ப்ளூஸ் என்பது ஒரு மனநிலை

0 comment

“விடுதியிலிருந்து வந்து கொண்டிருந்த ஓலங்களினால் என்னால் பத்து நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியவில்லை. மறுநாள் சர்ச்சிலிருந்து பிரார்த்தனை முடிந்து திரும்பும் பொழுது, எல்லோரும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் இருந்தார்கள். நான் ப்ளூஸுடன் வீடு திரும்பினேன். இந்த இடத்துக்கு வந்த பிறகு முதன்முறையாக தனிமையையும் அனுதாபத்தையும் உணர்ந்தேன்.”

ஆப்பிரிக்க-அமெரிக்க ஆசிரியரும், அடிமைமுறை ஒழிப்புப் போராளியுமான ஷார்லட் ஃபோர்ட்டன் (Charlotte Forten Grimké), டிசம்பர் 14 ,1862இல் இவ்வரிகளை தன்னுடைய நாட்குறிப்பில் எழுதினார். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு தெற்கு கேரலைனா மாநிலத்திலுள்ள எடிஸ்டோ தீவுக்கு விடுதலையான அடிமைகளுக்குக் கற்பிக்க வரும் ஷார்லட்டை அவர்களின் ஓலங்கள் மிகவும் பாதித்தன.

ஷார்லட்டின் நாட்குறிப்பு தான் ‘ப்ளூஸ் என்பது ஒரு மனநிலை’ (Blues is a state of mind) என்ற வகையில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் நிகழ்வாகும்.

இன்று நாம் கேட்கும் ப்ளூஸ் இசைக்கு இச்சம்பவம் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் ப்ளூஸ் இவ்வகையான மனநிலையிலிருந்து துவங்கிய ஒரு இசையாகும். ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு கருவியாகவே ப்ளூஸ் அமைந்தது. இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் பாப்புலர் இசையில் ப்ளூஸின் தாக்கம் இருக்கிறது.

அடிமைமுறை வணிகமும் கறுப்பின மக்களின் அமெரிக்க வருகையும்:

உலக பாப்புலர் இசை வரலாற்றில் ப்ளூஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அது மாதிரி ப்ளூஸின் வரலாற்றில் அடிமை வியாபார முறையையும் அன்று நிலவிய சூழலும் பிரதான பங்கு வகிக்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வரலாறு அடிமை முறையிலிருந்து தான் தொடங்கியது. மனிதகுல வரலாற்றில் அடிமைத்தனமும் அதனை ஒழிக்க உலகமெங்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இன்றும் நாம் படிப்பினைகளைப் பெறுவதற்கு காரணமாக இருக்கிறது. அவ்வரலாற்றின் தொடர்ச்சி தான் ப்ளூஸ். பண்டைய காலத்தில் பல்வேறு இனங்களிடையே நிலவிய போர்களில் கிடைத்த வெற்றியில் அடிமைமுறையும் விளைந்தது. கிரேக்க நாகரிகத்தின் முக்கிய அங்கமாக அடிமைமுறை இருந்து வந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் முதல் முறையாக துணை சஹாரா ஆப்பிரிக்காவில் (Sub-Saharan Africa) அடிமைகள் தாங்கிய கப்பலோடு (Slave Ship) நுழைந்தார்கள். இந்தப் பகுதி அடிமை வியாபாரத்திற்கு பெரிதும் உதவியதால் போர்ச்சுகீசியர்கள் புதிய அடிமை வியாபார சந்தையைத் துவக்கினார்கள். கினியா (Guinea) நாட்டின் கரையிலும் போர்ச்சுகீசியர்கள் அடிமைச் சந்தையைத் துவக்கி அங்கு துணிகளைக் கொடுத்து விட்டு அடிமைகளைப் பெற்றார்கள். தாங்கள் கைப்பற்றின அமெரிக்க காலனிகளுக்கு மேற்கு ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு சென்றனர். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவில் பிரஸ்தாபித்த காலனிகளில் பெரும் பரப்பளவில் பண்ணைகளும் தோட்டங்களும் ஏற்படுத்தப்பட்டு பருத்தி, கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டன. இங்கு வேலை செய்யத்தான் பல்லாயிரக்கணக்கான அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர்.

பதினாறாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களும் கடல் வணிகத்தில் ஈடுபட்டனர். பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அடிமைக் கடத்தலில் நல்ல வருமானம் கண்டதால் அடிமைகளை மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை. ஏறத்தாழ 1.2 கோடி ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாக 1532 முதல் 1832 வரை கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு அடிமைகள் ஆங்கிலேயர்களின் கப்பல்களில் வந்திறங்கினர்.

மேற்கு ஆப்பிரிக்க அடிமைகள் மதுவுக்காகவும் (பிராந்தி), துப்பாக்கிக்காகவும் விற்கப்பட்டார்கள். பின்னர் வியாபாரத்துக்காக அடிமைகள் அட்லாண்டிக் கடல் வழியாக மேற்கிந்தியத் தீவுக்கும் வட அமெரிக்காவுக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். கடைசியாக ரம் மற்றும் சர்க்கரையைத் தாங்கிய கப்பல்கள் இவர்கள் கைப்பற்றின காலனிகளிலிருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இது முக்கோண வணிகம் என்றழைக்கப்படுகிறது.

