1.8K
குறள்
தாலாட்டின்
முதல் வரியையும்
ஒப்பாரியின்
இறுதி வரியையும்
ஒன்றாக இணைத்து
நவீனன் எழுதிய
புதிய குறள் நான்
என்னை
உனது அதிகாரத்தின் கீழ்
காமத்துப் பாலில்
கொண்டு சேர்த்துவிட்டாய்.
இப்போது பார்
அதிரும் உன் அழகுக்குள்
எனதாசைகளை நுழைத்து
குறுகத் தறித்துவிட்டது
உன் காமம்.
முட்டை
விமானம் என்பது உலோகப்பறவை
அதன் முட்டை ஒன்றை அறையில் வைத்திருந்தேன்
அலுவலகம் போய்வந்து கதவு திறந்தால்
அறை எங்கும் பறக்கின்றன குட்டிக் குட்டி விமானங்கள்
அறையின் சூட்டிலேயே முட்டை பொறித்து விட்டிருக்கிறது.
விழாக்கோலம்
நிறைய வாக்கியங்கள்
இறந்தே பிறக்கின்றன
ஆனால் அவைகளின்
முற்றுப் புள்ளிகள் இறப்பதில்லை
என் மனதில் குவியல் குவியலாய்
முற்றுப் புள்ளிகள் கிடக்கின்றன
ஒருநாள்
அந்தி மழையில் கடற்கரை வானில்
அவற்றை அள்ளி இறைத்தேன்
வாக்கியம் வாக்கியமாக
வானில் இருந்து இறங்கிவந்த
மழைச்சரங்களில் முற்றுப்புள்ளி விழுந்து
அவை அலங்கார மணிகளென
வெளியெங்கும் தொங்கின
துக்கத்தின் அலங்காரம்
தூய அழகோடு துலங்குவதை
வியப்பின் ஈயம் விரிய
கண் மீன்களால் காண்கிறது கடல்.
யாருடைய
நான் யாருடைய வானத்தை
எட்டாகவும் பதினாறாகவும் கிழித்து வைத்தேன்
நான் யாருடைய நட்சத்திரத்தை
இரும்புக் கோடரியால் அடித்து நொறுக்கினேன்
நான் யாருடைய நிலவை
ஈர வயலில் குழிதோண்டிப் புதைத்தேன்
நான் யாருடைய சூரியனை
செக்கில் கட்டி ஓட்டினேன்
என் வானத்தை சுக்கலாகக் கிழிக்கவும்
எனது நட்சத்திரங்களைப் பொடிக்கவும்
எனது நிலவைக் காணமலாக்கவும்
எனது சூரியனை செக்கடியில் நோகடிக்கவும்
யாருக்கு மனது வந்தது?
நீள்மலர்
என் சொற்களை வடிகட்டி
கசடு நீக்கித் தருகிறேன்
பாவம் நீக்கிய அப்பழுக்கற்ற பார்வையை
உன் மீது போர்த்துகிறேன்
என் நினைவுகளின் பாறை மீது
உன் அழகொளிரும் அசைவுகளை
கூர்தீட்டி பளபளப்பாக்குகிறேன்
ஆனால்
உனக்குள் உலவும் குருட்டு இசைக்கு
இது எதுவுமே தெரியவில்லை
உன் உணர்களின் அசைவின்மையைக் கண்டு
என்னுள் துயரத்தின் குமிழ் வெடிக்கிறது
மிக நீண்ட மலர் எனக் கிடக்கிறது என் காதலின் சாலை
புறப்படத் தயாராகிவிட்டது உனது வாகனம்.