குற்றவாளி என்று எவருமே இல்லை – லேவ் தல்ஸ்தோய்

by கார்குழலி
0 comment

1

என்னைச் சேர்ந்தவர்கள் விந்தையானவர்கள், அதிசயமானவர்கள்! பணக்காரர்களின் ஆடம்பரத்தினாலும் அடக்குமுறையினாலும் கஷ்டப்படும் பாவப்பட்ட ஏழைகளில் ஒருவருக்குக்கூட தங்களின்மீது தொடுக்கப்படும் அடக்குமுறையும் காட்டப்படும் வெறுப்பும் அநீதியானது, கொடூரமானது, திகிலூட்டுவது என்பது என் அளவுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்க்கை நடத்தத் தேவையானவற்றைத் தயாரிக்கும் உழைப்பாளர்களில் பெரும்பாலானவர்களைச் சூழும் அவமானத்தையோ துயரத்தையோ கூட அவர்கள் புரிந்துகொள்வது இல்லை. இதை வெகுகாலமாக உணர்ந்திருக்கிறேன். வருடங்கள் செல்லச் செல்ல, இந்த உணர்ச்சியும் படிப்படியாக வளர்ந்து அண்மையில் உச்சத்தை எட்டியது. இப்படி எல்லாவற்றையும் தெளிவாக உணர்ந்தாலும் பணக்கார சமூகத்தின் மோசமான இயல்பு, பாவங்கள் இவற்றுக்கு இடையேதான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இதைவிட்டு விலகிச் செல்லத் தேவையான அறிவும் தெம்பும் என்னிடம் இல்லாததால் அதைச் செய்ய முடியவில்லை. வாழ்க்கையை எந்த வகையில் மாற்றி அமைத்துக்கொண்டால் என்னுடைய அன்றாடத் தேவைகளான உணவு, உறக்கம், உடை, பயணம் ஆகியவற்றை இந்த நிலையில் இருந்துகொண்டே அவமானமும் குற்றவுணர்வும் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்பது தெரியவில்லை.

மனசாட்சியோடு இசைவாக இல்லாத என் நிலையை மாற்றிக்கொள்ள முயற்சிசெய்த காலம் ஒன்று இருந்தது. கடந்த காலமும் குடும்பமும் உருவாக்கி இருந்த வரையறைகளும் என்மீது அவை கொண்டிருந்த பிடிமானமும் மிகவும் சிக்கலாக இருந்ததால் அதிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியவில்லை அல்லது எப்படி விடுவித்துக்கொள்வது என்று தெரியவில்லை. எனக்கு அந்த வலிமை இல்லை. இப்போது எண்பது வயதுக்கு மேலாகிவிட்டதால் தளர்ச்சி அடைந்துவிட்டேன். என்னை நானே விடுவித்துக்கொள்ளும் முயற்சியைக் கைவிட்டுவிட்டேன். நான் சொல்வது விந்தையாக இருக்கலாம். பலவீனம் அதிகரிக்க அதிகரிக்க என் நிலை எத்தனை தவறானது என்பது இன்னமும் உறுதியாகத் தெரிகிறது. இனிமேலும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றாக மாறுகிறது.

ஏதோவொரு காரணமாகத்தான் இந்த நிலையில் நான் இருப்பதாக உணர்கிறேன். என் உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று தெய்வ சங்கற்பம் எண்ணுகிறது. அதன்மூலம் எனக்கு வேதனை ஊட்டும் விஷயங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடுவதற்கும் நான் தெளிவாகக் காண்பவற்றைப் பார்க்காமல் குருடாக இருப்பவர்களின் கண்ணை, சில பேரின் கண்ணையாவது, திறந்துவிடுவதற்கும்தான். இதன்மூலம் தற்போதைய சூழலில் தங்களை ஏமாற்றிக்கொள்வதோடு மற்றவர்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் கூட்டத்தால் உள்ளியல்பும் உடலும் துன்பத்துக்கு உள்ளாகின்றவர்களின் சுமையைக் குறைக்கலாம். ஒருவேளை, மனிதர்களிடேயே நிலவும் செயற்கையான குற்றவியல்புடைய உறவுகளை வெளிப்படுத்துவதற்கான சிறப்பான வாய்ப்பை நான் வகிக்கும் நிலைதான் வழங்குகிறதோ?

அந்த நிலையில் இருந்துகொண்டு இந்தப் பிரச்சினையைக் குழப்பாமல், நான் குற்றமற்றவன் என்பதை நிறுவும் முயற்சியில் இறங்காமல், இருக்க வேண்டும். பணம் படைத்தவர்களின் மனதில் பொறாமையையும் ஏழைகளாகவும் நசுக்கப்படுபவர்களாகவும் இருக்கும் மனிதர்களின் மனதில் கொடுங்கோன்மை உணர்வையும் தூண்டாமல் இதுகுறித்த முழு உண்மையையும் தெரிவிக்க வேண்டும். குற்றமற்றவனாக நிறுவிக்கொள்ளும் ஆசையே எனக்கில்லை. மாறாக, நான் யாரிடையே வாழ்கிறேனோ யார் குறித்து தலைகுனிவாக நினைக்கிறேனோ சகமனிதர்களின் மீது யார் காட்டும் மனப்போக்கை முழுமனதாக வெறுக்கிறேனோ அவர்களிடம் இருந்து என்னைச் சேர்ந்தவர்களை விலகச் செய்வது இயலாத காரியமாக இருந்தாலும் அந்தப் பெரிய மனிதர்களின் நயவஞ்சகத்தை அதிகப்படுத்திவிடாமல் இருக்க முயல்வது அவசியமென நினைக்கிறேன். ஆனாலும் அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் உள்ளாகிய மக்களைப் பாதுகாக்க முனையும் ஜனநாயகவாதிகளும் மற்றவர்களும் செய்யும் தவறை நான் தவிர்க்க வேண்டும். தங்களிடம் இருக்கும் குறைகளையும் பிழைகளையும் பார்க்கத் தவறுவதோடு தாங்கள் ஏற்படுத்தும் சிரமங்களையும் கடந்த காலத்தில் இருந்து வழிவழியாக வரும் தவறுகளையும் புரிந்துகொள்ளாமல் இருப்பது உயர் வகுப்பினரின் பொறுப்பைக் கொஞ்சம் குறைத்துவிடுகிறது.

குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் ஆசை, முன்னேறிய மனிதர்களைப் பற்றிய பயம், ஒடுக்குபவர்களின் மேல் ஒடுக்கப்பட்டவர்கள் கொண்டிருக்கும் பொறாமை, வெறுப்பு போன்றவற்றில் இருந்து விடுதலை பெற்றதால் உண்மையை முழுமையாகப் பார்க்கவும் அதைப் பற்றிப் பேசவும் ஏதுவான நிலையில் நான் இருக்கிறேன். அதனால்தான் தெய்வ சங்கற்பம் என்னை இந்த நிலையில் வைத்திருக்கிறது போல. அதைக் குறித்து என்னால் முடிந்தவரை சிறப்பாகச் சொல்வேன்.