அடிமைகள் இவ்வகை கடற்பயணத்தில் கொண்டு செல்லப்பட்ட விதம் அவர்கள் எந்த வித்திலும் மனிதர்களாகக் கருதப்படவில்லை என்பதைச் சொல்லுகிறது. சிறிய கப்பலாக இருந்தாலும் ஒருவரின் இடதுகால் மற்றவரின் வலதுகாலோடு தீப்பெட்டியில் இருக்கும் குச்சிகள் மாதிரி நெருக்கமாகப் பிணைக்கப்பட்டு அனுப்பப்படுவார்கள். இந்தக் கடற்பயணம் வானிலையைப் பொறுத்து வாரக்கணக்கிலோ மாதக்கணக்கிலோ நீடிக்கும். சின்னம்மை, தட்டம்மை போன்ற வியாதிகள் ஏற்பட்டன. ஏறத்தாழ இருபது லட்சம் அடிமைகள் இவ்வகை கடற்பயணத்தில் இறந்தனர்.

Courtesy: http://www.bl.uk/learning/timeline/item107708.html

Courtesy: https://www.pbs.org/wgbh/aia/part1/1h300b.html

1700-க்குப் பிறகு அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்ட அடிமைகளின் எண்ணிக்கை எண்பத்தைந்து லட்சமாக உயர்ந்தது. மேற்கிந்தியத் தீவில் ஒரு அடிமையின் விலை இருபது பவுண்டுகளாக இருந்தது. இத்தகைய லாபத்தால் கடுமையான பயணத்தையும் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாது அடிமை வணிகத்தை மேற்கொண்டனர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆப்பிரிக்கவில் அடிமைமுறை வணிகத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலேயரின் அடிமைக் கப்பல்கள் தாக்கப்பட்டன. அவர்களில் பல அடிமை முறை ஒழிப்புப் போராளிகள் தோன்றினார்கள். 1787-ல் பிரிட்டனில் அடிமைமுறை ஒழிப்பிற்கு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் (William Wilberforce), தாமஸ் க்ளார்க்சன் (Thomas Clarkson) போன்ற சமூகச் செயல்பாட்டாளர்கள் அடிமை வணிகத்தைத் தடுப்பதற்காக பிரிட்டானிய பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தார்கள். மூன்று முக்கிய காரணிகள் அடிமை வணிகத்தைத் தடுக்க உதவின. அடிமைகளிடம் நிலவிய எதிர்ப்பு மனநிலை மற்றும் போராளிகள், பிரிட்டானிய பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தவர்கள், உண்மையிலேயே இவ்வணிகத்தின் லாபம் குறைய ஆரம்பித்தது. இது மட்டும் தான் காரணம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மேற்கண்ட காரணிகளால் அடிமைமுறை வணிகம் ஒரு முடிவை நோக்கிச் சென்றது.

1807-ல் அடிமைமுறை வணிகத் தடைச்சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் அடிமைமுறை ஒழியவில்லை. வணிகம் மட்டுமே நின்றது. இன்னும் சொல்லப் போனால் அடிமைகளின் இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்தாலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் (American Civil War- 1861 -1865) வரைக்கும் சட்டத்தை மீறித் தொடர்ந்ததென்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு:

அடுத்த முக்கியமான மைல்கல் 1865-ல் அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு நிகழ்கிறது. அடிமைமுறை ஒழிக்கப்பட்டது என்றாலும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு சமத்துவம் கிடைக்க வெகுகாலம் ஆனது. கறுப்பின மக்கள் கொல்லப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்டார்கள். வெள்ளையர்கள் புழங்கும் பொது இடங்களில் அனுமதிக்கப்படவில்லை. குடியுரிமை வழங்கப்பட்டாலும் தனியாகவே இருக்க வேண்டும். சமமாகக் கருதப்பட்டாலும் தனித்தே இருக்க வேண்டும் (separate but equal). பல தொடர்ச்சியான போராட்டங்களால் அவர்கள் இன்று சமத்துவத்தை அடைந்திருக்கின்றனர்.

ஆப்பிரிக்காவிலிருந்து சென்ற அடிமைகள் தங்களுடன் விவசாயத் திறன், மதம் சார்ந்த நம்பிக்கைகள், உணவுமுறை, நடனம், இசை போன்றவற்றையும் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றார்கள். உதாரணத்துக்கு அரிசி, பட்டாணி, சாம்பா நடனம், பான்ஜோ இசைக்கருவி.

கறுப்பின மக்களின் ஆதாரமான அடையாளத்தை அழித்தாலும் அவர்களுடைய திறமையினால் ஏதாவது லாபம் இருந்தால் அதை உபயோகப்படுத்திக் கொள்ளவே அடிமைகளின் எஜமானியர்கள் நினைத்தனர். கூட்டமாக வேலை செய்யும் பொழுது லீடர் – குழு பாடும் முறையை மட்டும் தடுக்கவில்லை. ( லீடர் ஒரு வரி பாடுவான், பதிலுக்கு வேலை செய்பவர்கள் எசப்பாட்டு பாடுவார்கள் )

Leader: De nigger-trader got me….

Chorus: Oh, hollow!…

ஆனாலும் கறுப்பின மக்களின் மற்ற பழக்க வழக்கங்களை அனுமதிக்கவில்லை. உதாரணத்துக்கு ட்ரம் வாசிப்பது மிசிசிபி மாநிலத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. ஆப்பிரிக்க மதமும் ஒடுக்கப்பட்டது. பருத்தித் தோட்டங்களில் வேலை செய்யும் பொழுது இவர்கள் குழுவாகப் பாடுவது முதலாளிக்கு வேலை சீராகத் தங்குதடையில்லாமல் நடக்கிறது என்று பொருள். ஆப்பிரிக்க நடனங்கள், கை மற்றும் உடல் ஒத்திசைவிலும் கால்கள் தாளத்துக்கு ஏற்றபடி சுழலும் வகையிலும் இருக்கும். இது தவிர, ஐரோப்பிய மற்றும் ஃபிரெஞ்சு நடனங்களும் பாதிப்பைச் செலுத்தின. இதே மாதிரி தான் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் இசையும் வார்த்தைகள் மற்றும் பாடுபொருள் போன்றவற்றில் மாற்றம் கண்டது.

அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு பெரிய பண்ணைகள் குறைந்து அவை சிறிய தோட்டங்களாக மாறின. இதன் விளைவாக குழுவாக வேலை செய்வதும் குறைந்தது. அடிமைத்தனத்திலிருந்து வெளிவந்த உடனே ப்ளூஸ் பரிணமிக்கவில்லை. பழையன கழிந்து புதியன புகுந்த சமூக மாற்றத்தின் ஊடே தான் ப்ளூஸின் வளர்ச்சியை நாம் காண முடியும்.

ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு எல்லா வேலை வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. இரும்பு மற்றும் எண்ணைத் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்ற இடங்களிலும் தொடர்வண்டித் தண்டவாள பராமரிப்பு, பருத்திச் சாகுபடி போன்ற வேலைகளையே செய்து வந்தனர். நாள் முழுவதும் ஓய்வேயில்லாமல் பருத்தியெடுத்தலை செய்து கொண்டிருந்தவனுக்கு வார இறுதியில் முடி திருத்தவோ, சந்தைக்கோ சென்று வருவது தான் சிறிய ஆறுதல் அளித்த விஷயம். முடி திருத்தகங்கள் தான் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் ப்ளூஸ் வளரும் இடமாக விளங்கின. சனிக்கிழமை இரவுகள் மது அருந்தி கேளிக்கையுடன் கழியத் தொடங்கின.

கிட்டாரின் வருகை:

இதனோடு கிட்டாரின் வருகை ப்ளூஸை பரவலாக்கியது. C.F. மார்ட்டின் & கம்பெனி ஜெர்மனியிலிருந்து 1833-ல் அமெரிக்காவுக்கு வந்து கிட்டார் தயாரிப்பில் ஈடுபட்டது. மற்றொரு கிட்டார் தயாரிப்பு நிறுவனமான கிப்ஸனும் 1890க்குப் பிறகு சேர்ந்து கொண்டது. டெக்ஸஸ் மாநிலத்திலுள்ள ஸ்பானிய-அமெரிக்கர்களினால் கிட்டார் இன்னும் பிரபலமானது. ஃபிடில் மற்றும் பான்ஜோவின் இடத்தை கிட்டார் பிடித்துக் கொண்டது. அடிப்படையில் வாய்ப்பாட்டாக ப்ளூஸ் பாடப்பட்டு வந்ததால் குரலை ஒத்த இசைக்கருவியான கிட்டார் ப்ளூஸுக்குப் பொருத்தமான இசைக்கருவியாக ஆனது.

ப்ளூஸின் இசைக்கூறுகளில் வயலில் வேலை செய்தவனுடைய எளிய மனநிலையும் 12 பார் வடிவம் கொண்ட கதைப் பாட்டுகளும் பெரிய பாதிப்பைச் செலுத்தின. 12 பார் வடிவம் என்பது ப்ளூஸின் பிரதான அம்சமாகும். பின்னர் தோன்றிய பல இசை வகைகளின் மீதும் 12 பார் வடிவம் தன் பாதிப்பைச் செலுத்தியது.

ஆரம்பகால ஆளுமைகள் & ப்ளூஸின் இசைவடிவம்:

1912 -ல் ஹார்ட்வான்டின் டல்லஸ் ப்ளூஸ் (Dallas Blues) மற்றும் W .C . ஹான்டியின் தி மெம்ஃபிஸ் ப்ளூஸ் (The Memphis Blues) போன்றவை முதன் முதலில் எழுதப்பட்ட ப்ளூஸ் பாடல்கள். ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாமல் இருந்தபோதும் ஹான்டியின் ’மெம்ஃபிஸ் ப்ளூஸ்’ பாடல் ப்ளூஸ் இசையை அதன் ஆரம்ப நாட்களில் பரவலாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது. கறுப்பர் ஒருவர் கத்தியால் கிட்டார் தந்திகளை மீட்டிக் கொண்டிருந்ததை பார்த்த ஹான்டி, ”மூன்று முறை பாடியதையே அவன் திருப்பிப் பாடியதைக் கேட்டது புதிய அனுபவமாக இருந்தது” என்று தன் சுயசரிதையில் எழுதுகிறார்.  1941-இல் வெளியான ‘Father of the Blues’ என்ற அவருடைய சுயசரிதையின் தலைப்பு தான் அவரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அடைமொழியாகவும் அமைந்தது.

ப்ளூஸ் மூன்று கார்டுகள் கொண்ட எளிய இசை வடிவம். “சரிகமபதநி” ஏழு சுரங்கள் என்றால் கார்ட் என்பது அவற்றில் மூன்றோ அல்லது மூன்றுக்கு மேலான சுரங்களைச் சேர்த்து ஒலிக்கச் செய்வது. ப்ளூஸில் பெரும்பாலும் மூன்று கார்டுகளைப் பயன்படுத்தினர்.

