விடைபெறுதல்

1 comment

1

அருட்தந்தை எல்வ் அன்று கண்விழிப்பதற்கு முன் சற்று விசித்திரமான ஒரு கனவு கண்டார். ஷாமும் அன்றொரு கனவு கண்டே எல்வுக்கு முன் விழித்து அவரை எழுப்பச் சென்றார். “தந்தையே எம்மை கைவிடாதிரும். தந்தையே எம்மை ஏமாற்றாதிரும். தந்தையே எம்மீது கருணை வையும்” என்று தூய்மையான வெள்ளைத் தலையணை நனையுமளவு மூடிய கண்களில் இருந்து நீர் வழிய அழுது அரற்றிக் கொண்டிருந்த தன்னை ஷாம் மெல்லத் தொட்டு உசுப்பியபோது தான் ஏசுவைக் கனவில் கண்டதாக நம்பிய வண்ணம் எல்வ் எழுந்துகொண்டார்.

எல்வ் அழுவதையும் சிரிப்பதையும் ஷாம் பலமுறை கண்டதுண்டுதான். ஆனால் எல்வின் சிரிப்பு சக பாதிரிமார்களை வாதத்தில் வெல்லும் போதோ ஒருவரது கையறு நிலையை முழுவதுமாக உணர்ந்து பரிகாசம் செய்யும் போதோ எழுவது. எல்வின் அழுகைகூட அவருள் எப்போதும் விழித்திருக்கும் தர்க்கவாதி பிறர்படும் தாங்கவொண்ணாத துயரைக்கண்டு வடிக்கும் கண்ணீராகவே இருக்கும்.

மகிழ்வையும் துயரையும் உள்ளத்தைக் கடைந்து வெளிப்படுத்தாத, “எல்வ்” என்று செல்லமாகவும் மரியாதையாகவும் அழைக்கப்படும் அந்த ஆக்ஸ்ஃபோர்டு ஃபாதரான வெள்ளையனை ஷாம் உள்ளுக்குள் லேசாக வெறுப்பதற்கு அவரின் சுயத்தை எங்கும் வழியவிடாத குணமே பிரதான காரணமாக இருந்தது. தன்னுடன் பேசுகிறவர்களை சற்று நேரத்துக்கெல்லாம் அணுக்கமாக உணரச்செய்துவிடும் எல்வ் பல ஆண்டுகள் கடந்தபின்னும் முதன்முறை உணர்ந்த அணுக்கத்தைத் தாண்டி யாரையும் உள்ளே அனுமதித்ததே இல்லை. ஷாமைத் தவிர இந்த குணம் யாருக்கும் பெரிய தொந்தரவாக இருந்ததில்லை. ஏனெனில் எல்வுடன் யாருக்கும் நீண்ட நாட்கள் கழிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

எல்வ் தன்னுடைய இறையியல் கல்வியை தீவிரமாகவும் உற்சாகமாகவும் பெற்றுக் கொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்டு நாட்களில் ஃபாதர் க்ரீன் அவருக்கு எல்லாமுமாக இருந்தார். க்ரீன் தன்னுடைய இரண்டு சிறந்த மாணவர்களில் ஒருவரான எல்வை சேவை போன்ற இரண்டாந்தர செயல்பாடுகள் கலக்காத தூய இறையியல் பணியில் ஈடுபடுத்த நினைத்தார். அதற்கு எல்லாத் தகுதிகளும் உடையவராக எல்வும் இருந்தார். ஆனால் எல்வ் இயல்பாகவே தன்னுள் இருந்து எழும் விலகிச் செல்லும் உந்துதலால் தீவிர இறையியல் கல்வியைப் பெற்றுக் கொண்டே மத எதிர்ப்புக் கருத்துக்களையும் வளர்த்துக் கொண்டு தன்னை தொடர்ந்து மாசுபடுத்திக் கொண்டார். பின்னாட்களில் எல்வ் ஃபாதர் வின்ஸை நோக்கி ஈர்க்கப்பட்டதற்கு அவர் கல்லூரியில் “களங்கப்பட்டது” தான் காரணம் என ஃபாதர் க்ரீன் நம்பியதாக எல்வ் ஒருமுறை ஷாமிடம் சிரித்துக் கொண்டே சொன்னார். எல்வ் இந்தியா வருவதற்குக் காரணமாக வின்ஸ் அருட்தந்தை அமைந்தார். இந்தியா வந்த கொஞ்ச நாட்களிலேயே அவர் இயங்கிய சேவா சங்கத்தின் நோக்கம் கிறிஸ்துவ மதமாற்றமும் சேவையும் மட்டுமல்லாது அதைக் கடந்தும் விரிவதை எல்வ் கண்டு கொண்டார். அந்த விரிவு அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.  ஃபாதர் கீரினைப் போலவே வின்ஸுடன் நெருங்கி செயல்பட்ட எல்வ் அதைப் போலவே அவரிடமிருந்து எந்தவித குற்றவுணர்வுமின்றி விலகினார்.

தன்னுடைய இருபத்தைந்தாவது வயதில் 1927ல் இந்தியா வந்த எல்விடம் அடுத்த சில வருடங்களிலேயே சேவா சங்கத்தில் இருந்து விலகுமளவு மாற்றத்தை ஏற்படுத்தியவர் காந்தி. முதல் சந்திப்பிலேயே காந்தி தன் அளவுக்கு புத்திக்கூர்மை உடையவர் அல்ல என்பதை எல்வ் கண்டு கொண்டார். இருந்தும் தான் வின்ஸின் மேல் வைத்திருந்த ஈர்ப்பு குறையத் தொடங்கியதில் இருந்து, முழுவதும் தர்க்கரீதியாக செயல்படத் தெரியாத உணர்வுத் தடுமாற்றங்கள் கொண்ட அந்த கிழட்டு மனிதரை நோக்கி தான் ஈர்க்கப்பட்டிருப்பதை எல்வ் உணர்ந்து கொண்டார்.

அலைச்சலும் கொந்தளிப்புமான ஐந்து வருடங்கள் கழிந்து 1933ல் கரஞ்சியாவில் பழங்குடியின மக்கள் மத்தியில் தன்னுடைய குடிலை அமைத்துக் கொண்டு அவர்களுக்கு சேவை செய்து வாழும் அருட்தந்தை எல்வ் இப்போது உயர்ந்த ஆளுமைகளின் மீது அபாரமான கவர்ச்சி கொண்டு அவர்களை வெறியுடன் பின்பற்றி அவர்களின் மனதில் மறுக்க இயலாத இடத்தை பிடித்து விடுகிறவராகவோ யாரிடமும் முரண்பட்டு முழுமையாக விலகி நிற்கும் பிடிவாதக்காரராகவோ இல்லை. ஷாமைத் தவிர அவருக்கு நெடுநாளைய நண்பர்களும் யாருமில்லை.

