திறவுகோல் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

by கோ.கு.குமார்
0 comment

மதியம் மூன்று மணிவாக்கில், பெஸ்ஸி பாப்கின் சாலைக்குக் கிளம்பத் தொடங்கினாள். வெளியே கிளம்புவதென்பது, அதுவும் ஒரு வெக்கையான வெயில் நாளில் கிளம்புவதென்பது, நிறைய சிரமங்களுக்குள்ளாக்குவது. முதலில் இறுக்கமான கச்சு உடைக்குள் தன் கொழுத்த உடலை வலிந்து புகுத்திக்கொள்ள வேண்டும். வீங்கிய பாதங்களைச் சப்பாத்துகளுக்குள் திணிக்க வேண்டும். தலை வார வேண்டும், வீட்டிலேயே வைத்து எல்லா நிறங்களிலும் – மஞ்சள், கருப்பு, சாம்பல், சிகப்பு என- சாயமிடப்பட்ட, முரட்டுத்தனமாக வளர்ந்திருந்த முடியை வார வேண்டும். பிறகு, தானில்லாதபோது அண்டை வீட்டார் உள்ளே நுழைந்து துணிகளை, உடைகளை, ஆவணங்களைக் கலைத்துப்போட்டு விடவோ, களவாடிவிடவோ முடியாதபடி செய்ய வேண்டும்.

மனிதத் தொல்லைகளைவிடவும் துர்தேவதைகளால், பேய்களால், தீய சக்திகளால் பெஸ்ஸி துன்புறுத்தப்பட்டாள். படுக்கையறை மேசையில் ஒளித்து வைத்திருந்த தன் மூக்குக்கண்ணாடியைச் செருப்புக்குள் கண்டெடுத்தாள். மருந்துகள் வைக்கும் அலமாரியில் தன் சிகை சாய புட்டியை வைத்திருந்தாள்; பல நாட்கள் கடந்த நிலையில் அதைத் தன் தலையணைக்கடியில் கண்டெடுத்தாள்.

ஒருமுறை காய்கறி ரசத்தைப் பாத்திரத்தில் வைத்து குளிர்பதனப் பெட்டியில் சேமித்திருந்தாள். கண்ணுக்குத் தட்டுப்படாத ஒருவன் வந்து அதை அங்கிருந்து எடுத்துவிட்டான். பிறகு, நீண்ட தேடுதலுக்குப் பிறகு பெஸ்ஸி அதைத் துணியலமாரியில் கண்டெடுத்தாள். துணிப்பரப்பில் கெட்டியாகக் கொழுப்பு அப்பிக்கொண்டு துர்நாற்றத்தை உண்டாக்கியது.

அவள் எப்படியெல்லாம் உழன்றாள், அவள் மேல் ஏவப்பட்ட எத்தனை தந்திரங்களைச் சமாளித்தாள், பைத்தியமாகிவிடாமல் இருக்கவும் கொல்லப்படாமல் இருக்கவும் அவள் எவ்வளவு மல்லுக்கட்ட வேண்டியிருந்தது என்பதையெல்லாம் அந்தக் கடவுளே அறிவார். அவளை இரவும் பகலும் அழைத்துத் தொல்லை செய்து, அவளது ரகசியங்களை அறிந்துகொள்ள விழைந்த மோசக்காரர்களிடம் இருந்தும் கீழ்ப்புத்திக்காரர்களிடம் இருந்தும் தப்பிப்பதற்காக அவள் தன் தொலைபேசி இணைப்பைத் துண்டிக்க வேண்டியதாயிற்று. பூவர்த்தோ ரிக்கோ பால்காரன் ஒருமுறை அவளை வல்லுறவு செய்ய முற்பட்டான். பலசரக்குக் கடையின் எடுபிடிப் பையன் ஒருமுறை தனது சிகரெட்டால் அவளது உடைமைகளை எரித்துவிடப் பார்த்தான். அவள் முப்பத்து ஐந்து வருடங்களாக மானியத்தில் வாழ்ந்துவந்த வாடகைத் தொகுப்பு வீட்டிலிருந்து அவளைத் துரத்துவதற்காக அதன் உரிமையாளனும் தலைமை நிர்வாகியும் வீடு நிறைய எலிகளையும் சுண்டெலிகளையும் கரப்பான்களையும் நிறைத்துவிட்டனர்.

அந்தப் பகைவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்காகப் பெஸ்ஸி எடுத்த எந்த முயற்சியும்- இரும்புக்கதவு, கூடுதலான பூட்டு, காவல்துறைக்கும் நகராட்சித் தலைவருக்கும் ஃஎப்.பி.ஐ.க்கும், வாஷிங்டனில் வசிக்கும் அதிபருக்கும் எழுதிய எல்லாக் கடிதங்களும் – பலனளிக்காதென்று வெகுநாட்களுக்கு முன்னரே கண்டுவிட்டிருந்தாள். சன்னல்களையும் எரிவாயுக் குழாய்களையும் பரிசோதிப்பது, அலமாரிகளைப் பாதுகாப்பது போன்றவற்றைச் செய்ய காலமெடுத்தது. பணத்தாள்களைக் கலைக்களஞ்சிய புத்தகங்களிலும், நேஷனல் ஜியாகிராபிக் இதழ்களுக்கிடையிலும், சாம் பாப்கினின் பழைய பேரேடுகளுக்குள்ளும் ஒளித்து வைத்திருந்தாள். உபயோகமே செய்யாதிருந்த கணப்பறை விறகுகளுக்கிடையிலும் சாய்வு நாற்காலியிலும் தன்னுடைய பங்குப் பத்திரங்களை ஒளித்து வைத்தாள். அவளுடைய நகைகள் மெத்தைக்குள் வைத்துத் தைக்கப்பட்டிருந்தன. ஒருகாலத்தில் வங்கிகளில் இருக்கும் அந்தரங்கப் பாதுகாப்பு அறைகளில் அவற்றைச் சேமித்து வைத்திருந்தாள். ஆனால், அதன் காவலாளிகளிடம் மாற்றுச்சாவி இருக்குமோ என்ற எண்ணம் வெகுகாலத்திற்கு முன்பே வந்துவிட்டிருந்தது.

