முதலாளியம்மாவின் தங்கை – ம்போஸி கைம்பே (ஸாம்பியா நாட்டுக் கதை)

1 comment

நான் வெளியே வெயிற் சூட்டில் வெந்துகொண்டிருக்க, வீட்டுப் பணிப்பெண் எலினா எப்போதும் போல முன் கூடத்தில் நல்ல நிழலான இடத்தில் நின்றுகொண்டிருந்தாள். கற்கள் பதிக்கப்பட்ட வாசற் தளத்தைப் பெருக்குவதில் மும்முரமாக இருந்தேன். வியர்வை கோடாக வழிந்து முதுகில் இறங்கியது. நாளின் முடிவில் அங்கு கொண்டுவந்து நிறுத்தப்படும் காரிலிருந்து கசிந்த எண்ணெய்த் துளிகள் அந்தக் கற்களின் மீது கோலம் போட்டிருந்தன. தண்ணீரும் சோப்பும் கலந்த கரைசலை விட்டு, தென்னம் விளாறுத் துடைப்பத்தால் நன்கு தேய்த்தும்கூட, அந்தக் கறைகள் விடாப்பிடியாக மறைய  மறுத்தன. அவை என்னைத் திறமையற்றவனாகவும் சோம்பேறியாகவும் காட்டின.

‘ஹேய், செஃபஸ். உன்னிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறேன், நான் என்ன சொன்னேனென்று காதில் விழுந்ததா? லண்டனில் இருக்கும் முதலாளியம்மாவின் தங்கை, இந்த வாரக் கடைசியில் வருகிறார். உன் சோம்பேறித்தனத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய், சரியா? இது லண்டன் போலவே பளபளக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்.’

எரிச்சலில் தானாகத் துடைப்பத்தை இறுக்கிப் பிடித்தது என் கை. முதல் விஷயம்- நான் சோம்பேறி இல்லை. என்னால் எப்படி அப்படி இருக்க முடியும்? நான் ஒரு தோட்டக்காரன். நானே வளாகத்தின் காவலாளி, கார்களைக் கழுவிச் சுத்தப்படுத்துபவனும்கூட. இந்த வளாகத்தின் நான்கு தனித் தனி வீடுகளுக்கும் எடுபிடி வேலைகள் அத்தனையும் செய்பவன். இரண்டாவது விஷயம்- லண்டன் போலப் பளபளக்க வைப்பது. எலினாவின் கட்டளையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நைந்து போன நூல் போலிருக்கும் புல்வெளியும், தூசு படிந்த புதர்த் தாவரங்கள் ஓரங்களாகப் படர்ந்து கிடக்கும் இந்த எண்ணெய் வழியும் முன் வாசலையும் எப்படி லண்டன் போல மினுக்கி வைப்பது? 

‘நான் சொன்னதைக் கேட்டாயா செஃபஸ்? என்ன சொல்கிறேனென்றால்…’

‘சரி, சரி. புரிகிறது, லண்டன் போலவே,’ சொல்லிக்கொண்டே துடைப்பத்திலிருந்து தண்ணீர்க் குழாய்க்கு மாறினேன்.  

வெயிலால் சுருண்டிருந்த இலைகளின் மீது படிந்திருக்கும் தூசு நீங்குமாறு தாவரங்களின் மீது நீரைப் பீய்ச்சியடித்தேன். எலினா உள்ளே போய்விட்டாள். இவ்வளவு குறுகிய கால அறிவிப்பில் முதலாளியம்மாவின் தங்கை ஏன் வரவேண்டுமென்று நான் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தேன். இதனால் எங்களுக்குத்தான் அதிகம் பணிச் சுமை. இதுவரை நான் பார்த்திராத அவர் எப்படி இருப்பார் என்றும் யோசித்துக்கொண்டிருந்தேன். அவரும் முதலாளியம்மா போலவே கறுப்பாக, குண்டாக, அன்பானவராக இருப்பாரா? அப்படித்தான் இருப்பார் என நினைத்துக்கொண்டேன், குறைந்தபட்சம் அன்பானவராகவாவது..

மதியம் நெருங்க நெருங்க வெப்பம் என் மீது சுத்தியல் அடித்து இறங்கிக்கொண்டிருந்தது. மரநிழலில் நின்றுகொண்டு, புல்வெளியெங்கும் இறைந்து கிடந்த ஜகரந்தா மலர்களை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். மற்றுமொரு வேலை. ஆனால் இன்று செய்ய முடியாது. மரத்தண்டின் மீது சாய்ந்து நின்றேன். அதன் சொரசொரப்பான பட்டைப் பட்டுச் சருமம் எரிந்தது. அப்படியே கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன் போல, தண்ணீர் குழாய் முட்டியிலிருந்து நழுவியிருந்தது. 

’செஃபஸ், செஃபஸ், இங்கே வந்து எனக்கு உதவி செய்யேன்.’

எலினாவுக்கு இப்போது என்ன வேண்டும்? மற்ற வீட்டுப் பணிப்பெண்கள் எல்லோரையும்விட இவள் மோசம். எப்போதும், இதற்கு அதற்கு என்று உதவி கேட்டுக்கொண்டே இருப்பாள். ஆனால் அவளுக்குக் கிடைக்கும் கூலியில் மட்டும் கொஞ்சம்கூடப் பங்கு தரவே மாட்டாள். அவள் அழைப்பது கேட்காதது போலக் கண்களை மூடிக்கொண்டேன். 

அடுத்த இரண்டு நாட்கள் மிகக் கொடுமையாக நகர்ந்தன. திரைச்சீலைகளைத் துவைப்பது, சுவர்களைக் கழுவுவது, மிக மோசமாக உதிர்த்து போயிருந்த இடங்களில் வண்ணம் பூசுவது என வீட்டு வேலைகளில் எலினாவுக்கு உதவியாக இருந்தேன். முதலாளியம்மாவின் வீட்டுக்கு இதுபோன்ற சின்ன வேலைகளில் எப்போதும் உதவியாயிருப்பேன். ஆனால் வீடு இப்படிப் புத்துணர்ச்சியோடும் வாசனையோடும் ஒருபோதும் இருந்ததில்லை. தரையும் ஜன்னல்களும் இம்முறை போலச் சுத்தமாக மின்னியதில்லை. மதிய உணவு நேரத்தில் பைகள் நிறைய பொருட்களோடு வந்திறங்கினார் முதலாளியம்மா. அதே வேகத்தில், ஒரு புன்னகையோ, வந்தனமோ எதுவும் சொல்லாமல் மீண்டும் சென்றுவிட்டார். இப்படி அவர் நடந்துகொண்டதே இல்லை. அவர் நெற்றியில் வியர்வை துளிர்த்திருக்க, அக்குளை இறுக்கமாகக் கவ்விக்கொண்டிருந்த அடர் வண்ண மேல் சட்டையைச் சுற்றி அரை வட்டமாக ஈரம் படர்ந்திருந்தது. 

ஒருவேளை காரிலிருந்து எடுத்துவர வேண்டிய பைகள் இன்னும் இருக்கிறதோ அல்லது அவர் சென்றபின் வாசல் கேட்டை மூட வேண்டுமோ என்று எண்ணி அவர் பின்னாலேயே ஓடினேன். என்னுடைய பணிக்குரிய இடத்தில் நான் இல்லாமல் இருந்ததால் அவரே சென்று கேட்டைத் திறக்க வேண்டியிருந்தது. மீதமிருந்த ஒரே ஒரு பையை என்னிடம் கொடுத்தவர், தன்னுடைய நான்கு சக்கரக் கலனுக்குள் நுழைந்துகொண்டார். வார்த்தைகளில் வெளிப்படுத்தாத பொறுமையின்மையுடன் அந்த மிகப்பெரிய கரிய நிற வாகனத்தின் இஞ்சினை வேகமாக இயக்கினார். 

‘எலினாவுக்கு உதவி செய்வதற்கு நன்றி’. அந்த இடத்திலிருந்து வாகனத்தில் சீறிப் பாயும் முன்பு நேரம் எடுத்து இதை என்னிடம் சொன்னார். 

இந்த அவசரத்திற்கும், நிலை மாறிப்போன அனைத்திற்கும் முதலாளியம்மாவின் தங்கையையே நான் குறைசொல்வேன். மிக முக்கியப் புள்ளிகளுக்குச் செய்யும் உபசரணை. என்னைக் கேட்டால் அது மிக முக்கியப் பூச்சி என்றுதான் சொல்வேன்! 

உள்ளே, வாங்கி வந்திருந்த பொருட்களை எடுத்து வைக்க உதவி செய்துகொண்டிருக்கையில் எலினாவிடம் கேட்டேன். ‘நீ இந்தத் தங்கையைப் பார்த்திருக்கிறாயா?’