2

அலெக்சாண்டர் இவானோவிச் வோல்கின் திருமணமாகாத பிரம்மச்சாரி. மாஸ்கோவில் இருந்த வங்கியொன்றில் வருடத்துக்கு எட்டாயிரம் ரூபிள் சம்பளத்தில் பணிபுரியும் கிளார்க். அவரைப் போன்றவர்களின் மத்தியில் மிகுந்த மரியாதை பெற்றவர். கிராமப்புறத்தில் இருந்த அந்தப் பெரிய வீட்டில் தற்சமயம் தங்கியிருந்தார். அவருடைய புரவலர் ஒரு பணக்கார நிலச்சுவான்தார். 2500 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். தன் விருந்தினரின் சொந்தக்காரப் பெண்ணை மணம் புரிந்திருந்தார். புரவலரின் குடும்பத்தினருடன் சின்னப் பணயங்கள் வைத்து மாலை முழுதும் விண்ட்டை விளையாடி களைத்துப் போயிருந்த வோல்கின், அவருடைய அறைக்குச் சென்றார். கைக்கடிகாரம், வெள்ளி சிகரெட்டுப் பெட்டி, குறிப்பேடு, பெரிய தோல் பர்ஸ், கையடக்க தலை சீவும் பிரஷ், சீப்பு ஆகியவற்றை வெள்ளைத் துணி போர்த்தியிருந்த சிறிய மேசைமீது எடுத்து வைத்தார். பிறகு, மேலங்கி, அரைச் சட்டை, சட்டை, கால்சட்டை, உள்ளாடை, பட்டுக் காலுறை, ஆங்கிலேயக் காலணி ஆகியவற்றைக் கழற்றி வைத்துவிட்டு இரவு உடையையும் மேலாடையையும் அணிந்துகொண்டார். கைக்கடிகாரம் நள்ளிரவு ஆகியிருந்ததைச் சுட்டியது. சிகரெட்டு ஒன்றைப் புகைத்தபடி அன்றைய நாளைப் பற்றி அசைபோட்டபடியே சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் படுத்துக் கிடந்தார் வோல்கின். பிறகு, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்தார். நீண்ட நேரத்துக்குத் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்துவிட்டு சுமார் ஒரு மணிக்குத் தூங்கிப்போனார். மறுநாள் காலை எட்டு மணிக்கு எழுந்து செருப்பையும் மேலங்கியையும் அணிந்துகொண்டு மணியை அடித்தார்.

அந்த வீட்டில் முப்பது வருடங்களாக பரிசாரகராகப் பணிபுரிந்து வந்த ஸ்டீபன் ஒரு குடும்பத் தலைவர், ஆறு பேரக்குழந்தைகளுக்குத் தாத்தா. முந்தைய இரவில் வோல்கின் கழற்றி வைத்திருந்த காலணிக்கு கருப்பு பாலிஷ் போட்டு கையில் எடுத்துக்கொண்டு, தன் வளைந்த கால்களால் விரைந்து ஓடி, அறைக்குள் நுழைந்தார். கூடவே துவைத்த சுத்தமான சட்டையையும் தூய்மையாக்கப்பட்ட மேலங்கியையும் கொண்டுவந்தார். அவருக்கு நன்றி கூறியபடி அன்றைய தட்பவெப்ப நிலையையும் வீட்டைச் சேர்ந்தவர்கள் நல்லபடி தூங்கி எழுந்தார்களா என்றும் விசாரித்தார் விருந்தினர். (ஒருவேளை பதினோரு மணிவரை தூங்கவேண்டும் என்று பிரியப்பட்டால் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஜன்னலின் திரைச்சீலைகள் மூடப்பட்டிருந்தன) கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு – இன்னும் நேரம் இருந்தது – சுத்தப்படுத்திக்கொண்டு ஆயத்தமாகத் துவங்கினார்.

அவருக்குத் தேவையான தண்ணீர் தயாராக இருந்தது. கழுவு தொட்டியிலும் அலங்கார மேசையிலும் தேவையானவை வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன – சோப்பு, பல்தேய்க்கும் பிரஷ், தலை சீவும் பிரஷ், நகம் வெட்டும் கத்திரி, சீர்செய்யும் கருவி. கைகளையும் முகத்தையும் ஆற அமரக் கழுவினார், நகங்களைச் சுத்தம்செய்து சீர்செய்தார், துவாலையைக் கொண்டு தோலைப் பின்புறமாகத் தள்ளிவிட்டபடி, தன் கனமான வெள்ளை உடலை தலைமுதல் கால்வரை ஈரமான துவாலையால் துடைத்தார். பிறகு தலைமுடியைச் சீவினார். கண்ணாடியின் முன் நின்று வெளுக்கத் தொடங்கி இருந்த சுருட்டையான தாடியை இரண்டு ஆங்கில பிரஷ்களால் சீவி நடுவில் வகிடு எடுத்து இரண்டாகப் பிரித்தார். வழுக்கையாகத் தொடங்கி இருந்த தலைமுடியைப் பெரிய ஆமை ஓட்டினாலான சீப்பினால் சீவினார். உள்ளாடை, காலுறை, காலணி, கால்சட்டை – அது நேர்த்தியான தளைப்பட்டைகளால் தூக்கிப் பிடிக்கப்பட்டு இருந்தது – அரைச் சட்டை எல்லாவற்றையும் அணிந்து ஆடை அலங்காரத்தை முடித்துக்கொண்ட பிறகு மேலங்கியை மட்டும் அணியாமல் ஓய்வெடுப்பதற்காக சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.