“ஷாம் நான் உயர்ந்த மனிதர்கள் மீதான ஆர்வத்தை கைவிட்டுவிட்டதை நினைத்துப் பார்த்தால் நானே உயர்ந்த மனிதனாகிவிட்டதாகத் தோன்றுகிறது” என்று ஒருமுறை சிரித்துக் கொண்டே ஷாமிடம் எல்வ் சொன்னார்.

ஷாம் அவரைக் குழப்பமாகப் பார்த்தார்.

“உண்மைதான் ஷாம். நானொரு நல்ல மாணவனாக என் கல்லூரி வாழ்வைத் தொடங்கினேன். அழுக்கும் குழப்பங்களும் வறுமையும் நிறைந்த இந்தியாவை நான் கற்பனை செய்து வைத்திருந்தேனே ஒழிய இங்கு வருவேன் என எண்ணிப் பார்த்திருக்கவில்லை. தூய இறையியலாளனாக இந்தியா வந்து சேவையில் ஈடுபட்டேன். அந்தச் சேவையும் காங்கிரஸ்காரர்கள் தேசியவாதிகள் போன்றோருடன் ஆங்கில அரசை உரையாடச் செய்யும் ஒரு முயற்சி என்ற எல்லையில் இருந்து தாழ்த்தப்பட்டவர்களை நோக்கி நகர்ந்தது. தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து நகர்ந்து இப்போது பழங்குடி மக்களிடம் வந்து சேர்ந்திருக்கிறேன். இந்தியாவின் ஒவ்வொரு அடுக்காக கீழிறங்கக் கீழிறங்க எனக்கு இந்தியத் தலைவர்களின் மீதான வியப்பு குறைந்தபடியே வருகிறது ஷாம். ஒருவேளை எல்லா மட்டத்திலும் ஒரு தலைவர் இருப்பதால் நான் இவர்களுக்கு “மீட்பனாக” இருக்கலாம் என்ற எண்ணத்துடன் இங்கு வந்து அமர்ந்து விட்டேனோ?” என்று எல்வ் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு கேட்டதும் ஷாம் ஒரு கணம் திடுக்கிட்டு விட்டார். குறும்பும் கனிவும் ஒன்றாகத் தெரியும் இளமையின் ஆற்றல் நிறைந்த அந்த வெள்ளை முகத்தில் சிரிப்பு தோன்றிய பிறகே ஷாம் நிம்மதி அடைந்தார்.

“நீங்கள் உங்கள் மீது அதீதமான சந்தேகங்கள் கொண்டிருக்கிறீர்கள் எல்வ். அவை அநாவசியமாவை” என்று எல்வின் உணர்வுகளுக்குள் செல்லாமல் அந்த விவாதத்தை அன்று முடித்து வைத்தார் ஷாம். எல்வின் உணர்வுகளுக்குள் செல்ல நினைப்பது ஒரு வீண்வேலை. அவர் உணர்வுகளுக்கு எவ்வளவு விளக்கங்கள் கொடுத்தாலும் இறுதியில் ‘உன்னால் என் குழப்பங்களை அணுவளவும் தீர்த்துவைக்க முடியாது’ என்று பொருள் வரும்படியான எதையாவது சொல்வார் எல்வ்.

இன்று குழப்பமும் கொந்தளிப்பும் கொண்ட மனதுடன் அழுத கண்களுடன் எழுந்து அமர்ந்திருக்கும் இந்த ஆங்கிலேயனிடம் தற்போது உள்நுழைவதற்கான விரிசல் தென்படுவதை ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக ஷாம் உணர்ந்தார்.

“கரஞ்சியாவின் தழை மணக்கும் அமைதியும் தூய்மையும் என்னுள் எழுப்பாத அழுகையூட்டும் நல்லுணர்வுகளை பம்பாயின் மோட்டார் சத்தமும் தூசும் எழுப்புவதைக் கண்டால் என் இறைப்பற்றின் மீது எனக்கு சந்தேகம் தோன்றுகிறது ஷாம்” என்று சிரித்து தன்னிடம் ஷாம் உணர்ந்த அந்த விரிசலை சட்டென அடைத்தார் எல்வ்.  அறைந்து சாத்தப்பட்ட கதவில் மூக்குநுனிபட்டதுபோல விதிர்த்துப் போனார் ஷாம். ஆனால் அவருக்கு இன்னமும் நேரம் இருந்தது. ‘இந்த நாளில் எல்வ் நிச்சயம் ஒரு புள்ளியில் உடைந்தே ஆவார், அதனை அவர் அருகில் இருந்து தான் காணப்போகிறோம்’ என்று மகிழ்ந்து கொண்டார் ஷாம். எனினும் மேரியுடன் பேசும்போது ஃபாதர் எல்வ் தன்னை உடனிருக்க அனுமதிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற திடீர் கலக்கம் ஷாமுக்கு ஏற்பட்டது. அவர்கள் விடைபெறப்போகும் கணம் அவர்கள் இருவருக்கும் எவ்வளவு அந்தரங்கமானது என்று தெரிந்தும் அந்த கணத்துக்குள் இருக்க நினைக்கும் தன்னை ஒரு கணம் இழிவாக உணர்ந்தார். பொதுவாக இப்படி இழிவாகவோ தாழ்வாகவோ நாம் உணர்கிறோம் எனில் நாம் எண்ணியது நடக்கவிருக்கிறது என்று அர்த்தம். அப்படியெனில் இன்று மேரியும் எல்வும் விடைபெற்று பிரியவிருக்கும் கணத்தில் தான் அவர்களுடன் இருக்கப்போவது உறுதி என்று தன் உள்ளம் நம்பிவிட்டதை ஷாம் உணர்ந்தார். அது எப்படி சாத்தியமாகும் என்று எண்ணிய உடனேயே காந்தியின் நினைவு அவருக்கு வந்தது. காந்திக்கு எல்வ் எழுதிய கடிதத்தில் “இனி என் வாழ்வில் ரகசியங்கள் கிடையாது பாப்பு” என்ற வரியை படித்தபோது ஷாம் மகிழ்ந்து முகம் மலர்ந்தார். எல்வ் தனக்குள் தூண்டும் பொறாமை மட்டுப்படும் என எண்ணினார். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. எல்வ் பயணிக்கும் இடங்களில் எல்லாம் அவரைப் பெண்கள் சூழ்ந்தனர். சக அருட்தந்தைகள் வியந்தனர். எல்லாவற்றுக்கும் மேல் சிலமுறை மட்டுமே எல்வை சந்தித்திருந்த பாப்பு கூட அவரை சொந்த மகன் அளவுக்கு வாஞ்சையுடன் நடத்தினார். எப்படியோ எல்வின் மேரியுடனான சந்திப்பு ரகசியமானதாக இருக்கப் போவதில்லை என்று மட்டும் எண்ணி ஷாம் ஆறுதல் கொண்டார்.