மாலை ஐந்து மணிவாக்கில் பெஸ்ஸி வெளியே கிளம்பத் தயாரானாள். கண்ணாடி முன் ஒருமுறை தன்னைப் பார்த்துக்கொண்டாள். குட்டையான, அகலமான, குறுகிய நெற்றியும் தட்டையான மூக்கும், சீனத்தவரைப் போலச் சாய்ந்து பாதி மூடிய கண்களும் கொண்ட முகம். அவளது தாடையில் சிறிது நரைமுடி முளைத்திருந்தது. பூக்கள் அச்சிடப்பட்டிருந்த வெளிரிப்போன ஒரு உடையையும் மரத்தில் செர்ரிப் பழங்களும் திராட்சைகளும் ஒட்டப்பட்டிருந்த உருக்குலைந்து போன ஒரு தொப்பியையும் பழைய சப்பாத்துகளையும் அணிந்துகொண்டாள். கிளம்பும் முன் மூன்று அறைகளையும் அடுக்களையையும் இறுதியாக ஒருமுறை சோதித்துக்கொண்டாள். எங்கும் துணிகளும், சப்பாத்துகளும், பெஸ்ஸி இதுவரை திறந்து படித்தேயிராத கடிதக் குவியல்களும் இருந்தன. அவளது கணவன், சாம் பாப்கின், இருபது வருடங்களுக்கு முன், இறக்கும் முன்பு தன்னுடைய வீட்டுமனை வணிக சொத்துகளை விற்றுப் பணமாக்கிக்கொண்டு ஓய்வுபெற்று ஃபிளோரிடாவிற்குச் செல்லலாம் என்றிருந்தார். அவளுக்குப் பங்குப் பத்திரங்களையும் வங்கிச் சேமிப்புப் புத்தகங்களின் பதிவுப் புத்தகங்களையும் கடன் பத்திரங்களையும் விட்டுச்சென்றிருந்தார். இந்நாள் வரை பெஸ்ஸிக்குக் காசோலைகளையும் அறிக்கைகளையும் அந்த நிறுவனங்கள் அனுப்பிக்கொண்டிருக்கின்றன. சுங்கத்துறை அவளிடம் வரிகளைக் கோரின. சில வாரங்களுக்கு ஒருமுறை ஒரு ஈமச்சடங்குச் சேவை நிறுவனம் நல்ல இடவசதி கொண்ட கல்லறையில் நிலம் விற்பதற்கான அறிவிப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தது. கடந்த வருடங்களில் பெஸ்ஸி அக்கடிதங்களுக்குப் பதிலனுப்பிக்கொண்டும், காசோலைகளை வங்கியில் இருப்பு வைத்துக்கொண்டும், வரவு செலவுகளைக் கணக்கு வைத்துக்கொண்டுமிருந்தாள். பிறகு அவற்றை நிறுத்திவிட்டாள். செய்தித்தாள் வாங்குவதையும் பொருளாதாரச் செய்திகளைப் படிப்பதையும்கூட நிறுத்திவிட்டாள்.

தாழ்வாரத்தில் கதவுக்கும் நிலைக்கும் இடையே பெஸ்ஸி மட்டுமே கண்டறிந்து வைத்திருந்த இடைவெளிகளில் அட்டைகளைச் சொருகி வைத்தாள். சாவித்துளையைக் களிமண் கொண்டு அடைத்துவிட்டாள். வேறு என்னதான் அவளால் செய்ய முடியும் – குழந்தைகள் இல்லாத, உறவினர் இல்லாத, நண்பர்கள் இல்லாத ஒரு விதவையால்? ஒரு காலமிருந்தது, அண்டை வீட்டார் கதவைத் திறந்து வந்து இவள் செய்யும் இந்த மிகையான பண்டுவத்தைக் கண்டு சிரிப்பர், சிலர் கிண்டலும் செய்வார்கள். அது வெகு நாட்களுக்கு முன். பெஸ்ஸி யாருடனும் பேசுவதில்லை. அவளுக்குப் பார்வை சரியாகத் தெரிவதில்லை. பல வருடங்களாக அவள் அணிந்திருந்த மூக்குக்கண்ணாடியாலும் எந்தப் பலனுமில்லை. கண் மருந்துவரிடம் செல்வதும் புதிதொன்றை வாங்கியணிவதும் பெருமுயற்சியைக் கோருவதாக இருந்தது. எல்லாமே கடினமான வேலையாக இருந்தன- படாரென்று அறைந்து சாத்திக்கொள்ளும் மின் தூக்கிக்குள் நுழைவதும், வெளியேறுவதும்கூடக் கடினமாகப்பட்டது.

பெஸ்ஸி என்றுமே தன் வீட்டை ஒட்டிய இரண்டு வீதிகளைத் தாண்டிச் சென்றதில்லை. அகலப் பாதைக்கும் ஆற்றங்கரை பகுதிக்கும் இடையில் இருந்த வீதியில் நாளுக்கு நாள் இரைச்சலும் அழுக்கும் அதிகரித்தபடியிருந்தன. பிள்ளைக்கூட்டங்கள் அரை நிர்வாணமாக ஓடிக்கொண்டிருந்தன. சுருள் கேசமும் அடர்நிறமும் கொண்டிருந்தவர்கள், வயிறு பெருத்து கர்ப்பமுற்றிருந்த சிரிய பெண்களிடத்தில் ஸ்பானிய மொழியில் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மிகுந்த இரைச்சலோடு பதிலளித்துக்கொண்டிருந்தார்கள். நாய்கள் குரைத்துக்கொண்டும், பூனைகள் கத்திக்கொண்டும் இருந்தன. தீப்பிடித்தது, தீயணைப்பு வண்டிகளும், அவசர ஊர்திகளும், காவலர் ஊர்திகளும் ஓடிக்கொண்டேயிருந்தன. பெரிய வீதியில், பழைய பலசரக்குக் கடைகளுக்கு மாற்றாகப் பல்பொருள் அங்காடிகள் வந்துகொண்டிருந்தன. அங்கே பொருட்களை நாமே தேடியெடுத்து, ஒரு வண்டியில் சேகரித்து, காசாளருக்கு முன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டும்.

சொர்க்கத்தில் இருக்கும் கடவுளே, சாம் இறந்ததிலிருந்து, இந்த நியூ யார்க், அமெரிக்கா, ஏன் இந்த மொத்த உலகமே விழுந்துகொண்டிருக்கிறது. எல்லா கண்ணியவான்களும் அண்டை வீடுகளை விட்டுச்சென்றுவிட்டனர், இப்போது அவ்விடங்களைத் திருடர்களும் வேசையரும் நிரப்பியிருக்கின்றனர். மூன்று முறை அவளது குறிப்புப் புத்தகம் களவு போயிருக்கிறது. இதைக் காவலரிடம் புகாரளித்த போது, அவர்கள் சிரித்தனர். ஒவ்வொருமுறையும் ஒருவர் சாலையைக் கடக்க முயலும்போது தன் வாழ்வையே சிரமத்திற்குள்ளாக்குகிறார். பெஸ்ஸி ஒரு அடி எடுத்து வைத்துவிட்டு, நின்றுவிட்டாள். யாரோ ஒருவர் அவளிடம் ஊன்றுகோலை பயன்படுத்தச் சொன்னார்கள், ஆனால் அவள் தன்னை முதியவளாகவோ, நொண்டியாகவோ இன்னும் எண்ணிப் பார்க்கவே இல்லை. சில வாரங்களுக்கு ஒருமுறையேனும் தன் விரலில் சிகப்பு நிறத்தில் நகப்பூச்சு பூசிக்கொள்கிறாள். அவளைவிட்டு வாதநோய் நீங்கியபோது, முன்பு அணிந்திருந்த உடைகளை எடுத்து அணிந்துகொண்டு கண்ணாடி முன் நின்று தன்னையே அளந்தாள்.