சிகரெட் ஒன்றைப் பற்றவைத்தபடி அன்று காலை நடைப்பயிற்சிக்கு எங்கு போகலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார் – பூங்காவுக்கா லிட்டில் போர்ட்ஸுக்கா (மரங்கள் அடர்ந்த பகுதிக்கு என்ன ஒரு வேடிக்கையான பெயர்!). லிட்டில் போர்ட்ஸுக்கே போகலாம் என்று முடிவு செய்தார். அடுத்ததாக, சைமன் நிக்கலோவிச்சின் கடிதத்திற்கு பதில் எழுத வேண்டும். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவரைப்போல எழுந்து நின்று கைக்கடிகாரத்தை வெளியில் எடுத்தார். ஏற்கனவே ஒன்பது மணி, ஐந்து நிமிடமாகி இருந்தது. அரைச் சட்டையினுள் கடிகாரத்தையும் பர்ஸையும் (அதில் பயணத்துக்கெனவும் உறவினரின் வீட்டில் இரண்டு வாரங்கள் தங்குவதற்கெனவும் எடுத்து வந்திருந்த நூற்றெண்பது ரூபிள்களில் மிச்சமிருந்த பணத்தோடு) வைத்தார். காற்சட்டையின் பாக்கெட்டில் சிகரெட் பெட்டியையும் மின்சார சிகெரெட் லைட்டரையும் வைத்தார். இரண்டு சுத்தமான கைக்குட்டைகளை மேலங்கியின் பாக்கெட்டில் வைத்தார். வழக்கம்போல அவர் தாறுமாறாக கலைத்துப் போட்டிருந்த அறையை ஐம்பது வயதுக்கு மேலான ஸ்டீபனை சரிசெய்ய விட்டுவிட்டு வெளியே போனார். இதுபோன்ற வேலையைச் செய்து பழக்கப்பட்டுவிட்டதாலும் அதற்கான கூலியை ‘வோல்கின் கொடுப்பார்’ என்று எதிர்பார்த்ததாலும் ஸ்டீபனுக்கு பெரிதாக அருவருப்பு ஏற்படவில்லை. கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து திருப்தியடைந்த வோல்கின் உணவு பரிமாறும் அறைக்குள் நுழைந்தார்.

அங்கே வீட்டைப் பராமரிப்பவர், எடுபிடியாள், சமையல்காரரின் உதவியாள் – இவர் வீட்டுக்குப் போய் தன் மகனின் வெட்டறுவாளைத் தீட்டி வைத்துவிட்டு வருவதற்காக அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தார் – ஆகியோரின் முயற்சியால் காலை உணவு தயாராக இருந்தது. அப்பழுக்கற்ற வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருந்த மேசையின்மீது பளபளப்பான வெள்ளிச் சமோவார் (வெள்ளியைப் போலத் தோற்றமளித்த என்றும் சொல்லலாம்) கொதித்துக்கொண்டிருந்தது. கூடவே காஃபி பாத்திரம், சூடான பால், பாலேடு, வெண்ணெய், பலவிதமான வெள்ளை ரொட்டி, பிஸ்கெட்டு எல்லாம் இருந்தன. வீட்டின் இரண்டாவது மகன், அவனது ஆசிரியர் (அவர் ஒரு மாணவர்), காரியதரிசி ஆகியோர் மட்டுமே மேசையில் அமர்ந்து இருந்தனர். ஜேம்ஸ்ட்வோவின் செயலாற்றும் உறுப்பினராக இருந்த வீட்டுத் தலைவர் ஒரு பெரிய விவசாயியும் கூட. காலை எட்டு மணிக்கே வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டிருந்தார். காஃபியை குடித்தபடியே மாணவரிடமும் காரியதரிசியிடமும் வானிலையைப் பற்றியும் முந்தைய நாளின் விண்ட் ஆட்டத்தைப் பற்றியும் அளவளாவினார் வோல்கின்.

முதல்நாள் இரவு தியோடோரைட்டின் வித்தியாசமான நடத்தை பற்றியும் எந்தக் காரணமுமின்றி அவனுடைய தந்தையிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதைப் பற்றியும் பேசினார். தியோடோரைட் அந்த வீட்டின் வளர்ந்த மகன், உருப்படாதவன். அவன் பெயர் தியோடோர் என்றாலும் அவனைக் கிண்டல் செய்வதற்கோ வெறுப்பேற்றுவதற்கோ முன்னர் யாரோ தியோடோரைட் என்று கூப்பிட்டார்கள். அவன் செயல்பாடு எதுவும் வேடிக்கையாக இல்லாவிட்டாலும் பெயர் அப்படி இருந்ததால் அதுவே நிலைத்துவிட்டது. இப்பொழுதும் அதே கதைதான். பல்கலைக்கழகத்துக்குப் போன இரண்டாவது வருடத்தில் திரும்பி வந்துவிட்டான். குதிரைப்படை காவலர்களின் பிரிவில் சேர்ந்தான். ஆனால் அதையும் விட்டுவிட்டான். இப்போது கிராமத்தில்தான் இருக்கிறான். எதுவும் செய்யாமல் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு எல்லாவற்றிலும் இருந்து விலகி இருக்கிறான். தியோடோரைட் இன்னும் எழுந்திருக்கவில்லை. வீட்டின் மற்ற உறுப்பினர்களும்தான் – அன்னா மிக்கைலோவ்னா அந்த வீட்டுத் தலைவி. அவள் சகோதரி ஒரு படைத்தளபதியின் விதவை. கூடவே, இயற்கைக்காட்சி ஓவியர் ஒருவரும் அவர்களுடன் தங்கியிருந்தார்.

வோல்கின் வரவேற்பறை மேசை மேல் இருந்த தன்னுடைய பனாமா தொப்பியையும் (இருபது ரூபிள் கொடுத்து வாங்கி இருந்தார்) தந்தக் கைப்பிடி போட்ட கைத்தடியையும் எடுத்துக்கொண்டு வெளியே போனார். களிப்பூட்டும் மலர்கள் இருந்த தாழ்வாரத்தைத் தாண்டி மலர்த்தோட்டத்தின் வழியே நடந்தார். நடுவில் மேடாக இருந்த பகுதியில் வட்டவடிவில் சிகப்பு, வெள்ளை, நீல நிற மலர்கள் பூக்கும் செடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றுக்கு நடுவே தரைவிரிப்பு போன்ற அமைப்பில் வீட்டுத் தலைவியின் பெயரின் முதல் எழுத்துகள் எழுதப்பட்டு இருந்தன. மலர்த்தோட்டத்தைத் தாண்டிச் சென்ற வோல்கின், நூறாண்டுகள் வயதான எலுமிச்சை மரங்கள் அடர்ந்திருந்த நிழற்சாலையில் நடந்தார். குடியானவப் பெண்கள் மண்வெட்டிகளையும் துடைப்பங்களையும் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்தனர். தோட்டக்காரன் எதையோ மும்முரமாக அளந்துகொண்டு இருந்தான். அவனுக்கு உதவிசெய்யும் பையன் தள்ளுவண்டியில் எதையோ எடுத்துக்கொண்டு வந்தான். இவற்றை எல்லாம் தாண்டி கிட்டத்தட்ட நூற்று இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட பழைமையான மரங்களும் குறுக்குவெட்டில் அமைந்திருந்த சீரான நடைபாதைகளும் இருந்த அருமையாகப் பராமரிக்கப்பட்ட பூங்காவுக்குள் நுழைந்தார்.

