வெட்டுக்காடு

0 comment

வெயிலில் வதங்கிக் கொண்டிருக்கும் கிழக்கு வெளியின் ஒற்றையடிப் பாதை, பூமாறி நிற்கும் கொன்றை மரத்தின் காலடியால் குள்ளச்சி ஓடையில் இறங்கியது. ஓட்டமும் பெருநடையுமாக வெறிகொண்டவளைப் போல ஓடிவந்த அந்த சடசடப்பிலும் மணிமேகலை, ஒருசரிவில் கால்கள் சறுக்கி விடாதவாறு தாங்கலாய்தான் இறங்கினாள். அப்படியும் ஓடையின் கல்ச்சி மணலில் விழுந்து கிடந்த காய்ந்து பனங்கொட்டை ஒன்று இடது பாதத்தில் இடறவும் மீண்டும் மக்கிளித்துக் கொண்டதாய் கண்ணில் தெறிக்கிற வலி. பல்லைக் கடித்துக்கொண்டு ஓரத்து நாணாச் சிம்புகளைப் பிடித்து எதுமேட்டில் மெல்ல மேலேறி வந்தவள், பகீரென்று ஒருகணம் அப்படியே வெடித்துச் சிதறிப்போய்விட்டாள்.

எதிரே எட்டின தொலைவுக்குமாய் கிளை நீட்டி இலைபரப்பி நின்றிருந்த முந்திரி மரங்கள் அடியோடு அரங்க மொட்டையாய் வெட்டப்பட்டு முட்டுமுட்டாய் அறுத்துப்போட்ட கட்டைகளும் விறகுகளும் சிம்புகளும் மிளார்களுமாய்… தெக்கத்திக்காடே இருந்த இடம் தெரியாமல் போய் ஏகத்திற்குமாய் காங்கைகள் நெளிய சுடுகாடாய்க் கிடந்தது.

அதேநேரம் சொரேலென்று வீட்டில் கட்டிய மகராசன் கதிர்வேல் பயலின் கண்காட்சி மீண்டும் மின்னலாய் உள்ளுக்குள் பாயவும் எதிரே வெட்டுக்காடாய் கிடக்கும் அலங்கோலம் அவளை மேலும் நிலைகுலையச் செய்தது. தானே வெட்டுண்டு கிடப்பதாய் தகிக்க வைத்துக்கொண்டிருந்தது.

“எரியற நெற வௌக்கோட நெறமரக்கால எடுத்துக்கிட்டு ஒருத்தன் வூட்டுக்கு வாழ வந்தவ இன்னொருத்தி குடும்பத்து வௌக்க அமிக்கலாமா? இன்னொருத்தி மனையில ஏறி இந்த அசிங்கத்த செய்யலாமா? அம்மாங் குண்டித் திமிராடி ஒனக்கு! ஏம் புத்திய செருப்பால அடிச்சிக்கணும். ஆவறது ஆவுட்டும்னு இன்னைக்கி எடுத்த வௌக்கமாத்த அரிஓம்னு என்னைக்கி அவ கதைய எடுத்தானோ அன்னைக்கே அந்தத் தேவுடியாப் பயல வெலாக் கோலியிருக்கணும். இப்ப மட்டும் என்னா இவன வைச்ச மாதிரி அவளையும் நாலு வைச்சி இன்னையோட இந்தப் பயலையும் செறுக்கியையும்ஞ்”

அண கடந்து வந்த அவளின் ஆவேசம் போன இடம் தெரியாமல் போய் எங்குமாய் வெட்டிப் போட்ட மரங்களும் புதர்களும் பிடுங்கிப் போட்ட வேர்களும் கொடிகளும்… உடல் தெம்பையெல்லாம் சொருக்கென்று உருவிக்கொண்ட மாதிரி தெப்பலங்கெட்டவளாய் மேற்கொண்டு அடியெடுத்து வைக்க முடியாமல் தடுமாறினாள்.

எட்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். காய்ப்பு சரியில்லையென தெக்கத்திக் காட்டை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு புதுரகக் கன்றுகள் நடுகிற வேலை. வெட்டப்பட்டுக் கிடக்கும் இம்மரங்களின் கன்றுகளை நட ஒரு ஆவணி மாதத்தில் வேலைக்கு வந்தவள்தான் மணிமேகலை. டிராக்டர் ஓட்டிவந்த கதிர்வேல் அங்கு தான் அறிமுகமானான். முந்திரியின் முறுக்கு கட்டையைப் போல் இறுத்த உடம்பு. கட்டிய தலைப்பாகையை மீறிச் சிலும்பும் தலைமுடி. வியர்வையில் கழற்றிய பின்னும் வெற்றுடம்பில் வெள்ளையாய் பதிந்து கிடக்கும் முண்டா பனியன், வளைந்து வளைந்து செல்லும் வண்டிப்பாதையில் எந்த கன்றின் மீதும் படாமல் டிராக்டர் ஓட்டிச் செல்லும் லாவகம்… எல்லாமும்தான் பருவக்கொடியாய் இருந்த அவளை அவன் மீது தொற்றிக் கொள்ளச் செய்துவிட்டது.

வைத்த கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றி இலைகள் வெடித்து இனி தானே வளர்ந்து கொள்கிற சூழலில் காட்டுவேலை முடிவுக்கு வந்து ஊருக்குள் சந்திப்புகள் தொடரவும், வீடுகளுக்குத் தெரிய ஆரம்பித்தது.

“அங்காளி பங்காளி, ஒறம்பற ஒறவுன்னு எதுவமில்லாம வந்தாரங்குடியாய் வந்து தங்கன குடும்பம். அதோட கூலிக்கு ட்ரக்கு ஓட்றவன். அவனுக்குப் போயா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெத்து வைச்சிருக்கறத குடுக்கறது” எடுமுனையிலேயே மணிமேகலை வீட்டில் குறுக்கே படலை வைத்தார்கள்.

