ஒருமணி நேரத்தில் திரும்பவும் அழைக்கிறேன் எனப் புதிய எண்ணொன்றில் இருந்து முகுந்த் நாராயணி சொன்ன போது, அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து துள்ளினேன். அப்படி எழுந்த போது, விமானம் தரையிலிருந்து எழும்புவதற்கு முன்பு சப்தமிடுவதைப் போல, ஹ்ஹஹக் என எல்லோருக்கும் கேட்கும்படியான உறுமல் கேட்டதாகப் பிற்பாடு அலுவலக நண்பன் ஒருத்தன் சொன்னான்.
அவனிடமிருந்து அழைப்பு என்றதுமே ஆர்வ மிகுதியில் நானே அப்படிச் சப்தமிட்டிருக்கிறேன் போல. நெஞ்சளவு கேபின் இருக்கிற என்னுடைய அலுவலகத்தில் ஏதோ துக்கச் செய்தி வந்துவிட்டது என என்னை எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் என்னுடைய முகத்தில் கண்ட உற்சாகத்தையும் துள்ளலையும் கண்டதும், மறுபடி அவரவர் வேலையைப் பார்க்கத் துவங்கினர்.
என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் அந்தத் தகவலை அழைத்துச் சொல்ல அலுவலக வாயிலை நோக்கி ஓடினேன். போகையில், “என்ன ப்ரோ மகிழ்ச்சியா இருக்கீங்க. மாமியார் செத்துட்டாங்களா” என்றான் எப்போதும் எடக்காகப் பேசும் நண்பனொருத்தன். “அப்டீ நடந்தா படுக்கப் போட்டு உன் வாயில ரெமி மார்ட்டின ஊத்தறேன்” எனச் சொல்லிவிட்டுக் கடந்தேன். முகுந்திடம் பேசிய பின்னர், மற்றவர்களிடம் சொல்லிக் கொள்ளலாம் எனப் பிற அழைப்புகளைத் தள்ளிப் போட்டேன்.
முகுந்த் செத்துவிட்டான் எனத்தான் எங்கள் நண்பர்கள் குழாமில் நம்பிக்கொண்டிருந்தோம். அவன் வங்கக் கடல் வடகிழக்குக் காற்றைப் போல, எந்த நேரத்தில் எங்கே குவிந்து, சுழன்றபடி மையமிட்டிருப்பானெனக் கணிக்கவே முடியாதளவிற்கு இருந்தான். யாராவது ஒருத்தருக்கு எங்கிருந்தாவது அழைத்துப் பேசுகையில் மட்டும்தான் அவன் அங்கிருக்கிறான் என்பதை எல்லோரும் அறிந்துகொள்வோம்.
கல்லூரிக்குப் படிக்க வருகையிலேயே, அவனுடைய அம்மா அகாலமாகச் செத்துப் போயிருந்தார். யாருடைய துணையும் இல்லாமல் கல்லூரியில் சேர வந்திருந்த அவன், விண்ணப்பத்தில், தந்தையின் கையெழுத்து என இருந்த இடத்தை அவனே, கோழி புழுவிருக்கிற குப்பை மண்ணைக் கிளறுவதைப் போல, ஒயிலாக நிரப்பியதைத் தள்ளி நின்று என் கண்ணால் பார்த்தேன். அப்போது சிறு பதற்றமுமின்றி திரும்பி என்னைப் பார்த்துக் கண்ணடித்தது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. வெள்ளை வட்ட முகத்தில் பெண்களுக்கு இருப்பதைப் போலப் புருவங்கள் நேர்த்தியாகத் திருத்தி வரையப்பட்டிருந்தன.
நாங்களெல்லாம் பூனை மயிரைத் தடவிக்கொண்டிருக்கையில், அப்போதே அவனுக்கு மீசை கமலஹாசனுக்கு இருப்பதைப் போல நன்றாகத் தடித்து வளர்ந்திருந்தது. முழுக்கைச் சட்டையை முழங்கைக்கு மேலே திருகி முறுக்கிவிட்டிருந்தான். மேலிரு பட்டனை கழற்றி விட்டிருந்த அவனுடைய நெஞ்சில், கருப்பு கயிறொன்றில் கோர்க்கப்பட்ட தேள் வடிவ சில்வர் நிற டாலர் தொங்கியது. அரவிந்த்சாமிக்கு ரௌடி வேடம் போட்டதைப் போல இருந்த அவன் எல்லா வகைகளிலும் எங்களைவிட பெரிய பையனாக இருந்தான். அவனுடைய ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளத் தடுமாறி நாணுகிற எங்களுடைய ஆசிரியர், அதை மறைத்துக்கொள்ளும் பொருட்டு, பாடம் நடத்திக்கொண்டே நகர்ந்து வந்து முகுந்தின் தோள்பட்டையை அழுத்திவிடுவார்.
பெரும்பாலானவர்கள் அவனுடைய பெயரை முகுந்த் நாராயணன் என அவசரத்தில் வாசிக்கும் போது, சட்டென கையைத் தூக்கி அடிக்கப் போகிற பாவனை செய்து விட்டு, “ரீட் ப்ராப்பர்லி. நாரயணி” என அவசரமாகச் சொல்கிற முகுந்த், அவனுடைய அம்மா பெயரைப் பின்னொட்டாக வலிந்து சேர்த்துக்கொண்டான். அவனுடைய பிறந்தநாளுக்கு கல்லூரி விடுதிக்கு முகுந்தின் அப்பா வந்திருந்த போது, அறையை விட்டு வெளியே வரவேயில்லை. உயரதிகாரிகளுக்கே உரித்தான உடல்மொழியில் கனவான் போலத் தோற்றமளித்த அவர், அப்போது மழைக் காலம் என்பதால், சாரலில் நனையாமல் இருக்க ஊதா நிறக் குடையைப் பிடித்தபடி மரமொன்றின் அடியில் இருந்த பெஞ்ச்சில் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார்.
லீகூப்பர் செருப்பணிந்த அவருடைய கால்களில் மழைநீர் சொட்டுச் சொட்டாய் விழுந்து கொண்டிருந்த காட்சியை, அதற்கு நேரெதிராக இருந்த மூன்றாம் எண் அறையிலுள்ள ஜன்னல் வழியாக, அதில் தொட்டுப் படர்ந்திருந்த சிவப்புக் காகிதப் பூமர மறைப்பினூடாக முகுந்த் ஹேஷ் புகைத்தபடி, குற்றவுணர்வின் சிறுசாயல்கூட இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓங்கி அடித்து விடுவான் என்பதால், யாரும் அதுகுறித்து அவனிடம் வாய் திறக்கவில்லை.
துணிந்து ஒருத்தன் சொன்ன போது, “டேய் உதை வாங்கப் போற. கொஞ்ச நேரத்தில பாரு. மார்ட்டின் ஹால்ல இருந்து பொண்ணு ஒருத்தி நடந்து போகட்டும். மக வயசுன்னுகூட பார்க்காம பிக்கப் பண்ணி கூப்டு போயிடுவாரு” என்றான் முகுந்த். அதைக் கேட்டவுடனேயே அவரைப் போய்ச் சந்தித்தே ஆகவேண்டுமென எனக்குள் உற்சாகம் பீறிட்டது.
