அ.மாதவையா (A.Madhaviah, 1872-1925) தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேரத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அன்றைய ஆங்கிலேய காலனி ஆட்சிக் காலகட்டத்தின் ஒருவகை இலக்கிய நீட்சி என்றும் ஆரம்பகால நவீன இந்திய இலக்கிய எழுச்சியின் ஒருவகைச் சுதாரிப்பு என்றும்கூட இதைச் சொல்லலாம்.
மாதவையா தமிழில் எழுதிய நாவல்கள்: 1. முத்துமீனாக்ஷி: ஒரு பிராமணப் பெண்ணின் சுயசரிதை, (1892, 1903) 2. பத்மாவதி சரித்திரம்: ஒரு தமிழ் நாட்டுக்கதை, (1898-99) 3. விஜய மார்த்தாண்டம், (1903).
மாதவையாவின் இறப்பிற்குப் பின், அவர் எழுதிய “மோகினி மாசா” என்ற நாவலின் இரண்டு அத்தியாயங்கள் “பஞ்சாமிர்தம்” கடைசி இதழில் வெளியாயின. அது மருதநாயகம் / கான்சாகிபு என்ற யூசூப்கான் பற்றிய சரித்திர நாவல் என்று தெரிகிறது.
மாதவையா எழுதிய ஆங்கில நாவல்கள்: 1. Thillai Govindan, 1903 (தில்லைக் கோவிந்தன், வே. நாராயணன், 1944). 2. Satyananda, 1909 (சத்தியானந்தன், சரோஜினி பாக்கியமுத்து, 1979). 3. Clarinda, 1915 (கிளாரிந்தா, சரோஜினி பாக்கியமுத்து, 1992). 4. Lt. Panju, 1917 (ராஜமார்த்தாண்டம் நாடகமாக்கம், அ.மாதவையா, 1919).
மாதவையா எழுதிய தில்லைக் கோவிந்தன் என்ற நாவல், மேலைநாட்டு வாசகருக்காக ஆங்கிலத்தில் Thillai Govindan: A Posthumous Autobiography என்ற தலைப்பில் எழுதப்பெற்றது. 139 பக்கமுள்ள அந்த ஆங்கில நாவலின் (1903) முதல் பதிப்பை, அன்று சென்னையில் பிரபலமாக விளங்கிய ஸ்ரீநிவாச வரதாச்சாரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலேயர் நாட்டில் லண்டனில் பல ஆண்டுகள் கழித்தே அதன் (1916) மறுபதிப்புகூட Thillai Govindan: A Posthumous Autobiography என்ற பெயரிலேயே Thomas Fisher Unwin என்பவரின் லண்டன் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. அதனாலேயே, ஆங்கில இலக்கிய உலகத்தின் கவனத்தையும் இந்திய அளவில் அதிகமான பரவலையும் அந்நாவல் பெற்றது.
மேலை வாசகருக்கு இந்த நாவலிலுள்ள அந்நிய தேச நாகரிகமும் கலாச்சாரமும் இந்திய இலக்கியக் கலையின் முன்னேற்ற நிலையும் குறித்தே ஆர்வமும் கவனமும் இருந்திருக்கும். எனவே அங்கும் இந்தியாவிலும் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒருசிலர் இந்த நாவலைப் பொருட்படுத்தி, பாராட்டி எழுதிய மதிப்புரைகளின் தன்மையை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் உருவாகி வரும் வாசகர்களுக்கு இந்த நாவல் எத்தன்மையில் வாசிக்க வாய்த்திருக்கும், எவ்விதச் சலனங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் ஊகிக்க முடிகிறது. அதுவரை இந்தியச் சமூகத்தின் தேசிய எழுச்சியையும் சமய மறுமலர்ச்சியையும் சமய நல்லிணக்கத்தையும் சமூகச் சீர்திருத்தங்களையும் பகுத்தறிவையும் பற்றிப் பேசிய ஆரம்பகட்டப் புனைகதை இலக்கியம், அப்பிரச்சாரங்களைக் கலைத்துவ வடிவிலும் அதை மீறியும்கூட முன்பே படைத்திருக்கலாம். ஆனால் மாதவையாவின் புனைகதைகள் பண்பாட்டு அரசியலின் அபாயகரமான விளிம்புகளில் சஞ்சரித்திருக்கின்றன என்பதும், எனவே பிரச்சார இலக்கியம் என்று முத்திரை குத்தப்பட்டும் சனாதனிகளால் மறைக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் விலக்கப்பட்டும் வந்திருக்கின்றன என்பதையும் அளந்தறிய முடியும். ஆனால், பிரச்சாரம்கூட இலக்கிய அந்தஸ்தை அடையும் என்பதற்கும் உலக இலக்கிய வெளியில் நிறைய உதாரணங்கள் உண்டு என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
தில்லைக் கோவிந்தன் நாவல், ஒரு சுவ (சுய) சரிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது. முத்துமீனாட்சி நாவல், சாவித்திரி / முத்துமீனாட்சி என்ற ஒரு பெண்ணின் தன்மைக்கூற்றில் அமைந்தது. தில்லைக் கோவிந்தன் நாவல் ஓர் ஆணின் தன்மைக்கூற்றில் அமைந்தது. அதுவும் தில்லைக் கோவிந்தன் என்பவர் எழுதிய ஒரு சுயசரிதையை, எழுதியவரின் மறைவுக்குப் பின் ‘பம்பா’ என்ற அவரது நண்பர் பதிப்பிக்கிறார். இம்மாதிரி உத்திமுறையில் சில விக்டோரியன் ஆங்கில நாவல்கள் முன்பே வந்துள்ளன. இன்று எழுதப்படும் பின்நவீனத்துவப் புனைகதைகளிலும் இந்த உத்திமுறை மறுஎழுச்சி பெற்றுள்ளதைக் கவனிக்க முடியும்.
