மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 9): ராஜாவின் பாடகர்கள்

0 comment

தொழில்முறைப் பாடகர்களைப் பாட வைப்பதன் பின்னே இரகசிய விநோதங்கள் பல உண்டு. பாடுவதற்கான செயல்முறை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். உதாரணமாகச் சொல்வதானால் ஒரு பாடகர் புதிய பாடலொன்றைப் பாடுவதற்கான முன்தயாரிப்புக் காலம், அதாவது ஒத்திகைக் காலம் எத்தகையது என்பதைப் பொறுத்து அவருக்குப் பாடக் கிடைக்கிற பாடல்களின் எண்ணிக்கை அமையும். சிலருக்கு அரிதான, வனப்பான குரல்வாகு அமைந்திருக்கும். ஆனால் ஒரு பாடலை முழுவதுமாகப் பாடுவதற்கு அவர்கள் எடுத்துக்கொள்கிற நேரம் மிக மிக அதிகமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு வேறொரு பிரச்சினை அமையும். அதென்னவெனில் ஒரு சில பாடல்களைப் பாடி முடித்ததும் அவர்களால் மீண்டும் தங்கள் குரலுக்குத் திரும்புவதற்கான இடைக்காலம் அதிகமாக இருக்கும். மீண்டும் பாடுவதற்குத் தயாராவதற்கு ஆகக்கூடிய கால தாமதம் பாடல்களின் வாய்ப்பைச் சலனிக்கச் செய்யும்.

மூன்றாவது பிரச்சினை ஒன்று உண்டு. ஒரு சில பாடுகுரல்கள் ஒரே தன்மையினதாக இருக்காமல் மிகச்சிறு கால இடைவெளிக்குள்ளாகவே அதிக சிதைவுறுவதாக அமையும். அப்படியான குரல்களைக் கொண்டு பாடல்களை உருவாக்கும் போது முற்றிலும் வேறு வேறான குரலாளப்பட்ட பாடல்களாகவே அவை தோன்றித் தொனிக்கும். இதை நிவர்த்திக்க அப்படியான குரலாளர்களுக்கான வாய்ப்பு குறுகிடக்கூடும். சில வேறு பாடகர்களால் ஒரு சில குரல் தளத்திலே மட்டுமே பாட முடியும். அப்படியானவர்களைக் கொண்டு ஒரே வகைமையினதான பாடல்களை மட்டுமே இசைத்துருவாக்க வேண்டி வரலாம். தாய்மொழி, பிறமொழி என இரண்டாய்க் கிளைக்கும் தன்மையும் பாடகர்களிடையே காணப்படலாம். சிலரது குரல் எத்தனைதான் முனைந்து முயன்றாலும் ஒருவித அந்நியத்துடனேயே அவரது தாய்மொழி தவிர்த்த மற்ற எல்லா மொழிகளிலும் இயங்கும். அப்படியான குரல்களைப் பெரிய அளவில் சொந்த மொழி தவிர்த்த பிற மொழிப் பாடல்களில் பயன்படுத்த முடியாது.

இத்தனைக்கும் மேலாக சினிமா என்பது வணிகத் தேவை சம்பந்தப்பட்டது. அங்கே திறமை கலையினூடான சவால், அதன் பின்னதான சாதனை எல்லாவற்றையும் தாண்டிய வேறொன்றுதான் வெற்றி என்பது. விரும்பப்படுகிற ஒரு குரல்- கேட்புக்கேற்பவும் தேவைக்கேற்பவும் வேகத்தோடு விரைந்தோடினால் மாத்திரமே வரலாறு படைக்க முடியும். அது புரவிகளுக்கிடையே நடக்கிற போட்டி. அங்கே மெல்ல நடைபோடுகிற யார்க்கும் இடமில்லை.

இளையராஜா இசைக்க வந்தபோது புகழுச்சியில் இருந்த பாடகர்கள் பலரோடும் இணைந்து தன் ஆரம்பகாலப் பாடல்களை உருவாக்கினார். டி.எம்.சவுந்தரராஜன் இளையராஜா இசையில் சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார் எனப் பல நடிகர்களுக்கான பாடல் குரலை அளித்தார். ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி’ என்ற தியாகம் படப்பாடல், ‘நேரமிது நேரமிது’ என்கிற ரிஷிமூலம் படப்பாடல், தேன்மல்லிப் பூவே என்ற இன்னொன்று என ராஜா இசையில் தேனள்ளித் தெளித்தார் டி.எம்.எஸ். எண்பதுகளுக்கு அப்பால் டி.எம்.எஸைப் பெரிய அளவில் பாட அழைக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் மலேசியா வாசுதேவனை சிவாஜி கணேசனுக்கான பாடல்களைப் பாடச்செய்தார் இளையராஜா. பாலச்சந்திரமேனன் இயக்கத்தில் சிவாஜி நடித்த தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் ‘இளமைக் காலம் எங்கே’ என்ற பாட்டை டி.எம்.எஸ், சுசீலா ஆகியோரது குரல்களில் பதிவுசெய்தார் இளையராஜா. பேழையில் இடம்பெற்றாலும் அது படத்தில் இடம்பெறவில்லை. மேலும் சி.எஸ்.ஜெயராமன் போன்ற முன் காலக் குரல்களை நினைவுறுத்தும் கேளிக்கைப் பாடல்களை உருவாக்குகையில் அவற்றை மலேசியா வாசுதேவனுக்கு வழங்கினார். சுகராகமே என் சுகபோகம் நீயே, ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே, மேரீ ப்யாரீ மதன மோகன ரூப சுந்தரி போன்ற பாடல்கள் மலேசியா வாசுதேவனின் மிளகுமலர்க் குரலில் எழுந்து வித்யாச கானங்களாகின. முதல்மரியாதை உள்பட்ட படங்களில் சிவாஜிக்கான புதிய குரலாகவே ஒலித்தார் மலேசியா வாசுதேவன். பன்னீர் புஷ்பங்களில் அவர் பாடிய ‘கோடை காலக் காற்றே’ கடலின் ஆழம் என்றால் அடுத்த வாரிசுக்காக அவரளித்த ‘ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை’, வ்வா!!! மலையின் மேலுயர் சிகரம். எல்லா வகையான பாடல்களையும் பாடவல்லவராகத் தமிழ் மொழியில் திகழ்ந்த வெகு சில பாடகர்களில் மலேசியா வாசுதேவனும் ஒருவர்.

