கொங்குதேர் வாழ்க்கை

0 comment

தமிழ் இலக்கியத்தின் சிகரமாக விளங்குபவை சங்க இலக்கியங்கள். பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களைப் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்று தொகுத்தனர். (பல பாடல்கள் அழிந்துபோயின.) சங்கம் என்று சொல்லப்படுவது கடைச்சங்கம். சங்க இலக்கியம் என வழங்கும் சங்க நூல்கள் அகப்பொருள், புறப்பொருள் அடிப்படையில் இரு பிரிவானவை. சங்க நூல்களில் அகத்திணைப் பாடல்கள் 1862, புறத்திணைப் பாடல்கள் 519. சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 473. 23 பெண்பால் புலவர்கள் உள்பட 378 பேர் அகத்துறை பாடியவர்கள். 9 பெண்பால் புலவர்கள் உள்பட 95 பேர் புறம் பாடிய புலவர்கள். சங்க இலக்கியத்தின் தனித்துவமே இயற்கையான இயல்பு நிலை மாறாத ஆழமும், அதீத கூற்றுகளற்ற அடங்கிய தொனியும் கொண்ட அதன் பாடல்களே.

சங்க இலக்கியங்கள் பெரும் பிரிவாகப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகுக்கப்படும்.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானுறு, புறநானூறு. அடங்கியது எட்டுத்தொகை. குறுந்தொகையில் 400 அகவற்பாக்கள் உள்ளன. பாடிய புலவர்கள் 205 பேர். இதைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் யாரெனத் தெரியவில்லை.

ஓரம் போகியார்

ஓரம்போகியார் சேரமன்னன் ஆதன் அவினியால் ஆதரிக்கப் பெற்றவர். ஐங்குறுநூற்றில் இவர் பாடியது மருதத்திணை. இது தவிர, அகநானூற்றில் 2, குறுந்தொகையில் 5, நற்றிணையில் 2 உம், புறநானூற்றில் ஒரு பாட்டும் பாடியுள்ளார்.

(பரத்தையிடம் பல நாள் தங்கிய தலைவனுக்குத் தோழியின் அறிவுரை)

1. “தீம்பெரும் பொய்கை ஆமை இளம்பார்ப்புத்

தாய் முகம் நோக்கி வளர்ந்திசினா அங்கு

அதுவே ஐய, நின் மார்பே

அறிந்தனை ஒழுகுமதி அறனுமாரதுவே”     (44)

இனிய நீர்ப் பொய்கையில் வாழ்கிற ஆமை தன் குட்டிகளைப் பேணாவிடினும் அவை தாய் முகம் கண்டு அந்த ஆறுதலிலேயே வளரும். அதுபோல உன்னையே… உன் மார்பையே பார்த்து உயிர் வாழ்கிறாள் தலைவி. ஆகவே, அவள் உயிர் வாழ உதவுவதே உன் கடன்.

(தலைவன் பரத்தை நட்பைக் கொண்டான் என்று கருதிக் கோபமுற்றான் தலைவி. அவள் ஊடலை நீக்கிப் புணர்ந்த தலைவன் புணர்ச்சிக்குப் பின் கூறியது)

2. “பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்

கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்

பொய்கை ஊரன் மகளிவள்

பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியளே!”     (97)

கரிய காலை உடைய எருமையின் கொம்பில் பகன்றை வெண்மலர்கள் சிக்கிக் கிடக்க அதைப் பார்த்து அதன் கன்று அஞ்சும் ஊரின் தலைவனது மகள் இவள். இவளது உடல், குளிர்ந்த பொய்கையில் பூத்த ஆம்பல் மலரையும்விடக் குளிர்ச்சியானது. (தன் தோளில் கிடந்த மாலையைக் கண்டு அது பரத்தையர் அணிவித்தது எனத் தலைவி கோபித்ததை உள்ளுறையாய் உணர்த்துகிறான் தலைவன்)

குறுந்தொகை

அள்ளூர் நன்முல்லையார்

மிகச்சிறந்த பெண் புலவர். பாண்டி நாட்டிலுள்ள அள்ளூர் இவரது ஊர். குறுந்தொகையில் 9, அகநானூறு, புறநானூறில் முறையே ஒன்று ஆக 11 பாடல்கள் சங்க இலக்கியத்தில் இவர் பங்கு.

