக்கொண்டிருக்கையில் உள்ளே இருந்து கத்தினான். ‘உள்ள வாடி. அங்க என்ன வெளக்குமாத்து புருஷன கொஞ்சிட்டு இருக்கு? எல்லாத்தையும் அவுத்துட்டு வா.’ அவள் தரையைத் துடைத்து உள்ளே போகும்போது அரைத் தூக்கத்தில் கட்டிப் பிடித்திருந்த தலையணையைக் கைகளில் தூக்கி உதைப்பது போல் வலது காலைத் தூக்கி, ‘சுகமா இருந்துச்சாடி.. தள்ளி படுறீ தேவுடியா’ என்றான்.

பக்கத்தில் பள்ளிவாசல் என்பதால் கபுறுஸ்தானில் இருந்து அந்த வீட்டுக்கு அவ்வப்போது பாம்பு வரும். அந்தப் பாம்பு இந்த நொடியில் வந்து இவன் வாயைக் கொத்தினால் என்ன?

அம்மா அந்த வாரம் ஊருக்கு வந்தபோது, ‘ஒம் புருஷனை குடிக்க வச்சு பழக்குனது அந்தப் பாவாடை இபுராஹிம்தானாம். மொதல்ல அவன் சேர்க்கைய விடச்சொல்லு‌. ஒன் நல்லதுக்குதேஞ் சொல்றேன்.’

‘அந்தாளு சொன்னா குடிச்சுர்றதா? நம்ம புத்தி எங்க குண்டிக்குள்ளயா இருக்கு?’

அம்மா அவளை வெறித்துப் பார்த்தபடி போய்விட்டாள்.

அம்மா மட்டுமல்ல, பலரும் பாவாடை இபுராஹிமைப் பற்றி அவளிடம் சொல்லிவிட்டார்கள். பாவாடை இபுராஹிமுக்குப் பசுலுர் ரஹ்மான் வயசுதான். பத்தாம் வகுப்பு வரை படித்தவன். கொஞ்ச நாள் மிலிட்டரியில் இருந்துவிட்டு ஓடி வந்துவிட்டான். ‘மிலிட்டிரிங்கிறது சூத்து இல்லாத பயலுஹளுக்கு. நமக்கு செட்டாகாது’ என்று யாரிடமோ சொல்லியிருக்கிறான். ஆள் நல்ல உயரம். புது நிறம்‌. தலைமுடியைச் சிவாஜி மாதிரி எண்ணெய் போட்டு படியச் சீவி சைடு மண்டையில் குருவிக்கூடு மாதிரி வைத்திருப்பான். அவனைப் பற்றி ஊர் பலவிதமாகச் சொல்லிக்கொண்டது. ஆனால் நேரில் பார்த்தால் பெண்கள் அவனிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவார்கள். எப்போது பார்த்தாலும் அப்போதுதான் முகம் கழுவி பவுடர் போட்டு வந்தவன் போலவே இருப்பான். நபீஸா தம்பி மாதிரியே கால் நகங்களைக்கூட நேராக வெட்டியிருப்பான். துளி அழுக்கு இருக்காது. கம்பத்திற்கு முதன்முதலாக அவன்தான் ரெடிமேட் பாவாடையை அறிமுகப்படுத்தியவன். ‘பாவாடை இபுராஹிம்’ என்கிற பெயர் தொழில் நிமித்தமாக மட்டுமில்லை; அவனைப் பற்றிக் கேள்விப்படும் வேறு கதைகளுக்கும்கூடப் பொருத்தமாக இருந்தது. அவனுக்கும் சீட்டாட்டம் பொழுதுபோக்குதான். ஆனால் அவன் மற்ற விஷயங்களைப் போல் அதிலும் ஜெகஜாலக் கில்லாடியாக இருந்தான். எதிரில் இருப்பவன் கையிலிருக்கும் பதிமூன்று சீட்டுகளையும் சரியாக ஊகித்து வைத்திருப்பான். அங்கு எது வந்தால் இங்க எதை இறக்கவேண்டும் என்று அவன் மனதில் பதிமூன்றாம் வாய்ப்பாட்டின் நிகழ்தகவொன்று ஓடிக்கொண்டேயிருக்கும். அவனை எவராலும் சூதில் வெல்லவே முடியவில்லை. ஜெயித்த உடனே வேறு ஆளாக இருப்பான்‌. பெரும்பாலும் தோற்றவனுக்குச் சேர்த்தே சரக்கும் சாப்பாடும் வாங்கித் தருவான். மறுநொடியே எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் பாவாடை வசூலுக்குக் கிளம்பிவிடுவான்.