முந்தைய காலத்தில் பிரபல பாடகர்கள் பலரையும் தன் இசையில் பாடச்செய்தார் இளையராஜா. கடவுள் அமைத்த மேடை படத்துக்காக பிபி ஸ்ரீனிவாஸ் பாடிய அழகிய பாடல் ‘தென்றலே நீ பேசு’. யூகிக்க முடியாத மென்மையும் காத்திரமும் கலந்து பாடிய பாடல் இது. பத்ரகாளி படத்துக்காக ‘ஓடுகிறாள் உருளுகிறாள்’ என்ற பாட்டை சீர்காழி கோவிந்தராஜன் பாடினார். ‘ஆயிரம் கோடி‘, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடல்களை கவிக்குயிலுக்காக பாலமுரளி கிருஷ்ணாவைப் பாடச்செய்தார் இளையராஜா. தாய் மூகாம்பிகை படத்திற்காக சீர்காழி கோவிந்தராஜன், இளையராஜா, ஜானகி, எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாய்ப் பாடிய ‘தாயே மூகாம்பிகே’ என்ற குழுப்பாடல் குறிப்பிடத்தக்க ஒன்று. கருவேலம் பூக்கள் படத்துக்காக இளையராஜா இசையில் ‘நல்லகாலம் பொறக்குது’ என்ற பாடலையும் பாடியிருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன். செந்தமிழ்ப் பாட்டு படத்துக்காக ‘சொல்லிச் சொல்லி வந்ததில்லை’ என்று ஜிக்கி பாடியது சூப்பர்ஹிட். மேலும் பல பாடல்களை ராஜா இசையில் பாடினார் ஜிக்கி.

எஸ்,பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஏசுதாஸ், மலேசியா வாசுதேவன், பி.ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், சித்ரா, ஷைலஜா ஆகியோரை ராஜா பலவிதமான பாடல்களைப் பாடச் செய்திருக்கிறார். நெடுங்காலம் பெரும் புகழ்பெற்ற மேற்சொன்ன பாடகர்கள் மட்டுமே அனேகப் படங்களின் எல்லாப் பாடல்களையும் பாடிக்கொண்டு வருவதாகத் தோற்றமளிப்பது சலனப்பிழை. உண்மை அதுவல்ல. எல்லாக் காலத்திலுமே எண்ணிலடங்காத புதிய வெவ்வேறான வகைமைகளில் அடங்கத்தக்க புதிய புதிய குரல்களை எல்லாம் பரீட்சித்துப் பார்த்த வண்ணம்தான் திரைப்பாடல் உலகம் உருண்டோடி வந்திருக்கிறது. ஆனாலும் பாடகர்கள் பெறுகிற புகழ் அத்தகைய சலனத்தைக் கேட்பவர் மனதாழத்தில் விதைத்து விடுகிறது. சீர்நோக்கிப் பார்த்தால் உண்மை வேறு. இளையராஜா தன் தொடக்க காலம் முதற்கொண்டே பல்வேறு பாடகர்களைப் பாடச்செய்த வண்ணமே தன் இசைவாழ்வில் நடைபோட்டிருக்கிறார். அவர் இசையில் பாடாத ஒரு பாடகரையும் சொல்வது கடினம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் பெருங்கூற்றாக சிலரை மட்டுமே பாடச்செய்தார் இசைஞானி என்று குறிப்பிட்டுப் பேசுவோரும் உண்டு.

ஜேசுதாஸும் ஜெயச்சந்திரனும்

‘செவ்வானமே பொன்மேகமே’ பாட்டு நல்லதொரு குடும்பம் படத்தில் கல்யாணி மேனன், சசிரேகா, ஜெயச்சந்திரன், டி.எல்.மகராஜன் ஆகியோர் பகிர்ந்து பாடிய சேர்ந்திசைப் பாடல். ஆராதனை படத்தில் இடம்பெற்ற ‘இளம் பனித்துளி விழும் நேரம்’ பாடலைப் பாடியவர் பாடகி ராதிகா. ‘கல்யாணம் என்னை முடிக்க’ என்ற பாடலை மெட்டி படத்தில் இளையராஜாவுடன் சேர்ந்து பாடினார் ராதிகா. சன்னமும் தீர்க்கமும் நிறைந்து பெருகும் குரல் ராதிகாவினுடையது. ராதிகா அதன் பிறகு ஏனோ பாடகியாக அதிகம் வலம் வரவில்லை.

கவரிமான் படத்தில் ‘சொல்ல வல்லாயோ கிளியே’, குணா படத்தில் ‘உன்னை நான் அறிவேன்’ இரண்டையும் இளையராஜா இசையில் பாடினார் எஸ்.வரலக்ஷ்மி. பாடி நடிக்கக்கூடிய வல்லமை பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் வரலக்ஷ்மி. மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் ‘குட்டி ஒன்னு’ என்ற பாட்டைப் பாடிய  சாய்பாபா, டி.எஸ்.பாலையாவின் புதல்வர். மகாகவியின் பெயரன் ராஜ்குமார் பாரதி இளையராஜா இசையில் பாரதி திரைப்படத்தில் ‘கேளடா மானிடா மண்ணில் கீழோர் மேலோர் இல்லை’ என்ற பாட்டைப் பாடினார். ‘தம்தன நம்தன தாளம் வரும்’ பாடல் அடைந்த புகழ் அபாரமானது. ஜென்சி, இளையராஜாவுடன் அதை இணைந்து பாடியவர் பி.வசந்தா. சட்டம் என் கையில் படத்தில் ‘மேரா நாம் அப்துல்லா ஆவோ’ என்ற பாட்டை எஸ்.பி.பி.யுடன் சேர்ந்து கோவை முரளி பாடினார். ‘சிங்க் ஸ்விங்’ பாடலை மூடுபனியில் பாடியவர் கல்யாண். ‘அபிராமியே அன்னையே’ என்ற பாட்டை ஓ மானே மானேவுக்காக சுசீலாவோடு சேர்ந்து பாடியவர் பெங்களூர் லதா.