ப்ரெஞ்ச் லோபில் இருந்து வாங்கிக்கொண்டு வந்த கேக் பொதியை என்னிடம்தான் கொடுத்தார் அவர். கூடவே ஒரு வெள்ளைக் கவரை கையில் திணித்துவிட்டு, “கவர்ல காசு இருக்கு. யார்ட்டயாவது விசாரிச்சு அவங்கம்மாவுக்கு அமாவாசை திதி கொடுக்கச் சொல்லிடு தம்பி” எனச் சொல்லிவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் நடந்து போனார். வெள்ளையில் சிகப்பு நிறக் கோடு போட்ட சட்டை போட்டிருந்த அவர் நடக்கையில், முகுந்தைப் போல வலது தோள்பட்டை இறங்கியிருந்தது. செம்மண் மழைச் சாலையில் நடந்த அவரது முதுகில் செருப்பு விசிறிய சிறுமண் துகள்கள் ஒட்டின.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவனுடைய தந்தையை நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் திரும்பப் பார்க்கவில்லை. முகுந்தின் குணமறிந்து அவனது குடும்பம் குறித்த கதைகளை நாங்கள் யாரும் கேட்கவுமில்லை. அவனுடைய அம்மாவின் அகால மரணமே, போதை தலைக்கேறி அவன் தனக்குத்தானே தலையிலடித்துப் புலம்பியதன் வழியாகத்தான் தெரியவும் வந்தது.
ராகிங்கிற்கு பயந்து அவனது அறையில்தான் பத்துக்கும் மேற்பட்டோர் அடைந்து கிடப்போம். மூத்த மாணவர்கள் அவனது அறையைத் தட்டி எட்டிப் பார்க்க அச்சம் கொண்டிருந்தனர். ஏனெனில் முகுந்த் அறையில் பளபளக்கிற, கிளிமூக்கினைப் போல நுனி வளைந்த கத்தியொன்று இருந்தது. எங்களில் சிலருக்குக் கல்லூரிக் கட்டணத்தைக்கூடச் செலுத்தினான் என்கிற வகையில் எல்லோருக்கும் பெருமதிப்புண்டு அவன்மேல். பிரம்ம ராட்சதனைப் போலச் சாப்பிட்டு ஓங்குதாங்காக இருந்து, எங்களையெல்லாம் எல்லா வகைகளிலும் தம்பிகள் போலப் பார்த்துக்கொண்ட அவனுக்கு, உடன்பிறந்தவர்கள் உண்டா என்பதுகூட எங்களுக்குத் தெரியாது.
அவன் அறையில் சாக்பீஸ் துண்டால் சுயமுன்னேற்ற வாசகங்களை ஆங்காங்கே எழுதிப் போட்டிருப்பான். “முதல்வனாயிரு அல்லது முதல்வனோடிரு” என்கிற வாசகம் மட்டுமே இப்போது எனக்கு நினைவில் இருக்கிறது. எப்போதாவது மடைதிறந்து அவன் பேசுகையில், புதுப் புதுத் தகவல்கள் வந்து விழுந்தபடியே இருக்கும். அதில் மருந்திற்கும்கூட அவனது சொந்த வாழ்க்கை குறித்தவை இருக்காது.
கல்லூரி இறுதியாண்டு முடித்ததும் காணாமல் போன அவன், சில ஆண்டுகள் கழித்து லெக்ஸஸ் காரில் போயிறங்கி எங்களோடு படித்த பாலசுப்பிரமணியனைப் பார்த்திருக்கிறான். ‘செலவுக்கு வைத்துக் கொள்’ எனச் சொல்லி இருபதாயிரம் ரூபாய் பணத்தைத் தந்திருக்கிறான். கூடவே ‘நண்பர்களுக்குக் கொடு’ என பத்தாண்டு பழமையான சிவாஸ் ரீகல் மதுபானப் புட்டிகள் ஐந்தைத் தந்தும் சென்றிருக்கிறான்.
நாங்கள் எல்லோரும் கூடி அதைக் குடிக்கையில், அவனது தொலைபேசிக்குப் பாசம் பொங்க அழைத்தபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பல சந்தர்ப்பங்களில் இதையே செய்தான் அவன். யாரையாவது போய்ப் பார்த்து பணத்தைத் தந்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுவது. சங்கரின் தங்கை கல்யாணம் என்பதை அறிந்து, அவன் வீட்டில் இல்லாத சமயத்தில் போய் பெற்றோரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறான் முகுந்த். சொளையாக மூன்று இலட்சம் ரூபாய் கொடுத்தவன் அந்தத் திருமணத்திற்கு வரவே இல்லை.
யாரிடமாவது பேசி எல்லோருடைய எண்களையும் எப்படியோ சேகரித்து விடுகிறான். சிலருக்கு அவன் வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டுவிட்ட கதையும் நடந்தது.
அவன் தன்னை கர்ண மஹாபிரபு கணக்காக நினைத்துக் கொள்கிறான் என நாங்கள் எல்லோரும் பேசிக் கொள்வோம். யாரிடமும் நிறுத்தி நிதானமாக அவன் பேசியதாகத் தகவல்களே இல்லை. ஒன்று பேசுவதில்லை, அல்லது ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விடுவது என அவன் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தான் என்றாலும், யாருக்கும் அவன் மீது வெறுப்பு எழவில்லை.
“அவன் எல்லோரையும்விட ஒருபடி மேலே இருக்கிற செண்டிமெண்டல் இடியட். ஆனால் இல்லாத மாதிரி நடித்து அட்டென்ஷன் சீக்கிங் செய்கிறான்” என மனோகரன் சொல்வதில் நியாயம் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. எப்படியும் மாதத்தில் ஒருதடவையாவது எந்த வழியிலாவது அவன் குறித்த கதை நண்பர்கள் குழாமில் புழங்கிவிடும். அவன் தொலைபேசி அழைப்பிற்கு ஏங்கிக் கிடந்தோம் என்று சொன்னாலும் அதிகப்படியானதாக அது இருக்காது.
இடையில் சிலகாலம் யாருடனும் தொடர்பு இல்லாமல் வழக்கம் போலக் காணாமல் போயிருந்தான். விக்னேஷ் முக்கியமான பணியில் நானிருந்த போது அழைத்து, உடனடியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகிய கிரிக்கெட் போட்டியொன்றைப் பார்க்கச் சொன்னான். சலித்துக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பித்துப் பார்த்த போது, கேலரியில் இந்தியாவின் முன்னணி மதுபான ஆலை உரிமையாளருடன் அமர்ந்து பேசியபடி போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தான். செம்பட்டைச் சாயம் தோய்க்கப்பட்டுத் தோள்பட்டை வரை வளர்ந்திருந்த முடியை அடிக்கடி ஈறு உருவுவதைப் போல விரல்களால் கோதினான். அதுகுறித்த ஆச்சரியங்கள் எதுவும் மற்றவர்களைப் போல எனக்கு எழவில்லை. இதைவிட பெரிய உச்சங்களில் எல்லாம் அமர்வதற்குண்டான திறமைகள் அவனிடம் இருப்பதை அறிவேன்.
அந்தக் காட்சிக்குப் பிறகு முகுந்த் குறித்த கதைகள் எதுவும் நண்பர்கள் குழாமில் பரிமாறப்படவில்லை. வெவ்வேறு சமயங்களில் அவன் அழைத்த பல எண்களைத் திரும்பவும் தொடர்புகொண்ட போது, அவை அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக அவன் குறித்துச் சிற்றெறும்பிற்கு இணையான துரும்புச் செய்திகூட கிடைக்கவில்லை.
