கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் சூழல் உலகமயமாதலுக்குக் குந்தகமாக அமைந்து பாதுகாப்புக்கான கூக்குரல் எழக் காரணமாக இருக்கிறது.
இந்தியாவின் தேசிய வியூகமும் இந்தப் போக்கிலேயே எழுந்து, “சுயசார்பு”, “உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்போம்” என முழக்கங்கள் எழுகின்றன.
விடுதலை பெறுவதற்கு முன்பு இந்தியா சமையல் எண்ணெயை ஏற்றுமதி செய்துவந்தது. விடுதலைக்குப் பின் அது சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. 1970களின் தொடக்கம்வரை இந்த நிலை தொடர்ந்தது. 70களிலும் 80களிலும் ஏற்பட்ட தடுமாற்றங்களிலிருந்து மீண்டு 90களின் தொடக்கத்தில் மீண்டும் தன்னிறைவு பெற்றது (1990-1994). ஆனால், இன்று உலகில் சமையல் எண்ணெயின் மிகப்பெரிய இறக்குமதியாளராக நாம் இருக்கிறோம்.
இந்தியா, தனது வருடாந்திரத் தேவையான 23 மில்லியன் டன் எண்ணெயில், 65 சதவிகிதத்தை, அதாவது 15 மில்லியன் டன் சமையல் எண்ணெயை, தற்போது இறக்குமதி செய்துவருகிறது. இதன் மதிப்பு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர். நாம் சாலையில் உண்ணும் சமோசா, தோசை, பரோட்டா முதற்கொண்டு பிரபல பிராண்டுகளின் உணவு வகைகளான பிஸ்கட் அல்லது மிக்சர் வரை, அனைத்திலும் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்தான் உபயோகப்படுத்தப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், இந்தியாவில் உற்பத்தியாகும் அழகு சாதனப் பொருட்களான சோப்பு, ஷாம்பூ, க்ரீம் போன்றவற்றில், பெரும்பாலும் பனை எண்ணெய்- அதலிருந்து தயாரிக்கப்படும் இதரப் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.
உற்பத்தித் தன்னிறைவு என்னும் கருதுகோளுக்கு எதிரான உதாரணமாக இவ்விரண்டு துறைகளும் விளங்குகின்றன. இதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், கடந்த 50 ஆண்டுகால எண்ணெய் வித்துத் துறை வரலாறை அறிந்துகொள்ளுதல் அவசியமாகும்.
விடுதலைக்குப் பிந்தைய வளர்ச்சி
விடுதலை பெற்றது முதல் 70களின் நடுப்பகுதிவரை சமையல் எண்ணெயில் நாம் சராரசியாக 95 விழுக்காடு தன்னிறைவு பெற்றிருந்தோம். உணவு முறை, பயிரிடும் முறைகள், காலநிலை நிலவரங்கள் ஆகியவை காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கடுகு எண்ணெய், தெற்கில் உள்ளவர்கள் தேங்காய் மற்றும் கடலெண்ணெய், ராஜஸ்தான் மக்கள் நல்லெண்ணெய், மேற்கு இந்தியாவில் உள்ளவர்கள் கடலை அல்லது பருத்திவிதை எண்ணெயை அதிகம் உட்கொள்வது வழக்கமாக இருந்தது.
இந்த நுகர்வு முறை, பல நூற்றாண்டுகளாக வளர்ந்து, நமது பண்பாட்டின் ஒரு பகுதியாக மாறிய ஒன்றாகும். 1973-74இல் இந்தியாவில் எண்ணெய் நுகர்வில் கடலை, கடுகு, பருத்திவிதை எண்ணெய் வகைகளின் பங்கு 96 விழுக்காடாக இருந்தது. எண்ணெய் வித்துகள், செக்கில் ஆட்டிப் பிழியப்பட்டு (cold pressing), பின் வடிகட்டி எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதே இங்குள்ள வழக்கமாக இருந்தது. இந்தத் தொழில்நுட்பம் சிறு தொழிலுக்குப் பொருத்தமாக இருந்ததுடன் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியது. உள்ளூர் உற்பத்தி, விநியோகம், நுகர்வு என இந்தத் துறை, மிகக் குறைவான Carbon Foot Print கொண்டதாக விளங்கியது. இது சூழல் சமநிலை பேணுவதாகவும், நீடித்து நிலைக்கும் ஒரு தொழில்முறையாகவும் விளங்கியது.
