பேபியம்மாவின் பதம்

by எம்.கே.மணி
0 comment

வித்யா டார்ச்லைட் எங்கே இருக்கிறது என்று பார்க்கச் சொன்னபோது பிரேமுக்கு ஆத்திரமாக வந்தது. அவள் உடை மாற்றிக்கொண்டிருந்தாள். விவஸ்தை கெட்ட கரண்ட் போயிற்று. இன்னும் பீரோவிற்குள் துழாவி எதையாவது எடுக்க வேண்டியிருக்கும். அவள் சொன்னது கேட்காதது போல அவன் வேறு சில வேலைகளைப் பார்த்தான். நாசூக்காக நேரமில்லை என்று அறிவுறுத்தினான். அவள் அவனுடைய பரபரப்பைத் தவறாக எடுத்துக்கொள்கிற மனநிலையில் இல்லை. விழா நாயகன் ஆயிற்றே? பிராவிற்குள் திணிக்கப்படுகிற அவளுடைய முலைகள் வியர்வை நசநசப்புடன் எவ்வளவு சரிந்திருக்கின்றன என்பதை மனம் கணக்குப் போட்டிருந்தாலும் அவனது முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாது. அவன் பொதுவாகச் சிரித்த முகத்துடன் இருக்கிறவன். ஒருகணம் கொஞ்சவது போலக்கூடச் செய்துவிட்டுப் படியிறங்கிக் காருக்குப் போனான். சீக்கிரம் வந்துதொலைய மாட்டாள் என்கிற நினைப்பு வந்ததும் பல்லைக் கடித்துக்கொண்டான்.

சானல்காரர்கள் இந்த முறை விழாவை விஸ்தாரம் பண்ணி இருந்தார்கள். வரவேற்பாளர்கள் பிரேமின் கரம் குலுக்கினார்கள். வித்யாவுக்கு நமஸ்காரங்கள். முன்னேறிச் செல்லத் தடைகள் இல்லாவிட்டாலும் ஜன நெருக்கடி புரிய வருகிறது. கேமிராக்கள் முகம் நெருங்கி விலகின. பிரேம் பொதுவாக எல்லோரையும் பார்ப்பது போலிருப்பது ஒரு தோரணைதான். அவன் யாரையும் அடையாளம் காணவில்லை அல்லது ஊடுருவி அறியவில்லை. தங்களுடைய இருக்கைகளில் அமர்ந்த பின்னர், வந்திருக்கிற சினிமா கோஷ்டிகளை மிகவும் எச்சரிக்கையாகப் பிரேம் அறிய முயன்றான். இருபதாவது முறையாகத் தனது மனைவியிடம் நகைத்து வைத்தான். முன்னம் பல தினங்களில் வாய்ப்புத் தேடி அலையும் கூட்டத்தில் இருந்ததை இன்று யாரேனும் நினைவுபடுத்துவதற்குக் குதித்து வருவார்களோ என்கிற அச்சத்தை விலக்குவது எவ்வாறு? இதையெல்லாம் வெள்ளம் போல அடித்துச் சென்றுவிட வேண்டும்.

‘மக்கள் விரும்பிய படம்’ என்கிற தலைப்பில் அவனுடைய படம் தேர்வாகி இருக்கிறது. ஒரு இயக்குநராக அவன் இவ்வளவு பெரிய மேடையில் பரிசை வாங்கிக்கொள்ளப் போகிறான். உலகத் தமிழ் மக்கள் எத்தனை லட்சம் பேர் இந்த நேரடி ஒலிபரப்பைக் கண்டவாறு அமர்ந்திருப்பார்களோ? கண்டிப்பாக அவனுடைய அத்தை பார்ப்பாள். பார்க்கவே வேண்டும். பார்க்காமல் தவறிவிடுமா என்பதைப் பற்றி அவன் யோசிக்கவே விரும்பவில்லை.

