இன்றைய காலத்தின் பாய்ச்சலை யாரும் எதிர்பார்க்கவில்லை. இணையம் வந்த பிறகு இருபதாம் நூற்றாண்டில் திரையிட்டுக் கட்டிக் காக்கப்பட்ட பலவும் பொலபொலவென உதிர்ந்துகொண்டிருக்கின்றன. செய்தி முதற்கொண்டு கலை இலக்கியங்கள் ஈறாக யாவற்றின் பெருக்கமும் அளவிட முடியாததாகிறது. இவ்விரைவு மேலும் மேலும் கூடுகிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து குவிகின்றன. புதுக்கருத்தியல்கள், புதுப்பொருளில் அமைந்த உரையாடல்கள், புதுக்கலை வெளிப்பாடுகள், ஊடகப் பெருவெளி என்று பற்பல அடிப்படை மாற்றங்களைக் காண்கின்றோம்.
இன்று மொழியானது பேச்சாகவும் எழுத்தாகவும் அடைந்திருக்கின்ற அன்றாடப் பயன்பாட்டு உயரம் இதுவரை இல்லாத ஒன்று. இதுநாள்வரையிலான மொழிப் பயன்பாடு எப்படி இருந்தது? மக்கள் வாழ்க்கையில் பேச்சாக இருந்தது. திரைப்படங்காக, நாடகங்களாக, பாடல்களாக, கதையாடல்களாக இருந்தன. எழுத்துப் பயன்பாடு எங்கெங்கே விளங்கிற்று? பல துறைகளில் எழுதப்பட்ட நூல்கள் எழுத்து மொழியால் ஆனவை. அச்சிதழ்கள், நாளேடுகள், அரசு வரைவுகள், தீர்ப்பாய வடிவங்கள் எனப் பொதுவாயும் கடிதங்கள், தற்குறிப்புகள் என்று தனியாயும் எழுத்தின் பயன்பாடு விளங்கிற்று. மேலும் சிலவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால், இன்றைக்கு மொழியானது எங்கெல்லாம் முன்பில்லாத அளவில் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது என்று பார்ப்போம். நூல்கள் முன்னெப்போதும் அளவில் வெளியாகின்றன. முன்பு ஆண்டுக்குச் சிலநூறு நூல்கள்தாம் வெளியாகும். இப்போது அவ்வெண்ணிக்கை சில பல ஆயிரங்களைக் கடந்துவிட்டது. சிலநூறு நூல்கள் வெளியானபோது அவற்றில் பொருட்படுத்தத் தக்க நூல்கள் என்று மூன்றில் ஒன்றையேனும் குறிப்பிட முடியும். ஆனால், இன்றைக்கு ஆண்டுதோறும் சில்லாயிரம் நூல்கள் வெளியானபோதும் அவற்றில் பொருட்படுத்தத்தக்க நூல்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆளாளுக்குப் பதிப்பித்துக்கொள்கிறார்கள்.
கவிஞரே கவிதைத் தொகுப்பு வெளியிடுகிறார். பணம் பெற்றுக்கொண்டு பதிப்பித்துத் தரும் தொழிலைச் செய்வோரும் தோன்றியுள்ளனர். நூல் வெளியீடு பெருகிவிட்டது. எழுத்துப் பெருக்கமும் மிகுந்துவிட்டது. அவற்றுக்கிணையாக அச்சிதழ்களும் தோன்றின. புதிது புதிதாய்ப் பல இதழ்கள் தோன்றிய விரைவில் நின்றன. இவற்றிடையே நெடுங்காலமாய்த் தமிழ்ப்பரப்பில் கோன்மை செலுத்திய பேரிதழ்களும் போட்டியிட்டன. அந்நிறுவனங்கள் துறைவாரியான தனியிதழ்களையும் வெளியிட்டன. இன்றைக்கு அச்சிதழ் உலகம் சுருங்கிக் கொண்டிருக்கிறது என்றாலும் அவற்றின் எழுத்துப்பரப்பு இயன்றவரைக்கும் மிகுந்தது.
