புத்தன் போதனைகளில் இல்லை! – ஹெர்மன் ஹெஸ்ஸேயின்  சித்தார்த்தன்

0 comment

தான் கற்றறிந்த கீழைத்தேய ஞானமார்க்கங்களில் ஒருபகுதியை ஹெர்மன் ஹெஸ்ஸே புனைகதையாக்கிப் பார்க்க முயன்றிருக்கிறார். ஒரு நாவலில் விவரிக்கப்படும் நிகழ்வுகளிலிருந்துதான் ஆசிரியன் உணர்த்த விழையும் ஒரு மெய்மை அல்லது வாழ்நோக்கு சாரமெனத் திரண்டெழ வேண்டும். ஹெஸ்ஸேவின் புரிந்துணர்வுக்குட்பட்ட எளிய ஆரம்பக்கட்டப் பயிற்சிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கதாமாந்தரும், மேலோட்டமான நிகழ்வுகளுமாக மெய்யியல் தேட்டத்தில் அவர்கொண்ட முன்கருதுகோள்களுக்கு மானுட வடிவம் தரும் முயற்சியாக இந்நாவல் எஞ்சி நிற்கிறது. எனினும் சித்தார்த்தன் நாவலில் உணர்த்தப்பட்ட மெய்-வாழ்வியல் கூறுகளும் விளக்கங்களும் மகத்தானவை. அதேநேரம் அப்பாதையில் உண்மையாகப் பயணம்செய்ய முற்படுவோரது மனப்போராட்டங்களின், குழப்பங்களின் ஆழங்களை விரித்துக்காட்டிய  வகையில் மிகச்சிறந்த முயற்சி எனலாம்.

மெய்ஞானம் எய்துதல் என்பதை மையமாக வைத்து அதன் வழி ஒருவரது வாழ்வில் நிகழும் மாற்றங்கள் என்ன, அல்லது மெய்ஞானத்திற்குப் பிறகான ஒருவரது வாழ்வும் இருப்பும் எப்படியெல்லாம் பரிமாணம் கொள்கின்றன என்பதே இந்த நாவலின் அடிப்படை. அப்பரிமாணம் ஒருவருக்கொருவர் வித்தியாசமானது; அவரவருக்கேற்ற குணாம்சங்கள், பயிற்சி முறைகள், அனுபவ வழி கற்றுணர்ந்தவை என. ஞானப்பாதையில் இவ்வாழ்வை விலக்குதலின்றி அதற்குள் மூழ்கி முத்தெடுத்தலே இங்கு உயர்வாகப் பேசப்படுகிறது.

சித்தார்த்தன் என்ற தலைப்பும் கதையில் கெளதம புத்தரின் சந்திப்பும் உரையாடல்களும் நேர்வதால் இது புத்தம் சார்ந்த நாவலென முழுதாக எடுத்துக்கொள்ள முடியாது. இயல்பில் அத்வைதத்தின் ஞானதரிசன நோக்குள்ள சித்தார்த்தன் எனும் சமணன் தனது பயணத்தில் புத்தரைச் சந்திக்கிறான். அதாவது, சமணத் தவப்பயிற்சிகள், அத்துவைத தத்துவங்கள், புத்தப் போதனைகள் ஆகிய மூன்று புள்ளிகளையும் இணைக்கும் கதையம்சம் கொண்டது. தாம் சந்தித்தவர்களிலேயே அதிமேன்மையும் உயர் ஞானமும் அடைந்தவர் என்று புத்தரை வணங்கி விலகிப் போகிறான்.  கடைசிவரையில் புத்தரின்மேல் அளவுகடந்த மதிப்பும் பிரியமும் கொண்டிருக்கிறான். ஆனால் புத்தம் தாண்டி அத்துவைதமே கதையில் நிரம்பப் பேசப்படுகிறது. ஒரு கோணத்தில் புத்தம் தாண்டி அத்துவைதமே இந்நாவலின் அடிநாதமாகிறது. ’இது ஒரு கல், காலப்பரிமாணத்தில் அது மண்ணாகலாம், தாவரமாகி விலங்காகி மனிதனாகலாம். அது ஒரு பொருளாயிருந்து வேறொன்றாய்ப் பரிமாணப்படுவதால் அல்ல நான் அதை மதிப்பது. அது வெறும் கல்லாகவே தோற்றமளிப்பதால் அதை நான் வெகுவாக நேசிக்கிறேன்’ என்கிறான்.

