முன்னம் அவனது நாமம் கேட்டேன்

by மானசீகன்
1 comment

அந்தக் கதை இப்படித்தான் துவங்கும். ‘கேத்தரின் ‘என்கிற பெயர் ஒரு தேவதைக் கதை வழியாக  ஒரு சிறுவனுக்கு அறிமுகமாகும். அன்றிலிருந்து அந்தப் பெயரை காதலிக்கத் தொடங்கி விடுவான். ஒவ்வொரு நாளும் விதவிதமாக அந்தப் பெயரைச் சொல்லிப் பார்ப்பான். அதைச் சொல்லிப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு நறுமணம் தன்னைச் சூழ்ந்து கொள்வதாக அவனுக்கு ஒரு பிரமை தட்டும்.அந்தப் பெயரால் விரியும் முடிவற்ற சாத்தியங்களின் வழியேஅவன் தன் பிரக்ஞையை நழுவ விட்டிருப்பான். கல்லூரி படிக்கும் போது ஒரு பெண்ணை தற்செயலாகப் பார்ப்பான். அது பனி பொழியும் காலம் அல்ல; ஆனால் அவன் பார்வையில் அங்கே பனி பொழிந்து கொண்டிருக்கும். அவளுடைய பெயர் கேத்தரினாகத் தான் இருக்க வேண்டும் என்று அவன் தீர்மானமாக நம்பி விடுவான். அவளறியாமல் அவளைப் பின் தொடர்வதே அவனுடைய தினசரி அலுவலாகி விடும். ஆனால்  அவளிடம் சென்று பேசுவதற்கு எந்த முயற்சியும் செய்ய மாட்டான்.அது அவனால் இயலாத ஒன்றாகவே நீடித்திருக்கும். மரத்திலிருந்து உதிர்கிற பூக்கள் தம்மை  அறியாமலே உருவாக்கி வைத்திருக்கும் ஓவியமொன்றை காற்று கலைத்து விடுகிற வன்செயலுக்கு நிகரானது அவளோடு உரையாடுவது என்று தனக்குள்  உணர்வான். அவள் அழகின் மீதான பிரமிப்பா? தன் காதலின் மீதான தன்னிரக்கமா? எதனால் இந்த அழுகை வருகிறது என்று அவனால் பிரித்துணர முடியாது. அழுது முடித்தவுடன் அவன் மூச்சு ‘கேத்தரின் ‘ என்கிற  ஒற்றைச் சொல்லை பிரபஞ்சத்தின் மீது தூவி விட்டு வெறும் காற்றாகி விடும். அவளைப் பற்றி யாரிடமும் விசாரிப்பதற்கு அவனுக்கு அச்சமாகவே  இருக்கும். அது ஒரு குழந்தையின் தூக்கத்தைக் கலைப்பதற்கு, அந்தத் தூக்கத்தில் உறைந்திருக்கும் கனவைக் கலைப்பதற்கு நிகரானது என்பதாக ஏதோ ஒரு குரல் அவனை எச்சரிக்கும். ஒருநாள் அவளே அவனைத் தேடி வருவாள். ‘நீங்கள்  ஏன் என் கனவில் அடிக்கடி வருகிறீர்கள்?’ என்று அவள் கேட்பது அவனுக்கு ஆச்சர்யமாயிருக்கும். அவள் முகத்தில் காதலோ அல்லது கோபமோ இல்லையென்பது அவனை வருத்தமடையச் செய்யும். அந்த முகத்தில் இருந்தது தெரிந்து கொள்கிற ஆவல் மட்டும்தான் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது. தன் கசப்பை விழுங்கிக் கொண்டு ‘தெரியவில்லை’ என்று முனங்குவான். ‘உங்கள் பெயராவது எனக்குத் தெரிய வேண்டும் மிஸ்டர். என் பெயர் எலிசபெத்’. அந்த நறுமணம் அவனையும் சேர்த்துத் தூக்கிக் கொண்டு எங்கோ சென்று வீசி எறிந்து விட்டு விடை பெற்றிருக்கும். ஆம்; அது பாதாளமேதான்.