பல்பொருள் அங்காடியின் கதவைத் திறப்பது கடினமாக இருந்தது. யாராவது வந்து உதவுவதற்காக அவள் காத்திருக்க வேண்டும். பல்பொருள் அங்காடி என்பதே சாத்தான் கண்டுபிடித்த இடமாகத்தான் இருக்க வேண்டும். கண்கூசும் ஒளியில் விளக்குகள் ஒளிர்ந்தன. அந்த வண்டிகளைத் தள்ளிக்கொண்டு செல்பவர்கள் வழியில் இடைபடுபவர் மேல் மோதிக்கொள்ள வாய்ப்பிருந்தது. அலமாரியில் பொருட்கள் மிக உயரத்தில் இருந்தன அல்லது அடியிலிருந்தன. இரைச்சல் காதைச் செவிடாக்குபடி இருந்தது. வெளியில் இருக்கும் வெப்பத்திற்கும் உள்ளே இருக்கும் உறையச்செய்யும் குளிருக்கும் உள்ள வேறுபாடு! அவளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் இருந்ததே அற்புதம். எல்லாவற்றுக்கும் மேலாக, முடிவெடுக்க முடியாமையால் பெஸ்ஸி தவித்தாள். தன் நடுங்கும் கைகளால் எல்லாப் பொருட்களையும் எடுத்துப் பார்த்து அதன் குறிப்புகளை வாசித்துப் பார்ப்பாள். அது இளமையின் பேரார்வமில்லை, முதுமையின் நிலையில்லாமை. பெஸ்ஸியைப் பொறுத்தவரை அன்றைக்குப் பொருட்களை வாங்குவதற்கு முக்கால் மணிநேரத்திற்கு மேல் செலவிட்டிருக்கக் கூடாது. ஆனால் இரண்டு மணிநேரமாகியும் அவளால் முடிக்க முடியவில்லை. ஒருவழியாகக் காசாளரிடம் வண்டியை நகர்த்திக்கொண்டு வந்தபோது ஓட்ஸ் வாங்க மறந்திருப்பதைக் கண்டாள். அதை எடுக்கச் சென்றபோது அவளிடத்தில் வேறொரு பெண் வந்து நின்றுகொண்டாள். பிறகு அவள் பணம் கொடுத்து முடித்தபோது புது இடரொன்று உருவானது. பெஸ்ஸி விலைச்சீட்டைக் கைப்பையின் வலதுபுறத்தில் வைத்திருந்தாள், இப்போது அது அங்கில்லை. நீண்ட நேரம் தேடிய பிறகு, கைப்பையின் மறுபுறத்தில் சின்னப் பையொன்றுக்குள் அது இருந்தது. ஆம்! இப்படியெல்லாம் தனக்கு நடந்துகொண்டிருக்கிறதென்று யார்தான் நம்புவார்? இதை யாரிடமாவது சொன்னாளென்றால் அவர்கள் இவள் பைத்தியக் காப்பகத்திற்குச் செல்லத் தயாரென்று கருதுவர்.

பெஸ்ஸி பல்பொருள் அங்காடிக்குள் சென்றபோது, பகல் வெளிச்சம் இருந்தது; இப்போது அந்தி சாயத் தொடங்கிவிட்டது. சூரியன், மஞ்சளும் தங்க நிறமுமாக ஹட்சன் நதிக்குள், நியூ ஜெர்சியின் பனிமூட்டமான மலைகளுக்குள் அடங்கத் தொடங்கியது. பெரிய வீதியின் கட்டிடங்கள் உறிஞ்சியிருந்த வெப்பத்தையெல்லாம் வெளிவிட்டன. சுரங்கப்பாதை இருப்பூர்திகள் சென்றுகொண்டிருந்த இடத்திற்கு மேல் துர்நாற்றம் வீசும் புகையெழத் தொடங்கியது. பெஸ்ஸி ஒரு கையில் பொருட்களைப் பிடித்துக்கொண்டு மறுகையில் குறிப்புப் புத்தகத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். பெரியவீதி என்றுமே அவளுக்கு இந்த அளவிற்கு மாசுபட்டும் மூர்க்கமாகவும் தோன்றியதேயில்லை. உருகிய தார் வாசனையாலும் எரிவாயுவாலும் அழுகிய பழங்களாலும் நாய்க் கழிவுகளாலும் வீதி நாற்றமெடுத்தது. சாலையோரப் பாதையில் கிழிந்த செய்தித்தாள்களுக்கும் புகைச்சுருட்டின் பஞ்சுகளுக்கும் மத்தியில் புறாக்கள் தத்திக்கொண்டிருந்தன. இந்த உயிரினங்கள் பாதசாரிகளால் மிதிக்கப்படாமல் எப்படித் தப்பிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவே சிரமமாக இருந்தது. தகிக்கும் வானிலிருந்து பொன்னிற குப்பைக் காற்று பெய்தது. செயற்கைப் புல் வளர்ந்திருந்த ஒரு கடையின் வாசலில், வியர்த்துப்போன சட்டை அணிந்திருந்த மக்கள், பப்பாளி ரசத்தையும் அன்னாசி ரசத்தையும் அவசர அவசரமாக அருந்திக்கொண்டிருந்தனர், எதோ தங்களுக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்துவிட முயல்வதைப் போல. அவர்கள் தலைகளுக்கு மேல், இந்தியர்களைப் போலச் செதுக்கப்பட்டிருந்த தேங்காய்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. குறுக்கு வீதியில், கறுப்பின, வெள்ளையினக் குழந்தைகள் ஒரு தண்ணீர்க் குழாயைத் திறந்துவிட்டு நீர் தெறிக்க சலதாரையோரத்தில் நிர்வாணமாக ஆடிக்கொண்டிருந்தன. இந்த வெப்ப அலைக்கு நடுவே ஒரு லாரி, ஒலிபெருக்கியில் மிகச் சத்தமாகப் பாடல்களை ஒலிக்கவிட்டு, காதைச் செவிடாக்கும்படி ஒரு அரசியல் வேட்பாளரைப் பற்றி அறிவித்துச் சென்றது. கம்பிகளைப் போல நீட்டப்பட்டிருந்த சிகை கொண்டிருந்த ஒரு பெண் லாரியின் பக்கவாட்டில் இருந்து விளம்பரத் தாள்களை வீசிச்சென்றாள்.

