மயானத்துக்குப் பின்னாலிருந்த மஞ்சள்நிற கடுகு வயலிலிருந்து வந்த காற்று கருங்கல் மதிலின் மேலால் பாய்ந்து உள்ளே நுழைந்தது. அந்தியின் சூரியக்கதிர்களில் அசைந்துகொண்டிருந்த பெருமரங்களில் மோதியது. படர்ந்துநின்ற கொரம்பியா மரங்கள் சின்னதொரு ஆட்டத்தோடு அசைவை நிறுத்திக்கொண்டன. கல்லறைகளுக்கு அருகில் வரிசையாக நின்ற எப்கரிஸ் பூக்கள் தங்கள் இதழ்களை தரையில் சொரிந்தன. பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சித்திர வட்டக்கற்களுக்கு கீழே பிறப்பும் இறப்பும் இரங்கற் கவிதைகளும் பதித்த கல்லறைகளின் மீது சில இலைகள் பறந்துசென்று விழுந்தன.
நான் அந்த மயானத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்த கல்குடிசைக்கு முன்னால் வேலைக் களைப்போடு அமர்ந்திருந்திருந்து எச்சிலில் முட்டையிட்டு ஊதிவிட்டேன். அது காற்றிலே பறந்துசென்று உடைந்து மரித்தது.
கடந்த இரண்டு வாரங்களாக இந்தச் சுற்றுவட்டாரத்தில் எந்த மரணமும் நிகழவில்லை. எனக்கும் வேலை குறைவு. ஆனால் ஸ்ருவேர்ட்டுக்கு அப்படியில்லை. மெல்பேர்ன் பெருநகரத்திலிருந்து எண்பது கிலோமீற்றர் தொலைவிலுள்ள இந்த மயானத்தைப் பராமரிப்பதற்கு கவுன்ஸிலிடமிருந்து ஒப்பந்தத்தை எடுத்து இருபது வருடங்களாக நடத்திவருகிறான். இங்கே வருகின்ற சடலங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் கவுன்ஸிலுக்கு வருமானம். அந்த வருமானத்தில் ஒருபகுதி ஸ்ருவெட்டுக்கு. அதிலிருந்துதான் எனக்கு ஊதியம் தரவேண்டும். ஸ்ருவேர்ட் மரணங்களை விரும்புவதை பிழைசொல்ல முடியாது.
இந்த மயானம் இருக்கிற பிரதேசம் பெரும்பெரும் வெளிகள் நிறைந்தது. மஞ்சள் படங்கு போல கடுகு வயல்களும் சணல் பயிர்களும் ஹெக்டேர் கணக்கில் சுற்றிவரக் கிடக்கின்றன. மசிடோனியன் குடும்பங்கள் சிலதும் இத்தாலியர்களும் இந்தப் பக்கமிருக்கிறார்கள். மிகுதி அனைவரும் ஆஸ்திரேலியர்கள்தான். கூட்டிக்கழித்துப் பார்த்தால் நூறு குடும்பங்களிருக்கும்.
இந்தப் பிரதேசத்திலுள்ள அநேகமானவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு வீட்டிற்கு வெளியே ஒரு காரும், வீட்டின் உள்ளே ஒரு துப்பாக்கியும் வைத்திருப்பார்கள். இயற்கையாக மரணம் வந்துவிட்டால் ஏற்றுக்கொள்வதற்கு இவர்கள் தயாரே தவிர, செயற்கையாக அதனை அண்டவிடுவதில்லை என்பதில் உறுதியானவர்கள்.
மயானத்தின் வடக்குப்பக்க கருங்கல் மதிலுக்குப் பக்கத்தில் ஒரு தூண் உள்ளது. அதில் ஏறிநின்று பார்த்தால் தூரத்தில் நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு பூங்கா எப்போதும் வெறுமையாகத் தெரியும். எப்போதாவது சிலவேளைகளில், சில முதியவர்கள் கூட்டமாக வந்துநின்று பறவைகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பெரிதாகச் சிரிப்பார்கள். பறவைக்கு இலக்குவைத்து சுடுவதிலும்பார்க்க, தங்களது முதுமையையும் துவக்கையும் துடைத்துப் பூட்டிக்கொள்வதில் அவர்களுக்கொரு திருப்தி.
இவ்வாறு வாழ்ந்தே தீருவோம் என்று அடம்பிடித்துக்கொண்டு கடுகுவயல் காற்றோடு தங்கள் முதுமையின் வெளிர்கேசங்களை கோதிவிளையாடும் நூறு குடும்பங்களிலிருந்து எப்போதாவது ஒருசாவு விழாதா என்று எதிர்பார்த்திருப்பது ஸ்ருவெர்ட்டின் ஜீவிதம்.
2
நான் இந்த இடத்திற்கு வந்து நூற்று இருபத்தொரு நாட்களாகின்றன. மூன்று வருடங்களுக்குப் பிறகு எனது அகதி விண்ணப்பத்தை நிராகரிப்பதாக கடிதம் மூலம் அறிவித்த ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம், மெல்பேர்ன் நகரிலுள்ள பிராந்திய அலுவலகத்திற்கு என்னை வருமாறு அன்று அழைத்திருந்தது.
“எப்படியும் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப் போறாங்கள், நான் போகமாட்டன் மச்சான்” – என்று பரந்தாமனிடம் சொன்னேன்.
இந்தோனேஷியாவிலிருந்து என்னோடு படகேறியவன் பரந்தாமன். மலேசியாவிலேயே பழக்கமானவன். ஆஸ்திரேலியா வருவதென்று கொழும்பிலிருந்து விமானமேறி மலேசியாவுக்கு வந்து, அங்கு ஆந்திர உணவகமொன்றில் மூன்று வருடங்கள் வேலை செய்துகொண்டிருந்தவன். பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு படகேறியபோது அதிர்ஷ்டவசமாக என்னுடனேயே சேர்ந்துவந்தவன். என்னைப் போலவே அகதிமனம் கொண்டவன்.
“என்னை வெளிநாடு அனுப்புவதற்கென்று அப்பா ஊரில் ஈடுவைத்த காணியை மீட்டுக் குடுக்கிறதுக்காவது நான் ஆஸ்திரேலியா போய் ஏதாவது வேலை செய்தாக வேணுமடா. மலேசியாவில் நிண்டு, கொண்டுவந்த எல்லா காசையும் ஏஜெண்டுகளிடம் குடுத்து ஏமாந்திட்டன்” – என்று கபாலி ரெஸ்ரோரண்ட் கார் பார்க்கில் நின்று பேசும்போது பரந்தாமன் சொன்னான். ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தபிறகு, மூன்றுவருடங்களும் அவன்தான் என் அறைநட்பு.
பரந்தாமன் ஒழுங்குசெய்த ஏற்பாட்டின்படி அன்றிரவு மெல்பேர்னிலிருந்து எண்பது கிலோமீற்றர் தொலைவிலுள்ள இடத்துக்குப் புறப்பட்டோம்.
பெருவெளிகளைத் தாண்டி இந்த மயானத்தை வந்தடையும்போது இரவு எட்டரை மணியிருக்கும். வரும்போது காருக்குள் எல்லா விஷயங்களையும் பரந்தாமன் என்னிடம் விளக்கமாகச் சொல்லியிருந்தான். முதலில் விக்கித்துப்போய் எச்சிலை விழுங்கினேன். ஆனால், பொலீஸ் நடமாட்டம் இல்லாத இடம். மயானத்தை நிர்வகிப்பவன் தனது வேலை முதலாளியின் மகன், நம்பிக்கையானவன் என்ற பல விஷயங்களை ஒன்றுக்கு மூன்று-நான்கு தடவைகள் அவனே உறுதிப்படுத்தியபோது மனம் தெம்பானது. கள்ளவழிகளில் செய்கின்ற நல்ல பயணங்கள் அகதிகளுக்கொன்றும் புதிதில்லை.
