‘’சார் ஒரு ரிக்வஸ்ட். இவரு இந்த ஒரு நாள் மட்டும் இங்கே தங்கிக்கட்டுமா? இவரோட ரூம்ல திடீர்னு பியூஸ் போயிடிச்சி. எலெக்ட்ரிசியனை காலைல தான் கூப்பிட முடியும். நல்ல மள பார்த்திகளா? கீழே விகெ புரத்தில இருந்து தான் வரணும்.’’
நான் அந்த நபரைப் பார்த்தேன். நல்ல சிகப்பாக, உடம்புக்குப் பொருத்தமில்லாத சற்றே சிறிய முகத்தோடு, அந்தச் சிறிய முகத்துக்குப் பொருந்தாத சற்றே பெரிய தும்பு மீசையோடு இருந்தார்.
‘’நான் டாக்டர் ராமேந்திரன். திருநெல்வேலி மெடிக்கல் காலேஜில சைக்யாற்றிஸ்ட்டா இருக்கேன்‘’ என்றார். ’’I’m not mad.’’
நான் சிரித்தேன். ’’நான் ஒரு எழுத்தாளன், கவிஞன்” என்றேன். ’’நானும் பைத்தியமில்லை.’’
அவர் சிரித்தார். ’’காலையில் ரிஷப்ஷனில் பார்த்தேன். எங்கோ பார்த்தது போலத் தோன்றியது.’’
’நீங்கள் தமிழ் இலக்கியப் பத்திரிகைகள் வாசிப்பதுண்டா? தமிழ்க் கவிதைகள்?’’
‘’ஒரு காலத்தில்.. பிஜி உளவியல் எடுத்தப்பிறகு அங்கே எழுதுவதெல்லாம் என்னுடைய நோயாளிகள் என்று தோன்றிய பிறகு விட்டுவிட்டேன். அவ்வப்போது புரட்டுவதுண்டு.’’
அவர் தனது வென்னீர் ப்ளாஸ்க், மொபைல் மற்றும் சிறிய மாத்திரைகள் அடங்கிய பெட்டி போன்றவற்றை அங்கிருந்த இன்னொரு படுக்கையில் வைத்தார்.
‘’ராமேந்திரன், நீங்கள் மலையாளியா?’’
‘’கன்னியாகுமரி மாவட்டம்’’ என்றவர், ‘’நீங்கள் மனப் பதற்றத்துக்கு மருந்து எடுத்துக் கொள்கிறீர்களா?’’ என்றார்.
நான் சட்டென்று அடங்கிய குரலில், ‘’ஆம்’’ என்றேன். ’’எப்படி கண்டுபிடித்தீர்கள்?’’
‘’அடிக்கடி நாக்கை பாம்பு போல வெளியே துருத்தி இழுத்துக் கொள்கிறீர்கள். அது மனப் பதற்றத்துக்கு எடுத்துக் கொள்ளும் சில மாத்திரைகளில் ஒரு சிறிய பக்கவிளைவு’’ என்றவர், ‘’நீங்கள் மது அருந்துவீர்களா?’’ எனக் கேட்டார்.
நான் சற்று ஆயாசமடைந்து, ‘’ஆம். இதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?’’
அவர் சிரித்து, ‘’இல்லை. நான் அருந்துவேன். அதான் கேட்டேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?’’
‘’இல்லை. நான் இரவில் கொஞ்ச நேரம் படிப்பேன். அது உங்களுக்கு தொந்திரவாக இருக்குமா? வெளியே கொசு கடிக்கிறது.’’
‘’இல்லை. நான் கொஞ்ச நேரம் இசை கேட்பேன். பிறகு கண்பட்டி கொண்டு வந்திருக்கிறேன். அதைக் கட்டிகொண்டு தூங்கிவிடுவேன். கொசுவை அஞ்சுவது சரியான செயல்தான். இந்தப் பக்கம் டெங்குவும் மலேரியாவும் அதிகம்.‘’
‘’சாப்பாடு?’’
‘’வாட்ச்மேன் கொண்டு வந்தான். முயல் கறி. அதைச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கையில் தான் மின்சாரம் போய்விட்டது. நீங்கள்?’’
‘’நான் சைவம். முட்டை சாப்பிடுவேன். வேறு வழியே இல்லை எனில் மற்றதும்…’’
‘’ஓ! நடராஜ குருவைப் போல.’’
‘’நடராஜ குரு?’’
‘’நாராயணகுருவின் சீடர். அவர் சைவம்தான். ஆனாலும் உணவில் ரொம்பக் கட்டுப்பாடாக, குறிப்பாக இருப்பதில் ஒரு அடிப்படைவாதம் உள்ளது என்கிறார்.’’
‘’ஓ! நீங்கள் ஒரு அத்வைதியா?’’
‘’ஈழவர்‘’ என்று சிரித்தார். ’’என் அப்பா ஈழவர். இந்தப் பக்கம் இல்லத்து பிள்ளைமார் என்பார்கள். எங்களுக்கு நாராயண குரு தெய்வம். அவர் அத்வைதம் போதித்தாரா அல்லது epicureanism-ஆ என்று கவலையில்லை.’’
‘’புரிகிறது’’
‘’ஒருவர் தனது சிறந்த சிந்தனைகளோடு தனியாக இருக்கவேண்டும் என்று நடராஜ குரு சொல்லியிருக்கிறார். அதற்காகத் தான் இந்த மலை வாசஸ்தலத்துக்கு வந்தேன்.’’
‘’சிறந்த சிந்தனைகளோடு? உங்களது சிறந்த சிந்தனை என்ன?’’
‘’அவற்றோடு தனியாக இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறாரே?’’ என்று அவர் சிரித்தார். பிறகு எழுந்து, ‘’எக்ஸ்க்யூஸ் மீ‘’ என்றபடி பாத்ரூமுக்கு போனார்.
நான் எழுந்து எனது சாப்பாட்டு பொட்டலத்தைப் பிரித்தேன். பரோட்டாவும் முட்டைக் கறியும். பரோட்டா காய்ந்து வற்றல் போலிருந்தது. முட்டைக் கறியால் அதனைப் பொதுமவைத்துச் சாப்பிட்டேன். முட்டை, வாத்து முட்டையா என்று சந்தேகம் வந்தது. அதனை எடுத்து குழல்விளக்கின் வெளிச்சத்தில் உருட்டி உருட்டிப் பார்த்தேன்.
‘’வாத்து முட்டையின் கரு பச்சை நிறத்தில் இருக்கும்‘’ என்றபடி வெளியே வந்தார் அவர். ’’சற்றே பெரிதாக துர்நாற்றமும் வீசும்‘ ’என்றவர், ‘’துர்நாற்றமல்ல. நமக்குப் பழக்கமில்லாத ஒரு நாற்றம். கோழி முட்டையின் நாற்றத்துக்கு நாம் பழகியிருக்கிறோம். கொச்சி பக்கம் முட்டை என்றாலே வாத்து முட்டை தான். இது இங்கே கிடைக்கும் மலைக் கோழியாக இருக்கும். Semi-wild hen. வெறுமே சாப்பிடுகிறீர்களே? Appetizer எதுவும் வேண்டாமா? என்னிடம் ஜாக் டேனியல் இருக்கிறது’’ என்றார்.
எனக்கு ஒரு கணம் சபலம் தோன்றினாலும் மறுத்துவிட்டேன். ஏனோ அவரிடம் ஒரு விலகல் தோன்றியிருந்தது. அவர் என் எண்ணங்களை எல்லாம் எனக்குத் தோன்றும் ஒரு நொடி முன்பே படித்துவிடுவது போல ஒரு சிறிய அச்சம் ஏற்பட்டது. ஆசாமி அவரே சொன்னது போல பைத்தியம் இல்லை. ஆனால்…
அதன்பிறகு அவர் சற்றே மது அருந்தினார்.
பிறகு காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு படுத்துவிட்டார். நான் பரோட்டாவைத் தின்ன முடியாமல் சுருட்டி அறைக்கு வெளியே போய் எறிந்தேன். அந்த பங்களாவில் இருந்த மற்ற அறைகள் எதிலும் ஆட்களும் இல்லை. மின்சாரமும் இல்லை. ரிசப்ஷனில் இருந்த பையன் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக்கொண்டு எதையோ எழுதிக்கொண்டிருந்தான். ’’சார் உங்க ரூம்ல மட்டும்தான் கரண்ட் இருக்கு. அதான் அவரை அங்கே கொண்டுவிட்டேன்.’’
‘’வேற கெஸ்ட் யாரும் இல்லியா?’’
‘’இல்லை சார். இது கடுமையா மழை பெய்ற காலம் இங்கே. வெளியவே போக முடியாது. அதுனால டூரிஸ்ட் யாரும் வர மாட்டங்க. உங்களை மாதிரி, டாக்டர் மாதிரி யாராவது வருவாங்க’’
‘’டாக்டர் அடிக்கடி இங்கே வருவாரா?’’
