கடவுளே! உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? திருமதி. ப்ரோலாவா அல்லது திரு. போன்ஸாவா – இந்த இருவரில் யார் பைத்தியம் என்று கண்டுபிடிக்க முயல்வது உண்மையில் நம்மைத்தான் பைத்தியக்காரர்களாக்கும். அனைத்துவிதப் பைத்தியக்காரத்தனமும் கொண்ட அந்நியர்களுக்கு மெக்காவாக மாறியிருக்கும் இந்தத் துரதிர்ஷ்ட நகரமான வால்டானாவில் மட்டும்தான் இவ்வாறெல்லாம் நடக்கும்!
ஒன்று, மாமியார் பைத்தியம் அல்லது மருமகன். இதில் நடுநிலை கிடையாது. அவர்களில் ஒருவர் நிச்சயமாகப் பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கிருக்கும் பிரச்சினை எந்த வகையிலும் இதற்குக் குறைவில்லை… இல்லை! நான் இந்தக் கதையை முதலிலிருந்து தொடர்ச்சியாகக் கூறுவது நல்லது.
உண்மையைச் சொல்வதென்றால் கடந்த மூன்று மாதங்களாக வால்டானா குடிமக்களைப் பீடித்திருக்கும் குழப்பம் குறித்தே என் கவலையெல்லாம். திருமதி. ஃப்ரோலா குறித்தோ, அவரது மருமகன் திரு. போன்ஸா குறித்தோ இல்லை. நாம் நினைப்பதுபோல் ஒரு துயரம் உண்மையில் அவர்களுக்கு நிகழ்ந்திருக்கிறதென்றால், அவர்களில் ஒருவர் அதனால் பைத்தியமாகியிருக்கிறார் என்பதும் மற்றொருவர் அவரின் பைத்தியக்காரத்தனத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறார் என்பதும் எந்தளவிலும் அந்த உண்மைக்குக் குறைந்ததாகாது. ஏனெனில் அவர்களில் யார் உண்மையில் பைத்தியம் என்பதை, மீண்டும் சொல்கிறேன், கண்டுபிடிப்பது இயலாதது. நிச்சயமாக அவர்கள் இதைவிடச் சிறந்த ஆறுதலை ஒருவருக்கொருவர் அளிக்க முடியாதுதான். ஆனால் நான் கேட்கிறேன், கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்த்துத் தீர்ப்பு கூறும் எந்தவித அடிப்படை சாத்தியங்களையும் ஒழித்துவிட்டு ஒட்டுமொத்த நகரத்தையும் அவர்கள் குழப்பத்திற்குள்ளாக்குவது ஒரு சிறிய விஷயம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இத்தகைய குழப்பம் எப்பொழுதும் தொடர்வது வேதனையளிக்கிறது. ஒவ்வொரு நாளும் அந்த இருவரையும் கண் முன்னால் பார்க்கிறீர்கள். அவர்கள் முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர்களில் ஒருவர் பைத்தியம் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களை நன்றாக ஆராய்கிறீர்கள். மேலும் கீழுமாகப் பார்க்கிறீர்கள். அவர்களை உளவு வேறு பார்க்கிறீர்கள். இத்தனைக்குப் பிறகும்… ஒன்றுமில்லை! அவர்களில் யார் பைத்தியம், எங்கு கற்பனை முடிந்து உண்மை எங்கே தொடங்குகிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இயற்கையாகவே, கற்பனை என்பது நம்பத்தகுந்த உண்மையாகவும், ஒவ்வொரு உண்மையும் மிகச் சுலபமாகக் கற்பனையாகவும் இருக்குமோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுகிறது. இதை ஒரு சிறிய விஷயமாகக் கருதுகிறீர்களா? நான் மட்டும் காவல் அதிகாரியின் இடத்தில் இருந்திருந்தால் வால்டானாவில் வசிப்பவர்களின் மன ஆரோக்கியம் கெடும் ஆபத்திலிருந்து காக்க திருமதி. ஃப்ரோலாவையும் அவரது மருமகன் திரு. போன்ஸாவையும் நகரத்தை விட்டே வெளியேறும்படி நிர்பந்தித்திருப்பேன்.
நாம் காலவரிசைப்படி தொடர்வோம்.
