“சர்ஜரி முடிஞ்சு ரெண்டு நாள்தான ஆகுது? அந்த ஷாக் இருக்கும். மெல்ல மெல்ல மீண்டு வந்துருவாரு.” கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டிலிருந்து கண்களை எடுக்காமல் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எங்களின் பதற்றம் அவருக்குப் புரியவில்லை. மற்ற நோயாளிகளைப் போல இல்லை என் முதலாளியின் நிலை.
நான் நிலைமையை விளக்க முயன்றேன்.
“இல்ல டாக்டர். வலியில் எதாவது முனங்குனாக்கூட பரவாயில்லை. அவர்கிட்ட இருந்து சத்தமே வரலை. முதலாளி எப்பவுமே அப்படித்தான். கடையில இருக்கும் போதுகூட முகத்துல பெருசா காமிச்சுக்க மாட்டாரு. ஒரு தடவை சங்கரன்கோவில் போன லாரிலோடு மொத்தமா கவுந்தப்பக்கூட ஒன்னும் அலட்டிக்காம அன்னிக்கு சாயந்திரம் போகவேண்டிய கல்யாணத்துக்கு கிளம்பிப் போயிட்டாரு. ஆனா இது கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இதோ பக்கத்துல இருக்குற முதலாளியம்மாகிட்ட கேட்டுப் பாருங்க. நேத்து ராத்திரி வலியில அவரு உடம்பு மூங்கில் தடியாட்டம் விரைச்சி நின்னுருக்கு. நெத்தி நரம்பு புடைச்சு நிக்க மனுஷன் மூடிய கண்ணோட துளி சத்தம் வெளிவராம கிடந்திருக்கிறார். தாடை எலும்புகள் வலியில அசைய பற்களோட நறநறப்பு சத்தம் கேட்டுத்தான் அம்மா முழிச்சுப் பாத்துருக்காங்க. மறுபடியும் கண்ணு தெறந்து பாக்க பத்து நிமிஷம் ஆயிருக்கு. அவ்வளவு நேரமும் கண்ணீர் வழிஞ்சு காதோரம் சொட்ட அப்படியே கிடக்குறாரு. அம்மா காலைல சொன்ன உடனே பொறுக்க முடியாம உங்களைப் பாக்க வந்துட்டோம்.”
நான் சொல்லச் சொல்ல அவர் முகம் மெல்ல சுருக்கம் கொண்டு கூர்மையடைந்தது. மடிப்புகளாலான கழுத்தில் வளர்ந்திருந்த மூன்று நாள் முள்தாடி அவர் எச்சில் முழுங்கும் போது மெல்ல அசைந்து அறை வெளிச்சத்தில் ஒருகணம் மின்னியது. அவருக்கு உணர்த்தி விட்டோம் என நினைத்து கொஞ்சம் இலகுவானேன்.
“ஏன் அப்படி இருக்குறார்னு நினைக்கிறீங்க? அவருக்கு இருந்த அதிர்ஷ்டம் சாதாரணமானது இல்ல. போன மாசம் சுய நினைவு இல்லாம கொண்டுவந்தீங்க. உண்மைய சொல்லணும்னா அப்ப பரிசோதிச்சு பாத்தப்போ எனக்கு பெருசா நம்பிக்கை இல்லை. லிவர் சிரோஸிஸோட அட்வான்ஸ்டு ஸ்டேஜ். குடிச்சு குடிச்சு மொத்த லிவரும் அழுகிப் போயிருந்தது. ஆனா ரெண்டு வாரத்துல சரியான டோனர் கிடைச்சு இந்த வயசுலையும் பெரிய சிக்கலில்லாம சர்ஜரி முடிஞ்சது பெரிய அதிசயம்னே சொல்லலாம்.”
நான் சிறிது நேரம் மௌனமாக இருந்தேன். முதலாளியம்மா ஏதாவது சொல்வார்கள் என நினைத்தேன். அவர்களின் அழுது வீங்கிய கண்கள் மேஜையில் நிலைத்திருந்தன. அருகிலிருந்த சுஜியும் வாய் திறக்கவில்லை. நான் மீண்டும் டாக்டரிடம், “நாங்களும் அப்படித்தான் நினைச்சோம் டாக்டர். கிட்டத்தட்ட செத்துப் பிழைச்சிருக்கிறார். அப்போ நான் என் பொண்ணு கல்யாண விஷயமா சோழவந்தான் வரை போயிருந்தேன். ரெண்டு நாளா வீட்டுக்கு வரலைன்னு முதலாளியம்மா போன் பண்ணதும் உடனே கிளம்பி வந்தேன். அவரு எங்க இருப்பாருன்னு எனக்கு தெரியும். கடந்த ஒரு வருஷமா அவரோட ஜீவிதமே அந்த பண்ணை வீட்டுலதான். போன சுவிட்ச் ஆப் பண்ணிட்டு நாளெல்லாம் அங்க தனியா குடிச்சுட்டே இருப்பாரு. இந்த தடவை அவரிடம் கோபமாவே சொல்லிடணும்னு போனேன். அவரு அப்பா காலத்துல இருந்து வேலையில இருக்கேன். மூத்த அண்ணன் மாதிரி எனக்கு அவருகிட்ட உரிமை இருக்கு. அவரு அப்பா சாதாரணமா இந்த சொத்தை சேர்க்கலை. அப்பா சேர்த்த அஞ்ச பத்தாக்குனாரு இவரு. இந்த பண்ணை வீட்டையும் ரொம்ப ஆசையாக் கட்டுனாரு. கதவைத் திறந்து உள்ளே போனப்போ பெரிய ஹாலின் ஓரத்துல பொதி மூட்டையாக் கிடந்தார். அப்பவே எனக்கு ஏதோ பெருசா பிரச்சினைன்னு புரிஞ்சு போச்சு. உடனே இங்க மதுரைக்கு கொண்டு வந்துட்டோம்.