கே.ஜே.யேசுதாஸ் கேரள வைரம். இன்றும் இலேசான மலையாளச் சாய்வுடன் மட்டுமே ஒலிக்கும் குரல்வகை இவருடையது. தமிழில் எஸ்.பாலச்சந்தர் இயக்கி இசைத்த பொம்மை படத்தில் இடம்பெற்ற ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ பாடல் மூலமாய்த் தமிழுக்கு வந்த தாஸேட்டன் ஒரே சீரான வரைபட ஏற்றத்தோடு விளங்கிய பாடகர். தீபம், அந்தமான் காதலி எனப் பல படங்களில் அவரை சிவாஜிக்குப் பாடச் செய்தார் ராஜா. ‘ஆகாயம் மேலே பாதாளம் கீழே’ என்றாரம்பிக்கும் நான் வாழ வைப்பேன் படப்பாடல் ரஜினிக்கு தாஸண்ணா பாடிய ஆரம்ப கானங்களில் ஒன்று. ப்ரியா படத்தின் அத்தனை பாட்டும் அவர் பாடியவையே. சிந்துபைரவியில் சிவக்குமார் ஏற்ற பாத்திரத்தின் நிஜக்குமார் ஜேசுதாஸ்தான். ஆனந்த ரகம் உள்ளிட்ட பல படங்களில் ஏற்கனவே சிவக்குமாருக்காக தாஸ் குரல் நன்கு பொருந்தி வந்திருந்த ஒன்றே. முத்தமிழ்க் கவியே வருக (தர்மத்தின் தலைவன்), மழைவருது மழைவருது குடை கொண்டு வா (ராஜா கைய வச்சா), ராஜராஜசோழன் நான் (ரெட்டை வால் குருவி), ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ (அரங்கேற்ற வேளை), எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா (கலைஞன்), வா வா அன்பே அன்பே (அக்னி நட்சத்திரம்) போன்றவை அனைத்துமே மாணிக்கங்கள். ‘மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விழிக்கும்’ என்ற கண் சிவந்தால் மண் சிவக்கும் பாடல் உணர்வெழுச்சியை ஏற்றிய குரல் முல்லை. அதீத சோகம், தெய்வீகம், தன்னந்தனிமை, குழைதல் இவைதான் தாஸண்ணாவின் குரலின் உட்பகுதிகள். ‘மாசி மாசம் ஆளான பொண்ணு’ பாடலைக்கூட அவரால் உலர்ந்த உணர்வோடு பாடிக் கடக்க முடிந்தது. காலங்காத்தாலே ஒரு வேலையில்லாமே ஆகட்டும், வச்சிக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ளே ஆகட்டும், அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேனாகட்டும்- ஒரே மன மீட்டரில் பாடுவார் தாஸ். ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே (இளமைக் காலங்கள்), பூவே செம்பூவே உன் வாசல் வரும் (சொல்லத் துடிக்குது மனசு), அம்மா என்றழைக்காத உயிரில்லையே (மன்னன்) எனத் தமிழ் நிலத்தைக் கரைந்துருக வைப்பதற்கான குரல் அஸ்திரமாகவே ஜேசுதாஸைப் பயன்படுத்தினார் இளையராஜா. இருவரது காம்போவில் தொண்ணூறு சதவீதத்துக்கும் மேல் பேரொலிப் பெருவெற்றிப் பாடல்கள்தான். சுமாரை அறியாத சகாக்கள் என்றே ஆகினர் இருவரும்.

இளையராஜாவின் மூன்று குழந்தைகளுமே அவர் இசையமைப்பில் பாடி இருக்கின்றனர். அஞ்சலி படத்தில் கார்த்திக், யுவன் இருவரும் பாடினர். இளையராஜா இசையில் பாரதி படத்துக்காகப் பாடி பவதாரிணி தேசிய விருது பெற்றார். கங்கை அமரன் இளையராஜா இசையில் அருமையான பல பாடல்களைப் பாடி இருக்கிறார். தெக்குத் தெரு மச்சானே, சோலைப் புஷ்பங்களே பாடல்களை சுசீலாவோடு இணைந்து இங்கேயும் ஒரு கங்கை படத்துக்காகப் பாட வைத்தார் இளையராஜா. ‘பூஜைக்கேத்த பூவிது நேத்துத் தானே பூத்தது‘ என்ற பாடலை நீதானா அந்தக் குயில் படத்தில் கங்கை அமரனும் சித்ராவும் சேர்ந்து பாடினர். சைலஜாவோடு சேர்ந்து அவர் பாடிய ‘மச்சானை வச்சிக்கடி முந்தானை முடிச்சிலதான்’ என்கிற நான் பாடும் பாடல் படப்பாட்டும் வானொலிகளை வென்றொலித்த பிரபலப் பாடல்தான். தூரத்துப் பச்சை படத்தில் எதிர்பாராத புத்தம்புதுக் குரலாக வாணி ஜெயராமுடன் சேர்ந்து கங்கை அமரன் பாடிய ‘விழியே நலமா’ என்ற பாடல் என்றும் சலிக்காத புத்திசைப் பாடல். கங்கை அமரனின் மகன் ப்ரேம்ஜி பூஞ்சோலை படத்தில் ‘பாப்பா ரூப்பா தில்ரூபா’ என்ற பாடலை இளையராஜா இசையில் பாடினார்.

