பாறையுண்டு பசியாறுதல் : கோபயாஷியின் ‘The Human Condition’

0 comment

1

கொடுங்கோன்மை அரசுக்கென சில எளிய கணக்குகள் உண்டு. அது ஆக்கத்திற்குப் பயன்பட வேண்டிய எந்த ஒரு இன, மொழி, தேசிய உணர்வையும் மடை மாற்றி, போலி எதிரிகளை வடிவமைத்து அழிவுக்கென பயன்படுத்திக் கொள்ளும். அதை எதிர்த்து நிற்கவோ, குறைந்த பட்சம் அதனை விமர்சிக்கவோ செய்பவரை இன்னும் எத்தனையோ நுட்பம் கொண்டு கயவனென முத்திரையிட்டு பாதாளத்திற்குத் தூக்கி வீசிடும். வரலாறும் எவ்வித கருணை உணர்வுமின்றி அத்தகைய மனிதாபிமானிகளை அழித்தொழித்து விடும்.

ஒரு வேளை போர்ச் சமயமாக இருந்து விட்டால்? அதே அரசு வேறொரு கோரமான பரிமாணத்தில் எழுந்து, அன்று மலர்ந்த சிசுவின் மீது கொலைபாதகம் செய்யும் நிலை வந்தாலும் அப்போதும் தனக்கான நியாயங்களைக் கட்டமைத்துக் கொள்ளும். அத்தோடு துணைக்கு விட்டில் பூச்சிகளாக மூலைச்சலவை செய்யப்பட்டவர்களை உருவாக்கிக் கொள்வதிலும் அதீத இலாவகம் காட்டும். தேசியம் என்பதை வெறித்தளத்திற்கு உயர்த்தி – விசுவாசிகளாகட்டும் எதிரிகளாகட்டும் – ஒவ்வொருவரையாகத் தன்னுள் இழுத்துச் சுவைத்துச் செரித்துக் கொண்டே இருக்கும். அக்குருதி நதியோட்டத்திற்கு எதிராய் தனியனாய் நின்று நெஞ்சை முன்வைக்கும் பொய்யற்றவன் படும் பாடு பாரபட்சமின்றி எல்லா உயிர்களுக்குமானது. அத்தகைய நோக்கு மட்டுமே அரசியல் கோரப் பண்புகளைச் சற்றேனும் சீண்டிவிட்டு வரலாற்றின் நினைவுகளில் செழிப்புடன் பதிவாகி இருக்கின்றன.

மசாகி கோபயாஷி

போருக்கு எதிரான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் Human Condition Trilogy திரைப்படம் மசாகி கோபயாஷியின் மேதமையில் உருவானது. ஊன்பை கோமிகாவா (Junpei Gomikawa) என்ற நாவலாசிரியரின் சுயசரித நாவலைத் தழுவி, ஏறத்தாழ ஒன்பதரை மணி நேரங்கள் ஓடக்கூடிய No Greater Love (1959), Road to Eternity (1959) & A Soldier’s Prayer (1961) என்ற மூன்று திரைப்படங்களாக கோபயாஷி எடுக்கிறார்.

ஜப்பான் அமேரிக்காவிற்கு நேரெதிர் கலாச்சாரமுடையது. ஏற்கனவே முன் நிற்கும் கருதுகோள்களை மீண்டும் மீண்டும் நிலைப்படுத்திச் செய்வதன் மூலமே அறிவியல் அரசியல் ஆன்மிகம் என எந்தத் தளத்தையும் செயற்படுத்தும் நாடு அது. இந்த கன்ஃபார்மிஸ்ட் கலாச்சாரத்தின் சாரமே மரபார்ந்த அரசியல் செயல்பாடுகளை நீ நம்புகையில் கண்மூடித்தனமாக மரியாதை செய்கையில் தேசத்தின் நிஜப்பிரஜை ஆகிறாய் என்ற ஒருவித மூளைச்சலவை மூலமாக, மானுடத்திற்கும் மேல் தேசத்தையும் தன் அரசாங்கத்தையும் வைக்கும் நிலையை உத்திரவாதம் செய்து கொள்கிறது. கோமிகாவாவின் நாவல் உடனடியாகவே தன் இராணுவ காலத் துயரத்துடன் உடன் இணைத்துப் பார்க்கத் தக்கதாகிறது இயக்குநருக்கு. அந்தப் புள்ளியில் நாவலையும் தன் சமூக இராணுவ பார்வை மற்றும் அனுபவங்களையும் ஒன்றிணைத்து இந்தத் திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறார் கோபயாஷி.