‘அகம் அழித்த பாதையில் இன்மையில் பொருந்தி சூனியத்தில் சஞ்சரித்து தன்னுணர்விலிருந்து விடுபட்டவனாகப் பல்லாயிரம் முறை பயிற்சி செய்தபோதும் விட்டதை மறுபடியும் மறுபடியும் தொட்டு நிற்பதும் தீராப் பழக்கமாகிவிடுகிறது. பிச்சையேற்று, அவா வென்று முடித்து பின்னர் மீண்டும் தாபம் கொள்ளும் சுழற்சியிலேயே நீள்கிறது அவனது வாழ்நாள்’ என்பதாகச் சித்தார்த்தன் வேறுபட்ட தன்வழிப் பாதையை நோக்கி நகர்கிறான். சமணச் சித்தார்த்தனுக்கு புத்த வழியின் கண்டடைவுகள் போதவில்லை. ஏனெனில் அவன் இவ்வாழ்வின் இருமைப் பண்பையே நேரடியாக அனுபவப்பட்ட, அதன்வழியான மெய்மைகளே அவன் சிந்தையில் நிறைந்திருக்கின்றன. வெறுமனே கொள்கைரீதியான துறவல்ல, அறிந்து உணர்ந்து அனுபவப்பட்டு இயல்பாய் விடுபட்டு துறவு நிகழ்வதே அவனுக்கு உகந்ததென உணர்கிறான்.

இருப்பின் மெய்மைக்கு விழிப்படையும் மெய்ஞானத்தை எய்தியதும் இருப்பும் நோக்கும் மாசற்றுத் திகழும் எனும் கற்பனையும் எதிர்பார்ப்புமாக இருப்பதற்கு மாறானது ஞானியர் வாழ்வு. விழிப்படைவிற்குப் பின்னர் சலவை செய்யவேண்டிய காரியங்கள் இருக்கத்தான் செய்யும். ஆறரை வருடங்கள் தவமிருந்து ஓரிரவில் போதி ஞானம் அடைந்த புத்தர், அதே உயர்தரிசன நிலையில் எண்பது வயதுவரை வாழ்ந்தார் என்று சொல்வதற்கில்லை. விழிப்படைவு ஒரு பெரிய மாற்றம், பண்பிலும் நோக்கிலும். ஆனால் வரும் நாட்களில் எதிர்ப்படும் வாழ்வெழுச்சிகளை எதிர்கொள்வதில்தான் ஞானம் பிரதிபலிக்கும். பக்குவம்பெற்று உறுதிப்படும். பரவசத்திற்குப் பின்னும் சலவை செய்வது தேவை, அதுவே இதயத்தைப் பண்படுத்தி ஞானம் கமழச்செய்யும் என்கிறார் பெளத்தத் தியான ஆசிரியர் ஜாக் கார்ன்ஃபீல்ட் ‘After the Ecstasy, the Laundry: How the Heart Grows Wise’ எனும் நூலில்.

மிக இளமையிலேயே சித்தார்த்தன் சமணனாகப் பயின்று வருகிறான் தனது நண்பன் கோவிந்தனுடன். நிமிர்ந்து அமர்ந்து வாசியை அடக்கிக் கும்பகம் ஏறி, இதயத் துடிப்பை மட்டுறுத்தி ‘நான்’ என்பதை அழித்து சமண முறையில் சமாதி கட்டி நிற்கப் பழகிவிடுகிறான். சமண ஆசான்களே வியப்புறும்படி பயில்கிறான்.

‘நீ மகா சமணன் ஆகிவிடுவாய்’ என்று கோவிந்தன் கூற, அதைக் கேள்விக்குள்ளாக்கும் சித்தார்த்தன், ‘எனக்கு அப்படித் தோன்றவில்லை. சமணர்களிடம் கற்றுக்கொண்டவற்றை வேசியரிடமும் வண்டிக்காரர்களிடமும் சூதர்களிடமும் கற்றறியலாம்’ என்று கூறி அதிர்ச்சியூட்டுகிறான். ‘அதெப்படி அக்கீழானவர்களிடம் கற்றுக்கொள்ள முடியும்?’ என்ற கோவிந்தனிடம் சித்தார்த்தன் விளக்குகிறான். ‘உபவாசமிருந்து மூச்சடக்கி, உடல் மறந்து அகத்தை விட்டுப்பறக்கும் தந்திரோபாயமே தன்-மறப்பும் தன்-ஏமாற்றுமே தான் தவம்’ என்று மேலும் திகிலூட்டுகிறான். ’அதே தன்மறப்பை ஒரு வண்டியோட்டியும் உடலுழைத்து அலுத்துப்போகும் கூலியாளும் கள்ளுண்டு போதையில் திளைத்து நிகழ்த்துகிறான்’ என்பது பதிலாகிறது. இருபதாண்டுகளுக்கு முன்னர் நண்பர் காமராஜ் கேட்டார், ‘போதை மருந்துகளால் அனுபவமாகும் பரவசம் போதாதா? தவத்தின் வழியிலான பரவசமும் அத்தகையதுதானே? அந்த யூஃபோரியா நிறைவானதாயிற்றே’ என்று. வாழ்வின் இயல்பான பரவசங்களை இன்பங்களை ஒழிப்பதல்ல; அதன் துயரங்களை, அடிமைப்படுவதை விலக்குவதுதான் தவநோக்கு என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை இங்கு.