திரு. போன்ஸா மூன்று மாதங்களுக்கு முன்பு வால்டானா காவலர் அலுவலகத்தில் செயலாளராகப் பணியாற்ற வந்தார். ஊரிலிருந்தவர்களால் “தேன்கூடு” என்று அழைக்கப்பட்ட நகரத்தின் விளிம்பில் உள்ள அந்தப் புதிய அடுக்குமாடி கட்டிடத்தில் குடியேறினார். மேல் தளத்தில் ஒரு சிறிய வீடு. அதில் ஊர்ப்புறம் பார்த்தவாறு மூன்று உயரமான, இருண்ட ஜன்னல்கள் இருக்கின்றன (நான் “இருண்ட” என்று சொல்வதற்கு, கட்டிடம் புதியதாக இருந்தாலும் அதன் வடக்கு புறம் இருக்கும் சலிப்பூட்டும் வயல்கள் விவரிக்க முடியாத காரணங்களால் பார்வைக்கு சோபையற்று இருண்டு தெரிவதுதான் காரணம்). உட்புறமாக மேலும் மூன்று ஜன்னல்கள், கம்பிகளால் பிரிக்கப்பட்ட நீண்ட தாழ்வாரங்கள் சூழ்ந்திருக்கும் முற்றத்தைப் பார்த்தவாறு இருக்கின்றன. மெல்லிய கயிற்றில் பல சிறிய கூடைகள் உயரே இருக்கும் கம்பிகளிலிருந்து தேவையென்றால் கீழிறக்கப்படத் தயாராகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
இருப்பினும், அதே நேரத்தில், அனைவரும் ஆச்சரியப்படும்படியாக திரு. போன்ஸா இன்னொரு வீட்டை (மூன்று அறைகளும் ஒரு சமையற்கட்டும் கொண்ட) நகர்ப்புறத்தில், துல்லியமாகக் கூற வேண்டுமென்றால் எண் 15, வியா டெ சான்டி என்ற முகவரியில், வாடகைக்கு எடுக்க ஏற்பாடு செய்தார். அந்த வீடு தனது மாமியார் திருமதி. ஃப்ரோலா குடியிருப்பதற்காக என்று கூறினார். சொல்லப்போனால் அப்பெண்மணி ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு அங்கு வர, ஸ்டேஷனில் அவரைச் சந்திக்க திரு. போன்ஸா மட்டும் தனியாகச் சென்றார். பின்பு அவருடன் புதிய வீட்டிற்குச் சென்று அவரைத் தனியாக அங்கே விட்டார்.
ஒரு பெண்ணுக்குத் திருமணமானவுடன் அவள் தன் தாய் வீட்டை விட்டு, வேறொரு ஊருக்கே சென்றாலும், தன் கணவருடன் வாழப்போகிறாள் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், மகளைப் பிரிந்திருக்க இயலாமல் தன் வீட்டையும் ஊரையும் விட்டுவிட்டு, தன் மகளைப் பின்தொடர்ந்து அவள் வாழும் ஊரிலேயே வேறொரு வீட்டிற்குக் குடிபெயர்ந்து அவரும் அவர் மகளும் அந்நியர்களைப்போல் வாழ்வதைப் புரிந்துகொள்வது அத்தனை சுலபமல்ல. இத்தகைய சூழலில்கூட மாமியாரும் மருமகனும் சேர்ந்து வாழ முடியாத அளவிற்கு அவர்களுக்கிடையே இருக்கும் இணக்கமின்மையே காரணம் என்று நீங்கள் சந்தேகிக்காதவரை.
இயல்பாகவே வால்டானாவில் அனைவரும் முதலில் இவ்வாறுதான் நினைத்தனர். இதில் திரு. போன்ஸாவிற்குத்தான் அவப்பெயர். திருமதி. ஃப்ரோலாவைப் பொறுத்தவரை, அவர் கொஞ்சம் இரக்கமற்றவராகத் தோன்றியதாலோ அல்லது பிடிவாதமோ சகிப்பின்மையோ கொண்டிருந்தவராகத் தோன்றியதாலோ சிலர் இந்தப் பிரச்சினைக்கு அவரும் காரணம் என்று நினைத்தனர். எதுவாக இருப்பினும், அவர் தன் மகளிடமிருந்து பிரிந்து வாழ விதிக்கப்பட்டிருந்தாலும், அவரை அவர் மகளுக்கு அருகிலேயே வாழ வகை செய்தது தாய்மையின் அன்புதான் என்று நினைத்தனர்.
இரண்டு பேரின் தோற்றமும்கூட மற்றவர்கள் அவர்களிடம் நடந்துகொள்ளும் விதத்திற்குக் காரணமாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். திரு. போன்ஸாவைப் பார்த்தாலே யாருக்கும் ஒரு முரட்டுத்தனமான, கொடூரமான மனிதனின் தோற்றமே நினைவிற்கு வந்ததால் திருமதி. ஃப்ரோலாவிற்கு இது அனுகூலமளித்தது. தடிமனாக, கழுத்தே இல்லாமல், ஆஃப்ரிக்கரின் கறுப்பு நிறத்தில், சிறிய நெற்றியில் தவழும் முரட்டுக் கேசமும், அடர்த்தியாக ஒன்றிணைந்த புருவங்களும், கனமான, போலீஸ்காரரின் பளபளக்கும் மீசையும், வடிவிழந்த, பளபளக்கும் வெண்மையற்ற கண்களும், அது காட்டிக்கொடுக்கும் வன்முறைகொண்ட எரிச்சல் ஊடுறுவும் பார்வையுமாக (அந்தப் பார்வை ஆழ்ந்த சோகத்திலிருந்து வெளிப்படுவதா அல்லது மற்றவர்களைப் பார்த்தாலே அவருக்குத் தோன்றும் இகழ்ச்சியிலிருந்து வெளிப்படுவதா என்பது தெளிவாகத் தெரியவில்லை) – திரு. போன்ஸாவிற்கு யாருடைய அன்பையோ நம்பிக்கையையோ வென்றெடுக்கும் தோற்றம் நிச்சயமாக இல்லை. மறுபுறம், திருமதி. ஃப்ரோலாவோ, மென்மையான, வெளிறிய, நல்ல கம்பீரமான தோற்றம் கொண்ட வயதான பெண்மணி. அவரிடமிருந்த மென்சோகம் அத்தனை மென்மையாகவும் வெளிப்படையாகத் தெரியாதவாறும் இருந்ததால் அது அவரை யாரிடமும் அன்பாகப் பழகுவதற்கு இடையூறளிக்கவில்லை.
