1
ஜனநாயகம் என்பது விசேசப் புதிர். குறிப்பாக, கலை, இலக்கிய, அறிவியல் ஆழ்நிலைகளில் படைப்புகள் உருவாக்கப்படுகையில் ஜனநாயகம் என்பது அறவே தவிர்க்கப்பட வேண்டிய பாவச்செயல். விலைக்காகவெனவே முன்வைக்கப்படும் சரக்குகளின் மாஸ்டர்களால் போற்றப்பட வேண்டிய கருத்தியலது.
கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக வசூலை அள்ளிக் குவித்த முதல் பத்து படங்களின் பட்டியலை கவனித்தால் அதில் ஆறு படங்கள் மனித இயல்வாழ்வில் துளியும் சம்பந்தமற்ற சூப்பர்ஹீரோ கதைகளாக இருக்கின்றன. அது இருந்துவிட்டுப் போகட்டும் என மீதம் நான்கை கவனித்தால் அதிலும் மூன்று படங்கள் மாயாஜால, மீபுனைவு, அசாதாரண உலகங்கள் என்ற கருத்தாக்கம் கொண்ட விளையாட்டுத்தனமான படங்களே. எஞ்சிய ஒன்று Bohemian Rhapsody!
இவ்வகைப் படங்கள் அதீத வெற்றி பெறுவதென்பது, மனிதன் தன் இயல்வாழ்வில் எத்துணை அல்லலுற்று இது போன்ற கதைகளிடம் சரணாகதி அடைகிறான் என்ற உண்மையின் அடிப்படையில் தான் என்று இருந்தாலும், அதனினும் நுண்ணிய காரணமாய் இவை நுகர்வுக்காக மட்டுமே விலைவைத்து உருவாக்கப்பட்ட பண்டம் என்பதும் தொக்கி நிற்கிறது. அதனால்தான் தரமற்ற அரசியல் எழுச்சிகள் முதல் சர்வலோக நிவாரணியாக கையில் மஞ்சக்கயிறு கட்டும் போலி வைத்தியர் வரை சுய விளம்பரப்படுத்துதலின் போது தனக்கு வரும் கூட்டங்களை முன்வைக்கிறது. நிற்க!
தீவிர கலைப்படைப்புகள் எவையும் ஒன்று அல்லது இரண்டு சதவீத மனங்களையே – அதுவும் குறிப்பிட்ட காலத்தாமதம் கண்ட பின்னரே – தொடும், அது ஜனரஞ்சகமாவதற்கு வாய்ப்புகள் வெகு சொற்பம். அப்படி ஆகின்ற ஒரு சில தருணங்களிலும் அது இன்னுமின்னும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு வரும், காந்தியின் சத்தியாகிரகம் போல! ஆனால் யுவால் நோவா ஹராரியின் ‘அந்த ஓரிரு சதவீதத்தினரே உலகின் அடுத்த தலைமுறையின் போக்கினை நிர்ணயிக்கப் போகும் குழுவினராக இருப்பர்’ என்ற சொல்லடுக்கும் முக்கியம்.
சினிமாவிலும் அத்தகையை வெகு சிலர், நுண்ணிய மனக்கண்களால் அணுகி கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு சினிமா, மக்களை நுகர்வோராக மட்டுமேயன்றி, (குறைந்த பட்சம்) உளவியல் ஜந்துக்களாகவும் கண்டுகொண்டு, தன் ஆழ்மனம் கண்டு கொண்டதை முன்வைக்கும் ஆச்சரியங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. சினிமாவின் முக்கியப் பள்ளிகள் உலகெங்கும் அலசப்பட்டு விட்டன. ஆயினும், தொண்ணூறுகளில் அமெரிக்காவில் உருவாகி வந்த சுயாதீன இயக்குநர்களின் அலை பற்றிய போதிய அறிமுகம் இங்கிருக்கும் பொதுவெளிக்கும், அறிவுசார் குழுக்களுக்கும் வந்தடைந்திருக்கவில்லை.