சித்தார்த்தனின் ஆன்மா பிரம்மத்தில் அம்பெனக் குத்தி நிலைகொண்டுவிடுகிறது என்று அவனது தவத்திறன் பேசப்படுகிறது. ஆழ் தவப்பயிற்சியில் தேர்ந்து தானுறைந்த மடங்களை விட்டகன்று நண்பனுடன் தனித்தத் தேடலை மேற்கொள்கிறான். வழியில் புத்தரை அடைகிறான். அவரில் மயங்கி கோவிந்தன் மட்டும் புத்த பிக்குவாகிவிட, சமணன் சித்தார்த்தன் புத்தரிடம் உரையாடுகிறான். ஒவ்வொருவனும் தன்னின் நித்தியத்தில், உள்ளுணர்வில் நிலைப்பதன்றி ஆத்மனை வேறெங்கு காணவியலும் என்று கேட்கிறான். தான் என்ற உள்ளுணர்வின் இருப்பிடமேது என்று சமணச் சித்தார்த்தன் வினவுகிறான். ஒருவன் தன் இருப்பின் மூலத்தைக் காணவும் கைவரப்பெறவும் வேண்டுமேயொழிய எதுவுமே வெளி நாட்டமாக இல்லை என்பதை அறியாததே பிறழ்வு என்றும் அதுவே சித்தார்த்தனின் தாபமும் துயரமுமாய் இருந்துள்ளது என்கிறான்.

அவன் தாகத்துடன் தவித்துக்கொண்டிருக்கிறான். அவன் தேடியறிய விழைந்தது போதனைகளில் இல்லை. அவ்வாறு உணர்த்த இயலாதது என்று ஒன்றுண்டு என்று புத்தரிடம் கூறுகிறான். துறவு மேற்கொண்டு அவருடன் பயணம்செய்தால் அதுவேயொரு அடையாளமாகிவிடும் என்று கருதி சங்கத்தில் சேராமல் புத்தரிடம் விடைபெற்று விலகிச்செல்கிறான்.

ஆனால் புத்தரின் சந்திப்பிற்கும் விவாதத்திற்கும் பிறகு அவன் புதியவனாகிறான். எல்லாமே புதிதாய்ப் பிறந்துள்ளதாய் உணர்கிறான். இருப்பின் உண்மைக்கு முன் விழிப்புகொள்கிறான். அதுகாறும் அவனுடைய அறிவுத்தளத்தில் புரிந்துணர்வாய் இருந்த அத்துவைத தரிசனங்கள் புரட்டிப் போடப்படுகின்றன. ‘அவேகனிங்’ எனும் அகவிழிப்பு நிகழ்கிறது.

ஆறுகளை ஆறுகளென்றும் மலைகளை மலைகளென்றும் அறிகிறான். என்ன மாற்றம் ஏற்பட்டது புத்தரிடம் உரையாடிய பின்? ஒன்றுமில்லைதான். ஆனால் அவ்வொன்றுமற்றதை அவன் அறிந்தவனாகிறான். அதனால் தேடலென்று இனி ஏதுமில்லை என்றுணர்கிறான். இது ஒருவித ஜென் ஞானமாகப் பேசப்பட்டுவரும் கதையாடல்கூட! அவன் தேட்டமற்றுப் போகிறான். அதற்குள் புத்துணர்வாய்த் திறந்துபோகிறான். ஆனால் அவ்விழிப்பில் இறுதியாய் குலைவுறுகிறான். அவனுடன் பயணம்செய்த கோவிந்தன் புத்தச் சங்கத்தில் பிக்குவாகிவிட, தன்னிடமிருந்து அவனைப் புத்தர் பறித்துக்கொண்டார்; ஆனால் அதனினும் மேலாய் ஒன்றை தன்னுள் விட்டுச்சென்றார் என்றுணர்கிறான். அது அரிதும் அற்புதமுமாகிறது; அது அவனையே அவனுக்கு அளித்தது என்று களிக்கிறான். ‘சமணனே, சமர்த்தனாகிய உனது சாமர்த்தியம் அதிகமாகாது பார்த்துக்கொள்’ என்று நிறைவுடன் வழியனுப்புகிறார் புத்தர். தனித்தே தன் தேடலைத் தொடர்கிறான்.