“ஒரே ஒரு பொண்ணா இருந்தா என்னா? அதுபேர்ல அங்க என்னா நூறு ஏக்கரா இருக்கு. குடிச போட்ருக்கற காக் கணி தரையத் தவிர வேறு ஐவேசியே இல்லியாம். நமக்கு காணி பூமி இல்லைன்னாலும் டைவர் தொழிலு கையில இருக்கு. நாளைக்கி சொந்தமா ஒரு ட்ரக்கு கிக்கு வாங்கிக் குடுத்துக் கூட ஓட்டச் சொல்லிக்கலாம்னு கண்டங்கண்டன்னு பொண்ண குடுக்க காத்துகிட்டு இருக்காங்க” கதிர்வேல் வீட்டுப்பக்கமும் அணை போட்டார்கள்.

கிளிகள் பறந்துவிடும் என்கிற கட்டத்தில்தான் இரு வீட்டார்களும் இறங்கி வந்து முதனை செம்பைய்யனார் கோயிலில் வைத்து கல்யாணம் நடந்தது. மோகாம்பரிக்குப்பத்திலிருந்து குறுக்கால இருளக்குறிச்சிதான், இங்காண்ட மணக்கொல்லை. ஏரிக்கரையோரம் புறம்போக்கில் இருக்கிறமாதிரி தனித்த வீடு. வந்த மறாநாளே மாமியாள் காத்தாயி “கொஞ்சம் மின்கோவக்காரந்தான். பாத்து பத்தரமா குடும்பத்த நடந்துக்க” சூத்து மண்ணைத் தட்டிவிட்டு சிறுத்தொண்டமாதேவி மகள்வீடு போய்ச் சேர்ந்துவிட்டாள்.

முன்கோபம் மட்டுமல்ல, முதல்நாள் இரவில் ஊக்கை கழற்ற முடியாத வெறுப்பில் கொத்தாய் வெடுக்கென வெட்டி இழுத்தபோது நார்நாராய் பிய்ந்தோடியது ஜாக்கெட். சற்று தாளாரமாக புதுக்கயிறாக இருந்ததில் தப்பித்தாலும் தாலிக்கயிறு அறுத்து கபகபவென எரிகிற கணத்தில் ஒரு புழுவாகக் கூட இவளைப் பொருட்படுத்தாது விழுந்து எழுந்த அவனது மூர்க்கத் தனத்தில் அரண்டு போய்விட்டாள்.

கோழிக்கறி, பன்றிக்கறி என அன்றாடமும் ஒரே கவுச்சிதான். கறியோ, குடலோ, காலோ எதுவாக இருந்தாலும் மெனக்கிட்டு அவனே அரிந்து, அலசி, உப்பு மிளகாய் போட்டு வாணல் நிறைய வறுத்து வைத்துக்கொண்டு அடுப்பங்கரையிலேயே குந்தி சளி ஒழுக ஒழுக ஆய் ஊய்… எனக் காரத்தில் சத்தமிட்டபடி முழுவதுமாய்த் தின்றுவிட்டு ஏப்பத்தோடு எழுகையில் அவளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

“கட்னவளாச்சேன்னு எனக்கு குடுக்கல போவுலங்கறத வுடு. ஒருநாளா தவறாம அன்னாடம் வாணல் வாணலா கறிய வறுத்துத் தின்னுகிட்டு இருக்கறது ஒரு குடுத்தனம் பண்றவனுக்கு அழவா?” கடந்து ஒருநாள் கேட்டும் விட்டாள்.

“இப்படி கறிய கிறிய தின்னுட்டு தெம்பா இருந்தாதான் நெல்லா ட்ரக்கு ஓட்டி சம்பாரிக்கலாம்?” சொல்லியபடி சிரித்துக் கொண்டவன் பட்டென்று சூடாகிவிட்டான். “தே பாரு. இந்த மாதிரி வவுத்துக்கு திங்கறதுக்குலாம் கணக்கு பாத்துகிட்டு குந்தியிருந்தினா கறிய உரிச்சிடுவன்.” பொரிந்தான்.

“சம்பாரிச்சி என்னா புண்ணியம்! பூராத்தையும் வெதம் வெதமா கறிய வறுத்துத் தின்னுகிட்டு இருந்தா கடைசியில இந்த ஏரிமோடு கூட மிஞ்சாது. தெருவுலதான் நிக்கலாம்.” சொல்லித்தான் ஆகவேண்டுமென்று சொன்னாள்.

அவனுக்கு ஏரிக்கரை குடிசையை குத்திக் காட்டியதாய் பொசுக்கென எகிறிவிட்டது. நின்ற நிலையில் எட்டி இடுப்பில் உதைத்துவிட்டான். “அன்னைக்கி குள்ளச்சி ஓடையில துணிய மழுப்பிக்கிட்டு நிக்கிறப்ப தெரியிலியா இது ஏரிமோடுன்னு. இன்னைக்கிதான் ரொம்ப அதிசய மயிரா தெரிஞ்சி போச்சி…”

தூணைப் பிடித்துக்கொண்டு சுதாரித்து நின்றுவிட்டாலும் அவளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. “தின்ருட்டி கம்னேட்டிப் பயல்னு தெரியாமதான் வந்து மாட்டிக்கிட்டு முழிக்கிறன்” அவளும் விடவில்லை.

“ஓத்தா வூட்லேர்ந்து கொண்டாந்ததையா சப்ளாங்கோல் போட்டுக்கிட்டு தின்னுக்கிட்டு குந்தியிருக்கறன். ஒன்னலாம்…” ஆரம்பத்திலேயே சண்டையான சண்டை. அடியான அடி.

அண்ணன் தம்பி என அவளுக்கு கேட்க எவரும் இல்லாத துணிச்சல். அப்பனுக்கும் காது கேட்காது. ஆத்தா மட்டும் எதாவது கிறாவிக்கொண்டு கிடக்கும். மீறியும் குறுக்கே வந்துவிட்டால் அவர்களுக்கும் அடி விழும். பில்தடுக்கு முள்ளில் வந்து சிக்கிக்கொண்டதாய் பெரும் தவிப்பு. அதோடு கறிவறுவலுக்குத் தோதாய் மறைவாய் இருந்த அவனது குடியும் அம்பலத்திற்கு வரவும் மணிமேகலை நொறுங்கிப் போய்விட்டாள்.