சரிவின் தொடக்கம்
1971இல் நடந்த போர், தொடர்ந்து 1972இல் ஏற்பட்ட வறட்சி ஆகியவற்றால் பணவீக்கமும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டன. 1971இல் தனிநபரின் சமையல் எண்ணெய் நுகர்வின் சராசரி ஆண்டுக்கு 5 லிட்டராக இருந்தது. 1973இல் இது 3.9 லிட்டராகக் குறைந்தது (இப்போது 19 லிட்டர்). பாலுக்கும் அதன் விளைவாக நெய்க்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்தப் பற்றாக்குறையும், திறமையான விளம்பரமும் இணைந்து வனஸ்பதிக்கான கிராக்கியைக் கூட்டின. நெய்க்கு ஆரோக்கியமான மாற்றாக அது சந்தைப்படுத்தப்பட்டது.
சமையல் எண்ணெயில் உள்ள நிறைவற்ற (unsaturated) திரவக் கொழுப்புகளை நிறைவுற்ற திடக்கொழுப்புகளாக மாற்றுவதற்காக அதில் ஹைட்ரஜனைச் சேர்த்து வனஸ்பதி தயாரிக்கப்பட்டது. வனஸ்பதி பார்ப்பதற்கு நெய்போல இருக்கும். அதன் கொதிநிலை எண்ணெயைக் காட்டிலும் அதிகம். இது உணவுப் பொருட்களைப் பொரிப்பதற்கு ஏற்றது. எனவே இது பெருமளவில் பிரபலமானது. ‘டால்டா’ என்னும் பிராண்டு மிகப் பிரபலமான வனஸ்பதி பிராண்டாகும்.
வனஸ்பதி உற்பத்திக்கு சமையல் எண்ணெய் உபயோகப்படுத்தப்படத் துவங்கியதால், மற்ற தேவைகளுக்கான சமையல் எண்ணெய் கிடைப்பது குறையத் துவங்கியது. 1970-80களில் வனஸ்பதியில் உபயோகப்படுத்தப்படும் சமையல் எண்ணெயினால், சமையல் எண்ணெய் கிடைப்பதில் ஐந்தில் ஒரு பங்கு குறைந்து போனது. இதனால் வனஸ்பதி தயாரிப்புக்குக் கடலை எண்ணெயையும் கடுகு எண்ணெயையும் பயன்படுத்த 1976-77 முதல் 1987-88 வரை தடைவிதிக்கப்பட்டிருந்தது. வேறு வழியின்றி, வனஸ்பதி உற்பத்தியாளர்கள் பாமாயில் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று.
மக்கள் வனஸ்பதியைப் பயன்படுத்துவது அதிகரித்தது உள்நாட்டில் சமையல் எண்ணெயை எதிர்மறையாக பாதித்தது. வனஸ்பதி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால், சமையல் எண்ணெயின் தேவை குறைய, அதன் விலை சரிந்தது. எண்ணெய் வித்துகளைப் பயிரிடுதல் இலாபமில்லாமல் போக, அவற்றின் உற்பத்தி தேக்கத்தை அடைந்தது. 1970 முதல் 1986 வரை ஆண்டு உற்பத்தி 10 மில்லியன் டன்னாக ஒரு தேக்க நிலையில் இருந்தது. மக்கள் தொகை அதிகரித்துவந்த நிலையில் சமையல் எண்ணெய்க்கான தேவை அதிகரித்ததால் அரசு இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இலாபமில்லா எண்ணெய் வித்து வேளாண்மை, அதனால் தேங்கிப் போன எண்ணெய் வித்து உற்பத்தி, மக்கள் தொகை அதிகரிப்பால், சமையல் எண்ணெயை இறக்குமதி செய்தாக வேண்டிய நிலை என இந்தியா ஒரு மீளாச் சுழலில் சிக்கிக்கொண்டது.
போராட்டத்திற்கு வித்திட்ட அதிருப்தி
மக்களின் அதிருப்தி போராட்டமாக வெடித்தது. 1973, டிசம்பர் 20 அன்று குஜராத்தில் மாணவர்கள் தங்கள் கல்லூரி விடுதிக் கட்டணம் அதிகரித்ததை எதிர்த்து போராட்டத்தைத் தொடங்கினார்கள். குஜராத்தில் ‘நவ் நிர்மாண்’, இயக்கமாக அது உருவெடுத்தது. ஜெயபிரகாஷ் நாராயணின் தலைமையில் ’முழுப் புரட்சி’ என்னும் பெயரில் பேருருக் கொண்டது. அதையடுத்து எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து நடந்த 1977 தேர்தலில், மொராஜி தேசாயின் தலைமையில் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியமைக்க இதுவே காரணமாக அமைந்தது.
ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கொகோ கோலா நிறுவனத்தை வெளியேற்றினார் என்பதை அறிந்திருக்கும் பலருக்கும், அவர் அமைச்சராக இருந்த அதே ஜனதா கட்சிதான் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான கதவைத் திறந்துவிட்டது என்பது தெரிந்திருப்பதில்லை. இதனால், 1960களிலும் 70களிலும், 95% வரை உணவு எண்ணெய் உற்பத்தியில் இந்தியா பெற்றிருந்த தன்னிறைவு, 1977-80 காலகட்டத்தில், 70% ஆகக் குறைந்தது.
மீட்சிக்கான முன்னெடுப்பு
1977இல் அப்போதைய நிதியமைச்சர் ஹெச்.எம்.படேல் (பின்னாளில் தேசியப் பால்வள வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அம்ரிதா படேலின் தந்தை) டாக்டர் குரியனிடம் ஒரு யோசனை சொன்னார். குரியன், வெற்றிகரமாக உருவாக்கி வளர்த்தெடுத்த அமுல் பால் உற்பத்திக் கூட்டுறவு நிறுவனங்கள் போல, உழவர்கள் கூட்டுறவு அமைப்பின் மூலம் சமையல் எண்ணெயை வெள்ளமாகப் பெருகச் செய்யக்கூடிய திட்டமொன்றை முன்னெடுக்கும்படி சொன்னார். அதிக உற்பத்தித்திறன், வலுவான விநியோக ஏற்பாடு, சந்தையில் தலையிட்டு, எண்ணெயை வாங்கியும் விற்றும் எண்ணெய் விலைகளைச் சீராக வைத்துக்கொள்ளும் சந்தைச் செயல்பாடு என மூன்று தளங்களில் இந்தத் திட்டத்தை முன்னெடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, சமையல் எண்ணெயில் தன்னிறைவு பெறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
உள்நாட்டில் சமையல் எண்ணெய் உற்பத்தியைப் பெருக்கி, தன்னிறைவை அடையும் நோக்க்கதுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு ஆபரேஷன் கோல்டன் ஃப்ளோ என்று பெயரிட்டார்கள். இந்தச் செயல்பாடுகளின் மையமாக ‘தாரா’ என்னும் பிராண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவில் எண்ணெய் வித்துகள் உற்பத்தியாளர்களுக்கான சந்தையைக் கட்டமைப்பதே இதன் நோக்கம். இது வனஸ்பதி விற்பனையில் கொடிகட்டிப் பறந்த டால்டா என்னும் பிராண்டின் பெயரை அடியொற்றி அமைந்த பெயர். 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று தாரா சந்தைக்கு வந்தது. அதிக விற்பனையை இலக்காகக் கொண்டதால் அதன் விலை குறைவாகவே இருந்தது. அமெரிக்காவின் கூட்டுறவு அமைப்பான ‘CLUSA’-விடமிருந்து (Cooperative League of the United States of America) நன்கொடையாகப் பெற்ற எண்ணெயுடன் இது சேர்க்கப்பட்டு, ’தாரா’ குறைந்த விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏற்கனவே, வெண்மைப் புரட்சியின் ஒரு பகுதியாக, அமுல் முன்னெடுத்த உத்தியை அடியொற்றிய திட்டமாகும்.
பொற்காலம் உதயம்
இதன் மூலம், ’தாரா’, உள்நாட்டு எண்ணெயின் விலையை, இறக்குமதி செய்யப்பட்ட விலை மலிவான சமையல் எண்ணெய்க்குச் சமமாகக் கொண்டுவந்தது. பால்வள வாரியமும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனமும் (ஜி.சி.எம்.எம்.எஃப்.) ஒரே குழுவாகப் பணியாற்றி, சுத்திகரிக்கப்பட்ட கடுகு எண்ணெய், பருத்தி விதை எண்ணெய், இருமுறை வடிகட்டப்பட்ட கடலை போன்ற பல்வேறு வகையான எண்ணெய் வகைகளை அறிமுகப்படுத்தினார்கள். கூட்டுறவு, கொள்முதல், உற்பத்திப் பணிகளை பால்வள வாரியம் கையாள, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் விநியோக கூட்டாளியாகச் செயல்பட்டது. இந்த விநியோக நிறுவனம், ‘அமுல்’ பொருட்களை விநியோகம் செய்துவந்த பலம்வாய்ந்த ஒன்றாகும். இந்தப் பலம், ’தாரா’வின் உடனடி வெற்றிக்கு அடித்தளமிட்டது.