தில்லைக் கோவிந்தன் நாவலின் பல இடங்களில், சம்பவங்களாகக் கதையோட்டத்தை மாப்பசான் (1850-93) பாணியில் நிகழ்த்திக் காட்டாமல், லாரன்ஸ் ஸ்டெர்ன் பாணி (The Life and Opinions of Tristram Shandy, Gentleman, 1759) அங்கதக் கட்டுரை நடையில் அல்லது ஹென்றி ஃபீல்டிங் பாணி (The History of Tom Jones, a Foundling, 1749) அங்கதக் கதைசொல்லல் நடையில் நாவலை நகர்த்திச் செல்வதற்கு இந்த சுயசரிதையைப் பதிப்பிடல் என்ற உத்திமுறையில் நியாயம் கிடைக்கப்பெறுகிறது என்றும் சொல்லலாம். இந்த இருவரும் 19ம் நூற்றாண்டு விக்டோரியன் இலக்கிய காலத்துக்கு முந்தையவர்கள் என்றாலும் இவர்களது காலப்போக்குகளைப் பிரகசனமாக்கிப் பரிகசித்தவர்கள் என்பதால் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். (இன்றைய போஸ்ட்-மாடர்ன் இலக்கிய விமர்சகர்கள், ஸ்டெர்னையும் Rabelais (Gargantua and Pantagruel) என்ற மறக்கடிக்கப்பட்ட இலக்கிய மேதையையும் மறுகண்டுபிடிப்பு செய்து கொண்டாடுகிறார்கள்.) தாக்கரேயையும் மாதவையாவையும் ஒப்பிட்டு சில ஆய்வுகள் வந்துவிட்டதால் நான் வேண்டுமென்றே தாக்கரேயை இங்கே இழுக்கவில்லை.
சுந்தரம்பிள்ளை, பரிமாற்கலைஞர், மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்கள் எல்லாம், லிட்டனையும் ரெய்னால்ட்ஸையும் பற்றித் தழுவிப் புனைகதைகளை எழுத முயன்று வரும்போது, மாதவையாவும் ராஜமையரும் செல்வகேசவராயரும் பாரதியும் வ.வே.சு ஐயரும் வேறு வகைகளில் தட்டித் தடவித் தடம்கண்டு வந்ததை, பாதையில்லாக் காட்டில் பயணம் செய்ய முயன்றதை, மாதவையாவின் டார்ச்லைட் வெளிச்சத்தில்தான் நிதானிக்க முடிகிறது. இவர்களெல்லாம் ஷேக்ஸ்பியரையும் விட்மனையும் தாக்கரேயையும் டிக்கன்சையும் கண்டு அவர்கள் வழியில் பாதை பிடிக்க முயன்றுள்ளார்கள்.