அரசியல் செல்வாக்கு கொண்ட அசோக் முன்னெடுப்பில் கல்லூரியில் இருந்து அவனுடைய ஆவணங்களை வாங்கி அதிலுள்ள முகவரிக்கு ஆளனுப்பிப் பார்த்தோம். முகுந்தின் அப்பா விஸ்வநாதன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்தார். முதுகில் மண்பட தளர்வாக அவர் நடந்து சென்ற அந்தக் காட்சி எனக்கு நினைவிற்கு வந்தது. அப்போதுதான் அந்த விஷயம் அங்கு போன நண்பனுக்குத் தெரியவந்தது. “நல்லாதான் நடமாடிக்கிட்டு இருந்தாரு. ஒத்தைப் பையன் செத்துட்டான்னு எங்கருந்தோ தகவல் வந்திச்சு. அயர்ன் பண்ணுறவரு பொண்டாட்டிகிட்ட, இனிமே வாழ்ந்து என்னாகப் போகுதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாராம்” எனப் பக்கத்து வீட்டுக்காரர் சொல்லி இருக்கிறார். அதைக் கொண்டே அந்த முடிவிற்கு நாங்கள் வந்தும் சேர்ந்திருந்தோம்.
முகுந்திடம் இருந்து இரண்டு மணி நேரம் கழித்து வீடியோ தொலைபேசி அழைப்பு வந்த போது, பேசுவதற்கு வசதியாக சத்தமில்லாத உயர்ரக மதுவிடுதியில் போய் அமர்ந்திருந்தேன். அவனது வீடியோ தொலைபேசி அழைப்பைப் பெருவிரலால் வலதுபுறம் இழுத்து உயிர்ப்பிக்கையில் என்னுடைய கைகள் நடுங்கின என்பதால், இன்னொரு கையால் தம்ளரில் இருந்த விஸ்கியை கவிழ்த்துக்கொண்டேன்.
“என்ன சிங்கிள் மால்ட்டா” என எடுத்த எடுப்பில் அவன் கேட்ட போது, அவனது முகத்தைக் கவனிக்க மறந்திருந்தேன்.
“இருடா இரு. முதல்ல உன்னை நல்லா உத்து பாத்துக்கிறேன்” எனச் சொன்னவுடன் அவன் கல்லூரிக் காலத்தில் செய்வதைப் போல உதடு பிரிக்காமல் முறுவலித்தான். அவ்வாறு அவன் செய்கையில் அவனது கண்கள் கேலி பாவனை தாங்கிச் சுடர்விடும் எப்போதும். அந்த அழைப்பில் கருவளையம் போர்த்திய அவனுடைய கண்கள் சோர்ந்திருந்தன. பார்க்கச் சகிக்காமல் கண்களை விலக்கிச் சுற்றிலும் நோட்டம் விட்டபோது, அது ஒரு அறைதான் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. நீல வண்ணம் பூசப்பட்டிருந்த சுவற்றில் படங்கள் எதுவும் மாட்டி வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் நிச்சயமாக அது ஹோட்டலாக இருக்காது.
எதுவும் பேசத் தோன்றாமல் அவனையே திரும்பவும் பார்த்தபடி இருந்த போது, “இது என்ன இடம்னு சொல்லு பார்க்கலாம்” என்றான் முகுந்த்.
“உனக்கு என்ன ஆச்சு? உன்னை இப்படி நான் பார்த்ததே இல்லை” என்றேன்.
‘இரு’ என்பதைப் போலச் சைகை காட்டிவிட்டு, கண்ணாடித் தம்ளரில் இருந்த மதுவைத் தூக்கி வாயில் கவிழ்த்தான். தொலைபேசியைத் தணித்து அருகில் இருந்த, க்ளென்மொராஞ்ச் பாட்டிலைக் காட்டியபோது அதில் கால்வாசி மது மட்டுமே மிச்சமிருந்தது.
“இப்போது எங்கிருக்கிறாய். எதற்காக இப்படி எல்லோரையும் அல்லாடவிட்டு பைத்தியக்காரத்தனமாக நடக்கிறாய்” என்றேன்.
“நான் பாலியில் இருக்கிறேன்” என அவன் தலையைக் குனிந்தபடி சொன்ன போது, அந்த ஊர் எங்கே இருக்கிறது என உடனடியாகக் குழப்பம் வந்துவிட்டது எனக்கு.
நெஞ்சிலிருந்து எக்கி காற்றை வெளியே தள்ளி ஏப்பம் விட்ட அவன், “சக்தி இன்னைக்கு நான் கொஞ்சம் மனசு விட்டு பேசணும் உன்ட்ட. ஏன் எதுக்குன்னு கேட்டு பேசற மனநிலையை கெடுத்திடாத. ரெம்ப நேரம் உன்ட்ட பேசவும் முடியாது” எனச் சொன்ன போது வார்த்தைகள் குழறின. சட்டென மொழியை மாற்றிய அவனால் ஆங்கிலத்தில் மட்டுமே இயல்பாகப் பேச முடிகிறது என்பதையும் அந்தக் கணத்தில் உணர்ந்தேன்.
வேறு ஒரு ஆளாய் அங்கே அமர்ந்திருந்தான் என்பதை உடனடியாகவே கண்டுகொண்டதாலும், அவன் எப்போதாவதுதான் இப்படி மனம்விட்டுப் பேசப் பிரியப்படுவான் என்பதாலும் அவனுக்குக் காது கொடுக்க உடனடியாகத் தீர்மானித்தேன். அவன் அழைப்பு வந்த அதிர்ச்சியில் எனக்குமே பேசுவதற்கான வார்த்தைகள் ஒன்றுகூடி அமையவில்லை. அவனுடைய அப்பாவின் மறைவுச் செய்தி அவனுக்குத் தெரிந்திருக்குமா அல்லது இப்போது சொல்லலாமா பிறகு சொல்லலாமா என்கிற குழப்பம் சூழ்ந்திருந்தது என்னை.
“நான் இருப்பது ஹோட்டல் கே” என்ற முகுந்திடம், “அது எங்கே இருக்கிறது?” என்றேன் அவசர அவசரமாகத் துரத்தி அவனைப் பிடிக்கிற தொனியில்.
“இது ஒரு சிறைச்சாலை” என அவன் சொல்லிவிட்டுச் சிரித்தபோது எனக்குக் குழப்பமாகி விட்டது.
இந்தியாவிலுமே சிறையில் சட்டவிரோதமாகத் தொலைபேசி உபயோகிக்கிறார்கள் என்பது தெரிந்திருந்த போதிலும், இப்படி முழு பாட்டிலை வைத்துக்கொண்டு சரக்கடிப்பதெல்லாம் நடக்காத காரியம். முகுந்த் பொய் சொல்கிறானா என உடனடியாக யோசித்த போது, அதுமாதிரி சொல்கிற ஆளல்ல அவன் என்பதும் உறைத்தது.