அதிரடியாகக் களமிறங்கிய ‘தாரா’, 1991-92ஆம் ஆண்டில், 1,32,000 மெட்ரிக் டன் விற்பனையை எட்டியது. இந்திய உணவு எண்ணெய் பிராண்டு சந்தையில் இது 50% ஆகும்.
1986-ஆம் ஆண்டில், எண்ணெய் வித்துகள் சார்ந்த தொழில்நுட்பத் திட்டம் (Technology Mission on Oil-seeds – TMO) எனும் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை சாம் பிட்ரோடா தலைமையில் உருவாக்கினார்கள். இது எண்ணெய் வித்துகள் உற்பத்தியை வலுவான திட்டங்கள் மூலமாக முன்னெடுத்தது. 1970 முதல் 1985 வரை 15-18 மில்லியன் ஹெக்டேராகத் தேக்கமடைந்திருந்த எண்ணெய் வித்துகள் சாகுபடிப் பரப்பளவு 1991-க்குள் 25 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது. 1970-85 காலகட்டத்தில் சுமார் 10 மில்லியன் டன்களாகத் தேக்கமடைந்த எண்ணெய் வித்துகள் உற்பத்தி 1991க்குள் 18 மில்லியன் டன்களாக உயர்ந்தது. 1990-91 ஆண்டில் இந்தியா தன்னுடைய சமையல் எண்ணெய் தேவையில் 98 விழுக்காட்டினை உற்பத்தி செய்துகொண்டது. இது எண்ணெய் வித்துகள் துறையில் நிகழ்ந்த வெற்றிகரமான தன்னிறைவு ஆகும்.
1990-94க்கு இடையேயான காலகட்டத்தை இந்திய எண்ணெய் வித்துகள் துறையின் பொற்காலம் எனச் சொல்ல வேண்டும்.
மீண்டும் சரிவை நோக்கி
1994ஆம் ஆண்டில் நரசிம்ம ராவ் அரசு உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்வரை எண்ணெய் வித்து உற்பத்தித் தன்னிறைவு தொடர்ந்தது. உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தத்தின்படி, சமையல் எண்ணெய் இறக்குமதியை எவர் வேண்டுமானாலும் செய்ய முடியும் என்னும்படி, பொது உரிமத்தின் கீழ், 65% இறக்குமதி வரியுடன் கொண்டுவரப்பட்டது. இறக்குமதிக்கான கதவுகள் மீண்டும் திறந்தன. 1998 வாக்கில் நாம் மீண்டும் சமையல் எண்ணெய்த் தேவையில் சுமார் 30% இறக்குமதி செய்தோம். அடுத்து வரப்போகும் அபாயங்களை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
ஜூலை 1998-இல் வாஜ்பாய் ஆட்சியின்போது சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 15 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. அதே ஆண்டில் 1998 ஆகஸ்டில், கடுகு எண்ணெயில் ஏற்பட்ட கலப்படத்தால் (Argemone adulteration Dropsy) தொற்றுநோய் பரவியது. இதனால் டெல்லியில் அறுபது பேர் இறந்தனர். மேலும் சுமார் 3,000 பேர் நோய்வாய்ப்பட்டார்கள். இந்தக் கெடுநிகழ்வு நாட்டின் கவனத்தைக் கவர்ந்தது. கடுகு எண்ணெய் விற்பனை செய்யும் அனைத்து உள்நாட்டு பிராண்டுகளும் உடனடியாகப் புறக்கணிக்கப்பட்டன. கடுகு எண்ணெயை உதிரியாக விற்பதுகூட தடைசெய்யப்பட்டது. தேசியப் பால்வள வாரியம், தன்னுடைய நம்பகமான தாரா கடுகு எண்ணெயை வாங்க வேண்டாம் என்று நுகர்வோருக்கு அறிவிக்க விளம்பரங்களை வெளியிட வேண்டியிருந்தது. பயந்துபோன நுகர்வோர், “தூய்மையான”, நறுமணமற்ற, நிறமற்ற, சுவையற்ற எண்ணெய்கள் அல்லது கரைப்பான்கள் பிரித்தெடுக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட என்று அறியப்படும் எண்ணெய்களுக்கு மாறினார்கள். எதிர்பாராததும் கணிக்க முடியாததுமான இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு, நாட்டில் சமையல் எண்ணெயின் சமூக-கலாச்சார சமையல், நுகர்வு முறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
சுதேசித் தொழிலை அழிக்கும் சதி?
