அந்த நீர்தான், அதே நீரன்று: வி.அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ 

by மானசீகன்
0 comment

நவீன மனிதனின் மெய்யியல் தேடல்களை விவரிக்கும் நாவல்கள் தமிழில் பெரிய அளவில் இல்லை. சிலர் உடனே ‘ பொய்த்தேவில்’ வரும் சோமு முதலியைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். லௌகீகத்தின் தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் துறவையோ அல்லது அதற்கு நிகரான காவி வேஷத்தையோதான் தமிழின் பல நாவல்கள் ஆன்மீகம் என்ற பெயரில் பேசியிருக்கின்றன. ஜெயகாந்தன் காவியை உடுத்தியவுடனே ஒருவனைச் சகலமும் அறிந்த ஞானியாக்கி விடுவார். அந்தச் சாமியாரின்/ பைத்தியக்காரனின் ஆணவம் நிரம்பிய அலட்டலான சவுக்கடிக்கு முன் சாதாரண மனிதன் ஒடுங்கி நிற்பதே அவர் கண்டுபிடித்த (?) ஆன்மீகம். ஜெயமோகனின் பல கதைகளில் ஆன்மீகம் உண்டென்றாலும் அவருக்கு மரபின் பெருமையும் தத்துவ விவாதங்களுமே முக்கியம். ஆனால் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய ‘சித்தார்த்தா’ பாணியில் நவீன மனிதனின் அகத்தில் உருவாகும் மதம் கடந்த மெய்யியல் தேடல்களையும் அந்தப் பயணத்தால் உருவாகும் அக- புற விளைவுகளையும் விரிவாகப் பேசிய நாவல் இங்கே இல்லை. வி.அமலன் ஸ்டேன்லி எழுதிய ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ நாவலைத் தாராளமாக அந்த வரிசையில் வைக்கலாம். ஆனால் இந்த நாவலின் பொருண்மையை மெய்யியல் தேடலாக மட்டுமே சுருக்கிவிட முடியாது என்பதுதான் இதன் பலமும் பலவீனமாகவும் இருக்கிறது.

அமலன் ஸ்டேன்லியின் சொந்த வாழ்க்கை குறித்த மிகையில்லாத குறிப்புகளே இந்த நாவல்.
உணர்வெழுச்சியைத் தூண்டும் அபாரமான தருணங்களையும் அவர் கண நேரத்தில் மின்னி மறையும் சுடராகவே காட்சிப்படுத்தியிருக்கிறார். வழக்கமாக சுயசரிதைகளில் நிகழ்ந்துவிடும் புனிதப்படுத்தல்களையோ வலிய உருவாக்கிக்கொள்ளும் கற்பனைகளையோ இந்த நாவலில் துளியளவும் உணர முடிவதில்லை. ஜெர்ரி என்பது அமலன் ஸ்டேன்லியேதான். ஆனால் ஜெர்ரி நமக்குள் உருவாக்கும் உணர்வலைகளுக்கும், அமலன் ஸ்டேன்லிக்கும் தொடர்பே இல்லாமல்கூட இருக்கலாம். ஏனென்றால் அவர் தனக்குள் நிகழ்ந்தவற்றையும் தன் முன்னால் கடந்து போனவற்றையும் நமக்குத் தொகுத்துத் தந்திருக்கிறார். ஒரு அர்த்தத்தில் சுயசரிதையாக நினைத்து அவர் உருவாக்கிய நூலை நாவலாக உருமாற்றுவது அவரவர் அகத்தின் மெய்யியல் தேடல்கள்தான். அவருடைய நுணுக்கமான சித்திரிப்பு அதற்குத் துணை நிற்கிறது, அவ்வளவுதான்.

அமலன் ஸ்டேன்லி கிறிஸ்தவர் என்பதால் இந்த நாவலை கிறிஸ்தவ மெய்யியல் நாவலாகச் சுருக்கிவிட முடியாது. நாவலின் மிகப்பெரிய பலம் கடைசி வரை அறுபடாமல் இழையோடும் பன்மைத்துவம்தான். நாவலாசிரியரின் வாழ்க்கையே அப்படித்தான் அமைந்திருக்கிறது.  தெலுங்கு பேசும் நாயுடுவாக பட்டாமணியார் குடும்பத்தில் பிறந்து இடதுசாரியாகவும் பெரியாரிஸ்டாகவும் வளர்ந்து ரயில்வேயில் பணிபுரியும் விஜயராகவன், நாகப்பட்டினத்தின் வேளாளர் சாதியிலிருந்து மதம் மாறிய ஆசிரியையும் கத்தோலிக்க கிறிஸ்தவருமான மேரியை சுயமரியாதைத் திருமணம் புரிகிறார். ஆரம்பத்தில் மதம் தாண்டிய வாழ்க்கையையே இருவரும் வாழ்கின்றனர். இருவரும் திராவிடர் கழகத்தில்கூட பொறுப்பு வகிக்கின்றனர். அவர்களுக்கு எட்டு குழந்தைகள். ஏழாவதாகப் பிறந்த கென்னடியின் அகால மரணம் அவர்கள் குடும்பத்தை நிலைகுலையச் செய்கிறது. பிள்ளைகளின் பெயரை மாற்றி குடும்பமே கிறிஸ்தவத்தை பற்றிக்கொள்கிறது. எட்டாவதாகப் பிறந்த ஜெர்ரியின் லௌகீகம் சார்ந்த அலைக்கழிப்புகளும் மெய்யியல் தேடல்களுமே நாவல் முழுவதும் பேசப்படுகின்றன.

நாவலின் முக்கால் பகுதி வரை ஜெர்ரியும் அவன் நண்பன் சேவியரும் கதையைச் சொல்கின்றனர். ஜெர்ரி தன் அகத்தைச் சொல்வதாகவும் சேவியர் அவன் புற வாழ்க்கையை விவரிப்பதாகவும்  அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். திடீரென்று சேவியர் மறைந்து போக ஜெர்ரி மட்டுமே கதையைச் சொல்கிறான். ஜெர்ரி தன் புறச்சூழலைக் கடந்து அகமாக மட்டுமே எஞ்சியிருப்பதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே ஸ்டேன்லி குறிப்புணர்த்தியிருக்கிறார்.