‘நீங்கள் கேத்தரின் இல்லை அல்லவா? அப்படியானால் உங்கள் கனவில் இனி நான் வர மாட்டேன் ‘. அதற்குப் பிறகு அவள் ஏன் கேத்தரினாக இல்லை என்று யோசித்து அடிக்கடி அழுவான். அது அவள் தவறு அல்ல. அவளுடைய பெற்றோர்களின் தவறு என்று தோன்றிய  ஒருநாளில் அவள் வீட்டைத் தேடிப் பிடித்து  அவர்களைத் திட்டி விட்டு வருவான். அவனுக்கே அது அபத்தமாக இருக்கும். ஆனால் இந்த முட்டாள்தனத்தில் மட்டுமே தன் ஆன்மா உயிர்வாழ்வதாக தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வான். இதற்கிடையில் அவன் ஒரு பைத்தியம் என்றே பலரும் நம்பத் தொடங்கி விடுவார்கள். அதைப் பற்றித் துளியளவும் கவலைப்படாமல் ஒருத்தி அவனை காதலித்துக் கொண்டிருப்பாள். அதற்காக அவள் தந்தை  கண்டிப்பார். ‘ஒரு பெயரையே இவ்வளவு நேசிக்கிறவன் பெண்ணை எப்படி நேசிப்பான்?’ அவள் தந்தை திருப்பிச் சொல்வார். ‘அவனால் பெயரை மட்டுமே நேசிக்க முடியும்.’ அது ஒரு அசரீரியைப் போல ஒலிப்பதாக அவளுக்குத் தோன்றும். ஆனாலும் தொடர்ந்து அவனை நேசிப்பாள். அவனோ அவளை மூர்க்கமாக நிராகரிப்பான்

‘என்  அன்பை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்?’

‘ஏனென்றால் நீ கேத்தரின் அல்ல.’

‘எல்லா கடலுக்கும் சுவை ஒன்றுதானே’

‘இருக்கலாம். என் கண்ணீரின் சுவையும் உப்புதான். அந்த  உப்பு வேறு.எல்லா உப்பும் ஒரேஉப்பு அல்ல’

அவள் முன்பை விட அவனை அதிகம் நேசிப்பதாகக் கூறி விசும்பி அழுவாள். அவன் அவளை ஒரு பொருளாக மட்டுமே கருதி தினந்தோறும் கடந்து போய்க் கொண்டிருப்பான். அவன் நடுத்தர வயதைத் தொடும் போது அவனுக்கு யாரோ பெண் பார்ப்பார்கள். அன்றைய தினம் அவன் குடிக்காத காரணத்தால் அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருப்பான். ‘அந்தப் பெண்ணின் பெயர்  என்ன?’, ‘கேத்தரின்’ என்பார்கள். உடனே ஒத்துக் கொள்வான். மணநாளன்று மீண்டும் மீண்டும் அவளிடம் பெயர் கேட்பான் ‘கேத்தரின், கேத்தரின்’ என்று அவள் திரும்பத் திரும்ப சொன்ன பிறகு தான் மோதிரம் போடுவான். முதலிரவிலும் அதே கதை. உறவு தொடங்கும் போதும் ,முடியும் போதும் தவறாமல் இந்தக் கேள்வியைக் கேட்பான்.சமயத்தில் உச்சத்திலும். அவள் ஒரு விதவை. சில நாட்களில் இவனை அவளுக்கு பிடிக்காமல் ஆகி விடும். அவள் வழக்கமான மனைவியாகி அவனை சித்ரவதைக்குள்ளாக்குவாள். இவனால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. கேத்தரின் என்கிற பெயர் கொண்ட ஒருத்தி எவ்வாறு இப்படி ஆக முடியும் என்பதே அவன் துயரமாகி விடும். விதவிதமான நகரங்களில் விதவிதமான வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்று வேறு வேறு கடவுள்களிடம் இந்த ஒரே கேள்வியைக் கேட்பான். அவர்கள் சிரிப்பதாகவோ முறைப்பதாகவோ தோன்றும் போது செருப்பால் அடித்து விட்டுக் காறித்துப்புவான். அவனை ஊர் முழுவதுமாக ‘பைத்தியம்’ என்று சொல்லி நிராகரிக்கத் துவங்கி விடும். அவன் மனைவியும் இன்னொருவனோடு போய் விடுவாள். ஒருநாள் ஏதோ ஒரு கல்லறையில் அமர்ந்திருக்கும் போது ஒரு கிழவன் இவனைத் தேடி வருவான். ‘அவள் பெயர் கேத்தரின் அல்ல; உன் உறவினர்கள் அவளை அவ்வாறு  நடிக்கும்படி சொல்லி  வைத்தனர். அவள் நல்ல மனைவியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால்  ஒரு திறமையான நடிகை’. கிழவன் பெருங்குரலில் சிரித்து ஓய்வான். அதைக் கேட்டதும் அவன் ரொம்ப நிம்மதியாக உணர்வான். நெடுநாட்களுக்குப் பிறகு தேம்பித் தேம்பி அழுவான். அழுது ஓய்ந்த பிறகு திடீரென வந்தமர்ந்த ஓர் புன்னகையோடு அந்தக் கிழவனைப் பார்ப்பான். அவனும் சிரித்துக் கொண்டுதான் உட்கார்ந்திருப்பான். இவனுக்கு இப்போது கிழவன் எதற்காக வந்திருக்கிறான் என்ற விஷயம் புரிந்து விடும். ‘உன் பெயர் இஸ்ராயில்தானே?என்னைக் கூட்டிச் செல்லத்தானே வந்திருக்கிறாய்?’. ‘அதற்காகத்தான் வந்திருக்கிறேன். ஆனால்  என் பெயர் இஸ்ராயில் இல்லை. கேத்தரின்’. அப்போது இரு பறவைகள் வானத்தில் பறந்து கொண்டிருக்கும்.