“உள்ளார்கொல்லோ தோழி! கிள்ளை

வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்

புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப்

பொலங் கல ஒரு காசு ஏய்க்கும்

நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே?”     (67)

(தலைவி தோழிக்குக் கூறியது)

அவர் பொருள் தேட என்னைப் பிரிந்தார். வெப்பத்தால் நிலமும் கரிந்து, கள்ளிகள் நிறைந்த காட்டிடை அவர் சென்றார். அங்கு கிளிகள் தம் வளைந்த மூக்கால் தங்க நிற வேப்பம் பழங்களை உண்ணப் பற்றியுள்ளன. புதிய தங்க நாணை நுழைத்தல் வேண்டிப் பொற்கொல்லர் குறட்டால் தங்கக் காசைப் பிடித்திருப்பது போன்ற காட்சி அது. பொருளையே நினைத்து இக்காட்டிடைச் செல்லும் அவருக்கு கிளி கவ்விய வேம்பம் பழமும் தங்கக்காசாய்த் தெரியும். இக்காட்டிடை என்னையும், என் துயரையும் அவர் நினைப்பாரோ?

கபிலர்

இவரது காலம் 2ஆம் நூற்றாண்டு, கடைச்சங்கப் புலவர் வரிசையில் மிக முக்கியமான புலவர் கபிலர். இவரது வரலாறு பற்றி ஏராளமான கதைகள் உண்டு. அவை ஏற்கத்தக்கன அல்ல. அவரது பாடல்கள் மற்றும் இதர புலவர்களின் பாடல்களிலிருந்து அவரைப் பற்றி சில தகவல்கள் கிட்டுகின்றன. பிறப்பால் அந்தணர். பாரியின் நெருங்கிய நண்பர். பாரியின் மரணத்துக்குப்பின் அவரது ஆதரவற்ற இரு மகளிருக்கும் முயன்று திருமணம் செய்து வைத்தவர். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைப் பாரியுடன் கழித்தவர். நீண்டநாள் வாழ்ந்து வாழ்வில் விருப்பமின்றி வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர்விட்டவர். கபிலர் நற்றிணை, குறுங்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, புறநானூறு உள்ளிட்டவைகளில் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 235. பத்துப்பாட்டில் வரும் குறிஞ்சிப் பாட்டு இவரது படைப்பே. கபிலரது பாடல்கள் அவரது மிகச் சிறந்த கவித்துவத்தை வெளிப்படுத்துவன.

1. “மால் வரை இழிதரும் தூவெள் அருவி

கல் முகைத் ததும்புல் பல் மலர்ச் சாரற்

சிறுகுடிக் குறவன்பெருந் தோட் குறுமகள்

நீர் ஓரன்ன சாயல்

தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.”     (95)

(தலைவன் தோழனுக்குக் கூறியது)

பெரிய மலையிலிருந்து விழும் தூயவெண் அருவியையும், மலைச்சாரல் எங்கும் மலர்க் கூட்டத்தையும் கொண்ட நாடு இது. இதனிடத்தே சிறிய குடியிருப்பைக் கொண்டுள்ள குறவனது மகள் பெரிய தோள்களை உடையவள் – தண்மையும், குளிர்ச்சியும் உடைய நீரின் சாயலைக் கொண்டவள். இந்த அழகு வெள்ளம், தீயைப் போன்ற என் மனவலிமையை எல்லாம் அழித்துவிட்டது.

2. “வேரல் வேலி வேர்க் கோட் பலவின்

சாரல் நாட செவ்வியை ஆகுமதி

யார் அஃது அறிந்திசினோரே சாரல்

சிறுகோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்

உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே”

(தலைவனுக்குத் தோழி கூறியது)

மூங்கில் வேலிகளையும், வேரில் பழுத்த பலாப் பழங்களையும் கொண்ட மலைச்சாரல் நாட்டோனே, சிறுகாம்பில் மிகப் பெரிய பழம் தொங்குதலைப் போல இவள் உயிரின் வலிமை சிறிது. ஆனால் உன்மீது இவள் கொண்ட காமமோ மிகப் பெரியது. ஆகவே இரவுதோறும் ரகசியமாய் வருவதை விடுத்து இவளை மணந்து இவள் உயிர் காப்பாய்.