சரிகமபதநி

C D E F GA B

இந்த மூன்று கார்டுகள் (I (Tonic) IV (Subdominant) V (Dominant)) அடுக்கப்படும் முறையை கீழே காணலாம். ஒவ்வொரு கார்டும் ஒவ்வொரு பாராக மீட்டப்படும். ஆக பன்னிரண்டு முறை மீட்டப்படும். எனவே தான் 12 பார் ப்ளூஸ் என்றழைக்கிறார்கள். இதனோடு ஒரு stanza பூர்த்தியாகும். இதில் முதல் நான்கு பார்கள் முழுக்கவே I கார்ட் வரலாம். சில மாறுதலோடு கூட வாசிப்பார்கள். கீழே கொடுக்கப்பட்டிருப்பது ஒரு எளிய உதாரணம் மட்டுமே.

Courtesy: https://www.pbs.org/theblues/classroom/essays12bar.html

ஜான் லீ ஹூக்கர் (John Lee Hooker), R.L. பர்ன்சைட் (R.L.Burnside) போன்றவர்கள் ஒரே கார்டில் கூட பல பாட்டுகளை வாசித்திருக்கிறார்கள். ஆனாலும் ப்ளூஸுக்குண்டான ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். ப்ளூஸ் இருப்பதிலேயே மிகவும் எளிய இசை. வாசிப்பதும் எளிது. ஆனால் இன்னொரு மனிதரை ப்ளூஸை ரசிக்கச் செய்வது தான் மிகவும் கடினமான வேலை. ஏனெனில் இருப்பது வெறும் 12 பார்கள். இவையே மறுபடியும் திரும்பி வரும். ரசிகர்களைத் தங்கள் பக்கம் தக்கவைத்திருப்பது சவாலானது!

இவர்களுக்குப் பிறகு ஏராளமான ப்ளூஸ் இசைக்கலைஞர்கள் உருவானார்கள். சார்லீ பேட்டன் (Charley Patton) இதில் மிக முக்கியமானவர். இவர் மிசிசிபி டெல்ட்டா பகுதியில் வளர்ந்தவர். டெல்ட்டா ப்ளூஸின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். டெல்ட்டா ப்ளூஸ், கன்ட்ரி ப்ளூஸ், ஸ்வாம்ப் ப்ளூஸ், எலெக்ட்ரிக் ப்ளூஸ், சிகாகோ ப்ளூஸ், ப்ளூஸ் ராக் என்று ப்ளூஸ் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு கலைஞர்களால் மெருகேற்றப்பட்டு தன் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டே வந்தது. டெல்ட்டா ப்ளூஸில் ராபர்ட் ஜான்சன் (Robert Johnson) என்பவர் குறிப்பிடத்தக்க ஆளுமை ஆவார். இவரைப் பற்றி ஒரு நாட்டார் கதை உண்டு. மிசிசிபியில் ஒரு பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த ராபர்ட் ஜான்சனுக்கு ஒரு தலைசிறந்த ப்ளூஸ் இசைக்கலைஞராக வேண்டுமென்ற ஆசை. ஒருநாள் Highways 61 மற்றும் 49 இணையும் சாலையின் சந்திப்பில் ஒரு சாத்தானைச் சந்திக்கிறார். அந்த சாத்தான் அவரின் கையிலிருந்த கிட்டாரை வாங்கி ட்யூன் செய்து சில பாடல்களை வாசித்து அவரிடம் ஒப்படைக்கும் பொழுது கிட்டாரில் அளப்பரிய திறமைகளையும் வழங்கி விடுகிறது. இதற்கு மாற்றாக தன் ஆன்மாவை அந்தச் சாத்தானிடம் ஒப்படைத்தார் என்று இக்கதை பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது. தான் எழுதிய பாடலிலும் ஜான்சன் இந்நிகழ்வை எழுதியிருக்கிறார். இந்த நிகழ்வுக்குப் பின், மிகப்பெரிய ப்ளூஸ் ஆளுமையாக இவர் விளங்கினார். அவர் பயன்படுத்திய கிட்டார் வாசிப்பின் நுணுக்கங்கள் பிற்காலத்தில் வந்த ப்ளூஸ் கிட்டாரிஸ்டுகளால் வெகுவாக சிலாகிக்கப்பட்டது.

https://www.youtube.com/watch?v=1BrmnnCpQoo&list=PLXYPX_I7ROpPlOxsQEOBa4r5yk2i1SkeW&index=16

ஸ்கிப் ஜேம்ஸ் (Skip James), எல்மோர் ஜேம்ஸ் (Elmore James), ஜான் லீ ஹூக்கர் (John Lee Hooker), சன் ஹவுஸ் (Son House), லெட் பெல்லி (Lead Belly) போன்றவர்கள் ப்ளூஸின் மிக முக்கியமான ஆளுமைகள். பிக் பில் ப்ரூன்ஸி (Big Bill Broonzy), லைட்னின் ஹாப்கின்ஸ் (Lightnin’ Hopkins) போன்றவர்கள் கன்ட்ரி ப்ளூஸ் வகையில் முக்கியமானஆளுமைகள். மட்டி வாட்டர்ஸ் (Muddy Waters) மிசிசிபியில் பிறந்திருந்தாலும் சிகாகோவுக்கு இடம்பெயர்கிறார். அங்கு ஏராளமான பாடல்களை இசைத்து வெளியிடுகிறார். வில்லி டிக்சன் (Willie Dixon) என்று பேஸ் கிட்டார் இசைப்பவர் இவருடன் இணைந்து “Hoochie Coochie Man”, “Little Red Rooster”, “My Babe”, “Spoonful”, போன்ற மறக்க முடியாத பாடல்களை அளிக்கின்றனர். இவர்கள் இருவரும் இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பாடு சிகாகோ ப்ளூஸை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மட்டி வாட்டர்ஸும் வில்லி டிக்சனும் டெல்ட்டா ப்ளூஸிலிருந்து ராக் அன்ட் ரோல் வளர வரலாற்றில் ஒரு பாலமாகவும் உள்ளனர். சிகாகோ ப்ளூஸ் பற்றி பேசும் பொழுது இன்னொருவர் பற்றியும் சொல்லியாக வேண்டும்.