பொதுவாக அகத் தத்தளிப்புகளைப் பேசும் நாவல்களில் புறச்சூழல்கள் துல்லியமாகச் சித்திரிக்கப்படுவதில்லை. ஆனால் நுணுக்கமான தகவல்கள் நிரம்பிய புறச்சித்திரிப்பே இந்த நாவலின் மிகப்பெரிய பலம். சுயசரிதையை நாவலாக உருமாற்றியதில் அந்த விவரணைகளுக்கும் பெரும் பங்குண்டு. அவன் வசித்த மேட்டுத்தெரு, ரயில்வே காலனி, நாகப்பட்டிணம் மூன்றுமே அப்படியே நம் கண்ணுக்குள் நிற்கின்றன. அம்மாவை மீறி 1957 சட்டமன்றத் தேர்தலில் தன் அப்பா திமுக சார்பாக நின்றிருந்தால் தங்கள் வாழ்க்கை என்னவாக இருந்திருக்கும் என்று ஜெர்ரி யோசிக்கிற இடம் நாவலில் வருகிறது. ‘பெரியார்தான் அவன் தாத்தா’ என்று சேவியர் நினைக்கிற அளவுக்கு அவர்கள் வீட்டில் ஒருவராகவே பெரியார் புகைப்படங்களில் உரிமையோடு தோளில் கை போட்டு நின்றிருக்கிறார். அவன் அப்பா எமர்ஜென்ஸியில் போராடி சிறை செல்கிறார். இலங்கைப் பிரச்சினை, இந்திரா மரணம், எண்பதுகளின் அரசு ஊழியர் போராட்டம், ராஜீவ் மரணம் ஆகிய நிகழ்வுகள் நாவலில் ஓரிரு வரிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. இரண்டே இரண்டு துண்டுக் காட்சிகளில் எண்பதுகளில் உருவாகியிருந்த அரசியலுக்கும் ரௌடியிசத்திற்குமான தொடர்பு நமக்கு விளங்கிவிடுகிறது. ஒற்றைக்கண் சிவராசனை காவல்துறை தேடிக்கொண்டிருக்கும் போது சந்தேக வளையத்தில் ஜெர்ரியும் அவன் நண்பர்களும் சிக்கிக்கொள்கிற அவலம் நிறைந்த சம்பவத்தை வழவழவென்று இழுக்காமல் சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறார்.

வண்டியோட்டியின் பக்கத்தில் உட்கார்ந்ததற்காக ஜெர்ரியைத் திட்டும் அவ்வாவின் சாதி மேலாதிக்க உணர்வும், கல்விக் கூடங்களிலும் பணியிடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதி சார்ந்த குழுவாதமும் ஸ்டேன்லியால் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. பி.ராமமூர்த்தி பெரியாரைக் கூடுதலாக விமர்சிப்பதற்குப் பின்னணியில் இருக்கிற சாதி ரீதியான உணர்வை விஜயராகவன் அப்போது கம்யூனிஸ்டாக இருந்தும் மகனிடம் விமர்சித்துப் பேசுகிறார். புறச்சூழல்களை இவ்வளவு விரிவாகப் பேசியவர், தொண்ணூறுகளில் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் தமிழ் மண்ணில் எழுச்சி பெறத்தொடங்கிய இந்துத்துவம் குறித்து ஓர் இடத்தில்கூட பேசவேயில்லை. கிறிஸ்தவரான ஸ்டேன்லியின் படைப்பில் நிகழ்ந்திருக்கும் இந்த விடுபடல் ஆச்சரியமூட்டுகிற ஒன்றுதான். ஆனால் அவர் மன ஆழத்தில் தன்னைக் கிறிஸ்தவராக உணரவில்லை என்பதையும் அவருடைய கலவையான குடும்பச் சூழலையும் எண்ணிப் பார்க்கிற போது இந்த விடுபடலை இயல்பான ஒன்றாகவே ஏற்றுக்கொள்ள முடிகிறது. இந்தப் புள்ளியில் இருந்தே ஜெர்ரியின் மெய்யியல் தேடல்களை மதிப்பிடலாம்.

நாவலில் கிறிஸ்தவப் பின்புலம் விரிவாகவே பேசப்பட்டிருக்கிறது. புனிதர்களின் கல்லறைகளைப் பார்க்கிற போது ‘எங்கோ பிறந்து சம்பந்தமே இல்லாத வேறொரு தேசத்தில் செத்துப்போன அந்தப் பாதிரிகளின் அகம் கடைசித் தருணத்தில் என்ன யோசித்திருக்கும்?’ என்று ஜெர்ரி சிந்திப்பதாக நாவலில் ஒரு காட்சி வரும். மதம் தாண்டிய மனித அகத்தின் தேடல்களையே ஜெர்ரி முக்கியமானதாகக் கருதுகிறான் என்பதைக் குறிப்புணர்த்துகிற இடம் இது. பாரப்பாஸ் பற்றிய குறிப்பு, தாவீது, மக்தேலனா பற்றிய தொன்மங்களும் கிறிஸ்தவம் சார்ந்த கொண்டாட்டங்களும் ‘விசுவாசக் கப்பலொன்று வருகிறது’ என்று உருகும் சாராள் அம்மையாரின் பாடல்களும் ஒரு பிரம்மாண்டமான தேவாலயத்தின் பேரமைதியை நமக்குள் நிரப்பிவிடுகின்றன.

ஜெர்ரியின் மன இயல்பைக் கிறிஸ்தவமே தீர்மானிக்கிறது. அவனுடைய மெய்யியல் தேடலின் அடிநாதம் கால் வலிக்க நடந்து உச்சத்தைத் தொடுவதல்ல. மலையேறிய பிறகும் ஆட்டுக்குட்டியை அணைத்தபடி கீழிறங்கும் மேய்ப்பனாக ஜெர்ரி இருப்பதற்கு அவனையும் மீறி ஊடுருவியிருக்கும் கிறிஸ்தவமே மிக முக்கியமான காரணம். கிறிஸ்தவத்தின் அதிமுக்கியமான இருமைகளான சேவை, குற்றவுணர்வு ஆகிய இரண்டாலும் நிரப்பப்பட்டவனாகவே ஜெர்ரி இருக்கிறான். படிக்கிற காலத்திலேயே விதவைகளுக்கு ஹார்லிக்ஸ் வழங்குவதில் தொடங்கி, கம்யூனிஸ்டாக இருக்கிற போது, துப்புரவுத் தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்கும் நாளொன்றில் மார்க்கெட்டை நண்பர்களோடு சென்று கூட்டும்போது மிளிரும் பொறுப்புணர்விலும், சேரிப் பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கும் கருணையிலும், சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்காகத் துணை நிற்பதிலும் அவனுக்கான ஆன்ம பலத்தை கத்தோலிக்க கிறிஸ்தவமே தந்திருக்கிறது. ஆனால் அந்தப் போர்க்குணத்தில் பெரியாரிஸ்டும் தொழிற்சங்கவாதியுமான தந்தையின் ஆளுமைக்கும் பங்கிருக்கிறது. சமூகச் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில் அவன் விடுதலை இறையியல் முன்வைக்கும் நவீன இயேசுவாகவே வெளிப்படுகிறான். ‘உன் பலத்தோடேயே போ. உன்னை அனுப்பி வைப்பவன் நானல்லவா?’ என்கிற வேதாகம வாசகத்தை ஒருமுறை ஜெர்ரி தனக்குள் சொல்லிக்கொள்வான். உண்மையில் ஜெர்ரியின் சமூகச் செயல்பாடுகளுக்கான கிரியா ஊக்கியே இந்தச் சொற்கள்தான்.