இந்தக் கதையை நான் படித்தேனா? கேட்டேனா? அல்லது சிறுவயதிலேயே இப்படி ஒரு கதை தானாக எனக்குள் வந்து தன்னை உருவாக்கிக் கொண்டதா என்பதை இன்றும் என்னால் பிரித்தறிய முடியவில்லை. என் வாழ்வின் தனிப்பட்ட புதிர்களில் இதுவும் ஒன்றாக இருந்து விட்டுப் போகட்டும்  என்று விட்டு விட்டேன். ஆனால் பெயர்களைக் குறித்து யோசிக்கும் போதெல்லாம் இந்தக் கதை என் நினைவுக்கு வந்து விடும்.

பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல; ஒன்றாம் வகுப்பு படிக்கிற போது கூடப் படித்த மல்லிகா என்ற பெண்ணை உரிமையாக அறைவேன். இது தினமும் நடக்கும்.ஒருநாள் கூட மல்லிகா எந்த வாத்தியாரிடமும் சொன்னதில்லை. மல்லிகாவின் அண்ணன் அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தான். அவனிடம் சொல்லியிருந்தால் நான் தீர்ந்தேன். ஆனால் மல்லிகா சொல்லவில்லை. மாறாக என்னை எவனோ அடிக்க வந்த போது மல்லிகா தன் அண்ணனோடு வந்து காப்பாற்றியது. அதற்கு மறுநாளும் கூட மல்லிகாவை அறைந்தேன். மல்லிகா அப்போதும் அழுது கொண்டே போய் விட்டது. ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன்  என யோசித்த போது ஒன்று புரிந்தது. நான் என்னை  முதன்முதலில் ஆணாக உணர்ந்த போது அப்படி நடந்திருக்கிறேன் (இந்திய  ஆண்கள்தான் எவ்வளவு மட்டமானவர்கள்?) அது ஏன் அந்தப் பெண்ணிடம்  மட்டும்? ‘மல்லிகா’ என்கிற பெயர்தான் என்னை அப்படி உணர வைத்திருக்கிறது. நல்லவேளை அதிலேயே நான் சிக்கிக் கொள்ளவில்லை.