கிருஷ்ணச் சந்திரன் தீர்க்கமான தெளிந்த குரலுக்கு உரியவர். கூட்டத்திலும் குழுவிலும் தனித்துயர்ந்து ஒலிக்கும் வித்தியாசமான குரல்வாகு அவருடையது. இளையராஜா இசையில் பல நல்ல பாடல்களைப் பாட வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் பலவும் பெரிய ஒலித்தலுடன் ஹிட் ஆனவையும்தான். கிருஷ்ணச் சந்திரனின் குரல் எண்பதுகளின் இனிய வரவாயிற்று. ‘ஆனந்த மாலை தோள் சேரும் வேளை’ (தூரத்துப் பச்சை), கோபுரங்கள் சாய்வதில்லை படத்துக்காக ஜானகியோடு சந்தர் பாடிய ‘பூவாடைக் காற்று’ இவரைத் தனியே தோன்றச் செய்தது. கோழி கூவுது படத்தில் இளையராஜா இசையளித்த ‘ஏதோ மோகம் ஏதோ தாகம்’ பாடல் விண் தாண்டி அதிரச் செய்த மென் மலர் கானம். ஒரு ஓடை நதியாகிறது படத்தில் சசிரேகாவுடன் கிருஷ்ணச் சந்தர் பாடிய டூயட் ‘தென்றல் என்னை முத்தமிட்டது’ என்றும் தித்திக்கும் பாட்டு. அன்பின் முகவரிக்காக ஜானகியுடன் சேர்ந்து கிருஷ்ணா பாடிய ‘வான் சிவந்தது’ இன்னொரு ஹிட். ஷைலஜாவுடன் அந்த சில நாட்கள் படத்துக்காக கிருஷ்ணச் சந்தர் பாடிய குதூகலப் பாடல் ‘ராஜா ராணி ராஜ்ஜியம்’. இளமை இதோ இதோ படத்தின் ‘அள்ளி வச்ச மல்லிகையே புள்ளி வச்ச பொன்மயிலே’ மின்னல் ஹிட். அந்தக் காலத்தில் பலரும் விரும்பிக் கேட்ட நேயர் விருப்பப் பாடல்களில் இதொன்று.

மோகனின் குரல் முகமாக அறியப்பட்டவர் எஸ்.என்.சுரேந்தர். மிகத் திறமையான பாடகர். இவருடைய குரல் கீழிறங்கிச் சென்று தொடக்கூடிய புள்ளியை இன்னொரு குரலால் தொட இயலாது என்று மெச்சத்தக்க குரல். இளையராஜா இசையில் எஸ்.என்.சுரேந்தரும் அவரது சகோதரி ஷோபா சந்திரசேகரும் சேர்ந்து பாடிய டூயட் பாடல் ‘மாலை இள மனதில் ஆசைதனை’ என்று தொடங்குவது. அவள் ஒரு பச்சைக் குழந்தை படத்தில் இடம்பெற்றது. நான் பாடும் பாடலுக்காக சுரேந்தர் பாடிய ‘தேவன் கோயில் தீபமொன்று’ மறக்க முடியாத பாடல். என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்ற அபாரப் பாடல் ‘பாரிஜாத பூவே என் தேவலோகத் தேனே’. பெரிய மருது படத்துக்காக டி.எல்.மகராஜனுடன் எஸ்.என்.சுரேந்தர் இணைந்தொலித்த பாடல் ‘ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு’.

திருச்சி லோகநாதனின் புதல்வரான டி.எல்.மகராஜன் இளையராஜா இசையில் மறக்க முடியாத பாடல்களைப் பாடிய இன்னொருவர். நாயகன் படத்தில் இடம்பெற்ற குழுப்பாடலான ‘அந்திமழை மேகம்’ இன்றும் ஒலிக்கும் நற்பாட்டு. இவரது தம்பியான தீபன் சக்கரவர்த்தி நடிகரும் பாடகரும் ஆவார். இளையராஜா இசையில் தீபன் சக்கரவர்த்தி நாயகனாகத் தோன்றிய படம் ராணித் தேனீ. இதில் எஸ்.ஜானகியுடன் சேர்ந்து தீபன் பாடிய பாடல் ஒன்று இனிக்கும். ‘ராமனுக்கே சீதை’ என்று தொடங்கும். ஜானகியும் தீபனும் பாடிய சிறந்த டூயட் நிழல் தேடும் நெஞ்சங்கள் படத்திற்காக ஒலித்த ‘இது கனவுகள் விளைந்திடும் காலம்’. அதே போல் ஜானகியுடன் அவர் இணைந்து பாடிய மற்றொன்று எனக்காகக் காத்திரு படத்தில் ‘ஓ நெஞ்சமே இது உன் ராகமே‘ பாடல். அதே படத்தில் எஸ்.பி.ஷைலஜாவுடன் தீபன் சேர்ந்தொலித்தது ‘பனிமழை விழும் பருவக் குயில்’ எனும் சிறந்ததோர் கானம். அதே குரலிணையின் மற்றோர் டூயட் ‘காலை நேரக் காற்றே’ என்று தொடங்கும் பகவதிபுரம் ரெயில்வே கேட் படத்துக்கானது. தீபன் சக்கரவர்த்தி பாடிய நிழல்கள் படப்பாட்டு ‘பூங்கதவே தாழ் திறவாய்’. சேர்ந்து பாடியவர் உமா ரமணன். இதே இணை சேர்ந்து குரலாண்ட இன்னொன்று மெல்லப் பேசுங்கள் படத்துக்காக ‘செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு’. “பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ” என்று உருகிய தனிப்பாடல் காதல் ஓவியத்தில் இடம்பெற்றது. ‘அரும்பாகி மொட்டாகிப் பூவாகி’ சுசீலாவும் தீபனும் பாடிய டூயட். எத்தனை கோணம் எத்தனை பார்வை படத்தில் ஒலித்த ‘விதைத்த விதை’ சசிரேகாவும் தீபனும் சேர்ந்து பாடிய அருமையான தேன்பா.