மேரியை இங்கிலாந்துக்கு வழியனுப்புவதற்காக எல்வும் ஷாமும் பாம்பே வந்திருந்தனர். 1932 நவம்பரில் பழங்குடி கிராமமான கரஞ்சியாவுக்கு சென்ற பிறகு எல்வ் நகருக்கு வருவது இதுவே முதன்முறை . இந்த ஆறுமாதங்களுக்கு உள்ளாகவே எல்வ் மூன்று முறை காய்ச்சலால் தாக்கப்பட்டார். ஒருமுறை ஷாமிடம் கோபப்பட்டார்.

மேரி இங்கிலாந்து புறப்படுவதாக வந்த கடிதத்தை படித்து முகம் மலர்ந்தவராக ஷாமிடம் “இனி என் உளக்குழப்பங்கள் குறையும் என எண்ணுகிறேன் ஷாம்” என்றார். அதுபோலவே மேரியை வழியனுப்பும் நாளுக்கென காத்திருந்தபோது எல்வ் உற்சாகமானவராக இருந்தார். பாப்புவுக்கு பல கடிதங்கள் எழுதினார். அந்த உற்சாகத்தின் சாயை எதுவும் தென்படாதவராக படுக்கையைவிட்டு எழுந்து செல்லும் எல்வை ஷாம் விசித்திரமாகப் பார்த்தபடி அவர்கள் தங்கியிருந்த விடுதியின் கீழ்த்தளத்துக்கு தேநீர் வாங்கிவரச் சென்றார். கெட்டிலும் மூன்று குவளைகளுமாக உள்ளே வந்தவரை அமைதியான புன்னகை தவழ்ந்த முகத்துடன் எல்வ் வரவேற்றார்.

“ஏதோ யோசனையில் இருக்கிறீர்கள் எல்வ் சரியா?” என மேஜையில் குவளையையும் கெட்டிலையும் வைத்தபடி ஷாம் கேட்டார்.

புன்னகை மாறாத முகத்துடன் “ஆம் ஷாம் இன்று கண்ட கனவை சிந்தித்துக் கொண்டிருந்தேன்” என்றார் எல்வ்.

கேள்வியுடன் பார்த்த ஷாமை நோக்கி எல்வ் பேசத் தொடங்கினார்.

2

“ஆக்ஸ்ஃபோர்டு பேராசிரியர்களில் எங்களுக்கு மிகவும் பிடித்தவர் ஃபாதர் நீல்ஸ். எங்களுடைய அந்தரங்க சிக்கல்களைக் கேட்பதிலும் அவற்றின் அபாயமின்மையை விளக்குவதிலும் தேர்ந்தவர். பொதுவாக எப்போதுமே அவரைச் சூழ்ந்து ஒரு மாணவர் கூட்டம் இருந்தபடியே இருக்கும். ஒருநாள் அப்படியொரு சந்திப்பில் நீல்ஸ் எங்களை நோக்கி கேட்டார்- நீங்கள் கிறிஸ்துவை கனவில் கண்டு இருக்கிறீர்களா?”.

முதலில் அவர் விளையாட்டாக கேட்கிறார் என்றே எண்ணினோம். ஆனால் ஒரு மாணவன் தான் கண்டதாக பதில் சொன்னதும் ஒவ்வொருவரும் தங்களுடைய பதில்களை சொல்லத் தொடங்கினர். கனவினை விளக்குவதில் முதலில் இருந்த தடைகள் நீங்கி ஒவ்வொருவரும் ஆத்மார்த்தமாக அந்த சந்தர்ப்பத்தை விளக்கத் தொடங்கினர். ஒருவர் சாப்பாடு மேஜையில் எதை உண்ண வேண்டும் எதை உண்ணக்கூடாது என்று கண்டிப்புடன் ஆணையுடன் மாஸ்டராக கிறிஸ்து தன் கனவில் வருவதாகச் சொன்னார். மற்றொருவர் கிறிஸ்து தன்னுடன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பவராகவே எப்போதும் கனவில் வருகிறார் என்று சொன்னார்.   இன்னுமொருவர் கிறிஸ்து தன் கனவில் அழிக்கப்பட வேண்டிய எதிரியாக தோன்றுவதாகச் சொன்னபோது சற்று நேரம் அங்கு ஆழ்ந்த அமைதி நிலவியது. அடுத்து சொன்னவர் பெண்களை எளிதாகக் கவர்ந்து விடும் பேரழகனான பொறாமைப்பட வைக்கும் நண்பனாக கிறிஸ்து தன் கனவில் வருவதாகச் சொன்னார். நான் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் கிறிஸ்து என் கனவில் அன்றுவரை வந்ததில்லை ஷாம்” என்று சொல்லி நிறுத்தினார் எல்வ்.

மாணவர்கள் கலைந்த பிறகு ஃபாதர் நீல்ஸ் எல்வை தனியே அழைத்தார்.

எல்வ் அந்த சந்தர்ப்பத்தால் கொஞ்சம் தாக்குண்டிருப்பதை நீல்ஸ் கண்டு கொண்டார்.

“எல்வ் நீ ஒருமுறை கூட கிறிஸ்துவை கனவில் கண்டதில்லையா?” என்று தன்முன் தலைகுனிந்து நின்றிருந்த தன்னுடைய நாற்பதாண்டு ஆசிரிய வாழ்க்கையில் சந்தித்த சிறந்த மாணவனை நோக்கி நீல்ஸ் கேட்டார். அந்தக் கேள்வியின் தீவிரம் புரிந்ததாலோ என்னவோ எல்வ் தலைநிமிரவில்லை. ஃபாதர் நீல்ஸ் தன் முன் நிற்கிறவனுக்கு எளிய விளக்கங்கள் தேவைப்படாது என்பதை உணர்ந்து அவரது உணர்வுகளுடன் நேரடியாகவே பேசத் தொடங்கினார்.

“கிறிஸ்துவை உணர்ச்சிகரமாக மனதில் வைத்திருக்காதே எல்வ். நல்லுணர்ச்சியைப் போல இறைவன் நம் அகமாக மாறுவதற்கு தடையாவது வேறேதுமில்லை” என்று மட்டும் சொல்லிட்டு எல்வ் அறையைவிட்டு போகலாம் என கையசைத்தார்.

“நீல்ஸ் சொன்னது உண்மைதான் ஷாம். என்னால் கிறிஸ்துவை என் தேவனாக எண்ண முடியவில்லை” என்று சொன்னபோது எல்வின் குரல் சற்று நடுங்கியதாக ஷாமுக்குப்பட்டது.