என்னோடு ‘துக்கசாமி’ என்ற பெயரோடு ஒரு நண்பர் படித்தார். அவர் அப்பாவுக்கு ஒரு தங்கை உண்டு.  அந்தத் தங்கை மீது அளவு கடந்த ப்ரியம். இவர் அம்மா வயிற்றில்  இருந்த போது அந்தத் தங்கை செத்துப் போக மனமொடிந்து விட்டாராம். அவர் வாழ்வின் மிகப்பெரிய துக்கம் நடந்து முடிந்த அதே வாரத்தில் பிறந்ததால் பிள்ளைக்கு துக்கசாமி என்று பெயர் வைத்து விட்டார். ஒருவகையில் அது நுட்பமான பழிவாங்கல்தான். தனக்குப் பிடித்த உயிரை எடுத்துக் கொண்டு வேறொன்றைத் தந்ததற்காக கடவுளின் மீது நிகழ்த்திய பழிக்குப் பழி. ஆனால் அது வந்து விடிந்தது மகன் தலையில்.அவர் பெயரைச் சொன்னாலே எல்லோரும் சிரிப்பார்கள். தன் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அவர் மெல்லிய கேலியுடன்தான் கடந்து வந்திருப்பார். ஆனால்  அது குறித்த எந்த மனவருத்தத்தையும் அவரிடம் நான் பார்த்ததில்லை. எல்லாப் பெயர்களையும் போல் இதுவுமொரு பெயர் என்கிற பாவம்தான் அவரிடமிருக்கும். என்னிடம் இதைச் சொன்ன போது கூட அவர் எந்த உணர்வுக்கும் ஆட்படவில்லை. ஒரு அறிவியல் விதியை எடுத்துரைக்கும் சமநிலை கொண்ட நிதானத்தோடுதான் அதைச் சொல்லி முடித்தார். ஒருவகையில் இவரும் தன் அப்பாவை பழி வாங்கி விட்டார் என்றுதான் இப்போது தோன்றுகிறது. மனித வாழ்க்கையில் கண்டுகொள்ளாமையை விட மிகப் பெரிய பழிவாங்கல்  எது?

இந்தியாவைப் பொறுத்தவரை பெயரில் சாதி, மதம்,வர்க்கம் எல்லாமே இருக்கிறது. பொதுப்புத்தி தனக்கான  முதல் தீனியை பெயரிலிருந்துதான் கொரிக்கத் தொடங்குகிறது. அதனால் தான் பெரியார் ‘லண்டன்’ என்று பெயர் வைத்து அதிர்ச்சியூட்டினார். எனக்கு ராமன் என்கிற பெயரில் ஒரு பள்ளித் தோழன் உண்டு. பாபர் மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு அவனை பார்க்கிற போதெல்லாம் எனக்கு அயோத்தி  இராமன் ஞாபகம் வந்து விடும். அதுவரை அது கடவுளின் பெயர் என்று நான் உணர்ந்ததே இல்லை. ஏதோ ஒரு  புறக்காரணத்தால் ஒரு பெயரே நமக்கு இன்னொன்றாகவும் உருமாறி விடுகிறது.

ஒருவருக்கு பெற்றோர் என்ன பெயர் வைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. மற்றவர்களின் மனதில் அவர் என்னவாக இருக்கிறார் என்பதே அவரது நிஜமான பெயராக இருக்க முடியும். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் முதுகலை படித்த போது  ஹாஸ்டலில் என் பெயர் அய்யாதான். பிறதுறை மாணவர்களுடன் எனக்கு பழக்கம் அதிகம். அவர்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள். இன்றும் கூட என்னைப் பற்றி பிறரிடம் பேசிக் கொண்டால் கூட அப்படித்தான். எந்த அய்யா என்று யாராவது கேட்டு ‘ரஃபீக்’ என்று என் நிஜபெயரைச் சொல்லி கேட்டவர்களிடம் புரிய வைக்க நேர்வது அவர்களுக்கு சங்கடம் தருகின்ற ஒன்று. கிட்டத்தட்ட முகத்தை பிறிதொரு உடம்புடன் ஒட்ட வைப்பதற்கு நிகரானது அது. கலைஞர் என்பது பெயராகி விட்ட பிறகு கருணாநிதி என்று வலிந்து அழைப்பவர்களின் குரலில் நூறாண்டு வரலாறு கொந்தளித்துக் கொண்டிருப்பதை உணர முடியும். ஆனால் அவருடைய குடும்பத் தொலைக்காட்சியே சேனல் போட்டிக்காக அந்தப் பெயரைத் தவிர்ப்பதை பார்த்த போது கார்ப்பரேட் உலகத்தில் ‘பெயர்’ தனக்கான மரியாதையை இழந்து விட்டதை உணர முடிந்தது. கார்ப்பரேட்டுகளுக்கு எல்லாமும் எண்கள்தான். எல்லோரும் எண்கள்தான்.சில ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வெளியிலும் மாணவர்களை ட்வெண்டி சிக்ஸ்,ஃபார்ட்டி ஃபோர் என்று அழைப்பதைப் பார்க்கும் போது இது மேலும் உறுதியாகிறது.