மயானத்தின் வாயிலுக்கு வந்தபோது, கறுப்பு பொலீத்தீன்களால் மூடிக்கட்டிவிட்டது போல, உள்ளே உயரமாக நின்றுகொண்டிருந்த மரங்கள் அடர்ந்த அச்சத்தைத் தந்தன. படலைத் திறந்து பாதையின் வழியாக கார் உள்ளே மெதுவாக ஊர்ந்தது. இருமருங்கிலும் தெரிந்த கல்லறைகள், நாங்கள் உயிரைப் பணயம்வைத்து வரும்போது மிரட்டிய கடலைவிட பலமடங்கு பீதியளித்தன. கார் விளக்கின் வெளிச்சம்பட்டு சில சிலுவைகள் மினுங்கின. உள்ளிருந்த அலுவலகத்துக்குச் சென்றடைவதற்குள் சிறுவயதிலிருந்து கேள்வியுற்ற அத்தனை பேய்க்கதைகளும் மனதில் மின்னல் கொடிகளாக விழுந்து மறைந்தன. தொண்டை வரண்டிருந்ததை எச்சிலே மறந்திருந்தது.
எனது அச்சத்தையும் பதற்றத்தையும் பரந்தாமன் உணர்ந்தான். ஆனால், எனக்கான பாதுகாப்பினை இந்தச் சகிப்பிற்குள்தான் ஒளிக்கலாம் என்று அவன் எதிர்பார்த்தது என்மீதான நம்பிக்கையில்தான். அதில் தவறில்லை என்று அவன் எதிர்பார்ப்பையும் பயத்தையும் ஏற்றுக்கொண்டேன்.
ஏற்கனவே இருட்டுக்குள் மறைந்திருந்த அந்த மயானத்தின் அலுவலகத்திலிருந்து தாடிக்குள் ஒளிந்திருந்த ஸ்ருவெர்ட் வெளியில் வந்தான். பரந்தாமனை முதலிலேயே சந்தித்திருக்கிறான் என்பது வரவேற்றதில் தெரிந்தது. இருட்டுக்குள்ளேயும் வெள்ளையாக தெரிந்தான். அழுக்கான மேற்சட்டையொன்றும் அதற்குச் சம்மந்தமேயில்லாத நிறத்தில் காற்சட்டையும் அணிந்திருந்தான். அவன்தான் எனக்கு அபயமளிக்கப் போகிறவன் என்பதால், உடனடியாகவே அவன் தொடர்பான எதிர்மறை எண்ணங்களை அழிக்கவேண்டும் என்று யோசித்தபடி அவனைப் பார்த்து மனதார சிரித்தேன். முதலில் அதனை அவன் கணக்கெடுக்கவில்லை. பிறகு, தலையை மேலிருந்து கீழாக வேகமாக அசைத்து தனது பாணியில் ஸ்துதி செய்தான்.
அறிமுகங்களை முடித்துக்கொண்டு, பேசியபடி எனக்குரிய இரண்டாயிரம் டொலர்களையும் தகப்பன் ஊடாக ஒவ்வொரு மாதமும் தனது ஊதியத்தில் சேர்த்துவிடுமாறு பரந்தாமன் சொன்னான். அந்தப் பணத்தை அப்படியே எனது வீட்டுக்கு அனுப்புவது பரந்தாமனின் திட்டமாக இருந்தது. கைலாகு கொடுத்து, “அது முன்னமே பேசியதுதானே” – என்று உறுதிசெய்து கொண்டவன், “வெளியே போகலாம்” – என்று அழைத்துச் சென்றான்.
மரங்கள் தலைக்குமேல் சத்தமிட்டபடியிருந்தன. அளவுக்கதிகமான இருட்டின் இரைச்சல் எரிச்சலைத் தந்தது.
அலுவலகத்திலிருந்து மூலைப்பக்கமாக கொஞ்ச தூரம் அழைத்துப்போனான். அவன் பாய்ச்சிய டோர்ச் வெளிச்சத்தில் பரந்தாமனும் நானும் பின்தொடர்ந்தோம். கால்வைக்கும் ஒவ்வொரு இடத்திலும் யாரோ ஒருவர் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற உணர்வு பாதச் சதைகளை கூசச் செய்தன. அதற்காக வேகமாகவும் ஓடிச்சென்றுவிட முடியாதபடி ஸ்ருவேர்ட் ஓரளவுக்கு மெதுவாகவே நடந்துபோய்க் கொண்டிருந்தான்.
இருட்டில் கற்குடிசை போலத் தெரிந்த இடத்தைச் சென்றடைந்தோம். தங்குவதற்காக அவசர அவசரமாக தயார்செய்யப்பட்டிருந்தது. படுக்கை – மலசலகூடம் – சமையலறையுடன் கூடிய சிறிய அறை. கள்ளமாக உள்ளே ஒளிந்திருந்து வெளியே பார்க்கக்கூடிய கல்வேலைப்பாடு கொண்ட சுவர்கள் அதிலிருந்தன. அங்கிருந்து கிட்டத்தட்ட நானூறு மீற்றர் தொலைவில் அலுவலக வெளிச்சம் தெரிந்தது.
“கைத்தொலைபேசி எதுவும் பயன்படுத்த வேண்டாம்” – என்று என்னிடம் சொல்லிவிட்டு, பரந்தாமனைப் பார்த்து, தான் சொல்வது சரிதானே என்பதுபோல ஸ்ருவேர்ட் தலையசைத்தான். தான் இதில் பெரிய ரிஸ்க் எடுப்பதை இரகசியமான கீழ்குரலில் சொன்னான்.
அவசரமென்றால் மாத்திரம் அலுவலகத்திலிருக்கும் தொலைபேசியை பயன்படுத்தச் சொன்னான். நான் உள்ளே போனதிலிருந்து எல்லாவற்றையும் கடைக்கண்ணாலேயே பார்த்தேன். ஸ்ருவெட் பேசுவதைக்கூட மிகமெதுவான தலையசைப்புகளினால் தான் ஏற்றுக்கொண்டேன். அவன் தாடிக்குள்ளிருந்து சொல்லிக்கொண்டது சகலதும் அவன் குரலில் அச்சமூட்டுவதாக இருந்தாலும் சொன்ன விடயங்கள் என்னைப் பாதுகாப்பவையாக இருந்தன.
பரந்தாமன் விடைபெற்றுச் செல்லும்போது எனது கண்கள் நிரம்பியிருந்தன. ஸ்ருவெர்ட்டும் அவனுடனேயே சென்று தனது காரில் ஏறிக்கொண்டான். கார் வெளிச்சத்தில் எனது கண்ணீரை பரந்தாமன் கண்டிருக்க வேண்டும். திரும்பவும் என்னிடம்வந்து, வாரத்தில் ஒருதடவை வருவதாகவும் வீட்டுக்காரரை தான் சமாளித்துக் கொள்வதாகவும் சொல்லி இறுக்க அணைத்தான். “ஒன்றும் யோசிக்க வேண்டாமடா, இதுவும் ஒரு அனுபவம்” – என்றுவிட்டு காரில் போய் ஏறினான்.
