தூக்கம் வரவில்லை. இன்னவென்று இனம் காணவியலாத ஏதோ ஒன்று உள்ளே கிடந்து அழுத்தியது. மெதுநடை சென்று மனத்துள் ஒவ்வொரு அடுக்காக எடுத்துப் பிரித்துப் பார்த்தால் ஒருவேளை விடை கிடைக்கக்கூடும். அப்படி உள்ளே உற்றறிந்து அதிலிருந்து வெளியேறுவதற்கான சூழல் அங்கு வாய்த்திருந்தது. கூடாரத்திலிருந்து வெளியே வந்தேன். உள்ளே, மீராவும் வினுவும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஜனவரியில், அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் குளிரில் உறைந்து கொண்டிருக்கும்போது இங்கே ஆஸ்திரேலியாவில் கோடைக்காலம். ஆனாலும் நள்ளிரவு ஆதலால் நல்ல குளிர் இருந்தது. உள்ளே மாட்டியிருந்த ஸ்வெட்சர்ட்டை எடுத்துப் போட்டுக்கொண்டேன். கூடாரத்தை ஒட்டி புல்வெளியில் போடப்பட்டிருந்த துணியினால் செய்யப்பட்ட சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன். புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து சிட்னி நகரம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. தூரத்து ஒளி வெள்ளத்துக்கு இடையே ஒருவித அமைதியின்மை இரைகொண்ட பாம்பைப் போல மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டிக் கிடைத்த பத்து நாட்கள் விடுமுறையில் சிட்னியிலிருந்து ஃபெர்ரியில் வந்தால் அரைமணி நேரத் தொலைவில் இருக்கும் கொக்கட்டூ தீவுக்கு நண்பர் குடும்பங்களுடன் சேர்ந்து காம்பிங் வந்திருக்கிறோம். இதைத் தீவு என்று சொல்வது அத்தனை பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை. பாரமட்டா நதியும் அதன் கிளை நதியான லேன் காவ் நதியும் சந்திக்கும் இடத்தில் அமைதிருக்கும் திட்டு. ஒரு காலத்தில் கைதிகளை அடைத்துவைக்கும் ஜெயிலாக இருந்திருக்கிறது. அதற்கும் முன் இங்கே என்ன இருந்திருக்கும்? ஒரு சிறிய காடு இருந்திருக்கலாம். சில பழங்குடிகளும். இப்போது அதே பழங்குடிகளை வைத்து ஆட்டமும் பாட்டமுமாக நிகழ்ச்சி நடத்துகிறார்கள். யுனெஸ்கோ புராதனச் சிறப்புமிக்க இடம் என்ற அந்தஸ்து வேறு. 

புத்தாண்டை ஒட்டி இங்கே இடம் கிடைப்பது அவ்வளவு எளிதான காரியமன்று. இது, ஒட்டுமொத்த தேசமும் இடம் மாறித் திரிந்துகொண்டிருக்கும் காலம். எங்களோடு மூன்று குடும்பங்கள் இணைந்துகொண்டன. இங்கே போவது உறுதியான நாளிலிருந்து மீராதான் முதலில் பயங்கர உற்சாகமாக இருந்தாள். காம்ப் போடுவதற்குத் தேவையான பொருட்கள், அதற்கென்று பிரத்யேக உடைகள், பார்பிக்யூ வைப்பதற்கான உணவுப் பண்டங்கள் என்று திட்டமிட நண்பர்களின் மனைவிகளோடு சேர்ந்து ஒரு வாட்ஸப் குழுவை ஆரம்பித்தாள். அதில் பேசிப் பிரித்துக்கொண்டபடி காட்ஸ்கோ, அல்டி, கோல்ஸ் என்று சூப்பர் மார்கெட்டுகளுக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்தாள். 

கிளம்பவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நாள் இரவில், “கெளதம்.. நாம கொக்கட்டூதான் போகணுமா? வேற எங்கயாவது போக முடியாதா?”

“ஏன்.. கொக்கட்டூவுக்கு என்ன?”

“முடியுமா.. முடியாதா சொல்லு?”

“நிச்சயமா முடியாது.”

“இல்ல.. கேன்சல் பண்ணா காசு போயிடுமா?”

“ஏன்.. மறுபடியும் மாலதிகூட ஏதாவது பிரச்சினையா?”

“அய்யோ அதெல்லாம் இல்ல.”

“அப்புறம்?”

“சொன்னா சிரிக்கக்கூடாது.”

“ சரி.. சிரிக்க மாட்டேன். சொல்லு”

“இல்ல. அது பழங்காலத்து ஜெயிலாம். நிறைய பேரை அங்க வச்சு தூக்குலகூட போட்டுருக்காங்களாம். அதுக்கும் முன்னாடி அங்க இருந்த அபாரிஜின்ஸை அடிச்சு விரட்டிருக்காங்க. அதனால இப்போகூட அந்தப் பகுதிகள்ல ஆவிகள் நடமாட்டம் இருக்குன்னு சொல்றாங்க.”

கொடுத்த வாக்குறுதியை மீறி சத்தமாகச் சிரித்துவிட்டேன். முகத்தைக் கோணலாக்கித் திருப்பிக்கொண்டாள்.