பசுலுர் ரஹ்மான் அப்போது லயனுக்காகக் கேரளா போயிருந்தான். அவன் பெத்தம்மா தென்னந்தோப்பு வைத்திருப்பதால் அங்கிருந்து தேங்காய்கள் நிறைய வரும். உரித்த தேங்காய்களின் மட்டைகளும்கூட இங்கேதான் கிடக்கும். பாவாடை இபுராஹிமின் அம்மா அடுப்பெரிக்க இங்கு வந்துதான் மட்டைகளை அள்ளிக்கொண்டு போவாள். அன்று பாவா பள்ளி கொடிக்கட்டின் ஊர்ச்சோறு. தெருவில் எல்லோரும் அங்கே போய்விட்டார்கள். நபீஸாவுக்கு அது மூன்றாவது நாள் என்பதால் போக முடியவில்லை. அன்றுதான் பாவாடை இப்றாஹிம் முதன்முதலாய் அவள் வீட்டுக்கு வந்தான்.

‘நபீஸாம்மா, ஒஞ்சேலை காத்துல பறந்து வந்து தொட்டித் தண்ணில கெடக்குது பாரு.’

அவன் வந்ததையோ மட்டை அள்ளுவதையோ கொஞ்சம்கூடக் கண்டுகொள்ளாமல் வீட்டைக் கூட்டிக்கொண்டிருந்தவள், ‘நபீஸாம்மா’ என்கிற சொல்லால் மலர்ந்து தலை நிமிர்ந்தாள்‌. சிறு வயதிலேயே செத்துப்போன தன் அத்தாவைத் தவிர வேறு யாரும் இப்படி அழைத்ததில்லை. தன்னைவிட இளைய பெண்களையும் ‘அம்மா’ சொல்லி அழைப்பது இபுராஹிமின் விநோதமான பல வழக்கங்களில் ஒன்று.

அவன் கைகளில் இருந்த ஈரம் சொட்டுகிற தன் சேலையைப் பார்த்தபடி, ‘கொடுங்கண்ணே’ என்றாள்.

‘அண்ணனா? நா என்ன ஒனக்கு சின்னத்தா மகனா, பெரித்தா மகனா? தூரத்து உறவுல கூட்டிப் கழிச்சுப் பார்த்தாகூட மச்சான்னுதான் வரும். சும்மா மச்சான்னு கூப்பிடு நபீஸாம்மா.’

அன்று இருவரும் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இடையில் இரண்டு முறை டீ போட்டுத் தந்தாள்‌. அவன் தேநீரை உறிஞ்சுவது அவ்வளவு நாசூக்காக இருந்தது. மருதாணி வைத்துச் சிவந்த உள்ளங்கை. சீராக வெட்டப்பட்ட விரல் நகங்கள். அப்போதுதான் அணிந்த புத்தம் புதுச்சட்டை. எவ்வளவு பேசினாலும் எச்சில் தெறிக்காத நிதானம். கட்டை விரலால் லாவகமாக மூக்கை நுனியைத் தேய்க்கும் லாவகம். குட்டி குரா பவுடர். அதற்குப் பிறகு பசுலுர் ரஹ்மான் கேரளா போகும்போதெல்லாம் அவன்தான் மட்டை அள்ள வந்தான்.