2

முதல் பாகமான No Greater Love திரைப்படத்தில் தானெடுத்துக் கொண்ட சுரங்க மேற்பார்வையாளர் பணியில் துளியும் மனிதத்துடன் தொடர முடியாமல் தவிக்கிறான் கஜி. அவனது பணியாளர்கள் எதிரி தேசமான சீனத்தின் போர்க் கைதிகள். அவர்கள் மீதான அற மீறலின் எண்ணங்கள் அவனது பூட்டிய கதவுகளை அப்பளமென நொறுக்கி அவன் ஆழத்தின் குடியிருப்பு வரை வந்து தீண்டுகிறது. கம்பளிப் பூச்சியின் நகர்வு என அவன் மனம் உள்ளுக்குள் இருந்து குடைந்து அரிப்பேற்படுத்திக் கொண்டிருக்கிறது. அடக்குமுறை காலத்தில் அறத்தை அறிந்த மனத்துக்கண் நோக்குபவர்களுக்கு உடலெங்கும் கொப்புளங்கள் தான் பரிசு.

எதிரியென்றாலுமே சிறப்பு வேலைக்காரர்களுக்கு (கொத்தடிமைகளுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்) இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் மேலாளர்களிடம் முறையிடுவதும், சொல் பொறுப்பதும் என கடத்தலின் பாதியிலேயே அதனினும் கொடிய செயல்கள் நடந்தேறி விடுகின்றன. கைதிகளிடம் நன்நம்பிக்கையைப் பெற முனைவதும் , தன் நாட்டின் அதிகாரிகளிடம் இருந்து கோரிக்கைகளை வேண்டிப் பெறுவதும் எதிரெதிர் திசையில் கொக்கிகள் என அவனைக் கிழிக்கின்றன. சுரங்கத்தில் நிகழ்த்தப்படும் வெறுப்புடன் கூடிய வதைகள் ஒரு நச்சரவமாக மனதில் ஊறுகின்றது. அது அவன் செல்லுமிடமெல்லாம் குடைந்து வலி ஏற்படுத்துகிறது. அதன் வலி பொறுக்கத் தவறும்போதெல்லாம் அது வெளிவந்து தனக்கினியாளையும் சேர்த்தே தீண்டி விடுகிறது. பின்பு அதன் தண்மை அறிந்து தவிப்பும் தயக்கமும் கொள்கிறான்.

இருந்தாலும் மீண்டும் மீண்டும் கொத்தடிமைகளின் தவிப்பு அவனை உலுக்குகிறது. அவர்களது அடைபடுதலைத் தனது சுதந்திரத்தின் ஆணவமாய் மனக் கிலேசம் கொள்கிறான். கொடுக்கினைச் செலுத்திவிட்ட தேனி இறந்துவிடுவது போல தொலைந்து போய்விட்டிருந்த உறக்கத்தை வெறுத்தவாறே வெறித்துப் படுத்திருந்தவன், நள்ளிரவின் குறியீட்டு முழக்கத்தினைக் கேட்டதும் தனக்கான அழைப்பென பித்துபிடித்து ஓடத் தயாராகிறான். அத்தனைப் பேரையும் உயிரைக் கொல்லும் மின்வேலியின் கட்டுகளிலிருந்து விடுவித்து ஓட வைத்திட வேண்டும் என்ற மூர்க்கம் மட்டுமே அவனுக்கு இயல்மூச்சினை மீட்டுத் தரும்போல இருந்தது. ஒலி கேட்டு உறங்கிப் போயிருந்த அவள் பதறி எழுந்து வேங்கையைத் தடுக்கும் மயிலாய் அவனைப் பிடித்து இழுத்து ஆசுவாசப்படுத்துகிறாள்.