திருமதி. ஃப்ரோலா உடனடியாக அவருக்கு மிக இயல்பாக வரும் இந்த இணக்க குணத்தை ஊர்க்காரர்களிடம் காட்டிக்கொண்டார். அதன் விளைவாக, திரு. போன்ஸா மீதான வெறுப்பு அனைவரின் இதயங்களிலும் வலுப்பெற்றது. அவருடைய மனநிலை என்னவென்பது தெளிவாகத் தெரிந்தது; அவர் மென்மையாகவும், பணிவாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருப்பது மட்டுமல்லாமல், தன் மருமகன் தனக்குச் செய்யும் தவறுக்காக இரக்கமுள்ளவராகவும் இருக்கிறார். மேலும், இந்தப் பாவப்பட்ட பெண்மணியைத் தன்னந்தனியாக வேறொரு வீட்டில் வாழ வைப்பதில் திருப்தியடையாத திரு. போன்ஸா, திருமதி. ஃப்ரோலா தன் மகளைப் பார்க்கக்கூட முடியாத அளவுக்கு அவருக்குக் கொடுமை புரிபவராக இருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
இருப்பினும், நடப்பது என்னவென்றால், வால்டானாவின் பெண்களுடனான தனது சந்திப்பின்போதெல்லாம் திருமதி. ஃப்ரோலா தனது சிறிய கைகளை இரைஞ்சியவாறு பதற்றத்தில் நீட்டியபடி ‘இது கொடுமையல்ல, கொடுமையே அல்ல’ என்று மறுத்தவாறு உண்மையில் தனது மருமகனைப் பற்றி ஒருவர் இப்படிக்கூட நினைக்க முடியுமா என்று வேதனைப்படுகிறார். தன் மருமகனுடைய நற்பண்புகளையெல்லாம் போற்றிக் கூறவும், அவரைக் குறித்து முடிந்தவரை பல நல்ல விஷயங்களைச் சொல்லவும் அவர் அவசரப்படுகிறார். எத்தகைய அன்பையும், எத்தகைய அக்கறையையும் அவர் தன் மகள் மீது மட்டுமல்ல, தன் மீதும் காட்டுகிறார். ஆமாம், ஆமாம்… இந்த மாமியார் மீதும்தான். தன்னலமற்ற அன்பை மட்டுமே கொண்டிருப்பவர் அவர்… ஐயோ, இல்லை, கடவுளே, அவர் கொடூரமானவரல்ல. இது மட்டுமே உண்மை. திரு. போன்ஸா தனது அன்பான இளம் மனைவியைத் தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாட விரும்புகிறார். அவரே இயல்புதான் என்று ஒப்புக்கொள்ளும் அவள் தாயின் மீது வைத்திருக்கும் அன்பைக்கூட தானே அடைய விரும்புவதால் அவளிடம் தொடர்புகொள்ள வேண்டுமெனில் தன் அனுமதியுடன் அல்லது தன்மூலமே செல்ல வலியுறுத்துகிறார். அவ்வளவுதான்!
அவருடைய இந்த அணுகுமுறை கொடூரமாகத் தோன்றலாம், ஆனால் அது அப்படியல்ல. அது வேறொன்று. அது என்னவென்பது திருமதி. ஃப்ரோலாவிற்கு நன்றாகத் தெரியும். அதை வெளிப்படுத்தத் தன்னிடம் வார்த்தைகள் இல்லை என்பது அவளை மிகவும் தொந்தரவு செய்கிறது. அது தன் மருமகனின் இயல்பு. அவ்வளவுதான்… ஐயோ, இல்லை, ஒருவேளை இது ஒருவித நோய் என்றுகூடக் கூறலாம். கடவுளே, ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய கண்களைப் பார்ப்பதுதான். ஒருவேளை முதலில் அவை ஒரு மோசமான அபிப்ராயத்தை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அவளைப் போலவே அவற்றில் இருப்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய எவருக்கும் ஒளிவுமறைவின்றி அனைத்தையும் அவை வெளிப்படுத்துகின்றன. தன் மனைவி ஒரு கணம்கூடத் தன்னை விட்டுச் செல்லாமல் தன்னுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதே அவருக்குள் அடக்கிவைக்கப்பட்டிருக்கும் அந்தக் காதல் உலகில் தெரிகிறது. அந்த உலகில் வேறு எந்த மனிதரும், அவளுடைய தாயையும் சேர்த்து, நுழைய அனுமதியில்லை. பொறாமை? இருக்கலாம், அத்தகைய அன்பின் தனித்துவத்தை நீங்கள் பக்குவமற்று வரையறுக்கிறீர்கள் என்றால் மட்டுமே இதைப் பொறாமையாகக் கருத முடியும்.
