நத்திங்!

by எம்.கே.மணி
0 comment

தோட்டத்திற்குச் சென்று சேர்ந்ததும் பாக்கு இறக்கிக் கொடுக்கிறவர்களில் அவனைப் பார்த்துவிட்டேன். ஐயோ. “ரவி!” என்று வாய் முனகிவிட்டது. கணவர் அதைக் கவனிக்கவில்லை. மேலே வானை முட்டிவிடுவது போல முண்டிய மரத்தின் உச்சியில் இருந்த ஒருவன் மரத்தை வளையச் செய்து அடுத்த மரத்தைப் பற்றுவதை எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அண்ணாந்திருந்த ரவியை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். சந்தேகமில்லை, அவனேதான். எல்லோரும் விலகி நின்றார்கள். மேலே இருக்கிறவன் துண்டித்த குலைகள் வந்து விழுந்துகொண்டிருந்தன. அதை முடித்து மேலே இருக்கிறவன் அடுத்த கிளைக்குத் தாவினதும், கீழே உதவியாட்களாக இருந்த பெண்கள் அவற்றைப் பொறுக்கி கூடைகளில் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்கிற வேலையைத்தான் ரவி செய்துகொண்டிருந்தான். வயதை மீறின முதுமை. நொந்திருக்கிறான். இயல்பாகச் செய்கிற வேலைக்கு நடுவே அவன் ஓரிரு முறை என்னைப் பார்த்ததையும் நான் பார்த்துக்கொண்டுதானிருந்தேன். அவனுக்கு என்னைத் தெரியவில்லை. அது சாத்தியமில்லை. எவ்வளவு வருடங்கள்! மேலும் எதிர்பார்த்திருக்க முடியாத இடங்களில் வைத்து ஒரு ஆளைப் பார்க்க நேர்ந்தால் மூளை விழித்துக்கொள்ளுவது கஷ்டம். அதையெல்லாம் விட்டுவிடலாம், நான் இன்னார் என்று கூறினாலுமே அவன் தன்னுடைய நினைவுகளில் இருந்து துழாவி, தலையைச் சொறிந்து அசடு வழிந்தால்?

செல் அடித்தது.

அங்கிருந்து நகர்ந்து சென்றேன்.

என்னுடைய மகளுக்குத் தோழி. சென்னையில் இருந்து விடுமுறைக்கு வந்து இப்போது என்னோடு இருக்கிற அவளிடம் பேசியிருப்பாள். அப்படியே எனக்கும் ஒரு விசாரிப்பு. பெயர் சௌமி. கவிதைத் தொகுப்பைப் படித்து முடித்தேன் என்றாள். எனக்குள் ஒரு இரகசியப் புல்லரிப்பு உண்டாயிற்று. ஆனால் வெகு சாதாரணமாக ‘ஓஹோ’ என்றேன். பெரிதான இலக்கியப் படிப்பு ஒன்றுமில்லாமல் தெரிந்தவர்கள் எழுதினதைப் படிப்பவர்களுக்கு ஆர்வக்கோளாறு அதிகமிருக்கும், எதையாவது கருத்து சொல்ல விரும்புவார்கள், அவள், ‘உங்களுடைய கவிதைகள் ஒவ்வொன்றும் இந்தப் பிரபஞ்சத்துடன் மனம் கோர்த்துக்கொள்ள முடியாத மனிதனின் தனிமையைப் பேசுகின்றன’ என்பதாக ஒன்றைச் சொன்னாள். நான் மறுக்கப் போகவில்லை. ‘உங்களுடைய ஆங்கிலம்தான் சிரமப்படுத்துகிறது, எனக்கு அதில் அவ்வளவு பாண்டித்யமில்லை’ என்று சற்றேறக்குறைய ஒரு சிணுங்கல். நான் ஆறுதல் சொன்னேன். இதில் எல்லாம் என்ன இருக்கிறது என்பதை சகஜம் செய்தேன்.

கணவர் வந்து வங்கிக்குப் போக வேண்டும் என்பதை நினைவுறுத்துகிறார்.

எனக்கு கொஞ்ச நேரம் இங்கேயே இருக்க வேண்டும் போலத் தோன்றியது. நீங்கள் போய்விட்டு வந்துவிடுங்களேன் என்பதைச் சொல்லிவிட வேண்டும் போலவும்.