ஆனால் எந்த சண்டைசாடியாக இருந்தாலும் ஊருக்குப் போயிருந்தாலும் கூட விடமாட்டான். நிலைகால்மேல் நின்று இட்டுக்கொண்டு வந்து ராத்திரி படுக்கைக்கு இழுத்துப் போட்டுக்கொள்வான். “தெம்பா சம்பாரிக்கங்கறதுலாம் அப்பறம். இங்க தொப்புளி மொவகிட்ட இப்பிடி ராத்திரியில கெந்து பாயறதுக்குதான் கறியுஞ்சோறும்னு பெருந்தீனி திங்கறதுலாம்.” அந்த ஒரு சுகத்தைத் தவிர அவனிடம் வேறெதுவும் கண்டிராத இக்கட்டில் அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகிப் போனாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்புதான் சொந்தமாய் ட்ராக்டர் வாங்க வேண்டுமென்று குதியாய் குதிக்கிறான். “வண்டி ஓட்டியாந்து எங்க கட்டுகட்டா பணத்த அடுக்கி வைச்சிருக்கற! இதுல சொந்தமா வாங்க நிக்கிற?” பொங்கி வந்ததை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

“ஓத்தா ஒப்பன் சம்பாரிக்கறதுலாம் ஒனக்குதான. வைச்சிருப்பாங்க போயி வாங்கியா?” பேச்சில் புதுமாதிரியாகத் தெரிந்தான்.

“ஆமா அதுவோ பாம்புன்னு இல்லாம பல்லின்னு இல்லாம முள்ளு மொரட்டுல தட்டுக் கொடிய அறுத்தாந்து இடுப்பொடியப் பின்னி வித்து சீவனம் பண்ணிக்கிட்டு கெடக்கறது இல்ல. இதுல இவுருக்கு குடுக்கதான் செறாப்பு சேத்துவைச்சிகிட்டு நிக்கிதுவோ…” சீறினாள்.

“செறாப்பு சேத்து வைக்கிலன்னா என்னா. பின்னால கெடக்கற காக் காணியும் ஒனக்குதான. வித்துக் குடுக்கச் சொல்லு. அதுவோ பாட்டுக்கு இங்க வந்து தங்கிகிட்டும்…” போதையிலும் யோசனை சொன்னான்.

“எதுக்கு? அதையும் வித்துக்குடுக்கச் சொல்லி கறி, சாராயம்னு வாங்கி ஏப்பம் வுட்டுட்டு என்ன தெவைக்க வுடறமாதிரி அதுவுளயும் அந்தல்ல கட்டி சிந்தல்ல அடிக்கறதுக்கா? போதுண்டா சாமீ. என்னிய கொன்னு போட்டாலும் போடு. அதுவோகிட்ட போவாத.” கையெடுத்துக் கும்பிட்டாள்.

“ஏத்தா பேச்சச் கேட்காம ஏம் புத்திய பீ திங்க வுட்டுட்டன். என்னா நேரங்காலமோ வெறும் சில்லானுக்கு ஆசப்பட்டு ஒன்னக் கொண்டாந்து வைச்சிட்டு ஒரு வக்குக்கும் வழியில்லாம நிக்கிறன்” பொங்கிய ஆத்திரத்தை அடக்கியபடி பெருமூச்சி விட்டுக்கொண்டே சொன்னான்.

“வெறும் சில்லான்” என்றதும் கொள்ளிக்கட்டையை நீட்டியதாய் அவளுக்கும் தாண்டிவிட்டது. “அத நாந்தான்டா சொல்லுணும். வெறும் வவுத்துச் சோத்துக்காரன்னு ஓம் ஓக்கியத தெரிஞ்சிதான் எவளும் திரும்பிப் பாக்காம கெடந்த. எனுமோ ஏங் கெட்ட நேரம் ஓங்கிட்ட கொண்டாந்து வுட்டு சின்னப்பட வைக்கிது.”

அவனுக்கு சுரீர் என்று சுட்டே விட்டது. தாண்டுகிறான். “யாரு நானா? என்னையா எவளும் திரும்பி பாக்காதவா நா கெடந்தன். என்ன நிமுந்து பாத்து சொல்லு. எவளும் என்ன திரும்பிப் பாக்குலியா?” மூஞ்சிக்கு நேராய் கையை நீட்டி நீட்டிப் பேசியவன், மேலும் ஆவேசமாகிவிட்டான். “பாக்குறியா இன்னைய சொச்சப் பொழுதுக்குள்ள நா யாருன்னு?” சவால் விட்டபடி போனவனைப் பார்த்த மணிமேகலைக்கு உள்ளுக்குள் லேசாய் உதைக்கவும் ஆரம்பித்தது.

இருளக்குறிச்சியில் கரும்பு லோடு அடிக்கிற வேலை. போன மூணாம் நாளே முகங்கொள்ளா சிரிப்பும் மனம் கொள்ளா மகிழ்வுமாய் வந்து சொல்கிறான். “என்னா சொன்ன? என்ன எவளும் திரும்பி பாக்கமாட்டாளுவுளா. வந்து பாக்குறியா எப்பேர்கொத்தவன்னு. ஓங் கதலாம் சும்மா… வடிஞ்ச குட்டையில தொட்டு நாக்குல வைச்சிக்கிறமாதிரி. அவள்ல்லாம் வேணும் வாணாம்னு கடலுங் காவேரியுமா… குடுத்து வைச்சிருக்கணும். ஒனக்கு மின்ன அவள பாத்துருந்தா அவதான். தவுறிப் போனாலும் இப்பியும் ஒண்ணுந் தப்பில்ல. நம்பதான் ராசா!”

ஓங்கிப் பொறியில் அறைந்த மாதிரி கண்களெல்லாம் இருளடைந்து போய் நிற்கிறாள். மேலும் அவளை ஈக்கு ஈக்காய் பிய்க்கிறான். “என்னா இடிஞ்சி போயி நிக்கிற! யாரன்னு தெரியிணுமா. பேரச் சொன்னாலும் ஊரச் சொல்லக்கூடாதும்பாங்க. நாஞ் சொல்றன். ஒங்க ஊருதான். கையப் புடிச்சா அப்படியே கருப்பங்கழி மாதிரி…” சொல்லில் உருகினான்.