எல்லாம் பெஸ்ஸியின் சக்திக்கு அப்பாற்பட்டிருந்தன – வீதியைக் கடப்பது, மின்தூக்கியில் செல்லக் காத்திருப்பது, அதன் கதவு மூடுவதற்கு முன் ஐந்தாம் தளத்தில் இறங்கிவிடுவது. பெஸ்ஸி பொருட்களைக் கீழே வைத்துவிட்டு, சாவியைத் தேடினாள். தன் விரல் நகங்களைக் கொண்டு சாவித் துவாரத்தில் இருந்த களிமண்ணைச் சுரண்டி வெளியெடுத்தாள். சாவியைப் போட்டுத் திருப்பினாள். சாவி உடைந்துவிட்டது. சாவியின் கைப்பிடி மட்டுமே அவள் கையில் தங்கியது. அந்த கட்டிடத்திலிருந்த மற்றவர்கள், மாற்றுச்சாவியைத் தலைமை அதிகாரியின் வீட்டில் கொடுத்து வைத்திருந்தார்கள். இவள் யாரையும் நம்பவில்லை- சில நாட்களுக்கு முன், யாராலும் மாற்றுச்சாவி போட்டுத் திறக்க முடியாதபடிக்குப் புதுப்பூட்டு ஒன்றை வாங்கியிருந்தாள். அதன் மாற்றுச்சாவியை எங்கோ அலமாரியில் வைத்துவிட்டு, இந்தச் சாவியை கொண்டுவந்திருந்தாள். “சரிதான். எல்லாம் முடிந்தது” என்று சத்தமாகக் கத்தினாள்.

அங்கே அவளுக்கு உதவ யாருமில்லை. அண்டை வீட்டார்கள் தீவிரமான பகையாளிகள். தலைமை நிர்வாகி இவள் எப்போது வீழ்வாள் என்று காத்துக்கொண்டிருந்தார். பெஸ்ஸிக்குத் தொண்டை அடைத்துக்கொண்டு அழக்கூட முடியாமற் போனது. தன்னுடைய அழுகைச் சத்தத்திற்குப் பதில் கொடுக்க யாராவது வருவார்களா என்று ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். பெஸ்ஸி வெகு நாட்களுக்கு முன்னரே சாவதற்குத் தயாராகிவிட்டாள். ஆனால் படிக்கட்டுகளிலோ, வீதியிலோ இறப்பதென்பது கடினமானது. இந்தத் துயரம் எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கப்போகிறது என்று யாருக்குத் தெரியும்? அவள் கிடந்து அடித்துகொள்ளத் தொடங்கினாள். சாவியைச் சரிசெய்து தரக்கூடிய கடைகள் ஏதேனும் இந்நேரத்திற்குத் திறந்திருக்குமா? அப்படித் திறந்திருந்தாலும் எந்தச் சாவியைக் கொண்டு கொல்லர் போலி செய்வார்? அவர் தன் கருவிகளை எடுத்துக்கொண்டு இங்கே வரவேண்டும். பிரத்யேகமான பூட்டுகளைச் செய்யக்கூடிய நிறுவனமொன்றின் வல்லுநர் ஒருவரே அதற்குத் தேவைப்படுவார். அதற்கும் அவள் கையில் காசிருக்க வேண்டும். அவள் என்றுமே செலவுக்குத் தேவையானதைத் தவிர வேறு பணத்தைக் கொண்டுசென்றதில்லை. அங்காடியில் காசாளர் அவளுக்கு மிச்சத் தொகையாக இருபது செண்ட்களைக் கொடுத்திருந்தார். “ஓ! அம்மா! இனி நான் வாழ வேண்டியதில்லை” என்று யிட்டிஷ் மொழியில் கூவினாள். தான் பாதி மறந்து போயிருந்த மொழியை மீண்டும் பேசுவது கண்டு தானே அதிசயித்தாள்.

பல தயக்கங்களுக்குப் பிறகு, பெஸ்ஸி மீண்டும் வீதிக்குச் செல்ல முடிவெடுத்தாள். எதாவது ஒரு வன்பொருள் அங்காடியோ, சாவிகளை மாற்றித் தரும் சின்னக் கடைகளோ திறந்திருக்கும். பக்கத்து வீட்டில் அப்படியொரு சாவி நிலை இருப்பதை ஞாபகப்படுத்திக்கொண்டாள். மற்றவர்களுக்கு அல்லவா சாவிகள் உடைய வேண்டும்? கையிலிருக்கும் வீட்டுச் சாமான்களை என்ன செய்வது? கனமான அவற்றை எடுத்துச்செல்வது கடினமானது. அவளுக்கு வேறு வழியில்லை. அவற்றை அங்கேயே வைத்துவிட்டாள். “இதைத் திருடிவிடுவார்கள்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். யாருக்குத் தெரியும்? அண்டை வீட்டாரே வேண்டுமென்று தன் சாவியை உடையும்படி ஏற்பாடு செய்துவிட்டு, அவளை உள்ளே நுழைய முடியாதபடி செய்துவிட்டு, அவள் வீட்டைத் திருடுவதற்குத் திட்டமிட்டிருக்கக்கூடும்.

கீழே கிளம்புவதற்கு முன், ஒருமுறை கதவில் காது வைத்துக் கேட்டாள்.