எல்லாம் அடங்கி என்னைச் சுற்றி சத்தங்களும் இருட்டும் நிரம்பியது.
வண்ணங்கள் நிறைந்த திரைகள் அனைத்தையும் எரித்து விழுத்திய எனது வாழ்வு, சிதைகள் செறிந்த வளவொன்றில் பதுங்கியிருப்பதற்கான சாபத்தைப் பெற்றிருந்ததை இப்போது அறிந்தேன்.
இரவு நித்திரையற்று என்னோடு முழித்திருந்தது. வெளிக்காற்றின் ஊளை காதில் பெருக்கெடுத்து எதிரொலித்து.
எது நடந்தாலும் அறையைத் திறப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்துகொண்டேன். தற்செயலாக யாராவது நடமாடுவது தெரிந்துவிட்டால்? விறைத்த கைகளை இறுக்கிப் பொத்தியபடி கண்களை மூடிக்கொண்டேன்.
பூமியில் வெளிச்சம் எழுந்திருந்தது. கதவு தட்டும் சத்தம்கேட்டு, பாய்ந்துசென்று திறந்தபோது, வெள்ளைத்தாடிக்குள் ஸ்ருவேர்ட் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான். முதல்நாளிரவைப் போல இல்லாமல் அழகாகத் தெரிந்தான்.
கொண்டுவந்த உடைகளில் தடித்த ஜக்கெட் ஒன்றை அணிந்துவருமாறு கூறினான். பல் துலக்கிவிட்டு ஓடிவந்து அவன் தந்த கோப்பியோடு அவனுக்குப் பின்னால் சென்றேன்.
முதலில் அழைத்துச்சென்று, பிணமெரிக்கும் அறையைக் காட்டினான். பாண்போறணை மாதிரியிருந்தது. இறுதி நிகழ்வுகள் மயானத்துக்குள் நடைபெறுவது குறைவென்று கூறி, எரிப்பதற்குத் தரப்படும் பிரேதத்தை பெட்டியோடு எங்கு வைத்து உள்ளே தள்ளுவது என்பதையும் எரிப்பதற்காக அழுத்துகின்ற மின்சார ஆழியையும் காட்டினான். தான் குடித்துமுடித்த பிளாஸ்திக் குவளையை உள்ளே எறிந்துவிட்டு, அது எப்படியெரிகிறது என்று காட்டினான். தீயீன்ற வெக்கை என் முகம்நோக்கிப் பாய்ந்தது. இந்த வேலையை நான் செய்யவேண்டிய தேவையிராதென்றும் தானே செய்வதாகக் கூறிய ஸ்ருவேர்ட், அதனை ஒரு சம்பிரதாயமாக காண்பித்ததாகச் சொன்னான்.
நாட்டுப்புற ஆஸ்திரேலியனுக்குரிய வேகமான ஆங்கில உச்சரிப்பும் கெட்டவார்த்தைகளும் அவன் பேச்சில் தாராளமாக ஒடிந்து ஒடிந்து விழுந்தன.
அதற்குப் பிறகுதான் எனக்குரிய முழுநேரப் பணியைக் காண்பித்தான்.
கல்வேலிகளுக்குள் அடைந்திருக்கும் அச்சத்தையும் அமைதியையும் கலைப்பதற்கு மயானங்களிலுள்ள பூக்களுக்கு பெரும்பங்குண்டு என்பதை மனதார நான் விளங்கிக்கொண்ட அத்தருணங்களை ஸ்ருவேர்ட் படிமுறையோடு புரியவைத்தான். அவை இங்குள்ள கல்லறைகளின் அழகை மெருகூட்டுவதற்கு மாத்திரமன்றி கவுன்ஸில் ஒப்பந்தத்தின் ஆயுளையும் அதிகரிக்கும் என்பதை அழுத்தி விளங்கப்படுத்தினான்.
கல்வேலியோரமாக நிறைந்திருந்த ஜக்கரண்டா மரங்களுக்கான எருவை எனது கற்குடிசைக்கு அருகிலிருந்து கொண்டுவந்து கொட்டி, பரவி, நீரூற்றுவது முதற்கொண்டு, வரிசையாக கட்டப்பட்ட கல்லறைகளுக்கு அருகில் சீர்பிசகாமல் நடப்பட்டுள்ள பிள்ளைத்தாவரங்களுக்கு எவ்வாறு நீர்சேர்ப்பது, அதிகம் வளர்ந்த பசியமரங்களின் கொடிகளை எப்படி கத்தரித்துவிடுவது – முக்கியமாக ஓங்கிய கொரம்பியா மரங்களிலிருந்து விழுகின்ற இலைகளை எவ்வாறு தவறாமல் கூட்டி, அவற்றை எருவோடு கொண்டுபோய்ப் போடுவது – என்றும் சொல்லித் தந்தான்.
3
அன்று ஸ்ருவேர்ட் வேலைகளை சொல்லித் தந்து புறப்பட்ட உடனேயே அவன் சொன்னதுபோல கிரமமாக பணிகளை ஆரம்பித்தேன். சகல வேலைகளையும் முடித்துக்கொண்டு இருள் மயானத்தை விழுங்கும் முன்னரே அறைக்குள் வந்துவிட்டேன். ஸ்ருவேர்ட் வாங்கித்தந்த நூடில்ஸ் பக்கெட்டுகளை கொதிநீரில் போட்டெடுத்து இரவுணவை முடித்துக்கொண்டேன். தேனீருக்காக கேத்தலைப் போட்டபோது அது எழுப்பிய சத்தம் பயத்தோடு எரிச்சலைத் தந்தது.
வேலை அலுப்பும் பதற்றமும் என்னை இழுத்துப் போர்த்திக்கொள்ள நித்திரை மூடிக்கொண்டது.
அப்போது –
மயானத்தின் எல்லைச் சுவரிலிருந்து எழுந்த அந்தச் சத்தம் மஞ்சள் அலையாக உருக்கொண்டு ஒரே கணத்தில் இரவை ஊடுருவியது. அலையின் இரைச்சல் பயமுறுத்தியது.
கற்குடிசையின் வட்டக்கற்களின் வழியாக கூர்ந்து பார்க்கிறேன்.
நிலவொளியில் முழுமயானமும் முன்பகல் போல ஒளிர்கிறது. கல்லறைத் தோட்டமெங்கும் நட்டிருந்த சிலுவைகள், உள்ளே பாய்ந்த மஞ்சள் கடலில் மெல்ல மேலெழுந்து மிதக்கின்றன. அதில் தனித்ததொரு பூங்கன்றின் மலர்கள் அப்போதும் மலர்ந்தபடியுள்ளன. மஞ்சள் நிற அலை தீராப் பழியோடு எனது கற்குடிசையையும் கடைசியாக கவ்விச்சென்று விடுகிறது. மிதக்கும் மயானத்தில் விரிந்துகொண்டிருக்கும் ரூபங்கள் பயங்கரமாய் என்னைச் சிதைக்கின்றன. கல்லறைகளாயிருந்த ஆண்களும் பெண்களும் அலைமீது மேனி உதிர மூச்சடைக்கிறார்கள். கூக்குரலிட்டுச் சிரிக்கிறார்கள். மேலெழுந்த சிலுவைகள் அவர்களது கைகளைச் சேர்க்கிறது. அதனைத் துடுப்பாக வலித்துக்கொண்டு அவர்கள் ஒருவரை ஒருவர் அண்மிக்கிறார்கள். அரவணைக்கிறார்கள். முத்தமிடுகிறார்கள்.