சுயாதீன பள்ளியில் உருவாகி வந்த வெகு முக்கியமான ஒரு இயக்குநரைச் சொல்லவேண்டும் என்றால் முதலில் என் நினைவில் எழுவது Paul Thomas Anderson இன் பெயர்தான். எவரும் தவிர்க்க நினைக்கும் பகுதிகளிலெல்லாம் நுழைந்து சாதனைகள் செய்து வந்த இவர் There Will Be Blood (2008), Master (2012) ஆகிய படங்களில் சினிமாக்கலையின் உச்சம் தொட்டார். இன்னொருவரைச் சொல்லவேண்டுமெனில் Richard Linklater! அவர் உச்சம் தொட்ட திரைப்படம் Boyhood (2014). கூடவே அவரால் மட்டுமே செய்ய முடிந்திருக்கிற மற்றொரு உச்சமாக Before Trilogy இன் மூன்று படங்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இங்கு அதைப் பற்றிய பார்வையைத் தொடர்கிறேன். முன்னவர் பற்றி இன்னொரு கட்டுரையில்!
2
ஒரு தத்துவவாதி வாழ்வின் பிடிபடாத சங்கதிகளை ஒன்று திரட்டி கேள்வியாக்குகிறான். கேள்வி என்பதே தேடலின் கருவிதானே. அதைச் சுருட்டிப் பிசைந்து வட்டமாய் ஒரு பந்தாக்கித் தனிமையில் அமர்ந்து அதை அசைத்தும், எறிந்தும், சுவற்றிலடித்தும் பார்க்கிறான். மெல்ல கேள்விகள் சிடுக்குகளை நோக்கி சில விடைகளைத் தருவதாக உணர்ந்து கொண்டு அந்த சங்கேதங்களை மொழியில் குறித்துக் கொள்கிறான். சில கேள்விகளுடனான போராட்டத்துடன் அவனுக்கான நேரம் முற்றிவிடுகிறது, அவனது குறிப்புகளிலிருந்து அவனது மாணவர்கள் தன்னை முன்னோக்கி நகர்த்திக் கொள்கிறார்கள். தேடல் எனும் பந்து தொடர்ந்து எறியப்படுகிறது.
நான்காண்டுகளுக்கு முன்பு Before Sunrise, Before Sunset, Before Midnight ஆகிய மூன்று படங்களையும் ஒன்றாகப் பார்த்தேன். இவற்றை மிக எளிதாக மூன்றங்கக் கதை கொண்ட ஒரே திரைப்படமாக எவ்வித துறுத்தலும் இல்லாமல் 4:30 மணிநேரம் ரசிக்க முடிந்தது. தற்போது இக்கட்டுரைக்காக பார்க்கும் போதும் அலட்சியமான பொலிவுடன் அதே பிரமிப்பைத் தருகிறது.
பட்ஜெட் பற்றிய கவலை ஏதுவுமே இல்லாமல் வெறும் இரண்டே கதாபாத்திரங்களை வைத்து படமெடுத்தது சாதனையன்று, மாறாக காதலைத் தத்துவத்தின் வடிவமாக புரிந்து முன்வைத்து அதை ஜெஸ்ஸியும் செலினும் அணுகுந்தோறும் வளர்த்தெடுத்து நிகழ்த்தியதன் மூலம் வாழ்வினை ஒரு மினியேச்சராக்கி முன்வைத்திருப்பதே ஆச்சர்யம். Before Sunrise இளங்காதலர்களின் முதல் சந்திப்பும் Before Sunset பிரிந்தவர் கூடலின் தவிப்பும் கேள்விகளும் அதைத்தொடர்ந்து Before Midnight இல் வரும் முதிர்ந்த காதலர்களின் அடையாளச் சிக்கல்களும், சமூக, குடும்ப நிறுவனங்களின் அழுத்தங்களால் அவர்கள் காதலின் நிலைபற்றிய சந்தேகங்களும் என மூன்று நிலைகளிலும் ஒற்றைச் சரடொன்று ஊடாடுவதைப் பார்க்கலாம்.