எந்தச் சமரசமும் இல்லாமல் இயக்குநர் மானுட உணர்ச்சிகளை அண்மையில் முன்வைப்பதும் தொடர்ந்து அது போன்ற பல காட்சிகளின் ஒட்டுமொத்தத்தை பேசுவதும் சேர்ந்து வானைக் கிழிக்கக் கிளம்பிவிட்டிருக்கும் மலையின் முன் நிற்கும் அர்த்தமற்ற துரும்பாய் நம்மை எண்ணச் செய்து விடுகிறது. நிஜப் பிரம்மாண்டம்! நோய்மையுற்று ஒளியும் காற்றும் கூட கிடைக்காமல் தவிக்கும் மானுடத் தொகையின் பிணத்தனமான நடை, கைகளில் விலங்கிடாமல் கொத்தடிமைகளாக்கி சுற்றிலும் மின்விலங்கிட்டு வைக்கும் அரசியல் தேவை, அறச்சீற்றம் என்பது ஒன்றுமில்லாமல் போவதும் அங்கும் அது தனிக்கர்வத்துடன் முன்னிற்பதுமான வீரியம் என அற்ப மானுடத்தை பிரம்மாண்டமான உயிரினமாகவும் அற்பமான உயிரினமாகவும் ஒரேசமயத்தில் கண்கள் தரிசிப்பதும் இதில் நிகழ்கிறது.

ஒரு காட்சி.”சிறையிலிருக்கும் ஒருவன் எதை விரும்புவான்?” என்று தலைமை அலுவலர் கஜியிடம் கேட்கிறார்.

சிறிது யோசனைக்குப் பிறகு “சுதந்திரம்” என்று சொல்கிறான் பதிலாக.

“அட, நீங்கள் கவிஞராக இருப்பீர்கள் போலவே” என்று நையாண்டித்தனமாக சொல்லிவிட்டு “பெண்கள்” என்று தெரிவித்து சிறைவாசிகளிடம் சென்று ”பெண்களை எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்கிறார்.

அச்சொல்லே அந்த வறண்ட புண்களில் களிம்பு போல இருக்கிறது. எச்சில் சுரக்கிறது. வளைந்த முதுகினை நிமிர்த்தி, மெல்ல எழுந்து பெண்ணை நினைத்து ஏங்குகிறார்கள். கஜி பிரம்மிக்கிறான். பாலியல் தொழில் பெண்களிடம் சென்று சிறைக்காவலர்களுக்கென பெண்களை அனுப்பிட கேட்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி எத்தனையோ மனமொவ்வாத செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்ய வேண்டி இருந்தாலும் போரில் கலந்து கொண்டு இரத்தக் கறைபடிந்த கைகளுடன் முன்னேற வேண்டிய நிலை ஏற்படவில்லை என்பதே உள்ளாறுதலாக இருந்திருக்கும்.

ஒவ்வொரு முறையும் சிறப்புத் தொழிலாளர்களுக்கு நன்மை செய்து நம்பிக்கையைப் பெற முனைவதும் அலுவலக அமைப்பிடம் பாலமாக செயல்படுவதும் கஜிக்கு கடுமையான அலைக்கழிப்பைத் தருகின்றன. இருபுறமும் பொருந்தாத நிறமென தவிக்கிறான் மனதின் கேள்விகளாலும் வாழ்க்கை தேவையினாலும். எத்தனை முறை விளக்கிச் சொல்லியும் அவனையும் ஜப்பானிய கைக்கூலியாகவே பார்க்கும் சிறப்புப் பணியாளர்கள் தன் போக்கிற்கு தப்பி ஓடிட திட்டங்கள் தீட்டி அதற்கு வெற்றியும் பெறுகின்றனர். இழந்தவர்களின் கணக்கைச் சரிசெய்ய இருப்பவர்களைத் துன்புறுத்தத் தயாராகிறது அரசாங்கம்.