அவன் தயங்கி, ‘’ஆமா. அவரு எங்க முதலாளியம்மாவுக்கு வைத்தியம் பார்த்தார்’’ என்று தலைக்கு மேல் காண்பித்தான். அங்கே ஒரு பெரிய படத்தில் ஒரு நடுவயதுப் பெண் காய்ந்த மாலை குங்குமத்திடையே சிரித்துக் கொண்டிருந்தாள். ’’அகஸ்தியர் மலை உச்சிலிருந்து தவறி விழுந்து செத்துப் போயிட்டாங்க.’’
‘’ஓ’’
‘’இங்கேதான் படுத்துக் கிடப்பேன். எதுனா வேணும்னா எழுப்புங்க சார்’’
‘’சரி’’
நான் வெளியே அடர்ந்து கிடக்கும் இருளைத் துளைத்துப் பார்க்க முயன்றேன். தூய இருள். மழை கனமாகப் பெய்யும் சத்தம் மட்டுமே கேட்டது. வேறு எதையுமே பார்க்க முடியவில்லை. நான் மெதுவாக எனது மொபைலின் வெளிச்சத்தில் அறைக்குத் திரும்பினேன். வராண்டா முழுவதுமே ஈரமாக இருந்தது. எனது சப்பல் அந்த ஈரத்தோடு ஒட்டிக்கொண்டு வர மறுத்தது. ஒரு பாசி மணம் எங்கும் நிரம்பியிருந்தது. பூனை ஒன்று என் பின்னாலேயே வருவது போல் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது. அதன் மெல்லிய தப்படிகள். ஆனால் திரும்பிப் பார்த்தால் ஒன்றுமில்லை.
அறைக்குள் டாக்டர் இப்போது சட்டையை எல்லாம் கழற்றிவிட்டு கைலிக்கு மாறியிருந்தார். பலகை போன்ற மார்புப் படமும் அதில் அடர்ந்திருந்த நரை கலந்த மயிர்க்காடும். அவரது புஜங்களில் கூட அந்த மயிர்ப்பரவல் இருந்தது.
அவர், ‘’Semi naked ape’’ என்று சிரித்தார். எழுந்து மீண்டுமொருமுறை ஜேக் டேனியல் புட்டியைச் சரித்து ஒரு மிடறு குடித்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்து கொண்டார். ’’உங்களது புத்தகங்களை எல்லாம் பார்த்தேன். மாண்டேய்ன், ரூசோ, அசோகமித்திரன், செஸ்டர்டன்… ஒரு பேய்க்கதை கூட இல்லை‘’ என்றார். ’’லவ்கிராப்ட், எட்கர் ஆலன் போ, ஏன் ஒரு ஸ்டீபன் கிங் கூட இல்லை? இந்தச் சூழலுக்கு, மது போல, பேய்க்கதைகள் நல்ல பொருத்தமாக இருக்கும் அல்லவா?’’
‘’எனக்கு கோட்டயம் புஷ்பநாத் கதைகள் பிடிக்கும்.’’
‘’நான் கோட்டயம் புஷ்பநாத் வகையைச் சொல்லவில்லை. கோட்டயம் புஷ்பநாத்துக்கு கோட்டயம் சொந்த ஊர் இல்லை. நாகர்கோவில் தான். ஒருவகையில் எனக்கு உறவு கூட வரும். நான் சொல்வது சற்று சீரியசான கதைகளை, பஷீர் எழுதிய நீல வெளிச்சம் போல, மலையாற்றூர் ராமகிருஷ்னன் எழுதிய யக்ஷி போல. தமிழில் நல்ல பேய்க் கதைகளே இல்லை. மேலை நாடுகளில் எல்லா மாஸ்டர்களும் ஒரே ஒரு பேய்க்கதையாவது எழுதியிருக்கிறார்கள்.”
‘’டால்ஸ்டாயும் தஸ்தாவ்ய்ஸ்கியும் எழுதியதில்லை.’’
‘’அவர்கள் புனித ஆவி பற்றி எழுதிக்கொண்டிருந்தார்கள்.’’
“‘தமிழில் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.’’
‘’ஆனால் அவரும் மலையாளி தானே?’
நான், ‘’புதுமைப்பித்தன் காஞ்சனை என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். தமிழின் மிகச் சிறந்த பேய்க்கதை காஞ்சனை தான்‘’ என்றேன்.
அவர், ‘’ஆம்‘’ என்றார். ’’காஞ்சனை’’, என்றவர் எழுந்து சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து, ‘’மே ஐ?’’ என்றார்.
‘’காஞ்சனா என்று எனக்கு ஒரு பேஷண்ட் இருக்கிறாள். அவளுக்கும் பேய் பிடித்துவிட்டது என்று தான் சொன்னார்கள். இப்போது நல்ல சுகமாக இருக்கிறாள்’’ என்றார். பிறகு, ‘’நான் மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள அத்தனை பேய்க் கதைகளையும் படித்திருக்கிறேன். கோட்டயம் புஷ்பநாத்தின் பெரும்பாலான கதைகள் ஐதீக மாலையின் ஏதாவது ஒரு வரியிலிருந்து தொடங்கி வளர்பவை. பஷீருக்கும் மலையாற்றுருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. பஷீர் பேய்களை நம்புகிறவர். மலையாற்றூர் தனது யக்ஷி கதைக்கு ஒரு பகுத்தறிவு முடிவு கொடுத்தார். பஷீர் ஒரு பிராந்தாஸ்பத்திரியில் இருந்தார். தெரியுமில்லையா?’’
‘’ஆக பஷீரின் பேய்க்கதைகள் அவரது மன நோயின் ஒரு பகுதி.”’
‘’அவரது கதைகள் அத்தனையுமே அவரது மன நோயின் ஒரு பகுதிதான். ஒரு கிறுக்கனால் தான் அப்படி எழுத முடியும்’’ என்றவர், ‘’மேலைக் கிறித்துவத்தில் புனிதக் கிறுக்கன் என்று சொல்வார்கள். டால்ஸ்டாயின் கதைகளில் இப்படிப்பட்ட புனிதக் கிறுக்கர்களை நிறைய காணலாம்.’’
‘’ஆம். ஆனால் அவர் தன் வாழ்க்கையில் கண்டதாகச் சொன்ன அமானுடப் பெண் அல்லது யக்ஷியை அவரது மனப் பிராந்து என்று பொற்றெகாட் அவரிடம் சொன்னபோது, ‘இருக்கலாம். பிராந்து யக்ஷியை உண்டாக்கியிருக்கலாம் அல்லது யக்ஷி பிராந்தை உண்டாக்கியிருக்கலாம்’ என்று சொன்னார் எனப் படித்திருக்கிறேன்.”
‘’நீங்கள் பேய்களை நம்புகிறீர்களோ?’’ என்று அவர் சிரித்தார். ’’அப்கோர்ஸ், நீங்கள் பேய்களை நம்பியாக வேண்டும். நீங்கள் ஒரு கவிஞர் அல்லவா? பருண்மை இல்லாத பொருட்கள் இல்லாவிட்டால் கவிஞர்கள் கவிதைகளுக்கு என்ன செய்வார்கள்?’’
நான், ‘’அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இடதுசாரிக் கவிஞர்களுக்கு எந்தவொரு மாயத் தோற்றமும் தேவைப்படுவதில்லை.’’
‘’புரட்சி ஒரு மாயத் தோற்றம்தானே?’’ என்றார். ’’Specters of Marx. கார்ல் மார்க்சின் பேய்கள். பேய்கள் என்பவை வந்தவை மட்டுமல்ல. வரவிருப்பவையும் கூட. அதாவது இறந்தவை மட்டுமல்ல. இன்னும் பிறக்காதவையும் கூடத்தான். ஆனால் என்னால் உங்கள் ஏமாற்றத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘பேய்களே இல்லாத உலகம்தான் எவ்வளவு பயங்கரமானது!’ என்றொரு கவிதை ஞாபகம் வருகிறது’’
‘’யார் எழுதியது?’’
‘’யாரோ போகன் சங்கர் என நினைக்கிறேன்.’’
‘’அவர் நல்ல கவிஞர் இல்லை. சில நல்ல கவிதைகள் மட்டும் எழுதியிருக்கிறார். இணையம் எழுப்பி வந்த குப்பைகளில் ஒருவர்.’’
‘’இருக்கலாம். இதை நான் இணையத்தில் வாசித்தேன். ஆனால், that poem argues my point’’
‘’உங்களுக்கு பேய்கள் நம்பிக்கை இருக்காது என்று எனக்குத் தெரியும். நீங்கள் டாக்டர். அதுவும் உளவியல் மருத்துவர். ஆனால் நீங்கள் உங்கள் வாழ்வில் மருத்துவக் கோட்பாடுகளைச் சந்தேகித்த ஒரே ஒரு கேசை கூடவா சந்திக்கவில்லை? ஆம் என்று சொன்னால் நான் உங்களைத் திறந்த மனம் இல்லாதவராகவும் நேர்மையற்றவராகவும் மட்டுமே கருதுவேன்.‘’
அவர் சிகரெட் புகைப்பதை நிறுத்திவிட்டு என்னையே பார்த்தார்.