“இங்க சேர்த்து ரெண்டு நாள் கழிச்சுதான் அவரைப் பாக்குறேன். கண்ணுல சுத்தமா ஜீவன் இல்ல. எனக்கு ஆடிப்போச்சு. இப்போ சர்ஜரி முடிஞ்சு அவரு நல்லபடியா வெளிய வந்ததும்தான் அந்த முகத்துல கொஞ்சம் உயிர்களை வந்திருக்கு. ஆனா இப்போ இவரு இப்படி இருக்கிறத பாத்தா பயமா இருக்கு. பாறை மாதிரி வலியெல்லாம் உள்ளயே வெச்சுக்கிறார். மீண்டும் கிடைச்ச வாழ்க்கையை உயிராசையில கெட்டியாப் பிடிச்சுக்குவாருன்னுதான் நினைச்சோம். ஆனா இப்போ கொஞ்சம் பயமா இருக்கு.” அதுவரை மனதுக்குள் நிமிண்டிக்கொண்டிருந்ததை வெளிப்படையாய் சொன்னதும் அந்த உணர்வு என்னை ஆக்கிரமித்துக்கொண்டது. பயத்தில் என் உடல் மெல்ல நடுங்கியது.
“அவரை சின்னக் குழந்தையா இருந்ததுல இருந்து கையில எடுத்து வளத்துருக்கேன். கையில் ஒன்னுமில்லாம சந்தையில வேலையாளா சேந்தாரு அவங்க அப்பா. பத்து வருஷத்துல தனக்குன்னு ஒரு மண்டி உருவாக்கி தொழில ஆரம்பிச்சாரு. கணக்காளா சேந்து இதோட நாப்பத்தஞ்சு வருஷமாகுது. அவரு கணக்க நம்மால புரிஞ்சுக்கவே முடியாது. காய்கறி சரக்குகள அவரு தொடறதுகூட இல்ல. வாழைப் பூட்டா இருந்தாலும் சரி, பல்லாரி மூடையா இருந்தாலும் சரி, ஒரு பார்வைதான், மறுபார்வை இல்லாம ஏலத்தை எடுத்துருவாரு. ஒருவாட்டிகூட அவரு கணக்கு பிசகுனது இல்லை. அத்தனை சரக்குகளும் முதல் தரமா இருக்கும். அவரோட பையன் இவரு. எப்பவாவது அப்பா பேச்சு வர்றப்போ சொல்லுவாரு, “அந்தக் கணக்கு எங்க பரம்பரை சொத்தாக்கும் முத்தையா. அணிலுக்கு ராமர் போட்ட மூணு கோடு மாதிரி. இருநூறு வருஷமா மண்ண உழுது உறவாடி வெளைஞ்சத தொட்டு வெள்ளாமை பண்ண நினைப்பா அது உள்ளுக்குள்ள ஊறியிருக்கு. அவ்வளவு சீக்கிரம் விட்டுப்போயிருமா? என் அப்பாவோட தாத்தா காலத்துல எம்பது ஏக்கரா வயல்மடி இருந்தது. நடுவுல ஒரு தலைமுறையில எல்லா சொத்தும் கை நழுவிப் போச்சு. எங்க தாத்தா சின்ன வயசுல இறந்துபோயிட்டதுனால சுத்தியிருந்தவங்க ஏமாத்தி சொத்த எடுத்திக்கிட்டாங்க. அதனாலதான் அப்பா பிழைப்புக்காக இந்த ஊருக்கே வந்தாரு. சொத்த எடுத்துக்கலாம், உள்ள ஊறுன பூர்வீகப் பழக்கம் போயிருமா? எங்க தாத்தா தொட்ட உழவு மண்ணுமணம் எங்க அப்பாருகிட்ட அப்படியே இருந்தது. அந்த மணத்துலதான் ஏலச்சரக்குகளை கணிச்சு விலையெடுத்தார். அதே மணம்தான் என் கைகால்ல தங்கியிருக்கு”ன்னு சொல்லுவார். அதுக்கேத்த மாதிரி அவரு தொழில இன்னும் பெருசா எடுத்து நடத்துனாரு. வடக்க பூவாணி வரை சரக்குகள லாரில சப்ளை செஞ்சாரு. ஊருக்குள்ள நாலு எடத்துல ஹோட்டல் ஆரம்பிச்சாரு.