மெல்லிய எதிர்ப்பு தோன்றினால் கூட தண்டனைகளைப் பொதுவில் நிறைவேற்றும் வழக்கம் ஆதிக்கக்காரர்களுக்கு உண்டு. அது ஒரு எச்சரிக்கையின் விளம்பரம். சாட்டையடிக்குப் பயந்தும் எதிர்த்தும் ஓடியவர்களை தப்ப முனைந்தவர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது ஜப்பானிய இராணுவக் குழு. ஏற்கனவே தப்பியோடியவர்களுக்கும் தப்ப முயற்சித்தவர்களுக்கும் சேர்த்து இந்த தண்டனையை கணக்கு காட்டவும், இனி தப்ப விழைபவர்களுக்கு எச்சரிக்கை தரவும் இந்தக் கொலைத் தண்டனையை வாய்ப்பாகப் பார்க்கிறது இராணுவம். அதனால் நேரடியாக விசாரணைகளைத் தவிர்த்து விளையாட்டு மைதானம் போல சிறப்புப் பணியாளர்களை அமர வைத்து, வெந்நீரில் கடானாவைக் கழுவி, அதைக் கழுத்தை நோக்கி குறி வைத்து வெட்டிச் சிதையைக் குழிக்குள் கண்டம் துண்டமாய் தள்ளுகிறான் ஆணையை நிறைவேற்றுபவன்.

இடையில் ஒருவனது தலைகொய்ய பயிற்சி எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வேறு புதியவனுக்குத் தரப்படுகிறது. அவனோ அரைகுறையாய் வெட்டி அந்த உயிர் மனிதனை சிம்மத்தின் வாயில் மானென  துள்ளளிட்டு இறக்கத் தவிக்க விடுகிறான். மீண்டும் வாளில் அவசரமாய் நீரை ஊற்றி வெடுக்கென வெட்டித் தள்ளுகிறான் முன்னவன். இன்னும் இருவர் உயிரை பயனற்ற பிச்சை போல் வைத்துக் கொண்டிருக்க, சிறைவாசிகளின் கூட்டத்தில் எதிர்ப்பு சலசலப்பு உருவாகிறது. எத்தனை கொடூரனாயினும் மானுடத் திரளிணைந்து ஒற்றைக் குரலில் ‘கொலைகாரப் பாவி’ என்று அலறித் தொடர்கையில் கைகள் நடுக்குற்றுத் தான் போகிறான். இருவர் உயிருடன் மிச்சப்படுகிறார்கள்.

புத்துயிர்ப்பு நாவலில் நெஹ்லுதோவின் மனம் பாடுபட்டு சிறைக் கைதிகளைக் கண்டு கொள்ளும் துயரின் இன்னொரு படியாக்கம் போலத் தோன்றியது பல இடங்களில். இது போர்க் காலம் என்பதால் இன்னும் கையாலாகாமை அதிகமாகி குற்ற உணர்வு பேருரு எடுக்கிறது. பசிக்குப் பானம் திருடியவன், குளிருக்குப் போர்வை திருடியவன், எதிரி நாட்டில் போருக்குச் சம்பந்தமின்றி வேளாண்மை செய்தவன் எல்லோரும் அதி தீவிர குற்றவாளிகளாக நடத்தப்பட்டு வருவது எத்தனை துயர். எதிரி தேசத்து குடிமகன்களை மட்டுமன்றி, தன் அமைப்பில் இருக்கும் எவரோ ஒருவர் அமைப்பிற்குப் பொருத்தமின்றி இருந்தால் அவரையும் விழுங்கிச் செரிக்கும் பண்பு எதேச்சையதிகாரத்திற்கு உண்டு.

3

போர்களின் அபத்தத்தை உணர்ந்த பின்னும் தேசிய பிம்பங்களின் தேவை மானுடர்களையே எதிரியாக்கி வெறுப்பை உமிழ்ந்து கொள்ள மட்டுமே பயன்படும் என்பதைப் புரிந்த பின்னும் தனக்காக வாழும் உயிர் ஒன்றிருக்க அதற்காக வாழ இயலாமல் போருக்குச் செல்வதே தோல்வி தான். இதில் தனியே வெற்றி தோல்வி என்றெல்லாம் ஏதுமில்லை என்பதை கஜி உணர்ந்திருந்தான்.