சுயநலம்? உலகின் ஒட்டுமொத்த அன்பையும் தான் காதலிக்கும் பெண்ணிடம் முற்றிலுமாக அவர் ஒப்படைக்கும் சுயநலம். எல்லாவற்றையும் கருத்தில் கொண்டால் தன் மகள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதையும், காதலுடன் போற்றப்படுவதையும் அறிந்த பிறகும் அவர்களின் அடைக்கப்பட்ட காதல் உலகில் அத்துமீறி நுழையப் பார்க்கும் அப்பெண்மணிதான் சுயநலமிக்கவள். ஒரு தாய்க்கு இது போதாதா? அப்பெண்மணிக்குத் தன் மகளைப் பார்க்கவே முடிவதில்லை என்று கூறுவதெல்லாம் சுத்தப்பொய். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவைகள் தன் மகளைப் பார்த்துவிடுகிறார். அந்த அடுக்குமாடி வீட்டின் முற்றத்தில் போய் நின்று அழைப்புமணியை அழுத்தினால், அவள் மகள் உடனேயே பால்கனிக்கு வந்து எட்டிப்பார்க்கிறாள்.
“எப்படி இருக்கிறாய், டில்டினா?”
“நன்றாக இருக்கிறேன், அம்மா. நீங்கள்?”
“எல்லாம் கடவுள் விருப்பப்படியே, மகளே. அந்தச் சிறிய கூடையைக் கீழே இறக்கு. கீழே இறக்கு!”
அக்கூடையில் அன்றைக்கு நடந்தவற்றைக் குறித்து இரண்டே வார்த்தைகளில் ஒரு கடிதத்தில் எழுதி வைப்பார். அது போதும் அவருக்கு. இந்த வழக்கம் கடந்த நான்கு வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. திருமதி. ஃப்ரோலாவுக்கும் இது பழகிவிட்டது. அவர் தன்னைத்தானே அடக்கிக்கொண்டுவிட்டார். இனி அது அவரைக் காயப்படுத்தப் போவதில்லை.
உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிவதுபோல், திருமதி. ஃப்ரோலாவின் அடக்கமும், தன்னுடைய தியாகத்திற்குக் காரணமாகத் தனக்கிருப்பதாக அவர் கூறிக்கொள்ளும் சகிப்புத்தன்மையும், போதாததற்கு தனது நீண்ட விளக்கங்களுடன் தன் மருமகனை மன்னிப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதும் திரு. போன்ஸா மீதான அவநம்பிக்கையைக் கூட்டுகிறது.
எனவே, வால்டானா பெண்கள் திருமதி. ஃப்ரோலாவை முதலில் சந்தித்த பிறகு, அடுத்த நாள், திரு. போன்ஸாவிடமிருந்து அவர்களைச் சந்திக்க வருவது குறித்த எதிர்பாராத அறிவிப்பு அவர்களுக்கு நியாயமான கோபத்தையும், ஏன் பயத்தையும்கூடத் தருகிறது. அவர் அவர்களிடம் எதுவும் சிரமமில்லை என்றால், தன்னுடைய “வாக்குமூலம்”தனைக் கேட்க இரண்டே இரண்டு நிமிடங்கள் வழங்குமாறு இரைஞ்சுகிறார்.
திரு. போன்ஸா முகம் சிவக்க, இரத்தம் வெடித்துச் சிதறுமளவிற்கு நரம்புகள் புடைக்க, கண்கள் முன்னெப்போதையும்விட கடுமையாகவும் வடிவிழந்தும் காணப்பட அவர்கள் முன்பு தோன்றுகிறார். அவர் கையில் வைத்திருக்கும் கைக்குட்டை, அவருடைய சட்டையின் கழுத்துப்பட்டைகள், கைப்பட்டைகளின் வெண்மை, அவருடைய அடர் கருமை நிறத்துடனும், கருமையான கேசத்துடனும், அணிந்திருந்த உடையுடனும் முரண்படுகின்றன. அவர் தனது சிறிய நெற்றியில் இருந்து வடியும் வியர்வையைத் தொடர்ந்து துடைத்துக்கொள்கிறார். இத்தகைய வியர்வைக்குக் காரணம் அதிக வெப்பம் அல்ல, அவர் தீவிரமாகவும், வெளிப்படையாகவும், பலவந்தமாகவும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயல்வதே. இச்செய்கை, விரல்களில் நீண்ட நகங்கள் கொண்ட அவரது பெரிய கைகளில் நடுக்கம் ஏற்படுத்துகிறது. அந்த அறையில் அவரைப் பயந்துகொண்டே பார்க்கும் பெண்களிடம், ‘முந்தைய தினம் அவர்களைப் பார்க்க தன் மாமியார் திருமதி. ஃப்ரோலா வந்தாரா?’ என்று முதலில் கேட்கிறார். பிறகு, ஒவ்வொரு நொடியும் வேதனையும் படபடப்பும் அதிகரிக்க, அவர் தன் மகளைப் பற்றி அவர்களிடம் பேசினாரா, அவர் தன் மகளைப் பார்க்க முற்றாகத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும், தன் மகளை அவளது வீட்டிற்குச் சென்று சந்திக்க மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினாரா என்று கேட்கிறார்.