இந்த உலகின் கடும்துயரை, அபத்தத்தை, மரணம் நோக்கிய வாழ்வை என எதையும் கடந்துவிடத் தெம்பற்றத் தனியனுக்கு அவளது / அவனது துணை மிகச்சிறியதே எனினும், அதைவிட நிஜத்தில் பெரிய கைப்பிடி ஏதிருக்க முடியும் என்ற சரடே அது. தனக்கான அதை எந்தக் கேள்விகளாலும் விடமுடியாத துறவை உறவென சொல்லித் தரும் தருணங்களால் நிறந்திருக்கிறது இந்த மூன்று படங்களும். இரு முதன்மை கதாபாத்திரங்களும் காதலைப் பந்தாக்கி விளையாடி பல கேள்விகளையும், சில பதில்களையும் முன்வைத்துச் சென்றிருக்கின்றனர் எனில் மிகையன்று.
Roger Ebert என்ற புகழ்பெற்ற விமர்சகரது தளத்தில், BrianTellerico என்பவர் Ethan Hawke-வை தொலைபேசியில் கண்ட சிறிய சுவாரஸ்யமான நேர்காணல் வெளியானது. அதிலிருவரும் Boyhood சிறந்த திரைப்படமாக வென்றிருக்க வாய்ப்பே இல்லை என்பதைப் பேசிக்கொண்டும், ஆனால் அத்தகைய மனத்தடைகளையும் கடந்து Moonlight வென்றிருப்பதன் மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டும் இருந்தனர். ஒரு வேளை Boyhood வென்றிருந்தாலும், மிகக் குறைந்த பட்ஜெட்டிற்கான ஆஸ்கார் வெற்றிபெற்ற சிறந்த திரைப்படம் என்ற அந்தஸ்தினை வெறும் இரண்டாண்டுகள் தான் தக்கவைத்துக் கொண்டிருந்திருக்கும் என்ற நகைப்பும் அவர்களிடையே இருந்தது. அந்நேர்காணலில் முக்கியமானது Dazed and Confused (1993) திரைப்படத்தில் அதீதமான ஆணாதிக்கக் கருத்தியல்கள் இயல்பாகவே தன் திரைக்கதையில் வெளிப்பட்டதாகவும், அதைத் தவிர்க்க துணை எழுத்தாளர்கள் தேவை என்பதை லிங்க்லேட்டர் சொன்னதாகவும் ஈதன் சொல்கிறார். பின் ஏற்கனவே, கைஸ்லோவ்ஸ்கி, கோத்தார்ட் படங்களில் நாயகியாய் அறியப்பட்டிருந்த ஜூலி டெல்பி, தான் என இருவரும் கைகோர்த்து (கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் அங்கேயே) துணை எழுத்தாளர் துறையைப் பகிர்ந்து கொண்டதையும் ஈதன் சொல்கிறார். Dazed and Confused இல் இருக்கும் Real Time வகை சினிமா என்ற வகைமையை மட்டும் வைத்துக் கொண்டு, முற்றிலும் காதலைத் தத்துவ ரீதியாக அணுகும் முறைமையையும், கதாபாத்திரங்களின் எண்ணிக்கையை வெறும் இரண்டாகக் குறைத்தும் Before Sunrise படத்திற்குத் தயாரகி இருக்கிறார் லிங்க்லேட்டர்.
3
Before Sunrise : இளமையின் உற்சாகக் கொந்தளிப்பு.
இரும்பு நதியென ஓடிச் சீறும் இரயிலின் ஜன்னல்கள் காலத்தின் புதிய கோணம் காட்டும் விழிகள். நிலைத்தவற்றையெல்லாம் வேகமாய்ப் பின் தள்ளி முன்னோடும் இரயிலில், தீச்சுகம் தீண்டத் தயாராய் அடியெடுத்துவைக்கும் இளம்பருவத்தின் முனைப்புடன் ஜெஸ்ஸியும் செலினும் விழிமோதிக் கொள்கின்றனர். அவர்களின் கண்டவுடன் காதல் வழக்கமாய் கற்பனை செய்யப்படும், மணியோசை, சிலீர்காற்று, சித்திரங்களின் அணிவகுப்பு, குழந்தைகளின் புன்னகைகள் இவற்றோடு சம்பந்தப்படுத்தப்படாமல், இயல்பான உரையாடலாகவே தொடங்குகிறது.
