ஃபயஸ் அகமது ஃபயஸ் கவிதைகள்

by எஸ்.கயல்
1 comment
பேசு!
ஏனெனில் உன்னிரு உதடுகள் சுதந்திரமாயுள்ளன.
பேசு!
உன் நாக்கு இன்னும் உன்னுடையதே.
இந்த நிமிர்ந்த உடல் இன்னும் உன்னுடையது தான்.
உன் வாழ்க்கை இன்னும்
உன்னுடையதே.
கொல்லனின் சுடுகலனில் தழல் உயர்ந்தெழ இரும்பு சிவந்து ஒளிர
பூட்டுகள் தங்கள் தாடையை அகலத் திறக்க,
ஒவ்வொரு சங்கிலியும் எப்படி விடுதலையைத் தழுவுகிறது என்று பார்.

*

அடர்வனத்துள் வசந்தத்தின் ரகசிய வருகையாக,
பாலை மணற்துகளில் மென் தென்றலின் அடிச்சுவடுகளாக,
நோய்மை ஒருவருக்கு எப்படியாகிலும் தரும் மன அமைதியைப் போல
மங்கிய உன் நினைவு நேற்றிரவு
என் இதயத்தை நிறைத்தது.

*

என் விரலை இதயத்தின் குருதியில் தோய்த்துள்ள நான்
என் எழுதுகோளும் மையும் பறிக்கப்பட்டால் புகார் கூறவா?
அல்லது
என் சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியையும் ஒரு சொல்லாக உருமாற்றியுள்ள நான்
அவர்கள் என் நாவைக் கட்டினால்
புகார் கூறவா?

*

துயரமான இதயமே!
இறுதியில் யாரோ வந்துவிட்டார்கள். இல்லை.
அங்கு யாருமில்லை.
வழிதவறிய ஒரு பயணியாகத் தான் இருக்கும்.
விண்மீன் வலைப் பின்னல் அலைகிறது.
இரவு வீழ்ச்சியை நோக்கி மூழ்குகிறது.
முன்னறையில் தலையசைக்கும் விளக்கு மிணுங்கி அணைந்தது.
ஒவ்வொரு நெடுஞ்சாலையும் காலடிகளுக்கான நீண்ட காத்திருப்பில் களைத்து உறங்குகிறது.
ஒரு அந்நியமான புழுதி ஒவ்வொரு காலடிச் சுவட்டையும் ஆழப் புதைத்துவிட்டது.
அந்த மெழுகுவர்த்திகளை அணைத்து விடுங்கள்.
மதுவை, குடுவையை, கோப்பையை எடுத்துச் செல்லுங்கள்.
உறங்கியறியா உங்கள் நெடிதுயர்ந்த கதவுகளைக் கம்பித் தடுப்புகளிட்டுத் தாளிடுங்கள்.
யாரும், யாருமே இப்போது
இங்கு வரமாட்டார்கள்.
இனி யாருமே……

*

ரகசியத்தால் கறுத்த சுவர்கள் அத்தனை பக்கமும் முகஞ்சுளிக்கின்றன.
இளமையின் எண்ணிலடங்கா விளக்குகள் தம்மைப் புதைத்துக் கொண்டன;
மனித சிந்தனையில் எண்ணற்ற மெழுகுவர்த்திகளை ஒளிர்வித்த கனவுகள் அதோ எவ்விடத்தும் தெரிகிற அந்த தூக்கு மரங்களில் கிடக்கின்றன.
இறப்பதும் மீண்டும் உயிர்ப்பதும் இரண்டு வேறான பகுதிகள்.
இன்னும் மேலானவை.
ஆனால் அந்த மூட்டுகள் எவ்வளவு அபாயமான கவர்ச்சியுடன் வளைகின்றன!
துயருற்றிருக்கின்ற இனிய
அந்த உதடுகள் மிக மெதுவாக விலகுகின்றன.
வேறு எங்கு இத்தகைய சூனியத் தன்மை இருக்க இயலும்!
வேறெந்தக் கருவும் என் பாடலுக்கு எப்போதும் பொருந்தாது;
வேறெங்குமில்லை!
இங்கு தான் என் கவிதை பிறப்பதற்கான சூழல்.

1 comment

Selvam kumar January 13, 2021 - 5:29 am

சிறப்புப்பான கவிதை மற்றும் மொழி பெயர்ப்பு

Comments are closed.