3. “யாரும் இல்லை தானே கள்வன்

தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ

தினைத் தாள் அன்ன சிறு பசுங் கால

ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே.”     (25)

(தோழிக்குத் தலைவி கூறியது)

உன்னையே மணப்பேன் என்று உறுதி கூறினான் அந்தக் கள்வன். அவன் வார்த்தை தவறினான். நான் என்ன செய்வேன். நானும் அவனும் மணந்ததற்கு ஒரு சாட்சியும் இல்லை. நாங்கள் புணர்ந்த அந்த இடத்தில் இருந்தது ஒரு குருகு. தினையின் தாள்போன்ற பசுமையான கால்களை உடைய அப் பறவை அங்கு ஓடிய நீரில் ஆரல் மீனைத் தேடி அங்கு காத்திருந்தது. நாங்கள் படிந்திருந்ததை அது ஒன்றுதான் பார்த்தது. அது ஒன்றே சாட்சி.

ஆலத்தூர் கிழார்

சோழநாட்டின் ஆலத்தூரைச் சேர்ந்தவர். இயற்பெயர் தெரியவில்லை. இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும், நலங்கிள்ளியையும் பாராட்டிப் பாடல் புனைந்துள்ளார். இவரது பாடல்கள் மொத்தம் 7. ஐந்து பாடல்கள் புறநானூற்றிலும் இரு பாடல்கள். குறுந்தொகையிலும் உள்ளன. புறநானூற்றில் ‘தலையோர் நுங்கின் தீஞ்சேறுமிசைய’ என்ற இவரது பாடல் கற்பனைத் திறத்தால் புகழ்பெற்றது.

“கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்

எள் அற விடினே உள்ளது நாணே

பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ

நாருடை ஒசியல் அற்றே

கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே.”     (112)

(தோழிக்குத் தலைவி கூறியது)

தலைவனுடன் நான் கூடுவதை ஊர் அறியுமே என அஞ்சினால் அது என் காதலைக் கொன்றுவிடும். காதலைக் கைவிட எண்ணினால் மானம் ஒன்றே மிஞ்சும். ஆனால் காதலை இழந்துவிட நேரிடும். நான் இழந்ததைப் பெற முடியாது. யானை தன் உணவுக்காக மரத்திலிருந்து ஒடித்த கிளையானது, நிலத்தையும் தொடாமல், மரத்துடனும் சேராமல் நாரில் காய்ந்து தொங்குதல் போல அவனால் நுகரப்பட்ட என் அழகும், என் பெண்மை நலனும் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. நான் என்ன செய்வேன்!

நெடுவெண்ணிலவினார்

குறுந்தொகையில் மட்டுமே இவரது ஒரு பாடல் கிடைத்துள்ளது. இவரது இயற்பெயர் தெரியவில்லை. வெண்ணிலவை முன்வைத்துத் தலைவனிடம் தோழி கூற்றாக வரும்பாடலால் இவருக்கு இப்பெயர் இடப்பட்டது.

“கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்

இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை

எல்லி வருநர் களவிற்கு

நல்லை அல்லை நெடு வெண்ணிலவே.”     (47)

(தோழி கூற்று)

வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த கற்கள் புலிக்குட்டிகள் போன்று தோன்றுகின்ற காடு. அக்காட்டிடை தலைவியைக் காண வருகிறான் தலைவன். ரகசியமாய் அவன் வருவதற்கு இடையூறாய் இப்படிக் காய்கிறாயே வெண்ணிலவே. நீ நல்லவளே இல்லை.

(சந்திரன் என ஆண்பாலாகக் கூறப்பட்டாலும் சந்திரனின் ஒளியை சந்திரிகா, சந்திரப் பிரபா எனப் பெண்பாலாகக் கூறுவதுண்டு. நிலவு என்பது திங்களின் ஒளியைக் குறிப்பதாக பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. திங்கள் புத்தேள் என்பது ஆண்பாலைக் குறிப்பதாகத் தெரிகிறது. அலவன், இரவன் என்பனவும் திங்களைக் குறிக்கும் – தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் விளக்கம்)

கோப்பெருஞ்சோழன்

புகழ்பெற்ற அரசன், சங்கப்புலவர் வரிசையிலும் இடம் பிடித்தவன். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழன். இவன் இறந்ததை அடுத்து, மனம் பொறாத பல புலவர்கள் வடக்கிருந்து உயிர் துறந்தனர். இவனுக்கும், பாண்டிய நாட்டின் புலவர் பிசிராந்தையாருக்கும் இடையேயான நட்பு இன்றும் நட்புக்கு இலக்கணமாகக் கூறப்படுகிறது. புறநானூறில் 3, குறுந்தொகையில் 4, பாடல்கள் இவன் படைப்பு.

“அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து

பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,

உரவோர் உரவோர் ஆக

மடவம் ஆக மடந்தை நாமே”     (20)

(தலைவன் பொருள் தேட பிரியப் போவதை கூறிய தோழிக்கு தலைவி சொன்னது)

துணைவி மீது அன்பும் அருளும் இல்லாமல் அவள் பற்றிக் கவலைப்படாமல் அவளை நீங்கிப் பொருள் வேட்கையே பெரிதெனப் பிரிந்து செல்கிறார். இவர் புத்திசாலி. இவரையே பொருளாய்க் கொண்டு இவர் பிரிவைத் தாங்காது அழுபவள் முட்டாள். இவர் புத்திசாலியாகவே இருக்கட்டும். நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

கடுந்தோட்கரவீரன்

இவர் வரலாறு தெரியவில்லை. இந்தப் பாடல் ஒன்று மட்டுமே எழுதியுள்ளார்.

“கருங் கண்தாக் கலை பெரும் பிறிது உற்றெனக்

கைம்மை உய்யாக் காமர் மந்தி

கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,

ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்

சாரல் நாட நடு நாள்

வாரல் வாழியோ வருந்துதும் யாமே.”     (69)

(இரவில் வந்து தலைவியைச் சந்திக்காதே எனக் கூறி களவொழுக்கத்தைக் கைவிட தலைவனுக்குக் குறிப்பால் அறிவுறுத்துகிறாள் தோழி)

தலைவனே, உன் மலை நாட்டில், வலிமையுள்ள ஆண் குரங்கு ஒன்று இறந்து போயிற்று. துணையை இழந்து துக்கித்தது பெண் குரங்கு. பிரிவின் துக்கத்தைத் தாங்காது தனது குட்டியை தன் உறவினரிடத்தே கொண்டுபோய் பாதுகாப்பாக வைத்தது. பாய்ந்து கிளைகளில் ஏறத் தெரியாத இளம் குட்டி அது. பின் மலை உச்சியிலிருந்து பள்ளத்தாக்கில் குதித்து இறந்து போனது பெண் குரங்கு. ஆதலின் இரவில் வராதே. (உனது மலைநாட்டில் விலங்கும் நெறிவுடையதாய் இருக்க நீ மணம் செய்யாமல் களவை நீட்டித்தல் தவறு என்பது உள்ளுறைப்பொருள்)

பரணர்

பரணர் சங்கப்புலவர்களில் முக்கியமானவர். இவர் பாணர்குடியில் பிறந்தவர் என்றும் இயற்பெயர் பரணர் அல்லர் என்றும் கூறப்படுகிறது. பரணரின் பாடல்களிலிருந்து அவரது சமயச்சார்பு தெரியவில்லை. ஆயினும் இவரது பாடல்களில் சிவன், முருகன் புகழ் கூறப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று பல அரசர்களைப் பாடியவர். நீண்ட காலம் வாழ்ந்தவர். அவர் பாராட்டிய அரசர்களில் சேரன் செங்குட்டுவன் முக்கியமானவன். இவரது பாடல்களிலிருந்து சங்ககால அரசியலில் நடந்த பல்வேறு விஷயங்களை அறிய முடிகிறது. வாகைப் பறந்தலை, வெண்ணிப் பறந்தலை உள்ளிட்ட போர்க்கள நிகழ்ச்சிகளை இவர் பாடல்கள் கூறுகின்றன. அகநானூற்றில் – 34, குறுந்தொகையில் – 16, நற்றிணையில் – 12, புறநானூற்றில் – 13, பதிற்றுப்பத்தில் – 5 – ஆம் ஆகமொத்தம் 85 பாடல்கள் இவரது படைப்பு.