“அவரோட கணக்க பாத்து வியக்குறவங்க கிட்ட சொல்லுவாரு, “இதுகூட பண்ணலைன்னா சிவனேச நாடார் மகனா பொறந்து என்ன பிரயோசனம்? அவரு சும்மா போய் சேரலை. மொத்த பொறுப்பையும் எனக்குள் இருந்து பண்ணுறாரு. இப்ப நான் செய்யுறது எனக்காக இல்ல. என்னோட மகனுக்காக”ன்னு சொல்வார். தன்னை எப்போதும் தன் அப்பாவோட தொடர்ச்சியாத்தான் பாத்தார். அதேபோல் தன்னை தன் மகனுக்குள்ள விட்டுட்டு போயிறணும்னு நினைச்சார். அதனால வாசுதேவ நல்லூர் போய் சொந்த வலசல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தார். ஆனா வாரிசு இல்லாம தள்ளிப் போயிட்டே இருந்தது. ஆறு வருஷங்கழிச்சு பொண்ணு பிறந்தது. அவரு நினைத்த மாதிரி பையன் பிறக்கல.”
நான் கொஞ்சம் தயங்கினேன். டாக்டர் புரிந்துகொண்டார்.
“அப்ப அதுதான் பிரச்சினை. அதுதான் குடியை நோக்கித் தள்ளியிருக்கு. இருபது வருஷங்களுக்கு முன்னாடி இதைக் கேட்டுருந்தன்னா இதென்ன முட்டாள்தனம்னு அவருக்கு அறிவுரை சொல்லியிருப்பேன். ஆனா இப்போ அப்படி சொல்ல மாட்டேன். உடம்புக்கும் மனுஷனுக்குமான உறவ பாத்துக்கிட்டே இருக்கேன். ஒரு மாசத்துக்கு எப்படியும் மூணு ஆபரேஷன் பண்ணுறேன். பெரும்பாலும் லிவர் சம்பந்தமான சர்ஜரிதான். இப்ப யாராவது என்கிட்ட ஃபேட்டி லிவர் பிரச்சினைன்னு வந்தா முதல்ல அவங்க குடும்ப பின்னணியத்தான் கேப்பேன். பெரும்பாலும் யாரவது ஒருத்தர்கிட்ட இருந்துதான் வந்துருக்கும். மனுஷன் தனக்கு முன்னாடி பிறந்தவர்களோட வார்ப்புக்கு கட்டுப்பட்டவன். அந்த அச்சு ஏற்கனவே எல்லையை உருவாக்கிடுது. அதுவும் உங்க முதலாளி அதை நம்பித்தான் தன் வாழ்க்கையை ஆரம்பிச்சுருக்காரு. அந்த உணர்வுதான் அவரை உச்சியில ஏத்தியிருக்கு. பேசி அதை மாத்திர முடியாது.”
“ஆமா டாக்டர். அங்க ஆரம்பிச்ச குடி. யாருமேலயும் வெளிப்படுத்த முடியாத வெறுப்பு. தன் உடம்பையே அழிச்சுக்கிட்டார். அவரோட மொத்த வெறுப்பையும் அவரோட லிவர்தான் வாங்கியிருக்கு. நச்சுப்பை மாதிரி. ஒரு நாள் முட்டக் குடிச்சிருந்தவரு வீட்டுத் திண்ணையில தான் சாய்ஞ்சிருந்த தூணைக் காமிச்சு, ‘அடுத்த பத்து தலைமுறை தாங்குற தேக்கு. சிவகிரி ஜமீனுக்கு செஞ்சு கொடுத்த ஆசாரியை கொல்லத்துல இருந்து வரவழைச்சு இழைச்சு பண்ணுனது’ன்னு சொன்னார். அவரை சுத்தி இருந்த ஒவ்வொரு பொருளும் அவருகிட்ட அதை ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது.”
அதுவரை அமைதியாக இருந்த அம்மா தன் அருகிலிருந்த மகள் சுஜியைத் தொட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார். ”அந்த ஆறு வருஷமும் ரொம்ப நொம்பலப்பட்டுப் போனோம். ஆஸ்பத்திரிக்கும் கோயிலுக்குமா மாரிமாரி அலைஞ்சதுதான் இப்போ ஞாபகம் இருக்கு. ஒவ்வொரு தடவை நாள் தவறும் போதும் பூரிப்பாகி மனசு துள்ளும். அப்புறம் ஒரு நாள் மொத்தமா கரைஞ்சு காலி வீடா மனசு வெறுமையாயிரும். அன்னைக்கு ராத்திரி எதுவும் பேசாம நேரா அவரு மாடிக்குப் போயி படுத்துக்குவாரு. என்னைத் தாண்டிப் போறப்ப குடிவாசனை மட்டும் தங்கி இருக்கும். ஏதோ தெய்வ சாபம் மாதிரி. நடுவுல மூணு தடவை கரு உருவாகி பலமில்லாம கலைஞ்சு போச்சு. கடைசியாத்தான் இவ பொறந்தா. ரொம்ப எதிர்பார்த்து இருந்தாரு.”