அதே சசிரேகா கிராமத்து அத்தியாயத்தில் ‘பூவே இது பூஜைக்காலமே’, அலைகள் ஓய்வதில்லையில் ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே’ போன்றவற்றை இளையராஜா இசையில் பாடியவர். வட்டத்துக்குள் சதுரம் படத்தில் ‘இதோ இதோ என் நெஞ்சிலே’ பாடலை ஜானகியுடன் இணைந்து பாடினார் பி.சசிரேகா. மஞ்சள் நிலாவில் ஜேசுதாஸூடன் பாடிய ‘இளம் மனதில் எழும் கனவில்’ பலராலும் விரும்பப்பட்ட பாடல். நிழல் தேடும் நெஞ்சங்களில் மலேசியாவும் சசிரேகாவும் சேர்ந்தொலித்த ‘மங்கல வானம்’ பிரபலமான மற்றொன்று. சசிரேகா எழுபதுகளின் நிறைவில் தமிழ்ப் படங்கள் பலவற்றில் நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார். கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் ‘எம் புருஷந்தான் எனக்கு மட்டும்தான்’ பாடலை எஸ்.பி.சைலஜாவுடன் சேர்ந்து கானம் செய்தார் பி.சசிரேகா. சரளா இளையராஜாவுடன் ‘ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது’ என்ற சூப்பர் ஹிட் பாடலைப் பாடினார். பழம்பெரும் நடிகையும் பாடகியுமான சண்முக சுந்தரி ‘என்னமோ நடந்திருக்கு’ என்ற பாடலை சீமான் எனும் படத்துக்காக வெங்கட்ராமனுடன் சேர்ந்து பாடினார். அவரே இளையராஜாவுடன் ‘நூறு வயசு வாழ வேணும்’ என்ற பாடலை அதர்மம் படத்தில் பாடினார்.

லலிதா சாகரி ‘நகரு நகரு’ என்ற பாடலை சத்யாவுக்காகப் பாடினார். அவரே மனோவுடன் சேர்ந்து எம் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான் படத்துக்காக ‘காத்து காத்து ஊதக் காத்து வீசுதே’ பாடலைப் பாடியுள்ளார். மஞ்சுளா குருராஜ் ஜேசுதாஸூடன் இணைந்து ‘உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே’ பாடலை நல்லவனுக்கு நல்லவனுக்காகப் பாடியிருக்கிறார். கோவை சவுந்தரராஜனுடன் இணைந்து ‘வா வா வா சுகுமாரி’ பாடலை கெட்டி மேளத்துக்காகப் பாடிய மஞ்சுளா, கல்யாணக் கச்சேரி போன்ற படங்களிலும் இளையராஜா இசையில் பாடல்களைப் பாடியுள்ளார். பூரணி இந்திரா இருவரும் ‘தேவன் திருச்சபை மலர்களே’ என்கிற அவர் எனக்கே சொந்தம் படப்பாடலைப் பாட வைத்தார் இளையராஜா. கட்டப்பஞ்சாயத்து படத்துக்காக ‘ஒரு சின்ன மணிக்குயிலு’ என்கிற பாடலை ஜாலி ஆப்ரஹாம், பவதாரிணி ஆகிய இருவரும் சேர்ந்து பாடினர். ஒப்பிட முடியாத அந்த இரு குரல்களை ஒருங்கிணைத்து இசைத்தார் ராஜா.

எஸ்.பி.ஷைலஜா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடன்பிறந்த தங்கை. தனிப்பாடல்களின் பேரரசி என்றால் தகும் அளவுக்கு இவர் பாடி மிளிர்பவை பல பாடல்கள். மானே மச்சான் (முரட்டுக்காளை), வாடா என் ராஜாக் கண்ணா (ரிஷிமூலம்), ஆசையைக் காத்துல தூதுவிட்டு (ஜானி), சோலைக்குயிலே காலைக் கதிரே (பொண்ணு ஊருக்குப் புதுசு), ராசாவே உன்ன நான் எண்ணித்தான் (தனிக்காட்டு ராஜா), மலர்களில் ஆடும் இளமை புதுமையே (கல்யாண ராமன்), கட்ட வண்டி கட்ட வண்டி (சகலகலா வல்லவன்) என  இளையராஜா இசையில் எழுபதுகளின் இறுதியிலிருந்து பத்தாண்டு காலம் சொல்லிக்கொள்ளும்படியான பல பாடல்களைப் பாடினார் ஷைலஜா. ‘ஏதோ நினைவுகள் கனவுகள்’ (அகல்விளக்கு) ஜேசுதாஸூடன் பாடிய காதல் லாலி. ‘கண்ணுக்குள்ளே யாரோ’ (கை கொடுக்கும் கை), ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் இடம்பெற்ற ‘உச்சி வகுந்தெடுத்து’, சலங்கை ஒலியில் பாலுவோடு ‘வான் போலே வண்ணம் கொண்டு’, ‘வேதம் அணுவிலும் நாதம்’ ஆகிய இரண்டையும் பாடினார் ஷைலஜா. மலேசியா வாசுதேவனோடு ‘அரிசி குத்தும் அக்கா மகளே’ என மண்வாசனையில் பகிர்ந்தார். ‘பொன்மானைத் தேடி நானும்’ பாடலில் உருகினார். ‘மாப்பிள்ளைக்கு மாமன் மனசு’ என்று மிதக்க வைத்தார் நெற்றிக்கண்ணில். ‘ஒரு நாயகன் உதயமாகிறான்’ (தாவணிக் கனவுகள்), பாலுவுடனும் ஜெயச்சந்திரனோடும் பாடிய ‘தவிக்குது தயங்குது ஒரு மனது’ பாடலானது நதியைத் தேடி வந்த கடல் படத்தின் மிளிர்பாடல். கோயில்புறா படத்தில் ‘அமுதே தமிழே’ பாடலில் எஸ்.பி.ஷைலஜா அயர்த்தியது பி.சுசீலாவோடு.

எஸ்.பி.ஷைலஜாவும் எஸ்.பி.பியும்

டி.கே.எஸ். கலைவாணன் எஸ்.ஜானகியுடன் சேர்ந்து பாடிய பாடல் ‘வருவாய் அன்பே தருவாய் இன்பம்’ இன்றும் மறக்க முடியாத கீத கானம். ‘குச்சனூரு’ என்று ஆரம்பிக்கிற பாட்டை புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி இணை கரிசக்காட்டுப் பூவே படத்திற்காகப் பாடினர். எண்பதுகளில் பெரிய வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இன்னொரு பாடகர் ரமேஷ். அமுதகானத்தில் ‘வெள்ளி நிலா’ பாடலை வாணி ஜெயராமுடனும் பகல் நிலவு படத்தில் ‘வாராயோ வான்மதி’ பாட்டையும் தங்க மாமா படத்தில் எஸ்.ஜானகியுடன் ‘இதோ மழைத்துளி’ எனும் கானத்தையும் பாடிய ரமேஷ், ‘ராதே என் ராதே’ என்ற ஜப்பானில் கல்யாணராமன் பாடலை ஜானகியுடன் பாடியவர். ‘ஒரு நாளில் மலர்ந்தேனே’ பாடல் உன்னைத் தேடி வருவேன் படத்தில் பிரபலம் பெற்ற பாடல்.