1. “ஊர்உண் கேணி உண்துறை தொக்க

பாசி அற்றே பசலை காதலர்

தொடுவுழித் தொடுவுழி நீங்கி

விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.”     (399)

(தலைவி கூறியது)

ஊருக்குக் குடிநீர் தரும் குளத்தின் பாசியைப் போன்றது பசலை நோய். பாசி, கைபட்டவுடன் அகலும். தொடுகை இல்லா நீரை மீண்டும் அது சூழ்கிறது. தலைவர் கை என்மீது படப்பட விலகும் பசலை. அவர் தொடுகை நீங்கி விடவிட என் உடலை மீண்டும் அது சூழ்கிறது.

2. “உறையூர்ச் சல்லியன் குமாரன்

கைவினை மாக்கள் தம்செய்வினை முடிமார்

கரும்புஉண மலர்ந்த வாசம் கீழ்ப்பட

நீடிய வரம்பின் வாடிய விடினும்

கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது

பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்

நின் ஊர் நெய்தல் அனையேம் பெருமை!

நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்

நின் இன்று அமைதல் வல்லாமாறே”     (309)

(பரத்தையிடம் சென்று திரும்பிய தலைவனுக்குத் தோழியின் வாயிலாய் தலைவி கூறியது)

தலைவனே, உன் ஊரில் வயலலி மலர்ந்து, வண்டுகள் மொய்க்கும் நெய்தல் பூக்களை, உழவர்கள் தங்கள் நிலத்தலிருந்து களைந்து வரப்பில் வீசுகின்றனர். இப்படித் தம்மை நீக்கியோரின் கொடிய நிலத்திலிருந்து வேறிடத்தில் சென்று பூக்காமல் மீண்டும் அவர்கள் வயலிடத்திலேயே நெய்தல் பூக்கிறது. உன் ஊர் பூவைப் போலத்தான் நான். உன் நெஞ்சக் களத்திடைப் பூத்தேன். பூத்த என்னை இதயத்திலிருந்து பறித்து வீசினாய். நீ எனக்குத் தீதே செய்தும் உன்னை நான் தள்ளாமல் ஏற்று உன் இதயத்தில் பூக்கிறேன்.

3. “உள்ளுதொறும் நகுவேன் – தோழி! வள் உகிர்

மாரிக் கொக்கின் கூரல் அன்ன

குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்

தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்

வான் கோல் எல் வளை வௌவிய பூசல்

சினவிய முகத்து, ‘சினவாது, சென்று நின்

மனையோட்கு உரைப்பல்’ என்றலின், முனைஊர்ப்

பல் ஆ நெடு நிறை வில்லின் ஒய்யும்

தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்

புலம் புரி வயிரியர் நலம்புரி முழவின்

மண் ஆர் கண்ணின் அதிரும்,

நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே.”     (100)

(பரத்தைக்கூற்று – தலைவியின் தோழியர் கேட்கும்படி பரத்தை விறலிக்குச் சொல்லயிது)

தோழி… நடந்ததை நினைக்க எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. நடந்தது என்ன தெரியுமா? நீள் நகம் கொண்ட கார்காலக் கொக்கின் மூக்குபோன்ற ஆம்பல்கள் நிறைந்த நீர்த்துறைகளைக் கொண்ட ஊரின் தலைவன், என் நெய் தடவிய கூந்தலை வேடிக்கையாய்ப் பற்றி இழுத்தான். என் கைகளில் உள்ள வேலைப்பாடுகள் அமைந்த வெண் வளைகளை இழுத்து விளையாடினான். எங்கள் இருவருக்கும் இழுபறி நடந்தது. கோபமடைந்த நான் “நீ நடந்து கொண்ட விதத்தை உன் மனைவியிடம் சொல்லட்டுமா” என்றேன். அவன் நடுங்கி விட்டான்! எப்படி நடுங்கினான் தெரியுமா? பகைவரது பசுக்களைக் கைப்பற்றிய வெற்றிவீரன் மலையமான். இரவலருக்குத் தேரைப் பரிசாகத் தரும் அவனது அவையில் வெளிநாட்டிலிருந்து வரும் கூத்தர்கள் தங்கள் திறனைக் காட்ட மத்தளங்களை முழங்குவர். அப்போது கருமண் வைக்கப்பட்ட மத்தளத்தின் கண்கள் அதிருமே… அதைப் பார்த்திருக்கிறாயா? அதுபோல நான் மிரட்டியதும் நடு நடுங்கி அதிர்ந்தான் தலைவன். அந்த நடுக்கத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது.