முன் கூறிய தமிழறிஞர்களும் இவற்றை எல்லாம் தெரிந்தவர்கள்தாம். ஆனால் அவர்கள் இவர்களது பாதையைவிட்டு விலகி ரெய்னால்ஸ் போன்றோரின் பாப்புலிசத்தின் பிரகாசமான பாதைகளைத் தேர்ந்தெடுத்தவர்கள். அதிகபட்சம் இவர்கள் ஆலிவர் கோல்ட்ஸ்மித் போன்றோரின் இலட்சியவாத எழுத்துகளைத் திரும்பிப் பார்ப்பார்கள். தில்லைக் கோவிந்தன் நாவலுக்கு சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இதழில் மதிப்புரை எழுதும்போது சூரிய நாராயண சாஸ்திரியார்தான் முதன்முதலில் மாதவையாவிடம் இருக்கிற தாக்கரேயின் தாக்கத்தைப் பற்றி மதிப்புரைக்கிறார் என்பதை இங்கே ஒப்பிட்டுக்கொள்ளலாம்.
இந்த விஷயங்கள் பற்றி விரிவாக விளக்கினால்தான் தெளிவு கிடைக்கும். மனோன்மணீயம் பற்றி விரிவான ஒரு கட்டுரை எழுதும்போது இவ்விஷயத்தை விரித்துரைக்கலாம் என்றிருக்கிறேன். மாதவையா, விவேக சிந்தாமணியின் இரண்டாவது இதழில் சாவித்திரி என்பவர் தன்வரலாறாகச் சாவித்திரி சரித்திரம் எழுதுவதாக ஒரு தொடர்கதை எழுதத் தொடங்கும்போது (ஜூன் – நவம்பர், 1892), கூடவே மனோன்மணீயம் பற்றிய கட்டுரையைத் தன் சொந்தப் பெயரில் நான்காவது இதழிலிருந்து நான்கு இதழ்களில் (ஆகஸ்ட் – நவம்பர், 1892) எழுதினார் என்பதும் இங்கே நினைவில் வருகிறது.
தில்லைக் கோவிந்தனின் வாழ்வில், பிறப்பிலிருந்து நடக்கும் கதை நிகழ்ச்சிகள், பத்தொன்பது அதிகாரங்களில் மாதவையாவால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்றுள்ளது. எனவே ஆங்கில வாசகருக்கான விளக்கமுறைப் புனைவு உத்தி இதில் கையாளப்பட்டதில் வியப்பில்லை. தில்லைக் கோவிந்தன் எழுதி வைத்திருந்த தன்வரலாற்றைப் பம்பா என்பவர் பதிப்பித்துள்ளதாக இந்நாவல் அமைந்துள்ளதை முன்பே பார்த்தோம். கதையினுள்ளும் கோவிந்தனுடன் கல்லூரியில் படித்த ஒரு பாத்திரமாகப் பம்பா வருகிறார். “பெருங்குளம் அ. மாதவையா பி.ஏ.” என்பதைச் சுருக்கி, பம்பா (PAMBA) எனப் புனைப்பெயராக மாதவையா வைத்துக்கொண்டார். அந்தப் பெயரில் கிறிஸ்தவக் கல்லூரிப் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதியுள்ளார் மாதவையா.
நெல்லைச்சீமையில் இருந்த பெருங்குளம் என்ற ஊரில், அனந்த ராமையருக்கும் முத்துலட்சுமி அம்மையாருக்கும் மகனாக (1872), அந்தணர் குலத்தில் பிறந்த மாதவையர், சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் (1892) பெற்றார். அப்போதிருந்தே அக்கல்லூரியின் பிரசித்தமான பத்திரிகையில் எழுதிவந்திருக்கிறார். அந்த இருபது வயதில்தான் தமிழின் இரண்டாவது நாவல் என்று கருதத்தக்க சாவித்திரி சரித்திரம் என்ற தமிழின் முதல் பத்திரிகைத் தொடர்கதையை விவேக சிந்தாமணி மாசிகையில் எழுத ஆரம்பிக்கிறார். அதன் தீவிரத்தன்மையால் அது 6 அத்தியாயங்களோடு (ஜூலை – நவம்பர், 1892) நிறுத்தப்படுகிறது. பிறகுதான் அந்தப் பத்திரிகையில் ராஜமையர் கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலைத் தொடராக எழுதி முடிக்கிறார். எனவே அதுவே தமிழின் இரண்டாவது நாவல் என்ற சிறப்பைப் பெறுகிறது. சாவித்திரி சரித்திரம் நாவலை மாதவையா பத்மாவதி சரித்திரம் எழுதிப் புகழ்பெற்ற பின் 1903ல் தான் பெயர்களையும் இடங்களையும் மட்டும் மாற்றி “முத்துமீனாட்சி” என்ற நாவலாகக் கொண்டுவர முடிகிறது. இந்த முன்னோடி நாவலே ஒரு பெண்ணின் குரலில் ஒலித்த புரட்சிகரத்தைக் கொண்டிருந்தது. சாவித்திரி என்ற புனைபெயரில்தான் அந்த நாவலை மாதவையா எழுதியிருந்தார். இதே 1903 ஆண்டில்தான் மாதவையாவின் மகள் லட்சுமி, முத்துமீனாட்சியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, Social Reformer Advocate என்ற பத்திரிகையில் அது தொடராக வருகிறது. (இம்மொழிபெயர்ப்பு பின்பு புத்தகம் ஆகவேயில்லை). இந்த Social Reformer Advocate பத்திரிகையில் மாதவையாவும் ஆங்கிலக் கதைகள் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. குசிகர் குட்டிக் கதைகள் தொகுப்பிலோ Thillai Govindan: Short Stories, Poems,‘Dox Vs Dox’ (1903) என்ற தொகுப்பிலோ சேர்க்கப்பட்ட சிறுகதைகளில் இந்தப் பத்திரிகையில் எழுதிய சில கதைகளும் இருக்கலாம் என்றே நினைக்கிறேன். இதை ஒப்புநோக்கிப் பார்க்க, Social Reformer Advocate பத்திரிகையோ அதில் வந்த மாதவையா படைப்புகள் பற்றிய தகவல்களோ கிடைக்காத நிலையே எழுந்துள்ளது.
