ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில பகுதிகள்:

“வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது முகமற்ற வேட்கை. விண்ணைப் பார்த்திருந்த சின்ன மலரொன்று அச்சத்தில் மணம் தடுமாறுகிறது. ஆந்தையின் தலையில் ஆவலொன்று பச்சை மச்சமாகி இரவுக்காக விரிகிறது. கிழங்கை முகர்ந்து பார்த்து முத்தம் மட்டும் தந்துவிட்டுப் பசியோடு கிடைக்குத் திரும்புகிறது முயல்குட்டி. கன்னிமையின் தோளில் விழுந்து நாணத்தின் கன்னத்தில் தெறிக்கிறது மழை. மழை வலுக்கிறது. மணல் முலைகள் கரைந்தோடுகின்றன. ஏதோ ஒரு சிப்பி பெண்ணாகி இதழ் விரிக்கிறது.”

______________

மழை பெய்து கொண்டேயிருந்தது. கரையில் விரியும் கடலலைகள் மேல் மழைத்துளிகள் அதே தீவிரத்துடன் பாய்ந்தன. ஆண் கடலிலும் பெண்கடலிலும் அதே மழை. கனவும் நிஜமும் ஒரே திசையில் எதிரும் புதிருமாக வந்துகொண்டிருந்தன. நெடும் மௌனமும் குகையின் அமைதியும் மென் திகிலூட்டியது. அதிலிருந்து விடுபட வேண்டுமென்றே பேசத் தொடங்கினான். “வார்த்தைப் பாடு எடுத்ததுமே தலைமுடியை வெட்டிருவாங்களாக்கா?” அவன் கண்களை ஆழமாகப் பார்த்தாள். அவள் கூந்தலில் சூடிய தாழம்பூ லேசாக வாடியிருந்தது. அனிச்சையாக இடது கையால் அதைத் தொட்டுப் பார்த்தாள். சிறு புன்னகையோடு கண்கள் ஒளிர்ந்து தணிந்தது. ஆறுதலூட்டும் தொனியில் “அதெல்லாம் பதினைஞ்சு இருபது வருஷத்துக்கு முன்னாடி. இப்பலாம் முடிவெட்டுறது அங்கி போடுறதெல்லாம் கிடையாது. நெனச்சா சேலை கட்டிக்கலாம். வட்டக் கொண்டை போட்டுக்கலாம்.”

பாண்டி முகத்தில் சின்ன ஆசுவாசம் தோன்றி மறைந்தது. அவள் கண்கள் விட்டேத்தியாக விலகி நின்றன. மீண்டும் மென்திகிலூட்டும் அமைதி. மௌனம். “பெண்களை புத்த சங்கத்துல சேக்க வேண்டாம்னு கௌதம புத்தர் மூணு முறை கண்டிப்பா சொன்னார்னு ஒரு புத்தகத்துல படிச்சேன். அது உண்மையாக்கா?” கண்களைக் கண்களால் ஆழம் பார்த்தாள். புருவத்தை நெரித்தாள். பதிலில்லை. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வெளியே மழை வலுத்தது. நீர்ச்சரங்கள் பாய்ந்திறங்கி வெண் திரையாயின. அப்பால் கடல் தென்படவில்லை. மழையிரைச்சலில் அவள் குரல் மெதுவாகக் கேட்டது. “பிரான்ஸிஸ் சேவியர் வாழ்ந்த குகையில நிக்கிறோம். அவர் என்ன நெனப்பாரு!” வலிந்து சிரிக்க முயன்று பாண்டியின் முகத் தீவிரத்தைக் கண்டு இயல்பானாள்.

காற்று உரத்து அடிக்கும்போது சாரல் குகைக்குள் வீசியது. ஈரம் படாமல் விலகி சுவர் அருகே நகர்ந்தான். மழைக்குளிரில் குகையில் இளம் இருட்டு வியாபித்திருந்தது. அந்த மௌனம் தாங்கமுடியாததாக இருந்தது.

தயங்கித் தயங்கி இவ்வளவு காலாகக் கேட்காமலிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டான்.

“முழு விருப்பத்தோட தான் போறியாக்கா?”

தலை கவிழ்ந்து கொண்டாள். அவன் கண்களின் கீழே அவள் தலையின் உச்சி வகிடு மின்னலெனத் தோன்றியது.

சற்று தாமதமாகத்தான் வலது கன்னத்தில் அந்தத் துளி இறங்குவதைக் கண்டான். “அழுறயாக்கா” என்று கேட்கும்போதே இடது கன்னம் நனைந்துகொண்டிருந்தது. விசும்பலைக் கட்டுப்படுத்த முயன்று மேலும் குனிந்தாள். இரு கைகளாலும் முகம் பற்றி நிமிர்த்தினான். இமை திறந்து அவன் கண்களை ஒருமுறை நோக்கியவள் மீண்டும் மூடிக்கொண்டாள். மௌனத் தாரையாகக் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. கைகளை விலக்காமலே கண்ணீரைத் துடைக்க முயன்றான். மௌனமாக இருந்தாள். கரிப்புச் சுவையுடன் கடலலைகள் வெளியே பொங்கிக் கொண்டிருந்தன. ஏதோ சொல்ல முயன்று இயலாமல் அவள் அதரங்கள் துடித்தன. அந்தச் சொற்களை அதில் தேடினான். விண்ணும் மண்ணும் களங்கமற்ற மழை நீரால் பின்னும் நிறைந்திருந்தது.

_______________

சொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்பும் வழி இது.

_______________

இரண்டே இரண்டு விழிகளால் அழுது எப்படி இந்தக் கடலை கண்ணீராக நான் வெளியேற்ற முடியும்!