“பைத்தியம் மாதிரி பேசாத. அதெல்லாம் நடந்து பல நூறு வருசங்களாச்சு. அதுக்குப் பிறகு லட்சக்கணக்கான பேரு அங்க வந்துட்டுப் போயிருப்பாங்க. அவங்களையெல்லாம் என்ன பேயா பிடிச்சு ஆட்டிகிட்டு இருக்கு. பக்கி!”

“அப்போ பேய் பிசாசெல்லாம் இல்லியா? அங்க தங்கியிருந்தப்போ அமானுஷ்யமா ஏதேதோ சத்தமெல்லாம் கேட்டிருக்குன்னு ஒரு அம்மா தன்னோட பிளாக்ல எழுதிருக்காங்க.”

“இங்க பார். அந்த அம்மாவும் உன்ன மாதிரி பயந்தாங்கொள்ளியா இருந்திருப்பாங்க. சும்மா பக்கத்துல ஃபெர்ரி போற சத்தம்கூட அப்படி கேட்டிருக்கும். ரொம்ப போட்டு உழட்டிக்காம கம்முன்னு படு. பேயும் கிடையாது. பிசாசும் கிடையாது.”

“உனக்குச் சொன்னாப் புரியாது. கொக்கட்டூ ஐஸ்லாண்ட் சைட்ல போயிப் பாரு. அவங்களே கோஸ்ட் வாக்ன்னு ஒன்னு கூட்டிட்டுப் போறாங்க. பேய் பிசாசு எதுவுமேயில்லன்னா அப்படி ஒன்னு அவங்களே பண்ணுவாங்களா?”

“ஹே லூசு. நீ இதையே இப்படி யோசிச்சுப் பாரு. உண்மையிலேயே அப்படி ஒன்னு இருந்தா அவங்களே இப்படி ஒன்னு பண்ணத் துணிவாங்களா? உங்களோட பயம் அவங்களுக்கு வியாபாரம். அவ்ளோதான். செத்தவன்லாம் பேயா சுத்திட்டு இருந்தா இதோ உனக்கும் எனக்கும் நடுவுலயே நானூறு பேய் உட்கார்ந்திட்டு இருக்கும்.”

சிரித்துவிட்டாள். 

அவளுக்குத் தேவையெல்லாம் என்னிடமிருந்து வரும் இப்படியான அழுத்தமான பதில் மட்டும்தான். என் தோளை இறுக்கிப்பிடித்து படுத்திருந்த வினுவை மெதுவாகப் பிரித்து விலக்கிப் போட்டு என் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டாள்.

*

அந்த நள்ளிரவில், போர்த்திய பனியும் ஆளற்ற வெளியும் சுற்றியிருந்த சலனமற்ற நீரும் கொண்டுவந்து சேர்த்தது அமைதியையா? வெறுமையையா? 

உடல் சோர்ந்து களைத்திருந்தது. அதே நேரத்தில் மனம் விழித்து உந்தித் தள்ளிக்கொண்டிருந்தது. சாய்வு நாற்காலியில் முதுகைச் சாய்த்து கால்களை நீட்டிக்கொண்டேன். அந்த நேரத்து அலுப்புக்கு அது சற்று ஆசுவாசமாக இருந்தது. எங்களைப் போலவே மேலும் சில குடும்பங்கள், நண்பர்கள், தம்பதிகள் என்று  பலரும் அந்தப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தார்கள். அந்த நேரத்தில் ஒருத்தர்கூட வெளியில் இல்லை. ஒட்டுமொத்தத் தீவில் நான் மட்டும் தனித்து இருப்பதாகத் தோன்றியது. அப்படியான கற்பனையே என்னைக் கிளர்த்தியது. 

காம்ப் செல்வதற்குத் தேவையான பொருட்களைக் கட்டி காரில் ஏற்றித் தயார்செய்துகொண்டிருந்த போதுதான் அப்பா வாட்ஸப்பில் அழைத்திருந்தார். முந்தைய நாள் புத்தாண்டு வாழ்த்து சொல்லிப் பேசிக்கொண்டிருந்தோம். இவ்வளவு நெருக்கத்தில் அடிக்கடி பேசுவது எங்களுக்குள் வழக்கமில்லை. நெடுங்காலமாக ஒரே அறையைப் பகிர்ந்துகொள்ளும் இரண்டு பேர்களுக்கிடையே இருக்கும் புரிதல் எங்களுடையது. ஒரு அழைப்புகூட அநாவசியமாக இருக்காது. புத்தாண்டைக் காட்டிலும் அன்று அதிக உற்சாகத்திலிருந்தார். 

அவர் எங்களுக்காக வாங்கியிருந்த இடத்துக்குப் பக்கத்திலிருந்த அந்தப் பழைய மச்சு வீட்டையும் பேசி முடித்துவிட்டார். அதுவும் தாம் நினைத்த விலைக்கே படிந்ததில் அவருக்கு மகிழ்ச்சி. அம்மாவுக்கு அதில் பெரிய விருப்பமிருக்கவில்லை. அவள் அப்பாவை கல்யாணம் முடித்து அங்கு வந்துசேர்ந்த நாளிலிருந்து அவ்வீட்டின் படிப்படியான வீழ்ச்சியை மட்டுமே பார்த்தவள். அதனால், அவள் அப்படி யோசிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம். முதலில், மச்சுவீட்டுக்குப் பக்கத்து இடத்தைப் பத்திரம் முடிக்கும் அந்த நாள் வரை நானும்கூட உற்சாகமாகவே இருந்தேன்.

