யானைக் கதை
அரூபமான யானையை
நினைத்துக்கொள்.
நினைத்துக்கொண்டாயா?
இப்போது யானையை
முழுவதும் மறந்துவிடு.
மறந்துவிட்டாயா?
நல்லது, இப்போது
அரூபத்தையும் மறந்துவிடு.
ஆகாசப் பால்
குடிசையின் வெளியில்
கன்னங்கரிய கல்லுரலில் அமர்ந்து
பிள்ளைக்கு முலையூட்டுகிறாள் தாய்.
பக்கத்தில் வந்து நின்றுகொண்டது
பிள்ளைச் சிறு பூனை.
முலையுண்டபடி
பூனைக்குட்டியைப் பார்த்தது
மனிதக்குட்டி.
வாலை அடித்துக்கொண்டது
பூனைக்குட்டி
வெடுக்கென்று வாயை இழுத்துக்கொண்டது மனிதக்குட்டி.
பிள்ளையைத் தோளில் ஆட்டிக்கொண்டே
காம்பில் கட்டிநின்ற துளிப்பாலை
பூனைக்குட்டியின் வாயில் வழித்துவிட்டாள்.சப்புக்கொட்டி சப்புக்கொட்டி
மேலே பார்த்தது பூனைக்குட்டி
மயங்கி மயங்கி வந்தது
கருணைப் பெரும் ஆகாசம்.
மூட மேதைமை
முன்னறிவதை ஒரு பெருந்திறமை
என்று பீற்றிக்கொள்ளாதே நண்பனே!
உன்னருமை மனைவி
உன்னை நினைப்பதற்குக்
கொஞ்சம் முன்பாக
இஸ்திரி போடும் இளைஞனை நினைத்துக்கொண்டிருந்தாள்
என்பதை முன்னறிந்த பிறகு
எந்த மெத்தையில்
எந்த உடலில் உறங்க முடியும் சொல்?
நாதமண்டலம்
அரவமில்லை
சலனமில்லை
அமைதியின்
அசைவும் இல்லை
வெளிமண்டப
ஒளி மங்கிய அந்தியில்
நாதசுர ஒத்திகை
இளைஞர் ப்பீ என்றார்
தூண்சிலைத் தோளமர்ந்த குயில்
க்கூ என்றது
ப்பீ ப்பீ என்றார் அவர்
க்கூக்கூ என்றது குயில்
நாதத்தின் ஆரோகணத்தில்
க்கூக்கூ பிறந்தது
குயிலின் பிரக்ஞையில்
ஞால ஒலியெலாம் கரைந்தது
குயிலின் பார்வையில்
நாத ஒலியெலாம் அவிந்தது
மௌனத்தின் திருவுருவானது
மாப்பெருங்கோயில்.
யோனி போற்றுதும்
இருள் மீறியெழும்
நிலாசுளைப் பிறைச்சொட்டை
இங்கிருந்தே வாங்கும்
முகை யோனிகள்
ஒருபொழுது திறந்து
மறுபொழுது மடல்மூடும்
மலரும் கோயிலன்றோ!
அருள்மிகு ஏகயோனியும்
திருநிறைத் தெய்வமன்றோ!
துயர முகம்
அழுத குழந்தையின்
உறக்க முகம் உனக்கு அன்பே
நித்தியத்தின் தனித்துவம்
உனது அந்தர முகம்
தொன்மத்தின் தூரிகைத் தீற்றல்
உனது ஆதிக் கருமை
இன்ப விழைவின் இறுதி வடிவம்
உனது நிரந்தரத் துயர முகம்
அகத்தின் அசலான துலக்கம் நீ
சிரிக்காதே
சிலையாய் நிலைத்தவளே!
முறுவல் முகியே!
இருள்பரை ஈசியே!
சிரிப்பு உனக்கு முகமூடி.
வரலாற்றின் கதைகளைப் பேசும்
உனது துக்க முகம்
அப்படியே இருக்கட்டும்.
வாடிய வதனத்தின்
வேட்கைகளைக் கடந்து
உணர்ச்சிகளைக் கடந்து
எண்ணங்களைக் கடந்து
ஆழத்தில் நான் தேடுவது
மாயையின் முகம்
கன்மத்தின் முகம்
ஆதிமலத்தின் முகம்
அர்த்தனும் காணாத
நாரியின் முகம்.
நுண்மை
அனு! அன்பே ஆருயிரே!
என் அம்மு அசடே!
நுண்மை
மாயை
இரண்டையும் குழப்பிக்கொள்ளாதே
மெய்மையின் அதிஉயரி நுண்மை
புனைவின் ஆகாயம் மாயை
செழித்த உன் உடலை
இயக்குவது நுண்மை
அது எப்போதும் செழித்தே இருக்கும்
என்று நம்புவது மாயை.
காலத்தின் இருள்
நுண்மை
காந்தாரியின் இருள்
மாயை
நுண்மையில் கவனம் குவியும்
சிதறுவதே மாயையின் குணம்
உதடுகளில் உருகியுருகி முத்தமிடுகையில்
நீ பேச விரும்புவாயா சொல்
என் செல்ல அசடே!
அறிவால் ஆகாதது
அன்பே! ஆதுரமே!
பிரிவின் ஊற்றுக்கண்ணே!
கருணைக் கடலே!
உன்னை அறிவால்
அறிந்துவிட முடியுமா என்ன?
வானத்தையே அறிந்துவரும் பறவை
தனது முதுகைப்
பார்த்துவிட முடியாதல்லவா?
1 comment
துயர முகம் ❤️
Comments are closed.