புகைபிடித்தபடியே அங்கு உலவிய வோல்கின், கோடைகால வீட்டைத் தாண்டி வயலைச் சென்றடையும் தமக்குப் பிரியமான பாதையில் நடக்கத் துவங்கினார். பூங்காவில் இதமாக இருந்ததென்றால், வயல்வெளியில் இன்னும் இனிமையாக இருந்தது. வலதுபுறத்தில் உருளைக்கிழங்கு தோண்டிக்கொண்டிருந்த பெண்களின் உருவம் ஒன்று திரண்டு பளீரென்ற சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் இருந்தது. இடதுபுறத்தில் கோதுமை வயலும் புல்வெளியும் அதில் மேயும் மாட்டு மந்தையும் இருந்தது. முன்புறத்தில் சற்றே வலது பக்கத்தில் லிட்டில் போர்ட்ஸின் கறுத்த ஓக் மரங்கள் இருந்தன. வோல்கின் ஆழ்ந்து மூச்சுவிட்டபடி, தான் உயிர்வாழ்வது குறித்து மகிழ்ச்சிகொண்டார். குறிப்பாக, இந்த உறவினரின் வீட்டில் தங்கி இருப்பது குறித்து. வங்கிப் பணியில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கும் ஓய்வை முழுமையான இன்பத்தோடு அனுபவித்துக்கொண்டு இருந்தார்.

“கிராமங்களில் வாழும் மக்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்று நினைத்தார். “கிராமத்தில் இருந்தாலும் விவசாயமும் ஜேம்ஸ்ட்வோவும் நிலத்தின் உரிமையாளரை நிம்மதியாக இருக்க விடுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அதைப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவர்தான்.” தலையை அசைத்தபடி இன்னொரு சிகரெட்டை பற்றவைத்த வோல்கின், ஆங்கிலேயக் காலணிகள் அணிந்த வலுவான பாதங்களைத் தரையில் அழுத்தமாகப் பதித்து அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். பனிக்காலத்தில் வங்கியில் இருக்கும் கடுமையான வேலைப்பளுவைப் பற்றி யோசித்தார். “எல்லா நாளும் பத்து முதல் இரண்டு மணி வரை அங்கே இருக்கவேண்டும். சில நாட்களில் ஐந்து மணி வரையிலும். மேலாண் குழுமத்தின் கூட்டங்கள், வாடிக்கையாளர்களுடன் தனிப்பட்ட நேர்காணல்கள், பிறகு டுமா வேறு. ஆனால் இங்கேயோ…. பரவசமாக இருக்கிறது. மந்தமாக இருக்கலாம், ஆனால் இது நீடித்து இருக்கப் போவதில்லை” எனச் சிரித்துக்கொண்டார்.

லிட்டில் போர்ட்ஸில் சிறிது நேரம் உலவிய பிறகு உழுது விதைப்புக்காகக் காத்திருந்த வயலொன்றின் ஊடாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கிராமப் பொதுக் குழுமத்தின் உடைமையான பசுக்களும் கன்றுகளும் செம்மறியாடுகளும் பன்றிகளும் அங்கே மேய்ந்துகொண்டு இருந்தன. அந்த மந்தையைத் தாண்டித்தான் பூங்காவுக்குச் செல்லும் குறுக்குவழியை அடைய முடியும். அவரைக் கண்டு மிரண்ட செம்மறியாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஓட ஆரம்பித்தன. அவற்றைத் தொடர்ந்து பன்றிகளும் ஓட ஆரம்பித்தன. இரண்டு பன்றிக்குட்டிகள் மட்டும் அமைதியாக அவரைப் பார்த்தபடி நின்றன. ஆடுமேய்க்கும் சிறுவன் செம்மறியாடுகளை நோக்கிக் குரல் கொடுத்தபடி சாட்டையைச் சொடுக்கினான். “ஐரோப்பாவைக் காட்டிலும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம்” என்றெண்ணிய வோல்கின், தான் அடிக்கடி போகும் வெளிநாட்டுப் பயணங்களை நினைவுபடுத்திக்கொண்டார். “இதுபோன்ற ஒரு பசுவைக்கூட ஐரோப்பாவில் எங்குமே பார்க்க முடியாது.” தான் சென்றுகொண்டிருந்த பாதையின் கிளை எங்கே போகிறது என்றும் மந்தையின் சொந்தக்காரர் யார் என்றும் தெரிந்து கொளவதற்காக சிறுவனிடம் பேச்சு கொடுத்தார்.

“இது யாருடைய மந்தை?”

அவருடைய தொப்பியையும் நன்றாகச் சீவப்பட்ட தாடியையும் எல்லாவற்றுக்கும் மேலாக தங்க விளிம்புகளைக் கொண்ட மூக்குக் கண்ணாடியையும் ஆச்சரியம் என்பதைவிட ஒருவித மிரட்சியுடன் பார்த்தான் சிறுவன். அவனால் உடனடியாக பதில் சொல்லமுடியவில்லை. வோல்கின் இரண்டாவது முறையும் கேள்வி கேட்டபிறகுதான் சுதாரித்துக்கொண்டான். “எங்களுடையது” என்று பதில் சொன்னான். “எங்களுடையதென்றால் யாருடையது?” என்று தலையை ஆட்டியபடி புன்னகையுடன் கேட்டார் வோல்கின். பிர்ச் மரத்தின் பட்டைகளால் பின்னப்பட்ட காலணிகளை அணிந்திருந்தான் சிறுவன். கால்களில் நார்த்துணியாலான பட்டிகள் சுற்றப்பட்டு இருந்தன. அழுக்கான சாயம் நீக்கப்படாத சட்டையின் தோள் பகுதி நைந்துபோய் இருந்தது. அவன் அணிந்திருந்த தொப்பியின் உச்சிப் பகுதி கிழிந்துபோய் இருந்தது.

“எங்களுடையதென்றால் யாருடையது?”

“பிரோகோவ் கிராமத்தின் மந்தை.”

“உனக்கு என்ன வயதாகிறது?”

“தெரியாது.”

“எழுதப் படிக்கத் தெரியுமா?”

“தெரியாது.”

“பள்ளிக்குப் போகவில்லையா?”

“போனேனே.”

“படிக்கக் கற்றுக்கொள்ளவில்லையா?”

“இல்லை.”

“இந்தப் பாதை எங்கே போகிறது?”

சிறுவன் பதில் சொன்னான். நிக்கோலஸ் பெட்ரோவிச் எத்தனை முயற்சி எடுத்தும் அந்தக் கிராமத்தின் பள்ளிக்கூடம் இருந்த வருந்தத்தக்க நிலைமை குறித்து அவரை எப்படி மட்டம் தட்டலாம் என்று யோசித்தபடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார் வோல்கின்.