நெடுநாட்களாக அப்பாவுக்கு அந்தப் பக்கத்து வீட்டின் மீது ஒரு கண். நாங்கள் வாங்கியிருந்த முதல் இடமும் ஒரு காலத்தில் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்களுடையதாகவே இருந்திருக்கிறது. அதை விற்பதன்பொருட்டு வீட்டின் ஒரு பகுதியாகத் தோட்டமிருந்த இடத்தை காம்பவுண்டு சுவர் எழுப்பி தனியாகப் பிரித்திருக்கிறார்கள். இப்போதுகூட அந்தத் தென்னைகளும் மாமரமும் அப்படியேதான் உள்ளன. அப்பாவுக்குச் சிறுவயதாக இருந்தபோது அந்தப் பகுதியில் எழுப்பப்பட்ட முதல் மாடி வீடு அது. இப்போது பல மாடி வீடுகள் அந்தப் பகுதியில் வந்துவிட்ட போதும் ‘மச்சு வீடு’ என்றால் அந்த வீடுதான். நாங்கள் முதலில் வாங்கிய இடம் மச்சு வீட்டின் தோட்டமாக இருந்திருக்கிறது. வியாபாரத்தில் நஷ்டம், பொறுப்பில்லாத பிள்ளைகள், கூடாச் சேர்க்கை, எதிர்பாராத இறப்புகள் என்று ஒரு வாழ்ந்துகெட்ட குடும்பத்துக்கு இருக்கக்கூடிய சர்வ இலட்சணங்களும் அவ்வீட்டுக்கு அமைந்துவிட்டது. அவ்வீட்டின் மூத்தவர் முன்பொரு காலத்தில் எங்களூரின் நகர்மன்ற துணைத்தலைவராக இருந்தவர்.

அந்த மாடி வீட்டை இடித்து மட்டமாக்கி, எங்கள் இடத்தையும் சேர்த்து வீடாகக் கட்டினால் முன்புறம் கார் பார்க்கிங் வைத்து பின்புறம் சிறு தோட்டமொன்று போடவும் தாராளமாக இடம் இருக்கும் என்பது அப்பாவின் திட்டம். இது போன்ற கணக்குகள் அவருக்கு அத்துப்படி. நிலம் சார்ந்து அவரிடத்தில் கூர்ந்த அவதானிப்பு இருந்தது. சொந்தக்காரர்கள், நண்பர்கள் என்று எல்லோரும் இடம், வீடு வாங்க வேண்டுமென்றாலோ விற்க வேண்டுமென்றாலோ முதலில் அப்பாவிடமே வந்து ஆலோசனைக்கு நிற்பார்கள். 

அப்பாவுடைய தாய்மாமா பையன் பாலு மாமா. அப்பாவைவிட நான்கைந்து வயது இளையவர். அவருக்கு அப்பாவிடத்தில் நிறைய மரியாதை. ஊருக்கு வெளியே அவரிடம் இருந்த கொஞ்ச இடத்தை மூத்த மகளின் திருமணத்தின் பொருட்டு விற்பதற்காக ஆலோசனை கேட்டு வந்திருந்தார். அந்த இடத்துக்குப் பக்கத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம் ஒன்று வரப்போகிறது. எனவே, இப்போதைக்கு அதை விற்க வேண்டாம். ஏதாவது கடனை வாங்கிச் சமாளியுங்கள் என்று அப்பா ஆலோசனை கூறினார். வீட்டில் இருந்த வரை சரி சரியென்று தலையாட்டியவர் அடுத்த மூன்று வாரத்தில் அதை விற்றுவிட்டார். அன்று, வெறும் நான்கு இலட்சத்துக்கு விற்கப்பட்ட அந்த இடத்தின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட கோடியைத் தொடும். அதன் பிறகு எந்த விசேஷ வீடுகளில் அப்பாவைப் பார்த்தாலும், “மச்சான் அப்பவே படிச்சுப் படிச்சு சொன்னாப்ல. நாந்தான் மடத்தனம் பண்ணிட்டேன்” என்று புலம்புவார். அப்பாவோ, “வித்தே ஆகப்போறேன்னு சொல்லிருந்தா நானாவது வாங்கியிருப்பேன். மடையன்!” என்று ஆதங்கப்படுவார். 

