போருழல் காதை

0 comment

முற்றிய இருள் கரையும் அதிகாலை வேளை. பற்றியெரியப் பஞ்சியுறும் அடுப்போடு போராடி கிளியம்மா தேனீர் வைத்துக் கொண்டிருக்க, கிணற்றடியில் நாகமணி மேல் கழுவிக்கொண்டிருந்தார். பூனையொன்று உடல் குறுக்கி அருகே படுத்திருந்தது. வழக்கத்துக்கு மாறாய் கதிர் நித்திரை கலைந்து எழுந்து வந்து அடுப்பங்கரையில் குந்தி நெருப்பையே பார்த்துக் கொண்டிருந்தான். பூனையும் பார்த்துக் கொண்டிருந்தது. நெருப்பின் செம்மஞ்சள் ஒளி அவன் நெஞ்சில் பட்டு தென்னோலைக் கீலங்களாய் என்புகள் துருத்தித் தெரிந்தன.

“போ ராசா,  போய்ப்படு. இப்ப எதுக்கு எழும்பினாய்?” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் கிளியம்மா. புகையில் தென்னம்பாளையின் வாசனை.

“தயாளினி அக்காவக் கனவு கண்டனான். அவ சாகேல்ல தான் என்று சொன்னவா.” தூக்கக்கலக்கம் மாறாத பேரனைக் கட்டியணைத்துக் கொண்டாள் கிளியம்மா.

ராசு, நாகமணியோடு சந்தைக்குப் போக தேங்காய்ச் சாக்கைக் கட்டிக்கொண்டிருந்தார். ராசு பெஞ்சாதி குடத்தில் தண்ணி கொண்டு வந்து வைத்துவிட்டு, சந்தைக்குப் போகிறவருக்குப் புட்டும் அவித்து சம்பலும் இடித்து விட்டிருந்தாள். மோகன் இப்பொழுதுதான் எழும்புகிறார். அடுப்பில் ஒரு கரித்துண்டை எடுத்து வாயில் போட்டபடி பல்லுத்துலக்க வெளியே வந்தார். மதிக்குமார் டொக்டர் வீட்டில் இன்னும் யாரும் எழும்பவில்லை. சுவாமிப் பிள்ளை பக்கத்துக் காணியில் மூன்று தென்னைகளில் இறக்கிய கள்ளுமுட்டிகளோடு வருகிறார். அதை வைத்துவிட்டு கணேசபுரத்தில் கிடைத்த நாலு தென்னைகளில் கள்ளு இறக்க வேண்டும். சுவாமிப்பிள்ளையின் மகள் அந்தக் குடிசையை மெழுகிக் கொண்டிருந்தாள். அவள் சரியாக மெழுகவில்லை, சாணத்தில் நீர் அதிகமென்று தாய் சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் இப்போதுதான் நிலம் வெளிக்கிறது.

காணியின் முன்பாதையில், ஒரு கையில்லாத போராளிப் பெண் வந்தபோது அவள் இங்குதான் வருகிறாள் என்று தெரிந்தது. ஆண்கள் கூடிவிட்டனர். ராசு பெஞ்சாதியும் ஓடிவந்தாள். ஆதி பற்றி ஏதும் செய்தியோ என புத்தி அவசரத்தில் அஞ்சியது. மரணச் செய்திக்குக் காத்திருக்கும் இடுகாட்டு மனம். மனம் ஒன்றை அஞ்சுவதன் மறுபொருள் அது அதனை எதிர்பார்க்கிறது என்பதுதான். போர்நிலத்துத் தாய்களுக்கு ஓர் இடுகாட்டு மனமே துர்வரமாய் வாய்க்கிறது. நல்வேளையாக செண்பகாவின் தாய் அடுப்பில் வேலையாக இருந்ததால் கவனிக்கவில்லை. இல்லாவிட்டால் நிச்சயமாய் நெஞ்சுபதறி இருப்பாள்.

“ஐயா” கூப்பிட்டபடி ஒரு கையில் சைக்கிளை பிடித்துக் கொண்டு உள்ளே வருகிறாள்.

“என்ன பிள்ளை?” நாகமணிதான் கேட்டார். அவளது தயக்கமான குரல் ஏதும் கெட்ட செய்தியோ என்ற அச்சத்தை அவருக்கும்  தரத்தான் செய்தது.

“இரத்தம் குடுக்க யாராச்சும் வருவியளோ? குடுக்கிறது எண்டால் வட்டச் செயலகத்துக்கு வாங்கோ…”

மோகன் மகளை நினைத்து அதுவரை பதறிய மனத்தை, அவள் சொல் கேட்டதும் சமநிலைக்குக் கொண்டுவந்தார். சமநிலை அடைந்துவிட்டதென்று நம்பிய பிறகுதான் அதிகம் துடிக்கிறது நெஞ்சு. என்ன மாயமோ? நெஞ்சு முட்ட வாயில் இருந்த எச்சிலை வெளியே துப்பினார். கரிய குதப்பலாக ஈர மண்ணில் விழுந்தது.

“என்னவாம்..?” கூனல் முதுகோடு சுவாமிப்பிள்ளையின் அத்தான் ‘எப்டி’ வந்தார்.

“இரத்தம் குடுக்க விரும்பினால் வரட்டாம்.” சுவாமிப்பிள்ளை திரும்பி மெதுவாகச் சொன்னார்.

“ஏனாம்? வறுத்து சாப்பிடப் போறாங்களாமோ, எப்டி?”

அவர் சொன்ன சாங்கத்தில் மோகன் குமுட்டி சிரிக்க, சுவாமிப் பிள்ளையும் சிரிக்க, ராசுவும் சிரித்துவிட்டார். அந்தப் போராளிப் பெண்ணுக்கு அது காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை விழுந்தும் அவள் காட்டிக்கொள்ளாமல் இருக்கக்கூடும். அவள் முகம் நிச்சயமாக சுருங்கித் தொங்கிவிட்டது. அது இவர்களின் கமுக்கமான சிரிப்பால் நிகழ்ந்ததா, சொன்னதைக் கேட்டதால் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. அவள் சைக்கிளைத் திருப்பினாள். சகோதரனிடம் கடன் கேட்டு மறுக்கப்பட்ட பெண்ணின்  நிர்க்கதி மனம்போல அவள் அடுத்த காணிக்கு சைக்கிளை உருட்டியபடி போகிறாள். அவளின் இல்லாத ஒற்றைக்கையில் ‘சேர்ட்’ துணி மடித்துவிட்டபடி தளர்ந்து ஆடிக்கொண்டிருக்க, மறுகையால் சைக்கிளைப் பிடித்தபடி அவள் நடப்பதை மோகன் பார்த்துக்கொண்டிருந்தார்.

