கண்ணேறு கழித்தல்
சிறு இலையென
முளைவிடத் தொடங்கிய
எனது இச்சைகள்,
இனியும் வேலிகட்டி
மூடி வைக்க முடியாதபடிக்கு
நெடிதோங்கி
நிமிர்ந்து வளர்ந்துவிட,
உறக்கத்தின் பாதியில்
ஒசையெழாது
ஒன்றன் பின்னொன்றாய்
இறகசைத்தபடி
எழுந்து வருகின்ற
எண்ணிறந்த வெட்டுக்கிளிகளை
கனவில் கண்டு
பதறியெழுந்தவன்,
பயம் தெளிந்து
பதற்றம் குறைந்த பின்
பரிகாரமாய்
நினைவின்
நிரலொழுங்கைப் புரட்டி,
அதனொரு
இருள் மூலையில்
மறைந்திருந்தபடி
எந்நேரமும்
இமையாது வெறிக்குமந்த
இரு விழிகளையும்
எச்சில் தொட்டு
மிச்சமின்றி அழிக்கத் தொடங்கினேன்.
எண்ணும் எழுத்தும்
சொல்லில் சுருக்கிட்டு
நாள் கணக்கில் காத்திருந்து
நான் பிடிக்கின்ற
முயலுக்கெப்போதும்
மூன்றே கால்;
இதைப் படிக்கும் நீங்கள்
இருக்காதென மறுத்து
எப்படியது சாத்தியமென
எண்ணத் தலைப்படுவீர்களானால்
அப்போது,
அச்சிட்ட இக்காகிதத்தை விட்டு
அடுத்திருக்கும் கானகத்துள்
ஓடி மறையுமதற்கு
ஒருக்கால்
நாமெல்லோரும் நம்பும்படியாக
நான்கு கால் இருக்கலாம்.
திரவியம்
மனம் மறுகி நான்
நின்ற பொழுதுகளில்
தனதேயான அருவ விரல்களால்
எனது அகத்தின் சுருக்கங்களை
வருடிப் போக்கிய
உனது அந்தரங்கமான குரலை
ஒரு வாசனைத் திரவியம் போல
உள்ளம் முழுவதுமாய்
அள்ளிப் பூசிக்கொண்டு
அத்துயர இரவுகளை
விடியுமளவிற்கும் பரிமளிக்கச் செய்தேன்!
இன்றோ
எனது செவிகளின் கேள் எல்லைக்கப்பால்
எங்கோ
எட்டாத தொலைவுக்கு
விட்டகன்று போனாலும்
உனது குரலின்
குறையாத நறுமணத்தை
எண்ணும் போதெல்லாம்
தன்னைப்போல
மலர்கிறது நினைவு.
வரம்
நான்
இடர்ப்பட்ட காலத்திலெல்லாம்
உற்றுழி உதவியும்
உறுபொருள் கொடுத்தும்,
அவ்வளவு
அக்கறையோடும்
ஆதுரத்துடனும்
உடன் நின்றவளிடம்
நெகிழ்வான தருணமொன்றில்
கண்களில் நீர் தளும்பச் சொன்னேன்
‘தெய்வப் பிறவி நீ! ‘
அது வெறுமோர்
உருவகம் மட்டுமன்று
உள்ளத்தின் ஆழத்தினின்றும்
எழுந்து வந்த உண்மையும் கூடத்தான்.
எனினுமவள்
வழக்கிலுள்ள அர்த்தத்தை
வலிந்து எடுத்துக்கொண்டாள் போலும்!
அதன் பிறகுதான் தொடங்கியது
என் மீதான
அவளது
அன்பின் ஆற்றமாட்டாத
நுண் சோதனைகள்.
1 comment
Fantastic Kavithaigal
Salutations
Thanks
Comments are closed.