கண்ணீர் முந்திக்கொண்டு வர பேசுவதை சற்று நிறுத்தினார். சிவந்த மூக்கை ஒரு முறை துடைத்துக்கொண்டு தொடர்ந்தார். ”எனக்கு இருந்த பயமெல்லாம் வேற. ஒவ்வொரு முறை கரு தங்காம போனப்பவும் அவரை கவனமாப் பாப்பேன். அவர் நடவடிக்கையில ஏதாவது மாற்றமிருக்கான்னு. எங்கயாவது அவர் தன்னோட வீரியத்தை சந்தேகப்படுற தோரணை இருக்கான்னு. ஆம்பளைக்கு தன்னோட உடல் பலந்தான் ஆதாரம். அதுல சந்தேகம் வந்துருச்சுன்னா அவ்வளவுதான். அதிலயும் இவரு தன்னோட மொத்த பரம்பரைக்கும் தான் பொறுப்பாளின்னு நினைச்சிட்டு இருக்காரு. கடைசியா நான் கருவானப்போ பதட்டம்தான் இருந்தது. இதுதான் கடைசி வாய்ப்பு. எப்படியாவது ஆண்பிள்ளை பொறந்துறணும்னு வேண்டிக்கிட்டேன். ஆனா விதிப்போக்க நாம் என்ன பண்ண முடியும்? அதுல மனசு விட்டவருதான். தன்னோட உடம்பு தன்னை கைவிட்டுருச்சுங்கறத அவரால தாங்கிக்க முடியலை.”
அதைக் கேட்டவுடன் எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. அப்படி நான் யோசிக்கவே இல்லை. அவருக்கு ஆண் வாரிசு இல்லை என்பதுதான் பிரச்சினை என நினைத்திருந்தேன். ஆனால் அதன் ஆழம் வேறொன்றில் இருக்கிறது என்பது புலனாக ஆரம்பித்தது. வாசுகி சொல்லியிருக்கிறாள், “ஆணோ பெண்ணொ எந்தப் பிள்ளை பிறக்க வேண்டுமென்பதை ஆண் உடல்தான் முடிவு பண்ணுகிறது” என்று. உடனே அவர் தீவிரமாக குடித்த தருணங்கள்தான் நினைவுக்கு வந்தன. அப்போது யோசித்துப் பார்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக தனக்குத்தானே விஷம் செலுத்தியிருக்கிறார் எனப் பட்டது. அத்தனை விஷத்தையும் அவரது கல்லீரல் தேக்கி வைத்து அழுகியிருக்கிறது.
என் கண்கள் சுஜி பக்கம் திரும்பின. அவள் முகத்தில் பெரிதாக எதுவும் தெரியவில்லை. கல்லென இருந்த அவளை மடியிலிருந்த குழந்தை துள்ளி அசைத்தது. அதன் கையில் பாதி கரம்பிய பிஸ்கட் இருக்க மீதி அதன் உதட்டில் துளிகளாக ஒட்டியிருந்தன.
“ஆரம்பத்துல அளவாத்தான் குடிச்சாரு. அவருக்கு தொழில் மேல இருந்த பிடிப்பு அவரை நிப்பாட்டி வச்சிருந்தது. ஆனா ரெண்டு வருஷம் முன்னாடி சுஜியம்மா யாருக்கும் தெரியாம கூட படிச்சவரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அங்க விழுந்தது அவருக்கு கடைசி அடி. அதிலயிருந்து மொத்தமா குடியில விழுந்துட்டாரு. எப்பவும் பண்ணை வீட்டுலதான் வாசம். ஒருநாள் அவசரமா ஆடிட்டிங் கையெழுத்து வாங்க ராத்திரி கொஞ்சம் நேரங்கழிச்சி போயிருந்தேன். போனா உள்ள சேர்மேல ரெட்டணக்கால் போட்டு உருமால்கட்டி அவரு அப்பா மாதிரியே உக்காந்து கீழ தரையப் பாத்து பேசிக்கிட்டிருக்காரு. அங்க கீழ பாட்டிலு மட்டுந்தான் இருக்கு. “தாயளி, நீயெல்லாம் ஏண்டா எனக்குப் பொறந்த ….”ன்னு ஆரம்பிச்சு கண்ட வார்த்தைகளைப் போட்டு சத்தமா கத்திக்கிட்டு இருந்தார்.”