வீட்டை நெருங்கும்போது கடிகாரத்தைப் பார்த்தார். மணி பதினொன்றைத் தாண்டி விட்டிருந்தது என்பதைக் கவனித்தார். நிக்கோலஸ் பெட்ரோவிச் பக்கத்து நகரத்திற்குப் போவதாகச் சொன்னதும் மாஸ்கோவுக்கு அனுப்பவேண்டிய கடிதமொன்றை எழுதி அவரிடம் கொடுக்க எண்ணி இருந்ததும் நினைவுக்கு வந்தது. ஆனால் கடிதத்தை இன்னும் எழுதவில்லை. ஏலத்தில் விற்பனைக்கு வரவிருந்த புனித மரியாளின் ஓவியத்தை தன்சார்பில் ஏலம் கேட்க வேண்டி ஒரு நண்பரின் உதவியை வேண்டும் முக்கியமான கடிதம். வீட்டை நெருங்கியதும் வெய்யிலில் பளபளக்கும் கருப்பு மெருகெண்ணெய் பூசப்பட்ட வண்டியும் அதில் பூட்டப்பட்ட நான்கு பெரிய, கொழுத்த, உயர்சாதிக் குதிரைகளும் நிற்பதைப் பார்த்தார். கப்தான் உடையும் வெள்ளிநிறப் பட்டியும் அணிந்திருந்த வண்டியோட்டி, அவனுக்கான பெட்டியில் அமர்ந்திருந்தான். குதிரைகளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த வெள்ளி மணிகள் அசைந்து ஓசை எழுப்பியபடி இருந்தன.

வெறும் தலையோடும் வெறுங்கால்களோடும் நைந்துபோன கப்தானை அணிந்திருந்த குடியானவன் ஒருவன் முன்கதவருகே நிற்பதைப் பார்த்தார். அவரைப் பார்த்ததும் தலைகுனிந்து வணங்கினான். என்ன வேண்டுமென்று கேட்டார் வோல்கின்.

“நிக்கோலஸ் பெட்ரோவிச்சை சந்திக்க வந்திருக்கிறேன்.”

“என்ன விஷயமாக?”

“நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன். என்னுடைய குதிரை இறந்துவிட்டது.”

வோல்கின் அவனைக் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தார். தன் நிலைமையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான் குடியானவன். அவனுக்கு ஐந்து குழந்தைகள். அவனிடம் இருந்தது இந்தக் குதிரை மட்டும்தான். இப்போது அதுவும் போய்விட்டது என்று அழுதான்.

“இப்போது என்ன செய்யப் போகிறாய்?”

“யாசகம் பெறப் போகிறேன்”, என்றபடி அவர் முன்னே மண்டியிட்டான். “அப்படிச் செய்யாதே” என்று வோல்கின் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் மண்டியிட்டபடியே இருந்தான்.

“உன்னுடைய பெயர் என்ன?”

“மிட்ரி சுடரிக்கோவ்”, என்றபடி இன்னமும் மண்டியிட்டபடியே பதில் சொன்னான் குடியானவன்.

மூன்று ரூபிள்களை பர்சில் இருந்து எடுத்து குடியானவனிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார் வோல்கின். நெற்றியால் நிலத்தைத் தொட்டு அவருக்கு நன்றி தெரிவித்தான் அவன். அங்கே வரவேற்பறையில் நின்றிருந்தார் அவருடைய புரவலர்.

“தங்களது கடிதம் எங்கே இருக்கிறது?” என்று வோல்கினின் அருகே வந்தபடி கேட்டார். “நான் புறப்பட்டு விட்டேன்.”

“மன்னிக்கவும். நீங்கள் சற்றுநேரம் காத்திருக்க இயலுமெனில் இப்போதே எழுதிக்கொடுத்து விடுகிறேன். அதைப் பற்றி மறந்தே போய்விட்டேன். இந்த இனிமையான சூழலில் எதைப் பற்றியும் மறந்துவிடுவதென்பது சுலபமானதாக இருக்கிறது.”

“சரி, சீக்கிரமாக எழுதித் தரவும். ஏற்கனவே கால்மணி நேரமாக குதிரைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தால் அவற்றைப் பூச்சிகள் கடித்துக் குதறிவிடுகின்றன. சிறிது நேரம் காத்திருக்க முடியுமா, ஆர்ஸெண்டி?” என்று வண்டிக்காரனிடம் கேட்டார்.

“ஓ முடியுமே” என்று பதில் சொன்ன வண்டிக்காரன், ‘தயாராவதற்கு முன்பே குதிரைகளை எதற்காக வரச் சொல்கிறார்களாம்? பணியாட்களும் நானும் எவ்வளவு பரபரப்புடன் தயாரானோம்! இப்படி இங்கே வந்து காத்திருந்து பூச்சிகளுக்கு இரையாவதற்கா?’ என்று நினைத்துக்கொண்டான்.

“உடனே, இப்போதே” என்றபடி அறையை நோக்கி நடந்த வோல்கின், திரும்பி வந்து நிக்கோலஸ் பெட்ரோவிச்சிடம் யாசகம் கேட்க வந்த குடியானவனைப் பற்றிக் கேட்டார்.

“அவனைப் பார்த்தீர்களா? அவன் ஒரு குடிகாரன். இருந்தாலும், அவனுக்காக இரக்கப்பட வேண்டியுள்ளது. அதைப் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம். நீங்கள் கடிதத்தை எழுதிக்கொண்டு வாருங்கள்!”

பெட்டியைத் திறந்து எழுதுவதற்குத் தேவையான பொருட்களை வெளியே எடுத்தார் வோல்கின். கடிதத்தோடு நூற்றெண்பது ரூபிளுக்கு காசோலை ஒன்றையும் எழுதினார். இரண்டையும் உறையில் இட்டு ஒட்டி, நிக்கோலஸ் பெட்ரோவிச்சிடம் கொண்டு சென்றார்.

“போய் வாருங்கள்.”

மதிய உணவுக்கான நேரம் வரையிலும் செய்தித்தாள்களைப் படித்தார் வோல்கின். தாராண்மைவாத சார்புடையவற்றை மட்டுமே படிப்பார் அவர். தி ரஷியன் கெஸட், சில நேரங்களில் தி ரஷியன் வேர்ட். ஆனால் அவருடைய புரவலர் சந்தா செலுத்தியிருந்த தி நியூ டைம்ஸை ஒருபோதும் தொடமாட்டார்.

இளைப்பாறியபடியே அரசியல் செய்திகள், ஜாரின் நடவடிக்கைகள், அமைச்சர்களின் செயல்பாடு ஆகியவற்றைப் பற்றி படித்து முடித்து பொதுவான செய்திகள், நாடகம், அறிவியல், கொலை, காலரா இவற்றைப் பற்றி படிக்கத் துவங்கும் முன்னர் மதிய உணவுக்கான மணி அடித்தது.