‘’வெல். ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்’’ என்றார். ’’இந்தக் காஞ்சனை என்று சொன்னேன் இல்லையா? ஆனால் அந்த கேசின் முடிவு பகுத்தறிவின் பக்கமே முடிந்தது‘’ என்றவர், ‘’ஐ வில் டெல் யூ த ஸ்டோரி. ஒரு எழுத்தாளனுக்கு கதையை மறுக்கக்கூடாது. அது பாவம். ஆனால் அதைக் கேட்க நீங்கள் என்னுடன் குடிக்க வேண்டும்.”’
2
“இந்தக் கதையை நான் சற்று விரைவாகக் கூற வேண்டியிருக்கிறது. காரணம், நான் தூக்க மாத்திரை எடுத்திருக்கிறேன். அது வலுவாக அரை மணி நேரம் ஆகும். அதற்குள் இந்தக் கதையைச் சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.”
“அப்போது நான் திருநெல்வேலி என்.ஜி.ஓ காலனியில் க்ளினிக் வைத்திருந்தேன். பொதுவாக திருநெல்வேலியில் புகழ்பெற்ற டாக்டர்கள் அப்போது ஜங்ஷனிலோ டவுனிலோ அல்லது பாளையம்கோட்டை பகுதியிலோ தான் பிராக்டீஸ் பண்ணுவார்கள். ஆனால் மக்களுக்கு மனநல மருத்துவரிடம் போவதில் ஒரு தயக்கம் இருந்தது. மனநல மருத்துவரிடமும் செக்சாலஜிஸ்ட்டிடமும் வெளிப்படையாகப் போக பயப்படுவார்கள். முதலில் நெல்லையப்பர் சன்னதித் தெருவில் க்ளினிக் வைத்துவிட்டு ஒரு பேஷண்ட் கூட வராமல் ஈ ஓட்டியிருக்கிறேன். அப்போது தான் உங்களது இலக்கியப் பத்திரிகைகள், சுதிர் காக்கர் போன்று கண்டதையும் படித்தேன். அவ்வகையில் அந்தக் காலக்கட்டத்தின் லாபம் அதுதான். பண்டைய இந்திய வரலாற்றில் மன நோய்கள் எவ்விதம் பார்க்கப்பட்டிருக்கின்றன, சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் விரிவாகப் படித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதி இந்தியன் சைக்கியாட்ரிஸ்ட் அசோசியேஷன் ஜர்னலுக்கு அனுப்பினேன். அவர்கள் அதை உடனே மறு தபாலிலேயே திருப்பி அனுப்பிவிட்டார்கள்” என்று சிரித்தார். ’’கடைசியில் அந்தக் கட்டுரையை உங்களது சிறு பத்திரிகைகளில் ஒன்றுதான் பிரசுரித்தது.’’
‘’அப்படியா? உங்கள் ஆட்கள் ஏன் அதைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்?’’
‘’அவர்கள் மடையர்கள் என்பதால். அது வேறு கதை. அதைச் சொல்லப் போனால் இந்த அரை மணிக் கூறுக்குள் கதை முடியாது.’’
‘’சரி. சொல்லுங்கள்’’
‘இந்தக் காஞ்சனா என்ற பெண்தான் எனது பேஷண்ட். இவளுக்கு மனநிலை சரியில்லை என்று என்னிடம் கூட்டி வந்தார்கள். ரொம்ப சிவியர் ஸ்கிட்ஸோப்ரீனியா. திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ள எல்லா டாக்டர்களிடமும் காண்பித்துவிட்டு என்னிடம் கூட்டி வந்தார்கள். ரொம்ப வயலண்டாக இருந்தாள். ஆடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக வெளியே ஓடிவிடும் பழக்கமும் இருந்தது. யார் வீட்டுக்கு ஓடுகிறாள் என்றால் ஜெயந்தியக்கா என்ற அவளது தோழி வீட்டுக்கு. இந்த ஜெயந்தியக்கா ஒன்றரை வருடம் முன்பு ஒரு நாள் அதிகாலையில் தனது வீட்டு மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாள். இந்தக் காஞ்சனையும் ஜெயந்தியும் சிறுவயதிலிருந்தே மிகவும் நெருங்கிய தோழிகள். இருவரும் மாற்றி மாற்றி ஒருவர் வீட்டிலேயே சாப்பிட்டு, உறங்கி, அதிகாலையில் ஆற்றுக்கு சேர்ந்தே போய், பள்ளிக்கூடத்துக்கும் சேந்தே கைபிடித்துப் போய் என்று மிக நெருக்கம். செத்துப்போன ஜெயந்திக்கு காஞ்சனையை விட மூன்று வயது அதிகம். இருவருக்கும் தேக சம்பந்தமும் இருந்திருக்கலாம் என்பது எனது கருத்து.’’
‘’அப்படியென்றால்..’’
‘’ஓர்பால் உறவுதான். இதில் ஜெயந்திதான் முன்கை எடுத்திருக்க வேண்டும். அவள் காஞ்சனாவின் உடலைப் பயன்படுத்தியிருக்கிறாள். இவளும் ஒத்துழைத்திருக்கிறாள். இதன் நடுவில் ஜெயந்திக்கு கல்யாணம் ஆகிவிட்டது. கல்யாணம் ஆன நாளிலிருந்தே ஜெயந்திக்கும் அவள் புருஷனுக்கும் ஒத்துப்போகவில்லை. எப்படி ஒத்துப்போகும்? ஜெயந்தியின் திசை வேறு. அவனுக்கு விஷயம் புரிய சற்று காலம் எடுத்தது. அவன் காஞ்சனாவின் வீட்டுக்குப் போகக்கூடாது என்று தடை விதித்தான். அவள் ஒத்துக்கொள்ளவில்லை. மீறி வந்திருக்கிறாள். அவன் இங்கு வந்து சண்டை போட்டிருக்கிறான். அப்போது தான் காஞ்சனாவின் வீட்டுக்கும் இந்த உறவில் இப்படி ஒரு கோணம் இருக்கிறது என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவர்களும் எடுத்துச் சொல்லி கேட்கவில்லை என்றதும் தடை போட்டிருக்கிறார்கள். விஷயம் கைக்குள் நிற்கவில்லை. ஒரு நாள் இரவு காஞ்சனா வீட்டுக்கு வந்து ஜெயந்தி பேசிக்கொண்டு இருந்திருக்கிறாள். அப்போது காஞ்சனாவின் அண்ணன் வந்து கடுமையாகப் பேசி அவளை வெளியே துரத்தியிருக்கிறான். மறுநாள் அதிகாலை தான் ஜெயந்தி தற்கொலை செய்துகொண்டாள்’’
‘’ஓ! அந்த அதிர்ச்ச்சியில் காஞ்சனாவுக்கு சித்தம் கலங்கிவிட்டது. இல்லையா?’’
‘’ஒருவகையில் அப்படித்தான். ஆனால் ‘the devil is in the details’ இல்லையா? நீங்கள் குடிக்கவே இல்லியே?’’
நான் அவரிடமிருந்து பாட்டிலை வாங்கி ஒரு வாய் சரித்துக்கொண்டேன். சரியாக சாப்பிடாததால் சட்டென்று தலைக்கு ஏறுவது போல பட்டது.
‘’விஷயம் என்னவெனில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி ஜெயந்தி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிகாலை ஒரு மணிக்கு. ஊருக்குத் தெரியவந்தது காலை சுமார் எழு மணிக்கு. ஆனால் காலை சுமார் ஐந்து மணி போல ஜெயந்தி காஞ்சனா வீட்டுக்கு வந்திருக்கிறாள்.’’
நான் சற்று பலவீனமாக, ‘’அது எப்படி?’’
“எப்போதும் செல்வது போல அவர்களுடன் குறுக்குத்துறை ஆற்றுக்கு குளிக்கப் போகும் முப்பிடாதி என்ற பெண் அப்படித்தான் சொல்கிறாள். அதிகாலை சுமார் ஐந்து மணிக்கு ஜெயந்தி வந்து முப்பிடாதியின் வீட்டுக்கு வெளியே இருந்து கூப்பிட்டிருக்கிறாள். காஞ்சனாவை கூட்டி வரும்படி கேட்டிருக்கிறாள். பிரச்சினையாக இருப்பதால் முப்பிடாதி மூலம் ஜெயந்தியை அழைத்திருக்கிறார்கள். முப்பிடாதி வந்து அழைத்ததால் காஞ்சனாவின் வீட்டிலும் விட்டிருக்கிறார்கள். மூவரும் சேர்ந்து அந்தக் கருக்கல் ஒளியில் தாமிரபரணிக்கு குளிக்கப் போயிருக்கிறார்கள். வழி முழுவதும் ஜெயந்தி காஞ்சனாவை முத்திக்கொண்டே இருந்தாள் என்றும் அழுதுகொண்டே இருந்தாள் என்றும் முப்பிடாதி சொல்கிறாள். கருப்பந்துறை மயான விலக்கு வரும்போது அவள் ஓவென்று கதறினாள் என்றும் கூட முப்பிடாதி சொல்கிறாள்.’’
எனக்கு இலேசாக போதை ஏறுவது மட்டுப்படுவது போல இருந்தது.
‘இந்த முப்பிடாதிக்கும் பைத்தியமா?’’
‘’சேச்சே. அவள் நன்றாக புள்ளைக் குட்டிகளோடு இருக்கிறாள். ஆனால் இப்போதும் ஜெயந்தி அன்று காலையில் தங்களோடு குளிக்க வந்தாள் என்று சத்தியம் பண்ணுகிறாள்.’’
