சி. சரவண கார்த்திகேயனின் ‘ஆப்பிளுக்கு முன்’

0 comment

‘ஆப்பிளுக்கு முன்’ சி. சரவண கார்த்திகேயனின் முதல் குறுநாவல். 2014ல் வெளிவந்த கிழக்குப் பதிப்பக வெளியீடான ‘குஜராத் 2002 கலவரம்’ என்ற கவனிக்கத்தக்கப் புத்தகத்தை எழுதியவர். இவருடைய இந்த நூல் காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனையை முன்வைத்து வரலாற்றுப் புனைவாக எழுதப்பட்டிருக்கிறது. சாண்டில்யன் மாதிரி ஒரு துணுக்கு ஆதாரத்தை வைத்துக்கொண்டு ஆயிரம் பக்கம் எழுதும் வகையல்ல, கிட்டத்தட்ட முழுக்கவும் உண்மை. கற்பனையான உரையாடல்கள் மற்றும் சில விவரணைகளைத் தான் அவர் புனைவு என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் உதவிய நூல்கள் என்று 25 புத்தகங்கள் கொடுத்திருக்கிறார். இந்த நூல்களில் முக்கியமான ஒன்று காந்தியை உடன் இருந்து கவனித்துக் கொண்ட, அவரது பிரம்மச்சர்யப் பரிசோதனையில் பங்குபெற்ற மநுபென்னின் டைரிக் குறிப்புகள்.

ரிஸ்வான் கத்ரி குஜராத்தின் அரசியல் வரலாறு குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். 2010ல் சர்தார் வல்லபாய் படேல் குறித்து ஆய்வு செய்யும்போது, 1955ல் படேல் நேருவுக்கு எழுதிய ஒரு கடிதம் அவரை யோசிக்க வைக்கிறது. அதில் மநுபென்னின் மனநிலை மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதைப் பற்றிச் சொல்கிறார். அப்போது தான் அவரது நண்பர் ஒருவர் தேசிய ஆவணக் காப்பகத்தில் மநுபென்னின் நாட்குறிப்புகள் பாதுகாக்கப்பட்டு வருவதைச் சொல்கிறார். அப்போதும் அவர் அதில் சர்தார் குறித்துத் தகவல்கள் கிடைக்கும் என்றுதான் 2013ல் அதை ஆராயத் தொடங்குகிறார். ஆனால் காந்தியின் பிரம்மச்சர்யப் பரிசோதனை பற்றி அவருக்கு நிறையத் தகவல்கள் கிடைக்க வருகிறது.

காந்தியுடன் இருக்கும்போது மநுபென்னைத் தினமும் நாட்குறிப்பு எழுதும்படி காந்தி ஊக்கப்படுத்துகிறார். அவ்வப்போது அவரும் வாசித்து கையெழுத்துப் போடுகிறார். திராவிடக் கட்சிகளின் ஜனநாயகம் மாதிரி இது அர்த்தமில்லாத செயலாக இருந்தாலும், 2013ல் கவனம்பெற்ற மநுபென்னின் நாட்குறிப்புகள் இன்று காந்தியின் பிரம்மச்சர்ய பரிசோதனையிலும், அவரது கடைசிக் காலத்திலும் உடனிருந்து கவனித்துக் கொண்ட பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ள உதவியாய் இருக்கிறது. 1946ல் காந்தியின் அந்தரங்க உதவியாளராய் மநு திரும்ப வரும்போது அவருக்கு வயது 17. காந்திக்கு 76 வயது. 1948ல் காந்தி சுடப்பட்டு இறக்கும் போது உடனிருந்தவர். காந்தியின் கடைசி மகன் நாட்குறிப்பை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். அதற்குப் பிறகு குஜராத்தில் 21 ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் தனியே வசித்து தனது 40வது வயதில் அவர் இறந்து போனார்.

கிட்டத்தட்ட எல்லோருமே காந்தியின் பிரம்மச்சர்யப் பரிசோதனையை எதிர்க்கிறார்கள். இருந்தாலும் கடைசி வரையில் காந்தி தன் மனதை மாற்றிக் கொள்ளவில்லை. காந்தியின் கூட்டாளி தக்கர் பாபாவுக்கும், காந்திக்கும் நடக்கும் வாதப் பிரதிவாதம் மற்றும் தக்கர் பாபா மநுவிடம் நடத்தும் வாதம் இந்நூலில் குறிப்பிடத் தகுந்த சிறப்பான பகுதி. இருக்கின்ற குறிப்புகளை வைத்து ஆசிரியர் மிகச் சிறப்பாக அந்த உடையாடல்களை நிகழ்த்தி இருக்கிறார். இது ஒன்றே இந்நாவலை குறிப்பிடத்தக்க ஒன்றாக மாற்றுகிறது. எதற்காக காந்தி இந்த விசயத்தில் இத்தனை பிடிவாதமாக இருந்தார்?