அவன் தொலைபேசியை வெளிப்புறக் காட்சிகளுக்கான அமைப்பில் மாற்றிவிட்டு, சுற்றியிருப்பவைகளைக் காட்டத் துவங்கினான். கம்பிக் கதவிற்கு அந்தப் புறம் விரிந்து கிடந்த புல்வெளியில், சுற்றுலா மையத்தில் வீற்றிருப்பதைப் போல பல்வேறு நாட்டினர் குவிந்து அமர்ந்திருந்தனர். தூரத்தில் ஒரு டென்னிஸ் மைதானம்கூட தெரிந்தது. அவன் என்னை ஏமாற்றுகிறான் என எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில், இயந்திரத் துப்பாக்கிகளைத் தோளில் தாங்கிய காவலர்கள் கைவிலங்கிட்ட ஆட்கள் சிலரைத் தள்ளிக்கொண்டு போன காட்சியைக் கண்டதும் எனக்கு மூச்சு வாங்கியது.
“முகுந்த் விளையாடாதே. எங்கே மாட்டிக்கொண்டிருக்கிறாய்? உன்னிடம் பேச விரும்புகிறேன். எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. இது விளையாடுவதற்கான நேரம் இல்லை” எனச் சத்தமிட்டுவிட்டு, அவனது முகம் திரும்பவும் இணைப்பில் கிடைப்பதற்குக் காத்திருந்தேன்.
அதை மாற்றுகிற சமயத்தில் அங்கே கம்பிக் கதவைக் கனத்த இரும்பால் யாரோ தட்டுகிற சத்தமும் அவனது அறைக்குள் ஏதோ ஒரு பொருள் கீழே விழுந்த சத்தமும் கேட்ட பிறகு இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக திரும்பவும் அழைத்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வில் அவனது மறு அழைப்பிற்காகக் காத்திருந்தேன். அந்த இடைவெளியில் இணையத்தில் அவன் சொன்ன உள்ளீட்டுச் சொல்லைக் கொண்டு தேடினேன். பாலியில் இரண்டு சிறைச்சாலைகள் இருந்தன.
நான் சற்றுமுன்னர் பார்த்த காட்சிகள் அடங்கிய சிறைச்சாலையின் பெயர்தான் ஹோட்டல் கே. உண்மையில் அதன் பெயர் கெரொபோக்கன் சிறைச்சாலை. இந்தோனேசியாவில் இருக்கிற அச்சிறைச்சாலை முழுக்கவும் போதைப் பொருட்கள் கடத்துபவர்களுக்காகப் பிரத்யேகமாகக் கட்டப்பட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா, மொராக்கா, பாகிஸ்தான், அமெரிக்கா, இலண்டன் என அத்தனை நாட்டவர்களும் அங்கே கைதியாக இருக்கிறார்கள். இந்தோனேசியா இஸ்லாமிய நாடு என்பதால், அங்கே போதைப் பொருட்கள் கடத்துவதும் விற்பதும் மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றம்.
இந்தியாவில் சமையலில் பயன்படுத்தப்படும் கசகசாவைத் தெரியாத்தனமாக எடுத்துப் போய் வளைகுடா நாடொன்றில் மாட்டிக்கொண்டவர்களைப் பற்றியும் படித்திருக்கிறேன். கசகசா விதைகளை மறுபடி முளைக்கப்போட்டு அதிலிருந்து ஓபியம் எடுத்துவிடுவார்கள் என்பதால்தான் அந்நாடுகள் அதைத் தடை செய்திருக்கிறார்கள். அப்படி மாட்டிக்கொண்டால் கொஞ்சம் தப்பிக்கவாவது வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தோனேசியாவில் போதைப் பொருட்களோடு சிக்கினால் இந்தியப் பிரதமரே போனாலும் காக்க முடியாது என்பது நன்றாகத் தெரிந்திருந்ததால், முகுந்த் விஷயத்தில் எனக்கு அச்சம் முட்டி நின்றது.
அச்சிறைச்சாலையில் இருக்கிற தொண்ணூறு சதவீதம் பேர் போதை மருந்து வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள். எழுநூறு பேர் இருக்கவேண்டிய சிறைச்சாலையில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர்வரை இருக்கிறார்கள். போதை மருந்து விஷயத்தில் இவ்வளவு கெடுபிடிகளைக் காட்டும் அந்த நாடு, அந்தச் சிறைச்சாலை விஷயத்தில் ஊழல் மலிந்து செயல்படுவதை எல்லோருமே அறிவர்.
முகுந்த் இருக்கிற கெரொபோக்கன் சிறைச்சாலையிலேயே எல்லா வகை போதை மருந்துகளும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பதைப் படிக்கும் போதே அதிர்ச்சியாக இருந்தது. அச்சிறைச்சாலை அதிகாரிகள் அங்கே வரும் கைதிகளைப் பணம் காய்க்கிற மரமாகத்தான் பார்க்கிறார்கள். பணம் கொடுத்தால், பாலியல் தேவைக்குப் பெண்களைக்கூட அறைக்கு அழைத்துவர முடியும் என்று முன்னாள் சிறைவாசி ஒருத்தர் எழுதியிருந்தார்.
பெரும்பாலும் இச்சிறைவாசிகளுக்கு உலகளாவிய போதை நெட்வொர்க் மூலமாகப் பணத்திற்குக் குறைவில்லை என்பதால் சகல வசதிகளும் அச்சிறைச்சாலைக்குள் செய்து தரப்படுகின்றன. அதனால்தான் அங்குள்ள உள்ளூர்வாசிகள் இந்தச் சிறைச்சாலையை லோக்கல் ஹோட்டல் கே எனச் சொல்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன்.
ஏதோவொரு உணர்வு உந்த, “முகுந்த் நாராயணி, கெரொபோக்கன் ட்ரக் கடத்தல்” என உள்ளீடு செய்து தேடினேன். வந்துவிழுந்த தகவல்கள் எவையும் எனக்கு உவப்பானவையாக இல்லை. நெஞ்சில் ஒரு அழுத்தம் வந்ததால் உடனடியாக இன்னொரு சுற்று மதுவை வரவழைத்து கவிழ்த்துக்கொண்டேன்.
இந்தியாவைச் சேர்ந்த முகுந்த் நாராயணி என்கிற எனத் தொடங்கியிருந்த அந்தப் பத்திரிகைச் செய்தியில் கைவிலங்கிட்ட அவனது புகைப்படம் இருந்தது. கடைசியாய்ப் பார்த்த அவனது நீளமுடி கத்தரிக்கப்பட்டிருந்தது. அந்தச் செய்தியின்படி அவனுக்கு இருபதாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. உலகப் புகழ்பெற்ற போதைக் கடத்தல் கும்பலான ‘கிரெசண்ட் மூன்’ வலைப்பின்னலைச் சேர்ந்தவன் எனவும் சொல்லப்பட்டிருந்தது. அவன் எந்த உச்சத்திலும் அமர்வான் என நினைத்திருக்கிறேன்தான். ஆனால், இதுமாதிரியான உச்சத்தை நாங்கள் கற்பனை செய்ததுகூட இல்லை அல்லது நான் நினைப்பது தவறா என்கிற சிந்தனையில் மேலும் அவன் குறித்த செய்திகளைத் துலாவிப் படித்தேன்.