‘’காஞ்சனாவின் வீட்டில் என்ன சொல்கிறார்கள்?’’
‘’அவள் ஆற்றுக்குப் போய்விட்டு வந்ததிலிருந்தே அவளது மன நிலை தவறிவிட்டது என்று சொல்கிறார்கள். அவள் அப்போதே ஒரே நேரத்தில் காஞ்சனாவாகவும் ஜெயந்தியாகவும் மாறி மாறிப் பேச ஆரம்பித்துவிட்டாள். அதாவது ஜெயந்தி செத்துப் போனது ஊருக்குத் தெரியும் முன்பே. இருவரும் இப்போது ஒரே தேகத்தில். ஜெயந்தியாக இருக்கும்போது அவள் ரொம்ப வயலண்டாக ஆகிவிடுவாள். உடைகளைக் களைந்துவிட்டு தனது கணவனது வீட்டுக்கு ஓட நிற்பாள். அவனைக் கொல்வது அவளது இலட்சியமாக இருந்தது.’’
நான், ’’ம்ம்‘’ என்றேன். நான் அந்த வறண்ட புரோட்டாவைச் சாப்பிட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது.
‘’வழக்கமாக எல்லா டாக்டர்களும் இவ்வளவு விலாவரியாக ஒரு கேசின் பின்புலத்தை ஆராய்வர்களா டாக்டர்?’’
‘’அட! அவர்கள் அடிப்படையாக சில கேள்விகள் கேட்பார்கள். காதில் குரல் கேட்கிறதா, உங்களுக்கு நீங்கள் வேறு ஒரு நபர் என்று தோன்றுகிறதா என்றெல்லாம் பரிசோதிப்பார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே மாத்திரை கொடுத்துவிட்டு மறந்துவிடுவார்கள். நான் சுதிர்காக்கரின் மாணவன். அவர்தான் இந்தியாவின் முதல் சைக்கோ அனலிஸ்ட். காந்தியின் சீடர் கூட. இப்போதும் இருக்கிறார். அவருடன் இப்போதும் கடிதத் தொடர்பு உண்டு. புது யுக டாக்டர்கள் சைக்கோ அனலஸிஸ் எல்லாம் கதை என்று நினைக்கிறார்கள்.’’
‘’இந்தக் கதையின் முடிவு என்ன டாக்டர்?’’
‘’நான் அதுவரை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்திருந்த மருத்துவத்தை எல்லாம் புரட்டிப் பார்த்தேன். எலக்ட்ரிக் ஷாக், செரடோனின் ரீஅப்டேக் தடுப்பான்கள் என அன்றைக்கு வந்திருந்த எல்லா கெமிக்கல் குப்பைகளையும் அவள் தலைக்குள் கொட்டியிருந்தார்கள். எதற்கும் அந்த ஜெயந்தி அசைந்து கொடுக்கவில்லை.’’
‘’அப்படியானால் பேய் என்று ஒன்று இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?’’
அவர் சிரித்து, ‘’ஒரு விஷயத்தை தீவிரமாக நீங்கள் நம்பும்போது அது பருப்பொருள் ஆகிவிடுகிறது. இதோ இந்த மேசையைப் போல’’ என்று அவர் மேசையை உதைத்தார். ’’உண்மையில் இதைச் சொன்னது கார்ல் மார்க்ஸ் என்று அறிய உங்களுக்கு வியப்பாக இருக்கும். அதை அவர் வேறொரு பொருத்தலில் சொன்னார் என்பது இருக்கட்டும். பல்லாயிரம் பேர் சேர்ந்து ஒன்றை நம்பும்போது அதற்கு ஒரு உயிரும் பௌதீகத் தன்மையும் வந்துவிடுகிறது. உதாரணமாக மதங்கள். மதங்கள் உண்மைத்தன்மை அடிப்படையற்ற கருத்து ஒன்றின் மீது கட்டப்பட்டிருந்தாலும் பல லட்சம் பேர் அதை நம்புவதால் அது ஒரு பௌதீகப் பொருளாகி விடுகிறது. அதை அப்படியே அணுகவேண்டும்.’’
‘’நீங்கள் இந்த ஜெயந்தியை எப்படி அணுகினீர்கள்?’’
‘’ஆசான் மார்க்ஸ் சொன்னது போலவேதான். ஜெயந்தியின் ஒரே லட்சியம் அவளது கணவனைக் கொல்வதாக இருந்தது. அவன் மீது முதலில் போலீசாருக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஆனால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் தெளிவாக இருந்தது. அது தற்கொலை தான். ஆனால் ஜெயந்தியின் பார்வையில் அவன்தான் அவளது சாவுக்குக் காரணம். அவன் கொஞ்ச நாள் நெல்லையில் நாய் போல கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேசனுக்கும் திரிந்துவிட்டு சென்னைக்குப் போய்விட்டான். நான் கொஞ்ச நாள் மருந்துகளை மாற்றி மாற்றிக் கொடுத்துப் பார்த்தேன். கொஞ்சம் கூட குணம் இல்லை. எனவே ஜெயந்தியின் விருப்பப்படி அவளது கணவனைக் கொல்வது என்று முடிவெடுத்தேன்’’
‘’டாக்டர்!’’
‘’பயப்படாதீர்கள். ஒரு mock killing. என்னுடைய பத்திரிகைத் துறை நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரை வைத்து ஜெயந்தியின் கணவன் மதுரையில் ஒரு லாட்ஜில் வைத்து தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்தி உள்ளது போல் எல்லாப் பத்திரிகை மாடல்களிலும் சிவகாசியில் ஒரு ப்ரஸ்ஸில் ப்ரிண்ட் செய்தேன். போலிப் பத்திரிகை, போலிச் செய்தி. சில பிரதிகள் மட்டும். உண்மையில் அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம். ஒரு நாள் மாலை காஞ்சனா என்கிற ஜெயந்தியை அவளது அம்மாவோடு மட்டும் க்ளினிக்குக்கு வரச் சொன்னேன். நர்ஸை எல்லாம் அனுப்பிவிட்டு சில சடங்குகள் போன்ற விஷயங்களைச் செய்துவிட்டு ஜெயந்தியிடம் அவளது கணவன் இறந்த பத்திரிகைச் செய்தியைக் காண்பித்தேன். முதலில் அவள் நம்பவில்லை. ஆனால் நான் அவன் புகைப்படம் போட்டிருந்த மாலை தினசரிகளைக் காண்பித்ததும் அவள் நம்பிவிட்டாள். நெல்லையைச் சேர்ந்த வாலிபர் மதுரை விடுதியில் தற்கொலை!’’
‘’இது மணிச்சித்திரத்தாழ் திரைப்படத்தில் வருவது போல அல்லவா?’’
‘’அதேதான். ரொம்ப ஒரிஜினலான ஐடியா என்று இதைச் சொல்லவில்லை. ஆனால் எபக்டிவ்’’
‘’அவளுக்குக் குணமாகி விட்டதா?’’
‘’ஆமாம்’’
‘’திரும்ப வரவே இல்லையா?’’
‘’இல்லை”’
எனக்குச் சற்று குழப்பமாக இருந்தது.
‘’ஆனால் நீங்கள் சொன்னது பொய் அல்லவா?’’
‘’ஜெயந்தியே ஒரு பொய்தானே?’’
‘’ஓ‘’ என்றேன். எனக்குச் சப்பென்று இருந்தது. ’’ஆனால்…..’’ என்று இழுத்தேன். ’’சரி…..”’
‘’ஏமாற்றமாக இருக்கிறதோ? ஆனால் இந்தக் கதையில் ஒரு இடம் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. நீங்கள் அதைக் கவனிக்கவில்லை’’
‘’எது?’’
‘’முப்பிடாதி. அவள் ஒரு இண்டிபெண்டண்ட் விட்னஸ்.’’
‘’ஆம். அவளை எப்படி விளக்குவீர்கள்?’’
‘’அவளும் ஒரு மன நோயாளி என்றுதான்’’ என்று அவர் சிரித்தார். ’’அவளுக்கு ஏற்பட்டது ஒரு தற்காலிக பிரமை. உருவெளித் தோற்றம்’’
‘’இரண்டு மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பிரமை ஏற்படுவது சாத்தியமா?’
‘’சாத்தியம். 1940-களில் ஆர்சன் வெல்சின் ஒரு ரேடியோ நாடகத்தைக் கேட்டுவிட்டு உண்மையான செய்தி என்று நம்பி செவ்வாய்க் கிரகவாசிகள் பூமிக்கு வந்துவிட்டார்கள் என்று பயந்து ஆயிரக்கணக்கான பேர் தங்கள் வீடுகளைக் காலி பண்ணிவிட்டு வேறு இடங்களுக்கு அமெரிக்காவில் தப்பியோடி இருக்கிறார்கள்.’’
‘’அப்படியானால் அவளையும் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் இல்லையா?’’