‘ஆமாம், பத்து வருடத்திற்கு முன்பு அவர் லண்டன் போகும் முன்னால் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு இல்லை. அவருடைய அம்மாவின் இறுதிச் சடங்கிற்குக்கூட அவர் வரவில்லை. அதற்குக்கூட முதலாளியம்மா ரொம்ப வருத்தப்பட்டார்கள்.’

ம்ம், நான் சொன்னது போலவே, மிக முக்கியமான பூச்சிதான் போல.

முன்பெல்லாம் ஷாப்ரைட் பல்பொருள் அங்காடியில் உள்ள அலமாரிகளில் மட்டுமே கண்டு களித்திருந்த விலையுயர்ந்த உணவுப் பண்டங்களை இப்போது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலும், உறை பெட்டியிலும் நிறைத்தோம். முதலாளியம்மா மாமிசம், முட்டைக் கோசு, நிஷிமா1 போன்ற உள்ளூர் உணவுவகைகளை விரும்புபவர். ஆனால் இப்போது பாலாடைக் கட்டிகள், ஆப்பிள், பேரிக்காய்கள், அயல் தேசப் பழவகைகள், கேக், பதப்படுத்தப்பட்ட மாமிசம் போன்றவை வீட்டிலிருந்தன. என் நாவிலிருந்து எச்சில் வெள்ளமாக ஊறியது. இன்னும் நான் மதிய உணவுகூட உண்ணவில்லை. இந்த வார மதிய உணவு தர வேண்டிய முறை எலினாவுடையது. ஆனால் அடுப்புப் பக்கம் எதுவும் நடப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

‘செஃபஸ், இந்தக் காரியத்தில் எனக்கு உதவியை  செய்வாயா?’

’மாட்டேன்’ எனச் சொல்லிக்கொண்டே பின் கட்டின் கதவை நோக்கி நடந்தேன்.

’இப்படியே உனக்கு வேலை செய்துகொண்டிருந்தால் எனக்கு யார் உதவப் போகிறார்கள்?’

வெளியே காத்திருக்கும் என் வேலைகளை முடிக்க யாரும் உதவப் போவதில்லை. ஆறு மணிக்கு வரும் இரவுக் காவல்காரன்கூட உதவ மாட்டான். காவல்காரர்களுக்குரிய சிறிய குடிலில் புகுந்துகொண்டு ரேடியோ சத்தத்தை அலற விட்டுக்கொண்டிருந்தான். என்னுடைய பணி முடிகையில் ஏழு மணிக்கு மேலாகியிருந்தது. லண்டன் போல மினுமினுக்கிறதா என்று பார்க்க முடியாத அளவிற்கு அப்போது இருள் படர்ந்திருந்தது.

என்னுடைய சட்டைப் பையில் இருக்கும் சொற்பப் பணம் போக்குவரத்துச் செலவிற்கு வீணாக்குவதற்கல்ல. அணிந்திருக்கும் காலணிகளின் உட்புறப் பொத்தல்கள் வழியே நுழைந்துவிடும் சரளைக் கற்களைப் பொருட்படுத்தாமல் ஐந்து மைல் தொலைவிலிருக்கும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். சம்பளம் கிடைத்ததும் இரண்டாம் விற்பனையில் ஒரு ஜோடிக் காலணிகள் வாங்க வேண்டும். 

வீட்டிற்கு அருகில் நெருங்கிவிட்டேன். வழிகாட்டத் தெரு விளக்குகள் இல்லையென்ற போதும் வீட்டை அடையும் பாதையை அறிவேன். எனது பணியிடத்தை விட்டு நீங்கி, மும்மானா (ஆறு) வழியாக எனது கம்போனியை2, வாசத்தின் மூலமாகவே அறிவேன். அந்தப் பகுதியின் ஊடாக ஓடும் பச்சை நிற ஆற்றின் வாசம் எங்கும் வீசும். வீடுகள் இருக்கும் இடங்கள் மட்டும் தீவுத் திட்டுகளாக இருக்கின்றன. தீவுகளின் பல வண்ணக் குப்பைக் கூளங்களைச் சுமந்துகொண்டு ஆற்றின் மறு ஓரத்தில் உள்ள திறந்தவெளிக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கொட்டிச்செல்லும் நீர்வழியாக என்னுடைய பாட்டி இங்கு என்னைக் கொண்டுவந்து சேர்த்த நாளிலிருந்து இதே இடத்தில்தான் வசிக்கிறேன். 

கடந்த மழைக் காலத்தில் காலரா நோய்த்தொற்று பரவிய போது இராணுவப் படையினர் வந்து மும்மானாவைச்3 சுத்தம் செய்தார்கள். சில வாரங்களில் இராணுவக்காரர்களும், காலராவும் விடைபெற்றுச் சென்றவுடன் மீண்டும் பச்சை வண்ணமும் குப்பையும் திரும்பிவிட்டன. ஆம், அந்தக் காற்றின் தூய்மைக் கேடும், அந்தப் பகுதியிலிருந்து கேட்கும் இசையும் நான் வீட்டின் அருகில் வந்துவிட்டேனென்று சொல்லிவிடும். சின்னக் கடைகளின் முகப்புகள் குண்டு பல்புகளால் ஒளியூட்டப்பட்டிருந்தன. தூசு படித்திருக்கும் அந்த அங்காடிகளும், சிகை அலங்கார நிலையங்களும் பெரும்பாலும் சீன வியாபாரிகளால் எடுத்து நடத்தப்படுபவை. ஆனால் சட்டதிற்குட்பட்டும் அதற்குப் புறம்பாகவும் மதுவை விற்கும் மதுக்கூடங்களில்தான் அதிகமான விற்பனை நடைபெறும். கவர்ச்சிகரமான பிரபலப் பாடகர்கள் வெறித்தனமாக பாடல்களை இசைப்பதும் அங்கேதான். என்னுடைய பாதங்களை சரளைக் கற்கள் குத்திக் கிழித்திருந்த போதும் அந்த இசைக்கும் பாடலுக்குமேற்ப ஆட வேண்டுமென மனதில் இச்சை எழுந்தது. 

மதுக்கூடத்திலிருந்து மாற்றுப் பாதையில் நடந்தேன். குடிப்பதற்குத் தேவையான பணம் இல்லை. இன்று சாப்பிட வேண்டுமென்றால் குடி கிடையாது. தெருவின் மறுபுறத்திலுள்ள கடையில் ஒரு தக்காளி, ஒரு வெங்காயம், ஒரு கட்டுக் கீரை, ஒரு சிறிய பை மக்காச் சோள ரவை ஆகியவற்றை வாங்கிக்கொண்டேன். 

‘கோழி இறைச்சிக்கு நீ தர வேண்டிய பணத்திற்கு இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன் நியாம்பே’ கடைக்காரம்மா சொன்னார்.

‘என் சம்பள நாளன்று தந்துவிடுகிறேன், இன்னும் மூன்று நாட்களுக்கு உங்களால் காத்திருக்க முடியுமல்லவா அம்மா?’

‘காத்திருப்பேன்’, கூறிக்கொண்டே வாங்கிய பொருட்களை என் கைகளில் கொடுத்தார். மேலும் ஒரு தக்காளியை இலவசமாக அளித்திருந்தார்.

’நன்றி, சம்பளம் கிடைக்கும்  நாளில், நிச்சயமாகத் தந்துவிடுகிறேன்.’ 

அங்கிருந்து சற்றுத் தொலைவில் உள்ள பக்கத்துத் தெருவிலிருந்தது என் வீடு. அது ஒரு அறை, அதே போன்று வரிசையாக மற்ற ஆறு அறைகளுடன் பின் பக்கமாகப் பொதுக் கழிப்பறையும், குளியலறையும் கொண்டது.. குளியலறைப் பகுதியின் பின்பக்கத்தில் பச்சை ஓடையின் ஒரு பகுதி ஓடுகிறது. எங்கள் அறை அமைந்திருக்கும் தாழ்வாரத்தில் இரும்புக் கரி அடுப்பு வைத்திருந்தாள் ஷிஃபோ. அதன் மீது தண்ணீர்ப் பானை கொதித்துக்கொண்டிருந்தது. அந்தக் குறுகிய தெருவின் மறுபுறத்திலுள்ள எதிர் வீட்டுக்காரியிடம் பேசிக் கொண்டிருந்தவள், என்னைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டு வந்து சிறிய பையை வாங்கிக்கொண்டாள். 

‘என்ன இது செஃபாஸ்? இத்தனை நேரங்கழித்து வருகிறாய்?’ 