தான் இனி தனக்கே மாணவனாகத் திகழ்வதென உறுதிகொள்கிறான். ஒவ்வொன்றின் பொருளும் உண்மையும் அவற்றினுள்ளேயே பொதிந்துள்ளனவே அன்றி மறைபொருளாய் வெளியே இல்லை. வண்ணங்களை, வடிவங்களை, பிறரை, தன்னை என யாவற்றையும் எழுந்து மறையும் சார்புறு பண்புகளென அறிகிறான். தான் முழுமனிதனாகப் பரிணாமம் கொண்டதாக உணர்கிறான்.

புத்தரைத் தான் கண்ட சான்றோர்களிலேயே ஆசான்களிலேயே அதி அரியர் என்றுணர்ந்தாலும் அவரது போதனைகளில் அவர் உய்த்துணர்ந்த பேருண்மைகளைப் பிறிதொருவரால் காணவியலாது என்றுணர்கிறான். தன்னிலிருந்து அஞ்சி விலகி இதுகாறும் ஓடிக்கொண்டிருந்தது தேவையற்றது என்று அறிகிறான். தன்னால் தன்னை உணர்ந்துகொள்ள இயலாமற் போனதற்கு வெளிப்புறமாக ஓடியதே காரணமென்று கண்டறிகிறான். தெளிந்த முனைப்புடன் உட்குவிகிறான். புத்தரிடமிருந்து விலகிச் சுயமாய்த் தன்னை வனைந்துகொண்ட மெய்ஞானியெனத் திரிகிறான். போதனைகள், தவப்பயிற்சிகள், கருத்தாக்கங்கள் தாண்டி மெய்வழிப்பாதையில் பயணப்படுகிறான். புற ஈடுபாடுகளிலிருந்து விலகி உட்குரல் ஒன்றிற்குப் பணிந்து அவ்வழி நடப்பதே நலமென்று தொடர்கிறான்.

வழியில் தோணிக்காரன் ஒருவனது குடிசையில் தங்கிப்போகிறான். அவ்விரவின் கனவில் கோவிந்தா ஏன் என்னைப் பிரிந்தாய் என்று அழுகிறான். ஆறுதலென அவனைக் கட்டித்தழுவ அவ்வுருவம் பெண்ணுடலாகி அதைச் சுவைக்க, அது இயற்கையான உயிர்ப்பின் உன்னதச் சுவையைக் காட்டித் தருகிறது. விழித்தெழுந்து தோணிக்காரன் வாசுதேவனின் உதவியில் ஆற்றைக் கடந்துபோகிறான். நீர் சுழற்சியைச் சுட்டிக்காட்டி, ‘எல்லாமே திரும்ப வரும்’ என்பதைத்தான் ஆற்றிடம் கற்றுக்கொண்டதாகக் கூறி வழியனுப்புகிறான் வாசுதேவன். காணும் அனைவரிடமும் கோவிந்தனின் தோழமையை, நன்றிப்பெருக்கை உணர்கிறான் சித்தார்த்தன். அக்கோணம் அவனை உலகுக்கு அண்மையாக இன்னும் ஈர்க்கிறது.

அவன் தற்செயலாகச் சந்திக்கும் கமலா எனும் தாசியுடன் உறவுகொண்டு திளைக்கிறான். காதல் கலை கற்றுத் தேர்ந்த கமலாவுடன் தியானங்களைப் பயின்று தேர்ந்த சமணச் சித்தார்த்தன் உறவுறுகிறான். ‘காதலைக் கலையாகப் பயின்று தேர்ந்த உன்னால் யாரையும் உண்மையாகக் காதலிக்க இயலாது’ என்று அவளிடம் சமணன் கூறுகிறான். அவ்விதமே தியானவழி விழிப்புற்றுத் தேர்ந்த சித்தார்த்தனால் நிஜத்தில் உலகியல் அடிப்படையில் வாழ இயலாது என்றும் அக்குறிப்பை உணரலாம். ஆனால் விழிப்படைந்தபின் தான் கண்ட ஒவ்வொன்றின் மேலும் அவன் களிகூரும் காதல் கொண்டவனாகிறான். எதையுமே, யாரையுமே காதலிக்க முடியாமல் இருந்துவிட்டதுதான், முன்னர் தான் அத்துணை நலிந்து போனதன் காரணம் என்று கருதித் தீவிரமாக உலக வாழ்வெனும் சம்சாரத்திற்குள் மூர்க்கமாகத் தன்னை ஒப்புவிக்கிறான். தன் நிராசையிலிருந்து மீள இந்தச் சம்சார சாகரத்திற்குள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்று கருதுகிறான். தனக்குள் உறையும் ஆத்மனைத் தரிசிப்பதின்  பொருட்டு தான் மறுபடியும் மூடனாக வேண்டியுள்ளது என்று கருதி உலகத்தேட்டையில் மூழ்குகிறான். மீண்டும் உயிர்ப்பதன் பொருட்டு தான் பாவம் புரிய வேண்டியுள்ளது. மதிகெட்ட இம்மார்க்கம் சுழன்று சுழன்று நீள்கிறது என்று கருதுகிறான். எனினும் தன்னில் வந்தமர்ந்த பேரானந்தத்தை அவன் அடியாழத்தில் மறக்காதிருந்தான். அது குறிப்பிட்ட கணத்தில் உள்ளுணர்வாக, பிரணவ மந்திரமாக உதித்து அவனுக்குள் ஒளியேற்றுகிறது.