என் கனவும் கற்பனைகளும் என் இதயமும் குருதியும் கிழிந்த மிதியடிகளாக மாற்றப்படும்போது எப்படி நான் அழாமலிருக்க முடியும்! கண்ணீரின் ஒரு துளியை அவித்த முட்டையைப்போல் இரண்டு துண்டாக அறுத்துவிட முடியவில்லை. அன்பும் இங்குதான் தொலைகிறதோ என்னவோ. நண்பர்களே தோழிகளே துரோகிகளே, ஆறுதலுக்கு பதில் ஓர் ஆயுதம் தாருங்கள்.

கடலைக் கப்பலின் சாலையென்று கற்பித்தவனைக் கொன்று விட்டுப் போகிறேன்.

________________

கூன் குருடு நொண்டி முடமென இற்றுச் சருகான பெரும் மனிதத் திரள், நெடியதொரு கேலி தொனித்த கூட்டுச்சிரிப்பில் புகைந்து கலகலத்து கலைந்து மறைய, பதுமபீடிகை ஆங்கொரு ஆழி சூழ்ந்த தீவாயிற்று.

அதன் நடுவே துலக்கமான செம்பவளப் பாறைப் பீடத்தில் துக்கமே உருவாக திடமிழந்த கதியில் உடல் நடுக்கத்தை அடக்க முனைந்தவளாக இளநங்கை ஒருத்தி அமர்ந்திருந்தாள். வளைகளற்ற அவள் கைகளில் ஒரு பாத்திரமிருந்தது. பிச்சைப் பாத்திரம் போலிருந்தது. வயிற்றோடு அதை அணைத்துப் பிடித்திருந்தாள். நாட்டையும் கோட்டையையும் முப்படைகளோடு மக்களையும் தானமிட்டுவிட்டு பிரதிப்பயனாக இச்சிறிய பிச்சைப் பாத்திரத்தை பெற்று வந்த இளவரசியாகக் காட்சியளித்தாள். புலன்கள் ஐந்தும் உணர்ந்தறிய எத்தனையுண்டோ, அத்தனையும் பொருந்தியவளாக இருந்தாள். துயரத்தில் பூத்த தூயமலரென்று மனம் நினைக்கத் தகைந்தது.

“பவளச் செவ்வாய் தவளவாள் நகையும் அஞ்சனஞ்சேராச் செங்கயல் நெடுங்கணும், முரிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும், குவிமுட் கருவியும், கோணமும், கூர்நுனைக் கவைமுட் கருவியும்…” பாடல் ஒலிநிழலாய் ஒளித்து மறைந்தது. எவ்வளவுதான் கூர்ந்து பார்த்து குறிப்புகள் தேடியும் அவளை அடையாளம் கண்டுகொள்ள வழியின்றித் தவித்தபோது காதருகே கிழட்டுப் பெண்குரல் சிரித்தது. பாண்டி எங்கே நின்றுகொண்டிருக்கிறான் என்பது அவனுக்கே தெரியவில்லை.

“இவளை யாரென்று தெரியவில்லையா? நன்றாகப் பார். முடியவில்லையா? இப்போது ஞாபகம் வருகிறதா? வரவில்லையா… இவள்தான் மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி, மாயக்கள்ளி…”

வானத்தில் ஏழுவகை மேகங்கள் ஒரே நேரத்தில் சுற்றிச் சூழ்ந்து நேருக்கு நேர் மோதி பெரும் முழக்கம் உண்டானது. மின்னல் கொடிகள் கொதிநிலையில் நெளிந்து மறைந்தன. ஒளியும் இருளும் விரிந்தும் சுருங்கியும் பிரிவதும் சேர்வதுமாக காட்சியை மாறிமாறிக் கிழிப்பதும் தைப்பதுமாக… எல்லாம் சீர்கெட்டுவிட்டிருந்தன. மழைத்துளிகளின் முதல் வரிசை விழத் தயாராகி உச்சியில் துடித்தது. ஆழியில் புயல் வளிமுற்றி பேயாட்டம் போடத் தொடங்கியது. கூட்டம் கூட்டமாக காகங்கள் பறந்து வந்து அவளைச் சூழ்ந்து நின்றன. அவள் முகத்தில் அச்சமயம் தன் சுய துக்கங்களிலிருந்து மீளும் தெளிவு தென்பட்டது.

தன்னிடமிருந்த பாத்திரத்திலிருந்து அன்ன உருண்டைகளை உருட்டியெடுத்து விசிறி காகக்கூட்டத்தை பசியாறச் செய்தாள். அவளைச் சுற்றி கருப்புக் கம்பளம் விரித்தாற்போல சூழ்ந்து பரவியிருந்த ஆயிரக்கணக்கான காகங்களில் ஒன்றுகூட கரைந்து குரல் எழுப்பவில்லை. காகங்கள் நீங்கிச் சென்றபின் சிதறிய சோற்றுப்பருக்கைகளைத் தின்னக் கொழுத்து பன்றிக் குட்டியளவிருந்த எறும்புகள் சாரை சாரையாக வந்து பற்றியெடுத்தபடி புற்றுக்குத் திரும்பின.

“மக்தலேன்… மக்தலேன்…” என ஈனஸ்வரத்தில் விளிப்புக் குரல் கேட்டது. ஆண் குரல். அதைக் கேட்டதும் இளம்பெண் துணுக்குற்றாள். விலகிப் போயிருந்த வாட்டம் இரட்டிப்பாக இப்போது அவள் முகத்தில் குடிகொண்டது. அவள் எழுந்து சிறு தொலைவு நடந்து குரல் வந்த மரத்தடியை அடைந்தாள். அங்கே, அவன் நீள் முகமும் தாடியும் பச்சைக்கண்களுமாக மரத்தில் சாய்ந்து பாதி செருகிய விழிகளுடன் காயங்களில் குருதி கொப்பளிக்க உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அவன் வாய் நுரைத்து ரத்தம் பொங்கி வழிந்தது.