‘முதலாளியம்மாவின் தங்கை—’

‘அவர் வந்ததும் உனக்கு போனஸ் தொகை தர வேண்டும்.’

’அதிக நேரம் வேலை செய்யும் இந்த இரண்டு நாளாக நானும் இதே விஷயத்தைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். நிச்சயமாக என் சம்பளப் பணத்துடன் கூடக் கொஞ்சம் தொகை சேர்த்துத் தருவார்’.

பதிலளிக்க நேரமில்லாத அளவு இரவு உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்தாள் ஷிஃபோ. அங்கு வசிக்கும் மற்றவர்களைப் போலவே நாங்களும் தாழ்வாரத்தில் அமர்ந்தே உணவருந்துவோம். எரிந்து முடிந்த கரி அணைக்கப்பட்டு நாளை மீண்டும் பயன்படுத்துவதற்காக வெயிலில் உலரத் தயாராக இருந்தது. ஒரே ஒரு அண்டை வீட்டுக்காரர் மட்டும் மின்சாரக் கட்டணம் செலுத்தியிருந்ததால் அவர் வீட்டின் முன்னால் பல்பு எரிந்துகொண்டிருந்தது. மற்றவர்கள் அந்த மங்கிய வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைத்தபடி, கொசு வந்து எங்களை விரட்டியடிக்கும் வரை அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம்.

ஷிஃபோ ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தாள். நடுங்கிய சுடரில் அவளது களைப்பான கண்களும் வாடிப் போன முகமும் தெரிந்தன. அதைப் பற்றி சொல்லாமலிருப்பதே உசிதம் என அறிந்து வைத்திருந்தேன். அவளுக்கு எப்போதும் தன் தோற்றம் பற்றியும், அருகிலிருக்கும் நெடுஞ்சாலையில், போக்குவரத்து விளக்கின் அருகில் வாழைப் பழங்களும் வேர்க்கடலையும் விற்பதிலும் பெருமிதம் உண்டு. பார்வைக்கு நேர்த்தியாக இருக்கும் பட்சத்தில் வாகனத்தில் செல்பவர்கள் அவளிடம் வாங்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்று நம்புபவள்.

‘உன் கூந்தலை மாற்றி இருக்கிறாய். நன்றாக இருக்கிறது,’ நான் சொன்னேன்.

தோள்வரை நீண்டிருந்த கூந்தலில் கையைவிட்டு அளைந்துகொண்டே புன்னகை புரிந்தாள். ’இந்த இரண்டாம் முறை நெய்யப்பட்ட பின்னல்களா? ம்ம், இது மட்டும் பிரேசில் கூந்தலாக இருந்தால்..’

அவ்வப்போது தாழ்வாரத்தில் நடக்கும் கூந்தல் அலங்கார அமர்வுகளில் பிரேசிலிலிருந்து வரும் மனிதக் கூந்தலைப் பற்றி ஷிஃபோவும் அவளது தோழிகளும் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இங்கே அமர்ந்துகொண்டு முடியைப் பிரித்து அதன் ஒவ்வொரு இழைகளையும் ஊசியாலும் நூலாலும் கோர்த்து சோளக் கருது முடி அலங்காரங்களாக நெய்வதையும் பார்த்திருக்கிறேன். அப்போது மார்க்கெட்டில் பிரேசில் கேசத்தைத் தோள் வரை புரள விட்டுக்கொண்டிருக்கும் பெண்களையும், அதை வாங்கித்தரும் வசதி படைத்த கனவான் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தான் என்றும் பேசிக்கொள்வார்கள். இல்லாவிட்டால் அவர்களால் எப்படி அதை வாங்க முடியும்?

அது பல ஆயிரங்கள் க்வாச்சா4 மதிப்புடையது. ஷிஃபோவும் நானும் மூன்று மாதங்களுக்கு எங்கள் வருமானத்தைச் சேமித்தும், வீட்டு வாடகைத் தராமலுமிருந்தால் அவளுக்கு ஒரு பிரேசில் கேசம் வாங்க முடியும். சட்டென மனம் துவண்டு போனேன் அல்லது என் அழகிய மனைவிக்கு அவளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவைகளைக்கூட ஒருபோதும் தர இயலாத அவல நிலையை எண்ணி சலிப்பாக இருந்தது. முன்னால் சாய்ந்து மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு அவளுடைய கரங்களைப் பற்றிக்கொண்டு அறையின் பின்புறமுள்ள கட்டிலை நோக்கி அவளை அழைத்துச் சென்றேன்.

‘படுக்கைக்குப் போகலாம்’ என்று கூறினேன்.

இருளில் கொசுக்கள் முனகிக்கொண்டிருந்தன, கட்டிலின் கம்பிச் சுருள்கள் கிரீச்சிட்டன, என்னுடைய கைகள் அவளுடைய வழுவழுப்பான செயற்கை முடிப் பின்னல்களை இழுத்தன.

வாசல் கேட்டில் வாகனத்தின் அவசர அலறல் கேட்டவுடன் கையிலிருந்த மண் வாரியைக் கீழே போட்டுவிட்டு அதற்குப் பதிலளிக்க ஓடினேன். கதவுகளை முழுவதும் திறப்பதற்குள்ளாகக் காத்திருக்கப் பொறுமையின்றி முதலாளியம்மாவின் பிரம்மாண்ட நான்கு சக்கர வாகனம் கேட்டினுள் நுழைந்துவிட்டது. வாய் வரை வந்துவிட்ட வசைச் சொல்லை உமிழ்ந்துவிடாமல் அப்படியே விழுங்கினேன். இரண்டு விநாடிகள் கழித்து வாகனத்தின் பயணிகள் இருக்கையிலிருந்து முதலாளியம்மா இறங்கிய போதுதான் அங்கு நடந்ததன் முழு அர்த்தமும் விளங்கியது. அவர் ஓட்டி வரவில்லை. அவர் ஒருபோதும் இது போன்ற மரியாதையற்ற மூர்க்கத்தனமான காரியங்கள் செய்பவரல்ல.

‘மதிய வணக்கம் செஃபாஸ்.’

நான் விறைப்பாக நின்றேன். ’மதிய வணக்கம் மேடம்.’

ஓட்டுனரின் இருக்கைப் பக்கத்திலிருந்து இறங்கிய பெண்மணி, முதலாளியம்மாவின் தங்கையாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர் தோற்றத்தில் முதலாளியம்மாவைப் போலவே இருந்தாலும், அவரைவிடப் பல மடங்கு வெளுப்பாகவும் பல செண்ட்டிமீட்டர்கள் உயரமாகவும் இருந்தார். அவர் தங்கையின் இறுக்கமான ஜீன்சிலும், மேல்சட்டையிலும் முதலாளியம்மாவால் புகுந்துகொள்ளவோ அல்லது அவருடைய பென்சில் முனைக் குதிகால் காலணி அணிந்து நடக்கவோ முடியவே முடியாது. அந்தச் சகோதரியின் தலைநிறைந்த கேசம் அவளுடைய முதுகுப்புறம் வரை நீண்டிருந்தது. மக்காச் சோளக் கருதைச் சுற்றியிருக்கும் இழை போன்றிருந்தது அந்தப் பொன்னிறக் கேசம். ஷிஃபோவினுடையதைப் போல விறைத்துக்கொண்டும் மெழுகுப் பூச்சோடும் இல்லாமல் மிகவும் மிருதுவாக இருந்தது. இதுதான் அந்தப் புகழ்பெற்ற பிரேசில் கேசமாக இருக்கும். தலையை அங்குமிங்கும் ஆட்டி, காற்றில் கூந்தலை அலைபாய விட்டபடியே இருந்தாள். குவிந்த சிவப்பு உதடுகளுடனும், அடர்ந்த நீண்ட இமை முடிகளுடனும், நீலக் கண்களுடனும், ஆமாம் நீலக் கண்கள், அவள் பளபளவென்றிருந்தாள். அதுவோர் அழகிய காட்சி. லண்டனுக்குரிய நடை உடை பாவனைகள்.. எண்ணெய்க் கறை படிந்த இந்தச் சுற்றுப்புறம் அவளுக்கு ஏற்றதல்ல. 

‘ஏய், என்னுடைய பைகளை எடுத்து வா’ என்று என்னிடம் சொன்னார்.

அமைதியாக காரின் டிக்கியைத் திறந்து முதல் பெட்டியைத் தூக்கினேன். மொத்தம் ஆறு பெட்டிகள் இருந்தன. ஆமாம், இந்தம்மா இன்னும் எத்தனை நாட்கள் இங்கு தங்கப் போகிறார்? 

