அரசியின் கழுத்தணி – இடாலோ கால்வினோ

1 comment

பியத்ரோவும் தொமோசோவும் வாதிட்டபடியே இருந்தனர்.

விடியற்காலையில் சூனியமாக காட்சிதரும் தெருவில், அவ்விருவரது பழைய மிதிவண்டிகளின் கீச்சொலியும் குரல்களும் மட்டுமே கேட்டன. பியத்ரோவின் குரல் நாசித்தன்மை கொண்டது, அவ்வப்போது குரலின் இடையில் வெறுங்காற்றும் வெளிப்படும். கரகரப்பான, இரகசியம் பேசுவது போன்ற குரல் தொமோசோவினுடையது. இருவரும் தாம் பணியாற்றும் தொழிற்சாலைக்கு ஒன்றாக செல்கின்றனர். நசுங்கிய முரல்வென ஒலிக்கும் பணிமனை சங்கொலி காற்றில் ஒவ்வொரு இல்லமாகச் சென்று தொழிற்சாலை திறக்கும் நேரத்தை அறிவித்தது. நகரமும் நாட்டுப்புறமும் ஒன்றாகும் புறநகர் பகுதியின் இறுதியெல்லையை அடையும் வரை செறிவாக அது ஒலித்தது. சேவல் கூவலைப் போல முன்னும் பின்னும் எதிரொலித்தது.

உச்சஸ்தாயியில் விவாதித்த போது தினசரி ஒலிகளின் சலசப்பை அவர்கள் பொருட்படுத்தவில்லை. எந்த ஒலி எப்படி இருந்தால் என்ன அவர்களோ அரைச்செவிடுகள். பியத்ரோ சில ஆண்டுகளாகவே செவி மடுப்பதில் சிக்கலைச் சந்தித்து வருகிறார். தொமோஸோவுக்கோ முதல் உலகப் போரிலிருந்து ஒரு செவியில் நித்தியமாக சீழ்க்கையொலி கேட்டபடி இருக்கிறது. 

அறுபது வயதான பெரிய சரீரம் கொண்ட பியத்ரோ, தன் தள்ளாடும் வண்டியைத் தடுமாற்றத்துடன் மிதித்து சமநிலை பேணியபடி ‘விசயங்கள் அப்படித்தான் இருக்கின்றன, என் நீண்டகால நண்பரே’ என்று தொமோசோவிடம் முழங்கினார். தொமோசோவுக்கு அவரைவிட ஐந்து வயது கூடுதல் எனினும் அவரைவிடச் சிறிய ஆகிருதியோடு இருந்தார், கொஞ்சம் கூனலும் இருந்தது. ’நீங்கள் நம்பிக்கை இழந்துவிட்டீர்கள், முதிய நண்பரே! இன்றிருக்கும் நிலைமையில் பிள்ளைகள் பெறுவது என்பது பசித்திருப்பது என்றே பொருள்படும் என்பதை நான் நன்கு அறிவேன், ஆயினும் நாளையைப் பற்றி, நாளை தராசு எந்தப் பக்கம் சாயும் என்பதைப் பற்றி யாராலும் ஊகிக்க முடியாது. நாளைய உலகில் பிள்ளைகள் பெறுவதென்பது நற்செல்வமாகவும் இருக்கலாம். அப்படித்தான் நான் பார்க்கிறேன், அதுவே சரியான பார்வையும்கூட’ என்றார் பியத்ரோ.

தன் நண்பர் மீது வைத்த கண் வாங்காமல், மஞ்சள் விளக்குகள் அகலத் திறப்பது போன்ற பார்வையுடன், கூரிய ஒலியில் தொடங்கி மெல்ல குன்றிய கரகரப்பான குரலில் பேசினார் தொமோசோ. ‘ஆமாமாம்! இந்தக் கூத்திடையே குடும்பஸ்தனாகவிருக்கும் ஒரு பணியாளனிடம் சொல்ல வேண்டிய அறிவுரை இதுதான்: ”இந்த உலகிற்குக் குழந்தைகளைப் பெற்றளிப்பதன் மூலம் வறுமையையும் வேலை வாய்ப்பின்மையையும் இன்னும் அதிகமாக்குகிறாய்!” இதுதான், இதுதான் அவன் தெரிந்துகொள்ள வேண்டியது. இதை நான் திண்ணமாகச் சொல்கிறேன்; இதைப் பலமுறை முன்பே சொல்லியிருக்கிறேன்; மீண்டும் மீண்டும் சொல்வேன்.’

மக்கட்தொகை பெருக்கம் தொழிலாளிகளுக்கு நன்மையா தீமையா என்ற பொதுவான கேள்வியின் மீதுதான் அவர்களது விவாதம் இன்று நடைபெறுகிறது. பியத்ரோ அசாவாமையாளர்; தொமோசோவோ அவநம்பிக்கையாளர். இந்த இரு வேறுபட்ட கோணங்களின் பின்னணியில் பியத்ரோவின் மகனுக்கும் தொமோசோவின் மகளுக்கும் இடையே நிர்ணயிக்கப்பட்ட திருமணம் அடிப்படை காரணமாக இருந்தது. பியத்ரோ அதை ஆதரித்தும் தொமோசோ அதற்கு எதிராகவும் பேசி வருகின்றனர். 

‘எது எப்படியோ அவர்களுக்கு இன்னும் குழந்தைகள் பிறக்கவில்லை’ என்று சடுதியில் பியத்ரோ விசயத்திற்கு வந்தார். ‘எல்லாம் நல்ல நேரத்தில் நிகழும்! அதுதான் நமக்கு வேண்டியது! நாம் திருமண நிச்சயத்தைப் பற்றிப் பேசுகிறோம், குழந்தைகளைப் பற்றி அல்ல!’

தொமோசோ கத்தினார்: ‘யார் திருமணம் செய்தாலும் பிள்ளைகள் பெறத்தான் போகிறார்கள்!’

பியத்ரோ ‘நாட்டுபுறத்தில், நீ பிறந்த போதுதான் நிலைமை அப்படி இருந்தது!’ என்று மறுமொழிந்தார். அதைச் சொல்லும் போது அவரது சக்கரம் டிராம் ரயிலில் இடிக்க போனது. அவர் சபித்தார்.

முன்னால் மிதித்தபடி சென்ற தொமோசோ கத்தினார். ‘என்…ன?’

தலையை இடவலமாக அசைத்துக் காட்டிய பியத்ரோ ஒன்றும் சொல்லவில்லை. இருவரும் சற்று நேரம் மெளனமாகச் சென்றனர். 

’ஆம், சரிதான்.’ தனது மனவோடையைக் கட்டுபடுத்தி நிறுத்தி வெளியே சத்தமாகச் சொன்னார். ‘அவர்கள் வரும் காலத்தில் பிறந்தே தீருவார்கள்!’

தரிசாகிப் போன வயல்வெளியின் இடையில் சென்ற சாலையின் நெடுக்கே வண்டியை மிதித்தவாறு தம் பின்னே நகரத்தை விட்டுச்சென்றனர். பனிமூட்டத்தின் இறுதித் தடயங்கள் ஆங்காங்கே தோற்றமளித்தன. நெடுந்தொலைவு அல்லாத சாம்பல் நிற தொடுவானத்தில் தொழிற்சாலை காட்சியளித்தது. 

அவர்கள் பின்னே மோட்டார் எந்திர ஒலி கேட்டது. நவீன மகிழுந்து ஒன்று அவர்களைக் கடந்து செல்லவும் அவர்கள் சாலையோரத்திற்கு ஒதுங்கவும் சரியாக இருந்தது.

தாரிடப்படாத சாலை என்பதால், முந்திச் சென்ற மகிழுந்து கிளப்பிய புழுதி இரு மிதிவண்டிக்காரர்களுக்கும் புழுதியாடையை அணிவித்தது. அடர்ந்த புழுதிமூட்டத்தைத் தாண்டி தொமோசோ தன் குரலை உயர்த்தினார். ‘மேலும் தனி நபர்களின் மகிழ்ச்சிக்காக ஆ.. ஆ… ஆ!’ அவர் விழுங்கிய தூசி தொடர்ந்த இருமலை உருவாக்கியது. அவரது சிறிய கரம் புழுதியில் இருந்து வெளிப்பட்டு மகிழுந்து சென்ற பாதையைச் சுட்டி, தனி நபர்கள் என்ற சொற்பிரயோகம் ஆளும் வர்க்கத்தைச் சந்தேகத்திற்கிடமின்றி குறித்தது. சிவந்த முகத்துடன் பியத்ரோவும் இருமிக்கொண்டே ‘ஆஹ்.. இல்லை. ஆஹ்… இல்லை, இல்லை. நீண்ட’ என்று தடுமாற்றத்துடன் சொல்லி உறுதியாக மகிழுந்தின் திசையைச் சுட்டி மறுப்பாக சைகை செய்தார். வருங்காலம் நிச்சயம் இயந்திர வண்டிகளின் சொந்தக்காரர்களுக்கானதாக மட்டுமே இருக்கப் போவதில்லை என்பது அதன் பொருள். 

மகிழுந்து விரைந்தபோது அதன் ஒரு கதவை, கை ஒன்று வேகமாகத் தள்ள முன்பின் ஆடிய கதவு திறந்துகொண்டது. நிழலாகத் தெரிந்த பெண் உருவம் ஒன்று அதிலிருந்து குதிப்பது தெரிந்தது. அதன் ஓட்டுனர் உடனடியாகத் தடுப்பை மிதித்து வண்டியை நிறுத்தினான். கீழே குதித்தவள் மெல்லிய காலைப் பனிப்படர்வின் ஊடே சாலையைக் குறுக்காகக் கடந்து ஓடுவதைப் பணியாளர்கள் கண்டனர். அவள் பொன்கூந்தலாள். நீண்ட கருநிற ஆடை அணிந்திருந்தாள். நரித்தோலால் ஆன நீலநிற மேற்சால்வையைப் போர்த்தியிருந்தாள். அதன் முனைகள் சுருள் சுருளாக இருந்தன.  

புறமேற்சட்டை அணிந்திருந்த ஓர் ஆண் மகிழுந்திலிருந்து வெளியேறி, ‘நீ ஒரு பைத்தியம்! பைத்தியம்!’ என்று கத்தினான். அதற்குள், அந்தப் பெண் விரைந்து சாலையைக் கடந்து புதர்களுக்குள் ஓடியிருந்தாள். அவளைத் தொடர்ந்து சென்ற ஆணும் அவளும் முதிய பணியாளர்களின் பார்வையில் இருந்து மறைந்தனர். 

சாலையின் கீழே இருந்த பொழிலில் அடர்ந்த புதர்கள் நிறைந்திருந்தன. அந்தப் பெண்மணி புதரின் உள்ளே மறைந்தும் வெளியே தென்பட்டும் வந்தாள். பனிப்பெயலினால் அவள் அடிகள் சின்னதாய் விரைவானதாய் இருந்தன. ஒரு கையால் தன் கீழ்ச்சட்டையைத் தரையில் படாமல் பிடித்தவாறு, அவள் சால்வையின் ஓரங்களைப் பற்றிய கிளைகளில் இருந்து தன்னை விடுவிக்கும் முயற்சியில் தோள்களைக் குலுக்கினாள். தன்னைத் துரத்தி வரும் நபர் மீது வளைந்து அடிக்கட்டும் என்று ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கிளைகளை மடித்து வைத்தாள். அவசரம் இன்றியும் அவளைப் பிடிக்க அதிக ஆர்வம் காட்டாமலும் அந்த ஆண் தொடர்வதாகத் தோன்றியது. அவள் பொழிலில் வெறிபிடித்தது போல ஓடினாள்; சிரித்துக் கூச்சலிட்டாள்; கிளைகளை ஆட்டி அதில் இருந்த பனித்துளிகளைத் தன் தலையில் தெளித்தாள். மிகுந்த அமைதியோடு அவளைப் பின்தொடராமல் இடைமறித்து முழங்கையைப் பிடித்து இழுத்தான்; அவள் நெளிவதைப் பார்த்தால் தப்பிக்கும் முனைப்பில் இருப்பதாகத் தோன்றியது. அவனைக் கடிக்கவும் செய்தாள். 

இந்தத் துரத்தலைப் பின்தொடர்ந்த இரு பணியாளர்களும் தொடர்ந்து மிதிவண்டியை அழுத்தியவாறே, அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்றும் கவனித்து வந்தனர். அமைதியாக, புருவம் உயர்த்தி, வாய் பிளந்து ஆர்வத்தைவிட சிரமம் மேலிட நிகழும் அனைத்தையும் பார்த்தனர். கதவு திறந்த நிலையில் நின்றிருந்த மகிழுந்தின் அருகே சென்றடைந்தனர். அப்போது அந்தப் புறமேற்சட்டை அணிந்த ஆண் அங்கு வந்துசேர்ந்தான். அவனைத் தள்ளி, மீறி, குழந்தையைப் போல கத்திய அப்பெண்ணைக் கையில் இறுகப் பிடித்திருந்தான். அவர்கள் மகிழுந்தில் அமர்ந்து கதவை மூடி, மீண்டும் இரு மிதிவண்டிக்காரர்களையும் புழுதியில் மூழ்கடித்துவிட்டு கிளம்பினர். 

’நாம் நமது நாளைத் தொடங்கும் போது’, மூச்சுத்திணறிய தொமோசோ, ‘குடிகாரர்கள் தம் நாளை முடிக்கிறார்கள்’ என்று சொன்னார். 

அதற்கு மறுப்பு தெரிவிப்பவராய், ‘உண்மையில், அவன் குடிக்கவில்லை. எத்தனை கச்சிதமாக வண்டியை நிறுத்தினான் என்று பார்த்தாயல்லவா?’ என்றார் பியத்ரோ.