ஆனால் நாவலில் எந்த இடத்திலும் கிறிஸ்தவ மதம் புனிதப்படுத்தப்படவில்லை. சாதாரணமாகச் சண்டை போட்டுக்கொள்கிற மாணவர்களைக்கூட தனிமையில் அழைத்து ‘நீ பெண் உடலை நிர்வாணமாகப் பார்த்தாயா?’ என்று கேட்கும் பாதிரிகளை அவர் போகிற போக்கில் சித்திரித்திருக்கிறார். ‘தீர்க்கதரிசி இயேசு சொன்ன வாசகத்தை உல்டாவாக்கி ‘புற்றுக்கட்டியால் வருந்துகிறவர்களே! உங்களுக்காக நாம் கட்டிகளைச் சுமக்கிறோம். சீக்கிரம் குணமாவீர்கள்’ என்று ஆய்வுக்கூடத்தின் சோதனை எலியைச் சொல்ல வைத்துப் பகடி செய்திருக்கிறார். ஜெர்ரியின் அப்பா நாவல் முழுவதும் கிறிஸ்தவத்தின் மீதான விமர்சனத்தையே தொடர்ந்து முன்வைக்கிறார். பொங்கலை முன்வைத்து சர்ச்சுக்குப் போகும் மனைவியை எள்ளலோடு கிண்டல் செய்கிறார். இந்த விமர்சனங்களையும் பகடிகளையும் ஸ்டேன்லி சமநிலைப்படுத்துவதற்காகவோ மத வெறுப்பிலிருந்தோ செய்யவில்லை. கதையின் போக்கில் இவை இயல்பாக எழுதப்பட்டிருக்கின்றன. மண்ணின் மரபுகளை ஏற்றுக்கொண்டு இயைந்து வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பெருந்தன்மையான மனதையே ஸ்டேன்லியும் தன் எழுத்து வழி பிரதிபலித்திருக்கிறார். ‘ஏழு தலைமுறைகளுக்குப் பிறகே மனிதனின் மரபார்ந்த குணங்கள் மாற்றத்திற்கு உள்ளாகும்’ என்கிற தகவலைச் சொல்லிவிட்டு இதைத்தான் இயேசு ‘ஏழேழு தலைமுறைக்கும் கேள்வி கேட்பேன்’ என்று சொல்லியிருக்கிறாரோ?’ என்று ஓரிடத்தில் வினவுகிறார். இது வெறும் கேலியா அல்லது சமகால அறிவியலை பைபிளோடு இணைத்துப் பொருள் கொள்ளும் முயற்சியா என்பதைக் கண்டறிய முடியாத அளவுக்கு ‘மய்யமாக’ எழுதியிருக்கிறார். உண்மையில் இந்த இயல்பே ஸ்டேன்லியின் கிறிஸ்தவ விசுவாசத்தை அளக்கும் கருவியாக இருக்கிறது.

ஆனால் ஜெர்ரி வழியாக கிறிஸ்தவம் தம் விசுவாசிகளின் மனமெங்கும் பாசியைப் போல் படரவிட்டிருக்கிற குற்ற உணர்வை நுட்பமாகக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார். இந்த நாவலில் குற்ற உணர்வு கொள்ளாத பாத்திரங்களே இல்லை. தன் மதத்தை விட்டு விலகியதே கென்னி சிறுவயதிலேயே மரணித்ததற்குக் காரணம் என்கிற குற்ற உணர்வே மேரியை ஆட்டிப்படைக்கிறது. தான் நல்ல குடும்பத் தலைவனாக இல்லை என்கிற குற்ற உணர்வு மன ஆழத்தில் விஜயராகவனுக்கு உண்டு. அவரை விட்டு விலகிய ஆண் பிள்ளைகளெல்லாம் தந்தையை நினைத்து குற்ற உணர்வு கொள்கிறார்கள். சகல கதாபாத்திரங்களிலும் காமம் குற்ற உணர்வாக எட்டிப் பார்க்கிறது. ஜெர்ரி இயேசுவை நோக்கி நகர்வதே ஜெயந்தியுடனான ஸ்பரிசத்தை இனிதாகக் கருதியதால் உருவான குற்ற உணர்வால்தான். ஆனால் அதை ஜெர்ரி கடக்கிற தருணத்தில்தான் சேவியர் காணாமல் போய் ஜெர்ரி மட்டுமே நம்மோடு பேசுகிறான். ஒரு அர்த்தத்தில் குற்ற உணர்வைக் கடப்பதன் வாயிலாகவே ஜெர்ரி மெய்யியலின் வாசலை அடைகிறான்.

இந்த நாவலில் உறவு மீறல்கள் குறித்த நிறைய சித்திரிப்புகள் உண்டு. சங்கருக்கு மனைவியின் தங்கையுடன் நிகழும் உறவு, பாச்சா நாகராஜ், நியாஸ் ஆகியோருக்கு ஏற்படும் சிக்கலான உறவுகள் ஆகியவை போகிற போக்கில் சொல்லப்பட்டிருந்தாலும் காமம் விரிவாக ஆராயப்படுவது இரண்டே இரண்டு இடங்களில்தான். ஜெர்ரி புவனா, ஷெரீன் என்று இரு பெண்களைக் காதலித்து மணக்கிறான். தேவியுடன் அவனுக்கு நிகழ்வது வளரிளம் பருவத்தில் உருவாகும் நிபந்தனையே இல்லாத பேரன்புதான். இந்த மூன்றிலும் காமம் சார்ந்த கேள்விகளை எழுப்புவதற்கும் காட்சி ரீதியாகக் காமத்தைச் சித்திரிப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் இருந்தும் ஜெர்ரி அந்த மூன்றையுமே உறவு சார்ந்த அகச் சிக்கல்களாகவே பேசிவிட்டுக் கடந்துவிடுகிறான். ஆனால் ஜெயந்தியுடனான ஸ்பரிசம் அவனைத் தீராத குற்ற உணர்வுக்குள் தள்ளுகிறது. அந்தப் புள்ளியில் இருந்துதான் பாவம் என்கிற கருத்தாக்கத்தை உருவாக்கிக்கொள்கிறான். அதே அளவுக்கு விரிவாக செல்வம்- கல்பனா உறவு மட்டுமே நாவலில் பேசப்படுகிறது. அந்த உறவை ஜெர்ரி தன் கோணத்தில் காண்பதாகவே நாவல் குறிப்புணர்த்துகிறது. ஒருவகையில் காமத்தின் இயல்புணர்ந்து ஜெர்ரி அதைக் கடந்து செல்கிற இடமாகவே அந்தக் காட்சிகள் நாவலில் இடம்பெற்றிருக்கின்றன. பத்சேனாவால் வீழ்ந்த தாவீது வயதான பின் மனம் கனிந்து அபிஷாக்கின் தலையை மட்டும் கருணையோடு தொட்டு அவளைக் கன்னியாகவே இருக்க அனுமதிக்கிற தொன்மச் சித்திரிப்புகளை ஜெர்ரியுடன் மனதோடு இணைத்து வாசித்தால் கண்டிப்பாக நாம் இந்தப் புரிதலுக்கே வந்தடைவோம்.

