அழகுநிலா கவிதைகள்

by அழகுநிலா
0 comment

சிகரத்தை உரசிக் கூடும் மேகங்களை
அடிவாரத்தில் மேயும்
எவையும் அறியாமலில்லை
புல்லின் நுனி அறிந்தே
மெல்லப்படுகிறது பற்களுக்கிடைய.

******

நீலத் திமிங்கலமாய்
நீ
மீன் கொத்தியாய்
நான்
யாரையும் யாரும் எதுவும்
செய்ய முடியாதவாறு.

******

மலை நெருங்க
நானும் நெருங்க
ஒரு பயணம்
பறக்கும் இடத்திலேயே பறவைகள்
மிதக்கும் இடத்திலேயே மேகங்களெ.

******

மொத்தக் கடலும்
கரித்துக் கிடக்கையில்
துணிந்து இனிக்கிறது
தேன்துள.

******

குளத்தில் எறிந்த கல்
வானத்தில் கிடக்கிறது
குளத்தோடு.

******

கனி கீழே விழ
எத்தனிக்கும் போது
ஆயிரம் வாய்
திறந்து கொள்கிறது.

******

இரவு நடந்த திருட்டைப்பற்றி
பேசிக்கொள்கிறார்கள்
வெயில் ஏற ஏற கூட்டம் கலைந்து
தூய்மையாகிறது வெளி.

******

அரங்கம் எப்போது
முழுமையடைகிறது தெரியுமா
மிகச்சரியான பார்வையாளன்
வந்தமர்ந்த பிறகு அது
அதிர்ந்து களைகட்டி
ஓசையடங்கிப் பணிந்து
மௌனம்
கொப்பளிக்கத் தொடங்கும் போது தான்.

******