முதலாளியம்மாவும் அவர் தங்கையும் உள்ளே நுழைய இரண்டு பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு பின்தொடர்ந்தேன். அங்கிருந்த விருந்தினர் அறையில் அவற்றை எங்கு வைப்பதென்று எலினா சொன்னாள். கொல்லைப்புறத் தோட்டதிலுள்ள சம்பங்கிக் கொடியிலிருந்து வீசும் நறுமணத்தை உள்ளே வர அனுமதிக்கும் வகையில் அறையின் ஜன்னல் கதவுகள்  திறந்திருந்தன. திராட்சைத் தாவரங்கள் கொஞ்சம் அதிகமாக வளர்ந்துவிட்டன. அதாவது அவற்றைச் சரியான அளவிற்கு வெட்டிச் சரியாக்குவதற்குள் இந்த முக்கியப் புள்ளியின் வரவு வேலையைத் தடை செய்துவிட்டது.

‘செஃபாஸ், மற்ற பெட்டிகளெல்லாம் எங்கே?’ எலினா அழைத்தாள்.

‘கொண்டு வருகிறேன்’ முணுமுணுத்தேன்.

வரவேற்பறையில், இருக்கையில் உடலைச் சாய்த்துக்கொண்டு, கைகளால் முகத்திற்கு நேராக விசிறிக்கொண்டிருந்தார் அந்தச் சகோதரி. உதட்டுச் சாய வண்ணத்திலேயே விரல் நகங்களிலும் சிவப்பு வண்ணம் பூசியிருந்தாள். இந்த அக்டோபர் மாதத்தில் லுசாக்கா எவ்வளவு சூடாக இருக்கிறதென்று முகத்தைச் சுருக்கிக்கொண்டும், புலம்பிக்கொண்டும் இருந்தார். உண்மையிலேயே வெக்கை ஏறிக்கொண்டிருக்கிறது. பிசுபிசுப்பான, அடர்த்தியான ஒரு வகை வெப்பம் தார் சாலையைக்கூட உருக்குகிறது. தன் முகத்திற்கு நேராக கைகளால் விசிறிக்கொண்டே, முதலாளியம்மாவின் தங்கை, ஓரக்கண்ணால் என்னை நோட்டமிட்டுக்கொண்டிருந்தார்.

என்னுடைய சம்பளப் பணம் கிடைத்தது. ஆனால் அதனுடன் போனஸ் எதுவும் இல்லை. ஷிஃபோவிடம் அதைச் சொல்லத் துணிவில்லை. அதற்குப் பதிலாக கோழி இறைச்சிக்கான பழைய பாக்கியைச் செலுத்திவிட்டு, மீண்டும் கடனுக்குக் கொஞ்சம் இறைச்சி வாங்கிக்கொண்டேன். அப்போதுதான் ஷிஃபோ நான் போனஸ் தொகையில் செலவு செய்திருக்கிறேன் என்று நம்பிவிடுவாள். அண்டை வீட்டுப் பெண்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டு கோழி இறைச்சியைப் பொறித்துக்கொண்டிருந்தாள். அங்கு எழுந்த சமையல் மணத்தை வைத்துப் பார்க்கையில் ஏறத்தாழ எல்லாப் பெண்மணிகளும் சமையல் பானையில் ஏதோ சுவையாகச் சமைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று மதிப்பிட முடிந்தது. கோழி, மாடு அல்லது பன்றி இறைச்சி.

எங்கள் எதிர் வீட்டம்மா எதுவுமே சமைக்கவில்லை. கதவைத் தாழிட்டுக்கொண்டு தனது இரண்டு பேரக் குழந்தைகளுடன் வீட்டிற்குள்ளே அடைந்துகொண்டார். அந்தக் குழந்தைகளின் சீன அப்பா, இரண்டாம் குழந்தை பிறந்தவுடன் அவர்களை விட்டுவிட்டு சைனாவுக்கேத் திரும்பிச் சென்றுவிட்டான். அந்தச் சைனாக்கார அப்பா அவர்களை விட்டுப்போனவுடன், அம்புயாவின்5 மகள், தனது குழந்தைகளுக்குப் பால் வாங்கி வருகிறேன் என்று சென்றவள், பால் வாங்கினாளா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் அதன்பின் அவள் திரும்பி வரவே இல்லை.

இந்த இரண்டு சிறுவர்களைப் போலத்தான் ஒரு காலத்தில் நானும் என் சகோதரனும் இருந்தோம். எங்கள் அப்பா அம்மா இப்படி சட்டென்று மாயமாகப் போகவில்லை. அவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்ட போது, எங்களைக் கவனித்துக்கொள்ளப் பாட்டி மட்டுமே இருந்தார். இப்போதும் நான் வாடகைக்கு இருக்கும் இந்த வீட்டில் குடியமர்த்தி, தன்னால் முடிந்த அளவு எங்களைப் பார்த்துக்கொண்டார். அப்போது எங்கள் அடுப்பு எரியும் கரித் தணல் இல்லாமல் காலியாக இருக்கும் போது, மற்ற வீடுகளின் சம்பள நாள் சமையலின் நறுமணம் வீட்டுக்குள் புகாதவாறு கதவடைக்கப்பட்டிருக்கும். பசியின் கடுமையான குடைச்சல் உறக்கத்தில்கூட அழுகையை வரவழைக்கும். இத்தனை வறுமைக்கிடையிலும் பாட்டி எங்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

‘கொஞ்சம் அதிகமான நிஷிமா சமைத்துவிடு’ என ஷிஃபோவிடம் சொன்னேன்.

உதட்டை இறுக்கிக்கொண்டே சிறிய பானையிலிருந்து பெரிய பானையை மாற்றி வைத்தவள், ‘செஃபாஸ், நம்மால் இந்தக் கம்போனி முழுக்க உணவளிக்க முடியாது’ என்று வியப்புடன் கூறினாள்.

அதே வேளை, உணவு சமைக்கப்பட்டதும் அதிலிருந்து பெரும் பகுதியை எடுத்து மறுநாளுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, எதிர் வீட்டுக்காரர்களை உணவருந்த அழைத்தாள்.

‘அம்புயா! அம்புயா! வாருங்கள் சாப்பிடலாம். உங்களுக்காகவும் சமைத்திருக்கிறேன். வாருங்களேன்.’

கதவு கிரீச்சிட்டவாறு திறந்தது. ‘நன்றி பெண்ணே, ஆனால் நான் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டேன், உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இந்தச் சிறு பையன்களை வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்.’

வீட்டிலிருந்து குதித்தோடி தெருவைக் கடந்துவந்த அவருடைய பேரப் பிள்ளைகள் ஷிஃபோ நீட்டிய குவளையில் இருந்த நீரில் கைகளைக் கழுவினார்கள். சாப்பிடும் போது வழக்கம் போல எழும் அண்டை வீட்டாரின் மெல்லிய உரையாடலும், உற்சாகமான கேலிப் பேச்சும் எங்கும் நிறைந்திருந்தது. அந்நேரத்தில் நெருக்கமான ஒண்டுக் குடித்தன வரிசை வீடுகளில் அம்புயாவின் வீடு மட்டும் இருளில் மூழ்கியிருக்க மற்ற வீடுகளில் குண்டு பல்பின் வெளிச்சம் பிரகாசித்தது. சம்பள நாள் மின்சாரம்.

முதலாளியம்மாவின் தங்கை புகைபிடித்துக்கொண்டோ அல்லது அலைபேசியில் பேசிக்கொண்டோ அல்லது சில வேளைகளில் இரண்டையும் செய்துகொண்டோ நடைக்கூடத்தில் நின்றுகொண்டிருப்பார். முதலாளியம்மாவின் காரில் ஏறிக்கொண்டு வாசல் கேட்டுக்கு உள்ளும் புறமுமாக குறைந்தபட்சம் ஐந்து முறையாவது வெளியே போய் வருவார். ஒரு வாரத்திற்கு நிலைமை இப்படியே போய்க்கொண்டிருந்த பின், இன்று முதலாளியம்மா தன் முகத்தில் தீவிரமான உறுதியை ஒட்டிக்கொண்டு, காரில் ஏறி அமர்ந்தார்.

நடைக்கூடத்தின் ஓரத்தில் நின்றுகொண்டு தன் குறுகிய கண்களால் அவரைப் பார்வையிட்ட தங்கையை நோக்கி, ’எனக்கு வேலையிருக்கிறது, ஒரு வாரத்திற்கு எனக்குக் கார் தேவை, நீ வாடகைக் கார் எடுத்துக்கொள்’ என்று சொன்னார். 

‘எங்கிருந்து? இங்கே சுற்றிலும் வாடகைக் கார்களே இல்லையே?’

‘கேட்டுக்கு வெளியே போய் இடது புறம் திரும்பி, சாலையின் கோடி வரை நடந்து போ. நிறைய வாடகைக் கார்கள் அங்கே கிடைக்கும்.’

