அகம் சுட்டும் முகம் (பகுதி 2) : கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

by எம்.கே.மணி
0 comment

ஸ்வப்னாடனம் படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

அதற்கு அப்புறம் ஜார்ஜ் சில படங்களைச் செய்தார். மண்ணு (1978) போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். எனினும், தற்போதைய ஒரு வசதிக்காக உள்கடல் (1979) என்கிற படத்தில் இருந்து கட்டுரையைக் கொண்டுசெல்லலாம் என்று படுகிறது. எந்தத் திக்கில் இருந்து பார்த்தாலும் உள்கடல் மிக முக்கியமான படம். அது நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று நினைப்பது அதனால்தான். மற்றும் ஜார்ஜை அறியாதவர்களுக்கு இந்தப் படத்தின் மூலம் அவருடைய முகம் தெளிந்து வந்துவிடும்.

உள்கடல் என்கிற சொல்லில் ஒரு அதிர்வுண்டு. ஒரு துணுக்குறல் உண்டு. செம்மீன் படத்தில்  வெவ்வேறு கோணங்களில் கடலைக் காட்டுவார்கள். படம் முடிகிற நேரமாகும் போது கருத்தம்மாவும், பரிகுட்டியும், பழனியும் இறுகிப் போவார்கள் என்பது தெரியுமில்லையா? படம் இன்னதென்று இல்லாத அனைத்து உணர்வுகளுக்கும் பார்வையாளர்களை நெட்டித் தள்ளும்போது, நாம் பார்க்கக்கூடிய கடல் பொங்கும் தீவிரமே வேறு. நடுக்கடலின் அடுக்குகள் திரை முழுவதும் இருக்கும். அலைகள் இல்லை. ஆனால் அந்த அடுக்குகள், அதற்கு உள்ளே குமுறுகின்ற அழுத்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். அந்த ஷாட்டுகளில் என்னையறியாமல் உள்கடல் என்பதைச் சொல்லிப் பார்த்திருக்கிறேன். வாழ வேண்டிய உலகில் மனிதன் ஒரு பொறுமையை, நிதானத்தைப் பாவித்துக்கொண்டு உள்ளே பொங்கியவாறு இருக்கிற உள்கடலை சுமந்து நடக்கிற கதையைத்தான் உள்கடல் படம் மூலம் சொல்ல வந்தார் ஜார்ஜ்.

கல்லுரி முடித்துவிட்டு சொந்த வீட்டுக்குத் திரும்பிய ராகுலன், சோம்பலாகத் திரிகிற விடுமுறை நாட்களில் மனதில் மெல்ல ஒரு கவிதை உருவாவதை அற்புதமாகப் படம் பண்ணியிருப்பார் ஜார்ஜ். அது முன்னே நிகழ்ந்துவிட்ட அவனுடைய காதல் தோல்வியைப் பற்றியது. யாரும் யாரையும் காதலிக்கலாம், ஆனால் சுற்றிலும் மேவக்கூடிய சமூகச் சூழல்களில் ஒரு முணுமுணுப்பும்கூட வெளியே வராமல் புதைந்து போகக்கூடிய காதல்களில் ஒன்றாகவே இவனுடைய காதலும் இருந்துவிட்டது. அந்த நஷ்ட சொர்க்கங்ளைப் பற்றி என்ன அழுது தீர்த்தாலும் அவை மீள முடியாதவை. அது தழும்பாகக் கிடப்பதை, அதை வருடியவாறு திரிவதை நிறுத்த முடியவில்லை என்பதில் அவனுடைய சிரிக்காத முகமிருக்கிறது. மனிதர்களுடன் வாய்விட்டு மனம் விட்டு பேசாமல் தொடர்ந்துவந்த தத்தளிப்புனூடே அவன் அவர்களின் மனமறியும் சாதூர்யமும் அறிந்திருக்கிறான். ஒரு முனகல், தலையசைப்பு, ஆமோதித்தல் போன்றவைகளால் வாழ்க்கையை அவன் இதுவரை தாண்டி வந்திருந்தாலும், ஒரு கூட்டம் ஜனங்களைப் பார்க்க வேண்டியிருக்கிற,  முதுகலைக் கல்வி பயில மேலே போவதுதான் படம். அங்கே ஒரு பெண்ணுமிருந்தாள். அவளது கண்களில் அவன் தன்னையறியாமல் கவனிக்க வேண்டி வந்து, அதில் கண்ட காதலால் அவளைக் காதலிக்கிற சந்தர்ப்பமும் வருகிறது.