‘மச்சான், இது ஒங்க புள்ளதான். வயித்தைத் தொட்டுப் பாருங்களேன்.’

முன்பெல்லாம் ஆசையாய்க் கேட்டாலும் ‘வாங்க’, ‘போங்க’ என்றே கூப்பிட்டவள், முதன்முதலாய் அன்றுதான் அவனை ‘மச்சான்’ என்று சொல்லியிருக்கிறாள். ஆனால் பாவாடை இபுராஹிம் அதை உணரும் மனநிலையில் இல்லை. லேசாய் நெற்றியைத் தேய்த்து முகத்தைச் சுருங்கியபடி வைத்துக்கொண்டான்.

‘அதெப்படி ஒனக்கு உறுதியாத் தெரியும்? பசலுகூடவும் அப்பப்ப பொழங்கிட்டுத்தானே இருக்க?’

‘பொம்பளைக்கி தெரியாதா மச்சான்? தாயறியாத சூளா? ஒங்களுக்கு ஆம்பளப் புள்ள வேணுமா, பொம்பளப் புள்ளையா?’

‘ ………………….’

‘மச்சான். என்னா அமைதியாயிட்டீங்க?’

‘லேசா தலைவலிக்குது. நா பெறகு வாரேன்.’

அவன் அன்று ஒரு தடவைகூட அவளை ‘நபீஸாம்மா’ என்று அழைக்காதது உறுத்தலாக இருந்தது. ஆனாலும் அந்த உறுத்தலை உடனே மறந்துபோனாள். அவள் வயிற்றின் அசைவுகள் தருகிற குதூகலம் எல்லாவற்றையும் மறக்கடித்தது.

அவள் குழந்தை பெறுவதற்காக ஊருக்குப் போயிருந்தபோது யாருமே இல்லாத தருணமொன்றில் அம்மா மெதுவாகக் கேட்டாள்.

‘இப்ப மட்டை அள்ள இபுராஹிம்தான் வர்றானாம்ல?’

அவளுக்குத் திக்கென்றிருந்தது. இவளென்ன அம்மாவா, தம்பி படித்துக் காட்டும் தமிழ்வாணன் கதைகளில் வருகிற சி.ஐ.டி சங்கர்லாலா? அம்மாவைக் கண்டால் எப்போதும் எரிச்சலாக இருக்கும். முதன்முதலாக அம்மாவைப் பார்த்து பயம் வந்தது. அதை மறைத்தபடி, ‘அம்மாவோ மகனோ யார் வர்றாஹன்னு எனக்கென்ன தெரியும்? எனக்கென்ன வேற வேல கெடையாதா?’ என்று சமாளித்தாள்.

அம்மா அப்போதைக்கு மௌனமாகிவிட்டாள். ஆனால் பிள்ளை பெற்று நாற்பதாம் நாளில் பேத்தியைக் கொஞ்சிக்கொண்டே ‘இவ கிட்ட ஒங்க ரெண்டு பேரு சாடையும் இல்லயேடி’. நபீஸா துணியை மடித்துக்கொண்டே ‘ஒஞ் சாடையாயிருக்கும்’.

‘அதேப்படி? நீயே எஞ் சாடைதான? இவ ஒங்க அத்தா சாடைகூட கெடையாது. பசலு அத்தா, அம்மாவையும் நா பாத்திருக்கேன்ல?’