வரலாற்றில் சில பெயர்கள் விரும்பப்படுவதும், சில பெயர்கள் வெறுக்கப்படுவதும் அவர்களோடு  மட்டும் முடிந்து  விடுவதில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஜெர்மனியில் ‘ஹிட்லர்’ என்கிற பெயர் மிகவும் குறைந்து போனதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஔரங்கசீப் என்கிற பெயரோடு ஒரு மாணவன் வரலாற்று வகுப்பில் அமர்ந்திருந்தால் அந்த  ஆசிரியர் அவனை அவனாக மட்டுமே பார்க்கப் போவதில்லை. அறுபதுகளில் வைக்கப்பட்ட அண்ணாத்துரையும் கருணாநிதியும் அன்பழகனும் இங்கர்சாலும் லெனின் மற்றும் ஸ்டாலினும் அங்கங்கே ஜவஹரும் காந்தியும் தொண்ணூறுகளில் திடீரென்று எல்லா ஊர்களிலும் முளைத்த சதாம் ஹூசைனும் கேஸ்ட்ரோவும் பெயர்களை கடவுள், குடும்பம், பிறந்த நட்சத்திரம் என்கிற எல்லைகளைத் தாண்டி வரலாற்றுணர்வோடு இணைப்பவை. ஆனால் அமெரிக்கக் குழந்தைக்கு ‘சேகுவாரா ‘என்று பெயர் வைப்பது வரலாற்றின் மீதான பின்நவீனத் தாக்குதல். இதை விடக் கொடுமையாக எந்த மன்னனும் வரலாற்றின் மீது போர் தொடுத்து விட முடியாது.