சரியாக நீங்கள் நினைப்பதுபோலவே, அவர்படும் சிரமங்களைப் பார்த்து அப்பெண்கள் அவருக்குப் பதிலளிக்க விரைகின்றனர். திருமதி. ஃப்ரோலா தனது மகளைப் பார்க்கத் தடை விதித்ததைப் பற்றி அவர்களிடம் கூறியது உண்மைதான் என்றும் ஆனால் இவரைப் பற்றி இயன்றளவிற்கும் நல்ல விஷயங்களையே அவர் கூறினார் என்றும், இவரை மன்னிப்பது மட்டுமல்லாமல், அவர் மகளைப் பார்க்க இயலாமல் தடுப்பதற்குக் காரணம் மருமகன்தான் என்று குற்றஞ்சாட்டுவதை மறுக்குமளவிற்கும் சென்றார் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அப்பெண்களின் இந்தப் பதில் திரு. போன்ஸாவைச் சாந்தப்படுத்துவதற்குப் பதிலாக இன்னும் அதிகமாகத் தொந்தரவு செய்கிறது. அவருடைய கண்கள் இன்னும் கடுமையாகி, வடிவிழந்து, நிலைகுத்துகின்றன; இன்னும் அதிகமாக அவர் உடலில் வியர்வைத்துளிகள் வழிந்தோடுகின்றன; இறுதியாக, தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இன்னும் பலவந்தமாக முயன்று, தன் “வாக்குமூலம்”தனைக் கூற வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்.
சுருக்கமாகச் சொன்னால் அவர் கூறியது இதுதான்: திருமதி. ஃப்ரோலாவைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை என்றாலும் அவர்தான் பாவம் பைத்தியம்.
ஆம், அவர் கடந்த நான்கு வருடங்களாகவே பைத்தியமாகத்தான் இருக்கிறார். அவருடைய பைத்தியக்காரத்தனம், குறிப்பாக, மருமகன் தன் மகளைப் பார்க்கத் தன்னை அனுமதிக்கவில்லை என்று நம்புவதில் இருக்கிறது. எந்த மகள்? அவர் மகள் இறந்துதான் நான்கு வருடங்களாயிற்றே. தன் மகளின் இறப்பினால் ஏற்பட்ட துக்கமே அவரைப் பைத்தியமாக்கியிருக்கிறது. ஒரு வகையில் அவர் அதிர்ஷ்டம் கொண்டவர். ஏன் அதிர்ஷடெமென்றால், இந்த மனப்பிறழ்வு ஆழ்ந்த துக்கத்திலிருந்து அவர் தப்பிக்க ஒரு வழி. இயல்பாகவே, தன் மகள் இறந்தது உண்மையில்லை என்று நம்புவதைவிடவும், மருமகன் தன் மகளைக் காணவிடாமல் தன்னைத் தடுக்கிறார் என்று நம்பிவிடுவது அவர் தன் துக்கத்திலிருந்து தப்பிப்பதற்குச் சிறந்த வழியாகிறது.
மகிழ்ச்சியற்ற ஓர் ஆன்மாவின் மீது கருணை கொண்டு உதவி செய்வது தனது கடமை என்று திரு. போன்ஸா கருதுவதால் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பலவித தியாகங்களைச் செய்து அவர் செய்யும் முட்டாள்தனமான கழிவிரக்கச் செய்கைகளுக்கெல்லாம் செவிமடுக்கிறார். தனது சக்திக்கு அப்பாற்பட்டு இரண்டு வீடுகளுக்குச் செலவழிக்கிறார்: ஒன்று தனக்காக, மற்றொன்று தன் மாமியாருக்காக. மேலும் அவருடைய இரண்டாவது மனைவியையும் கேட்டுக்கொள்வதால் அவளும் அதிர்ஷ்டவசமாக மனமுவந்து பெருந்தன்மையுடன் இந்த முட்டாள்தனத்தில் தானும் பங்கேற்கிறார். ஆனால், இரக்கம், கடமை… இவைகளை ஓரளவிற்குத்தான் சோதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், ஓர் அரசு ஊழியராக, பாவப்பட்ட ஒரு தாயை, பொறாமையோ எதுவோ, தன் மகளைப் பார்க்கக்கூட அனுமதிக்காமல் கொடூரமாக நடந்துகொள்ளக்கூடியவர் என்று ஊர் மக்கள் கருத அவர் இடம் கொடுக்கக்கூடாது.
இவ்வாறு கூறியபின் திரு. போன்ஸா திகைத்து நின்றிருக்கும் பெண்களின் முன்பு வணங்கிவிட்டு சென்றுவிடுகிறார். ஆனால், அந்தப் பெண்மணிகளுக்குத் தங்கள் திகைப்பிலிருந்து மீண்டுவர சிறிதுகூட அவகாசமளிக்காமல் அங்கே திருமதி. ஃப்ரோலா மீண்டும் வருகிறார். தன் மருமகன் திரு. போன்ஸாவின் வருகை அவர்களைப் பயமுறுத்தியிருந்தால் தன் பொருட்டு பெரிய மனதுகொண்டு மன்னிக்க வேண்டுமாய் அப்பெண்மணிகளிடம் குழப்பமும் இனிமையும் கொண்ட தன் மென்சோகத் தோற்றத்துடன் கேட்டுக்கொள்கிறார்.