இந்த 1903 என்ற ஆண்டில்தான் மாதவையாவின் முதல் ஆங்கில நாவலான தில்லைக் கோவிந்தன், ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடக மொழிபெயர்ப்பு, விஜய மார்த்தாண்டம் என்ற மறவர் சமுதாயம் பற்றிய அவரது மூன்றாவது தமிழ் நாவல், பத்மாவதி சரித்திரம் முதல் பாகத்தின் இரண்டாம் பதிப்பு (பத்மாவதி முதல் பாகத்தின் 1896 முதல் பதிப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லாத நிலையில் இந்த இரண்டாம் பதிப்பு முக்கியத்துவம் பெறுகிறது), ஆங்கில நெடுங்கவிதை ஒன்றும் அடங்கிய Thillai Govindan: Short Stories, Poems,‘Dox Vs Dox’ என்ற யாரும் பார்க்கக் கொடுத்து வைக்காத ஒரு புத்தகம் ஆகியவை வந்தன. மாதவையாவின் உச்சபட்சமான வெளியீட்டு ஆண்டாக 1903 இருந்திருக்கிறது.
Thillai Govindan: Short Stories, Poems,‘Dox Vs Dox’ (1903) என்று ஒரு நூல் வெளிவந்ததாகத் தகவல் மட்டும் தெரிகிறது. அது பற்றித் தன் தந்தை மாதவையா பற்றிய குறிப்பேட்டில் மா.கிருஷ்ணன் குறிப்புத் தந்துள்ளார் (A.Madhaviah: A Verified Factual Record by M. Krishnan).
மேலதிக விவரம் கேட்டு, மாதவையா படைப்புகளில் தம் டாக்டர் பட்டத்தை மேற்கொண்டிருந்த விமர்சகர் ராஜ்கௌதமன் அவரைப் பேட்டி கண்டபோது இந்நூல் பற்றிய மேலதிக விவரங்களைக் கேட்கிறார். அந்தப் பதிலில் இருந்து மேலும் சில தகவல்கள் கிடைக்கின்றன. (ராஜ்கௌதமன், 2019). இந்த நூலைப் பிரசுரித்த ஸ்ரீநிவாச வரதாச்சாரி அண்ட் கோ (Srinivasa Varadachari & Co) என்ற சென்னை திருவல்லிக்கேணி பதிப்பகம், மாதவையாவின் ஆங்கில நூல்களையும் தமிழ் நூல்களையும் வெளியிட்டிருப்பது தெரிகிறது. அதுவும் 1903ல் மாதவையாவின் ஐந்து நூல்களை அது பிரசுரித்திருக்கிறது: 1. Thillai Govindan (Novel). 1st Edition: January 1, 1903, 2. Thillai Govindan: Short Stories, Poems,‘Dox Vs Dox’, 1903, 3. விஜய மார்த்தாண்டம், 1903, 4. பத்மாவதி சரித்திரம் (முதல் பாகம்), 1903 (இரண்டாம் பதிப்பு), 5. ஒதெல்லோ, டிசம்பர் 1902.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் பிரின்ஸ்பாலாக இருந்த வில்லியம் மில்லர் (1838-1923) என்ற புராட்டஸ்டண்ட் பாதிரியின் அர்ப்பணிப்பான வாழ்வைக் கண்டு வியக்கிறார் மாதவையா. அவரைப் பற்றி தம் தில்லைக் கோவிந்தன் நாவலில் கல்லூரிப் பருவம் பற்றிய ஒரு அத்தியாயத்தில் மிகவும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார். (பாரிஸ்டர் பஞ்சநதம் என்ற ஓரங்க நாடகத்தில் மிஸஸ் மில்லர் என்ற ஒரு அருமையான ஆங்கில மாது வருகிறார் என்பது இங்கு நினைவுக்கு வருகிறது.) அதே கல்லூரியில் ஓராண்டு ஆசிரியர் பணி (1892-93) புரிந்துள்ளார்.