‘’தேவையில்லை. அது அவளது இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காத வரைக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் அவளுக்கு இப்படி ஒரு வீக்னெஸ் அவள் மன அமைப்பில் இருக்கிறது. சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவ்வளவு தான். அவள் ஒரு மோசமான சூழலில் முற்றிலும் தன்னை இழந்துவிடலாம். அப்போது சிகிச்சை தேவைப்படும்.’’
‘’ம்ம்’’
‘’சரி தூங்குவோம். எனது மாத்திரை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.’’
‘’சரி டாக்டர். குட் நைட்’’. நான் எழுந்து லைட்டை அணைத்தேன். அதுவரை கேட்காதிருந்த மழைச் சத்தம் திடீரென்று கேட்பது போல் பட்டது. ஒருவேளை மழை அதிகரிக்கிறதா?
டாக்டர் உறங்கிவிட்டார். நான் வெகுநேரம் புரண்டு கொண்டிருந்தேன். அவ்வப்போது கண்ணாடி ஜன்னல் வழியே உள்ளே வெட்டிய மின்னல்களின் நீல வாள்கள் வேறு இமைகளுக்குள் ஊடுருவி தூக்கத்தின் சரடை அறுத்தன. எப்படியோ கண் அசந்துவிட்டேன். எப்போது எதற்காக விழித்தேன் என்று தெரியவில்லை. திடுக்கிட்டு விழித்தேன். மொபைலை உயிர்ப்பித்து மணியைப் பார்த்தேன். 1.23 am. யாரோ எதையோ திறக்க முயல்வது போல் சுரண்டுவது போல் சத்தம்.
டாக்டரைப் பார்த்தேன். அவரிடம் எந்த அசைவும் இல்லை.
ஜன்னல் கண்ணாடியோடு ஒட்டி நின்ற செடி மழையால் அறையப்பட்டு சன்னலோடு மோதிக் கொண்டிருந்தது மின்னல் ஒளியில் தெரிந்தது. அது அந்தச் செடி அறைக்குள் புக முயற்சிப்பது போல் தோன்றியது.
என் மனம் ஆசுவாசமடைந்த போது அதை மீறிய இன்னொரு சத்தமும் அங்கே இருப்பதை உணர்ந்தேன்.
ஒரு பெண்ணின் விசும்பல் சப்தம்.
பெண்?
எனக்கு வராண்டாவில் ஒரு பூனை ஒன்று பின்னால் வருவதைப் போல உணர்ந்தது நினைவுக்கு வந்தது.
பூனைதான்.
நான் கண்களை மூடிக்கொண்டு திரும்பவும் தூங்க முயற்சி செய்தேன்.
இம்முறை மீண்டும் அந்த சப்தம். வெறும் விசும்பலாக இல்லாமல் வார்த்தைகளாகவும் திரண்டு..
நான் சட்டென்று எழுந்து விளக்கைப் போட்டேன். எரியவில்லை. சனியன். இங்கும் பியூஸ் போய்விட்டதா அல்லது மின்சாரம் போய்விட்டதா?
நான் மொபைல் டார்ச்சை உயிர்ப்பித்து, ‘டாக்டர், டாக்டர்’ என்று கூப்பிட்டேன். அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். நான் கதவைத் திறந்து வராண்டாவைப் பார்த்தேன். அங்கே யாருமில்லை. கடும் குளிர் முகத்தில் அறைந்தது. பூனைகள் எதையும் காணவில்லை. நான் சற்றே தயங்கி, வழுக்காமல் கவனமாக அடி எடுத்து வைத்து ரிசப்ஷனுக்குப் போனேன். ’’தம்பி… ஏய் தம்பி…’’
அங்கே அவன் தலை வரை மூடி தூங்கிக் கொண்டிருந்தான்.
எனக்குச் சட்டென்று நாணம் ஏற்பட்டது. கவிஞர்களால் பேய்களை நம்பாமல் இருக்க முடியாது என்று டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது. திரும்ப அறைக்கு வந்தேன். கதவைத் திறக்கும் போது மீண்டும் அந்த ஓசையைக் கேட்டேன். ஒரு பெண் விசும்பும் சப்தம்.
இப்போது அறைக்குள்ளிருந்து! இம்முறை அதன் வார்த்தைகளை இனம் பிரித்து உணரக்கூட என்னால் முடிந்தது.
‘’ராமேந்திரா! என்னை விடுடா!”’
நான் மயிர்க்கூச்செறிந்து அப்படியே நின்றேன்.
அடுத்து அது சொன்னதுதான் என்னை அதிரடித்தது.
‘’அண்ணே, ரைட்டர் அண்ணே! இந்த மலையாள டாக்டர்கிட்ட இருந்து எப்படியாவது என்னைக் காப்பாத்துண்ணே, இவன் என்கிட்டே பொய் சொல்லிட்டான். எனக்கு அவனைக் கொல்லனும். அவனை அப்புறம் என்கிட்டே பொய் சொன்ன இவனை.. பொறவு என் காஞ்சனாவைப் பார்க்கணும்.. அண்ணே… தயவு பண்ணுண்ணே.. அண்ணே உன் தங்கச்சியா நினைச்சுக்கண்ணே.. எங்களை ஏன்னே வாழவே விட மாட்டேங்கிறீங்க? அண்ணே…’’
அடுத்து என்ன நிகழ்ந்தது என்று எனக்கு நினைவே இல்லை.
கடும் காய்ச்சலில் நான் விழுந்துவிட்டதாக லாட்ஜில் சொன்னார்கள். நான் விழித்தபோது அம்பாசமுத்திரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அவர்கள் தான் என்னைச் சேர்த்திருக்க வேண்டும். முதலில் டெங்குவாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டார்கள். டெஸ்ட்டில் ஒன்றும் காட்டவில்லை. பிறகு Scrub Typhus என்று சந்தேகப்பட்டார்கள். அந்தப் பகுதிகளில் பழ உண்ணிகள் போன்ற பூச்சிகள் அதிகம். ஆனால் நான் நான்காம் நாள் குணமடைந்து விட்டேன். ஒரு டாக்சி வைத்துக்கொண்டு நாகர்கோவில் வந்தேன். இரண்டு நாட்கள் எதையும் நினைக்காமல் சும்மா தூங்கித் தூங்கி எழுந்துகொண்டிருந்தேன்.
மூன்றாவது நாள் திருநெல்வேலியில் இருக்கும் எனது டாக்டர் நண்பருக்கு போன் செய்தேன். அவரும் உளவியல் நிபுணர்தான். ’’தோழர், உங்களுக்கு டாக்டர் ராமேந்திரன்னு யாரையாவது தெரியுமா?’’
‘’யாரு?’’
‘’டாக்டர் ராமேந்திரன்’’
‘’அவரு எங்க சீனியர். அவர் இப்போ ப்ராக்டிஸ்ல இல்லியே?’’
‘’ஏன்?’
‘’ஆளு கொஞ்சம் எக்ஸன்ட்ரிக். எம் சி ஐ அன்எதிகல் பிராக்டிஸ்னு ஆறு மாசம் பான் பண்ணிச்சு அவரை. அதுக்கப்புறம் அவரு திரும்ப வரவே இல்லை. ஆனா ஆளு ப்ரில்லியண்ட். சக்சஸ் ரேட் மிக அதிகம். மத்தவங்களால குணப்படுத்த முடியாத கேசையெல்லாம் குணப்படுத்திக் காமிச்சிருக்காரு. அந்த மாதிரி கேசுகளை மட்டும்தான் எடுப்பாரு. கொஞ்சம் பொம்பள வீக்னெஸ் உண்டு. அதாவது பரவாயில்லை. க்ளினிக்கல் ப்ரோட்டோகாலை மீறி என்னென்னவோ பண்ண ஆரம்பிச்சிட்டார்.’’
‘’என்னென்னவோன்னா?’’
‘’முதல்ல ஹார்ம்லெஸ்ஸா சைக்கோ அனலிஸிஸ் டெக்னிக்ஸ்னுதான் ஆரம்பிச்சாரு. அப்புறம் தான்….’’
‘’அப்புறம் தான்…?’
‘’மாந்திரீகம்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு.’’
3
‘’வென்றிலாக்கிசம்’’ என்றது அந்தக் குரல். ’’குரல் நாண்களைக் கட்டுப்படுத்தி வாயைத் திறக்காம பேசற ஒரு கலை. தமிழ்ல ஒரு கமல்ஹாசன் படத்துல கூட வரும்’’
‘’டாக்டர் நீங்கதானா?’’
டாக்டர், ‘’நாந்தான்‘’ என்று போனில் சிரித்தார்.
‘’ஒரு சிறிய விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சேன். அதுக்கே உங்களுக்கு ஜன்னி வந்திடிச்சி. நிஜமாவே பேய் வந்தா என்ன பண்னுவீங்க?’’
‘’இந்த போன் நம்பர் எப்படி கிடைச்சது டாக்டர்?’’
‘’எலிமெண்டரி வாட்சன். லாட்ஜ் பையன் கிட்டே வாங்கினேன்.’’
‘’அப்போ பேய் என்பது இல்லை, இல்லையா?’’
‘’தெரியலை. எனக்கும் இந்தக் கேள்வி இருக்கு. நான் சொன்ன இந்த கதைல வருகிற முப்பிடாதிங்கிற பொண்ணுக்கு இதுக்கு விடை தெரிஞ்சிருக்கலாம். நீங்க அவளை ஏன் சந்திச்சுப் பேசக்கூடாது? நான் அவ விலாசம் தரேன்.”