தோட்டத்தின் முடிவுப் பகுதிக்கு பாக்கு மரங்களின் நடுவே நடந்தேன். அவைகள் முடியும் இடத்தில் செம்மண் தரை மாறும். வெண்மணல் கொட்டியிருப்பார்கள். கொஞ்சம் குட்டித் தென்னைகள். வேலிக்குப் பக்கம் நெருங்கி நின்றால் கண்கள் முழுவதுமாக நிறைகிற வயல்வெளிகள். பசுமையும் இருளும் கூடிய தூரத்துத் தென்னந்தோப்புகள். வரப்புகளில் நடக்கிற சிலரை யார் என்று பார்த்துக்கொண்டிருந்த போது மேற்கில் இருந்து கொக்குகள் கூட்டம் எழுந்தது. சூரியன் மோதுவதில் அங்கே இருந்த ஊர் கண்மாய் மின்னிட்டது. சொல்லப் போனால் இப்போது என்ன? வயதின் பிரச்சினையாக இருக்கலாம். சிறியதாக நெஞ்சு வலிப்பது போல். காலம் கனிவுகூர்ந்தால் இதோ எவ்வளவு அருகில் இந்தச் சாவின் சிறகு? நான் எழுதிய வரி. எப்போதோ அடங்கி சுருண்டுகொண்ட  ஒரு காலம் புரண்டு அலை எழும்புகிற நான்சென்ஸை தவிர்க்க விரும்பி மறுபடியும் ஒரு வட்டத்தில் தரையிறங்குகிற கொக்குகளைப் பார்த்துவிட்டுத் திரும்பினேன். வங்கிக்குக் கிளம்பி அலுவலை முடிக்கலாம். அதுதான் சரி. பாக்குகள் குவிகிற இடத்தில் ஒரு மரத்தின் மீது குலைகளை அடித்து பாக்குகளைச் சிதற வைத்துக்கொண்டிருந்தான் ரவி. பிலோ நின்று ஆர்வமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கையில் ஒரு பாக்குக் குலை இருந்தது. என்னைப் பார்த்ததும் தனது வியப்பு மொத்தமும் எடுத்து, “அம்மம்மா, அடைக்கா!“ என்று வீறிட்டாள். கான்வெண்ட் உச்சரிப்பில் மலையாளம். படிப்பது மூன்றாம் வகுப்புதான் என்றாலும், அதையெல்லாம் மீறின அறிவுக்கூர்மை. சற்று தள்ளியிருந்த எனது மகள் புன்னகைக்கிறாள். அவளை அம்பிகா என்றும் மரியம் என்றும் மாறி மாறிச் சொல்லுவேன். அவளது புருஷன் டேவிட் அவர்கள் சமைத்துக்கொண்டு வந்திருந்த சாப்பாட்டைக் காட்டினார். பணியாளர்களுக்கும் சேர்த்தே கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

நான் தாமதிக்க விரும்பவில்லை.

கணவரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்.