தூரத்தில், மிகத்தூரத்தில் எங்கோ யுத்தம் நடக்கும் சத்தம் இரவிலிருந்து கேட்டபடிதான் இருக்கிறது. எங்கோ கடலில் புலிகள் தாக்குகிறார்கள்போல என்று முதலில் ராசு நினைத்துக் கொண்டார். வவுனியாப் பக்கம் இராணுவம் முன்னேற முயல்கிறது போல என்று மோகன் நினைத்தார். மட்டக்களப்பிலிருந்து படையணிகள் வரக்கூடும், அதுதான் கடலில் சண்டை என்று அலுக்கோசு வாய்திறந்து சொன்னார். இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்று… அந்தப் பெண் போராளி எதுக்கு என்று எதுவும் சொல்லாமல் போனது சங்கடமாக இருந்தது.

“றேடியோவைப் போடுங்கோ, என்ன செய்தி எண்டு கேட்பம்.” என்றார் ராசு.

“இன்னும் ஆறுமணியாகல்லை.” மோகன் சொன்னது அவரும் அதற்காகக் காத்திருக்கிறார் என்று தெரிந்தது. தமிழீழ வானொலி ஆறு மணிக்குத்தான் தொடங்கும்.

கலைந்து அவரவர் வேலைகளுக்குப் போனார்கள். ராசுவும், நாகமணியும் தேங்காய் சாக்குகளை சைக்கிளில் கட்டிக்கொண்டு சந்தைக்குப் போய்விட்டார்கள். இவர்கள் போவது வழமைபோல பிந்தித்தான். சில சிறு வியாபாரிகள், காணிக்காரர்கள் கொண்டுவரும் தேங்காய்க்காகக் காத்திருப்பார்கள். இப்படிப் பத்தும் இருபதுமாகக் கொண்டு வரும் தேங்காய்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கும். அவர்களிடம் வியாபாரம் செய்யக்கூடிய முதலும் சொற்பம்தான். இவற்றை வாங்கிச் சேர்த்து விற்று ஐம்பதோ, நூறோ உழைத்து, வீட்டுக்குப் போனால் போதும். இப்போதைக்கு இவர்கள்தான் நாகமணி, ராசுவின் வாடிக்கையாளர்கள். ஆளுக்கு அறுபது, எழுபது தேங்காய் கட்டிப்போனாலும் அதிகவிலை சொல்வதில்லை. ஐம்பது ரூபா இலாபம் வந்தாலே போதும் என்ற நிலை. அருமன், ‘றேடியோ’ கொண்டு வழமையாக ஆண்கள்கூடும் அந்த மூன்று இளந்தென்னை மரத்தடிக்கு அவதியாய் வந்தான். அதுதான் இந்தக் காணியின் மையம். தலைப்புச் செய்தியைக் கேட்டவுடன் கொண்டோடி வந்துவிட்டான்.

“ஐயா எங்க…?”

“சந்தைக்குப் போட்டார் தம்பி.”

“மோகன் அண்ணை… முல்லைத்தீவிலை சண்டையாம் வாங்கோ.”

“என்ன?” மோகன் ஓட்டமும் நடையுமாக வந்தார்

“முல்லைத்தீவுத் தளத்தை புலிகள் தாக்கிக்கொண்டிருக்கிறாங் களாம்.”

“ராசு… ராசு இல்லையல்லோ, ஐயன்… ஐயன்…” மோகன் ஆர்ப்பரித்துக் கூப்பிட்டார். அதற்குள் றேடியோவைக் கொண்டு மருமகனைப் போகச் சொன்ன சுவாமிப்பிள்ளையும் அவரது அத்தானும் வந்துவிட்டார்கள். வந்த தலைப்புச் செய்திகள் முடிய பிரதான செய்தி தொடங்கியது. செய்தி வாசிப்பவர் குரலிலே ஒரு உற்சாகம்.

“தமிழீழ விடுதலைப்புலிகள் முல்லைத்தீவு நகரத்தை மீட்கும் பாரிய சமர் நடவடிக்கையை இராணுவத்தின்மீது தொடுத்துள்ளார்கள். நள்ளிரவில் இருந்து தாக்குதல் தொடர்கிறது. நகரத்தின் கிழக்கு முனைகளைக் கைப்பற்றி விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணிகள் நகரின் மையப்பகுதி நோக்கி முன்னேறுகின்றன. கடலில் இருந்து சிறிலங்கா கடற்படை இராணுவத்திற்கு உதவுவதற்காகத் தாக்குதலை நடத்துகிறது. கடற்புலிகள் அதனை எதிர்கொண்டு, இதுவரை கடலில் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கடற்கரும்புலிகளும் சமரில் பங்கெடுத்திருக்கின்றனர். புலிகளின் பகுதிகள்மீது அரச வான்படைத் தாக்குதலும் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் வாழும் பகுதிகளில் வான்படைத் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் மக்கள் பதுங்குகுழிகளை வெட்டிப் பாதுகாப்புத் தேடுமாறு அரசியல் தலைமைச் செயலகம்  அறிவித்துள்ளது. இதுவரையான தாக்குதலின்படி புலிகளின் கை களத்தில் ஓங்கியிருப்பதாகத் தெரிகிறது.” அசைவில்லாத மௌனத்தோடு அந்தக் காணியில் உள்ளவர்கள் றேடியோவைச் சூழ்ந்துநின்று கேட்கிறார்கள்.

சந்தை கூடவில்லை. இயக்கம் கலைந்து போகச் சொல்லி விட்டார்கள் என்று நாகமணியும் ராசுவும் வீட்டுக்கு அப்போது தான் வந்தார்கள்.  செய்தி முடியவும் மோகன் விற்கக் கொண்டு போக எடுத்த பொருட்களைக் கட்டி வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டார். வந்தவர் ஏதும் பேசாமலே கிளம்பிப் போனார். வட்டச் செயலகத்திற்கு இரத்தம் கொடுக்கப் போவதைச் சொல்ல மனம் இடம் தரவில்லை.

______________________________________

செண்பகா, மாலதி படையணியின் பிளட்டூன் அணியின் துணைத்தலைவியாக முல்லைத்தீவு கிழக்கு முனையிலிருந்து களமிறங்குகிறாள். அந்தப் பகுதியின் இராணுவ முன்னணி அரணைச் சுற்றி ஒரு நகரக் களியாட்ட விழாவிற்கான வீதி அலங்காரம் போல ‘ரியூப்லைட்’ கம்பங்கள் வெளிச்சமிட்டபடி வரிசை கட்டி நின்றன. இந்த வெளிச்சங்களைத் தாண்டித்தான் இராணுவ முன்னரங்கத்திற்கு முன்னேறிச் செல்ல வேண்டும். மிகப்பெரிய மண்ணணைகளிடையே இருந்தன அந்த அரண்கள். மரக்குற்றிகளால் அமைக்கப்பட்டு மண்மூடைகளால் மூடப்பட்டு நிலத்தின் மேலே சுடும் துவாரங்களோடு இருந்தன. யானை படுத்திருப்பது போல இருக்கும். துவாரங்கள் அதன் கண்கள் போல. சுமார் நூற்றுஐம்பது மீற்றருக்கு ஒன்று என்ற கணக்கில் அந்த அரண்கள்.