ஒரு மனிதன் தனது சராசரித்தன்மையிலிருந்து மேலான நிலையை அடையும் போதெல்லாம் இந்த உலகம் அவரைக் கொண்டாடி அவருக்கொரு பிம்பம் உருவாக்கி சக மனிதரிலிருந்து அவரைத் தனியே வைத்து விடுகிறது. இப்படியானவர்கள் ஆகச்சிறந்த மனிதர்களாக்கப்படுகிறார்கள். இதன் இன்னொரு பொருள், அது நம்மால் அடைய முடியாதது அல்லது சராசரி வாழ்க்கைக்குத் தேவையில்லாதது என்பது. அகிம்சை காந்தியின் ஆதாரமான வாழ்வியல் நெறி. இம்சைக்குக் காரணம் ஆசை என்று பௌத்தம் சொல்கிறது. ஆசையை அறுப்பது அகிம்சாவாதத்தின் அடிப்படையான ஒன்று. காந்தி இதில் பௌத்தம் மட்டுமல்லாது சமணத்தையும் கைக் கொள்கிறார். சொல்லப்போனால் இங்குள்ள மதங்கள் அத்தனையிலிருந்தும் அவர் தேவையானதை எடுத்து தனக்கான நெறியை பல்வேறு பரிசோதனைகள் மூலம் முயன்றார் என்று சொல்லாம்.

நமக்கெல்லாம் காந்தி தேசப்பிதா, மகாத்மா. நாம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை அவரும் தூக்கி அலைய வேண்டிய அவசியம் இல்லை. பிரம்மச்சர்யப் பரிசோதனை அந்த பிம்பத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று சராசரி மனம் பதறியதால் எல்லோரும் அதை எதிர்த்தார்கள். காந்தியைப் பொறுத்தவரை பரிபூரண நிலையை அல்லது ஒருவித அபரிமித ஆற்றலை பிரம்மச்சர்ய விரதத்தில் வெற்றி பெற்றால் தனக்குக் கிடைக்கும்; அப்போது தன்னால் மிக எளிதாக எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்று எண்ணினார். ஒவ்வொரு மதத்திலும் எத்தனையோ தீர்க்கதரிசிகளும், ஞானிகளும் உருவாகியுள்ளனர். மதமே அவர்களிடமிருந்து தொடங்குகிறது. அத்தகு ஞானநிலையை தான் அடைய வேண்டும் என்று காந்தி விரும்பியிருக்கக் கூடும். அது காந்தியத்துக்கு அவசியம். ஒரு முடிவை நோக்கி நகராத, பரிபூரணத்தை நோக்கிச் செல்லாத வெறும் வாழ்க்கை நெறிச் சடங்குகளால் வாழ்வுக்கு என்ன அர்த்தம்? ஆத்மசுத்திக்கான யாகத்தில் ஒன்றாக பிரம்மச்சரியத்தை வைத்து (இறுதிப் பரீட்சை) அதில் வெற்றிபெற முயன்றார். அவரது பரிசோதனைக்கு அடுத்தவரை உபயோகித்தது தவறு என்பது வேறு விவாதம். ஆன்மீகம் தனி மனிதர் சம்பந்தப்பட்டது. இத்தனை தூரம் கடினமான ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து மற்றவர்கள் மஹாத்மா என்று கொண்டாடும் போது அதற்குத் தகுதியுடையவனாக ஆக்கிக் கொள்ள முயன்றார். யார் தன்னை விட்டுச் சென்றாலும் தனது பரிசோதனையைத் தொடர்வேன் என்று பிடிவாதமாய் இருந்தார்.

தக்கர் பாபாவுக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் உரையாடலில் இருந்துதான் நாவலின் தலைப்பே உருவெடுத்திருக்கிறது. ‘ஆப்பிளுக்கு முன்’. ஆப்பிளுக்கு முன் ஆதாமும் ஏவாளும் எப்படி இருந்தார்கள்? நிர்வாணமாக. அது பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல். காந்தி சொல்வதாக இதில் இப்படி வருகிறது: ‘ஒருவன் காமத்திலிருந்து விடுபடும் போது பெண்ணாக மாறுகிறான்.’ மநுபென் தனது நாட்குறிப்பில் அப்படித்தான் குறிப்பிடுகிறார். அவருடன் நிர்வாணமாக உறங்குவது என்பது தனது தாய்க்கு அருகில் படுத்திருப்பதைப் போல. காந்தி சொல்கிறார்: ‘என் பிரம்மச்சரியப் பரிசோதனையின் நோக்கம் ஆண், பெண் உடல்களிடையேயான வேறுபாட்டைக் களைவதே. இது எதிர்பாலின உடல் என்ற எண்ணமெழாத நிலைக்குப் போவது. மனதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே பிரம்மச்சரியம் என்று கொள்ள முடியாது. அது ஒரு பாசாங்கு.’ இந்த வரிகள் முழுப் புனைவா, காந்தி உண்மையிலேயே சொன்னதா தெரியவில்லை. பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் காந்தி இதுபற்றி வெளிப்படையாகச் சொல்கிறார். அதில் பிரம்மச்சரியப் பரிசோதனை என்பது கடவுளின் நபும்சகன் ஆகும் வேள்வி என்று குறிப்பிடுகிறார்.

