பார்ஸி இடுகாட்டின் கழுகுகள் – அலி இமாம் நக்வி

1 comment

எல்லாம் எதிர்பாராததாய் இருந்தது. அவர்கள் திகைப்படைந்தனர். அவர்கள் வெடுக்கென பாடையைக் கீழே வைத்துவிட்டு, சடலத்தை வெறித்துப் பார்த்தனர், பிறகு, கலங்கிய விழிகளால் இலட்சம் கேள்விகளுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களது விழிமணிகள், கொஞ்ச நேரத்திற்குத் தங்கள் குழிகளுக்குள் அர்த்தமின்றி அங்குமிங்கும் நகர்ந்தன, அவை நின்ற பிறகு இருவரும் தமது புரிதலின்மையை வெளிப்படுத்தும் விதமாக தோள்பட்டையை குலுக்கிக் கொண்டனர். பிறகு, ஒரே சமயத்தில், தங்களது கழுத்துகளுக்கு வலியேற்படும் அளவிற்கு முகப்பழிப்புச் செய்து கொண்டே, தமது பார்வையை பார்ஸி இடுகாட்டில் இருந்த அடர்ந்த மரங்களின் மீது பொருத்தினர். ஒரு கழுகு கூட இருக்கவில்லை! ஒருவரது கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கூட எதுவும் இல்லை! இப்படி ஒன்று நடப்பது இதுவே முதல் முறை.

அவர்களுக்கு முன்னறிவிப்பு தரும் மணியொலி இரண்டு மணி நேரங்களுக்கு முன்பே ஒலித்திருந்தது. கால்மணி நேரத்திற்குப் பிறகு இரண்டாவது திறப்பு எண் உதவியாளர்கள் இந்தச் சடலத்தை அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இருவரும் அச்சடலத்தை பாவ்லி எனும் மையக்குழி இருந்த பகுதிக்கு இழுத்துச் சென்று கதவுகளை இழுத்தடைத்தனர். பின்னர் பெரோஸ் பாடினா, கதவில் இருந்த சிறு சன்னலைத் திறந்து ஈமச்சடங்கு செய்யவிருந்த உதவியாளர்களிடம் இறந்தவரது உறவினர்களைப் பற்றி கேட்டபடி, அவர்களில் ஒருவரிடம், ‘சில்லறை பற்றி என்ன, அவர்கள் ஏதேனும் கொடுத்தார்களா?’ என்று வினவினான்.

உதவியாளர் ஒரு புன்னகை செய்துவிட்டு இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை பாடினாவின் முன் காட்ட, அவன் அதை உடனடியாகப் பிடுங்கி, ஒன்றைத் தனது டாக்லாவின் பையில் திணித்துக் கொண்டு மற்றொன்றை தன் கூட்டாளி ஹோர்மோஸிடம் தந்தான். பிறகு அவர்கள் கதவினை முழுவதும் அடைத்துக் கொண்டனர்.

ஹோர்மோஸ் தனது தலையினை உயர்த்தி, தன் முன் இருக்கும் உயர்ந்த மரங்களின் அடர்பசுமையின் ஊடே தெரிந்த விரிந்து அகன்ற வானத்தைப் பார்த்தபடி, ‘கடவுளே’ என்று நன்றியுணர்வுடன் சொன்னான். பிறகு, பாடினாவிடம் தன் விழியினால் ஜாடை தெரிவித்தான். இருவரும் குனிந்து பாடையை எடுத்துக் கொண்டு பாவ்லியை நோக்கி நடக்கத் துவங்கினர்.

‘பெரோஸ்’, ஹோர்மோஸ் தனது கூட்டாளியை நடந்தபடியே அழைத்தான்.

‘சொல்.’

‘எத்தனை காலம்… அதாவது இப்படிப்பட்ட வேலைகளையே நாம் இன்னும் எத்தனை காலம் செய்து கொண்டிருப்பது?’

‘நிறுத்து.’

‘நண்பா, இதைச் செய்ய மட்டும் தான் நாம் இலாயக்கோ?’

‘சரி, நீ என்ன நினைக்கிறாய்?’

