தன் ஒரே மகன் பெய்லியுடன் வாழ்ந்து வரும் பாட்டியம்மாளுக்கு ஊருக்குச் செல்ல விருப்பமே இல்லை. டென்னஸியில் இருக்கும் தனக்குத் தெரிந்த சிலரைச் சந்திக்கவே அவள் விரும்பினாள். பெய்லியின் மனதை மாற்றுவதற்காக எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தாள். நாற்காலியின் நுனியில் அமர்ந்து மேசையின் மேலே செய்தித்தாளில் விளையாட்டுப் பகுதியை மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் அருகே சென்று தன் இடுப்பின் மீது ஒரு கையை வைத்தபடி இன்னொரு கையில் வைத்திருந்த சுருட்டப்பட்டிருந்த செய்தித்தாளால் அவனுடைய வழுக்கைத் தலையின் மீது தட்டினாள்.
“இங்கே பார் பெய்லி. இதைப் படி. தன்னைத்தானே பொல்லாதவன் என்று அழைத்துக் கொள்கிற இவன் சிறையிலிருந்து தப்பித்து ஃப்ளோரிடாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான். அவன் என்னென்ன குற்றங்கள் செய்தான் என்பதைப் படித்துப் பார். ஒரு குற்றவாளி சுதந்திரமாக உலவும் எந்த இடத்துக்கும் என் குழந்தைகளை நான் கூட்டிக்கொண்டு போக மாட்டேன். அப்படிச் செய்தால் என்னுடைய மனசாட்சிக்கு நான் பதில் சொல்ல முடியாது”.
படித்துக் கொண்டிருந்த பெய்லி தலையைத் தூக்காததால் பாட்டியம்மாள் சக்கர நாற்காலியில் அப்படியே ஒரு சுற்று சுற்றி குழந்தைகளுடைய தாயின் முகத்தைப் பார்த்தாள். தளர்ந்த சட்டையை அணிந்திருந்த இளம்பெண்ணான அவளுடைய முகம் கள்ளங்கபடமற்று அகலமாக ஒரு முட்டைகோஸ் போலிருந்தது. அவள் முகத்தைச் சுற்றிக் கட்டியிருந்த பச்சைவண்ணக் கைக்குட்டையின் முனையில் இருந்த புள்ளிகள் முயலின் காதுகளைப் போல இருந்தன. சோஃபாவில் அமர்ந்து கைக்குழந்தைக்கு ஆப்ரிக்காட் பழத்தை ஊட்டிக் கொண்டிருந்த அவளிடம், “குழந்தைகள் இதற்கு முன்பே ஃப்ளோரிடாவிற்குச் சென்று இருக்கிறார்கள். நீங்கள் அவர்களை வேறு எங்காவது கூட்டிச்செல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் உலகின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்த்தால் தான் பரந்த மனப்பான்மையுடன் இருப்பார்கள். அவர்கள் இதுவரை கிழக்கு டென்னஸிக்குச் சென்றதே இல்லை” என்றாள். குழந்தைகளின் தாய் இதைக் கேட்டதாகவே தெரியவில்லை. ஆனால் கண்ணாடி அணிந்த பருத்த குட்டையான அவளுடைய எட்டு வயது மகன் ஜான் வெஸ்லி, “நீங்கள் ஃப்ளோரிடாவுக்குச் செல்ல விரும்பவில்லையென்றால் ஏன் வீட்டிலேயே இருக்கக் கூடாது?” என்று கேட்டான்.
அவனும் ஜூன் ஸ்டார் என்கிற சிறுமியும் தரை மேல் கிடந்த பத்திரிகையின் வேடிக்கை செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தார்கள். அதிலிருந்து தன் மஞ்சள் நிற முகத்தை உயர்த்தாது, “பாட்டியம்மாள் ஒரு நாளும் ராணி போல வீட்டில் இருக்க மாட்டார்கள்” என்றாள் ஜூன் ஸ்டார்.
“பொல்லாதவன் என்கிற இந்த ஆள் உன்னைப் பிடித்துக்கொண்டால் நீ என்ன செய்வாய்? என்று கேட்டாள் பாட்டியம்மாள்.
“நான் அவனுடைய முகத்தில் ஒரு குத்து விடுவேன்” என்றான் ஜான் வெஸ்லி. “பத்து இலட்ச ரூபாய் பணம் கொடுத்தாலும் பாட்டிமா வீட்டில் தங்க மாட்டாள். நாம் போகும் இடத்துக்கு எல்லாம் அவளும் வர வேண்டும். இல்லையெனில் தான் எதையோ பறிகொடுத்து விட்டது போல அவள் பயப்படுகிறாள்” என்றாள் ஜூன் ஸ்டார்.
“சரி மா. அடுத்த முறை உன்னுடைய முடியைச் சுருளாக்கி அழகு செய்ய விரும்பும்போது இதை நினைவில் வைத்துக் கொள்” என பாட்டியம்மாள் செல்ல மிரட்டலுடன் சொன்னதற்கு “என்னுடைய முடி இயல்பிலேயே சுருள் தன்மையுடையது” என்றாள் ஜூன் ஸ்டார்.
அடுத்த நாள் காலை முதலில் காரில் ஏறி அமர்ந்து பயணத்திற்குத் தயாராக இருந்தது பாட்டியம்மாள் தான். நீர் யானையின் தலையைப் போலிருந்த தன் கறுப்பு நிற பெரிய பயணப் பெட்டியை உடன் வைத்திருந்தாள். அதற்குக் கீழே ஒரு கூடையில் “பிட்டி சிங்” எனும் பெயர்கொண்ட அந்த வீட்டின் பூனையை மறைத்து வைத்திருந்தாள். அவர்கள் ஊரில் இல்லாத இந்த மூன்று நாட்களும் வீட்டில் பூனை தனித்து விடப்படுவதை அவள் விரும்பவில்லை. ஏனெனில் அவளைப் பிரிந்து வாடுவதோடில்லாமல் வீட்டின் எரிவாயு அடுப்பில் உரசி அதற்கு மூச்சுத்திணறல் ஏற்படுமோ என்று பயந்தாள். விடுதிக்கு ஒரு பூனையுடன் செல்வதை பெய்லி ஏற்கமாட்டான்.
காரின் பின்னிருக்கையில் ஜான் வெஸ்லிக்கும் ஜூன் ஸ்டாருக்கும் நடுவில் பாட்டியம்மாளும், முன்னிருக்கைகளில் பெய்லியும் அவன் மனைவியும் கைக்குழந்தையுடன் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் அட்லாண்டாவில் இருந்து காலை 8.45-க்கு கிளம்பிய போது காரிலிருந்த கிலோமீட்டர் பதிவு காட்டும் கருவி 55890 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளதைக் காட்டியது. பாட்டியம்மாள் இதைக் குறித்துக் கொண்டாள். ஏனெனில் அவர்கள் எத்தனை மைல்கள் பயணம் செய்து இருக்கிறார்கள் என்று திரும்பி வரும்போது சொல்வது சுவாரஸ்யமாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். நகரத்தின் எல்லையைக் கடப்பதற்கு அவர்களுக்கு இருபது நிமிடங்கள் ஆனது.
பாட்டியம்மாள் தன் வெள்ளை நிறப் பருத்திக் கையுறைகளைக் கழற்றி தன் கைப்பைக்குள் வைத்து வசதியாக அமர்ந்து கொண்டாள். குழந்தையின் தாய் அதே தளர்ந்த சட்டை, தலையின் மீது சுற்றப்பட்ட பச்சை நிறக் கைக்குட்டையுடனேயே இருந்தாள். பாட்டியம்மாள் கடற்படையினர் அணியும் சீருடையின் நீல நிறத்திலிருந்த வைக்கோலால் செய்யப்பட்ட தொப்பியை அணிந்து ஒரு கொத்து வெள்ளை வயலட் பூக்களை அதன் விளிம்பில் செருகி இருந்தாள். அவள் அணிந்திருந்த கடல் நீல ஆடையில் வெள்ளைப் புள்ளிகள் நெய்யப்பட்டு இருந்தன. வெண்ணிறத்திலிருந்த மென்மையான ஆர்கண்டி துணியாலான கழுத்துப் பட்டைகளின் முனைகள் அழகாக வெட்டப்பட்டு சரிகை வேலைப்பாட்டுடன் இருந்தன. கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியில் துணியால் செய்த ஊதா நிற மலர்களைப் பொருத்தி இருந்தாள். விபத்து நிகழ்ந்தால் நெடுஞ்சாலையில் இறந்து கிடக்கும் அவள் உடலைப் பார்க்கும் எவரும் அது ஒரு பெண் என்பதை உடனடியாக அறிவார்கள்.
அதிக வெயிலோ அதிக குளிரோ இல்லாது வண்டி ஓட்டுவதற்கு ஏற்ற ஒரு நல்ல தினமாக இது இருக்கப் போகிறது என்றவள், “நாம் ஒரு மணி நேரத்துக்கு 55 மைல்கள் எனும் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். விளம்பரப் பலகைகளின் பின்னாலும் பெரிய மரங்களுக்குப் பின்னாலும் ஒளிந்து கொண்டிருக்கக் கூடிய ரோந்துக் காவலர்களிடம் மாட்டிக் கொண்டால் நிதானிப்பதற்கு முன் உன்னைத் துரத்தத் துவங்குவார்கள்” என்றும் சொன்னாள்.
கல்மலை, நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் கூடவே வந்த நீல நிறப் பளிங்கு, மெல்லிய ஊதா நிறக் கோடுகளுடைய மிக அழகிய சிவப்பு களிமண்ணாலான ஆற்றங்கரைகள், நிலத்துக்குப் பட்டு ஜரிகை வைத்தது போல வரிசையாக இருந்த பலவிதமான பயிர்கள் என இயற்கைக் காட்சிகளைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்லிக் கொண்டே வந்தாள். மரங்கள் முழுதும் வெள்ளியும் வெண்மையும் சேர்த்த கதிரொளி அவற்றில் பட்டு மினுங்கின. குழந்தைகள் சித்திரக்கதை இதழ்களை வாசித்துக் கொண்டு வந்தனர். அவர்களுடைய தாய் மறுபடியும் உறக்கத்துக்குள் ஆழ்ந்திருந்தாள்.