முதல் படத்தின் முதல் காட்சியில் பனித்துமிகள் விழும் பின்னணியில் தயக்கத்தை அனுபவித்து பின் கடந்து தன் காதலை ஏற்பது நாயகனது துவக்கம் என்றிருந்தது. Road to Eternity என்ற இரண்டாவது படத்தின் முதல் காட்சியிலும் பனித்துமிகள் வீச யாருமற்ற வனாந்திரத்தில் இருக்கும் இராணுவ முகமையில் முதலாண்டு இராணுவப் பயிற்சி குழுவில் துயரத்துடன் தன் காதலை எண்ணித் தவிப்பதில் துவங்குகிறது. கொடுங்கனவுகள் நிஜத் தோற்றங்கள் கொண்டு முன்னிலாடும் அனுபவம். இன் கனவுகள் மொக்குளி போல் உடைந்து போகும் வலி!

தேசங்களுக்கு இரு வகை பரிணாம வளர்ச்சிகள் உள்ளன. திறந்த மனதுடன் கேள்விகளையும் புரிதல்களையும் அதன் முரணியக்கத் தன்மையுடன் புரிந்து கொண்டு அதில் சிறந்த முடிவுகளை நோக்கிப் பயணித்து அதிலிருந்து வாழ்வைப் புரிந்து கொள்வது. இன்னொன்று நமக்கு மரபு வழங்கிய தடங்களையே வெறித்தனமாகப் பற்றிக் கொண்டு முன்னகர்வது. ஜப்பானிய போர் வீரர்கள் தான் இணைந்திருக்கும் கூட்டமே மகத்தானது என்ற எண்ணத்துடன் எதிரி நாட்டவர்கள் கீழ்த்தரமானவர்கள் என்ற எண்ணத்தையும் இணைத்துக் கோசமிடும் கும்பல் அது. அக்கூட்டத்தில் அன்பும் நேர்மையும் சகத்தின் மீது அணைப்பும் கொள்ள நினைக்கும் ஒருவன் இயல்பாகவே பைத்தியக்காரனாக உருவகிக்கப்படுகிறான். அவனுக்கோ அவனைச் சுற்றியுள்ள உலகு பைத்தியக்கார விடுதியாகத் தெரிகிறது.

அரசின் சொற்களுக்கு குட்டிகரணங்கள் அடிக்கும் கீழ்ப்படிதல் இராணுவத்திற்கு இருப்பதாலேயே அது தன் சிப்பாய்களிடம் கடுமையான கீழ்ப்படிதல்களை எதிர்பார்க்கிறது. இந்தப் பகுதியில் முதல் பாதி இராணுவ முகமையில் இளம்நிலை பயிற்சிக் காலத்தில் இருப்பவர்கள் தம் நாட்டின் மூத்த சிப்பாய்களாலேயே அனுபவிக்கும் உடல்ரீதியான மன ரீதியான கொடுமைகளைக் காண முடிகிறது. அப்படி பார்க்கையில் ஜப்பான் தன்னைத் தானே வீழ்த்திக் கொண்ட நாடாக ஒரு கருத்தினை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

பாலை நிலத்தில் கண்ட கிணற்று நீராய் கஜியின் மனைவி முகாமில் அவனைக் காண வருகிறாள். அவனுடன் ஓரிரவு இருப்பதற்கான அனுமதி இராணுவ அதிகாரியிடமிருந்து கிடைக்கிறது. மின் வேலியின் இடையிருக்க முதல் பாகத்தில் சீனனைக் காதலித்த பாலியல் தொழிலாளியின் சாபம் போல இருக்கிறது கஜியின் இன்றைய நிலை. கிடைத்த நேரத்தை வாழ்துளிகளாய் எண்ணி அவளிடம் இருந்து மகிழ்கிறான். இரவில் அவளிடம் முழு நிர்வாணமாய் நிற்க வைத்து அவளைத் தன் விழிவழியே முழுதும் மனதில் நிறைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு சங்கடமான விண்ணப்பம் வைக்கிறான். அவள் அதை ஏற்றுச் செய்த பின் இன் துயர்நீர் விடுகிறாள். அக்காட்சி ஒருவேளை அவளை அவன் காணும் கடைசிக் காட்சியாகவும் இருக்கலாம். அவனிடமிருந்து அவளைப் பிரித்துவிட சூரியன் விழிக்கிறது.