சின் சான், லாரன்ஸ் லெகி ஆகிய இருவரும் அவன் தொடர்புடைய வழக்கில், இணைந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முகுந்தை அவன் தங்கியிருந்த ஹார்ட் ராக் ஹோட்டலில் வைத்துக் கைது செய்ததாகவும் அவனது சிறுநீரை பரிசோதித்த போது ஹெராயின் உட்கொண்டிருந்தது உறுதியானதாகவும் செய்தியில் போட்டிருந்தது. கூடவே அதிகப்படியாக உட்கொண்டதன் விளைவாக, கைதான சமயத்தில் அவனுக்கு ‘ஹாலுசினேஷன் பாதிப்பு’ அதிகப்படியாகவே இருந்ததாகவும் கைதுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவனது அறையில் கிடைத்த தடயங்களை வைத்துத் தேடியதில்தான் மற்ற இருவரும் நூறு கிராம் ஹெராயினோடு கடற்கரைச் சாலையில் பிடிபட்டார்களாம். முகுந்த் அறையில் எதுவும் சிக்காததாலும் அவன் உட்கொண்டிருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டதாலும் அவனுக்கு மட்டும் இருபதாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற இருவருக்கும் மரண தண்டனை அறிவித்தது, நீதிமன்ற மேல் முறையீட்டில் இருக்கிறது.
பணம் இருந்தால், வழக்கறிஞரை வைத்து அங்குள்ள நீதிமன்றத்தைச் சரிக்கட்டி தண்டனைக் குறைப்பைச் செய்துவிட முடியும். ஆனால் முகுந்த் அதைச் செய்ய விரும்பவில்லை எனப் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒருத்தர் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். எதற்காக தண்டனைக் குறைப்பு கோர முனையவில்லை எனத் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த போது, அவனுடைய அழைப்பு திரும்பவும் வந்தது.
“என்ன அதுக்குள்ள தேடிப் படிச்சிட்டியா” எனக் கேட்ட அவன் தலை தள்ளாடியது. மிச்சமிருந்ததையும் குடித்திருப்பான் போல. கண்கள் சொருக, இமைகளைக் கஷ்டப்பட்டு விரித்து அடிக்கடி அதைச் சிமிட்டியபடி இருந்தான் முகுந்த்.
“உண்மையைச் சொல், நீ ஹெராயின் கடத்தினாயா?” என்றேன்.
தலையைத் தூக்கிப் பார்த்த முகுந்த், “உன்னுடைய பிரச்சினையே எப்போதும் நீ எதிரில் இருப்பவனை எடை போட்டுக்கொண்டே இருக்கிறாய். உன்னுடைய ஜட்ஜ்மெண்ட்டை கேட்க உன்னை அழைக்கவில்லை” என்றான். அப்போது அவனுடைய கண்களை உற்றுப் பார்த்தபோது, அது கலங்கியிருப்பதைப் போல இருந்தது. அவனை எந்த நிலையிலும் அப்படிப் பார்த்தது இல்லை என்பதாலும் அவன் நுணுக்கமாக என் குணநலனை முகத்துக்கு நேராகச் சுட்டிக்காட்டிவிட்டதாலும் அமைதியாக அவன் சொல்வதைக் கேட்க மறுபடி மனதளவிலேயே தயாராகிவிட்டதைச் சொல்ல விரும்பினேன்.
“உன்னுடைய குழந்தைகள் எப்படி இருக்கின்றன? பாப்பாவின் பிறந்தநாளுக்கு நான்கூட பொம்மையொன்றை அனுப்பி இருந்தேனே” என முகுந்த் சொன்ன போது என்னையறியாமல் என் கண்களில் நீர்வழிந்தது. அதைத் துடைத்தபடி, ‘ஆமாம்’ எனத் தலையாட்டினேன்.
அழுவதைப் பார்த்த அவனது கண்களும் நீர் வடியத் தயாராகின. ஆனால் அதை மேல்நோக்கி உயர்த்தி பின்னர் இமைகளைச் சிமிட்டித் தன்னை அடக்கிக்கொண்டு மீண்டும் என்னைப் பார்த்த அவன், “டேய் இங்க என்ன ப்யூனரலா நடக்கு. எல்லாமே ஒரு அனுபவம்தான். வெளீல வந்ததும் மத்தவங்க மாதிரி நானும் ஒரு நல்ல புக் எழுதிடுவேன்” என்று சொல்லிவிட்டுச் சிரிக்க முயன்று தோற்றுப் போனான்.
அந்தச் சமயத்தில் அதைச் சொல்லிவிடலாம் என வாயெடுத்துப் பாதியில் அடக்கியதைப் பார்த்து, “என்ன சும்மா சொல்லு” என்றான் முகுந்த்.
“உன்னோட அப்பா. இல்லையில்லை நம்மோட அப்பா” எனத் தயங்கி இழுத்தேன்.
“ஆமாம். நான்தான் அவரைச் சாகச் சொன்னேன்” என பாட்டிலைச் சுவரில் எறிந்து உடைக்கிற தொனியில் சொல்லிவிட்டுக் கண்களைக் குறுகுறுவென்று பார்த்து, தலையைச் சாய்த்து நெற்றியில் விழுந்த அவனுடைய முடியை ஒருகையால் கோதிவிட்டான். அவன் என்ன உணர்வில் அப்போது இருந்தான் என்பதை நிச்சயமாக என்னால் கண்டறிய முடியவில்லை. ஏற்கனவே நுணுக்கமாக அவன் என்னைச் சுட்டிக்காட்டி விட்டதால் எதையும் எடைபோடாமல் அமைதியாக உற்றுப் பார்த்ததை அவனும் உணர்ந்துகொண்டது தெரிந்தது.
“ஒருநாள் நல்ல மனநிலையில் இருக்கையில் எல்லா கதையையும் சொல்றேன். இப்ப சொல்றதை மட்டும் கேட்டுக்கோ. பாவத்தைக் காது கொடுத்து கேட்கிற பாதிரியார் மாதிரி உன்னை நினைச்சுக்கோ. அந்தப் பாவனை உனக்கு ரெம்ப பிடிக்கவும் செய்யும் இல்லையா? எனக்குமே இதை இறக்கி வைக்கணும். நெஞ்சை பிடிச்சு அழுத்துது. கூடவே எனக்காக ஒரு உதவியும் பண்ணனும்” என்று சிதறிய தமிழில் சொன்ன முகுந்த் கண்களைத் துடைத்துவிட்டுப் பேச ஆயத்தமானான். ஒருநிமிடம் எனச் சைகை காட்டிவிட்டு தொலைபேசியோடு எழுந்து போய் எனக்கு இன்னொரு சுற்று மதுவை வாங்கிக்கொண்டு வந்து மறுபடியும் அமர்ந்தேன்.
“போதை, பாவம், கண்ணீர், லீகூப்பர் செருப்பு. ஊதாக் குடை, நல்ல காம்பினேஷன்” எனச் சொல்லி, புருவங்களைச் சுழித்து, ‘ப்ப்ப்ச்’ எனச் சத்தத்துடன் விரக்தியை வெளிப்படுத்தினான் முகுந்த். சொல் என்பதைப் போல முன்னகர்ந்து அமர்ந்து முகத்தைத் தீவிரமாக வைத்து அவனையே உற்றுப் பார்த்தேன்.
“வழக்கமாக நான் தங்கும் ஹார்ட் ராக் ஹோட்டலில் தங்கியிருந்தேன்” எனச் சொல்லிவிட்டு, நானேதும் கேள்வி கேட்கிறேனா அல்லது சொல்வதா வேண்டாமா என்பது போல இடைவெளி கொடுத்தான். “இல்லை முகுந்த், மனதளவிலேயே உன்னைக் குறுக்கீடு செய்ய விரும்பவில்லை. பரிபூரணமாகக் காதுகளைத் திறந்து வைத்திருக்கிறேன்” என்றேன்.