“இன்று இப்படியொரு சூழ்நிலையில் நான் கிறிஸ்துவை காண்பேன் என எண்ணவில்லை ஷாம். என் உறுதி தளர்வது போல உணர்கிறேன்” என்று சொன்ன போது எல்வின் குரல் உண்மையிலேயே தாழ்ந்தது.

எல்வைப் புரிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டுமென ஷாமின் உள்ளம் துடித்தது. மேரி கரஞ்சியாவுக்கு வந்த தினம் ஷாமுக்கு நினைவுக்கு வந்தது. அப்போது எல்வ், தான் தலைமை ஏற்றிருந்த சேவா சங்கத்தை விடுத்து கரஞ்சியாவில் ஆசிரமம் அமைத்து இங்கிலாந்துக்குச் சென்று அங்கிருந்து பல போராட்டங்களுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பி சில மாதங்களே ஆகியிருந்தன. சேவா சங்கத்தில் இனியும் நீடிப்பதில் பொருளில்லை என்று உணர்ந்த மேரி ஷாமையும் எல்வையும் தேடி கரஞ்சியாவுக்கு வந்தார்.

மேரி தன்னையோ எல்வையோ காதலிப்பது ஷாமுக்குத் தெரியும். பழங்குடி சேவை சாகசம் விரும்பும் மனம் என தன் செயலுக்கு அவர் என்ன காரணம் கற்பிக்க விரும்பினாலும் ஷாம் அவளை நம்புவதாக இல்லை. எல்வை காதலிக்குமளவு மேரி தகுதியானவர் அல்ல என ஷாம் மனதார நம்பியதற்கு அவரது மேரியின் மீதான காதல் காரணமில்லை என்று சொல்லிவிட முடியாது. மலையின் மீதிருந்த தன் தேவக்குடிலைத் தேடி வந்தவரை எல்வ் இன்முகத்துடன் வரவேற்கவில்லை. ஆனால் ஷாமுக்கு மேரியின் வருகை பெரும் உற்சாகத்தை கொடுத்தது.

“மேரி சங்கத்தை விலகியதற்கு ஒரு சரியான காரணம் சொல்லும் வரை அவர் இங்கு நீடிப்பதை என்னால் அனுமதிக்க இயலாது ஷாம்” என்று மேரி வந்து நான்கு நாள் கடந்திருந்த ஒரு காலை வேளையில் மூவரும் ஒன்றாக குடிலில் அமர்ந்து தேநீர் அருந்தும் போது எல்வ் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு சொன்னார்.

“எல்வ் உங்களுக்கு கடுமை பொருந்தவில்லை” எனக் கண்களை அகல விரித்துச் சிரித்தார் மேரி. மேரியின் சிரிப்பு ஷாமின் நெஞ்சில் அதிர்வை உருவாக்கியது. இவ்வளவு தூயவளிடம் கடுமை காட்டும் எல்வ் மீது ஷாமுக்குக் கோபமும் வந்தது.

“மேரி நீ சாகசங்களை விரும்புகிறவள். சேவை செய்யும் துடிப்பு உன்னிடம் அதிகம் உண்டு. ஆனால் சேவை மனநிலை துடிப்பினால் அமைவதல்ல. தொடர்ந்த பயிற்சியால் உருவாக்கிக் கொள்ள வேண்டியது. நீ இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவள். கற்பனை மிகுந்த உன் உள்ளம் பயிற்சிகளுக்கு இசையாது. எல்வ் இவ்வாழ்வை மெல்ல மெல்ல தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவரது இந்த வாழ்க்கைத் தேர்வை நான் பெரும் சரிவு என்றே சொல்வேன். அந்த சரிவின் மீதான கவர்ச்சியால் தான் நீ இந்தக் குடிலை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறாய்” என்று எல்வின் எண்ணத்தை ஷாம் அமைதியாக மேரியைப் பார்த்துச் சொன்னார்.

“அற்புதம் ஷாம்! எவ்வளவு நிதானமாக பேசக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்! மேலும் என்னை எவ்வளவு அழகாக மதிப்பிட்டு வைத்திருக்கிறீர்கள்! பிள்ளையின் துர்குணங்களை அம்மாவை விட வேறுயார் நன்கறிவர்? தன் பிள்ளையின் துர்குணங்கள் தனக்குத் தெரியும் என்பதால் எந்த அம்மாவாவது பிள்ளையை விலக்கி வைப்பார்களா? என்னை இவ்வளவு நன்கறிந்த உங்களை விடுத்து நான் எங்கு போவேன்? என்னை ஏற்றருளுங்கள் அருட்தந்தையர்களே” என அவர்கள் இருவர் முன்னும் மண்டியிட்டு கைவிரல்களை வணங்குவது போல கோர்த்தார் மேரி. ஷாமுக்கு ஒருவகையான பதற்றம் தோன்றிவிட்டது. மேரியின் செய்கை விளையாட்டாக தொடங்கப்பட்டிருந்தாலும் அவரது தொழுத கைகளில் தெரிந்த நடுக்கம் அவர் முழுமையாக விளையாடவில்லை என்பதை அவருக்குச் சொல்லவிட்டது. எல்வ் மேரியிடமிருந்து விழிகளை எடுக்கவில்லை. அந்த விழிகள் கோர்த்த விதத்தைக் கண்டதும் ஷாம் உள்ளுக்குள் புழுவென நெளிந்தார். எழுந்து ஓடிச்சென்று மலையிலிருந்து குதித்துவிட எண்ணினார். குதித்து உடல் சிதைந்து மீண்டும் மலையேறி மீண்டும் குதித்து தன் உடலின் ஒவ்வொரு தசைநாராக நசுங்கிச் சிதைவதைத் தானே பார்த்து நிற்க வேண்டும் என விரும்பினார். எல்வ் அந்த முடிவை வந்தடைவார் என ஷாம் எதிர்பார்க்கவில்லை. எல்வின் மனம் மேரியை மிக இயல்பாக தன்னுடன் இணைத்துக் கொள்ள முடிவெடுத்து இருந்தது. அம்முடிவு அன்பினால் எடுக்கப்பட்டது என்பதை விட மேரியை வருத்திவிடக்கூடாது என்ற காரணத்தால் மட்டுமே எடுக்கப்பட்டது என்று ஷாம் உணர்ந்ததால் மேலும் சீற்றம் கொண்டார். தான் காதலிக்கும் ஒருத்தி மற்றொருவன் இடத்தில் அப்படி முக்கியத்துவம் இழப்பதை அவர் விரும்பவில்லை.