உரையாடலின் வழியே முற்றிலும் அந்நியராக இருந்த இருவருக்குமிடையில் உருவாகும் பிணைப்பு மெல்ல செறிவடைந்து கொண்டே செல்கிறது. மதம், காதல், சமூகம், நகரம் போன்ற கற்பிதங்கள் மீதான சந்தேகங்களை நடையில் அசைபோட்டவாறே அங்கிருக்கும் சிற்சிறு கொண்டாட்டங்களை நிகழ்த்திச் செல்கின்றனர், இருவரும். மெல்ல முத்தப் பரிமாற்றம் நிகழ்ந்து காதலின் ஊட்டம் பெற்று, தயக்கத்தை வென்ற கலவியும் நிகழ்கிறது, நட்சத்திரங்களைக் கூரையாக புற்தரையை மெத்தையாகக் கொண்டு. அவர்களது பிரிவின் முன் எவ்வித தொடர்பு விபரங்களையும் பரிமாறிக் கொள்ளாமல் ஆறு மாதங்கள் முடிந்து இதே நாளில் மீண்டும் இதே தொடர்வண்டி நிலையத்தில் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் தயங்கிப் பிரிகின்றனர். ஒரு நாளில் ஒரு ஆயுள் வாழ்ந்ததன் கணம். இவ்வளவேதான் மொத்தமும்.
முக்கிய இழையாக இந்தத் திரைப்படம் சுய கண்டடைதல் பற்றி பேசுகிறது. அதை பாலினம் பற்றிய மலுப்பல்கள் அற்ற கேள்விகள், தன்னைச் சுற்றி இருக்கும் சூழியலின் மீதான் போலித்தனமற்ற இயல்பான எதிர்வினைகள், வரிந்து கட்டிக் கொண்டு திணிக்கப்படாத உரையாடல் பொருள், இயல்பான நடையின் சிரிப்புகளின் இடையிடையே மின்னும் சக மனிதம் மீதான பெருமூச்சு இவற்றை எல்லாம் கொண்டே நிகழ்த்தி இருக்கிறது. ஈதனின் இளமுகமும் ஜூலியின் மாதுளைச் சிரிப்பும் கதாபாத்திரங்களையும் நடிர்களையும் பிரித்து பார்க்கவே முடியாதவாறு ஒட்டிக் கொண்டிருப்பவை. இந்தத் திரைப்படத்தினை அடிவாரமாகக் கொண்டு மீதமிரு திரைப்படங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
4
Before Sunset : கலங்கரை விளக்கம் கண்டடைதல்.
ஆறுமாதத்தில் சந்தித்தே இருக்க வேண்டிய அவர்கள் சந்திக்கவே முடியாத முடிவிலிக்கு முன் மெளனம் காக்க வேண்டிய அவசியம் உருவாகிவிடுகிறது. ஜெஸ்ஸி அந்த ஒரு நாளை தன்னுள் தூண்டித்தூண்டி வளர்த்தெடுத்து, பிரபலமாகிவிட்ட ஒரு நூலாக்கி விடுகிறான். அந்த நூலை வாசித்து அவன் அங்கு வரும் தருணத்தை அறிந்த ஜுலி அவனைச் சந்திக்கிறாள். அவன் தன் வாசகர்களின் கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு புதிய எண்ணத்தைப் பற்றிச் சொல்லி வருகிறான். அதில் காலத்தினைப் பொத்துக் கொண்டு தன் மகளினையும், தன் காதலியையும் ஒரே பொழுதில் இரண்டாய் கவனித்து ரசிக்கிறான் அந்த கதையின் நாயகன்.
நினைவுகளும் நிஜமும் முனைகள் மழுங்கி காலத்தை ஓரங்கட்டி நிற்கும் அத்தருணத்திலேயே ஒன்பதாண்டுகள் முன் ஸ்னேகித்த செலினும் அன்றைய தருணத்தின் செலினும் அவன் கண்முன் தோன்றுகிறார்கள். இது இந்த திரைப்படத்தின் மேஜிக் தருணம். மூன்றில் இந்த திரைப்படமே வெகு கச்சிதமான Real Time இல் படமாக்கப்பட்டிருக்கிறது, 80 நிமிடக் கதை 80 நிமிடத் திரைப்படமாக. இதைச் செய்வதற்கான உழைப்பு ஒளிப்பதிவிலும், படத்தொகுப்பிலும் மிளிர்கிறது. இந்த சந்திப்பு தொலைத்த கனவின் மீதப்பகுதியை கண்டெடுத்த இருவரது கதை போலிருப்பதால், ஒளியும் ஒரு கனவுத்தன்மையை பிரதிபலிக்கும் விதத்திலேயே பதிவாக்கப்பட்டிருக்கிறது.