முழு இரத்த ஓட்டமும் முகத்திலேறி அவன் கண்களில் படபடப்பு பரவுவதை உணர முடிந்தது. தொலைபேசியை முகத்திற்கு வெகு அருகே பிடித்திருந்த அவன் அதைக் கொஞ்சம் நகர்த்தித் தள்ளிப் பிடித்து என் கண்களைச் சந்திக்காமல் வேறு எங்கோ பார்த்தபடி பேசத் துவங்கினான். எதையும் சட்டெனத் திருஷ்டி கழிக்கிற பூசணியைப் போல உடைத்துப் பேசும் முகுந்தா இவன்?
“அன்றைக்கு ஹோட்டலில் இருந்த மேலாளர் சிறப்பு கவனிப்பு ஒன்று இருக்கிறது. இதுவரை பார்க்காத அனுபவமாக அது அமையும். இருநூறு இலட்சம் பணம் தந்தால்…” எனச் சொல்லி நிறுத்திவிட்டு, “நம்மூர் பணத்தைப் போல நினைத்துக்கொள்ளாதே. ஒரு டாலருக்கு நம்மூர் எழுபது என்றால் அங்கே பத்தாயிரம் ரூபாய்” என்ற போது, ‘தெரியும் மேலே சொல்’ என்பதைப் போலத் தலையாட்டிவிட்டு, இந்திய மதிப்பில் எவ்வளவு வருமென மனதிற்குள் கணக்கிட்டேன்.
“கொஞ்சம் கூடுதலாகவே ஹெராயின் எடுத்திருந்தேன் அன்றைக்கு. அறையில் இரவு விளக்குகளை மட்டும் எரியவிட்டுப் படுத்திருந்தேன். கதவு வரை அந்த இரண்டு பெண்களை கொண்டுவந்து நிறுத்திவிட்டுப் போனான் மேலாளர். உள்ளே அந்தப் பெண்கள் வந்து நின்ற போது அசந்துவிட்டேன். துளி வேற்றுமைகூட இல்லாத இரட்டையர்கள்” எனச் சொல்லி நிறுத்தினான் முகுந்த்.
அந்தக் காட்சியை நான் கற்பனையில் கொண்டு வந்து பார்த்தேன். “அச்சில் வார்த்தது மாதிரி இருந்தார்கள் இருவரும். இருவருக்கும் வித்தியாசம் என்று பார்த்தால், அவர்களே சொன்ன அடிப்படையில் தங்கைக்கு உதட்டில் மச்சம் இருக்கும். அதைப் பார்த்ததும் உடனடியாக அதைக் கவ்விப் பிடிக்க எனக்குத் தோன்றியது. அங்கங்கள்கூட ஒரே வளைவு நெளிவில் இருந்தன. ஆனால் அக்காவிடம் இல்லாத ஒன்று தங்கையின் முகத்தில் இருந்தது. தங்கைக்காரி மசாஜ் மட்டுமே செய்வதாகவும், இஸ்லாத்திற்கு மாறிவிட்டதால் செக்ஸ் சர்வீஸ் விலக்கப்பட்டது என்றும் சொன்னாள். அக்கா மட்டுமே செக்ஸ் சர்வீஸூக்குத் தயாராக இருந்தாள். அக்காளோடு எனக்கு செக்ஸ் வைக்கத் தோன்றவே இல்லை. இருவரும் சேர்ந்து என் உடைகளைக் களைந்து மசாஜ் செய்தார்கள். தங்கைக்காரியின் மார்புகளைப் பிடித்த போது அக்காள் கையை எடுத்துக் கும்பிட்டு ‘அப்படிப் பண்ணாதே’ என்றாள். அவளது பனியனைத் தூக்கி மார்பை பக்கத்தில் கொண்டுவந்து காட்டி இதை வேண்டுமானால் எடுத்துக்கொள் என்றாள். தள்ளி அமர்ந்த தங்கையின் தொடையைத் தடவி கீழுடையை மேலே தூக்கினேன்” எனச் சொல்லிவிட்டு அமைதியாக மூச்சை இழுத்து வெளியே விட்டுத் தரையையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் முகுந்த்.
பெருவிரலை ஆட்காட்டி விரலால் தடவி நீவிய அவன், தயக்கத்தைத் தாண்டி மறுபடியும் சொல்லத் துவங்கினான். “அவர்களுடைய கலாச்சாரத்தில் விபச்சாரம் விலக்கப்பட்டதாம். வேறு வழியில்லாமல் அவள் தங்கையின் திருமண வாழ்விற்காகவும் குடும்பத்தின் நலனிற்காகவும் அந்தத் தொழிலில் ஈடுபடுவதாக அவள் சொன்ன போது எனக்கு எரிச்சலாக இருந்தது. ‘எல்லா தேவடியாள்களும் இதே மாதிரிதான் சொல்கிறார்கள்’ எனச் சத்தமாக நான் தமிழில் சொன்னது அவர்களுக்குப் புரியவில்லை. அவளிடம் என்னைத் திருப்திப்படுத்தினால் இன்னும் நிறையப் பணம் தருவதாகச் சொன்னேன். ‘என்ன வேண்டும் உங்களுக்கு’ என்று கேட்ட போது, திரும்பப் போகையில் எதிரே இருக்கும் ஹோட்டலில் தங்களுக்குப் பிடித்த உணவு ஐயிட்டத்தை வாங்கித்தர வேண்டுமென்றும் சொன்னாள்” என அவன் சொல்லிக்கொண்டிருந்த போது குறுக்கிட்டேன்.
“நீ நினைத்தது நடந்ததா?” என்றேன்.
“இருவருக்கும் ‘ஜார்ஜியா ஹோம் பாயை’ குளிர்பானத்தில் கலந்து கொடுத்தேன். நான்கு மணி நேரம் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் அவர்களை. அது ஒரு ரேப் ட்ரக்” என்றவனிடம், “அதென்ன பெயரே வித்தியாசமாக” என்றேன்.
“தெரிந்து என்ன செய்யப் போகிறாய்? சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமலே இருப்பதும் நல்லதிற்குத்தான். பிஞ்சிலேயே பழுப்பது கனிக்கு நல்லதல்ல. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் நான்தான். என்னை மயக்க நிலையில்தான் கைதுசெய்து அழைத்து வந்தார்கள். அந்தப் பெண்களுக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை” எனச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான் முகுந்த்.
அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக, “முன்பு நீ நினைத்தது சரிதான். எல்லா செக்ஸ் ஒர்க்கர்களும் சொல்வதற்கு இது மாதிரிக் கதைகளை வைத்திருக்கிறார்கள். அதில் புனைவிற்கான கூறுகளே அதிகம். அதனால் நீ தேவையில்லாமல் விஷயங்களைக் கலைத்துப் போட்டு எண்ணுகிறாயோ” என்றேன். விரல்களால் நெற்றிக்கு நடுவே தேய்த்தபடி இருந்த அவன், “இல்லை. நான் தொடர்ந்து அத்துமீறியபடி இருந்த போது, அந்தப் பெண்ணிடம் ‘பொய் சொல்லாதே’ என்றுதான் சொன்னேன். அவள் உண்மை என்பதைப் போல நெற்றிக்கூட்டில் இரு விரல்களைப் பொட்டிடுவதைப் போலக் குவித்துச் சொன்னாள். முழுமுற்றான உண்மை ஒன்றைச் சொல்லுகையில் என் அம்மாவும் அப்படித்தான் விரல் குவிப்பாள். அவள் என் அம்மாவைப் போலவே இருந்தாள் அப்போது. எவ்வளவோ விஷயங்களை செய்திருக்கிறேன். எனக்கு இது குற்றவுணர்வாக இருக்கிறது. ஒருவேளை அவர்களையும் கைது செய்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை” எனச் சொல்லி இடைவெளி விட்டான்.