‘ஒன்றுமில்லை தான். இருந்தாலும் கேட்கிறேன்.’

‘அவ்வளவுதானா என்ன?’

‘ஆமாம், சரதுஸ்தர் மீது ஆணையாக’. அவன் மேல்நோக்கி வானத்தைப் பார்த்தான்.

ஒரு சிறிய மெளனத்திற்குப் பின்னர் பாடினா, ‘இதோ பார், ஹோர்மோஸ். பார்ஸி குழு நம்மைப் பார்த்துக் கொள்கிறது, இல்லையா? நாம் அதிர்ஷ்டசாலிகள் என்று எண்ணிக் கொள்வோம், சரியா? என்ன சொல்கிறாய்?’

‘அதே கதை தான். பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. ஆனால் உண்மை என்னவெனில், நான் தளர்ந்துவிட்டேன். சுத்தமாக தளர்ந்துவிட்டேன்.’

அவர்கள் பாவ்லி அறைக்கு வந்து விட்டதை அடுத்து அவர்களது உரையாடல் நின்றது. ஹோர்மோஸின் ஒற்றைக் கால் உதை கதவினைத் திறந்ததும், அடுத்து கணத்திலேயே அவர்கள் பிணத்தின் முன் தாங்கள் நிற்கவேண்டிய இடங்களில், ஒருவன் சடலத்தின் தலைப்புறமாகவும் மற்றொருவர் அதன் கால்புறமாகவும் என, நின்று கொண்டனர். பிணத்தின் முகம் தயிரினால் மெழுகப்பட்டிருந்ததால் முழுக்க வெண்ணிறமாக இருந்தது. ஹோர்மோஸ் தலையைக் கொஞ்சம் உயர்த்திப் பிடிக்க பாடினா விரைந்து அதனடியில் இருந்த பிணச்சீலையை முழுமையாக உருவி எடுத்தான்.

ஒருவர் பின் ஒருவராக, மரியாதையுடன் அவர்கள் அப்பிணத்தின் பாதங்களைத் தொட்டனர், தொட்டு அக்கைகளை தத்தம் விழிகளிலும் மார்புகளிலும் மரியாதையைக் குறிக்கும் விதமாக ஒற்றிக்கொண்ட பிறகு எழுந்தனர். பிணத்தின் நிர்வாணத்தை மூடும் விதமாக இடுப்பைச் சுற்றி சம்பிரதாய கஸ்தியும் அத்துடன் ஒரு கைக்குட்டையும் வைத்துச் சுற்றப்பட்டது. அவர்கள் பிணத்தைத் தனியே விட்டுவிட்டு அகன்றனர். பிறகு அவர்கள், பாவ்லியின் மூலையில் இருக்கும் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து மேசைமுன் அமர்ந்தனர். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஹோர்மோஸ் ஒரு ஒயின் போத்தலை மேசையில் வைக்கவும், இருவரும் தங்களது கோப்பைகளை நிரப்பிக் கொண்டனர். பெரோஸ் பாடினா ஒரு துணையுணவை தன் வாயில் வைத்துவிட்டு, ‘ஹோர்மோஸ்’ என்றான்.

‘ம், என்ன?’

‘என்னவொரு வாழ்க்கை!’

‘என்ன விசயம்?’

‘பாக்லி எண் 1,2 , 4… மணி, தேவுடியா பசங்க.. இன்னம்…’

‘இன்னம்?’

‘ஆமாம், இன்னம்….’

‘இன்னம்… என்ன?’

‘பொணங்க…. இன்னம் நிறைய பொணங்க….’

‘எனக்குப் புரியலை.’

‘கொஞ்சம் பாரேன். பார்ஸியின் வாழ்க்கையைப் பாரேன்.’

‘வாழ்க்கை?’

‘ஆமாம்.’

‘அதற்கென்ன?’

‘அவனோட இளமை விரைவு வண்டி மாதிரி ஓடிடுது, ஆனால் அவனோட கிழட்டுப் பருவம் சரக்கு வண்டி மாதிரி ஊர்ந்து போகுது.’

‘ஆமாம், சகோ, நிச்சயமான நிஜம்.’