ஹவ்லின் வுல்ப் (Howlin’ Wolf). ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக அதிரவைக்கும் குரலுடன் ப்ளூஸ் வளர முக்கிய பங்கு வகித்தார். இது தவிர Father of the Texas Blues என்று அழைக்கப்படும் ப்ளைன்ட் லெமன் ஜெஃபர்சன் (Blind Lemon Jefferson) மிகப்பெரிய ஆதர்சமாக அவருக்குப் பின்னர் வந்த கலைஞர்களுக்கு விளங்கினார். ஒவ்வொரு வரி பாடி முடித்ததும் கிட்டாரில் ஒரு துணுக்கை வாசிப்பார். இது முன்னே நாம் பார்த்த லீடர்- குழு பாடும் முறையை ஒத்தது. இதை Call and response என்பார்கள். அழைப்பு மற்றும் பதில் என்று பொருள் கொள்ளலாம். இங்கு குரலில் பாடியவற்றுக்கு கிட்டாரில் பதிலளித்தார்கள். நாம் இதை நம்மூர் ஓடப்பாட்டுடன் பொருத்திப் பார்க்கலாம். ஓடம் தள்ளுகிறவர்கள் வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காக ஏலேலோ, ஐலசா என்பார்கள். ஆகவே தான் இருப்பதிலேயே ப்ளூஸ் மிகவும் எளிய இசை வடிவம்.

Howlin’ Wolf

இவரின் பாடல் 1926-ல் முதன்முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பிற்பாடு பரவலாக சன் ஹவுஸ், சார்லீ பேட்டன் போன்ற பல ப்ளூஸ் கலைஞர்களின் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. பெஸ்சி ஸ்மித் (Bessie Smith), இடா காக்ஸ் (Ida Cox), மா ரெயினீ (Ma Rainey), சிஸ்டர் ரோஸெட்டா (Sister Rosetta Tharpe), எட்டா ஜேம்ஸ் (Etta James) போன்ற பெண் ப்ளூஸ் ஆளுமைகளும் இந்தக் காலகட்டத்தில் சிறந்து விளங்கினார்கள். சிஸ்டர் ரோஸெட்டா The Godmother of Rock and Roll என்றழைக்கப்படுகிறார். தன்னுடைய தனித்துவமான வாசிப்பு நுணுக்கங்களால் ராக் அன்ட் ரோல் இசைக்கலைஞர்களின் உருவாக்கத்தில் பிரதான பங்கு வகித்தார்.

எலெக்ட்ரிக் கிட்டாரின் வருகை மற்றும் எலெக்ட்ரிக் ப்ளூஸ்ஆளுமைகள்:

எலெக்ட்ரிக் கிட்டாரின் வருகை ப்ளூஸை இன்னும் விஸ்தாரமாக்கியது. டிபோன் வாக்கர் எலெக்ட்ரிக் ப்ளூஸை பிரபலப்படுத்தினார். 1940-களின் பிற்பாதியில் இன்டியனோலா நகரத்தில் இருந்து ப்ளூஸின் மீது அளப்பரிய பாதிப்பைச் செலுத்தின இருவர் கால்தடம் பதிக்கிறார்கள். ஒருவர் பி.பி.கிங் (B.B King). சர்ச்சில் இறைவனைப் பாடியபடியே இருந்து விடுவேன் என்று நினைத்த பி.பி., ப்ளூஸ் இசையின் கிங் ஆனார். இன்னொருவர் புல்டோசர் ஓட்டிய மெக்கானிக். பின்னாளில் புகழ்பெற்ற பிறகு இதே காரணத்தால் வெல்வெட் புல்டோசர் என்றழைக்கப்பட்ட ஆல்பர்ட் கிங் (Albert King). இவர்களுடன் டெக்சஸ் மாநிலத்திலிருந்து வந்த ஃப்ரெட்டி கிங் (Freddie King) என்பவரும் ப்ளூஸின் கிங் என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரராகிறார். இவர்கள் மூவரும் Three Kings of the Blues Guitar என்றழைக்கப்படுகிறார்கள். இவர்கள் அறுபது, எழுபதைச் சேர்ந்த ராக் கிட்டாரிஸ்டுகளில் ஆரம்பித்து இன்று வரைக்கும் பலரின் ஆதர்சமாகத் திகழ்கின்றனர்.

B.B.King

கிட்டார் தான் ப்ளூஸின் பிரதான இசைக்கருவியாக இருந்து வந்த காலத்தில் ஓட்டிஸ் ஸ்பான் (Otis Span), மெம்ஃபிஸ் ஸ்லிம் (Memphis Slim) போன்ற கலைஞர்கள் பியானோவில் ப்ளூஸ் இசையை வளர்த்தெடுத்தார்கள், பியானோ ப்ளூஸ் வகையின் முக்கியமான ஆளுமைகள் இவர்கள்.