திருமதி. ஃப்ரோலா அனிச்சையாகவும் எளிமையாகவும் தன் கருத்தை மீண்டும் கூறத்தொடங்குகிறார். ஆனால் அதற்கு முன்பு அப்பெண்களிடம் தான் சொல்லப் போவதைக் கண்டிப்பாக இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். திரு. போன்ஸா ஓர் அரசு ஊழியர் என்பதால் முதன்முறை அவரைப் பற்றி எதுவும் கூறுவதைத் தவிர்த்ததாகக் கூறுகிறார். அவர் கூறும் எதுவும் உண்மையில் திரு. போன்ஸாவின் வேலையைப் பெரிதும் பாதிக்கலாம். அவரைப் பொறுத்தவரையில் பாவப்பட்ட திரு. போன்ஸா காவலர் அலுவலகத்தில் மிகச்சிறப்பாக, யாரும் குறைகூற முடியாத அளவிற்குப் பணியாற்றும் ஒரு செயலாளர். ஒழுக்கத்துடன், அவருடைய ஒவ்வொரு எண்ணத்திலும் செயலிலும் மிகவும் தெளிவானவர். பாவம், பல நல்ல குணங்கள் நிறைந்தவர் திரு. போன்ஸா. இதில்… இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே அவரால் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. அவ்வளவுதான். பாவம் அவருக்குதான் பைத்தியம். அவருடைய பைத்தியக்காரத்தனம் குறிப்பாக இவ்வாறு இருக்கிறது: அவருடைய மனைவி இறந்து நான்கு வருடங்களாகிறது என்று நம்புவதிலும், ஆனால் அவள் உயிருடன் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் திருமதி. ஃப்ரோலாதான் பைத்தியம் என்று கூறிக்கொண்டு செல்வதிலுமாக இருக்கிறது. தனது வெறித்தனமான பொறாமை குணத்தையும், சொந்த மகளைப் பார்க்கமுடியாமல் திரு. ஃப்ரோலாவைத் தடை செய்யும் கொடுமை குணத்தையும் எல்லோர் முன்னிலையிலும் எப்படியாவது நியாயப்படுத்த அவர் அதைச் செய்யவில்லை. இல்லை, அந்த பாவப்பட்ட மனிதன் உண்மையிலேயே தன் மனைவி இறந்துவிட்டாள், இப்போது தன்னுடன் வாழும் அந்தப் பெண் தன் இரண்டாவது மனைவி என்றே தீவிரமாக நம்புகிறார்.
எவ்வளவு பரிதாபமான கதை! ஏனெனில் அவரது அதீத அன்பினால் முதலில் அவரது மனைவிக்கு ஆபத்து ஏற்படுத்தியதோடு அவரைக் கொல்லும் அபாயம்வரை சென்றிருக்கிறார். நிலைமை மோசமானவுடன் அவரிடமிருந்து அவளை இரகசியமாக அழைத்துச் சென்று, ஒரு மனநலக் காப்பகத்தில் அவருக்குத் தெரியாமல் அவளை அடைக்க வேண்டியிருந்திருக்கிறது. இந்த பாவப்பட்ட மனிதர் ஏற்கெனவே தன் வெறிகொண்ட காதலினால் சமநிலையற்றிருந்தவர் இதனால் பைத்தியமானார். அவர் மனைவி உண்மையில் இறந்துவிட்டதாகவே நம்பினார். இந்த எண்ணம் அவர் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டதால் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அவரது மனைவி குணமடைந்து முன்பு இருந்த ஆரோக்கியத்துடன் அவரிடம் மீண்டும் கொண்டுவந்து விடப்பட்டபோதும் அதை மாற்ற எந்த வழியிலும் முடியவில்லை. அவர் அவளை வேறொரு பெண் என்றே முழுமுற்றாக நம்பியதால் நண்பர்கள், உறவினர்களின் உதவியுடன் அவருக்கும் அப்பெண்ணிற்கும் இரண்டாவது திருமணத்தைப் போலியாகச் செய்துவைக்க வேண்டியிருந்தது. அதன்பிறகுதான் அவர் சமநிலைக்குத் திரும்பினார்.
இப்போது, திருமதி. ஃப்ரோலா தனது மருமகன் சில காலம் முன்பு தனது நல்புத்திக்குத் திரும்பியதாகத் தான் நம்புவதற்குக் காரணம் இருப்பதாகக் கருதுகிறார். அவர் தனது மனைவி இரண்டாவது மனைவி என்று நடித்தால் மட்டுமே அவரைத் தன்னுடன் மட்டுமே வைத்துக்கொண்டு மற்றவர்களுடன் தொடர்புகொள்ளாமல் தடுக்க முடியும். ஒருவேளை அவளை மீண்டும் இரகசியமாகத் தன்னிடமிருந்து பறித்துவிடுவார்களோ என்ற பயம் அவர் மனதில் அவ்வப்போது எழுவதால் அவர் அப்படி நடிக்கலாம். நிச்சயமாக அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால், அவருடன் வாழும் பெண் உண்மையில் அவரது இரண்டாவது மனைவி என்றால் அவர் மீது, அதாவது தன் மாமியார் மீது அவர் காட்டும் அக்கறை, இரக்கம் அனைத்தையும் வேறு எப்படி விளக்க முடியும்? உண்மையில், இனிமேல் தனது மாமியாராக இல்லாத ஒரு நபருக்கு இவ்வளவு அக்கறை காட்ட வேண்டிய தேவை அவருக்கு இருக்கக்கூடாது, இல்லையா?