“என்னோடு வா என்னோடு வா” என்று அவளை நாக் குழற அழைத்தான். மூடித்திறந்த அவன் கண்களில் வாழ்வும் சாவும் ஒன்றன்பின் ஒன்று நின்று உற்று உற்று அவளைப் பார்த்தன. துயருற்ற இளம் பெண் தன் ஆடை நுனியால் அவன் வாயை முகத்தை மார்பைத் துடைத்து நேர்த்தி செய்து தன்னிடமிருந்த பாத்திரத்திலிருந்து அன்னத்தை எடுத்து அவன் வாயில் புகட்டினாள். அப்போது அவளிடம் பொங்கிய பிரியத்தில் அவள் கையிலிருந்த அன்னமணிகள் நெற்பாலாகி அவன் நாவில் இறங்கியது.

“வேண்டாம் வேண்டா”மென அமுதத்தை வெளியே உமிழ்ந்தவன் “நீ என்னோடு வா நீ என்னோடு வா” என்பதையே மீண்டும் மீண்டும் புலம்பி மெல்லத் தொனி தாழ்ந்து அடங்கிப் போனான். மண்டியிட்டு அமர்ந்த நிலையில் நீர் சுரந்த கண்களை இறுக மூடி உதடுகளைப் பலமாகக் கடித்த வண்ணம் அண்ணாந்த முகத்துடன் விம்மினாள். துக்கத்தில் கசங்கினாள். அவள் முழு உடலும் விக்கலடித்தது போல் குலுங்கியது. இருளும் ஒளியும் சுருங்கி விரிந்தன. காற்று பிளந்து வீசியது.

அந்தக் குரல் மீண்டும் காதோரம் ஒலித்தது. பரவசமாக – “அதோ அதோ அரசிளங்குமரன் வருகிறான்.

உதயகுமாரன் வருகிறான்.” ஆவேசமாக – “எங்கே போய்த் தொலைந்தாள் புதுப் பத்தினி, எங்க போனாலும் இன்னைக்கி இவா பாடு சட்டினி”

குரல் முறுகி சிரிப்பாகி அதிர்ந்தது.

சீற்றத்துடன் பாய்ந்த உரத்த காற்று செடிகொடிகளைப் பிடுங்கி எறியப் புறப்பட்டது போல் திருகிச் சுழித்தோடி பழுப்பிலைகளைப் பிய்த்தெறிந்தது. பழஞ்சருகுகளை வாரியிறைத்தது. மேகங்கள் மோதுவதும் முழங்குவதும் தொடர்ந்தது. மழைத்துளிகள் பாறையில் தெறித்துச் சிதறின.

உவவனத்துள்ளிருந்து குதிரைகள் வெளிப்பட்டன. குதிரைகளின் மேல் வேடர்கள் அமர்ந்திருந்தனர்.

உடல் வலிமையும் இளமையும் கூடி வார்த்தாற் போலிருந்த இளைஞன் வெள்ளைக் குதிரையில் முன்னால் வர பின்தொடர்ந்த குதிரைகளின் மேலிருந்தவர்கள் மாயமாகி மறைந்து போயினர். குதிரைகள் நிதானமாக நடந்தபோதும் தலைகள் மேலும் கீழும் பலமாக ஆடின.

முகத்தில் வந்து மோதிய சருகுகளைத் தடுத்தாண்ட இடது கையை இறக்கியபோது வெள்ளைக் குதிரையிலிருந்த இளைஞனின் முழுகம்பீரமும் பளிச்சிட்டது. கூர்நாசியும் மீசையும் பரந்த நெற்றியும் செதுக்கிய முகமும், செருக்கும், பிடரி வரை வளர்ந்து படிந்து கிடக்கும் சிகையுமாக வந்தான்.

குதிரைகள் செம்பவளப் பாறையருகே வந்தபோது, இருள் மண்டிய முகத்துடன் இளம்பெண் எதிர்ப்பட்டாள். அவளைக் கண்ட இளைஞனின் கண்கள் சட்டென ஒளிர முகம் மலர்ந்தான். வெள்ளைக் குதிரை மீது அவனைக் கண்ட இளம்பெண் சில கணங்கள் திகைத்து… நிலை கலையாமல் சிலைத்து நின்றாள். குதிரையிலிருந்து ஒரு துள்ளலோடு குதித்து இறங்கிய இளைஞன் அவளெதிரே மிக அருகே வந்து இரண்டு கைகளையும் அகல விரித்தான்.

“உடம்போடு என்றன் உள்ளகம் புகுந்தென் நெஞ்சங் கவர்ந்த வஞ்சக் கள்வி… வா.”

அவள் கண்கள் அவன் கண்களை ஊடுருவிப் பார்த்து தேனுண்ணும் தும்பியாகப் படபடத்து அவன் முகமெங்கும் அலைந்தது.

‘உவவன மருங்கில் உன்பால் உள்ளம் தவிர்விலேன்.’

விரித்த கைகள் விரித்தபடியிருக்க, அவள் அவன் மீது பாய்ந்து மார்பில் புதைந்துகொண்டாள். வலுவான கரங்கள் அவளை இறுகத் தழுவின. மற்ற குதிரைகள் திசைக்கொன்றாக நாற்புறமும் நழுவி மறைந்தன.

மின்னல்கள் பதறி மின்னி மறைந்தன. ஒளி துடிதுடித்தது. அணைத்துக் கொள்ளத் தாவியபோது விடுபட்ட அமுதசுரபி கீழே விழுந்து உருண்டோடி பாறை பக்கத்தில் கிடந்தது. கைவிடப்பட்ட தகரக்குவளை போல.