அவர்கள் வண்டித்தடங்களை ஆய்ந்தனர். ‘இல்லை, இல்லை, இல்லை. நீ விளையாடுகிறாய். இல்லை. அது போன்ற மகிழுந்து இருந்தால் நானே அப்படி நிறுத்துவேன்’ என்றார் தொமோசோ. ‘உனக்குப் புரியவில்லையா, இத்தகைய மகிழுந்து நிற்பது, நீ செத்தாலும்…’

அவர் தன் சொற்றொடரை முடிக்கவில்லை. நிலத்தைக் குனிந்து பார்த்த போது, சாலையைத் தாண்டி இருந்த ஒரு புள்ளியில் அவர்கள் விழிகள் நிலைத்தன. புதரில் ஏதோ ஒன்று மின்னியது. இருவருமே ஒரே நேரத்தில் மெல்லிய திகைப்புடன் ‘ஓ!’ என்றனர்.

தங்கள் மிதிவண்டி அமர்வுகளிலிருந்து இறங்கி கைப்பிடியை இடுப்பில் சாய்த்து நின்றனர். ‘கோழி முட்டை போட்டிருக்கிறது’ என்றார் பியத்ரோ. அவரிடம் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத அளவில் இலகுவாகக் குதித்து மெல்ல குறுவனத்திற்குள் நுழைந்தார். நான்கு முத்து மணி இழைகள் கொண்ட ஒரு கழுத்தணி புதரில் கிடந்தது. 

இரு பணியாளர்களும் தன் கரங்களை நீட்டி, மென்மையாக ஒரு மலரைப் பறிப்பது போல் கிளையில் இருந்து அந்தக் கழுத்தணியை எடுத்தனர். இருவரும் அதைக் கைகளிலெடுத்து தம் விரல் நுனிகளால் முத்தைத் தொட்டுத் தடவி மிகுந்த கவனத்துடன் விழிகளின் அருகருகே எடுத்து வந்தனர். 

அந்த அணிகலன் உருவாக்கிய வியப்பிலும் ஆர்வத்திலும் போராடியபடி இருவரும் மெல்ல தம் கரங்களைக் கீழிறக்கிய பின்னும் ஒருவரும் அந்தக் கழுத்தணியைக் கைவிடவில்லை. யாரோ ஒருவர் எதேனும் சொல்ல வேண்டும் என்ற நிலையில், பியத்ரோ மூச்சுவிட்டு அமைதியை உடைத்து ‘இன்றைய தினங்களில் இப்படியான வகையில் அணிமுடிச்சுகள் இருக்கின்றன பாரேன்…’ என்றார்.

‘இது போலி!’ ஒரு செவியில் உடனடியாக தொமோசோ சொன்னார். கடந்த சில நிமிடங்களாகவே இதைச் சொல்ல விரும்பி தவித்தது போலிருந்தார். அணிகலனைப் பார்த்ததுமே அவர் மனத்தில் தோன்றிய முதல் எண்ணம் அதுவாகத்தான் இருந்தது. ஆனாலும் தன் நண்பன் எதையேனும் சொல்லத் தொடங்கிய பின் அவரை மடக்குவது போல இதைச் சொல்லலாம் என்ற நோக்கத்துடன் காத்திருந்தார். 

பியத்ரோ தன் கையை உயர்த்தி அணியைப் பார்த்தார். தவிர்க்க முடியாமல் தொமோசோவின் கையும் மேலுயர்ந்தது. ‘உனக்கு என்ன தெரியும்?’

‘எனக்குத் தெரியும். நீ என்னை நம்புவதுதான் சரியானது. எப்போதும் உண்மையான ஆபரணங்களை அவர்கள் பூட்டித்தான் வைப்பார்கள்.’

அவர்களது தோல் சுருங்கிய, பெரிய கரங்கள் கழுத்தணியைத் தீண்டி வருடியது. அவர்களது விரல்கள் ஒவ்வொரு இழையிடையிலும், நகங்கள் முத்து மணியிடைகளிலும் சென்று வந்தன. உலகில் எதுவுமே இல்லை என்ற சிந்தனையைச் சந்தேகத்திற்குரியதாக மாற்றும் குளிர்ந்த காலை ஒளியை, சிலந்தி வலை பனித்துமியை வடிகட்டுவது போல வடிகட்டியது அந்த முத்துமணி.

பியத்ரோ ‘உண்மையோ, போலியோ, நான், இது இப்படி நடந்ததால்…’ என்று அவர் சொல்லவரவிருப்பதன் மீது ஒரு எதிர்ப்பு மனநிலையை உண்டாக்கும் முயற்சியுடன் பேசினார். 

அந்தத் தொனியில் உரையாடலை எடுத்துச் செல்ல விரும்பிய தொமோசோ தனக்கு முன்பாக பியத்ரோ அந்தப் பாதைக்கு வந்துவிட்டதை உணர்ந்து, இது குறித்து ஏற்கனவே தான் நிறைய சிந்தனையோட்டங்களை வைத்திருப்பதாகக் காட்டி பியத்ரோவை மிஞ்ச விரும்பினார். 

எரிச்சலடைந்த தொனியில், ‘அய்யோ! உன் மீது பரிதாபப்படுகிறேன். நான் முதலிலேயே இந்த…’

அவர்கள் இருவருமே ஒரே கருத்தைச் சொல்ல முனைகிறார்கள் என்று தெளிவான போதும், ஒருவரை ஒருவர் குத்த வேண்டும் என்பதற்கான வழியைத் தேடினார்கள். இருவரும் ஒரே சமயத்தில் எவ்வளவு முடியுமோ அத்தனை விரைவாக கத்தினர். ‘அதை என்னிடம் தா!’ தீர்ப்பு வழங்கும் கம்பீரம் தனக்குத்தான் உள்ளது என பியத்ரோ தாடையை உயர்த்த, செந்நிற மூக்கும் அகல்விழிகளுமாக தன் நண்பனுக்கு முன்பு அச்சொற்களை உச்சரித்திட வேண்டும் என்ற கவனத்தில் தன் ஆற்றலைச் செலவிட்டார் தொமோசோ. 

உடல்மொழிகள் அவர்களது பெருமித உணர்வைத் தூண்டவே, சடுதியில் நல்ல நண்பர்களாக திருப்தியான பார்வைகளைப் பரிமாறிக்கொண்டனர். 

‘நாம் நம் கைகளைக் கறைபடுத்திக்கொள்ள மாட்டோம்!’ என்றார் தொமொசோ. ‘நாம் அத்தகையவர்கள் அல்ல!’

’சரியே!’ என்று சிரித்தார் பியத்ரோ. ‘அவர்களுக்கு நாம் நன்னெறி பற்றி பாடமெடுப்போம்.’

‘அவர்களது குப்பையை நாம் பத்திரப்படுத்தி வைக்க மாட்டோம்.’ தொமொசோ சூளுரைத்தார்.

‘நாம் ஏழை என்றபோதும் அவர்களைவிட பன்மடங்கு மேன்மை பொருந்தியவர்கள்’ என்றார் பியத்ரோ. 

‘நாம் என்ன செய்யப் போகிறோம் என்று அறிவாயா?’ தொமோசோவின் முகம் ஒளிர்ந்தது. ஒன்றிலாவது பியத்ரோவை முந்திவிட்டோம் என்ற மகிழ்வால் உண்டான ஒளிர்வு அது. ‘அவர்கள் தரும் வெகுமதியை நாம் ஏற்கக்கூடாது!’

மீண்டும் கழுத்தணியைப் பார்த்தனர்; அது அவர்கள் கைகளில் இன்னும் தொங்கியது. 

பியத்ரோ ‘நீ மகிழுந்தின் உரிம எண்ணைப் பார்த்தாயா இல்லையா?’ எனக் கேட்டார்.

’இல்லையே, ஏன்? நீ பார்த்தாயா?’

‘யாருக்குத் தோன்றியிருக்கும்?’

’எனில், என்ன செய்வது?’

‘சரிதான். நல்ல குழப்பம்.’

மீண்டும் அவர்களது எதிர்ப்புணர்வு வளர்ந்ததைப் போல ஒன்றாக ‘தொலைந்த உடைமைகளுக்கான அலுவலகம் உள்ளதே! அங்கு எடுத்துச் செல்வோம்’ என்று முடிவுசெய்தனர்.

பனிமூட்டம் அகன்றது. வெற்று நிழல் சித்திரமாக இனி தோன்றாதபடி வானம் புலர்ந்தது. மயக்கும் வெளிர்சிவப்பு நிறத்தில் அவர்களது தொழிற்சாலை வெளிப்பட்டது. 

‘என்ன மணி இருக்கும்?’ பியத்ரோ வினவினார். ’நாம் தாமதமாக வேலைக்கு வந்திருக்கிறோம் என்று அஞ்சுகிறேன்.’ 

தொமோசோ ‘நம்மிடம் தாமதக் கட்டணம் வசூலிக்கப் போகிறார்கள்’ என்றார். ‘அதே பழைய கதைதான். அவர்கள் உண்டு கொழிக்க நாம் பணம் தருகிறோம்.’

கைவிலங்கிடப்பட்ட இரு கைதிகளைப் போல அவர்களை ஒன்றாகவே வைத்திருந்த கழுத்தணியோடு சேர்த்து இருவரும் கைகளைத் தூக்கினர். உள்ளங்கையில் ‘நீ இதைப் பத்திரப்படுத்தி வைக்க அனுமதிக்கிறேன்’ என்று சொல்வதைப் போல, எடை பார்ப்பது போல வைத்தனர். ஆனால் இருவரும் அதைச் சொல்லவில்லை. ஒருவர் மீது இன்னொருவர் உயர்ந்த மதிப்பு கொண்டிருந்த போதும், ஒருவர் மற்றொருவரை எல்லா விசயத்திலும் ஒப்புக்கொள்ள வைப்பதற்காக விவாதித்து பழகியிருந்தனர். 

அவர்கள் மீண்டும் தத்தம் மிதிவண்டிகளில் ஏறியாக வேண்டும். இருந்தாலும் இன்னும் தம் முன் இருந்த, அந்தக் கழுத்தணியை திருப்பித் தரும் வரையோ வேறெந்த முடிவும் எடுப்பது வரையோ யார் வைத்திருப்பது என்ற, கேள்விக்குத் தீர்வு கண்டறியவில்லை. அவர்கள் அந்தக் கழுத்தணியே இதற்குப் பதில் சொல்லக்கூடும் என்ற சிந்தனையில் இருப்பவர்களைப் போல ஒரு வார்த்தையும் சொல்லாமல் நின்றுகொண்டே இருந்தனர். அதுவும் பதிலளித்தது: சிறு தள்ளுமுள்ளினாலோ அல்லது கீழே வீழுந்த போதோ, நான்கு இழைகளையும் ஒன்றாகப் பிடித்து வைத்திருந்த கொக்கி வலுவிழந்தது. சிறியதாய்த் திருகிய போது பிய்ந்தே விட்டது. 

பியத்ரோ இரண்டு இழைகளையும் தொமோசோ இரண்டையும் வைத்துக்கொண்டனர். என்ன முடிவெடுத்தாலும் இருவரும் ஒருமித்தே எடுக்க வேண்டும் என்பதைக் குறியீட்டு முறையில் அது முடிவு செய்தது. அவர்கள் விலைமதிப்பற்ற அப்பொருளை எடுத்து, மறைத்து, தத்தம் மிதிவண்டிகளில் ஏறி, மெளனமாக, ஒருவரையொருவர் பாராமல், கீச்சொலியிடும் மிதிப்பான்களை, ஒன்றுகூடும் வெண்முகில்களும் உயரும் கரும்புகையும் வர்ணம் தீட்டும் வானத்தின் கீழிருந்த தொழிற்சாலையை நோக்கி அழுத்திச் சென்றனர். 

அவர்கள் அவ்விடம் நீங்கும் முன்பே விளம்பரப் பலகையின் பின்னாலிருந்து ஒருவன் தோன்றினான். நீண்டு மெலிந்த கால்களும் மெலிந்த உடலும் கொண்டிருந்த அவன் உடுக்கை மோசமாக இருந்தது. இரு தொழிலாளர்களையும் தொலைவில் இருந்து சில நிமிடங்கள் பார்த்தான். அவன் பெயர் ஃபியோரென்ஸோ; வேலையில்லாததால் புறநகர் பகுதியில் இருக்கும் குப்பை மேடுகளில் பயன்படுத்தத்தக்கதாக ஏதேனும் கிடைக்குமா என்று தேடுவான். இந்த வேலை செய்பவர்களுக்கே உரிய ஒரு சிக்கல் இருக்கிறது. என்றேனும் தம் கண்ணில் ஒரு பொக்கிஷம் நிச்சயம் தென்படும் என்ற பிடிவாதமான ஏக்கமே அது. வழமை போன்ற அன்றைய காலையிலும் ஃபியோரென்ஸோ மகிழுந்து கிளம்புவதையும் இரு தொழிலாளர்களும் கீழிறங்கி கரையிலிருந்து எதையோ எடுக்கச் செல்வதையும் பார்த்தான். உடனடியாக தனது அரிய, வாழ்நாள் வாய்ப்பை ஒரு நிமிடத்தைவிடக் குறைவான காலத்தில் தவறவிட்டதை உணர்ந்தான். 