பத்துக்கும் மேற்பட்ட மனிதர்களின் முயற்சியால் – சலவைப் பெண்மணி, தோட்டக்காரர், சமையல்காரர், சமையல் அறையில் உதவும் பெண், தொண்டு சேவகர், அவரின் உதவியாளர்கள் – வெள்ளித் தண்ணீர் கூஜா, வடிகலம், க்வாஸ், தேறல், கனிமவள நீர், வெட்டுக் கண்ணாடி, நயமான மேசை விரிப்பு ஆகியவற்றோடு எட்டு பேருக்கான முதல்தரமான உணவும் மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண் பணியாளர்கள் அங்கும் இங்கும் ஓடியாடி உணவைக் கொண்டுவந்து பரிமாறுவது, பசியூக்கிகளை அப்புறப்படுத்துவது, சூடான குளிரூட்டப்பட்ட உணவு வகைகளைப் பரிமாறுவது எனத் தொடர்ந்து இயங்கியபடியே இருந்தார்கள்.

தான் செய்வது, நினைப்பது, சொல்வது என்று எல்லாவற்றைப் பற்றியும் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தாள் வீட்டுத் தலைவி. தான் நினைப்பது, சொல்வது, செய்வது எல்லாமே நேர்த்தியானது என்றும் முட்டாள்களைத் தவிர மற்ற எல்லோரும் அதைக் கேட்டு மகிழ்ச்சி கொள்வார்கள் என்றும் நினைத்தாள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவள் சொல்வது எல்லாமே முட்டாள்தனமானது என்பது வோல்கினுக்குத் தெரியும். ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளுடன் பேசிக்கொண்டு இருந்தார். தியோடரைட் கவலையுற்றவனாக மௌனமாக இருந்தான். விதவையுடன் அவ்வப்போது ஒரு சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டார் மாணவர். உரையாடலில் தொய்வு ஏற்பட்டபோது தியோடரைட் இடையில் பேச ஆரம்பித்தால் மற்ற அனைவரும் தாங்கமுடியாத துயரத்துக்கு ஆளானார்கள். அப்படிப்பட்ட நேரத்தில், அதுவரை பரிமாறப்படாத உணவுப் பண்டம் ஒன்றைக் கொண்டுவரச் சொன்னாள் வீட்டுத் தலைவி. பணியாள் சமையல் அறைக்கோ வீட்டைப் பராமரிப்பவரிடமோ விரைந்துசென்று திரும்பி வருவான். ஒருவருக்கும் பேசவோ சாப்பிடவோ பிடிக்கவில்லை. என்றாலும், தங்களைத் தாங்களே சாப்பிடவோ பேசவோ வற்புறுத்திக்கொண்டார்கள். மதிய உணவு நேரம் கடந்துபோனது.

3

குதிரை இறந்ததால் யாசகம் கேட்டு வந்த குடியானவனான மிட்ரி சுடரிக்கோவ், இறந்த குதிரையைப் பற்றி முறையிடுவதற்காக கனவானிடம் வருவதற்கு முன்னர், அந்த நாள் முழுவதும் அலைந்திருந்தான். இறந்துபோன விலங்குகளைப் புதைப்பவரான சானின் என்பவரை சந்திப்பதற்காகச் சென்றான். அவர் வீட்டில் இல்லை என்பதால் நீண்ட நேரம் காத்திருந்தான். தோலுக்கான விலையைப் பேரம்பேசி முடிக்கும்போது, இரவு உணவுக்கான நேரம் கடந்துவிட்டிருந்தது. இறந்துவிட்ட குதிரைகளை பொதுவிடத்தில் புதைப்பது தடைசெய்யப்பட்டு இருந்ததால் தன்னுடைய வயலில் புதைப்பதற்காக அண்டை வீட்டுக்காரரின் குதிரையைக் கடன் வாங்கிக்கொண்டு போனான். உருளைக்கிழங்குகளை எடுத்துவர வேண்டும் என்பதால் தன்னுடைய குதிரையைக் கொடுக்க மறுத்துவிட்டான் ஏட்ரியன்.

மிட்ரியின்மீது பரிதாபப்பட்ட ஸ்டீபன், அவனுடைய கெஞ்சலுக்கு செவிமடுத்தான். இறந்துபோன குதிரையை வண்டியில் ஏற்றுவதற்கு கைகொடுத்தான். முன்னங்கால்களில் இருந்த இலாடங்களைப் பிய்த்தெடுத்து மனைவியிடம் கொடுத்தான் மிட்ரி. ஒன்று உடைந்து இருந்தாலும் மற்றது உடையாமல் இருந்தது. மொண்ணையான மண்வெட்டியால் சவக்குழியைத் தோண்டும்போது சானின் வந்து தோலை உரித்துக்கொண்டான். சவத்தைக் குழிக்குள் தள்ளி மூடினார்கள். மிட்ரிக்கு அசதியாக இருந்தது. தன்னை ஆறுதல்படுத்திக்கொள்வதற்காக மாட்ரீனாவின் குடிசைக்குப் போய் சானினுடன் சேர்ந்து அரை புட்டி வோட்காவைக் குடித்தான்.

பிறகு வீட்டுக்குப் போய், மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு வைக்கோலின்மீது படுத்துத் தூங்கிப்போனான். உடையை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே நைந்த மேலங்கி ஒன்றைப் போர்த்திக்கொண்டு தூங்கினான். அவன் மனைவி அவர்களின் மகள்களுடன் குடிசையில் இருந்தாள். மொத்தம் நான்கு மகள்கள், கடைக்குட்டி பிறந்து ஐந்து வாரம்தான் ஆகியிருந்தது. வழக்கம்போல விடியலுக்கு முன் கண்விழித்தான் மிட்ரி. முந்தைய நாளில் போராடிப் போராடி கீழே விழுந்து உயிர்விட்ட குதிரையைப் பற்றிய நினைவு திரும்பியதும் வேதனையில் முனகினான். இப்போது குதிரையும் இல்லை. கையில் இருந்ததெல்லாம் அதன் தோலுக்குக் கிடைத்த விலை மட்டும்தான். நான்கு ரூபிள், ஐந்து கோபெக்குகள். காலில் சுற்றி இருந்த நார்த்துணிப் பட்டிகளை மடித்து வைத்துவிட்டு, முற்றத்தைத் தாண்டி, குடிசைக்குள் நுழைந்தான். ஒரு கையால் அடுப்புக்குள் வைக்கோலைத் திணித்தபடி மறுகையால் குழந்தையைத் தாங்கிப் பிடித்திருந்தாள் அவன் மனைவி. அழுக்கான உள்ளாடைக்குள் இருந்து வெளியே தொங்கிக்கொண்டிருந்த அவளின் மார்பில் வைத்து குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தாள்.