“நாம் ஜார்ஜியாவை வேகமாகக் கடந்து சென்றுவிடலாம். ஏனெனில் அங்கு பார்ப்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை” என்றான் ஜான் வெஸ்லி.
“நான் ஒரு சிறுவனாக இருந்தால் என்னுடைய சொந்த ஊரைப் பற்றி இப்படி பேச மாட்டேன். டென்னஸியில் மலைகளும் ஜார்ஜியாவில் குன்றுகளும் உள்ளன. அவ்வளவு தான் வேறுபாடு” என்றாள் பாட்டியம்மாள்.
“டென்னஸி ஒரு குப்பை மேடு”
“ஜார்ஜியாவும் ஒரு மோசமான நகரம் தான்” என்றான் ஜான் வெஸ்லி.
“சரியாகச் சொன்னாய்” என்றாள் ஜூன் ஸ்டார்.
மெல்லிய நரம்புகள் தெரிந்த தன் விரல்களை மடக்கியபடி, “எங்கள் காலத்தில் எல்லாம் குழந்தைகள் தங்களுடைய சொந்த ஊர், பெற்றோர் மற்றும் மற்ற எல்லாவற்றைப் பற்றியும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள். அப்போது மக்கள் சரியாக இருந்தார்கள். ஓ! அந்த அழகிய கறுப்பினக் குழந்தையைப் பாருங்கள்” என்று வழியில் பார்த்த குடிசையின் கதவருகே நின்ற ஒரு குழந்தையை நோக்கித் தன்னுடைய விரல்களை நீட்டினாள்.
“அது ஒரு புகைப்படக் காட்சி போல இருக்கிறது தானே?” என்று அவள் கேட்டாள். அவர்கள் அனைவரும் திரும்பி பின்புற ஜன்னல் வழியாக அந்தக் குழந்தையைப் பார்த்தார்கள். அச்சிறுவன் கையசைத்தான்.
“அவன் ஆடையே அணியவில்லை” என்றாள் ஜூன் ஸ்டார்.
“ஒரு வேளை அவனிடம் ஆடை எதுவும் இருந்திருக்காது. இளம் கருப்பர்களிடம் நம்மிடம் இருப்பதைப் போன்ற வசதிகள் இருக்காது” என்று விளக்கிய பாட்டியம்மாள், “பிறகொரு சமயம், முடிந்தால் நான் இந்தக் குழந்தையை ஓர் ஓவியமாகத் தீட்டுவேன்” என்றாள்.
குழந்தைகள் சித்திரக்கதைப் புத்தகங்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள். பாட்டியம்மாள் கைக்குழந்தையைத் தான் வைத்துக் கொள்வதாகக் கேட்கவும் குழந்தையின் தாய் அதை முன் இருக்கைக்கு மேலே நீட்டினாள். பாட்டியம்மாள் குழந்தையைத் தன்னுடைய மடியில் வைத்து துள்ளலாக ஆட்டிக்கொண்டே கார் கடந்து போய்க் கொண்டிருக்கின்ற காட்சிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தாள். விழிகளை உருட்டி, வாயைக் குவித்து விளையாட்டு காட்டியபடி தன்னுடைய முகத்தை குழந்தையின் மெத்தென்ற சாந்தமான முகத்துக்குள் புதைத்துக் கொண்டாள். அவ்வப்போது அவன் அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான். நடுவே ஐந்தாறு கல்லறைகள் வேலியிடப்பட்டு தீவு போலக் காட்சியளித்த பெரிய பருத்தி வயலொன்றை அவர்கள் கடந்தார்கள். பாட்டியம்மாள், “அந்த இடுகாட்டைப் பார்த்தீர்களா! பழைய பரம்பரை இடுகாடு. நமது பண்ணைக்குச் சொந்தமானது” என்றாள்.
“பண்ணைத் தோட்டம் இப்போது எங்கே இருக்கிறது?” என்று கேட்டான் ஜான் வெஸ்லி.
“காற்றோடு போனது. ஹாஹா!” என்று சிரித்தாள் பாட்டியம்மாள்.
தாங்கள் கொண்டு வந்திருந்த எல்லா சித்திரக்கதைப் புத்தகங்களையும் குழந்தைகள் படித்து முடித்த பின்னர் அவர்கள் மதிய உணவைப் பிரித்து உண்டனர். பாட்டியம்மாள் நிலக்கடலையும் வெண்ணையும் சேர்த்த ஒரு ரொட்டியையும் ஆலிவ் பழத்தையும் உண்டாள். சாப்பிட்டு முடித்ததும் காலியான அட்டைப் பெட்டிகளையும் கை துடைக்கும் காகிதத் துண்டுகளையும் குழந்தைகள் ஜன்னலுக்கு வெளியே வீசப் போனபோது வீசுவதைத் தடுத்து விட்டாள் பாட்டியம்மாள். பிறகு அவர்கள் ஒரு விளையாட்டைத் துவங்கினர். வானத்தில் ஒரு மேகத்தைத் தேர்வு செய்து மற்ற இருவரையும் அது என்ன வடிவாக இருக்கலாம் என்று யூகிக்கச் சொல்வது தான் அது. ஜான் வெஸ்லி பசுவின் உருவில் இருந்த ஒரு மேகத்தைத் தேர்ந்தான். ஜூன் ஸ்டார் அதைப் பசுவாக யூகித்தாள். ஜான் வெஸ்லி “இல்லை. அது ஒரு தானியங்கி வாகனம்”என்றான். ஜூன் ஸ்டார், “நீ நியாயமாக விளையாடவில்லை” என்றாள். அவர்கள் இருவரும் பாட்டியம்மாளைத் தாண்டி ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளத் துவங்கினர்.
அவர்கள் அமைதியாக இருந்தால் தான் ஒரு கதை சொல்வதாகச் சொன்ன பாட்டியம்மாள் அடுத்த நொடியே தன் கண்களை உருட்டி தலையை அசைத்து நாடக பாணியில் பேச ஆரம்பித்தாள்.
திருமணமாகாத ஒரு இளம் பெண்ணாக அவள் முன்னொரு காலத்தில் இருந்தபோது ஜார்ஜியாவின், ஜாஸ்பரைச் சேர்ந்த “எட்கர் அட்கிண்ஸ் டீகார்டன்” என்கிற ஒருவர் அவளை நேசித்தார் என்று சொன்னாள். அவர் நல்ல தோற்றமும் நற்பண்புகளும் உடையவர் என்றும், ஒவ்வொரு சனிக்கிழமை மதியமும் ஒரு தர்பூசணி பழத்தில் தன் பெயரின் முதல் எழுத்துக்களான இ.ஏ.டி. யை செதுக்கிக் கொண்டு வந்து அவளுக்குத் தந்ததாகவும் சொன்னாள். ஒரு சனிக்கிழமை திரு. டீகார்டன் வழக்கம் போல தர்பூசணியைக் கொண்டு வந்தபோது வீட்டில் யாரும் இல்லை. அவர் அதனை முன் தாழ்வாரத்தில் வைத்துவிட்டு தன்னுடைய சிறிய காரில் ஜாஸ்பருக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். ஆனால் அன்றைக்கு அவளுக்கு தர்பூசணி கிடைக்கவில்லை. ஏனெனில் ஒரு கறுப்பினச் சிறுவன் அதிலிருந்த இ.ஏ. டி. என்ற இனிஷியல்களைப் பார்த்து அது “ஈட். அதாவது சாப்பிடு” என்பதைக் குறிக்கிறது என்று நினைத்துச் சாப்பிட்டு விட்டான் என்றாள். இதைக் கேட்ட ஜான் வெஸ்லி அடக்கமுடியாமல் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தான். ஆனால் ஜூன் ஸ்டாருக்கு அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அவள், “நானாக இருந்தால் வெறும் தர்பூசணியை மட்டும் சனிக்கிழமைகளில் கொண்டு வருகிற ஓர் ஆணைத் திருமணம் செய்து கொண்டிருக்கவே மாட்டேன்” என்றாள்.
நற்பண்புகள் கொண்ட டீகார்டனை தான் திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் கொக்கோ கோலா முதன்முதலில் பங்குகள் வெளியிட்டபோது அதை வாங்கிய பெரிய செல்வந்தரான அவர் சில வருடங்களுக்கு முன்பு தான் இறந்தார் என்றும் சொன்னாள்.
பயணத்தின் இடையில் அனலில் வாட்டப்பட்ட ரொட்டியை சாப்பிடுவதற்காக “தி டவரில்” காரை நிறுத்தினார்கள். “டிமோத்திக்கு” வெளியே மரங்களற்ற ஒரு நிலப் பரப்பில் காரைச் சுவராலும் மரத்தாலும் உருவாக்கப்பட்டிருந்த தி டவரின் ஒரு பகுதியில் பெட்ரோல் விற்பனைக் கூடமும் இன்னொரு பகுதியில் நடன அரங்கமும் இருந்தது. ரெட் சாம் பட்ஸ் என்கிற ஒரு கொழுத்த மனிதன் அதை நடத்தி வந்தான். அந்தக் கட்டிடத்தின் மீது ஆங்காங்கே சில இடங்களிலும் நெடுஞ்சாலையின் பல மைல்களுக்கு அப்பாலும் காணப்பட்ட விளம்பரப் பலகைகளில் ‘ரெட் சாமின் வாட்டிய இறைச்சியைச் சாப்பிட்டுப் பாருங்கள். அதைப் போல பிரபலமானது வேறெதுவும் இல்லை. இன்முக கொழுத்த ரெட் சாம்! அனுபவம் மிக்கவன்! ரெட் சாம் உங்கள் வீட்டுப் பிள்ளை!’ எனும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
ரெட் சாம் தி டவருக்கு வெளியே ஒரு ட்ரக்குக்கு கீழ் தரையில் தலை வைத்து படுத்துக்கொண்டு இருந்தான். சீன பெர்ரி மரத்துடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ஓரடி உயரமுள்ள சாம்பல் நிறக் குரங்கு ஒன்று அவன் அருகே கூச்சலிட்டுக் கொண்டு இருந்தது. காரிலிருந்து வெளியே குதித்த குழந்தைகள் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்ட குரங்கு மரத்தின் மீதேறி உச்சிக் கிளைக்குத் தாவியது.