கிராமத்தின் தெருக்கள் முடிந்து நெடுஞ்சாலை வந்து காரின் ஓட்டம் சீரானதும் வண்டியைச் சற்று விரைவாகவே ஓட்டினேன். ஒன்று புரிந்துகொண்டிருந்தது. மனதை ஒன்று சேரத் திரளவிடாமல் அவைகளைத் துண்டுகளாகச் சிதறடித்து வேறு ஒரு நார்மலை நிரூபிக்க முயன்றுகொண்டிருக்கிறேன். உண்மையில் மனம் சப்தம் எழுப்பிக்கொண்டிருக்கிறது. அதை நேரிட்டு முடிக்காவிட்டால் அது நிசப்திக்கப் போவதில்லை. யாருக்கு எப்படியோ, கடந்த காலம் என்பது எனக்கு ஒரு வலி. சென்னையில் மலிவான ஒரு ஆரம்பப் பள்ளியில், நான் என் பேத்தி பிலோவைப் போல, மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது எனக்கு முன்னால் சர்வ நேரமும் விஸ்வரூபம் எடுத்து நின்றிருந்த ஒரே சத்தியம் பசி. அதைத் தவிர வேறு மனவோட்டமே கிடையாது. கேள்விப்பட்ட உணவுகளை எல்லாம் விதவிதமாக உண்ணுவது போல வகுப்பில் கற்பனை செய்தவாறு உள்ளில் மிதந்திருப்பேன். பொதுவாக எப்போதும் என்னை அதட்டி எழுப்புவார்கள். அவர்கள் நினைப்பது போல நான் தூங்குமூஞ்சியல்ல. எல்லோரும் கிண்டல் செய்கிற ஒரு ஜென்மமாக இருப்பதில் தாழ்வு மனப்பான்மைகள் கொழித்தன. அதுதான், வீட்டில் இருந்து பள்ளிக்குக் கிளம்புவதற்கு முன் பார்க்கக்கூடிய துண்டுக் கண்ணாடியில் வெளிறிப் போன எனது முகம் அவ்வளவு அசிங்கமாக இருக்கும். கண்கள் இடுங்கியவை. குடலில் இருந்து துவங்கி வாய் வரைக்கும் இருந்த வாய்ப்புண்கள் எல்லை மீறி வெளியேறி வந்ததால் யாருமே என்னை ‘மைனா வாய்’ என்றுதான் அழைப்பார்கள். வாய் நாற்றத்தை வைத்து ‘கப்பு’ என்கிற மற்றொரு பெயரும் உண்டு. ரவியுமே என்னை அப்படி அழைத்திருக்கிறான். எனக்கு யாரையுமே பிடிக்காது என்பதால் அவனையும் பிடிக்காது. என்றாலும்கூட, அவனுக்கும் எனக்கும் ஒரு பொருத்தமிருந்தது, நாங்கள் மலையாளிகள். இருவருக்கும் மலையாளம் பேசத் தெரியாது.

விஷயத்துக்கு வருகிறேன். வாரத்தில் ஒரு நாள் விளையாட்டு என்பதற்கு ஒரு பீரியட் உண்டு. பள்ளியில் விளையாட்டு மைதானம் என்கிற பேரில் கொஞ்சம் இடமும் கிடக்கும். அதிலிருந்த ஒரு சறுக்குத் தகரத்தில் என் முறை வந்து நான் வழுக்கி இறங்கிய போது, கால்கள் விரிந்து அரைப்பாவாடை சதி செய்ததில் நான் உள்ளாடை அணியவில்லை என்பதை ஒரு பெண் பார்த்துவிட்டாள். “சுந்தரி ஜட்டி போடல டீச்சர்!“ என்று கூச்சலிட்டாள். அந்த டீச்சர் இங்கிதம் தெரியாத ஒரு கழுதை என்று வைத்துக்கொள்ளலாம். அவள் என்னை அதட்டி, அடிக்க வந்து, கட்டைக் குரலில் உபதேசம் செய்யத் துவங்கி கூட்டம் கூட்டினாள். வேறு ஒன்றிரண்டு ஆசிரியைகளுமாக கூடி என்னுடைய வெட்கம் மானத்தை அலசி ஆராய்ந்ததை மொத்த வகுப்புமே பார்த்துக்கொண்டிருந்தது. அவர்கள் ஒருநாள் தவறாமல் தாங்கள் கடைபிடிக்கிற குளிக்கிற பழக்கத்தைப் பெருமை பேசினார்கள். ‘குளிக்கவில்லை என்றால் எனக்குப் பசியேகூட வராது சாந்தி மிஸ்!’ பலமுனைத் தாக்குதல்களுக்கு அப்புறம் எனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒருநாளும், ஒருநாளும் சுந்தரி உள்ளாடை அணியாமல் வகுப்புக்கு வரக்கூடாது. எல்லோருமே அவளைக் கண்காணித்துக்கொண்டு வாருங்கள்!