ஊரில் இருந்த சிறுவயது காலத்தில் சென்னை என்பதெல்லாம் பிரம்மாண்ட கனவு. அவனுடைய அப்பா எப்போதும் சென்னையைக் கட்டியாளும் தன்னுடைய சகோதரியைப் பற்றிச் சொல்லியவாறு இருந்து ஒருமுறை கூட்டிக்கொண்டும் கிளம்பிவிட்டார். அப்பாவும் அம்மாவும் பிரேமும் தம்பியுமாக அவள் வீட்டில் கால் வைத்தார்கள். ஓங்கி வளர்ந்திருந்த அந்த வீடு போல இன்னும் பத்து வீடுகள் இருப்பதாகச் சொன்னார்கள். நாற்பது குடித்தனங்கள் இருக்கிற வீட்டுக்கு வெளியே ஒரு நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிற அத்தை பேபியம்மா, ரோட்டில் போகிற ஜிலேபி, மைசூர் பாக்குகளை வாங்கித் தின்னுவாள். பக்கத்தில் குறைந்தது ஆறேழு அடியாட்கள் இருப்பார்கள். சினிமாவில் நடனம் ஆடப்போகிற பெண்கள் அத்தை காலில் விழுந்து எழுந்துவிட்டுப் போவார்கள்.

பல பஞ்சாயத்துகள் அங்கே நடக்கும். ஒரு வருடமாக வாடகை கொடுக்காமல் டிமிக்கி கொடுத்துத் தப்பித்திருந்த ஒரு மொட்டைப் பையனைப் பிடித்துக்கொண்டு வந்தபோது அத்தையே அவனது கொட்டைகளில் காலால் உதைத்ததைப் பிரேம் நடுங்கியவாறு பார்த்திருக்கிறான். வெறும் ஒரு பசு மாட்டுடன் ஆந்திராவில் இருந்து நடந்தேவந்து ஒரு சாமிராஜ்ஜியத்தை நிறுவியவள், தன்னுடைய மகன்களை எல்லாம் அடிமையாகவே நடத்தினாள். யாரோ ஒரு பொம்பளையைச் சேர்த்துக்கொண்ட மூத்த பையன் ஆட்டோ ஓட்டிப் பிழைப்பை நடத்துவதாகக் கேள்விப்பட்டார்கள்.

அத்தை இந்தக் குடும்பத்தை வாய் நிறைய வரவேற்கவும் இல்லை, அதே நேரம் மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொள்ளவும் இல்லை. எல்லோருக்கும் நன்றாகச் சோறு போடச் சொன்னாள் என்பது உறுதி. அந்த மாதிரி மூச்சுமுட்டச் சாப்பிட்டு, வடபழனி முருகன் கோவில், பார்க், பீச் எல்லாம் சுற்றியடித்துப் பத்துப் பதினைந்து நாள்கள் போயிற்று. அத்தை ஓரிரு முறை பிரேமையும் அவனுடைய தம்பியையும் தோளைத் தட்டிக்கொடுத்தது பெரிய விஷயமாக இருந்தது. ஊருக்குக் கிளம்புவதாக முடிவெடுத்த ஒருநாள் இரவு பிரேமும் தம்பியும் ஒரு டார்ச்லைட்டை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். கிளம்புகிற அன்று, பிரேம் அந்த டார்ச்சைத் தூக்கிப் பையில் வைத்துக்கொண்டுவிட்டான், யாரும் பார்க்காமல்.

ஊருக்குப் போனபோது பிரேமின் அப்பாவுக்கு அதுவொரு சாதாரண விளையாட்டு போலத்தான் பட்டது.

ஆனால், சென்னையில் இருந்து ஒரு ஆள் வந்தான். அந்த டார்ச்சை வந்து வாங்கிக்கொண்டு போனான். இது வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்டிருந்தால் பேபியம்மா கொடுத்திருப்பார்கள் என்றும் திருடிக்கொண்டு வந்தது சரியில்லை என்றும் சொல்லிவிட்டுப் போனான். வயிற்றுக்கே சோறில்லை என்றாலும் குழந்தைகளுக்குத் திருட்டைப் பழக்கக்கூடாது என்று அவன் சொல்லிவிட்டுப் போனது அப்பாவுக்குப் பொறுக்கவில்லை. வாய்விட்டே அழுதுவிட்டார். அதற்கு அப்புறம் அவர் தனது சகோதரி பற்றி எங்கும் வாயைத் திறந்ததில்லை. 