இளைஞனும் யுவதியும் தழுவித் திளைத்து மேலும் நெகிழ்ந்த போது தலையை நிமிர்த்திப் பார்த்த அவள் அவனுக்குப் பின்னால் கண்ட காட்சி பதற வைத்தது. வெள்ளைக் குதிரையின் முதுகில் ஒரு கொழுத்த கழுகு அமர்ந்திருந்தது. அதன் வாயிலிருந்து மனிதக் கண்ணொன்று அவளை வெறித்துப் பார்த்தது. ‘ஐயோ’ என அவள் கதறவும் கண்ணை கழுகு விழுங்கிவிட்டது. இளைஞனிடமிருந்து திமிறித் தன்னை விடுவித்தவள் மரத்தடிக்கு ஓடினாள். மரத்தடியில் கழுகுகள் கூடி நின்றன. அவளைக் கண்டதும் சற்று தொலைவு ஓடி பின் எழுந்து மறைந்தன.

ஐந்து வயது பெறுமான சிறுவனுக்குரிய சின்ன மண்டை ஓடும் எலும்புக்கூடும் பச்சை ரத்தக் கறையுடன் மரத்தடியில் கிடந்தது. பதைப்புற்றவள் பாறையருகே ஓடி வந்தாள். இளைஞனைக் காணவில்லை. வெருண்ட கண்ணுடன் நின்றிருந்த வெள்ளைக் குதிரையின் உடலெங்கும் ரத்தத்துளிகள் தெறித்துக் கோடாக வடிந்து நின்றன. பாறையின் மறுபுறத்தில் இளைஞனின் உடல் கிடந்தது. பாத்திரத்தின் அருகே துணித்த தலை ஒருக்களித்துக் கிடந்தது. “போதி மாதவா…” என்று அலறியவாறு தலையை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு அண்ணாந்தாள்.

அங்கே சிவந்த கண்களும் உருவிய பட்டயமுமாக ஆர்ச் ஏஞ்சல் கப்ரியேல் அந்தரத்தில்  நின்றிருந்தான். கூடவே நீளும் குந்தம் ஏந்திய மிக்கேல். இளம்பெண்ணைப் பார்த்து “ம்… புறப்படு என்னோடு” என்று அதட்டலாகக் கட்ளையிட்டான். அவள் கண்கள் மயங்கின. உடல் குழைந்தது. தரையில் விழுந்தாள். பாறையில் மோதவிருந்த அவள் தலையை தடுத்துக் காக்கப் பதைத்துப் பாய்ந்த பாண்டி கட்டிலிலிருந்து சிமிந்து தரையில் விழுந்தான்.

___________

கிழக்கே திரும்பி கடலைப் பார்த்தவாறே சொன்னாள், சொற்கள் தயங்கி மிக மெதுவாக வந்தன. “இனிமே எனக்கு போன் பண்ணாம இருக்கிறதுதான் உனக்கு நல்லது.”

பாண்டி அதிர்ந்தான். இந்த உதடுகள்தான் இதை உச்சரித்தனவா? அவன் கண்கள் பொங்கி வழிந்தன.

இதே உதடுகள் தானா?

“அந்த சிலுவைய எடு” என்று உள்ளங்கை விரித்தாள்.

அவன் பேசாமல் இருந்தான். கையை அவள் மடக்கவில்லை. பிறகு அவன் பர்ஸை உருவிப் பிரித்து தங்கச் சிலுவையை எடுத்து அவளிடம் கொடுத்தான். வாங்கிக் கடலில் எறியக் கை ஓங்கியவளை அவன் குரல் தடுத்தது.

“வேணாங்க்கா.”

தயங்கினாள்.

“அது என் சாந்தாகுருஸ்.”

“இப்படியே இருந்தாப் பைத்தியமாயிருவடா.” கத்தினாள். உதடுகள் துடிக்க முகம் கலைய அழுகையை அடக்கியவாறு அழுத்தமாகச் சொன்னாள் “இல்லன்னா நான் சாகணும்.”

உயிரற்று நின்றிருந்தான். கண்ணீர் கூச்சமில்லாமல் வெதுவெதுப்பாக வழிந்து கொண்டிருந்தது.

எரியும் கணங்களின் வெம்மையைத் தாங்கமாட்டாமல் தவித்தாள்.

“வா போகலாம்.”

அப்படியே நின்றிருந்தான்.

சட்டென்று திரும்பி கணுக்கால் அளவு நீரில் மணலில் கால் புதைய நடந்து நடந்து கரையை நோக்கிப் போனாள். கரையை அடைந்து திரும்பிப் பார்த்தாள்.

அப்போதும் அங்கேயே நின்றிருந்தான்.

அவளுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. கரைமணலில் அப்படியே அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்தாள். அழுகையில் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது.

“ஸாரிக்கா.”

அவள் நிமிரவேயில்லை. மெதுவாக அடங்கி இயல்பாகி சம நிலைக்கு வந்தாள். முகம் தூக்கிப் பார்த்தாள். அருகே நின்றிருந்தான். எதிரே கடல். “நீ நல்லா இருக்கணும்டா.”

எழுந்து அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்று “பை. விஷ் யு ஆல் த பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு நடந்தாள்.

அவளையே… போவதையே… பார்த்துக்கொண்டு நின்றான். கரையோரமாகவே நடந்து போனாள். ஊருக்கு அருகே போனதும் திரும்பிப் பார்த்தாள். ஊருக்குள் நுழைந்து மறைந்தே போனாள்.

பரந்து விரிந்த கடலின் முன்னே எல்லையில்லா வானத்தின் கீழ் நிழலன்றி ஏதுமற்று நின்றிருந்தான்.