அப்பாவுக்குப் பூர்வீகமாக தாத்தா வழியே இரண்டு வீடுகள் சொந்தமாக வந்தன. தன் தங்கைகளுக்கு அப்பத்தாவின் நகைகளை மட்டும் பிரித்துக்கொடுத்துவிட்டு வீடுகளைச் சொந்தமாக்கிக்கொண்டார். அதுவே அங்கு ஊர் வழக்கமும்கூட. இவை போக, தன்னுடைய வாத்தியார் சம்பாத்தியத்தில் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் ஊருக்கு வெளியே சில இடங்களையும் வாங்கிப் போட்டிருந்தார். அவருக்கு நிலத்தின் மீது தீராத பற்று இருந்தது. அதே நேரத்தில் நிலம் சம்பந்தமான பரிவர்த்தனைகள் பற்றிய நுணுக்கமும் தெரிந்திருந்தது. ஓர் இடம் எவ்வளவு பிடித்திருந்தாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார். முடிந்தால் பார்க்கலாம் என்பதான பாவனையையே எப்போதும் வெளிப்படுத்துவார். சரியான நேரம் கனிவதற்காக மாதக்கணக்கில், ஏன் வருடக்கணக்கில்கூட காத்திருப்பார். இந்தப் பக்கத்து வீட்டுக்காகவும் அப்படித்தான் காத்திருந்தார். முதல் இடத்தைப் பத்திரம் முடிக்கும்போதே அவ்வீட்டையும் மனதில் இருத்திக்கொண்டார். தான் வாங்க விழையும் இடத்துக்காரரின் அசைவுகளைத் தொடர்ந்து நோட்டமிட்டபடி இருப்பார். அவருக்குப் பண நெருக்கடி காலமொன்று வரும்போது மூன்றாவது மனிதர் ஒருவர் மூலமாக ஆலோசனை சொல்லி தூதுவிடுவார். தேவையென்று தெரிந்து வலியச் சென்று உதவியளிப்பார். விரட்டிச் செல்லாமல், அதே நேரத்தில் சரியான நேரத்தில் தகுந்த காய்களை நகர்த்துவதில் புத்திசாலி. ஆனால், இப்போது வந்த இடம் என்றில்லை எத்தனை பெரிய இடமும் அவருக்குப் போதுமானதாக இருக்காது. இதை முடித்துவிட்டு அடுத்ததைப் பார்க்கப் போய்விடுவார். 

நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் என்னுடைய பணத்தை எடுத்துப் போட்டு சீட்டு சேர்த்து அந்த முதல் இடத்தை வாங்கினார். ஊருக்கு நடுவே என்பதால் சில செண்ட்டுகளுக்கே பல இலட்சங்களைக் கொடுக்க வேண்டியிருந்தது. “மண்ணுல போடுறதும் பொன்னுல போடுறதும் ஒன்னுதான். ரொம்ப யோசிக்காதே!” என்றார். தன் கையில் இருந்த பணம் கொஞ்சத்தையும் அதுவரை நான் சேர்த்து வைத்திருந்த மியூட்சுவல் பண்டுகளையும் விற்று அந்த முதல் இடத்தை என் பெயரில் வாங்கினார். அது வாங்கி முடிக்கவும் எனக்கு ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு வரவும் சரியாக இருந்தது. அது, அந்த நிலம் சேர்ப்பித்த அதிர்ஷ்டம் என்றார். இதோ, இப்போது பக்கத்து வீட்டையும் வாங்கிவிட்டார். அவர் சொன்ன அதிர்ஷ்டம் உண்மையாகக்கூட இருக்கலாம். இதோ இந்த மாத இறுதியில் வரும் ஆஸ்திரேலிய தினத்தன்று நிரந்தரக் குடிமகனாக மாறிக்கொள்ள அழைப்பு வந்திருக்கிறது. 

அன்று, முதல் இடத்தைப் பத்திரம் எழுதி முடித்த அந்த நாளில் பத்திரத்தை என் கையில் கொடுத்துவிட்டு அப்பா உற்சாகமாய் கைகளை ஆட்டியபடி ரிஜிஸ்தாரருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். மீராவுக்கும் சொத்து என்று ஒன்று சேர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. முகம் முழுக்க சிரிப்பாய் இருந்தாள். அப்போது, அங்கிருந்த அத்தனை பேரும் கவனிக்கத் தவறிய கண்கள் இரண்டு இருந்தன. அவற்றை நான் பார்த்தேன். 

*

காம்ப்க்குத் தேவையான பொருட்களை எடுத்துப் போட்டுக்கொண்டு ஆஷ் ஃபீல்டில் இருக்கும் ஈஸ்வரின் வீட்டுக்கு வந்தோம். அங்கிருந்து மெட்ரோ பிடித்துச் செல்வதாகத் திட்டம். இல்லையென்றால் சர்குலர் க்யுவே பகுதியில் கார்களை நிறுத்துவதற்கு இடம் கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத்தாலும் சிட்டிக்குள் இரண்டு நாட்கள் பார்க்கிங் செய்ய ஆகும் தொகை காருக்கான ஒரு மாதத் தவணைக்கு இணையாக இருக்கும். 

நாங்களும் ஈஸ்வரின் குடும்பமும் வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு ஆஸ்ஃபீல்ட் மெட்ரோவில் ஏறிக்கொண்டோம். பிரதீபனும் காயத்திரியும் நேரே சர்குலர் க்வேக்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார்கள். 

நாங்கள் அத்தனைபேரும் அலுவலகத்தின் பொருட்டும் இன்ன பிற காரணங்களுக்காகவும் அடிக்கடி சந்தித்துக்கொள்பவர்கள்தாம். இருந்தாலும் இதுபோன்ற விடுமுறை தினங்களின்போதும் சுற்றுலாக்களிலும் சந்திக்கும்போது ஒவ்வொருவரும் புதியவர்களாகிவிடுகிறார்கள். அதுவரை மற்றவர்களுக்குக் காட்டாத தன் அகத்தின் ஜன்னல் ஒன்றை சற்று அகலமாய்த் திறந்து வைத்துக்கொள்கிறார்கள். அது கொண்டுவந்து அங்கு நிரப்பும் வெளிச்சம் அவ்விடத்தையும் அக்கணத்தையும் அற்புதமாக்கிவிடுகிறது. இத்தனையும் உற்று நோக்கி அறியும் என்னால் அப்படி எளிதாக திறந்துகொள்ள இயலவில்லை. எடையற்றுப் போவது என்பது என்னளவில் இயலாத காரியம். சுற்றி ஆயிரம்பேர்கள் இருக்கும் இடத்திலும் நான் தனியனாக இருப்பேன். உள்ளே எப்போதும் விழித்துக்கொண்டிருக்கும் ஒரு மனத்துண்டு என்னை மற்றவர்களோடு இயல்பாக இருக்கவிடாது. எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கும்போதே என் ஆழ்மனம் நடக்கக்கூடும் அசம்பாவிதம் ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அப்படி நினைப்பது போலவே நடந்தும் விடுவது எனது துரதிர்ஷ்டம். நேற்றும் அப்படித்தான் ஆனது.