யாரோ ஒருவருடைய கற்பனையில் உதித்த பெயர்கள் பல குழந்தைகளின் பெயர்களாகித் தொடர்வதாலேயே நிஜங்களாகி விடுவதுண்டு. நா.பார்த்தசாரதியின் நாவலைப் படித்து விட்டு அரவிந்தன்,பூரணி என்று பெயர் வைக்கிற தந்தைகள் உண்டு. எனக்குத் தெரிந்த  ஒரு நண்பர் தன் மகனுக்கு அரவிந்தன் என்று பெயரிட்டார்.அவன் அவரை தினந்தோறும் கல்லூரி வாசலுக்கு வர வைத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் விதவிமான விசாரணைகள். நா.பார்த்தசாரதியின் அரவிந்தனிடம் கற்றதை விட இந்த அரவிந்தனிடம் கற்றுக் கொண்டது அதிகம். அநேகமாக அவர் கண்ணெதிரில் நா.பா வந்திருந்தால் சட்டையைப் பிடித்திருப்பார். வானதி, நந்தினி, குந்தவை, ஆனந்தி, தணிகாசலம், உமா, செங்கமலம் போன்ற பெயர்கள் வைக்கப்படுகிற போதும், அழைக்கப்படுகிற போதும் பல மனங்களில் கல்கியும், அகிலனுமே வந்து போயிருக்கக் கூடும். யமுனா என்கிற பெயரை நதியின் பெயர் என்று புவியியல் தேர்வின் போது மட்டும் தான் நம்ப வேண்டியிருந்தது. பிற சமயங்களில் அவள் பாபுவின் காதலி. திஜா நம்மை அப்படித்தான் பழக்கியிருந்தார். யமுனா, புவனா, போன்ற பெயர்களில் யாரைப் பார்த்தாலும் எனக்கு காவேரி நதியிலிருந்து முகர்ந்த நீரைக் கொண்டு ஜாக்கிரதையாகப் போடப்பட்ட கும்பகோணம் டிகிரி காஃபியின் வாடை அடிக்கும். ஆனால்  அம்மணியையோ அலங்காரத்தையோ இதுவரை பார்த்ததில்லை. அப்பாக்கள் திஜா வின் ரசிகர்கள் என்பதையும் தாண்டி ஆண்கள் அல்லவா? ஜாக்கிரதையாகத் தான் இருப்பார்கள். ஜெயகாந்தன், பாலகுமாரன், ஆகியோரின் கதை நாயகர்களும்,நாயகிகளும் கூட பல வீடுகளில் குழந்தையாகப்  பிறந்து கொஞ்சப்பட்டிருப்பார்கள். வடிவ நேர்த்தியும் உலகத்தரத்திலான எழுத்தும் கொண்டு உருவாக்கப்பட்ட நவீனத்துவ நாவல்களின் கதை மாந்தர்கள் தங்கள் பெயர்களை நினைவூட்டிக் கொண்டு வீடுகளில் உலா வரவில்லை. கறாரான விமர்சகர்களால் ‘கற்பனாவாதம்’ என்று நிராகரிக்கப்பட்ட எழுத்துக்களிலிருந்தே ஆணும் பெண்ணும் கால் , கை முளைத்து வீடுகளிலும் வீதிகளிலும் நடமாடியதை அந்த விமர்சகர்கள் எப்படி சகித்திருப்பார்கள் என்றே தெரியவில்லை. ஒருவேளை அவர்களும் இந்தப் பெயர்களில் ஒன்றை தம் பிள்ளைகளுக்கு வைத்து பழிதீர்த்திருக்கலாம். யார் கண்டது?