தன்னுடைய சமூகப் பணிகளுக்கு கிறிஸ்தவத்தை உத்வேகம் ஊட்டும் கருவியாகப் பற்றிக்கொண்ட ஜெர்ரி, மெய்யியல் தேடல்களில் போதாமையை உணர்கிறான். அவன் மனம் மதத்தைத் தாண்டி சிறகு விரிக்க முனைகிறது. கம்யூனிசம், ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ரமணர், பௌத்த தியானம், திபெத் தியான முறை, சூஃபியிசம் என்று அவன் தேடல்கள் விரிந்துகொண்டேயிருக்கின்றன. இந்தத் தேடல்களுக்கான மிகச்சிறந்த அடித்தளமாக அவன் இளமைப் பருவத்தின் வாழிடச் சூழல் அமைந்திருக்கிறது. எண்ணெய் விளக்கு போட்டு பூஜை செய்து ஊருக்கு அனுப்பி வைக்கிற அத்தை, கோமியம் தெளித்து வரவேற்கிற அத்தை, சாராள் பாடல்களை மனமுருகப் பாடி கிறிஸ்தவ விழாக்களைக் கொண்டாடும் அம்மச்சி, ஐயப்ப சாமிக்கு அடிக்கடி மாலை போட்டு அதையும் கடந்து பிற்காலத்தில் சித்தராகி குடிலில் தங்கிவிட்ட தேவராஜ் அண்ணன், நாத்திக அப்பா, பிரார்த்தனைகளையும் ஜெபத்தையும் ஒருபோதும் கைவிடாத அம்மா, சகோதரிகள், கர்நாடக சங்கீதம் கற்றுத்தரும் அண்ணியின் அம்மா, கோவில்களுக்கு மருமகனோடு ஷேத்திராடனம் போக ஆசைப்படும் மாமியார், கணவன் தேவாலயத்தின் வெளியில் நின்றிருக்க மனமுருகி அவனுக்காகவும் சேர்த்து பிரார்த்தித்துவிட்டு வரும் மனைவி ஷெரீன் என்று அவன் குடும்பச் சூழலே பல்வேறு வண்ணங்கள் ஒன்றையொன்று தொட்டு ஒட்டிக்கொண்ட வானவில்லாகவே அமைந்திருக்கிறது.

அவன் வசித்த இடங்களிலும் பன்மைத்தன்மையே அவனை வழிநடத்துகிறது. திருப்பதி குடை, தீமிதி, ஓதிப் பார்க்கும் பள்ளிவாசல், முருகன் கோவில் ஆராதனை, ஹோலிப் பண்டிகை, அய்யனார் சாமி, அம்மனுக்காக ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுதல் என்று வளரிளம் பருவத்தில் சகல கலாச்சாரங்களையும் உள்வாங்கிய கலவையான மனிதனாகவே ஜெர்ரி வளர்கிறான். அவனைச் சுற்றியுள்ள மனிதர்களும்கூட நாயுடுகள், பிற தெலுங்கு பேசும் மக்கள், பிள்ளைமார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், முதலியார்கள், சிந்திகள், மார்வாடிகள், குஜராத்திகள், மலையாளிகள், உருது பேசும் முஸ்லிம்கள், ஆங்கிலோ இந்தியர்கள் என்று வெவ்வேறு வண்ணம் கொண்டவர்களாகவே வந்துபோகிறார்கள். சிறு வயதிலிருந்து வாய்த்த வசிப்பிடச் சூழல், பணியிடச் சூழல், பயணங்களால் அடைகிற மன விரிவு ஆகிய அனைத்திலுமே இதற்கான பங்குண்டு. சமயம் தாண்டிய மெய்யியலைக் கண்டடைய ஒருவனுடைய சூழலும் இளமைப் பருவமும் முக்கியப் பங்காற்றுவதை நாவல் அழுத்தமாக விவரித்திருக்கிறது.

இந்த நாவலுக்குள்ளிலிருந்து ஏராளமான சிறுகதைகளையும் குறுநாவல்களையும் உருவி எடுத்துவிடலாம். இந்தக் கதைக்களம் ஒருவேளை ஜெயமோகனுக்குக் கிடைத்திருந்தால் கண்டிப்பாக பல்லாயிரம் பக்கங்கள் எழுதியிருப்பார். ஸ்டேன்லி அவருக்கு நேர் எதிர். மிகப்பெரிய உணர்வெழுச்சிகளையும் வாழ்க்கையையே புரட்டிப்போடும் தலைகீழ் மாற்றங்களையும்  அவரால் சர்வசாதாரணமாக ஒரே எட்டில் தாண்டிவிட முடிகிறது. ஆனால் அந்தத் தாண்டல் அலட்சியத்தால் நிகழ்வதில்லை. கருணை கொண்ட ஒற்றைப் பார்வையே அந்தத் தருணத்திற்குப் போதுமானதாக இருக்கிறது.‌ மூத்த மகளின் கணவனோடு இளைய மகள் கள்ள உறவு கொண்டதால் அக்கா தங்கையை அடித்துத் துரத்துகிற போது, இருவரையும் வயிற்றில் சுமந்தவள் செய்வதறியாமல் திகைத்து நடுரோட்டில் நின்றபடி நெஞ்சிலடித்து கண்ணீர் சிந்தும்போது, சம்பந்தமே இல்லாத வேறொரு பெண் அவளை அக்றையோடு அணைத்துப் பிடித்து கண்ணீர் துடைக்கும் காட்சியில் உலகின் ஒட்டுமொத்த துயரத்திற்குமான தீர்வைச் சுட்டிக்காட்டி விடுகிறார்.