‘அம்மா’ என வாய்விட்டு அரற்றிய அவன் என் கண்களைப் பார்க்காமல், “இந்தச் செயலுக்கு என்னுடைய அம்மா இருந்திருந்தால், என் முகத்தில் காறி உமிழ்ந்திருப்பாள். என்னுடைய அப்பாவின் மீது அப்படி உமிழ வாய்ப்பில்லாமல்தான் செத்தும் போனாள். அவரைப் போலவே நானும் என்பதை அவள் அறிந்தால் அவளது ஆத்மாகூட சாந்தமாகாது. நீ அவர்களைப் போய்ப் பார்த்து ஏதாவது கொடுத்துவிட்டு வர வேண்டும். அவர்கள் நன்றாக இருக்கிறார்களா என்பது தெரிந்தால் மட்டும் போதும் எனக்கு. இங்கே லோக்கலில் இருப்பவர்கள் யாரையும் தொடர்புகொள்ளக்கூடாது என எனக்கு உத்தரவு. மீறித் தொடர்புகொண்டு அவர்கள் எதுவும் சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்கிற பயமும் எனக்கு இருக்கிறது. பதிலாக ஊரில் இருக்கிற என்னுடைய வீட்டை நீ எடுத்துக்கொள். என் பழைய செய்கைகளை ஒப்பிட்டால் சிறு குண்டூசிதான் அது. ஆனால் இதயத்தில் அது தைக்கிறது” என்று சொன்ன போது கண்ணீர் கோடாய் அவனது கன்னத்தில் இறங்கியது.
“எவ்வளவு கொடுக்க வேண்டும்?” என்றேன்.
“தவறாக எல்லாம் சொல்லவில்லை. நீதான் நன்றாக எடை போடுவாயே? வீட்டின் மதிப்பு எதுவோ அதுதான் அதன் மதிப்பும்” என்றான்.
“பாவத்தின் எடை” என முணுமுணுத்துவிட்டு தொலைபேசியை அணைத்தான் முகுந்த். அவனுடைய வாழ்க்கையே ஹோட்டல் கேவை ஒத்ததுதான் என எனக்குத் தோன்றியது. அவனது கைதுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த ஹாலுசினேஷன் என்பதை அவன் காற்றில் வரைந்த காட்சிகளோடு முடிச்சுப் போட்டு ஆராய்ந்தேன். உறுதிதோய்ந்த அவனது விவரிப்பின் வழியாக, மாயத் தோற்றக் காட்சிகள் என்கிற முடிவிற்கும் என்னால் நிச்சயமாக வந்துசேர முடியவில்லை. அவனாகச் சொல்கிற வரைக்கும் இதைப் பற்றி நண்பர்கள் யாரிடமும் வாய்திறக்கக் கூடாது என எனக்குள் சத்தியம் செய்துகொண்டேன். எவ்வளவோ செய்திருக்கிறான் அவன். ஆனாலும் இந்த விஷயம் மட்டும் அவனை ஏன் துன்பக் கடலில் தள்ளுகிறது எனத் தீவிரமாக யோசித்த போது, மனிதன் எந்த நேரத்தில் எதனால் உடைவான்? அறுத்தெறிய முடியாத சங்கிலி எவ்வாறு அவனைப் பிணைக்கிறது என்பதையெல்லாம் யாராலும் தீர்மானிக்கவும் முடியாது எனவும் தோன்றியது. எது எப்படியோ, ஏதோ ஒரு கண்ணி வழியாக அம்மா அவனைத் துரத்துகிறாள் என்பதை நினைக்கையில், தங்கக் கூண்டில் இருக்கிற கிளி என்கிற சித்திரம் கூடிவந்தது.
முகுந்தை அந்தக் கூண்டிலிருந்து விடுவிக்கும் பொருட்டு, அவனது வார்த்தைக்கு மதிப்பளித்து, அதே சமயம் நம்பிக்கையின்மையையும் தோள் பையைப் போலக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, கருடா விமானத்தில் போயிறங்கிய நான், நேரடியாகவே அவன் தங்கியிருந்த ஹோட்டலில் போய் அறையெடுத்தேன். பல அடுக்குக் கடுமையான பரிசோதனையை அடுத்தே நாட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவே முடிந்தது. ஆனால் சிறைச்சாலைக்குள் சகலமும் கிடைக்கிற விநோதத்தை என்னவென்று சொல்ல? விமான நிலையத்தின் நடைபாதையில்கூட கலாச்சாரம் தகதகவென மின்னியது. அதற்கு அடியில் இருக்கிற பாதாள உலகம்தான் இந்த நாட்டையே உயர்த்திப் பிடித்துத் தாங்குகிறது எனச் சொல்லி எனக்கு நானே சிரித்துக்கொண்டேன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பணம் பாயமுடியாத பாதாளங்களில்கூட புகுந்து வெளியேறி வந்துவிடும். பணம்தான் எல்லாமும் என்கிற இறுமாப்பையும் அது தலையில் கிரீடமாகச் சூடும்.
தன் பணி முடிந்து சென்றுவிட்டதால், சம்பவத்தன்று என்ன நடந்தது எனத் தனக்குத் தெரியாது என்றான் ஹோட்டல் மேலாளர். தவிர அவனுக்கு அப்படியொரு சம்பவம் நடந்ததாக நினைவிலேயும் இல்லை. ‘ட்ரக் சம்பந்தமான கைது நடவடிக்கைகள் இங்குள்ள எல்லா ஹோட்டல்களையும் பொறுத்தவரை, நினைவுகொள்ளத்தக்க அளவில்லாத வெகு சாதாரணமான நிகழ்வு’ என்றான். எத்தனை பூட்டுகளையும் அதைத் திறந்த சாவிகளையும் பார்த்திருப்பான் அவன்? ஆனாலும் தந்திருந்த மிகை பணத்தின் காரணமாக, முயன்று பாருங்கள் எனச் சொல்லி, என்னைத் திருப்திப்படுத்த வேண்டி, சில உள்ளூர்த் தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தான். அறை மேலாளர் அனுப்பித் தந்த ஆளோடு அந்த மாதிரி வேலைக்கு வரும் பெண்கள் இருக்கிற குப்பாங் நோக்கிப் பயணமானேன். “அப்படி ஒரு சம்பவமே இங்கு நடக்கவில்லை. இதெல்லாம் தேவையில்லாத விநோதமான வேலை. பணம் நிறைய வைத்திருப்பவர்களே இது மாதிரியான பைத்தியக்காரத்தனங்களில் ஈடுபடுகிறீர்கள். வயிற்றுப் பசியில் இருப்பவனுக்கு இதுமாதிரியான கேள்விகளுக்கு இடமே இல்லை” என்றான் மேலாளர் கிளம்பும் போதும். பணமும் தத்துவமுமே ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது.