நடிகர்களில் நல்ல குரல்வளம் மிக்கவர் கமல்ஹாசன். இளையராஜா இசையில் சிகப்பு ரோஜாக்களிலும் (நினைவோ ஒரு பறவை), ராஜபார்வையிலும் (விழி ஓரத்து) மைக்கேல் மதன காமராஜனிலும் (சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்) குணா படத்திலும் (கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதமே) தேவர் மகனிலும் (இஞ்சி இடுப்பழகி) பாடியுள்ளார். தனிப்பாடலாக கலைஞனிலும் (கொக்கரக்கோ கோழி) அவள் அப்படித்தானிலும் (பன்னீர் புஷ்பங்களே) பாடினார். விருமாண்டி படத்தில் ‘ஒன்னவிட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லை’ பாடலை ஷ்ரேயா கோஷலுடன் கமல் பாடினார். ‘எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்டைக் கேட்கும்’ பாடலைப் பாடியவர் நடிகர் வடிவேலு. ரஜினி தன் குரலில் எஸ்.ஜானகியுடன் மன்னன் படத்தில் ‘அடிக்கிது குளிரு’ பாடலைப் பாடினார். பானுமதி ராமகிருஷ்ணா ‘செம்பருத்திப் பூவு’ பாடலைப் பாடினார். ஃப்ரெண்ட்ஸ், காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் இளையராஜா இசையில் பாடினார் விஜய். நடிகரும் இசையமைப்பாளருமான டி.எஸ்.ராகவேந்திரா என்கிற விஜயரமணி வைதேகி காத்திருந்தாள் படத்தில் பாடியுள்ளார். மனோரமா “அதுமாத்திரம் இப்போ கூடாது” என்ற பாடலை மலேசியா வாசுதேவனுடன் சேர்ந்து அச்சாணி படத்துக்காகப் பாடியிருக்கிறார். ‘கானாங்குருவிக்கு கல்யாணமாம் எங்க மானாமருதையில் ஊர்கோலமாம்’ என்ற பாடலை வாழ நினைத்தால் வாழலாம் படத்தில் பாடினார் மனோரமா. பிற்பாடு மகுடம், முத்துக்காளை, ஸ்ரீராகவேந்திரர், நாட்டுப்புறப் பாட்டு, சின்ன ராமசாமி பெரிய ராமசாமி போன்ற படங்களில் பாடியுள்ளார் மனோரமா.

ஒய்.ஜீ.மகேந்திரா, சார்லி ஆகியோர் மனோவுடன் சேர்ந்து ‘போடா பக்கோடா’ என்ற பாடலை சக்திவேல் எனும் படத்திற்காகப் பாடியுள்ளனர். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு இணைந்து நடிகை ரோகிணி ‘கண்மணியே கண்மணியே’ என்ற பாடலை சின்ன வாத்தியார் படத்துக்காகப் பாடியுள்ளார். ‘நேற்று இந்த நேரம்’ லதா ரஜினிகாந்த் பாடிய  டிக் டிக் டிக் படப்பாடல். மீண்டும் லதாவை அன்புள்ள ரஜினிகாந்த், வள்ளி ஆகிய படங்களிலும் பாடச் செய்தார் இளையராஜா. கார்த்திக் சின்ன ஜமீன் படத்தில் பாடினார். நடிகர் செந்தில் ‘சோறு தின்னு நாளாச்சி’ என்ற நினைவுச் சின்னம் பாடலைப் பாடினார். பூமணி படத்தில் மணிவண்ணன் ஒரு பாடலை பாடியிருக்கிறார். நடிகர்களைப் பாடச் செய்வதென்பது ஒருவிதமாக இரசிகர்களுக்கான கூடுதல் இடுபொருளைத் தயாரித்துத் தருவதுதான். நிசமாகவே பாடுவதற்கான குரல்வளம் கொண்டிருந்தவர்கள் பாடியது ஒருபுறம். இன்னொரு பக்கத்தில் நடிகர்களின் புகழ் அவர்களைப் பாட வைப்பதற்கான காரணமாக இருந்திருக்க முடியும்.

பன்மொழிப் பாடகர்களையும் தனது இசையில் தமிழில் உருவான பாடல்களைப் பாடச் செய்திருக்கிறார் இளையராஜா. இந்திப் பாடகர்களான உஷா உதூப் அஞ்சலி படத்திற்காக ‘வேகம் வேகம்’ பாடலையும் இலா அருண் காதல் கவிதை படத்தில் ‘தத்தோம் தகதிமிதோம்’ பாடலையும் பாப் இசைப் பாடகி மால்குடி ஷூபா வீட்ல விசேசங்க படத்தில் ‘இந்த பஸ்தான் பீடீஸி உள்ளதான் க்யூ எம்ஸி பாரு’ என்ற பாடலையும் ராமன் அப்துல்லாவில் ‘மச்சான் உன் மச்சினியைப் பார்த்தியா’ பாடலையும் இளையராஜா இசையில் பாடினார். ‘ஆல் தி டைம்’ என்ற ஆங்கிலப் பாடலையும் மால்குடி ஷூபா நாடோடித் தென்றலுக்காகப் பாடியிருப்பது கூறத்தக்கதே. ‘முத்திரை இப்போது குத்திடத் தப்பாது’ என்ற உழைப்பாளி படப்பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியவர் கவிதா கிருஷ்ணமூர்த்தி. ஹேராம் படத்தில் ‘இசையில் தொடங்குதம்மா’ என்ற மயக்கும் தனிப்பாடலைப் பாடியவர் அஜய் சக்கரபர்த்தி. ‘யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே’ என்ற பாடலை மித்தாலி சிங் பாடினார். புகழ்பெற்ற பாடகர் நாகூர் ஹனீஃபா ராமன் அப்துல்லா படத்துக்காக ‘உன் மதமா என் மதமா’ பாடலைப் பாடினார்.