அதே தங்கை கர்ப்பமாக இருக்கும் போது பழைய கோபத்தை எல்லாம் மறந்து அக்கா அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது நிகழ்வது என்னவென்றே தெரியாமல் சங்கர் குடித்துவிட்டுக் கீழே கிடப்பதை மட்டும் காட்சிப்படுத்தி அவர்கள் வாழ்க்கையை விட்டே கடந்து வந்துவிடுகிறார். தேவியுடனான உறவும் பிரிவும் அப்படியே. அவள் அதுவரை எதையுமே வெளிப்படுத்தாமல், தனித்திருக்கும் போது அவன் இலையில் இருக்கிற சோறை எடுத்துச் சாப்பிட்டு தன் காதலைக் குறிப்புணர்த்துகிறாள். திருப்பதி குடை கூட்டத்தில் அவள் கையை நறுக்கென்று கிள்ளிவைத்து திரும்பிப் பார்க்காமல் நடப்பதன் வழி தன்னால் அவளை மறக்க முடியவில்லை என்பதை ஜெர்ரி அவளுக்குத் திருப்பிச் சொல்கிறான். பலநூறு பக்கங்களில் பேச வேண்டிய காதல் உணர்வுகளை துண்டுத் துண்டான இரண்டே இரண்டு மாண்டேஜ் காட்சிகளில் காட்டிவிடுகிற ஆற்றலே ஸ்டேன்லியின் மிகப்பெரிய பலம். அவர் மிகச்சிறிய சங்கில் கடல் தண்ணியை அள்ளி, பிள்ளை வாயில் சொட்டுச் சொட்டாய் விட்டு, அதன் வாயில் தெரியும் பிரபஞ்சத்தை நம் கையில் ஒப்படைத்த திருப்தியோடு நகர்ந்துவிடுகிறார்.

இந்த நாவலின் மொழிநடை குறித்துச் சொல்லியே ஆக வேண்டும். தமிழ் உரைநடையைப் பொறுத்தவரை புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ப.சிங்காரம் போன்ற சிலரைத் தவிர பிற புனைகதை முன்னோடிகள் யாவரும் தமிழின் வளமார்ந்த சொல் மரபோடும் தத்துவச் செறிவோடும் இருபது நூற்றாண்டுகளைத் தாண்டியும் நினைவுகளின் நுரை ததும்பப் பெருகியோடும் கவித்துவத்தோடும் தொடர்பே இல்லாதவர்கள். செய்தித்தாளில் எழுதுகிற கறார்தன்மையோடும் பிரக்ஞையைக் கட்டுப்படுத்தும் செயற்கையான சிக்கனத்தோடும்தான் அவர்கள் மொழியைக் கையாண்டார்கள். அவர்களின் மொழிக்கு வேர்களும் இல்லை, சிறகுகளும் இல்லை. அந்த மொழி ஆவியைப் போல் மிதந்து மலர்களே இல்லாத மொட்டை மரங்களில் தொங்கிக்கொண்டிருந்தது.

புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் என்கிற இரு மகத்தான நாவல்கள் வழி தமிழின் தத்துவ மரபையும் சொற்களின் செழுமையையும் நவீனத்துவ இலக்கியத்தின் பக்கம் மடை வெட்டித் திருப்பிய ப. சிங்காரத்திற்குப் பிறகு மீண்டும் அதைப் புனைவில் மீட்டெடுத்திருப்பவர் என்று அமலன் ஸ்டேன்லியைத் துணிந்து கூறலாம். சொந்தப் பார்வையைத் தொலைத்துவிட்டு, அலங்காரத்திற்காகக் கண்ணாடி போட்டு, குச்சியால் தட்டித் தட்டி தன் சத்தத்தில் தானே நகரும் பலவீனமான சிற்றிதழ் நடையிலிருந்து அவரது மொழியாளுமை வேறுபட்டிருப்பதே ஸ்டேன்லிக்கான மிக முக்கியமான தனித்தன்மையாகும்.

சகலத்தையும் விருப்பு வெறுப்பின்றி அப்படியே ஏற்பதுதான் உயர் ஞானம். ஜெர்ரியின் பயணம் அப்படித்தான் அமைந்திருக்கிறது. ஆனால் அவனையும் அறியாமல் அவன் மனம் விலகல் கொள்ளும் இரண்டு இடங்கள் நாவலில் பதிவாகியிருக்கின்றன .

1. மாந்த்ரீகம் சார்ந்த விஷயங்கள்

2. அசைவ உணவின் மீதான விலகல்.

அவனுக்குப் புவனாவிடம் ஏற்படுகிற மண முறிவிற்கு அவள் குடும்பத்தின் மாந்த்ரீகம் சார்ந்த அதீத ஈடுபாடும் ஜோதிடத்தின் மீது வைத்த கண்மூடித்தனமான பற்றுமே காரணம். அந்த வெறுப்பு அவன் மதம் சார்ந்து உருவானதில்லை. ஏனென்றால் துறவுக்கோலம் கொண்ட ரமணரின் புகைப்படத்தை மட்டுமே பார்த்து அவர் மீது ஈர்ப்பு கொள்கிறான். திருவண்ணாமலையில் உள்ள ரமணாசிரமத்திற்கு கற்றுக்கொள்ளும் மாணவ மனநிலையோடு செல்கிறான். கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தும் ஐயப்பனுக்கு மாலை போட வேண்டும் என்று விழைகிறான். எனவே வைதீக இந்து மதத்தின் ஞானம் சார்ந்த கூறுகளையும் பக்தி மரபையும் ஏற்கிற ஜெர்ரி அதன் ஒரு பகுதியான மாந்த்ரீகம், புறச்சடங்குகள் ஆகியவற்றின் மீதுதான் மனவிலகல் கொண்டிருக்கிறான். எனவே மரபான கிறிஸ்தவப் பார்வையே அவனுக்குள் செயல்படுவதாக ஊகிக்க முடியாது.