தொழில்துறையை தொடர்ந்து கவனித்துவருபவர்கள் உள்நாட்டு எண்ணெய் வகைகளைத் திட்டமிட்டு இழிவுபடுத்தி இறக்குமதியை ஊக்குவிப்பதற்கான சதி என்று கருதுகிறார்கள். ஆர்ஜீமோனால் மாசுபடுத்தப்பட்ட கடுகு எண்ணெய் என்பது புதிதல்ல. ஆனால் இதில் கலப்படம் ஒருபோதும் ஒரு விழுக்காட்டிற்கு மேல் இருக்காது. மேற்படி நிகழ்வில் ஆர்கெமோன், டீசல், கழிவு எண்ணெய் ஆகியவை 30 விழுக்காடுவரை கலந்திருந்தன. அதாவது, உயிரைக் கொல்லும் அளவுக்குக் கலப்படம் இருந்தது. கலப்படத்தின் தாக்கம் அப்பட்டமாகவும் விரைவாகவும் நிகழ்ந்தது. எனவே, இந்தத் துயரம் சாதாரணமானதொரு கலப்படத்தின் விளைவாக இருந்திருக்காது என்றே தோன்றுகிறது.
அன்றைய டெல்லி சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறியது போல, ஒழுங்கமைக்கப்பட்ட சதி வேலை இல்லாமல் இது நடந்திருக்கச் சாத்தியமில்லை. எண்ணெய் உற்பத்தியைப் பெருக்குவதற்கான தேசியப் பால்வள வாரியத்தின் முயற்சிகள் தொடக்கத்திலிருந்தே எண்ணெய் உற்பத்தித் துறையின் பெரும்புள்ளிகளிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்துவந்தன. அதன் பாவ்நகர் எண்ணெய் உற்பத்தி ஆலை 1977 முதல் 1982 வரையில் எட்டு முறை மர்மமான தீ விபத்துகளைச் சந்தித்தது. மேலும் மூத்த நிர்வாகிகள் ஏ.ஏ. சோட்டானி, ஜி.எம். ஜாலா ஆகியோர் கடுமையான விபத்துகளைச் சந்தித்தனர். இப்போதும்கூட, தேசியப் பால்வள வாரியம், ஜி.சி.எம்.எம்.எஃப். ஆகியவற்றின் அதிகாரிகள், இந்தக் கலப்பட வழக்கிற்காக நீதிமன்ற விசாரணையில் கலந்துகொள்கிறார்கள். மேற்படிச் சரக்கை விற்பனை செய்த ஆலையின் உரிமையாளர்தான் இந்த வழக்கில் பிராதனமாக குற்றம்சாட்டப்பட்டவர். ஆனால், அவர் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் 2006இல் விடுவிக்கப்பட்டது ஒரு நகைமுரண்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வாஜ்பாய் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தால் நிராகரிக்கப்பட்ட ஒரு மில்லியன் டன் சோயாபீன் விதைகளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தது. இதனால் உள்நாட்டு எண்ணெய்களின் விலைகள் சரிந்தன. விவசாயிகளின் எதிர்ப்புகளை அரசு காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. விவசாயிகள் எண்ணெய் வித்துகள் பயிரிடுவதைக் கைவிட்டதால் எண்ணெய் வித்து சாகுபடி செய்யும் பரப்பளவு வெகுவாக குறையத் தொடங்கியது. கடுகு சாகுபடி செய்யப்பட்ட நிலப்பரப்பு 1997-98ல் 7.04 மில்லியன் ஹெக்டேராக இருந்தது, 2003-04இல் 4.5 மில்லியன் ஹெக்டேராகக் குறைந்தது. 1997-98இல் 2 மில்லியன் டன்னாக இருந்த சமையல் எண்ணெய் இறக்குமதி 1998-99இல் 4.5 மில்லியன் டன்னாகவும் 2002-03ஆம் ஆண்டில் ஐந்து மில்லியன் டன்னாகவும் அதிகரித்தது. கலப்படச் சாவுகள் நிகழ்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் 70 விழுக்காடு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் பிரதானமாக பாமாயிலும், சோயாபீன் எண்ணெயும்தான் இருந்தன. இரண்டுமே நம் நாட்டின் சமையல் வகைகளுக்கும் மக்களுக்கும் பழக்கமானவை அல்ல. இந்தியாவில் மக்கள் நுகரும் எண்ணெயில் 50 விழுக்காடு பாமாயில். இது உலகத்திலேயே மிகவும் ஆரோக்கியமற்ற எண்ணெய்களில் ஒன்று.