இதற்கிடையில் ஐம்பதுகளில் ராக் அன்ட் ரோல் பிரபலமாக விளங்கியது. சக் பெரி (Chuck Berry), எல்விஸ் ப்ரெஸ்லி (Elvis Presley), லிட்டில் ரிச்சர்ட் (Little Richard), பட்டி ஹாலி (Buddy Holly ) போன்றவர்கள் முக்கியமான ராக் அன்ட் ரோல் ஆளுமைகள். அறுபதுகளில் பீட்டில்ஸ் (Beatles) மற்றும் ரோலிங் ஸ்டோன்ஸ் (Rolling Stones) போன்ற ராக் இசைக்குழுக்கள் தோன்றின. ஏன் இவர்களைப் பற்றிய குறிப்பு இந்தக் கட்டுரையில் வருகிறதென்றால் இவர்கள் அனைவரும் ப்ளூஸ் ஆளுமைகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களின் பாடல்களை கவர் செய்து பிரபலப்படுத்தினார்கள். இதே நேரத்தில் ஜிமி ஹென்றிக்ஸ் (Jimi Hendrix) என்ற மாபெரும் புயல் வீசியது. தன்னுடைய அசாதாரணமான கிட்டார் வாசிப்பு நுணுக்கங்களால் தலைசிறந்த கிட்டாரிஸ்ட்டாக விளங்கினார்.

மறைந்து போன ப்ளூஸ் மற்றும் மீட்டெடுத்தவர்கள்:

ஐம்பதுகளில் பல ரிக்கார்ட் கம்பெனிகள் ப்ளூஸ் இசைக்கலைஞர்களின் பாடல்களைப் பதிவு செய்தன. அவற்றில் முக்கியமானது செஸ் ரிக்கார்ட்ஸ். எவ்வளவு நல்ல கலைஞர்களைப் பதிவு செய்தாலும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஒரு மீடியம் வேண்டுமென்பதால் செஸ் WHFC என்ற ரேடியோ ஸ்டேஷனையும் விலைக்கு வாங்கினார்கள். மடி வாட்டர்ஸ், ஹவ்லின் வுல்ப் போன்றோரின் பாடல்களை செஸ் ரிக்கார்ட்ஸ் வெளியிட்டு நல்ல லாபத்தை ஈட்டியது. அறுபதுகளில் சோல் (Soul) இசை தலைதூக்க ஆரம்பித்தது. ப்ளூஸில் இருந்து வளர்ந்த இசையானாலும் காஸ்பலில் (Gospel) இருந்த அதிகப்படியான பாவனைகள், உரக்கப்பாடுதல் மற்றும் புழக்கத்தில் பரவலாக இருந்த பாப்புலர் வார்த்தைகள் போன்றவை ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்கர்கள் (whites) மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இது ப்ளூஸ் கலைஞர்களை பாதித்தது. சோல் இசைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது. அப்படி மாற முடியாதவர்கள் வாய்ப்புகளை இழந்தார்கள். மக்களின் ரசனைக்கேற்ப இசையை வழங்கும் முனைப்பில் இருந்த ரிக்கார்ட் கம்பெனிகளும் ரேடியோ ஸ்டேஷன்களும் இன்னும் அழுத்தத்தைக் கொடுத்தன. ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞர்களிடையே சோல் இசை படிப்படியாக ப்ளூஸின் இடத்தைப் பிடித்துக் கொண்டது.

ப்ளூஸ் காலப்போக்கில் மறைந்து போகாமலிருக்க பெரிதும் உதவியவர்கள் இசை அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஜாக்ஸ் டெமெட்டர் (Jacques Demetre) நியூயார்க், சிகாகோ, டெட்ராய்ட் நகரங்களில் இருந்த ப்ளூஸை ஆவணப்படுத்த ஆரம்பித்தார். சாமுவேல் சார்ட்டர்ஸ் (Samuel Charters) நாட்டுப்புற ப்ளூஸ் பற்றி அதன் கண்ணியாக எஞ்சியிருந்தவர்களிடம் தகவல்களை சேகரம் பண்ணிக் கொண்டிருந்தார். ஆலன் லோமெக்ஸ் (Alan Lomax) நிறைய களப்பணிகள் ஆற்றி நிறைய கலைஞர்களின் பாடல்களைகள ஒலிப் பதிவுகள் (Field Recordings) செய்தார். இவரின் தந்தை கூட 1930-களிலேயே களப்பணி ஆற்றி நாட்டுப்புறக் கலை மற்றும் அவற்றில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் தாக்கம் போன்றவற்றை ஆய்வு செய்து பல பாடல்களை ஆவணப்படுத்தியிருக்கிறார்.  லோமெக்சுடன் மேக்மெக் கார்மிக் என்ற இசை ஆய்வாளரும் முக்கியமானவராவார். இவர் காலப்போக்கில் இசையிலிருந்து விலகிப் போன லைட்னின் ஹாப்கின்ஸ் என்ற ப்ளூஸ் பாடகரை மீட்டுக்கொண்டு வந்தார். க்ரிஸ் ஸ்ட்ராச்விட்ஸ் என்ற ரிக்கார்ட் தயாரிப்பாளரும் இந்த முயற்சிகளில் பங்கு கொண்டு கள ஒலிப்பதிவுகள் செய்ய உதவினார்.

சில வருஷங்களில் காலப்போக்கில் மறைந்து போயிருந்த ப்ளூஸ் மீட்டெடுக்கப்பட்டது. அமெரிக்க வரலாற்று ஆய்வாளர்களும் காலப்போக்கில் மறைந்து போன மூத்த ப்ளூஸ் கலைஞர்களின் மீது ஆர்வம் செலுத்தினர். நவீன சிகாகோ மற்றும் மேற்குக்கரை (West Coast) ப்ளூஸ் கலைஞர்களின் படைப்புகளைத் தேடுவதில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டினர்.  நாளடைவில் பல ப்ளூஸ் இசைக்கலைஞர்களின் வரலாறு மற்றும் படைப்புகள் மீட்டெடுக்கப்பட்டன. இதில் மிக முக்கியமானது அல்லது ப்ளூஸின் மறுஜென்மத்துக்கு காரணம் 1962-லிருந்து துவங்கிய அமெரிக்க ப்ளூஸ் திருவிழா (American Folk Blues Festival) .