தெருவிலும் ஒன்றிரண்டு பேர் அதையே கேட்டார்கள். ஆனால் பசுலுர் ரஹ்மான் பார்த்த உடனே ‘அப்படியே எஞ்சாடை’ என்று சொல்லிவிட்டு அதையே ஊரெல்லாம் சொன்னான். அவன் சொன்ன பிறகு உற்றுப் பார்த்தவர்களுக்கு ரைஹானா அவன் சாடை போலத்தான் தெரிந்தது‌. அவள் அம்மாவைத் தவிர எல்லோரும் அதையே திருப்பிச் சொன்னார்கள். நபீஸா ‘மச்சானிடம்’ குழந்தையைக் காட்டுவதற்காகக் காத்திருந்தாள். ஆனால் ரஹ்மான் கேரளா போகவேயில்லை. அவன் பிள்ளை உண்டானதில் இருந்து காசு விஷயத்தில் கண்ணாக இருந்தான். நிறைய கம்பெனிகளுக்கு லயனுக்குப் போய் அவனே கடை வைக்கிற அளவுக்குக் காசு சேர்த்துவிட்டான். ‘ரைஹானா கார்மெண்ட்ஸ்’ என்று அடிக்கடி சொல்லிப் பார்த்துக்கொண்டான். இப்போது சீட்டாட்டம் இரண்டாம் பட்சமாகிவிட்டாலும் பாவாடை இபுராஹிமை ஒரு தடவையாவது ஜெயித்துவிட வேண்டும் என்கிற வெறி மட்டும் ஆழ்மனதில் கிடந்தது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தான். பாவாடை இபுராஹிமுக்கும் இப்போது தொழிலில் இறங்கு முகம்தான். சரியாக இடம் பார்த்து அடிக்க வேண்டும். ரைஹானா பிறந்த ராசி நமக்கு. கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். எலி பொறியில் சிக்காமலா போய்விடும்? பலர் பார்க்க அவனை ஜெயிக்க வேண்டும். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டுபோய் தொட்டிலை விலக்கி ரைஹானா காலில் கொட்ட வேண்டும். 

அன்று கதவைத் திறக்கிறபோதே குப்பென்று வாடை வந்தது. உள்ளே நுழைகிறபோதே பதற்றமாக இருந்தான்.

‘கதவை நல்லா பூட்டி….ட்ட்..ட்டியா‌..டி?’ இதையே பலமுறை கேட்டான். ‘நீ பத்திரமா இரு என்னா’, ‘சின்னமனூர் போயிடறியா?’, ‘எல்லாம் காரணமாத்தே’ என்று உளறிக்கொண்டேயிருந்தான். அவ்வப்போது தொட்டிலை விரித்து மகளைப் பார்த்து, ‘எஞ் செல்லம். எஞ் செல்லம், ஒம்மேல ஆணை. அந்தத் தேவடியா மவனை.. நா..ளைக்..கி அத்தா வெட்டுவேன்.. ந்த இந்தக் கையால வெட்டுவேன்’ என்று கொஞ்சல் பாதி உளறல் பாதியாகத் தடுமாறியவன், ‘உள் ரூம், அடுப்படி எல்லாத்தையும் பூட்டுடி’ என்று கண்ணை உருட்டியபடி விநோதமாக நடந்துகொண்டான். முழுப் போதையில் இருந்தவனின் தலையில் தண்ணீர் ஊற்றி விசாரித்தபோது முதலில் எகிறியவன், பிறகு அவள் கால்களைப் பிடித்து அழ ஆரம்பித்தான்.

