சென்ற ஆண்டு கொரோனா தொற்று பரவி வீடடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன், நோயாளிகளையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் துப்பறிவாளர்களாக அரசு தேடித் தேடிப் பரிசோதித்துக்கொண்டிருந்த காலத்தில், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நோயாளிகள் மருத்துவமனையில் இடமின்றி, செயற்கை சுவாசக் கருவியின்றி, சாலையில் மரித்துக்கொண்டிருந்த போது, இங்கோ காரைக்குடியில் சின்ன முத்துமாரியம்மனுக்கு மாசி மாதக் காப்புகட்டும் திருவிழா நடந்துகொண்டிருந்தது. சோதனையோட்டமாக அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை வீடடங்கிற்கு நான்கு நாட்கள் முன்னர் முத்துமாரியம்மனுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பால்குடமும், அக்கினிச் சட்டியும், காவடியும், வேலும் சுமந்துகொண்டு, பூக்குழி இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். கூட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முகக்கவசங்கள் (எங்கள் ஊரில் முகக்கவசத்திற்கு வாக்கூடு- வாய்க்கூடு எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். நாம் பயன்படுத்தும் முறைக்குப் பொருந்தி வருவதாகவே தோன்றுகிறது) தென்பட அச்சத்துடன், கூடுமானவரை தொலைவில் நின்று பால்குடத்தை வேடிக்கைப் பார்த்து வந்தோம். சென்றாண்டு ஆலயங்கள் பக்தர்களுக்கு மூடப்பட்டன. திருவிழாக்கள் நின்றுபோயின. இப்போது இந்த ஆண்டும் சித்திரை மாதத் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மரணச் செய்திகளை நாள்தோறும் செவியுறுகிறோம். துயரமோ மகிழ்ச்சியோ அவை நமக்கு கொண்டாட்டம்தான். கொரோனாவில் மரண அச்சம் என்பது ஒருபுறம் என்றாலும் அதில் நம்மால் நம் வழமையான முறையில் துக்கம் கொண்டாட இயலவில்லை என்பது மிகப்பெரிய மன பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஓர் உரையாடலில் நண்பர் ஒருவர் இந்தக் கொரோனா காலகட்டத்தில் கடவுள் நம்பிக்கை நிச்சயம் குறையும் என ஆரூடம் சொன்னார். நெருங்கியவர்களின் மரணத்தைக் கண்ணுற்ற குடும்பங்களில் நிச்சயம் கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கை பரிசீலனைக்கு உள்ளாகும் என்றார்.
இந்த ஆண்டின் முற்பகுதியில் தொற்று குறைந்து சற்று இயல்பான சூழலில் மீண்டும் மாசி மாத சின்ன முத்துமாரியம்மன் திருவிழா நிகழ்ந்தது. அதேயளவு கூட்டம். சென்றாண்டு தென்பட்ட முகக்கவசம் மேலும் அருகியிருந்தது. அத்தனை மரணங்களைக் கண்ணுற்ற பிறகும் எஞ்சியிருப்பதன் நன்றிக்கடனாக இவ்வாண்டு தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தியவர்களே பெரும்பாலானோர் எனத் தோன்றியது. நெருக்கடிகளில் நாம் ஏன் கடவுளைக் கைவிடுவதில்லை? பெரும்பாலானோர் மேலும் இறுக்கமாக கடவுளைப் பற்றிக்கொள்கிறோம்.
அறிவொளி கால எழுச்சியில் மானுட அறிதல் விரிந்து அதுவரையிலான புதிர்த்தன்மைகள் விலகுவதைக் கண்ட நீட்ஷே ‘கடவுள் இறந்துவிட்டார்’ எனப் பிரகடனப்படுத்தினார். மனிதனின் அறிவாயுதம் அவரைக் கொன்றது. அவருடைய இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. கடவுளால் அல்ல, இயற்பியல் நியதிகளால் உலகம் இயக்கப்படுகிறது என உணரத் தொடங்கிய காலகட்டத்தில் நீட்ஷே இதை அறிவித்தார். பிரபஞ்ச இயக்கத்தின் மர்மங்கள் விலகுகின்றன. எனினும் அவ்விடத்தில் முன்பைவிட நுட்பமான புதியதொரு மர்மம் தோன்றுகிறது. மர்மங்களின் சுழலடுக்கில் நாம் பயணிக்கிறோம். அறிதலுக்கு முடிவென்பதே இல்லை. கடவுள் கொல்லப்பட்டுவிட்டாரா? கொல்லப்பட்ட கடவுள் யார்? எஞ்சியிருப்பது யார்?