டாக்டர் கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அதில் ஆர்வம்தான் அதிகமிருந்தது. ஒரு நிமிடம் எனக்குக் கோபம் வந்தது. அத்தனை சோகத்தையும் கேட்டு உள்ளே மருத்துவ அறிவாக்கிக்கொண்டிருக்கிறார். நாளை வேறு ஒருவரிடம் இதைக் கதையாகச் சொல்வார். அந்த எண்ணம் வந்ததும் பெரும் சோர்வு என்னைத் தழுவிக்கொண்டது. அப்போதுதான் அவர் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். ஏதாவது செய்து மாற்றிவிடுவார் என. அந்தத் தன்னிரக்கம் மீண்டும் வேறு வழியின்றி டாக்டரின் உதவிக்காக ஏங்கி நின்றது. முடிவாகச் சொன்னேன், “அவரை இதுல இருந்து வெளிய எடுக்கணும் டாக்டர். அவரு அப்பா இப்போ இல்லை. அந்த இடத்துல மூத்தவனா நாந்தான் இருக்கேன்.” மேலே சொல்ல வார்த்தைகளுக்காக அலைந்தேன்.
“புரியுது. இப்போ ஒரு வாய்ப்பு இருக்குது” என்றார்.
நான் ஆர்வமாக அவரைப் பார்த்தேன்.
“அவரோட பேரன்” என சுஜியின் மடியிலிருந்த குழந்தையைக் காட்டினார்.
நான் ஏமாற்றத்துடன், “அவருக்கு பேரன் பொறந்துவுடனே தகவல் தெரியும். ஆனா அது அவர்ட்ட எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தல. வேற ரத்தத்தில் பொறந்த பிள்ளைங்கற விலக்கம் இருக்கு.”
“இருக்கலாம். ஆனா இப்ப அவரு இருக்குற நிலைமை வேற. நீங்க சொன்ன பூர்வீகம், பெருமை எல்லாத்துக்கு அடியிலயும் மெல்லிசா உயிர் வாழும் பிடிப்பு ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும். அந்த அடித்தளம் அசைஞ்சதை அவரோட உள்மனசு தாங்கியிருக்காது. இப்போ அவரோட வாரிச பாத்தா அதுக்கேத்த மாதிரி மனசு நம்பிக்கைகளை, நியாயங்களை உற்பத்தி பண்ணிக்கும். அதுவும் போக, இதுவரை அவரு பேரனை நேர்ல பாக்கலை. கண்ணால பாக்குற தாக்கம் தனி. அது அவரை மாத்தலாம்” என்றார்.
அவர் கூறிய வார்த்தைகள் உண்மையிலேயே நம்பிக்கை கொடுத்தன. இக்கட்டில் இருப்பவர்களுக்கு உண்மையில் வெறும் வார்த்தைகள் போலத் துணையிருப்பவை வேறில்லை. அதுவும் வெளியில் இருந்து வரும் வார்த்தைகள் நம்மை முழுதாக ஆக்கிரமித்து விடுகின்றன.
அதே தைரியத்தில் முதலாளியம்மாவும், சுஜியும் தொடர நான் முதலாளி இருந்த அறை நோக்கி நடந்தேன். முன் வராண்டாவில் நடேசன் அமர்ந்திருந்தான். குடியில் கண்கள் சிவந்து குழிந்திருந்தன். அந்தக் காலை நேரத்திலேயே வெளியே எங்கோ சென்று குடித்திருந்தான். அருகில் அவனுடைய இரு பெண்பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். என்னைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் திரும்பிக்கொண்டான்.
அவனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவன்தான் தன் மனைவியைக் கூப்பிட்டுக்கொண்டு வந்தான். சரியான பொருத்தம் கொண்ட நபரிடமிருந்து சிறு பகுதி கல்லீரலை வெட்டி எடுத்து முதலாளிக்குப் பொருத்துவார்கள். உள்ளூர் ஆஸ்பத்திரி ஏஜெண்டுகள் மூலம்தான் அவன் தொடர்பு கிடைத்தது. கட்டிட வேலைக்குப் போய்க்கொண்டிருந்தவன், குடி மிகுதியால் சரியாக வேலைக்குப் போகவில்லை. கடன் நெருக்கடியும் குழந்தைகள் எதிர்காலம் கருதியும் மனைவியைச் சம்மதிக்க வைத்திருந்தான். நேரடியாக ஆஸ்பத்திரியில்தான் அவளை முதலில் பார்த்தேன். எந்த உணர்வும் வெளித்தெரியாத முகம் அவளுக்கு அல்லது அவளது வாழ்க்கைச் சூழல் அவளின் உணர்வுகளை முழுவதுமாக உறிஞ்சிவிட்டிருந்தன. அவள் கணவன் அதீத பணிவு காட்டி வந்தான். “ஊரு பெரிய மனுஷன். ஒரு கஷ்டத்துல இருந்தா சும்மா பாத்துக்கிட்டு இருக்க முடியுமா? ஏதோ நம்மால உதவ முடியறது.” அவன் சிரிப்பும் கறைப் பற்களும் ஒவ்வாமையைக் கிளப்பியது. அத்தனை குழைவிற்கும் அடியில் பணத்தை நோக்கிய தவிப்புதான் இருந்தது. ஆனால் முதலாளியம்மா பார்த்து கறாராகச் சொல்லிவிட்டாள், “பணத்தை அவன் மனைவியிடம்தான் தரவேண்டும்” என்று. அவ்வப்போது அவன் குடிக்கு மட்டும் சில நூறுகள் நான் கொடுத்துக்கொண்டிருந்தேன்.
