உலக மகாகவி: கதே

1 comment

என் வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டிகளாக, வெளிச்சத்தை வீசிய ஒளிவிளக்குகளாகத் திகழ்ந்த என் ஆசான்கள் அனைவருக்கும் நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்துவது எனது வழக்கம்; பேச்சாலோ எழுத்தாலோ செயலாலோ.

எனது 28ஆவது வயதில் என் முதல் மகன் பிறந்தான். அவனுக்கு நான் இட்ட பெயர்: கதே. ஏன்? ஒவ்வொரு முறை அவனைப் பார்க்கும்பொழுதும், அவனது பெயரைச் சொல்லி அழைக்கின்ற பொழுதும் என் இலட்சியத்தை நான் நினைவுகூர வேண்டும் என்று விரும்பினேன். அந்த இலட்சியப் பாதையிலிருந்து நான் விலகலாகாது என்ற விழிப்பு உணர்வை மறக்கக்கூடாது. அந்த அளவுக்கு என்னைப் பாதித்திருந்தார் கதே. ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்’ என்ற வள்ளுவனின் இலக்கணத்துக்கு இலக்கியமாக கதேயின் வாழ்வைக் கண்டேன். எல்லையற்ற வான்வெளியின் பரப்பு, கடலின் ஆழம், மழைத்துளியின் அமுதசாரம். ஒவ்வொரு விநாடியிலும். வாழ்வை அதிகமாக வாழ்ந்தவன் யார்? ஆழமாக வாழ்ந்தவன் யார்? என்று கேட்டால் அப்போது என் பதில்: கதே. இப்போது: வள்ளலார். கதே மனிதநிலையின் சிகரம். வள்ளலார் மனிதநிலையைக் கடந்தவர். நிற்க.

கதே

கதே

என் தாய்வீடுகள் மூன்று: நான் பிறந்த வீடு என் உடலை வளர்த்தது. இரு நூலகங்கள் என் அறிவையும் உயிரையும் வளர்த்தன: ஒன்று, மாவட்ட நடுவண் நூலகம். இரண்டாவது, சேலம் விஜயராகவாச்சாரியார் நினைவு நூலகம். உலக அறிவுத் தொகையின் சாரமான நூல்களை மட்டுமே கொண்டிருந்தன. அப்போது அந்த இரண்டாவது சொர்க்கத்தில்தான் நான் கதேவைக் கண்டெடுத்தேன். விலை மதிக்கமுடியாத கருப்பு முத்து ஒன்று என்னைத் தேடி வந்தது; என் கையில் அகப்பட்டது. எடுத்து என் உயிருக்கு அமுதமாக ஊட்டினேன். வாழ்ந்தால் கதேவைப் போல் வாழவேண்டும் அல்லது அதற்கு மேம்பட்ட வாழ்வை வாழ வேண்டும் என்ற இலக்கு என் மனதில் உறுதியானது. அந்த மேலேறும் வீதியை வள்ளலார் எனக்குக் காட்டினார். என்னுடைய சொர்க்கம் உலகின் ஆகச் சிறந்த நூல்கள் மட்டுமே கொண்டதோர் நூலகம். அதில் இரவு பகல் பாராது நான் வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். உலக மேதைகளுடன் ஓயாமல் உரையாடிக் கொண்டிருக்க வேண்டும். தமிழில் திருவள்ளுவர், திருமூலர், மெய்கண்டார், நம்மாழ்வார், தொல்காப்பியர், கம்பர், வள்ளலார். வடமொழியில் உபநிடதங்கள், பதஞ்சலி. கிரேக்கத்தில் ஹோமர், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், புளூடார்க். இலத்தீனில் விர்ஜில், சிசரோ. இத்தாலிய மொழியில் தாந்தே. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன், ரஸ்ஸல், பேகன், எமர்சன், விட்மன். ஜெர்மன் மொழியில் கதே, ஷில்லர், ஹோல்டர்லின், ரில்கே, கான்ட், ஹெர்டர், ஹெகல், மார்க்ஸ். ஸ்பானிய மொழியில் பாப்லோ நெரூடா. உருஷ்ய மொழியில் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி. சீன மொழியில் லாவோட்ஸே, கன்பூசியஸ். இப்படியே மற்ற மொழிகளில் உள்ள மேதைகளின் உன்னத இலக்கியங்கள்.

தினம் ஒரு கவிதை, ஓர் ஓவியம், ஓர் இசை என்று ரசித்துச் சுவைத்துக் கொண்டேயிரு. வாழ்க்கை இனிமையானது என்று கண்டுகொள்வாய் என்றார் கதே. அந்த வாக்கியத்தை மகாமந்திரம் போல் நடைமுறைப்படுத்தி வருகிறேன் இன்றுவரை. தற்போது ஒரு சிறு மாற்றம்: ஒரு திரைப்படத்தையும் – உலகத் தரமான கலைப் படைப்பைப் பார்க்கிறேன்.

வாழ்க்கைக்காகப் படி என்றார் பிரான்சிஸ் பேகன். படிப்பதற்காக வாழ்கிறேன் நான். சரியோ தவறோ வாசிப்பு எனக்குத் தரும் சுகத்தை வேறு எதுவும் யாரும் தரவில்லை. என்னை என் வாழ்வை மாற்றியமைத்தவை புத்தகங்களே. என் புத்தகங்களே என் உயிர். முடிந்தால் உலகத்தரமான ஒரு புத்தகத்தையாவது என் வாழ்நாளில் எழுதவேண்டும். இந்த மேதைகளுடன் அமர்ந்து உறவாட ஒரு தகுதி வேண்டும்; உறவாடியதன் பலன் வேண்டும்.

ஒவ்வோர் ஆசானிடமும் நான் என்ன கற்றேன் என்று தெளிவாக உணர்ந்துகொள்ள விரும்பினேன். ‘எழுதிப்பார், தெளிவு பிறக்கும்’ என்ற பேகனின் புகழ்பெற்ற உபதேசத்தைச் செயல்படுத்தினேன். நீட்சே, ரூஸோ, வால்டேர், ஹெர்டர், வள்ளுவர், வள்ளலார் ஆகியோரைப் பற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன். தற்போது கதே.

‘கொய்டெ’ என்று ஜெர்மன் மொழியில் அவரது பெயரை உச்சரிக்கிறார்கள். நான் தமிழில் ‘கதே’ என்ற எளிய செல்லப் பெயரை, எனக்கு வழக்கமான முறையில் அழைக்கிறேன்.

கதேவையும், ரில்கேவையும், கான்ட்டையும், ஹெகலையும், மார்க்ஸையும் மூலத்தில் படிப்பதற்காகவே ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பினேன். இன்றுவரை அது கனவாகவே எஞ்சியது என் வாழ்வில் ஒரு சோகம். எனினும், வள்ளுவனையும் திருமூலனையும், வள்ளலாரையும் மூலத்தில் படிக்கும் வாய்ப்பு கிட்டியதை நினைத்து மகிழ்ந்து அதை மறக்கிறேன். இதுவா அதுவா எனில் இதுதான். தமிழ் மூவருக்குப் பிறகுதான் மற்றவர்கள். என் உண்மையின் தேட்டத்தில் நான் வந்து சேர்ந்திருக்கும் இடம் இதுதான். மற்றவர்களுக்கு வேறாக இருக்கலாம். அவரவர் வழி அவரவர்க்கு. ‘அவரவர் விதிவகை அவரவர் தெய்வம்’ என்பது திராவிட வேதமாகிய நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் நம்மாழ்வாரின் புகழ்பெற்ற வாக்கு. ஆசான்களுக்கும் நூல்களுக்கும் கூட இது பொருந்தும்.

ஒரு மேதையின் வாழ்க்கை வரலாற்றை, அவரது நூல்களை ஏன் வாசிக்க வேண்டும்?

ஒருசில வீடுகளில் ஒற்றைத் தென்னை மரம் இருக்கும். சோலைகளில் பல்வேறு மரங்கள், செடிகொடிகள் பூத்துக் காய்த்திருக்கும். அதோடு அவை ஒழுங்குபடுத்தப்பட்டு, பார்த்து ரசிக்க மக்களுக்காக பாதைகள் போடப்பட்டிருக்கும்.

அடர்ந்த மழைக் காடுகளில் ஏராளமான, விதவிதமான மூலிகைகளும், மரங்களும், எல்லா வகைத் தாவரங்களும் செறிந்திருக்கும்.

ஆனால் சூரியன் கூட நுழைய முடியாத இருட்டும் வெப்பமும் இருக்கும். உள்ளே புகவே மக்கள் அஞ்சுவார்கள்.