பைரப்பாவின் கன்னட நாவலான ‘ஒரு குடும்பம் சிதைகிறது’, தாராசங்கர் பந்தோபாத்யாயவின் வங்க நாவலான ‘ஆரோக்கிய நிகேதனம்’, தகழி சிவசங்கரன் பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ ஆகியவை கொள்ளை நோய்கள் பற்றிய நுண்ணிய சித்திரங்களை அளிப்பவை. பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலில் உள்ள மிகவும் உணர்ச்சிகரமான ஒரு பகுதியைச் சற்று கவனிக்க வேண்டும். நஞ்சம்மாவின் மகள் பார்வதியையும் மகன் ராமண்ணாவையும் ப்ளேக் பீடித்துவிடும். நஞ்சம்மா ஒரு கனவு காண்பாள். கர்ப்பக் கிரகத்தில் கிராம தேவதையான காளம்மன் மடியில் பார்வதியும் ராமண்ணாவும் வெற்றுடம்போடு கிடப்பார்கள். அவர்களுக்குக் குளிருமே எனக் கம்பளியைப் போர்த்த முயலும்போது அம்மன் அவளை உள்ளே அனுமதிக்கவில்லை. அதை அர்த்தப்படுத்திக்கொள்ள முயல்வாள். குழம்பித் தவிப்பாள். அவளுக்கு உதவியாக இருக்கும் பெரியவர் மாதேவய்யாவிடம் கனவைச் சொல்வாள். அவருக்கு உள்ளூர இது அபசகுனம் எனத் தோன்றினாலும், ஆறுதலாக, அவள் பிள்ளைகள் கடவுளின் மடியில் பாதுகாப்பாக உள்ளதால் அம்மனே காப்பாள் என்பார். அம்மன் காப்பாற்ற எண்ணும் பிள்ளைக்கு மருந்து கொடுத்தால் அது அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்துமோ என நஞ்சம்மாவிற்கு ஐயம் எழுகிறது. சற்று நேரம் குழப்பத்துடன் யோசித்த பிறகு மாதேவய்யா ஒரு யோசனை சொல்கிறார். “அம்மா சொறி வந்தப்ப நாக பூசை செஞ்சா குணமாச்சு? ஊசி போட்டு வந்தப்புறம்தான குணமாச்சு? இப்பவும் அப்படியே செய்.” அவர்கள் பலவீனமடையும் தோறும் நஞ்சம்மா குழம்புகிறாள். இரவில் “என் வீட்டிற்குத்தான் முதலில் வந்திருக்கிறதோ? கோவிலுக்குப் புதிதாகக் கல்யாணம் ஆன பெண்ணைக் கூட்டிக்கொண்டு போனேன். அதனால் அம்மனின் பார்வை அவள் மீது விழுந்துவிட்டதோ? ஆனால் கிராம தேவதை காளம்மனும் ப்ளேக் தேவதை சுங்கலம்மாவும் வெவ்வேறுதானே? சுங்கலம்மாவைத் தடுக்கத்தானே காளம்மா இருக்கிறாள்? இதெல்லாம் உண்மையா பொய்யா? ஏன் இந்தப் பிளேக் நோய் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வந்து தொல்லை கொடுக்கிறது? இதைக் குணப்படுத்த மருந்து கிடையாதா?” என்று அவள் சிந்தனை ஓடுகிறது. வளத்தையும் வாழ்வையும் வழங்க கடவுள்கள் உள்ளது போலவே நோய்களையும் அழிவுகளையும் அளிக்கும் கடவுள்கள் நம் மரபில் வேதங்கள் தொட்டே பேசப்படும் ஒன்றுதான். இன்ன நோய்களுக்கு இந்தக் கடவுள்கள் பொறுப்பு என்கிறது வேதம். வேதக் கடவுள்கள் பெரும்பாலும் இயற்கை ஆற்றல்களின் தெய்வ வடிவங்கள். இக்கடவுள்களை நிறைவுசெய்வதன் வழியாக நோயைத் தவிர்க்கவும் அதிலிருந்து மீளவும் முடியும் எனும் வேதகால நம்பிக்கை இன்றுவரை நீள்வதை நாம் காண முடிகிறது.
கடவுளை முழுமையாக நம்பிக்கொண்டிருந்த நஞ்சம்மா இப்போது கடவுள், மருத்துவம் என இரண்டையும் நம்புகிறாள். கடவுளை நம்பிக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்பதை உணர்கிறாள். இந்நிலையை எப்படி புரிந்துகொள்ள முடியும்? கடவுள் நேரடியாகச் சங்கும் சக்கரமும் பாசமும் ஏந்தி குழந்தையைக் காக்கப் போவதில்லை. அந்த மருந்து கடவுள் வழியாக, அது கடவுளின் அருள் வழியாக காக்கப் போகிறது. கடவுளாகவே இருந்தாலும் அவர் கையில் அமுத கலயம் ஏந்தியிருக்கிறார். நவீன மருத்துவமும் மருந்துகளும் இங்கே கடவுளின் திட்டத்திற்கு உதவ வந்தவையாக உருமாறுகின்றன. அடுத்து ஒரு கேள்வி எழ வேண்டும். மருந்துதான் வேலை செய்யக்கூடும். கடவுள் நேரடியாக நம்மைக் காக்கப் போவதில்லை என உணர்ந்தாலும் ஏன் நஞ்சம்மாவால் முழுவதுமாக கடவுளைக் கைவிட முடியவில்லை? நாம் மருத்துவமனை வரவேற்புப் பகுதிகளில் இப்படியொரு வாசகப் பலகையைப் பார்த்திருப்போம். ‘மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறோம். ஆண்டவர் குணப்படுத்துகிறார்.’ சரியான முறையில் நோயைக் கண்டுபிடித்து சரியான சிகிச்சையை அளிக்கும்போது நோயாளி குணமாக வேண்டும் என்பதே சிகிச்சை சூத்திரம். ஆனால் மருத்துவர்கள் அறிவர், இவை எல்லாம் சரியாக இருந்தும் நோயாளியைக் குணப்படுத்த முடியாமல் போன தருணங்கள் உண்டு. பிழைக்கச் சாத்தியமில்லை என எண்ணுபவர் பிழைத்ததும் உண்டு. ஒரே நிலையில் இருக்கும் இரண்டு நோயாளிகளுக்கு ஒரே மாதிரி சிகிச்சை அளிக்கும் போது ஒருவர் பிழைப்பதும் மற்றவர் இறப்பதும் ஏன்? சூத்திரத்தை மீறும் தர்க்கமின்மைக்கு யார் பொறுப்பேற்பது? ஆகவேதான் நஞ்சம்மாவோ ஆயிரம் அறுவை சிகிச்சைகளைச் செய்த நிபுணரோ கடவுளை முற்றிலும் துறந்துவிட முடிவதில்லை. வாழ்க்கையில் தர்க்கமின்மையின் புதிர் இருக்கும் வரை கடவுளும் இருப்பார். முன்னைக் காட்டிலும் உரு சுருங்கியவராக, ஆற்றல் குன்றியவராக இருக்கக்கூடும் ஆனால் முற்றழிய மாட்டார். ஏனெனில் கடவுள் நம் பண்பாட்டுடன், ஆழ்மனதுடன் தொடர்புடைய கருத்துருவும்கூட.