ஜெர்ரியின் அசைவத்தின் மீதான வெறுப்பும் அத்தகையதே. பெரும்பாலான மனிதர்கள் பழக்கம் சார்ந்து உருவாகும் அசூயை, எலைட் மனநிலை, உயர்நிலையாக்கல் ஆகியவற்றாலேயே அசைவ உணவு எதிர்ப்பாளர்களாக இருக்கின்றனர். கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த ஜெர்ரியைப் பொறுத்தவரை அவனுக்குள் சிறுவயதிலிருந்தே பிரவாகமெடுக்கும் கருணையே அசைவ உணவை வெறுக்க வைக்கிறது. பலியிடும் காட்சியை நேரில் பார்த்ததும், தான் மிகவும் நேசித்த சாந்தா அக்கா மரணத்திற்குப் பிந்தைய பதிமூன்றாம் நாள் காரியத்தில் பிரியாணி போட்டதால் உருவான தன்னிரக்கம் கலந்த கோபமுமே அவனை சைவ உணவுப் பழக்கம் கொண்டவனாக மாற்றுகிறது. பிறகு அறிவியல்பூர்வமாக சைவம், அசைவ உணவு உண்ணுகிற விலங்குகளின் தாடை, பற்கள், குடல் அமைப்பு ஆகியவை குறித்த வாசிப்பும் அவனுடைய முடிவிற்குத் துணை நிற்கிறது. அவனுடைய சைவ உணவுப் பழக்கம் உருவாக்கிய ஆச்சரியத்தால் ஈர்க்கப்பட்டு காதலிக்கத் தொடங்கிய புவனாவை, அவளுடைய மாந்த்ரீக ஈடுபாடு காரணமாகவே ஜெர்ரி பிரிய நேர்வதன் விசித்திரம் நாவலின் நுட்பமான சித்திரிப்புகளில் ஒன்று. ஜெர்ரியின் மெய்யியல் தேடல் அவநம்பிக்கை அல்லது குருட்டு நம்பிக்கையால் உருவானதன்று. அவன் தன் இயல்பில் வாய்க்கப் பெற்ற கருணையோடு அறிவியல்பூர்வமான அணுகுமுறையையும் கொண்டவனாகவே நாவலில் சித்திரிக்கப்பட்டிருக்கிறான்.

ஆனால் சில தருணங்களில் அறிவியலைத் தாண்டிய சாதாரண மனிதனின் தத்தளிப்புகளுக்கும் எளிதில் ஆட்படுகிறான். புவனாவின் தந்தைக்கு வந்திருக்கும் குஷ்டரோக நோய் குறித்த பிறரது எச்சரிக்கைகளையும் தாண்டி, அறிவியல்பூர்வமான தெளிவுடனே அவளை மணக்கிறான். ஆனால் குழந்தை நித்யா தன் தாத்தா வீட்டில் இருக்கிற போது அவனால் அறிவியலாளனாக சிந்திக்க முடிவதில்லை. சாதாரண தந்தையைப் போல் தவிக்கிறான். அதற்காக புவனா மீது கோபம் கொள்கிறான். தீராத தேடல்களுடன் மெய்யியலை நோக்கிப் பயணிக்கும் ஜெர்ரியை அதிமானுடன் ஆக்காமல் இதுபோன்ற இயல்பான தத்தளிப்புகளையும் தன்னகத்தே கொண்ட சாதாரண மனிதனாகவே ஸ்டேன்லி படைத்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் ஜெர்ரி சாதாரண மனிதனாக இருப்பதில்லை. அவனுக்கு வருகிற பெரும்பாலான கனவுகள் ஏதேனும் ஒரு நிகழ்வுக்கான முன்னறிவிப்பாகவே இருக்கின்றன. தேவியின் பெரியப்பா இறந்து போகவிருப்பதை முன்பே கனவில் பார்ப்பதும், அம்மாவுக்கு நிகழப்போகும் மரணத்தை தியானத்தில் உணர்வதும் அதற்கான சான்றுகள். இதைவிட ஆச்சரியமாய் சிலரின் புகைப்படங்களை வைத்தே அவர்களுடைய நிஜமான பெயர்களைச் சொல்லிவிடுகிறான். அவனோடு எல்லாப் பறவைகளும் இயல்பாய் உறவாடுகின்றன. ஆனால் ஜெர்ரியிடம் இது குறித்த எந்த மிகை மதிப்பீடுகளும் இல்லை. ஆரம்பகாலத்தில் சேவை மனப்பான்மை விஷயத்தில் மட்டும் அவனுக்கு நவீன இயேசுவைப் போல் செயல்பட வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பம் இருந்திருக்கலாம். ‘பிரிவு உபச்சார விழாவை நாங்கள் மாடியில் ஏ படம் பார்த்து, பீர் அருந்திக்கொண்டாடிய போது ஜெர்ரி கீழே நண்பனின் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தான். அவன் எப்போதும் இப்படித்தான். எளியவர்களுடன் சேர்ந்திருக்கவே பிரியப்படுவான். மனசில் பெரிய இயேசுன்னு நெனப்பு’ என்கிற சேவியரின்  கிண்டல் வழி ஸ்டேன்லி தான் உருவாக்கிய பிம்பத்தை தானே விமர்சனம் செய்து கலைத்துவிடுகிறார்.

சுயசரிதையாகவே நகரும் இந்த நாவலுக்கு காவியத்தன்மை தருவது நாவலில் இடம்பெறும் பலவகையான மரணங்கள் குறித்த விவரணைகளும், ஜெர்ரியின் சூழலியல், மரபியல் மீதான ஆர்வம் அவனுடைய மெய்யியல் தேடலோடு இணைகிற இடமும்தான்.

நாவலில் இருபது மரணங்கள் பேசப்படுகின்றன. ‘இயேசுவால் உயிர்ப்பிக்கப்பட்டு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்து வந்த லாசராஸூம் மீண்டும் செத்துத்தானே போனான்?’ என்று ஓரிடத்தில் ஜெர்ரி பேசுகிறான். ஜெர்ரியின் தீராத பயணத்திற்கான விதை இந்தக் கேள்வியாகவே இருக்க முடியும். ஜெர்ரியின் வீடு, நட்பு வட்டம், அவனுக்குத் தெரிந்தவர்கள் என்று தொடர்ந்து நிகழும் மரணங்கள் அவன் அகத்தை பாதித்துக்கொண்டேயிருக்கின்றன. மேட்டுத் தெரு, ரயில்வே காலனி, நாகப்பட்டிணம் என்றில்லை- ஜெர்ரி செல்லுமிடமெல்லாம் அவன் நிழலைத் தடமாக்கி உச்சியில் பறந்து வரும் கழுகு, தான் காணும் மனிதர்களின் உணர்வுச் சுழிப்புகளை அந்த நொடியிலேயே பறந்துசென்று சுடுகாட்டில் உட்கார்ந்து அசைபோடும் படிமமாக இந்த நாவலை உருவகித்துக்கொள்ளலாம். ‘அடி அப்’ மரணம் இருத்தலின் பொருளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. தன்னால் கைதூக்கி விடப்பட்ட ஸ்ரீதரே நன்றி மறந்து புறக்கணிக்கும் பியூலாவின் அவலம் நிறைந்த மரணம், வாழ்வின் அர்த்தமின்மையை அறைந்து சொல்கிறது. தவறுகளே இயல்பாகிப் போன பாச்சாவும், தவறே செய்யாத நெப்போலியனும் அடுத்தவர்களின் கவனக்குறைவால் நிகழும் சிறு  தவறால் செத்துப் போகிறார்கள். தேவியின் அண்ணன் – காதலி, ராம் – அவன் மறை காதலி ஆகியோரின் கொடூர மரணங்கள் முள்பகுதியை அடையாளம் காட்டினால், முள்ளையே  அறியாமல் சிலர் மட்டுமே செவ்வித் தலைப்படும் அந்த அபூர்வ மலரே கூர்வாளாய்த் திரண்டு குத்தியதால் நியாஸ் போய்ச் சேர்கிறான். ஜெர்ரி எவ்வளவோ போராடியும் சிலரைக் குடி தின்று தீர்க்கிறது. தன் நோய்களை மறைத்து கம்பீரமாக உலவிய ஓம்ரெட்டி ஒருநாளில் பெரு விருட்சம் விழுந்த துக்கத்தைச் சகலருக்கும் தந்து பயணத்தை முடிக்கிறார். சகலரும் வெறுத்த மருமகனின் கைத்துளிகளில் நிறைவடைந்தே சிந்தாமணியின் மூச்சு நிற்கிறது. பெருவாழ்வு வாழ்ந்த நிறைவில் அம்மச்சி இலை உதிர்வது போல் கையசைத்துச் செல்கிறாள். அவனால் புரிந்துகொள்ள முடியாத வயதில் நிகழ்ந்த கென்னியின் மரணம் குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றுகிறது.