உள்ளுக்குள் உதைத்துக்கொண்டு கிடந்தாலும் ஏதோ தன்னை வெறுப்பேற்றுவதற்கு தான் என ஆரம்பத்தில் நினைத்தாள். ஆனால் போகப் போக எது எப்படியிருந்தாலும் விடாமல் ராத்திரியில் இழுத்துப் போட்டுக் கொள்கிற படுக்கையில் இடைவெளி விழுந்ததும் துடிதுடித்துப் போய்விட்டாள்.

மோகம்பரிக்குப்பம் போய் முதலில் தயங்கித் தயங்கி அம்மாவிடம் ஆரம்பித்தாள். எல்லாவற்றையும் சாதாரணமாக ஊங்கொட்டி கேட்டுவிட்டு மெல்ல வாயைத் திறந்தாள். “தா அந்தாண்ட தெருவுல மண்டையன் வூட்ல குருவங்குப்பத்திலேர்ந்து கொண்டாந்து வைச்சிருக்கனுவோ பாரு, கோமதின்னு. அந்த மாடுதான் ஏறிக்கிட்டு நிக்குது போல்ருக்கு. கரும்பு கத்த கட்டப் போன சனம்தான் வந்து சொல்லிச்சிவோ” நட்டதலையை ஏறெடுத்துப் பார்க்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள், அம்மாக்காரி தொப்புளி.

“என்னை என்னா செய்ய சொல்ற! நாம யார வைச்சி போனம். போயி இதுலாம் நாயமான்னு அவன நிக்கவைச்சிக் கேக்கறதுக்கு. மொட்ட மரம் காத்துக்கு அஞ்சாதுங்கற மாதிரி நிக்கிற அவங்கிட்டதான் போயி என்னா ஏதுன்னு பேச முடியுமா? இல்ல தலைக்கு ஒசந்த ஆம்பளப் புள்ளிவோ கிள்ளிவோ இருக்கா. அவஞ் சிண்டப் புடிச்சி செவுள்ல நாலு வைக்கறதுக்கு. வேண்ணா இங்க இருக்கற அந்த மாட்டுகிட்ட போயி மயிர்புடி சண்ட வளத்தி கிட்டு தெருவு சிரிச்சிக்கிட்டு நிக்கலாம்” தொடர்ந்து சஞ்சலமாய் சொல்லிக் கொண்டிருந்தாள்.

மணிமேகலைக்கு கேட்கக் கேட்க குமுறுகிறது. ஆத்திரத்தை அடக்கியபடி ஒன்றும் பேசாமல் ஆத்தாளையே பார்த்துக் கொண்டு குந்தியிருந்தாள். வெகுநேரங் கழித்து இறுதியாய் புத்திமதி சொல்கிற மாதிரி சொன்னாள். “எனுமோ ஓம் விதி அவங்கிட்டன்னு ஆயிப் போச்சி. தின்னு ருசி கண்டவனும் பொண்ணு ருசி கண்டவனும் சும்மா இருக்க மாட்டானுவோ. முட்டி ரெத்தம் மொழங்காலுக்கு எறங்கனாதான் ஒரு எடத்துல அடங்கி ஒடுங்கி குந்துவானுவோ”

இடைவெளி கொடுத்து தொப்புளியே பேசினாள். “இல்ல… போல்டேஷன் பக்கம் போயி ஒரு கேச கீசக் குடுக்கலாம்னாலும் ஒன்ன நம்பி எதிலியும் எறங்கவும் முடியாது. சனகாடு பொணகாடுன்னு இல்லாம அடிச்சி வுழுந்து கெடந்தாலும் நால் ரூவாய்க்கி இட்லி வாங்கியாந்து குடுத்து வா மணிமேகலன்னு கூப்புட்டான்னா ஏந்திரிச்சி ராசியாப் பூடுவ. கேட்டா கூப்புட்டு போவுலன்னா ஒங்கள அடிச்சி ஒதைச்சி ராவுடி பண்ணுவான்னு எங்க வாயையும் மூடிடுவ.”

வெளியே எரிக்கிற உச்சிவெயிலைப் போலவே மகளுக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தாள். “நாஞ் சொல்றது இதான். எந்த ஆட்டம் ஆடுனாலும் ஆடுட்டும். கம்பா கேவுரா கொறைஞ்சிடப் போவுது, காவக் கட்றதுக்கு நிக்கிற? இல்ல அவனுக்கு பத்துக் காணி நஞ்ச புஞ்சன்னு இருக்கா? போற எடத்துல புள்ள குட்டின்னு உணடாயி நாளைக்கி பங்கு பாகம்னு வந்து பிரிக்க நிக்கப் போவுது. நம்ப செம்பைய்யா புண்ணியத்துல ஒனக்கு ரெண்டும் ஆம்பளப் புள்ளிவோ காளானாட்டாம் இருக்குதுவோ. அதுவோ மூஞ்சிய பாத்துக்கிட்டு பொழப்ப ஓட்டு. இம்மாங் காலம் தின்ன சோறுதான் இதுக்கு மேலயும். பங்கப்படறது ஒரு பக்கம்னாலும், புள்ளிவோ தெவைச்சி தெகமாறிப் பூடும். வீணா வம்ப வளத்திகிட்டு அவங்கிட்ட ஒத பட்டுக்கிட்டு ஒடம்ப ரெணமாக்கிக்கிட்டு கெடக்காத. எங்களையும் குறுக்கால இழுத்துப் போட்டு குளூர் காயாத…”

ஊர் சனமும் இதையேதான் சொன்னார்கள். அவளும் மனதை ஆயக் கட்டிக்கொண்டு படுத்தால் எழுந்தால்… எல்லாமுமான அவளைப் பற்றிய அவனின் பெருமைப் பேச்சை பீ துடைத்த கல்லாகக் கூடும் பொருட்படுத்தாமல் போய்க் கொண்டுதானிருந்தாள். ஆனாலும் கடைசியில் இப்படி குடியிருக்கிற ஆலயம், பொங்கித் தின்கிற வீட்டுக்குள்ளேயே வருமென்று எதிர்பார்க்கவில்லை அவள்.