மீண்டும் ஒரு பேரலை எழுந்து விழுகிறது.
நான் மூர்ச்சையாகி நெஞ்சை முன்னே நிமிர்த்தி உதறுகிறேன். மஞ்சள் கடல்நீர் என் நாசியின் வழியாகச் சென்று கண்களை வெளியே பிதுக்கித் தள்ளுகிறது. நான் வாயை நன்கு திறந்து யாரையோ அழைக்கிறேன். சத்தம் வரவில்லை.
அந்தக் கணத்தில், ஒரு மூதாட்டி நீந்திவந்து என்னைத் தோளோடு சாய்த்துக்கொள்கிறாள். நான் அவளை இறுக்கி அணைத்தபடி அழுகிறேன். எனது அழுகையிலும் ஒலியில்லை. மீன்போல என்வாய் திறந்து மூடுகிறது. அந்த மூதாட்டியின் கைகளுக்குள் சென்றதிலிருந்து என் உடல் வெம்மை கொள்கிறது. அப்போது என் முகத்தை அருகில் வைத்துப்பார்க்கும் அந்த மூதாட்டி புன்னகைக்கிறாள். மேல் வகிடெடுத்து சீவிய அவள் தலைமுடி அந்தக் கடலினால் நனையவில்லை. அலையினால் கலையவில்லை. ஆனால், இப்போது அவள் அச்சமூட்டுகிறாள். அவள் என்னை ஏதோ செய்யப் போகிறவளாகத் தெரிகிறாள். அவளிடமிருந்து உதறிக்கொண்டு மீண்டும் கடலில் வீழ்கிறேன்.
கடலில் வீழ்ந்த எனது கைகள் வலித்தபோது, குளிர்ந்த தரையில் நான் வியர்த்தபடி கிடப்பதை உணர்ந்தேன். அப்போதும் நான் ஒரு மீனைப்போல வாயைத் திறந்து மூடியபடி சுவாசித்தேன்.
வெளியில் பெரிய சத்தத்தோடு காற்று வீசிக்கொண்டிருந்தது. அருகிலுள்ள கடுகுவயல் காற்றோடு கொந்தளித்துக் கொண்டிருப்பது கேட்டது.
எனது உடல் எடை குறைந்தது போல உணர்ந்தேன். எனக்குள் ஒரு குளிர்மை பரவியிருந்தது.
சற்று முன்னர் மஞ்சள் கடல்மேல் மிதந்தவர்கள் அத்தனை பேரும் திடீரென்று நெருக்கமானவர்கள் போலிருந்தது. அவர்களுடன் இங்கு கூடவே நின்றுகொண்டிருக்கின்றேன் என்பதை அந்தக் கணம் மனம் நம்ப மறுத்தது. சட்டென, இந்த மண் எனக்கு பெருங்காதையொன்றை போதித்துவிட்டது போன்ற ஒளி எனக்குள் ஒளிர்ந்தது. வெளியில் இருள் கவிழ்ந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. நானொரு பெரும் பகலாக அங்கு நின்றுகொண்டிருந்தேன்.
சற்றுமுன்னர் வரைக்கும், இங்கு நான் கண்டு அஞ்சிய அனைத்தையும் இப்போது நெருங்கி விரும்புவதை என்மனம் உணர்ந்தது. இரவுக்கும் பகலுக்கும் அப்பாற்பட்டதொரு சிநேகத்தினை இந்த நிலம் எனக்குள் சொரிந்துகொண்டிருந்தது.
குடிசைக்குள் சென்று கேத்தலைப் போட்டேன். நன்கு சுடச்சுடத் தேனீரொன்றை வார்த்து, வெளியில் வந்து உயர்ந்த மரங்கள் உமிழ்ந்துகொண்டிருந்த காற்றின் ஈரத்தை ரசித்தவாறு அதை உறிஞ்சிக் குடித்தேன்.
4
ஸ்ருவேர்ட் இன்றைக்கும் வரமாட்டேன் என்று சொல்லியிருந்தான்.
சித்திரை வேலைப்பாடுகள் கொண்ட சரளைக்கற்களை மயானத்தின் மேற்கு மூலைக்கு தள்ளுவண்டி மூலம் எடுத்துவந்து போடச் சொல்லியிருந்தான் ஸ்ருவேர்ட். அவற்றை வாசலிலிருந்து தூக்கி வந்ததில், போட்டிருந்த ‘டீசேர்ட்’ தொப்பலாகி முதுகோடு ஒட்டியிருந்தது. வரிசையான கல்லறைக் குடில்களின் வெளிவிளிம்பில் அளந்து நடப்பட்டிருந்த ரோஜா மரங்களுக்குக் கீழ் அவற்றை வைத்துவிட்டு, உள்பக்கமாக குழிகளை வெட்டி, அவற்றில் அரைவாசிக்கு அந்தக் கற்களைப் புதைக்கத் தொடங்கினேன். கற்களின் அரைவட்ட மேற்பகுதி தரைக்குமேல் தெரியும்படியாக நட்டுவிட்டால், அது கல்மலர்கள் போன்ற அழகைச் சேர்க்கும். அருகிலுள்ள கல்லறைகளுக்கு புதிய ஜொலிப்பைத் தரும்.
நீளமாக இழுத்துக்கட்டிய கயிறின் வழியாக, வரம்புபோல நீண்ட கிடங்கொன்றைக் கொத்தி, மண்ணை வெளியில் போட்டுக்கொண்டு, பின்னால் வந்துகொண்டிருந்தேன்.
முதுகு உளைந்தது. சற்று மண்வெட்டியை வெளியில் வைத்துவிட்டு, திரும்பினேன்.
மஞ்சள் கடல் மூதாட்டி!
அப்படியே வெட்டிய மண்குவியலின் மீது பின்பக்கமாக விழுந்துவிட்டேன். சூரியஒளியின் கீழ் அவள் பிரகாசமாக நின்றுகொண்டிருந்தாள். எனது உதடுகள் மாத்திரமல்ல, கைகளும் விறைத்திருந்தன. எழுந்திருக்க முடியவி;ல்லை.
“உன்னை இங்கு நான் பார்த்ததில்லையே? புதிய வேலையாளா?”
அவள் ஓரளவுக்குப் பரிச்சயமான கேள்வியைக் கேட்கத்தொடங்கியது, நான் காண்பது கனவில்லை என்பதை உறுதிசெய்தது.
“எனது கணவரது கல்லறைக்கு பூப்போடுவதற்காக வந்தேன்”
நேற்றிரவு என்னைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கிடந்த அந்த மூதாட்டியின் அதே குரல்.
கண்களில் கனவுகள் வற்றியிருந்தன. சுருங்கிய குடைகள்போல இமைகள். முழுவதுமாக நரைத்தமுடி. வெயிலுக்கு அவள் வெண்மை மேலும் ஒளிர்ந்தது. நடுமுதுகில் ஆரம்பித்து கழுத்து வரை நீண்டிருந்த முன்வளைந்த கூனல் அவளது வயோதிகத்தோடு நிரந்தரமாகியிருந்தது. குளிருக்காக அணிந்திருந்த விளிம்புகளில் சிவிப்பு பட்டன்கள் வைத்து அலங்கரிக்கப்பட்ட கறுப்பு ஜக்கட், அவள் அணிந்திருந்த வெள்ளைச் சரிகையின் மடிப்புகளைக் கலைக்காமல் அணைத்தபடியிருந்தது.