‘இரண்டே விநாடிகள் பொறு, நான் தயாராகி வருகிறேன். என்னை வாடகைக் கார் நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிடு.’

‘என்ன? இல்லை, மன்னித்துக் கொள். ஏற்கெனவே எனக்கு வேலைக்குச் செல்லத் தாமதமாகிவிட்டது , போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டார் முதலாளியம்மா.

நகர்ந்து செல்லும் காரையே பார்த்துக்கொண்டிருந்தவர் பார்வையை என் பக்கம் திருப்பினார். கேட்டை மூடிவிட்டு, அவரது பார்வையைத் தவிர்க்கும் பொருட்டு பின் பக்கமாகத் தோட்டத்துக்குப் போய்விட்டேன். சில மணி நேரங்கள் கழித்து மதிய நேரம் நெருக்கமான வேளையில் இரும்புக் கேட்டைத் தடதடவென்று யாரோ விடாமல் தட்டும் சப்தம் கேட்டது. இடைவெளியே இல்லாமல் டங் -டங் -டங்கென்று உலோகத்தின் மீது கல்லால் தட்டும் ஓசை. முதலாளியம்மாவின் அக்கம் பக்கத்தில் யாருமே இதுபோல நடந்துகொள்ள மாட்டார்கள். உறுதியாகத் தெரியும், தெருவில் செல்லும் விற்பனையாளர்கள் ஒரு முறை தட்டிவிட்டு அமைதியாகக் காத்திருப்பார்கள். ஆத்திரத்தில் வாயிலிருந்து கொட்ட வந்த வசைகளை அப்படியே விழுங்கிவிட்டு முன்வாசலை நோக்கி நடந்தேன். அங்கே முதலாளியம்மாவின் தங்கை, கையில் ஒரு கல்லோடு கேட்டைத் தட்டிக்கொண்டிருந்தார். தட்டிக்கொண்டிருந்ததில் கேட்டின் உலோக மேற்பரப்பில் ஆங்காங்கே கீறல்கள் ஏற்பட்டிருந்தன.

‘செக்யூரிட்டி, தயவுசெய்து இந்தக் கேட்டைத் திறந்துவிடு.’

தானாகவே திறந்து வெளியே செல்வது அவருக்கு மிகச் சாதாரண விஷயம்தான். ’மன்னித்துக்கொள்ளுங்கள் அம்மா,’ கேட்டைத் திறந்துகொண்டே சொன்னேன். எப்படி இருந்தாலும் இது என்னுடைய வேலைதானே?

உயரக் குதிகால் காலணி அணிந்துகொண்டு, அங்கிருந்த பெரிய பெரிய கற்கள் தட்டிவிட, தடுமாறிக்கொண்டே சாலையில் நடந்தார் அந்தச் சகோதரி. பின் மற்ற பாதசாரிகளைப் போலவே தார்ச் சாலையை அடைந்தார். ஆனால் மற்றவர்கள் கூரான குதிகால் காலணி அணிந்துகொண்டு கொதித்துக்கொண்டிருக்கும் பானை போல் இருக்கும் தார்ச் சாலையில் கால் வைப்பதில்லை. நிச்சயமாக இல்லை. உருகி, மென்மையாக இருந்த தாரில் பல முறை காலணிகள் சிக்கிக்கொள்ள, நொண்டிக்கொண்டே அதிலிருந்து விடுபட நேரிட்டது. ஒவ்வொரு முயற்சியின் போதும் பொன்னிற பிரேசில் செயற்கைக் கேசம் அலைபாய்ந்து படபடத்தது. அந்தக் காட்சியின் பார்வையாளன் நான் ஒருவன் மட்டுமல்ல, சிரித்தவனும் நான் ஒருவன் மட்டுமல்ல. அவர் அங்கிருந்து திரும்பிய போது, கேட்டுக்குப் பின்னே ஒளிந்துகொண்டேன். விரைவில் உள்ளே வருவதற்குத் திறக்கும்படி தட்டப்போகிறார். 

‘எனக்கு ஒரு வாடகைக் கார் பிடித்துத் தருவாயா?’

ம்ம், எனக்கு அதற்கு இனாம் ஏதாவது தரப்போகிறாரா என்ன? அப்படியெல்லாம் நடக்காது. ’மன்னித்துக்கொள்ளுங்கள் அம்மா, என்னுடைய பணியிடத்திலிருந்து வெளியே செல்ல எனக்கு அனுமதியில்லை. ஏதாவது அவசரநிலை இருந்தால் என்ன செய்வது?’

கண்களைச் சுருக்கிக் கேள்வி கேட்பது போலப் பார்த்தார். என்ன வகையான அவசர நிலை? ஆனால் வேறு ஏதும் சொல்லவில்லை. இந்தச் சிறிய, சாதாரண யுத்தத்தில் அவரை வென்றுவிட்டதற்கான மகிழ்ச்சியும் பெருமிதமும் என்னுள் துளிர்விட்டது.

அதன் பின் முதலாளியம்மாவின் தங்கையை நான் அதிகமாகப் பார்க்கவில்லை.. ம்ம், பொய்தான் சொல்கிறேன், வீட்டுக்குள் சென்று எலினாவின் கைக்காரியத்தில் உதவும் போதெல்லாம் அவ்வப்போது காணக் கிடைப்பார். அவர், அந்தத் தங்கைதான், நகங்களுக்குப் பூச்சு பூசிக்கொண்டிருப்பார் அல்லது இருக்கையில் கால் நீட்டிச் சாய்ந்துகொண்டு, செந்நிற மதுபானத்தைச் சுவைத்தவாறு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பார்.

ஒருநாள், சமையலறை மின்விளக்கை மாற்றிக்கொண்டிருக்கையில் கத்திக்கொண்டே அங்கே வந்தார் தங்கை. முகத்தில் கோபம் தாண்டவமாடியது. முகமெல்லாம் சிவப்பாக, உதட்டுச் சாயம் கலைந்து, ஆடைகள் சீரற்று இருந்தன. ஒரு கண் நீல வண்ணமும், மறு கண் பழுப்பு நிறமாகவும் இருக்க, சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எலினாவின் முன் ஆட்டினார்.

‘என்னுடைய பொருட்களைத் தொடாதே என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா?சொல்லியிருக்கிறேன்தானே? இப்போது என்னுடைய காண்டாக்ட் லென்ஸை உடைத்து விட்டாய்.’

பின்னே நகர்ந்து சமையலறை மேடையின் மீது ஒட்டி நின்ற எலினா, தலையாட்டிக்கொண்டே, கண்கள் விரியக் கேட்டாள். ’உங்களுடய.. எதை.. உடைத்துவிட்டேன்?’

‘என்னுடைய காண்டாக்ட், ஒன்றும் தெரியாதது போல நடிக்காதே, என்னுடைய காண்டாக்ட் லென்ஸ். உன் புண்ணியத்தால் எல்லாமே கெட்டுப்போய்விட்டன!’

‘நானில்லை, அது நான் இல்லவே இல்லை’, எலினா சொல்லிக்கொண்டே இருந்தாள்.

‘அப்புறம் யார்?’ கோபத்தில் பொங்கிக்கொண்டிர்ந்தவர், எந்த நேரமும் எலினாவைத் தாக்கிவிடத் தயாராக இருப்பது போலத் தோன்றியது.

அப்போது கேட்டில் வாகனத்தின் ஒலிப்பான் சத்தம் கேட்து. முதல் முறையாக எனக்கு உதவிசெய்ய எலினாவும் என் பின்னாலேயே ஓடிவந்தாள். கேட்டின் மற்றொரு புறத்தை இழுத்தாள். அவள் கண்களில் கண்ணீர் மின்னியது. உடனே உள்ளே போகாமல், அவளுடைய மறு பாதி கேட்டை மூடிய பின் வீட்டிற்குள்ளே சென்றாள்.

வாகனத்தை ஓட்டிக்கொண்டே வந்த முதலாளியம்மா, குழப்பத்தில் நெற்றியைச் சுருக்கியபடி எலினாவை வெறித்துப் பார்த்தார்.

‘என்ன நடந்தது? எலினாவுக்கு என்னவாயிற்று?’

‘அவர், அதுதான்… உள்ளே இருக்கும் அம்மா ஏதோ தொலைத்துவிட்டார் போல இருக்கிறது.’

முதலாளியம்மா ஆழமாக மூச்சை இழுத்தார். ’அப்படியா, நன்றி செஃபாஸ்.’