தீராமல் கேட்டுக்கொண்டேயிருக்கும் முனகல் சத்தத்தையே கேட்டாள். அந்தச் சத்தத்தின் காரணத்தையும் தோற்றத்தையும் அவளால் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. சில சமயம் அது ஒரு கடிகாரத்தைப் போல டிக் டிக்கென்று ஒலித்தது. சில சமயம் முரளும் சத்தமும் அலறும் சத்தமும் கேட்டது- சுவருக்குள், தண்ணீர் குழாய்களுக்குள் சிறைப்பட்டிருந்த இருப்பொன்றின் குரல். பெஸ்ஸி தன் மனதில், இந்நேரம் குளிர்பதனப் பெட்டிக்குள் அடுக்கப்பட்டிருக்க வேண்டிய, வெயிலில் கிடக்கும் உணவுப் பொருட்களைத் துறந்தாள். வெண்ணை உருகிவிடும், பால் கெட்டுவிடும். “இது எனக்குத் தண்டனை. நான் சபிக்கப்பட்டிருக்கிறேன், சபிக்கப்பட்டிருக்கிறேன்” என்று முணுமுணுத்தாள். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மின்தூக்கியை நோக்கிச் சென்றார். பெஸ்ஸி அவரைக் கதவை திறந்து காத்திருக்கும்படி சொன்னாள். அவரே அந்தத் திருடர்களுள் ஒருவர்தான். தன்னை அடைத்து வைத்துக்கொண்டு தாக்க முயலக்கூடும். மின்தூக்கி கீழிறங்கி வந்ததும், அவர் கதவைத் திறந்து அவளுக்காகக் காத்திருந்தார். அவருக்கு நன்றி சொல்ல நினைத்துவிட்டு, அமைதியாக இருந்தாள். எதிரிகளுக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும்? இதெல்லாம் சின்னத் தந்திரங்கள்.

பெஸ்ஸி வீதிக்கு வந்ததும் இருட்டிவிட்டிருந்தது. வடிகால்களில் தண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. வீதி விளக்கொளி அந்தக் கறுப்பு நீரில் எதிரொளித்தது, ஒரு ஏரியில் தெரிவதைப் போல. அங்கே அபாயச் சங்கின் ஒலியை, தீயணைப்பு வண்டிகளின் சத்தத்தைக் கேட்டாள். அவளது சப்பாத்துகள் நனைந்துவிட்டிருந்தன. பெரிய வீதியில் வெக்கை ஒரு தகரத் தகடைப் போல முகத்தில் அடித்தது. அவளுக்குப் பகலில் பார்வை சிரமமாக இருந்தது; இரவில் ஏறக்குறைய குருடாகியிருந்தாள். கடைகளில் விளக்கொளி இருந்தன. ஆனால் அங்கென்ன எழுதப்பட்டிருந்தன என்பதை அவளால் படிக்க முடியவில்லை. வழிப்போக்கர்கள் அவள் மேல் மோதிச்சென்றார்கள். ஊன்றுகோல் கொண்டுவரவில்லையே என்று பெஸ்ஸி வருந்தினாள். எனினும் அவள் சன்னலோரத்திலேயே நடந்தாள். ஒரு மருந்தகம், பலகாரக் கடை, சாக்குக் கடை, ஒரு ஈமச்சடங்குப் பொருட்கள் விற்பனையகம் போன்றவற்றைக் கடந்தாள். ஆனால் எங்குமே ஒரு வன்பொருள் கடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பெஸ்ஸி தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள். அவளது வலு குறைந்துகொண்டே இருந்தது, ஆனாலும் அவள் விட்டுக்கொடுக்கக் கூடாதென்று தீர்மானித்தாள். சாவி உடைந்துவிட்டால் ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்? சாகவா வேண்டும்? காவல்துறையில் புகார் கொடுக்கலாம். இதுபோன்ற வழக்குகளைக் கையாள்வதற்கென்று எதேனும் ஒரு துறை இருக்கக்கூடும், ஆனால் அது எங்கிருக்கிறது?

அங்கொரு விபத்து நடந்திருக்க வேண்டும். நடைமேடையில் கூட்டமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். காவலர் வாகனங்களும், அவசர ஊர்திகளும் வீதியை மறித்துக்கொண்டிருந்தன. குழாயில் நீரைப் பாய்ச்சி ரத்தத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்ப்பவர்களுள் ஒருவனின் கண்களில் விசித்திரமான திருப்தி மிளிர்வதைக் கண்டதாகப் பெஸ்ஸிக்குத் தோன்றியது. அவர்கள் மனிதர்களின் துரதிருஷ்டங்களைக் கண்டு பூரிக்கிறார்கள் என்று நினைத்தாள். இந்தப் பாவப்பட்ட நகரத்தில் அவர்கள் மகிழ்வதற்கு அவை மட்டுமே இருந்தன. உதவும் யாரையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவள் தேவாலயத்திற்கு வந்துசேர்ந்தாள். சில படிகள் மேலேறி வந்து, பூட்டிய கதவை அடைந்து, சிறிய தாழ்வாரத்துக்கடியில், இருண்ட நிழலுக்கடியில் வந்து நின்றாள். பெஸ்ஸியால் உட்கார முடியவில்லை. முட்டுகள் நடுங்கின. சப்பாத்துகள் கால்நுனியையும் குதிகால்களையும் அழுத்தத் தொடங்கின. கச்சு உடைக்குள் ஓர் எலும்பு நெறிந்து சதையைக் குத்தியது. “சரிதான், எல்லாத் தீயவையும் இன்றிரவு என் தலையில் வந்து விடியப் போகின்றன.” பசியும் குமட்டலும் அவளை வருத்தியது. வாயில் அமிலச்சுவை ஏறி வந்தது. “பரலோகத்திலிருக்கும் பிதாவே, இதுதான் என் முடிவு”. அவள் யிட்டிஷ் பழமொழியை நினைத்துக்கொண்டாள். “கணக்கு போட்டு வாழ்க்கையை வாழாதவரே இறக்கும்போது குற்ற உணர்ச்சியின்றி இறக்கிறார்.” அவள் தன் மரண சாசனத்தை எழுத மறுத்துவிட்டாள்.

பெஸ்ஸி தூங்கியிருக்கக்கூடும், ஏனென்றால் விழித்துப் பார்த்தபோது பின்னிரவின் அமைதியையும் இருண்டு பாதி வெறுமையாகியிருந்த வீதியையும் கண்டாள். கடைகளின் சன்னல்களில் இருந்த விளக்கொளிகள் அணைக்கப்பட்டிருந்தன. வெக்கை மறைந்து ஆடைகளுக்குள் குளிரை உணர்ந்தாள். ஒருகணம் தன் குறிப்புப் புத்தகம் திருடு போய்விட்டதென்று நினைத்தாள். ஆனால் கீழே படிக்கட்டில் கிடந்தது, கை நழுவி விழுந்திருக்கக்கூடும். பெஸ்ஸீ கை நீட்டி அதனை எடுக்க முற்பட்டாள், கைகள் மரத்திருந்தன. சுவரில் சாய்த்து வைத்திருந்த தலை கல்லைப் போலக் கனத்தது. கால்கள் விறகைப் போலிருந்தன. காதுகளில் நீர் கோர்த்துக்கொண்டதைப் போலிருந்தது. வானத்தில் ஒரு கூரைக்கு மேலே ஒரு பச்சைநிற விண்மீன் ஆடிக்கொண்டிருந்ததைக் கண்டாள். பெஸ்ஸி ஒருகணம் செயலற்றிருந்தாள். வானும் நிலவும் விண்மீன்களும் இருக்கின்றன என்பதையே ஏறக்குறைய மறந்திருந்தாள். அவள் மேலே பார்ப்பதைக் கைவிட்டு, கீழே பார்க்கத் தொடங்கி பல ஆண்டுகளாகியிருந்தன. தெருவில் சென்றுகொண்டிருக்கும் உளவாளிகள் இவளை வேவு பார்க்கக்கூடாதென்று சன்னல்களில் திரைச்சீலைகளையும் தொங்கவிட்டிருந்தாள்.