இயக்குநர் ஸ்டார்னாவைச் சந்திக்கும் வாய்ப்புடைய உட்குழுவில் தொமோசோ ஒரு உறுப்பினர். வழக்கற்று போன பழமையைப் பேசி, எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கும் குணத்துடன், செவிடனாகவும் பிடிவாதக்காரனாகவும் இருந்த போதும் தொழிற்சாலையில் நடக்கும் வாக்கெடுப்பில் எப்படியோ தொமோசோ தேர்வாகிவிடுகிறார். அவர் தொழிற்சாலையில் முதுமையான தொழிலாளர்களுள் ஒருவர், அனைவருக்கும் தெரிந்தவர். அவர் ஒரு அடையாளம். அவரது சக தொழிலாளர்கள் சிலர் அவருக்குப் பதிலாக இன்னும் திறமையுடன் பேரம் பேசக்கூடிய, கூரிய கவனமும் நல்லறிவும் கொண்ட ஒரு நபரை நியமிக்கலாம் என்று நெடுங்காலமாகச் சிந்தித்து வந்த போதும், அவரிடம் இருக்கும் மரபு ரீதியான மரியாதை உண்டாக்கும் நல்ல விளைவுகளைக் கருத்தில் வைத்து, அவருக்கு மரியாதை தந்து வந்தனர். கூட்டத்தில் சொல்லப்பட்ட முக்கியமான செய்திகளைத் தவறாமல் அவரிடம் சேர்த்தனர். 

முந்தைய நாள் தொமோசோவின் சகோதரிகளுள் ஒருத்தி அவரது பிறந்தநாளுக்காக – அவர் பிறந்தநாள் ஒரு மாதத்திற்கு முன்பே கடந்துவிட்ட போதும் – முயல் ஒன்றை வாங்கிவந்திருந்தாள். கிராமத்தில் வாழும் அவள், சில சமயங்களில் அவரைப் பார்க்க வருவதுண்டு. இறந்த முயல் என்பதால் உடனடியாக அதை மண்பாண்டச் சமையல் செய்தாக வேண்டும். அதை வைத்திருந்து ஞாயிறு மதிய உணவிற்கு மேசையில் மொத்த குடும்பமும் உண்பதும் நன்றாகத்தானிருக்கும், ஆனால் முயல்கறி தாங்காது, வீணாகிவிடும். எனவே தொமோசோவின் மகள்கள் உடனடியாக அதை வேகவைத்தனர். அவர் தம் பங்கைப் பணியிடத்தில் பகிர்ந்துகொள்ளும் பொருட்டு ரொட்டியோடு எடுத்து வந்தார். 

தொமோசோவின் மகள்கள், தொமோசோவுக்குக் குடல், மீன், ஆம்லெட் என்று எதை மதிய உணவுக்குத் தந்தாலும் ஒரு நீண்ட ரொட்டியைத் துண்டாக்கி அதன் உள்ளே உணவைத் திணித்துத் தருவார்கள். அவர் ரொட்டியைப் பையில் வைத்து, பையைத் தொங்கவிட்டு காலையிலேயே பணிக்குக் கிளம்பிவிடுவார். அன்றைய கடுமையான தினத்தில் தன் ரொட்டியில் இருக்கும் முயல்கறி ஆறுதல் வழங்கத் தயாராக இருந்தாலும், தொமோசோவால் அதைப் பெரிதாகக் கடித்து தின்றுவிட முடியவில்லை. கூட்டத்திற்குச் செல்ல வேண்டியதால் உடை மாற்றியாக வேண்டும். மதிகெட்ட கழுத்தணியை எங்கே வைப்பதென்று தெரியவில்லை. வேகவைத்த முயல்கறி திணிக்கப்பட்ட ரொட்டியில் அதையும் திணித்துவிடலாம் என்ற விசித்திரமான சிந்தனை அவருக்குள் முகிழ்த்தது.  

பதினோரு மணியளவில் யாரோ ஒருவர் தொமோசோவிடமும் அவரோடிருந்த ஃபேண்டினோ, கிரிஸ்கியுலோ, சாப்போ, ஓர்டிகா இன்ன பிறரிடமும் இயக்குநர் ஸ்டார்னா அவர்களைச் சந்திக்க ஏற்றுக்கொண்டதாகவும் அவர்களுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். அவர்கள் முகம் கழுவி, வேகமாக உடைமாற்றி, விரைந்து மின் தூக்கியை அடைந்தனர். ஐந்தாம் தளத்தில் அவர்கள் நெடுநேரம் காத்திருந்தனர். மதிய உணவு இடைவேளை வந்தும் இயக்குநர் ஸ்டார்னா அவர்களைச் சந்திக்கவில்லை. மிதிவண்டி போட்டி வீராங்கனையைப் போல அழகிய உடல்வாகும் அழகற்ற முகவெட்டும் பொன்னிற கூந்தலும் கொண்ட உதவியாளர் வந்து இயக்குநரால் அவர்களை இப்போது சந்திக்க முடியாது என்றும், தொழில்தளத்திற்கு மீண்டும் சென்று பிறரோடு இணையும் படியும், இயக்குநர் வேலையை முடித்த கையோடு அவர்களை மீண்டும் அழைப்பார் என்றும் தெரிவித்தாள்.

உணவகத்தில் அவர்களது சக பணியாளர்கள் மூச்சைப் பிடித்து காத்திருந்தனர். ‘என்ன? என்னவாயிற்று?’ சங்க உரையாடல்களுக்கு உணவகத்தில் அனுமதி மறுப்பிருந்தது. ‘மீண்டும் பிற்பகலில் நாங்கள் திரும்பிச் செல்லவிருக்கிறோம்.’ ஏற்கனவே வேலைக்குச் செல்வதற்கான நேரம் ஆகியிருந்தது. குழுவின் உறுப்பினர்கள், விரைவாகச் சில கவளங்களை உட்தள்ளலாம் என்று உலோக மேசையில் அமர்ந்தனர். அவர்களது ஒவ்வொரு நிமிட தாமதமும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும். ‘நாளை நாம் என்ன செய்யப் போகிறோம்?’ மற்றவர்கள் உணவகத்திலிருந்து வெளியேறிய போது கேட்டனர். ‘கலந்தாலோசனை நடந்த பிறகு அதுபற்றிச் சொல்வோம். என்ன செய்ய வேண்டும் என விவாதித்து முடிவெடுப்போம்.’

தன் பையில் கைவிட்டு வறுத்த காலிஃபிளவரையும் குத்துக்கரண்டியையும் எண்ணெய்க் குடுவையையும் எடுத்தார் தொமோசோ. அலுமினியத் தட்டில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி, காலிஃபிளவரை ஒரு கையால் தின்றபடி, மறுகையால் தன் மேற்சட்டை பையில் இருக்கும் கறியோடு சேர்ந்து – தன் சக தொழிலாளிகளிடம் மறைத்தாக வேண்டிய – முத்துமணியும் இருந்த ரொட்டியைத் தடவினார். சடுதியில் அவருக்கு முயல் மீது வெறிப் பசியெழுந்தது. நாள் முழுவதும் அவரைக் காலிஃபிளவரை மட்டுமே உண்ண அனுமதித்த அந்த முத்தணியைச் சபித்தார். அவர் தன் நண்பர்களுடன் மகிழ்வாக உரையாட முடியாமல் போனதும் இரகசியத்தைப் பாரமாகச் சுமந்ததும், அந்த தருணத்தில், அந்த முத்தணியை வெறும் எரிச்சலுக்குரியதாக ஆக்கியது. 

திடீரென்று தன் மேசைக்கு எதிர்புறத்தில், மீண்டும் வேலைக்குச் செல்லும் முன் சந்தித்துப் போக வந்திருந்த பியத்ரோவைப் பார்த்தார் தொமோசோ. பெரிய ஆள், பல்குத்தியை வைத்து குத்தியபடி, வலிந்து ஒற்றைக் கண்ணடித்தார். நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, குழப்பம் இல்லாமல் நிற்கும் அவரைக் கண்டதும் – அல்லது தொமோசோவுக்கு அப்படித் தோன்றியும் இருக்கலாம் – தான் அரைகுறை மனத்துடன் காலிஃபிளவரை மட்டும் குத்தித் தின்றது நினைவிற்கு வர அவருக்குள் சினமெழுந்தது. அவரது அலுமினியத் தட்டு ஏதோ ஆவி புகுந்தது போல மேசையில் ஆடி ஒலியெழுப்பியது. தன் தோளைக் குலுக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் பியத்ரோ. எல்லோரும் உணவகத்திலிருந்து வெளியேறும் சமயத்தில் தொமோசோவும் தன் கறைபடிந்த உதடுகளில் சோடாக்குடுவையில் நிறைந்திருந்த ஒயினை அருந்திவிட்டு அங்கிருந்து நீங்கினார். 

இயக்குநரது வரவேற்பறைக்கு பெரிய டேன்வகை நாய் ஒன்று வந்தது. எல்லோரும் அது இயக்குநர் ஜிகி ஸ்டார்னாவாகத்தான் இருக்கும் என்று ஒன்றாகத் திரும்பிப் பார்த்தனர். சிலருக்கு அந்நாயின் வருகை வரவேற்பாகவும் சிலருக்கு அவமதிப்பாகவும் தோன்றியது.  முந்தையோருக்கு நாய் ஒரு சக உயிரியாகவும், சுதந்திரமாகத் திரிய வேண்டியது இங்கு சேவைக் கருவியாகச் சிறைபட்டிருப்பதாகவும் தோன்ற, பின்னவருக்கு அது அதிகார வர்க்கத்தின் கருணையின்மையின் அடையாளமாக, பகட்டுப்பொருளாகத் தோன்றியது. தொழிலாளர்கள் எப்போதும் அறிவுஜீவிகள் மீது காட்டும் இருவகையான எதிர்திசை மனோபாவங்களை அச்சூழலும் அப்படியே பிரதிபலித்தது. 

ஆனால் அந்தக் குடேரியனோ ’அழகே! இங்கே வா! எனக்குக் கைகொடு!’ என்று சொன்னவர்களிடமும் ‘ச்சீ, தள்ளிப்போ சனியனே!’ என்றவர்களிடமும் எந்தவிதப் பாரபட்சமும் இன்றி தயக்கமும் அலட்சியமுமாக நடந்துகொண்டது. சிறிய சண்டைக்கார அறிகுறியுடன் அங்கும் இங்கும் நுகர்ந்து, தன் வாலை மெல்ல நேர்த்தியாக ஆட்டி அங்கிருந்தவர்களைச் சுற்றி வந்தது. குறும்பான, சுருள்முடி ஓர்டிகாவுக்கு எல்லாவற்றைப் பற்றியும் எல்லாம் தெரியும். அந்த அறைக்குள் நுழைந்த உடனேயே தன் முழங்கையை ஊன்றி மேசையில் இருந்த சில பருவ இதழ்களை எடுத்து பக்கங்களைப் புரட்டத் தொடங்கியிருந்தான். நாயைப் பார்த்ததுமே மேலிருந்து கீழ் அவதானித்துவிட்டு, இது இந்த வகை, இதன் பல் இப்படிப்பட்டது, இதன் அகவை இத்தனை, இதன் தோல் இப்படியானது என்று வெறும் பார்வை என்று சொல்லிவிட முடியாத அளவிற்கு, அதுபற்றி சகலத்தையும் சொல்லத் தொடங்கினான். கிரிஸ்கியுலோ, அதை உற்றுப் பார்க்கவில்லை. தொலைவில் ஏதோ ஒரு புள்ளியில் விழிநிலைக்க, தீர்ந்து போன சிகரெட்டை இழுத்தபடி இருந்தான். அந்த நாயை எட்டி உதைக்கப்போகிறேன் என்ற தோற்றம் அவன் முகத்தில் இருந்தது. தன் கால்சராய்ப் பையில் இருந்த கசங்கிய தாளை எடுத்து வாசிக்கலானான். தொழிற்சாலையில் செய்தித்தாள் வாசிக்கத் தடை இருந்தது. இந்த அறையில் ஒரு அடிப்படை கண்ணியம் அனுமதிக்கப்பட்டிருக்கும் என்று அவனுக்குத் தோன்றியதால், காத்திருப்பை வீணாக்காதபடி அதை வாசிக்க ஆரம்பித்தான். மாலைகளில் வீட்டிற்குச் சென்றதும் அவன் உடனடியாக உறங்கிவிடுவது வழக்கம். திடீரென்று தன் தோளின் மேற்புறம் செந்நிறம் மின்னும் விழிகளும் நீண்ட மூக்குமாகத் தோன்றிய நாயைக் கண்டதும் அனிச்சையாகத் தன் செய்தித்தாளின் பெயரை மறைக்கும்படி மடித்தான். வழக்கமாக அவன் அச்சமடைபவனல்ல. தொமோசோவிடம் வந்ததும் குடேரியன் நின்றது. தன் பின்னங்கால்களில் எடைதந்து அமர்ந்து காதைச் சொறிந்து மூக்கை உயர்த்தியது.

செல்லப் பிராணிகளுடனோ மக்களுடனோ விளையாடும் அளவு இனிமையானவராக இல்லாத போதும் தொமோசோவுக்குள் திடமான ஆர்வம் ஒன்று மேலெழுந்து இந்தப் பட்டவர்த்தனமான அதிகாரச் சூழலில், நாக்கில் ‘டொக்’ என்ற ஒலியாகவோ, மெல்லிய சீழ்க்கையாகவோ கனிவான வெளிப்பாடுகளையோ காட்டியாக வேண்டிய நிர்பந்தம் இருப்பதை உணர்த்தியது. மென்னொலியாக எழுப்பப்பட வேண்டிய சத்தம் அவரது செவிட்டுத்தன்மையால் கட்டுப்பாடின்றி கீறிச்சொலியாக வெளிப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் அவர் தன் இளமையில் வயல்வெளிகளில் வேலை செய்த போது நாய்களும் மனிதனும் கொண்டிருந்த தற்செயலான நன்னம்பிக்கையின் எச்சத்தினை மீண்டும் இங்கே உருவாக்க முனைந்தார். அவர் காட்டுத்தனமான விலங்குகளுடனும் இரத்தச் சுவை தேடும் பெரிய நாய்களுடனும் முடி தொங்க உறுமியபடி இருக்கும் கலப்பு வகை நாய்களுடனுமே பழகி இருந்தார். ஆனால் அவர் இறந்தகாலத்தில் பழகியிருந்த நாய்களுக்கும் இந்த நாய்க்கும் இடையே பெரிய சமூக இடைவெளி இருந்தது. உடனடியாகவே அது தன் முதலாளியின் நாய் என்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது.  அவ்வுணர்வு அச்சமூட்டியது. தன் கைகளை கால் மூட்டில் வைத்து அமர்ந்திருந்த அவர், தன் தலையைப் பக்கவாட்டில் சொடுக்கி, தன் வாயைத் திறந்து, அந்த நாயை அங்கிருந்து செல்ல முடிவெடுக்குமாறு தெரிவிப்பது போல மெளனமான குரைப்பைச் செய்து காட்டினார். போய்த் தொலையட்டும். ஆனால் குடேரியன் அப்படியே அசைவின்றி மூச்சிறைத்தவாறு நிலைத்து அமர்ந்தது. கடைசியாக தன் மூக்கை முதியவரின் மேற்சட்டை மடிப்புக்குள் வைத்து நுகர்ந்து பார்க்கும் வரை அப்படியே இருந்தது.