இப்போது மேற்சொன்ன நஞ்சம்மா நிகழ்வைக் கொண்டு, கடவுளும் பகுத்தறிவு அறிவியலும் எதிரெதிர் துருவங்கள் எனக் கருதப்படும் சூழலில் இந்திய மனம் இவற்றுக்கு இடையே சமரசப் புள்ளியை எளிதாக அடைந்துவிட்டதை நம்மால் உய்த்துணர முடிகிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் கடவுளின் திட்டத்தின் பகுதி எனும்போது எந்த முரண்பாடும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆயுத பூஜைக்கு சாட்டிலைட்டுக்குப் பொட்டு வைக்கிறார்கள் என நாம் கேலி செய்தாலும், இந்திய மனம் முரண்பாடுகளை சமரசம் செய்துகொள்ள செய்த ஏற்பாடு இது என்பதைப் புரிந்துகொண்டால் நாம் எதையும் இழக்காமல் எல்லாவற்றையும் அனுபவிக்க எடுத்த முயற்சி பலனளிப்பதை உணர முடிகிறது.
நெய்ல் கெய்மானின் ‘அமேரிக்கக் கடவுள்களில்’ பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்குமான போராட்டம் நிகழும். புதிய கடவுள் என்பது சந்தைதான். அவருக்கு ஒரு உருவமும் வடிவமும் உண்டு. ஆயுதங்களும் பரிவாரத் தேவதைகளும்கூட உண்டு. புதிய கடவுள் பழைய கடவுளான வெட்னஸ்டேயிடம் கேட்பார். ‘எங்களால் அளிக்க முடியாத ஒன்றை உங்களால் அளிக்க முடியும் என்கிறாயே அது என்ன?’, ‘வாழ்க்கைக்கான பொருள்’ என்பார் வெட்னஸ்டே. இந்தக் கற்பனை சுவாரசியமானது. நீட்ஷே கடவுள்களின் இறப்பு எனச் சொன்னபோது அது ஆளுமையுள்ள கடவுளின் (personal god) இறப்பு மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. யுவால் நோவா ஹராரி மானுடத்துவம், முதலாளித்துவம், பொதுவுடமைத்துவம் ஆகியவற்றைப் புதிய மதங்கள் என வகுக்கிறார். இவை மதங்கள் எனில் இவற்றுக்கு வாழ்க்கை விதிகள், எய்த வேண்டிய இறுதி இலக்கு, பணிய வேண்டிய திருவுரு எல்லாம் உள்ளன. அப்படியானால் அறிவொளிக் காலம் கடவுள் எனும் கருத்தியலை அழிக்கவில்லை. அந்தப் பீடத்தில் புதிய கடவுள்களை அமர்த்துகிறது. ஆனால் இவை வாழ்க்கைக்கு என்ன பொருளும் காரணமும் கற்பிக்கின்றன? கடவுள் கொல்லப்பட்டதும் அறமும் வாழ்க்கை நோக்கமும் இல்லாமலாகும் என ஊகித்த நீட்ஷே, மனிதனுக்கு ‘ubermansh’ எனும் வாழ்க்கை நோக்கத்தைக் கற்பிக்கிறார். என்றேனும் ஒருநாள் பரிணாமப் படியில் உச்சத் திறனுடைய அதிமானுடன் உருவாவான். அந்த நிலையை அடைவதற்கான பரிணாமக் கன்னிகள் மட்டும் நாம் என்பது அவருடைய வாதம். இருத்தலியல் கேள்விகள் எழும்போது கடவுளைக் கொன்ற மனிதன் என்ன செய்வான் என்பது நீட்ஷேவின் கவலையாக இருந்தது. அதே கவலையே தஸ்தாயேவ்ஸ்கியை ‘the grand inquisitor’ எழுத வைத்தது. அதே கவலையே தல்ஸ்தோயின் பிற்கால இலக்கியங்களுக்கு முகாந்திரமாக அமைந்தது.