மூன்று முறை சிலுவைக் குறியை இட்டபடி கடவுளர் படங்கள் மாட்டப்பட்டிருந்த மூலையை நோக்கித் திரும்பினான் மிட்ரி. திரித்துவத்துக்கும் கன்னிக்கும் திருமுறைக் கோட்பாட்டுக்கும் தந்தைக்கும் தோத்திரம் சொல்கிறேன் என்ற பெயரில் பொருளற்ற சில சொற்களை உச்சரித்தான்.

“தண்ணீர் இல்லையா?”

“மகள் சென்றிருக்கிறாள். கொஞ்சம் தேநீர் இருக்கிறது. கனவானைப் பார்ப்பதற்காகச் செல்கிறீர்களா?”

“ஆமாம், கிளம்ப வேண்டும்.” அடுப்பிலிருந்து வந்த புகையால் இருமினான். மரப் பெஞ்சில் இருந்த கந்தையை எடுத்துக்கொண்டு முன்வாசலுக்குப் போனான். தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தாள் மகள். வாளியில் இருந்த நீரால் வாயைக் கொப்பளித்து கையில் உமிழ்ந்தான். இன்னும் கொஞ்சத்தை எடுத்து முகத்தைக் கழுவிக் கந்தையால் துடைத்தான். சுருட்டை முடியை இரு பக்கமும் பிரித்துவிட்டும் விரல்களால் தட்டியும் படியச் செய்தான். அழுக்கான சட்டையைத் தவிர வேறெதையும் அணியாத பத்து வயதுப் பெண்ணொருத்தி அவனை நோக்கி வந்தாள். “காலை வணக்கம், மிட்ரி மாமா. சோளத்தைப் புடைப்பதற்காக உங்களை வரச் சொன்னார்கள்” என்றாள். “சரி, வருகிறேன்”, என்று பதில் சொன்னான் மிட்ரி. சென்ற வாரம் குதிரை பூட்டப்பட்ட இயந்திரத்தைக்கொண்டு சோளத்தைப் புடைப்பதற்கு, தன்னைப் போலவே ஏழையான, குமுஷ்கிர் செய்த உதவியைத் திருப்பிச் செலுத்த நினைவூட்டப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டான்.

மீண்டும் குடிசைக்குள் போய் பிர்ச் மரப்பட்டைகளாலான காலணியை அணிந்து நார்த்துணிப் பட்டிகளைக் காலில் சுற்றிக்கொண்டு கனவானைப் பார்க்கக் கிளம்பினான் மிட்ரி. வோல்கினிடம் இருந்து கிடைத்த மூன்று ரூபிளையும் நிக்கோலஸ் பெட்ரோவிச்சிடம் இருந்து கிடைத்த அதே அளவு பணத்தையும் வீட்டுக்குப் போய் மனைவியிடம் கொடுத்துவிட்டு பக்கத்து வீட்டுக்குச் சென்றான். கோதுமை புடைக்கும் இயந்திரம் முனகியது. அதை ஓட்டுபவர் இரைந்தார். மெலிந்த குதிரைகள்  நடந்த தடத்திலேயே மெதுவாகச் சுற்றிச் சுற்றி வந்தன. ஓட்டுபவன் அவற்றிடம் ஏற்ற இறக்கமில்லாத குரலில் சத்தம் போட்டான். “இங்கே பாருங்கள், என் செல்லங்களே”. சில பெண்கள் கதிர்க்கட்டுகளைப் பிரித்தனர். மற்றவர்கள் உதிர்ந்த வைக்கோலையும் கூலக்கதிரையும் சேகரித்துக்கொண்டிருந்தனர். இன்னும் சில பேர் கை நிறைய சோளத்தைக் கைகளில் அள்ளி இயந்திரத்துக்குள் இடுவதற்காக ஆண்களிடம் கொடுத்தனர். வேலை முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தது. மிட்ரி சமையலறைத் தோட்டத்தைக் கடந்து போகும்போது நீளமான சட்டையை மட்டும் அணிந்திருந்த சிறுமி உருளைக்கிழங்குகளைத் தோண்டி கூடையினுள் போட்டுக்கொண்டிருந்தாள்.

“உன் தாத்தா எங்கே?” என்று கேட்டான் மிட்ரி.

“தானியக் களஞ்சியத்தில் இருக்கிறார்.”

களஞ்சியத்துக்குப் போன மிட்ரி, உடனே வேலை செய்யத் தொடங்கினான். எண்பது வயதான அந்தப் பெரியவருக்கு மிட்ரியின் பிரச்சினை பற்றித் தெரியும். அவனுக்கு முகமன் கூறி, இயந்திரத்தில் அமர்ந்து வேலை செய்ய எழுந்து இடம் கொடுத்தார்.

நைந்துபோயிருந்த மேலங்கியைக் கழற்றி வேலியின் அருகே வைத்துவிட்டு கடுமையாக வேலை செய்ய ஆரம்பித்தான் மிட்ரி. சோளக் கதிர்களைச் சேகரித்து இயந்திரத்தின் உள்ளே போட்டான். உணவு நேரம் வரை தடையில்லாமல் வேலை நடந்தது. இரண்டு மூன்று முறை சேவல் கூவியது. ஆனாலும் ஒருவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. பணியாளர்கள் அதை நம்பவில்லை என்பதில்லை. வேலைச் சத்தத்திலும் பேச்சிலும் அவற்றின் குரல் கேட்கவில்லை. கடைசியில் மூன்று மைலுக்கு அப்பால் இருந்த கனவானின் ஆவியில் இயங்கும் இயந்திரத்தின் சீக்கியொலி கேட்டதும் களஞ்சியத்தின் சொந்தக்காரர் உள்ளே வந்தார். எண்பது வயதான நேர்மையான பெரியவர் அவர். “வேலை முடியும் நேரமாகி விட்டது. எல்லோரும் சாப்பிடப் போகலாம்” என்றார். வேலை செய்துகொண்டிருந்தவர்கள் இரட்டிப்பு வேகத்தில் இயங்க ஆரம்பித்தார்கள். ஒரு நொடியில் வைக்கோலை சுத்தம் செய்துவிட்டார்கள். போரடித்த தானியத்தைப் பதரில் இருந்து பிரித்து உள்ளே எடுத்து வந்த பணியாளர்கள், குடிசைக்குள் நுழைந்தார்கள்.