கொண்டாடப்படும் சில பெயர்களும் கூட வேறு சில காரணங்களுக்காக பிள்ளைகளுக்கு வைக்கப்படுவதில்லை. கண்ணகி என்கிற பெயரை நான் குறைவாகவே கண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் மாதவிகளும், மணிமேகலைகளும் தான் அதிகம். கற்பு, சிலை என்று கண்ணகியைக் கொண்டாடிக் கொண்டே அவள் பெயரை புறக்கணிப்பதற்கு மனோவியல் ரீதியாக சில காரணங்கள் இருப்பதாகவே நான் ஊகிக்கிறேன். கண்ணகியின் இயல்புக்கு மீறிய பொறுமையும் சகிப்புத்தன்மையும் கடைசியில் கொள்ளும் உக்கிரமும் எல்லாவற்றையும் அழிக்கிற பயங்கரமும் நம்மை அச்சுறுத்துகிறது. அவளை சாமியாக மட்டுமே பார்க்க முடியும். சக மனுஷியாக அல்ல. அவள் மாதரி வீட்டில் கணவனுக்கு சமைத்துப் போட்டு வெற்றிலை மடித்துத் தரும் அந்த இடத்தில் மட்டுமே இயல்பான மனுஷியாக இருக்கிறாள். மற்ற இடங்களில் அவள் சாதாரணப் பெண்ணாக உலா வருவதில்லை. ஆண்களுக்கு தன் வீட்டில் இருக்கும் பெண்கள் அசாதாரணமாக  இருக்கக் கூடாது. அதனால்தான் மாங்கனியை வரவழைத்த புனிதவதியை அவள் புருஷன் அம்மா என்றழைத்து காரைக்காலம்மையாராக்கினான். அசாதரணமெல்லாம் வீட்டுக்கு வெளியில்தான். பெண் வடிவத்தோடு கோவிலில் மட்டும் அசாதரணம் இருந்தால் போதுமானது. ஆகவே தந்தைகளின் மனதில் கண்ணகி என்கிற பெயர் வந்து போவதே இல்லை. இன்னொரு அர்த்தத்தில் கண்ணகி என்கிற பெயர் ஆணின் குற்ற  உணர்ச்சியைத் தொட்டு அவன் ஈகோவைச் சீண்டுகிறது. எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு கோவலன் இருப்பது பிறருக்குத் தெரிகிறதோ இல்லையோ?அவரவர்க்கு நன்கு தெரியும். அதை எந்த அளவிற்கு  பொறுமையோடு எதிர் கொள்வது என்பதற்கான உச்சபட்ச அளவுகோல்தான் கண்ணகி. ஆனாலும் அவள் மெல்லிய நீருற்று அல்ல; வெடித்துச் சிதறும் எரிமலை. அதன் அடையாளம்தான் வழக்குரை காதையும்,எரிந்த மதுரையும், திருகி எரிந்த பின் மீந்திருக்கும் முலையும். அதை கோவலன் வேண்டுமானால் பார்க்காமல் செத்துப் போயிருக்கலாம். அவரவர்க்குள் இருக்கும் கோவலனை அந்தப் பெயர் அச்சுறுத்தாமல் இருந்திருக்க முடியுமா? ஆகவேதான் காப்பியத்திற்கு வெளியே கண்ணகிக்கான இட ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது. எல்லோரும் திருக்குறளைப் போற்றினாலும் திருவள்ளுவன் என்கிற பெயரும் அரிதாகவே வைக்கப்படுகிறது. அது ஒரு ஜாதியின் பெயராகவும் இருக்கிற மனத்தடை நாம் வள்ளுவரைத் தேடிப் போகாமலிருந்ததற்கு காரணமாயிருக்கிறது. பிள்ளைகளின் பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த குலதெய்வங்கள் திராவிட இயக்க எழுச்சி காலத்தில் ஓடிப்போய் விட்டார்கள். அறுபதுகளில் பூங்கொடிகளும் அறவாணன்களும் தமிழ் மணிகளும் அன்பரசன்களும் தமிழ் கூறும் நல்லுலகை கட்டி ஆண்டு கொண்டிருந்தார்கள். ஆங்கிலப் பள்ளிகளின் வருகை சமஸ்கிருதப் பெயர்களை தேடிப் போக வைத்த நகை முரணை எப்படிக் கடப்பதென்று தெரியவில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒரு ரமேஷோ ,சுரேஷோ உருவாகி ரேஷ்மாக்களுக்கு கோவிலில் வைத்து லவ் லெட்டர் கொடுத்தார்கள். இதில் பெரிய கொடுமை அந்தப் பெயர்கள் தமிழ்ப்பெயர்கள்தான் என்று அதை வைத்தவர்களும்,வைக்கப்பட்டவர்களும் தீவிரமாக நம்பிக் கொண்டிருந்ததுதான்.

வெள்ளையத்தா, சின்னத்தா, நடுத்தம்பி, மீரக்கா, நாச்சியாள் என்று இஸ்லாமியர்கள் பலரும் தமிழ்ப்பெயர்களோடு அலைந்த ஒரு காலம் இருந்தது. இங்கு எல்லா மதத்தவர்களுக்கும் அறிமுகமாகியிருந்த  இறை நேசர்களின் பெயர்களும் பலருக்கு வைக்கப்பட்டிருந்தன. திடீரென்று ஒரு நாளில் அவை தீண்டத்தகாதவைகளாக மாறிப் போயின. இன்னொரு புறத்தில் இந்தப் புதுப்பெயர்களை விஜயகாந்த், சரத்குமார், அர்ஜூன் படங்களின் இயக்குநர்கள் தங்கள் வில்லன்களுக்கு சூட்டிப் பார்த்தனர். பிம்பங்ளை நிஜ முகங்களில் மாட்டிப் பார்க்கிற அவலம் வெவ்வேறு வடிவங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  வாடகைக்கு வீடு மறுக்கப்படுவதற்கும், போலிஸ் சந்தேகப்படுவதற்கும்,பத்திரிக்கைகாரன் திரித்து எழுதுவதற்கும் ஒரு பெயரே போதுமானதாக இருக்கிறது. அஹமதுவோ ,அப்துல்லாவோ இப்படிப்பட்ட பெயர்களைக் கொண்டவர்கள் செய்கிற எந்தக் குற்றச்செயலும் தனிமனித குற்றமாக மட்டுமே கருதப்படுவதில்லை.