மீராவும் ஈஸ்வரின் குடும்பமும் காம்ப் போடுவது பற்றிய செயல் விளக்கப் படங்களைப் பார்த்துக்கொண்டும், புதிதாக வாங்கிய ப்ளூ டூத் ஸ்பீக்கரில் ஒலிக்கவிட வேண்டிய பாடல்களைத் தேர்வுசெய்துகொண்டும் வந்தனர். நான் மெட்ரோவின் கண்ணாடி ஜன்னல் வழியே நகரும் வீடுகளை, மரங்களை, சாலைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தேன். ஜன்னலோர இருக்கை இங்கே புதியதோர் உலகத்தைத் திறந்துகாட்டும். அதுவும் கட்டூம்பா வரை செல்லும் மெட்ரோ பயணத்தை மறக்கவே முடியாது. பாதி வரை கடல், பின்னர் ஒரு பக்கம் அடர்காடு, மறுபக்கம் தொடர் மலை. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் நிலப்பரப்பு ஆட்களற்ற வறண்ட பாலைவனம்தான். இதன் ஒட்டுமொத்த வளர்ச்சி கடலோரப் பகுதிகளிலேயே நிலைத்திருந்தது. இதன் முக்கிய நகரங்கள் அத்தனையும் கடலுக்குப் பக்கத்தில் அமைந்தவையே. 

தறிகெட்டுப் பின்னிப் படர்ந்த என் எண்ண இழைகளைச் சட்டென்று அறுத்தபடி வந்தது அந்தக் கூச்சல். அந்த கம்பார்ட்மண்ட்டில் இருந்த பலரும் எழுந்தும் இருந்த இடத்திலிருந்து எக்கியும் சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தனர். நாங்கள் இருந்த இடத்துக்குப் பின்னாலிருந்தே அச்சத்தம் வந்தது.

பனை மர உயரத்தில் ஊதிப் பெருத்து, வெளுத்த வயிற்றுச் சதை பிதுங்கி வழிந்துகொண்டிருந்த ஆணொருவன் எதிரே அமர்ந்திருந்த சீனத்துப் பெரியவர் ஒருவரைப் பார்த்துக் கத்திக்கொண்டிருந்தான். 

அத்தனையும் அபசுர கெட்ட வார்த்தைகள். 

அவனுடைய இராட்சச உருவத்துக்கு முன் அந்தச் சீனப் பெரியவர் கூனிக் குறுகி அமர்ந்திருந்தார். அடுத்து வரும் நிறுத்தத்தில் அவன் இறங்க வேண்டியிருக்கும் போல. அவனது தடித்த உருவம் வெளியேறுகையில் அந்தப் பெரியவர் கையில் வைத்திருந்த குளிர்பானத்தைத் தட்டிவிட்டிருக்கிறது. அது அவன்மேல் சிந்தி கால் சட்டையை சற்று நனைத்துவிட்டது. அதற்குத்தான் அவன் அவரை அப்படித் திட்டியிருக்கிறான்.

அவனுடைய கோபம் அந்த நேரத்துக்கானதாக மட்டும் தெரியவில்லை. “உங்கள் நாட்டிலேயே கிடந்து சாக வேண்டியதுதானே. ஏன் இங்கே வந்து எங்கள் அமைதியைக் கெடுக்கிறீர்கள் ஆசியப் பன்றிகளே” என்று திட்டினான். அந்த இடம் முழுவதும் நிசப்தம். பதற்றம். யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை. தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டார்கள். ஒரு பெண் மட்டும் போனில் அவசர உதவி எண்ணை அழைத்ததுபோல் தெரிந்தது. 

அவன் இறங்க வேண்டிய நிறுத்தம் வரும்வரை அவன் திட்டுவதை நிறுத்தவேயில்லை. அவர் தலையைக் குனிந்தபடி செய்வதறியாது அமர்ந்திருந்தார். 

அடுத்த நிறுத்தம் வந்தது. அவன் இறங்கிப் போனதும் அந்தப் பக்கமிருந்த ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் அந்தப் பெரியவர் குடிக்காமல் வைத்திருந்த குளிர்பானத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தார். “அவன் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இதைக் குடியுங்கள்” என்றார். இதை அவர் ஆதரவான மிக மெல்லிய குரலில் அவரிடம் கூறினார். ஆனால், எனக்குக் கேட்டது. இறங்கிப் போனவன் எழுப்பிய கத்தலும் கூச்சலும் கலைத்துப்போட்ட அவ்விடத்தின் அமைதியை அந்த மெல்லிய குரல் மீட்டுவந்து சேர்த்தது.

அப்பெண் நீட்டிய குளிர்பானத்தை வாங்கிக்கொண்ட அந்தப் பெரியவரின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அப்போது இடுங்கிய அச்சிறு கண்களில் ஒளிர்ந்த நீர்மையைப் பார்த்தேன். 