உலக வரலாறைப் போலவே இலக்கிய வரலாறில் இரண்டாம் உலகப் போருக்கு மிக முக்கியமான இடமுண்டு. அதன் ஆறாத வடுக்களிலிருந்து இன்றுவரை உதிரம் ஊறி, மேற்கத்திய எழுத்தாளர்களின் எழுத்துக்கு மையாகி, தாள்களை நிறைக்கிறது. இரண்டாம் உலகப்போர் என்பது போர்க்களத்தில் நிகழ்ந்த போர் மட்டுமல்ல. வங்காளத்தில் பட்டினிச் சாவு நிகழ்ந்திருக்க, கப்பலில் போர்முனைக்கு அரிசியைக் கொண்டு போனார்கள். நன்மை தீமைக்கு இடையேயான கொடு என்ன? அறத்தின் பேரால் நிகழ்த்தப்படும் அழிவுக்கு யார் பொறுப்பு? அத்தனை அறிவியலும் தொழில்நுட்பமும் இந்த இனம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளத்தானா? தீராத அறக்கேள்விகள். பிடிமானத்திற்கிருந்த கடவுளும் இல்லை. ஸ்வெட்லனா அலெக்சிவிச் சோவியத்தில் புரட்சி வந்த புதிதில் சில தேவாலயங்கள் இடிக்கப்பட்டு கழிப்பிடங்களாக ஆனதைப் பதிவுசெய்கிறார். அதே நூலில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்களில் அத்தனை ஆண்டுகளாக இல்லாத வழிபாட்டுக்கும் சேர்த்து பெரும் கூட்டம் திரள்வதையும் சொல்கிறார். கம்யூனிச நிலத்தில் கடவுள் மிக வலுவாகவே மீள் வருகையைப் புரிந்துள்ளார். முதலாளித்துவமா கம்யூனிசமா யார் கடவுளுக்கு வலுவான எதிரி என நோக்கினால், முதலாளித்துவம்தான். முதலாளித்துவம் எதையும் முற்றழிப்பதில்லை. அதன் முக்கியத்துவத்தை மட்டுமே அழிக்கிறது. கடவுளை நோக்கித் திரும்புவதற்கான மன அவகாசத்தை அது அளிப்பதில்லை. சந்தைக்கான சாத்தியத்தைக் கண்டுகொண்டால் கடவுளையும் நல்லதொரு சந்தைச் சரக்காக பயன்படுத்திக்கொள்கிறது. அப்படிச் செய்வதன் வழியாக கடவுளை நீர்க்கச்செய்து நாளடைவில் அந்த அனுபவத்தைப் பொருளற்றதாக ஆக்கிவிடுகிறது.
இரண்டாம் உலகப்போர் அளவுக்கே அல்லது அதையும் கடந்ததொரு காலம் எனக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைக் காண்கிறேன். இந்த ஓராண்டில் நம் அகமும், புறமும், வாழ்க்கை முறையும் எத்தனை மாறியிருக்கிறது! எத்தனை தொழில்கள் முற்றழிந்து, எத்தனை புதிய தொழில்கள் பெருகியுள்ளன. காரைக்குடி போன்ற சிறு நகரில் நூறு ஜோமோட்டோ வண்டிகள் ஓடுவதை 2019-ல் கற்பனை செய்திருக்க முடியாது.
மெல்ல மெல்லப் படர்ந்து மேவிய அச்சத்தை மீம்களாக எதிர்கொண்டோம். மரணங்கள் நம் அண்மையில் நிகழ்ந்து அதன் மூச்சுக்காற்றை நாம் உணரத்தொடங்கியதும் பாதுகாப்புக் குமிழ்கள் உடைந்தன. பகவத் கீதையின் முதல் அத்தியாயம் ‘அர்ஜுன விஷாத யோகம்’. அந்த அத்தியாயத்தில் கிருஷ்ணன் வாய் திறக்கவில்லை. அவனுடைய உபதேசம் என ஏதுமில்லை. ஆனாலும் அவ்வத்தியாயத்திற்கு யோகம் எனப் பெயர். அர்ஜூனன் உடல் நடுங்க, மனம் பதற, கலங்கிய உள்ளத்துடன் காண்டீபத்தை நழுவவிட்டு போரிலிருந்து பின்னடைகிறான். எவ்விதக் கேள்வியுமின்றி காண்டீபத்துடன் போரிடுபவனுக்கு கீதை தேவையில்லை. அர்ஜூனன் அதற்கு முன்பும் போரிட்டிருக்கிறான். இதே தாத்தாக்களுக்கும் சகோதரர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக வாளுயர்த்தியிருக்கிறான். ஆனால் அப்போது அவனுக்கு எவ்விதக் குழப்பமும் இல்லை. தனிமனிதனாக நம் அன்றாட வாழ்க்கையில் எல்லாம் வழமைபோல் அதனதன் போக்கில் சென்றுகொண்டிருக்கும் வரை நமக்கு கடவுளின், ஆன்மீகத்தின் துணை தேவையில்லை.