கமலாவின் உறவுச் சுகத்திற்கு விலையாக அவள் கேட்கும் பொருட்செல்வத்தை ஈட்டவெனவும் கூடவே துறவு களைந்ததால் பிச்சை ஏற்பது தர்மமல்ல என்றெண்ணித் தன் பிழைப்புக்கெனக் காமசுவாமி எனும் வியாபாரியிடம் பணியாளனாகச் சேர்ந்து தொழில் கற்று அவனும் பிரபலச் செல்வந்தனாகிறான். துறவி விவேகானந்தரின் வேதாந்த நூல்களில் கூறப்பட்ட கதைகள் நினைவுக்கு வருக்கின்றன. மலையுச்சியில் விழிப்புற்ற முனிவர் ஒருவர் தனித்து வாழ்ந்திருக்க, அவரைத் தேடியொரு கர்ப்பந்தரித்த பூனை வந்துசேர்கிறது. பூனையின்பால் கருணையும் அன்பும் கொண்டு அதற்குப் பால் புகட்டவென முயன்று அதற்கெனக் கறவைப் பசு ஒன்று கொணரப்படுகிறது. பசுவைப் பேணுவதற்கெனப் பிறகொரு பெண் வந்துசேர்கிறாள். கடைசியில் முனிவருக்கும் அவளுக்கும் குழந்தை பிறக்கிறது. இது பெரும்பாலோருக்குத் தெரிந்த கதைதான். மெல்ல மெல்லச் சமணச் சித்தார்த்தன் அவ்வாறாகிறான். தானறியாமலேயே ஒரு மகனுக்குத் தந்தையாகிறான். கமலா இறந்துவிட அவனை வளர்க்கிறான். செல்லமாகவும் தான்தோன்றியாகவும் வளர்க்கப்பட்ட மகன் தந்தையை வெறுத்துப் பிரிந்துபோக, சித்தார்த்தன் துயருறுகிறான். மீண்டும் ஞானம் எய்துகிறான்.

இங்கே குறிப்புணர்த்தப்படுவது, விழிப்படைவிற்குப் பிறகான விடுதலையுணர்வில் பிற யாவற்றிலும் தனிமை கொண்ட சித்தார்த்தன் இயல்பிலேயே பிற மக்களோடு உறவாடுவதில் விழைவுற்றவனாக இருக்கிறான். அது அவனைச் சம்சாரத்திற்குத் தள்ளுகிறது. விழிப்புடனேயே அவன் அச்சாகாரத்திற்குள் மூழ்குகிறான். தவிக்கிறான். தவம் மறக்கிறான். முதலில் சித்தார்த்தன் சம்சாரத்தில் இறுகத் தளைப்பட்டிருந்தான். திகட்டும் வரையில் சுவைத்தான், வடிந்ததும் வருந்தினான். ஒரு கட்டத்தில் கமலா ஒருத்தி மாத்திரமே அவனது எல்லாமுமாக இருந்தாள். அவளையும் பிரிந்து பின்னர் மரணப்படுக்கையில் சந்திக்கிறான். கடவுளரில் ஒருவர் பூமிக்கு ஒரு காரியமாக வந்து எதேச்சையாகப் பன்றிகளின் கூட்டத்தோடு பன்றியாக மாறி ஒரு கட்டத்தில் தான் வாழும் சாக்கடையே சொர்க்கம் என்று மெய்மறந்து கிடக்க, தேவர்கள் அவரைத் தேடிக்கண்டு அவரது கடவுட்பண்பை எடுத்துக்கூற, பின்னர் மீண்டும் கடவுளர் நிலைகொள்கிற இன்னொரு வேதாந்தக் கதையும் இது போன்றதே.