இதில் சிக்கல் என்னவென்றால் இந்தப் பகுதியில் முன்னிருந்து அரண்களைத் தாக்காமல் மண்ணணைகளை இரண்டு காவலரண்களுக்கு இடையே ஏறிக் கடந்து பின்புறத்திலிருந்து தாக்கத் தொடங்க வேண்டும். எதிரியைத் திகைக்க வைக்கவும் குழப்பத்தில் தள்ளவும் அதுதான் சிறந்த உத்தி. இந்தப் பகுதியால் தான் சிறப்புப் படையணி மையத் தளத்தைத் தாக்குவதற்கு உள்ளே செல்லப் போகிறது. சூழவுள்ள காவலரண்களில் தாக்குதல் நடக்கும் போதே மையத்தளமும் விரைந்து தாக்கப்பட வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு.

இந்த வெளிச்சங்களைப் பார்த்தால், எத்தனை கமுக்கமாக நகர்ந்தாலும் அரண்களில் காவல் நிற்கும் இராணுவ வீரரின் கண்ணில் படாமல் நகர்ந்துவிட முடியாது என்று தான் எவர் ஒருவருக்கும் தோன்றும். முயலொன்று ஓடினாலே இலகுவாகத் தெரிந்துவிடும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால், இதனைக் கடப்பதற்குத்தான் இத்தனை காலம் இடையறாத பயிற்சி நடந்தது. லீமா, சமரின் பிரதானத் தளபதி என்றால் போராளிகளுக்குத் தெரியும் பயிற்சி கர்ணகடூரமாய் இருக்கும். எத்தனை கச்சிதமாய் ஒத்திகை பார்த்தாலும் அந்த மனுசன் பத்தியப்படமாட்டார். இன்னும் ஒரு முறை என்று தொடங்கி, இன்னும் ஒரே ஒரு முறை எனத் தொடர்ந்து, இறுதியாய் ஒரு முறை என்று இடைவிடாது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் பயிற்சியும் ஒத்திகையும். வளைந்த காலும் நிமிர்ந்த நெஞ்சுமாய் ஊன்றுகோலோடு வரும் அவர் இதுதான் கடைசி என்று சொல்வதை நிறுத்துவதே இல்லை.

‘கடுமையான பயிற்சி இலகுவான யுத்தம்’ என்பது அவரது வாலாய வாக்கு. ‘குறிபார்த்துச் சுடுபவனே கொல்லப்படுமுன் எதிரியைக் கொல்லக்கூடியவன்’ என்பது அவரது வேதவாக்கு. பதட்டமற்றவன் பயத்தை வெல்வான். பயத்தை வென்றவன் துணிந்து நிற்பான். துணிந்து நிற்பவன் சரியாகக் குறிபார்க்கும் வல்லமையைப் பெறுவான். அவனே களத்தில் தனை வீழ்த்தமுன் எதிரியை வீழ்த்துவான்.’ என்பது அவர் சாதாரணப் போராளியின் மனதில் பதியவைக்க விரும்பும் சுலோகங்கள்.

இந்தப் பெருஞ்சமருக்கான ஒத்திகை நடந்ததெல்லாம் பூநகரிப் பிரதேசத்தில். அது குடாநாடான யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலிலொன்று. ஆனையிறவு, தாழையடி என்ற ஏனைய இரு நுழைவாயில்களைவிட தாக்குதல் தொடுத்து, யாழ்ப்பாணக் குடாநாட்டினுள் நுழைவதற்கு ஏதுவானது. அப்படிப் படைத்துறை அறிவு கொண்டவர் நம்பக்கூடியது. இங்கு வைத்துப் புலிகளின் அணிகள் மாதக்கணக்காகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது, போராளிகளே யாழ்ப்பாணத்தைத் தான் இயக்கம் கைப்பற்றப் போகிறது என்று நம்பிவிட்டனர். இராணுவம் அசையாத நம்பிக்கையைக் கொண்டது புலிகள் யாழ்ப்பாணத்தைத் தாக்கப் போகிறார்கள் என. ஆனால், முல்லைத்தீவும், பூநகரியும் ஒத்த நிலவமைப்பை ஓரளவு கொண்டவை என்பது எவர் அறிவுக்கும் படவில்லை.

புலிகள், இலங்கைப் படைத்துறை ஜெனரல்களின் கண்களில் மண்ணைத் தூவியதுதான் முதல்வெற்றி. இலங்கைப் படைகளோ யாழ்ப்பாணத்தைக் காப்பாற்ற தனது படைவலுவை அங்கே குவித்தது. சந்திரிகா அரசாங்கம் யாழ்ப்பாண வெற்றியின் மீதுதான் சிங்கள தேசத்தில் தனது அரசியல் கோட்டையைக் கட்டியெழுப்பிக் கொண்டது. அந்தக் கோட்டை தகர்ந்தால் பதினேழு வருடத்தின் பின்பு பிடித்த பொன்னான ஆட்சி பறிபோய்விடும். ஜனாதிபதி சந்திரிக்கா கடுமையான கட்டளையிட்டிருந்தார். எந்தக் காரணத்தைக் கொண்டும் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டே ஆக வேண்டுமென்று.

ஒத்திகையின் போது லீமா செய்த விடயங்கள் சுவாரஸ்யமானவை. மாதிரி இராணுவத்தளம் ஒன்றை அமைத்தார். அதைச் சூழவும் ‘ரியூப்லைட் போஸ்ட்’ வரிசையாகக் கட்டி ஒளி பாய்ச்சினார். போராளிகளிடம் இதைக் கமுக்கமாகக் கடக்கமுடியுமா என்றார். யார் ஒருவரும் நம்பவில்லை. முடியாதென்று சொல்லவும் பலருக்கு பயமாக இருந்தது. இரு அணிகளாகப் பிரித்து இராணுவத்தரப்பாக ஒரு பிரிவைக் காவலரண்களில் நிறுத்தினார். மறுபிரிவைத் தாக்கும் புலிகள் அணியாக முன்னேறச் சொன்னார். மூன்று நாட்களுக்குள் இது நடக்கும். செண்பகா தாக்கும் அணியில் இருந்தாள்.