நான் பேசாதது கண்டு, ‘’இதுதான் கவிஞனுக்கும் தத்துவவாதிக்கும் உள்ள வித்தியாசம். கவிஞனுக்கு கேள்விகளின் வசீகரம் போதும். அவனால் அவற்றின் பின்தொடர்ந்து ஆழமாக செல்ல முடியாது. அதனாலதான் அவன் ஒரு மோசமான காதலனாகவும் இருக்கான்.’’
நான், ‘’அப்படியில்லை’’ என்றேன். ’’நீங்க அந்தப் பொண்னுகிட்டே பேசிப் பார்த்தீங்களா?’’
‘’இல்லை, சில சூழ்நிலைகளினால் அவ கிட்டே என்னால பேச முடியலை. இப்போ என்னால நெல்லைக்குள்ளேயும் போக முடியாது’’
‘’நீங்க சொன்னது சரிதான். எனக்கு இப்போ இதுல ஆர்வம் போயிடுச்சு.’’
‘’ஓ’’ என்றார். அவர் குரலில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது. ‘’எனிவே நீங்க எப்பவாவது நெல்லைக்குப் போனீங்கன்னா, வேற வேலை எதுவும் இல்லைன்னா, அந்தப் பொண்ணைப் போய்ப் பாருங்க. அவகிட்ட கேட்க எனக்கு சில கேள்விகள் இருக்கு. அவளோட வீடு….’’ என்று விலாசம் சொன்னார்.
நான் அதனை மறந்துவிட்டேன். அதன்பிறகு என் சொந்த வாழ்க்கையில் சில கடும் பிரச்சனைகளைச் சந்தித்தேன். அப்பாவுக்கு திடீரென்று ஒரு முழுச் சந்திர கிரகண தினத்தன்று மனநிலை தவறிவிட்டது. அவருக்கு ஒரு வருடம் முன்புதான் பை பாஸ் செய்திருந்தார்கள்.
நான் எனது நண்பரிடம் தான் கூட்டிப் போனேன். அவருக்கு அக்யூட் ஸ்கிட்ஸோப்ரீனியா என்று அவர் சொன்னார். ’’உங்கள் குடும்பத்தில் முன்பு யாருக்காவது இருந்திருக்கிறதா?’’ எனக்குத் தெரியவில்லை. பொதுவாக நாங்கள் இயல்பிலேயே சற்று ஒடுங்கிய குடும்பம். தாத்தா சின்ன வயதிலேயே இறந்துவிட்டார். ஆச்சி வழியில் இருந்ததா என்று கேட்க அவள் உயிருடன் இல்லை. சித்தப்பாவிடம் பேச்சு வார்த்தை இல்லை. ’’பொதுவாக, இளமையில் ஒருவர் செக்ஸுவலாக ஆக்டிவாக இருக்கும் காலக்கட்டத்தில் தான் மனச்சிதைவு நோய் தாக்கும்‘’ என்றார் நண்பர்.
‘’பைபாஸ் சர்ஜரி பண்ணின குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு மூளைக்குப் போகிற ரத்த ஓட்டம் குறைந்து போய் இப்படி ஆகிவிடுவதுண்டு என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இன்னும் நிரூபிக்கப்படவில்லை.’’
காரணம் எதுவாயினும் அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டார். என்னை பல நேரங்களில் அவருக்கு அடையாளம் தெரியவே இல்லை. சில நேரங்களில் அவரை அடித்து பூட்டி வைக்க வேண்டியிருந்தது. அதை நான் இந்தப் பாவப்பட்ட கரங்களால் செய்தேன். ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கிற வீடு கண் முன்னால் இடிந்து விழுவதைப் போன்றதொரு காட்சியை நாங்கள் காண நேரிட்டோம்.
மனச்சிதைவுக்குத் தரப்பட்ட மாத்திரைகளும் அவரது இதய நோய்க்கான மாத்திரைகளும் ஒன்றுக்கொன்று அவர் உடலில் சண்டையிட்டன. அவர் உடலிலிருந்து சதையை யாரோ உருக்கி எடுத்தார் போல் வற்றிப்போனார். “கால்வலி, கால்வலி” என்று கத்திக்கொண்டே இரவெல்லாம் இருந்தார். யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள் என்று என்னென்னவோ தகடுகளை அம்மா வீட்டுக்குக் கொண்டுவந்தாள். அப்பா நடிக்கிறார் என்றோ அவரது உறவினர்களின் பில்லி சூனியம் என்றோ அவள் கருதினாள்.
இந்த விஷயத்தில் எனது மனைவி நடந்துகொண்டது தான் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அப்பாவுக்கு மனநிலை தவறியதும் அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தனது வீட்டுக்குப் போய்விட்டாள். அப்பாவுக்கு ஒழுங்காக மாத்திரைகளைத் தரவேண்டியது அவசியம். அம்மாவுக்கு அந்த விஷயமே புரியாது. எனக்கு ஆபீசில் விடுமுறை தரமாட்டார்கள். நான் தவித்தேன். அவளிடம் விஷயத்தை விளக்கி வீட்டுக்குத் திரும்ப வரச் சொன்னேன். அவளது அம்மா, ‘’குழந்தையையும் வச்சுக்கிட்டு மனநிலை சரியில்லாத ஒருத்தர் இருக்கற வீட்டுல சின்னப் பொண்னு எப்படி இருப்பா?’’ என்றார். நான் அங்கேயே உடைந்து அழுதேன். அவளது அப்பா வந்து, ‘’நீங்க இவ்வளவு டிராமா பண்ண வேண்டிய அவசியமே இல்லை. முன்னமே உங்க அப்பாவுக்கு இப்படி வந்திருந்தா நாங்க உங்க வீட்டுக்கு பொண்ணைக் கொடுத்திருக்கவே மாட்டோம்’’ என்றார். ’’ஒருவேளை இது பரம்பரை நோயா இருந்தா?’’
நான் அதிர்ச்சி அடைந்தேன். அன்று வீட்டுக்கு வந்து, ‘’அவன் வந்துட்டான். வெளியே நிக்கான். நம்ம வீட்டைத் தீ வச்சிக் கொளுத்தப் போறான்’’ என்று வெளியே ஓடிய அப்பாவைக் கடுமையாக அடித்து இழுத்து அறையில் இட்டுப் பூட்டினேன்.
நான் மெடிக்கல் லீவ் போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்து அப்பாவுக்கு மருந்துகளைக் கொடுத்தேன். ஆபீசில் அதை மறுத்து மெடிக்கல் போர்டுக்கு மறு ஆய்வுக்கு அனுப்பினார்கள். நான் போகவில்லை. இந்த தேதிக்குள் நான் பணியில் சேராவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தபால் வந்தது.
இந்தக் காலக்கட்டத்தில் தான் நான் உணர்வுப்பூர்வமாக இதுபோன்ற இடர்களைச் சமாளிக்கும் ஆற்றலும் மனத் துணிவும் உடையவன் அல்ல என்று உணர்ந்தேன். மாத்திரைகள் கொடுத்தும் அப்பாவின் பிரமைகள் நீங்கவில்லை. தீவிரமடைந்தன. நான் மெதுவாக நவீன மன சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இழக்க ஆரம்பித்தேன். டாக்டர் ராமேந்திரனின் பேச்சு நினைவுக்கு வந்தது. துரதிர்ஷ்டவசமாக நான் அவரது எண்ணை சேமித்து வைத்துக் கொள்ளவில்லை. நான் நண்பனுக்கு ஃபோன் செய்து அவன் எங்கிருக்கிறான் எனக் கேட்டேன். இந்த இடைப்பட்ட சமயத்தில் நாங்கள் ஒருமையில் விளித்துக் கொள்ளும் அளவுக்கு நட்பாகி இருந்தோம். அவரால்தான் அப்பாவை குணப்படுத்த முடியும் என்று தோன்றியது. அவன், ‘’எதுக்கு?‘’ என்றான். அவன் என் ஏமாற்றத்தை உணர்ந்திருந்தான். ’’அவர் நெல்லையை விட்டு போய் பத்து வருடங்களுக்கு மேல் இருக்குமே? உன் மூலமாகத் தான் மீண்டும் நான் அவரைக் கேளவிப்பட்டேன். அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்குத் தெரியும்?’’ என்றான். பிறகு, ‘’விசாரிக்கிறேன்’’ என்றான்.
நான் இப்போது நவீன மன சாஸ்திரத்தை விட்டுவிட்டு வேறு வழிகளைத் தேட ஆரம்பித்தேன். Dianetics, Mad pride movement பற்றியெல்லாம் படித்தேன். விக்கிரவாண்டி ரவிச்சந்திரனிடம் போன் செய்து பேசினேன். அவர் எனது அம்மாவைப் போலத்தான் பேசினார். எனது அப்பாவின் உடலில் வேறொரு ஆன்மா இருக்கிறது என்றார். எங்கள் உறவினர்கள் யாரோ கரும காரியம் செய்து விட்டார்கள் என்றார். யார் அப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை. அப்பா மிக மென்மையான மனிதர். அம்மா, அப்பாவின் வாழ்க்கையில் எப்போதோ வந்த ஒரு பெண் பற்றிப் பேசினாள். எல்லாம் அபத்தம். சிலர் சில கோவில்களுக்குப் போகச் சொன்னார்கள்.