‘எல்வ்! வேசிமகனே! ஏனடா நீ இந்தியாவுக்கு வந்தாய். உன்னை ஒருநாளும் ஒரு செயலில் கூட என்னால் வெல்ல இயலாதா? உன்னை நான் கொல்ல வேண்டும். ஆம் அதுதான் அனைத்துக்கும் தீர்வாக இருக்கும். நீ எல்லோரிடமிருந்தும் பெரும் மாற்றில்லாத அன்பை இதோ மேரியிடமிருந்தும் பெற்றுவிட்டாய். காந்தியின் ஆசிரமத்திலும் பெண்கள் உன்னை வளைய வந்தனர். நான் உள்ளுக்குள் எப்படி எரிந்தேன் என உனக்குப் புரிந்ததா? ஏன் காந்தியே கூட எரிந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? மேரியை நான் எப்படி எண்ணியிருந்தேன் என உன்னிடம் என்னால் சொல்ல முடியுமா? உன்னால் அதைப் புரிந்து கொள்ள முடியுமா? ஏன் அவளால்கூட அதைப் புரிந்து கொள்ள முடியுமா? உங்கள் யாராலும் அது முடியாது. என் புனித உணர்வுகள் என்னுள்ளேயே சமாதி அடையட்டும். எல்வ் நீ இப்போது என்ன சொல்லப் போகிறாய் என்று எனக்கு நிச்சயம் தெரியும். உன்னுடன் இத்தனை வருடங்கள் இணைந்துழைத்ததற்காக இந்த ஒரு கருணையை மட்டும் என் மீது வை. நீ இப்போது எண்ணுவதை என்னிடம் சொல்லிவிடாதே எல்வ். நீ சொல்லத்தான் போகிறாய். நீ என்னிடம் மட்டும் சொல்லவிருக்கும் அந்த முடிவினைக் கேட்டு மேரி மகிழத்தான் போகிறாள். உள்ளே எவ்வளவு கொந்தளிந்தாலும் முகத்தில் எதையும் காட்டிவிடாதவனாக என் உயிரை கடித்துக் குதறப்போகும் அந்த செய்தியைக் கேட்கத்தான் போகிறேன். மேரி என்ன நினைப்பாள்? இவனுக்கு சற்றுகூட பொறாமை தோன்றவில்லையா என்று எண்ணமாட்டாளா? மேரி உங்கள் இருவரையும் தனித்தனியே கொலை செய்யுமளவு என்னுள் இப்போது பொறாமை பெருகி அலையடிக்கிறதடி…’

ஷாமின் பார்வை எல்வில் அழுத்தமாக பதிந்திருந்தது.

“ஷாம் நாங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடையேதும் உள்ளதா?”

ஷாம் மேரியை நோக்கித் திரும்பினார்.

புன்னகைத்தபடியே “இதுவொரு அற்புதமான முடிவு” என்றார்.

3

மறுநாள் வழக்கம் போல விடிந்தது. இரவு முழுவதும் தூங்காத ஷாமுக்கோ அது விடியலே அல்ல.

“ஒன்று தொடங்கி முடிந்து மற்றொன்று தொடங்குவதாக செய்யும் கற்பனையை நாம் அடைந்திருப்பது நமக்கு இறைவனால் அருளப்பட்ட வரம். தினம் தினம் கடவுளிடம் கூட ஒரு செயல் சரியாகத் தொடங்கி சீராக நடைபெற்று சுபமாக முடியவேண்டும் என்றுதான் நாம் வேறு வேறு சொற்களில் பிரார்த்திக்கிறோம். அந்த சீர்மையின் தொகுப்பாக வாழ்க்கை அமையும்போது அது நம்மை நமக்கு வழங்கப்பட்ட பணியைப் பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது. ஆகவே உங்களது ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் தொடங்கட்டும் முடியட்டும்”

துயிலே இல்லாத இரவெனிமும் என்றும் போல பள்ளிக்காலத்தில் ஒலிக்கும் பேராயரின் குரல் மனதில் ஒலிக்கும் கணத்தை விடியல் என முடிவு செய்து கொண்டு ஷாம் வெறுமனே மூடியிருந்த கண்களைத் திறந்தார். ஆனால் அவரது நேற்று இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே இருந்தது. நினைவினை எப்பக்கம் திருப்பினாலும் அது மீண்டும் மீண்டும் எல்விலும் மேரியிலும் சென்று முட்டியது. அந்த எண்ணத்தை உதறுவது எவ்வளவு எளிதானது என்று ஷாமுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் அதை உதறிய பிறகு எஞ்சும் நாட்களை கடந்த நாட்களைப்போல வாழ முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லாமல் இருந்தது. படுக்கையைவிட்டு எழ வேண்டுமெனில் தன் மனம் ஒரு முடிவினை எடுத்தாக வேண்டும் என்று உணர்ந்தார். முதல் சிந்தனையாக கரஞ்சியாவை நீங்கி பம்பாய்க்கு சென்றுவிடலாமா என்பதே தோன்றியது. அந்த எண்ணம் எழுந்த உடனேயே கரஞ்சியாவை கட்டாயம் நீங்கியாக வேண்டிய தர்க்கங்கள் அவர் மனதில் உருக்கொள்ளத் தொடங்கின.

“இங்கு உண்மையில் வாழ்வென ஒன்றுமில்லை. ஒருவேளை பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை நீங்கினாலும் அமையவிருக்கும் இந்திய அரசு இந்தப் பழங்குடி மக்களை எவ்விதத்திலும் கண்டுகொள்ளப் போவதில்லை. இந்த வெள்ளைக்கார மடையனுக்கும் அது புரிந்தே இருக்கும். இந்த மக்களிடம் அவன் சேவை செய்ய வந்தது கூட இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதில் இருக்கும் ஆபத்தில் இருந்தும் காந்திக்கு அணுக்கமானவனாக இருப்பதில் உள்ள சங்கடங்களில் இருந்தும் தப்பித்துக் கொள்வதற்காகவே. இவன் பாதுகாக்க நினைக்கும், முன்னேற்ற நினைக்கும் இந்தப் பழங்குடி பண்பாடு எதிர்ப்பில்லாமல் முழுமையாக இந்திய அரசால் அழிக்கப்படும். பிரிட்டிஷ் இங்கு உருவாக்கி இருக்கும் அதிகார அமைப்புதான் இந்த நாட்டை கட்டுப்படுத்தப் போகிறது. இதில் இவன் என்ன இடையீட்டைச் செய்துவிட முடியும்? நானும் இங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறேன், அறிவளிக்கிறேன், மெல்ல மெல்ல அவர்களை பிரிட்டிஷ் பிரஜைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தச் சேவையை நான் ஏன் இங்கமர்ந்து செய்ய வேண்டும். நான் சமவெளிக்குச் செல்கிறேன். தலித்துகளிடம் செல்கிறேன். குறைந்தபட்சம் அவர்களால் என்னை அங்கீகரிக்கவேனும் முடியும்” என்றெல்லாம் அவரது மனம் தர்க்கம் செய்து கொண்டிருந்தாலும் மேரி எல்வ் மணம் புரியவிருக்கும் இந்த நேரத்தில் தான் வெளியேறுவது சமூகத்தால் எப்படி பொருள் கொள்ளப்படும் என்ற கோணத்திலும் அவர் மனம் சிந்திக்கத் தவறவில்லை.  அவர்களுடயை நம்பிக்கையின்படி அருட்தந்தையர் மணம்புரிந்து கொள்ள அனுமதி உண்டெனினும் எல்வின் மீது உருவாகியிருக்கும் “மலைப்பேற்படுத்தும் ஆளுமை” என்ற பிம்பம் இந்த மணநிகழ்வால் சரியக்கூடும் என்று ஷாம் எண்ணினார். சமூக பலகீனம் ஒன்றைக் கைக்கொள்ளாத மனிதனை தன்னைவிட உயர்ந்தவனாக எண்ணிக் கொள்வதைத்தவிர சமூகத்துக்கு வேறு வழியில்லை. காந்தி இந்தியர்களால் உயர்ந்த ஆளுமையாக கொள்ளப்படுவதற்குகூட அவர் தன்னுடைய சமூக பலவீனங்களை ஒவ்வொன்றாக கைவிடுவதே காரணமென ஷாம் எண்ணினார். ஆகையால் மணம்புரிதல் என்ற அத்தகைய பலவீனத்தை ஏற்படுத்திக் கொள்ளவிருக்கும் எல்வைவிட்டு அவருடைய நெடுநாளைய நண்பனான தான் விலகுவது சமூகத்தின் பார்வையில் தனக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமையுமென ஷாமுக்கு உறுதியாகத் தோன்றியது. வெளியேறுதல் என்ற முடிவுடன் எழ இருந்தவரை மேரியின் நினைவு எரிவிறகு உருவப்பட்ட பால்நுரைபோல அடக்கி கட்டிலில் போட்டது.