நான் அவளைப் பார்த்தவாறே கைகளை ஊன்றி எழுந்தேன்.
நேற்றிரவின் கனவிலிருந்து இறங்கிவந்த அந்த மூதாட்டியின் உருவம் பேரர்த்தம் நிறைந்த அச்சத்தை எனக்குள் பொழிந்தது. அவள் அதனைப் பெரிதுபடுத்தாமலேயே தனது சிறிய காலடிகளை எடுத்துவைத்தபடி இன்னொரு திசைவழியாக நடந்தாள்.
இன்று இவ்வாறு யாரும் வருவார்கள் என்று ஸ்ருவேர்ட் எந்த முன்னறிவிப்பும் தராதது அப்போது எனக்கு எரிச்சலை தந்தது. வீணாக அந்த மூதாட்டியைப் பார்த்து விழுந்தெழும்பி சுதாரித்துக் கொண்டிருப்பதெல்லாம் நான் அதுவரை அடைந்திருந்த விடுதலை மிக்க உணர்வுக்கு குழிதோண்டிக் கொண்டிருந்தது.
வெட்டிய மண்வெட்டியை அப்படியே விட்டுவிட்டு, வந்திருக்கும் விருந்தினருக்கு என்ன பரிமாறுவதென்று புரியாமல் மூதாட்டியை அவள் வேகத்துக்கு நடந்தபடி அருகில் தொடர்ந்தேன்.
கரிய பளிங்குக் கல்லினால் அமைக்கப்பட்ட மினுங்கும் கட்டில்போன்ற பெரிய கல்லறையின் முன்பாக அவள் நின்றாள். நான் வந்த நாள் முதல் ஆச்சரியப்படுகின்ற கல்லறை அது.
ஜப்பானியர்களின் கல்லறைகள் இப்படியான வசதியானவை என்று ஸ்ருவேர்ட் சொல்லியிருந்தான். இறக்கும்போது படுத்திருந்த கட்டிலளவில் அப்படியே கல்லறையை அமைப்பது சில ஜப்பானியர்களது வழக்கம். பெரிய விசாலமான அந்தக் கறுப்புக் கல்லறை அழகாகவும் அதன் தலைப்பகுதி, மீசைபோன்று வளைந்து மேலெழும்பும் வேலைப்பாடு கொண்டதாகவும் இருந்தது.
சிறிய காலடிகளாக வைத்து நடந்துசென்ற மூதாட்டி அந்தக் கல்லறையை நெருங்கியதும் மிக மெதுவாக – மிகவும் மெதுவாக – உள்ளிருக்கும் தனது கணவரை தூக்கத்தினால் எழுப்பிவிடக் கூடாது என்பதுபோல நடையை நிறுத்தினாள். தன் கையிரண்டிலும் கொண்டுவந்த வெண்சிவப்பு நிறப் பூக்களை அருகில் கொண்டுசென்று காலடிப் பக்கமாக மெதுவாகத் தூவினாள்.
எனது உதவி தேவைப்படுமளவுக்கு தடுமாறாமல் – முழந்தாளிலிருந்து அந்தப் பூக்களை கல்லறை மேட்டினில் பரவினாள். பிறகு, ஒருகையை மாத்திரம் முடிந்தளவு கல்லறையின் நடுப்பகுதிக்கு நீட்டி மெதுவாகத் தொட்டு, அந்த விரல்களை தனது சுருங்கிய உதடுகளின்மீது வைத்துவிட்டு எழுந்தாள்.
அந்தக் கல்லறையின் முன்பாக அவள் நின்றுகொண்டிருந்த போது மேலும் அழகாகத் தெரிந்தாள். தனக்கும் அந்தக் கல்லறைக்கும் இடையிலான பிணைப்பினைப் பெருமையோடு பார்த்தபடி நின்றாள். அவள் மனதிலோடும் நினைவுகள் நிச்சயம் பெரும் சங்கீதமாக அல்லது செறிவான பிரார்த்தனையாக அல்லது எதுவுமே இல்லாத அமைதியாக இருந்திருக்கும்.
“ராஸ்கல், எனக்கு முதல் போய்விட்டான்.”
திரும்பி என்னைப் பார்த்தாள். நான் மண்கையை ஒன்றோடொன்று தட்டியபடி முதல்தடவையாக அவளைப் பார்த்து புன்னகைக்க எத்தனித்தேன். எனது முகத்தில் தெரிந்த குழப்பத்தை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.
“ஹிமாரி”
உனது பெயர் என்ன என்பதுபோல கை தந்தாள். பெயரைச் சொன்னவுடன், அதற்காகவே காத்திருந்தவள் போல பேசத் தொடங்கினாள். அவள் வயதுக்கும் பேச்சுக்கும் எந்தத் தொடர்பையும் கண்டறிய முடியவில்லை.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பானிற்கு வந்த ஆஸ்திரேலியப் படையிலிருந்தவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டு இந்த நாட்டுக்கு வந்திருக்கிறாள். காதல் திருமணம் என்பதைச் சொல்லும்போது அந்தச் சொல்லுக்குரிய நிறைவை தனது முதுமை குலைத்துவிடக் கூடாது என்ற அழுத்தத்தோடு உச்சரித்தாள். அதற்குள் அளவான சிறுவெட்கத்தையும் புன்னகையையும் மடித்துவைத்தாள்.
தங்களது காதல் இன்னமும் காலமாகி விடவில்லை என்பதை அந்தக் கல்லறையின்மீது அகலாது அமர்ந்துகொண்டிருந்த அவளது பார்வை சொல்லிக்கொண்டிருந்தது.
இப்போது அங்கிருந்து வெளியில் நடக்கத் தொடங்கினாள். நானும் தொடர்ந்தேன்.
அலுவலகத்திற்கு வெளியே அவளது கார் நின்றுகொண்டிருந்ததை அப்போதுதான் கண்டேன்.
கல்லறைகளின் நடுவில் அமைந்த வட்டக்குந்தில் மெதுவாக அமர்ந்தாள். என்னையும் அருகில் அமரச் சொன்னாள். சிறிய களைப்பு அவள் மூச்சில் தெரிந்தது. அது அவள் வயதைச் சொன்னது.
5
காத்திருந்ததுபோல அடுத்த வாரமே பரந்தாமன் வந்தான். வெளியாட்கள் யாருக்கும் சந்தேகமேற்படாதவண்ணம் ஸ்ருவேர்ட்டின் வாகனத்திலேயே வந்திறங்கினான். வரும்போது பல உணவுப்பொருட்களையும் எனக்கு எடுத்து வந்தான். நான் இந்த நிலத்துக்குப் பழகிவிட்டதை என்னில் கண்டு ஆச்சரியப்பட்டான்.
அகதி வாழ்வின் தகுதியுள்ளவனாக நான் எதையும் சமாளித்துக் கொள்பவன் என்பதை ஏற்கனவே அறிந்திருந்த அவனுக்கு, இந்த இடத்தை ஒருவாரத்தில் விருப்பத்துக்குரியது போல மாற்றிக்கொண்டதைக் கண்டு ஆச்சரியத்துடன் பல கேள்விகளைத் தொடுத்தான்.
கற்குடிசைக்கு அவனைத் தனியாக அழைத்துச்சென்று, ஜப்பான் கிழவியின் வருகையையும் அவள் வந்த கனவினையும் அவனுக்குச் சொன்னேன்.