அவரது நண்பர்கள் ‘தொமோசோ, உனக்கு நிர்வாகத்தில் நண்பர் இருப்பதை இதுவரை சொல்லவே இல்லையே’ என்று கேலி செய்தனர்.

ஆனால் தொமோசோ வெளிறிப்போனார். அப்போதுதான் சமைத்த முயல்கறியின் மணத்தை அந்த நாய் நுகர்ந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்.

குடேரியன் அவரைத் தாக்கத் தொடங்கியது. முன்னங்கால் பாதத்தை தொமோசோவின் மார்பில் வைத்து நாற்காலியில் தள்ளுவதைப் போல தள்ளியது. பின் அவர் முகத்தை நக்கி, அதை உமிழ்நீராக்கி மூச்சடைக்க வைத்தது. அதைத் துரத்துவதற்காக கல்லெடுத்து அடிப்பது போலவும், குழியில் குதிப்பது போலவும் சமிக்ஞை செய்தார். ஆனால் நாய்க்கு அது புரியவில்லை அல்லது அந்தச் செய்கைகளை அது பொருட்படுத்தவில்லை. அவரை விட்டு நீங்க மறுத்தது. மாறாக திடீர் ஆர்வத்தில் குதித்துத் தன் முன்னங்கைகளை அவர் தோளின் மேல் இட்டுக்கொண்டு அவரது முயல்கறி இருந்த பையை நோக்கித் தன் மூக்கை வைத்தழுத்தியது. 

’அய்யோ! விடு நாயே! விட்டு விலகு!’ என்று மூச்சிரைப்பின் இடையே சிவந்த விழிகளோடு பேசிய தொமோசோ, இந்த நாயின் தழுவலுக்கும் தாவலுக்கும் இடையில் ஒருபக்கத்தில் கூரிய ஒன்று படுவதாக உணர்ந்தார். அவ்விலங்கு அவர் மீது தாவி, தலை உயரத்தில் பற்களை வைத்து சடுதியில் மேற்சட்டையைக் கவ்வியது. தொமோசோ எப்படியோ போராடி, அது தனது பையைக் கிழிப்பதற்கு முன் ரொட்டியை வெளியே எடுத்துவிட்டார்.

‘அட! இறைச்சி ரொட்டி!’ என்று நண்பர்கள் சொன்னார்கள். ‘பயங்கரமான சாதுர்யசாலி. தன் சட்டைப் பையில் உணவை மறைத்து வைத்திருக்கிறாரே. அதனால்தான் நாய் அவரையே சுற்றி வந்திருக்கிறது. எங்களுக்குக் கொஞ்சமாவது பகிர்ந்திருக்கலாம்.’

தனது சிறிய கையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்தி, அந்த பெரிய டேனின் தாக்குதல்களில் இருந்து தன் ரொட்டியைக் காக்க முயன்றார் தொமோசோ. ‘அதை விட்டுவிடு! நாயிடமிருந்து நிச்சயம் உன்னால் அதைக் காக்க முடியாது! அது தின்றுவிட்டுப் போகட்டும்!’ என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.

கிரிஸ்கியுலோ ‘என்னிடம் போடு, ஏன் என்னிடம் எறியமாட்டேன் என்கிறாய்?’ என்று சொல்லியவாறு தன் கைகளைத் தட்டி அதைப் பாய்ந்து பிடிக்க ஒரு கூடைப்பந்து வீரனைப் போலத் தயாராக நிற்கிறான். 

ஆனால் தொமோசோ அதைக் கைமாற்றவில்லை. குடேரியன் முன்பைவிட இன்னும் உயரமாகத் தாவிப் பற்றி தன் பற்களிடையே இருந்த ரொட்டியுடன் மூலையில் சென்று வசதியாக அமர்ந்தது. 

‘அதுவே வைத்துக்கொள்ளட்டும் தொமோசோ! இப்போது என்ன செய்யப்போகிறாய்? அது உன்னைக் கடித்துவிடும்!’ என்று நண்பர்கள் கூறினர். ஆனால் முதியவர் பெரிய டேனின் அருகே குனிந்து பேச விழைந்தார். 

‘உனக்கு இப்போது என்ன வேண்டும்? பாதி தின்ற கறிரொட்டியை வாங்கி என்ன செய்வாய்?’ என்று அவர்கள் கேட்டனர். சரியாக அத்தருணம் கதவைத் திறந்து உதவியாளர் உள்ளே வந்து ‘இப்போது உள்ளே வருகிறீர்களா?’ என்றழைத்தாள்.

அனைவரும் அவளை விரைந்து பின் சென்றனர்.  இப்படி கழுத்தணியை இழப்பது பற்றி மனம் ஏற்கவில்லை என்ற போதும் அவர்கள் பின்னே செல்வதற்காக எழுந்தார் தொமோசோ. நாயையும் தன்னோடு அழைத்துச் செல்ல விரும்பினார். பிறகு இயக்குநருக்கு முன்பாக நாய் வாயில் முத்து மாலையைக் கடித்துக்கொண்டிருந்தால் அது இன்னும் கீழ்மையாகிவிடும் என்பதால் அதைத் தவிர்த்துவிட்டு, தன் சினம் பொங்கும் முகத்தைப் புன்னகையால் உருமாற்ற முயற்சி செய்து பார்த்தார். அவர் முகம் விகாரமாகத் தோன்றக்கூடும் என்றே எண்ணினார்; அந்தச் செயல் பொருளற்றதாகத் தோன்றவே, மீண்டும் குனிந்து இரகசியமாக ‘இங்கு வாடா, வீணான சனியனே!’ என்றார். 

கதவு மூடப்பட்டது. வரவேற்பறையில் யாருமில்லை. நாய், தன் உணவைக் கைதாங்கி நாற்காலிக்குப் பின்னால் இருந்த தனித்த மூலைக்கு எடுத்துச் சென்றது. தொமோசோ கைகளைப் பிசைந்தார். அவருக்குக் கழுத்தணி நாசமானதைவிட (தொடர்ந்து தனக்கு அது ஒரு பொருட்டல்ல என்று அவர் அழுத்தம் திருத்தமாகவே சொல்லிவந்துள்ளார், இல்லையா?) அது பற்றி பியத்ரோவிடம் சொல்லவேண்டிய துர்பாக்கிய நிலையையும், எப்படி நடந்தது, அது எவ்வாறு தன் தவறில்லை என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்க வேண்டியதையும் எண்ணியே அதிகம் கவலையுற்றார். மேலும், தன்னை முற்றான மடையனாக்கிய, நண்பர்களிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாத, இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவது எப்படி என்ற கவலையும் மேலோங்கியது. 

‘அதனிடமிருந்து பிடுங்கியே திருவேன்!’ என்று தனக்குள் சூளுரைத்தார். ’அது என்னைக் கடித்தால், அதற்கான நட்ட ஈடு கோருவேன்.’ நான்கு காலுக்குச் சென்று கைதாங்கி நாற்காலிக்குப் பின்னிருந்த நாயின் அருகில் அமர்ந்து, ஒரு கையை நீட்டி அதன் வாய்க்குள் விட்டார். ஆனால் நல்லூட்டமும் பயிற்சியும் பெற்ற அந்த நாய், அதன் தலைவர் படிப்பினை தந்த சோம்பேறித்தனத்தின் பலனாக, ரொட்டியைத் தின்னாமல் அதன் ஒரு புறத்தைப் பல்லிடையே வைத்து வெறுமனே கொரித்தது; அதுமட்டுமின்றி, அனைத்துண்ணிகளுக்கு இயல்பாகவே தனது உணவை யாரேனும் பிடுங்கினால் வரும் வெறி அதற்கு எழவில்லை. பூனையின் போல சில பண்புகளை வெளிப்படுத்தியபடி விளையாடியது. இத்தகைய திடகாத்திரமான விலங்கு கடுமையாக பாதிப்பின் அறிகுறியுடன் இருந்தது. 

குழுவில் இருந்த பிறர் தொமோசோ தம்மைப் பின்தொடர்ந்து வரவில்லை என்பதைக் கவனிக்கவில்லை. ஃபேண்டினோ தனது கருத்துக்கு வலுசேர்ப்பதற்காக. ‘… எங்கள் நண்பர்களில் பலர் தம் முப்பதாண்டுக்கு மேலான அகவையை நிர்வாகத்திற்காகச் செலவிட்டதன் சாட்சியாய் தன் நரைமுடியை முன்வைப்பார்கள்…’ என்று சொல்லி தொமோசோவைச் சுட்டும் பொருளுடன் பேசிவிட்டு, வலது புறமாக முதலில் கையைச் சுட்டி, மெல்ல இடப்புறமாக திருப்பியபோதுதான் தொமோசோ அங்கு இல்லை என்பதை அனைவரும் உணர்ந்தனர். அவருக்கு உடல்நலமில்லையா? கிரிஸ்கியுலோ திரும்பி மெல்ல வெளியேறி வரவேற்பரையில் இருக்கிறாரா என்று எட்டிப் பார்த்தான். ஆனால் யாரையும் காணவில்லை. ‘வயதானவர், பாவம். மிகுந்த களைப்படைந்திருப்பார்’ என்று நினைத்தான். ‘வீட்டிற்குச் சென்றிருப்பார். பரவாயில்லை! அவருக்குத்தான் காது கேட்காதே! இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்!’ கைதாங்கி நாற்காலிக்குப் பின் தேடிப் பார்க்க வாய்ப்பே இல்லாதவனாய் மீண்டும் உள்ளே நுழைந்து குழுவுடன் இணைந்தான்.

முதியவரும் நாயும் உடற்குறுகிய நிலையில் – தொமோசோ விழியில் நீர் மல்க, குடேரியன் தன் நாய்ச்சிரிப்பை பற்களில் சுமக்க – தொடர்ந்து விளையாடினர். தொமோசோவின் பிடிவாதம் சற்றும் தளர்ந்ததல்ல. குடேரியன் வெறும் மட விலங்குதான் என்று நினைத்தவருக்கு, அதனிடம் விட்டுக்கொடுப்பதில் ஏற்பில்லை. அவர் நினைத்ததும் சரியே. நாயின் பூஞ்சையான நட்புணர்வைப் பயன்படுத்தி, எப்படியோ ரொட்டியைப் பிடுங்கினார். அதன் மேல் பகுதி கீழே விழ அதை நோக்கி நாய் பாய்ந்தது. தொமோசோ தன்கையில் இருந்த பகுதியில் முத்தையும் முயல்கறியையும் மீட்டார். முத்தணியை எடுத்துக்கொண்டவர், அதனிடையில் இருந்த முயல்கறியைத் துடைத்த பிறகு தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டார். கறியை அள்ளி வாயில் திணித்தார். நாயின் பற்கள் ரொட்டியின் மேற்புறத்தைத் தாண்டி உள்ளே நிரம்பி இருந்த கறிவரை ஆழமாக இறங்கி இருக்கவில்லை என்பதை அறிந்தார். 

பின்னர் நுனிக்காலில் நடந்து, வெண்ணீலமடைந்த முகமும் நிரம்பிய வாயுமாக, தன் காதில் கேட்கும்படி மகிழ்வான பாடலைப் பாடிக்கொண்டே, இயக்குநர் ஸ்டார்னா அலுவலகத்திற்குள் நுழைந்து தன் நண்பர்களுடன் இணைந்துகொண்டார். அவர்கள் அனைவரும் கேள்விக்குறிகள் நிறைந்த பார்வைகளை முகங்களில் வைத்திருந்தனர். ஃபேண்டினோவின் முழு விவரணையின் போதும், தனது மேசையில் விரிக்கப்பட்டிருந்த அறிக்கையிலிருந்து – அதிலிருக்கும் குறிப்புகளையும் தரவுகளையும் ஆராய்பவராக – ஒருமுறைகூட பார்வையை அகற்றியிருந்திராத இயக்குநருக்கு, அருகிலிருப்பவர்களுள் யாரோ ஒருவர் அசைபோடும் ஒலி கேட்டது. தலையைத் தூக்கி, முன்னர் பார்த்திராத, புதிய, வெளிறிய, சுருக்கங்களுடன் கூடிய புதிய முகத்தைத் தன் மஞ்சள் நிற, புடைத்த நாளங்களோடும் கண்களால் வெறித்தார். சினமுற்றவர், தாடைகள் குதிப்பதைப் போல நன்கு வெளிப்படும் ஒலியுடன் விடாமல் அசைபோடும் நபரின் கன்னங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து தன் சீற்றத்தை வெளிப்படுத்தினார். அந்தக் காட்சியால் மிகவும் தொந்தரவுற்றவர் போல மீண்டும் தரவுகளை நோக்கிக் குனிந்தவர் ஒருபோதும் தலையை உயர்த்தவே இல்லை. எப்படி ஒரு ஆளால் நாணமே இல்லாமல் தன் முன்னிலையில் உண்ண முடிகிறது என்ற எரிச்சலைக் குறைக்க அந்த ஆளைத் தன் மனத்தில் இருந்து வெளியேற்ற முயன்றார். அப்படிச் செய்தால்தான் ஃபேண்டினோவின் தர்க்கங்களைப் புத்திசாலித்தனமாகவும் சாதுர்யத்துடனும் எதிர்கொண்டு தவிடுபொடியாக்க முடியும் என்று நினைத்தார். ஆயினும், அவரது ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் குலைந்து போய்விட்டதையும் அறிந்திருந்தார். 