புகைபோக்கி இல்லாததால் குடிசைக்குள் புகைக் கரி படிந்திருந்தது. ஆனாலும் சுத்தமாக இருந்தது. பணி செய்தவர்கள் எல்லோரும் உட்கார்வதற்கு ஏற்றவாறு மேசையைச் சுற்றி பெஞ்சு போடப்பட்டு இருந்தது. வீட்டுச் சொந்தக்காரர்களைக் கணக்கில் சேர்க்காமல் மொத்தம் ஒன்பது பேர் இருந்தார்கள். ரொட்டி, சூப், வேகவைத்த உருளைக்கிழங்கு, க்வாஸ் எல்லாம் மேசைமீது வைக்கப்பட்டிருந்தது.

சாப்பாட்டு நேரத்தின்போது, ஒற்றைக் கையுடைய வயதான பிச்சைக்காரன், தோளில் பையைத் தொங்கவிட்டுக்கொண்டு ஊன்றுகோலைப் பிடித்தபடி உள்ளே நுழைந்தான்.

“இந்த இல்லத்தில் அமைதி நிலவட்டும். உங்களுக்கு நல்ல பசி உண்டாகட்டும். கடவுளின் பெயரால் எனக்கு ஏதேனும் கொடுங்கள்.”

“உனக்கு கடவுளே கொடுப்பார்” என்று வீட்டின் தலைவி சொன்னாள். வீட்டுச் சொந்தக்காரரின் மருமகளான அவளும் வயதான மூதாட்டிதான். “எங்கள் மீது கோபப்படாதே”. கதவருகே நின்றிருந்த பெரியவர் சொன்னார், “அவனுக்குக் கொஞ்சம் ரொட்டி கொடு, மார்த்தா. ஏழைகளுக்கு கடவுள் உதவச் சொல்கிறார். ஒரு துண்டை வெட்டிக் கொடு.”

அவர் சொற்படி நடந்தாள் மார்த்தா. பிச்சைக்காரன் போய்விட்டான். தானியங்களைப் போரடிக்கும் இயந்திரத்துக்குப் பொறுப்பாக இருந்தவர் எழுந்துநின்று கடவுளுக்கும் வீட்டுச் சொந்தக்காரர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு ஓய்வெடுக்கப் போனார்.

மிட்ரி படுக்கவில்லை. புகையிலை வாங்குவதற்குக் கடைக்கு ஓடினான். புகைபிடிக்க வேண்டுமென்ற ஏக்கத்துடன் இருந்தான். புகைபிடிக்கும்போது டெமென்ஸ்க்கில் இருந்து வந்த ஆளிடம் மாடுகளின் விலையைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தான். தன்னிடம் இருந்த பசுவை விற்காமல் சமாளிக்க முடியாது என்பது அவனுக்குத் தெரிந்தது. அவன் திரும்பி வருகையில் மற்றவர்கள் மறுபடியும் வேலையைத் துவக்கி இருந்தனர். அது மாலை வரை தொடர்ந்தது.

4

ஒடுக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மனிதர்கள், கடுமையான உழைப்பால் நம்பிக்கை இழந்தவர்களாக மாறி வருகிறார்கள். சரியான உணவு கிடைக்காததால் கொஞ்சங்கொஞ்சமாக சாவை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். தங்களை கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக்கொள்ளும் மனிதர்களும் இவர்களிடையே வாழ்ந்து வருகிறார்கள். அறிவொளியைக் கண்டுவிட்டதால் கிறிஸ்தவமோ வேறு மதமோ தேவையில்லை என்று தங்களைத் தாங்களே மிக உயர்ந்தவர்களாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் விகாரமான சோம்பேறித்தனமான வாழ்க்கை இந்த அடிமைகளின் சிறுமைப்படுத்தப்பட்ட அளவுக்கதிகமான உழைப்பினால் தாங்கிப் பிடிக்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான சமோவார்கள், வெள்ளி உபகரணங்கள், வண்டிகள், இயந்திரங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதற்காக தொழிற்சாலைகளில் கடுமையாக உழைக்கும் இலட்சக்கணக்கான அடிமைகளின் உழைப்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இந்தக் கொடுமைகளுக்கு நடுவேதான் அவர்கள் அவற்றைப் பார்த்தும் பார்க்காதது போல வாழ்கிறார்கள். மனதில் கருணை உள்ளவர்கள் என்றாலும் வயதான ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் யுவதிகளும் அன்னையரும் குழந்தைகளும் நீதியைக் காண முடியாத குருடர்களாக இருக்கப் பழக்கப்படுகிறார்கள்.

ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்குச் சொந்தக்காரரும் சோம்பலும் பேராசையும் அளவுக்கு அதிகமான இன்பத்தோய்வும் உடைய பிரம்மச்சாரி இவர். திருமணம் ஆகாமலே வயோதிகம் அடைந்தவர். தி நியூ டைம்ஸ் நாளிதழைப் படிப்பவர். பல்கலைக்கழகத்தில் யூதர்கள் நுழைய அனுமதி தரும் அரசாங்கத்தின் முட்டாள்தனத்தைக் குறித்து ஆச்சரியப்படுகிறார். அவருடைய விருந்தினர் ஒரு பிராந்தியத்தின் முன்னாள் ஆளுநர். இப்போது பெரிய ஊதியத்தைப் பெறும் சட்டமன்ற உறுப்பினர். வழக்குரைஞர்களின் அமைப்பு மரண தண்டனைக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது குறித்து மனநிறைவு கொள்பவர். அவர்களின் அரசியல் எதிரியான என். பி. தாராண்மைவாத நிலைகொண்ட நாளிதழைப் படிக்கிறார். ரஷிய ஆண்களின் ஒன்றியம் இன்னும் இயங்குவதற்குக் கண்ணைமூடிக்கொண்டு அனுமதி அளித்திருக்கும் அரசாங்கத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இவர் ஒரு சிறுமியின் அன்புமிக்க கனிவான அன்னை. முயல்களை நொண்டியாக்கும் ஃபாக்ஸ் என்ற பெயருடைய நாயைப் பற்றிய கதையை அவளுக்குப் படித்துக் காட்டுகிறார். இதோ அந்தச் சிறுமி. நடைப்பயிற்சிக்குப் போகும்போது, வெறுங்காலுடன் பசியுடன் மரத்தில் இருந்து விழுந்த பச்சை ஆப்பிள்களை பொறுக்கும் மற்ற குழந்தைகளைப் பார்க்கிறாள். இந்தக் காட்சியைப் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்டுவிட்டதால், இவர்கள் அவளைப் போன்ற குழந்தைகள் என்பது அவளுக்குத் தோன்றவில்லை. வழக்கமான சூழலின், அவளுக்குப் பழக்கப்பட்ட நிலக்காட்சியின் ஒரு பகுதியாகவே அவர்களைப் பார்க்கிறாள்.

ஏன் இப்படி இருக்கிறது?

*

ஆங்கில மூலம்: There are no guilty people by Leo Tolstoy