இறக்குமதியே சரணம்
ஆக, ஒற்றைக் கொள்கை முடிவும் சந்தேகத்துக்குரியதொரு நாசவேலையும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பாடுபட்டு உருவாக்கிய ஒட்டுமொத்த உள்ளூர் எண்ணெய்க் கூட்டுறவுக் கட்டமைப்பை மட்டுமல்லாமல் பல நூற்றாண்டுகளாக உருவாகிவந்த நாட்டின் பயிர் வளர்ப்பு முறையையும் ஒழித்துக்கட்டியது. உள்நாட்டு சமையல் எண்ணெய் விலைகள் தேக்கமடைந்தன. அனைத்து கூட்டுறவுக் கூட்டமைப்புகளும் சீட்டுக்கட்டுகள் போல கலைந்தன. பெரும்பாலான கூட்டுறவு எண்ணெய் ஆலைகளை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றும் சில செயல்படாமல் வெறிச்சோடியிருக்கின்றன.
தேசியப் பால்வள வாரியமும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிட்டெடும் பிரிந்து, 2003இல் தாராவின் விநியோகத்தை பால்வள வாரியம் எடுத்துக்கொண்டது. பத்தாண்டுகளில் (1986-96) எண்ணெய் வித்து உற்பத்தியை 108 லட்சம் டன்னிலிருந்து 221 லட்சம் டன்னாக இரட்டிப்பாக்கிய நாடு, திடீர் சரிவைச் சந்தித்தது. நிலம், வளங்கள், ஆர்வமுள்ள விவசாயிகள், ஆயத்த நிலையில் உள்ள சந்தை, தன்னிறைவை அடைவதற்கான திறன் பெற்றவர்கள் ஆகிய அனைத்தும் இருந்தும் இன்று அதே நாடு காய்கறி எண்ணெயில் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராக மாறியுள்ளது.
இந்த வெற்றிடம் ஆர்ச்சர் டேனியல் மிட்லாண்ட்ஸ் (ஏ.டி.எம்.), புங்கே, கார்கில், லூயிஸ் ட்ரேஃபஸ் ஆகிய உலகின் பெரிய நான்கு வேளாண் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களும் பிற அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவுக்குள் நுழைய வழிவகுத்தது. கார்கில் 2004இல் பராக் ஃபுட்ஸ் நிறுவனத்துடன் கூட்டுத் தொழிலில் இறங்கியது. 2003ஆம் ஆண்டில் யுனிலீவர் நிறுவனத்திடமிருந்து டால்டா பிராண்டை புங்கே வாங்கியது. ஐ.டி.சி. அக்ரோடெக் நிறுவனத்திடம் இருந்து பெரும்பான்மை பங்குகளையும், 2000ஆம் ஆண்டில் ‘ரத்’ பிராண்டையும் கொனாக்ரா என்னும் பன்னாட்டு நிறுவனம் வாங்கியது.
அதானி பார்ச்சூன் ஆயிலை அறிமுகப்படுத்த, 1999ஆம் ஆண்டில் வில்மருடன் 50-50 கூட்டு வியாபாரத்தில் ஈடுபட்டது. இதன் விளைவாக, வில்மர் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த ஆர்ச்சர் டேனியல் மிட்லாண்ட்ஸ் (ஏடிஎம்) 1994 முதல் அதில் பங்குதாரராக உள்ளார் (தற்போதைய பங்கு 24.9 விழுக்காடு). இந்தோனேசியாவின் வெப்ப மண்டலக் காடுகளை அழித்ததற்காக கிரீன்ஸ்பீஸ், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் எர்த் போன்ற அமைப்புகள் வில்மர் இண்டர்நேஷனலைக் கடுமையாக விமர்சிக்கின்றன. வில்மர் இண்டர்நேஷனல், வயல்களில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதாக ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் குற்றம்சாட்டியுள்ளது.