‘என்னைய மன்னிச்சுர்றீ. இருந்த காசு பணம் எல்லாத்தையும் வச்சு ஆடினேன். என்னால எப்பவுமே அந்தத் தாயோலிய ஜெயிக்க முடியலடி. அவன் என்னை பாத்து நக்கலா சிரிச்சான் தெரியுமா? முந்திகூட அப்பிடித்தான் சிரிப்பான். நம்ம ரைஹானாக் குட்டி பொறக்கதுக்கு முன்னாடி. இப்பவுஞ் சிரிக்கிறான். இதுல தோத்ததுக்காக என்னைய ஆம்பளையான்னு கேக்குறாண்டி.. யாரை.. என்னை.. ஹைதர் ராவுத்தர் மகனை. அழகு மயிலு ரைஹானாவ பெத்தெடுத்த சிங்கத்தை. கேட்டாண்டி… நிசமா.. ஒம்மேல சத்தியமா.. ஆம்பளையான்னு கேட்டப்புறம் சும்மா இருக்க முடியுமா? பயலுஹலும் ‘விடாதடா பசலு. ரெண்டுல ஒன்னு பாத்திருவோம்ன்டானுஹ’. ஒக்கோலோலி வச்சு ஆட எதுவுமே இல்லடி. வாட்ச், செயினு, மோதிரம், சைக்கிளு எல்லாமே தோத்தாச்சு. வீட்டைச் சொன்னேன். அந்தத் தாயோலி முடியாதுங்கிறான். இது பொதுச் சொத்தாம். வில்லங்கம் வருங்கிறான். அப்புறமாட்டு, ‘நா என் வப்பாட்டிய வச்சு ஆடறேன். நீ ஒம் பொண்டாட்டிய வச்சு ஆடு’ன்னான். எனக்குன்னா மண்டைக்குள்ள சுர்ருன்னு ஏறி அடிக்கப் போயிட்டேன். ‘யாருடா ஒன் வப்பாட்டின்னேன்?’ படுகாலிப்பய சொல்லவே இல்ல. ‘ஆம்பள நீ ஜெயிச்சா போயி என் வப்பாட்டிய முழுசா பாத்துக்கடா. நானே வந்து வெளக்கு புடிக்கிறேன். ஆனா அவ அழகிடோய்ன்னு’ சொல்லி என்னென்னவோ வர்ணிச்சாண்டி. அதுக்கு அந்த ஜமால் கள்ளன் அவன்கூடச் சேர்ந்துக்கிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறான்டி. அவனுக்கு மட்டும் தெரியும் போல. தாயோழி என்னை பொம்பளை ஆச காட்டி உசுப்பி விட்டுட்டாண்டி. அது மட்டுமில்ல.. ரைஹானா ராசியான புள்ள.. அதனால கண்டிப்பா ஜெயிச்சிருவோங்கிற நம்பிக்கைலதேண்டி ஒன்னைய வச்சு ஆடினேன்.. ஆனா தோத்துப் புட்டேண்டி… தோத்துப் புட்டேண்டி..’

தன் தலையில் அடித்து அடித்து அழும் கணவனை யாரோ போல் பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள் நபீஸா.

‘பொம்பள விஷயம் விட்ருவான்னு பாத்தா கெளம்புறப்ப, ‘நபிஸாவை கதவை தொறந்து வைக்க சொல்லு. நா எத்தனை மணிக்கு வரன்னு கூசாம கேக்குறாண்டி. வந்துருவானா அவன்? வந்துருவானா அவன்? போயிருவியா நீயி? போயிருவியா? அம்மாடி.. அம்மாடி.. எந்தங்கம் ரைஹானா.. ஒம்மேல ஆணடி செல்லம். ஒங்கொம்மாவ தொட்டா அவன் கைய நா வெட்டுறீ.. பாத்துரலாம்டா ஒன் வப்பாட்டியா எம் பொண்டாட்டியா? லே பாவாடை இபுராஹி ஒன் கைய வெட்றண்டா. எங் குருத்து மேல ஆணை. பாத்துரலாமா? ஒன் வப்பாட்டியா? எம் பொண்டாட்டியா? நா ரெடிடா மாப்ள. சீட்டை போடுறா.. எலே சீட்டை போடுறா.. நானாடா பொண்டுகன்? சீட்டை போட்றா.. போடுறா சீட்ட.’

வெறுங்கையைச் சீட்டுப் போடுவது போல் விசிறியபடி உளறிக்கொண்டேயிருந்த பசுலுர் ரஹ்மான் சற்று நேரத்தில் தரையில் வாந்தியெடுத்து அதன் மீதே படுத்துத் தூக்கிப் போனான். அன்று இரவு முழுவதும் நபீஸா தொட்டிலுக்குப் பக்கத்தில் வெறித்தபடியே அமர்ந்திருந்தாள்.