‘ஆமாம், நிச்சயமான நிஜம் தான்.’

அவர்கள் குடியைத் தொடர்ந்தபடியே ‘நிஜம், நிஜம்’ என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் கூறியபடியே இருந்து ஒரு புள்ளியில் கேவல்களாக உடைந்தழுதனர். ஒருமணி நேரமோ என்னவோ கழித்து மீண்டும் மணிச்சத்தம் கேட்டது. இம்முறை திறப்பு எண் நான்கில் இருந்து பிணம் வருகிறது.

‘அதோ, கடவுள் சர்துரஸ்தர் இன்னம் கொஞ்சம் கூடுதல் ஒயினுக்கு ஏற்பாடு செய்துட்டார்.’

‘வாடா நண்பா, போகலாம்.’

அவர்கள் பாவ்லியின் முக்கிய வாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இரண்டாவது முறையாக கதவு திறந்தது. அவர்கள் காலியான பாடையை வெளியே தள்ளினர். கொஞ்ச நேரம் கழித்து அது திறப்பு எண் நான்கில் இருந்து பிணத்துடன் உள்ளே திருப்பி அனுப்பப்பட்டது. அங்கிருந்த உதவியாளர்களுள் ஒருவன் மீண்டும் இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை அவர்களிடம் வீசினான். இம்முறை அந்தப் பணத்தை வாங்க ஹோர்மோஸ் முன்னே சென்றான். பிறகு அவர்கள் கதவினைச் சாத்திவிட்டு, பாடையை எடுத்துக் கொண்டு பாவ்லியை நோக்கி நடையைக் கட்டினர்.

‘ஹோர்மோஸ்?’

‘ம், சொல்லு?’

‘ஒரு நாள் நாமும் செத்து போவோம், இதுமாதிரியே, இல்ல?’

ஹோர்மோஸ் நின்றான், தன் தலையை பெரோஸ் பாடினாவை நோக்கி திருப்பினான், பிறகு அவனைச் சற்றே கடுமையுடன், ‘இப்படி ஒரு கேள்வியை இப்போ உனைக் கேட்க வைப்பது எது?’ என்று கேட்டான்.

‘அனைவருமே இறந்துதான் ஆக வேண்டும்.’

‘சத்தியம். ஆனால், இறப்பது குறித்து இன்னமும் நான் திட்டமிடவில்லை.’

‘திட்டமிடுவதா? நீ என்ன அர்த்த கருமத்தில் பேசுகிறாய்?’

‘வாயை மூடு முட்டாளே. நாம் இதுவரை நம் வாழ்வில் எதைக் கண்டிருக்கிறோம்? பிணங்கள், நிறைய பிணங்கள் மற்றும் கழுகுகள். மிஞ்சிப் போனால், கொஞ்சம் ஒயின் இப்போதைக்கு, பிறகோ அந்தச் சனியன் பிடித்த சிதாரா சாலை சாராயக் கடையிலிருந்து… மோசமான அம்மோனியம் க்ளோரைடு கலந்த … பத்து ரூபாய்த் தாள்கள். தெரியாமல் தான் கேட்கிறேன், இதைத்தான் நீ வாழ்க்கை என்று சொல்வாயா?’

பெரோஸ் பதிலளிக்கவில்லை, தொடர்ந்து ஹோர்மோஸை பார்த்துக் கொண்டிருந்தான்.

‘சொல்லு சகோ, இதுதான் வாழ்க்கையா?’

‘நான் என்ன சொல்வது? எனக்கு தெரிந்ததெல்லாம் இதுதான். அழைப்பு வரும் போது நான் போய்ச் சேர வேண்டும். எனது இடத்திற்கு வேறு யாரோ வந்து சேர்வார்கள். நீ போகும் போது, வேறு யாரோ உனது இடத்தையும் எடுத்துக் கொள்வார்கள்.’

‘வாயை மூடு, அறிவு கெட்டவனே! வேசிமகனே! பன்னிப்பயலே!’ ஹோர்மோஸ் கத்தினான்.