“அவள் என்ன நினைப்பாள்?” என்ற கேள்வி எழுந்ததுமே மிக அதிகமான வலியை எதிர்பார்த்திருப்பவன் போல ஷாமின் முகம் மாறியது. மனதை அவர் எவ்வளவு விலக்கியும் இந்த மணநிகழ்வு நடைபெறக்கூடாதென ஒரு உறுதியான பிரார்த்தனை அவருக்குள் உருக்கொண்டது.

அந்த பிரார்த்தனையை பலவீனப்படுத்தும்படியான நிகழ்வுகளே தொடர்ந்த நாட்களில் நிகழ்ந்தன. எல்வ் தான் மேரியை மணம்புரிந்து கொள்ளப் போவதை கரஞ்சியாவில் அறிவித்த போது அவர்களில் இளைஞர்கள் எல்வை தூக்கிச் சுழற்றினர். பெண்கள் மேரியை முத்தமிட்டனர். சரமாரியான அந்த முத்தங்கள் மேரியை வெட்கம் கொள்ளச் செய்து சிரிக்க வைத்தன. தங்கள் முடிவை நண்பர்களுக்குத் தெரிவிக்கும்படி இருவரும் மாற்றி மாற்றி கடிதங்கள் எழுதினர். மேரி ஒருசில கடிதங்களில் திருத்தம் செய்வதற்காக ஷாமிடம் வந்தார். அக்கடிதங்கள் அவரது நெருங்கிய தோழிகளுக்கு எழுதப்பட்டதாக இருந்தது. சில வாரங்களாக ஷாம் குடிலுக்கு வருவது குறைந்து போனது. வேட்டையாடச் செல்லும் இளைஞர்களுடன் தானும் சென்றார். மாணவர்களுக்கு கற்பிப்பதில் கூடுதல் நேரம் செலவழித்தார். எல்வும் மேரியும் மணம்புரிந்து கொள்ளக்கூடாது என்று மனமறிந்து அவர் நிகழ்த்திய அவப்பிரார்த்தனை அவ்வப்போது நினைவுக்கு வரும்.

ஷாம் சில வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் குடிலுக்கு வந்தபோது அந்தச் சூழலில் தன் மனம் விரும்பக்கூடிய ஏதோவொன்று நிகழ்ந்து கொண்டிருப்பதாக அவருக்குப்பட்டது. அது என்னவென்று அவர் மனதால் சரியாக அடையாளம் காண முடியாவிட்டாலும் மீண்டும் மீண்டும் குடிலுக்கு வந்தார். எல்விடமும் மேரியிடமும் பேசினார். பேசப்பேச அவர்களுக்குள் விழுந்திருக்கும் மெல்லிய விரிசலை ஷாமின் கூர்ந்த மனம் கண்டறிந்து குதூகலம் கொண்டது. அன்புடையவர்களிடம் தென்படும் ஒத்திசைவு எல்வுக்கும் மேரிக்கும் இல்லாமல் ஆகிக்கொண்டிருந்தது. அன்பு ஏற்படுத்தும் ஒத்திசைவு மட்டுமே ஒருவர் மற்றொருவரை எந்த எல்லைவரை காயப்படுத்தலாம் என்பதை அறிவிக்கும். மேரி எல்வை எல்லை மீறி காயப்படுத்துவதாக ஷாம் எண்ணினார்.

“அலாவுடன் நீங்கள் ஒருமுறை கூட உறவு வைத்துக் கொள்ளவில்லையா ஃபாதர்?” என்ற கேள்வி மிக அதீதமெனப்பட்டது.

எல்வ் பதில் சொல்லவில்லை.

சில நாட்களுக்குப் பின் காந்தியிடமிருந்து எல்விற்கு கடிதம் வந்தது. மிகச்சுருக்கமாக மணம் புரிந்து பிறகு உங்களால் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க முடியுமா என்று சந்தேகிக்கிறேன் என்ற கேள்வியை முன்வைத்திருந்தார். இந்த மனிதரின் வெற்றியே ஒரு மனிதன் தனக்கு அவன் மனதில் என்ன இடம் கொடுத்து வைத்திருக்கிறான் என்பதை துல்லியமாக கணிப்பதில் தான் இருக்கிறது என ஷாம் உணர்ந்தார். எல்வை இதைத்தாண்டி சற்று கட்டாயப்படுத்தியிருந்தாலும் அவர் காந்தியை மறுத்திருப்பார். எல்வை சாத்தியமான மிகச்சிறந்த வழியில் காந்தி குழப்பியிருந்தார்.

அங்கு நடைபெறும் ஆட்டம் எப்படி முடியப்போகிறது என்பதுபற்றி கருத்தற்றவராக ஷாம் மாறியிருந்தார். எல்வ் மீதான மேரி வைத்திருந்த காதலின் அடர்த்தி குறையத்தொடங்கிய போதே ஷாம் மேரியை பொருட்படுத்தாமலானார்.