அப்பாவிடமோ, அம்மாவிடமோ நான்கு ஜட்டி வாங்கித்தரச் சொன்னால் அதை வாங்கிக் கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் என்றா இருந்தது நிலைமை? நானே முடிந்த வரை இருக்கிற இரண்டைத் துவைத்து, கிழிந்திருந்தாலும் பெயருக்கு மாட்டிக்கொண்டு கலவரம் உண்டாகாமல் பாதுகாத்துக்கொண்டு வந்தேன். ஆனால் ஒருநாள் தவறாமல் யாரேனும் ஒரு பெண்ணோ பையனோ எனது பாவாடையத் தூக்கிப் பார்ப்பது, பெரும் பீதியை உருவாக்கியது. பள்ளியில் இருக்கிற நேரம் போக தூங்கும்போதுகூட நான் எனது பாவாடையைச் சுருட்டிக்கொண்டு தொடைகளை இறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். சொல்லப் போனால் அந்த உண்மையின் சுருக்கம், நான் எனது உறுப்பை வெறுத்தேன். சிறுநீர் கழிக்கும்போது அது மிகவும் கேவலமாக இருப்பதாகப் பட்டது.

உள்ளாடைகள் நசிந்து வந்து, அதைக் கவனித்த அம்மா அதைத் தூக்கி குப்பையில் போட்டாள். நான் பதறினேன். சனிக்கிழமை அப்பா கூலி கிடைத்த உடன் புதிதாக மூன்று ஜட்டிகள் வாங்கித் தருவதாகச் சொல்லி எனது கண்களைத் துடைத்துவிட்டாள். அவளும் தன்னுடைய கண்களைத் துடைத்துக்கொண்டாள். அது போகட்டும், நான் பயந்தது போலவே நடந்தது. ஒரு பையன், தான் தூக்கிவிட்ட பாவாடையை இறக்கவே விடாமல் இறுக்கிக்கொண்டு அனைவரையும் அழைத்தான். நான் எப்போதும் உடனடியாகக் கூடிய அந்தக் கூட்டத்தை மனதால் எண்ணியவாறு இருப்பதுண்டு. குறைந்தது முப்பது பேர். அநேகமாக சில முகங்கள் அதை எப்படிப் பார்த்தன என்பது இப்போதும்கூட என் நினைவிலுண்டு. வாழ்வில் எவ்வளவோ பார்த்து, எவ்வளவோ கற்று இதையெல்லாம் உதறித் தள்ளின பிறகு இன்றுமே, என்னால் ஒன்றை நினைக்காமலிருக்க முடியாது. அவர்கள் நான் போட்டிராத உள்ளாடையைப் பார்க்கவில்லை. எனது யோனியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த யோனி என்கிற சொல்லை எனது கவிதையில் ஆங்கிலத்தில் எழுதும் போதுகூட ஒரு கணம் திகைக்கிறேன். அதன் மீது ஒரு காற்று படுவது போலத் தெரியும். உலகமெங்கிலும் மனிதர்கள் நீதியைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த வறுமை எப்பேர்ப்பட்ட அவமானம்?

இருக்கட்டும்.

கதை நிற்கிறது அல்லவா?

ரவி செய்தது ஒன்றுதான்.

ஆனால் வலுவானது.

ஓடிவந்து பாவாடை தூக்கியவனை சரியான அடி அடித்தான். அவன் விலகி ஓடியதும் மிகவும் கனிவான ஒரு பார்வையுடன் என்னிடம் ‘போ, போ’ என்றான். ஒரு ஹீரோ? அந்த வயதில் அதெல்லாமில்லை. எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் ஒரு அவமானம் நேர்ந்தது என்றால் அதை மறக்க அதைக் காட்டிலும் பெரிய அவமானங்கள் நேரும். வெகு காலமாக பணம் கட்டவில்லை என்பதற்காக பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டு அது நேர்ந்தது. அப்பா வியாபாரத்தில் தோற்றவர். குடும்பத்தைக் காப்பாற்ற அம்மா வேலைக்குப் போக முற்பட்டபோது மூர்க்கத்தனமாக அதை மறுத்தவர். பிச்சை எடுக்கவும் தோதில்லாத நிலையில் குடும்பத்துடன் சாவதற்கு அன்று விஷம் வாங்கி வந்தார். தரையில் உருண்டு புரண்டுமே அவர் எவ்வளவு கதறியும் அம்மா அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆவேசமாக அவர் அதைத் தனியாக உண்டபோது நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக்கொண்டு, சிறுகச் சிறுக அவர் சாவதைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்பா என்கிற கேவல் எழும்போதெல்லாம் அம்மா எனது வாயைப் பொத்தினாள். சடங்குகள் முடிந்தன. அம்மாவுடன் ஏற்கனவே தொடர்பில் இருந்த பிரம்மச்சாரி நாயரின் அழைப்பை ஏற்று நாங்கள் கேரளாவிற்கு வண்டியேறினோம். புதிய அப்பா தனது தரவாட்டு வீட்டைத் திறந்தார். அம்மா அதை ஒழுங்குபடுத்தினாள். பிரதான ஜங்ஷன் பக்கமாக அடக்கா அங்காடியில் இருவருமாக கடை போட்டு அமர்ந்த பிறகு எங்களால் செரித்துக்கொள்ள முடியாத அவசரத்துடன் புத்திளமையோடு கூடிய வாழ்க்கையொன்று எங்களை வந்துசேர்ந்து பொருந்திக்கொண்டது. 