கடந்துவிட்டால் இராணுவத்தரப்பாகக் காவல் நின்ற பிரிவுக்கு தண்டனைப் பயிற்சி. கண்டுபிடித்தால் முன்னேறிய பிரிவுக்கு தண்டனைப் பயிற்சி. இப்போ, முன்னேறப்போகும் தரப்புக்கு ஒரு விடயத்தை விளக்கினார். அது நம்பமுடியாதது. “நீங்கள் இந்த ‘லைற்க’ளைப் பார்த்து பயப்பட வேண்டாம். காவலரணில் ‘லைற்’ இந்த மாதிரிப் போட்டால், அது காவல்நிற்பவனைக் குருடாக்கவே உதவும். அந்த வெளிச்சம் மட்டுமே அவனுக்குப் பெரிதாகத் தெரியும். இது கண்களைக் கட்டிவிடுவதற்கு சமனாகும். மிகுதி இடமெங்கும் அவன் கண்களுக்கு கடூர இருளாகத் தான் தெரியும். இந்தமாதிரி ‘லைற்போடுவது இராணுவவீரனுக்கு மனோதிடத்தைக் கொடுக்கும் அல்லது பயத்தை நீக்கும். ஆனால், உண்மையில் இது கண்களைக் குருடாக்கும் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.”

சொன்ன மனிசன், தானே முன்னேற்றப் பிரிவுடன் சேர்ந்து அந்த ஒத்திகையில் முன்னேறினார். அன்றிரவு ஒத்திகையில் முட்கம்பி வேலிகளை வெட்டி, மிதிவெடிகள் எனத் தாட்ட போலிகளைக் கிளறி முன்னேறி, அந்த மண்ணரணையும் தாண்டி அணிகள் வெற்றிகரமாகச் சென்றுவிட்டன. காவல் நின்ற பிரிவுக்கும் முன்னேறிய பிரிவுக்கும் ஆச்சரியம். தளபதி சொன்னதன் உண்மை இந்தளவுக்கு இருக்குமென்று அதுவரை யாரும் நம்பத்தயாராயிருக்கவில்லை. இராணுவத் தரப்பாக நின்ற போராளிகளுக்கு தண்டனைப் பயிற்சி என்ற சாட்டில் மேலும் பயிற்சி கொடுத்தது வேறு கதை.

தளபதி அணிகளைக் கூட்டிப் பேசினார். “சவால்விட்டு இன்று விடிவதற்குள் தாக்க வருகிறார்கள் என்று தெரிந்தே உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அங்கே இராணுவம் கண்டுவிடுமா என்ன! காவல் நின்ற உங்களுக்குத் தெரியும் வெளிச்சம் உங்களுடைய கண்களைக் குருடாக்கத்தான் உதவியது. முன்னேறிய உங்களுக்குத் தெரியும் வெளிச்சம் முன்னேறிய உங்களுக்குத்தான் உதவியதே தவிர காவல் நின்றவர்களுக்கல்ல. இனி யாரும் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சவேண்டாம்.” அவர் அதிலும் தந்திரம் செய்தார். மூன்று நாள் இதற்கு சொல்லியிருந்தாலும் முதல் நாள் எட்டு மணிக்கே அதை நடத்திவிட்டார். காவல் நின்ற தரப்பு இதை எதிர்பார்க்கவில்லை.

பரந்து விரிந்த மணல்வெளி. ஆங்காங்கே பெரியதும் சிறியதுமாய் மணல் திட்டுகள். ஒற்றைக் கையில் ஊன்றுகோலைப் பிடித்தவாறு, இயலாத கால் இடுப்பைச் சரிக்க, நெஞ்சை நிமிர்த்தி அந்த மணல் திட்டில் நின்று சேனையைப் பார்த்தார் தளபதி லீமா. அப்பால் சில இளநிலைத் தளபதிகள். அணிவகுத்து நிற்கும் சேனையில் ஒரு வரிசையின் முதல் ஆளாக நின்றாள் செண்பகா. மணல் திட்டில் புலிவரியின் சீருடையோடு நிற்கும் தளபதியும் கீழே பெருஞ்சேனையும் பின்னணியில் சரியும் சிவந்த வானமும் ஒரு யுகவீர ஓவியம் போல இருந்தது செண்பகாவுக்கு.

தளபதி பேசினார்.

“நாங்கள் தொடுக்கும் இந்த யுத்தத்தின் மூலம் எதிரிக்கு ஒன்றைச் சொல்லுவோம், ‘கூலிக்கு ஆயுதமேந்தியவனுக்குப் போர் ஒரு சாகச நிகழ்வு. சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தியவனுக்குப் போர் ஒரு சரித்திர நிகழ்வு.’ சரித்திரம் ரத்தத்தை விலையாகக் கேட்டால் கொடுப்போம். குறுக்கே எவரும் குழிதோண்ட வந்தால் உயிரையும் எடுப்போம்…” கைகளை காற்றில் விசிறி ஆக்ரோசமாகப் பேசினார். “இந்த சமரை வெல்வதற்கான முதல் நிபந்தனையில், மூன்று அல்லது நான்கு தந்திரங்கள் இருக்கின்றன. ஒன்று பயிற்சி, இரண்டு கடும்பயிற்சி, மூன்று மிகக்கடும்பயிற்சி, நான்காவது என்று ஒன்றிருந்தால் அது கர்ணகடூரமான பயிற்சி.”

பயிற்சி, பயிற்சி, பயிற்சி. இரவும் பகலும் பயிற்சி. கடலிலும் தரையிலும் பயிற்சி. மணலிலும் சேற்றிலும் பயிற்சி. புல்லிலும் புதரிலும் பயிற்சி. பயிற்சியில் விழித்து பயிற்சியில் தூங்கினர். உடல் ஓய்வுக்கு இறைஞ்சும் பயிற்சி. இடையிடையே பழிவாங்கும் ஓர்மத்தை ஏற்றும் தளபதியின் பேச்சு. தோல்வியின் அவமானத்தைக் கிளறிவிடும் பேச்சு. தன்மானத்தைத் தட்டியெழுப்பும் பேச்சு. மண்கிண்டி மலையில், பெண் போராளிகளின் உடல்களை முன்பு இராணுவம் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி, செஞ்சிலுவைச் சங்கத்திடம் கொடுத்தனுப்பிய கொதிநினைவுகளை கிளறிவிடும் பேச்சு. வன்மம்! உடலிலும் மனதிலும் வன்மம் ஏறியபடி இருந்தது. வன்மம் ஏறுவதற்கு ஓய்வற்ற பயிற்சியின் உக்கிரமும் உபாதையும் இடம் விட்டன.