காலையில் புடலங்காய் அறுக்கும் வேலைக்கு அமர்ந்திருந்தாள். காலை நேரத்தில் போக வேண்டுமென அவசரமாய் இரண்டாவது நடையின் தண்ணீர்க் குடங்களை இறக்கி வைத்துக்கொண்டிருக்கும் போதுதான் பார்த்தாள். தற்போது ஓட்டிக்கொண்டிருக்கும் ட்ராக்டரின் ஓனர் ஆலடி ரெட்டியார் சற்றே கோபமாக நிற்க, கதிர்வேலு தூக்கக் கலக்கத்தில் கண்ணைக் கசக்கியபடி சொல்லிக் கொண்டிருந்தான். “நேத்து அப்பிடியே குருவங்குப்பத்துக்கு கூத்துப் பாக்க போயி கோழி கூவத்தான் வந்தன். ஒரே வேச்சார்லா இருக்கு. நாளைக்கி போவுங்களன்.”

“இந்த மாதிரி திடீர் திடீர்னு மட்டம் போட்டுக்கிட்டு இருந்தா வண்டிய எனுமா ஓட்றது? கடன எனுமா அடைக்கிறது…” கோபத்தோடு ரெட்டியாரின் டிவிஎஸ்50 பறந்து போனது.

காதில் வாங்கியபடி வந்த மணிமேகலை படித்துக்கொண்டிருந்த பசங்களை அதட்டினாள். “வந்து குளிங்கடா”

நெடுக இருபுறமும் புடலைகளும் பாகல்களுமாய் விரிந்த பச்சைப் பந்தல்கள். நாலைந்து சனங்களுடன் மேலவெளி ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் போது, முதலில் செல்விதான் பார்த்துவிட்டு மணிமேகலையிடம் சிரித்தபடி “அண்ணி, ஓந் தங்கச்சி வருது பாரு” என்றாள்.

வெடுக்கென நிமிர்ந்த மணிமேகலை நொடியில், நொடிந்து நொறுங்கிப் போய்விட்டாள். எதிரே தூரத்தில் சைக்கிளை மிதித்தபடி கோமதி வந்துகொண்டிருந்தாள். ஆலடியை அடுத்த குருவங்குப்பந்தான் சொந்த ஊர். மோகாம்பரிக்குப்பத்தில் இவள் அம்மா வீட்டிற்கும் பக்கத்து தெருவில் மண்டையன் வகையறாவில் கோதண்டபாணிக்குதான் வாக்கப்பட்டிருந்தாள். அவன் போதையில் பெரிய சில்லாக்கத்திரி. குடியில் ஒடுங்கியது இல்லாமல் பீடியின் இருமல் வேறு. மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாலும் கட்டுக்குலையாத அவளின் உடம்புக்கு கோதண்டபாணி கட்டுபபடியாகாமல் போனதும் இங்காண்ட ஒரு கறியும் ஒரு சோறுமாய் தின்று வளர்ந்த இவளின் ராசா கதிர்வேலைப் பிடித்துக்கொண்டாள்.

மெல்ல நெருங்குகிறது கோமதியின் சைக்கிள். நமுட்டுச் சிரிப்பில் எல்லோருமே இவளைப் பார்க்க மணிமேகலைக்கு உடம்பெல்லாம் பதைபதைத்தது. காட்டில் கொட்டை பொறுக்கிய பழக்கத்தில் செல்விதான் வேண்டுமென்றே கோமதியைச் சீண்டினாள். “என்னாடி கால நேரத்துல எங்க போய்ட்ட வர்ற?”

மணிமேகலையை கண்டுவிட்ட பதற்றம் அவளுக்குள்ளும். வந்துவிட சொன்னாள். “நேத்து எங்க அம்மா ஊர்ல ஒரு கருமகாரியம். ராத்திரி கூத்து வைச்சிருந்தாங்க. அதாம் போய்ட்டு…”

பொக்கென்று மணிமேகலைக்கு அடைத்தது. ‘ராத்திரி மகாராணி கூட குருவங்குப்பத்துல கூத்து பாத்துட்டுதான் வண்டிக்கிப் போவாம தூக்கக்கலக்கத்துல ஆளு நின்னாவுது போல்ருக்கு’ சைக்கிள் கடந்து போனபோது அவளுக்கு அனலாய்க் கொதித்தது.

“இந்த கால நேரத்துல குண்டு மல்லியப் பறிச்சி மெனக்கிட்டு கட்டி தொங்கவுட்டுகிட்டு எனுமா போவுது பாரு! நீ அண்ணன கொற சொல்ற…” பின்னலைத் தாண்டிய குண்டுமல்லிச் சரத்தோடு போகும் கோமதியைத் திரும்பிப் பார்த்தபடி கிண்டலாய் மணிமேகலையிடம் சொன்னாள் செல்வி.

ஆண்டிமடத்தாள் அதட்டினாள். “ஏண்டி நீ வேற. பாவம் அக்கினியில நிக்கிறமாதிரி அவங்கிட்ட மாட்டிகிட்டு அவ தெவைக்கறது இல்ல…”

இவள் நேரமோ என்னவோ கொல்லையில் இறங்குவதற்கு முன்பாகவே கட்டையர் வந்து மறித்துவிட்டார். “இருங்க நாளைக்கிப் பறிச்சிக்கலாம். பொடலங்கா யேபாரி இன்னைக்கி வரமுடியிலன்னு போன் பண்றான்.”

அடிக்கடி நடக்கிற கண்காட்சிதான். “சரி வேல மெனக்கிட்டதுல பிக்கியில்ல. ஆளுக்கு நாலு கீர பறிச்சிக்கிட்டுப் போவும்” புடலைக் குழியில் குனிந்தார்கள். கோமதியை நினைத்துக்கொண்டு கிள்ளியதாலோ என்னவோ மற்றவர்களைவிடவும் மணிமேகலைக்கு கூடுதலாய் மடி கனத்திருந்தது. அதக்கி அதக்கியபடி கொல்லையை விட்டு கரையேறி வந்தார்கள்.