திருமதி. ஃப்ரோலா கூறுபவையெல்லாம் தன் மருமகன் பைத்தியம் பிடித்தவர் என்பதைப் பிறருக்கு ஊர்ஜிதப்படுத்துவதற்காக அல்ல, மாறாக தன்னுடைய ஊகம் ஆதாரப்பூர்வமானது என்பதை தனக்குத்தானே நிரூபித்துக்கொள்வதற்காகத்தான்.
“இதற்கிடையில்,” அவர் பெருமூச்சுடன் முடிக்கிறார். அவர் உதட்டில் படியும் பெருமூச்சு இனிமையான, மென்சோகப் புன்னகையாக விரிகிறது. “இதற்கிடையில் என் மகள் தன்னை வேறு ஒரு பெண்ணாகப் பாசாங்கு செய்ய வேண்டும். நானோ, என் மகள் இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்று நம்புவதால் எனக்குப் பைத்தியம் பிடித்தது போல் நடிக்க வேண்டிய கட்டாயம். இதில் எனக்குப் பெரிய இழப்பொன்றுமில்லை. ஏனென்றால் கடவுளின் கருணையில் என் மகள் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நன்றாக வாழ்கிறாள். என்னால் அவளைப் பார்க்க முடிகிறது, அவளிடம் பேச முடிகிறது. ஆனால் நான் அவளைப் பிரிந்து வாழ்வதற்கும், தூரத்திலிருந்து மட்டுமே பார்ப்பதற்கும் பேசுவதற்கும் தண்டிக்கப்பட்டிருப்பதால், என் மகள் (கடவுளே என்னை மன்னியும்!) இறந்துவிட்டாள் என்றும் தன் இரண்டாவது மனைவியுடன் வாழ்வதாகவும் அவரால் நம்பவோ அல்லது நம்புவதுபோல் நடிக்கவோ முடிகிறது. ஆனால் நான் மீண்டும் சொல்கிறேன், இவ்வாறு செய்வது அவர்கள் இருவருக்கும் மன அமைதியைக் கொடுக்குமென்றால் இதில் என்ன பிழை? என் மகள் அன்பான கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். என்னால் அவளைப் பார்க்க முடிகிறது, அவளிடம் பேச முடிகிறது. என் மகள்மீது கொண்டிருக்கும் அன்பினால் நான் பைத்தியமாக்கப்பட்டாலும் அவர்கள் விரும்பியபடி வாழ வழிவிட்டு விலகிக்கொள்கிறேன். எனதருமை பெண்ணே… ஒருவர் பொறுமையாக இருப்பது அவசியம்…”
நான் கேட்கிறேன், வால்டானாவில் நாம் அனைவரும் ஒருவரையொருவர் உற்றுப் பார்த்துக்கொண்டு வாயைப் பிளந்துகொண்டு முட்டாள்களைப்போல் நிற்பதற்கு இவையே போதுமான காரணங்கள் என்று நீங்கள் நினைக்கவில்லையா? இரண்டு பேர்களில் நாம் யாரை நம்புவது? இவர்களில் யார் பைத்தியம்? உண்மை எங்கிருந்து தொடங்குகிறது? கற்பனை எங்கே முடிகிறது?
திரு. போன்ஸாவின் மனைவி இது குறித்து சொல்லலாம்தான். ஆனால், திருமதி. ஃப்ரோலாவின் முன்னிலையில் தான் அவர் மகள்தான் என்று ஒப்புக்கொண்டுவிட்டு, திரு. போன்ஸா முன்னிலையில் தான் அவருடைய இரண்டாவது மனைவி என்று சொல்லக்கூடும் என்பதால் இனி நாம் அவரை நம்ப முடியாது. நீங்கள் அவளைத் தனியாக அழைத்துச் சென்று உண்மையை உங்களிடம் சொல்லவைக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. திரு. போன்ஸா, அவர் பைத்தியக்காரரோ இல்லையோ, உண்மையில் மிகவும் பொறாமை கொண்டவர். தனது மனைவியை வேறு யாரும் பார்க்க அனுமதிப்பதில்லை. சிறையில் இருப்பது போல அவளை அங்கேயே பூட்டி வைத்திருக்கிறார். இந்த உண்மை சந்தேகத்திற்கு இடமின்றி திருமதி. ஃப்ரோலாவின் வாதத்தை வலுப்படுத்துகிறது. ஆனால் திரு. போன்ஸா, உண்மையில் அவரது மனைவியே தான் அதைச் செய்ய வலியுறுத்துவதாகவும், திருமதி. ஃப்ரோலா எந்த நேரத்திலும் அவர்கள் வீட்டில் தனது மகளைச் சந்திப்பதாகக் கூறிக்கொண்டு திடீரென்று தோன்றக்கூடும் என்பதால்தான் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்.