அன்றாடத்தில் ஒரு இலயப் பிறழ்வு நேரும்போது, நம் திட்டங்கள் கடக்கப்பட்டு அங்கே வேறொன்று நிகழும்போது, அனைத்தும் தர்க்க ஒழுங்கின்படி ஒழுகிச்செல்லும் எனும் நம்பிக்கை நழுவும்போது, நிகழ்வுகளின் தர்க்கமின்மையைக் கண்ணுறும்போது நாம் என்ன செய்கிறோம்? ஆன்மீகத்தைப் பற்றிக்கொள்கிறோம். இவற்றுக்கு ஏதாவதொரு தர்க்கம் இருந்தாக வேண்டும் என நம் மனம் பதற்றம் கொள்கிறது. அந்தத் தர்க்கம் கர்மக் கோட்பாடாகவோ அல்லது நியதிகளை நிர்வகிக்கும் ஒரு கடவுளாகவோ இருந்தாக வேண்டியுள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அப்படி நமக்குப் புலப்படாத மேலானதொரு தர்க்கம் இருப்பதாக ஒப்புக்கொள்வதும் அதற்கு நம்மை ஒப்புக்கொடுப்பதும் மட்டும்தான். அதுவே நமக்குப் பெரும் ஆசுவாசத்தை அளித்துவிடும். சாமானியர்கள் வாழ்வு மீண்டும் அன்றாடத்திற்குள் தங்களைப் புதைத்துக்கொள்ளும்வரை இந்த நம்பிக்கையை இறுகப் பற்றிக்கொள்வார்கள். கலைஞர்களின் வழி அதுவல்ல. அவர்கள் இந்தத் தர்க்கமின்மையைக் கலையால் எதிர்கொள்வார்கள் அல்லது தர்க்கமின்மைக்கு அடியே நிழலாடுவதாக நம்பப்படும் தர்க்கத்தை அறிய முழுமையாக முயல்வார்கள். முன்னவர்கள் தன்னையழித்து கலை வளர்ப்பவர்கள். பின்னவர்கள் ஏதேனும் ஒரு புள்ளியில் கலையைக் கைவிட நேரும் அல்லது கலையை அலகிலா விளையாட்டின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்வர். அவர்கள் கலையில் திளைப்பவர்கள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான காலத்தில் மேற்கில் வேதாந்தமும் பவுத்தமும் பிரபலமடைந்தது. இரண்டிலும் மகத்தான ஆளுமை வரிசை ஒன்று மேற்கில் உண்டு. கடவுளை நாம் நிராகரிக்கலாம். ஆனால் தர்க்கமின்மையை வழிநடத்துவது எது எனும் கேள்விக்கு ஒரு பேரொழுங்கு எனும் பதிலைச் சென்றடைய முடியும். கடவுளின் மரணத்தை இந்திய மதங்களுக்கு அப்படியே தரவிறக்கிப் பொருத்துவது பிழை. கர்மக் கோட்பாட்டின்படி இங்கே நம் வாழ்விற்கு நாமே பொறுப்பாகிறோம். நம் பாவங்களைச் சுமக்கும் மீட்பர்கள் எவருமில்லை. கடவுளை விடுங்கள், கர்மம் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் காரணமாகிறது. கடவுளை விட்டுவிட்டுகூட அறத்தின் முக்கியத்துவத்தைக் கர்மக் கோட்பாடு வலியுறுத்துகிறது. கடவுளற்ற, ஆனால், கர்மக் கோட்பாடு கொண்டுள்ள பவுத்தம் மேற்கின் ‘இன்மைவாதத்திற்கு’ (nihilistic) மிகச்சிறந்த மாற்றாக மேற்கில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. கடவுள் என்பது யாவற்றையும் வழிநடத்தும் பேரறம் என்றாகிறது. வேதாந்தம் பிரம்மைவ சத்யம் ஜகந் மித்யை என்கிறது. பிரம்மம் ஒன்றே மெய், இவ்வுலகு மித்யை. பவுத்தமும் அத்வைத வேதாந்தமும் நெருங்கியவை. பவுத்தத்திலிருந்து மேலதிகமாக ஒரு மாறா மைய அச்சாக பிரம்மத்தை முன்வைக்கிறது. மித்யையின் வேதாந்த விளக்கத்திற்குள் இப்போது செல்ல வேண்டியதில்லை. பிரம்மனே சத்தியம் என்பதை உணர்ந்துகொண்ட நிலையில் தனக்குத் தோதான அல்லது விழைந்த வாழ்க்கை பாவனைகளை சாதகன் உருவாக்கிக்கொள்ள முடியும். இறைவனின் விஷ்வரூபத்தைக் காண்பது என்பது அடுத்த நிலை. பேருருக் கொண்டு கண் முன் எழுவதல்ல விஷ்வரூபம். முழுப் பிரபஞ்சத்தையும் இறைவனாக, சேதன அசேதன பாகுபாடின்றிக் காண்பதே விஷ்வரூப தரிசனம்.