அப்படிப்பட்ட ஒரு பெரிய காட்டை ஒழுங்குபடுத்தி, பாதைகள் அமைத்து, மாபெரும் சோலையாக மற்றினால் எவ்வளவு பலன் தரும்? எத்தனை சமுதாயங்கள் பயன் பெறும்?

மேதைகளின் மனங்களில் இந்த நான்கு வகைகளும் உண்டு. உலகைப் பற்றிய ஓரிரண்டு உண்மைகளைக் கண்டுபிடித்துச் சொல்வர் சிலர் – ஐன்ஸ்டீன், டார்வின் போல.

பெரும் காடாக ஏராளமான கருத்துகளைக் கொண்டிருக்கும் சில உள்ளங்கள். ஆனால் அவை கச்சாப் பொருட்களாக, ஒழுங்குபடுத்தப்படாமல் இருக்கும். ஆங்கில அறிஞர் தாமஸ் கார்லைல் போல. அவருடைய நூல்களான ‘இறந்த காலமும் நிகழ்காலமும்’ என்பவற்றில் அவர் அள்ளித் தெளித்த கருத்துகளில் ஒன்றுதான் ‘ரொக்கக் கும்பல்’. முதல், ரொக்கம், முதலாளித்துவம் எவ்வாறு சமூகத்தை, வாழ்வை விலைபேசுகின்றது, கொள்ளை அடிக்கின்றது என்று விளக்கினார். சொல்லிவிட்டு மேலே வேறு கருத்துகளுக்குச் சென்றுவிடுகிறார். அந்த விதையை வளர்த்துப் பெரிய மரமாக்கிப் பலன்களைக் காணவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு அப்பணியைச் செய்து முடித்தவர் கார்ல் மார்க்ஸ் – தன் ‘மூலதனம்’ நூலில். அதேபோல் கார்லைலுடைய ‘வீரர்கள் வீர வழிபாடு, ‘வரலாற்றில் வீரம்’ என்ற நூலில் சொல்லப்பட்ட முரட்டுத்தனமான கருத்துகளை அவரது நண்பரான அமெரிக்க அறிஞர் எமர்சன் குறைகளைக் களைந்து சீர்மைப்படுத்தி, ‘பிரதிநிதித்துவ மனிதர்கள்’ என்ற நூலாக்கினார். இன்றும் மார்க்ஸூம் எமர்சனும் படிக்கப்படுகிறார்கள். கார்லைலை உலகம் மறந்துவிட்டது.

மூன்றாவது வகை அழகாக வடிவமைக்கப்பட்ட சிறிய சோலை. ஒருசில கருத்துகள் இருக்கும். ஆனால் முறையாக வளர்க்கப்பட்டு, அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ரூஸோ, வால்டேர், எமர்சன் இந்த வகை.

கடைசியாகச் சொல்லப்பட்ட வகை மேதைகள் அரிது. விரல் விட்டு எண்ணிவிடலாம். வாழ்வைப் பற்றிய, மனிதனைப் பற்றிய, இயற்கையைப் பற்றிய, கடவுளைப் பற்றிய அனைத்துக் கருத்துகளும் ஒழுங்குடன், நிறைவாக அணிவகுத்து நிற்கும். பிளேட்டோ, அரிஸ்டாடில், லீப்னிட்ஜ், கான்ட், ஹெகல், வள்ளுவர், திருமூலர், வள்ளலார் போன்றவர்கள் இந்த வரிசையில் இடம்பெற்றவர் கதே. தங்களுடைய சிந்தனைகளால் எதிர்காலத்தை மாற்றியமைத்தவர்கள். எல்லையற்ற சிந்தனை வலிமைமிக்க அறிவாளிகளில் அசுரர்கள். சூரியனுக்குக் கீழே உள்ளது எதுவும், அதேபோல் மேலே உள்ளது எதுவும் இவர்களுடைய பார்வைக்கு, சிந்தனைக்குத் தப்பியது இல்லை. இவர்களைப் படித்தாலே போதும், மனிதகுல அறிவு யாவற்றையும் பெற்றுவிடலாம். அல்லது இப்படிச் சொல்லலாம். முதலில் இவர்களைப் படித்துவிட்டுப் பிறகு மற்றவர்களைப் படிக்கலாம். இவர்கள் அன்னம்; மற்றவர்கள் காய்கறிகள், கூட்டு, ஊறுகாய். இது என் அனுபவம்.

 

கதே: வாழ்க்கைக் கலை

கதே சம்பாதித்த பட்டங்களுள் தலையாயது: ஞானி, அறிவாளி, வாழ்க்கைக் கலையில் தேர்ந்தவர். வாழ்க்கை மனிதர்களை வென்றது. கதே வாழ்க்கையை வென்றார். வாழ்க்கை சம்பவங்களின் தொகுப்பு. சம்பவங்கள் சூழ்நிலையின் வெளிப்பாடுகள். மனிதன் சந்தர்ப்பங்களின் அடிமை; சூழ்நிலையின் கைதி. இதுவே எல்லா மனிதர்களின் கதை.

ஞானி என்பவன் தனக்கேற்றவாறு சம்பவங்களையும் சூழ்நிலையையும், தன் மனோபலத்தால், ஆத்ம பலத்தால் உண்டாக்குகிறான். எப்படி? என்ன வழி? முதலில் தன்னை அறிகிறான்: தன் உடலை, மனதை, ஜீவனை, ஆன்மாவை, தன் அறிவை, அறியாமையை, பலங்களை, பலவீனங்களை. அடுத்து அவற்றை ஆள்கிறான்.

கதே தன் இளம் வயதிலேயே தன்னை அறிந்து கொண்டார். எப்படி? கவிதை எழுதுவதன் மூலம். அதுவும் தன்னுணர்ச்சிக் கவிதைகளை எழுதுவதன் மூலம். தான் ஓர் உணர்ச்சிப் பிழம்பு என்பதை உணர்ந்தார். ஒவ்வொரு நிகழ்வும் தன்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர்ந்தார். அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பை உடனே ஒரு கவிதையாக வடித்தார். அவருடைய பெரும்பாலான கவிதைகள் அவர் வாழ்வின் நிகழ்வுகளைப் பற்றியவையே. ஜெர்மானிய இலக்கியம் தன்னுணர்ச்சிக் கவிதையின் உச்சத்தை எட்டியது கதேவின் கொடை.

ஒவ்வோர் இலக்கிய வகைக்கும் ஒவ்வொரு விளைவு உண்டு. தன்னை அறிதலுக்குப் பயன்படும் இலக்கிய வகைகள் குறிப்பாக: 1) தன்னுணர்ச்சிக் கவிதை, 2) கடிதங்கள், 3) நாட்குறிப்புகள், 4) தன் வரலாறு, 5) தன் அனுபவம் சார்ந்த கட்டுரைகள் 6) ஓரளவுக்கு நாவல் பாத்திரங்களில் தன் கதையை மையமாக வைத்து எழுதுதல்.

இந்த எல்லா இலக்கிய வகைகளிலும் ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார்: ஆயிரக்கணக்கில் தன்னுணர்ச்சிக் கவிதைகள், பல்லாயிரக்கணக்கான கடிதங்கள், ஏராளமான நாட்குறிப்புகள், உலகப் புகழ்பெற்ற அவரது தன் வரலாறு “உண்மையும் கவிதையும்”, தன் இத்தாலியப் பயணம் குறித்த பயணக் கட்டுரை நூல். தான் ஸ்ட்ராஸ்பெர்க் நகர மாதா கோயிலைக் கண்ட அனுபவத்தை ஜெர்மானிய கட்டிடக் கலை குறித்த ஆய்வுக் கட்டுரையாகவும், தான் அதைக் கண்டு அடைந்த ஆனந்த வெளிப்பாடாகவும் ஒரு ‘தனிப்பட்ட கட்டுரை’யாக எழுதினார். இதைப்போல் தான் கற்ற நூல்கள், கண்ட சிற்பங்கள், ஓவியங்கள் யாவற்றைப் பற்றியும் கலை, இலக்கியக் கட்டுரைகள் வரைந்தார். ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற கதாபாத்திரமான ஹாம்லெட் பற்றிய அவரது அனுபவத்தையும் ஆய்வையும் தான் எழுதிய ‘வில்லியம் மெய்ஸ்டர்’ நாவலில் ஒரு கட்டுரை அளவுக்கு விரிவாக எழுதினார். ஹாம்லெட் பற்றி எழுதப்பட்ட திறனாய்வுகளிலே இது முன்னிலை வகிப்பதாகப் பல திறனாய்வாளர்கள் குறித்துள்ளனர். உலகப் புகழ்பெற்ற இந்த நாவல் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இரண்டு பகுதிகளாக வெளியானது.