ஆனால் மூன்று மரணங்கள் நாவலில் விரிவாகப் பேசப்படுகின்றன. அவன் அம்மாவின் மரணம் நிகழ்வதற்குள் ஜெர்ரி மரணத்திற்குப் பழகிவிடுகிறான். ஆனால் அம்மாவின் முடியை நினைவுக்காக கத்தரித்து கையில் வைத்தபடி கதறும் மாற்கு அண்ணனின் துக்கமே அவனுக்குள் அலையாக எழுகிறது. அதே மாற்கு அண்ணன் நினைவுகளே இல்லாமல் வெறும் உடலாக மருத்துவமனையில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும்போது ‘ஞாபகங்களே இந்த வாழ்க்கை, ஞாபகங்களின் அழிவே மரணம்’ என்பதை ஜெர்ரி உணரும் இடமும், நினைவு திரும்பியதும் தளர்ந்த உடலோடு தம்பியை மேல் மாடிக்கு அழைத்துச் சென்று டுடோரியல் செண்டரின் பெஞ்சுகளில் பழைய மாணவர்கள் கிறுக்கி வைத்த கீறல்களைக் காட்டுகிற போது ஜெர்ரி அடைகிற உணர்வும் மரணத்துக்கு முந்தைய நொடியின் அவஸ்தைகள்தான்.

நாவலின் மிக முக்கியமான உச்சம் ஜெர்ரி அப்பாவின் மரணம். அந்த மரணத்தில்தான் அவருடைய ஆளுமையை, காதலை ஜெர்ரி அசைபோடுகிறான். அவருக்கும் குடும்பத்திற்கும் இடையிலான சுவரை மரணமே உடைத்தெறிகிறது. அம்மை, அப்பனின் புதிர் நிறைந்த அந்தரங்க வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தையும் மரணமே அந்த ஞானப் பிள்ளையிடம் தொட்டுக் காட்டுகிறது. சுய பாதுகாப்புக்காக எப்போதும் பட்டன் கத்தியோடு திரிந்த ஆறடி மனிதரின் உடல் அடையாளம் தெரியாமல் நொறுங்கிக் கிடக்கிறது. அவர் வைத்திருந்த பட்டன் கத்தியில் சொந்த ரத்தமே வழிந்து உலர்ந்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் இயேசுவை அலட்சியப்படுத்தியவரின் உடல் கிறிஸ்தவ முறைப்படி கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறது. கடைசிச் சந்திப்பில் கொசு வலைக்குள் இருந்து தவழ்ந்து வந்து ‘குஜராத்தில் கழுதைகள் அதிகம்’ என்று அவர் சம்பந்தமில்லாமல் சொன்னதன் புதிரை ஜெர்ரியின் பேதலித்த மனம் அசைபோடுகிறது. ஜெர்ரியின் தத்துவ இறுக்கத்தை அந்த மரணமே தளர்த்தியிருக்கக்கூடும். தேடிக்கொண்டேயிருந்தவன் கைப்பிடியை விடுகிறபோது தேடப்படும் பொருளே இரையெனக் கவ்வுவதற்கான மனநிலையை அந்த மரணத்தின் மூலமாகவே அவன் அடைந்திருக்கலாம்.

அவன் அக்கா சாந்தாவின் மரணம் இன்னும் முக்கியமானது. ஒருவகையில் ஜெர்ரிக்கு வாழ்க்கை என்பதும் கிறிஸ்தவம் என்பதும் சாந்தா அக்காதான். ஜெயந்தியின் முறை தவறிய ஸ்பரிசத்தை தன் மனம் உள்ளூர இரசிக்கிற போது அவன் முதலில் அஞ்சுவது சாந்தாவின் பார்வையை எண்ணித்தான். ஷெரீனை முழுமையாக உணர்கிற போது அவன் யோசிப்பதும் ‘அக்கா இருந்திருந்தா சந்தோஷப்படுவா’ என்றுதான். அவளுடைய மரணமே அவனை நாத்திகனாக்குகிறது. கிறிஸ்தவத்தை விட்டு விலக வைக்கிறது. இரத்தப் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்காக எலும்பு மஜ்ஜையில் துளையிடப்படும் மனிதனுக்காக அவன் விடும் கண்ணீரும் சாந்தாவுக்கானதே. தன் வாழ்வின் துக்கத்தை மானுடத் துக்கமாக விரிவுபடுத்தி அதற்கான விடை தேடி அலைந்த சித்தார்த்தனைப் போல, ஜெர்ரி சாந்தா அக்காவின் துக்கத்தைத் தன் துக்கமாக உணர்ந்து அதையே மானுடத் துக்கமாக உருவகித்துக்கொள்கிறான். சாந்தாவின் அகால மரணம், அவனுடைய சூழலியல்- மரபியல் வாசிப்பு, மெய்யியல் தேடல் என்கிற மூன்று புள்ளிகளும் ஒன்றாகிற இடத்தில்தான் நாவல் உச்சம் பெறுகிறது. பறவைகளிடமிருந்து தப்பிப்பதற்காக  வெள்ளையிலிருந்து ஆறே மாதத்தில் சாம்பலாக நிறம் மாற்றிக்கொள்ளும் அந்துப் பூச்சியின் மரபியலில் கோபமே இயல்பாகிப் போன தன் வம்சத்தை ஜெர்ரி அடையாளம் காண்கிறான். அவனும் குணம் மாறிய அந்துப் பூச்சிதான். அதனால்தான் கோபம் வந்துவிட்டால் சொந்தப் பிள்ளைகளையே ‘வீட்டை விட்டு வெளியில் போ’ என்று ஆணையிடும் விஜயராகவனின் மரபணு வாரிசு, காட்டில் சுடரும் நட்சத்திரத்தின் ஒளியில் யாவும் தானென உணர்கிறான். அவன் அடைந்த வீடு அதுதான். யாரும் துரத்திவிட முடியாத, யாரையும் துரத்த விரும்பாத வீடு.