1990களில் ஏடிஎம் நிறுவனம் அமெரிக்காவில் பெருநிறுவனங்களின் ஆதரவுப் பிரச்சாரத்தின் வசீகர முகமாக இருந்தது. அதன் அப்போதைய சி.இ.ஓ. டுவைன் ஆண்ட்ரியாஸ் நிக்சன், ரொனால்ட் ரீகன், பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ், பாட் டோல் ஆகியோரின் அரசியல் பிரச்சாரத்திற்கு நன்கொடை வழங்கியவர். நிக்சன் மீண்டும் தேர்வுசெய்யப்படுவதற்கான பிரச்சாரத்திற்கு அவர் அளித்த நன்கொடைதான் வாட்டர்கேட் ஊழலில் சிக்கிய பெர்னார்ட் பார்க்கரிடம் கண்டுபிடிக்கப்பட்ட 25000 டாலர் என்று சொல்லப்படுகிறது. ஹோவர்ட் பஃபெட் (வாரன் பஃபெட்டின் மகன்), கனடாவின் முன்னாள் பிரதமர் பிரயன் முல்ரோனி ஆகியோர் ஏடிஎம் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றவர்கள். இருந்தும், 1999இல் சர்வதேச லைசின் சந்தையில் விலையை நிர்ணயித்ததற்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் ஏடிஎம்முக்கு விதிக்கப்பட்டது. டுவைன் ஆண்ட்ரியாஸின் மகன் மைக்கேல் ஆண்ட்ரியாஸ் 24 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மூத்த அரசியல்வாதிகளை ஏடிஎம் நிறுவனத்தின் ஜெட் விமானங்களில் ஏற்றிச்செல்வதன் மூலம் அவர்களைத் தமக்கு ஆதரவாகத் திருப்பும் கலையில் ஏடிஎம் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தது. 1988இல் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது பாப் டோல் ஏடிஎம்மின் ஜெட் விமானங்களில் 29 முறை பயணம் செய்திருக்கிறார். 2005இல் பராக் ஒபாமா இரண்டு முறை பயணம் செய்திருக்கிறார்.
இன்று இந்தியாவில் இறக்குமதியாகும் சமையல் எண்ணெயின் மூன்றில் ஒரு பங்கு அதானி வில்மரிடமிருந்து வருகிறது.
உடலுக்குக் கேடு
வர்த்தகச் சமநிலையையும் தன்னிறைவு என்னும் கோணத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால் வளரும் நாடுகளில் தனிநபர் பாமாயில் நுகர்வு சராசரியாக அதிகரிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் இரத்த ஓட்டத் தடையால் விளையும் இதய நோயால் ஏற்படும் மரண விகிதம் ஒரு லட்சம் மக்களில் 68ஆக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் தனிநபர் பாமாயில் நுகர்வு ஆண்டுக்கு சராசரியாக 7.2 லிட்டர். இதற்குப் பதில் உள்நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெயைப் பயன்படுத்தினால் உயிர்கள் காப்பாற்றப்படுவதுடன் மருத்துவச் செலவும் குறையும். அதுபோலவே சோயாபீன் எண்ணெயின் பயன்பாடும் உடல் நலத்தைக் கணிசமாகப் பாதிப்பதாகச் சொல்லப்படுகிறது.
எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்கும்போது இந்தியா சமையல் எண்ணெயை மட்டும் உற்பத்தி செய்வதில்லை. பிண்ணாக்கு, எண்ணெய் முழுவதுமாக நீக்கப்பட்ட பிண்ணாக்கு (de-oiled cake) ஆகியவற்றையும் உற்பத்தி செய்கிறது. இவை கால்நடை, கோழி, சேவல் ஆகியவற்றுக்குத் தீவனமாகி, பால் உற்பத்திக்கும் கோழிப்பண்ணை தொழிலுக்கும் மூலப்பொருள்களாகப் பயன்படுகின்றன. எண்ணெய் இறக்குமதியை நாம் அதிகரிக்கும்போது கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் தேவையான புரதம் கிடைக்கவிடாமல் செய்துவிடுகிறோம். இதனால் சோளம், சோயா ஆகியவற்றை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. இவற்றின் விளைவாக நம்முடைய வேளாண்மை இதர நாடுகளுக்கு இடம்பெயர்கிறது. கிராமப் பொருளாதாராமும் விவசாயியின் வருமானமும் அடிவாங்குகின்றது. எனவே எண்ணெய் இறக்குமதி, எண்ணெய் வித்துகள் துறையைத் தாண்டி, மற்ற வேளாண் துறைகளையும் பாதிக்கிறது.
அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் சர்வதேச உறவுகள் துறையின் இணையதளம் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் வேளாண் கொள்கை இவ்வாறு கூறுகிறது: “வேளாண் கொள்கைக்கான அலுவலகம் அமெரிக்க வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான வெளிநாட்டுச் சந்தைகளைத் திறந்துவிடுவது, வெளிநாடுகளில் வெளிப்படையான, கணிக்கக்கூடிய, அறிவியல் அடிப்படை கொண்ட ஒழுங்காற்று அமைப்புகளை நிறுவுவது, உலகம் முழுவதிலும் தேவையற்ற வர்த்தகத் தடைகளைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் அமெரிக்க விவசாயிகள், பண்ணை உரிமையாளர்களின் வளத்தைப் பெருக்குகிறது.”