அவர் உள்ளே சென்று கதவை வேகமாக மூடியதில் ஜன்னல்கள் கடகடவென்று ஆடின. முதலாளியம்மாவின் குரல் மட்டுமே கேட்ட து. எலினாவைக் குற்றம்சாட்டும் போதே அவர் தங்கை தனது சப்தத்தை உயர்த்தும் பேட்டரிகளை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டார் போல.. உள்ளே பேசுவது நன்றாகக் காதில் விழ வேண்டுமென்று நடைக்கூடத்தினுள் சென்று, திறந்திருக்கும் ஜன்னல் பக்கம் காதை வைத்துக்கேட்டேன். குடிப்பதையும், புகைப்பதையும், தங்கையின் மற்ற கெட்ட பழக்கங்களைப் பற்றியும் முதலாளியம்மா ஆத்திரத்துடன் கத்திக்கொண்டிருந்தார்.

‘எப்போதுதான் பக்குவம் வரப்போகிறது உனக்கு? முப்பது வயதுக்கு மேலாகிவிட்டது, நீ ஒரு முதிர்ந்த பெண். உன் வயதுக்கேற்றபடி நடந்துகொள்ள வேண்டிய நேரம். என்னுடைய பணியாளர்களைத் தொல்லை செய்வதை இன்னொரு முறை கையும் களவுமாகப் பிடித்துவிட்டேனென்றால் நீ என்னுடைய மோசமான பக்கத்தைப் பார்க்க வேண்டியிருக்கும். நீ பார்க்க வேண்டும் அதை’. அடுத்த விநாடியே, பேசிக்கொண்டே முதலாளியம்மா வீசியெறிந்த இரண்டு சிகரெட் பாக்கெட்டுகள் ஜன்னல் வழியே வெளியே வந்துவிழுந்தன. ‘எங்களையெல்லாம் கொல்வதற்கு முன்னால் வெளியே போய் புகைபிடித்துத் தொலை, கடவுளே!’ 

அயே6, முதலாளியம்மாவுக்கு இப்படி ஒரு கோப முகம் இருக்கிறதென்று இதுவரை எனக்குத் தெரியாது. நான் ஒட்டுக் கேட்பதைப் பிடித்து அவர் தன்னுடைய மோசமான பக்கத்தைக் காட்டும் முன் அங்கிருந்து நழுவினேன்.

அன்று வீட்டை அடைந்ததும் ஷிஃபோ இரும்புக் கரி அடுப்பைப் பற்ற வைக்கவில்லை எனத் தெரிந்தது. அவளுடைய விற்பனைகளான வாழைப் பழங்களும் வேர்க்கடலையும் கெட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன என்று சொன்னாள். கைகளிலும் கால்களிலும் ஊசி போல் இறங்கிய கொசுக்களைத் தட்டிக்கொண்டே கறுப்பாகிப் போன வாழைப் பழங்களையும், பழையதாகிப் போன வேர்க்கடலைகளையும் சாப்பிட்டோம். சாலையின் மறுபுறத்தில் குழந்தைகளில் ஒருவன் அழுதுகொண்டே அவர்கள் பாட்டியை அழைத்துக்கொண்டிருந்தான்.

‘அம்புயா, அம்புயா, எழுந்திரு.’

ஷிஃபோவை ஏறெடுத்துப் பார்த்தேன். உணவு ஏனோ மேலும் பழையதாகி, அழுகிப் போய், விழுங்குவதற்கே கடினமாக இருந்தது போன்ற உணர்வேற்பட்டது. இப்போதெல்லாம் அம்புயா அதிக வயதானவர் போலவும் மிகவும் களைப்பானவராகவும் தென்பட்டார். சாலையோரம் உள்ள பாறைகளைச் சுத்தியலால் உடைத்து அதில் பெறும் கற்களை வீடு கட்டுவோர்களுக்கு விற்பார். வயதான பெண்மணிக்கு அது எளிதான பணி அல்ல.

‘யாராவது போய் அவரைப் பார்க்க வேண்டும்’, ஷிஃபோ கூறினாள்.

அந்தக் காரியத்தை நான் செய்ய விரும்பவில்லை. வயதான ஒரு அண்டை வீட்டுக்காரர் முன்வந்து மௌனமாக அம்புயாவின் இருளடைந்த வீட்டை நோக்கி நடந்தார். அழுகை நின்றது. விரைவில் அந்த இரண்டு குழந்தைகளும் வெளியே ஓடிவந்து நேராக ஷிஃபோவை நோக்கிப் போனார்கள். அவர்களை அரவணைத்து, தட்டிக் கொடுத்து, ஆறுதல்படுத்தி, அறைக்குள் அழைத்துச் சென்றாள் ஷிஃபோ. அப்போது அம்புயாவின் வீட்டிலிருந்து வந்தவர், ‘யாராவது போய் போலீசைக் கூட்டி வாருங்கள்’ என்று சொன்னார்.

ஒண்டுக் குடித்தன வீடுகளிலிருந்து கொஞ்சம் பணம் வசூலிக்கப்பட்டது. அதிகம் தேறவில்லை, ஆனால் மறுநாள் அம்புயாவின் மகன் காப்பர்பெல்ட் பகுதியிலிருந்து இங்கு வந்துசேரும் வரை நிலைமையைச் சமாளிக்க உதவும். அண்டை வீட்டுக்காரர்களாகிய நாங்களும், அம்புயாவின் தேவாலய நண்பர்களும் அவர் வீட்டில் கூடியிருந்தோம். ஆண்கள் தாழ்வாரத்திலும், பெண்கள் அறையினுள்ளுமாக, பேரக் குழந்தைகள் ஷிஃபோவுடன் ஒட்டிக்கொள்ள, சூழலின் பச்சை வண்ணம் எங்களுடன் ஒட்டிக்கொண்டது. அது மிக மோசமான நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. ஏதாவது பயங்கரமான நோய்த்தொற்று ஏற்படும் முன் இப்படித்தான் மோசமாக நாற்றமடிக்கும். துக்கம் அனுஷ்டிக்க வந்தவர்கள் சிலர் காலரா மீண்டும் வந்துவிட்டதெனப் பேசிக்கொண்டார்கள்.

‘இப்படித்தான் ஆரம்பிக்கும், முதலில் வயதான பெண்களுடனும் குழந்தைகளுடனும்.’

இதுபோன்ற நேரங்களில் முதலாளியம்மாவுடையதைப் போல பெரிய கார் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக்கொள்வேன். அதை ஓட்டிக்கொண்டு அப்படியே இந்தப் பச்சை நீரோடையை விட்டு விலகி நெடுந்தூரம் சென்றுவிட வேண்டும். நெரிசலான தெருக்களையும், கூச்சல் மிகுந்த மதுக்கூடங்களையும். தெருவோர வியாபாரிகளையும் அவர்களிடம் கடனுக்கு வாங்கும் கோழி இறைச்சியையும் விட்டுச்சென்றுவிட வேண்டும். என் தம்பி பேட்ரிக் விட்டுச்சென்றது போல. அவன் முதலாளியம்மாவின் வீட்டை விடப் பெரிய சுற்றுப்புறத்தில் வாழ்கிறான். அங்கே பல வீடுகள் இல்லை, அவனுடைய ஒரே பங்களா மட்டும் உண்டு. அவனுடைய காவல்காரன் அவனுக்கு மட்டுமே பணிபுரிகிறான். அங்கு வேறெந்த மூன்று வீடுகளுக்கும் பணிபுரிவது இல்லை.

அதிகமான குளிரை உணராத போதும் இரும்புக் கரி அடுப்பின் முன் குனிந்து கைகளிரண்டையும் நீட்டி அதன் வெம்மையில் குளிர் காய்ந்தேன். பேட்ரிக்கைவிட நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன். நானும் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருக்கலாம். ஆனால் எனக்குப் பொறுமையில்லை. உடனடியாகப் பணம் வேண்டியிருந்தது. அதனால் காவல்காரன் வேலையை எடுத்துக்கொண்டேன். பேட்ரிக் பல்கலைக்கழகம் சென்றான். நான்காண்டுகள் அனைத்தையும் இழந்தான்.. ஆனால் இப்போது எல்லாமே இருக்கிறது. கோழி இறைச்சியைக் கடனுக்கு வாங்குவதில்லை. இதுபோன்ற பத்து இரும்புக் கரி அடுப்பை அவனால் அவன் மனைவிக்கு வாங்கித்தர முடியும்.

‘செஃபாஸ், இரண்டு நாட்களாக எங்கே போனாய்?’

‘மன்னித்துக்கொள்ளுங்கள் அம்மா, ஒரு இறுதி யாத்திரை. என்னுடைய பாட்டி இறந்துவிட்டார்.’ அது ஒரு வகையில் உண்மைதான். அம்புயா அனைவருக்கும் பாட்டியாக இருந்தவர்.