தி டவர், பார்ப்பதற்கு ஒரு நீண்ட இருண்ட அறை போல இருந்தது. ஒரு புறம் பணம் செலுத்தும் கவுண்ட்டரும் மேசைகளும் இருந்தன. இன்னொருபுறம் நடனமாடும் இடம் இருந்தது. காசு போட்டுப் பாட்டு கேட்கும் “நிக்கலோடியன்” கருவி வைக்கப்பட்டிருந்த பெரிய மேஜையின் அருகே அவர்கள் அனைவரும் அமர்ந்தார்கள். அப்போது அவர்களுக்கு என்ன உணவு தேவை என்பதைக் குறித்துக் கொள்வதற்காக ரெட்சாமின் மனைவி அங்கு வந்தாள். உயரமாக பழுப்பு நிறத்துடன் இருந்த அவள் தலைமுடியும் கண்களும் அவள் தோலின் நிறத்தை விட வெளிர் நிறத்துடன் இருந்தது. குழந்தைகளின் தாய் அந்தக் கருவியில் ஒரு அமெரிக்க நாணயத்தை இட்டு ‘தி டென்னஸி வால்ட்ஸ்’ என்ற பாடலை ஒலிக்க விட்டாள். பாட்டியம்மாள் அந்த இசை எப்போதுமே அவளை நடனமாடத் தூண்டும் என்றாள். அவள் பெய்லியைப் பார்த்து “நீ நடனமாட விரும்புகிறாயா?” என்று கேட்டாள். ஆனால் அவன் பதில் சொல்லாது வெறுமனே முறைத்துப் பார்த்தான். அவளைப் போன்ற மகிழ்ச்சியான மனநிலை பெய்லிக்கு இல்லை. பயணங்கள் அவனைப் பதட்டமடைய வைத்தன. பாட்டியம்மாளின் கண்கள் மிகுந்த ஒளியுடன் இருந்தன. அவள் தன்னுடைய தலையை இடம் வலமாக அசைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தபடியே நடனமாடுவது போன்று பாசாங்கு செய்தாள். ஜூன் ஸ்டார் ஒரு துள்ளல் வகைப் பாடலை ஒலிக்கச் செய்யக் கேட்டதும் குழந்தைகளின் தாய் இன்னொரு நாணயத்தை அந்தக் கருவியில் இட்டு வேகமான அசைவுகளுடைய ஒரு துள்ளல் பாடலை இசைக்கச் செய்தாள். ஜூன் ஸ்டார் நடனமாடும் இடத்துக்குச் சென்று தன்னுடைய வழக்கமான டாப் வகை நடனத்தை ஆடினாள்.
“எவ்வளவு அழகாய் இருக்கிறாய்! நீ என்னுடைய மகளாக வந்து விடுகிறாயா?” ரெட் சாமின் மனைவி கவுண்ட்டரில் சாய்ந்தபடி கேட்டாள்.
“இல்லை. நிச்சயமாக இல்லை. ஒரு மில்லியன் பணம் தந்தாலும் இதைப் போல ஒரு மோசமான இடத்தில் நான் இருக்க மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய மேஜைக்குத் திரும்ப ஓடினாள் ஜூன் ஸ்டார்.
“அவள் அழகாக இருக்கிறாள் இல்லையா?” என்று வாயை நளினமாகக் குவித்து மீண்டும் சொன்னாள் ரெட் சாமின் மனைவி.
“உனக்கு வெட்கமாக இல்லையா”? என்று ஜூன் ஸ்டாரைச் சீறிக் கடிந்தாள் பாட்டியம்மாள்.
உள்ளே நுழைந்த ரெட் சாம் தன் மனைவியைப் பார்த்து கவுண்ட்டரில் சோம்பேறித்தனமாக நின்று கொண்டிராமல் அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை வேகமாக தரச் சொன்னான். அவன் அணிந்திருந்த காக்கி நிற ட்ரவுசர்கள் அவனுடைய இடுப்பு வரை மட்டுமே இருந்தன. அவனுடைய தொப்பை ஒரு உணவு மூட்டையைப் போல அவன் சட்டையின் கீழே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. அவன் அருகே இருந்த ஒரு மேசையில் வந்து அமர்ந்து பெருமூச்சுடன் “யோடல்” வகை இசையொலியை வெளிப்படுத்தினான்.
“வெற்றி பெறவே முடியாது” என்றபடி வியர்த்திருந்த தன் சிவந்த முகத்தை ஒரு சாம்பல் நிறக் கைக்குட்டையால் துடைத்தான். “இப்போதெல்லாம் நாம் யாரை நம்புவது என்றே தெரியவில்லை. உண்மை தானே?” என்றான்.
“நிச்சயமாக மக்கள் முன்பிருந்ததைப் போல அவ்வளவு நல்லவர்கள் இல்லை” என்றாள் பாட்டியம்மாள். “ஒரு பழைய தேய்மானமான க்ரிஸ்லர் காரை ஓட்டிக்கொண்டு சென்ற வாரம் இங்கு இரண்டு பேர் வந்தனர். பார்ப்பதற்கு நல்லவர்கள் போலத் தெரிந்தார்கள். மர வெட்டிகளான அவர்கள் வாங்கிய பெட்ரோலுக்கு நான் ஏன் பணமே பெற்றுக் கொள்ளவில்லை, தெரியுமா?”
“ஏனெனில் நீ ஒரு நல்ல மனிதன்” என்று உடனடியாகச் சொன்னாள் பாட்டியம்மாள்.
“ஆமாம். அப்படித்தான் நினைக்கிறேன்” அந்த பதிலில் மெய் மறந்தவன் போல் சொன்னான் ரெட் சாம்.
அவனுடைய மனைவி அவர்கள் கேட்டிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தாள். தாம்பாளம் இல்லாமல் ஐந்து தட்டுகளையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்தாள். ஒவ்வொரு கையிலும் இரண்டு தட்டுகளை ஏந்தி மற்றொன்றை தன்னுடைய கையின் மேற்புறத்திலும் வைத்து சமாளித்தாள்.
“கடவுளின் இந்தப் பசுமையான உலகில் நீங்கள் நம்பக்கூடிய ஒரு ஆன்மாவும் இல்லை. நான் யாரையும் நம்புவதில்லை”என்று அவள் ரெட் சாமைப் பார்த்தபடி சொன்னாள்.
“சிறையிலிருந்து தப்பிவிட்ட பொல்லாதவன் என்கிற அந்தக் குற்றவாளியைப் பற்றிப் படித்தீர்களா?” என்று பாட்டி கேட்டாள்.
“இந்த இடத்தை அவன் தாக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்” என்றாள் ரெட் சாமின் மனைவி. தொடர்ந்து, “இந்த உணவகம் இங்கே இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டால் அவன் நேராக இங்கு வரலாம் என்பதோ, ஒருவேளை பண ரிஜிஸ்டரில் இரண்டு சென்ட் இருப்பதை அறிந்தாலும் அவன்…….” என்றவளை இடைமறித்து, “போதும். போய் இவர்களுக்கு கொக்கோ கோலா கொண்டு வா” என்று அவளை உள்ளே அனுப்பி வைத்தான் ரெட் சாம்.
“ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடிப்பது கடினம். எல்லாமே மோசமாகிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் கதவைத் தாழிடாமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்ற நாட்கள் எனக்கு நினைவிருக்கிறது. இப்போதெல்லாம் அப்படியில்லை”.
அவனும் பாட்டியம்மாளும் கடந்த காலத்தின் சிறப்பான நாட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் தன்னைப் பொறுத்தவரை இப்போதிருக்கும் மோசமான நிலைக்கு ஐரோப்பாவைத் தான் முழுமையாகக் குற்றம் சுமத்த வேண்டும் என்றாள். ஐரோப்பா நடந்துகொள்வதைப் பார்த்தால் நாம் எல்லோரும் பணத்தால் செய்யப்பட்டவர்கள் போல இருக்கிறது என்றாள். ரெட் சாம் அவள் சொல்வது முற்றிலும் சரி என்றும் அதைப் பற்றிப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும் சொன்னான். பிரகாசமான சூரிய ஒளியில் வெளியே ஓடிய குழந்தைகள் சரிகை போல ஒளிரும் அந்தச் சீன பெர்ரி மரத்தின் மீது இருந்த குரங்கைப் பார்த்தார்கள். அது தன் மீதிருந்த பூச்சிகளைப் பிடிப்பதில் மும்முரமாக இருந்தது. ஒரு சுவையான தின்பண்டம் போல, கவனமாக தன் பற்களின் இடையில் வைத்து பூச்சிகள் ஒவ்வொன்றையும் கடித்துக் கொண்டிருந்தது.