ஓரேர் உழவனார்

ஓர் ஏர் உழவனார் இயற்பெயர் தெரியவில்லை. உவமையால் பெயரிடப்பட்ட சங்கப் புலவர்களில் ஒருவர் குறுந்தொகையில் 131 பாடலும். புறநானூற்றில் 193 பாட்டும் இவர் படைப்புகள்.

“ஆடு அமை புரையும் வனப்பின் பணைத்தோள்

பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே

நெடுஞ் சேண் ஆர் இடையதுவே நெஞ்சே,

ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து

ஓர் ஏர் உழவன் போல

பெருவிதுப்புற்றன்றால் நோகோயானே.”     (131)

(தலைவன் கூறியது)

அசையும் மூங்கில் தோளும், போரிடும் நீள் கண்ணும் உடைய அழகி என் காதலி; அவள் ஊரோ நெடுந்தொலைவில். அவளைக் காண நான் செல்லும் வழியிலோ பெரும் தொல்லைகள். விரைவில் அவளை அடையத் துடிக்கிறது என் நெஞ்சு. நீர் தங்காத மேட்டு நிலத்தையும். ஒரே ஒரு ஏரையும் கொண்டிருக்கும் உழவன், மழை பெய்யும்போது நீர்வடியும் முன் அந்த நிலத்தை உழுவதற்குத் துடிப்பானே… அதுபோலப் பரபரக்கிறது என் மனம்.

அள்ளூர்நன் முல்லையார்

“குக்கூ என்றது கோழி அதனெதிர்

துட் கென்றன்றுஎன் தூஉ நெஞ்சம்

தோள் தோய் காதலர் பிரிக்கும்

வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.”     (157)

(தலைவி கூறியது)

கூவியது கோழி. அக்குரல் கேட்டு அஞ்சியது என் உள்ளம். என்தோளில் தோய்ந்து என்னை இறுக்கிக் கிடக்கும் காதலனின் அன்புப் பிடியை வெட்டிப் பிரிக்கும் வாளென வந்ததே இந்த விடியல்.

கண்ணம்புல்லனார்

கண்ணம்புல்லனார்: இவரது முழுப்பெயர் கருவூர்க் கண்ணம்புல்லனார். இவரது ஊர் கருவூர். தந்தை பெயர் கண்ணன். இவரது இயற்பெயர் புல்லன். அகநானூற்றில் ஒரு பாடலும். இந்த நற்றிணைப் பாடலும் இவரது படைப்பு.

“மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்

உரவுத் திரை கெழீஇய பூ மலி பெருந் துறை,

நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை,

கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி,

எலலை கழிப்பினம்ஆயின், மெல்ல

வளி சீத்து வரித்த புன்னை முன்றில்,

கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய,

‘எழு’எனின், அவளும் ஒல்லாள்; யாமும்,

ஒழி என அல்லம் ஆயினன்; யாமத்து

உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற்

சில் குடிப் பாக்கம் கல்லென

அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!”     (159)

(தலைவனிடம் தோழி தலைவியின் ஆற்றாமையைக் கூறி அவளை மணந்து கொள்ள வேண்டல்)

நீலமணி போல் ஒளிர்கிறது கடல். அலைகள் வந்து கரையைத் தாக்குகின்றன. நிலவைக் குவித்தது போன்ற மணல் மேடு. அதன் சரிந்த கரையில் சங்குகள் பூத்ததுபோல் நாரைகள். அவற்றை எண்ணியபடி கழிகிறது எங்கள் பகல். மெல்லக் காற்றடித்து மலர்களை உதிர்க்கும் புன்னை பூத்த அழகிய வாயில் கொண்டது அவள் வீடு. கொழுவிய மீனை உண்ணும் அவளது வளமைமிக்க வீட்டுக்குப் போவதற்காய் எழுந்தருக்கச் சொன்னேன். அவளோ வர மறுத்தாள். சரி நீ இங்கேயே கிட என்று அவளைக் கூற எனக்குத் துணிவில்லை. நடு இரவில் அலைகள் கரைமோதும் ஒலியில் துயிலும் இவ்வூரில் அவளைப் பெண் கேட்டு வரும் உன் தேரின் மணி ஒலிக்கட்டும்.