‘கூத்து கட்டாதே. வாழ்வைப் பற்றிப் பேசுவதை நிப்பாட்டு. இங்கே பார், நமக்கு இந்தப் பிணத்திற்கு ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்கவேண்டிய வேலை இருக்கிறது.’

இருவரும் வாயை மூடிக் கொண்டனர். பாவ்லிக்கு அமைதியாக நடந்து சென்றனர். அவர்கள் கதவினைத் திறந்தபோது…

எல்லாம் எதிர்பாராததாக இருந்தது. அவர்கள் திகைப்பிற்குள்ளாகினர். அவர்கள் வெடுக்கென பாடையைக் கீழே வைத்துவிட்டு, சடலத்தினை வெறித்துப் பார்த்தனர், பிறகு இலட்சம் கேள்விகளுடன் கலங்கி இருக்கும் விழிகளோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களது விழிமணிகள், கொஞ்ச நேரத்திற்கு தங்கள் குழிகளுக்குள் அர்த்தமின்றி நகர்ந்தன, அது நின்ற பிறகு இருவரும் தமது புரிதலின்மையை வெளிப்படுத்தும் விதமாக தோள்பட்டையை குலுக்கிக் கொண்டனர்…. தமது பார்வையை பார்ஸி இடுகாட்டில் இருந்த அடர்ந்த மரங்களின் மீது நிலைக்க வைத்திருந்தனர். ஒரு கழுகு கூட இருக்கவில்லை! கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கூட ஒரு கழுகும் இல்லை!

இப்படி ஒன்று நடப்பது இதுவே முதல் முறை. பிணங்கள் இருக்க, ஒரு கழுகு கூட எங்கேயும் கண்ணில் படவில்லை. வழக்கமாக ஹோர்மோஸும் பெரோஸும் சடலங்களை பாவ்லிக்குள் தள்ளி விட்டபிறகு, கழுகுகள் தனது வேலையை நிமிடங்களுக்குள் செய்து முடித்துவிட்டிருக்கும். கழுகுகள் திரும்புவதைக் கண்டபிறகு அவர்கள் மீண்டும் பாவ்லிக்கு வந்து எலும்புக்கூட்டின் மீது அமிலம் ஊற்றியதும், அவை வெறும் தூசு போல பொடிப்பொடியாக்கப்பட்டு பாவ்லியின் ஆழத்திற்குள் எப்போதைக்குமாக போய்விடும். எங்கே என்று யாருக்குத் தெரியும்? சில சமயங்களில் தொடர்ந்து பல நாட்களுக்குப் பிணங்கள் வராமலேயே இருக்கும். அத்தகைய சமயங்களில் பசியின் நிமித்தம் கழுகுகள் அங்கிருந்து இடம்பெயர்ந்து விடாமல் இருக்கும் பொருட்டு, பார்ஸி சபையே தன் செலவில் இறந்த ஒரு ஆட்டினை பாடினாவிடவும் ஹோர்மோஸிடமும் ஏற்பாடு செய்து கொடுத்து அவற்றைக் கழுகுளுக்கு உணவாக படைக்க வைப்பார்கள். ஆனால் இப்போது? பிணங்கள் தயாராக இருந்தும், அவற்றை முடித்துக் கட்ட கழுகுகள் ஒன்று கூட இல்லை!

இருவரும் இமையகன்ற கண்களுடன் ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பொருளின்றி கொஞ்ச நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்த பிறகு இரண்டாவது சடலத்தினைத் தகட்டில் வைத்தனர். பிறகு அவர்கள் பாவ்லியின் வாயினை அடைத்துவிட்டு ஒருவருக்கொருவர் வினாப் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர்.

‘நான் போய் கெக்வாபாத்திற்கு இதைத் தெரிவிப்பதா? நீ என்ன நினைக்கிறாய்?’

‘ஆம், போ!’