இது ஒரு சாக்காகக்கூட இருக்கலாம். ஆனால் திரு. போன்ஸா தன் வீட்டில் ஓர் உதவியாளரைக்கூட வைத்திருக்கவில்லை. இரண்டு வீடுகளின் வாடகையைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் பணத்தைச் சேமிப்பதற்காக இவ்வாறு செய்வதாகக் கூறுகிறார். இதற்கிடையில் தினசரி வீட்டுப்பொருட்கள் வாங்குவதை அவர் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ள, திருமதி. ஃப்ரோலாவின் மகள் அல்லாத அவரது மனைவியோ எந்த உதவியாளரும் இன்றி அனைத்து வீட்டு வேலைகளையும் – மிகச் சிறிய வேலைகள் உட்பட – தானே செய்கிறார். அவள் தன் கணவனின் மாமியாரான இந்தப் பாவப்பட்ட கிழவியின்மீது இரக்கம் கொண்டு இதையெல்லாம் செய்கிறாள். இது பார்ப்பவர்களுக்குக் கொஞ்சம் அபத்தமாகத் தெரிகிறது. ஆனால் இத்தகைய ஏற்பாட்டை இரக்கத்தின் அடிப்படையில் விளக்க முடியாவிட்டாலும் அவரது பொறாமையின் விளைவாகப் பார்க்க முடியும் என்பதும் உண்மைதான்.
இதற்கிடையில் திரு. போன்ஸாவின் கூற்றுகளுக்கு வால்டானாவின் காவல் அதிகாரி தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் என்னவோ திரு. போன்ஸாவின் தோற்றமும் நடத்தையும் அவருக்கு ஆதரவாக இல்லை, குறைந்தபட்சம் வால்டானாவின் பெண்களுக்கு. அவர்கள் அனைவரும் திருமதி. ஃப்ரோலாவையே நம்ப முனைகிறார்கள். அவர் தன் மகள் சிறிய கூடையில் இட்டு கீழே இறக்கி தன்னிடம் தரும் அன்பு நிறைந்த சிறிய கடிதங்களை அவர்களுக்குக் காட்டவே ஆர்வமாக வருகிறார். இவையல்லாமல் இன்னும் சில முக்கிய ஆவணங்களையும் திருமதி. ஃப்ரோலா அவர்களுக்குக் காட்ட, அவற்றை திரு. போன்ஸாவோ முற்றாக நிராகரிக்கிறார். பாவப்பட்டதொரு நிலைமையில் அவரை மேலும் ஆறுதல்படுத்துவதற்காகவே அந்த ஆவணங்கள் அவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்.
எப்படியிருந்தாலும் நிச்சயமாக ஒன்றை இதில் கூறலாம்: இருவரும் தங்களின் அற்புதமான தியாக உணர்வை ஒருவரிடம் மற்றவர் நன்றாகக் காட்டிக்கொள்கிறார்கள். இது நம்மை மிகவும் நெகிழச்செய்கிறது! இருவரும் மற்றவருக்கு இருப்பதாகக் கருதும் பைத்தியக்காரத்தனத்தின்மீது தனித்துவமான கருணையும் கொண்டிருக்கிறார்கள். இருவரும் தங்கள் தரப்பு நியாயங்களையும் அற்புதமாக வாதிடுகின்றார்கள். திருமதி. ஃப்ரோலா திரு. போன்ஸாவைப் பைத்தியம் என்றோ, திரு. போன்ஸா திருமதி. ஃப்ரோலாவைப் பைத்தியமென்றோ கூறியிருந்திருக்காவிடின் அவர்களில் ஒருவருக்குப் பைத்தியம் என்று நினைக்க வால்டானா மக்களுக்குத் தோன்றியிருக்க முடியாத அளவிற்கு அவர்களின் விளக்கம் இருந்தது.
திருமதி. ஃப்ரோலா தனது மருமகனிடம் சில ஆலோசனைகளைப் பெற அவரைச் சந்திப்பதற்காக அடிக்கடி காவலர் அலுவலகத்திற்குச் செல்கிறார் அல்லது வெளிவேலைகளுக்காகச் செல்லும்பொழுது துணைக்கு அவரை அழைத்துச் செல்ல அவர் வேலை முடித்து வரும்வரை வெளியில் காத்திருக்கிறார். திரு. போன்ஸாவைப் பொறுத்தவரை கிடைக்கும் ஓய்வுநேரத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு மாலையிலும் திருமதி. ஃப்ரோலாவை அவரது குடியிருப்பில் சந்திக்கச் செல்கிறார். தெருவில் போகும்போது ஒருவரையொருவர் சந்திக்க நேர்ந்தால் உடனடியாக அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள். தன் மாமியாருடன் இணைந்து தெருவில் நடப்பவர் அவருக்குச் சோர்வாக இருந்தால் தன் கையைப் பிடித்துக்கொள்ளக் கொடுக்கிறார். இவர்களை நன்றாகக் கவனித்து, உளவு பார்த்து, அளப்பவர்கள் எதுவும் தேறாமல் எரிச்சலுடன் குழப்பமும் திகைப்பும் அடைய, அவர்களுக்கு மத்தியில் இவர்கள் ஒன்றாக நடந்து செல்கிறார்கள். இருவரில் எவர் பைத்தியம், கற்பனை எங்கே முடிகிறது, உண்மை எங்கே தொடங்குகிறது என்பதை அவர்கள் யாராலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
*
ஆங்கில மூலம்: Mrs. Frola and Mr. Ponza, Her Son-in-Law by Luigi Pirandello, Tales of Madness written by Luigi Pirandello, Dante University of American Press (1 September 1984)