அந்தப் பெரியவரும் எங்களுடன் சர்க்குலர் க்வேயில் இறங்கிக்கொண்டார். பொருட்களை வாங்கி நிரப்ப உதவும் சக்கரம் வைத்த துணியாலான தள்ளுவண்டி ஒன்றை உருட்டியபடி மெதுவாக நடந்துகொண்டிருந்தார். கிட்டத்தட்ட மொத்த மெட்ரோவும் அங்கே காலியாகிவிட்டது. வினுக்குட்டியை இறுக்கி பிடித்தபடி என் பார்வையில் அவரைத் தொடர்ந்தபடி இருந்தேன். கவனம் சிதறிய ஒரு கணத்தில் அவர் கூட்டத்தில் கலந்து காணாமல் போய்விட்டார். 

*

எவ்வளவு நேரம் இப்படி வானத்தை வெறித்தபடி உட்கார்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. சுற்றிலுமெங்கும் சிறு சலனமில்லை. அப்போதுதான் அந்த இசை கேட்டது. தூரத்தில் எங்கோ ஒலித்துக்கொண்டிருந்தாற் போலத் தெரிந்தது. முந்தைய நாள் மதியம் கேட்ட அதே இசை. அந்த அதிர்வைக்கூட என்னால் உணர முடிந்தது. மிகவும் மெலிதாகத்தான் ஒலித்தது. ஆனால் அதே இசைதான். இப்போதுதான் ஒலிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து மெதுவாக எழுந்தேன். அவ்விசை வந்த திசை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன். குளிர்ந்த காற்று காதுக்குள் நுழைந்ததில் உடல் கூசிச் சிலிர்த்தது. ஸ்வெட்ஸர்ட்டினை தலையின் மேல் இழுத்துவிட்டுக்கொண்டேன். நூறு அடிகளுக்கு ஒன்றென விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. 

நேற்று மதியம் நாங்கள் மெட்ரோவில் வந்துசேரும் முன்னரே பிரதீபன் குடும்பத்துடன் எங்களுக்காக காத்திருந்தார். என்னைவிட மூன்று வயது பெரியவர். ஒப்பந்தத்தில் நான் வேலைபார்க்கும் நிறுவனத்தில் நிரந்தரப் பணியில் இருப்பவர். சொந்த ஊர் யாழ்ப்பாணம். இங்கே வந்து பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. வீட்டுக்கு அழைப்பார். விருந்தளிப்பார். எனக்குச் சொதி, வினுவுக்கு வட்டிலப்பம் என்று ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து செய்துவைப்பார். எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வார், தன் சொந்த ஊரின் நடப்புகளையும் போக்குகளையும் அரசியலையும் தவிர. 

பின்பு, நாங்கள் அவர்களோடு இணைந்து காயத்திரி வருவதற்காக காத்துக்கொண்டிருந்தோம். வினுவும் கயலும் அங்கே கால்களுக்கு இடையே சுற்றிக்கொண்டிருந்த சீகல்களுடன் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். வினுவுக்கும் இயலுக்கும் காக்கைகளைத் தெரியாது. சீகல்கள் என்றால் கொண்டாட்டம். சிட்னியின் சர்குலர் க்வே பகுதியில் திரியும் சீகல்களுக்கு நம்மூர் வெண்புறாக்களை ஒத்த தோற்றம். காக்கைகளையொத்த குணம். அதன் கண்களும் பாவமும் முதுகிழவிகளை நினைவுபடுத்தும். இதுவே நூற்றாண்டுகளுக்கு முன்னர் கப்பலேறி காலடி வைத்தவன் இங்கே பார்த்த முதல் பறவையாய் இருக்கக்கூடும்.  

முன்பொரு முறை இந்தப் பகுதியிலிருக்கும் டைம் ஸ்கொயர் காஃபேயில் மாலை நேரச் சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்தபோது வினுக்குட்டி தன்னுடைய பர்கரின் சில துண்டுகளை அங்கே திரிந்துகொண்டிருந்த சீகல் ஒன்றுக்கு இட, சற்று நேரத்தில் அவ்விடம் முழுவது அவற்றால் நிறைந்துவிட்டன. காஃபேயின் ஊழியர்கள் வந்து “இனி, இப்படி உணவிட வேண்டாம். அவற்றால் இங்கே பெரிய தொந்தரவு” என்று வேண்டிக்கொண்டார்கள். சற்று நேரத்தில் பேட்ரோல் நாய்கள் இரண்டு வந்து அங்கிருந்த சீகல்களை குரைத்தும் ஓடியும் விரட்டின.  

அப்போது நான் வினுவுக்காக மன்னிப்பு கேட்டபோது அங்கிருந்த சிப்பந்தி சொன்னான், “பரவாயில்லை. நீங்கள் போடாவிட்டாலும் அவை பிடுங்கித் தின்னக்கூடத் தயங்குவதில்லை. திருட்டுப் பறவைகள்!” என்று திட்டினான். 

காயத்திரி பேருந்தில் வந்துகொண்டிருப்பதால் சற்று தாமதமாகும் என்று தகவல் அனுப்பியிருந்தாள்.

மற்றவர்களை அங்கே இருந்த பெஞ்சுகளில் அமர்த்திவிட்டு நானும் பிரதீபனும் அனைவருக்கும் காப்பி எடுத்துவரக் கிளம்பினோம்.