இந் நாவல் ஒரு புதுவிதமான இலக்கிய வகை மாதிரியைத் தோற்றுவித்தது. ஓர் இளைஞன் வாழ்க்கையை, கலையை, இலக்கியத்தை எவ்வாறு புரிந்துகொள்கிறான்? அதன் மூலம் எவ்வாறு தன்னையே அறிந்து, செதுக்கி, அறிஞன் ஆகிறான்? என்று சம்பவங்களாலும் சிந்தனைகளாலும் காட்டுவது. ஒரு மனித உள்ளம் எவ்வாறு செம்மை அடைகிறது? அதன் உத்திகள் என்ன? என்னென்ன தடைகள் வரும்? அவற்றை எவ்வாறு வெல்வது? என்னென்ன தவறுகளை எப்படித் திருத்திக் கொள்வது? இவை போன்ற கேள்விகளுக்கு, வாழ்க்கை, தத்துவ இயலின் அடிப்படைக் கேள்விகளுக்குத் தான் கண்டறிந்த விடைகளை கதே தனக்கே உரிய பாணியில் படைக்கிறார். பிறகு, தன் படைப்புகள் எவ்வாறு ஆசிரியனான தன்னையே மாற்றியமைத்தன என்று கண்டு சொல்கிறார். இதே ‘தன்னை அறிதலைத்’ தான் இன்னும் சற்று மேல்தளத்தில் தன் உலகக் காப்பியமான ‘ஃபௌஸ்ட்’ நாடகத்திலும் ஆராய்கிறார். ஃபௌஸ்ட் கதைதான் கதேயின் கதை. ஆனால் ஃபௌஸ்ட் தோற்ற இடத்தில் கதே வெற்றி பெற்றார். வாழ்வின் பொருளை உணர்ந்துகொண்டு, வாழ்வை ஆண்டார், எழுத்தை ஆண்டதைப் போலவே.

வாழ்வை ஆள முடியுமா? முடியும் என்றார் கதே. தன் வாழ்வில் நிரூபித்தார். ஆச்சர்யமான ஒரு செய்தியை ஓர் உரையாடலில் வெளிப்படுத்துகிறார். “எண்பது ஆண்டுகள் கூட தன் உயிரைத் தக்கவைத்துக் கொள்ளத் தெரியாத இவர்கள், வேறு எதைச் சாதிக்கப் போகிறார்கள்?” என்று நாற்பது, ஐம்பதுகளில் இறந்து போன கவிஞர்கள், எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்கிறார் – ஏதோ ஆயுள் என்பது மனிதரின் கையில் இருப்பதைப் போல. ஆம். ஆயுள் மனிதரின் கையில்தான் உள்ளது. இது சித்த மார்க்கம். சித்த மார்க்கம் உலகெங்கிலும் உண்டு. இரசவாதம் சித்தர் நெறியே. நியூட்டனைப் போலவே கதே, ஓர் இரசவாதி. ‘கதே என்ற இரசவாதி’ என்ற பெயரில் ஒரு நூலே உண்டு. தான் சாதிக்க நினைத்தவற்றை எல்லாம் ஆற்றியபின் தன் காப்பியமான ‘ஃபௌஸ்ட்’டை எழுதி முடித்து சீல் வைத்துவிட்டு, தன் 83வது வயதில் அமைதியாக, ஒரு காலை வேளையில் ‘அதிக ஒளி’ என்ற இறுதிச் சொற்களுடன் கண்களை மூடினார் அந்த மகாகவி. அவர் அதிக வெளிச்சத்தை அறையில் வேண்டினார் என்று வேலைக்காரி சாளரத்தின் திரைச்சீலைகளை விலக்கினார். இவ்வுலக ஒளியை விடப் பேரொளியைக் கண்டு, அங்கே போனார் என்று வேறு விளக்கம் தந்தனர் சில தத்துவஞானிகள். ஹோல்டர்லின், ஷில்லர், பைரன் போன்ற சிறந்த கவிஞர்கள் அவரது சம காலத்தவர். ஆனால் இளம் வயதிலேயே இவர்கள் மாண்டதால் மகாகவிகள் என்ற அந்தஸ்தை அடைய முடியவில்லை. பெரும் காப்பியங்களை எழுத முடியவில்லை. அதற்கு நீண்ட ஆயுள் முதல் தகுதி. இரண்டாவதாக, உத்வேகம் என்ற அதிவேகமான உயிர்க்கொல்லியை அறிந்து உணர்ந்து, அளவாக ஆண்டு, பயன்படுத்த வேண்டும். ‘மேதைமை’ ஒரு காட்டாறு; அதையே அணை கட்டி ஆண்ட பெரும் ஆளுமை கதேவின் தனித்த பேராற்றல். மற்றவர் அவரை ‘அதிர்ஷ்டசாலி’ என்றும் ‘அதிர்ஷ்ட தேவதையின் செல்லப்பிள்ளை’ என்று சொல்வதெல்லாம் அறியாமை; மேல்நிலை உண்மைகளை அறியாமை.

ஒரு கவிதை உள்ளத்தின் வளர்ச்சி என்ற பெயரில் ஒரு நீண்ட கவிதை நூலை எழுதினார். அதைப் பார்த்து அமெரிக்க மகாகவி வால்ட் விட்மன் ‘என் பாடல்’ என்ற உலகப் புகழ் பெற்ற கவிதையை எழுதினார். இவற்றுக்கெல்லாம் முன்மாதிரி கதே எழுதிய வில்ஹெல்ம் மெய்ஸ்டர் நாவலும், ஃபௌஸ்ட் காப்பியமும்தான். இந்நாவலின் அருமையை உணர்ந்த ஆங்கில அறிஞர் தாமஸ் கார்லைல் அதை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

காதல் மன்னன்:

‘கதே எப்போதும் காதல் வயப்பட்டவராகவே இருந்தார்’ என்று பாராட்டாகவும் குறைகூறலாகவும் அவரது வரலாற்றை எழுதிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இளமை முதல் முதுமை வரை யாராவது ஒரு பெண்ணிடம் காதல் கொண்டிருந்தார் இக்கவிஞர். கவிதையின் ஊற்று பெண்ணின் உடல்தான், இரு பால்களின் சங்கமம்தான் என்று இவர் அறிந்து, நடத்திக் காட்டிய பிறகுதான், விக்டர் ஹ்யூகோ, பைரன், ஷெல்லி, டி.எஸ்.எலியட், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், பிக்காஸோ, ரிச்சர்ட் வாக்னர் போன்ற பிற்கால மேதைகள் இப்பாதையில் சென்று பலன் பெற்றனர். கலாச்சாரம் என்பது காமத்திற்கும் சாவிற்கும் இடையிலான போராட்டம் என்பது பிராய்டின் புகழ்பெற்ற வாக்கு. அதை விரித்து, ‘காமமும் நாகரீகமும்’ என்று ஒரு நூலே எழுதினார் மார்க்சீய அறிஞர் ஹெர்பர்ட் மார்க்யூஸ்.

கதே தன்னுடைய 72ஆவது வயதில் ‘மரியன்பாடு’ என்ற ஊருக்குப் போகிறார். அங்கே இருந்த வெந்நீர் ஊற்றுகள் ஆரோக்கியத்தையும் இளமையையும் தரும் என்ற நம்பிக்கை. ஒரு நடன நிகழ்ச்சியில் 17 வயதான அழகான இளம்பெண்ணைக் காண்கிறார். கண்டவுடன் காதலில் விழுகிறார். அவளுடனேயே இருக்க ஆசைப்படுகிறார். அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனே ஒரு காதல் பாடலை இயற்றி, இசையத்து, பியானோ இசையுடன் பாடுகிறார். உச்சகட்டமாக, அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார். இந்த முதல் மந்திரிக்காக பெண் கேட்டு சீர்வரிசைகளுடன் முடிமன்னர் கார்ல் ஆகஸ்ட் அந்தப் பெண்ணின் வீடு தேடிச் செல்கிறார். அவளது தாய் மறுத்து விடுகிறார். சோகத்துடன் வீடு திரும்புகிறார் கவிஞர். வருகின்ற வழியில் தன் காதலையும், அது நிராசையான சோகத்தையும் கொட்டி ஒரு நீண்ட கவிதையை எழுதுகிறார். ‘மரியன்பாடு இரங்கற்பா’ என்ற அந்தக் கவிதையே ஜெர்மன் மொழியில் உள்ள ஆகச் சிறந்த காதல் கவிதை என்று சாமர்ஸெட்மாம் போன்ற திறனாய்வாளர்கள் கருதுகின்றனர்.