*

ஒவ்வொரு இரவும் படுக்கச் செல்வதற்கு முன் திருமதி உம்பெர்தா வைட்டமினேற்றம் செய்யப்பட்ட வெள்ளரிக் களிம்பைத் தன் முகத்தில் பூசுவாள். அன்றைய இரவை நகரில் கழித்த பின், மறுநாள் காலை நிலைகுலைந்து தன் மஞ்சத்தில் வீழ்ந்ததற்குப் பிறகு, (எப்படி வீழ்ந்தோம் என்பது அவள் நினைவில் இல்லை) அவளது வெள்ளரிக் களிம்பு, மசாஜ், வயிற்றுப்பகுதியைத் தட்டையாக்கும் உடற்பயிற்சிகள் – மொத்தமாகச் சொன்னால் தன்னை அழகாகக் காட்ட முனைவதற்காக அவள் நாள் நெடுக செய்யும் (ஒரு போதும் தவறாத) அனைத்து சடங்குகளும் அன்று நிகழவில்லை. இறுதியாக அவளுக்கு உறக்கச் சிக்கல் இருந்தது. இந்தச் சடங்குகளைச் செய்யாமல் இருந்ததும், அவள் உட்கொண்ட ஆல்கஹாலால் பக்கவிளைவாக ஏற்பட்ட நரம்புத்தளர்வு, தலைவலி, புளிப்புச் சுவை ஆகியவையும் உறங்கும் சில மணிநேரங்களையும் மோசமான உறக்கமாக ஆக்கியது. அவளது அழகு ஆலோசகரது விதிப்படி, மல்லாந்து படுத்துறங்குவதை மட்டும் அவள் பழக்கமாகக் கொண்டிருந்தாள். அவள் இளைப்பாறுவதில் இருந்த சிக்கலை அந்த வடிவத்தில் வெளிப்படுத்த அனுமத்திருந்தது அப்பழக்கம். ஒருகாலத்தில் சீர்மையும் வடிவுமென இருந்தவள், கசங்கிய விரிப்பின் மடிப்புகளில் கிடந்தவளை அவதானிக்கும் கற்பனை சக்தி மிகுந்த ஒருவருக்கு எப்போதும் கவர்ச்சியாகவே தென்படுவதைப் போல் அப்போதும் இருந்தாள். 

அவளது காலை தெளிவின்மைக்கும் அவசத்திற்கும் இடையே, எதையோ மறந்துவிட்டோம் என்ற உணர்வு அவளைத் துணுக்குறவைத்து, எழுப்புமணி போல எழுப்பியது. அவள் வீட்டிற்கு வந்ததும், நரித்தோல் மேலாடையை நாற்காலியில் எறிந்து, தன் மாலை உடைக்கு மாறியிருந்தாள். ஆனால் இந்த நினைவுகளுக்கிடையில் அவளைத் தொந்தரவு செய்த ஒன்றும் இருந்தது: கழுத்தணி! அவள் தன் தோலையும் அங்கங்களையும்விட முக்கியமானதாக அக்கழுத்தணியைப் பராமரித்திருந்தாள். அதைக் கழற்றிய நினைவே இல்லை. அதைவிடத் தன் குளியலறையில் இருக்கும் இரகசிய இழுப்புப் பெட்டியில் கழற்றி வைத்த நினைவு அறவே இல்லை.   

விரிப்புகளின் சுழல்களில் இருந்து வெளிப்பட்டு மஞ்சத்திலிருந்து எழுந்தவள், மெல்லிய ஒளிபுகும் ஆடையும், கலைந்த கூந்தலுமாக அறையில் குறுக்குமறுக்காக நடந்தாள். வேகமாக இழுப்புப் பெட்டிகள், உடைகள் இருக்கும் அலமாரி என்று, நெக்லஸ் இருக்கச் சாத்தியமான அனைத்து இடங்களையும் நோக்கினாள். இதற்கிடையே ஒரு நொடி தன்னைக் கண்ணாடியில் பார்த்து, தன் பொலிவிழந்த முகத்தை வெறுப்புடன் புருவம் உயர்த்தினாள். ஓரிரு இழுப்பு பெட்டிகளைத் தேடிவிட்டு, தான் முன்பு பார்த்த தோற்றம் பொய்யாக இருந்திடாதோ என்ற ஏக்கத்தில் மீண்டும் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தாள். குளியலறைக்குள் சென்று அங்கிருக்கும் இடுக்குகள், பரணுக்கு மேலே என தேடிவிட்டு, ஒரு மேலாடையைப் போர்த்தி தொட்டிக்கு மேலிருந்த சிறிய கண்ணாடியில் தாம் எப்படி இருக்கிறோம் என்று பார்த்தாள். பிறகு அதற்கப்பால் இருக்கும் பெரிய கண்ணாடியிலும் பார்த்தாள். இரகசிய இழுப்புப் பெட்டியைத் திறந்தாள்; மூடினாள். மீண்டும் கூந்தலுக்குள் தற்செயலாகக் கையைவிட்டு, பின் அதை இரசிப்பவளாகக் கையைவிட்டாள். நான்கு இழைகள் முத்தினால் ஆன கழுத்தணியை அவள் தொலைத்துவிட்டாள். தொலைபேசியைச் சுழற்றினாள். 

‘வடிவமைப்பாளரிடம் பேச முடியுமா? ஆம் என்ரிகோ! எழுந்துவிட்டேன். நன்றாக இருக்கிறேன். கழுத்தணி, முத்துமாலை… இங்கிருந்து வெளியேறியபோது அது என்னிடம் உறுதியாக இருந்தது. இப்போது இல்லை. அதைக் காணவில்லை. தெரியவில்லையே… ஆம், எல்லா இடத்திலும் பார்க்காமலா இருப்பேன்… உனக்கு ஞாபகமில்லையா?’

அடித்து போட்ட நாயைப் போலச் சோர்ந்திருந்த என்ரிகோ இதனால் எரிச்சலும் சலிப்பும் அடைந்தான். (இரண்டு மணி நேரங்கள் மட்டுமே தூங்கி இருந்தான்.) அவனது இளம் வரைவு உதவியாளன் வேறொரு பணியைச் செய்யும் பாவனையில் எல்லாச் சொற்களையும் ஒட்டுக்கேட்க முயன்றுகொண்டிருந்தான். சிகரெட் புகை கண்ணில் படிய ‘அப்படியென்றால் அவரிடம் வேறொன்று வாங்கித் தர…’ என்று சொன்னான். 

அவன் முடிப்பதற்குள் தொலைபேசியில் இருந்து பதில் கடும் கீச்சொலியாக வெளிப்பட்டது. அவனது உதவியாளன்கூட மெல்லியதாய் துணுக்குற்றான். ‘நீ என்ன பைத்தியமா? இந்த நகையைத்தான் நான் அணியக்கூடாது என்று என் கணவர் தடைபோட்டிருந்தார். உனக்குப் புரியவில்லையா! இதன் விலை… இல்லை. அதுபற்றியெல்லாம் தொலைபேசியில் பேச இயலாது! உன் மடத்தனமான பேச்சை நிறுத்து! நான் அதை அணிந்தேன் என்பதை அறிந்தாலே என்னை வீட்டைவிட்டுத் துரத்திவிடுவார்; இதில் அதைத் தொலைத்திருக்கிறேன் என்று தெரிந்தால் கொன்றே விடுவார்!’

என்ரிகோ, ‘ஒருவேளை மகிழுந்தில் இருக்கும்’ என்றதும் மின்னற்பொழுதில் அவள் அமைதியடைந்தாள்.

‘அப்படியா கருதுகிறாய்?’

‘ஆம். அப்படித்தான் இருக்கும்.’

‘நான் அதை வைத்திருந்தது உனக்கு நினைவிருக்கிறதா? எங்கோ ஓரிடத்தில் நாம் மகிழுந்தில் இருந்து கீழே இறங்கினோம். அது எங்கே?’

’எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?’ என்றான் என்ரிகோ. கடுமையான அசதிக்கிடையில், அவள் புதருக்குள் ஓட, இருவருக்கும் இடையே சிறிய சச்சரவு நடந்த அத்தருணத்தையும், நிகழ்ந்த குறிப்பிட்ட இடத்தையும் நினைவில் மீட்டெடுப்பவனாய், தன் முகத்தை உள்ளங்கையால் தடவியபோது, நிச்சயமாக ஆபரணம் அவ்விடத்தில்தான் விழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அங்கு சென்று புதர்களை விரல்கடை விரல்கடையாக அளந்து தேடி அதைக் கண்டெடுக்க வேண்டும் என்று நினைப்பதே அவனுக்குள் கடும் மனச்சோர்வை உண்டாக்கியது. அவனுக்குள் குமட்டல் எழுந்தது. ‘அஞ்சாதே. அது பெரியது என்பதால் எளிதில் கிடைத்துவிடும். மகிழுந்தைப் பார். மகிழுந்து பராமரிப்பவன் நம்பத் தகுந்தவனா?’ (மகிழுந்து அவளுடையது. பராமரிப்பு இடமும்கூட.)

‘கண்டிப்பாக நம்பலாம். லியோனி எங்களிடம் பல ஆண்டுகளாகப் பணிபுரிகிறார்.’

’அப்படியானால், உடனே அவருக்கு அழைத்துப் பார்க்கச் சொல்.’

‘அது அங்கு இல்லாவிடில்?’

‘என்னை மீண்டும் அழை. நாம் வெளியே இறங்கிய இடத்திற்குச் சென்று தேடுகிறேன்.’

’நீ செல்லம்.’

‘சரி.’

தொலைபேசியை வைத்தான். கழுத்தணி. அவன் முகம் சுழித்தான். அதன் மதிப்பென்ன என்பது கடவுளுக்கே வெளிச்சம். உம்பர்தாவின் கணவர் தம் கடனைக் கட்ட முடியாத நிலைக்கு வருகையில், இந்தச் செயல் இன்னும் அற்புதமானதாகும். ஒரு தாளில் நான்கிழைகள் கொண்ட முத்துமணி மாலையை, நுட்பமாக ஒவ்வொரு முத்தும் தனித்து தெரியும் வண்ணம் வரைந்தான். அவன் தன் விழிகளை நன்றாகத் திறந்து தேட வேண்டும். படத்தில் இருந்த முத்துகள் ஒவ்வொன்றையும் விழிகளாக – பாவையும், இமை, கருவிழி உட்பட – மாற்றி வரைந்தான். வீணடிக்க அவகாசமில்லை. அவன் சென்று அந்த நிலத்தைச் சல்லடை போட்டுத் தேடியாக வேண்டும். ஏன் உம்பர்தாவிடமிருந்து மறு அழைப்பு உடனே வரவில்லை? மகிழுந்திலேயே இருந்திருக்கும். உதவியாளனை நோக்கி, ‘நீ செய்யும் வேலையைத் தனியாகத் தொடர்ந்து செய்’ என்றான். ‘நான் மீண்டும் வெளியே செல்ல வேண்டி இருக்கிறது.’

‘ஒப்பந்ததாரரைப் பார்க்கப் போனால், அப்படியே அந்த ஆவணங்களையும் நினைவில் வைத்து…’

‘இல்லை இல்லை. நான் ஸ்ட்ராபெர்ரிக்காக, நாட்டுப்புறம் செல்கிறேன்.’ தன் பென்சிலால் கழுத்தணியையே ஒரு பெரிய ஸ்ட்ராபெரியாக மாற்றி, அதற்குக் காம்பு, புல்லிதழ் எல்லாம் வரைந்தான் என்ரிகோ. ‘இதோ பார், ஸ்ட்ராபெர்ரி.’

’எப்போது பார்த்தாலும் பெண்ணினத்தையே பின்தொடர்வதில் வல்லவர் நீங்கள்’ என்று சொல்லி இளித்தான் உதவியாளன். 

‘மோசமானவனப்பா நீ!’ என்றான் என்ரிகோ. தொலைபேசி மணியடித்தது. ‘நான் நினைத்தபடியே ஒன்றும் இல்லை. அமைதியாக இரு. நான் இப்போது செல்கிறேன். பராமரிப்பவனிடம் யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தாயா? அவனைப் பொறுத்தவரையில்… கடவுளே… அவன் பெயரென்ன…! சரி. ஆம், எனக்கு அந்த இடம் நினைவிருக்கிறது. நான் உன்னைத் தொலைபேசியில் அழைப்பேன். வருகிறேன். கலங்காதே…’ தொலைபேசியை வைத்துவிட்டு, சீழ்க்கை ஒலியெழுப்பி, மேற்சட்டையை அணிந்து, வெளியேறி தனது மோட்டார் வண்டியில் ஏறியமர்ந்தான். 

அவனுக்கு முன் நகரம் சிப்பியைப் போல, பொற்காலத்தை ஏந்திவரும் கடலைப் போலத் திறந்துகொண்டது. இளமையில் விரைந்து செல்லும் போது, குறிப்பாக ஊர்திகளில் வேகமாகப் பயணிக்கும் போது, ஒரு நகரம் உங்கள் முன் திடீரென்று முற்றிலுமாகத் திறந்துகொள்ளும். தன்னை முழுதாகக் காட்டிக்கொள்ளும். நன்கு பழகிய இடங்கள்கூட, வழமையால் நம்முன் மறைந்துவிட்ட ஒரு இடம்கூட, அப்படி விழிமுன் விரியும். சாகசத்திலிருந்து வழியும் மர்ம இன்பம் அதைச் செய்விக்கிறது. இந்தக் குறைவளர்ச்சி பெற்ற, சிடுசிடுப்பான கட்டிட வடிவமைப்பாளரிடம் எஞ்சியிருந்த ஒரேயொரு இளமை பிராயத்து பண்பு இது மட்டுமே. 