மொத்தம் பதினைந்து லட்சம் பணம், மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ளுதல் என முடிவானது. சர்ஜரி அன்று பணம் முழுவதுமாக கொடுக்கப்பட்டது. எந்த உணர்வும் இன்றி வாங்கிக்கொண்ட அந்தப் பெண்ணைப் பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை வரவில்லை. எப்படியும் அத்தனைப் பணமும் அவன் கைகளுக்கே சென்றுவிடும்.
ஆனால் சர்ஜரி முடிந்து தன் மனைவியைப் பார்த்த கணத்திலிருந்து இந்த எரிச்சல் முகம் அவனுக்கு வந்துவிட்டது. மறுநாள் சுய நினைவு வந்து படுக்கையில் இருந்த மனைவியைத் திட்டும் சத்தம் வெளியே வராண்டாவில் அமர்ந்திருந்த எனக்குத் தெளிவாகக் கேட்டது. “ஏண்டி கீரமுண்ட, அந்த சீட்டை எங்க வெச்சு தொலைச்ச? ஊருக்குள்ள யாருமில்லாத அதிசயமா உன்னத் தேடி வந்து கட்டுனேம்பாரு. அப்ப பிடிச்சது பீடை. அறுத்துக் கொடுத்துட்டு படுத்துருக்கா பாரு. அந்தக் கெழவன் கூடவே போக வேண்டியதுதான? நாரமுண்ட.” வெளியே வந்த தோரணையிலேயே தெரிந்தது, நான் அங்கு இருப்பேன் என்று. நான் கேட்க வேண்டும் என்றே சத்தமாகப் பேசியிருக்கிறான். அவன் முகத்தில் அந்த எரிச்சல் பாவனை தங்கியிருந்தது.
கையில் இரண்டு கலர்தாள்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் கடந்து முதலாளியின் அறைக்குள் சென்றேன். அன்றுதான் முதலாளியின் உடம்பைச் சுற்றியிருந்த வயர்களில் சிலவற்றைக் கழற்றியிருந்தனர். சர்ஜரி முடிந்த அன்று ஐ.சி.யூ கதவின் வட்டவடிவ கண்ணாடி வழியாகப் பார்த்த போது வயர்களிலான தூளியில் தூங்குவதைப் போல இருந்தார். அவை சென்று அருகிலிருந்த கருவிகளில் இணைந்து கொள்ள, அதன் திரைகள் மாறிக்கொண்டிருக்கும் எண்களாகவும் கோடுகளாகவும் அவரைக் கண்காணித்துக்கொண்டிருந்தன. பார்ப்பதற்கு அவை அவரைச் சுற்றிக் கண்காணிக்கும் செவிலியர் கூட்டம் போல் இருந்தது.
கதவைத் திறந்துகொண்டு நான் உள்சென்ற போது கண்கள் மூடிய நிலையில் படுக்கையில் இருந்தார். உள்ளே உருண்டோடிய விழிகள் அவர் உறங்கவில்லை எனக் காட்டியது. அருகில் ஒரு கருவி மட்டும் அவ்வப்போது மெல்லிய பீப் ஒலி கொடுத்தது. சன்னமான தாலாட்டு போல. நான் வந்ததை உணர்ந்து கண்களைத் திறந்து பார்த்தார். அதில் நான் களைப்பை மட்டும் பார்த்தேன். வலியின் தடமாக அது மட்டும் அவரில் இருந்து வெளிப்பட்டது.
தயங்கியபடியே, “முதலாளி, வெளிய சுஜியம்மா வந்திருக்காங்க” என்றேன். அவர் கண்கள் மெல்ல விரிந்தன. அதில் மெல்லிய குழப்பம் மட்டும் இருப்பதைக் கண்டேன். அவரில் உடனடியாக வெளிப்படாத கோபம் எனக்குத் தெம்பைக் கொடுத்து. மேலதிகமாக தாமதிக்காமல் விரைவாக வெளியே சென்று சுஜியை அழைத்தேன்.
கையில் குழந்தையுடன் உள்ளே வந்தவள் நேராக அவரிடம் சென்றாள். குழந்தை ஆர்வமாக அவரைப் பார்த்தது. அவரைச் சுற்றியிருந்த வயர்களைக் கண்டு உற்சாகமாக எட்டிப்பிடிக்க முயன்றது. அதை உணர்ந்து விலக்கிய சுஜி மெல்ல குழந்தையை மறுபக்கம் மாற்றிக்கொண்டாள்.