ஆனால் அம்மா பொருமிக் கேட்டிருக்கிறான்.

“பசு மாட்டைக் கூட்டிக்கிட்டு இங்க இருந்து எவனோ ஒரு ஜாதி கெட்டவன்கூட மெட்றாசுக்கு கெளம்பிப் போனாளே, அது வரைக்கும் இங்க என்ன செஞ்சுட்டு இருந்தா? அதைப் பேசறாங்களா யாராச்சும்? அந்த ஆத்தங்கரைல, முள்ளு மேட்டுல, சவுக்குத் தோப்பில வெச்சு எல்லாம் அவ காச்சாத சாராயமா? அவ பண்ணாத தேவடியாத்தனமா? அந்த ஊருக்கு போயி மட்டும் அவ வேற எப்பிடி சம்பாதிச்சா? வேற எப்படி பத்து வீடு, தோட்டம் தொறவு எல்லாம் வந்து இருக்கும்? அத எல்லாம் மறந்துடலாம், மன்னிச்சுரலாம்னு உங்கப்பாக்கு ஒரு நெனப்பு. சாராயம் காச்சுன நாயிக்கு மனுஷாள தெரியுமா? அவங்க மனசைத்தான் தெரியுமா?“

பிரேம் தன்னுடைய அப்பா, அம்மா, தம்பியைப் போல இருக்க விரும்பவில்லை. பொதுவாக அந்த ஜென்மங்களைப் பார்ப்பதையேகூட நிறுத்தினான் என்று சொல்லலாம். நலிவுடன் சுற்றி வந்தபோதே அவன் இந்த மாதிரி ஒரு மேடையில் வெளிச்சத்தில் நிற்கக் கற்பனை செய்து ரத்தத்தின் சூட்டைச் சமநிலை செய்தான். சினிமாவுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? கிட்டின கயிறுகளை எல்லாம் பிடித்து ஏறினான். ஒன்றுமே தெரியாமல் எல்லாம் தெரிந்தது போலவே காட்டிக்கொள்ளக்கூடிய துறையில் அவன் பம்மினது, பதுங்கினது, பாய்ந்தது என்று யாரும் எதையும் கவனித்திருக்க மாட்டார்கள். யாரிடம் எதை வாங்கினால் அதைத் தன்னுடையது போலவே காட்டிக்கொள்ள முடியும் என்கிற ரீதியில் ஒரு மேஸ்திரியாகத் தன்னை நிறுவிக்கொள்ள பெரும் உழைப்பு தேவைப்பட்டது. முக்கியமாக, மனத்திடம்.

எந்தப் பிரமுகரிடமும் அவனால் முதுகு வளைத்து, நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு நிற்க முடியும். யாரிடமும் இலக்கின்றிச் சொற்களால் வானவில்லை வளைப்பான். அதற்கு ஒரு பலன் பின்னால் இருக்கும். அவன் வெற்றிகளை ஓடி ஓடித் தொட்டுக் களிப்பு எய்தினான். அனைத்துத் தந்திரங்களையும் பிரயோகித்து அவன் அடைந்த வித்யா, அவன் இருந்த அடுக்கில் இருந்து எடுத்து அதற்கு மேலாக இருந்த ஒரு அடுக்கில் வைத்தாள். என்ன கோபம் வந்தாலும் புன்னகை செய்யக் கற்றுக்கொண்டது இப்போதெல்லாம் பலன் தருகிறது. அவனுடைய நோக்கில் இன்னும் பல அடுக்குகளுக்குத் தாவ வேண்டியிருக்கிறது. பொறுமை முக்கியம். எனினும் அவன் இன்றே இப்போதே பேபியம்மாவைப் பார்க்க விரும்புகிறான். இரவெல்லாம் தூக்கம் வரவில்லை.

தன்னுடைய வெற்றிகளை ஒரு கிழவியால் புரிந்துகொள்ள முடியுமா?

அதைவிட, அவள் புரிந்துகொள்ளத்தான் வேண்டுமா?