This image has an empty alt attribute; its file name is shobha-ulkadal.jpg

பொதுவான ஆண்களின் பெண்களின் காதல் உறவுகள் எந்தச் சந்திலும் நுழைந்து வரக்கூடும். ஆனால் முகம் காட்டி விடாமல் புழங்குபவர்களுக்கு, பூனை போல எங்கிருந்தும் நழுவிச் செல்பவர்களுக்கு, சந்தர்ப்பங்கள் குறைவு. அழுகிற பிள்ளை பால் குடிக்கும் என்பதல்லவா பழம்சொல்? அவர்கள் என்னென்ன ஒழுக்க விதிகளைப் பாவித்திருந்தாலும், செமி துறவுகளில் ஈகோவை கெட்டிப்படுத்தியிருந்தாலும் அவர்களுக்கு உள்ளேயும் எப்போதும் பால் பொங்குவதில்லை என்பது கிடையாது. அவர்கள் படிப்பவர்களாக, எழுதுபவர்களாக தங்களைத் துண்டித்துக்கொண்டிருந்தாலும், தன்னைப் போலவே இருக்கிற துணை கிடைக்குமா என்பதில் ஒரு தேடுதல் இருக்கும். ஒரு இண்டலெக்சுவல் கம்பெனி, அறிவுசார் உலகத்தைச் சேர்ந்த யாருக்குத்தான் இந்தச் சொப்பனம் தித்திக்காது? வெறுமனே சொல்லிச் செல்லாமல், எவ்வளவோ அடுக்குகள் கொண்ட தனிமையுடன் இருந்த ராகுலனுடன் ரீனா வந்து இணைந்துகொள்வதை அதிகமாகத் தர்க்கம் பேசாமல் இணைத்து வைக்கிறார் இயக்குநர். அவனைப் போலவே அவள் தனிமையில் இருந்தாள். அவனைப் போலவே அவள் பேச்சில்லாதவளாக இருந்தாள். அவள் அவனையோ, அவன் அவளையோ காதலிப்பதாகச் சொல்லிக்கொள்ளவும்கூட அவகாசமில்லாமல், அவர்கள் ஒருவரில் ஒருவர் தொற்றிக்கொள்கிறார்கள். கொம்புக்குக் கொடி தாவுவதைப் போலத்தான். அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, அன்றாடம் சந்தித்திருந்தும் அவர்கள் தங்களுக்குள் பேச வேண்டியதைப் பேசி இருந்திருக்க மாட்டார்கள். ஒருநாள் ராகுலன் விடுமுறைக்கு ஊருக்குக் கிளம்புவதாகச் சொல்லும்போது ரீனா துடித்துக்கொண்டு நிற்பது தெரிகிறது. அவன் அவளுடைய தலையை வருடிவிட்டு செல்லுகிறான். அதைத் தொடர்ந்து அவளுடைய கடிதம் துடிக்கிறது.

அவர்கள் தங்களுடைய காதலை அறிகிறார்கள்.

ரீனாவின் அறிமுகத்துக்குக் காரணமாக இருந்த அண்ணன் இவர்கள் இருவரைப் போலவே இருக்கிறான். ஒன்றுமே இல்லாமல் வெறுமனே ஒரு பேரமைதியின் நடுவே அவன் ஒரு பெண்ணைப் பார்க்க, அப்படி ஒரு காதலும் படத்தில் உண்டு. அவள் ஒரு கன்னியாஸ்த்ரீயாக இருந்து தெய்வ பரிவில் வாழ்ந்துவிட முடியாதா என்று சர்ச்சின் நிழலில் ஒதுங்கியவள். இவர்கள் யாவருமே உள்கடலின் ஆட்கள்தான். அவர்கள் அடுத்த கட்டத்திற்குப் பாய முயல்பவர்கள் அல்ல. அவர்களைத் தடுத்து நிறுத்தப் போகிற உலகின் தடித்தனத்தை வெகுவாக அறிந்தவர்கள். அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறவர்கள். அவர்களால் யாருடைய மனதையும் உடைக்க முடியாது. ஒன்றை மற்ற இடத்துக்கு மாற்றி வைக்க முடியாது. புரட்சி செய்ய முடியாது. ஆனால், உலகு ஆயிரம் பேதங்களை உறவாக்கி வைத்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள உயிர் கரைத்துக்கொண்டிருக்கும் இல்லையா?

ஜார்ஜ் தங்களுக்குள்ளே இரும்பு விதிகளை வைத்துக்கொண்டு வாழப் பழகிய மனிதர்களைக் காட்டித் தருகிறார். அவர்களின் மதப்பற்று அல்லது சாதிப்பற்று அல்லது இனக்குழு கௌரவம் அனைத்துமே எவ்வளவோ மனங்களை உடைக்கக்கூடியது. ஆனால், அதிலிருந்து வெளியேற அவர்களால் முடிவதில்லை. மட்டுமல்ல, அவர்களோடு இருப்பவர்களையும் அது அள்ளிச் செல்லுகிறது. ரீனாவின் அண்ணன் தற்கொலை செய்துகொண்ட பிறகு துடிப்பவர்களுக்கு மனம் அப்போதும் மாறியிருப்பதில்லை. மதம் அங்கே நின்று நிலைக்கிறது. வாழ்வை மாற்றத் தகுதி இல்லாதவர்கள் அதன் போக்கில் அடித்துச் செல்லப்படுவதுதானே இயல்பு?  ராகுலனின் முந்தைய காதல் எப்படிப் புதைந்து போயிற்றோ, இதுவும் அவ்வழியே செல்லும் தறுவாய்க்குப் படம் செல்லுகிறது.