________________

மிகப் பொதுவானதொரு திசையிலிருந்து மிகப் பொதுவான வாசனையொன்று. தேடி வந்து புலன்களைக் கிளறியது புது இசை. ஒரு வனத்தில் வசித்த மொத்தப் பூச்சிகளும் அவன் உடலுக்குள் இடம் மாறி நெளிந்தன.

மூச்சு பசியெழுந்து உச்சமுற்றபோது ஒளியின் ஒரு துளி காலடியில் கருந்தரையில். நெடுங்காலமாக நின்றிருந்த கால்கள் கைகளை முந்தித் தீண்டின. மற்றொரு துளி சற்று முன்னே முளைத்தது. குனிந்து எடுத்திருந்தால் பறவையாகும் வரமிருந்தது. ஆனாலும் இப்போது தான் நடக்கவே பழகினான். சவ ஊர்வலம் தூவிச் செல்லும் மலர்களைப் போல ஒளிமணிகள் பெருகி ஒற்றையடிப் பாதையாகி நீண்டது. ரயில் பூச்சிகள், பாம்பு ரயில்கள், பாழுங்கிணறுகள், பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொறிகள் கடந்து வந்தடைந்தபோது அந்த மலரிருந்தது நிழல்களற்ற ஒளிச்சூளையின் மையத்தில் துருவேறிய மோகத்தோடு. அவசரமாகக் கை நீட்ட நில்லென்றது முள்ளின் முதற்சொல். காயக் கோடுகளால் கை நிரம்பியபின் அதுவே கடைசிச் சொல்லாகவுமிருந்தது. பச்சை ரத்தத்தின் வீரியம் நாற்றமேறிய இருளைப் பூசத் துவங்கியது.

அவன் பார்வையில். ஆத்மா கதறக் கதற பிறவிக்குருடன் அங்கே மறுபிறவியிலும் குருடானான்.

_______________

‘அது என் சாந்தாகுருஸ்’ என்ற சொற்கள்தான் அவனை எழுப்பி விட்டதா அல்லது அவன் எழுந்தவுடன் முதல் நினைவாக அதுவும் விழித்துக் கொண்டதா?

அன்று அவனை அறியாமல் அவன் ஆழத்திலிருந்து கிளம்பிய சொற்கள் இன்றுவரை ஓராயிரம் முறை நினைவில் மீண்டுவிட்டன. ரயிலில் படுத்திருப்பதை உணர்ந்தான். எழுந்து ஜன்னல் வழியாகப் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் இருமருங்கும் கற்பாறைக் குன்றுகள். பசுமையே இல்லை. ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை.

‘மரம் ஒருபோதும் தன் நிழலை உணர்வதில்லை.’

‘நீ கவிஞன்தான்டா.’

ரயில் பாழ்நிலத்தினூடாக வெறுமையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. கானலில் விரிந்த கரிசல்மண். மரங்கள் எங்கெங்கோ நரங்கி நின்றன. எப்படி இங்கு மனிதர்கள் வாழ்கிறார்கள்? மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களும் எப்படியாவது வாழும். உயிர்கள் வாழப் பிறந்தவை. வெயிலை அருந்தியும் அவை வாழும். ஏன், கனவின் காலடியில் கவிதையால் அர்ச்சித்து நான் வாழவில்லையா? எப்போதுமே நான் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில், தொழ விரும்பும் தூய்மையோடு இருக்கிறாள்.

‘பியூரிடிக்கு ஒரு பவர் இருக்கு, எல்லா விதத்திலயும். வணங்கித் தான் ஆகணும். வேற வழியேயில்லை – குறிப்பா ஆண்களுக்கு.’

காலடிகளை சென்னியில் சூடவும் சித்தமாக இருக்கிறேன்.

_____________

உப்புப் பரல் கீறியதில் என் நாவில் நீளமான காயம் ஒன்று. ஆறாத நிணத்தால் உறவின் ருசிபேதம்.

நரம்புகள் வெட்டுண்ட வேர்களாகி புழுக்களாக நெளிகின்றன. பழுக்கின்றன காயமும் நியாயமும்.

சிறுகச் சிறுக அழுகிக்கொண்டிருக்கிறது காலம்.

எழிலிலும் எடுப்பிலும் மிடுக்கிலும் அன்பிலும் பண்பிலும் மானத்திலும் நிறைந்து கிடக்கும் கடல் ரகசியமாக என்னுடன் சூதாட விரும்பிய தருணத்தின் கரிப்பை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கண்கள் விரிய நான் கண்டு வியந்திருந்ததை அது ஒரு பந்தயப் பொருளாகக் கண்சிமிட்டி மாற்றிய பிறகுதான் கரையொதுங்கத் தொடங்கின கிளிஞ்சல்கள் என் எலும்புத் துண்டுகளாக.

______________

இருளின் முரணாக ஒளியின் அசைவற்ற நிழலாக கருவுக்குள் கிடந்த சிசுவுக்காக அந்தப் பாடலைப் பாடினேன். துடிக்கப் பழகாத புதிய இதயத்துக்காக முளைக்கத் தலையெடுக்காத புனித ஆத்மாவுக்காக கேட்கத் தொடங்காத குருத்துச் செவிகளுக்காக என் குரலின் வெளியைத் திறந்தேன். குடையாக விரிந்திருந்த ஆகாயத்தை படமெடுத்தாடும் கடலை பட்டொளி வீசும் நிலவை படையெடுத்து வந்த குளிரை பனிக்காற்றை வெயிலை மழையை மாருதத்தை மலைகளின் கூந்தலை அருவியின் ஊஞ்சலை குட்டி குட்டி நட்சத்திரங்களை கூராப்பை கொடியோடு மலர்களை மரத்தோடு பறவைகளை கருப்பேழையின் சுவர்களில் இசையால் வரைந்தேன். நித்தியத்தின் அழகே அன்பின் வடிவே, காதலின் பெருவெளியே கருணையின் திருப்பொருளே உயிர்களின் சுருதியே முத்தங்களின் முழுச்சுவையே,  எழு எழு விழி விழியென்று உருகிக் கரைந்தேன். இருளின் விரல்களில் இறுக்கம் அவிழவில்லை. பாடலின் முடிவில் ஆழ்கடலை ஒரு வில்லாக வளைத்தேன். நீள நதியை அம்பாகத் தொடுத்தேன். நியதியின் சிரசுக்கு குறி சேர்த்து அழிவற்ற மொழியில் நாணையிழுத்துச் சுண்டினேன். திடுக்கிட்டு விழித்தது சாவு; தொப்புள் கொடியில் பற்றிக்கொண்டது உயிரின் திரி.