பாடினா தனது அறைக்குச் சென்று அவசரகால பொத்தானை அழுத்தினான். பார்ஸி இடுகாட்டு அலுவலகத்தில் இருந்த சிவப்பு விளக்கு சிமிட்டியது. அங்கிருந்த சடங்கு எழுத்தர்கள் பயந்து, அதிர்ச்சியுற்று ஓடத் தொடங்கினர். திறப்புகளிலும் அது போன்ற விளக்குகள் மின்னின. சடங்கிற்காக உச்சரித்துக் கொண்டிருந்த புனித உச்சாடனங்களை சடங்கு செய்வோர் நிறுத்தினர். அங்கு உலவிக் கொண்டிருந்த நாய்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டு மூலைகளுக்குள் ஒடுங்கின. துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்த இறந்தோரின் உறவினர்கள் வெளியேறி ஒரு பெரும் பதற்றத்துடன் காணப்பட்டனர். எல்லா இடங்களிலுமே ஒற்றைக் கேள்வி மட்டுமே மிஞ்சி இருந்தது. என்ன ஆயிற்று?

கெக்வாபாத் வெளியேறி, வானைக் கூர்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் விரைந்து உள்ளே சென்றான். மக்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு, ‘என்ன ஆயிற்று?’ என்ற அதே கேள்வியைக் கேட்டு இரைச்சலை உண்டாக்கினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக கெக்வாபாத் பறைசாற்றினான்: ‘கழுகுகள் இங்கிருந்து போய்விட்டன!’

‘என்ன கழுகுகள் போய்விட்டனவா?’

‘ஆனால், ஏன்?’

‘ஏதோ நடக்கப் போகிறது!’

‘ஆனால், என்ன நடக்கும்?’

பார்ஸி குழுமத்தின் செயலாளரை கெக்வாபாத்தின் தொலைபேசி அழைப்பு சென்றடைந்தது. அவரது நெற்றியில் சுருக்கங்கள் விழத் தொடங்கின. அவையனைத்தையுமே அவர் கேட்ட பிறகு பெற்றியை வைத்துவிட்டு, மறுகணமே இடைத் தொடர்பு பொறியை இயக்கி இவ்விபரத்தினை இயக்குநரிடம் தெரிவித்தார். உடனடியாக ஒரு அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், கேள்விகள் அப்படியே இருந்தன. கழுகுகள் எங்கே போய் மறைந்தன?

‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? கழுகுகள் மறைந்து போனதா?’ தனது குரலில் ஒரு ஆச்சரியத்தின் மென்ரேகை ஓட தொலைபேசியில் காவல்துறை ஆணையர் கேட்டார்.

பார்ஸி குழுமத்தின் தலைவர், ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் தந்து, ‘ஆம், நமது கழுகுகள் மறைந்து போய்விட்டன,’ என்று உறுதிசெய்தார். மலைப்புடன் கூடிய கவனிப்புடன் அவர் காவல் ஆணையர் சொன்னவை அனைத்தையும் தன் முகம் ஒரு நிறத்திலிருந்து இன்னொன்றிற்கு மாற மாற கேட்டுக் கொண்டிருந்தார். ஆணையரை அவர் நெடுநேரத்திற்கு கவனித்துக் கொண்டிருந்தார். காவல்துறை ஆணையர் தொலைபேசியை வைத்துவிட்ட பிறகு, இவரும் தனது பேசியை வைத்துவிட்டு தன் முன் ஒற்றை வினாவுடன் கூரிய பார்வையை வீசியபடி இருக்கும் வாரிய இயக்குநர்களைப் பார்த்தார். ஆணையருடன் பேசியது குறித்த விபரங்களை அவர்களுக்கு விளக்கினார். கூட்டத்தின் ஒவ்வொரு பங்கேற்பாளரும் அதீத கவலையும் வெகு சொற்பமான உத்திரவாதமும் கலந்த உணர்வுடன் வெளியேறினர். செயலாளர் இடுகாட்டிற்கு அழைத்தார்.