நல்லவேளையாக ரீனா மாற்று வழியில் முதலடி எடுத்து வைக்கிறாள்.

அடித்துக்கொண்டு போக வேண்டியிருந்த ராகுலன் காப்பாற்றப்படுகிறான்.

மிகவும் எதிர்பாராத ஒரு விபத்து போல இருவரும் இணைகிறார்கள் என்பதற்கான திரைக்கதை எழுதப்பட்டிருந்ததால் இது ஜார்ஜின் படம். 

படம் ஒற்றைக் கதையில் ஒரே நோக்கத்துடன் சொல்லப்படவில்லை. ஒரு மெளனமாக ஒளியில் நிற்கிற காதல் கதையின் வழியே பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. 

அலைக்கழிக்கப்படும் மனங்களை சகஜத்துக்குப் பழக்குகிற இவ்வுலகின் நியதிகள் செய்கிற புன்னகை எவ்வளவு எள்ளல் நிரம்பியது? அது தனிப்பட்ட மனிதனின் ஆசாபாசங்களில் அத்துமீறி நுழைந்து அவனை அவமானம் செய்து, அவனை ஒரு பிழைப்பு நடத்துகிற மிஷினாக உருட்டவும் செய்கிறது.

படத்தில் வில்லன்கள் இல்லை, அடியாட்கள் இல்லை, கத்தி துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இல்லை. யாராவது யாரையாவது மிரட்ட வேண்டுமே, அதுவுமில்லை. திலகன் மொத்தம் இரண்டு காட்சிகளில் மட்டுமே வருகிறார். வாய் முழுக்கச் சிரிப்புடன் இருக்கிறார். ராகுலனின் தந்தை அவர்தான். ஆயின், அவர் எப்படிப்பட்டவராக இருக்கலாம் என்பது படம் பார்க்கிற அனைவருக்கும் தெரியும். மகனின் முகத்தில் சிரிப்பு மறைந்து போனதற்கு முழுமுதல் காரணம் அவர்தான். படத்தில் யாரும் படிக்கிற படிப்புக்கு ஒரு கேரக்டர் இருக்கிறது. காதலர்கள் இருவரும் படத்தின் முடிவிலேனும் துணிச்சலாக ஒரு இடத்துக்கு சென்று சேருவது அவர்கள் படித்த படிப்பினால்தான். அதே நேரம், படிப்பு உண்டாக்குகிற கோழைத்தனம், அவ்வப்போது உண்டாகிற சலனங்கள், எதிர்காலத்தைப் பற்றின பயத்தின் பின்னணியில் எதிலாவது ஒன்றில் சரணடைந்து விடுகிற வீழ்ச்சி, எல்லாமே இயக்குநர் சுட்டிக்காட்ட விரும்பினவை. ஒரு நல்ல படம், முடியும் போதுதான் துவங்குகிறது என்கிற ரீதியில் யோசித்துப் போகும்போது ராகுலனின் வாழ்வில் ரீனா வந்து சேராது இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கும்போது அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவன் மாணவனாக இருந்து படத்தில் ஒரு கட்டமாக ஆசிரியராக மாறியிருக்கிறான். மிகவும் பண வசதியும் செல்வாக்குமுள்ள ஒரு குடும்பத்தில் இருந்து வந்த ஒரு மாணவி அவனை விரும்புகிறாள். ரீனாவிற்குத் திருமணம் என்று கேள்விப்படுகிற ராகுலன், அவன் மீது பழி விழுந்ததற்குக் கேள்வி கேட்காமல், யாரோ அதற்குப் பரிகாரம் சொல்லும்போது அவ்வழியில் போகிறான். ரீனா வராதிருந்து அந்த மாணவியை அவன் கல்யாணம் செய்திருந்தால், ஒரு ஆழமான கவியாக தன்னில் இருந்த ராகுலன், அவர்களுடைய ஜோதியில் கலந்துகொள்ள முடியாமல் அந்நியமாகி தன்னை அழித்துக்கொண்டிருக்கக்கூடும்.

அல்லது தனது காதலை வெட்டென மறந்து பிராக்டிக்கலான ஒரு உலகில் சஞ்சரித்து ஒரு வெற்றியாளனாக பல மேடைகளில் ஜொலித்திருக்கவும் கூடும்.