குடிவரவு அதிகாரிகள் வீட்டுக்குத் தேடி வந்ததையும் நான் அங்கிருந்து எங்கேயோ சென்றுவிட்டதாகச் சொன்னதையும் அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.
எனது வீட்டுக்காரர்களோடு பேசியபோது நான் தொலைதூரமொன்றில் வேலைக்காகச் சென்றிருப்பதாக கூறியபோது அவர்கள் தன்னுடைய பதிலை நம்பி வேறெதுவும் கேட்கவில்லை என்றான்.
அப்போது அங்கு வேகமாக வீசிய காற்றில் அக்காசியா பூம்பஞ்சுகள் காற்றில் பறந்து போய்க்கொண்டிருந்தன. எனை நோக்கிவந்த ஒருபஞ்சினை, உள்ளே நன்றாக காற்றை இழுத்து ஊதிவிட்டேன். அது எம்மை விட்டுத் தொலைவாக பறந்துபோனதைக் கண்டு என் கண்கள் சிரித்ததை ஆச்சரியத்தோடு பார்த்தபடியிருந்தான் பரந்தாமன்.
“ஒவ்வொரு இடமும் எங்களுக்கு ஒவ்வொரு அனுபவத்தைத் தந்திருக்கிறதடா. ஆனால், சில இடங்கள் எங்களுக்குள் இன்னொரு உயிராகவே உள்ளிறங்கி விடுகிறது”
நான் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஸ்ருவேர்ட் அலுவலகத்திலிருந்து வந்தான்.
“காலை வேளைகளில் சமைத்து விடாதே! காற்று அருகிலுள்ள குடிமனைகளை நோக்கி வீசும் நேரமது. மயானத்திலிருந்து கறிவாசனை வந்தால், பயந்து போவார்கள். பின்னேரங்களில் காற்று எதிர்திசையில் காட்டுப்பக்கமாக வீசும். அப்போது பிரச்சினை இல்லை” – என்றான்.
தனது வாகனத்தில் வரும்போது பரந்தாமன் கொண்டுவந்த உணவுப்பொருட்களைக் கண்டுகொண்ட ஸ்ருவேர்ட், அலுவலகத்திலிருந்து யோசித்திருக்க வேண்டும்.
இருவருமே சிரித்துவிட்டோம்.
முன்வழுக்கை சாய்ந்த அவனது முகம் அநேக தருணங்களில் பரபரப்பானவனாக காண்பித்துக் கொண்டாலும் அவனது சில நகைச்சுவைகள் இதுபோலத் தானிருக்கும்.
“செத்த பிணங்களை ஸ்ருவேர்ட் இப்போதெல்லாம் சமைத்துச் சாப்பிடப் பழகிவிட்டான் என்று சுற்று வட்டாரத்தவர்கள் நினைத்தால் நல்லதுதானே, உன்னைக் கண்டால் எல்லோரும் அஞ்சுவார்கள்” – என்று பரந்தாமன் பதிலுக்கு ஒன்றைச் சொல்லிச் சிரித்தான்.
நான் அந்த ஜப்பான் கிழவி பற்றியும் மஞ்சள்கடல் சூழ்ந்த தீவுபோன்ற இந்த மயானத்தின் அழகும் அதிசயங்களும் எனக்குள் ஏற்படுத்திய பரவசங்கள் குறித்தும் இயன்றளவு பரந்தாமனுக்குச் சொன்னேன்.
6
“அவனுடைய காதல் மனைவியென்றுதான் பெயரே தவிர நான் இந்த நாட்டில் இன்றுவரைக்கும் இரண்டாம்தர பிரஜைதான், தெரியுமா?”
ஹிமாரி என்னைப் பார்த்து அப்படிக் கேட்டபோது, அதன் நியாயமும் அர்த்தமும் புரியாமல் அவளது நடுங்கும் விழிகளையே கூர்ந்து பார்த்தேன்.
“எனக்குத் தெரியும் மகனே! இங்கு நீ சட்ட விரோதமாகத்தான் ஏதோ செய்துகொண்டிருக்கிறாய் அல்லது இந்த இடத்தில் சட்ட விரோதமாக ஒளிந்துகொண்டிருக்கிறாய். அது உன் கண்களிலேயே தெரிகிறது.”
அவள் தொடர்ந்துகொண்டு போனாள் –
“அதற்கான காரணத்தை நீ எனக்குச் சொல்லவேண்டிய அவசியமொன்றுமில்லை. ஏனென்றால், என்னைப் போல நீயுமொரு அகதி. உனக்குள்ளிருக்கும் இரகசியத்தைத் தோண்டுவது எவ்வளவு நாகரீகமற்ற செயலென்பது எனக்குப் புரியும். ஐம்பது வருடங்களாக ஒரு ஆஸ்திரேலியனை அதுவும் தேசம் காப்பதற்காக நாடுவிட்டு நாடுபோன ஆஸ்திரேலியனைத் திருமணம் செய்த என்னையே இந்த நாடும் எனது கணவரின் குடும்பமும் இரண்டாம்தர பிரஜையாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது நேற்றுவந்த உன்னை ஆஸ்திரேலியன் என்று சிம்மாசனத்தில் வைத்து கொண்டாடிவிட மாட்டார்கள்.”
ஏளனப் புன்னனகயை உதிர்த்துவிட்டு அவளது கணவனது கல்லறையைப் பார்த்தாள்.
ஆசியப் பெண்களுக்குரிய எண்ணெய் தேய்த்த ஒப்பனை அவளது முகத்தில் தெரிந்தது. விழிகளின் விளிம்புகளில் எந்த நடுக்கமும் குலைத்துவிடாது அவள் கீறியுள்ள கரிய கோடுகளின் நேர்த்தி, ஒரு ஆஸ்திரேலியனைக் காதலில் கவர்ந்த பாரம்பரியமான அவளது சக்தியைக் காண்பித்தது. நேர்த்தியாக நறுக்கிய நகங்களுக்கு இப்போதும் பூச்சிட்டிருக்கிறாள். அழகிதான்.
“இவன் இறந்த அடுத்த மாதமே என்னை அரசுக் குடியிருப்பொன்றில் பதிந்து அங்கு கொண்டுபோய் விட்டுவிட்டார்கள். நானும் எனது கணவருமிருந்த எங்களுக்குச் சொந்தமான வீட்டை, ‘ஜப்பான்காரி கொண்டுபோய் விடுவாள்’ – என்று என் காதுபடப் பேசிச் சுருட்டிக்கொண்டார்கள். எனக்கு கடைசியில் எஞ்சியது இவனது சாம்பல் மட்டும்தான். அந்தக் கிண்ணத்தில் கிடைத்த வாழ்க்கைதான் இன்றுவரைக்கும் என்னை உயிரோடு வைத்திருக்கிறது.”
நினைவுகளும் கண்ணீரும் அவளுக்குள் திரண்டு வருகிறது. சிலவற்றைச் சொல்ல முடியாமலும் திணறுகிறாள். அவள் கண்களின் சுருங்கிய கீழ்தசைகளின் வழியாக, துயரம் ஒரு திரவமாக வடிந்தது. அவளது சொற்கள் வாழ்வின் கையறுநிலைக்கு அப்பால், காதலின் வலியாகவும் அடையாளம் பிடுங்கப்பட்ட ஒரு அகதியின் ஊழிப்பெருமூச்சாகவுமிருந்தது. காய்ந்திருந்த உதடுகளை விரித்து, முடிந்தளவு மூச்சினை உள்ளிழுத்து விட்டாள்.