லதா மங்கேஷ்கர் ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலை ராஜா இசையில் ஆனந்த் படத்துக்காகப் பாடியுள்ளார். ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்று தொடங்கும் “என் ஜீவன் பாடுது” பாடல் லதாவும் மனோவும் சேர்ந்து பாடிய பாடல். கமல்ஹாசனின் சத்யாவுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் லதா மங்கேஷ்கர் பாடிய ‘வளையோசை கலகலகலவென’ நல் நிரந்தர கானம். கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் லதா பாடிய ‘இங்கே பொன் வீணை’ கேட்பவர் மனங்களை வெடுக்கும் மாயப்பாடல். ‘உன்னை நான் பார்க்கையில்’ என்ற பாடல் எஸ்.பி.பாலுவும் ஆஷா போஸ்லேயும் சேர்ந்து பாடிய கண்ணுக்கொரு வண்ணக்கிளி படப்பாடல். ஆஷாவுடன் பாலு நான் சொன்னதே சட்டம் படத்துக்காகப் பாடிய இன்னொரு டூயட் ‘கைத்தாளம்’. ‘கண்ணா உந்தன்’ என்ற ஸோலோவையும் நான் சொன்னதே சட்டம் படத்துக்காகப் பாடினார் ஆஷா. எங்க ஊரு பாட்டுக்காரனுக்காக ஆஷா பாடிய ‘செண்பகமே செண்பகமே’ விண் தாண்டிய வெற்றிப் பாடல். பி.சி.ஸ்ரீராம் இயக்கிய மீரா படத்தில் இளையராஜா இசையில் ‘ஓ பட்டர்ஃப்ளை’ என்ற பாடலை எஸ்.பி.பி ஆஷா போஸ்லே இருவரும் பாடினர். அதே இணை பாடிய இன்னொரு பாடல் ‘பனிவிழும் மாலையில்’. ‘பழைய விலங்கு உடைந்ததா’ ஆஷா போஸ்லே பாடிய சோலோ. ‘எங்க ஊரு காதலப் பத்தி என்னா நினைக்கிறே’ என்ற பாட்டை ஆஷா போஸ்லேவும் இளையராஜா சேர்ந்து பாடினர். படம் புதுப்பாட்டு.

ஒரு புறம் காலத்தோடு இயைந்து வணிக சினிமாப் பாடல்ளை உற்பத்தி செய்கையிலெல்லாம் நிறைய பாடல்களை சீக்கிரமாகப் பாடிடும் வல்லமை கொண்ட பெரும் பிரபலப் பாடகர்களத் தொடர்ந்து பாட வைப்பதை முன்னெடுத்துக்கொண்டே மறுபுறம் புதிய குரல்களைப் பரீட்சார்த்தம் செய்வதை விடாமல் கடைப்பிடித்த வண்ணம் தன் இசையுலகில் வலம் வந்திருக்கிறார் இளையராஜா. ஒரு பெருவலத்திற்கு அப்பால் தொண்ணூறுகளின் மத்தியிலிருந்து புதிய காலத்தின் இளம் பாடகர்களோடு இணையலானார் ராஜா. அவரது இசையில் ஹரிஹரன் பல மறக்க முடியாத பாடல்களைப் பாடினார். ‘என்னைத் தாலாட்ட வருவாளா’ வான் தொட்ட பாடல். காசி படத்தின் அனேகப் பாடல்களை ஹரி பாடினார். யாரைப் பாட வைத்தாலும் அவரவர் தனித்திறன் மேலோங்கும் வண்ணம் பாடச் செய்தார் ராஜா. இசைக் கலைஞர்கள், கர்நாடக சங்கீதத்தில் பெயர் பெற்ற பாடகர்கள் எனப் பலரும் ராஜா பாடச்செய்த பாடகர் பட்டியலுள் அடங்குவர். ‘சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே’ பாடலை எம்.ஜி.ஸ்ரீகுமார் சித்ராவோடு இணைந்து பாடினார். பாரதி படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ ‘நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா’ என்று உருகினார். பாடகி ஹரிணி ‘அல்லி சுந்தரவல்லி லாலி’ என்ற கண்களின் வார்த்தைகள் படப்பாடலை ராஜா இசையில் பாடினார். இதே படத்தில் ‘இந்தக் காதல் செய்யும் வேலை’ என்ற ஒன்றையும் ஹரிணி பாடியிருக்கிறார். அருண்மொழியும் கீதாவும் சேர்ந்து ‘அரும்பும் தளிரே’ என்று தொடங்குவதை சந்திரலேகாவுக்காகப் பாடினர். ‘பொல்லாத மதன பாணம்’ என்று தொடங்கும் ஹேராம் பாடல் அனுபமா, மகாலக்ஷ்மி ஐயர் இணைந்து பாடியது. ‘ஸ்ரீ ரங்க ரங்க நாதனின்’ பாடலை எஸ்.பி.பி, உமா ரமணன் ஆகியோருடன் இணைந்து பாடியவர் மகாநதி ஷோபனா. ‘எனை என்ன செய்தாய் வேய்ங்குழலே’ பாடலை இவன் படத்துக்காக ராஜா இசையில் பாடியவர் சுதா ரகுநாதன். அதே படத்தில் ‘அப்படி பார்க்குறதின்னா வேணாம்’ பாடலை மாதங்கி, உன்னிகிருஷ்ணன் இணைந்து பாடினர். நான் கடவுள் படத்தில் விஜய் ப்ரகாஷ் ‘ஓம் சிவோஹம்’ பாடலைப் பாடினார். நான் கடவுளில் ‘பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்’, ஜூலி கணபதியில் ‘எனக்குப் பிடித்த பாடல்’, பிதாமகனில் ‘பிறையே பிறையே’ ஆகிய பாடல்களைப் பாடினார் மதுபாலகிருஷ்ணன்.