பழிதீர்ப்பது போரின் சுவையென ஆனது. அதுவே தர்மமும் எனவானது. இழப்புக்கும் மீட்சிக்கும் அதுவே பதிலும் பாதையெனவும் பாதுகாப்பெனவும் ஆனது. மகுடம் தரிக்க ஒருகூட்டம். மக்களைக் காக்க இன்னொரு கூட்டம். போர், போர் என்ற முழக்கத்தின் இரத்த சரிதம். சமருக்கு முதல்நாள் தலைவர் பிரபாகரன் திட்டத்தை விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார். முல்லைத்தீவின் விடுதலை வன்னியை முற்றுகையிட நினைக்கும் அரசபடைகளின் எண்ணத்தை எவ்வாறு தகர்க்கும் என்பதுபற்றி அவர் விளக்கினார். செண்பகா இதுவே முதல்முறையாக தலைவர் பிரபாகரனைப் பார்க்கிறாள். தளபதிகள் மட்டுமல்ல, இம்முறை அணித்தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இது அவள் எதிர்பார்த்திருக்காத ஒன்று. களத்தில் மடியமுன் தலைவரைக் காணக் கிடைக்கும் என்று அவள் எண்ணியதே இல்லை. ‘பிளட்டூன்’ தலைவர்களுக்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ளவர்களே அழைக்கப்பட்டிருந்தனர். செண்பகா இப்பொழுது பிளட்டூன் துணைத்தலைவி. அவளுக்குள் இனம்புரியாத பெருமை தோன்றியது. தான் சாதிக்கப் பிறந்த பெண் என்ற எண்ணம் பனைமரத்தின் வேர்க்கற்றைகள் போல மனதில் அடர்ந்து பரவியது. ஆச்சரியமான கண்களைக் கண்ட அவர் மேலும் கம்பீரமாகப் பேசினார்.

இயக்கத்தின் மூத்த தளபதிகள் பலரிருந்தும் அவர்கள் இந்தச் சமரில் பங்குபற்றவில்லை என்பது அப்போதுதான் தெரிந்தது. ஆச்சரியம்! தனியே மூத்ததளபதி பால்ராஜ், பிரதம கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். துணையாக மாலதி படையணி தளபதி விதுசாவும் தளபதி தீபனும் நியமிக்கப்பட்டனர். அது ஏன் என்று யாருக்கும் புரியவில்லை. கடல் சமரை வழிநடத்தப் போவது சூசை. திட்டத்தை விளங்கப்படுத்திய அவர் அணித்தலைவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். “எங்களிடம் இப்போ இரண்டு 120 எம்எம் மோட்டர் எறிகணைகள் உண்டு. அதைக் கொண்டு மையத்தளத்தைத் தாக்கினால் எதிரி மேலும் நிலைகுழம்புவான். ஆனால், இங்கு பிரச்சினை என்னவென்றால் தளத்தின் முன்னரங்குகளில் தாக்குதல் தொடுக்கும்போதே கிழக்குப் பகுதியில் இருந்து எங்கள் அணி மையத் தளத்திற்குச் சென்று தாக்கப்போகிறது. அங்குதான் கட்டளைத் தலைமையகமும், ஆட்லறித் தளமும் இருக்கிறது. நாங்கள் மோட்டார் எறிகணைகளைத் தாக்கும்போது எங்கள் அணிப்போராளிகளே கூட உள்ளே எமது எறிகணைகளில் சேதப்படவும் வாய்ப்புண்டு. மோட்டார் தாக்குதலின் உதவி வேண்டுமா, இல்லையா என்று முடிவு செய்யுங்கள்.” அவர் பேசிவிட்டு போராளிகளை விழித்துப் பார்த்தார். அவரது பென்னம்பெரிய கண்கள் மினுங்கின.

அருகே இடமாக விதுசாவும் தீபனும் வலமாக லீமா எனும் பால்ராஜும் சூசையும் இருந்தார்கள். அவர்களும் ஏதும் சொல்லவில்லை. சபையில் கனத்த மௌனம். பல பதில்கள், பல குழப்பங்கள், பலரிடம் தோன்றியிருக்கலாம். அதைச் சொல்ல இன்னும் தயக்கம் இருக்கலாம். அசுர அமைதி. அமைதியின் கனதியைப் பிளந்தபடி ஒரு போராளி எழும்பினான். செண்பகா பார்த்தாள். அது அவனேதான். செல்வம்! கோப்பாயில், தான் முரண்பட்ட பின்னும் தன்னைக் காத்துக் கொண்டுவந்த அதே செல்வம். அவன் தன் இயலாத காலை தரையில் ஊன்றி ஒரு பக்கம் சிறிதாய் சரிந்து நின்றான். குரல் கரகரக்கச் சொன்னான்.

“முடிந்தளவு அந்தத் தாக்குதலைச் செய்யிறது தான் நல்லது.” அவனுக்கு அதிகம் கதைக்கவரவில்லை.

தலைவர் மறுத்துக் கேள்வி கேட்டார், “போராளிகள் உள்ளே நுழைந்திருப்பார்கள் இல்லையா? அவர்கள் காயப்படாமல் உயிரிழக்காமல் இருக்க ஏதும் வழி இருக்கா தம்பி?” சபையில் கண்களை ஓடவிட்டார். எதையோ அளக்கப் பரபரக்கும் பார்வை அது.

“வழியில்லை அண்ணை. ஆனால், இந்தத் தாக்குதலைச் செய்தால் முன்னரங்கக் காவலரண்களைத் தாக்கப்போகும் எங்களுடைய அணிகள்மேல எதிரியின்ரை ஆட்லறித் தாக்குதல் இருக்காது. இதால பல போராளிகளின்ர உயிர் இழப்பைக் குறைக்கலாம். சண்டைக்குச் சாதகமான நிலை உருவாகும். ஒப்பிட்டுப் பாத்தால் உள்ள போக இருக்கிறது சிறிய அணிதான். எங்கட செல் எங்கட அணிக்குத் தாற சேதம் சிறிதாத்தான் இருக்கும். ஆனால், இந்த உதவித் தாக்குதலைச் செய்து தந்தால் பல உயிர்ச்சேதம் இல்லாமல் தவிர்க்கலாம் எண்டு நினைக்கிறன். உள்ள போற அணிபற்றி இந்த இடத்தில அதிகம் யோசிப்பது நல்லதல்ல.”

செல்வம் இந்தக் கருத்தைக் கூறும்போது தலைவரின் கண்கள் அவனையே ஊடறுத்துப் பார்த்தபடி இருந்ததை செண்பகா பார்த்தாள். சபை அவர் இதற்கு என்ன சொல்லப்போகிறார் என்ற பதட்டம் கொஞ்சமும், பரபரப்புக் கொஞ்சமுமாக காத்துக் கிடந்தது.

“நீர் எந்த அணி தம்பி, உம்மட பேர் என்ன?”

“நான் செல்வம். துளசியோட கொம்பனி பிளட்டூன் லீடர்.”

“இப்படியான பதிலை நான் எதிர்பார்க்கயில்லை. ஆனால், இதைத்தான் வரவேற்கிறன். அதுவும் நீர் உள்ள போற அணியில் இருந்துகொண்டு இப்படிச் சொல்லுறது மகிழ்ச்சி தம்பி. ஒரு வீரன் வெற்றிக்கான வழிகளைத்தான் தேடுவான்…”

அந்த சபையே அன்று செல்வத்தைத் திரும்பிப் பார்த்தது. செண்பகாவிற்கு செல்வத்தைக் காணவேண்டும்போல் இருந்தது. இவள் கண்டாள்தான். ஆனால், இவள் கண்டதை அவன் கண்டானா என்று தெரியவில்லை. தான் இன்று ஒரு பிளட்டூன் லீடர் என்று காட்டவும் அவள் விரும்பினாள். அவன் அவளைக் காணவே இல்லை.