தொலைந்து போன கழுத்தணியைத் தேடிச் செல்வது, அவன் முன்பு கற்பனை செய்ததைப் போல அலுப்பை ஏற்படுத்துவதாக இல்லை, மாறாக மகிழ்ச்சியானதாக இருந்தது. ஒருவேளை அந்தப் பொருள் மீது மிகக்குறைவாகவே அவன் பற்று வைத்திருந்ததும் காரணமாக இருக்கலாம். அதைக் கண்டடைந்தால் மிக்க நன்று; இல்லாவிட்டாலும் ஒன்றும் மோசமில்லை. உம்பர்த்தாவின் பிரச்சினை, பணக்காரர்களுக்கே உரித்தானவை. பெரிய பெரிய இழப்புகள் நடந்தாலும் அவை கடுகைப் போல கருதப்படும் இடங்கள் அவை. 

என்ரிகோவுக்கு எதுதான் பொருட்டானது? உலகமே பொருட்டல்ல. இருந்தாலும் முன்பு பரதேசியின் மஞ்சமாக கனிவுடன், எங்கு நோக்கினாலும் கீறிச்சொலி, தடுமாறி விழுதல், கூரிய ஆணி என்றெல்லாம் இருந்த இந்த நகரம், அவன் விரைந்து செல்ல செல்ல, இலகுவாகவும் திண்மையாகவும் மாறி இருந்தது. எங்கு நோக்கினும் பழைய கட்டிடங்கள், புதிய கட்டிடங்கள், மலிந்த வீட்டு மனைகள் அல்லது அரச மாளிகை போன்ற அடுக்ககங்கள், கைவிடப்பட்ட ஓட்டுக்கூரைகள் அல்லது வீடுகள் கட்டுமிடத்தில் இருக்கும் சாரங்கள். இந்த நகரம் பிரச்சினைகளின் தொகுப்பாகவே முன்பு அவன் முன் விரிந்திருந்தது. பணி, பாவனை, பரபரப்பு, சமூகம், மானுட கோணம், உடைமைகள் மீதான மதிப்பு பெருக்கம்! ஆனால் இப்போது அவன் நவீன செவ்வியல் தன்மை, சுதந்திரம், இருபதாம் நூற்றாண்டைப் போன்ற ஒத்த தோற்றம் ஆகி, சுய திருப்தி உணர்வோடும் வரலாற்று முரண்பார்வையைக் கொண்டான். பழைய சுகாதாரமற்ற சேரிகள், புதிய கோபுர குடியிருப்புகள், திறன்மிகு ஆலைகள், சாளரங்களற்ற சுவர்கள் மீது வரைந்த ஓவியங்கள் என அனைத்தும் இயல்பான காட்சிகளோடு, ஒருவர் இரசிப்பதற்குத் தயாராக தரிசனம் தருபவை போல இருந்தன. 

முன்பு, அந்நகரத்தில் நடைபோட்டபடியே உயர்வர்க்கத்தினரின் கடும்குற்றங்களுக்குத் தக்க தண்டனை வழங்கியாக வேண்டும் என்று அவன் மனப்பிரகடனம் செய்த போதும், அந்நகரையே தரைமட்டமாக்கி நல்ல சமூகக் கட்டமைப்புடன் புதியதாகக் கட்டியெழுப்ப விரும்பிய போதும், ஜெரிக்கோவில் ஒலித்த கணீர் கொம்பூதி ஒலிகள் இப்போது அவன் செவிக்குள் நுழையவில்லை.  அன்றைய தினங்களில் பதாகைகள் ஏந்திச் செல்லும் பணியாளர்களின் அணிநடையின் போது, அதன்பின் நீண்ட வரிசையில் மிதிவண்டிகளை அழுத்தி காவல் நிலையத்தை நோக்கிச் செல்பவர்களுடன் என்ரிகோவும் இணைந்துகொள்வான். அந்தக் கூட்டத்தைச் சுற்றி வட்டமடிக்கும் ஒரு கற்பிதம், வெள்ளையும் பச்சையுமான வடிவ நேர்த்திகொண்ட மேகத்தைப் போல, தான் நிர்மானிக்கப் போகிற வருங்கால நகரத்தின் காட்சியை மனத்தில் நினைத்தபடி இருப்பான். 

அப்போது கலகக்காரனாக இருந்த என்ரிகோ பாட்டாளி வர்க்கத்தினருடைய ஆட்சி வந்ததும் தனக்கு நகரத்தைக் கட்டுமானம் செய்யும் வேலை கிடைக்கும் என்று காத்திருந்தான். ஆனால், பெரிய வெற்றுச் சுவர்கள் மீதும் தட்டையான கூரைகள் மீதும் என்ரிகோவிடமிருந்த வேட்கையையும் ஆர்வத்தையும் மக்கள்திரள் பிரதிபலிக்காததால் பாட்டாளி வர்க்கத்திற்கான வெற்றி மெதுவாகத்தான் வரும் போல இருந்தது. எனவே இந்த இளம் கட்டிட வடிவமைப்பாளர் அனைத்து ஆர்வக்கொடிகளும் கீழிறங்கிய கசப்பும் ஆபத்துமான அந்தப் பருவத்தில் தானே கட்டுமான வடிவமைப்பாளராகத் தலைப்பட்டான். அவனது புதுப்புது பாணிகள் மீதான வெறியுணர்வு, புதிய பணிகளைக் கண்டடையச் செய்தது: கடற்புற களியில்லங்கள் – அவர் மரியாதைக்குச் சற்றும் தகாத இரசனையற்ற கோடீஸ்வரர்களுக்காக அவற்றை வடிவமைத்துத் தரவேண்டிய நிலை. இதுவும் யுத்தம்தான்,  எதிரியைத் திசைதிருப்பி உள்ளிருந்து தாக்குவது. தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள அவன் புத்துணர்ச்சி மிக்க வடிவங்களை உருவாக்கும் வடிவமைப்பாளராக மாறினான். ‘பொருள் வாழ்வில் முன்னேற்றம்’ என்ற கணக்கை மிகத்தீவிரமாக எடுத்துக்கொண்டான்: இன்னும் மோட்டார் வண்டியில் பயணித்தபடி அவன் என்ன செய்கிறான்? இப்போதைக்கு லாபம் தரும் ஏதோவொரு பணியில் ஒட்டிக்கொள்வது மட்டுமே அவனது ஒரே கவனமாக இருந்தது. அவனது கனவு நகரம் அவன் அலுவலகத்தின் மூலையில் தூசுபடிந்து கிடக்கிறது. ஏதோ ஒரு தாளைத் தேடும்போது தட்டுப்படும் அந்தப் பழங்கனவை அவ்வப்போது அவன் மனவிழியில் பார்ப்பதுண்டு. அந்தப் பழைய உருளைத்தாள்களைக் கையில் வைத்துப் பார்க்கையில், கூரை விரிவிற்கான முதல் வரைவைப் பின்புறம் வரைந்து பார்ப்பான். 

தன் இருசக்கர மோட்டாரில் அன்று புறநகர்ப் பகுதிகளைக் கடந்து பயணித்தபோது, தனது இளமைக்கால எண்ணங்களுக்குத் திரும்பி பாட்டாளி மக்களுக்கான வீடுகளைக் கட்டும் தூசிபடிந்த கனவுகளைச் சிந்திக்காமல், பசும்புல்லைக் கண்ட மானைப் போல, புதிய கட்டுமானங்களுக்குத் தகுந்த நிலங்களின் இருப்பிடங்களை மோப்பமிட்டான். 

அன்றிரவு விடியற்காலையில் அவன் உம்பர்தாவின் மகிழுந்தில் ஏறியபோது அவர்கள் எதிர்பார்த்துச் சென்ற இடம் உண்மையிலேயே நல்ல கட்டுமானத்திற்கு உகந்த இடம்தான். அவர்கள் ஒரு விருந்தை முடித்து வந்த போது, நன்கு குடித்திருந்த அவள் வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை. தன்னை அங்கும் இங்கும் அழைத்துச் செல்லச் சொல்லி அவனை அலைக்கழித்தாள். இப்படி அவள் சொன்னதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தான் சென்று ஆய்வுசெய்ய விரும்பிய இடங்களை நோக்கி வண்டி ஓட்டினான் என்ரிகோ. இந்த விடியற்காலையில் ஆளரவமற்றிருக்கும் என்பதும் அந்த இடத்தின் தகுதி குறித்து நன்கு ஆய்வதற்கு வாய்ப்பு. தொழிற்சாலையைச் சுற்றி இருந்த அந்த நிலப்பகுதி உம்பர்த்தாவின் கணவருக்குச் சொந்தமானது. அவளுடைய உதவியால், அவன் எதிர்பார்த்திருந்த பெரிய பணியைத் தரவிருக்கும் மனிதனைச் சந்திக்க முடியும். தொழிற்சாலைக்கு அருகில் சென்றபோது ஓடிக்கொண்டிருந்த வண்டியில் இருந்து குதிக்க முயற்சி செய்து குழப்பம் விளைவித்தாள் உம்பர்தா. அவர்களுக்குள் வாதம் நிகழ்ந்தது. அவள் தான் குடித்திருந்ததைவிட அதிக குடிபோதையில் இருப்பது போல பாவனை செய்தாள். ‘என்னை இப்போது எங்கே கூட்டிச் செல்கிறாய்?’ என்று எரிந்து விழுந்தாள்.  என்ரிகோ ‘உன் கணவனிடமே மீளச் செல்கிறோம். உன்னை வைத்து சமாளிக்க முடியவில்லை. அவரது தொழிற்சாலைக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன், அவரைப் பார்த்தாக வேண்டும். எங்கு செல்கிறோம் என்பது பார்த்தால் புரியவில்லையா உனக்கு!’ என்று பதிலளித்தான். அவள் அரைகுறையாக தனக்குள் முனகியபடியே கதவைத் திறந்தாள். அவன் தடுப்பை அழுந்த மிதித்து வண்டியை நிறுத்த முயல அவள் வெளியே குதித்தாள். இப்படித்தான் அவள் தன் கழுத்தணியைத் தொலைத்தது. இப்போது அதை அவன் கண்டுபிடித்தாக வேண்டும். எளிதாகச் சொல்லியாயிற்று…

அவனிடம் புதர்களால் நிரம்பிய கைவிடப்பட்ட சரிவு நிலத்தைச் சரியாக கண்டடைந்தான். விரிந்த நிலக்காட்சி ஒட்டுமொத்தமாய் வடிவற்றிருந்த நிலையில் காலையில் அழுத்தி நிறுத்தியதால் உண்டான சக்கரத் தடங்களை வைத்தே இதுதான் அந்த இடம் என்று கண்டறிந்தான். தெளிவற்ற நிலத்தில், கச்சிதமான ஒரு பொருத்தத்தைக் கண்டறிந்தும் தன் முகத்தில் எந்த வெளிப்பாடும் இன்றி இருந்தான். அந்நிலத்தில் சில அடிகள் எடுத்து வைத்த என்ரிகோ புதர்களின் கிளைகளுக்கிடையேயும் வரி நிலத்திலும் உற்றுப் பார்த்தான். பாதத் தடங்களைப் பொருட்படுத்தாத, குப்பையால் மூடப்பட்டிருந்த, சாகச ஆர்வமூட்டும் தரிசு நிலத்தில் அவன் பாதம் பதித்த போது, குளிர்வு, அழகின்மை அல்லது பயம் போன்ற உணர்வுகளால் பின் வாங்குதல் அல்லது சுருங்கிப் போதல் அங்கும் உண்டானது. உறங்கி எழுந்ததில் இருந்து மெல்ல மெல்ல வந்து போன குமட்டல் இப்போது அவனை முழுதாக ஆட்டிப்படைத்தது. 

நிச்சயம் எதையும் கண்டுபிடிக்கப் போவதில்லை என்ற திண்ணமான முடிவுடனேயே தேடலைத் தொடர்ந்தான். ஒருவேளை அவன் முன்பே சரியான படிநிலைகள் கொண்ட வழிமுறையைத் தேர்வு செய்திருக்க வேண்டும். புதர்களைப் பகுதிகளாக வகுத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக இஞ்ச் இஞ்சாக தேடி இருக்கவேண்டும். ஆனால் இந்த ஒட்டுமொத்த பணியே அர்த்தமற்றதாகவும் பலனளிக்கப் போவதில்லை என்றும் தோன்றியது. எனவே, என்ரிகோ தோன்றிய இடத்தில் மேலோட்டமாகப் புதர்களை நன்றாக அசைத்துக்கூட பார்க்காமல் தேடினான். நிமிர்ந்த போது எதிரில் ஒரு மனிதனைக் கண்டான். 

அவன் தன் கைகளைக் கால்சட்டைப் பையில் நுழைத்து, வயலின் நடுவே கால்மூட்டுவரை புதர்களால் மறைந்தபடி நின்றான். மெளனமாக அவன் அங்கே பதுங்கி வந்திருக்க வேண்டும். எங்கிருந்து வந்திருப்பான் என்று என்ரிகோவால் சொல்லியிருக்க முடியாது. அவன் மெலிந்த தேகத்துடனும் நெருப்புக்கோழியைப் போல் உயரமாகவும் இருந்தான். பழைய இராணுவத் தொப்பியைத் தன் நெற்றி மறைக்கும் அளவு முன்னால் இழுத்துவிட்டிருந்தான். அவன் தலையில் தொங்கும் தொப்பியின் நீள்பட்டைகள் வனநாயின் காதுகள் காற்றில் படபடப்பதைப் போல தொங்கி ஆடின. மேற்சட்டையும் இராணுவ சீருடையாகவே இருந்தது. தோள்பட்டையில் கிழிந்திருந்தது. ஏதோவொரு புள்ளியில் என்ரிகோ தானாகத் தன்னைப் பார்க்கக்கூடும் என்று காத்திருப்பவன் போல நிலைத்து நின்றான். 