இந்தியக் குக்கிராமங்களைப் போல தென்னை மட்டைகள் வேயப்பட்ட குடிசை வீடுகள்தான் என்ற போதிலும், நேர்த்தியான வரிசையில் இருந்தன அவை. ஒவ்வொரு வீட்டிலும் சொல்லி வைத்தது போல, தொட்டிச் செடிகள் வாயிலில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தன. புதிய நிறுவனம் ஒன்றிற்கு ஆள் எடுக்கும் பணிக்காக வந்திருக்கிறோம் என்று சொல்லியிருந்தான் என்னோடு வந்திருந்த மர்ஸான். முகுந்த் ஒப்படைத்திருந்த இரட்டையர்கள் என்கிற சாவி மட்டுமே என்னிடமிருந்தது. அதற்கான திறப்பு எங்கே இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தே இருந்ததைப் போலத்தான், என் ஆழ்மனம் உணர்ந்தது. சிலந்தி துப்பிக் கட்டிய கூட்டிலிருக்கும் மெல்லிய இழை போலவான நம்பிக்கை ஒன்றும் வழிநடத்தியது என்னை.
சோர்வு தட்டுகிற நிலைக்கு வந்து சேர்ந்திருந்த போது, சில நொடிகளுக்கும் குறைவான நேரம், நெற்றிக்கு நடுவே பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்துவைத்து நசுக்கி விலக்கிய, அந்தப் பெண்ணைத் தற்செயலாகக் கண்டடைந்தேன். அவள்தானா என்கிற தயக்கங்களோடு நெருங்கிப் போன போது, அந்த வீட்டில் அவளைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை அறிந்தவுடன் தைரியமும்கூடி வந்தது. சட்டெனச் சூழலோடு ஒட்டிக்கொண்ட தயக்கமின்மையை நோட்டமிட்ட மர்ஸான் என்னை சகஜப்படுத்தும் விதத்தில், அங்கிருந்த கல்திண்ணையில் அமரவைத்து, “விருந்தினருக்குக் குடிப்பதற்கு ஏதாவது கொண்டு வா” என அந்தப் பெண்ணிற்குக் கட்டளையிட்டான். அது அவர்களுடைய கலாச்சாரச் செயல்பாடு போல.
கண்ணாடிக் குவளையோடு வந்து நின்ற அவளிடம், “உன் தங்கை எங்கே?” என்றேன் அவளுக்குப் புரிய வைக்கிற முனைப்பில்.
“நீங்கள் யார்? எதற்காக கேட்கிறீர்கள்?” என்றாள் தெளிவான ஆங்கிலத்தில். அவளுடைய தங்கை இருக்கிறாளா இல்லையா என்கிற குழப்பம் மறுபடியும் எழுந்து, இந்திய ஆழ்மன உள்ளுணர்வின்படி சுவரில் அவளது புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறதா என என்னுடைய கண்கள் துலாவின.
தேடியது கிடைக்காமல் கண்களை விலக்கி, “உங்களிடம் கடன்பட்ட ஆள் அதைத் திருப்பித் தரச்சொல்லி என்னை அனுப்பி இருக்கிறார்” என்றேன்.
“எங்களுடைய கலாச்சாரத்தில் வழிப் பயணத்தில் நாங்கள் யாரிடமும் தனித்துக் கடன்படுவதில்லை. அனுபவங்களுக்கு மட்டுமே கடன்படுகிறோம்” எனச் சொல்லிவிட்டு, மர்ஸானை தனியாக அழைத்துக்கொண்டு போய் பேசினாள். இருவரும் போர்த்துகீசிய மொழியில் பேசிக்கொண்டார்கள். திரும்பி வந்த அவள் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லையெனவும் அந்த ஆளைப் பார்த்ததே இல்லையெனவும் உறுதிபடச் சொன்னாள். மர்ஸானும் இணைந்து அவளுக்குத் தோதாய்ப் பேசத் துவங்கிய போது முற்றிலும் தளர்ந்தேன்.
அந்நிய நிலமொன்றில் கைவிடப்பட்டுத் தர்க்கங்களுக்கு வார்த்தைகள் இல்லாமல் அமர்ந்திருந்த போது, மர்ஸானை தூரத்தில் இருந்து இன்னொருத்தர் அழைத்தார். அவன் கிளம்பிப் போன சமயத்தில், நாங்களிருவரும் தனித்திருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவளிடம் இறைஞ்சும் தொனியில் முகுந்த் சிறையில் மிதமிஞ்சிய குற்றவுணர்வில் தவிப்பதைச் சொல்லி, தாயும் தகப்பனும் இறந்த அவனது குடும்பப் பின்னணியை விவரித்து, அவனது அம்மா செய்வதைப் போல நெற்றிச் சுருக்கத்தில் விரல் வைத்துக் காட்டினேன். உணர்வுகள் எதையும் கடத்தாத அவளது விழிகள் என் முகத்தில் நிலைகுத்தி நின்றன.
அவளது காலடியில் இருந்த, நான் கொண்டு போயிருந்த பணப்பையைத் திறந்து காட்டிய போது அவள் அதை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. திரும்பி வந்த மர்ஸான், “தேவையில்லாத பிரச்சினை வந்துவிடும் போலிருக்கிறது. விரைவில் நாம் கிளம்பிப் போவது நலம். எல்லோருமே அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் தங்களுக்குத் தெரிந்திருக்கும் என உறுதியாகச் சொல்கிறார்கள். அடித்துப் போட்டால்கூட கேட்பதற்கு நாதியில்லை இங்கே. என்னோடு வந்திருப்பதாலும் உங்களுக்கு முக்கியமான ஆட்கள் சிபாரிசு செய்திருப்பதாலும் தப்பிக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றான் கறாராக.
ஜீன்ஸில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு, எழுந்து பணப்பையைத் தூக்கிக்கொண்டு மர்ஸானின் அடியொற்றி நடக்கத் துவங்கினேன். முகுந்தை சந்திக்க ஹோட்டல் கேவிற்கு போகலாமா வேண்டமா என்கிற யோசனையோடு ஏறி அமர்ந்து, மர்ஸானிடம் காரை கிளப்பச் சொன்னேன்.
அவன் காரை நகர்த்தி இரண்டாவது கியரை போடுவதற்கு முன்பு, அவள் மர்ஸானைக் கூவி அழைத்தாள்.
“இவரை அனுப்பிவிட்டு திரும்பி வரும் போது, இரண்டு சிக்கன் ப்ரைட் ரைஸ் வாங்கிக்கொண்டு வா” என்றாள்.
“என்னிடம் பணம் இல்லை” எனப் பதிலுக்குக் கூவினான்.
“விருந்தாளியிடம் வாங்கிக் கொள்” என்று அவள் சொன்ன போது, மர்ஸான் திரும்பி என்னைப் பார்த்துச் சிரித்தான்.
அவள் நிற்கிற திசை நோக்கித் திரும்பி, அதன் கனம் குறித்து எடைபோடத் துவங்கிய போது, என் காலிற்குக் கீழே ஊதாநிறப் புழுவொன்று ஊர்ந்து போனது.
1 comment
பிறந்த நாள் வாழ்த்துகள் சார். திகட்டாத ஆர்வத்துடன் நகர்ந்த கதை முழுமையாக முடியாத்தைப் போன்ற உணர்வுள்ளது. தொடர்ச்சியிருந்தால் எழுதிபகிரவும். நன்றி
Comments are closed.