அவர்கள் மறுபடி அந்த மதிய வெய்யிலில் பயணத்தைத் துவக்கினார்கள். பாட்டியம்மாள் சிறிய பூனைத் தூக்கம் போட்டு சில நிமிடங்களுக்கு ஒரு முறை தன்னுடைய குறட்டையைத் தானே கேட்டு விழிப்பதும் மறுபடி உறங்குவதுமாக இருந்தாள். “டூம்ப்ஸ்பரோக்கு” வெளியே அவள் உறக்கம் கலைந்து முழுமையாகக் கண் விழித்தாள். தான் சிறு பெண்ணாக இருந்தபோது அந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்த தோட்டங்களைச் சென்று பார்த்ததை நினைவுகூர்ந்தாள். அந்த வீட்டின் முகப்பில் ஆறு வெள்ளைத் தூண்கள் முன்புறம் இருந்ததாகவும், ஓக் மரங்கள் நிறைந்த அழகிய சாலை அந்த முகப்பு வரை நீண்டிருந்ததாகவும், தோட்டத்தில் உலா போன பிறகு கணவனுடன் வந்து அமர்வதற்கு வசதியாக வீட்டின் முன்பக்கம் இரு புறமும் இரண்டு சிறிய மரத்தாலான கொடிப் பந்தல்கள் இருந்ததாகவும் சொன்னாள். அந்த வீட்டுக்குப் போவதற்கான வழி பாட்டியம்மாளுக்கு நன்றாக நினைவிருந்தது. பெய்லி ஒரு பழைய வீட்டைப் பார்ப்பதற்காகத் தன் நேரத்தைச் செலவழிக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும். அவள் எவ்வளவுக்கெவ்வளவு அந்த வீட்டைப் பற்றிப் பேசினாளோ அந்த அளவுக்கு அதை மீண்டும் பார்க்க விரும்பினாள். அந்த இரண்டு சிறிய கொடிப்பந்தல்கள் அங்கே இருக்கின்றனவா எனக் கண்டறிய விரும்பினாள். “அந்த வீட்டில் ஒரு ரகசியக் கதவு இருந்தது” என்று தந்திரமாகச் சொன்னாள். “அந்தக் குடும்பத்தின் எல்லா செல்வமும் அதில்தான் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்றும் புகழ்பெற்ற இராணுவத் தளபதி ஷெர்மன் வந்த போதும் அது கண்டுபிடிக்கப்படவேயில்லை என்றும் கூட ஒரு கதை இருக்கிறது”. உண்மையை முழுதும் சொல்லாமல் விட்டவள் ‘சொல்லி இருக்கலாமே’ என்றும் நினைத்துக் கொண்டாள்.
“ஹேய்! என்று உற்சாகமாக கத்திய ஜான் வெஸ்லி, “நாம் அங்கு போய் பார்த்து எல்லா மரச் சட்டங்களிலும் துளைகளிட்டு அந்த ரகசிய அறையைக் கண்டு பிடிப்போம்! அங்கே யார் வாழ்கிறார்கள்? அந்த வீட்டை அடைய நாம் இப்போது சாலையின் எந்தப் பக்கம் திரும்ப வேண்டும்? அப்பா அந்தப் பக்கம் திரும்பலாமா?” என்று வேகமாகப் படபடத்தான்.
“நாம் இதுவரை ரகசியக் கதவு உள்ள ஒரு வீட்டைப் பார்த்ததே இல்லை. அந்த ரகசிய அறை உள்ள வீட்டுக்கு நாம் போவோம்! அப்பா, நாம் அந்த ரகசிய அறை வீட்டுக்கு இப்போது போவோம் தானே?” என்று கிறீச்சிட்டாள் ஜூன் ஸ்டார்.
“அது இங்கிருந்து அதிக தொலைவில் இல்லை. இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகாது” என்றாள் பாட்டியம்மாள்.
பெய்லி நேராகப் பார்த்தபடி இருந்தான். அவனுடைய தாடை குதிரை லாடம் போல இறுகியிருந்தது. “முடியாது” என்றான் அவன்.
அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டதும் ரகசிய அறை இருந்த அந்த வீட்டைப் பார்ப்பதற்காக ஆவலாக இருந்த குழந்தைகள் கத்திக் கூச்சலிட்டார்கள். ஜான் வெஸ்லி முன்னிருக்கையின் பின்புறத்தைக் காலால் எட்டி உதைத்தான். ஜூன் ஸ்டார் தன்னுடைய அம்மாவின் தோளில் தொங்கியபடி, தங்களுடைய விடுமுறை நாட்களில் கூட தங்களுக்கு எந்தவிதமான வேடிக்கையும் இல்லை என்றும், தாங்கள் விரும்பிய எதையும் அவர்களால் செய்ய முடிந்ததே இல்லை என்றும் வேண்டுமென்றே அவளுடைய காதில் சிணுங்கி ஊளையிட்டாள். இந்தச் சத்தத்தால் குழந்தை அலற ஆரம்பித்தது. பெய்லி தன் சிறுநீரகத்தில் அதிர்வுகளை உணரும் வண்ணம் ஜான் வெஸ்லி இருக்கையின் பின்பக்கம் பலமாக உதைத்தான்.
“சரி” என்று சத்தமிட்டபடி சாலையின் ஒரு புறத்தில் காரை நிறுத்தி “நீங்கள் எல்லோரும் வாயை மூடுகிறீர்களா? ஒரு நொடியாவது நீங்கள் எல்லோரும் வாயை மூடுகிறீர்களா? நீங்கள் வாயை மூடாவிட்டால் நாம் எங்கேயும் செல்ல மாட்டோம்” என்றான் பெய்லி.
“அங்கு சென்று பார்ப்பது குழந்தைகளின் அறிவுத் திறனை மிகவும் மேம்படுத்தும்” என்று பாட்டியம்மாள் முணுமுணுத்தாள்.
“சரி. ஆனால் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற ஒன்றிற்காக நாம் வண்டியை நிறுத்துவது இது ஒரு முறை தான். இந்த ஒரே ஒரு முறைதான்” என்றான் பெய்லி.
“நீ திரும்ப வேண்டிய மண் சாலை இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கிறது. நாம் அதைக் கடந்தபோது நான் குறித்துக் கொண்டேன்” என்றாள் பாட்டியம்மாள்.
“மண் சாலை” என்று புலம்பினான் பெய்லி.
அவர்கள் வண்டியைத் திருப்பி மண் சாலையை நோக்கிப் பயணித்த போது பாட்டியம்மாள் அந்த வீட்டின் மற்ற விஷயங்களைப் பற்றி நினைவுகூர்ந்தாள். வீட்டின் முன் கதவருகே இருந்த அழகிய கண்ணாடி, வரவேற்பறையில் இருந்த மெழுகு விளக்கைப் பற்றியெல்லாம் சிலாகித்தாள். ஜான் வெஸ்லி, ரகசிய அறை ஒருவேளை கணப்பு அடுப்பு இருக்கும் இடத்திற்கு இருக்கலாம் என்றான்.
“அங்கு யார் வாழ்கிறார்கள் என்றே நமக்குத் தெரியாது. எனவே நீ அந்த வீட்டுக்குள் நுழைய முடியாது” என்றான் பெய்லி.
வீட்டின் முன்புறம் நீங்கள் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கையில் நான் வேகமாக ஓடிச் சென்று வீட்டின் பின்பக்கம் இருக்கக் கூடிய ஒரு ஜன்னலின் வழியே உள்ளே நுழைந்து விடுவேன்” என்றான் ஜான் வெஸ்லி.
“இல்லை. நாம் எல்லோரும் காரிலேயே இருப்போம்” என்றாள் அவனுடைய தாய். அவர்கள் அந்த மண் சாலையை நோக்கித் திரும்பினார்கள். கார் ஒரு வெளிர் சிகப்பு நிற புழுதிச் சுழலிடையே கரடுமுரடான பாதையில் முன்னோக்கிச் சென்றது. பாட்டியம்மாள் முன்பு அங்கு சரியான சாலைகள் இல்லாதிருந்ததையும் நகரத்தை அடைய ஒரு நாளில் முப்பது மைல் பயணம் செய்ய வேண்டி இருந்ததையும் நினைவு கூர்ந்தாள். மண் சாலை மலையேறுவது போல் மேடாகவும், ஆங்காங்கே மண் அரித்தும், தடுப்புச் சுவர்களுடன் கூடிய அபாயகரமான வளைவுகளுடனும் இருந்தது. திடீரென அவர்கள் குன்றின் மீது இருப்பது போலவும் கீழே பல மைல்களுக்கு மரங்களின் நீல உச்சிகளின் காட்சியும், அடுத்த நிமிடமே அவர்கள் புழுதி படிந்த மரங்கள் கீழ்நோக்கும் செந்நிற தாழ்வான பகுதியில் இருப்பதாகவும் மாறி மாறித் தோற்றமளித்தது.
“இன்னும் ஒரு நிமிடத்திற்குள் நாம் அந்த இடத்தை அடைய வேண்டும். இல்லை என்றால், நான் வண்டியைத் திருப்பி விடுவேன்” என்றான் பெய்லி.
அந்தச் சாலையில் பல மாதங்களுக்கு யாருமே பயணித்ததாகத் தெரியவில்லை.
“அது இன்னும் அதிக தொலைவில் இல்லை” என்று சொன்னாள் பாட்டியம்மாள். அப்படிச் சொல்லும் போது ஒரு பயங்கரமான சிந்தனை அவளுக்குத் தோன்றியது. அந்தச் சிந்தனை ஏற்படுத்திய தர்மசங்கடத்தால் அவள் முகம் சிவந்து விழிகள் விரிய, பதற்றத்தில் துள்ளிக் குதித்த கால்களால் மூலையில் வைத்திருந்த தன் சிறு பயணப் பெட்டியை இடறிவிட்டாள். பயணப்பெட்டி நகர்ந்த கணத்தில் அதன் மீது வைக்கப்பட்டிருந்த செய்தித்தாள் உறுமலுடன் மேலெழுந்து அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த “பிட்டி சிங்க்” பூனை அதிர்ந்து பெய்லியின் தோளின் மீது பாய்ந்தது. காரை ஓட்டிக் கொண்டிருந்த பெய்லி தடுமாற, குழந்தைகள் காரின் மேல் தளத்துக்குத் தூக்கி வீசப்பட்டார்கள். பெய்லியின் மனைவி குழந்தையோடு காருக்கு வெளியே நிலத்தின் மீது விழுந்தாள். பாட்டியம்மாள் முன்னிருக்கைக்குத் தூக்கி வீசப்பட்டாள். கார் ஒருமுறை உருண்டு சாலையின் இடது புறம் சாய்ந்தது. சாம்பல் நிற வரிகளுடன் பரந்த வெள்ளை முகமும் ஆரஞ்சு நிற மூக்கும் கொண்ட அந்தப் பூனை ஒரு கம்பளிப் பூச்சியைப் போல பெய்லியின் கழுத்தில் ஒட்டிக் கொண்டிருக்க அவன் ஓட்டுனர் இருக்கையில் அப்படியே அமர்ந்திருந்தான்.