தம் பிராமணச் சமூகத்தினுடையதும் புராட்டஸ்டண்ட் மிசனரிகளின் மதபோதகமான சமூக வாழ்நெறிகளையும் கண்டு அவைகளின் நேர்முறைகளையும் எதிர்மறைகளையும் தன் தீவிரமான கற்றலின் மூலம் அலசி ஆராய்கிறார் மாதவையா. பின்பு கிளாரிந்தா நாவலில் அந்த புராட்டஸ்ட்டண்ட் வாழ்முறைப் பின்னணியைப் படைத்துக் காட்டுகிறார். பத்மாவதியிலும் முத்துமீனாட்சியிலும் தில்லைக் கோவிந்தனிலும் தம் இனத்தின் சமூக நெறிகளை அலசி ஆராய்கிறார்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரி வெளியிட்ட பத்திரிகை (Christian College Magazine) அன்று பிரபலமானது. பல புகழ்பெற்ற தமிழறிஞர்களும் மேலைநாட்டறிஞர்களும் எழுதிவந்த பத்திரிகை. அதில் தில்லைக் கோவிந்தன் என்ற பெயரிலும் பல விஷயங்களைப் பற்றி எழுதுகிறார் மாதவையா. Thillai Govindan Short Stories என்ற நூலிலும், Thillai Govindan என்ற நாவலிலும் பிறகு அந்தப் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். எனவே தில்லைக் கோவிந்தன் நாவலுக்கு முன்பே தில்லைக் கோவிந்தன் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார் மாதவையா. தில்லைக் கோவிந்தன் எழுதியதாக அவர் பெயரில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
கிறிஸ்தவப் பத்திரிகையில் எழுதும்போது வேண்டுமென்றே, தில்லைச் சிதம்பரம் என்ற சைவ ஸ்தலமும் அதில் கோவிந்தன் என்ற வைணவக் கடவுள் பெயரும் பிணைந்துள்ளது போல் ஒரு பெயரைப் பயன்படுத்தியுள்ளார். (உண்மையில் தில்லை என்பது கதையில் ஒரு கிராமம். மாதவையாவின் பிறந்த ஊரான பெருங்குளம் போல், பத்மாவதி சரித்திரத்தில் வரும் சிறுகுளம் போல் ஒரு ஊர்), இப்படி இணைத்துப் பார்ப்பதில் மாதவையாவுக்கு ஏதும் குறிப்புணர்த்துதல் இருக்கலாம். மாதவையாவின் குடும்பத்தினர் பெரிதும் வைணவப் பெயர் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். “கோணக் கோபாலன்” என்ற பெயரிலும் அவர் பஞ்சாமிர்தம் இதழில் ஒரு “தானே தானாம் தக்கடித் தங்கம்’ என்ற ஒரு நீண்ட அங்கதக் கதையை எழுதியுள்ளார்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் இதழில், 1892 முதல் 1910 வரை, ஆங்கிலத்தில் மாதவையா எழுதிய கட்டுரைகளும் கவிதைகளும் சுமார் பதினாறு இருக்கும். அவைகளில் இருந்து ஒரு தொடர்கட்டுரையை 1907ல் Thillai Govindan’s Miscellany என்ற 89 பக்க நூலாகத் தந்திருக்கிறார் மாதவையா. இது ஐந்து பொருள் பற்றிய ஒரு தொடர்கட்டுரை: 1. Women: The Two Ideals, 2. Truthfulness, 3. Caste, 4. Patriotism, 5. Religious Reform. இந்த நூலை சென்னையின் அன்றைய பிரபல ஜி.என்.நடேசன் அண்ட் கோ என்ற புத்தக விற்பனையாளர்கள் அச்சிட்டு விநியோகித்திருக்கிறார்கள். இளமையின் துடிப்பான காலத்திலேயே, அவர் முக்கியமாகக் கருதி எழுதிய விஷயங்கள் மலைப்பைத் தருகின்றன. இந்த நூலும் அவரது வேறுசில நூல்களைப் போல் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இந்த நூலில் உள்ள நெடுங்கட்டுரையின் பாடுபொருள் என்று இவைகளைக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்: “Women: The Two Ideals, Femininity, Status of Women in Indian and British Societies, Marriage, Child Marriage, Female education, Opera-Entertainment, Love, Hinduism, Christianity, Natural History, Slavery, Truthfulness, Death, Natural Selection, Aryans, Ramayana, Mahabharata, Religion, Law, Class, Islam, Mohammedanism, Colonial Rule, Colonial Power, Caste, List of Castes, Hinduism, Inter-Marriage between Castes, Missionary work, Colonial Civil Service, Indian Civil Service, Pilgrimage, Buddhism, Patriotism, Nationalism Attitude of Britain to Indian Self Government, Primogeniture, Religious Reform, Reincarnation, Criticism of Idolatry.”