இங்கே மித்யை என்றும் மாயை என்றும் எதுவும் நிராகரிக்கப்பட இயலாது. நம்மை நாம் ஹீலராகவோ, போர் வீரனாகவோ, அரசியல்வாதியாகவோ, பிச்சைக்காரனாகவோ, சித்தனாகவோ, பாலியல் தொழிலாளியாகவோ- எதுவாக இருந்தாலும் முரண்பாடற்ற முழுமையுடன், விதியறிந்த விளையாட்டு வீரனாக வாழ்க்கையை அணுக முடியும். வாழ்க்கை வெற்றியும் தோல்வியும் பொருள்படாத அலகிலா விளையாட்டுக்கான களம் மட்டுமே. அதிமானுட சாகசங்களுக்கான சாத்தியங்களை வேதாந்தியாக இப்படியே காண்கிறேன். இயற்கை விதிகளை அனுசரிப்பது ஒரு பாவனை என்றால் சற்றே பயிற்சிசெய்து இயற்கை விதிகளை மீறுவதும் ஒரு பாவனையாகிறது. உண்மைக்கு ஒரு வழிதான். கற்பனைக்கும் புனைவுக்கும் பொய்க்கும் கணக்கற்ற வழிகள் சாத்தியம்தானே? உருவ வழிபாட்டையும், சடங்குகளையும், சடங்கின்மைகளையும், நியதிகளையும், மீறல்களையும் என எல்லாவற்றையும் அரவணைத்துக்கொள்ள வேதாந்தத்தால் இயலும். வேதாந்த அறிதலுடன் ஒருவர் எந்த ஆலயத்திற்கும் செல்லாமல் வாழலாம் அல்லது தினப்பூசைகளையும் விரதங்களையும் கடைபிடிக்கலாம். எண்ணற்ற சாத்தியங்கள். ஒரே ஒரு மெய்மையை ஏற்பதால் முரண்பட்ட தனித்த அகவயமான உண்மைகளை ஏற்பதில் வேதாந்திக்குச் சிக்கலில்லை. மாட்டுக்கறி சாப்பிடுபவர் வேதாந்தியாக இருக்க முடியாது என ஜெயமோகனை நிராகரிக்கும்போது வேதாந்தத்தின் முழுவீச்சை நாம் உணரவில்லை என்பதே நிதர்சனம். புற உலகத்தில் ஒற்றை உண்மைகள் ஏற்படுத்தும் வன்முறைகளையும் அதிகாரக் குவிப்புகளையும் வேதாந்தம் இந்த அகவயமான உண்மைகள் வழியாகவே எதிர்கொள்கிறது.
கொரோனா வீடடங்கின் முற்பகுதியில் என்னால் புனைவுகளை வாசிக்க முடியவில்லை. எக்கார் டோலேயின் ‘A new earth’ நூலைப் பழைய புத்தகக் கடையில் வாங்கி பல காலமாகியும் தொடாமல் இருந்தேன். இயல்பாக அந்தப் புத்தகத்தையே தேர்ந்தது என் மனம். டோலே துயரங்கள் நம்மை திறந்துவிடுபவை என்கிறார். உயிரச்சமும் துயரங்களும் ஆன்மீகத்திற்கான திறவுகோல்கள் என்கிறார். அங்கிருந்து அரவிந்தரை வாசித்தேன். தொடர்ந்து கபீர், ரூமி எனக் கவிதைகளில் திளைத்தேன். அத்வைதத்தில் கலைக்கான இடம் சற்று குழப்பமானது. கலையை அகங்கார வெளிப்பாடாகக் கொள்ளும் அபாயம் உள்ளதால் சாதகர்களுக்கு கலை சார்ந்து சில தயக்கங்கள் எப்போதும் உடனிருப்பவை. எனினும் ரூமி, கலில் கிப்ரான், கபீர் போன்றோரை வாசிக்கும்போது கலை என்பது திசைகாட்டியாக இருக்க முடியும் என்பதை மனம் உணர்கிறது. அத்வைத நோக்கிலிருந்து மொத்த இலக்கியத்தையும் எச்சரிக்கைப் பதாகைகளாகவும் திசைகாட்டிப் பதாகைகளாகவும் காண இடமுண்டு. ஹெச்.எஸ். சிவப்பிரகாஷின் குரு எனத் தொடர்ந்தது வாசிப்பு. ஓ.ரா.ந கிருஷ்ணனின் ‘பௌத்த தியானம்’ நம்மால் எளிதில் பின்பற்ற முடிகின்ற தியானப் பயிற்சிகளை அறிமுகம் செய்கிறது. ‘அமைதி என்பது நாமே’ அவ்வகையில் குறிப்பிடத்தக்க செயலூக்கத்தை அளிக்கிறது. தனிமனிதனாக நாம் ஒரு துயரத்தை எதிர்கொண்டு ஆன்மீகத்தில் விடை தேடுவதற்கும் ஒரு காலகட்டத்தின் துயரத்திற்கு சாட்சியாக இருந்து ஆன்மீகத்தில் விடைதேடுவதற்கும் அடிப்படையில் வேறுபாடுள்ளது. தனது துயரமும் அச்சமும் ஒட்டுமொத்த மானுட குலத்திற்கானது என உணரச் சாத்தியமானது. கடவுள்களைவிட வாழ்ந்து மறைந்த ஞானியர்களைத் தொடரவே மனம் விழைந்தது. ஏனெனில் அறுதி உண்மை எதுவாக இருப்பினும், அல்லது அப்படி எதுவுமே இல்லாது இருப்பினும், வாழும் காலத்தை எதிர்கொள்ள அவர்களிடம் சில சூத்திரங்கள் உள்ளன என மனம் நம்பியது. அவை மனதைப் பழக்கித் தகவமைப்பது வழியாக சாத்தியமாகக்கூடும். வழிபாடுகளைக் காட்டிலும் சாதனைகளில் நாட்டம் ஏற்பட்டது.