அடுத்துள்ளவை தொலைக்காட்சிகள். தொண்ணூறுகளில் ஐந்தாறு வாய்க்கால்களாக இருந்த செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் தற்போது நூற்றைத் தொடக்கூடும் என எண்ணுகிறேன். அவற்றில் செய்தித் தொலைக்காட்சிகளும் பல. தொலைக்காட்சித் திரை முழுமையும் எழுத்துகள் தோன்றி நகர்கின்ற எழுத்தொளிபரப்புத் திரைகளாக அவை மாறிவிட்டன. அது மட்டுமின்றி அங்கே பேச்சும் எழுத்துமே தலைப்பொருள்கள். காட்சிச் சட்டகம் என்பது ஒரு காரணம்தானே தவிர, தொலைக்காட்சியின் மிகுபயன்பாட்டுப் பொருள் மொழிதான். திரைப்படங்களைக் கடந்த நூற்றாண்டின் தொடர்ச்சி என்னுமளவில் வைத்துக்கொள்ளலாம்.
இணைய வழித்தடம் பற்கற்றை ஆகியவுடன் மக்களுக்கு எளிதில் வாய்த்தவை இணைய ஊடகங்கள். வலைப்பூக் காலத்தில் சில நூறு தனிப்பூக்கள் பூத்திருந்தன. எண்ணிக்கையில் அவையும் ஆயிரங்களைத் தாண்டி இருக்கும் என்றாலும் தொடர்ந்து செயல்பட்டவை என்ற கணக்கையும் பார்க்க வேண்டும். சில நூற்றினர் வலைப்பூக்களில் தொடர்ந்து எழுதினர். மின்மடல் வாய்ப்பு தாள்மடல்களைத் தள்ளி வைத்தது. அடுத்து வந்த முகநூலும் சிட்டுரையும் எழுத்து வெளியைக் கடலாய்ப் பரப்பித் தந்தன. காணொளித் தளமான யூடியூபின் உள்ளடக்கமும் எழுத்தும் உரையும் என்றே கூற வேண்டும். பல்வேறு இணையத்தளங்களில் தொடர்ந்து எழுதிக் குவிக்கப்படுகின்றன. நடிப்புத் தளங்களில்கூட அவற்றின் பொருளாகுபவை பாடல்களும் உரையாடல்களுமே.
தனியாள் பயன்பாட்டில் எழுத்துக்கும் பேச்சுக்கும் என்ன நிகழ்ந்திருக்கின்றன? எல்லாரும் தெரிந்தோ தெரியாமலோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்துகளைத் தொடர்ந்து படிக்கிறார்கள், பேசுகிறார்கள். பேசியவற்றைக் காதணிபாடி அணிந்து கேட்கிறார்கள். முகநூல், சிட்டுரை, என்வினவி, உட்பெட்டி, கருத்திடல் என நாடோறும் எழுதிக் குவிக்கிறார்கள். அங்கே எழுதியவற்றைப் படித்துத் தள்ளுகிறார்கள். கணவனிடம் / மனைவியிடம் உரையாடுவதற்குக் கூட என்வினவி பயன்படுகிறது. எதிர்வினை வருகிறது. கணினிப் பயன்பாட்டில் இருந்தவரைக்கும் ஓரளவு என்றால் கைப்பேசிப் பயன்பாடு வந்த பிறகு பேரளவு.
ஆராய்ந்து பாருங்கள். இன்றைக்கு அன்றாட வாழ்வில் மொழியின் பயன்பாடு பலமடங்கு கூடிவிட்டது. எழுத்தாகவும் பேச்சாகவும் மொழித்தொடர்களைத் தொடர்ந்து உருவாக்குகிறோம். உருவாக்கியவற்றைப் படிக்கிறோம் கேட்கிறோம். மொழிப்பெருக்கம் ஏற்பட்டுவிட்டது என்பது கண்கூடு. இருபதாண்டுகட்கு முன்னர் நாம் ஒரு கடிதம் எழுதுவதற்குச் சோம்பல்பட்டிருக்கிறோம். இன்றைக்கு நம்மையறியாமலே பத்துச் சொற்றொடர்களை எழுதுவோராக மாறிவிட்டோம். எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்தவர்கள் தொண்ணூறுகளில் பத்துப் புத்தகங்களை எழுதியிருந்தாலே பெரிது. இன்று எண்ணிக்கையில் ஐம்பது நூறு புத்தகங்களை நோக்கிச் சென்றுவிட்டார்கள்.
மொழிப்பயன்பாடு முன்னைக்குப் பின்னை பன்மடங்கு பெருகிவிட்டது என்பது யாவரும் ஏற்கத்தக்க உண்மை. இங்கேதான் மொழியானது மறுபரிசீலனைக்கு இலக்காகிறது. எழுதுகிறார், பேசுகிறார், பங்கெடுக்கிறார் என்னும்போதே மொழிக்குச் சீரும் சேதாரமும் எவ்வாறெல்லாம் வந்தடைகின்றன என்றும் பார்க்க வேண்டுமே.