முதல் படத்தில் இருப்பது போலவே தத்துவத் தோரணை உரையாடல்கள், நட்பின் மலர்வுகள் என்றிருந்தாலும் கூடுதலாய் ‘நினைவின் வேதனையை முகர்ந்திருக்கும் தனியர்களாய்’ இருவரும் கூடி ஜொலிக்கிறார்கள். செலின் “நினைவுகள் ஒரு மிகச் சிறந்த பொக்கிஷம், இறந்தகாலத்துடன் தொடர்பு கொள்ள மட்டும் தேவையின்றி இருக்குமேயானால் -” என்று சொல்வதில் அது சுருக்கமாய் குறிப்புணர்த்தப்படுகிறது. Before திரைப்படங்கள் அனைத்திலுமே ஒரே நேரத்தில் இன்புற்றும் கவலையுற்றும் இருக்கும் கூறுகளை இருவரிடமும் காணமுடியும். காலம் அதன் மூன்று வடிவிலும் அத்தகையதுதான், இறந்த காலத்தைப் பற்றிய நினைவேக்கங்களையும், நினைவுகளையும் பரிசாகத் தரும்போதே அது வடுக்களையும், தோல்விகளின் சின்னங்களையும், மோசமான முன் அனுபவங்களையும் சேர்த்தே தருகிறது. எதிர்காலத்தைப் பற்றிய ஆசைக்கனவுகளையும், திட்டமிடல்களுக்கான வாய்ப்புகளையும் தரும்போதே அவற்றின் மீதான ஸ்திரமின்மை, அபத்தங்கள் பற்றிய எண்ணங்களையும் முன்வைக்கிறது. அந்தி சாயும் அழகை ரசிக்கும் மனம் வரப்போகும் இரவையும் எண்ணி சற்றே கலக்கமுறுவதும் இயல்புதானே.
காதலில் எக்காலமும் முழுமையாகத் தன்னை மற்றொருவரிடம் ஒப்புவைக்க இயலாது என்பதும் அவளோ / அவனோ என்னுடன் இருப்பது மட்டுமே என்னை முழுமை செய்யும் என்பதும் காதல் தத்துவத் துணுக்குறல்களே.
ஆணும் பெண்ணும் சமம் என்ற ஒற்றை வரிக் கொள்கையை எங்கும் தவறியும் பேசித் தவறிழைக்காதது இந்தப் படத்தின் முக்கியச் சிறப்பு. உரையாடல் தொடரும் தோரும் ஆண் பெண் பாலின் வேறுபாடு அவர்களது நடத்தைகளிலும், மனநிலைகளிலும் எப்படியெல்லாம் பிரதிபலிக்கப்படுகின்றன என்பதன் இயல்பான தோற்றமெடுப்புகள் வெளிவந்திருக்கிறது. அந்தச் சமமற்ற வேறுபாடுகளிலிருந்துதான் ஆண் பெண் உறவும் இவ்வுலகமும் நிறங்களால் பொலிவுற்று இருக்கின்றன. முதல் சந்திப்பில் செய்த கலவி பற்றி செலின் மறைத்து மறதி போல நடிப்பதும், ஆறு மாதத்திற்குப் பின் தான் அவளைத் தேடியதை ஜெஸ்ஸி விளையாட்டாய் சொல்லி மறுப்பதும் அதற்காக செலின் தவிப்பதும் அவ்விதமே எளிமையாய்ச் சொல்லப்பட்ட நிதர்சனங்கள்.