கடலும் காடும் மட்டும் அறிந்த ஒரு இரகசியப்பொழுதில் புலிகளின் அணிகள் முல்லைத்தீவை நெருங்கின. ஒவ்வொரு படையணியும் பூநகரியில் இருந்து முல்லைத்தீவைச் சென்றடையும் பாதைகள் வெவ்வேறாகத் தீர்மானிக்கப்பட்டன. படை நகர்வுகள் எங்கே என யாருக்கும் தெரியக்கூடாது. நாலு திசைகளில் இருந்தும் முல்லைத்தீவை வந்தடைந்த புலிகள் படையணிகளைக் காடும் கடலுமே அறிந்திருந்தன.

ஒன்றுகூடிய படையணிகள் முன்னிரவுப்பொழுதில் நகரத் தொடங்கி, நள்ளிரவில் முன்னரங்கை நெருங்கிக் கொண்டிருந்தன. செண்பகா தனது அணிகளுடன் முன்னரங்கை அண்மிக்கத் தொடங்கிவிட்டாள். தாக்குதல் நேரம் நெருங்குகிறது. நடந்து முன்னேறி, பின் குனிந்து முன்னேறி, பின் தாராநடையில் முன்னேறி இப்போது தரையோடு தரையாக ஊர்ந்து முன்னேறும் கட்டத்தை அடைந்துவிட்டனர். மிதிவெடிகளை அகற்றவேண்டிய முன்னரங்கத்திற்குச் செல்ல இன்னும் இருநூறு மீற்றர்தான் மீதம் இருந்தது. நெஞ்சு பதறத் தொடங்குகிறது.

தன்னுடைய பகுதியை இராணுவம் கண்டுவிட்டால் இந்த சமர் குழம்பியதற்கான பழி தன்மேல் விழும் என்ற பதறலே அது. தளபதி விதுசா மிகக் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். எந்தக் காரணம் கொண்டும் எங்கள் அணிகள் இராணுவம் காணுவதாக நடந்து விடக்கூடாது என்று. அப்படிச் சொன்ன போதுதான் செண்பகா தனது அணியில், ஒருத்திக்கு இருமல் பிடித்துவிட்டது என்றும், அவளை உடனே அணியில் இருந்து நீக்கவேண்டுமென்றும் சொல்லி நீக்கிவிட்டாள். இதன் பிறகுதான் இந்த விடயம் தளபதியின் மூளையில் பட்டது. மற்றைய அணிகளையும் விசாரித்து இப்படியான மூவர் நீக்கப்பட்டனர்.

திருவிழாக் கோலம்போல ஒளிர்ந்து கொண்டிருக்கும் தளத்தை நெருங்கிவிட்டனர். முதல் மிதிவெடிப் பிரதேசத்தை அடைந்ததும் முன்னேறும் பாதை ஒன்றை அமைக்க உழவாரம் போன்ற ஒருகருவியால் நிலத்தை ஒருபாகம் அளவில் கிளற உத்தரவிட்டாள். மிதிவெடிகளை அகற்ற வேண்டும். அதற்கு மூவரை முன்னே அனுப்பினாள். அவர்கள் கிளறும் முயற்சியைத் தொடங்கவும் தெற்குப்புறம் இருந்த காவலரணில் இருந்து சூட்டுச்சத்தம் கேட்டது. சர்வநாசம்!

புலிகள் சேனையே பதட்டத்துக்குள்ளானது. ஆனாலும் தாக்குதலுக்கான கட்டளை வரவில்லை. எனவே, இது இராணுவம் புலிகளின் நகர்வைக் கண்டுவிட்டதற்கான அறிகுறி. அவ்வாறு நடந்தால் தாக்குதலைத் தொடங்கும் கட்டளை வரும். வேறு வழியில்லை. ஆனால், தாக்குமாறு இந்தச் சமயத்தில் கட்டளை வரவேயில்லை. அசுர அமைதி.

தாக்க வேண்டாம் என்றும், கொஞ்சம் பொறுத்துப் பார்க்குமாறும், அது இராணுவத்தின் சந்தேகத் தாக்குதலாக இருக்கக் கூடுமென்றும் பிரதமத் தளபதி ‘வோக்கிடோக்கியில்’ அறிவுறுத்தினார். அணிகளை நகராமல் அப்படியே நிலை எடுக்குமாறும், அரைமணி நேரத்தின்பின் நகரமுயற்சி எடுக்க வாய்ப்பிருந்தால் அவ்வாறு செய்வது அல்லது தாக்குதல் தொடங்குவது என்று கட்டளை வந்தது. அப்போதுதான் ஒரு விசித்திரம் நடந்தது.

உண்மையில் தளபதி கணித்தது போல் அது இராணுவத்தின் சந்தேகத் தாக்குதல் மட்டுமே. நகர்வை அவன் கண்டுவிடவில்லை. அரைமணி நேரத்தின்பின் அணிகளை முன்னேறப் பணித்தார். கொம்பனி லீடர் அதை அறிவித்தான். செண்பகாவின் அணி  மேலும் சில மீற்றர் முன்னேறியது. அப்போதுதான் பார்த்தாள். அருகில் இருந்த போராளிகளில் மூவரைக் காணவில்லை. ‘அடக் கடவுளே! ஓடிற்றாள்களா? பயந்திட்டாள்களோ?’ அவள் மீண்டும் பின்நோக்கி நகர்ந்து போனாள். பார்த்தாள். அவர்கள் அங்கேயே மூஞ்சைக் குத்திப் படுத்திருக்கிறார்கள். என்னாச்சு! அவர்களைத் தட்டினாள். அவர்கள் சுயநினைவில் இல்லை.

நித்திரை!…

பயிற்சியின் கர்ணகடூரம் உடலை ஓய்வுக்குக் கெஞ்ச வைத்து விட்டது. தவிரவும் ஒத்திகைப் பயிற்சியின் முடிவில் சுகமான நித்திரைகொண்டு பழக்கமாகிவிட்டது. இதுவும் ஒரு ஒத்திகைபோல மனம் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டது. அரைமணி நேரத்திற்குள் அவர்கள் நித்திரையாகிப் போனார்கள். அவள் அவர்களை ஒவ்வொருவராகத் தட்டி முன்னேறுமாறு சைகை காட்டினாள். திடுக்குற்று விழித்தவர்கள் பயத்தில் கண்மிரள முன்னேறினார்கள். செண்பகா தனது செக்சன் லீடர்களுக்குப் பணித்தாள் எல்லாரையும் மீண்டும் ஒருக்கா சரிபார்க்குமாறு.