“ஒரு போர்வீரனின் மனைவிக்கு போராடுவதற்கு இயலாமல் போய்விட்டதா? ஜப்பானில் பிறந்தாலும் நீங்கள் இந்த நாட்டவள்தானே? குடியுரிமை கொண்டவள் இல்லையா?”
காற்றோடு சேர்ந்து நிமிர்ந்தது அவள் முகம். சிறிய புன்னகையோடு.
“நீ எந்த நாட்டவன் என்று எனக்குத் தெரியாது. நீ சொல்லவும் வேண்டாம். உன்னைப் போலவே ஒரு இரகசியமாக அது இங்கு இருந்துவிட்டுப் போகட்டும். ஒன்றைப் புரிந்துகொள். உன் மண்ணில் வாழும் வரைக்கும்தான் உன் அடையாளம் என்பது உனக்கு அகங்காரம். இன்னொரு மண்ணில் அது வெறும் ஆபரணம். அவ்வளவுதான். அதனை எப்போது அணிவதென்று நீயே முடிவு செய்ய முடியாது. அதனை ஒளிந்து ஒளிந்து அணிந்து கழற்றுவதில் களைத்து ஒருகட்டத்தில் உன்னையே நீ வெறுப்பாய். கடைசியில், அந்த ஆபரணம் பிடுங்கப்பட்ட ஓர் அநாதையாக செத்து மடிவாய். இந்த இடைவெளியில் போராடுவதென்று நீ சொல்வதெல்லாம் ஒரு பெரும் மக்கள் கூட்டம் செய்வது. காதல் என்ற மிகச்சிறிய உணர்ச்சியோடு இழுபட்டுவந்த என்னால் யாருக்கு எதிராக போராட முடியும்? இன்றுவரை எனது முகத்தைப் பார்த்தாலே ஒருமுழம் கீழே பார்க்கும் இந்த நாட்டில் உள்ளவர்களுக்கு எதிராகவா?
“நீங்கள் கூறுவது போல பார்த்தால், யாருமே இந்த உலகத்தில் புலம்பெயர்ந்து அகதியாகப் போய் வேறு நாடுகளில் செழிப்போடு வாழவில்லை என்பது போல் அல்லவா பேசுகிறீர்கள்?”
என் குரலில் கொஞ்சம் தெம்பு தெரிந்தது.
“நீ எதை அடகுவைத்து எதை அடையப் போகிறாய் என்பதற்கும் அடகு வைத்ததன் பலனை எப்போது புரிந்துகொள்வாய் என்பதற்கும் என்னைப் போல ஒருவாழ்வைக் கடந்துவர வேண்டும். நான் யார் என்பதை நான் இறந்த பின்னர் நீ அதிகம் அறிந்துகொள்வாய். அடையாளத்தைத் தொலைத்த குற்றத்திற்காக நான் அனுபவித்தவைகளை நீ பிறகு சிலவேளைகளில் தெரிந்துகொள்வாய். தெரியாவிட்டால் நல்லது. தெரிந்துகொண்டால் இன்னும் நல்லது.”
அவள் புதிரோடு பேசிக்கொண்டிருப்பது வயதுக்குரிய விரக்தியா அல்லது விட்டுச்செல்ல நினைக்கின்ற அவள் வாழ்வின் பிறர் அறியாத பேருண்மைகளா என்பது புரியாமல் அவளைப் பார்த்தபடியிருந்தேன்.
“அப்படியானால், உங்களது கணவர் இறந்தவுடனேயே ஜப்பானுக்குத் திரும்பிப் போயிருக்கலாமே? உங்களது அடையாளத்தை மீளப் பெற்றிருக்கலாம் அல்லவா?”
அந்தக் கேள்வியை என்னைப் போல பலர் அவளைக் கேட்டிருப்பார்கள் என்பது போலிருந்தது அவள் பார்வை.
“இந்த நாடு எனக்குச் செய்கின்ற தவறினை, நான் எனது கணவருக்குச் செய்ய விரும்பவில்லை மகனே. சொந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு நான் ஆஸ்திரேலியனின் விதவைதானே தவிர, ஜப்பான் நாட்டுக்காரியாகத் திரும்பி வந்துவிட்டேன் என்று தூக்கிக்கொண்டாட மாட்டார்கள். எனது கணவனின் பெயரையும் அவனது நினைவுகளையும் சேர்த்துக்கொண்டு போய் அங்குள்ளவர்களுக்குத் தின்னக்கொடுக்க நான் விரும்பவில்லை”
அவளுக்குள் இன்னும் எத்தனையோ கதைகள் சுரந்தபடியிருக்கின்றன. துடித்துக்கொண்டிருக்கும் உதடுகளிலும் நடுங்கியபடியுள்ள கண்களிலும் அந்த வேதனை தெரிந்தது. தன்வாழ்வின் அஸ்தமனம் தன்னை விழுங்கிவிடுவதற்கு முன்னர் தன்னைப் போன்ற ஒரு அகதியைக் கண்டுவிட்ட திருப்தியில் அவள் பேசியபடியிருந்தாள்.
“இப்போதுள்ள எனது ஆசையெல்லாம் அவன் துயில்கொள்ளும் இந்தக் குழியிலேயே நான் போய் சேர்ந்துவிடவேண்டும் என்ற ஒன்றுதான்.”
மயானங்களில் தங்களுக்குரிய இடங்களை முன்னமே வாங்கிவிடக் கூடிய வழிவகைகள் இங்கு நடைமுறையிலிப்பது எனக்கு முன்னமே தெரிந்திருந்தாலும், கணவன் அல்லது மனைவி, முதலில் இறப்பவர்களின் குழியில் தங்களைப் புதைத்துக்கொள்வதற்கு அதிகப் பணம்கொடுத்து, முன்பதிவு செய்துகொள்ளும் ஏற்பாடும் இங்கிருக்கிறது என்பது இங்குவந்த பிறகு ஸ்ருவேர்ட் சொல்லித்தான் தெரியும்.
“Once I go in to this grave, He can’t rest in peace” – சொல்லி முடித்துவிட்டு முகத்தசைகள் குலுங்க குறும்பாகச் சிரித்தாள்.
ஹிமாரி இறந்தால் இந்தக் கருப்புப் பளிங்கினாலான கல்லறையைத் திறந்து அதற்குள் அவளது சாம்பலைப் புதைத்துவிடுவார்கள். உடலை அப்படியே பதப்படுத்திப் புதைத்துவிடுகின்ற சடங்கொன்றையும் கிரேக்க, இத்தாலி மக்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், ஹிமாரியோ தன் சாம்பல் கணவனது சாம்பலோடு சேர்ந்துகொண்டாலே திருப்தி என்கிறாள்.
ஹிமாரி ஒவ்வொரு வாரமும் வருகிறாள். தான் இன்னும் மரணிக்கவில்லையே என்பதை மிகத் துயரத்தோடு தன் கணவனின் கல்லறையில் சொல்லி அழுகிறாள். இங்கு நிரந்தரமாக வந்துவிடுவதற்கு தான் இன்னமும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க வேண்டுமோ என்று சலிக்கிறாள். வாழ்வதிலுள்ள குற்றணவுர்ச்சியினை பூக்களைச் சொரிந்து தீர்க்கப்பார்க்கிறாள்.