தங்கள் கைகளையும் கால்களையும் அசைக்க முடிவதைக் கண்ட குழந்தைகள் உடனே காரைப் பிடித்து மேலே ஏறி “நாம் ஒரு விபத்தைச் சந்தித்து இருக்கிறோம்!” என்று கூச்சலிட்டனர். முன் இருக்கைக்குத் தூக்கி வீசப்பட்ட பாட்டியம்மாள் டேஷ் போர்டுக்குக் கீழே சுருண்டு கிடந்தாள். தனக்குக் காயம் ஏற்பட்டிருந்தால் நல்லது. அப்போது தான் பெய்லியின் கோபம் உடனடியாகத் தன் மீது திரும்பாது என்று நினைத்தாள். விபத்து நிகழ்வதற்கு முன்பாக அவளுக்கு ஏற்பட்ட பயங்கரமான சிந்தனை எதுவென்றால், அவ்வளவு தெளிவாக அவளுக்கு நினைவிருந்த அந்த வீடு, ஜார்ஜியாவில் இல்லாமல் டென்னஸியில் இருந்தது என்பது தான்.
பெய்லி அந்தப் பூனையைத் தன் இரு கைகளாலும் கழுத்திலிருந்து எடுத்து கார் ஜன்னலின் வழியாக பைன் மரங்கள் இருந்த திசையில் தூக்கி வீசினான். பிறகு காரிலிருந்து வெளியே வந்து தன் மனைவியை நோக்கிப் போனான். அவள் அழுகின்ற குழந்தையைக் கையில் வைத்தபடி உடைந்த செந்நிறப் பள்ளத்தின் ஓரம் சாய்ந்து அமர்ந்திருந்தாள். வெட்டுக் காயம் ஏற்பட்டிருந்ததுடன் அவளுடைய தோள்பட்டையும் சிறிது பிசகி இருந்தது. குழந்தைகளோ “நாங்கள் ஒரு விபத்தை சந்தித்தோம்!” என்று கட்டுக்கடங்காத வியப்பில் கூவினர்.
“ஆனால் யாரும் சாகவில்லை”, ஜூன் ஸ்டார் ஏமாற்றத்துடன் சொன்னாள். பாட்டியம்மாள் நொண்டியபடி காரின் வெளியே வந்தாள். அவள் தொப்பி இன்னமும் அவளுடைய தலையில் தான் இருந்தது. ஆனால் உடைந்து போன அதன் முன் பகுதி துருத்தியபடி நீட்டிக் கொண்டிருக்க அதன் மீதிருந்த ஊதாப் பூக்கள் அலங்கோலமாக பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தன.
அதிர்ச்சியில் இருந்து விடுபடும் பொருட்டு கால்வாய்க்கு அருகே சிறிது நேரம் அமர்ந்திருந்த அவர்கள் அனைவரின் உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது.
“ஏதேனும் கார் வருகிறதா பார்க்கலாம்”, கரகரப்பான குரலில் சொன்னாள் குழந்தையின் தாய்.
“என்னுடைய உடலின் ஏதோ ஒரு பாகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று தன்னுடைய உடலின் ஒரு பக்கத்தை அழுத்தியபடி சொன்னாள் பாட்டியம்மாள். ஆனால் யாருமே அதற்கு பதில் சொல்லவில்லை. பெய்லியின் பற்கள் தடதடத்துக் கொண்டிருந்தன. நீலக் கிளிகள் வடிவமைக்கப்பட்ட மஞ்சள்நிற உடற்பயிற்சிக்கான சட்டையை அணிந்திருந்த அவன் முகம் அந்தச் சட்டை அளவுக்கு மஞ்சளாகியிருந்தது. அந்த வீடு டென்னஸியில் இருந்தது என்பதை இனி சொல்லக்கூடாது என்று முடிவெடுத்தாள் பாட்டியம்மாள்.
சாலை பத்து அடி உயரத்தில் இருந்தது. அவர்கள் அதற்கு அந்தப்புறம் இருந்த மரங்களின் உச்சிகளை மட்டும் பார்க்க முடிந்தது. அவர்கள் அமர்ந்திருந்த பள்ளத்திற்குப் பின்னால் உயரமான கருத்த அடர்ந்த மரங்கள் நிறைய இருந்தன. சில நிமிடங்களுக்குப் பின் சிறிது தொலைவில், குன்றின் உச்சியில் ஒரு கார் வருவதைப் பார்த்தார்கள். அதில் இருந்தவர்கள் இவர்கள் இங்கிருப்பதைக் கவனித்ததைப் போல அது மிதமான வேகத்தில் வந்தது. பாட்டியம்மாள் எழுந்து நின்று அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும்படி தன் இரண்டு கைகளையும் அதீதமாக வீசினாள். தொடர்ந்து மெதுவாக வந்த கார் ஒரு வளைவில் மறைந்துவிட்டது. பிறகு மறுபடி தோன்றி முன்பை விட மிதமான வேகத்தில் வந்த அந்தப் பெரிய கறுப்புநிற பழுதுபட்ட பிணஊர்தி போன்ற வாகனம் அவர்களைச் சிறிது தூரம் தாண்டிச் சென்று பின் நின்றது. அதில் மூன்று ஆண்கள் இருந்தது தெரிந்தது.
நிலையான உணர்ச்சியற்ற பார்வையுடன் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்த வாகன ஓட்டுனர் எதுவும் பேசவில்லை. பிறகு தன் தலையைத் திருப்பி மற்ற இருவரிடமும் தாழ்ந்த குரலில் ஏதோ சொன்னான். அவர்கள் கீழே இறங்கினர். தடித்து காணப்பட்ட ஒருவன் கருப்பு நிறக் கால்சராயும் வெள்ளிநிற ஆண் குதிரையின் புடைப்புருவம் பதிக்கப்பட்ட கம்பளிச் சட்டையையும் அணிந்து இருந்தான். அவன் அவர்களுடைய வலது பக்கம் திரும்பி தன் வாயை ஒருவிதமான இளிப்புடன் சிறிது திறந்து வைத்தபடி அவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றான். இன்னொருவன் காக்கி கால்சராயும் நீல நிற கோடுகளிட்ட அங்கியும், முகத்தின் பெரும்பகுதியை மறைக்குமளவு இறக்கிவிடப்பட்டிருந்த ஒரு சாம்பல் நிறத் தொப்பியையும் அணிந்து இருந்தான். அவன் மெதுவாக அவர்களின் இடப் பக்கம் வந்து நின்றான். இருவரும் எதுவும் பேசவில்லை.
ஓட்டுனர், காரில் இருந்து கீழே இறங்கி காரின் பக்கத்தில் வந்து நின்று அவர்களைப் பார்த்தான். மற்ற இருவரை விட வயதானவனாகத் தோற்றமளித்த அவனுடைய தலைமுடி வெளுக்கத் துவங்கியிருந்தது. அவன் அணிந்திருந்த வெள்ளிச் சட்டமிட்ட கண்ணாடி அறிவார்ந்த ஒரு தோற்றத்தை அவனுக்குத் தந்தது. அவன் முகம் சுருக்கங்களுடன் நீண்டு காணப்பட்டது. சட்டையோ சட்டைக்குள் அணியும் உள்ளாடையோ இன்றி வெறும் நீல நிற ஜீன்ஸ் மட்டும் அணிந்திருந்தான். அது அவனுக்கு மிக இறுக்கமாக இருந்தது. தன் கையில் ஒரு கருப்பு தொப்பியும் ஒரு துப்பாக்கியும் வைத்திருந்தான். மற்ற இருவரிடமும் கூட துப்பாக்கிகள் இருந்தன.
“எங்களுக்கு ஒரு விபத்து நேர்ந்தது” என்று குழந்தைகள் கூச்சலிட்டனர்.
பாட்டியம்மாளுக்கு கண்ணாடி அணிந்திருந்த அந்த மனிதனை இதற்கு முன்பே தான் அறிந்தது போல ஒரு விசித்திரமான உணர்வு தோன்றியது. தன் வாழ்நாள் முழுக்க அவனை அறிந்திருந்தது போல அவனுடைய முகம் மிகப் பழக்கப்பட்டதாக இருந்தது. ஆனால் அவன் யார் என்று அவளால் சட்டென்று நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.
கார் பக்கத்தில் நின்றிருந்தவன் அங்கிருந்து மெல்ல நகர்ந்து வழுக்காமல் இருப்பதற்காக மிகக் கவனமாகத் தன் பாதங்களை நிலத்தில் அழுத்தி ஊன்றி தடுப்புச்சுவருக்குக் கீழே இறங்கி வந்தான். காலுறைகள் இன்றி நிறம் மங்கிய வெள்ளை நிறக் காலணிகளை அணிந்திருந்த அவனுடைய கணுக்கால்கள் சிவந்தும் மெலிந்தும் இருந்தன.
“இனிய மதிய வணக்கம்! நீங்கள் அனைவரும் விழுந்து விட்டீர்கள் என்று தெரிகிறது” என்றான்.
“நாங்கள் இருமுறை உருண்டு விழுந்தோம்” என்றாள் பாட்டியம்மாள்.
“ஒரு முறை” என்று அவன் திருத்தினான். “நாங்கள் அது நிகழ்வதைப் பார்த்தோம்” என்றவன், சாம்பல் நிறத் தொப்பி அணிந்தவனிடம், “ஹிராம், அவர்களுடைய கார் ஓடுமா என முயற்சி செய்து பார்” என்று மெல்லிய குரலில் சொன்னான். “நீங்கள் எதற்காகத் துப்பாக்கி வைத்திருக்கிறீர்கள்? துப்பாக்கி வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான் ஜான் வெஸ்லி.
“அம்மா! நீங்கள் உங்கள் குழந்தைகளை அழைத்து உங்கள் அருகே அமர வைத்துக் கொள்ள முடியுமா? குழந்தைகள் என்னைப் பதட்டமடைய வைக்கிறார்கள். நீங்கள் இருக்கும் இடத்திலேயே அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க வேண்டும்” என்று அவன் குழந்தைகளின் தாயைப் பார்த்துச் சொன்னான்.
“நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ ஏன் சொல்கிறாய்?” என்று ஜூன் ஸ்டார் கேட்டாள்.