சம்பவங்கள் எல்லாம் முடிந்து சம்பிரதாயங்களில் போகிற வாழ்க்கையை எப்போதுமே நான் வேடிக்கைப் பார்த்ததாக ஒரு எண்ணம்.

ரவி இதில் யார்? யாருமேயில்லை. அவனை எப்போதுமே பார்த்தது கிடையாது. உள்ளாடைச் சம்பவம் நினைவில் வரும்போது மனதை கூட்டுக்குள் இழுத்துக்கொள்வேன். அவனை நினைக்கப் பிடிக்கவில்லை என்பது அந்தக் காலத்தில் நாங்கள் வாழ்ந்த மொத்த வாழ்வும் பிடிக்கவில்லை என்பதுதான். நான் மூன்று ஆண்களையாவது காதலித்திருக்கிறேன். கண்ணீர் கசிய பைங்கிளிக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். நல்ல படிப்பு முடிந்து பொறுப்பான ஒரு வேலையில் அமர்ந்து, கல்யாணம் செய்து மகளைப் பெற்று நடுவே கொஞ்சம் கவிதை எழுதுகிற அவஸ்தையையும் எடுத்துக்கொண்டு விட்டேன். ஒருநாள் அம்மா போனாள். ஒரே நேரத்தில் ஒரே மாதிரி சாப்பிட்டு, அதே நேரத்தில் புறப்பட்டு அதே நேரத்தில் திரும்பி வந்து, அந்த மாதிரியே வெற்றிலை முறுக்கி, குளித்து வழிபட்டு இருந்துகொண்டிருந்த அப்பா, அடைசல்கள் தாங்காமல் நான் வீட்டைப் புதிதாக இடித்துக் கட்டியதும் ஒருநாள் ‘நம்ம வீடு எங்கே?’ என்று கேட்டார். ஒருநாள் நடுராத்திரி எழுந்து சென்று கிணற்றில் பாய்ந்து முடிந்தார். நான் சடலத்தின் முன்பு உட்கார்ந்து தன்னிச்சையாக அழுதுகொண்டிருந்த போது ஒரு உள்ளுணர்வில் மனம் திடுக்கிட்டது. நான் எனது பிறப்புக்குக் காரணமாக இருந்தவரை எண்ணிக்கொண்டு வந்த உருக்கம் அது. அதற்குத்தான் கதறி அழுது கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறேன். பொதுவாகவே ஆண்கள் தங்களுடைய பீடங்களைத் துறக்க முடியாமல் புழுங்குகிறார்கள். அப்படித் தொடர்வதில் ஒருவிதமான பேடிகளாகவும் மாறிக்கொண்டு வருகிறார்களோ?

இந்த இடத்தில்தான் கதையின் வேகத்தை மாற்ற வேண்டி வருகிறது. 

போன் வந்தது.

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினேன்.

அவன், ஆமாம் ரவிதான், எனது பேத்தி பியோவிடம் பாக்குத் தோட்டத்தில் உணவு இடைவேளையில் எதோ பாலியல் சேட்டை செய்ய முயலும்போது அவள் ஆட்களை கூப்பிட்டு விட்டிருக்கிறாள்.

நான் போனபோது போலீசார் அடித்த அடியில் உணர்வில்லாமல் கிடந்தான். கக்கூஸ் அருகே போட்டு வைத்திருந்தார்கள்.