அப்படியொரு கோவில்தான் மதுரைக்குப் பக்கத்தில் உள்ள திருமோகூர் என்ற ஊர்க் கோவில். திருமாலின் சுதர்சனச் சக்கரம் சக்கத்தாழ்வாராக அங்கே இருக்கிறார். சக்கரத்தாழ்வாருக்குப் பின்னால் யோக நரசிம்மர்.
வெளியே பெரிய ஆல மரங்கள் நடுவே கோவில் அதிகக் கூட்டமில்லாமல் இருந்தது. அப்பாவைக் கூப்பிட்டு போய் சன்னிதியில் நிற்க வைத்தோம். பட்டர், ‘’இங்கே வாறவங்கல்லாம் இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவங்க தான். நம்பிகையோட போங்க‘’ என்று பூசை செய்து செந்தூரமும் கொடுத்து விட்டார்.
அதிசயப்படும் விதமாக அங்கிருந்து திரும்பி வரும்போது அப்பா அமைதியாகி இருந்தார். எங்கோ யாரோ பேசுவதை, ஆணையிடுவதை, தலை சாய்த்து உற்றுக் கேட்பதை, நிறுத்தி இருந்தார். இரண்டே நாட்களில் அவரது மாற்றம் வெகுவாக இருந்தது. ஒரு நாள் தானே போய் முடிவெட்டிக் கொண்டார். ஒரு நாள் பூர்ணகலா தியேட்டரில் போய் படம் பார்த்துவிட்டு வந்தார். ஏதோ வெங்கடேஷ் நடித்த ஒரு தெலுங்கு டப்பிங் படம். “படம் நல்லா இல்லே” என்று சொன்னார். நான் அவரை அம்மாவிடம் விட்டுவிட்டு ஆபீசுக்குப் போனேன். தினம் போன் செய்து கேட்டுக் கொண்டேன். ஒரு நாள் அவரே எடுத்து பேசினார். “எனக்கு ஒன்னுமில்லடா. நீ வரும்போது மார்த்தாண்டம் தேன் வாங்கிட்டு வா’’ என்றார். வாழ்க்கை மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது போல தோன்றியது. ஒரு நாள் மனைவி போன் செய்தாள். ’’அடுத்த வாரம் குழந்தைக்கு முதல் பொறந்த நாள் வருது’’ என்றாள். ’’அப்பா ஒரு ஆயுஷ் ஹோமமும் கணபதி ஹோமமும் பண்ணலாம்னு நினைக்கறாங்க’’. நான் ‘’சரி‘’ என்றேன். ’’நீ எப்போ வீட்டுக்கு வரே? நான் கூட வீட்டுல அப்படி ஒன்னு பண்ணனும்னு நினைக்கறேன்.’’
அவள், ‘’உங்க வீட்ல இல்லே. எங்க வீட்ல’’ என்றாள். நான், ‘’இப்போ அப்பாவுக்கு குணமாயிடுச்சு‘’ என்றேன். அவள் எனது கோவில் பிரவேசங்களை எல்லாம் ஆர்வமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, திரும்பத் திரும்ப, ‘’டாக்டர் என்ன சொன்னார்?’’ என்றே கேட்டுக் கொண்டிருந்தாள். ’’மாத்திரைகளைக் கொடுக்கறதை நிப்பாட்டிட்டீங்களா?’’ நான், ‘’இல்லை‘’ என்றேன். நான் மாத்திரைகளையும் கொடுத்துக்கொண்டு தான் இருந்தேன். இம்முறை அப்பாவே எடுத்துச் சாப்பிட்டார். அவள், ‘’டாக்டர் குணமாயிடுச்சின்னு சொன்னா வருவது பற்றி பேசிப் பார்க்கிறேன். இவங்கல்லாம் என்ன சொல்றாங்கன்னா..’’
நான் போனை வைத்துவிட்டேன்.
ஆனால் அந்த வார இறுதியில் அவள் சொன்னபடி நண்பனிடம் அழைத்துப் போனேன். நான் செய்த மிகப்பெரிய தவறு அது. அவன், “கொஞ்சம் பரவாயில்லை மாதிரி தெரியுது. மாத்திரை இப்பதான் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு. பொதுவா ஒரு மூணு மாசம் வரை எடுத்துக்கும். நிப்பாட்டிடாதீங்க’’ என்றான். ஒரு ஊசி போட்டான். அப்பா விரிந்த விழிகளுடன் எல்லாவற்றையும் பார்த்தபடியே வந்தார். அதுவரைக்கும் தான் சாப்பிடும் மாத்திரைகள் தனது இருதயத்துக்கானவை என்று நம்பியிருந்தார். இல்லை என்று அறிந்ததும் மௌனமாகி விட்டார். ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்ததும் பைபாஸில் உள்ள சரஸ்வதி காயத்திரி ஓட்டல் சென்று சப்பாத்தியும் காபியும் சாப்பிட்டோம்.
நாங்கள் சேர்ந்து சாப்பிட்ட கடைசி உணவு அது.
திரும்பும் வழியிலேயே அப்பா மீண்டும் தனது மனச்சிதைவுக்குள் விழுந்துவிட்டார்.
4
அதன்பிறகு நடந்த காரியங்கள் அலுவலகத்தில் இருந்து உடனடியாக வீட்டுக்குச் செல்ல விரும்பும் ஒரு மனிதர் செய்யும் காரியங்கள் போல இருந்தன. கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக ஓடும் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல நான் உணர்ந்தேன். அந்தத் திரைப்படத்துக்குள் நானும் இருந்தேன் அல்லது இருந்தேனா?
மறுநாள் நான் கண்ணீருடன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வேலைக்குப் போனேன். இரண்டாம் நாளே அம்மா போன் செய்து விட்டாள். ’’சங்கரு உங்கப்பன் இரண்டு நாளா படுக்கையை விட்டு எந்திருக்கவே இல்லலே. நீ வந்தா நல்லது.’’
நான் சென்றபோது அப்பா மலமூத்திராதிகள் நடுவே ஈ மொய்க்கக் கிடந்தார். ’’எல்லாம் போச்சு. எல்லாம்’’ என்று பிதற்றிக் கொண்டிருந்தார். ’’நாத்தத்தில கிடக்கேன். நாத்தத்திலே‘’ என்றார். கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது. நான் அப்படியே வாரிக்கொண்டு போய் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். பத்து நாட்களும் லட்ச ரூபாயும் போன பிறகு அவர்கள் முடியாது என்று அனுப்பி வைத்தார்கள். படுத்துப் படுத்து அவருக்குப் படுக்கைப் புண் வந்திருந்தது. ஸ்டிரெச்சரிலிருந்து தூக்கும்போது அவரது முதுகுத்தோல் அப்படியே ஒரு பிலிம் போலக் கழன்று அதோடு ஒட்டிக்கொண்டது. வீட்டுக்குக் கொண்டுவந்த மறுதினம் காலை இறந்துபோனார்.
விஷயம் தெரிந்ததும் என் மனைவி வந்துவிட்டாள். அவளது உறவினர்கள் தான் எல்லா வேலையையும் செய்தார்கள். எதையும் செய்யும் நிலையில் நான் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் அதை ஒரு கொண்டாட்டம் போலச் செய்தார்கள். திருமண வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறவர்கள் காட்டுகிற அதே உற்சாகம். பதினாறு நாள் காரியம் முடிகிற வரைக்கும் நான் வெளியே செல்லக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அந்தப் பதினாறு நாளும் செய்யவேண்டிய சடங்குகள் நிறைய இருந்தன. நான் மெதுவாக, இறந்தவரை உயிரோடு இருப்பவர் விரைவாக மறக்கச் செய்வதே அந்தச் சடங்குகளின் நோக்கம் என்று கண்டுபிடித்தேன். உதாரணமாக, அப்பாவின் பூத உடலிலிருந்து நான் ஒரு சிறிய பகுதியையாவது, ஒரு சிறிய எலும்பு மாத்திரமாவது எடுத்து வைத்துக் கொள்ள விரும்பினேன். அவர்கள் அனுமதிக்கவில்லை.
பதினாறாம் நாள் காரியம் ஒரு சிறிய கல்யாணம் போலவே நடந்தது. விருந்துடன். நான் அதுவரை பார்த்திராதவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். கூடத்தில் சிரிப்பொலி நிறைந்திருந்தது. அதில் என் மனைவியின் சிரிப்பொலியையும் கேட்டேன். நான் கசப்புடன் எழுந்து மெல்ல வெளியே வந்தேன். இம்முறை யாரும் தடுக்கவில்லை. பதினாறு நாட்களுக்குப் பிறகு இறந்தவர்களுக்கு வாழ்பவர்கள் மீதான செல்வாக்கு முற்றிலும் மறைந்துவிடுவதாக அவர்கள் நம்பினார்கள்.