இருத்தலியல் கேள்விகளுக்குத் தூலமான புறக்கடவுள்களும் வழிபாட்டுச் சடங்குகளும் எந்த அளவிற்குப் போதுமானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. தன்னையறிதலே இக்காலகட்டத்திற்கு உரிய ஆன்மீகமாக இருக்க முடியும். வழிபாடுகள் இயல்பான காலகட்டத்திற்கு உரியவை. என்றேனும் ஒருநாள் வழிபாடு நிகழ்த்தினால் போதும். அதுவும் நாம் வேண்டுவது ‘இப்போதிருக்கும் நிலை மேம்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அப்படியேயாவது நீடிக்க வேண்டும்’ என்பதுதான். இருத்தலியல் கேள்விகளை எதிர்கொள்ளும்போது நமக்கு அன்றாடம் அவநம்பிக்கைகளுக்குத் தீர்வு வேண்டியதாயிருக்கிறது. தினமும் நாம் நம்மை எதிர்கொள்ளவும் நம்முடன் நாமே உரையாடியாகவும் வேண்டும். இதைப் பெரும்பாலான நவீன குருநிலைகளும் ஆன்மீக அமைப்புகளும் உணர்ந்துகொண்டன. மக்கள் திரளை இணையம் வழி தொட தங்களைத் திறந்துகொண்டனர். பீகார் யோகப் பள்ளி தங்களது தியான முறைகளையும் பயிற்சி முறைகளையும் இலவசமாகப் பயன்படுத்த அனுமதித்தார்கள். நண்பர் சவுந்தர் வழியாக அறிந்துகொண்டு அதிலுள்ள தியான முறைகளைத் தினமும் பயின்றேன். ஈஷா யோக மைய மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுக்கான ஒருவாரப் பயிற்சி முகாமை இணையம் வழி இலவசமாக வழங்கினார்கள். அதையும் பயன்படுத்திக்கொண்டேன். எனினும் அதிலிருந்து தொடர்ந்து செய்யும் பயிற்சிகள் என எதுவுமில்லை. சின்மயா மிஷனின் சுவாமி பரமாத்மானந்தரின் அத்வைத உரைகள் கேட்கத் தொடங்கினேன். ஆதி சங்கரரின் ‘தத்வ போதா’ பற்றி இருபது மணிநேர உரை கேட்டு முடித்து, இப்போது 275 மணிநேரம் வகுப்பெடுத்த பகவத் கீதை உரையைப் பாதிவரை கேட்டிருக்கிறேன். மிக முக்கியமான கற்றல். மற்றொரு நண்பர் மூலம் ஒரு ஆச்சாரியரின் துணையோடு முறையாக விஷிஷ்டாத்வைதம் அறிமுகம் செய்துகொண்டு, ராமானுஜரின் பிரம்மசூத்திர உரையான ஸ்ரீ பாஷ்யத்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கற்றுவருகிறேன்.
மரணம் எப்போதும் ஞானத்தின் வாயிலைத் திறந்துவைக்கிறது. சித்தார்த்தன் தொடங்கி ரமணர் வரை மரணம் எனும் இன்மை எழுப்பும் இருத்தலியல் கேள்வியை எதிர்கொள்கிறார்கள். ‘விஷாதம்’ எனும் நிலை மரணத்தைக் கண்டு மருகுவது எனச் சொன்னால் அது நம் அனைவருக்கும் பொது. அந்நிலைக்கு நம் எதிர்வினை என்பதே நம் பாதையைத் தீர்மானிக்கிறது. நாம் இருத்தலியலுக்குச் செல்கிறோமா அல்லது ஆன்மீகத்திற்குச் செல்கிறோமா? இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ‘விஷாதம்’ பெரும்பாலானவர்களுக்கான ஆன்மீக நுழைவுவாயில் எனினும் அது மட்டுமே அதற்கான ஒரே நுழைவுவாயில் அல்ல என்பதையும் மனதில் கொள்ளாக வேண்டும். ஒரு மரணச் செய்தியைக் கேட்கும்போது நம் மரணம் நமக்கு நினைவூட்டப்படுகிறது. பிறரின் மரணத்திற்குத் துயர்கொள்கிறோம் என்பதைவிட நம் மரணத்தைப் பற்றிய கற்பனைகள் நம்மைத் துயர்கொள்ள வைக்கின்றன. ஆகவே நமக்கொரு மறுமை தேவைப்படுகிறது.