அதற்கு சர்வதேச தீவிரவாதத்துடன் எப்படியோ தொடர்பு வந்து விடுகிறது. ஒஸாமா என்று பெயர் வைத்த ஒருவன் காந்தி ஆசிரமத்தில் போய் சேர்ந்தால் கூட அவனது சூட்கேஸ் பிறரை ஏதோ ஒரு விதத்தில் அச்சுறுத்திக் கொண்டேயிருக்கும். ஷாருக்கானும்,அப்துல் கலாமும் கூட அவர்களின் பாஸ்போர்ட்டுகளில் வெறும் பெயராக இருக்கும் போது யாரையோ அச்சுறுத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால்தான் அமெரிக்கா அவர்களை ஆதி மனிதனாக்கி அழகு பார்த்தது. ஒரு பெயரை பொது சமூகத்தில் என்னவாகப் பதிய வைக்க முடியும் என்கிற ஊடக வல்லமைக்கான மிகப்பெரிய சான்று அந்த சமூகத்தின் சொந்த சோகமாக எஞ்சி நிற்கிறது.

காதல் வயப்பட்ட அப்பாக்கள் தங்கள் காதல் நினைவுகளை பெண் குழந்தைகளுக்குப் பெயராக வைத்து சமாதானம் அடைகிறார்கள். அந்தப் பிள்ளைகள் வளர்ந்த பிறகு இந்த விஷயம் தெரிய வந்தால் அதை எப்படி எதிர் கொள்வார்கள் என்று காதலனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த அப்பாக்கள் யோசிப்பதில்லை. ஆண்பிள்ளைகளுக்கு பெரும்பாலும் இந்த துர்பாக்கியம் வாய்ப்பதில்லை. அம்மாக்கள் காதலிக்காமல் இல்லை. ஆனால் பெயர் வைக்கும் உரிமை இன்றும் ஆண்கள் வசமே இருப்பதால் பெண்களின் காதல் பெயராகாமல் தப்பித்து விடுகிறது.

‘பேரினை நீக்கிப்  பிணமென்று பேரிட்டு’என்று உயிரோடிருப்பதற்கான அடையாளங்களில் ஒன்றாக பெயரையும் முன் வைக்கிறது சித்தர் மரபு. நம் பெயரால் நாம் உயிரோடு இருக்கிறோமோ இல்லையோ அதைச் சுருக்கி செல்லமாகக் கூப்பிடப்படும் போதோ,அல்லது புஜ்ஜிமா,அம்மு என்கிற பெயருக்கான மாற்றுச் சொற்களில் கொஞ்சப்படும் தருணங்களில்தான் நாம் அத்தனை  சிலுவைகளையும் கடந்து உயிர்த்தெழுகிறோம்.

அடுத்த முறை யாராவது யாரையாவது பெயர் சொல்லி அழைக்கும் போது சாதாரணமாகக் கடந்து விடாமல் சற்று உற்றுக் கவனியுங்கள். அதில் நூற்றாண்டுகளுக்கான காதலோ,வரலாற்றின் மீதான மெல்லிய புகாரோ, பண்பாடு குறித்த மறுபரிசீலனையோ ,அன்பை வேண்டி நிற்கும் ஒரு ஆன்மாவின் அலறலோ ஒளிந்திருப்பதை அவதானிக்க முடியும். ஏனென்றால் பெயர் என்பது வெறும் பெயராக இல்லை.ஒரு அர்த்தத்தில் அதுவே பிரபஞ்சமாக இருக்கிறது.

1 comment

Chitra P.S July 14, 2021 - 10:45 am

சில சமயம் பெயர்களை குறித்து யோசித்திருக்கிறேன். ஆண் /பெண் இருவருக்கும் பொதுவான பெயராகவே அறியப்படுவது
தமிழ், அறிவுமதி, முத்து, தங்கம், வைரம், பழனி ,இப்படி… அவை ஞாயபகம் வந்துவிட்டது. ? அருமை சார் ??? வாழ்த்துகள்

Comments are closed.