அதற்கு அடுத்த நாளில் இருந்துதான் பாவாடை இப்ராஹிம், ‘ஒத்தக்கை இப்ராஹிமாக’ மாறினான்‌. சொன்ன மாதிரியே அவன் விடிவதற்கு முன்பாக மாடே இல்லாத மாட்டுக் கொட்டத்தின் வழியே ஏறிக் குதித்துக் கொல்லைக்குப்போன நபீஸாவின் தோளைப் பிடித்து அங்கேயே படுக்க வைக்க முயல, அவள் பதம் பிடித்து வைத்திருந்த புது அரிவாள்மனையை எடுத்து அவன் தொட்ட கையில் வெறியோடு ஓங்கி வெட்டினாள். ரத்தம் சொட்டச் சொட்ட அவன் ஓடுகிற சத்தம் கேட்டு எழுந்துவந்த சனமெல்லாம் செயலற்று நிற்கும்போதே நபீஸா கோடாலி முடிச்சு போட்டபடி தன் குழந்தையோடும் துணிமணியோடும் ஒரு சொட்டுக்கூடக் கண்ணீர் சிந்தாமல் தெருவைக் கடந்து போனாள். இந்தச் சம்பவத்தைப் பலமுறை நினைவுகூர்ந்து ஒத்தக்கை இபுராஹிமையும் பசுலுர் ரஹ்மானையும் வாரித் தூற்றியபடி தெருவும் ஊரும் தன் நினைவுகளில் நீங்காமல் வைத்துக்கொண்டது.

3

மணி ஏழாகிவிட்டது. இன்னும் ஏன் ரைஹானாவைக் காணவில்லை? அஞ்சு மணிக்கெல்லாம் காலேஜில் இருந்து வந்துவிடுவாளே? என்னாச்சு.. என்னென்னவோ யோசித்து மனசுக்குள் பதற்றம் கூடியது.

‘அவுஹ அண்ணன் மகன் ப்ளஷர் கார்ல வந்துட்டானாம்.’

‘ஏனாம்? துரைக்கு ஃபிளைட் கெடைக்கலையா?’

‘நபீஸா ந்தா ரைஹானா வந்துட்டாடீ. எங்கடீ போனவ இந்நேரம் வரைக்கும்? ங்கொம்மாக்காரி நெருப்புக் கங்க தின்ன மாதிரி உள்ள முழிச்சிட்டு நிக்கிறா. போ உள்ள.’

கலைந்த தலையோடும் குழப்பமான முகத்தோடும் உள்ளே நுழைந்த மகளைக் கண்டு தன் பதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடிக்குரலில் கேட்டாள்.

‘எங்கடீ போயிட்டு வர்ற?’

நோட்டுகளை மேசை மேல் வைத்தபடி முகத்தைத் துடைத்தபடி கண்ணாடி பார்த்துக்கொண்டே, ‘ஃபிரெண்டு வீட்டுக்குமா’ என்றாள்.

‘ந்தா பாரு, வெளிய எல்லாம் இருக்காளுஹ. அதேன் மெதுவா பேசறேன். உனக்குப் பொய் சொல்ல வராது. நிசஞ் சொல்லு.’

அவள் திரும்பி, சற்று நேரம் அம்மாவையே மௌனமாகப் பார்த்தாள்.

‘ம்மா.. ஸாரிம்மா. நா காலேஜ்ல இருந்து பைபாஸ் வந்தப்ப நன்னி என்னைத் தேடி வந்து நின்னுச்சு. ஏதோ மவுத்து வீட்டுக்குப் போகணும், துணைக்கு வான்னுச்சு. யார்னு கேட்டா சொல்லலை. வீட்டுக்குப் போயிட்டு போலாம்னீ. அதையும் கேக்கல. போயி பாரத்தப்பறந்தே தெரிஞ்சது அது அந்த பேட் அங்கிள்னு. நல்லா திட்டிவிட்டுட்டேன். வீட்டுக்குக்கூட கூப்புடலை. அழுதுக்கிட்டேதான் ஊருக்குப் போகுது. நன்னி ஏம்மா அந்தாளு சாவுக்கு என்னைய கூட்டிட்டுப் போகுது? அதும் ஒனக்குத் தெரியாம?’