நான் பேருந்து ஏறி ஜங்க்ஷன் வந்தேன். அப்பாவும் நானும் போகும் இடங்களில் எல்லாம் போய்ப் போய் நின்றேன். லேசாகக் குளிர்க் காய்ச்சல் வருவது போல் இருந்தது. வானம் இருண்டுகொண்டே வந்தது.
சூரியா டீ ஸ்டாலில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த போது நண்பன் போன் அடித்தான். முதலில் எடுக்கவில்லை. பிறகு எடுத்தேன். ’’என்ன?’’ என்றேன். ’’அப்பா விஷேசத்துக்கு வீட்டுக்கு வந்தேன். நீ எங்கே போயிட்டே?’’ என்றான். ‘’சங்கர் வீட்டுக்கு உடனடியா வா. இல்லேன்னா என்னோட க்ளினிக்குக்கு.’’
‘’ஏன்?’’ என்றேன். ’’அதான் அப்பா செத்துப் போயிட்டாரே?’’
‘’இல்லடா. நீ அந்த டாக்டர் ராமேந்திரன் பத்திக் கேட்டே இல்லே?’’
‘’ஆமா’’
‘’இன்னிக்குத் தான் ஒரு பிரண்டு சொன்னான். அவரு அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே மதுரைல ஒரு லாட்ஜ்ல செத்துப் போயிட்டாராம்’’
நான், ‘’நான்சென்ஸ்’’ என்றேன்.
‘’ஆமாடா. அவர் மனைவி சூசைடுக்குப் பிறகு கொஞ்சம் ஆளு சரியில்லாம இருந்தாராம். பிறகு எம் சி ஐ தடை வேற’’
நான், ‘’அவர் மனைவி பேரு ஜெயந்தியா?’’ என்றேன்.
‘’ஆமா. அவங்க இறக்கும்போது மாசமா இருந்தாங்க போல. இந்தக் கதை எல்லாம் அப்போ நெற்றிக்கண் பத்திரிகைல ஒரு தொடரா வந்ததுன்னு அவன் சொல்றான். நீ அதைப் படிச்சிருக்கே.’’
நான், ‘’இல்லை’’ என்றேன். பிறகு குரல் நடுங்க, ‘’நீங்கள்லாம் என்ன சொல்றீங்க?’’ என்றேன். ’’நீ அவ கிட்டே… அவங்க உன்கிட்டே பேசிட்டாங்க. அப்படித்தானே?’’
அவன், ‘’யாருகிட்டே? நீ முதல்ல என் க்ளினிக்குக்கு வா.‘’
‘’என் பொண்டாட்டி கிட்டே. அவ வீட்டு ஆளுங்ககிட்டே.’’
‘’என்னடா உளர்றே? நீ முதல்ல என் க்ளினிக்குக்கு வா. எல்லோரும் உன்னைத் தேடிக்கிட்டு இருக்காங்க. இல்லேன்னா வீட்டுக்காவது போ.’’
நான் அமைதியாக இருந்தேன்.
‘’சரி’’ என்றேன்.
‘’அப்பா கேசு வேற. அப்பாவுக்கு உடல்ல பிரச்சினை நிறைய இருந்தது. என்னாலே உனக்கு உதவ முடியும்’’ என்றான் அவன்.
நான், ‘’சரி’’ என்றேன்.
5
என் தலைக்குள் ஒரு வினோத தினவு ஏற்பட்டது. வேதனை போன்ற இன்பம். இன்பம் போன்ற ஒரு வேதனை. ஒரு கவிதை எழுதும் முன்பு, சதுரங்க விளையாட்டில் ஒரு முக்கியமான நகர்த்தலைச் செய்வதற்கு முன்பு, நமது மூளைக்குள் ஒரே நேரத்தில் ஏற்படும் அமைதியும் பரபரப்பும். ஆனால் அது சில கணங்கள்தான்.
அதன்பிறகு நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு ரொம்பத் தெளிவாக இருந்தது போல் நடந்துகொண்டேன்.
மறுபடி பஸ் ஏறி டவுன் போனேன். டாக்டர் சொல்லியிருந்த விலாசம் தெளிவாக நினைவில் இருந்தது. டவுனில் ஒரு வளவு வீடு. பக்கத்து வீட்டிலிருந்த பாட்டி, ‘’முப்பிடாதியா? பீடி கட்டுனதைக் கொடுக்க பண்டல் ஆபீக்குப் போயிருப்பா’’ என்றாள். ’’உள்ளே போய் உக்காருங்க. சொல்லிட்டுத் தான் போனா. சாந்தி கல்யாண விஷயமா வந்திருக்கீகளோ?’’
நான், ‘’அஹ்…ஆமா’’ என்றபடி உள்ளே போனேன். அந்த வீட்டின் இருட்டுக்குப் பழகிக் கொள்வது சற்று சிரமமாக இருந்தது. நீளமாக ஒற்றை ஒற்றையாய் செல்லும் அறைகள் கொண்ட வீடு. முதல் அறையில் இருந்த ஸ்டீல் நாற்காலியில் அமர்ந்தேன். ஒரு கருப்பு வெள்ளை டிவி இருந்தது. கூடத்தின் நடுவில் காய்கறி அரியும் ஒரு அரிவாள்மனைக்கு அருகில் கத்தரிக்காய் நறுக்கப்பட்டு அப்படியே பாதியில் விடப்பட்டுக் கிடந்தது. உள்ளே இருந்த அறையில் ஒரு தொட்டில் இருப்பதும் அது அசைவதும் தெரிந்தது. அதன் கீழ் நீர்க்கோலம்.
ஒரு முருகன் காலண்டர். பிறையில் இருக்கும் விளக்கு. சுவரில் புகைப்படங்கள்.
நான் எளிதாகவே அந்தப் புகைப்படத்தைக் கண்டுகொண்டேன். மற்ற படங்கள் நடுவே மூன்று பெண்கள் சேர்ந்து நிற்கிற புகைப்படம். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் வந்தாள்.
‘’வாங்க வாங்க. லைட்டைப் போட்டுக்கிட்டா என்ன?’’ என்றாள். ’’புரோக்கர் சொல்லிருந்தாரு வருவீங்கன்னு. இந்தா தானேன்னு போனேன். காப்பி சாப்பிடுதீகளா?’
நான் அவளைப் பார்த்தேன். கோர்ட்டில் பார்த்தபிறகு இன்றுதான் அவளைப் பார்க்கிறேன். அப்போது ரொம்ப ஒடிசலாக இருந்தாள். இப்போதுதான் குழந்தை பெற்றிருக்கிறாள் போல. இன்னொரு குழந்தை! மார்புகள் தடித்து ரவிக்கைக்கு வெளியே வரத் துடித்துக்கொண்டிருந்தன. அவள் என்னைப் புதிதாகப் பார்ப்பது போலவே நடந்துகொண்டது ஆச்சர்யமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.
அவள், ‘’இருங்க காப்பி போட்டுட்டு வாரேன் ’ என்றாள். அவள் கடந்து போகும்போது அவள் மார்பு வாசம் உணர்ந்து தொட்டிலில் இருந்த குழந்தை துள்ளி அசைந்தது.
‘’ஓ.. அம்மோ.. அம்மோ வந்தது தெரிஞ்சிடுச்சோ? ஜெயாக்குட்டி.. இருடி வாரேன்’’ என்று அவள் பேசுவது கேட்டது. அவள் காப்பியைக் கொண்டுவந்து கொடுத்து, ‘’குடியுங்க. இந்தக் குட்டியைக் கொஞ்சம் கவனிச்சிட்டு வாரேன். பசிக்குது போலிருக்கு.’’
நான் சற்று நேரம் காபிக் கோப்பையை உருட்டியபடி இருந்தேன்.
பிறகு மெதுவாக எழுந்தேன்.
மெல்ல எட்டி உள்ளே பார்த்தேன்.
அவள் தரையில் அமர்ந்து ஜாக்கெட்டை தளர்த்தி குழந்தைக்கு முலை கொடுத்துக் கொண்டிருந்தாள். நிழல் கண்டு நிமிர்ந்து பார்த்தாள். குழந்தையும் முலையை விட்டுவிட்டு என்னைப் பார்த்தது. பருத்துப் புடைத்த முலை அதன் முகத்தின் மேல் ஒரு கேள்விக்குறி போல் நின்றுகொண்டிருந்தது. அதிலிருந்து ஒரு துளி பால் நழுவி குழந்தையின் முகத்தில் சொட்டியது.
அவள் முகம் கடினமாகி, ‘’அண்ணே வெளியே இருங்க.. பால் கொடுத்திட்டு …’’
ஆனால், அந்த நொடியில், அந்த நொடியில், முப்பிடாதி என்னைச் சரியாகக் கண்டுகொண்டாள்.
‘’எலேய்.. டாக்டர் நாயே’’ என்றபடி எழ முயன்றாள்.
நான் அதற்குள் பாய்ந்து அவள் முடியைப் பிடித்து, ‘’கொன்னாலும் உங்க தேவிடியாத்தனத்தை விட மாட்டீங்க. என்னட்டி?’’ என்று கத்தியபடியே அரிவாள்மனையால் அவள் கழுத்தைக் கரகரவென்று அறுக்க ஆரம்பித்தேன்.