அவர்களுக்குப் பின்னே மரங்கள் கறுத்த வாயைப் போல திறந்திருந்தன.
“இங்கே வாருங்கள்” என்று ஜான் வெஸ்லியையும் ஜூன் ஸ்டாரையும் அழைத்தாள் குழந்தைகளின் தாய்.
இந்தச் சமயத்தில் பெய்லி அவர்களிடம் பேசத் துவங்கினான். “நாங்கள் ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள்……”
அப்போது திடீரென பாட்டியம்மாள் கூச்சலிட்டாள். தன் காலை ஊன்றி எழுந்து முறைத்தபடி நின்றாள். “நீ அந்த பொல்லாதவன்தானே. உன்னைப் பார்த்தவுடனேயே நான் அடையாளம் கண்டு கொண்டேன்” என்றாள்.
“ஆம் அம்மா”. தான் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டாலும் அது குறித்து மகிழ்ந்தது போல அவன் மெல்லப் புன்னகைத்தான். “ஆனால் நீங்கள் யாரும் என்னை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் அது உங்கள் அனைவருக்கும் நலமாக இருந்திருக்கும்” என்றான்.
பெய்லி தன்னுடைய தலையை வேகமாகத் திருப்பி தன் தாயிடம் ஏதோ சொன்னான். அது குழந்தைகளைக் கூட அதிர்ச்சியுற வைத்தது. பாட்டியம்மாள் அழத் தொடங்கினாள். பொல்லாதவன் கோபமுற்றான். “நீங்கள் வருத்தம் கொள்ளாதீர்கள். சில சமயங்களில் ஒரு ஆண் தான் சொல்ல நினைக்காதவற்றைச் சொல்வான். உங்கள் மகன் உங்களிடம் இப்படிப் பேசுவோம் என நினைத்தே இருக்க மாட்டான்”.
“நீங்கள் ஒரு பெண்ணைச் சுட மாட்டீர்கள். ஆமாம் தானே” என்றபடி பாட்டியம்மாள் ஒரு சுத்தமான கைக்குட்டையைத் தன்னுடைய சட்டை மடிப்பில் இருந்து எடுத்து தன்னுடைய கண்களை அதை வைத்து அழுத்தித் துடைத்துக் கொண்டாள்.
பொல்லாதவன் தன்னுடைய காலணியின் முனைப்பகுதியை நிலத்தின் மீது குத்தி ஒரு சிறிய குழியைச் செய்து திரும்ப அதை மூடினான். “அப்படிச் செய்ய வேண்டியிருந்தால் அதை நானே வெறுப்பேன்” என்றான்.
“கவனி” என்ற பாட்டியம்மாள் கிட்டத்தட்ட அலறும் குரலில் பேசினாள். “நீ ஒரு நல்ல மனிதன் என்று நான் அறிவேன். உன் உடலில் ஒரு துளி கூட சாதாரண மக்களின் ரத்தம் இருப்பது போல நீ தோற்றமளிக்கவில்லை. எனக்குத் தெரியும். நீ நல்லவர்களின் இடையிலிருந்து தான் வருகிறாய்”.
“ஆமாம், ஆமாம். இந்த உலகத்தின் மிகச்சிறப்பான மனிதர்களின் இடத்திலிருந்து வருகிறேன்” என்று அவன் புன்னகைத்த போது உறுதியான வெள்ளைப்பல் வரிசை தெரிந்தது. “கடவுள் என்னுடைய தாயைப் போல ஒரு சிறந்த தாயைப் படைக்கவே இல்லை. என்னுடைய தந்தையின் இதயம் சொக்கத் தங்கம்” என்றான் அவன். சிகப்புநிறக் கம்பளி ஆடை அணிந்திருந்த இளைஞன் தன் இடுப்பின் மீது துப்பாக்கியை வைத்தபடி அவர்களுக்குப் பின்புறம் வந்து நின்றான். பொல்லாதவன் நிலத்தின் மீது சப்பணமிட்டு அமர்ந்து, “பாபி லீ, குழந்தைகளை கவனித்துக் கொள். குழந்தைகள் என்னைப் பதட்டமடையச் செய்வார்கள் என்று உனக்குத் தெரியும் தானே?” என்றான். தன் முன்னே குழப்பத்துடன் அமர்ந்திருந்த அந்த ஆறு பேரையும் பார்த்தான். என்ன சொல்வது என்ற தர்மசங்கடத்துடன் இருப்பது போலக் காணப்பட்டான்.
“வானத்தில் ஒரு மேகமும் இல்லை” என்றவன் மேலே பார்த்து, “சூரியனையும் காண முடியவில்லை மேகத்தையும் காணவில்லை” என்றான்.
“ஆம் இது ஒரு அழகிய நாள்” என்றாள் பாட்டியம்மாள். “கவனி. பொல்லாதவன் என்று நீயே உன்னை அழைத்துக் கொள்ளக் கூடாது. நீ மனத்தால் ஒரு நல்ல மனிதன் என்று நான் அறிவேன். உன்னைப் பார்த்து என்னால் சொல்ல முடியும்”என்றாள்.
அப்போது இடையே குறுக்கிட்டு “உஷ்” என்று கூச்சலிட்டு “எல்லோரும் வாயை மூடிக் கொண்டு இருங்கள். என்னை இதைக் கையாள விடுங்கள்” என்றான் பெய்லி.
அதைச் சிறிதும் கண்டுகொள்ளாமல் பாட்டியம்மாளுடனான தன் பேச்சைத் தொடர்ந்த பொல்லாதவன், “நான் அதைப் பாராட்டுகிறேன்” என்று சொல்லியபபடி நிலத்தில் தன் துப்பாக்கியின் பின்புறத்தால் ஒரு வட்டமிட்டான்.
அப்போது, “இந்தக் காரை சரி செய்ய அரை மணி நேரம் ஆகும்” காரின் இயந்திர மூடியின் மேலே தலையை நீட்டிச் சொன்னான் ஹிராம்.
“சரி, முதலில் நீங்கள் அந்தச் சிறுவனையும் இவனையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் ” என்று ஜான் வெஸ்லியையும் பெய்லியையும் நோக்கித் தன் விரல்களை நீட்டி சுட்டிக் காட்டினான் பொல்லாதவன். பிறகு பெய்லியைப் பார்த்து, “அவர்கள் உன்னிடம் ஒன்று கேட்க விரும்புகிறார்கள். அவர்களுடன் காட்டுக்குச் செல்வதில் உனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை தானே?” என்றான்.
“தயவு செய்து நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். நாங்கள் ஒரு பயங்கரமான சூழ்நிலையில் இருக்கிறோம். நீங்கள் யாருமே அது என்ன என்பதை இதுவரை உணரவே இல்லை” என்ற பெய்லியின் குரல் உடைந்தது. அவன் கண்கள் அவனுடைய சட்டையில் இருந்த கிளிகளைப் போல நீல நிறமாக மாறின.
பாட்டியம்மாள் தானும் அவனுடன் காட்டுக்குச் செல்லப் போவதைப் போல, தன் தொப்பியின் முனையை சரி செய்ய முயன்றாள். ஆனால் அது அவளுடைய கையோடு வந்துவிட்டது. சில நொடிகள் அதை வெறித்துப் பார்த்தபடி நின்றவள், பிறகு அதைக் கீழே நழுவ விட்டாள். வயது முதிர்ந்த ஒருவருக்கு நடக்க உதவி செய்வதைப் போல ஹிராம் பெய்லியின் கைகளைப் பற்றினான். அதைப் பார்த்த ஜான் வெஸ்லி அச்சத்துடன் பெய்லியின் கையை பிடித்துக் கொண்டான். பிறகு பாப் லீ பின்தொடர அவர்கள் காட்டை நோக்கிச் சென்றார்கள். காட்டின் கறுத்த விளிம்பை அடைந்த போது பெய்லி ஒரு சாம்பல் நிற பைன் மரத் தண்டின் மீது சாய்ந்து கொண்டு “நான் ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன் அம்மா. எனக்காகக் காத்திருங்கள்” என்று கத்தினான்.
“நீ உடனே திரும்பி வா” என்று அவனுடைய அம்மா கிறீச்சிட்டாள். ஆனால் அந்தக் குரல்கள் யாவும் காட்டில் தொலைந்து காணாமல் போயின.
“மகனே, பெய்லி” பாட்டியம்மாள் துயரம் நிறைந்த குரலில் அழைத்தாள். அழைத்தபின் தன் கண்ணெதிரே பெய்லிக்குப் பதிலாக பொல்லாதவன் தான் நிலத்தில் சம்மணமிட்டு அமர்ந்து இருக்கிறான் என்பதை உணர்ந்தாள். “நீ ஒரு நல்ல மனிதன் என்பதை நான் அறிவேன். நீ சிறிதும் மற்றவர்களைப் போல் இல்லை” என்றாள்.
அவளுடைய சொற்களைத் தீவிரமாகப் பரிசீலனை செய்தது போல யோசித்தவன், “இல்லையம்மா. நான் நல்ல மனிதன் இல்லை. ஆனால் நான் இந்த உலகத்தின் மிக மோசமானவனும் கிடையாது. என்னுடைய சகோதர சகோதரிகளுடன் ஒப்பிடுகையில் நான் ஒரு வேற்று சாதி நாய் என்று சொன்ன என் தந்தை, ‘சிலர் தங்களுடைய மொத்த வாழ்வையும் எதைப் பற்றியும் கேள்வி கேட்காமல் வாழக் கூடியவர்கள். மற்ற சிலருக்கோ எதற்காக வாழ்கிறோம் என்று தெரிய வேண்டும். இச்சிறுவன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவன். இவன் எல்லாவற்றிலும் ஆர்வமுடன் ஈடுபடப் போகிறவன்’ என்றும் சொன்னார்” என்று பதில் சொன்னான் பொல்லாதவன். தன்னுடைய கறுப்புநிறத் தொப்பியை அணிந்தபடி வானத்தையும் தொலைவில் தெரிந்த மரங்களையும் மீண்டும் தர்மசங்கடம் அடைந்தவனைப் போல் பார்த்தான். தன்னுடைய தோள்களைச் சற்று குறுக்கியபடி குனிந்து, “என்னை மன்னியுங்கள். பெண்களாகிய உங்கள் முன்னால் நான் சட்டையில்லாமல் இருக்கிறேன். நாங்கள் தப்பித்த போது எங்களுடைய சட்டைகளைப் புதைத்து விட்டோம். பிறகு வழியில் சந்தித்த மனிதர்களிடமிருந்து நாங்கள் இதை இரவலாகப் பெற்றோம். வேறு நல்ல ஆடைகள் கிடைக்கும் வரை இதைத் தான் பயன்படுத்தியாக வேண்டும்” என்று விளக்கினான்.