என்ன எழுதுகிறார்கள்? எப்படிப் பேசுகிறார்கள்? அவர்கள் எதனைப் பரப்புகிறார்கள்? எதனைத் தீய்க்கிறார்கள்? எவற்றை வளர்க்கிறார்கள்? காலப்போக்கில் இவை ஏற்படுத்தும் விளைவுகள் யாவை? அவ்விடத்தில் மொழியரசும் மொழித்தலைமக்களும் என்னென்ன செய்தனர்? அவர்களுடைய எதிர்வினை எத்தகையதாய் இருந்தது? சீர்திருத்தினார்களா, இல்லை வாய்மூடிக்கொண்டார்களா? ஆக்கவழி காட்டினாரா ? இல்லை, தான் தனது தன்பெண்டு பிள்ளைகள் என்று முடங்கிக்கொண்டனரா? இவற்றையெல்லாம் வேறு யார் எடுத்துச் செய்வார்கள்? நீங்கள்தாம் செய்ய வேண்டும்.
பழைய தலைமுறை ஓய்வு பெற்றுவிட்டது. அவர்கட்கு இன்றைய புதிய போக்குகளோடு ஓர் ஒவ்வாமைகூட ஏற்பட்டிருக்கலாம். கைப்பட எழுதிப் பழகியோர்க்குக் கைப்பேசியில் தொட்டெழுதுவது புதிய சுமையாகத் தென்படலாம். மகனுக்கும் மகளுக்கும் நல்வாழ்வு ஏற்படுத்தித் தரவேண்டிய கடமையழுத்தத்தில் பழைய போர்க்குரல் உடைந்திருக்கும். குடும்பத்தில் நேர்ந்த இறப்புகளால் ஊக்கங் குன்றியிருக்கலாம். இன்னொரு குவளைத் தேநீருக்காக மருமகளிடம் நயந்து பேசி நின்றிருப்பார்கள். முதுமையே பெருஞ்சுமை. இனியும் களத்தில் அவர்களே முன்னிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தகாது. அவர்களும் அவர்களைப் போன்ற முன்னோர் பெருமக்களும் விட்டுச் சென்றவற்றின் பயனாளிகளே நாம். அவ்விடத்தில் அடுத்துக் கடமையாற்ற யார் வரவேண்டும்? அகவை நாற்பதுக்கு மேற்பட்டோரே அடுத்த தலைமுறையினர். அகவை நாற்பதுக்குக் கீழ்ப்பட்டோரே இளைய தலைமுறையினர். இவ்விருவரும் பொறுப்பேற்றாலன்றி வேறும் யாரும் வானத்திலிருந்து குதித்து வரப்போவதில்லை. இவர்களே மொழிக்காப்பாளர்களாக மாற வேண்டும்.
எல்லாரும் எழுதலாம், என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை ஏற்பட்ட பிறகு இன்னார்தான் இல்லை என்னுமளவுக்கு ஒவ்வொருவரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க வளர்ச்சியே. விரைந்து கிடைத்த இவ்வளர்ச்சியானது அதற்குரிய எதிர்விளைவுகளோடும் இருக்கிறது. எழுத்து மொழியானது அதன் செம்மையான வடிவத்திலிருந்து இருந்து இறங்கி இறங்கி தாறுமாறான கோலத்திற்கு மாறிவிட்டது. பயன்பாடு மிகுந்து பரவிய அதே விரைவில் அதன் நலக்கூறுகள் பலவும் தரைதட்டி நிற்கின்றன.
புதிதாக எழுதுபவர்கள்தாம் தமிழை முறையாகப் பயிலாமல் தப்பும் தவறுமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. தமிழின் தலையாய எழுத்தாளர்கள், முதல்வரிசைக் கவிஞர்கள், பேராசிரியர்கள், இதழாசிரியர்கள் எனப் பற்பலரும் இக்குறைபாட்டுச் செயலில் ஊறித் திளைக்கிறார்கள். மொழியைக் கருவியாகக்கொண்டு தம் நாள்களை அமைத்துக்கொண்ட பெரியவர்களே அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது நம்முன்னுள்ள சோர்வு.