அவர் முகம் புன்னகையில் விரிந்தது. அதைக் கண்டதும் சுஜி மெல்லச் சிரித்து கண்களில் நீர் சொட்ட விசும்பினாள். மெல்லிய நடுக்கம் கொண்ட கைகளை எடுத்து குழந்தையைத் தொட்டார். குழந்தை தன் மென்மையான சிறிய கண்களைச் சிமிட்டி அவரைப் பார்த்தது. “என்னை மன்னிச்சிடுங்கப்பா” என்றாள் சுஜி.
ஆனால் இதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு மெல்லிய ஒவ்வாமை எழுந்தது. ஏன் என்று தெரியவில்லை. ஏதோவொன்று மனதை உறுத்தியது. அப்போதுதான் ஞாபகம் வந்தது. சுஜி உள்ளே வருவதை எதிர்பார்த்து அவர் முகத்தில் புன்னகையைத் தயாராக வைத்திருந்தார். அதில் ஒரு நளினம் இருந்தது. தொழிலில் அவர் நண்பர்களுக்கு விருந்துகளில் தரும் புன்னகை. பலமுறை அதைக் கண்டிருக்கிறேன்.
“தங்கையா” எனக் கூப்பிட்டதும்தான் அங்கிருக்கும் நினைவடைந்து அவர் அருகில் சென்றேன். “சொத்தை என் பேரக் குழந்தை பேரில் எழுதி வைக்கவேண்டும், அதை ஏற்பாடு செய்யுங்க” என்றார். வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் உள்ளே விறுவிறுவென அவர் எண்ணம் செல்லும் திசையை மனம் பின்தொடர்ந்தது. சே, இருக்காது என ஒருகணம் விலக்கினாலும் அந்த எண்ணம் கலையாமல் அங்கேயே இருந்தது. இப்போதிருக்கும் சொத்தில் அவர் சுயமாகச் சம்பாதித்ததுதான் முக்கால்வாசி. அவர் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். அதை உணர்ந்துதான் சுஜி அவசரமாக குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறாளோ? அந்த எண்ணத்தைத் தொட்டதும் சூட்டுக்கோலென மனம் பின்வாங்கியது. அப்படியென்றால் ஏன் இவர் சிரித்துக்கொண்டிருக்கிறார்? வெட்டியெடுக்கப்பட்ட கல்லீரலோடு கோபமும் சென்றுவிட்டதா?
அவர்கள் இருவரும் பேசிய எதுவும் என்னை வந்தடையவில்லை. என் மனம் முழுதும் அந்த எண்ணத்தையே சுற்றிக்கொண்டிருந்தது. அந்தச் சிரிப்பு. அதற்கு மேல் அங்கே என்னால் இருக்க முடியவில்லை. வெளியே வந்து நின்றேன். ஜன்னல் வழியாக வந்த சூரியவெளிச்சம் ஒருவிதமான ஆசுவாசத்தைத் தந்தது. உள்ளே இருந்த பல்ப் வெளிச்சத்தின் இறுக்கத்தை அது தளர்த்தியது.
வராண்டாவில் இரு குழந்தைகள் மட்டும் விளையாடிக்கொண்டிருந்தன. காலியாயிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். அந்தக் கோணத்தில் பக்கத்து அறை முழுவதுமாகத் தெரிந்தது. படுக்கையின் அருகில் சுவரில் சாய்த்து இரு கட்டைப் பைகள் இருந்தன. மேஜையில் மாத்திரை வில்லைகள் பாதி பிரிக்கப்பட்டு கலைந்து கிடந்தன.
சர்ஜரிக்கு முன்னரே டாக்டர் கூறியிருந்தார். இளவயது என்பதால் மூன்று நாட்களுக்கு மேல் தங்க அவசியமிருக்காது. அன்று மாலை அவர்கள் கிளம்பிவிடுவார்கள். சுவரைப் பிடித்தபடி மெல்ல எட்டு வைத்து அந்தப் பெண் நடந்துகொண்டிருந்தாள். முகத்தில் உறுதி என எதுவும் தெரியவில்லை. தினமும் எழுந்து சமையலறைக்குச் செல்வது போன்ற உணர்ச்சியற்ற முகம். இதைச் செய்யவேண்டும் என்கிறதைத் தாண்டி வேறெந்த எடையும் அதில் இல்லை. இவளைப் போன்றவர்கள் எதையும் உள்ளே எடுத்துச் செல்ல மாட்டார்கள். சென்றால் ஒரு நாள்கூட வாழ முடியாது. அனைத்தையும் உடலால் மட்டும் கடந்துவிடுவார்கள்.