பிறகு காவல் ஆணையருக்கும் தலைவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலின் சாராம்சத்தினைச் சுருக்கமாக அங்கிருந்த சடங்கு எழுத்தர்களுக்கும் பிறருக்கும் கெக்வாபாத் விளக்கமாகச் சொன்னான். அவர்களிடமிருந்து பாக்லியில் இருந்த உதவியாளர்களுக்கும் அங்கிருந்து கடைசியாக பாடினா மற்றும் ஹோர்மோஸ் ஆகிய இருவருக்கும் இந்தச் செய்தி வந்தடைந்தது. பாடினா இந்த முழுச் செய்தியையும் கவனமாக கேட்டான். பிறகு, அடர்பசுமையின் ஊடே தெளிவாகத் தெரிந்த வானத்தைப் பார்த்த போது, அதில் ஒரு காகமோ, ஒரு பருந்தோ அல்லது ஒரேயொரு கழுகோ கூட இல்லை!

திடீரென்று அவர்கள் கடும் பீதியால் சுணங்கினர். மீண்டும் மணியடித்தது. திறப்பு எண் மூன்றிலிருந்து இன்னொரு சடலம் வந்து கொண்டிருந்தது. மீண்டும் அவர்கள் கதவின் முன்பு நின்று கொண்டிருந்தனர். பிணம் வந்தது. இம்முறை உதவியாளர்கள் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளைப் பாடினாவின் கைகளில் திணித்தனர். பாடினாவும் ஹோர்மோஸும் சடலத்தை உள்ளிழுத்த பிறகு முன்னவன் முகத்தை கோணலாக்கிக் கொண்டு, ‘ஹோர்மோஸ்!’ என்றான்.

‘ம், என்னாயிற்று?’

‘என்ன கருமத்திற்கு இன்றைக்கு என்று பார்த்து எல்லா பார்ஸிகளும் சாக வேண்டும் என்று முடிவெடுத்து தொலைந்தார்களோ?’

ஹோர்மோஸ் பதிலளிக்கவில்லை. அவன் தொடர்ந்து வானத்தைப் பார்த்தபடி இருந்தான்.

‘பார்வைபடும் தொலைவில் ஒரு கழுகில்லை; ஆனால் நமக்கென்று ஒன்றன் பின் ஒன்றாக பிணங்கள் வந்து விழுகின்றன.’

‘இந்தக் கழுகுகள் எங்கு தான் போய் ஒழிந்து இருக்கக்கூடும்?’

‘காவல் ஆணையர் சொல்லி இருக்கிறார். எல்லா கழுகுகளுமே கார்கி, ரவிவார் பேட்டை மற்றும் சோமவார் பேட்டை சுற்றுப்பகுதிகளுக்கு கூட்டமாகப் போய்விட்டனவாம்.’

‘எதற்காக?’

‘அய்யோ, இந்த இந்து முஸ்லீம் மூடர்கள் மறுபடியும் ஒருவரை ஒருவர் கழுத்தறுத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒரு பெரிய கலவரம் ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கழிசடைகள், வீடு, கடைகள், வாகனங்கள், மருத்துவ ஊர்தி உட்பட எல்லாத்தையும் கொளுத்தி இருக்கிறார்கள். தெருவெல்லாம், ஒன்றின் மேல் ஒன்றாக பிணங்கள் பெரும் குவியலாக குவிந்து கிடக்கின்றன. நமது கழுகுகளுக்கு அங்குதான் விருந்து. அப்பறம், அந்தக் காவல் ஆணையர் …. அவர் அந்தத் தெரு சுத்தம் செய்யப்பட்ட பிறகு கழுகுகள் மீண்டும் தானாகத் திரும்பி வரும் என்று சொன்னாராம்.’

‘தெரு சுத்தப்படுத்தப்பட்டால் மட்டும், என்னாகிவிடும்? கழுகுகள் திரும்பி வருமென்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? இந்த வீணாய்ப் போன இந்தியா… ஒவ்வொரு நாளும் இங்கு ஒரு கலவரம் நடக்கிறது, ஒவ்வொரு நாளும் தீ எரிகிறது, ஒவ்வொரு நாளும் மக்கள் சாகின்றனர். கழுகுகள் திரும்பியா வரும்? ஆம், அவை நிச்சயம் திரும்பி வரும்.’

உருதுமூலம்: அலி இமாம் நக்வி (Ali Imam Naqvi) கதைகள்.

1 comment

Selvam kumar December 2, 2020 - 9:23 pm

சிறந்த சிறுகதை ஆழமான விபரிப்பு

Comments are closed.