‘அநேகர் காற்றில் அலைக்கழிக்கப்பட்டு சலசலத்துப்பின் வீழும் சருகுகளாகின்றனர். வேறு சிலர் வகுக்கப்பட்ட கதியில் விரைகின்ற தாரகைகளைப் போன்று தம்மில் தமது புத்தியும் ஒளியும்  கொண்டு காற்றால் அணுகப்படாதவர்களாய் இருக்கின்றனர். நானறிந்த ஞானியர் பலரினும் இவ்வகையில் நிறைவுற்றுத் திகழ்ந்த ஒருவரை நான் மறுக்கவியலாது. அவர் இந்த மார்க்கத்தின் தேசிகர், கெளதமர். அன்றாடம் ஆயிரக்கணக்கில் அவரது உபதேசங்களைக் கேட்டு நாழிகை தோறும் அவரது வழியில் நடக்கின்றனர். என்றாலும் அவர்கள் யாவரும் உதிர் சருகுகள். தம்மில் ஞானமும் புத்தியும் அவர்கள் பெற்றிருக்கவில்லை’ என்கிறான் சமணச் சித்தார்த்தன். ஏனெனில் போதனையில் அல்ல, இங்கே இந்த இருப்பில் திளைப்பதே வாழ்வு, அதிலிருந்து உய்த்துணர்ந்து விழிப்படைவதே ஞானம் என்றாகிறது இவ்வாழ்வு அவனுக்கு.

வெளிநாடுகளில் எனக்குப் பரிச்சயமான தியான ஆசிரியர்களுண்டு. பெரும்பாலானோர் 70-களில் தெற்காசிய நாடுகளிலுள்ள புத்த மடங்களில் துறவு மேற்கொண்டு 2000க்குப் பிறகு தத்தமது நாடுகளில் தியான மையங்கள் நடத்தி, பழுத்த புத்தப் பிக்குகளாகச் சிறந்து விளங்குபவர்கள். சிலர் இறந்துவிட்டனர். அப்படி வளர்ந்தோரில் ஒரு பகுதியினர் பிக்குகளாகவே வாழ்ந்து வருகின்றனர்; சிலர் துறவு துறந்து சக துறவியரைத் திருமணம் செய்துகொண்டு தியானம் பழகுகின்றனர், பிறரையும் வழிநடத்துகின்றனர். இன்னும் சிலர் துறவுக் கோலத்தில் இருந்தபடியே பாலுறவு நாட்டத்தில் வழிதவறிப் போனவர்கள். அவர்களில் சிலர் மிக அற்புதமான ஆசிரியர்கள், வழிகாட்டிகள். ஆனால் பிறழ்வுற்றுப் போனவர்கள். என்றாலும், அவர்களின் உரைகளும் நூல்களும் அருமையானவை என்பதைப் பயின்று அனுபவித்த யாராலும் மறுக்கவியலாது.

என்னதான் விழிப்படைவு, பரவசம், விடுதலை, மெய்ஞ்ஞானம் என்றெல்லாம் பேசினாலும் பாலுணர்ச்சியும் புத்திரப் பாசமும் உயிர்ப்பின் ஆடியாழத்தில் அடங்காது கொதித்தபடியே இருப்பது இந்நாவலில் குறிப்புணர்த்தப்படுகிறது. செல்வம், புகழ் ஆகியவை புறவயமானவை. பாலிச்சையும் சந்ததியுணர்வும் அகவயமான உயிரியல் பூர்வமான உணர்வெழுச்சிகள். மிக இளமையில் வாழ்வில் ஒருபோதும் இவ்வனுபவங்களற்ற ஒரு துறவிக்கு அதன் இழப்பும் கனவும் துயரும் ஆழமானவை. அவ்வாழ் அனுபவங்கள் வாய்க்கப்பெற்றதும் சமணச் சித்தார்த்தன் மீண்டும் ஞானமடைகிறான். அவனை வெறுத்துக் கண்காணாது போய்விட்ட புத்திரனின் பிரிவால் துயருறுகிறான். இங்கே புத்தனை நினைவுகூரலாம்; புத்தனைப் பிரிந்து வாடிய சுத்தோதனர், தனிமைப்பட்டுப்போன யசோதரை, சிறுபிராயத்திலேயே துறவு தரித்த ராகுலன் ஆகியோரின் துயரம் ஒருபுறம், அரச புகழ், செல்வம், இல்லறச் சுகம், பிள்ளைப்பேறு என்று மறுபுறம், இவ்வுலக வாழ்வின் அனுபவத்திற்குட்பட்டவராகவே புத்தர் வீடு துறந்து ஞானமடைகிறார். அதனாலேயே அவர்பால் மதிப்பும் பிரேமையும் கொண்டவனாகச் சமணச் சித்தார்த்தன் இருக்கிறான் என்று தோன்றுகிறது; அதுவே அவனது கருதுகோளும் என்பதால்!