கருத்தியலாகவும் மன ரீதியாகவும் அங்கு பொருந்தாதிருந்த சில நண்பர்களை கஜி பாதுகாக்கவும் செய்கிறான். ஒபரா என்ற பலவீனன் ஒவ்வொரு முறையும் இராணுவப் பயிற்சியில் துவள்கிறான். அது அந்த அணிக்கே தண்டனை பெற்றுத் தருவதால் அனைவரும் அவனை வெறுக்கின்றனர். முதுநிலை பயிற்சியாளர்கள் அவனைக் கடுமையாக எள்ளி நகையாடுகிறார்கள். மனம் துவண்டு தற்கொலை செய்து கொள்கிறான். இந்தப் பகுதி முழுவதுமே Stanley Kubrick-இன் Full Metal Jacket திரைப்படத்தில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது போல் பதிவாகி இருக்கிறது.

ஒபராவின் தற்கொலைக்குக் காரணமாக இரண்டாமாண்டு பயிற்சியாளரை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்த கோரிக்கை வைக்கிறான் கஜி. அதைத் தொடர்ந்து பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. இந்தத் தலைவலியைத் தவிர்க்க கஜியை ஒரு அணியுடன் போர்முற்றத்திற்கு ஒரு மாத காலம் அனுப்புகிறது நிர்வாகம். தன் மனம் எப்படி இருப்பினும் போரில் முன் வைத்த கால் வாழ்வா சாவா திசையில் தானே புகும். கடும் போர் நிகழ்கிறது. ரஷ்ய இராணுவம் பீரங்கிகளும் நவீன ஆயுதங்களும் கொண்டு போரிட்டுக் கொண்டிருக்கையில் ஜப்பானிய சிப்பாய்கள் பரிதாபகரமாக ரவைகளை மிச்சம் செய்து கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

போருக்குத் தயாராய் குழிகள் வெட்டி துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் நீண்ட இரவு பல சிப்பாய்களைப் பீதிக்குள்ளாக்குகிறது. அவர்களின் மனத்திடம் சோதிக்கப்பட்டு கடும் பலவீனத்திற்குள்ளாகிறது. ஒரு சிப்பாய் தன் குழியிலிருந்து எழுந்து வந்து கஜியிடம் வேறொரு குழி தரும்படி யாசிக்கிறான். காரணம் அவனது குழியில் இறந்த சடலத்தின் எலும்புகள் இருப்பதாக பயந்து சொல்கிறான். தாமே சவமாகப் போக உள்ளோம் என்பதை அறிந்து தான் இதைச் சொல்கிறானா? ஒருவனுக்குப் பைத்தியம் பிடித்து தன் நண்பர்களையே கொல்ல முனைகிறான்.

இத்தனைக் குழப்பங்களையும் கடந்து போரில் பரிதாபகரமான நிலையில் போரிட்டு உயிர்பிழைத்து எஞ்சுகிறார்கள் சிலர். கஜி தன் அணியில் இருந்த ஒருவன் உட்பட பலரையும் கொல்ல நேரிடுகிறது. “நான் கொடூரன்; ஆனால் இன்னும் இறக்கவில்லை” என்ற பதத்துடன் தன் பயணத்தைத் தொடர்கிறான்.

4

முன்றாவது மற்றும் இறுதி பாகமான A Soldier’s Prayer-இல் வன்பாற்கண் தளிர்த்த அன்பின் வடுவென அவளது நினைவுகள் மட்டுமே கஜியை வாழ்வை நோக்கி உந்திச் செலுத்துகிறது. போரில் தோல்வியுற்றாயிற்று. இனியேனும் தனக்கானவளை மட்டுமே நோக்கிச் செல்ல வேண்டும் என்று உறுதி பூணுகிறான். அவனோடு உயிர்பிழைத்த எச்சங்கள் சிலர் மட்டுமே. எஞ்சிய உயிரைக் காக்க மனமழைக்கும் திசையில் செல்ல வேண்டிய தேவை. அது தொடர்ந்து கடுமையான இயற்கைச் சீற்றங்களும் நச்சுயிரிகளும் உண்ணத்தகாத நிலவமைப்புகளையுமே முன் படைக்கிறது.