1903ல் ஒரு நெடுங்கட்டுரையில் எத்தனை விஷயங்களைக் கையாண்டுள்ளார் என்பது வியக்கத்தக்கதுதான்.
படிப்பு முடித்து ஆசிரியப் பணியாற்றியபோது, போட்டித் தேர்வில் வென்று, ஆங்கிலேயர் ஆட்சிக்கால உப்புச் சுங்கத்துறையில் (1883) சேர்ந்து, இன்ஸ்பெக்டராகப் பணிபுரிகிறார் மாதவையா. 1923ல் பணியில் இருந்து விலகுகிறார். தமிழர் நேசன் என்ற பத்திரிகையை இணைந்து நடத்திய முன் அனுபவத்தில், 1924ல் பஞ்சாமிர்தம் என்ற மாதப் பத்திரிகையை ஆரம்பித்து நடத்துகிறார்.
பஞ்சாமிர்தம் என்று வைத்த பெயர்க்காரணம் பற்றி, “உண்மை, அன்பு, அறிவு, ஒற்றுமை, உழைப்பு எனும் ஐந்தையும் கலந்ததாகும் இப்பஞ்சாமிர்தம்” என்று அறிவித்துள்ளார் மாதவையா. இப்பத்திரிகையைத் தொடங்கியதன் நோக்கம் குறித்து, “நாடெங்கும் ஆங்காங்கு முளைத்தெழும் தேசிய உணர்ச்சிப் பயிருக்கு இப்பத்திரிகை மூலமாய் ஊக்க உரம் இட்டு, அறிவு நீர் பாய்ச்சி, அவ்வுணர்ச்சியைத் தழைத்தோங்கச் செய்ய முயலுவது என் முக்கிய நோக்கம்” என்றும் விளக்கியுள்ளார் மாதவையா. அவரது இலக்கியப் படைப்புகளுக்கும் இவையே உந்து சக்தியாக இருந்திருக்கின்றன என்று அவரது புனைகதைகளைப் படிக்கும்போது உணரலாம்.
ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்ச்சி பெறுதல், அடக்கப்பட்ட பெண்கள் உரிமை உணர்வுபெறுதல், சாதி மத கலாச்சார விஷயங்களில் முற்போக்கு, பகுத்தறிவு, ஜனநாயகத்தன்மை, மனிதாபிமானம், வரலாற்றுப் படிப்பினைகளோடு புதுமலர்ச்சி கொள்ளுதல் என்பவையே அவருடைய படைப்புகளில் வலியுறுத்தப்படும் கருதுகோள்கள் என்று மாதவையாவை மதிப்பிடுவார்கள்.
இவையெல்லாம் சரிவிகிதத்தில் தில்லைக் கோவிந்தன் என்ற புனைவில் நடப்பியல் சித்திரங்களாகின்றன.