வானம் என்றொன்று இருந்தால் அதில் கடவுள், தேவதை, சொர்க்கம் போன்றவை இருக்க வேண்டும். தன் பெற்றோரின் ஆத்மா வேறெங்கு இருக்க முடியும்? சாம் எங்கு இருக்க முடியும்? பெஸ்ஸி தன் எல்லாக் கடமைகளையும் துறந்துவிட்டாள். சாமின் கல்லறைக்குச் செல்வதே இல்லை. அவரது நினைவுநாளில்கூட கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பதில்லை. தன் பலவீனங்களோடு போராடுவதிலேயே மூழ்கிவிட்டதால், தன் நல்லியல்பில் நேரம் செலுத்த மறந்தே போனாள். பல வருடங்கள் கழித்து, முதல்முறையாக, பெஸ்ஸி ஒரு பிரார்த்தனை பாடலைப் பாட நினைத்தாள். அவளுக்குத் தகுதியில்லை என்றாலும் எல்லாம் வல்லவர் அவள் மேல் கருணை கொண்டிருப்பார். மேலிருந்து தந்தையும் தாயும் தனக்காகப் பரிந்துரைப்பர். சில ஹீப்ரு வார்த்தைகள் அவள் நா நுனியில் எழுந்தன. ஆனால் அவளால் நினைவுபடுத்த முடியவில்லை. பிறகு அவள் நினைவுகூர்ந்தாள். “கேளுங்கள், ஓ இஸ்ரேலவரே!” அதைத் தொடர்ந்து என்ன வரும்? “கடவுளே, மன்னிப்பீராக.” பெஸ்ஸி சொன்னாள், “எனக்கு நேரத்தக்க எல்லாவற்றுக்கும் நான் தகுதியானவள்தான்.”

முன்னரைக் காட்டிலும் அமைதியும் குளிரும் அதிகரித்தன. போக்குவரத்து விளக்குகள் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறின. ஆனாலும் அரிதாகவே வாகனங்கள் கடந்தன. எங்கிருந்தோ ஒரு கறுப்பினன் தோன்றினான். அவன் தள்ளாடினான். பெஸ்ஸிக்குத் தொலைவில் இல்லாத தூரத்தில் நின்று பார்வையை அவள் பக்கம் திருப்பினான். அப்படியே கடந்து சென்றான். தன் பையில் இருப்பவை எல்லாம் முக்கியமான ஆவணங்கள் என்று பெஸ்ஸிக்குத் தெரிந்தபோதும், முதல்முறையாக அவள் தன் உடைமைகளைப் பற்றி கவலைப்படவில்லை. சாம் அவளுக்கு விட்டுச்சென்றிருந்த அதிர்ஷ்டம் எல்லாம் இப்போது சூனியமானது. ஏதோ இன்னும் இளமையாய் இருப்பதாகப் பாவித்துக்கொண்டு தன் முதுமை காலத்திற்காக அவற்றைத் தொடர்ந்து சேமித்தபடியே இருந்தாள். “எனக்கு எத்தனை வயதாகிறது?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். “இத்தனை வருடங்களில் அப்படி என்ன சாதித்தேன்? ஏன் நான் எங்குமே செல்லவில்லை? என் சொத்தை அனுபவிக்கவில்லை. ஏன் யாருக்கும் உதவவில்லை?” அவளுக்குள்ளே எதோ ஒன்று புன்னகைத்தது. “நான் பீடிக்கப்பட்டிருக்கிறேன். நான் நானாகவே இருக்கவில்லை. வேறெப்படி இதை விளக்க முடியும்?” பெஸ்ஸி ஆச்சரியப்பட்டாள். நீள் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டதைப் போல் உணர்ந்தாள். சாம் இறந்தபோது அவள் தன் மனதில் சாத்திக்கொண்ட கதவொன்றை உடைந்துபோன சாவி திறந்து வைத்தது.

நிலவு நகர்ந்து கூரையின் மறுபுறம் சென்றுவிட்டது. வழமை போலல்லாது பெரிதாகச் சிவந்திருந்தது. அதன் முகம் மங்கலாகத் தெரிந்தது. மிகவும் குளிர்ந்திருந்தது. பெஸ்ஸி நடுங்கினாள். தனக்கு இப்போது எளிதாக நிமோனியா காய்ச்சல் வருமென்று அவள் உணர்ந்தாள் என்றாலும் வீடில்லாமற் போனதால் ஏற்பட்ட பயம் தெளிந்ததைப் போலவே மரண பயமும் போய்விட்டிருந்தது. புதுக்காற்று ஹட்சனில் இருந்து கிளம்பி வந்தது. வானில் புது விண்மீன்கள் தோன்றின. தெருவின் மறுமுனையிலிருந்து ஒரு கரும்பூனை அணுகி வந்தது. நடைமேடை முனையில் ஒரு கணம் தயங்கி நின்று தன் பச்சைக் கண்களால் அவளை நேராகப் பார்த்தது. மெதுவாக கவனத்தோடு அவளை அணுகியது. பல வருடங்களாகப் பெஸ்ஸி விலங்குகளை வெறுத்திருந்தாள்- நாய்கள், பூனைகள், புறாக்கள், ஏன் குருவிகளைக்கூட! அவை நோய்மையைச் சுமந்திருந்தன. அவை எல்லாவற்றையும் அழுக்காக்கிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு பூனைக்குள்ளும் ஒரு சாத்தான் இருப்பதாக எண்ணம் கொண்டிருந்தாள். அதிலும் குறிப்பாக, தீமையின் சகுனமாக இருந்த கரும்பூனைகளைச் சந்திக்க அவள் அஞ்சினாள். ஆனால் இப்போது இந்த வீடில்லாத, உடைமைகளில்லாத, கதவும் சாவியுமில்லாத, கடவுளின் ஆட்சியில் வாழுமிந்த உயிரின் மீது பரிவுண்டாகியது. அவளை நெருங்கும் முன் பெஸ்ஸியின் கைப்பையை முகர்ந்து பார்த்தது. சத்தமிட்டுக்கொண்டே வாலைச் சுழற்றியபடி தன் முதுகை அவளது கால்களில் உரசத் தொடங்கியது. பாவப்பட்ட உயிர் பசித்திருக்கிறது. என்னால் முடிந்தால் அதற்கு ஏதேனும் உணவிட்டிருப்பேன். இப்படிப்பட்ட ஒரு உயிரை ஒருவர் எப்படி வெறுக்கக்கூடும்? பெஸ்ஸி ஆச்சரியப்பட்டாள். “என் தாயே! நான் பேயால் பீடிக்கப்பட்டிருந்தேன், பீடிக்கப்பட்டிருந்தேன். இனி ஒரு புது வாழ்வைத் தொடங்க வேண்டும்.” குற்ற உணர்வைத் தூண்டும் ஓர் எண்ணமும் மனதில் ஓடியது. ஒருவேளை மறுமணம் புரிந்துகொண்டால்?