கதே இறந்த பிறகு அவரது நிர்வாண உடலைப் பார்த்த மருத்துவர் வியப்படைந்தாராம். அவரது உறுப்புகள் ஓர் இளைஞனுக்குரியதைப் போல் இருந்தனவாம். தன் உடலையும் மனதையும் உயிரையும் அறிந்து ஆளத் தெரிந்த வாழ்க்கைக் கலை மேதை கதே.

உறவுகளில் சீர்மை

ஒவ்வோர் உறவும் நம் மனதின் ஒரு பகுதியைக் காட்டும் கண்ணாடி என்பார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. ஆரோக்கியம், செல்வம் இவற்றுக்கு அடுத்தபடியாக வாழ்வில் பெரும் பிரச்னை உறவுகள்தான். பெரும் பெரும் மேதைகள், தத்துவவாதிகள், ஞானிகள் கூடத் தோற்ற இடம் இது. யானைகளும் சிக்கிக்கொண்ட சேற்றுக் குழி. ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்திக்கும் அவரது நண்பரும் செயலாளருமான இராஜகோபாலுக்கும் இடையே பகைமை தோன்றி, பல வருடங்கள் வழக்காடு மன்றத்தில் நீடித்தது. இறுதிக் காலத்தில் அவருக்கும், அவரது நண்பரான விஞ்ஞானி டேவிட் பாமுக்கும் இடையே இருந்த நட்பில் சிறு விரிசல் ஏற்பட்டதாக அவரது வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

தெய்வீகமான பிளேட்டோ என்று வர்ணிக்கப்பட்ட கிரேக்கத் தத்துவஞானி கூட இந்த விதிக்கு விலக்கல்ல. இவரது புகழைக் கேள்விப்பட்ட சைரக்யூஸ் மன்னன் டையான் இவரைத் தன் அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தான். இவரது புகழ்பெற்ற ‘குடியரசு’ நூலில் கண்டபடி தன் அரசில் சில சீர்திருத்தங்களைச் செய்தான். ஆனால் விரைவில் அரசியல் சதிகளும் வஞ்சகச் சூழலும் பிளேட்டோவைச் சிறையில் தள்ளின. பின்னர் ஒரு நண்பரின் சிபாரிசின் பேரில் விடுதலை செய்யப்பட்டு, ஏதன்ஸ் திரும்பினார். ஒரு பெரும் தத்துவவாதியின் கதை இது.

அடுத்து ஒரு பெரிய கவிஞரும், வரலாற்றாசிரியரும், மாபெரும் சீர்திருத்தவாதியும், யுக புருஷருமான (இவரது நூற்றாண்டை ‘வால்டேரின் யுகம்’ என்றே அழைக்கிறார் உலக வரலாற்றாசிரியர் வில் டியூரான்ட்) பிரெஞ்சு மேதையின் பரிதாபமான கதை. பிரஸ்ய சக்ரவர்த்தி மகா பிரெடரிக்கின் அழைப்பை ஏற்று பெர்லின் நகர் சென்றார். மன்னரின் அரண்மனையில் விருந்தாளியாகத் தங்கினார். பழகப் பழகப் பாலும் புளித்தது. இவரது அறிவை விட வாய் நீளம். மன்னன் இவரைச் சிறையில் வைத்தான். தலை தப்பினால் போதும் என்று ஜெர்மன் தேசத்தை விட்டு வெளியேறினார்.

மன்னர்களிடம் எப்படிப் பழக வேண்டும்? எப்படிப்பட்ட உறவுமுறை வைத்துக்கொள்ள வேண்டும்? இக் கேள்விக்கான இலக்கணத்தை எப்போதும் போல உலகப் பேராசான் வள்ளுவனே வகுத்தான்.

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

இந்த இலக்கணத்துக்கு இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர் கதே. தனது 26ம் வயதில் கார்ல் ஆகஸ்ட் என்ற குறுநில மன்னனின் நட்பு கிடைத்து அவனது சமஸ்தானமான வைமர் நகரில் குடியேறினார். மந்திரியாகி, முதல்மந்திரியாகி, மன்னனின் இணை பிரியாத நண்பனாகி, மன்னன் இறக்கும் வரை, தான் தன் 83ம் வயதில் காலமாகும் வரை அந்நகரை விட்டு வெளியேறவில்லை. அரச குடும்பத்துடனான அவரது நட்பு சற்றும் விரிசல் விடாமல் பார்த்துக்கொண்டார்.

இலத்தீன் மொழியில் பெரும் தத்துவ மேதை, கவிஞர் நாடகாசிரியர். (இவரது நாடகங்களைக் காப்பியடித்தே ஷேக்ஸ்பியர் உலகப் புகழ் பெற்றார் என்பவர் உண்டு), மதியூகி மந்திரி செனகா. இளவரசன் நீரோவுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர். நீரோ மன்னன் ஆனதும் இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு, ஆசிரியரைச் சிறையில் அடைத்துப் பின் கொன்றான்.

வைமர் இளவரசன் கார்ல் ஆகஸ்ட் கதேவை விட 6 வயது இளையவன். கவிஞரை நண்பராகவும் போதகாசிரியராகவும் ஏற்றுக்கொண்டான். இந்த இனிய உறவு இறுதிவரை உவர்ப்பாக மாறவில்லை. மாறாமல் பார்த்துக்கொண்டார் கதே. கவிஞன் உணர்ச்சிமயமானவன். இவரோ உணர்ச்சிகளின் சூறாவளி. ஆனால் எப்போதும் தன் அறிவு என்ற அங்குசத்தால் தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கப் பயின்ற உண்மையான அறிவாளி. அறிவை ஆளத் தெரிந்தவர்.

சென்ற இடத்தில் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு

என்ற வள்ளுவ இலக்கணத்துக்கும் உயிர் கொடுத்தவர் கதே. இரண்டு புலவர்கள் இருந்தால் இடையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் வைக்க வேண்டும் என்று ஈ.வெ.ரா. பெரியார் சரியாகச் சொன்னார். உலகெங்கும் இன்றுவரை இதுதான் நடைமுறை. பிரான்சு நாட்டில் ரைம்போவுக்கும் வெர்லைனுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு; இங்கிலாந்தில் வேர்ட்ஸ்வொர்த்துக்கும் கோல்ரிட்ஜீக்கும் இடையில் ஏற்பட்ட உறவு எல்லாம் பகையில்தான் முடிந்தது. ஆனால் இலக்கிய உலகின் அதிசயமாகத் திகழ்ந்தது கதேவுக்கும் ஷில்லருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு. ஒருவரால் மற்றொருவர் பயன்பெற்றனர்; படைப்பாற்றலில் உயர்ந்தனர். ஜெர்மானிய இலக்கியம் புதிய சிகரத்தை எட்டியது. ஷில்லர் ஆசிரியராக இருந்து ஓர் இலக்கிய, தத்துவ இதழைத் தொடங்கினார். அதில் கதேவை எழுதச் சொன்னார். கதேயின் ஈடுபாடு அப்போது இலக்கியத்திலிருந்து அறிவியலுக்கு மாறியிருந்தது. அந்த ஆர்வத்தை மீண்டும் இலக்கியத்துக்குக் கொணர்ந்தார் ஷில்லர். புதிய கவிதைகளை கவிதை நாடகங்களை கதே எழுதினார். ஷில்லரின் கவனம் இலக்கியத்திலிருந்து தத்துவத் துறைக்குத் திரும்பியிருந்தது. அதை மீட்டு இலக்கியத்தின் பக்கம் இழுத்து வந்தார் கதே. ஒரு புதிய நாடக அரங்கம் வைமரில் நிர்மாணிக்கப்பட்டது. ஒரு மாதம் கதே எழுதி இயக்கிய நாடகம் நடத்தப்பட்டது. அடுத்த மாதம் ஷில்லருடையது. இவ்வாறு மாற்றி மாற்றி நடத்தப்பட்டது. ஷில்லரின் நாடகங்களுக்கே பெரும்பாலான மக்களின் ஆதரவு இருந்தது. ஏனெனில் அவரது பாணி மிகுகற்பனை வகையைச் சார்ந்தது. அந்த இயக்கத்தை உண்டாக்கியவரே கதேதான். ‘வெர்தரின் துயரங்கள்’ என்ற அவரது புனைவிலக்கியம் உலகப் புகழ் பெற்றது.