உண்மையில் அவன் சில மணி நேரங்களாகவே, என்ரிகோ அங்கு வந்து தேடவேண்டும் என்று உணர்வதற்கு முன்பிலிருந்தே, அங்கேயே காத்திருக்கிறான். வேலையில்லாமல் இருந்த ஃபியோரென்ஸோதான் அவன். இரண்டு முதியவர்கள் தனக்குக் கிடைக்க வேண்டிய பொக்கிஷத்தைக் கைப்பற்றிய காட்சியைக் கண்டு முதல் முறை ஏமாற்றமடைந்தவன், இன்னும் பொறுமை காத்தால் இந்த விசயம் முற்றிலும் நம் கையை விட்டுச் செல்லாமல் இருக்கும் என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். இந்த ஆட்டம் எப்படியும் இன்னும் முடிந்துவிடவில்லை. கழுத்தணி உண்மையில் விலைமதிப்பற்றதாக இருக்குமாயின், சீக்கிரமாகவோ தாமதமாகவோ அதைத் தொலைத்த நபர் அதைத் தேடி நிச்சயம் மீண்டும் வருவார். அப்போது அந்தப் பொக்கிஷத்தின் ஒரு பகுதியையேனும் நாம் அடைவதற்கான வாய்ப்புகள் மிச்சமிருக்கும் என்று நம்பினான். 

அசைவின்றி நிற்பவனைக் கண்ட கட்டிட வடிவமைப்பாளர், தன்னுள் எச்சரிக்கை உணர்வை மீண்டும் எழுப்பி, தேடுவதை நிறுத்தி, சிகரெட்டைப் பற்ற வைத்தான். கட்டிடம் பற்றிய எண்ணத்தில் மீண்டும் ஆர்வமாகச் சிந்தித்தான். என்ரிகோ போன்றவர்கள் உலகையே தலைகீழாகத் திருப்பிப் போடும் சிந்தனைகள், செயல்முறைகள் ஆகியவற்றிற்கு அடித்தளம் அமைப்பவர்களாக தாம் இருப்போம் என்று நினைத்தாலும், அதற்குரிய வாய்ப்பும் வசதியும் கிடைக்காமல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நபரிடமும் தம் உறவுகளை மாற்றி இடம்பெயர்ந்து வருகிறார்கள். இயற்கையின் அளப்பரிய விரிவின் முன்னும் பொருட்களின் உடைமை பாதுகாக்கப்படும் உலகிலும் மேலோர் கீழோர் என்னும் வரிசை நிலைநிறுத்தபட்ட சமூகத்திலும் தான் ஒரு திசை தொலைத்த பறவை என்று எண்ணுகின்றனர். தனக்கு எதிரியாக உருவாகக்கூடிய ஒருவனையோ அல்லது நண்பனையோ கையாண்டு அதிலிருந்து இலாபம் பெரும் சந்தர்ப்பங்களில் மட்டுமே இத்தகைய சமநிலைக்கு மீள்கின்றனர். இதனாலேயே தனது அனைத்து திட்டங்களிலும் ஒன்றைக்கூட செயல்படுத்த முடியாமல், எதையும் தனக்கென்றோ பிறருக்காகவோ அவன் கட்டியிருக்கவே இல்லை. 

ஃபியோரென்ஸோவைப் பார்த்த உடன், அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்துகொள்ளும் பொருட்டு அவனை நோக்கி நேர்க்கோட்டில் தேடுவதைப் போல மெல்ல முன்னகர்ந்த என்ரிகோ, அவனுக்கு மிக அருகே சென்றுவிடாமல் இருந்துகொண்டான். ஓரிரு நொடிகளில் என்ரிகோவின் பாதையில் குறுக்கிடும் விதமாக அவனும் முன்னகர்ந்து வந்தான். 

மூன்றடி இடைவெளியில் இருவரும் நின்றனர். வேலையற்ற ஃபியோரென்ஸோ மெலிந்த, பறவை போன்ற முகத்தில் நிறைய புள்ளிகளும் ஒழுங்கற்ற தாடியும் இருந்தன. அவன் தான் முதலில் பேசினான்.

‘எதையோ தேடுகிறீர்களா?” என்றான்.

தன் உதட்டில் இருந்த சிகரெட்டை உயர்த்தினான். ஃபியோரென்ஸோ குளிர்ந்த காற்றில் அடர்ந்த புகையை விடுவது போன்ற பாவனையில் தன் வாயிலிருந்து காற்றை ஊதினான். 

என்ரிகோ, தேடல் நடந்த இடத்தைச் சுட்டி ‘நான் பார்த்து…’ என்று மழுப்பினான். மற்றவன் தன் நிலையை வெளிப்படுத்த காத்திருந்தான். ‘ஒருவேளை அவன் கழுத்தணியை எடுத்திருந்தால், அதன் மதிப்பு என்னவாக இருக்கும் என்று அறிய விரும்புவான்’ என்று கருதினான்.

‘இங்குதான் அதைத் தொலைத்தீர்களா?’ என்று கேட்டான் ஃபியோரென்ஸோ.

‘என்ன?’ சடுதியில் வினவினான் என்ரிகோ.

கொஞ்சம் காத்திருந்து ‘நீங்கள் தேடுவதை’ என்றான், முன்னிற்பவன். 

’நான் எதையோ தொலைத்துவிட்டுத்தான் தேடுகிறேன் என்று உனக்கு எப்படித் தெரியும்?’ என்று விரைவாகக் கேட்டான் என்ரிகோ. அதற்கு முந்தைய தருணத்தில் இதுபோன்று கந்தலாடை அணிந்தவனைக் காவல்துறையினர் எப்படி கடுமையாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தியும் விசாரிப்பார்களோ அப்படிக் கேட்பதா, இல்லை பணிவுடனும் முறைமையுடனும் நவநாகரீக சமத்துவத் தொனியில் கேட்பதா என்று குழம்பினான். இறுதியில் பிந்தைய முறையே சரியானது, அதில்தான் அழுத்தமும் பேரத்திற்குத் தயாராக இருப்பதன் அறிவிப்பும் சரியான அளவில் இருக்கும் என்று அந்த விதத்தையே தேர்ந்தெடுத்தான்.

கொஞ்சம் சிந்தித்து நின்ற ஃபியோரென்ஸோ மீண்டும் ஒருமுறை காற்றால் புகையூதிவிட்டு திரும்பி அங்கிருந்து விலகத் தயாரானான்.

‘அவன் கை மேலோங்கி இருப்பதாக நினைக்கிறான்’ என்று என்ரிகோ கருதினான். ‘உண்மையிலேயே அவன் கண்டெடுத்திருப்பானா?’ சந்தேகமே இல்லை. ஆயினும் தன்னை வலுவான இடத்தில் வைத்துக்கொண்டான் அந்நியன். என்ரிகோதான் இனி அடுத்த நகர்வை மேற்கொண்டாக வேண்டும். ‘ஏய்!’ என்று அழைத்து தன்னிடம் இருந்த சிகரெட் பெட்டியை நீட்டினான். அந்த மனிதன் திரும்பினான். ‘வேண்டுமா?’ என்று நீட்டியபடி அசையாமல் நின்றான் என்ரிகோ. சில அடிகள் முன்னகர்ந்து வந்த அம்மனிதன் ஒரு சிகரெட்டை தன் விரல்களால் எடுத்தபோது அது நன்றிகூறலாகவும் இருக்கலாம். பெட்டியைத் தன் சட்டைப்பையில் வைத்துவிட்டு, தீப்பெட்டியை எடுத்துக் கொளுத்த முயன்று, மெல்ல மற்றவனது சிகரெட்டைப் பற்ற வைத்தான் என்ரிகோ. 

‘முதலில் நீ என்ன தேடுகிறாய் என்று சொல், பிறகு அதற்கு நான் பதில் சொல்கிறேன்’ என்றான்.

சாலையோரத்தில் இருந்த கூடையைக் காட்டி ‘புல்’ என்று பதிலளித்தான்.

‘முயல்களுக்காகவா?’

இருவரும் சரிவில் ஏறி சாலைக்கு வந்தனர். அம்மனிதன் கூடையை எடுத்தான். ‘எங்களுக்காக, நாங்கள் சாப்பிடுவதற்காக’ என்று சொல்லிவிட்டு சாலையில் நடக்கத் தொடங்கினான். என்ரிகோ தன் மோட்டார் வாகனத்தில் ஏறி அவனருகே மெல்ல ஓட்டி வந்தான். 

‘அப்படியானால் இது உன் எல்லைப்பகுதி, சரியா? உனக்குத் தெரியாமல் இங்கு ஒரு இலைகூட உதிர்ந்திட முடியாது’ என்ற பொருளில் ‘அப்படியானால் நாள்தோறும் புல் பிடுங்குவதற்கு இங்கு நீ வருகிறாய் அல்லவா?’ என்று சொன்னான் என்ரிகோ. 

அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்டவன் போல முந்தினான். ‘இது ஒரு பொதுநிலம்; அனைவரும் வந்து செல்வார்கள்.’

என்ரிகோவின் வலைவீச்சை அவன் எளிதில் புரிந்துகொள்கிறான்; கழுத்தணியைக் கண்டெடுத்தானோ இல்லையோ நிச்சயம் அதுபற்றி அவன் சொல்லப் போவதில்லை. என்ரிகோ தன்னை வெளிப்படுத்த முடிவெடுத்தான்: ‘இன்று காலை ஒருவர் இந்த இடத்தில் ஒரு பொருளைத் தொலைத்துவிட்டார்.’ வண்டியை நிறுத்திவிட்டுச் சொன்னான். ’நீங்கள் அதைக் கண்டெடுத்தீர்களா? என்று கேட்டு, ‘என்ன?’ என்று ஃபியோரென்ஸோ கேட்கட்டும் என்று சற்று நேரம் பொறுத்தான். அவனும் அவ்வாறே கேட்டான்; ஆனால் கேட்பதற்கு முன் அதிக நேரம் சிந்தப்பதற்கு எடுத்துக்கொண்டான். 

‘ஒரு கழுத்தணி’ என்று அது அத்தனை முக்கியமானதில்லை என்று குறிப்பது போன்ற ஒரு சுழித்த புன்னகையோடு சொன்னான் என்ரிகோ; அதே சமயம் தன் கைகளிடையே நீண்டிருக்கும் ஒரு மாலை, நாடா அல்லது குழந்தையின் சிறிய சங்கிலியைச் சைகையால் செய்து காட்டினான். ’அது எங்களுக்கு உணர்வுப்பூர்வமானது, என்னிடம் திருப்பித் தந்துவிடுங்கள், அதற்கேற்ற வெகுமதியைத் தருகிறேன்’ என்று சொல்லி தன் பணப்பையை வெளியே எடுத்தான். 

கையை நீட்டிய ஃபியோரென்ஸோ இப்படிச் சொல்ல நினைத்தான்: ‘என்னிடம் அது இல்லை.’ ஆனால் கவனமாக அப்படிச் சொல்வதைத் தவிர்த்துவிட்டு, ‘இத்தகைய இடத்தில் அதைத் தேடிக் கண்டுபிடிப்பது கடுமையான வேலை. பல நாட்களாகும். இது பெரிய நிலம். ஆனால் நாம் தேடத் தொடங்கினால்…’

என்ரிகோ தன் வண்டியின் பிடிப்புகளை மீண்டும் பற்றினான். ‘நீ ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டதாக அல்லவா நினைத்தேன்? மிகக் கொடுமை. கவலை வேண்டாம். என்னைவிட உன் மீதுதான் இப்போது கவலைகொள்கிறேன்.’

தன் சிகரெட் துண்டை தூக்கி எறிந்தான் வேலையில்லாதவன். ‘என் பெயர் ஃபியோரென்ஸோ. நாம் ஒரு ஒப்பந்தத்திற்கு வரலாம்’ என்றான். 

‘நான் ஒரு கட்டிட வடிவமைப்பாளன். பெயர் என்ரிகோ ப்ரி. கண்டிப்பாக அது பற்றி பேசலாம் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் நிறைய தொலைந்தும் மீண்டும் கிடைத்தபடியுமே இருக்கின்றன. என்ன சற்று தாமதமாகக் கிடைக்கும் அவ்வளவுதான்.’

வண்டியை நின்ற இடத்திலேயே விருட்டென்று முடுக்கி மெல்ல நகர்ந்து வட்டமிடுவதைப் போலச் செய்தான். அப்போது அவனது கழுத்தைப் பிடித்து இழுத்துவிடலாமா என்று எண்ணி அதைச் செய்தானோ அல்லது மீண்டும் அவனது முகத்தில் தெரியும் பாவங்களைக் கண்டுபிடிக்கச் செய்தானோ தெரியாது, ஆனால் ஃபியோரென்ஸோ எந்தவித மறுவினையும் செய்யாமல் அப்படியே நிலைத்து நின்றான். ஃபியோரென்ஸோ தன் சிறிய பையில் அந்தப் பெரிய நான்கிழை கழுத்தணியை மறைத்து வைத்திருக்கச் சாத்தியமே இல்லை என்பதை அறிந்த என்ரிகோ, ஒருவேளை அவனுக்குக் கழுத்தணி பற்றி தெரிந்திருந்தால் அதை எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என நினைத்தான். 