விஷாதத்திலிருந்து அச்சத்தின் வழியாக செயலின்மைக்குள் எளிதாக விழுந்துவிடலாம். வாழ்வை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் அந்நிலையை ஆன்மீக அனுபூதி என வேடமிட்டுக்கொள்ளலாம். முற்றிலும் தன்னலமும் துணிவின்மையும் மட்டுமே இந்நிலைக்குக் காரணம். ஆன்மீகவாதிகளின் மீதான பெரும்பாலான விமர்சனங்கள் இந்தத் தளத்திலிருந்தே எழுகின்றன. ஆனால் மெய்யான ஆன்மீகத்தில் துணிவின்மைக்கு இடமில்லை. தன்னலத்திற்கும் வேலையில்லை. வள்ளலார், அய்யா வைகுண்டர் போன்றோரின் பங்களிப்பையும் அவர்கள் வாழ்ந்த காலத்தையும் காணும்போது பஞ்சமும் கொள்ளை நோய்களும் நிறைந்த காலகட்டம் என்பது புலப்படுகிறது. நுண்ணுணர்வு கொண்ட மனம் இயல்பாகவே ஆன்மீக நெருக்கடிக்கு உள்ளாகும். மேற்கில் ‘விடுதலை இறையியல்’ என்பது புகழ்பெற்று, ஒடுக்கப்படுபவருக்கு ஆற்றலாக கிறித்தவ ஆன்மீகம் திகழ முடியும் என்கிறது. ஆசை மொழிபெயர்த்த ‘அமைதி என்பது நாமே’ வியட்நாம் போரில் அமைதியை ஏற்படுத்தப் போராடிய திக் நாட் ஹானின் படைப்பு. அவர் ‘ஈடுபடும் பவுத்தம்’ எனும் கருத்தியலை முன்வைக்கிறார். வள்ளலாரும் வைகுண்டரும் சமய, சமூக மேம்பாட்டு நோக்கில் ஆன்மீகத்தைப் பயன்படுத்த முயன்றனர். காந்தி அரசியல் தளத்தில் ஆன்மீக ஆற்றலைத் துணைக்கு அழைத்தார். அரசியல் சமூக மாற்றங்களுக்காக ஆன்மீகத்தைப் பயன்படுத்துவது ஒரு வழி. முற்றிலும் அவற்றிலிருந்து ஒதுங்கியிருந்த ரமணர் வேறொரு வழியில் பங்காற்றினார். திக் நாட் ஹான் எதுவுமே செய்யாதிருத்தல் இவ்வுலகிற்கு நீங்கள் செய்யும் மிக முக்கியப் பங்களிப்பாக இருக்கலாம் எனச் சொல்கிறார். கடலில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் ஓடத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பதற்றத்துடன் இருக்கும்போது ஒரேயொருவர் அமைதியாக இருந்தால்கூட சிலரையாவது காக்க முடியும் எனும் உதாரணத்தை அளிக்கிறார். ஆகவே ஆன்மீகத்தில் இவை இரண்டுமே வெவ்வேறு வகையில் செயல்படும் முக்கிய வழிமுறைகள்தான்.
காந்தியின் உருவகத்தைக் கடன்பெறுவதாக இருந்தால், பெருந்தொற்று என்பது ஒரு கலங்கிய நதி. தெளிவடைவதற்கு முன்பான இன்றியமையாத படியில் உள்ளோம். இந்த ‘விஷாத’ நிலையைத் தனி மனிதர்களாக எதிர்கொண்டிருப்போம், மானுட குலமாக இயற்கைப் பேரிடர்களின் போதும் போர்களின் போதும் அடைந்திருப்போம். ஆனால் ஒட்டுமொத்த மனித குலமே தொடர்ச்சியாக இத்தனை நீண்டதொரு காலத்திற்கு விஷாத நிலையில் இதற்கு முன் நீடித்திருக்குமா எனத் தெரியவில்லை. மரணத்தின் தர்க்கப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலேயே மனிதன் ஆன்மீகத்தை நோக்கித் திரும்பியிருக்கக்கூடும். மரணத்தை ஏற்கும் மனச் சமாதானத்தை மதங்கள் தங்களுக்கே உரிய முறையில் உருவாக்கி அளித்துள்ளன. பெருந்தொற்றும் அதையொட்டிய வீடடங்கு காலமும் நம் அன்றாடத்தின் சக்கரச் சுழற்சியைத் தற்காலிகமாகவேனும் நிதானப்படுத்தியிருக்கிறது. இந்த நிதானமே நம்மை அச்சுறுத்துகிறது. அந்தரங்கமாகக் கேள்விகளற்ற ஓட்டத்தையே நாம் விழைகிறோம். இந்த விஷாத நிலை நிச்சயம் கலையும். இப்படிச் சொல்வது ஆறுதலுக்காகச் சொல்லப்படும் வெற்று நம்பிக்கை வார்த்தைகள் அல்ல. ஆனால் அதற்குள் நாம் எவற்றை எல்லாம் இழந்திருப்போம்? எத்தனை காலமாகும்? மனித குலத்தின் ஒளிக்கீற்றுகள் குன்றி அவற்றின் உள்ளடுக்குகளில் இருந்து இருள் எழுந்து வரும்போது நாம் அவற்றின் சாட்சிகளாகத் திகழ வேண்டியிருக்கலாம். அந்த இருண்மையில் பங்கேற்பாளர்களாக நாமிருக்க நமக்கு இப்போது ஆன்மீகத் தன்னறிவு வேண்டியதாய் இருக்கிறது. விஷாதத்தில் தொடங்குவது ஞானத்திலேயே முடிவுறும். இந்நிலையைக் கடந்துசெல்லும் துணிவு நம் ஒவ்வொருவருக்கும் வாய்க்கட்டும்.
1 comment
மிக பரந்துபட்ட வாசிப்பும், கருத்து செறிவும் திகைக்க வைக்கிறது.
Comments are closed.