ஆஷா போன்ஸ்லே, இளையராஜா

‘கரும்பாலே விளகட்டி பூவாலே’ என்ற பாடல் வாழ்க வளர்க படத்தில் இடம்பெற்றது. இதை சசிரேகா, கே.வீரமணி, எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாடினர். சாமுவேல் குரூப், வித்யாதர் ஆகியோரை ‘அண்ணே அண்ணே சிப்பாயண்ணே’ என்ற பாடலை கோழிகூவுது படத்தில் பாடச் செய்தார் ராஜா. ‘கிளித்தட்டு கிளித்தட்டு’ என்ற அது ஒரு கனாக்காலம் படப்பாடலை பவதாரிணியுடன் ஜோதி சேர்ந்து பாடினார். டாக்டர் கணேசன் வண்ண வண்ணப் பூக்கள் படத்தில் ‘பங்குனிக்கப்புறம் சித்திரையே’ பாடலைப் பாடியிருக்கிறார். ஸ்வேதா மோகன் நந்தலாலா படத்தில் ‘கைவீசி நடக்கிற காத்தே’ பாடலைப் பாடினார். லேகா, சிந்து தேவி ஆகியோர் மனோவுடன் சேர்ந்து பாடிய ‘என்ன வரம் வேண்டும்’ பாடல் நந்தவனத் தேரு படத்தில் இடம்பெற்ற நல்கானம். டாக்டர் லாவண்யா கரகாட்டக்காரி படத்துக்காக ‘கொட்டி வச்ச முத்தே’ என்ற பாட்டைப் பாடினார். சுனந்தா வளமான குரல்வாகு கொண்டவர். ‘பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா’ பாடலை ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடினார். புதுமைப்பெண் படத்துக்காக சுனந்தா பாடிய ‘காதல் மயக்கம்’ அந்தக் காலகட்டத்தின் மாபெரும் ஹிட் பாடல். ‘ஆனந்தம் பொங்கிடப் பொங்கிட’ என்ற பாடல் எல்லோர்க்குமானது.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அஜந்தா, கரகாட்டக்காரி உள்ளிட்ட படங்களில் ராஜா இசையில் பாடியுள்ளார் மஞ்சரி. போடா போடா புண்ணாக்கு (கல்பனா, ராகவேந்தர் – என் ராசாவின் மனசிலே), சாய்ந்து சாய்ந்து (யுவன், ரம்யா என்.எஸ்.கே – நீதானே எந்தன் பொன்வசந்தம்), முதல் முறை (சுனிதி சௌஹான் – நீதானே எந்தன் பொன்வசந்தம்), சற்றுமுன்பு (ரம்யா என்.எஸ்.கே – நீதானே எந்தன் பொன்வசந்தம்) எனப் பல புதிய குரல்களை தன் சமீபத்திய படங்களிலும் பயன்படுத்தியுள்ளார் ராஜா.

‘ஒரு கூட்டில் சின்ன கோகிலம் இரண்டு’ என்ற பாடலை மனோவுடன் சேர்ந்து கோலங்கள் படத்துக்காகப் பாடினார் லேகா. ‘அல்லா உன் ஆணைப்படி’ பாடலை ப்ரீத்தி, உன்னிக்கிருஷ்ணன் இணைந்து பாடினர். ‘இளங்காத்து வீசுதே’ பிதாமகன் படத்தில் ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடியது. தேவதை படத்தில் ‘தீபங்கள் பேசும்’ பாடலை எஸ்.பி.பி சரண், சந்தியா இருவரும் பாடினர். சென்ற வருடம் வெளியான படம் சைக்கோ. அதில் இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் பாடிய ‘உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா’ பாடல் இந்தக் கணத்தின் யுவர்களுக்கும் பெருவிருப்பப் பாடலாக மாறியது. சித் ஸ்ரீராம் சைக்கோவில் இன்னொரு பாடலையும் பாடினார். இந்த 2021ஆம் வருடத்தின் இசை வெளியீடான மருத படத்தில் இளையராஜா இசையில் பழநிபாரதி எழுதிய ‘இல்லாம இருந்த எனக்குப் பொறப்பக் குடுத்த தாயே’ என்ற பாடலைப் பாடினார் சித் ஸ்ரீராம்.

இளையராஜாவோடு பணியாற்றுவதைப் பாடகர்கள் பலரும் பாடல் வாழ்வின் பெருமகிழ்வுக் கணமாகவே உணர்வதாகப் பேட்டிகளில் தெரிவிப்பது நாற்பதாண்டுகளாக ஒரே ஸ்வரத்தில் ஒலிக்கும் கோயில் மணியோசை போலவே ஒலிக்கிறது. இளையராஜா பாடலை இசையமைப்பதில்லை. அவர் இசையை உருவாக்குகிறார். அதுபோலவே பாடகர்களைப் பாட வைப்பதில்லை, பாடல்களை நிகழச்செய்கிறார். அப்படி நிகழும் பாடல்கள் காலம் கடந்து ஒலிக்கின்றன. மீண்டும் மீண்டும் கேட்பவர்களின் மன நுட்ப மொழி ஒன்றினைப் பிறப்பிக்கின்றன. அப்படியான மொழியின் எழுத்துருக்களாகவே பாடகர்களின் குரல்கள் விளங்குகின்றன. இளையராஜா தன் இசை வாழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்ததோ பலரோடு இணைந்து பணியாற்றியதோ நிச்சயமாகப் பெருமைக்குரிய விசயம்தான். அதைவிட நிறைவான வேறொன்று உள்ளது. அது தன் இசையில் புதிய புதிய குரல்களுக்குப் பாடல் வாய்ப்பை ஏற்படுத்திய குரல்களின் வரலாறு. இளையராஜாவைப் போல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஆயிரம் படங்களில் குறைந்தபட்சம் நானூறு பாடகர்களுக்கு மேல் பாடவைத்த இன்னொருவரைக் கூறுவது நிசமாகவே அரிதானது. 

-அடுத்த இதழில் நிறைவுறும்.

*

முந்தைய பகுதிகள்:

1. இளையராஜாவின் முதல் ஐந்து ஆண்டுகள்

2. ராஜா பாடிய பாடல்கள்

3. வழித்தடங்களும் வரைபடங்களும்

4. மண்ணில் விரிஞ்ஞ நிலா – இளையராஜாவின் மலையாளப் படங்கள்

5. மொழிபெயர்ந்த மழை

6. வரலாற்றில் இருவர்

7. ராஜாவின் பாடல்கள்

8. ராஜாவின் கவிஞர்கள்