அந்த இயக்கத்திலிருந்து விடுபட்டு கதே மீண்டும் பழைய செவ்வியல் வகைக்குத் திரும்பியிருந்தார். கிரேக்க நாடகாசிரியர்களான சாஃபோகிளிஸ், ஈஸ்கிலஸ், யூரிபிடீஸ், பிரெஞ்சு செவ்வியல் நாடகாசிரியர்களான ராசின, மோலியேர் போன்றவர்கள் எழுதிய ‘துன்பியல்’ நாடகங்களே இலக்கியத்தில் காப்பியங்களை விட உயர்ந்த இலக்கியங்களாகக் கருதப்பட்டன. அத்தகைய செவ்வியல் நாடகங்கள் தன் ஜெர்மானிய மொழியில் இல்லையே என்ற ஆதங்கம் கதேவுக்கு ஏற்பட்டது. அக் குறையைத் தீர்க்க அவ்வகைச் செவ்வியல் நாடகங்களை கதே எழுதினார். மக்கள் ரசனை மாறியிருந்தது. அவை எடுபடவில்லை. ஷில்லரின் ரொமான்டிக் நாடகங்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்தது. அதற்காக கதே தன் இளைய நண்பரின் மீது பொறாமை கொள்ளவில்லை. ஏனெனில் கதே உண்மையை உணர்ந்திருந்தார். இலக்கியம் இரண்டு வகைகளில் எழுதப்படுகிறது. 1. அவ்வக்காலத்துக்கு ஏற்ற பாடுபொருள்களை உத்தி முறைகளைக் கைக்கொண்டு எழுதுவது. 2. எல்லாக் காலங்களுக்குமாக எழுதுவது. முதல் வகையை ஷில்லரும், இரண்டாவது வகையை கதேவும் தேர்ந்தெடுத்தனர். இருவரின் நோக்கமும் வேறுவேறு. அதனால் நட்பு பாதிக்கப்படவில்லை.

கதே நடுத்தர வகுப்பில் பிறந்தவர். அரச பரம்பரையினருடன் காலம் கழித்தவர். அந்நாட்டில் சாதிப் பிரிவுகள் இல்லை. எனினும் மேல்குடி, கீழ்க்குடி என்ற வர்க்க பேதம் உண்டு. ஆனால் கதே மனிதர்களிடையே வேறுபாடு பார்க்காதவர். ஐம்பது வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டார். யாரை? தன் வீட்டு வேலைக்காரியை. உலகமே வியந்தது. மகன், பேரக் குழந்தை என நிறைவான இல்லற வாழ்க்கை வாழ்ந்தார்.

தயாள குணமும், ஏழைகளின் பால் இரங்கி உதவும் பண்பும் கொண்டவர் அவர். அவருடைய மருத்துவர் அவருடைய இறப்புக்குப் பின் ஒரு செய்தியை வெளியிட்டார். பலமுறை கடுமையான நோய்களுக்கு ஆட்பட்ட பிற நோயாளிகளின் வைத்தியச் செலவுக்காக மருத்துவருக்குப் பொருளுதவி செய்வாராம். ஆனால் வெளியில் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்குவாராம். அதனால்தான் அவருடைய இறப்புக்குப் பின் இதைக் கூறுகிறேன் என்றார் அவர்.

ஒருமுறை நெப்போலியன் வைமரைக் கைப்பற்றினான். கதேவை மரியாதையுடன் அழைத்து வாருங்கள், அந்த மேதையை நான் சந்திக்க வேண்டும் என்று உத்திரவிட்டான். அப்போது அவன் ஐரோப்பாவின் சக்கரவர்த்தி. கதே சென்றார். தன் படைத்தலைவர்களுடன் மந்திராலோசனையில் இருந்தான். இவரைக் கண்டதும் “ஆஹா!” என்று வியப்புடன் கூறிக்கொண்டு இருக்கையிலிருந்து எழுந்து நின்றான். “அறுபது வயதுக்கு மேலாகியும் இவ்வளவு இளமைக் கோலத்துடன் திகழ்கின்றீர்களே, எப்படி?” என்று கேட்டான். “என்னுடன் வந்துவிடுங்கள் நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன்” என்றான். ஆனால் கதே, தன்மையுடன், அதேநேரத்தில் திடமாக மறுத்துவிட்டார். காரணம், தன் இடம் எது? எந்த இடத்தில் இருந்தால் தன் வாழ்க்கைப் பணி நலமுடன் நிறைவேறும் என்பதை அறிந்தவர் அவர். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு முதல்படியே இந்த ‘இடனறிதல்’தான். அங்கே வந்து அமர்ந்துகொண்ட பின் தன் முயற்சிகளுக்குத் தடைகள் குறைவாகவும், ஆதரவு அதிகமாகவும் இருக்கும். உபகாரச் சக்திகள் தாமே வந்து உதவும். உலகப் பேராசான் வள்ளுவன் அன்றே இடனறிதலின் முக்கியத்துவத்தை உணர்ந்து எழுதினார். கதே அதை உணர்ந்து தன் வாழ்வில் பயன்படுத்தினார். அறிவிலே தெளிவு பெற்ற பின் சான்றோர் உண்மைகளை உள்ளவாறு அறிகின்றனர். அதன்படி வாழ்கின்றனர்.

 

 

இக்கருத்துக்கு வடிவம் கொடுத்தவர்களில் முதன்மையானவர் நவீன ஆங்கிலக் கவி டி.எஸ்.எலியட். இவர் தனது பாழ்நிலம் என்ற குறுங்காப்பியத்திற்காக நோபல் பரிசை வென்றவர். உடனே ஆணவம் தலைக்கேறியது. உலக மகாகவிகளுள் ஒருவராகக் கருதப்படும் ஷேக்ஸ்பியருக்கு கவிதை எழுதத் தெரியாது; அவரது ஆகச் சிறந்த படைப்பாகக் கருதப்படும் ‘ஹாம்லெட்’ தவறான அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மோசமான நாடகம்; ஏனென்றால் ஷேக்ஸ்பியருக்கு தான் (எலியட்) கண்டுபிடித்த இலக்கிய உத்தி தெரியாது என்றார். ஒரு கருத்தை நேரடியாக அறிவிக்காமல், அக்கருத்தை, அது தரும் உணர்ச்சியை வாசகரின் மனதில் ஏற்படுத்தக்கூடிய படிமங்களை நிகழ்ச்சிகளை மட்டும் அடுக்க வேண்டும். இதுதான் அந்த உத்தி. இதில் இவரே வெற்றி பெற்றாரா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். இவருடைய ‘பாழ்நிலம்’ யாருக்கும் புரியவில்லை. துண்டு துணுக்குகளாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சம்பவங்களாகத் தெரிந்தது. அதற்குப் பிறகு இவரே அதற்கு ஒரு தெளிவுரை எழுதினார். தி.ஸி. லீவிஸ் போன்ற இவரது நண்பர்களும் ஆதரவாளர்களும் விளக்க உரைகளை எழுதினர். பிறகுதான் இவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்தது. மேடையில் பொதுமக்கள் பார்த்து கேட்டு உடனே ரசிப்பதற்காக எழுதியவர் ஷேக்ஸ்பியர். அதேநேரத்தில் வாசிப்பிலும் உணர்ச்சியை, கற்பனையை, வாழ்வின் ஆழமான கருத்துகளைப் பற்றிய தெளிவான அறிவைத் தூண்டுபவை. அவரது நூலைச் ‘சமயம் சாராத வேதம்’ என்றே ஹெரால்டு புளூம் போன்ற திறனாய்வாளர்கள் எழுதுகின்றனர்.

அதேபோல் இவர் கல்லெறிந்த மற்றுமோர் பிரம்மாண்டமான சிலை கதேவுடையது. ‘இவர் கவிஞரல்ல. ‘நீதி போதனைகளைத் தந்த தத்துவவாதி’ என்று கடுமையாக விமரிசித்தார். உலகின் தலைசிறந்த தன்னுணர்ச்சிக் கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கதே. அவருடைய நாடகக் காப்பியமான பௌஸ்டின் முதல் பகுதி ஒரு மாபெரும் காதல் கவிதை. இரண்டாவது பகுதி நவீன வாழ்க்கை (எலியட்டின் ‘பாழ்நிலத்தை’ விட பன்மடங்கு உயர்ந்த நிலையில், படம் பிடித்துக் காட்டுகின்ற உன்னதப் படைப்பு என்று அமெரிக்க ஞானி எமர்சன், திறனாய்வாளர் ஹெரால்டு ப்ளூம் போன்றவர்கள் பாராட்டுகின்றனர். பிரிட்டானிகா நிறுவனம் வெளியிட்ட மேற்குலகின் உன்னத நூல்கள் என்ற வரிசையில் ஹோமர், விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன் ஆகிய காவியக் கவிஞர்களுடன் வைத்துப் போற்றப்படுகிறார் கதே. ஃபௌஸ்ட் காப்பியமே அத் தகுதி பெற்றது.