இடையில் தனக்கு முன்னரே அங்கு பயணித்திருந்த பலரையும் சடலமாகப் பார்க்கிறான். இன்னொரு இடத்தில் சில குடும்பங்கள் ஒன்றிணைந்து கிடைத்ததை வைத்து உயிர்பிழைத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் தங்களுடன் இணைந்து கொள்ளலாம் என அழைக்கிறான். அங்கும் அவனது உதவும் மனம் மிச்சமிருக்கவே செய்கிறது. உணவே இல்லாத போதும் கையளவு அரிசியினை உண்ணாமலும் யாருக்கும் தராமலும் வைத்திருக்கிறான். அது உயிர்பிரியும் தருவாயில் மட்டுமே உணவாக்கப்பட வேண்டும் என்பது அவன் எண்ணம். பூச்சிகளை உண்ணத் தொடங்குவதும் குழந்தை தொடங்கி முதியோர் வரை மெல்ல ஒவ்வொரு உயிர்களாக முடிவதும் மனப்பிசைவு.

உயிர்வாழ்வதன் தோற்றத்தையும் தேவையையும் பன்மடங்கு உருப்பெருக்கம் செய்து காட்டுகிறது இப்படைப்பு. வரலாற்றுப் பொய்கள்; நவீன பொய்கள் எல்லாம் ஒன்றேதான். அப்பொய்களிலிருந்து விதைத்து எழுப்பப்பட்ட போரின் அழித்தொழிப்புகளில் இருந்து தப்பி மெய்பொருள் இயற்கையின் பேருருவத்தின் முன் தவிக்கும் எறும்புகளாய் மனிதர்கள். பல நேரங்களில் ஒவ்வொருவருக்கும் கடும் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அவர்கள் கஜியினைத் தொடர்வதை நிறுத்தாமல் செல்கிறார்கள். அவனிடம் இருக்கும் எதோ ஒன்று அவனை தெய்வத்தின் அல்லது சாத்தானின் நிலையில் அவர்களை எண்ணச் செய்து விட்டிருக்கிறது.

நீண்ட பயணத்திற்குப் பிறகு ரஷ்யர்களிடம் சரணடைய நேரிடுகிறது. அங்கும் சில ஜப்பானிய புல்லுறுவிகள் இவனுக்கெதிராக தவறுதலாக மொழிபெயர்த்து இவனை பிரச்சனைக்குள்ளாக்குகிறார்கள். அங்கு எதிரி நாட்டு அதிகாரி ஒருவரிடமிருந்து வெளிப்படும் அன்பைப் பார்த்து விந்தையான மனநிலையை அடைகிறான் கஜி. எதிரியின் அன்பிற்கும் சக நாட்டவனின் துரோகத்திற்குமான அழைப்பு அவனை மிருகமாக்குகிறது. முதல் பாகத்தில் தன் அதிகாரிகளின் அடி உதைக்குப் பணியாமல் சிறைவாசிகளைக் காத்தவன் தன் கைகளால் பச்சைப் படுகொலை செய்யும் நிலையில் வந்து முடியும் பயணத்தைப் பார்த்து அவனே திகைக்கிறான்.

5

வெவ்வேறு திசைகளில் வீறிட்டு வீசும் ஓதங்களைத் தன்னுள் வைத்துக் கொண்டு மனிதன் வெடித்துச் சிதறாமல் ஒருவனென இருப்பதே அற்புதங்களுள் ஒன்று. அதிலும் மனத்துக்கண் திரண்டிருக்கும் புரிதலுக்கும் சுதந்திரத்தின் வேட்கைக்கும் எதிர்மாறாக சமூகம் முன்வைக்கும் குழப்பங்களுக்கும் தளைகளுக்கும் அவன் எதிர்நின்று இன்னும் ஒருவனாய் நிலைத்து எஞ்சுவது என்பதை எப்படி வியப்பின்றிச் சொல்வது?

இரண்டாம் உலகப் போரில் தோல்வியுற்றிருக்கிறது ஜப்பான். தன் தோல்வியை ஒரு நாடு செரித்து ஏற்றுக் கொள்ள எத்தனை ஆண்டுகளும் பிடிக்கலாம். முக்கியமாக தோல்விக்கான காரணங்களைத் தேட வேண்டியது அந்நாட்டின் வரலாற்றின் ஒரு அத்தியாவசியமான கடமையாகி விடுகிறது. அந்நோக்கில் கலைஞனின் பார்வை எத்தனை கருணையின்றி உண்மையை அகழ்ந்து விடுகிறது. தன்னையே அகழ்ந்து முதலில் ஆடியில் வைத்துப் பார்த்துக் கொள்கிறது. இந்த தீதும் பிறர்தர வரவில்லை என்று புரிந்து கொள்கிறது. காரணம், அயலானை வெறுத்ததே என்று முடிவு கட்டுகிறது. அப்படியான முடிவு தான் போர்களை நிறுத்திடும் திசை நோக்கிய அமைப்பிற்கு அடிக்கல் நாட்ட முடியும்.