அப்போது ஆற்றைக் கடந்து அக்கரை சேர்க்கும் தோணிக்காரனான வாசுதேவனைச் சந்தித்து சித்தார்த்தன் அவனுடனேயே தங்கிவிடுகிறான். சமணத் துறவியாக இருந்தபோது சந்தித்தது. மீண்டும் முதுமையில் இருவரும் சந்திக்க, ஆழ்ந்த நட்பாக அது பரிணமிக்கிறது. வாசுதேவன் தவசியல்ல. ஞானியுமல்ல. சாதாரண தோணிக்காரன், மனைவியை இழந்து தனிமைப்பட்டவன். அன்றாடத்தில் வாழ்பவன். அதாவது வெறுமனே தற்கணத்தில். அவன் ஆற்றோடேயே வாழ்கிறான். ஆற்றின்வழி இருப்பின் மேன்மையை உய்த்துணர்கிறான். அவனுக்கு அந்த ஆறுதான் ஆசான். சதா ஓடிக்கொண்டும் நின்றபடியும் திகழ்கிறது ஆறு எனுமிடத்தில் அத்வைதம் உயர்ந்து நிற்கின்றது. இருப்பின் தன்போக்கில் ஆற்றோட்டத்தோடு கற்றுத்தேர்ந்து இயல் ஞானியாக உருவாகி நின்ற வாசுதேவனை இன்னொரு புத்தராகவே கருதுகிறான் சித்தார்த்தன். 

*

என் வீட்டிலும் கேட்பார்கள், ‘உனக்கு இன்னும் என்ன தெரிய வேண்டும், இன்னும் எதைத் தேடி ஓடுகிறாய்’ என்று. சிலர், தவத்தில் திளைக்கிறாயே உனக்குக் கோபம் வருமா, தாபமுண்டா, காமம் கிளைக்குமா, நோய் அண்டுமா என்று கேட்பார்கள். அனைவருக்குமான ஒரே பதில் ‘ஆமாம், உண்டு’ என்பதே. மரணத்தின் விளிம்பில் சரிந்து விழும் வரையிலும் உண்டு. என் பணி முயல்வதல்ல இனி, பயிற்சி செய்வதே. எழும் பற்றுகளுடன் கட்டிப்புரண்டு மல்லுக்கு நிற்பதல்ல, வெறுமனே கண்டறிந்து கிடப்பது. பயின்றபடியே இருப்பது, தானற்றதில் தன்னின்மையில் திளைப்பது, தாற்காலிகத்தில் நிலைப்பது, இன்மையைத் தழுவிக்கொண்டு உறங்குவது, அவ்வளவே. அனைத்தும் தற்கணத்தில் விழிப்புடன் உய்த்துணர்ந்து கண்டறிந்தது அறிவாகிப் பின்னர் ஞானக்குன்றேறி நிற்பதாகிறது இவ்வாழ்வு.  என்றாலும் ‘அதன் பிறகு…?’ என்கிற கேள்வியும் எழுகிறது.

Engaged Buddhism எனும் கருத்தாக்கத்தை உலகில் பிரபலப்படுத்தியதில் ஜென் துறவி திக் நாட் ஹஞ் அவர்களுக்குப் பெரும்பங்குண்டு. அது என்ன ‘என்கேஜ்டு’ என்றால் பொதுநோக்கு கொண்ட சமூக ஈடுபாடு எனலாம். அதுபோன்ற சமூகப் பணிகள் ஏற்கெனவே உலகெங்கிலும் நிகழ்ந்தபடிதான் உள்ளன, இதிலென்ன புதிது என்று கேட்கத் தோன்றும். அது ஒருவித தானற்ற உணர்வு. தன்னின்மையிலிருந்து எழுவது. அது இந்நாவலில் குறிப்புணர்த்தப்படுகிறது.

சமணச் சித்தார்த்தன் புத்தனை உணர்ந்திருந்தான். அவரது சங்கப் பணிகளை வெகுவாகப் பாராட்டி மதிக்கிறான். ஆனாலும் அவரை விட்டகன்று தனியே உலகியலில் சுழன்று மீண்டு மறுபடியும் விழிப்படைகிறான். அங்கே அவனுக்கு வாழ்வதற்கான தன்நோக்கு ஏதுமில்லை. ஆனால் இவ்வுடலிலிருந்து உயிர் பிரியும் வரையில் தான் நிறைவானதில் ஈடுபட எண்ணுகிறான். ‘அன்பொன்றே உலகில் பிரதானமானது. உலகை நுணுகி ஆராய்ந்து, விளக்கி, பின்னர் கழித்துக் கட்டுவது பெரும் சிந்தனையாளர்களுக்கு முக்கியமாக இருக்கலாம். ஆனால், இவ்வுலகைக் காதலிப்பதொன்றே பிரதானமென எண்ணுகிறேன். அதைப் புறக்கணிப்பதோ நாம் ஒருவரையொருவர் பகைப்பதோ அன்றி உலகை, நம்மை, அனைத்துயிர்களை அன்புடன் போற்றிக் கெளரவித்து மதிக்க இயலும்’ என்ற முடிவுக்கு வருகிறான். அவ்வாறே மிக எளிமையாய் வாசுதேவன் விட்டுச்சென்ற பின் சித்தார்த்தன் தோணிக்காரனாகி மக்களை இருகரைக்கும் ஆறுதாண்டி அழைத்துச் சென்று வருகிறான். தோணிக்காரனாய் இருக்கையில் பழுத்த பிக்கு கோவிந்தனைக் காண்கிறான். அவன் விழிப்படைவின் வாசலைக்கூட இன்னும் எட்டியிருக்கவில்லை. விரக்தியிலும் துயரத்திலும் இருந்த அவனைச் சித்தார்த்தன் மெய்ஞானக் கரை சேர்க்கிறான். கோவிந்தன் ஒருவிதத்தில் புத்தரது ஆனந்தரை ஒத்தவன் எனலாம்.