ஆனால் டி.எஸ்.எலியட் சொல்கிறார் ‘கதே கவிஞரல்ல’. ஏன்? பொறாமை. ஏற்கெனவே உயர்ந்த பீடங்களில் எழுப்பப்பட்டுள்ள உன்னதமான சிலைகளை அகற்றினால் ஒழிய தான் அங்கே போய் அமர முடியாது என்ற அழுக்காறு தந்த தூற்றல், வசவு.

கவிஞர்களின் முதல் உணர்வு சக கவிஞர்களின் மேல் அழுக்காறு. ஒரு கவிஞன் மற்றொரு கவிஞனை ஏற்க மாட்டான். நண்பனாக இருந்த பாப்லோ நெரூடா என்ற நோபல் பரிசு பெற்ற, ‘பொதுக் காண்டம்’ என்ற மாபெரும் நவீன காப்பியத்தை எழுதிய ஸ்பானியக் கவியை ‘பெரிய கவிஞன். ஆனால் மோசமான கவிஞன்’ என்று விமர்சித்தார் லோர்கா.

கவிஞனாக என் தனிப்பட்ட அனுபவமும் இதுதான். என்னுடைய முதல் தொகுப்பான ‘உயிர்த்திரு’ வெளியான போது கவிஞர்கள், திறனாய்வாளர்கள், ஆய்வறிஞர்கள் என்று கருதப்படும் அனைவருக்கும் அதை அனுப்பியிருந்தேன். திறனாய்வாளர்களும் ஆய்வறிஞர்களும் பாராட்டி எழுதினர். கவிஞர்கள் மட்டும் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தனர்; அல்லது காழ்ப்புணர்ச்சியைக் காட்டினர்.

பொறாமையே, அழுக்காறே கவிஞர்களின் முதல் குணம்; அல்ல, குற்றம். பொறாமையைக் கூட உணர்ந்து, கடக்காத மனதில் என்ன பக்குவம் வரும்? என்ன ஞானத்தை அவரது எழுத்தில் எதிர்பார்க்க முடியும்?

கதே பொறாமையை வென்றவர். பக்குவி. ஞானி.

‘அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்’

என்பது பொய்யாமொழி. இதை உணர்ந்த உள்ளத்திலேயே உண்மை தோன்றும். உள்ளத்தில் உண்மை ஒளி தோன்றவில்லையெனில் ஆங்காரமே எஞ்சும். ஆங்காரத்திலிருந்து எழும் எழுத்து என்ன பயனைத் தரும்? வாசகனை மேலும் சிறுமைக்கே இட்டுச் செல்லும். எழுத்தின் முதல் தகுதி அறிவில் தெளிவைத் தருவது. அது இல்லாத எழுத்து குழப்பத்தையே விளைவிக்கும். வெறும் நயம் ஆபத்தானது. நேரத்தைக் கொல்லலாம். வாழ்வைக் கொல்லலாம்.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று

என்ற அருள்வாக்கு எல்லா மக்களுக்கும் சொல்லப்பட்டது. எனினும், குறிப்பாக எழுத்தாளர்களை நோக்கியே கூறப்பட்டது. இது வள்ளுவத்தின் ‘அழகியல்’.

இதை உணர்ந்தவர் கதே. ஆரம்பத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் ‘ரொமான்டிக்’ கவிஞராக,  நாடகாசிரியராக, நாவலாசிரியராக தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கியவர் இறுதியில் தத்துவக் கவிஞர் என்று புகழ் பெறுகிறார். தத்துவக் கவிஞர் என்ற பெயர் பெறவேண்டும், வாழ்க்கையைப் பற்றிய முழு தரிசனத்தை, கற்பனை உணர்ச்சி ஆகியவற்றால் சமைத்து ஒரு காப்பியக் கதை வடிவில் தரவேண்டும் என்ற பேராசை எல்லாக் கவிகளுக்கும் உண்டு. சான்றாக வேர்ட்ஸ்வொர்த் ‘பயணம்’ என்ற நீண்ட தத்துவக் கவிதை எழுதினார். தோல்வி. எஸ்ரா பவுண்டு ‘காண்டங்கள்’ எழுதினார். வெற்றி பெறவில்லை. இப்படிப் பல முயற்சிகள். பெரும்பாலும் தோல்வியே. ஜார்ஜ் சான்டாயனா ஒரு பெரிய தத்துவவாதி, கவிஞர். அவர் மேற்குலகின் மாபெரும் தத்துவக் கவிகளாக மூவரையே வரித்தார்: லுக்ரிடியஸ், தாந்தே, கதே. அவர் எழுதிய நூலின் பெயர் மூன்று தத்துவக் கவிகள்.

ஓர் எழுத்தாளனை நான் வாசிப்பது அவனது ஞானத்தின் அளவுக்காக. கற்பனை, உணர்ச்சி, நயம் எல்லாம் இரண்டாம் பட்சமே. ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றுங் கற்பரோ?’ என்றார் நம்மாழ்வார். அதைக் காப்பியமாக்கி நிரூபித்தார் அவரது சீடர் ‘கல்வியில் சிறந்த கம்பன்’. இதை பொதுமக்களுக்கு கதையாகச் சொன்னால்தான் புரியும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் சொன்ன கருத்தை, அதைத் தாண்டி, எல்லையற்ற ஞானத்தை 133 குறள்களில் தந்தார் உலக ஞானப் பேரொளி வள்ளுவர். அந்த திருக்குறளை விட சுருக்கமாக, சூத்திர வடிவில் வெறும் 1596 வரிகளில் உலக ஞானம், விஞ்ஞானம் அனைத்தையும் தொகுத்து பிழிந்து, சாறு இறக்கித் தந்தார் வடலூர் வள்ளல் தன் ‘அருட்பெருஞ்ஜோதி அகவலில்’. ‘வேதாந்தம், சித்தாந்தம், யோகாந்தம், போதாந்தம், நாதாந்தம், கலாந்தம்’ என்ற ஷடாந்தங்களையும் விளக்கி, குறைகளை நிறைவு செய்து, தனது நெறியான ‘அருள் நெறி’யையும் சேர்த்து அறிவியல் மொழியில் ஒரு விஞ்ஞானக் காப்பியமாகத் தந்திருக்கிறார்.

கதே ஜெர்மானியக் கம்பன். வள்ளுவனைப் போல் தான் அடைந்த அறிவை பொன்மொழிகளும் சிந்தனைகளும் என்ற நூலில் உரைநடையிலேயே வழங்கினார்.

ஜெர்மன் மொழியில் பேரறிவாளர்கள் என்று மூவரைக் குறிப்பிடுவர். ஒரு கலைக் களஞ்சியம் போல் உலகின், வாழ்வின் சகல துறைகளையும் பற்றி சிந்தித்து தனித்துவமான கருத்துகளை வழங்கியவர்கள் இந்த மூவர். இம்மானுவேல் கான்ட், ஹெகல், கதே. முன்னிருவர் தத்துவவாதிகள் மூன்றாமவர் மகாகவி, தத்துவவாதி மற்றும் விஞ்ஞானி. பல விஞ்ஞானத் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தவர். ‘அறிவால் தேவன்’ ஆனவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட மகா மனிதர்.

எது சிறந்த வாழ்க்கை? யார் உயர்ந்த மனிதன்? வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டமும் வெவ்வேறு பதில்களைத் தந்தன. முத்தனாவது, சித்தனாக நிலமிசை நீடு வாழ்வது, இறைத்தூதனாவது – இவை ஆன்மீகமும், சமயங்களும் அளித்த விடைகள். கலைஞன், கவிஞன், நாடகாசிரியன், ஓவியன், வரலாற்றாசிரியன் – இப்படிப்பட்ட மாதிரிகளை முன்வைத்தது கலைத்துறை. விஞ்ஞானி, பகுத்தறிவுவாதி, சீர்திருத்தவாதி, அரசியல்வாதி, மாவீரன், தலைவன் – இவற்றை இலட்சியங்களாக முன்னிறுத்திய சமூகங்கள் உண்டு. கட்டுப்பாடான குடிமகன், நல்ல குடும்பத் தலைவன், துறவி, காதலன், வீரன் – இவை பண்டைய தமிழ்ச் சமூகத்தின் இலட்சிய மனிதச் சித்திரங்கள். கடவுள் தன்மை (அருள்) அறிந்து அம்மயமாதல் (அருளாளன்) என்ற அதிசய இலட்சிய மனிதனை அடையாளம் காட்டி, அதை வாழ்ந்து காட்டியவர் வள்ளலார்.