எனது மருமகன் அவனை இன்னும் நொறுக்குவதற்குப் பணம் கொடுத்துவிட்டு வந்ததைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

போலீஸ் இன்ஸ்பெகடர் என்னை அழைக்கும் வரையில் எவ்வாறெல்லாம் பிதுங்கினேன் என்பதைச் சொல்லவே முடியாது. என்ன கணக்கில் வரும் இந்த வாழ்க்கை? “நான் உங்களுடைய கவிதைகளைப் படித்திருக்கிறேன்” என்றார். ஊர் வழக்கம் போல, ‘நொந்து போன ஒரு மனதின் தழும்புகள் அதில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன’ என்றார். ‘அப்படியா?’ என்றேன். அந்த ரவியை விட்டுவிடலாம் என்றார்.

“ஓ. வய்?“

“அவனுக்கு யாரும் இல்ல. கொஞ்ச நாள் முன்னதான் இங்க வந்துருக்கான். எப்பவும் கஞ்சா. ஆள் அப்நார்மலும்கூட.“

“அப்நார்மலா இருக்கறவன் கொழந்தையோட பிராக்கை தூக்கிப் பாக்கறதா?“

“அவன் அத ஒப்புகிட்டான். அத மட்டும்தான் செஞ்சேன்னு சொல்றான். ஒரு மோட்டிவும் இல்லன்னு அவன் சொல்றது உண்மையோன்னு தோணுது. ஏதோ ஒன்னு மனசுல பட்டுது. அப்படி செஞ்சுட்டேன்னு சொல்றான்.“

“நீங்க ஒரு போலீசா பேச மாட்டேங்கறீங்களே சார்?“

“அந்த ஒரு கொறை என்கிட்ட இருக்கு. ஆனா செல நேரம் அது மனுஷனா இருக்க உதவும். மேடம் அவன் காலம் முழுக்க அடிபட்டவன். அவன் மூளைல காமம் இல்லை. ஒடம்பிலயும் இருக்காது. ஒரு வெத்து ஜென்மம் அது. ஒரு கேசைப் போட்டு நீதியைக் காப்பாத்தற அளவுக்கு அவன் தகுதியானவன் கிடையாது!“

நான் ஒருவிதமான மலைப்பில் இருக்கிறேன் போலிருந்தது.

“நீங்க ஒரு கவிஞர். சில நேரத்துல யாரையோ எங்கயோ நம்மால மன்னிக்க முடியும். காசு குடுத்தா சென்னைக்கு போயிடறேன்னு சொல்றான். அனுப்பிடலாமா?“

நான் சம்மதிக்கவில்லை.

ஒரு கட்டத்துக்கு அப்பால் அப்படி இருக்கவும் முடியவில்லை.

இறுதியாக, சரியென்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். வீட்டில் பல பேச்சுகள் நிகழ்ந்தன. மருமகன் ஒரு பிளேட்டை வீசி அடித்தார். மகள் வந்து பல சந்தேகங்கள் கேட்டாள். முடிந்த வரையில் நான் எந்த அபிப்ராயங்களுக்கும் செல்லவில்லை. பிலோ இரவு என்னிடம் தூங்குவதற்காக வந்தபோது அவளை வருடிக் கொடுத்து தாலாட்டு பாடினேன். மற்றபடி, மலைப்பு அகலாமல் எதிலோ உழன்றவாறு இருந்தேன். இதற்கு மேல் எதுவுமில்லை. எனக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் இந்தக் கதையை முடிக்கிற நேரம் வந்துவிட்டது. அதனால் நடந்ததை முழுமையாகச் சொல்ல வேண்டும். நான் ரவி மீதிருந்த கேசை வாபஸ் வாங்கத் தயங்கிக்கொண்டிருக்கும்போது அடிபட்டிருந்த அவனுக்குச் சிகிச்சையளித்து மருத்துவமனையில் இருந்து திரும்பக் கொண்டுவந்தார்கள். அவன் தனது இடுப்பின் கீழே உறுப்புப் பகுதியை வலியுடன் பற்றிக்கொண்டு நேராகச் சென்று லாக்கப்பில் படுத்துக்கொண்டான். நான் அங்கே பார்த்துக்கொண்டிருக்க அங்கிருந்து ஒரு முனகலுடன் எட்டிப்பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டான்.

“உங்க பேரு சுந்தரி தானே?”

இந்த சிறுகதைக்கு நான் என்ன பெயர் வைக்கலாம்?