நள்ளிரவு நேரம் முன் மிதிவெடி வலயத்தைக் கடந்து உருண்டு செண்பகா முன்னேறினாள். இனி ‘டோப்பிடோ’ குண்டை முட்கம்பிச் சுருள் வேலிக்கு வைப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டு நகரவேண்டும். கமுக்கமாக அந்த மண் அணையைக் கடக்க முடியாவிட்டால், டோப்பிடோவை வெடிக்க வைத்து, அதன் அதிர்வில் மிதிவெடிகள் வெடித்து முட்கம்பி வேலி சிதைந்ததும் நேரடியாக முன்னிருந்து தாக்க வேண்டியதுதான். ஆனால் செண்பகாவின் அணிப் போராளிகளில் ஒரு செக்சன் லீடர் தனது அணியையும் ஆண்களணி செக்சனோடும் வெற்றிகரமாக  உள்நுழைந்து விட்டனர். திடீரெனத் தாக்குதலைத் தொடங்கும் வெடிச்சத்தம் கேட்டது. இது தாக்குவதற்கான கட்டளை வெடியோசை!

செண்பகா திடுக்குற்றுப் போனாள். இன்னும் இரண்டு செக்சன் உள்ளே போகவேண்டும். வோக்கிடோக்கியில் கொம்பனி லீடரிடமிருந்து அறிவிப்பு. “இனித் தாமதிக்க இயலாது. உள்ளே போன செக்சன் பின்னால் இருந்து தாக்கட்டும். நீங்கள் டோப்பிடோவை வெடிக்க வைத்து உள்ளே போங்கோ.”

அமைதியில் அடைக்கலமாகியிருந்த இருள் பிளக்கத் தொடங்கியது. அமைதியைப் பிளந்தன வெடியோசைகள். இருளைக் கிழித்தன தீப்பொறிகள். இரவில் மேய்ச்சலுக்கு வந்த முயலும் உடும்பும் இன்னபல பிராணிகளும் புதர்களுக்குள் ஓடின. பறவைகள் பீதிகொண்டு வானத்தில் ஏறின. கடலும் காடும் முன்னரே சேதி அறிந்தவை. அமைதியில் நடந்த எல்லா யுத்த ஆயத்தங்களையும் நகர்வுகளையும் பார்த்திருந்தவை. தாய்க்கடலும் தாய்க்காடும் தம் பிள்ளைகளின் வெற்றிக்காய் ஆழ்மனத் தவம் இருந்தன.

“வெண்ணிலா வெண்ணிலா, செண்பகா. பின்னாலை இருந்து இந்தப் பகுதியைத் தாக்கு வெண்ணிலா. எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்.” உள்ளே போன செக்சன் லீடருக்கு செண்பகா கட்டளை இட்டாள். தன் அணிகளை குப்புறத் தரையோடு தலை தூக்காமல் படுக்கச்சொன்னாள்.

தாக்குதல் கடுமையாகவும் முன்பக்கமாகத் தாக்கிய எதிரி சுதாகரித்துக் கொண்டு பின்பக்கமிருந்து தாக்குதல் வருகிறது என உணர்ந்து திரும்பி தன் தளப்பக்கமே தாக்கினான். அப்போது செண்பகா மறுபடி கட்டளையிட்டாள். “வெண்ணிலா… வெண்ணிலா… செண்பகா ஓவர்.”

“செண்பகா… செண்பகா… வெண்ணிலா ஓவர். சொல்லுங்கோ.” மறுமுனையில்.

“உன்ரை ஆக்களை இப்ப கவனமாய் நிலை எடுக்கச் சொல்லு. நாங்கள் இங்கயிருந்து தாக்கப் போறம். கவனம் குறஸ்பயரில் மாட்டக் கூடாது.”

“சரி அக்கா. சரி.”

செண்பகா லோஞ்சர் போராளியை காவலரணுக்கு எறிகணை ஏவச் சொன்னாள். அது கச்சிதமாக ஒரு காவல் அரணில் மோதி வெடித்தது. “அடிங்கடி அடிங்கடி” முன்னிருந்து தாக்கினர். எதிரி முன்னும் பின்னுமென இருபக்கத் தாக்குதலில் நிலை குழம்பிவிட்டான். அவனது தாக்குதல் கணநேரம் நின்றுவிட்டது. இப்போது ‘டோப்பிடோ’வைக் கொண்டுபோய் வெடிக்கவைக்கக் கட்டளையிட்டாள். உடனே  டோப்பிடோவுடன் போன போராளி முட்கம்பிச்சுருள் வேலியின் அடியில் அதைச் சொருகினாள். பயனில்லை! டோப்பிடோவை வெடிக்க வைப்பதற்கிடையில் அவள் சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டாள். ஆ… என்ற கதறலுடன் அவள் வீழ்ந்தாள்.

ஆனால், ஆண் போராளிகளின் பகுதியில் வெடித்தது. அந்தப் பாதையூடாக அணியை முன்னேறுமாறு கட்டளையிட்டாள். நாலு திசையிலும் கடல் நகரப் படைத்தளம் அதிர்ந்து கொண்டிருந்தது. காவலரணில் உள்நுழைந்த மற்ற பிளட்டூன் ஆண் போராளிகள் இருபக்கமாக விரிந்து காவலரண் தொடரைத் தாக்கியபடி முன்னேற பின்னால் செண்பகாவின் அணி போனது. கடும் சண்டையில் நானூறு மீற்றர் அரண்களைக் கைப்பற்றியதும் மையத்துள் நுழையவேண்டிய அணிக்கு அறிவித்தாள். “பாதையைப் பிடித்து விட்டோம். இப்ப நீங்கள் செய்யுங்கோ.”

பிடித்த காவலரணை எதிரி திரும்பப் பிடிக்கவிடாமல் போராளிகளை நிறுத்தினாள். உள்ளே போகும் அணிக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். இந்த அணியில் தான் செல்வமும் இருக்ககூடும் என்ற நினைவு தற்செயலாய் வந்தது.

இந்த நேரம்தான், கடலிலிருந்து ஒரு கரும்புலிப்படகு, திட்டத்தின்படி கடலைக் கிழித்து வந்து தரையில் தாவிப்பாய்ந்து முழங்கி வெடித்தது. வானமும் கடலும் காடும் அதிர பேரோசையுடன் பெரும் தீப்பிழம்பும். தூரத்தில் தெரிந்த தீப்பிழம்பில் புரிந்து கொண்டாள். கடற்கரையை அண்டிய பகுதியில்தான் எதிரியின் கட்டளைப் பீடம் இருந்தது. விநியோகத் துறைக்கு அருகில்தான் இது வெடித்ததும்கூட. நேரடியான பாதிப்பு அதிகம் இராணுவத்திற்கு இல்லாமல் போகலாம். ஆனால், இது நிகழ்த்தும் உளவியல் பாதிப்பு சாதாரணமானதல்ல. கடலிலும் கடற்புலிகள் சண்டையைத் தொடங்கினார்கள். கடலில் இருந்து உதவி கிடைக்காமல் தடுப்பதே அந்தச் சண்டையின் நோக்கம். கட்டளைப்பீடம் இந்தக் கரும்புலித் தாக்குதலால் நிலைகுலைந்தது. தாக்குதல் எங்கிருந்தெல்லாம் வருகிறதென்பதை அவதானித்து அறியமுடியவே இல்லை.