“ஓ! பெய்லியின் சூட்கேசில் ஒருவேளை ஒரு உபரியான சட்டை இருக்கலாம்” என்றாள்.
“அப்படியா! நான் பார்க்கிறேன்” என்றான் பொல்லாதவன்.
இதைக் கேட்ட பெய்லியின் மனைவி, “அவர்கள் அவரை எங்கே கொண்டு போகிறார்கள்?” என்று அலறினாள்.
“என் தந்தை விசித்திரமானவர். அவர் மீது யாராலும் அவ்வளவு எளிதில் பழி சுமத்திவிட முடியாது. அவர் எந்த அதிகாரிகளிடமும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதேயில்லை. அவர்களை எப்படிக் கையாள்வது என்கிற நீக்கு போக்கு அறிந்தவர் அவர்” என்றான் பொல்லாதவன்.
“நீ மட்டும் முயற்சி செய்தால், நீயும் நேர்மையாக இருக்கலாம். நம்மை யார் எப்பொழுது துரத்துவார்கள் என்று பயப்பட வேண்டிய அவசியமின்றி, நிலையான ஒரு வாழ்க்கையை வாழ்வது எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்பதை யோசித்துப் பார்” என்றாள் பாட்டியம்மாள்.
பொல்லாதவன் அது குறித்து யோசிப்பதைப் போல தன்னுடைய துப்பாக்கியின் பின்புறத்தை நிலத்தின் மீது சுரண்டியபடி, “ஆமாம் எப்போதும் யாராவது எங்களைத் துரத்தியபடி தான் இருக்கிறார்கள்” என்று முணுமுணுத்தான். நின்று கொண்டிருந்த பாட்டியம்மாளால் இப்போது அவனைக் குனிந்து நன்றாகப் பார்க்க முடிந்தது. தொப்பிக்குப் பின்னே தெரிந்த அவனுடைய தோள் பட்டைகள் வலிமையற்று மெலிந்து இருந்ததைக் கவனித்தாள்.
“நீ எப்போதாவது பிரார்த்தனை செய்து இருக்கிறாயா?” என்று கேட்டாள். அவன் தலையை அசைத்தான். அவள் கண்ணுக்கு கருப்பு நிறத் தொப்பி அவனுடைய தோள்களுக்கு இடையே வேகமாக அசைந்தது மட்டுமே தெரிந்தது.
“இல்லையம்மா!” என்றான் அவன்.
அப்போது காட்டிலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் ஒன்று கேட்டது. அதைத் தொடர்ந்து மறுபடியும் இன்னொரு முறை அதே சத்தம் கேட்டது. பிறகு அமைதி நிலவியது. பாட்டியம்மாளுக்குத் தலை சுற்றியது. ஒரு நீண்ட திருப்தியான உள்ளிழுக்கப்பட்ட சுவாசம் போல மர உச்சிகளின் ஊடாக காற்று நுழைகிற சத்தத்தைக் கேட்டாள்.
“மகனே, பெய்லி” என்று கூப்பிட்டாள்.
“ஒரு காலத்தில் இறைவணக்கப் பாடகனாக இருந்தேன். நான் எல்லாவிதமான வேலைகளையும் செய்திருக்கிறேன். உள் மற்றும் வெளிநாட்டு இராணுவத்திலும் கடற்படையிலும் பணி புரிந்திருக்கிறேன். இருமுறை திருமணம் ஆகியிருக்கிறது. வெட்டியான் வேலை செய்திருக்கிறேன். ரயில்வேயில் இருந்திருக்கிறேன். அன்னை பூமியை உழுது இருக்கிறேன். சூறாவளியில் இருந்திருக்கிறேன். ஒரு மனிதன் உயிருடன் கொளுத்தப்படுவதை ஒருமுறை பார்த்திருக்கிறேன்”. வெளுத்த முகமும் நீர் நிரம்பிய கண்களுமாக நெருக்கி அமர்ந்து இருந்த குழந்தைகளின் தாயையும் அந்தச் சிறுமியையும் பார்த்தபடி, “ஒரு பெண் கசையால் அடிக்கப்படுவதைக் கூட நான் பார்த்திருக்கிறேன்” என்றான்.
“பிரார்த்தனை, பிரார்த்தனை” என சத்தமாகச் சொல்லத் துவங்கினாள் பாட்டியம்மாள்.
“எனக்கு நினைவு தெரிந்து நான் எப்பொழுதும் ஒரு மோசமான சிறுவனாக இருந்ததில்லை”. கிட்டத்தட்ட ஒரு கனவில் இருப்பது போன்ற ஒரு குரலில் சொன்னான். “ஆனால் எங்கோ நான் செய்த ஏதோ ஒரு தவறு காரணமாக நான் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன். அதாவது உயிருடன் புதைக்கப்பட்டேன்”. இதைச் சொன்ன பின் நிமிர்ந்து பார்த்து தன் தீர்க்கமான பார்வையின் மூலம் அவளுடைய கவனத்தைத் தன்மீது இருத்தினான்.
“அப்போது தான் நீ பிரார்த்திக்கத் துவங்கியிருக்க வேண்டும். சிறைச்சாலைக்கு அனுப்பப்படும் அளவிற்கு நீ என்ன தவறு செய்தாய்?” என்றாள் பாட்டியம்மாள்.
“வலப்பக்கம் திரும்பினால் அங்கு ஒரு சுவர்” மீண்டும் மேகங்களற்ற வானத்தைப் பார்த்தபடி சொன்னான் பொல்லாதவன்.
“இடப்பக்கம் திரும்பினால் அங்கு ஒரு சுவர். மேலே பார்த்தால் அங்கு மேற்கூரை. கீழே பார்த்தால் அங்கு தரை. நான் என்ன செய்தேன் என்பதை மறந்து விட்டேன் அம்மா! நான் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். திரும்பத் திரும்ப நான் என்ன செய்தேன் என்பதை நினைவுக்குக் கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால் இன்றுவரை அதை என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. எப்போதாவது அது எனக்கு நினைவுக்கு வந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் இன்றுவரை அது வரவே இல்லை”.
“ஒரு வேளை அவர்கள் உன்னைத் தவறாக சிறைக்கு அனுப்பி இருப்பார்கள் என நினைக்கிறேன்” என்று தெளிவின்றி சொன்னாள் பாட்டியம்மாள்.
“இல்லையம்மா. அது தவறாக நடக்கவில்லை. அவர்களிடம் எனக்கு எதிரான எல்லா சாட்சிகளும் இருந்தன” என்றான் அவன்.
“நீ எதையாவது திருடி இருக்க வேண்டும்” என்றாள் அவள்.
அவன் சிறிய ஏளனத்துடன், “நான் விரும்பிய எதுவும் யாரிடமும் இல்லை. சிறையின் தலைமை மருத்துவர், நான் என்னுடைய அப்பாவைக் கொன்று விட்டதாக சொன்னார். ஆனால் அது ஒரு பொய் என்று எனக்குத் தெரியும். என்னுடைய தந்தை 1909 இல் பரவிய ஃப்ளூ நோயால் இறந்தார். அதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் மவுண்ட் ஹோப்வெல் பாப்ட்டிஸ்ட் தேவாலயத்தின் கல்லறைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டார். நீங்கள் வேண்டுமானால் அங்கு போய்ப் பார்க்கலாம்” என்றான்.
“நீ பிரார்த்தனை செய்தால் ஏசு உனக்கு உதவி செய்வார்” என்றாள் பாட்டியம்மாள்.
“அதுவும் சரிதான்” என்றான் பொல்லாதவன்.
“சரி என்றால் நீ ஏன் பிரார்த்தனை செய்யக் கூடாது?” சட்டென மகிழ்ச்சியில் நடுங்கிய குரலில் அவள் கேட்டாள்.
“எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. நான் இப்போது நன்றாகத் தான் இருக்கிறேன்” என்றான் அவன்.
பாபி லீயும் ஹிராமும் காட்டில் இருந்து நிதானமாக நடந்து வந்தார்கள். பாபி லீ நீல நிறக் கிளிகள் பதித்த மஞ்சள் வண்ணச் சட்டையை இழுத்தபடி வந்தான்.
“பாபி லீ அந்தச் சட்டையை என்னிடம் தூக்கிப் போடு” என்றான் பொல்லாதவன்.
அந்தச் சட்டை அவனை நோக்கிப் பறந்து வந்து அவனுடைய தோள் மீது விழுந்தது. அவன் அதனை அணிந்து கொண்டான். அந்தச் சட்டை எதை நினைவூட்டியது என்று அறியும் நிலையில் பாட்டியம்மாள் இல்லை. அதன் பொத்தான்களைப் பூட்டியபடி, “இல்லை அம்மா” என்றான் பொல்லாதவன்.
“குற்றம் செய்வது பெரிய விஷயமே இல்லை என்பதை நான் தெரிந்துகொண்டேன். ஒரு மனிதனைக் கொல்வதோ அவனுடைய காரிலிருந்து டயரை எடுத்துக் கொள்வதோ எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஏனெனில் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ என்ன செய்தோம் என்பதை எப்படியும் மறந்துவிடப் போகிறோம். பிறகு வெறுமனே அதற்கான தண்டனையை அனுபவிக்கப் போகிறோம்”. குழந்தையின் தாய் மூச்சு விடத் திணறுவதைப் போல மூச்சை ஓசையுடன் இழுத்துவிட்டுக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி “அம்மா நீங்களும் இந்தச் சிறுமியும் பாபி லீ மற்றும் ஹிராமுடன் உங்களுடைய கணவர் இருக்கும் இடத்திற்குப் போகிறீர்களா?” என்று கேட்டான்.