எதுவெயிலில் வேர்த்து விறுவிறுக்க கோயிலைத் தாண்டி அவரவர் தெருவுக்குத் திரும்புகிற நேரம். எதிரில் ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு வந்த ரெங்கம்மாதான் மணிமேகலையைப் பார்த்து சந்தேகமாய் கேட்டாள். “என்னாடி செத்த மின்ன ஏரியப் பக்கம் போய்ட்டு வர்றப்ப ஒங்க வூட்டுக்குள்ள எதோ பொம்பள சத்தம் கேட்டுது. நானும் காயி பறிக்க போறன்னு சொன்னவ வூட்ல இருக்காளன்னு நெனைச்சிகிடடு வந்தன். நீ இங்கேர்ந்து வர்ற?”

மணிமேகலைக்கு திக்கென்றது. எதிரில் வந்த கோமதியைப் பார்த்திருந்த எல்லோருக்குமே உடன் ஒரு சொடுக்கம். பரிதாபமாய் மணிமேகலையைப் பார்ததார்கள். ஆண்டிமடத்தாள் சொன்னாள். “இந்தா புள்ள… அவங்கிட்ட போயி வாயக்கீயக் குடுத்து வாங்கிக் கட்டிக்காத. ஒரேடியா ஓம்மாகிட்ட சொல்லி அந்தத் தேவுடியாள…”

எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. “காடு மோடுன்னு போயி கடைசியில என்னை இங்காண்ட அனுப்பிவுட்டுட்டு அங்காண்ட அவள வரச் சொல்லி… கட்ன ஆலயத்துல… வாழும் மனையில… கம்னேட்டி ஒன்ன…” காத்துசேட்டையை போல் வெறித்த கண்களுடன் வீட்டை நோக்கிப் போனாள்.

திறந்தேதான் கிடந்தது. ஓடின வேகத்தில் உள்ளே நுழைந்தாள். எவரும் இல்லை. அவசரமாய் கீரையைக் கொட்ட சுவரில் மாட்டியிருந்த முறத்தை எடுக்கும்போதுதான் பார்த்தாள். மூலையில் குறுக்கே கிடந்த விளக்கமாற்றைத் தாண்டி கூட்டிவிடப்பட்ட குப்பையில் நாலைந்து காம்பு அறுந்து வதங்கிய குண்டுமல்லி மொட்டுகள். நாயாய் நுழைந்து அவள் நங்கசோளம் பண்ணியிருந்தது கண்டதும் அவளுக்கு குப்பென்று வியர்த்துவிட்டது.

“என்னா அதுக்குள்ள வந்துட்ட” வெளிச்சத்தை மறைத்து எதிரே வந்து நின்றவன் முகத்தில் தூக்கக் கலக்கம் துப்புரவாய் மறைந்து கொள்ளை மகிழ்வு படர்ந்திருந்ததும் அவள் பத்ரகாளியாகவே மாறிவிட்டாள். “அட்றா தேவுடியாப் பயல… நா வந்தது ஒனக்கு ரொம்ப எடைஞ்சலாப் போச்சா? குடியிருக்கற வூட்ல அந்தத் தேவுடியாளக் கொண்டாந்து இந்த அழிச்சாட்டியம் பண்றிய… ஓத்தா ஒன்ன ஒருத்தனுக்குதான் பெத்தாளா கம்னேட்டி பயல…”

அவன் எதிர்பார்க்கவில்லை. உடம்பெல்லாம் ஒருகணம் சடசடத்துப் போய்விட்டது. இதுகாறும் பூச்சியைப்போல் கிடந்தவள் திடுமென பாம்பு படத்தால் அடிப்பது மாதிரி முறத்தால் அடுத்தும் அடிக்க எகிறியதும் எட்டி கையைப் பிடித்து ஒரே முறுக்குதான், முறம் இற்றுவிழுந்தது. ஓங்கி செவுளில் வைத்து மயிரைப் பிடித்து மூக்கரக் காற்றாய் சுற்றி மூலையில் எறிந்தான். “பத்து ரூவாக் காசியக் குடுத்து ஒரு வண்டிய வாக்றதுக்கு ஒதவும்னு ஓக்கித இல்ல. வெறும் சில்லான தூக்கிக்கிட்டு வந்தவளுக்கு எதுக்குடி ரோஷ மயிரு வருது…”

சுருட்டி மடக்கிக்கொண்டு மூலையில் விழுந்தவளுக்கு பூசாத செங்கல் செவுரில் தேய்ந்து தோள்பட்டை மூட்டில் நல்ல காயம். சுவரில் இருந்த ஆணி ஜாக்கெட்டைக் கிழித்து முதுகில் கோடு போட்டிருந்தது. குதிகால் மக்கிளித்து சுளுக்கியால் குத்தியது மாதிரி கொத்திப் பிடுங்குகிற வலி.

பின்னாலேயே வந்த சனங்கள் பொதுக்கென்று உள்நுழைந்து மறிக்கிறார்கள். ஆண்டிமடத்தாள் வலிந்து அவனை இழுத்து முதுகைப் பிடித்து நெட்டுகிறாள். “எலேய், சரிதான் போடாத் தெரியும். ஒன்னும் செலாவரிச எடுக்க வேணாம்.”

அவர்கள் மீதும் பாய்கிறான். “இங்க பாருங்க, ஒங்க சோலிய பாத்துக்கிட்டுப் போங்க. அந்த தேவுடியா நா யாரும் சீண்ட மாட்டாம கெடந்தன்னுதொட்டுதான்” அவன் வார்த்தையை முடிக்கவில்லை. மூலையில் விழுந்து கிடந்தவள் கையில் அகப்பட்ட விளக்கமாற்றோடு ஒரு புயலைப் போல எழுந்து ஆண்டிமடத்தாளின் மறித்தலையும் மீறி அவன் உச்சந்தலையில் உயிரைக் கட்டி ஒன்று வைத்தாள். அவன் அதிர்ந்து சடாரென்று பின்னுக்கு திரும்பிய கணத்தில் அடுத்த அடி செவுளில் விழுந்து விளக்கமாறு சின்னாபின்னமாய்ச் சிதறியது.