ஜெர்மனியில் இருந்த சில ப்ளூஸ் ஆர்வலர்களுக்கு அமெரிக்க ப்ளூஸ் இசைக்கலைஞர்களை அவர்கள் நாட்டுக்கே வரவழைத்துக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாகவே இந்த ப்ளூஸ் திருவிழாக்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இக்கலைஞர்களுக்கு பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி என்று பல வெளிநாடுகளில் நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பு கிட்டியது.  பலருக்கு மீண்டும் ஒலிப்பதிவு செய்து புகழ்பெரும் வாய்ப்பும் கிட்டியது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல் பல அமெரிக்க கலைஞர்களும் ப்ளூஸைத் தழுவத் தொடங்கினர். தேடித் தேடி பழைய பாடல்களைக் கேட்டனர். 1980-களுக்குப் பிறகு பல நாடுகளில் ப்ளூஸ் பிரபலமாகத் தொடங்கியது. ப்ளூஸ் டீவி விளம்பரங்களில் இடம்பெறத் தொடங்கியது. கறுப்பின மக்கள் ப்ளூஸைத் தொடங்கினார்கள், அமெரிக்க இசைக்கலைஞர்கள் (Whites) ப்ளூஸை அரவணைத்து, ஆராதித்து, சிரத்தையுடன் கற்று தங்கள் படைப்புகளில் எடுத்தாண்டதன் மூலமும் பேட்டிகளின் வழியாகவும் மக்களிடம் பரவலாக கொண்டு சேர்த்தனர்.

மற்ற நாடுகளில் ப்ளூஸ் மற்றும் ப்ளூஸ் திருவிழாக்கள்:

பிரிட்டனிலும் ஜான் மேயல் என்பவரால் John Mayall & the Blues breakers என்ற இசைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. எரிக் கிளாப்டன் (Eric Clapton), பீட்டர் க்ரீன் (Peter Green) போன்றவர்கள் இந்த இசைக்குழுவில் கிட்டார் வாசித்தார்கள். இருவருமே பின்னாளில் ப்ளூஸின் மிகச்சிறந்த ஆளுமைகளாக மாறினர். அதற்குப் பிறகு வந்த பிரிட்டிஷ் ராக் இசைக்குழுக்களுக்கும் ப்ளூஸ் ஆளுமைகளின் தாக்கம் இருந்தது. இருந்தாலும் பிரிட்டனில் ப்ளூஸிலிருந்து இன்னொரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. 1968-ல் ப்ளாக் சேபத்(Black Sabbath) என்ற இசைக்குழு மெட்டல் இசைக்கு அடிகோலிட்டார்கள். ஜாஸ் ஜாம்பவான்களும் அக்காலகட்டத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் ராக், ஹெவி மெட்டல், நியூவேவ், டிஸ்கொ என்ற இசை வகைகள் அதிகரித்தன. அனைத்தும் ப்ளூஸின் பாதிப்பிலிருந்து தான் உருவாகின. எண்பதுகளில் ப்ளூஸுக்கு உண்டான சூழ்நிலையே இல்லாத போதும் ஸ்டீவி ரே வான் (Stevie Ray Vaughan) மற்றும் ராபர்ட் க்ரே (Robert Cray) போன்ற கலைஞர்கள் ப்ளூஸ் இசையைத் தொடர்ந்து நீடிக்கச் செய்தனர்.

https://www.youtube.com/watch?v=HzTlB-TjAzM

அயர்லாந்திலும் கேரி மோர், ரோரி கேலகர் போன்றவர்கள் ப்ளூஸ் இசையால் ஈர்க்கப்பட்டு சிறந்த ப்ளூஸ் ராக் இசைக்கலைஞர்களாக பரிணமித்தார்கள்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியிலும் ப்ளூஸ் இசைஇருந்து வருகிறது. அலி ஃபர்க்கா (Ali Farka Touré) மாலியில் இருந்து சர்வதேச கவனம் பெற்ற ப்ளூஸ் இசைக்கலைஞர். ஆப்பிரிக்க நாட்டுப்புற இசையும் ப்ளூஸும் கலந்த கலவை இவர்களின் இசை. அமெரிக்க இசைக்கலைஞர் ராய் கூடருடன் இவர் ஒலிப்பதிவு செய்த ஆல்பம் Talking Timbuktu கிராமி விருதைத் தட்டிச் சென்றது. சஹாரா பாலைவனத்தையொட்டி அமைந்திருக்கும் வடக்கு மாலியில் இருந்து பிரபலமான டினரிவென் (Tinariwen) இசைக்குழுவும் சர்வதேச கவனத்தைப் பெற்றது. இவர்களின் இசை டெஸெர்ட் ப்ளூஸ் (Desert Blues) என்றழைக்கப்படுகிறது.