மொழியில் பிழைகளைக் களைய முயற்சி எப்போதும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. முற்காலத்து நிலவிற்பனைப் பதிவுத் தாள்களில் ‘றாமசாமி, றாமாயி’ என்றெல்லாம் பெயர்களைப் பார்க்க முடியும். இப்போது அவ்வாறு எழுதுவோர் அறவே இல்லை எனலாம். அந்தப் போக்கு பிழை திருத்த மேற்கொள்ளப்பட்ட மொழிப்பரப்புரையால் நீங்கியது. அவ்வேளையில்தான் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. அவர்களுடைய செம்மாந்த முயற்சியால் வடசொற்கலப்பு குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டு மட்டுக்கு வந்தது. பிழையின்மையும் வடசொற்கலப்பு நீக்கமும் ஏற்பட்ட பிறகு நல்ல உரைநடை வளரத் தொடங்கியது. இதற்கு எடுத்துக்காட்டாக இரண்டாயிரத்திற்கு முன்பாக எழுதப்பட்ட இதழியல் தமிழ் நிலையான தரவடிவத்தைப் பேணியதைக் கூறலாம்.
அரசுப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படித்து வளர்ந்த மாணாக்கர்கள் தமிழ் எழுத்துலகிற்கு வந்தபோது மொழியைச் செம்மையாகவே எழுதினார்கள். ஓரளவு பிழை களைந்து பயன்படுத்தினார்கள். ஏனென்றால் அவர்களை ஆக்கிய தமிழாசிரியர்கள் தமிழ்வேட்கை வெள்ளமாகப் பாய்ந்த காலகட்டத்தில் தமிழைப் பயின்றவர்கள். அந்த வேட்கையை அப்படியே தம்மிடம் கற்போர்க்கு மடைமாற்றம் செய்தார்கள். எழுத்தும் பலப்பல ஒத்திகைகளின் பின்னரே மேடையேற்றம் கண்டது. இதழ்கள் ஏற்றுக்கொண்டால்தான் ஒருவரின் எழுத்தினை அச்சில் பார்க்க முடியும். பதிப்பாளர் ஏற்றுக்கொண்டால்தான் ஒருவரின் நூல் வெளியாகும். அவர்கள் தமக்கான எழுத்தாளர்களை அவர்களுடைய மொழியாற்றலை வைத்தே கண்டுபிடித்துவிடுவார்கள்.
இன்றைக்குப் போவோர் வருவோர் என எல்லாருமே எழுதுகிறோம். மேற்சொன்ன வசதி வாய்ப்புகளால் எல்லாமே எழுத்தாகின்றன. நினைத்ததை எல்லாம் நினைத்த வடிவத்தில் எழுதுகிறோம். ஆங்கிலச்சொற்கள் நாள்தோறும் புதிது புதிதாய் வந்திறங்குகின்றன. கடைநிலை மக்கள்வரைக்கும் வந்து சேர்கின்ற கருவிகளும் கருத்துகளும் ஆங்கிலப் பெயர்களோடு இருக்கின்றன. அவற்றை ஆங்கிலப் பெயர்களிலேயே எழுதிக் காட்டுவதைத் தவிர, வேறெதையும் ஆற்றவியலாதார் பெருகிவிட்டனர். “நான் என்ன வைத்துக்கொண்டா இல்லை என்கிறேன்? தெரிந்தால் செய்ய மாட்டேனா?” என்கின்ற ஆற்றாமையைத்தான் அவர்கள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களில் சொல்கிறார்கள்.
புத்தாயிரம் (2000) ஆண்டுத் தொடக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களின் தலைப்புகள் பற்பலவும் ஆங்கிலத்தில் இருந்தன. விரைவில் திரைப்படத் தலைப்புகள் யாவும் ஆங்கிலத்திற்கே சென்றுவிடுமோ என்னும் நிலை. அப்போக்கினைப் பா.ம.க. நிறுவனர் இராமதாசு முதற்கொண்டு அனைவரும் எதிர்த்தார்கள். அதன் பிறகுதான் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிச்சலுகை என்றானது. திரைத்தொழில் ஒரு வணிகம். திரைப்படக்காரர்களுக்கு வேண்டியது காசு. பிறகு தாமாகவே தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பட்டன என்பது வரலாறு. இப்போது அந்த நடைமுறை தற்போது என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.