நம்முடைய சந்தை “திறந்துவிடப்பட்டுள்ளதா” இல்லையா என்பது குறித்து நாம் விவாதித்துக்கொண்டு, எண்ணெய் வித்துகள் தொழில்நுட்பத் திட்டம் போன்ற செயல்திட்டங்களை நிறுத்திவிட்டு, நகர்ப்புற நுகர்வோர் நலனை முன்னிறுத்தி, சமையல் எண்ணெய் இறக்குமதியை ஊக்குவித்து, ஊரக வேளாண் பொருளாதாரத்தைச் சிதைக்கிறோம். இதனால் கிராமங்களில் வேலைவாய்ப்பு குறைந்து கிராம மக்கள் கூலி வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வரும் அவலம் அதிகமாகிறது.
மீள வழி உண்டா?
இந்த வரலாற்றின் பின்னணியில் வட கிழக்கில் பாமாயில் உற்பத்தி தொடர்பாக வேளாண் அறிவியலாளர்களும் பொருளியலாளர்களும் பிரதமருக்கு அளித்த ஆலோசனையை மதிப்பீடு செய்வோம். 2020, ஜூலை 23 அன்று மணிப்பூர் நீர் விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும்போது பிரதமர் இத்திட்டத்தைப் பகிர்ந்துகொண்டார்.
நாம் நமது மரபார்ந்த எண்ணெய் வித்துகளைப் பயிரிடுவதை ஊக்குவித்து, அதன் நுகர்வை அதிகரித்தாலே, கடந்த இரண்டு தசாப்தங்களில் செய்த தவறைச் சரிசெய்துவிட முடியும். தேவையெல்லாம், பெரும் செயலூக்கமும், சரியான திட்ட்ஙகளும்தான். இவை இருந்தால், எண்ணெய் வித்துகளில், 1994இல் இருந்த தன்னிறைவை நம்மால் எய்திவிட முடியும்.
2020, ஜனவரி 8 அன்று இந்திய வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குநரகம் பனை எண்ணெயை “சுதந்திர” வர்த்தகப் பட்டியலிலிருந்து “கட்டுப்படுத்தப்பட்ட” பட்டியலுக்கு மாற்றியது. குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து தரும் பிரிவு 370ஐ விலக்கிக்கொண்டதையும் மலேசியப் பிரதமர் விமர்சித்ததற்கான எதிர்வினையாகவே அது தோன்றியது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பாமாயிலில் 40 விழுக்காடு மலேசியாவிலிருந்து வருகிறது.
அரசின் இந்த நடவடிக்கை பாமாயில் விலையும் அதன் விளைவாக இதர சமையல் எண்ணெய் வகைகளின் விலையும் உயர வழிவகுத்துள்ளது. இதனால் இவற்றை உற்பத்தி செய்வதில் கூடுதல் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதல் ஆதரவு விலை வழங்கப்பட்டதும் இதற்கு உதவிகரமாக அமைந்தது. 2020, செப்டம்பர் 4 அன்று வெளியான வேளாண் அமைச்சகத்தின் பயிர், பருவநிலை கண்காணிப்புக் குழுவின் (CWWG) அறிக்கை அந்த ஆண்டின் சம்பா பருவத்தில் ஒட்டுமொத்தப் பயிர்களின் வளர்ச்சி 6 விழுக்காடு என்றும் எண்ணெய் வித்துப் பயிர்களின் வளர்ச்சி 12 விழுக்காடு என்றும் தெரிவித்துள்ளது. எண்ணெய் வித்துகள் துறை, மீண்டெழுந்து தன்னிறைவு காணும் திறன் படைத்தது. ஆனால், உண்மையிலேயே நாம் அதை விரும்புகிறோமா என்பதுதான் கேள்வி.
*
பி.எம்.வியாஸ், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெடின் முன்னாள் நிர்வாக இயக்குநர். தாரா எண்ணெய் உற்பத்தியைத் தொடங்குவதில் முக்கியப் பங்கு வகித்தவர். மனு கௌஷிக் நிர்வாகவியல் துறையைச் சேர்ந்தவர். GCMMF லிமிடெடுடன் தொடர்புகொண்டவர்.
The Wire மின்னிதழில் 2020 நவம்பர் 4 ஆம் தேதி வெளியான, “How India was stripped of Its Atmanirbharta in the edible oil industry?” என்னும் கட்டுரையின் தமிழாக்கம்.
1 comment
In 2019, India imported around 15 million tons of edible oils worth approximately Rs 7,300 crore, which accounted for 40 per cent of the agricultural imports bill and three per cent of the overall import bill of the
Comments are closed.