5
Before Midnight : நெடுந்தொலைவு கடந்த ஈரிணைக் கால்கள்
தோலடுக்கின் ஒவ்வொரு சுருக்கத்திலும் வாடியிருக்கும் மலரிதழ்களின் சுவடுகள் தெரியவரும் நாற்பதுகளில் மீண்டும் ஜெஸ்ஸியும் செலீனும் நமக்கு முன் தோன்றுகிறார்கள். அவர்கள் உயரவரும் கடலலைகளைச் சுழற்றிப் பிடித்து ஆடிய காலங்களையும், ஒருவரையொருவர் தொட்டறிவதன் மூலம் உற்றறிந்த கதகதப்பான காலங்களையும் கடந்து வந்திருக்கிறார்கள். இன்னும் மாறாமல் இருக்கிறது இருவரது புன்னகைத்தனங்களும், குறிப்பாக செலினின் சிரிப்பு. ஜெஸ்ஸியிடம் வருடித்தரும் நக்கல் சற்று அதிகம்.
உரிமை வரும் போதே, கோபம் நிழலெனத் துணைவருகிறது. அதிலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் தப்ப முனைந்து அர்த்தமற்ற ரகசியங்கள் முகிழ்க்கின்றன. அவை அழுத்தமுற்று என்றோ வெடிக்கலாம் அல்லது இறுகி இறுகித் தன்னையே துன்புறுத்தலாம். எது நடந்தாலும் மிச்சமிருக்கும் ஒரே ஒளஷதம் அதே தலைகோதல்தான்; அதே தோள்சாய்வுகள் தான்.
தன் முன்னாள் மனைவி மூலம் பிறந்த தன் மகனுடன் விடுப்பில் இருந்து விட்டுப் பிரிவதால், தனது குற்ற உணர்வை உணரும் ஜெஸ்ஸியை ஆற்ற முனைகிறாள், முடியாது போகையில் முற்றுப்புள்ளி போல் துல்லியமான வைப்புகளுடன் பேசுகிறாள். இடையில் தங்களை விருந்தினராகத் தங்கவைத்திருக்கும் எழுத்தாளரது வீட்டில் இனிமையாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களது வாழ்வின் இப்பகுதியில் ஜெஸ்ஸி தன்னெழுத்தை அதீதம் நேசிப்பதாகத் தெரிகிறது. தன்னுடைய நாவல் பற்றிய எண்ணங்களையும் புதியதாக தோன்றியிருக்கும் கருக்களையும் காலமுறை வரிசை ஏதுமின்றி கலந்துரையாடுகிறான்.
அனைவரும் ஒரு உணவருந்தும் மேசையில் அமர்ந்து பேசும் காட்சி ஒரு அற்புதம். மூன்று தலைமுறைகளின் ஜோடிகள் அதில் கலந்து கொள்கிறார்கள். அந்தக் கலந்துரையாடலின் மையமாக ஜெஸ்ஸியை வைத்துக் கொண்டால், அவர்கள் வெவ்வேறு காலங்களை முன்வைத்து ரசித்து முகம் பார்த்துக் கொள்வதைப் போல பொருளெடுக்கலாம். அதில் சம வயதுள்ள ஜோடியின் ஆண் தொடர்ந்து செக்ஸுவல் தூண்டலால் வரும் கேள்விகளையே முன்வைப்பதாகவும், அதைப் பொருட்டாகவே கருதாத அடுத்த தலைமுறை இன்னும் ஆழமான கேள்விகளை முன்வைப்பதாகவும் வரும். இன்னும் பல பின்னல்களுடன் மானுட உறவுகளைப் பற்றிய தோற்றங்கள் நிலைப்பாடுகள் ஆகியனவற்றை இந்தக் காட்சி அழகாய் பேசியிருக்கிறது.
ஜெஸ்ஸிக்கும் செலினுக்கும் தனிமையான ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சூரிய அமிழ்வை ரசித்த பின் அறையில் அவர்கள் பேச்சை இழக்க முனையும் தருணத்தில் ஒரு சிறு பொறியில் விழுந்து தன் தீயத்தனையும் மெல்ல மெல்ல பரிமாறிக் கொள்கிறார்கள். எத்தனை வலிகளை ஏற்படுத்தி விடுகிறது, இந்தக் காலம். வெகு நேரம் நீளும் இக்காட்சி மிகச் சிறந்த காட்சியாக சினிமாவின் மகுடத்தில் நிலைபெற்றிருக்கும் என்பது ஐயமற்ற கூற்று. முகத்திலறையாக் குறையாய் வெளியேறும் செலின், தனிமையில் அறையில் பொருளற்றிருக்கும் அனைத்தையும் நோக்கும் ஜெஸ்ஸி, அதையே வெளியே நாற்காலியில் அமர்ந்துணரும் செலின், அவளருகே வந்து மீண்டும் மதலையென மடியேறத் துடிக்கும் ஜெஸ்ஸி, அப்பப்பா எத்தனை நுண்ணிய சுழிப்புகளுடன் நகரும் நதி இவ்வாழ்க்கை. என் காதல் தருணத்தில் இத்தனை தவிப்புகளையும், தத்தளிப்புகளையும் அடைந்த போதெல்லாம் அவளிடமே சரணடையவும், அத்தருணத்திலேயே அவளிடமிருந்து விலகியோடவும் என நிகழ்ந்திருக்கிறது, அதைத் திரையில் கண்டுகொண்டேன்.