பக்கத்தில் இருந்த கடையில், எல்லோரும் கொடுத்த லிஸ்டுக்கு ஏற்றாற்படி காப்பிகளைச் சொல்லிவிட்டு காத்துக்கொண்டிருச்ந்தோம். அப்போதுதான் அந்த விநோத இசை எழுந்துவந்து அவ்விடத்தை நிறைத்தது. பக்கத்தில் கூட்டமாக இருந்த இடத்திலிருந்து அவ்விசை வந்தது. பிரதீபனும் நானும் மெதுவாக அக்கூட்டத்தை நோக்கிச் சென்றோம்.

அக்கூட்டத்தின் நடுவே அடர்ந்த கறுப்பு வெள்ளை தாடியும் சுருள் சுருளாகத் திரண்ட முடிக்கொத்துகளும் கொண்ட ஆஸ்திரேலிய பழங்குடிப் பெரியவர் ஒருவர், மண்டியிட்டு அமர்ந்து மிக நீண்ட மூங்கில் போல் இருந்த இசைக்கருவி வழியாக அந்த இசையை எழுப்பிக்கொண்டிருந்தார். இந்தக் கருவியை இதற்கு முன்பு கட்டூம்பா அருங்காட்சியகத்தில் பார்த்திருக்கிறேன். பெயர் உள்ளே இருந்தது. நினைவுக்கு வரவில்லை. ஆனால் இக்கருவி பற்றி அங்கிருந்தவர் விளக்கிக்கூறியது மட்டும் நன்றாக நினைவிலிருந்தது. இது ஆண்கள் மட்டுமே வாசிக்கும் கருவி. பெண்கள் இதை வாசித்தால் மலடாகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடத்தே இருந்திருக்கிறது. அப்பெரியவருக்குப் பக்கத்தில் நடுவயதென்று மதிக்கத்தக்க இருவர் பெரிய கோடங்கி போன்றிருந்த கருவியை ஆளுக்கொன்றாய் வைத்துக்கொண்டு குத்தவைத்து அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் பல வண்ணப் புள்ளிகளும், நெளிவுகளும் கொண்ட ஓவியங்களையும், வண்ண வண்ணப் பூச்சுகள் கொண்ட பூமராங்குகளையும் பார்வைக்கு அடுக்கி வைத்திருந்தனர். அவர்களுடைய முகத்திலும் கைகளிலும் சட்டை அணியாத மார்பிலும் வெள்ளை வெள்ளையாக பெயிண்ட்டால் வரையப்பட்ட தீற்றுகள். 

“இவங்களைப் பார்த்தா நம்ம ஊரு வயசாளிக மாதிரியே இருக்குல்ல” என்றேன். பிரதீபன் ஆமாம் என்பது போல மெதுவாக தலையாட்டினார்.

அப்பெரியவர் தன் அடிவயிற்றிலிருந்து காற்றை எழுப்பி, கன்னத்தில் உப்பி இருத்தி அக்கருவியை ஊதிக்கொண்டிருந்தார். அவருடலின் மொத்த மூச்சுக்காற்றும் அக்கருவி வழியே வழிந்துகொண்டிருந்தது. ஒரே சமயத்தில் தரையிலிருந்து ஆயிரம் வண்டுகள் எழுந்துவந்து முரலுவதைப்போல அதிலிருந்து ஓசை வந்துகொண்டிருந்தது. மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் சத்தம் உயர உயர பக்கத்தில் இருந்த இருவரும் தத்தமது வாத்தியத்தை அதற்கேற்றாற்போல் மெதுவாக ஆரம்பித்து சத்தமாகவும் வேகமாகவும் ஒலிக்க ஆரம்பித்தனர். அப்போது அங்கே வெளிப்பட்டதை வெறும் இசையாக மட்டும் பார்க்க இயலவில்லை. உண்மையில், அது ஒரு மாபெரும் மன்றாடல். இயலாமையின் பொருட்டு வெளிப்பட்ட இறைஞ்சல். நூற்றாண்டு காலத் துயரின் ஓசை. வேரிலிருந்து பிடுங்கப்பட்ட வேதனையின் குரல். மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. எனக்கு அப்படித்தான் கேட்டது.

அங்கே சுற்றுலா வந்திருந்த பெண் ஒருத்தி தன்னுடைய கையில் இருந்த கேமராவில் ஆரம்பத்திலிருந்து அதைப் பதிவுசெய்துகொண்டிருந்தாள். இசை உச்சத்தை நெருங்கிய கணத்தில் அவ்விடம் மொத்தமும் அமைதியில் ஆழ்ந்திருந்தது. அவர்கள் வாசித்து முடித்ததும் அத்தனை பேரும் ஒரு நிமிடம் நின்று கைதட்டி வாழ்த்தினார்கள். முன்னால் விரித்துவைக்கப்பட்டிருந்த துணியில் சில்லறைகளைப் போட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். பிரதீபன் இரண்டு டாலரைப் போட்டுவிட்டு, கிளம்பலாம் என்று சைகை செய்தார். அம்மூத்தவர் வாயில் வைத்து ஊதிக்கொண்டிருந்த கருவியை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டார். ஆனால், அவர் தன்னுடைய மண்டியிட்ட நிலையிலிருந்து மாறவில்லை. என்னால் அங்கிருந்து நகர முடியவில்லை. அவரின் நிலைத்த கண்கள் சூன்யத்தில் வெறித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன். பிரதீபன் என் இடது உள்ளங்கையை அழுத்தமாகப் பற்றினார். “வெளிக்கிடலாம்.. வெளிக்கிடலாம்” என்றார். அவரது உள்ளங்கை வியர்வையில் நனைந்திருந்தது. அவரை ஏறிட்டுப் பார்த்தேன். அவரது முகம் வெளிறிப் போயிருந்தது. ஒரே ஒரு நொடிதான் அவர் கண்களைப் பார்த்தேன். என்னிலிருந்து பார்வையை விலக்கிக்கொண்டு அவ்விடத்திலிருந்து வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