தனது மரியாதையான தொனியைக் கைவிட்டவனாய், ‘சரி, எத்தனை காலத்திற்கு அந்த நிலத்தைக் கிளறிக்கொண்டிருக்கத் திட்டமிட்டிருக்கிறாய்?’ என்றான்.

’அது இன்னும் அங்குதான் கிடக்கிறது என்று யார் சொன்னார்கள்?’ என்றான் ஃபியோரென்ஸோ.

‘அது அங்கில்லை எனில் உன் வீட்டில் இருக்கும்.’

‘அதுதான் என் வீடு’ என்று சாலையில் இருந்து தொலைவில் இருந்த ஓரிடத்தைச் சுட்டி, ‘என்னுடன் வாருங்களேன்’ என்று அழைத்தான்.

ஊரின் ஒதுக்குப்புறத்தில் மூட்டமாக இருந்த பசும் நிலத்தில் ஒன்றுக்கொன்று முதுகுகாட்டி பரவலாகச் சிதறி இருந்த அடுக்கங்களோடு ஃபியோரென்ஸோவின் எல்லை முடிந்தது. எல்லையின் ஓரத்தில் அவன் வீடு இருந்தது. பலவிதமான அரசியல் வரலாற்று ஏற்ற இறக்கங்கள் ஒன்றுகூடி அதை உருவாக்கி இருக்கின்றன. பாதி இருந்த செங்கல் சுவர், மீதி சிதைந்திருந்தது. அவை பழைய இராணுவக் கொட்டிலாக இருந்தன. பிற்காலத்தில் குதிரைப்படையின் தேவை குறைந்தபோது மூடப்பட்டது. பிறகு பயிற்சிப் படையினர் அங்கு வந்து பொதுக்கழிப்பிடமாகவும் கரிக்கொட்டைகளால் கிறுக்குவதற்கான சுவராகவும் அவை மாறிப்போயின. உள்நாட்டு யுத்தத்தின் வடுவாக அங்கிருந்த பழைய சிறைகளை நினைவூட்டும் வண்ணம் சாளரங்கள் மூடியிருந்தன. கண்சிமிட்டுவதற்குள் இதற்கு முன்பிருந்த பயிற்சிப் படையினர் கிளப்பிய தீயினால் அந்த இடம் அழிவைச் சந்தித்தது. தரையும் குழாய்களும் முதலில் காயப்பட்டவர்களுக்காகவும் பின்னர் அகதிகளுக்காகவும் கட்டப்பட்டவை. பிறகு கடுமையான நீள்குளிர்காலத்தின் போது தீவிறகுக்காகவும், கூரை வேயவும் செங்கற்கள் உள்பட அனைத்தும் அங்கிருந்து திருடப்பட்டு இடம் சிதைக்கப்பட்டது. இதற்கு முந்தைய இடத்தில் இருந்து துரத்தப்பட்டதும் ஃபியோரென்ஸோ தன் குடும்பத்தோடு பெட்டி படுக்கை சகிதம் இங்கு வந்து சேர்ந்தான். அருகில் இருந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட – ஏற்கனவே ஏதோவொரு வெடியினால் சிதறியிருந்த – இரும்புத் திரையின் ஒரு பகுதியை எடுத்து திறந்திருந்த கூரையை மூடினான். இப்படித்தான் ஃபியோரென்ஸோ, தனது உயிர்வாழும் நான்கு பிள்ளைகளுடனும் ஐந்தாவது பிள்ளையை எப்படியாவது பிறந்ததும் அதுவும் உயிர்வாழும் என்ற நம்பிக்கையுடன், தன் வயிற்றில் சுமந்தபடி இருந்த தன் மனைவி ஐனெஸுடனும் தனக்கென – உறவினரின் படங்களைத் தொங்கவிடவும் வீட்டுச் செலவினங்களின், மானியங்களின் தாள்களை ஒட்டி வைக்கவும் நான்கு சுவர்கள் கொண்ட – ஒரு இல்லத்தைப் புதிதாக உருவாக்கி இருந்தான்.

அவர்கள் அங்கு தங்கியதிலிருந்து அந்த இல்லத்தின் தோற்றம் மேம்பட்டிருப்பதாகச் சொல்ல கிஞ்சிற்றும் வாய்ப்பில்லை. ஏனெனில் ஃபியோரென்ஸோ ஒரு தனித்து வாழும் தொழிலதிபர் அல்லது முன்னோடி தனக்கு நாகரீகம் வழங்கிய பரிசுகளில் இருந்து அறிவைப் பெற்று ஒரு இல்லத்தை மீட்டெடுத்து மறுஅமைப்பு செய்வதைப் போல் அல்லாமல் ஆதிமனிதனின் குகையில் இருப்பதைப் போன்ற வாழ்க்கை முறையையே தேர்ந்தெடுத்திருந்தான். நாகரீக வாழ்வின் மீது ஃபியோரென்ஸோவின் இதயத்திற்கு மோகம் இல்லாமல் இல்லை. ஆனால் நாகரீகம் அவனிடம் விரோதப் போக்கையே கடைபிடித்திருக்கிறது. அது அவனுக்குத் தடைசெய்யப்பட்ட பகுதியாகவே இருந்து வருகிறது. ஏற்கனவே அரையும் குறையுமாக கற்று வைத்திருந்த ஈயம் பூசும் திறமைகளையும் வேலை போனதும் மறந்த பிறகு, அவனது கைகள் சோம்பலாகின. அதன் பிறகு அவன் செய்த வேலையிலிருந்தும் துரத்தப்பட்டான். இப்படி நாளொன்றுக்கு வேறு வேறு வாழ்க்கைக்குத் தன் குடும்பத்தோடு அலைக்கழிக்கப்பட்டு வந்த அவன் மெல்ல தேவையெனில் அதைப் போராடி உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு கிடைத்ததைப் பொறுக்கி சேகரித்தே வாழ வேண்டும் என்பதைத் தன் நோக்கமாக்கினான்.

இப்போது ஃபியோரென்ஸோ, வன வாழ்வைச் சுரண்டி, அங்கிருக்கும் கனிகளைப் பிடுங்கி தான் எப்படியோ வாழ்ந்தால் போதும் என்று ஒரு வேட்டையாடி கருதுவதைப் போல், தன்னை உலகின் ஒரு பகுதியாகக் காணாமல் மழைக்கும் வெயிலுக்கும் பாதுகாப்பாக ஒரு உறைவிடம் மட்டுமே தனக்கான தேவை என்று கருதினான். ஃபியோரென்ஸோவுக்கு இதுவரை நகரின் செல்வம் என்பது, மாவட்டத்தின் சந்தைகளில்  கடைகள் மூடிய பிறகு குப்பையில் கிடக்கும் காய்கறிகளின் எச்சங்களும் புறநகர் சாலையோரத்தில் விளையும் உண்ணத்தகுந்த புற்களும் துண்டுத்துண்டாக வெட்டி எரிப்பதற்கு உதவும் பொது இடங்களில் இருக்கும் பலகைகளும் இரவுகளில் அந்நியரது இடத்தில் உலாவி ஒருபோதும் மீளத்திரும்பாத பூனைகளும்தான். கைவிடப்பட்ட, பாதி புதைந்த, கழிவிடமான இடங்களும் நொய்ந்து போன காலணிகள், சிகரெட் துண்டுகள், நெளிந்த குடைக்கம்பிகள் என ஒட்டுமொத்த நகரமே அவனது நன்மைக்காகத்தான் இருந்தது. இந்தக் குப்பைகளையும் பயன்படுத்தி முன்வைத்து தேவை, வழங்கல் என்று இலாபம் பேசும் சந்தைகள்கூட இருந்தன. இதைப் பதுக்கி வைத்து செயற்கையாக விலையை உருவாக்குபவர்களும் உண்டு. எப்போதாவது கையில் முற்றிலும் பணவோட்டம் இல்லாத போது ஃபியோரென்ஸோ காலிக் குடுவைகள், கந்தல் துணி என சிலவற்றை அதில் விற்பதுண்டு. கடுமையாக சலிப்புற வைக்கும், அதே சமயம், அதிக இலாபத்தையும் தரும் வேலை ஒன்று உண்டு; தொழிற்சாலைகளின் கீழ்ப்பகுதியில் சரிவான பள்ளங்களில் கிடைக்கும் இரும்புத் துண்டங்களை எடுத்து வந்து விற்பது. சில நேரங்களில் நாளொன்றுக்குக் கிலோ கணக்கில் தோண்டி எடுத்து வருபவர்கள் உண்டு. ஒரு கிலோவுக்கு முந்நூறு லிராவரை விற்பதுண்டு. காலநிலைக்கும் அறுவடைக்கும் இந்நகரில் பருவங்கள் உண்டு. தேர்தலுக்குப் பின் சுவர்களில் இருந்து சுவரொட்டிகளைக் கத்தியை வைத்து சுரண்டி நீக்குவது, (குழந்தைகளின் உதவியோடு) அந்த வண்ணத்தாள்களைக் கோணியில் அடைத்து எடைக்கு எடுப்பவர்களிடம் சென்று அவர்களது நொய்மையான துலாக்கோலில் எடைபோட்டு விற்பது போன்ற பணிகளையும் அவன் செய்வதுண்டு.  

இதுபோன்ற பல விசயங்களையும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கையில் தன்னுடன் இரண்டு மூத்த மகன்களையும் துணைக்கு அழைத்துச் செல்வான் ஃபியோரென்ஸோ. இதைத் தவிர கனவிலும்கூட வேறு வாழ்வை நினைத்துப் பார்த்திருக்காத அவர்கள் வெறிகொண்டு ஓடுவதும் நகரின் வெளிப்புறங்களைப் பற்றி வேட்கையுடனும் ஆர்வத்துடனும் எலிகளுடன் தம் உணவைப் பகிர்ந்து உறவு போல விளையாடுவதுமாக இருந்தனர். ஐனெஸோ ஒரு பெண் சிங்கத்தைப் போன்ற மனநிலையை வளர்த்துக்கொண்டாள். அவள் தன் கடைசி பிள்ளையைப் பெற்ற போது வசிப்பிடத்தைக் கழுவியதற்குப் பின் ஒருபோதும் அந்தக் குகையை விட்டு நகரவில்லை, தினசரி வழக்கமான வீடு தூய்மையாக்கம் என்பதை அவள் முற்றிலும் மறந்திருந்தாள். வீட்டுக்காரரும் மகன்களும் அன்று, என்ன கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பேராசையுடன் விரிவிழிகளுடன் துள்ளியபடி இருப்பாள். சில நேரங்களில் அவர்கள் கொண்டு வரும் சிலவற்றைத் தைத்தோ அடுக்கியோ அதை விற்கக்கூடிய பொருட்களாக மாற்ற உதவுவாள். கிழிந்த காலணியின் மேற்புறத்தைத் தைத்து செருப்பு விற்பவனிடம் விற்பது அல்லது சிகரெட் துண்டுகளில் இருக்கும் புகையிலைத் தூளை எடுத்து சேகரிப்பது போன்ற பணிகள். பாழாய்ப் போன வாழ்க்கை வாழ்ந்தாலும் அவள் உட்கார்ந்தே உடல் பெருத்து, அமைதியானவளாகி இருந்தாள். வெளியுலகில் இருக்கும் உடைகள், சினிமா போன்றவை அவளுக்குத் தேவைப்படுவதே இல்லை; அவை முற்றிலும் அவள் மனத்தில் பொருளிழந்துவிட்டன; புரிந்துகொள்ள முடியாத புதிர்களாக மாறிவிட்டன. ஒவ்வொரு நாளாக அவள் தூசு படிந்த தன் திருமணக்கோல புகைப்படத்தைத் துடைக்கும் போதும் அதில் இருப்பது அவள்தானா அல்லது அவளுடைய பாட்டியா என்கிற சந்தேகம் எழுவதுண்டு. அந்தப் புகைப்படத்தில் வெண்ணிற ஆடையும் முக்காடும் அணிந்து ஃபியோரென்ஸோவின் அருகில் நிற்பாள்.  கீழ்வாதம் வந்த பிறகு, வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாள்முழுவதும் படுத்தே கிடந்தாள். தன் இடிந்துவிழப் போகும் வீட்டில், குழந்தையின் அருகே நல்ல பகலில் படுத்தபடியே அடர்மூட்ட வானத்தைப் பார்த்து, பழைய டாங்கோ பாடலைப் பாடினாள். இப்போதுதான் என்ரிகோ அந்தச் சிறிய குடிசையை நெருங்கி வந்தான்; அப்போது அவள் பாடிய பாடலைக் கேட்டான்; கேட்டதைவிட குறைவாகவே புரிந்துகொண்டான். 

கூரிய அவதானிப்புடன், கூரையில் வளைத்துப் பொருத்தப்பட்ட தட்டியையும், ஒழுங்கற்ற கோணங்களில் தீயினால் சுடப்பட்டிருந்த சுவர்களையும் கண்டான். கடற்புற களியில்லங்களில் ஓர் பண்புபிசகுகூட இருக்காது. அவன் அதை மனத்தில் இருத்தியாக வேண்டும். நகர வடிவமைப்பு தொடர்பான ஒரு ஆவணத்தில் இருந்த ஒரு பதம், அவன் நினைவில் எழுந்தது. ஒரு கச்சிதமான மாதிரி வீட்டிலிருந்து நம்முடைய சாகசத்தையும் பயணத்தையும் தொடங்குவதைவிட அரைக்குடிசையில் இருந்து தொடங்குவதே மேலானது. 

*

ஆங்கில மூலம்: The Queen’s Necklace, Italo Calvino, Penguin Publications (15 February, 2011)

1 comment

Kasturi G November 18, 2021 - 8:30 pm

Beautiful story , so nicely translated introducing the celebrated Italian novelist work to laymen readers in Tamizh language
Thanks

Comments are closed.