இந்த மாதிரியான சந்தேகங்கள் தோன்றாமல் இல்லை.

ஆனால் அவள் வீட்டுக்குச் சென்றுசேர்ந்து, இப்போதும் மிச்சமாக இருக்கிற கெத்தைப் பார்த்ததும் வைராக்கியம் தோன்றியது. அப்பா வாய்விட்டு அழுதது மனத்தில் வந்தது. மிகவும் நைச்சியமாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

கொஞ்சம் யோசித்து, “அடடே! பிரசாத்து புள்ளையா? டார்ச்சு திருடிட்டுப் போனவன்தானே நீயி?“

குடும்பத்தாரை அழைத்துச் சோறு போடச் சொன்னாள்.

அதுவொரு கூட்டம். யார் உறவு, யாருக்கெல்லாம் யார் யார் உறவு, இதெல்லாம் காதில் விழுந்தால்தானே? முகத்தில் இருக்க வேண்டிய சிரிப்பை மறக்காமல், எல்லோருடனும் இணங்கி இருந்து சாப்பாட்டை விழுங்கி வைத்தான். அத்தை சாப்பிட வரவில்லை. இவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கிற இடத்தில் அமர்ந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பிராந்தி குடித்துக்கொண்டிருந்தாள். தெருவில் வாங்கின சோன் பப்படியை அவ்வப்போது வாயில் கொட்டிக்கொண்டாள். அவள் கேட்கிற அளவில், பிரேம் நேற்றைய விழாவைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். நிகழ்ச்சிகளைப் பார்க்கவில்லையா என்று கேட்டுக்கொண்டான். அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் பிரேமை அவ்வளவாகக் கவனித்திருக்கவில்லை என்பது நெஞ்சுக்குள் குறுகுறுவென்றது. பேபியம்மா சுத்தம். நேற்று ஏதோ கட்சி ஆள்களுடன் பார்ட்டி பண்ணி, போதை தாங்காமல் படுத்துவிட்டிருக்கிறாள்.

பிரேம் தன் முயற்சியைக் கைவிடவில்லை. எல்லோரும் போன பிறகுகூடத் தான் சிகரம் தொட்ட மேட்டர்களை அடுக்கினான். கொஞ்ச நேரம் இரண்டு பக்கமும் பேச்சு இல்லை. கிழவி தன்னை அவதானித்துக்கொண்டிருப்பதாகப் பட்டது. நிமிர்ந்தாள். பிரேம் ஆவலுடன் பார்க்க, “இப்ப என்ன? நீ ரொம்ப பெரிய ஆளுன்னு சொல்ல வர்றே, அதான?“

பிரேம் காத்திருந்தான்.

“அடுப்புல சரக்கு கொதிச்சுக்கிட்டு இருக்கும். ஊறல ஏறக்கி வைக்கறதுக்கு ஒரு பதம் இருக்கு. நீ பெரிய ஆளா இருந்தா, அந்தப் பதம் என்னன்னு சொல்லு!“

என்னவென்று தெரியவில்லை. அடித்துப்போட்டது போலத் தூக்கம் வந்தது. மறுநாள் காலை விடியலில் கிளம்பிவிட்டான்.

வாசலில் அத்தை இருந்தாள். யாரோ ஒரு பெண் அவளுக்கு முன்னே அமர்ந்து கோலம் போடுவதற்குப் பழகிக்கொண்டிருந்தது.

இவனைப் பார்த்ததும் அவள் தன்னுடைய மகனை அழைத்தாள். “நம்மகிட்ட காசு வாங்குவானே அந்த எத்திராஜூ?“

“சொல்லும்மா.“

“அவன்கிட்ட இவனைக் கூட்டிட்டுப் போ. படம் எடுத்துத் தருவான்னு சொல்லு. என் புள்ளைன்னு சொல்லு. தம்பி, நீ வாங்குன கப்ப எல்லாம் அவன்கிட்ட கொண்டுபோயிக் காட்டு!“

பிரேம், பேபியம்மா மகனுடன் காரில் போகும்போது, நானும் ஒரு வகையில் அவர்களுடைய மகன்தானே என்று நினைத்துக்கொண்டான்.