இந்த வரிசையில் ‘மறுமலர்ச்சிக் காலத்தில்’ – அதாவது கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய சமூகம் முன்வைத்த மாதிரி மனிதன் ‘எல்லா அறிவும் கொண்ட மனிதன்’. இம்முயற்சியில் வெற்றி கண்ட மிகப் பெரிய மேதைகள் என ரோஜர் பேகன், லியனார்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ, லீப்னிட்ஜ், வால்டேர் என்ற பெரிய பட்டியல் உண்டு. இவர்கள் அனைவரையும் விஞ்சி நின்றவர் கதே. அவரது அறிவு எண் (மினி) 210. மேற்குலகில் வேறு யாரும் இத்துணைப் பேரறிவு பெற்றவர் அல்ல – ஷேக்ஸ்பியர், நியூட்டன், ஐன்ஸ்டீன் (140) உட்பட.

எவ்வாறு தன் வாழ்வில் இச் சாதனையை நிகழ்த்தினார் கதே? ‘அளவறிந்து வாழ்தல்’ என்ற இரகசியத்தைக் கூறினான் வள்ளுவன். அதைத் தன் இயல்பில் கொண்டிருந்தார் கதே. ‘காலமறிதல்’, ‘இடனறிதல்’, ‘வலியறிதல்’, ‘அறிவறிதல்’, ‘உளவறிதல்’, ‘அளவறிதல்’, ‘குறிப்பறிதல்’ என்று 7 வகை அறிவுகள் கொண்டவனை முழு மனிதனாகக் காட்டுகிறான் வள்ளுவன். இவை யாவற்றையும் தன் நோக்கம், விருப்புறுதி, ஒருமைக் குணங்களால் அடைந்தார் அவர். அவற்றுள் ஒருசிலவற்றைக் காண்போம்.

மனித வாழ்வின் அடிப்படை மூல சக்திகள் மூன்றுதான்: காலம், கலிமை (உயிராற்றல்), பொருள் (பணம்) பணத்தை இழந்தால் மீண்டும் பெறலாம். உயிராற்றலை இழந்தால், சித்தர்களைத்தவிர மற்றவர்கள் பெறுவது அருமை. காலத்தை இழந்தால் பெறவே முடியாது. மூன்றையும் உணர்ந்து அளவறிந்து, அறிவுபூர்வமாகப் பயன்படுத்தினார் ஜெர்மானிய மகாகவி.

கால விரயத்தை வேண்டி நிற்பன சில அறிவுத் துறைகள் – சான்றாக, ஓவியம், சிற்பம் போன்ற கலைகள், வரலாறு எழுதுதல், தத்துவ ஆராய்ச்சி போன்ற எழுத்துத் துறைகள். இவை ஒவ்வொன்றும் மனிதனை வேறு துறைப் பக்கம் போகவிடாது.

ஓவியம், சிற்பம் ஆகியவை வெகுநுட்பமான கலைகள். ஓர் ஓவியம், ஒரு சிற்பம் முடிக்கப்பட, திருத்தம் செய்ய, அழகுபடுத்த ஆண்டுக்கணக்கில் ஆகலாம். (நவீன ஓவியம் கதேயின் காலத்தில் எற்கப்படவில்லை) உரோம் நகருக்குச் சென்று, தங்கி, ஓவியக் கலையை மூன்றாண்டுகள் பயின்றார் கதே. தன் நேரத்தை அதிகமாக உறிஞ்சிக் கொள்கிறது என்று உணர்ந்தார். அதனால் சுமார் 2000 கோட்டோவியங்கள் மட்டும் வரைந்தார். ஓவிய, சிற்ப, கட்டிடக் கலைத் திறனாய்வுகளை எழுதுவதுடன் நிறுத்திக் கொண்டார். மைக்கேல் ஏஞ்சலோ மாபெரும் சிற்பி, ஓவியர், கட்டிடக் கலை வல்லுநர். அவற்றோடு சிறந்த கவிஞர். ஆனால் அவரால் அதிக நேரத்தைக் கவிதைக்கு ஒதுக்க முடியவில்லை.

வரலாற்றை எழுதித் தன் மேதைமையை வீணாக்கியவர்கள் வால்டேர், தாமஸ் கார்லைல் போன்றவர்கள். வால்டேர் காப்பியம், கவிதை, நாடகங்கள், கதைகள், கட்டுரைகள் என இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினார். ஆனால் உலக சாதனை நிகழ்த்தவில்லை. தன் இளமை, நடுத்தர வயதுக் காலங்களை மூன்று பெரிய வரலாற்று நூல்களை எழுதி வீணாக்கினார். வரலாற்று ஆவணங்களைத் தேடுதல், சரிபார்த்தல், சம்பவங்கள் நடந்த இடங்களை நேரில் சென்று பார்த்தல், கடிதப் போக்குவரத்துக்களைப் படித்தல் போன்ற மிகப் பெரும் பணிகள் ஒரு வரலாற்றாசிரியனது. கார்லைல் மறைஞானி மற்றும் கவித்துவம் மிக்க எழுத்தாளர் இரண்டு பெரிய வரலாற்று நூல்களை எழுதினார். (பிரெஞ்சுப் புரட்சி மற்றும் ‘மாமன்னர் பிரெடெரிக்). அவரது சீடர் எமர்சன் இவரது கருத்துகளை விரித்தும் மறுத்தும், இவரைப் போலவே கவித்துவமான உரைநடையில் கட்டுரைகள் எழுதி உலகப் புகழ் பெற்றார். அவரும் வால்டேரைப் போல் கவிதைகளும் எழுதினார். ஆனால் அவற்றில் உலகத் தரம் இல்லை.

உலகத் தரம் என்ன? அதை எப்படி அடைவது? விதி என்ன? ஏதாவது ஒரு துறையில் மற்ற உலக மேதைகளுக்குச் சமமாகவோ விஞ்சியோ நிற்க வேண்டும்.

இவ்விதிக்கு மிகச் சிறந்த உதாரணம் ஜேம்ஸ் பாஸ்வெல். இவர் தன் குருவான சாமுவேல் ஜான்சன் என்ற பெரும் இலக்கிய ஆளுமையின் அன்றாட நிகழ்வுகளை, அவரது உரையாடல்களை, குணநலன்களைக் குறித்து வைத்து வாழ்க்கை வரலாற்றை எழுதினார். வேடிக்கை என்னவெனில் பிரிட்டானியப் பதிப்பகம் வெளியிட்ட ‘மேற்குலகின் செவ்விலக்கியங்கள்’ என்ற வரிசையில் ஜான்சனின் எழுத்துகள் சேர்க்கப்படவில்லை. அவரைப் பற்றிக் குறித்து வைத்த ஜேம்ஸ் பாஸ்வெலின் நூல் இடம்பெற்றது. காரணம் வாழ்க்கை வரலாற்று நூல்களில் அது உலகத் தரம் எய்தியதே. இன்றைக்கு ஒலிநாடா செய்யும் செயல்; அன்று அது இல்லை.

மறைந்து கிடக்கும் இயற்கை, வாழ்க்கை விதிகளைத் தன் கூர்த்த உள்ளுணர்வால் அறிபவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். அவ்விதிகளை முழுமையாகத் தொகுத்துக் கொடுத்தவர்கள் உலகப் பேராசான் வள்ளுவரும் அவரது தொடர்ச்சியான வள்ளலாருமே. அவர்களைக் கூட ஆழ்ந்து படிக்காத தமிழ்ச் சமூகத்தை என்ன சொல்வது?

கதே இந்த விதியை இளம் வயதிலேயே உணர்ந்தார். வால்டேரைப் போற்றி, தன் முன்மாதிரியாகக் கொண்டவர். ஆனால் அவருடைய வெற்றிகளில் இருந்து மட்டுமல்ல, தோல்விகளிலிருந்தும் பாடம் கற்றவர். அதனால் தான் உலகப் புகழ்பெற்று என்றும் நிலைத்து நிற்க வேண்டுமெனில் தன் இயல்பான கவிதைத்துறையில் உலகத் தரத்தைச் சாதிக்கும் ஒரு நூலை எழுதவேண்டும் என்று முடிவு செய்தார். அதுதான் ‘ஃபாஸ்ட்’. அதை 60 ஆண்டுகள் எழுதினார். இன்று ஜெர்மன் மொழியின் மாபெரும் காவியமாகக் கொண்டாடப்படுகிறது. ‘நவீன காலத்தின் மாபெரும் காப்பியமாக’ கார்லைல், எமர்சன் போன்ற மேதைகளே அதை வர்ணிக்கின்றனர்.