முதலாளி அறையிலிருந்து வெளியே சுஜி வந்தாள். அதுவரை அமைதியாக இருந்த குழந்தை மீண்டும் துள்ள ஆரம்பித்தது. ஹேண்ட்பேக்கைத் திறந்து இன்னொரு பிஸ்கட்டை நீட்ட குழந்தை ஆர்வமாக அதைப் பிடுங்கிக்கொண்டது. சுஜி நேராக நடந்து எதிர்ப்புறம் சுவரருகே நின்றிருந்தவனிடம் சென்றாள். அருகே வரும் வரை தன் செல்பேசியை நோண்டிக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து சுஜியைப் பார்த்துச் சிரித்தான். குழந்தையின் ஜாடை அப்படியே இருந்தது.
நான் மீண்டும் முதலாளி அறைக்குள் நுழைந்தேன். என்னைப் பார்த்தவர் அருகே வரும்படி சொன்னார்.
“அந்தக் குழந்தைகளைக் கூட்டிட்டு வாங்க.”
“குழந்தைகளையா?”
“ஆமா, அந்தப் பொண்ணோட குழந்தைகளை. ரெண்டு நாளா அதுகளோட குரல்கள் மட்டுந்தான் கேக்குது. சிட்டுக்குருவிகள் சண்டை போடுற மாதிரி கீச்சுகீச்சுன்னு. அதுக முகங்களைப் இன்னும் பாக்கல” என்றார்.
“முதலாளி…” எனத் தயங்கினேன்.
“அன்னிக்கி பண்ணை வீட்டுல கிடந்தப்ப என் மனசுல ஓடிட்டு இருந்ததெல்லாம் ஒன்னுதான். இதோட முடிஞ்சுரும் எல்லாம்னு. என் உடம்பு என்னை கைவிட்டுருச்சு. கடையில என்னால ஒக்கார முடியலை. இனி இந்த உடம்ப வெச்சு ஆகப்போறது ஒன்னுமில்லங்கறதுதான் என்னோட நினைப்பா இருந்தது. என்னைத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போனதை எங்கோ தூரமா பாத்துக்கிட்டு இருந்தேன். உண்மையிலயே பிழைக்கக் கூடாதுன்னுதான் நான் வேண்டிக்கிட்டிருந்தேன். இனி இந்த உடம்ப வெச்சு ஆகப்போறது ஒன்னுமில்லை.“
நான் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். மெல்ல தன் எண்ணங்களை சிரமப்பட்டு சொற்களாக்கிக்கொண்டிருந்தார். அவ்வப்போது நிறுத்தி, எச்சில் விழுங்கி திரட்டி, சொற்களைப் பேசினார்.
“நேத்து சாயந்தரம் டியூட்டி டாக்டர்கிட்ட கேட்டேன். அந்த அழுகுன லிவரைப் பாக்கணும்னு. அவரு சரின்னு சொன்னார். ஒருவாட்டி பாக்கணும். ஒரே ஒரு வாட்டி. அது இருந்த இடத்துல இப்ப சின்ன துண்டு லிவர் இருக்கு. அந்தப் பொண்ணோடது. குருத்து மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன். கரு வளர்ற மாதிரி இது மெல்ல வளர்ந்து முழுசாயிடும்னு டாக்டர் சொன்னார். பக்கத்துல சிஸ்டர் கவனிச்சுக்கிற மாதிரி இந்த மிஷின் எந்த நேரமும் கவனிச்சிட்டு இருக்கு.”
வேறு ஏதோ சொல்ல வந்தவர் பேச்சை மாற்றி, “இந்த ரெண்டு நாளுல மொத்தமா அவளோட குரல் மூணு நாலு வாட்டிதான் கேட்டுது. அவள் புருஷன் குடிகாரப் பயலா இருப்பான் போலருக்கே? முருகேசனை விட்டு ஒருவாட்டி அவனை மிரட்டச் சொல்லுங்க. பொறுக்கி நாயி. அந்த பொண்ணோட குரல் அதிர்ந்துகூட வெளிவரலை.”
பேசிக்கொண்டிருக்கும் போதே அமைதியானார். உடல் முறுக்கேறி கல்மூங்கிலைப் போல நீண்டது. விரல்களைக் கோர்த்துக்கொண்டு வலி கடந்து செல்லக் காத்திருந்தார். சில கணங்கள் கழித்து மீண்டும் கண்களைத் திறந்து பார்த்தார். அவை புயல் கடந்து சென்ற நாணல்களின் தோற்றம் கொண்டிருந்தன. எனக்கு ஒருகணம் என் மனைவியின் ஞாபகம் வந்தது. வாசுகி பிறக்கப்போகும் நேரத்தில் இப்படித்தான் அவளுக்கு வலி வந்து வந்து மறையும்.
நான் பிள்ளைகளை அழைத்து வருவதற்காக வெளியே சென்றேன். கதவைச் சாத்தும் கணத்தில் மணிநாதம் போல மெல்லிய பீப் ஒலி அந்த இயந்திரத்திலிருந்து வந்தது.