இப்போது இந்த நேரத்தில் அந்த இசை எப்படி வரும்? அதுவும் நடந்து செல்லச் செல்ல இன்னும் தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது. மறுபடியும் அதே ஆயிரம் வண்டுகள். என்னுடல் ஒருமுறை சிலிர்த்துக்கொண்டது. சட்டென்று ஒரு நொடியில் அக்கருவியின் பெயர் நினைவுக்கு வந்தது. டிட்ஜெரிடூ. இப்போது அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது? சர்குலர் க்வே பகுதியில் இந்த நேரத்தில் இதை வாசிப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை அப்படியே வாசித்தாலும் அது இங்கே வரை கேட்பதற்கு எவ்வித பெளதிகச் சாத்தியங்களும் இல்லை. அப்படியென்றால் அவ்விசை இத்தீவின் ஒரு மூலையிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். இசை வந்த திசை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். யாருமற்ற ஒரு புது இடத்தில், உலக ஓசைகளெல்லாம் ஒடுங்கியிருக்கும் இவ்வேளையில் ஒலித்த அந்த இசை என் உடலின் ஒவ்வொரு அணுவையும் துளைத்து வெளியேறியது. ஓரிடத்துக்கு மேல் பாதையோ விளக்குகளோகூட இல்லை. என் கால்கள் தன்னிச்சையாகப் பழக்கப்பட்ட பாதையொன்றில் செல்வதைப்போல் போய்க்கொண்டிருந்தன. அவ்விசை என்னைப் பாழடைந்து போயிருந்த ஜெயில் கூடத்துக்கு அருகில் கூட்டி வந்திருந்தது.  நான் அங்கே வந்ததும் அவ்விசை முற்றிலுமாய் நின்று போய்விட்டது. காதுகளை எத்தனை கூர்தீட்டிப் பார்த்தும் கேட்பதாக இல்லை. அதுவரை நான் கேட்டது உண்மைதானா என்று ஒரு நிமிடம் குழம்பிப் போனேன். அவ்விடமே நிழலில் கட்டி எழுப்பியதைப் போல இருந்தது. மெலிதாக வீசிய காற்றில் பரவிய குளிரில் உள்ளங்கைகளும் மூக்கு நுனியும் விறைத்தன. உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்றாகச் சேர்த்து உரக்கத் தேய்த்துச் சூடுபடுத்தினேன். வாய்ப் பக்கத்தில் கொண்டுவந்து உள்ளங்கைகளுக்குள் திரும்பத் திரும்பக் காற்றை ஊதினேன். 

எவ்வளவு நேரம் இப்படியே கடந்துபோனது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நிமிடம் நான் யார் ஏன் இந்த நள்ளிரவில் இங்கே நின்றுகொண்டிருக்கிறேன் என்று குழம்பிப்போனேன். நினைவுகளைத் தூண்டி பிரக்ஞையைத் மீட்டெடுத்தேன். எதையும் தெளிவாகக் காணவோ கேட்கவோ முடியவில்லை. இதற்குமேல் என்னால் அவ்விடத்தில் ஒரு கணம்கூட இருக்க முடியும் என்று தோன்றவில்லை.  

கூடாரத்துக்குச் செல்ல, வந்த வழியில் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். அப்போது என் பின்பக்கமிருந்து சரசரப்பு ஓசை கேட்கவே திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் மெல்லிய நிழலுருவம் ஒன்று தெரிந்தது. எத்தனை உற்றுப் பார்த்தும் என்னால் அந்த உருவத்தை அடையாளம் காண இயலவில்லை. ஆனால், அந்த இருளிலும் ஒளிர்ந்த அக்கண்களை மட்டும் நான் அறிவேன்.

2 comments

Muniandy Raj. March 29, 2021 - 10:11 pm

மிகவும் அருமையான கதை. தலைப்பே ஆயிரம் உணர்வுகளைத் தொடுகிறது. இலங்கைத் தமிழரின் மண் இழந்த சோகமும் மெல்லிய இழையாக கதையின் ஊடே. மண்ணாசை மனிதத்தை மறுத்துப் போகச் செய்துவிட்டது. ஆனால், இத்தனை கிளக்க்கதைகள் ஏன் ? ஒரு நாவலுக்குரிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.

Karthick Pugazhendhi July 11, 2021 - 3:14 pm

கந்தர்வனின் “சாசனம்” சிறுகதையை மனதால் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

அருமையான குறியீட்டு விவரணைகள் கார்த்திக் பாலசுப்பிரமணியன். Seagull (ஆலா) என் மனம் உகந்த பறவை, அதனை நிலத்தின் பூர்வகுடிகளாகக் காட்டிய இடம் சிறப்பு. காலனிய நாடெங்கும் பொருந்துகிற கதை.

Comments are closed.