வல்லூறுகளின் உகிர்கள் சதைத் துணுக்குகளையும் எலும்புகளையும் கடந்து வலியற்றவர்களின் நிழலையும் மீதம் வைக்காமல் பிராண்டுகின்ற சூழலின் அனலிலும் கூட தானறிந்த தன்மனம் சொல்லும் நேர்மையையும் அயலாரைப் ப்ரியம் கொள்ளலையும் முன்வைத்துச் செய்கின்ற செயலனைத்தும் சத்திய சோதனைகளே. எளியவன் நாயகனாவதற்கு அகம் வருத்தும் சாட்டை விளாறல்களை உறுத்துப் பார்த்து குற்ற உணர்ச்சி கொள்தலைத் தவிர வேறென்ன ஊக்கம் இருக்கவியலும்.

சுரங்கங்களின் ஆழத்தில் திகழும் திகைப்பூட்டும் இணையான இருளும் துயரும் போல ஒவ்வொருவரும் தன் ஆழங்களின் வெறுப்பிற்கும் வெறிக்கும் தம்மை ஒப்புக் கொடுத்துவிடுவதே சிறிய வன்சொல்லிடுதல் தொடங்கி உலகப் போர்கள் வரையிலான எந்தச் சண்டைக்கும் மூலதனம். எத்தனை இரத்தப் புனல்கள் நிறைந்தும் வழிந்தும் கரையுற்றிருப்பதை ஒவ்வொரு வரலாறும் பதிந்து வைத்திருக்கும் போதும் கோரத்தையே மீண்டும் மீண்டும் தேர்வு செய்ய மானுடம் தயாராக இருக்கிறது.  அன்பின்விழி இழந்தவர்களுக்கு, குருதிக்கும் கண்ணீருக்குமான நிறக்குருடு ஏற்பட்டு விடுகிறது.

ஒருவரென்றும் பிறரென்றும் பாகுபாடு அறிந்து மொழி இன அடிப்படையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதத்தை உணராத மனமே மானுட குழந்தைமை பண்பாகும். அது எல்லோருக்கும் ஆயுள் வரை நிலைக்கத் தகுதி கொண்ட பண்பு தான். ஆனால் அகவை முதிர்ந்து அறிதல் வளர வளர கிடைக்கும் சோர்வு தரும் அனுபவங்களும் அதைப் புரிந்து கடந்து செல்ல இடம் தராத சமூக கட்டமைப்புகளும் உள்ளிருக்கும் குழந்தைத்தனத்தின் மீது கீறல்கள் இட்டு அப்புண்களைப் போற்றிப் பாதுகாக்கவும் தொடங்கி விடுகிறது. இப்படி களங்கமற்ற சிசுவின் நினைவுப் படிவுகளில் தொடர்ந்து விழுந்த அன்னியச் சாட்டையடிகள் எவனையும் வன்மகனாக்கி விடுகின்றன. ஆனால் எப்போதும் கனியச் செய்யும் சுரங்கவைரமாய் மிளிரும் அன்பின் வடுக்களால் உலகம் நிறைந்திருப்பது அவனுக்கு மீண்டும் தென்னீரென மனம் கொள்ள தொடர்ந்து ஊக்கம் அளித்த வண்ணமே இருக்கிறது. நீண்டு அகண்ட இரவு விசும்பில் நிலவின் ஈர்ப்பு எத்தனை வியப்பிற்குரியது. அப்படி ஊக்கம் கொண்டு திரிந்த போது நசரேத் மகன் கண்டடைந்தது தான் ‘அயலானுக்காகத் தன்னை இழப்பதை விட மேலான அன்பு ஏதுமில்லை’ எனும் முத்துச் சொல்.