“ஆம், நன்றி” என்று மெல்லிய குரலில் அந்தத் தாய் சொன்னாள். அவளுடைய இடது கை பிடிப்பின்றி ஊசலாடியது. இன்னொரு கையில் உறங்கிப் போயிருந்த தன்னுடைய கைக் குழந்தையை வைத்திருந்தாள்.
அவள் அந்தப் பள்ளத்திலிருந்து இருந்து மேலே ஏறுவதற்குச் சிரமப்படுவதைப் பார்த்த பொல்லாதவன், “ஹிராம், அந்தப் பெண் மேலே ஏறுவதற்கு உதவி செய். பாபி லீ, நீ அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துக் கொள்” என்றான்.
“அவனுடைய கைகளைப் பிடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அது எனக்கு ஒரு பன்றியை நினைவூட்டுகிறது” என்றாள் ஜூன் ஸ்டார். இதைக் கேட்ட அந்தப் தடித்த இளைஞன் வெட்கப்படுவது போலச் சிரித்தபடி ஜூன் ஸ்டாரின் கையைப் பிடித்து வெளியே இழுத்தான். பிறகு ஹிராமையும் பெய்லியின் மனைவியையும் பின் தொடர்ந்து காட்டுக்குள் சென்றான்.
பொல்லாதவனுடன் தனித்துவிடப்பட்ட பாட்டியம்மாள் தன்னுடைய குரலை இழந்து விட்டதாக உணர்ந்தாள். வானத்தில் மேகமோ சூரியனோ இல்லை. அவளைச் சுற்றி காடு தவிர வேறேதும் இல்லை. அவன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பாட்டியம்மாள் அவனிடம் சொல்ல விரும்பினாள். உடனே அதைச் சொல்ல இயலாமல் பலமுறை தன்னுடைய வாயைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தவள் இறுதியாகப் பேசியபோது “இயேசுவே, இயேசுவே” என்று தான் சொல்வதைக் கண்டாள். அதன் பொருள் இயேசு உனக்கு உதவி செய்வார் என்பது தான். ஆனால் அவள் அதைச் சொன்ன விதம் அவள் ஏதோ சபிப்பதைப் போல ஒலித்தது.
அதை ஏற்றுக் கொண்டதைப் போல “ஆம் அம்மா! ஏசு எல்லாவற்றையும் சமன்குலையச் செய்து விட்டார். எங்கள் இருவரின் கதையும் ஒன்றே. என்ன ஒன்று, அவர் குற்றம் எதுவும் செய்யவில்லை. நான் குற்றம் செய்தேன் என்பதை நிரூபிக்க அவர்களிடம் சாட்சியங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் எந்த ஆவணங்களையும் என்னிடம் காண்பிக்கவில்லை. அதிலிருந்து நான் அறிந்தது இது தான். நான் செய்யும் அனைத்திற்கும் என் கையெழுத்தை இட்டு அதில் ஒரு பிரதியை வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நான் என்னென்ன செய்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். செய்த குற்றமும் தண்டனையும் சரியான விகிதத்தில் பொருந்துகிறதா என்று பிறகு சரி பார்க்க முடியும். நான் சரியாக நடத்தப்படவில்லை என்பதை இறுதியில் நிரூபிப்பதற்கான ஆதாரமாக அது விளங்கும். நான் ஏன் என்னை பொல்லாதவன் என்று அழைத்துக் கொள்கிறேன் என்றால் நான் இதுவரை செய்த தவறுகளையோ என் தண்டனைக் காலத்தில் எனக்கு நேர்ந்த எதையுமோ என்னால் மறுபடி சரி செய்யவே முடியாது என்பதால் தான்” என்றான். அப்போது காட்டிலிருந்து பயங்கரமான அலறல் சத்தமொன்றும் அதைத் தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் கேட்டது.
“ஒருவர் எல்லா தண்டனைகளையும் அனுபவிப்பதும், இன்னொருவர் எந்தத் தண்டனையும் அனுபவிக்காமல் இருப்பதும் உங்களுக்குச் சரி என்று தோன்றுகிறதா அம்மா? வெட்டியானுக்கு அன்பளிப்பு தந்த பிணம் உண்டா சொல்லுங்கள்” என்றபடி காட்டுக்குள் தன் பார்வையைச் செலுத்தினான் பொல்லாதவன்.
மேலும் இரு முறை துப்பாக்கி சுடும் ஓசை கேட்டது. தொண்டை வறண்டு போன முதிய வான்கோழி நீருக்காகக் கரைவதைப் போல பாட்டியம்மாள் தன்னுடைய தலையை உயர்த்தி “மகனே, பெய்லி! மகனே, பெய்லி!” என்று தன் இதயம் வெடித்து விடுவதைப் போல கூப்பிட்டாள்.
“இறந்தவர்களை எழுப்பியது ஏசு மட்டும்தான். அவர் அதைச் செய்திருக்கக் கூடாது. அவர் எல்லாவற்றையும் சமநிலை இழக்கச் செய்து விட்டார். அவர் சொன்னதைச் செய்திருந்தால் அதன் பிறகு அதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றிருக்கலாம். ஆனால் அவர் தான் சொன்னதைச் செய்யவில்லை எனும்போது நாம் என்ன செய்ய முடியும்? யாரையாவது கொன்று, யாருடைய வீட்டையாவது எரித்து, யாருக்காவது ஏதாவது ஒரு கயமையைச் செய்து எஞ்சி இருக்கும் சில காலத்தைச் சிறப்பாக அனுபவித்து விட்டுச் செல்ல வேண்டியது தான். எல்லாமே மகிழ்ச்சியிலா வெறும் கயமை” என்றான். அவனுடைய குரல் இப்போது ஏறத்தாழ ஒரு உறுமலாக மாறி இருந்தது.
“ஒருவேளை அவர் இறந்தவர்களை எழுப்பவில்லை போல” பாட்டியம்மாள் முணுமுணுத்தாள். தான் என்ன பேசுகிறோம் என்பதுகூட அவளுக்குத் தெரியவில்லை. மயக்கம் வருவதைப் போலிருந்தது. கால்கள் பின்னிக்கொள்ள பள்ளத்தில் விழுந்தாள்.
“அவர் அதைச் செய்யவில்லை என்று என்னால் சொல்ல இயலாது. ஏனெனில் அப்போது நான் அங்கில்லை. நான் அங்கு இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்” தன்னுடைய கை முட்டியை நிலத்தின் மீது குத்தியவாறு அவன் சொன்னான். “நான் அங்கு இல்லை என்று சொல்வது சரி இல்லை. ஏனெனில் நான் அங்கு இருந்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும். கவனியுங்கள் அம்மா” இப்போது அவன் உரத்த குரலில் சொன்னான். “நான் அங்கேயே இருந்திருந்தால் எனக்குத் தெரிந்து இருக்கும். தெரிந்திருந்தால் நான் இப்போது எப்படி இருக்கிறேனோ நிச்சயமாக அப்படி இருந்திருக்க மாட்டேன்”. அவனுடைய குரல் உடைவதைப் போலத் தெரிந்தது. பாட்டியம்மாள் ஒரு கணம் தெளிவாக இருப்பது போல உணர்ந்தாள். அந்த மனிதனின் முகம் தன்னுடைய முகத்துக்கு நெருக்கமாகத் திரும்ப, அவன் அழப் போவதாக அவளுக்குத் தோன்றியது.
“ஏன்? நீயும் என்னுடைய குழந்தைகளில் ஒன்று தான். என்னுடைய குழந்தைகளில் நீயும் ஒன்று தான்” என அவள் இருமுறை முணுமுணுத்துக் கொண்டே அவனை நெருங்கிச் சென்று அவனுடைய தோளைத் தொட்டாள். ஒரு நாகம் தன்னைத் தீண்டியதைப் போலத் துள்ளியவன் அவளுடைய நெஞ்சை நோக்கி மூன்று முறை சுட்டான். பிறகு தன்னுடைய துப்பாக்கியை நிலத்தில் வீசிவிட்டு தன் கண்ணாடியைக் கழற்றி அதைச் சுத்தப்படுத்தத் துவங்கினான்.
ஹிராமும் பாபி லீயும் காட்டிலிருந்து திரும்பி வந்தார்கள். ரத்தம் குளமாகப் பரவியிருந்த கால்கள் ஒரு குழந்தையைப் போல பின்னிக் கிடக்க, மேகங்களற்ற வானத்தை நோக்கிப் புன்னகைப்பது போன்ற முகத்துடன் பாதி அமர்ந்தும் பாதி சரிந்த நிலையிலும் பாட்டியம்மாள் கிடந்த பள்ளத்திற்கு எதிரே வந்து நின்றார்கள்.
கண்ணாடி அணியாத பொல்லாதவனுடைய கண்கள், விளிம்பில் சிவந்தும் வெளுத்தும் பலவீனமாகவும் காணப்பட்டன.
“மற்றவர்களை எங்கே வீசினீர்களோ அதே இடத்தில் இவளையும் தூக்கி வீசுங்கள்”. அவனுடைய காலை உரசிக் கொண்டிருந்த பூனையை கைகளில் தூக்கியபடி சொன்னான்.
“இவள் பெரும் பேச்சுக்காரி, அல்லவா?” எனக் கேட்ட பாபி லீ பாடிக் கொண்டே பள்ளத்துக்குள் சறுக்கிச் சென்றான். “அவளுடைய வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் அவளை யாராவது துப்பாக்கியால் திரும்பத் திரும்ப சுட்டுக் கொன்று கொண்டே இருந்திருந்தால் அவள் ஒரு நல்ல பெண்மணியாக இருந்திருப்பாள்” என்றான் பொல்லாதவன்.
“இது நல்ல வேடிக்கை” என்றான் பாபி லீ.
“வாயை மூடு, பாபி லீ. இது ஒன்றும் வாழ்வின் உண்மையான இன்பம் இல்லை” என்றான் பொல்லாதவன்.