ஒருநாள் மிக அதிகாலையில் ஷாமின் குடில்கதவு தட்டப்பட்டது. தீர்மானம் தென்படும் முகத்துடன் கலங்கிய கண்களுடன் மேரி நின்றிருந்தார். அந்த அதிகாலையின் பரிபூரணத்தை சற்றும் பாதித்துவிடாத மேரியின் முகம் ஷாமுக்குள் மீண்டும் மன அதிர்வை உண்டாக்கியது.

“நான் புறப்படுகிறேன்” என்று ஒரு குழந்தையைப் போல அந்த தைரியசாலிப்பெண் சொன்னபோது ஷாமுக்கு நெஞ்சு விம்மியது. பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த எல்வும் சற்று நேரத்தில் எழுந்து வந்தார்.

மேரியை சமவெளிக்கு அழைத்துச் செல்ல வாசலில் இரண்டு சிறுவர்கள் பந்தத்தை பிடித்தபடி காத்திருந்தனர். எல்வ் விளக்கினை ஏற்றிவிட்டு கூடத்திலேயே அமர்ந்து கொண்டார். எதுவும் பேசாமல் ஷாம் மேரியுடன் வாசல் வரை வந்தார். தன் கைப்பையை கீழே வைத்துவிட்டு ஷாமை ஒருமுறை இறுக்கமாக கட்டிக் கொண்டார். அவர் அடக்கிய அழுகை விசும்பலாக வெளிவந்தபோது அவரது முதுகை தடவிக்கொடுக்க கையை உயர்த்தி ஷாம் உடனேயே தாழ்த்திக் கொண்டார். மேரி திரும்பிப் பார்க்காமல் புறப்பட்டார்.

4

நீல்ஸ் வெளியேறச்சொன்ன பிறகும் கூட எல்வ் தலையைக் குனிந்தபடி வயதான தனது ஆசிரியரையே பார்த்தபடி நின்றிருந்தார்.

“ஏன் நிற்கிறாய் எல்வ்? உன்னால் கிறிஸ்துவை உணர்ச்சிகரமாக நினைவில் நிறுத்துவதில் இருந்து உன்னை மாற்றிக் கொள்ள இயலாதா?”

எல்வ் பதிலுரைக்கவில்லை. அவர் சிக்கலைப் புரிந்து கொண்டவராக நீல்ஸ் அவரைக் கனிவுடன் பார்த்தார்.

“உனக்கே அதை விளங்கிக்கொள்ள இயலவில்லையா? உன் ஆழத்தில் கிறிஸ்து இல்லை. உன் ஆழத்துக்குள் நீ அவரை அனுமதிக்க வேண்டும் எல்வ். உன் அகங்காரத்தையே நீ கிறிஸ்துவின் மீதான அன்பாக கற்பனை செய்கிறாய். கிறிஸ்துவை குறித்து உணர்ச்சிகரமாக அவரை மானுடத்துக்கு நெருக்கமாக உணரும்படிச் செய்த எந்த கலைவெளிப்பாட்டுக்கு பின் இருந்தவரும் கிறிஸ்துவுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கவில்லை. தாந்தே,கசாண்ட்சாகிஸ், அந்த இந்தியன் காந்தி என அனைவரும் கிறிஸ்துவுக்கு தங்களை இணையாகவே கருதுகின்றனர். அவர் முன் பணிய மறுக்கின்றனர். சேவை, கலை என எவ்வளவோ வழிகளில் அவரை நெருங்க நினைக்கின்றனர். இருந்தும் கிறிஸ்து தங்களால் நெருங்கப்படக்கூடியவரே என்ற தங்களது மனமயக்கத்தை அவர்கள் கைவிடும்வரை அவரை அறியப்போவதில்லை. நீ உன் இளமையில் இருக்கிறாய். நீயும் அந்த மயக்கத்துக்குள் செல்லாதே. அவரை உன்னுள் அனுமதி.”

எல்வ் விசும்பிக் கொண்டிருந்தார்.

“என் மனம் கிறிஸ்துவை நோக்கிப் பணிந்திருப்பதாகவே நான் உணர்கிறேன். ஆனால்…”

மேலும் பேச முடியாமல் எல்வின் தொண்டை அடைத்துக் கொண்டது.

நீல்ஸ் புன்னகைத்தபடியே “எனக்குப் புரிகிறது எல்வ். இது ஒரு நாளில் சொல்லி நடைபெறும் மாற்றமில்லை. மெல்ல மெல்ல உனக்குள் இந்தச் சிந்தனை ஊறி நீ வந்தடைய வேண்டிய நிலை. நீ கிறிஸ்துவை உணர்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் இக்கட்டுகளில் கிறிஸ்து உனக்கு துணை நிற்கட்டும்”

மேரியை வழியனுப்ப தான் வரவில்லை என்று பம்பாயில் கண்விழித்த அன்று காலை எல்வ் சொன்னார். மேலே ஒரு சொல்லும் சொல்வதற்கு இல்லாதவராய் அன்று மதியமே புனே புறப்பட்டார்.

இங்கிலாந்து செல்வதற்கான கப்பல் பயணத்துக்குத் தயார் செய்தபடி தன் அறையில் அமர்ந்திருந்த மேரியை ஷாம் அன்று மாலை சந்தித்தார்.

அவரது தோழி ஷாம் அறைக்குள் வந்ததும் வெளியேறினார்.

“அருட்தந்தை ஷாம் ஹிவ்வுக்கு என் வந்தனங்கள்” என தலையை நின்றிருந்த ஷாமின் இடுப்புவரைக் குனித்து வணங்கினார் மேரி.

ஷாம் புன்னகைத்தார்.

அவருக்கு இருக்கையை காட்டிவிட்டு உள்ளோடியவர் சில இனிப்புகளை கொண்டு வந்து டீபாயில் வைத்தார்.

பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின் “எப்படியிருக்கிறார் இந்தியப் பழங்குடிகளின் மீட்பர்? இன்னும் இரண்டு மணிநேரத்தில் அவரின் கொள்கையுறுதிக்கும் அந்த வரட்டு பொறாமைக்கார கிழவர் காந்திக்கு அவரளித்த வாக்குறுதிக்கும் எந்த பங்கமும் வராதபடிக்கு இந்த சூனியக்காரி இந்தியாவை நீங்குகிறாள். மகிழ்ச்சி தானே?” என்று கேட்டபோது மேரியின் விழிகள் ஒரு கணம் சுடர்ந்து அணைந்தன.

ஷாம் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

“நாகரிகம் வளர்ச்சி பெற்றிருக்கிறது ஷாம். இக்காலத்தில் சூனியக்காரிகள் மீது உங்களது லட்சிய உலகம் கருணை கொள்கிறது. பத்து நூற்றாண்டுகளுக்கு முன் திருச்சபை லட்சியவாதம் சூனியக்காரிகளை எரித்துக் கொன்றது. உங்கள் அருட்தந்தையின் காந்திய லட்சியவாதம் இப்போது அவர்களை நாடு கடத்துகிறது.”

