மறைந்தழியும் உலகுடன் ஒரு கடைசி செல்ஃபி – சமேர் அபூ ஹவேஷ்

1 comment

சில சமயங்களில்

அசட்டை செய்யப்பட்ட இலையொன்றே

தவறவிட்ட பெயரொன்றின்

பூட்டைத்

திறந்து வைக்கிறது.

*

சிரத்தின் வனத்தில் பொதிந்திருக்கும்

பேசா முகங்களின்

தொலைந்த குரல்களை

மீட்டளிக்க

சுடுரசத்தை ஊதித் தணிப்பது போல்

ஆவிபடர் குளியலறை

ஆடியின் மீது மூச்செறிவதே

போதுமானது.

*

உன்னிடமிருந்தா அல்லது

சருமத்திற்கு மிக 

நெருக்கமானதொரு தொலைவில்

அச்சுறுத்தும் அருகாமையில் 

இருக்கும் ஒரு விலங்கிடமிருந்தா 

என்று நிர்ணயம் செய்ய முடியாத அளவிற்கு

இப்போது காட்டு விலங்கை ஒத்திருக்கும் 

மூச்சிரைத்தலை

ஆடிமுன் நின்றுகொண்டிருக்கும்

உன்னாலுமேகூட கட்டுப்படுத்த முடியாது.

*

அருகே வெடித்துயிர்க்கும்

அன்றாடத்தின் ரீங்கரிக்கும் ஓசைகள்;

அயலகத்தான் அடுக்களைத் தொட்டியில்

உடைந்து சிதறும் கண்ணாடிக் குவளை,

தத்திச் செல்லும் பிஞ்சுப் பாதங்கள்,

பசித்த மீன்களின் வாய்களைப் போல்

ஒளியை விழுங்க முயலும் கண்கள்.

*

சராசரி வார்த்தைகளில் இம்முறை

நீ விளக்க மெனக்கெடா

ஒரு மின்னல்,

முகங்களாக உருமாறா

பார்வைகள்,

தொடுகையை எட்டா

கைகள்.

*

ஒருபோதும் இருந்திராத

உலகையே நீ கண்ணுறுகிறாய்;

அதோ ஆடை அலமாரியில் 

கிடுகிடுக்கிறது ஒரு பேய். 

இதோ உன் நாமுனையில்

மற்றொரு பேய்.

*

காலை

உனக்குத் தெரியும்

காலகாலமாக

நீத்தார் எப்போதுமே செய்துகொண்டிருப்பதைத்தான்

நீயும் செய்யவிருக்கிறாய் என. 

அம்மாவின் சால்வையிலோ அல்லது பாட்டியின் சால்வையிலோ

அல்லது இருவரின் சால்வைகளிலும்

கடந்த காலைகளின் மீதமாகக் கலந்துவரும்

ரொட்டி, காப்பி இதர வாசனைகளையும்

நினைவுகூர்கிறாய். 

*

சற்று நேரம் நிமிர்ந்தமர்கிறாய்

-காலத்திற்கு வெளியே-

காலணிகளை  எதிர்நோக்கியபடி.

நீ அறிந்திராத வகையில்

வாழ்ந்துகொண்டிருக்கும்

ஒளிபுகு தூசியின் நட்பைப் பேண

நீ முயல்கிறாய்.

*

மீண்டும் மீண்டும் முயல்கிறேன்.

என் மண்டைக்குள் மட்டுமல்ல இப்பீதி.

சமையலறை நாற்காலி மீது

என் கையில்

ஒரே வாயில்

நான் விழுங்கியாக வேண்டிய

மிகையளவு பர்கராகவும்

அது அமர்ந்திருக்கிறது.

*

ஒவ்வொரு தூசித் துகளிலும்

மேலுமொரு தியாகம் வந்தடைகிறது.

அதிலொன்று

மகிழ்வு

நீர் அல்லது

வழக்கமான ரொட்டி பற்றாக்குறையைக் குறித்த

எளிமையான குடும்பக் கலந்துரையாடலொன்றில்

கலந்து கொள்கிறது

மற்றொரு சமையலறையில். 

*

உண்மையில் விடுபட்டிருப்பது கடல்தான். 

ஆனால் நம் பிஞ்சுக் கரங்களிடம்

நம்மால் என்ன கூற முடியும்

நீரினும் மென்மையான கரங்களிடம்

இக்குருதி அனைத்தையும் பற்றி?

*

மூலநூல்கள் / மேலும் படிக்க: Abu Hawwash, Samer, Tr.by Rawad Wehbe, Home, New Arabic Poems, Two Lines Press, 2020

1 comment

Selvam kumar May 19, 2021 - 8:18 pm

மிகவும் அருமையான கவிதை மொழி பெயர்ப்பு சிறப்பு

Comments are closed.