ஆங்கிலத்தில் தான் (1903) எழுதிய இந்தத் தில்லைக் கோவிந்தன் நாவலை, தமிழர் நேசன் (1917-18) என்று தமது சகிருதயர்கள் சிலருடன் இணைந்து நடத்தின பத்திரிகையில், தமிழாக்கம் செய்து மாதவையாவே வெளியிட ஆரம்பிக்கிறார். பிறகு தானே அதைத் தொடராமல், எழுத்தாற்றல் கைவரப் பெற்ற தமது பேரன் வே.நாராயணனிடம் அதைத் தொடர்ந்து மொழிபெயர்க்கும்படி ஒப்படைக்கிறார். அந்த வே.நாராயணய்யர், முன்பே தாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்த பத்மாவதி சரித்திரத்தை அவரிடம் காட்டிப் பாராட்டைப் பெற்றவர். தமிழர் நேசனில் தன் தமிழாக்கத் திறனை வெளிப்படுத்தியவர். தமது சிறிய பாட்டனாரான மாதவையாவின் மறைவுக்குப் பிறகே வே.நாராயணன், தமது தில்லைக் கோவிந்தன் தமிழாக்கத்தைப் பிரசுரிக்க முடிந்திருக்கிறது. தமிழர் நேசனில் எழுதுவதில் மாதவையா அதிகம் விருப்பம் காட்டவில்லை என்கிறார் பெ.நா.அப்புஸ்வாமி என்ற (மாதவையாவின் தமையனார் மகனான) புகழ்பெற்ற தமிழ் அறிவியல் எழுத்தாளர். ஆசிரியர் பொறுப்பிலிருந்து தம்மை விலக்கிக்கொண்டு, அப்புஸ்வாமியின் பொறுப்பில் தமிழர் நேசனை விடுகிறார் மாதவையா. தமிழர் நேசன் பெரும்பாலும் அறிவியல் கட்டுரைகளையே நிறைய வெளியிட்டுள்ளது.
1944ல் தில்லைக் கோவிந்தன் என்ற தமிழாக்க நாவலை, தரம் பேணும் தன்மைகொண்ட தினமணி இலக்கிய வட்டம், தமது தினமணி காரியாலயத்தின் ஏழாவது வெளியீடாகச் சென்னையில் வெளியிட்டுள்ளது. அன்று மாதந்தோறும் ஒரு வெளியீடாக ஒரு நல்ல நூலை, செய்திப் பத்திரிகையான தினமணி வெளியிட்டது. அதற்கு பி.ஸ்ரீ. பொதுப் பதிப்பாசிரியராக இருந்திருக்கிறார். அதன் இலக்கிய ஆலோசகர் குழுவில் மாதவையாவின் மேல் மதிப்புகொண்ட ஓரிருவர் இருந்திருக்கலாம். எனவே அந்தத் தினமணி காரியாலயம் முன்பே மாதவையா குடும்பத்தினர் எழுதியவற்றை மட்டும் கொண்ட “முன்னிலா” என்ற ஒரு தொகுப்பு நூலையும் (1942) வெளியிட்டிருந்தது. பெரிதும் அரசியலுக்கும் சிறிது இலக்கியத்துக்கும் இடமளித்த அந்தத் தரம்பேணும் செய்திப் பத்திரிகையின் வெளியீடாகத் தில்லைக் கோவிந்தன் வரும்போது, அந்நாவலில் நேரடியாகக் கட்டுரைத் தன்மையுடன் விளங்கும் 16ஆவது அத்தியாயம் (“என் ராஜீயக் கொள்கைகளைக் குறிப்பது”), மொழிபெயர்க்கப்பட்டு சேர்க்காமல் விடப்படுகிறது. அதற்கு அந்த ராஜீயக் கருத்துகளின் பழசாகிவிட்ட தோரணை காரணமா அல்லது மாதவையாவின் அந்த அரசியல் பார்வையை வாசகர்கள் இன்று தெரிந்துகொள்வது தேவையில்லை என்று நினைத்தார்களோ என்னவோ, அந்த அத்தியாயத்தைத் தவிர்த்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளரே இதைச் செய்தாரா, பதிப்பாசியர் குழு இதை முன்மொழிந்ததா என்று தெரியவில்லை. மாதவையா வாழ்ந்த போதே வந்த தமிழர் நேசன் பத்திரிகைத் தமிழாக்கத்தில் இந்த அத்தியாயம் வெளியானதா அல்லது அதிலும் தவிர்க்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.
கமலாம்பாள் சரித்திரம் தமிழ் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸ்டூவர்ட் பிளேக்பர்ன் என்ற மேலைத் தமிழ் ஆய்வாளர், கதையின் நாயகர் முத்துஸ்வாமி அய்யர் தன் ஆன்ம தரிசனம் பற்றிக் கனவு காணும் ஒரு அத்தியாயத்தை, கதையோட்டத்திற்குத் தேவையில்லை என்று மொழிபெயர்க்காமல் தவிர்த்திருக்கிறார் (Stuart Blackburn (Tr.). The Fatal Rumour (1999). B.R. Rajam Iyer). மாதவையாவின் தில்லைக் கோவிந்தன் என்ற ஆங்கில நாவலைத் தமிழில் மொழிபெயர்த்த வே.நாராயணன், கதைத் தலைவனின் ராஜீய விவகாரங்கள் பற்றிய ஆறாவது அதிகாரத்தை மொழிபெயர்க்காமல் தவிர்த்திருக்கிறார். முன்னும் பின்னும் நடந்த இரு இலக்கிய அரசியலாகவே இது இன்று விடம்பனம் கொள்கிறதல்லவா? (எனவே, அந்த அத்தியாயமும் இன்றைய தமிழ் வாசகர்கள் பார்வைக்குத் தெரிய வரட்டுமே என்று நான் அதன் ஆங்கில மூலத்தை அப்படியே இந்த நூலின் பின் இணைப்பில் சேர்த்துத் தந்துள்ளேன்.)