தன் தந்தை வழிவந்த சொத்து, தான் தன் வாழ்வின் வைமர் சிற்றரசின் பிரதம மந்திரியாக இருந்து ஈட்டிய பொருள் யாவற்றையும் தன் அறிவை வளர்த்துக்கொள்ளவே செலவு செய்தார். சுமார் 5000 உலகின் ஆகச் சிறந்த நூல்கள், சிற்பங்கள், ஓவியங்கள், விஞ்ஞானக் கருவிகள், பல்வேறு தேசக் கற்கள், தாவரங்கள், பறவைகள் என அவரது இல்லம் ஒரு பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தது. அவற்றுடன் யாரும் அறியாமல் ஏழைகளுக்குத் தானதருமங்கள் செய்யவும் தவறவில்லை. கவுரவம் பாராமல் தன் வீட்டு வேலைக்காரியைக் காதலித்துத் திருமணம் புரிந்து புரட்சி செய்தார். அறிவுடன் அன்பையும், சமுதாய சமத்துவ உணர்வையும் வளர்த்துக்கொள்ள அவர் மறக்கவில்லை. அவரை அறிந்தவர்கள், அவர் பேரறிஞர் மட்டுமல்ல, உயர்ந்த, நல்ல மனிதர் என்று எழுதி வைத்திருக்கின்றனர்.

அடுத்து உயிராற்றல் விரயம். கவிதை ஆவேசம், ஆவியின் வெளிப்பாடு, தவணை முறையில் தற்கொலை. கவிதை உயிரைக் கொன்றுவிடும். அது உயிரால் எழுதப்படுவது. உயிர் இல்லாத கவிதை பிணம். எடுபடாது. வெற்றோசை. அதனால்தான் இடைக்காலத்தில் தன் கவனத்தை அறிவியல் பக்கம் திரும்பினார். அதன் பல்துறை ஆராய்ச்சிகளில் இறங்கிச் சாதனைகள் புரிந்தார்.

உலக வரலாற்றைக் கவனியுங்கள். சிறந்த கவிஞர்கள் பெரும்பாலும் ஐம்பது வயதைக் கடந்ததில்லை. யூரிபிடீஸ், கதே, தாகூர், வேர்ட்ஸ்வொர்த் விதிவிலக்குகள். வேர்ட்ஸ்வொர்த்தின் பிற்காலக் கவிதைகள் வெறம் உரைநடை. யாப்பில் இயற்றப்பட்ட உரைநடை. கீட்ஸ், ஷெல்லி, பைரன், ஹோல்டர்லின் என்று இருபதுகளில் முப்பதுகளில் மாண்ட கவிஞர்களின் பட்டியல் மிக நீளம்.

மேதைமை ஒரு கொல்லிப்பாவை. அது மனிதனைத் தன் வழியில் இழுத்துச் சென்று இறுதியில் குழியில் தள்ளி மண்ணைப் போட்டு மூடிவிடும். அந்த உந்துசக்தியையும் அடக்கியாண்ட அறிவாளி கதே. அதுவே அவர் வாழ்க்கைக் கலையின் இரகசியத்தை அறிந்து வென்று வல்லுநர் ஆன கதை.

மூன்றாவதாக தத்துவம். தீவிரமாகத் தத்துவ ஆராய்ச்சியில் மூழ்கித் தத்துவ நூல்களை எழுதிய கவிஞர்கள் பலரும் உலகத்தரம் வாய்ந்த கவித்துவ ஆற்றலைப் பெற்றிருந்தும் கவிதைத் துறையில் அச் சாதனையைச் செய்ய இயலவில்லை. சான்றாக ஷில்லர், கோல்ரிட்ஜ். ஷில்லர் வரலாற்றுத் துறை ஆராய்ச்சியுடன், தத்துவத் துறையில் ஆழங்கால் பட்டார். ‘அழகியல் துறைக் கல்வி பற்றிய கடிதங்கள் என்ற அவரது நூல்தான் தன்னைத் தத்துவத் துறையின் பால் ஈர்த்து வந்தது என்று ஹெகல் எழுதினார். ‘மகாகவிகள்’ என்று ஜெர்மன் மொழியில் அழைக்கப்பட்டவர் இருவர் : கதே, ஷில்லர். பீதோவன் தன் உலகப் புகழ்பெற்ற ஒன்பதாவது சிம்பனியில் பயன்படுத்திய பாடல் ஷில்லருடையது. இவ்வளவு கவித்துவம் வாய்த்திருந்தும், ஷில்லர் ஒரு காப்பியம் கூட இயற்றவில்லை. அதனால் உலக மகாகவி என்ற அந்தஸ்தை இழந்தார்.

அதேபோல் ஆங்கிலக் கவி கோல்ட்ரிட்ஜ். அவர் இளம்வயதில் இயற்றிய ‘பழம் கடற்பயணி’, ‘குப்ளாகான்’ போன்ற கவிதைகள் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை விஞ்சி நின்றன – தம் இசைத்தன்மை, கற்பனை, உணர்ச்சி, அடிநாதமாக ஒலித்த உயர்ந்த சிந்தனை, யாப்பமைதி இவற்றுடன் ஒட்டுமொத்த ஒருமைத் தன்மையால். ஆனால் ஜெர்மனிக்குச் சென்று, ஜெர்மன் மொழியைக் கற்று, கான்ட், ஷெல்லிங் போன்ற தத்துவவாதிகளின் நூல்களை ஆழ்ந்து கற்றார். அவர்களை விஞ்ச விரும்பினார். தத்துவத் தொடர் சொற்பொழிவுகளை ஆற்றினார். இத்தொடர் பின்னர் நூலாக வெளிவந்தது. பிற்காலத்தில் இங்கிலாந்தில் கருத்தியல் வாதத்தின் தந்தை என்று இவரைப் புகழ்ந்து பேராசிரியர். மூயர்ஹெட் எழுதினார். ‘கோல்ட்ரிட்ஜின் தத்துவம்’ என்று ஒரு நூலையே எழுதி இவரை ஒரு மாபெரும் தத்துவவாதியாக அங்கீகரித்தார். தன் இறுதிக் காலத்தில் ‘முடிவான தத்துவ நூலை’ சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துக் குறிப்புகளைத் தயார் செய்தார். அவரது வாழ்நாளுக்குப் பின் முழுமையின்றி அது வெளியிடப்பட்டிருக்கிறது. தத்துவத் துறையின் இந்த ஈர்ப்பின் விளைவு என்ன? உலகம் மற்றொரு ஷேக்ஸ்பியரை இழந்தது.

மேலே கண்ட கவிஞர்கள் செய்த தவறுகளை கதே செய்யவில்லை. என்றால் கதே தத்துவத் துறையில் ஈடுபடவில்லையா? ‘கதேயின் தத்துவம்’ என்ற பெயரில் பல நூல்கள், கட்டுரைகள் ஆல்பர்ட் ஸ்வைட்சர் போன்ற புகழ் பெற்ற தத்துவவாதிகளால் – டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட – எழுதப்பட்டன. இந்தப் புதிருக்கு விடை, கதே வாழ்வின் முழுப்பொருளைத் தன்னளவில் உணர்ந்தார். அதுவே தத்துவம். ‘இயற்கைத் தாயின் தவப்புதல்வன் மனிதன்; இயற்கையே கடவுள். பணிவுடன் அணுகினால் தாய் தன் இரகசியங்களை விருப்பத்துடன் வெளிப்படுத்துவாள்’. இவ்வுணர்வைத் தன் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களில் பொதிந்து வைத்து எழுதினார். இவ் உண்மையை அவர் ஒரு முழுமையான தத்துவக் கட்டிடமாக தர்க்கவாதங்களின் அடிப்படையில், சிந்தனைக் கட்டமைப்புடன் கட்டவில்லை. ஆனால், இதே கருத்தை ‘ஸ்பினோஷா’வின் ‘ஒழுக்கவியல்’ நூலில் வாசித்தபோது அதை ஏற்றுக்கொண்டார். ‘ஒரு தந்தையைப் போல் உங்களைப் போற்றி வந்தேன். உங்களது கருத்துகள்தான் என் பெரிய தத்துவ நூல்களுக்கு அடிப்படை’ என்று ஹெகல் கதேவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் நன்றியுடன் கூறினார். “இயற்கைத் தாய் தன் இரகசியங்களை அதிகமாக வெளியிட்டது தன்னுடைய இந்தச் செல்லப்பிள்ளைக்குத்தான்” என்று புகழாரம் சூட்டினார் அமெரிக்க ஞானி எமர்சன்.

 

தொடரும்.

1 comment

Comments are closed.