இந்தியாவில் ப்ளூஸ் தொண்ணூறுகளிலேயே பரவ ஆரம்பித்தது. The Chronic Blues Circus என்ற இசைக்குழு இங்குள்ள பழைய ப்ளூஸ் இசைக்குழுக்களில் ஒன்று. 2003-ல் சோல்மேட் என்ற ப்ளூஸ் இசைக்குழு ஷில்லாங்கில் தொடங்கப்பட்டது. ப்ளூஸை இந்தியாவில் பிரபலப்படுத்தியதில் இவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இது தவிர ஒரு சில நல்ல ப்ளூஸ் இசைக்கலைஞர்கள் இருக்கிறார்கள். டெல்லியைச் சேர்ந்த கபில் சேத்ரி என்பவர் டெல்ட்டா ப்ளூஸ் இசையை லாவகமாக இசைத்து வருகிறார். தொண்ணூறுகளில் மும்பையைச் சேர்ந்த ஸீரோ என்ற ராக் இசைக்குழு மிகப்பிரபலமாக இருந்தது. அதன் கிட்டாரிஸ்ட் வாரன் மென்டோன்சா ஸீரோ கலைக்கப்பட்டதும் தனியாக ப்ளாக்ஸ்ட்ராட் ப்ளூஸ் என்ற பெயரில் ஒரு இசைக்குழுவைத் தொடங்கினார். இன்று இந்தியாவில் சோல்மேட்டுடன் சேர்ந்து மிக முக்கியமான ப்ளூஸ் இசைக்குழுவாக இதுவும் கவனிக்கப்படுகிறது.

The Chronic Blues Circus

கலைஞர்களின் தனிநபர் இசை நிகழ்ச்சிகள் போக ப்ளூஸ் திருவிழாக்களும் அடிக்கடி நடக்கும். எரிக் கிளாப்டனின் முயற்சியால் க்ராஸ்ரோட்ஸ் கிட்டார் திருவிழா (Crossroads Guitar Festival) 1999-ல் ஆரம்பிக்கப்பட்டது. பல ப்ளூஸ் இசைக்கலைஞர்கள் ஒன்றாகக் கூடி தங்கள் பாடல்களையும் ப்ளூஸ் ஸ்டேன்டர்டு என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ப்ளூஸ் பாடல்களையும் ஒன்றாக வாசிப்பார்கள். மூத்த கலைஞர்கள் இளைய தலைமுறையுடன் கலந்து வாசிப்பது பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்தியாவிலும் ப்ளூஸ் இசைக்கு தொடர்ச்சியாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பால் மஹேந்திரா ப்ளூஸ் திருவிழா (Mahindra Blues Festival) 2007 லிருந்து ஒவ்வொரு வருடமும் மும்பையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. பட்டி கை (Buddy Guy), ஜான் மேயல் (John Mayal) போன்ற ப்ளூஸ் ஆளுமைகள் இதில் பங்கு பெற்றார்கள்.

வெள்ளை மாளிகையில் ப்ளூஸ்:

மிசிசிபி டெல்ட்டாவிலிருந்து துவங்கிய இசை சிகாகோவின் மேற்குப் பகுதியில் செழித்து இன்று உலகமெங்கும் படர்ந்திருக்கும் ப்ளூஸைக் கௌரவிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் ஆப்பிரிக்க-அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா முன்னிலையில் பல ப்ளூஸ் கலைஞர்கள் ஒன்றுகூடி வாசித்துப் பாடிய ஒரு நிகழ்ச்சி 2012-ல் நடந்தது. பொது இடங்களில் சரிசமாகக் கூட நடமாட முடியாதவர்களிடமிருந்து பிறந்த இசை வெள்ளை மாளிகையில் பாடப்பட்டதை ப்ளூஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் ப்ளூஸுக்கு அணிவித்த மகுடமாகவும் பார்க்கிறேன். மறைந்த ப்ளூஸ் ஆளுமை பி.பி.கிங்குடன் சேர்ந்து ‘ஸ்வீட் ஹோம் சிகாகோ’ என்ற பாடலை அமெரிக்க ஜனாதிபதி பாடியது அபூர்வமான நிகழ்வாகும். உலகமெங்கும் அழிந்து கொண்டிருக்கும் கலையை மீட்டெடுக்க உத்வேகம் அளிக்கும் சக்தியாகவும் ப்ளூஸின் வரலாறு விளங்குகிறது.

Pete Souza | The White House via Getty Images

சில வாரங்களுக்கு முன்பு கூட ஷில்லாங்கைச் சேர்ந்த ப்ளூஸ் இசைக்குழு சோல்மேட் சென்னையில் வந்து நிகழ்ச்சி நடத்தினார்கள். இரவு பதினோரு மணியைத் தாண்டியும் 12 பார் ப்ளூஸ் எங்களை நடனமாடச் செய்தது. கிட்டாரிஸ்ட் ரூடி வாலங்கின் கிட்டார் வாசிப்பில் அறுபதுகளைச் சேர்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்க கலைஞர்கள் ஆல்பர்ட் காலின்ஸ் மற்றும் ராபர்ட் ஜான்சன் போன்றவர்களின் தாக்கமிருந்தது. நூறு வருடங்களுக்கு முன்பு அமெரிக்கப் பண்ணையில் பருத்தியெடுக்கும் போது உற்பத்தியான கூக்குரல் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து ப்ளூஸ் என்ற வடிவம் பெற்று உலகத்தின் இந்தக் கோடியிலிருக்கும் சென்னையின் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பதே ப்ளூஸின் சாதனை. ப்ளூஸை எங்கும் காணலாம். ஆல்பர்ட் கிங் எழுதிய ப்ளூஸ் பவர் என்ற பாடலின் சில வரிகளுடன் இக்கட்டுரையை முடிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

I say ev’rybody understands the blues
Ev’rybody from one day to another has the blues

You take the little baby that’s layin’ in the cradle
He can’t get that milk bottle fast enough
He go to kickin’ an’cryin’
An’ goin’ on, tearin’ up the little baby bed
He got the blues
Can ya dig it?

மேற்பார்வையிடப்பட்டவை:

https://www.pbs.org/theblues/classroom/essays12bar.html

The story of the blues By Paul Oliver

The Land Where the Blues Began By Alan Lomax

BBC and PBS Archives.