“சொன்னன் சொன்னங்குறிய தேவுடியாப் பயல… அவள உள்ள இட்டாந்து போட்டா நொட்டச் சொன்னன்? இப்பியுந்தான் சொல்றன். ஓத்தாளையும் ஓந் தங்கச்சியையும் உள்ள இட்டாந்து போட்டு படுத்துக்கங்கறன். செய்றியா?” மணிமேகலை ஆத்திரத்தில் மேல்மூச்சி கீழ்மூச்சி வாங்கக் கொதிக்கிறாள்.

ஆனால் அவன் வாசலெங்கும் சனங்களாய் நிற்க அடுத்தடுத்த விழுந்த விளக்குமாற்று அடியில் ஒருகணம் இடி இறங்கியதாய் இருண்டு போய்விட்டான். முன்பாவது அரவந் தெரியாமல் வீட்டுக்குள் முறம். இப்போது வெட்ட வெளிச்சத்தில் விளக்குமாறு.

படாரென்று சனங்களை திமிறினான். “எல்லாரும் சேந்து என்னை மறிச்சிக்கிட்டு அவள அடிக்க சொல்றிங்களாடி?” ஒரே எகிறாய் மணிமேகலையை நோக்கி பாய்ந்தான். இனிமேல் அவளை விடவே மாட்டான் என்றுதான் எல்லோரும் பயந்தார்கள். மறித்தார்கள்.

மணிமேகலை லேசாய் தேருவுப் பக்கம் பின்வாங்கினாலும் விளக்குமாறை விடவில்லை. “வாடா… வாடா… இதுக்கு மேல என்னாடா கெடக்கு… நானும் புள்ளிவோ ரெண்டு இருக்கு இருக்குன்னு பாத்த குத்தம்… நீ ரவண சவாரி வுட்டுகிட்டு…” பொறி பறக்கிறது.

ஆவேசமாய் அவளை நோக்கி தெருவுக்கு இறங்கியவன் பட்டென்று தேங்கி நின்றுவிட்டான். “போடீ அப்பிடியே ஓடிப்போ. உள்ள வந்து நொழைஞ்ச தோல உரிச்சித் தொங்கலாட்டிடுவன்” ரேகம் நடுநடுங்க வாசலில் நின்று அதம்பினான்.

“போவத்தான்டா போறன். சும்மா இல்ல. ஒன்ன இந்த வௌக்கமாத்தால இழுத்தமாதிரி அந்த தேவுடியாளையும் போயி நாலு இழுப்பு இழுக்குல… ஏத்தா என்ன ஏழாயிரம் பேருக்கு முந்தாணி விரிச்சி பெத்தான்னு வைச்சிக்கடா கம்னேட்டிப் பயல…” தீர்மானமாய் பேசியவள், இருளக்குறிச்சி போகிற ரோட்டைக் கடந்து குறுக்கு வழியாய் மோகாம்பரிக்குப்பம் போகும் முந்திரிக்காட்டை நோக்கி வேகவேகமாய் நடந்து கொண்டிருந்தாள்.

“அந்தத் தேவுடியாள சாயந்திரம் ஆவட்டும். எல்ல தாண்டி எல்ல, அவ கறிய தூக்கிகிட்டு போயி ஒருத்தி வாழற வூட்ல… அப்பிடிலாமா ஆளு கேக்குது… நாடுமாறி. நானும் இங்காண்ட யாரு அங்காண்ட யாருன்னு பாத்த குத்தம் பீயத் தின்னம் வாயக் கழுவனம்னு இல்லாம விருந்து சாப்புட்டுட்டு மல்லாத்திக்கவாடி போன? இனிமே வுடமாட்டண்டி. ரெண்டு புள்ளிவுள வைச்சிக்கிட்டு நல்லதங்கா மாதிரி ஏமூட்டு புள்ள தெவையா தெவைச்சி தெவப்பூண்ட மிறிக்கிது. ஒனக்கு அம்மாங் குண்டித் திமிராடி. போவ வேண்டிதுலாம் பூட்டுது. இனிமே சாண் போனா என்னா மொழம் போனா என்னா. தட்டு விக்கப் போன ஆளு வருட்டும். நெஞ்சிக்கி மேல வேட்டியக் கட்டிக்கிட்டு ஒன்ன மேய வுடற அந்த நாடுமாறி பயலவுள நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி கேட்டு ஓங் கறியச் சிரிக்க வைச்சி ஒன்னிதுல கழிய ஏத்துல… நா மொடப்புளியாளுக்கு பொறந்தவ இல்லடி…” மணிமேகலையின் அம்மா தொப்புளிக்கு வாய் ஓயவேயில்லை.

இத்தனைக்கும் வெட்டி வெறிச்சோடிக் கிடக்கும் வெட்டுக்காட்டை பார்த்த மாத்திரத்திலேயே வெறுத்து வெலவெலத்து போய் வந்துசேர்ந்தவள், ஆத்தாளைப் பார்த்த கணத்தில் எதுவும் சொல்லத் தோன்றாமல் கோவென்று விழுந்துதான் அழுதாள். சைக்கிளில் ரோட்டு வழியாய் வந்தவர்கள் பார்த்துவிட்டு வந்து முன்கூட்டியே சொல்லியிருப்பார்கள் போலும். தாண்டுகிறாள் அவள். “அந்தத் தேவுடியாள இனிமே வுடக்கூடாது. மல்லாந்து முழிஞ்சா மார்மேலன்னு வுட்ட குத்தம். நீ பேசாம இரு. இன்னைக்கி அவள ஒன்னுல ரெண்டு பாக்காம…”

உச்சிவெயிலின் உக்கிரத்தைப் போலவே தொப்புளி ஆத்திரம் அடைக்க அடைக்கப் பேசிக்கொண்டேயிருந்தாள். நடையில் சுருண்டுகிடந்த மணிமேகலைக்கு மாலை மாலையாய் கண்ணீர் வடிந்து சாணத்தரை உப்பிக்கொண்டேயிருந்தது. திடுமென வெளியே அறியாப் பசங்கள் சத்தம் கேட்டதும் பள்ளிக்கூடம் போனது இரண்டும்தான் சேதி தெரிந்து தேடிக் கொண்டு வந்துவிட்டதோ என ஆவலாய்த் தலையைத் தூக்கிப் பார்த்தாள்.