______________

சிறகுகளை விரித்து மிதக்கும்போது பறவைகளுக்கு வாய்க்கிறது வில்வடிவம். அம்புகளுக்கு பதில் வில்லே பாய்ந்து செல்லும் அற்புதம்.

கூட்டமாகப் பறக்கின்ற சுபாவம் கொண்ட கொக்குகளோ புறாக்களோ நாரைகளோ போலத்தான் முதலில் அவை தோன்றின. பிறகு உருவம் கறுத்து கழுகுகளாகி வந்தன. மெழுகுவர்த்திகள் எரிந்து உருகிக் குறுகும்வண்ணம் பறவைகளின் மிதத்தல் வட்டம் தாழ்ந்து வந்தபோது பாண்டி எரிச்சலடைந்தான். “வானத்துல எவ்வளவு இடம் கிடக்கு; அதை விட்டுட்டு கீழ வந்து திரியிதுகளே” என மனம்விட்டு கடிந்து கொண்டான். ஒரு பறவையின் வாலுக்கும் வயிற்றுக்கும் நடுவில் வட்ட வடிவில் வெள்ளை நிறத்தில் ஏதோ அவன் கண்ணில் பட்டது. பட்ட கணமே கிரகித்துக் கொண்டான், அது முட்டை போடப் போகிறது என்பதை. அதன் திட்டமும் வட்டமும் முட்டையை அவன் தலையில் போடுவதுதான் என்பது புலப்பட்டபோது எச்சரிக்கையடைந்து நடப்பதை நிறுத்திவிட்டு ஓட்டத்தை ஆரம்பித்தான்.

மூச்சு வாங்கிய போது நின்றான். வானத்தில் பறவைகளில்லை.

சாம்பல் பாம்பைச் சுற்றி கட்டிடங்கள் தொடர்ச்சியாக எழுந்து நின்றன. நேற்று இரவில் எரிந்ததை விடிந்ததும் அணைக்க மறந்ததுபோல் தெருவிளக்குகள் சீக்கிரமே எரியத் தொடங்கியிருந்தன. அவனுக்கு தாகமெடுத்தது. வாயும் வயிறும் கொஞ்சம் பச்சைத் தண்ணீர் கேட்டது. ஏறக்குறைய புண்ணாகிப் போயிருந்த உள்ளங்கால்களில் திடீரென்று தீப்பிடித்ததுபோல் வலி தோன்றியது.

மெதுவாக மிக மெதுவாக அவன் ஒரு தண்ணீர் கடையைத் தேடியபடி நடந்தான். கொஞ்சம் மஞ்சள் நிறமேறிய பஞ்சை குவித்து வைத்தாற்போல – இல்லை ஒரு வெண்பன்றிக் குட்டி சுருண்டு படுத்து உறங்குவதுபோல – இல்லை கருப்பு கல்மேஜையில் பரோட்டா ரொட்டிக்கு மாவு பிசைந்து எண்ணெய் தடவி வைக்கப்பட்டிருந்தது. குழந்தைக்கு ஜட்டி போட்டு விட்டது போல் அதன்மீது ஒட்டுத் துணி. எனவே இது ஒரு சாப்பாட்டு கடைதான்;

இங்கு குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கும் என்பதை பாண்டி புத்திசாலித்தனத்துடன் சட்டென்று கிரகித்துக்கொண்டான்.

வெறும் ஸ்டூல்களும் மேஜைகளுமாக கடை வெறிச்சோடிக் கிடந்தது. கடை முகப்பில் போய் நின்றான். எழுதாத தாளின் வெண்மையை நினைவூட்டும் சுத்தமான வெள்ளை வேஷ்டியும் பனியனும் அணிந்து எண்ணெய் விட்டு படியத் தலைவாரி நெற்றியில் குங்குமம் தரித்து, முதலாளியா தொழிலாளியா எனப் பிரிக்க முடியாத தோரணையுடன் சாமிக்கு சூடம் காட்டிக் கொண்டிருந்தவன் கன்னத்தில் போட்டுக் கொண்டு திரும்பி பாண்டியை பார்த்தான்.

‘என்ன வேணும்’ என்பது போல் முகத்தை வெட்டி உயர்த்தினான். ‘தண்ணி’ என்றான். தொண்டையிலிருந்து கருக்கு வாளை உருவியதுபோல் குரல் அறுந்து வலி ஏற்பட்டது. வயிற்றுக்குள் சொட்டுச் சொட்டாக ரத்தம் சிந்திக்கொண்டிருப்பதாக ஒரு பிரமை.

“போ போ” அதட்டிவிட்டு கடை ஆள் அவன் ஜோலிக்கு ஆயத்தமானான். ஒரு அசட்டுப் புன்னகையின் துணைகொண்டு அதைப் பிடித்துத் தொங்கியபடி பாண்டி அங்கேயே நின்றிருந்தான்.