முதலாளியம்மாவின் கோபம் தணிந்தது. ’எனது ஆழ்ந்த வருத்தங்கள். ஆனால் இனிமேல் விடுப்பு எடுத்தால் தயவுசெய்து ஃபோன் செய் அல்லது செய்தி அனுப்பிவிடு.’

‘சரிங்க அம்மா.’

அவருடைய பணப்பையிலிருந்து சில நோட்டுகளை எடுத்து என் கையில் கொடுத்தார். என் தோளை அசூசைய கலந்த இரக்கத்துடன் தட்ட வருபவர் போல அவரது கைகள் ஒரு குறுகிய கணத்திற்கு அப்படியே நின்றன. நல்லவேளையாக அவர் அப்படிச் செய்வதற்கு யோசிப்பவர் போல தயங்கி நிற்கையில் அங்கிருந்து தப்பியோடி கேட்டைத் திறக்கச் சென்றேன். இந்தத் தர்மசங்கடமான நிலைமையை நடைக்கூடத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்தாள் எலினா. இதை ஏற்காதவள் போலத் தொண்டையைச் செருமி விசித்திர சப்தமெழுப்பியவள், மீண்டும் தரைக்குப் பாலீஷ் போடும் வேலையைத் தொடர்ந்தாள்.

நடைக்கூடத்திலிருந்து சற்றுத் தள்ளி நின்றுகொண்டே, ’உனக்கு என்ன பிரச்சினை இப்போது?’ என்று அவளிடம் கேட்டேன். அந்த பாலீஷ் தொழிற்சாலகளில் பயன்படுத்தப்படும் பேரஃபின் மெழுகு போல வாசனை வீசி எனக்கு வயிற்றைப் பிரட்டுவது போல இருந்தது.

‘அயே, உன்னுடைய பாட்டி எப்போதோ இறந்துவிட்டார் செஃபோஸ். பொய் சொல்வது பாவம். நீ பாவம் செய்த மனிதன்.’

‘ஆமாம், இப்படியே பேசிக்கொண்டே இரு. என்னை எரிச்சல் படுத்திக்கொண்டே இரு. நான் அந்தத் தங்கையைக் கூப்பிட்டு உன் வாயை அடைக்கப் போகிறேன் பார்.’

எலினா சிரித்தாள். அங்கு நடந்த நாடகத்திலிருந்து முற்றிலும் விலகி வந்துவிட்டவள் போல இருந்தாள். ‘ஆமாம், ஆமாம், அவர் பைத்தியம்தான். அந்த காண்டாக்ட் லென்ஸ், அதுவும் நீல வண்ணம் .. என்னைப் பார்த்தால் அந்த நீலக் கண்ணுக்கெல்லாம் நேரம் இருப்பவள் போலவா தெரிகிறது?’

அங்கேயே நின்றபடி எலினாவுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க எனக்கும் விருப்பம்தான். ஆனால் இரண்டு நாட்களாக வராத காரணத்தால் வேலைகள் மலை போலக் குவிந்து கிடந்தன. வாரி ஒதுக்கப்பட வேண்டிய இலைகள், நீர் பாயச்ச வேண்டிய புல்வெளி, அளவாக வெட்டப்பட வேண்டிய பந்தல் கொடிகள். கொல்லைப் பக்கத் தோட்டத்தில் அந்தக் கொடிகளைச் சுற்றிலும் உள்ள வேலையைப் பார்க்க வருகையில் மதிய நேரமாகி விட்டது. வெக்கை என்னை ஒரு போர்வை போலச் சுற்றியிருந்தது. சூடு, மூச்சுத் திணறல் எல்லாமே.. எனக்கு சில்லென்ற குளிர்ந்த நீர் அருந்த வேண்டும், குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். ஆனால் கிடைத்ததென்னவோ கண்களின் மீது சொட்டும் வியர்வைக் கோடும், கழுத்தின் பின்புறமாகக் காந்தும் அனற்சூடும்தான். சூனியக்காரியைக் கத்தியால் குத்துவது போல சம்பங்கிக் கொடிகளைக் கொடூரமாக வெட்டினேன். அப்போது எதேச்சையாக சில வாரங்களுக்கு முன் முதலாளியம்மாவின் தங்கையின் பெட்டிகளை வைத்த அறையின் ஜன்னலின் மீது என் பார்வை பட்டது. வெட்டுவதை நிறுத்தினேன்.

ஜன்னலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அவர் தூங்கிக்கொண்டிருந்தார். அவருக்குப் பக்கவாட்டிலிருந்த தலையணை மீது பிரேசில் கேசம் கிடந்தது. அது பின்னப்படாத செயற்கைக் கூந்தல். முதலாளியம்மா தங்கையின் தலையில் அவருடைய சொந்த முடி மிகவும் நுணுக்கமாக, ஊசியைப் போல, சோளக் கருது பின்னலிடப்பட்டிருந்தது. அதுவும் நன்றாகவே இருந்தது. ஆனால் கழற்றி வைக்கப்பட்டிருந்த அந்த நீளமான பட்டு போன்ற கேசத்தின் விலை, போனஸ், என்னுடைய மற்றும் ஷிஃபோ இருவரின் கூலியும் இணைந்து மூன்று மடங்கு அதிகம். முதலாளியம்மாவின் தங்கை லண்டலிருந்து வந்திருப்பவர், பணக்காரர். இன்னொரு செயற்கைக் கூந்தல் எளிதாக வாங்கிக்கொள்ளலாம். ஆனால் என்னைப் போன்ற ஒருவனுக்கு அப்படியில்லை, என்னுடைய அழகான மனைவிக்கு, அவள் விருப்பப்பட்ட ஒன்றை, அதைப் பெற எல்லா வகையிலும் தகுதி படைத்தவளுக்கு வாங்கித் தருவதற்கான வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது.

ஜன்னலுக்கு உள்ளே கையை நீட்டினேன்.

முதலாளியம்மாவின் தங்கை அப்போதும் தூங்கிக்கொண்டிருந்தார். 

அதை எடுத்து என்னுடைய சட்டைக்குள் திணித்துக்கொண்டு வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டேன். அந்தச் சூட்டில் நெஞ்சுக்குள் ஒரு தலையையே நிறைக்கும் முடிக் கற்றைகள் பொதிந்திருக்க, சம்பங்கிப் புதரை வெட்டிச் சீராக்குவது கொடுமையாக இருந்தது.

வீட்டை அடைந்த போது அன்றும் ஷிஃபோ சமையல் செய்யாமல் உயிரற்ற கரி அடுப்புக்குப் பக்கத்திலிருந்த ஸ்டூலில் அமர்ந்திருந்தாள். மக்காச் சோளக் குருணை, கப்பெண்டா7 (மீன்), சமையல் எண்ணெய், வெங்காயம், தக்காளி எல்லாமே இருந்தன. அவள் ஏன் சமையல் செய்யவில்லை?

’ஏன் சமைக்கவில்லை?’ அவளுக்குக் கொண்டு வந்த பரிசை சட்டைக்குள்ளிருந்து உருவி முன்னே நீட்டும் என் திட்டத்தை நிலுவையில் வைத்தேன்.

சாலையின் எதிர்ப்புறம் இருந்த வீட்டையே அவள் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். புதியதாக ஒரு குடும்பம் குடியேறியதால் நிலவிய சந்தடியில் அந்த இடம் மீண்டும் சுறுசுறுப்பாக மாறியிருந்தது. அங்கு, முற்றத்தில் கொதிக்கும் பானை ஏற்றப்பட்டிருந்த கரி அடுப்பைச் சுற்றி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த சிறுமியை உதைத்து விடுவேனென்று அவள் அம்மா கத்திக்கொண்டிருந்தார்.

‘காப்பர்பெல்ட் மாமா குழந்தைகளை விட்டுவிட்டு, அம்புயாவின் படுக்கையையும் மேசையையும் எடுத்துக்கொண்டு போய் விட்டார். குழந்தைகள் பாவம், அழுதுகொண்டே இருந்தார்கள்’ என்று ஷிஃபோ கூறினாள்.

சில வேளைகளில் இப்படித்தான் நடக்கும். இங்கு தேவைக்கும் அதிகமாகக் குழந்தைகள் இருக்கிறார்கள். சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டே, செயற்கைக் கேசம் உறுத்திய வயிறைச் சொரிந்துகொண்டேன்.

‘அந்தக் குழந்தைகள் எங்கே?’

‘அம்புயாவின் சர்ச் நண்பர்கள் பள்ளிக்குக் கூட்டிச் சென்றார்கள்.’

அது அந்தப் பகுதியின் சமூக அனாதை இல்லம். ’அவர்கள் அங்கே நலமாக இருப்பார்கள். நாம் எப்போதாவது போய்ப் பார்த்து வரலாம்.’