அதைத் திரைக்கதையாக்குவதிலும் மெல்ல திரைக்கு பெயர்ப்பதிலும் லிங்க்லேட்டரின் மேதமையை வியக்காமல் இருக்க முடிவதில்லை. கோபமும் சுயபச்சாதாபமும் கொண்டுவிடும் தருணங்களில் எல்லாம் அதை ஒரு நகைச்சுவையின் மூலம் கடந்து விட நினைப்பதும், ஆண்களின் மனதைப் புரிந்து கொண்டு அதிலிருந்து விலகி நிற்கும் பெண்களின் மனவமைப்பையும் தாங்கிக் கொண்டு தன்னிரு பெண்களின் எதிர்காலத்தைக் காக்க வேண்டிய பொறுப்பிலும் உழன்று, அவன் மீதான காதலைத் தக்கவைத்துக் கொள்வதில் அவளுக்கு அன்பை வெளிக்காட்ட கோபமன்றி வேறு வழியேதும் இருக்கமுடியாதென்பது ஜெஸ்ஸிக்குப் புரிந்திருப்பதால் அந்நியாராக அவர்கள் கொண்டாடியதைப் போலவே, இன்னும் அழுந்தச் சொன்னால், அதைவிடச் சிறப்பான தேன்நிலவு 40களில் இந்தக் கோபத்திலும், அதைக் கடப்பதிலும் பொழிந்துவிட்டவாறு இருக்கிறது.
6
லிங்க்லேட்டரின் தனித்துவத்தை Before Trilogy யில் தெளிவாகக் காணமுடிகிறது. அவர் விழியீர்க்கும் நிலக்காட்சிகளையோ, கோரமுகங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளையோ, பதற்றம் தரும் பின்னணி இசைக்கேற்ப உருவாக்கப்படும் கதை மாந்தர்களையோ, வைப்பு முறை மூலம் கதையளக்கும் தந்திரங்களையோ, ஆல்ஃபா ஆண்/ பெண்களைச் சுற்றியே நகரும் சூழலையோ அறவே தவிர்க்கிறார். குறைந்த பட்ஜெட்டில் இவை எதற்கும் முழுமை செய்யும் வாய்ப்பில்லை எனவும் இருக்கலாம். அதனால் அவர் எளிய கதாபாத்திரங்களை நீண்ட உரையாடல்களிலோ, குறைந்த கால அளவுகளிலோ திரைப்பட நீளத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார். ஆனால், அதுவே மெல்ல பரிணமித்து அவரது சிறப்புக்கும் தனித்துவத்திற்கும் ஆதார குணமாகி பேருருவெடுத்து விடுகிறது.
லிங்க்லேட்டர் படங்களில் வரும் நீளமான காட்சிகள் சராசரித்தனத்திலிருந்து விலகி எளிமைத்துவத்தை பதிவுசெய்கின்றன. அதன் மூலம் நாள்தோறும் நிகழும் நம்வாழ்வின் சாதாரண நிகழ்வுகளிலிருக்கும் இடையிடுக்குகள் சாதாரணமாக அடிக்கோடிடப்படுகிறது. அவற்றின் ஒட்டுமொத்த தாக்கம் அளப்பரியது. அவற்றின் மீள்நினைவோட்டம் நம் வாழ்வை அசைபோடுவதை ஒத்தது. இவ்விதம் லிங்க்லேட்டரின் திரைப்படங்கள் உணர்வுகளை எளிய காட்சிகள் மூலம் கடத்தும் விதத்தில் முன்னிலையில் உள்ளன.