ஆங்கிலப் பெயர்ச்சொற்களைத் தமிழில் அப்படியே எழுதினால் என்ன ஆகிவிடப் போகிறது? வேறொன்றும் ஆகாது. இன்னும் இருபதாண்டுகளில் தமிழ்ப்பெயர்ச்சொற்களில் ஆங்கிலமே பெரும்பகுதியாய்க் கலந்திருக்கும். அவ்வளவுதான். ஒரு போக்கிற்கு ஒரு முறைமை வேண்டாவா? புதிய புதிய சொற்கள் வந்து குவிந்தால் அதன் பொருள் என்ன? இங்கே சொல்வளம் இல்லை என்பதா? அக்கருவிகட்குப் பெயர்ச்சொல் ஆக்கும் வல்லமை இல்லை என்பதா? அப்படியொரு முயற்சிக்கே வழியில்லா முடநிலை என்பதா? அவற்றுக்கு எதிராகச் சிறுதுரும்பைக்கூடக் கிள்ளிப் போடாத ‘கிகிகிகி’ பதிவர்களின் பெருக்கம் என்பதா? இப்போக்கினிடையே செய்தித் தொலைக்காட்சிகள் சில நல்ல தமிழ்த்தொடர்களை ஆள்வதில் முனைப்பு காட்டுகின்றன என்பதையும் சொல்ல வேண்டும். ஆனால், பெரும்பான்மை தமிழ்வழிக்கு மாறவில்லை என்பதே உண்மை.
கல்வித்துறை மட்டத்திலும் நல்ல தமிழ்ச்சொற்களை ஆக்கிப் பயன்படுத்துவதில் குறையாத ஆர்வம் காட்டுகின்றனர். இவற்றையெல்லம் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்து பெரும்போக்காக மாற்றவேண்டிய இடம் இன்னும் புகைசூழ்ந்ததாகவே இருக்கிறது. அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கோவை வளாகத்தில் தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல் குறித்த கருத்தரங்கிற்குச் சிறப்புச் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டேன். எவ்வாறெல்லாம் புதிய தமிழ்ச்சொல்லை எளிமையாய் ஆக்க முடியும் என்று வழிகூறினேன். மாணாக்கர்கள் மகிழ்ந்து கேட்டுக்கொண்டனர். இலக்கணம் கற்றுத் தந்தவாறு தொழிற்பெயர்களை ஆக்குவது எப்படி என்று தெரிந்துகொண்டாலே போதும். பலப்பல கலைச்சொற்களைப் புதிதாய் ஆக்கலாம்.
பேரிதழ்கள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படும் இக்காலத்தில் இதழாசிரியர்கள் பலரோடு உரையாடியிருக்கிறேன். இதழ்களின் ஆங்கிலச் சொற்பயன்பாடு எப்படி கட்டுக்கடங்காமல் போகிறது என்று வினவியபோது அவர்கள் தந்த விளக்கம் வியப்பூட்டியது. இன்றைய தலைமுறையின் மொழியறிவைச் சொன்னது. துறைசார்ந்த தனியிதழ்கள் ஒவ்வொன்றாகத் தொடங்கப்படுகையில் அத்துறைசார் வல்லுனர்கள் ஆசிரியர்களாகவும் உதவியாசிரியர்களாகவும் பணிக்கு அமர்த்தப்பட்டனர். எடுத்துக்காட்டாக வண்டிகளைப் பற்றிய இதழ் வெளிவருகிறது எனக்கொள்வோம். அதன் ஆசிரியர் வண்டியியலில் பேரறிவு படைத்தவராக இருப்பார். அவர்க்கு அவ்வண்டிகளின் பாகங்களைப் பற்றிய ஆங்கிலச் சொற்கள் மட்டுமே தெரியும். தமிழ்ச்சொற்களை அறியார். அவர் எழுதும் கட்டுரைகளில் கியர், ஆக்சிலரேட்டர் என்றே எழுதுவார். அவர்க்குப் பற்படி, முடுக்கி என்னும் தமிழ்ச்சொற்களோடு அறிமுகமில்லை. புதுச்சொல்லாக்குவது எப்படி என்றும் அறிந்திருக்கமாட்டார். அட, நீங்கள் எல்லாவற்றையும் துலக்கி வைக்க வேண்டா. கட்டுரைக்கு ஒருசொல்லேனும் தமிழில் ஆக்க வேண்டுமா இல்லையா? ஒன்றுமே இல்லை. அவருடைய அறியாமை மொழிக்கூட்டத்தின் ஒட்டுமொத்த அறியாமை வளர்ப்புக்கு இட்டுச் செல்வதைப் பாருங்கள். பிறகு எப்படித் தமிழ் வாழும்? வண்டியியலில் எப்படிப் புதிய சொற்கள் தோன்றும்? ஆங்கிலத்தில் எழுதினால் புத்தகத்தை யாரும் வாங்கமாட்டார்கள். நிறுத்தும்படி நேரலாம் என்றார்கள். கடைசியில் என்ன விளங்கிற்று?
