2.3K
பேய்க்கரும்பு
உங்களுக்குத் தெரியாது!
அப்போது
பார்க்கவும்
பழகவும்
இயலாதபோது
எண்ணவும்
ஏங்கவும்
அத்தனைத் தித்திப்பாக
இருந்தாள் .
கிட்டாது
கிட்டியதொரு தனிமையில்
அவளது
காதோடு வாய் கூட்டி
கட்டிக்கரும்பே என
முணுமுணுத்தேன்.
கேட்டும்
கேளாததுபோல
முகம்திரும்பியவள்
கிறுக்கா உனக்கென
கேலியாகச் சிரித்தாள்
அவ்வளவு மதுரமான சிரிப்பை
அடுத்தும் பார்க்க வாய்க்கவில்லை.
இடையில்
எழுதவும் கசப்பாய்
ஏதேதோ நிகழ்ந்துவிட்டது .
அலட்சியமாய்
அள்ளியெடுத்து ,
எதிரெதிராக சுழலும்
இரும்புச் சக்கரங்களுக்கு
நடுவே நுழைத்து
பிழிந்து உலரச் செய்த
விதியின் கரங்களையும்
அதன் பிடியில்
சிக்கி உழன்ற
நாட்களையும் கடந்து
வெகு தொலைவு
வந்துவிட்டேன்
என்றாலும் ,
சிந்திக்கிடக்கும்
இனிப்பைச் சுற்றிலும்
மொய்த்துக் கிறங்கும்
எறும்புகளைக் காணும்தோறும்
அடிநாக்கில் திரளும் கசப்பை
ஏனோ
தவிர்க்கமுடிவதில்லை
இப்போதும்
______________________________________________
கிளிப் பெண்
தேடித் தேடி
தேவதைக் கதைகள்
படித்துக் கொண்டு
விழித்திருக்கும்
பொழுதெல்லாம்
பகல் கனவில்
மூழ்கியிருந்த
அழகிய
இளம்பெண் ,
தன் வழியில் குறுக்கிட்ட
தவளையை
தாண்டிப் போகாது
உள்ளங்கையில் ஏந்தி
உதடு குவித்து
முத்தமிட
இப்போதும்
அந்த
அதிசயம் நிகழ்ந்தது .
ஆனால் ,
இளவரசனுக்கு பதிலாக
இராட்சனொருவன்
எழுந்துவரக் கண்டதும்
திகைப்பில்
மனதுடைந்து போனாள்.
தவளை
தவறி வந்திருக்கலாம்
சரி !
என் முத்தம்
எப்படி பொய்த்துப் போகமுடியும்?
ஊன் வடித்து
நான் நாளதுவரையும்
தேக்கிவைத்த
உயிர்க் காதலல்லவா
என்றவள்,
இப்போது
மனிதவாடையே அற்ற
இருண்ட வனாந்திரத்தின்
இரகசியக் குகையுள்
இரவின் மஞ்சத்தில் பெண்ணாகவும்
பகல் ஒளியில்
கூண்டுக்கிளியாகவும்
உயிர்த்திருக்கிறாள்.