இதை ஒரு புனைவாக மட்டும் எடுத்து வாசித்தால், பல நேரங்களில் சி. சரவணன கார்த்திகேயனின் நடை எரிச்சலூட்டக்கூடியதாய் இருக்கிறது. 2017 ஜனவரியில் அவரது ‘இறுதி இரவு’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதைக் கருணைகூர்ந்து அவர் வாசிக்க வேண்டும். ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் பழங்காலத்து தொடர்கதையில் வருவதுபோல ஒரு க்கன்னா போட்டு வைக்கிறார். சில இடங்களில் வைரமுத்து பாணியில் எழுதுகிறார். இந்த நூலில் வரலாறை எடுத்துவிட்டால் ரொம்பவே ஆட்டம் கண்டுவிடும்படி இருக்கிறது நடை. உதாரணத்திற்கு ‘மநுவின் சொற்கள் கொளுத்தியதில் காந்தியின் கண்கள் மத்தாப்பாய் மின்னின.’, ‘திருமணம் ஆகாமலே நாற்பத்தைந்து அகவையைத் தொட்டுவிட்ட ப்யாரேலாலுக்கு மனதின் ஆழத்தில் சட்டென ஏதோ ஒன்று மொட்டுவிட்டு ஒற்றைக் கண்ணடித்தது!’, ‘சொற்கள் அவள் மண்டையிலிருந்து விழத் தொடங்கின. அதன் கனம் தாளாமல் மநு தலையை உதறிக் கொண்டாள்.’

வரலாறை புனைவாக எழுதும்போது அதை எழுத்தாளர் தனது பார்வையில் சம்பவங்களைக் கலைத்துப் போட்டு, தன்னைப் பாதித்த, தான் சொல்லவிரும்பும் கோணத்திலிருந்து தர்க்கப்பூர்வமாய் அதைத் தொகுத்தெடுத்து அமைப்பதன் மூலமாகவே எழுத்தாளரின் பங்களிப்பு அர்த்தம் பெறுகிறது. இந்நாவலில் அது ஒரு குறையாக இருக்கிறது. உதாரணத்திற்கு, கஸ்தூர்பா இறப்பதற்கு முன்தினம் மநுவின் தகப்பனார் ஜய்சுக்லாலிடம் கஸ்தூர்பா சொல்கிறார், ‘ஒருவேளை நான் இறந்துவிட்டால் அதன் பிறகு மநு இங்கிருக்க வேண்டாம். அழைத்துச் சென்றுவிடு.’ இந்த சொற்களுக்குப் பின்னால் இருக்கும் உணர்வழுத்தம் வெளிப்படவே இல்லை. எந்தப் பாத்திரங்களின் மனவோட்டமும் துளியும் பதியப்படவில்லை. மேலோட்டமாகவே ஒவ்வொருவரின் செயல்கள் சார்ந்து சொல்லிச் செல்கிறார். அபுனைவுகளுக்கான எழுத்துநடை. ஏதாவது ஒரு பாத்திரத்தின் பார்வையிலிருந்து கதையை நகர்த்தியிருந்தால் இன்னும் நெருக்கமான படைப்பாக இருந்திருக்கும். மநுபென், அவர்மீது காதல்கொண்ட பியாரேலால், பியாரேலாலின் சகோதரியும், பிரம்மச்சர்ய பரிசோதனையில் பங்குபெற்ற இன்னொரு பெண்ணுமான சுசீலா. இவர்களில் ஒருவர் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தால் ஆசிரியருக்கே புதிய திறப்பைக் கொடுக்கும் ஒன்றாக அது இருந்திருக்கும். அப்படியில்லாமல் படர்க்கையிலேயே கதை சொல்லப்படுவதால், அபுனைவை வாசிப்பது போலொரு அனுபவத்தைத் தருகிறது. இதன் சாதகமான அம்சம், கதை முழுக்க, தான் வாசித்த பிற நூல்களிலிருந்து தொகுத்து நிறையத் தகவல்களைக் கொடுத்திருக்கிறார். மேலும் பிரம்மச்சரிய பரிசோதனைகள் குறித்து காந்தியின் பார்வையை சற்று விரிவாக முன்வைத்ததற்காகவும் இந்நாவல் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.