மனச் சமாதானம் அடையாமல் எழுந்து நின்றவள், எதிர்ப்பக்க வீட்டிலிருந்த மகிழ்ச்சியான குடும்பத்திற்கு முதுகைக் காட்டி நின்றுகொண்டாள். ’உனக்கு ஏதாவது சாப்பாடு செய்து தருகிறேன்.’

ஷிஃபோவின் குரல் உற்சாகமில்லாமல் ஒலித்தது. அவள் உடல் மந்தமாக இருந்தது. உள்ளே சென்றவளை அவள் கன்னத்தைத் தடவி நிறுத்தினேன். ’பரவாயில்லை, இன்று மதுக்கூட உணவகத்தில் சாப்பிடலாம். முதலாளியம்மா கொஞ்சம் பணம் தந்தார்.’

அவள் கண்களில் ஆர்வம் மின்னியது. ’உண்மையாகவா?’

’ஆமாம், உண்மைதான்.’ அதன் பின், மறைத்து வைத்த இடத்திலிருந்து செயற்கைக் கேசத்தை எடுத்துக்காட்டி, ’அவர் இதையும் கொடுத்தார், நீ குளித்துவிட்டு இதைப் பொருத்திக்கொண்டு வரலாமில்லையா?’ என்று கேட்டேன்.

மதுக்கூடத்தில், ஷிஃபோ தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டியும், விரல்களைக் கூந்தலில் அளைய விட்டும் அது செயற்கை இழையாலானதல்ல, இயற்கையான மனிதக் கேசமென்று அவளுடைய தோழிகளுக்குத் தெளிவாகத் தெரியுமாறு உறுதி செய்துகொண்டாள். அவள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண எனக்கு மிகவும் நிறைவாக இருந்தது. நாங்கள் நிஷிமாவும், சுட்ட எலும்பும் அதனுடன் முதலாளியம்மா கொடுத்த எல்லாப் பணத்தையும் குடித்துத் தீர்த்தோம். புதுப் பாடல்களுக்கு நடனம் ஆடினோம், உலகத்தின் மிக அழகான மயில் போல ஷிஃபோ மிளிர்ந்துகொண்டிருந்தாள்.

மண்டையைப் பிளக்கும் தலைவலியோடும் உறக்க மயக்கத்தில் மயங்கிய கண்களோடும் பணிக்குத் தாமதமாகப் போய்ச் சேர்ந்தேன். முதலாளியம்மாவும் தாமதமாகவே கிளம்புகிறார் என்பதைக் கவனித்தேன். அவருடைய வாகனம் நிறுத்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் இன்னும் இருந்தது. ஜகரந்தா மரத்தினடியிலிருந்த புற்களுக்கு நீர் பாய்ச்சுகையில் அப்படியே தூங்கி வழிந்துவிட்டேன். புல்வெளியின் மேற்பரப்பில் கிடந்த மலர்கள் ஊதா நிறத்தை இழந்து, துயரம் மிக்கதாக உதிர்ந்து, பழுப்பு வண்ணத்திற்கு மாறியிருந்தன. முன்கூடத்தைக் கடந்து என்னிடம் பேசுவதற்காக எலினா வந்தாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

‘உனக்குத் தெரியுமா, முதலாளியம்மாவின் தங்கை அவருடைய  கேசத்தைத் தொலைத்து விட்டார்.’

ஆச்சரியப்படுபவன் போல நடிக்க முயன்றேன். அது அவ்வளவு எளிதல்ல. ’என்ன? கேசத்தைத் தொலைத்துவிட்டாரா? எப்படி?’

‘யாருக்குத் தெரியும்? எப்போது பார்த்தாலும் குடி, எங்காவது போதையில் மறந்து வைத்துவிட்டு வந்திருப்பார்’. வரவேற்பறையின் ஜன்னலின் மீது பார்வையைச் செலுத்தியவள் குரலைத் தணித்துக்கொண்டு கூறினாள். ’அதற்காக அழுதுகொண்டிருப்பதை அவர் நிறுத்தவேயில்லை. அது உண்மையான கண்ணீர்தான்.’

‘அந்த அழுகையினால்தான் முதலாளியம்மாவும் இன்னும் வேலைக்குக் கிளம்பவில்லையா?’

‘ஒரு அல்ப செயற்கை கேசத்திற்காக…’

‘ஒரு சிலர் இப்படித்தான். ஹ்ம்ம்’

முதலாளியம்மாவின் தங்கை முன்னறையிலிருந்து வேகமாக வெளிப்பட்டு நடைக்கூடத்துக்கு வந்தபோது நாங்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டோம். வெறுங்கால்கள், மதுக்கறை படிந்த உடை. அப்படியே சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, புகைத்தபடியே மேலும் கீழும் நடை போட்டார். புகை இழுப்புகளுக்கிடையே ஜன்னல் வழியாக முதலாளியம்மாவை நோக்கிக் கத்திக்கொண்டிருந்தார். சப்தமெழுப்பும் பேட்டரிகளை நிச்சயமாக மீண்டும் நிரப்பிக்கொண்டு விட்டார்.

‘உனக்குப் புரியவில்லையா? அவ்வளவு கல்நெஞ்சுக்காரியா நீ? என்னால் திரும்பிப் போக முடியாது. என்னிடம் பேப்பர்கள் இல்லை. நான் போட்டிருப்பதும், அந்தப் பெட்டிகளில் இருப்பதும்தான் என்னுடைய எல்லாமே. என்னுடைய பத்து வருட வாழ்க்கை இது. வெறும் செயற்கைக் கேசமா?‘

அவர் சிரித்தபோது குரலில் அடக்க முடியாத வெறியும் வெறுப்புமிருந்தது. ’இது எவ்வளவு கஷ்டம் என்று உன்னால் புரிந்துகொள்ளவே முடியாது.’

‘எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்?’ கிசுகிசுத்தாள் எலினா.

நான் தோளைக் குலுக்கினேன். ’எனக்குத் தெரியவில்லை, ஏதாவது நியூஸ் பேப்பர் பற்றியதா?’

முதலாளியம்மாவின் தங்கை நாள் பூராவும் இப்படியே கத்திக்கொண்டிருக்கக் கூடாதென்பதை நான் அறிவேன். இருந்தும் அவர் கத்துவதைப் பொருட்படுத்தாமல் செடிகளுக்குத் தண்ணீர்விட்டேன், புல்வெளியை வெட்டிச் சீராக்கினேன், வீட்டிற்குச் சென்று வலியால் இரண்டாகப் பிளக்கும் தலையைச் சாய்த்து ஓய்வெடுக்கப் போகும் நேரத்தை எதிர்நோக்கிக்கொண்டிருந்தேன்.

*

சொல்லகராதி:

  1. நிஷிமா – மக்காச் சோள ரவையால் செய்யப்படும் ஸாம்பியா நாடு உணவு வகை
  2. கம்போனி – சிறிய குடியிருப்பு (காம்பவுண்டு என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து உருவானது)
  3. மும்மானா – ஆறு
  4. க்வாச்சா – ஸாம்பியா நாட்டுப் பணம்
  5. அம்புயா – பாட்டி
  6. அயே – ஆச்சரியத்தைக் குறிக்கும் சொல்
  7. கப்பெண்டா – கருவாடு

*

எழுத்தாளர் குறிப்பு: ம்போஸி ஹைம்பே (Mbozi Haimbe), ஸாம்பியா நாட்டின் தலைநகரான லுசாக்கா நகரில் பிறந்து வளர்ந்தவர். புனைவு மற்றும் படைப்பிலக்கியத்தில் காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பட்டப் படிப்பு பயின்றவர். தற்போது ஆப்பிரிக்கா வாழ்வியலின் தாக்கத்தில் உருவாகும் சிறுகதைத் தொகுப்புக்கான பணியில் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய இந்தக் கதை ’Madam’s sister’ காமன்வெல்த் போட்டியில் சிறந்த ஆப்பிரிக்கச் சிறுகதைக்கான விருது பெற்றது. 2020ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுகச் சிறுகதைகளைப் பிரசுரிக்கும் The Pen America Dau Prize தொகுப்பிலும் இவரது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. தற்சமயம் தன் குடும்பத்துடன் ஐரோப்பாவின் நோர்ஃபோக் நகரில் வசித்துவரும் ம்போஸி, சிறந்த சமூக சேவகரும் ஆவார்.  

1 comment

Kasturi G October 20, 2021 - 8:02 pm

Very Good take on Zambian cultural history and common Citizen’s life.
Salutations to the Authour Mbozi Haimbe and Translator Latha
Thanks

Comments are closed.