அவ்விரவு மேலும் சுவாரஸ்யமில்லாமல் கடக்கவில்லை. ஒருமுறை பெஸ்ஸி காற்றில் ஒரு வெள்ளைப் பட்டாம்பூச்சியைக் கண்டாள். நிறுத்தப்பட்டிருந்த ஒரு மகிழுந்தின் மீது பறந்துகொண்டிருந்து பிறகு அப்பால் விலகிப் பறந்தது. பெஸ்ஸிக்குத் தெரியும், அது புதிதாய் பூமிக்கு வந்த ஒரு குழந்தையின் ஆத்மா என்று. ஏனென்றால் உண்மையான பட்டாம்பூச்சிகள் இருள் எழுந்ததும் பறப்பதில்லை. மற்றொரு முறை அவள் விழித்துக்கொண்ட போது ஒரு தீப்பந்தைக் கண்டாள். நீர்க்குமிழியைப் போல ஒரு கூரையிலிருந்து மற்றொன்றை நோக்கி மெல்லப் பறந்து மறைந்துவிட்டிருந்தது. அவள் கண்டது சற்று முன் அடங்கிய ஓர் உயிரின் ஆத்மாவுடையது என்று அறிந்திருந்தாள்.

பெஸ்ஸி தூங்கி விழுந்தாள். விடியற்காலையில் விழித்தெழுந்தாள். மத்தியப் பூங்காவின் பக்கத்திலிருந்து சூரியன் எழுந்தது. பெஸ்ஸியால் இங்கிருந்து அதைப் பார்க்க முடியவில்லை. ஆனால் பெரிய வீதியில் வானம் சிவப்பும் இளஞ்சிவப்புமானது. மறுபுறத்தில் கட்டிடங்களின் சன்னல்களில் சுவாலை போலத் தெரிந்தது; சன்னல் கண்ணாடிகளில் வெளிச்சம் பட்டு அவை கப்பல்களின் சன்னல்களைப் போல ஒளிர்ந்தன. ஒரு புறா அருகில் வந்தமர்ந்தது. தன் சிவந்த சின்னஞ்சிறு அடிகளால் தத்தி வந்து அருகிலிருந்த ரொட்டித் துண்டையோ, காய்ந்த சகதியையோ கிளறியது. பெஸ்ஸி வாயடைத்துப் போனாள். இப்பறவைகள் எங்கு வாழ்கின்றன? இரவில் எங்கு தூங்கும்? மழையையும், குளிரையும், பனியையும் எப்படி தாக்குப் பிடிக்கின்றன? பெஸ்ஸி தீர்மானித்தாள். “நான் என் வீட்டுக்குச் செல்லப் போகிறேன். மக்கள் என்னை வீதியில் விடமட்டார்கள்.”

எழுந்திருப்பது வாதையாக இருந்தது. தான் அமர்ந்திருந்த படிக்கட்டிலேயே தன்னுடல் ஒட்டிக்கொண்டதைப் போல உணர்ந்தாள். குறுக்கு வலித்தது, கால்கள் நடுங்கின. என்றாலும், மெல்ல தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். காலை நேரத்து குளிர்காற்றை சுவாசித்தாள். அது புல்லும் காஃபியுமாக மணத்தது. அவள் இனியும் தனித்தவளாக இருக்க வேண்டியதில்லை. சாலையின் ஓரத்திலிருந்து ஆணும் பெண்ணுமாய் தோன்றிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். கடையில் செய்தித்தாள்களை வாங்கிக்கொண்டு சுரங்கப்பாதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். கடந்த இரவில் தன்னைப் போலவே ஆத்மாவைத் தேடி பயணம் செய்து, பவித்திரமாகி வந்தார்களோ என எண்ணும் அளவுக்கு அவர்களும் அமைதியானவர்களாகவும், விநோதமாக, தெளிவு கொண்டவர்களாகவும் தோன்றினர். இந்நேரத்திற்கே வேலைக்குச் செல்கிறார்கள் என்றால் அவர்கள் எப்போது எழுந்து கிளம்பியிருக்க வேண்டுமோ என்று வியந்தாள். இல்லை, அண்டை வீட்டார் எல்லோருமே ரவுடிகளாகவும் கொலைகாரர்களாகவும் தோன்றவில்லை. ஒரு இளைஞன் அவளுக்குக் காலை வணக்கம் சொன்னான். அவனை நோக்கிப் புன்னகை புரிய விழைந்தாள், இளமையிலிருந்த அந்தப் பெண்மையான அசைவைத் தான் முழுமையாக மறந்துவிட்டதை உணர்ந்தாள். தன் தாய் முதன்முதலில் கற்றுத் தந்ததே அந்தப் புன்னகையாகத்தான் இருக்கக்கூடும்.

தன் வீட்டுக் கட்டிடத்தை அடைந்தாள். வெளியே அந்தப் பரம விரோதி, ஐரிஷ்கார தலைமை நிர்வாகி, நின்றிருந்தான். குப்பை சேகரிப்பவர்களோடு பேசிக்கொண்டிருந்தான். அவன் வலிய உடல் கொண்டிருந்தான். சிறிய மூக்கும், நீளமான மேழுதடும், சுருங்கிய கன்னங்களும், கூர் நாடியும் கொண்டிருந்தான். பெஸ்ஸியைக் குழப்பமாகப் பார்த்தான், “என்னாச்சு பாட்டி?”

திணறியவாறே நடந்ததையெல்லாம் பெஸ்ஸி அவனுக்குச் சொன்னாள். இரவெல்லாம் தன் கையில் வைத்திருந்த உடைந்துபோன சாவியை அவனுக்குக் காட்டினாள்.

“அடக்கடவுளே!” அவன் கத்தினான். 

“நான் என்ன செய்வது?” பெஸ்ஸி கேட்டாள்.

