இஸ்ரேலைச் சேர்ந்த யெஹூதா அமிகாய் (Yehuda Amichai: மே 3, 1924 – செப்டம்பர் 22, 2000) கவிதையுலகில் தனித்துவமான புகழ்பெற்றவர். ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட இவருடைய கவிதைகள் 40 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
1924இல் ஜெர்மனியில் பிறந்தார் அமிகாய். அவருக்கு பனிரெண்டு வயதானபோது ஹிட்லரின் கொடூர ஆட்சிக்கு அஞ்சி அமிகாயின் குடும்பம் ஜெர்மனியை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்தில் குடியேறியது. அமிகாயின் முக்கிய மொழியாக ஜெர்மன் இருந்தபோதும் பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்வதற்கு முன்னதாகவே அவர் ஹீப்ரூ மொழியையும் சரளமாக கற்றுக்கொண்டார். 1948ஆம் ஆண்டில் நடைபெற்ற அரேபிய – இஸ்ரேலியப் போரில் இஸ்ரேல் படைசார்பாக அமிகாய் போரிடவும் செய்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமிகாய் ஹீப்ரூ பல்கலைக்கழகம் சென்றார். ஹீப்ரு பல்கலைகழகத்திலும் பின்னர் அமெரிக்க கல்வி நிறுவனங்களான நியூயார்க் பல்கலைக்கழகம், கலிபோர்னியா – பெர்கிலி பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
மனிதனின் அன்றாட வாழ்வின் துயரங்களில் துவங்கி, வாழ்வும் இறப்பும் தொடர்பான தத்துவார்த்தமான கவிதைகள் வரை இவர் படைத்துள்ளார். இவரது கவிதைகள் மென்மையான முரண்நகைகளும், உண்மைத்தன்மைகளும், பிரமிக்க வைக்கும் படிமங்களையும் கொண்டிருந்தன. ஒரு தனிமனிதனின் வாழ்வில் நிகழும் காதல் போன்ற தனிப்பட்ட சம்பவங்கள் முதல் போர், அகதி வாழ்வு, சொந்த நிலத்தைப் பிரிந்து வாடுதல் என அனைத்து மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் தம் கவிதைகளின் மூலமாக அனைவரின் அனுபவங்களுமாக மாற்றிவிடக்கூடிய ரசவாதியாகத்தான் அவர் விளங்கினார்.
கவிதைகளின் மூலம் கவிமொழியிலேயே புரட்சிகரமானதொரு மாற்றத்தை உருவாக்கியதற்காக இஸ்ரேலின் உயர்ந்த பரிசான இஸ்ரேலின் கவிதைப் பரிசையும் அவர் வென்றிருக்கிறார். இவரது பெயர் நோபல் பரிசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.