ஷாமுக்குள் மெல்லிய அச்சம் பரவியது. அந்த அச்சமே அவர் உரையாடலை சரியான இடத்துக்கு நகர்த்த உதவியது.

“எல்வ் உன் சொற்களை கேட்டால் வருந்துவார் மேரி”

“ஓ உங்கள் லட்சிய ஆயருக்கு வருத்தம் போன்ற பலகீனமான மானுட உணர்வுகள் கூடத்தோன்றுமா?”

“எல்வ் முதன் முறையாக இன்று கிறிஸ்துவை கனவில் கண்டு அழுது கொண்டிருந்தார்”

எல்வ் அழுதார் என்ற சொல் மேரியைத் தாக்குவதை ஷாம் கவனித்தார்.

“அவர் உன்னை வழியனுப்ப வர எண்ணியிருந்தார். ஆனால் அக்கனவினை முழுமையாக என்னிடம் சொன்னபிறகு அந்த எண்ணத்தை தவிர்த்துவிட்டார் என்று எண்ணுகிறேன்.”

மேரி எதுவும் பேசவில்லை.

மிகக்கடுமையான ஒரு பாலைவனத்தில் தான் நாக்கு வறண்டு தத்தளித்துக் கொண்டிருந்ததாக எல்வ் சொன்னார். அவரைச்சூழ்ந்து நீர் ஊற்றுகளும் நெருப்பூற்றுகளும் கொந்தளித்துக் கொந்தளித்து அடங்கிக் கொண்டிருந்தன. எழ முயன்ற போதுதான் தனது இரு கால்களும் முழுவதுமாக மரத்துப் போயிருப்பது  எல்வுக்குத் தெரிந்தது. கால்கள் இருக்கும் உணர்வே அவருக்கு எல்லை. இடுப்புக்கு மேலான உடற்பாகங்களில் ஆழமான புண்கள் தோன்றியிருந்தன. பாலைவன மணற்துகள்கள் புண்வாயில் நுழைந்து மேலும் எரிந்தது. எறும்புகள் தொடர்ச்சியாக புண்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சதையைப் பிய்த்து எடுத்துச் சென்று கொண்டிருந்தன.

“பிதாவே” என்று கத்த முனைந்தபோது எல்வின் தொண்டைக்குள் ஏதோவொன்று அறுந்து கத்த முடியாமல் ஆனது. கண்களில் நீர் பெருகி வழிந்தது. கலங்கலான கண்கள் வழியே தூரத்தில் யாரோ வருவது எல்வுக்குத் தெரிந்தது. தூரத்தில் வருகிறவரை உணர்ந்த கணம் எல்வ் மயங்கினார். அதிதூய நறுமணமொன்று நாசியைத் தாக்க எல்வ் திடுக்கிட்டு விழித்தார். அவர் எழுந்து கொள்ளவில்லை. அவர் கண்ட கனவில் மயங்கிய நிலையில் இருந்து மட்டுமே எழுந்திருந்தார்.

அவரைக் கடந்து அந்த இளைஞர் சற்று தூரம் சென்றிருந்தார். எல்வுக்கு அவர் ஏசுவென உறுதியாகத் தெரிந்தது. மனம் பரபரக்க எழுந்தார். மரத்துப் போன கால்கள் எழுவதற்கு ஒத்துழைக்கவில்லை. உடலால் கால்களைத் தூக்கி நடந்தார். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் முதுகுத்தண்டு விண்ணென்று தெறித்தது. அந்த வலியை தன் உச்சகட்ட ஆன்ம பலத்தின் மூலம் பொறுத்து முன்னேற முன்னேற கிறிஸ்து இன்னமும் தள்ளிச்சென்றார். சோர்ந்து அமர்ந்து அழும்போது அவர் புறம்காட்டியபடி அருகில் நின்றிருந்தார்.

எழுவதற்கான உந்தம் எல்வின் மனதில் தோன்றிய மறுகணமே அவர் அகன்று செல்லத் தொடங்கினார். எல்வ் மனம் உடைந்து ஓங்கி அழத்தொடங்கினார்.

“என்னை என்ன செய்யத்தான் நீ பணிக்கிறாய்? இவ்வளவு அருகில் வந்தும் உன்னிடமிருந்து என்னைத் தடுப்பது எது தந்தையே? மறுத்து மறுத்துச் செல்லும் என் வழிகளால் நீ கோபமுற்றாயா? உண்மையான துயர் எதுவென தேடிச்செல்லும் என் பயணம் உன்னைப் பதற்றப்படுத்துகிறதா? இப்பாலையில் என்னைக் கொன்றுவிடு என் தேவனே! உன் விழிகாணும் அருளற்ற இவ்வுயிரை இங்கேயே மட்கச்செய் என் பிதாவே!”

கிறிஸ்துவை இச்சொற்கள் துளியும் உலுக்காது என்ற எண்ணம் எல்வை மேலும் உக்கிரமாக அழச்செய்தது. குனிந்தமர்ந்து எச்சில் நிலத்தில் வழிய அழுத எல்வின் வலது தோளினை அவரது கை தொட்டது. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவே கனவுக்கும் கனவின்மைக்கும் நடுவே தர்க்கத்துக்கும் உணர்ச்சிக்கும் நடுவே கணத்தினை இரண்டாகப் பகுத்து நடுவில் உண்டான புள்ளியை முடிவே இல்லாமல் கீறிக்கீறி உட்சென்ற ஒரு கணத்துளியில் அவரின் முகத்தை எல்வ் கண்டார்.

ஷாமையே மேரி கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அடுத்த சொல்லவிருப்பதை தன் மனம் எப்படி இவ்வளவு நெருக்கமாக முன்னரே கண்டு கொண்டது என்பதை எண்ணியபோது மேரியின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

“கிறிஸ்துவின் முகத்தில் உன்  சாயலைக் கண்டதாக எல்வ் என்னிடம் சொன்னார்” என்று மேரி எண்ணியதை ஷாம் சொன்னார்.

வாயைப் பொத்திக்கொண்டு மேரி அழத்தொடங்கியபோது ஷாம் அறையைவிட்டு வெளியேறியிருந்தார். ஆனால் ஷாம் இறுதிவரை எல்வ் மேரியை கிறிஸ்துவாக கனவில் கண்ட அதே இரவில் முதல்முறையாக அவர் மேரியை கனவில் கண்டதை எல்விடமோ மேரியிடமோ சொல்லவேயில்லை.

1 comment

Selvam kumar June 14, 2021 - 2:30 pm

விடைபெறுதல், மிக மிக அருமையான சிறுகதை மிகவும் சுவை ஆர்வமூட்டும் கதைவாழ்த்துகள்

Comments are closed.