“நான் உங்கள் கதவைத் திறந்து தருகிறேன்.”

“ஆனால் உன்னிடம் மாற்றுச்சாவி இல்லையே?’

“அசம்பாவித நேரத்தில் நாம் எல்லாக் கதவுகளையும் திறக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும்.”

நிர்வாகி தன் வீட்டுக்குள் மறைந்தான். சில கருவிகளையும் நிறைய சாவிகளைக் கொண்டிருந்த பெரிய சாவி வளையத்தையும் எடுத்துக்கொண்டு வந்தான். அவளோடு மின்தூக்கியில் ஏறிச்சென்றான். வீட்டுச் சாமான்கள் வைத்திருந்த பை அப்படியே இருந்தது. ஆனால் குலைக்கப்பட்டிருந்தது. அதிகாரி பூட்டைத் திறப்பதில் மும்முரமானான். “இந்த அட்டைகளெல்லாம் என்ன?” என்று கேட்டான்.

பெஸ்ஸி பதிலளிக்கவில்லை.

“நீங்கள் ஏன் என்னிடம் வந்து நடந்ததையெல்லாம் சொல்லவில்லை? அடக்கடவுளே, இந்த வயதில் இப்படி இரவெல்லாம் அலைந்து திரிந்திருக்கிறீர்களே?” அவன் தன் கருவிகளை ஆய்ந்துகொண்டிருந்த போது, பக்கத்து வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு ஒரு சிறிய பெண் வந்தாள். தளர்வுடையில், காலணியணிந்து, தலையை வெளிர் சாயமிட்டுச் சுருளாக்கி இருந்தாள். அவள் சொன்னாள், “உங்களுக்கு என்னவாயிற்று? நான் ஒவ்வொரு முறை கதவைத் திறக்கும்போதும் இந்தப் பை இங்கேயே இருந்தது. உள்ளிருந்த வெண்ணெயையும் பாலையும் எடுத்து குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டேன்.”

பெஸ்ஸியால் அழுகையை ஓரளவிற்கே கட்டுப்படுத்த முடிந்தது. “என் அன்பான மக்களே, எனக்கு இப்படியாகுமென்று தெரியாது…”

அதிகாரி உடைந்திருந்த சாவியின் மறுபாகத்தை வெளியே எடுத்துவிட்டான். கொஞ்ச நேரம் வேலை செய்தான். ஒரு சாவியைச் செய்து கதவைத் திறந்தான். சொருகியிருந்த அட்டைகள் விழுந்தன. வீட்டுக்குள் நுழைந்த உடன் நெடுநாளாய் உணர்ந்திராத துர்வாடையை உணர்ந்தாள். அதிகாரி சொன்னான், “அடுத்த முறை இப்படி ஏதேனும் நடந்தால் என்னை அழையுங்கள். அதற்குத்தானே நானிங்கு இருக்கிறேன்?”

பெஸ்ஸி அவனுக்குச் சிறிது பணம் கொடுக்க நினைத்தாள். ஆனால் அவள் கைப்பையைத் திறக்கக்கூட வலுவில்லாமல் இருந்தாள். பக்கத்து வீட்டுப் பெண் பாலையும் வெண்ணெயையும் கொண்டுவந்து கொடுத்தாள். பெஸ்ஸி படுக்கையறைக்குச் சென்று அப்படியே படுத்தாள். மார்பில் அழுத்தம் உண்டாகி வாந்தி வரும் போலிருந்தது. காலிலிருந்து மார்பு வரை எதோ ஒன்று கனமாக அதிர்ந்தது. பெஸ்ஸி எந்தப் பயமும் இன்றி உடல் கொண்டிருக்கும் பிரமைகளைக் கவனித்தாள். பக்கத்து வீட்டுக்காரியும் அதிகாரியும் என்னவோ சொன்னார்கள், அவளுக்குப் புரியவில்லை. இதே உணர்வு அவளுக்கு முப்பது வருடங்களுக்கு முன் நேர்ந்திருக்கிறது. மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருக்கும் போது இதை உணர்ந்திருக்கிறாள். மருத்துவரும் செவிலியும் பேசிக்கொண்டிருந்தது வெகு தொலைவிலிருந்து கேட்டது போலவும் விநோதமான மொழியில் பேசியது போலவும் ஒலித்தது.

சீக்கிரம் அமைதி நிலவியது. அப்போது சாம் தோன்றினார். அது பகலுமில்லை, இரவுமில்லை, ஒரு விநோதமான அந்தியாக இருந்தது. அவளது கனவில், பெஸ்ஸிக்குத் தெரியும் அவர் இறந்துவிட்டாரென்று, ஆனாலும் ஒரு ரகசியமான வழியில் கல்லறையிலிருந்து எழுந்துவந்து அவளைச் சந்திக்க வந்துவிட்டார். அவர் மெலிந்தும் கூச்சப்படுபவராகவும் இருந்தார். அவரால் பேச முடியவில்லை. அவர்கள் வானில்லாத, பூமியில்லாத வெளியில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். கழிவுகள் நிரம்பிய ஒரு சுரங்கத்தைக் கடக்கிறார்கள், சிதலமடைந்த ஒரு பெயரில்லாத உருவத்தைக் கடக்கிறார்கள், பிறகு இருண்ட நடைபாதை ஒன்றைக் கடந்தார்கள். கொஞ்சம் பரிச்சயமான இடம் போலத் தெரிந்தது. இரு மலைகள் சந்திக்கும் இடத்திற்கு, உதயத்தைப் போல, அஸ்தமனத்தைப் போல ஒளிர்ந்த இடைவெளிக்கு வந்தார்கள். அவர்கள் கூச்சமாகவும் கொஞ்சம் அவமானமாகவும் உணர்ந்தார்கள். தங்களது தேனிலவு இரவில் கேட்ஸ்கில்லில் இருந்த எல்லன்வில்லில் இருந்ததைப் போல உணர்ந்தார்கள். விடுதி உரிமையாளன் அவர்களைப் பிரத்யேக அறைக்கு அழைத்துச் சென்றதைப் போல இருந்தது. அப்போது அவளுக்கு அவனால் சொல்லப்பட்ட அதே சொற்கள், அதே குரலில், அதே தொனியில் கேட்டது.

“உங்களுக்கு இங்கே எந்தச் சாவியும் தேவைப்படாது. சும்மா உள்ளே நுழையுங்கள். வாழ்த்துகள்”.

*

ஆங்கில மூலம்: The Key by Isaac Bashevis Singer, Isaac Bashevis Singer: Collected Stories Vol. 1-3, Published by Library of America, July 2004 Edition.