‘கண்டோராலி முண்ட. அவ இன்னும் திருத்தலயா? குமிச்சு வச்ச குப்பையை கலைச்சு மோந்து பாத்துக்கிட்டு திரியறா. எடுபட்ட சிறுக்கி.’

அடுப்படி சிங்கில் பாத்திரத்தை வீசி எறிந்தபடி நபீஸா விசுவிசுவென்று உள்ளே போனாள்.

‘யாரம்மா இப்பிடி திடற. நன்னியவா? நீ இப்பிடி கெட்ட வார்த்தையெல்லாம் பேச மாட்டியே?’

‘அந்த அருவாமனைல ஒங் கழுத்தையும் சேத்து வெட்டிருக்கணும்டி. தப்பு பண்ணிட்டேன்.’

மெதுவான குரலில் தனக்குள் பேசியபடி பல்லைக் கடித்தாள்.

‘அம்மா என்னம்மா சொல்ற? ஒன்னும் கேக்கல. ஸாரிம்மா.. நா வேணும்ன்னு போகல. நன்னிதான்.. லூசு நன்னி.’

நன்னியைத் திட்டிக்கொண்டே உள்ளே நுழையும் மகளின் களங்கமற்ற முகத்தைப் பார்த்தவுடன் பொங்கிப் பெருகிய பெருங்கோபத்தையும் ஆற்றாமையால் கிளம்பிய கண்ணீரையும் சடாரென்று மறைத்தபடி அவளை முதன்முதலாகக் கைகளில் தந்தபோது மனதில் குடியேறியிருந்த பரிவின் வாசத்தை நினைவில் நுகர்ந்தபடி மெல்லக் கேட்டாள்.

‘இஞ்சி டீ சாப்பிடறியாடி?’

*

சொற்பொருள் விளக்கம்:

  1. மவுத்- மரணம்
  2. வெள்ளன – அதிகாலையில்
  3. ஜனாஸா- சவம்
  4. தீதார்- கடைசியாகப் பிணத்தை முகம் பார்த்தல்
  5. நஜீஸ்- தீட்டு
  6. நன்னா- தாய் வழிப் பாட்டன்
  7. மலக்கு- வானவர்
  8. ஃபாத்திஹா- இறைப் பிரார்த்தனை
  9. நஸீப்- தலையெழுத்து
  10. சூட்டுக்கறி- பக்ரீத் கறி
  11. நிக்காஹ்- திருமணம்
  12. தலாக் – மணவிலக்கிற்கான சொல்
  13. பெத்தம்மா- பெரியம்மா
  14. குர்பானி- பக்ரீத் நாளில் ஆடு அறுப்பது
  15. திக்கடி- அரிசி மாவுடன் கறி, எலும்பு சேர்த்துச் செய்யப்படும் உணவு
  16. ராதி- அப்பா வழிப் பாட்டி
  17. இஷா- இரவு நேரத் தொழுகை
  18. வேகாளம் – பெருங்கோபம்

2 comments

சீனி. இராசகோபால் October 1, 2023 - 10:50 am

அருமை. ஆழம் தான் பொம்பள மனசு.அத ஜெயிச்சவன் யாரு உலகத்திலே. ஏதோ சொல்லிட்டு திரியிறோம் ஆம்பளன்னு.
வாழ்த்துகள் மானசீகன் நல்லா வருவ

S.wahida banu October 2, 2023 - 11:20 pm

Super

Comments are closed.