படத்தில் இரண்டு போக்குகளுக்கும் இயக்குநர் இடம் வைத்திருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் இசை அதிகமான தலையீடு செய்துகொண்டிருந்ததாகத் தோன்றியது. பிற்பாடு, ஓரளவு சாந்தி, சமாதானம் நிலவியதில் சந்தோசம். ஒவ்வொரு பாடலும் கவிதை தோய்ந்தவை. துக்கத்தின் மினுக்குகள் கொண்டவை. ஒரு பாடலில் ‘நீ மட்டும் எங்கு போனாய்’ என்கிற வரிகள் வரும்போதெல்லாம் கண்ணீர் முட்டியது. நாயகனின் மனதில் கவிதை உருவாகி வருவதை அவர் எந்தப் பிரம்மாண்டங்களினாலும் விவரிக்க முற்படவில்லை. ஆனால் அந்த வேதனையை கேமராவின் நகர்வுகளினால் காவியமாக்குகிறார். அதற்கு ராகுலனாக நடித்த வேணு நாகவள்ளியும் காரணம். உள்கடலின் ஆளாக நடிக்க அவரைக் காட்டிலும் வேறு ஒருவர் இருந்துவிட முடியாது. முதல் காரணம் அவர் ஒரு படைப்பாளி. இரண்டாவது காரணம் அவர் எப்போதுமே புன்னகை செய்யும்போது தோற்றவராகவே காணப்படுவார். எல்லாவற்றையும்விட பெண்மை மிளிரும் முகம். அதைச் சொன்னால் போதாது, அவருடைய நடை, உடை, பாவனைகளில், உடல் மொழியில்கூட பெண்மையின் சாயலிருக்கும். ஷோபாவைப் பற்றித்தான் அதிகம் சொல்ல வேண்டும். ஆனால் அதுவே ஒரு முழுக்கட்டுரையாக இருக்க வேண்டும். அப்படி அவர் ஒரு மூலையில் நிற்கிறார். மனதால் அப்படி ஒரு இருளில் அவர் ஒதுங்கி நிற்கிறார். நம்மில் பரவுகிற பச்சாதாபத்தில் அவரை அங்கிருந்து இழுத்து, அவரது தலையை வருடிக்கொடுக்க வேண்டும். ஆமாம், அவர் நம்மை காதலில் வீழ்த்துகிறார். ஷோபா தன்னளவில் முழுமையான சினிமா நடிகைகளின் எந்த க்வாலிட்டியையும் கொண்டிருப்பவர் அல்ல. ஆனால் அவர்களுடைய எந்தத் தொழில்நுட்பத்தையும் ஓரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு எந்தப் பார்வையாளன் மீதும் நேரடியாகத் தாக்குதல் நிகழ்த்தக்கூடியவர். பாலு மகேந்திராவை எடுத்துக்கொள்வோம். அவரால் ஷோபாவுடைய காதலில் இருந்து தப்பித்திருக்கவே முடியாது.

ரீனாவின் அண்ணனாகச் செய்திருக்கிற ரத்தீஷ் குறிப்பிடத்தக்க நடிகர். இப்படத்தில் அவருடைய ஆளுமையைக் கடந்த துக்கம் மிகவும் கவனிக்கதக்கதாக வெளிப்பட்டது. ஒரு கதவு திறந்து,  எதிர்பாராத முறையில் ஒரு முகத்தைப் பார்ப்பது போல அவருடைய மரணம் காட்டப்படுகிற முறை, அதில் சினிமாவின் சக்தி என்னவென்பதை அறியலாம். 

ஜலஜா என்பது அவருடைய காதலியாக நடித்தவரின் பெயர்.

அவருக்கு யாரும் தனிமையின் முகத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே அதைத் தொடர்ந்து மூக்கு ஒழுவியாகவே இருக்க வைத்து துறையை விட்டே துரத்தி அனுப்பினர் மலையாளிகள்.    

திரைக்கதையில் சில அற்புத வெட்டுகள்.  

அதைப் போலவே எடிட் செய்யப்பட்ட பல வெட்டுகளில் மேதமை.

பல்வேறு போதாமைகள் இருந்திருக்க வேண்டும். அதன் பலவீனங்கள் தெரியாமலில்லை. ஆயினும் இயக்குநர் தன்னுடைய முழுமைக்குப் போராடியிருப்பதை படத்தில் பார்க்க முடியும். அந்த உயர்ந்த இலட்சியத்தைக் கடைசி படம் வரையில் கொண்டுசென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி இருக்கிறது.

-தொடர்கிறேன்.

*

முதல் பகுதி: அகம் சுட்டும் முகம் (பகுதி 1)