காலத்தைக் கையாளும் விதத்தினையும் வெகு சிறப்பாக நேர்த்தியுடன் முன் வைக்கும் முக்கிய ஆளுமை லிங்க்லேட்டர். Dazed and Confused , Everybody Wants Some (2016) போன்ற படங்கள் ஒரே நாளில் நிகழும் கதையைச் சொல்வனவாகவும், Boyhood ஏறத்தாழ 13 ஆண்டுகள் நிகழும் கதையைச் சொல்வதாகவும் இருக்கிறது. அதிலும் அதற்கேற்ப படப்பிடிப்பு செய்து மெல்ல திரையில் கதாபாத்திரங்களின் வயது முதிர்வை பார்க்க வைப்பதென்பது ஒரு மா தவம் செய்பவனாலன்றி வேறெவரால் இயலும்?
லிங்க்லேட்டரின் படங்கள் நகைச்சுவை என்ற வகைமைக்குள் பெரிதும் வைக்கப்படுகிறது. உதாரணமாக Before திரைப்படங்கள் Rom-Com வகைமையிலேயே அமேரிக்கர்களால் அடையாளமிடப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், எவருக்கும் தெரியும் அது வெகுவாய் அறியப்பட்ட அளவுகோலின் படியும் கூட காமெடி படமல்ல என்பது. அது ‘ரொமெண்டிக் ஃபிலாசபி’ என்று வேண்டுமானால் குறிப்பிடத் தகுந்தது. ஆனாலும், அவரது படங்கள் காமெடி என்று அழைக்கப்படுவது பெரிய தவறும் அல்ல, அவை கலை நேர்மை கொண்ட காமெடி படங்களே. நாடகீய தருணங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம், அவற்றைத் தவிர்த்து கடி ஜோக் சொல்வதும் அத்தகையை வகைக்கான கூறுகளே என்கிறேன்.
’எந்தத் திரைப்பள்ளிக்கும் செல்லவில்லை, நான் திரைப்படங்களுக்குச் சென்றிருக்கிறேன்’ என்று ஒரு திரை மேதை சொன்ன பஞ்ச் வசனம் லிங்க்லேட்டருக்கும் பொருந்தும். இன்னும் பலர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். அவர்கள் அறிவுஜீவிகளால் கூட அறியப்படாமல் இருப்பதற்குக் காரணம் இரண்டு. ஒன்று அவர்கள் பஞ்ச் வசனங்கள் பேசி கூட்டம் சேர்ப்பதில்லை. மற்றொன்று அவர்களுக்குக் காலத்தின் வளைவுகளும் சாத்தியங்களும் வரையறைகளும் புரிந்தே இருக்கின்றன.
7
இளமையின் சரீரம் சாகசத்திற்குத் தயாராக இருக்கிறது, துணைக்கு சுதந்திரம் சுடர் விட்டுக்கொண்டிருக்கிறது, அதற்கேற்ற தாள லயத்தில் ஒரு மாய உலகத்தை கனவாக்கி வழங்கிக் கொண்டிருக்கிறது ஹார்மோன்கள். அங்கு சந்தித்துக் கொண்ட இரு உள்ளங்கள் என்றோ ஒரு நாள், திட்டமிடல்களுடனும், தனக்கே என்று பணிகளுடனும், அவற்றைப் பின் தொடர்வது வாழ்வின் அத்தியாவசியம் என்ற கற்பிதங்கள் மூலமும் தன்னுருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்த இந்த வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்ட அந்த ஜோடி இன்னுமொரு காலத்தில் அகவை நீண்டு வாழ்வின் நிதர்சனத்தின் முன் நிற்கிறது. எல்லா நிலைகளிலும் சிரிக்கவும், கோபமுறவும், தலை சாயவும், கிள்ளிப் பார்க்கவும் அவர்களுக்கு காதல் எனும் மாயம் கதவுகளைத் திறந்து தயாராகவே இருக்கிறது.
குறிப்பு : ஈதன் ஹாக்கேவை தொலைபேசி வாயிலாக ராஜர் எபெர்ட் நேர்காணல் செய்தார் என முன்னர் இடம்பெற்றிருந்த தகவல் பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.