ஊற்று புடைத்து கொந்தளித்ததுபோல – இல்லை மண்ணிலிருந்து மழை முளைத்து எழுந்ததுபோல – இல்லை அலுமினியப் பாத்திரத்திலிருந்து நீரள்ளி கடை ஆள் முற்றம் தெளித்தான். பாண்டி தாகத்தோடு உடலை சற்றே குறுக்கி துள்ளி வந்த நீர்மணிகளைக் கைகளில் ஏந்திப் பருக முயன்றான். அவை விரலிடுக்கு வழியாக ஒளிந்து விளையாடின. முற்றம் தெளிப்பதை நிறுத்திவிட்டு கடை ஆள் சற்றுநேரம் பாண்டியைக் கூர்ந்து பார்த்தான்.

வறண்டு உலர்ந்து சருகான குரல்வளை பேசினால் நொறுங்கிவிடும் வாய்ப்பிருந்தும் மீண்டும் ஒரு முறை பாண்டி கருக்குவாளை உருவினான். மின்னல் வேகத்தில் திரும்பிய கடை ஆள் காது அறுந்த அலுமினியப் போணியில் பாண்டிக்கு தண்ணீர் தந்தான். ஆவலோடு அதை வாங்கிப் பருகியபோது கொட்டு அடித்ததுபோல் குரல்வளையில் தாகத்தின் தாளம் மடக்மடக்கென்று ஒலித்தடங்கியது. கண்ணில் புகைந்துகொண்டிருந்த திரை மூட்டம் விலகியது. குளிர்ந்த வயிற்றைச் சுமந்தபடி நடக்க சோம்பலாக இருந்தது.

சாம்பல் பாம்பின் முதுகிலேறிக் குறுக்காகக் கடந்தான். அங்கே அகன்று உயர்ந்த ஒரு அரண்மனை வாசல் திறந்திருந்தது. வாசலுக்குள் ஊற்றுப்பார்த்தான். உள்ளே அரண்மனை இல்லை. அதற்குப் பதிலாக மரம் செடி கொடிகள். கோலத்துக்கு புள்ளி வைத்தாற்போலக் கொஞ்சம் மனிதர்கள். ஓ இது அந்தப் பூங்கா! அவனுக்குள் அவனே காற்றில் நெய்த வார்த்தைகளில் பேசிக்கொண்டான். ஓய்வை விரும்பிய கால்கள் தாமாக பச்சைப் புல்வெளியை நோக்கி நகர்ந்தன. லேசான வெப்பம் கசியும் செங்கல் தளம் பதித்த பாதையில் மெதுவாக நடந்தான். பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து சொற்ப நேரம் முதுகு சாய்த்தால் தோதாக இருக்குமென்று தோன்றியது.

பூங்கா முழுக்க நாலாபக்கமும் நோட்டமிட்டான். அனைத்தும் ஆட்களால் நிரம்பியிருந்தது. அவனுக்கெதிரே பாதையை அடுத்த பெஞ்சில் ஒரு ஆள் அமர இடமிருந்தது. அந்த பெஞ்சில் பஞ்சுத் தலையணை மெல்ல பொமேரேனியன் நாய்க்குட்டியாகி பாண்டியை வைத்த கண் வாங்காமல் கூர்ந்து பார்த்தது. பதிலுக்கு அவனும் நாய்க்குட்டியை உன்னிப்பாகப் பார்த்தான். இருவருக்கும் ஏற்கெனவே அறிமுகம் உண்டு என்பது ஞாபகம் வந்தது. பழைய உறவு ஒன்றைப் புதுப்பித்துக் கொண்டதில் இவன் முகத்தில் மெல்லிய மலர்ச்சி பரவியது. நாய்க்குட்டியும் உதடு பிரிக்காமல் கொஞ்சமாகச் சிரித்தது. முதல் சந்திப்பின்போது அது சிரிக்கவில்லை. திரி பின்னி கொத்துக் கொத்தாக வைத்துக் கொளுத்திய சரவெடிபோல் பயங்கரமாகக் குரைத்து பிறகு புரிந்துகொண்டு நல்ல பிள்ளையாகப் பழகிவிட்டது.

நாய்க்குட்டி அவனுக்கு குறிப்பால் எதையோ உணர்த்த முயல்வது போல் பார்வையை விலக்கி தலையைத் தூக்கிக் காட்டியது. அப்போதுதான் பாண்டி பார்த்தான், அதன் அருகிலிருந்த மனிதரை. மிதமான உயரம், நரை ஊடுருவிய தாடி மீசை, ஏறு நெற்றி. சாந்தமான முகம். உடனே அடையாளங் கண்டுகொண்டான். பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. கால் மேல் காலிட்டு வலது கையைத் தூக்கி சாய்வுப் பலகை மீது வைத்தபடி முகத்தை ஏந்தி வளர்ந்துயர்ந்த ஒருமர உச்சியையோ அல்லது அதற்கும் மேலிருந்த வானத்தையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கூசும் ஒளி விலகி வானம் காணும் தன்மையோடிருந்தது.

பெஞ்சிலிருந்து துள்ளியிறங்கிய நாய்க்குட்டி பாண்டியை நோக்கி ‘குடுகுடு’வென்று ஓடி வந்து அவன் முன்னே நின்றது. நட்போடு முகர்ந்து பார்த்து மகிழ்ச்சியில் வாலை ஆட்டியது. பாண்டி வலது கையால் நாய்க்குட்டியின் உச்சியை வருடியபடி அவரைப் பார்த்தான்.

அவர் வரைந்து வைக்கப்பட்டது போலிருந்தார்.

உடலை உதறிச் சிலிர்த்த நாய்க்குட்டி ‘குடுகுடு’வென்றோடி மீண்டும் பெஞ்சிலேறி அமர்ந்துகொண்டது. பாண்டி எழுந்து அந்த பெஞ்சுக்கு செல்ல நினைத்த நேரம், நடைப்பயிற்சியில் களைத்துப் போன நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி வியர்த்து வழிய மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி அந்த பெஞ்சில் அவர் அருகே வந்து அமர்ந்தாள். குழந்தைத்தனமான அவள் முகத்தில் தாய்மை அரும்பியிருந்தது.