ஒருமணி நேரத்திற்குள் மையத்தளத்தை நோக்கி முன்னேறிய அணி அதன் அருகே சண்டையைத் தொடங்கிவிட்டது. அங்கே மையத்தில் சண்டை தொடங்கி கால்மணி நேரத்தில் எதிரியின் ஆட்லறித் தாக்குதல் நின்றுபோனது. களமுனையில் போரிட்டுக் கொண்டிருந்த புலிகள் சேனைக்கு  ஆட்லறித்தளமும் தாக்கப்பட்டு விட்டது அல்லது அங்கே வெற்றிகரமாக நம்மவர் நுழைந்து சண்டை தொடங்கிவிட்டார்கள் என்று தெரிந்தது. களம் எங்கும் உற்சாகம். அத்தனை உற்சாகம். ஆவேசமாய் மாறிக்காண்டிருந் தது அது. வெற்றியின் தீராவேட்கைக்குத் தீனியிடுவது முதலில் நம்பிக்கைதான். அது களமுனையெங்கும் கரைபுரண்டது.

பின்னிரவில் தொடங்கிய சமர் அதிகாலைவரை தொடர்ந்தது. பகலும் நீடித்தது. பகலில் கடற்சமர் புரிவது இலகல்ல. பகலில் கடலிலிருந்து உதவி அணிகளை கடற்படை இறக்கக்கூடும். அதனால் தளத்தின் இறங்குதுறையைக் கைப்பற்றிக் கரையைக் காவலிட வேண்டும். விடிவதற்குள். அதற்குரிய அணி அதனை முக்கால்வாசி வெற்றிகரமாகச் செய்திருந்தது. வடக்குக்கரையில் குறிப்பிட்ட அளவு இன்னும் பிடிபடவில்லை. கடலில் இருந்து படைகளை தரையிறக்கும் முயற்சியைக் கடற்புலிகள் முறியடித்தனர். கடற்படைக் கப்பல், கடலில் கரும்புலித் தாக்குதலில் தீப்பிடித்து எரிவது போரிடும் அணிகளுக்கு தெரிந்தது.

மறுநாள் இங்கிருந்து சில கிலோமீற்றர் அப்பால், அலம்பில் என்ற இடத்தில் கடல்படை துருப்புகளைத் தரையிறக்கி முல்லைத் தீவைக் காக்க முயன்றது. களத்தில் மீண்டும் பதட்டம். செண்பகா மனதிலும் சோர்வு. அவள் உயிர்த்தோழி வேறு இறந்துவிட்டாள். மையத்தளம் இன்னும் வீழவில்லை. ஆனால், அங்கே புலிகள் இறங்கிய படையை சுற்றிவளைத்துக் கொண்டனர்.

பகலும் இரவும் போர்! இடைவிடாது போர்!

இரத்தம்! நிலமெங்கும் இரத்தம்!

அலறிவிழும் உடல்கள்! அந்தரிக்கும் உயிர்கள்!

சிங்களமொழிக் கட்டளைகளும் தமிழ்மொழிக் கட்டளைகளும் காற்றில் மோதிச் சிதறின. ஒரு மொழியின் குரல்களில் ஆவேசம் கனத்தது. மற்றமொழிக் குரல்களில் அச்சத்தின் பதறல் கனத்தது. காற்றின் முகத்தினின்றும், காடும் கடலும் தம் பிள்ளைகளின் கைகள் களத்தில் ஓங்கிவிட்டதை உணர்ந்து கொண்டிருந்தன. மறுஇரவும் யுத்தம். மறுகாலையும் யுத்தம்.

வெல்லப்பட்டுவிட்டது சமர். முல்லைதீவு மீண்டது.

உயிர் தப்ப நகரெங்கும் பதுங்கிய துருப்புகளைப் புலிகள் தேடி அழித்தனர். அந்த சமயத்தில்தான் செண்பகாவிற்கு ஒரு அதிர்ச்சி! ஒரு குட்டிச்சுவர் சூழ்ந்த புதர்கள். அந்த இடத்தை ‘கிளியர்’ செய்யப் போகவும் இரண்டு சிப்பாய்கள். ‘சரண்டர்’ என்று கத்தினாள் செண்பகா. தேடி அழிக்கிறார்கள் என்று நிச்சயமான சூழல். அந்த சிப்பாய் கையைத் தூக்கி சரணடையப் போவதாய் பாவனை பண்ணி விட்டுச் சுழன்று செண்பகாவை சுடப் போனான். செண்பகா எதிர்பார்க்குமுன், பக்கத்தில் நின்ற மற்ற சிப்பாய் அவனைச் சுட்டு வீழ்த்தினான். தன் சகாவைச் சுட்டவன் கணத்தில் சுவரின் மறுபக்கம் பாய்ந்தான். அந்தத் திகைப்பிலிருந்து செண்பகா மீள்வதற்கிடையில்…

“சுடவேண்டாம், சுடவேண்டாம்!” என்று கத்தினான்.

அட! என்ன நாசமடி! தமிழில் கத்துறான். சுத்த உச்சரிப்பில் கத்துறான்.

குட்டிச் சுவரின் பின்னிருந்து இரு கைகளையும் தூக்கினான். செண்பகா சுடுவதற்குத் தயாரான எச்சரிக்கையோடு, “வா வெளிய.” என்றாள். கையைத் தூக்கி அச்சத்தோடு எழுந்தான். சரணடைந்தவன் தன்னைக் கொல்ல வேண்டாமென்றான். பிறகு செண்பகாவின் முகம் கண்டு அஞ்சினான். தன்னைப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரிடம் கொண்டு போகச் சொன்னான்.

உடனடிக்குத் தப்பும் தந்திரமா! சிரித்த செண்பகா “நீ யார் எனக்குக் கட்டளை போட?” என்றாள். உள்ளூர வினோதமான உணர்வு.

இரவில் அலையும் திருட்டுப் பூனைக்குண்டான கண்கள் அவனிடம். குரலில் மட்டும் தளம்பல் இல்லை போலிருந்தது. சுடவா விடவா!

“என்னை இதுக்கு மேல கேள்வி கேட்க வேண்டாம். நான் ஆமி தொலைத்தொடர்பில வேலை செய்யுறன். உன்னைக் காப்பாற்றி இருக்கிறன். என்னை நம்பு. என்னைக் கொண்டு போ.”

இதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை. மேலிடத்திற்கு அறிவித்து அனுப்பி வைத்தாள்.