சம்சாரமும் நிர்வாணமும் இரண்டு வேறான அம்சங்களல்ல, ஒன்றில் ஒன்றெனவே உள்ளாடித் ததும்புகின்றன என்று சித்தார்த்தன் அறிந்துணர்கிறான். இரண்டாவது சந்திப்பில், பிரியும் தறுவாயில் ‘இந்த நதியை நேசி, அதனருகில் தங்கு, கற்றுக்கொள்’ என்றான் வாசுதேவன். சமணச் சித்தார்த்தன் அதைப் பின்பற்றவே ஆற்றின் ரகசியங்களில் ஒன்றைக் கற்றறிகிறான். அது அவன் ஆன்மாவை இறுகப்பற்றிக் கொள்கிறது. ஆறு தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. எனினும் அது எப்போதும் அங்கு இருந்துகொண்டும் உள்ளது. எப்போதும் அப்படித்தான் அந்த ஆறு. எனினும் ஒவ்வொரு கணமும் அது புதிதாய் இருக்கிறது. அவனுக்கு இருப்பின் பேருண்மை அக்கணத்தில் ஆழமாகப் புரிந்துபோகிறது.

போதனைவழி ஞானமார்க்கம் தேவையில்லை என்று விலகி வாழ்வு மார்க்கமே, அதனுள்ளாடிச் சுழன்று திரும்புவதே சித்தார்த்தனுக்கு உவப்பான பாதையாகிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடும் ‘பாதையற்ற வழி’ என்பதாகவும் சித்தார்தனின் தவப்பார்வையை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் அவனது இளமைக்கால தவவழிப் பயிற்சியும் அனுபவமுமே அவனை மீண்டும் மீண்டும் எல்லாச் சுழல்களிலுமிருந்தும் தெளிவுறுத்தி மீட்டுருவாக்கி இறுதியில் மெய்ஞானவான் ஆக்கியது என்பதை அவன் உள்ளூற உணர்ந்திருக்கக்கூடும். அப்போது புத்தர் அவனிடம் கடைசியாக விடைபெற்று விலகிப்போகையில், ‘அளவுக்கதிகமான சாமர்த்தியம் கொண்டிராதே’ என்றுரைத்தது நினைவுக்கு வந்திருக்கலாம்தான். அகந்தை சாமர்த்தியத்தின் ஓரிழைதான்.

இறுதியில் புத்தரை விலக்கிப்போய்ப் பட்டுத்தெளிந்த சித்தார்த்தன் கோவிந்தனின் கண்களில் புத்தனாகத் தெரிகிறான். அவன்வழி கோவிந்தனும் புத்த அனுபவத்திற்குள்ளாகிறான் போதனைகள் ஏதுமின்றியே. கோவிந்தனைப் போலன்றி வாசுதேவன் எத்தவப்பயிற்சியும் மெய்த்தேடலுமற்று தன் எளிய வாழ்வின் எழுச்சி வீழ்ச்சிகளூடே ஆற்றோட்டத்தின் மேலுற்ற விழிப்பின்வழி புத்தப் பண்பை இயல்பாக எய்துகிறான், அப்படி எய்ததின் பிரக்ஞை இன்றி. தவப்பேறால் இவ்வாழ்வின் இன்பங்களைப் பற்றற்று சுகிக்கலாம்தான். அதன் வழிதான் சித்தார்த்தன் விழிப்படைவிற்குப் பின் செயல்படுகிறான். ஆனால் சாமர்த்தியமான அவ்வழியும் நிறைவின்மைக்கு இட்டுச்செல்கிறது. உலகம் அபூர்வமானது, நிறைவை நோக்கி நெடிய பாதையொன்றில் மெதுவாய்ப் பரிணமித்துக்கொண்டிருக்கிறது என்பதல்ல; ஒவ்வொரு கணமும் அது நிறைவானது என்றறிகிறான்.