வி.அமலன் ஸ்டேன்லி

நாவலின் பல இடங்களில் ஸ்டேன்லியின் தரிசனம் ஒரு வரிக் காட்சியாக நம் அகத்தில் பிரதிபலித்து வியப்பூட்டுகிறது. தற்செயல் நிகழ்வைக்கூட ஜெர்ரியின் அகம் அலகிலா விளையாட்டுடையானின் லீலையாகவே புரிந்துகொள்கிறது. காற்றாடி அறுபட்டு கீழே விழுந்தால்கூட அவர் அகம் ‘வாலற்ற பட்டமென மாயா மனப்படலம் காலற்று வாழவும் முக்கண்ணுடையாய் காண்பனோ?’ என்கிற தாயுமானவரின் சங்கதியையே இறுகப் பற்றிக்கொள்கிறது. சில சமயங்களில் அதிகமான மேற்கோள்கள் திகட்டலையும் உண்டாக்கி விடுகின்றன.

நாசி வதைமுகாமில் உடன் இல்லாத மனைவியை உருவமாய்க் கற்பனை செய்து அதன் வழியே தன் சமநிலையைத் தக்க வைத்திருந்த விக்டர் ஃப்ரான்கிள் (Viktor Frankl), ஆஷிவிட்சில் இருந்து வெளியே வந்தபிறகு அர்த்த சிகிச்சையை மேற்கொள்கிறார். காமத்திலிருந்து காதலைப் பிரித்துப் பார்த்து தன் ஆதிக் குற்ற உணர்விலிருந்து மீள்வதற்கான தரிசனத்தை ஜெர்ரி தான் வாசித்த நூலின் ஒற்றைச் சம்பவத்திலேயே அடைந்துவிடுகிறான்.

நிஜ வாழ்வில் ஸ்டேன்லி அடைந்த ஞானத்தை அவரே அறிவார். ஆனால் ஜெர்ரி அடைந்த ஞானம்தான் என்ன என்று நாம் யோசிக்கலாம். நாவலின் இறுதிக் காட்சியில் அதற்கான விடை இருக்கிறது. பௌத்தம் இந்த மாபெரும் பிரபஞ்சத்தை சார்புடைய ஒன்றாகக் காண்கிறது. மண்ணில் முளைக்கும் குட்டிச் செடி முதல் வெளியில் சுழலும் பிரம்மாண்டமான கோள்கள் வரை எல்லாமே இங்கே ஒன்றையொன்று சார்ந்திருக்கிறன. இதைச் சொல்லால் விளக்குவதும் புரிந்துகொள்வதும்கூட எளிதுதான். ஆனால் இதையே உணர்வால் நிரப்பி அன்றாட வாழ்வின் சொல்லில், செயலில், நடத்தையில் பிரதிபலிக்க வேண்டும் என்றால் நம் அகம் குறிப்பிட்ட தருணத்தில் வேறொன்றால் சலவை செய்யப்பட்டிருக்க வேண்டும். பௌத்தத்தின் ஆழ்நிலை தியானம் வழியாகவும் சிறு வயதில் இருந்து அடைந்த அனுபவங்கள் வழியாகவும் தீராத தேடல்களின் துணையாலும் ஜெர்ரி சென்று சேர்வது இந்த இடத்தைத்தான். காடெங்கும் மிதந்த ஒளியின் பிரவாகத்தால் புதிதாய் மலர்ந்த ஜெர்ரி ஒரு சிறு குழந்தை தேயிலைச் செடி மறைவில் ஒதுங்கிவிட்டு எழுவதைக் காண்கிறான்.

‘சற்றைக்கெல்லாம் நான் பருகப்போகும் சூடான காபியில் அதன் இன்சுவையில் அவளதும் அவள் கணவரது உழைப்பும் ஊடேறி நிற்குமோ? அக்குழந்தையின் கழிவில் துளிர்த்த கீரைகள் உணவு மேசையில் பரிமாறப்படுமோ? அரிந்து தரும் கனிகளில் அவர்களின் வியர்வை உப்புச்சுவை கூட்டிப் போகுமோ? இவர்களுக்கும் எனக்குமான நட்புறவுதான் என்ன? இம்மலையகத்திற்கும் இவர்களுக்குமான தொடர்பென்ன? நிஜத்தில் எங்கே இருக்கிறது என் வீடு?’ என அவனுக்குள் தோன்றும் எண்ணங்கள் வெறும் எண்ணங்களாய் இல்லை. தேயிலைத் தோட்டம், அங்கிருக்கும் மனிதர்கள், குழந்தையின் கழிவு, தானருந்தும் உணவு யாவற்றுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிந்த உணர்வாய் ஜெர்ரி நிற்கிறான். அந்த உணர்வை வாசித்துக்கொண்டிருந்த ஜெர்ரி, அது குறித்துப் பேசிக்கொண்டிருந்த ஜெர்ரி, அதைத் தேடிக்கொண்டிருந்த ஜெர்ரி இப்போது எல்லாம் கடந்து அந்த உணர்வாகவே மாறி நிற்கிறான். உண்மையில் அவன் அடைந்தது வேறெதையும்  இல்லை. அந்த உணர்வின் சாட்சியாய் அங்கேயிருந்த சிறு தருணம்தான். பாத்திரம் கவிழ்ந்துவிட்ட பிறகு காண்பதெல்லாம் கடல்தானே?

நாவலில் அவர் முன்பு எழுதிய கவிதைகளைச்  சூழலுக்கேற்ப தந்திருக்கிறார். இந்த நாவலை வாசித்து முடித்த கணம் என் மனதில் நிறைந்திருந்த கவிதை இதுதான்.

‘எட்டப் பார்த்த நீராயில்லை
இறங்கி நின்றது
இலை, தழை புறந்தள்ளி
விலக்க முயன்ற நீராயில்லை
பருகச் சூழ்ந்தது
இளைப்பாறுகையில்
அள்ள முனைந்த நீராயில்லை
குடித்துத் தீர்ந்தது’

ஸ்டான்லி, ஜெர்ரி, வாசிக்கும் நாம் மூவரும் இணைவதும் பிரிவதும் இந்தப் புள்ளியில்தான். மூவரின் அகம் உணரும் மெய்யியல் புரிதல்களை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ‘அந்த நீர்தான், அதே நீரன்று.’

*

நூலை வாங்க: வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம், வி.அமலன் ஸ்டேன்லி, பக்.511, விலை ரூ.500