இன்னொரு புறம் புதிய தலைமுறையினர் ஆங்கில வழிக்கல்வி பயின்று வந்திருக்கிறார்கள். அவர்கள் தம் பள்ளியில் தமிழைப் பெயரளவிலும் பிற பாடங்களை ஆங்கிலத்திலும் பயின்று வருகிறார்கள். அவர்கட்கு எல்லாமே ஆங்கிலமயம்தான். அவர்களுடைய மொழி மனத்தில் தமிழ்மொழியானது வீட்டுப் பேச்சு மொழி என்கின்ற அளவில்தான் பதிந்திருக்கிறது. ஆங்கில எழுத்துகளைக்கொண்டு தமிழ்ச்சொற்களை அச்சேற்றுவதற்குப் பழகிவிட்டவர்கள். இவர்கட்கு தமிழ்ச்சுவை பழக்கத்தான் இன்றைய இலக்கியங்களும் பாடல்கள் உள்ளிட கலைகளும் பயன்படவேண்டும். ஆனால், பாடல்கள் பாடல்களாகவே இல்லை. எடுப்பாருடைய கலப்புத் தரம் என்னவோ அம்மட்டத்தில் திரைப்பாடல் உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும் வருகின்றன. இன்றைய குமுகாயத்தில் இளைஞர்கள் இவர்களே. காளையினம் காத்தல், இயற்கை வேளாண்மை, நீர்வளம் காத்தல், மலைவளம் பேணல் என்றால் இவர்களை எளிதில் ஈர்த்துவிடலாம். சிறிது கற்பித்தால் போதும். இவர்களும் தமிழின் பக்கம் உடனே வரக்கூடியவர்கள். அவர்களில் பலர் நன்கு தமிழறிந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள்தாம் ஆங்கிலத்திற்கு எதிராகத் தமிழை உயர்த்திப் பிடிப்பார்கள்.
இன்றைக்கு ஒரு செய்தித்தாளில் வெளியாகும் முழுப்பக்க விளம்பரத்தைப் பாருங்கள். எவ்வளவு பிழைகள்! பல இலட்சக்கணக்கில் செலவு செய்து வெளியிடப்படும் விளம்பரத்தில் நகைப்பூட்டும்படியான பிழைகள். மொழியை அவ்வளவு எளிமையாகவா கருதிவிட்டார்கள்? யார் என்ன செய்துவிட முடியும் என்ற செருக்குப்போக்கு. ஒரு திரைப்படத்தின் எழுத்தோட்டத்தினை நோக்குங்கள். பாதிக்கும் மேலே ஆங்கிலம் கலந்திருக்கும். எழுதப்பட்ட தமிழிலும் பிழைகள் இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மொழியைச் சிதைக்கலாம் என்றால் பேசாமல் இன்னொரு மொழியையே தலைமேல் தூக்கிவைத்துவிடலாமே.
இதற்கு எதிராக என்னதான் செய்ய வேண்டும்? எல்லாரும் ஒருமைப்பட்ட எண்ணத்திற்கு வரவேண்டும். தமிழால் எண்ணி தமிழால் எழுதும் போக்கு பரவவேண்டும். பிறமொழிச் சொற்கலப்பினை மொழிக்கோடரியாகப் பார்க்க வேண்டும். அதனைச் செய்ய அஞ்சுதல் தலை. நாமெழுதும் மொழி வள்ளுவரும் இளங்கோவடிகளும் எழுத்தாணி பிடித்துக் கீறிய பல்லாயிரத்தாண்டு மொழி என்ற பெருமையும் பெற்றியும் ஒவ்வொரு சொல்லிலும் துலங்க வேண்டும். இலக்கியத்திலும் துறைசார் அறிவியல் எழுத்திலும் தமிழைத் தழைத்தோங்கச் செய்க. இணையம் என்ற பெருவெளிப் பாய்ச்சல் மொழிக்கு ஆயிரம் குதிரைகள் பூட்டிய தேராய் வாய்த்துள்ளது. அதனை இறுகப் பற்றிக்கொண்டு குளம்பொலிகள் பெருகியொலிக்கச் செலுத்துக.