இந்தத் தில்லைக் கோவிந்தன் நாவலின் தமிழாக்கத்தை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (1998) மறுபதிப்பு செய்திருக்கிறது.
தம் காலத்து மற்ற நாவலாசிரியர்கள் எழுதியது போல இல்லாமல் சாதி, மதம், மூடப்பழக்கங்கள் முதலியவற்றைத் தம் எழுத்தால் தீவிரமாக விமர்சித்தவர் மாதவையா. தில்லைக் கோவிந்தன் எனும் இந்த நாவலில், தீண்டாமையின் கொடுமை, குழந்தை மணக்கொடுமை, ஐரோப்பிய வாழ்க்கைமுறைக் கல்வியால் ஏற்படும் குழப்பம், பண்டைக்காலம் தொட்டே இருந்துவரும் தமிழ்க் குடும்பங்களில் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் போன்றவை சித்திரிக்கப்படுகின்றன. மேலைநாட்டார் தற்காலத் தமிழ்க் கலாச்சார வாழ்வை அறிந்துகொள்ளுவதற்காகவே ஆங்கிலத்தில் மாதவையா இந்நாவலை எழுதியிருக்கிறார் என்பது நன்றாகவே புலப்படுகிறது. அன்றைய எதார்த்தமான தமிழ்ச் சமுதாயமே இதில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
மாதவையாவின் முக்கியமானதும் கச்சிதமானதுமான நாவல் தில்லைக் கோவிந்தன்தான் என்றால் மிகைக்கூற்று ஆகாது. இந்திய ஆங்கில இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் இந்த நாவலின் திடும் பிரவேசம் பல திகம்பர இரகசியங்களைத் துப்புத்துலக்க வைத்துள்ளது.
*
சான்றுகள்:
- Thillai Govindan: A Posthumous Autobiography. A.Madhaviah. Madras: Srinivasa Varadachari & Co. 1st Edition: January 1, 1903. (139 Pages).
- Thillai Govindan: Short Stories, Poems,‘Dox Vs Dox’. Madras: Srinivasa Varadachari & Co. 1903
- Thillai Govindan: A Posthumous Autobiography. A.Madhaviah. 1916. London: T.Fisher Unwin. 1916.
- Thillai Govindan’s Miscellany (Reprinted from the Christian College Magazine, Madras). A.Madhaviah. 1907. Madras: G.A.Natesan & Co. 1907. (89 Pages).
- தில்லைக் கோவிந்தன். அ. மாதவையா. வே.நாராயணன் (தமிழாக்கம்). சென்னை: தினமணி காரியாலயம். 1944.
- தில்லைக் கோவிந்தன். அ. மாதவையா. வே.நாராயணன் (தமிழாக்கம்). சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 1998.
- அ. மாதவையா படைப்புகள். சு.சண்முகசுந்தரம் (தொகு). சென்னை: காவ்யா. 2008.
- பஞ்சாமிர்தம் (அ.மாதவையாவின் இதழ் தொகுப்பு). மீனாட்சி தியாகராஜன் (தொகு). சென்னை: காவ்யா. 2014.
- அ.மாதவையாவின் தமிழ் நாவல்கள் ஓர் ஆழ்நிலைப் பார்வை. ராஜ் கௌதமன். சென்னை: என்சிபிஎச். 2019.
- A.Madhaviah 1872 -1925: An Assessment’. Uma Parameswaran, University of Winnipeg, Canada. First Published March 1, Commonwealth Quarterly. 1986. (Research Article).
- A.Madhaviah: A Life and a Story. Sita Anantharaman & Muthu Meenakshi. Vasantha Surya (Trans). Delhi: Oxford University Press, 2004.
- A. Madhaviah – A Verified Factual Record by M. Krishnan (Youngest son of A. Madhaviah). http://madhaviah.org/AMbyMKFullV10.htm
*
தில்லைக் கோவிந்தன் (நாவல்), அ.மாதவையா, பதிப்புரை: கால.சுப்ரமணியம், தமிழினி வெளியீடு, 2022.