அவள் வந்துபோகும் ஒருநாள்கூட ஸ்ருவேர்ட் இல்லாதது தற்செயலோ என்னவோ! எப்போதும் நான் தனிமையிலிருக்கும் போதுதான் பிரசன்னமாவாள்.
கடைசியாக அவள் வந்துபோகும் போது பலவண்ணங்கள் நிறைந்த விசிறியொன்றை என்னிடம் தந்தாள். அதனை வெள்ளைப் பூப்போட்ட சிவப்புத்துணிப்பை ஒன்றில் போட்டு நடுங்கும் கைகளினால் என்னிடம் நீட்டினாள். உள்ளிருந்து அந்த விசிறியை எடுத்தால், அதுவெறும் கரிய தடிதான். ஆனால், அதனை விரித்தால் பலவண்ணங்கள். கைப்பிடிதவிர எல்லா இடங்களிலும் பல வண்ணங்கள். விசிறியின் ஒவ்வொரு மடிப்பும் ஒவ்வொரு நிறம். அதைக்கொண்டு விசுக்கும்போது முகத்தில் மோதிய காற்று தாயின் அரவணைப்பில் கிடைத்த உஷ்ணமும் குளிர்மையும் கலந்த உணர்வாக இதயத்திற்குள் இறங்கியது.
ஹிமாரியைக் கடைசியாக கண்ட அந்த நாள் சித்திரமாய் எனது நினைவில் நிகழ்கிறது.
7
அன்று காலை நான் எழுந்துகொள்ள நேரமாகியிருந்தது. ஸ்ருவேர்ட் காலையிலேயே வந்து சில வேலைகளை முடித்திருந்தான். சில வேளைகளில் காலையில் வந்து இவ்வாறு அவன் தன் வேலைகளைச் செய்வது வழக்கம். பெரிய வாகனமொன்று வளவுக்குள் வந்துபோகும் சத்தம் கேட்டது. எழுந்துசென்று பார்க்குமளவுக்கு முந்தைய நாள் வேலை அலுப்பு அனுமதிக்கவில்லை.
கதவை வந்து தட்டி, சிறிய உதவி தேவைப்படுகிறது என்றான். பல் துலக்காமலேயே அவன் பின்னால் சென்றேன்.
ஹிமாரியின் கணவனது கரிய பளிங்குக் கல்லறையின் மேல்பகுதி அரைவாசி திறந்திருந்தது. பாரமான அந்த மேல்தளத்தை முழுமையாகத் தூக்குவதற்கு உதவுமாறு ஸ்ருவேர்ட் கேட்டான்.
என் கை நரம்பின் ஒவ்வொரு முனையிலும் ஒரு திரி தீப்பற்றிக்கொண்டது போல உதறியது. கொரம்பிய மரக்கிளைகள் திடீரென்று முறிந்து விழுவதுபோல ஒலியெழுப்பின. மயானத்தின் பின்பகுதி மதிலுக்குமேல் தாவி வருவதற்கு மஞ்சள் அலைகள் ஆர்ப்பரிக்கும் பெருஞ்சத்தம் கேட்டது.
“முன்பு இந்தப் பகுதியில் விபச்சாரியாக இருந்தவள். செத்துவிட்டாள். She is a Japanese bitch – அவளது சாம்பலை அவளது கணவனது குழியிலேயே புதைக்க வேண்டுமாம்.”
என்னைப் பார்க்காமலேயே எனக்குக் கூறியபடி அந்தக் கரிய கல்லறை மூடியின் ஒருபக்கத்தைப் பிடித்துக்கொண்டு, நான் மறுமுனையில் பிடித்துத் தூக்கும்வரையில் காத்துக்கொண்டு நின்றான் ஸ்ருவேர்ட்.
அப்போது, கருங்கல் வேலியினால் பாய்ந்து வந்த மஞ்சள் அலை அந்த மயானத்தை அடியோடு அள்ளிக்கொண்டது. மரங்களின் உயரத்துக்கு தூக்கியெறியப்பட்ட நான், மீண்டும் வந்து விழுகிறேன். எல்லோரும் சிலுவைகளோடு வரிசையில் வலித்துக்கொண்டு சிரிக்கிறார்கள். ஸ்ருவேர்ட்டை காணவில்லை.
அன்று மயானத்தை இருள் விழுங்கப்போவதை நினைத்தபோது எனக்கு உடல் நடுங்கியது. இங்கு முதல்நாள் வரும்போதிருந்த பயம் கால்களின் வழியாக அட்டைகள் போல ஊர்ந்தேறியது. பேரிரைச்சலோடு கொரொம்பிய மரங்கள் எழுப்புகின்ற சத்தம் என்னை மேலே இழுத்துச்செல்வதற்கு அவை போடுகின்ற ஒத்திகை போலிருந்தது. அக்காசியா கன்றுகளிலிருந்து கழன்று பறக்கும் பஞ்சுகள் அன்று எனைநோக்கி ஆவிகள் போல படையெடுப்பபது போலிருந்தது. “She is a Japanese bitch” என்று ஸ்ருவேர்ட் கூறியது மீண்டும் மீண்டும் நெஞ்சுக்குள் அறைந்தபடியிருந்தது.
வெள்ளைப் பூப்போட்ட சிவப்புநிறத் துணிப்பையை எடுத்து எனது பெரிய பையில் போட்டேன். எனது மிகுதிப் பொருட்கள் எல்லாவற்றையும் அதற்குள் போட்டுத் திணித்தேன். கறுப்புநிறப் பளிங்கு கல்லறையின் முன்பாக ஓடிச்சென்று முழந்தாளிலிருந்து தொட்டுவணங்கி, “அம்மா….” என்று விசும்பினேன். என் கரங்கள் என் கட்டுப்பாட்டை மீறி அதிர்வது போலிருந்தது.
பின் மதிலால் ஏறிப்பாய்ந்து கடுகுவயலுக்குள் குதித்தேன். அகதியின் கள்ளப்பாதையில் அந்தியின் சூரியக்கதிர்கள் பாவிக்கிடந்தன. என்னுடைய நிழலில் மூதாட்டியின் நடை கசிந்து அந்த நிலமெங்கும் நிரம்பியது. விழிநீர் கூட்டி விழுங்கி உமிழ்ந்து பூமியை நோக்கித் துப்பினேன்.
4 comments
[…] புலரியில் மறைந்த மஞ்சள் கடல் […]
புலரியில் மறைந்த மஞ்சள் கடல், ஒரு மயான காண்டத்தை நவீனமாக அகதி வாழ்க்கையில் ஒரு அங்கத்தை அழகியல் தமிழில் நிகழ்த்தியிருக்கிறீர்கள், அருமை அருமை
// உன் மண்ணில் வாழும் வரைக்கும்தான் உன் அடையாளம் என்பது உனக்கு அகங்காரம். இன்னொரு மண்ணில் அது வெறும் ஆபரணம். அவ்வளவுதான். அதனை எப்போது அணிவதென்று நீயே முடிவு செய்ய முடியாது. அதனை ஒளிந்து ஒளிந்து அணிந்து கழற்றுவதில் களைத்து ஒருகட்டத்தில் உன்னையே நீ வெறுப்பாய். கடைசியில், அந்த ஆபரணம் பிடுங்கப்பட்ட ஓர் அநாதையாக செத்து மடிவாய். //ஒவ்வொரு அகதியின் ஆத்மார்த்தமான நெஞ்சக்கிடக்கை.
[…] புலரியில் மறைந்த மஞ்சள்கடல் […]
Comments are closed.