சோர்வையும் பூரிப்பையும் சேர்த்துக் குழைத்த உடலெங்கும் பூசியதுபோல் தோற்றமளித்தாள். அவசரப்படாமல் அடிக்கடி கண்களை மூடி முகத்தை உயர்த்தி மூச்சு வாங்கினாள்.

‘ஒரு மரத்தடி நிழல் போதும், உன்னை தைரியமாக நிற்கவைத்துவிட்டு போவேன்.’ மனத்தில் இந்த வரிகள் மிதந்து வந்தன. பாண்டி கர்ப்பிணியையும் அவரையும் மாறிப் மாறிப் பார்த்தான். கவிதை வரிகள் சுழன்று சுழன்று வந்து போயின. சிறிது நேர ஆசுவாசத்திற்குப் பின் உதட்டை  மடித்துக் கடித்தபடி கைகளை ஊன்றி எழுந்த கர்ப்பிணி நின்று நிதானித்து பின் பூங்கா வாசலை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினாள். சாலையில் திரும்பி மறையும்வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். நாய்க்குட்டி சற்று பொறுமையிழந்தது. அவரிடம் எந்த சலனமுமில்லை. ஏதாவது மரக்கிளையில் கூடு கட்டும் பறவைக்குக் கூடமாட உதவிக் கொண்டிருக்கிறாரோ?

பாண்டி புல்தரையில் படுத்தவாறு கண்களை மூடி பெயர்களின் பின்னால் அலைந்து திரிந்தான். எவ்வளவு நேரமோ தெரியவில்லை. தூரத்தில் ஆலயமணி ஓசை சன்னமாக காதில் விழுந்தபோது அவனுக்குள் விளக்கெரிந்தது. “ஆ… தேவதேவன்” என மனத்துக்குள் கூவியபடி கண் திறந்தான். இருட்டிப் போயிருந்தது.

பூங்கா வெறிச்சோடியிருந்தது. எதிரிலிருந்த பெஞ்சில் யாருமே இல்லை.

___________

ஒரு கிண்ணத்தில் ஏறி நின்று எண்ணெய் ஊற்றித் திரியாகத் தன்னையே பற்றவைத்துக்கொள்ளத் தூண்டிய குளிரில் வெகு காலம் தனியே வானீரில் ஊற வைத்த சொற்களின் தோலை உரித்து மெல்ல மெல்ல மென்று ஒரு வார்த்தையும் பேசாமல் விழுங்கிப் பசியாறி கொஞ்சம் வெயிலருந்த பதுங்கியிருந்த நிலவறையிலிருந்து வெளியேறும் அவன் ஒரு ஈர மலரைப்போல அழகாயிருக்க வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

உடலின் தசையெல்லாம் குழைந்திறுகிய சேறாகி முதுகெல்லாம் புல் முளைத்த மனிதனின் பின்னே வெள்ளாடுகளை அதட்டி ஏன் ஏவுகிறீர்கள்? இருள் பின்னிய விழிகளைத் துருப்பிடித்த செவிகளுக்கும் முடமான மூளையைப் பிறழும் இருதயத்துக்கும் புலன் மாற்றி பொழுதுக்கும் அலுத்துப் போனவன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள முற்படும்போது முன்னேற்றம் பின்னேற்றம் பற்றி எதற்காக வழிமறித்து மூதலிக்கிறீர்கள்?

எல்லா வழிகளும் கூடிப் பிரியும் இடமே வாழ்க்கை என்றான பின் வெறுமையின் குடுவையில் திரண்ட நீர்க்குமிழியாகி உடைந்து மறையும் தருணம்வரை அவன் மிதந்து போனால் நடந்து திரிபவர்களுக்கு என்ன நஷ்டம்?

______________

திசையறும் குருடன் குரலெட்டாச் செவிடன் மொழியுமற்ற ஊமை எல்லாமிழந்த திருடன் அவன்தான்… அஞ்சல்காரனிடம் அன்றைய தபாலில் மடித்து ஒட்டிய மஞ்சள் வெயில் வேண்டி கொஞ்ச தூரம் கெஞ்சிக்கொண்டு போனானே அவனேதான், காலையின் தோள்களிலும் மாலையின் கால்களிலும் வடிந்த பாடல்களைப் பிடித்து ராகங்களைக் கொறித்தும் குரல்களைப் பருகியும் பசியாறினானே அவனே தான், குளிர் மாதத்தின் ஓரத்தில் ஒடுங்கி நின்ற வாரத்தின் விறைத்த கிழமைகளில் மண்டியிட்டு தீக்கிளிகள் புனைந்து வானத்தைத் திறந்தானே அவனேதான், அதுகாறும் கடைப்பிடித்த நடையுடைந்து அடைமழையில் பாய்ந்தோடும் ஆறாகி வந்தானே அவனேதான், நீர்க்குமிழி மூச்சுவிடும் மெல்லிய வெடிப்போசை கேட்கும் ஆசையில் அடுத்தடுத்து மிதந்து செல்லும் ஆளற்ற முத்தங்கள் உடையும்வரை இமைக்காது இறந்து நிற்பானே அவன்தான். அவனேதான். காரணமெதுவும் தெரிவிக்காமல் மறுபடியும் வெளியேறி விட்டானாம் மரணத்தை விட்டு.

1 comment

Arul September 30, 2021 - 10:07 am

Kindly publish the 2nd edition of KANNI by
J. Francis Kiruba.. in memoriam ?

Comments are closed.