கலங்கிய கண்களில் பட்டென்று எதுவும் பிடிபடவில்லை. தொப்புளிதான் “தே போவுதவோ பாரு வாலும் தோலுமா… புள்ளிவோ குட்டிவோன்னு அக்கற இருந்தாதான அவளுக்கு இதுவோ மேல ஓசன ஓடும். எவ ஆம்படையான் கெடைப்பான்னு நிக்கறவளுக்கு இப்பிடிதான் மொட்டவெயில்ல அலையும்…” எரிக்கிற மாதிரி சொன்னாள்.

உருவங்கள் பிடிபடவும் மணிமேகலை அப்படியே ஆடிப்போய்விட்டாள். இடுப்பிலிருக்கிற குழந்தை சாப்பிட ஏதுவாக தட்டுச் சோற்றை கிட்டக்க காட்டியபடி கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஒன்றும் சோற்றை அள்ளி வாயில் போட்டபடியாய் கூட நடந்து வரும் மற்றொன்றுமாய்… மூன்றும் பெண்பிள்ளைகள். வாங்கிய பால்வாடிச் சோற்றை வீட்டுக்குப் போய் குந்தித் திங்க முடியாப் பசி ஆவலம். இடுப்பில் மட்டும் பழைய கிழிந்த துணி. இடுப்புக் குழந்தைக்கு அதுவுமில்லை. பின்னுக்கு கேட்ட தொப்பிளியின் சத்தத்தில் தங்களைத் தானோ என்கிற மாதிரி பெரிய பொண்ணு மட்டும் திரும்பி பார்த்துக் கேட்டது “என்னா ஆயா?”

“ம்… நொன்ன ஆயா. ஒன்னதாம் இப்ப ரொம்ப அக்கறையா அழைக்கறாங்க” தொப்புளி நெருப்பைத் துப்பினாள்.

அடுத்து நொடியே கையிலிருந்த குழந்தை கத்துகிறது. “ஒதைக்குது ஒதைக்கிது. தண்ணி… யெக்கா… தண்ணி…” மிளகாயைக் கடித்துவிட்டது போலும்.

“இரு இரு. நம்ப வூட்டப் போயி குடிச்சிக்கலாம்” சமாதானம் சொல்லியபடி பெரிசின் கால்கள் பாய்ச்சலாய் எட்டி நடை போடுகின்றன.

“எக்கா தண்ணி… யெக்காவ்…” திரும்பவும் கத்தியபடி இடுப்புக் குழந்தை இவர்களைத் திரும்பி பார்க்கவும் குறிப்பாய் நடையில் கிடந்த மணிமேகலைக்கு என்னவோ போலாகி விட்டது. “தே பாப்பா நில்லு வர்றன்” திடுமென எழுந்து சுவரோரம் இருந்த மண்குடத்தில் தம்ளரில் மொண்டுகொண்டு போய்க் கொடுத்தாள்.

ஆவலமாய் இரண்டு கைகளாலும் வாங்கிக் குடிக்கிறது. கண்களில் காரமாய் இறங்கியது, மூக்குச்சளியோடு சேர்ந்து தண்ணீரோடு உள்ளே போகிறது. பார்த்துக்கொண்டே நிற்கிறாள். எதன் தலையிலும் கிட்டின்சில் எண்ணையைக் கண்டதற்கான அறிகுறியே இல்லை. மாறாக செம்பட்டை பாய்ந்து சடைசடையாய் ஈருகள் தெரிந்தன. ஒருகணம் குலுங்கக் குலுங்க குண்டுமல்லிச் சரம் தொங்கவிட்டபடி மேலவெளி ரோட்டில் சைக்கிளில் வந்துகொண்டிருந்த கோமதி நினைவில் வந்து போனாள்.

வெறும் தம்ளரை கொண்டுவந்து குடத்துவாயின் குறுக்கால வைத்துவிட்டு படுத்தவளை, வெறித்தபடி பார்த்துக் கொண்டே தொப்புளி வெகுநேரமாய் குந்தியிருந்தாள்.

மணிமேகலை என்ன நினைத்தாளோ திடீரென எழுந்து குந்தியவள், “அவளலாம் போயி ஒன்னும் கேக்க வேணாம், வுட்டுடும்மா. அப்பாகிட்டயும் எதியும் சொல்லாத” மனம் இதங்கியவளாய் சொன்னாள்.

தொப்புளி அதிர்ந்து போய்விட்டாள். “என்னாடி சொல்ற…”

“வாணாம் வுடும்மா. வட்லும் தொட்லுமா மூணும் பொட்டப் புள்ளிவுளா வேற இருக்கு. அந்த நாடுமாறிய நாம எதாவது ஆத்தரத்தோட கொடுமையில கேக்கப்போயி ஆவாத நேரம் இருந்து ஒண்ணுகெடக்க ஒண்ணு செஞ்சிட்டாள்னா பாவம் இதுவோ மூணும் தெவைச்சி தெருவுல நின்னுடும். என்னா பாவம் செஞ்சமோ இவங்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறம். இதுக்கு மேல இதுவோ பாவத்த எதுக்கு எடுத்துக் கொட்டிகிட்டு…” மணிமேகலைக்கு குரல் சுத்தமாய் இறங்கிப் போயிருந்தது.

“அப்ப சாயந்திரம் வருவாம் போ. இந்தாண்ட ஒன்னியும் அங்காண்ட அவளையும் போட்டு படுத்துப்பான்.” தொப்புளி ஆற்றமாட்டாத கோபத்தில் பேசினாள்.

“காலையில எடுத்தமாதிரி ஒத வாங்கறதுல பிக்கியில்லன்னு வௌக்கமாத்த கையில எடுத்தாத் தானா பதத்துக்கு வருவான்…” சொன்னவள் இடைவெளி விட்டு “அப்பிடியே வல்லன்னாலும் புள்ளைய நத்தி பீ திங்கிறமாதிரி போய்த் தொலைய வேண்டியதுதான்…” தனக்குத்தானே சமாதனாமாகவும் சொல்லிக்கொண்டாள்.

( ஜனவரி 2019ல் வெளியாயிருக்கும் ‘வாடாமல்லி’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை )