அகம் சுட்டும் முகம் (பகுதி 3): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

by எம்.கே.மணி
0 comment

வாழ்வில் துயர்கள் வருவதுண்டு. சில துயர்கள் நின்று நிலைத்துவிடுவதும், வந்த சுவடு தெரியாமல் மறைந்து போவதும் எல்லாம் உண்டு. பிறப்பின் அடியிலிருந்து, மரணத்தின் முடி வரையில் தொடர்ந்து வருவதற்கு நம்மோடு இணைந்துகொள்ளும் துயரை என்ன செய்ய முடியும்? பிறந்த கணம் அநாதைகளாகி விடுகிற குழந்தைகளை எண்ணிப் பார்க்கலாம். அவைகளில் இருந்து பலரும் உலகையே ஆளக்கூடிய தளத்துக்கு வந்துவிட்டிருந்தாலும், அவர்களுடைய மனதில் குழிந்து விழுந்த பள்ளம், பின்னொரு காலத்தில் எதை முன்னிட்டும் நிரம்புவதில்லை. மேள (1980) என்கிற இந்தப் படம் ஒரு குள்ளனைப் பற்றியது. அதை உடல் ஊனம் என்பதாக நம்மால் குறுக்கிக்கொள்ள முடியாது. அது தனக்குள் குமைந்துப் பிதுங்கி பிற்காலத்தில் மன ஊனத்தில் திளைத்துக்கொண்டிருப்பதாக முடிகிறது. ஒருபோதும் வலியை முடித்துக்கொள்ள முடியாத காவிய துக்கமாக அதை நினைத்துக்கொள்கிறேன். இந்த உலகமும், மனித வாழ்வும் எவ்வளவோ மேம்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் சத்தமில்லாமல் புதைகுழிகளில் மறைந்து ஆவியாவோர்களின் எண்ணிக்கைகளில்தான் அதன் யோக்கியதைகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அந்தக் குள்ளன், கோவிந்தன் குட்டி. அவன் துக்கமாயில்லை. கிராமத்துச் சிறுவர்கள் அவனுக்கு பின்னால் கும்பல்கூடி ஓடி வருவதில் அவனுக்குப் பெரிய சுரணை எல்லாம் கிடையாது. வித்தியாசமாக இருப்பதன் பொருட்டு, மக்கள் தன்னைப் பார்த்துச் சிரிப்பதெல்லாம் ஒரு சந்தோஷத்தின் பொருட்டுதான் என்பதாகத் தன்னைச் சமாதானம் செய்துகொள்ளும் அளவிற்கு வந்துவிட்டவன். எப்பவோ ஊரைவிட்டுச் சென்று, இன்று சர்க்கஸில் இருந்து திரும்பியிருக்கிற அவன் மிடுக்காகவே இருக்கிறான். நடை, உடை, பாவனைகள் அனைத்திலும் ஒரு கோணலைக் கண்டுபிடித்துவிட முடியாது. மிகவும் நேரடியாகப் புழங்குகிறான். அவன் ஒருவிதமான காசுப் பார்ட்டியாக வசதியாக இருப்பது ஒரு சரளத்தை உருவாக்குகிறது என்பது முக்கியம். அதன் ஊக்கத்தில் அம்மா அவனுக்கு ஒரு கல்யாணம் நடக்க வேண்டுமென்று கருதுகிறாள். ஏழ்மை மட்டுமே நிலவி, ஒரு வழியாக மக்கள் பிழைத்துப் போகிற அந்தக் கிராமத்தில் அதற்குச் சாதகமான அம்சங்களே நிலவுகின்றன. குணவதியும், ரூபவதியுமான சாரதாவை மணமுடித்துக்கொண்ட கோவிந்தன் சர்க்கஸுக்குத் திரும்புகிறான்.

சந்தோஷ நாட்கள் ஓடி மறைவது தெரியாது, இல்லையா?

கோவிந்தன்குட்டியும், சாரதாவும் ஒரு தீவில் இருந்து வாழவில்லை. அவர்களைச் சுற்றி மனிதர்கள் இருப்பது தெரிய வரும்போதே இல்லறம் சலனிக்கிறது. 

ஒரு காலத்தின் பெரிய பொழுதுபோக்காக இருந்த சர்க்கஸ் என்பதே விநோதங்களின் கூடாரம்தான். அங்கே ரிங் மாஸ்டர் சொல்லும்போது காண்டாமிருகம்கூட வாயைப் பிளந்து நிற்கிறது. கவிஞர் விக்ரமாதித்யன் சொன்னது போலவே கரடி சைக்கிள் ஓட்டுகிறது. வயிற்றுக்காக மனிதர்கள் கயிற்றிலாடுகிறார்கள். குழந்தைகள் பல்டி போட பயிலுகின்றன. டூ பீஸ் அணிவகுப்பில் பெண்கள் சிரித்த வாயை மூடாமலிருக்கிறார்கள். குள்ளர்கள் தனியாகவும், கும்பலாகவும் தங்களை அவமானப்படுத்திக்கொண்டு சிரிக்க வைக்கிறார்கள். ஒரு மேனேஜர் பேசினால் அதிகாரம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறான். ஒரு பிரபஞ்சத்தையே உருட்டிக்கொண்டிருப்பதான மயக்கத்தில் ஒரு முதலாளி சிட்டிங் போட்டு குடித்துக்கொண்டிருக்கிறான். அங்கே பணிபுரிகிற ஒவ்வொருவருமே தனியர்கள். வேர்களின் பிடிப்பற்றவர்கள். வெளியில் நிலவுகிற சமூகக் கண்ணியத்தை வாழும் நிமிடங்களில் செயல்படுத்த முடியுமா என்பதில் சந்தேகம் கொண்டிருப்பவர்கள். நூறு சிடுக்குகளையும், நெருக்கடிகளையும் வளர்த்து வந்தவாறு தின்று, தூங்கி, நடமாடுகிற ஒரு கூட்டம். ஆண்கள் பெண்களுக்கு நடுவேதான் கோவிந்தன் குட்டியும், சாரதாவும் வாழ்ந்தாக வேண்டும்.

விரிசல் விழ ஆரம்பிக்கிறது.

சாரதா யார்? நினைத்த யாரிடமும் வாய்விட்டுப் பேசிவிட முடியாத கிராமச் சம்பிரதாயங்களுக்குள் இன்னமும் உள்ள பல்லாயிரம் பெண்களைப் போல மூச்சு திணறிக்கொண்டிருந்தவள். எவ்வளவுதான் மனிதாபிமானம் பரப்பினாலும், உண்மை என்னவென்றால், கோவிந்தன்குட்டியை ஒரு பெண்ணும் விரும்ப மாட்டாள். அவன் வைத்திருந்த ஒரு பாட்டுப் பெட்டியில் இருந்துவந்த இசை ஒரு சுதந்திரக் கனவைத் தூண்டினது போல, அவனைக் கல்யாணம் செய்துகொண்டால், இப்போதிருக்கிற சங்கிலி விலகி பல ஊர்களை, மனிதர்களைப் பார்க்க முடியும் என்கிற மற்றொரு கனவுதான் அவளைச் செலுத்தியது. நமது மனதைத் தாண்டின எந்த அக்கரை கனவும் பொதுவில் செல்லுபடியாவதில்லை. இப்போது கோவிந்தன் பரிகசிக்கப்படும்போது கூனிக் குறுகவேண்டியது அவளுடைய பொறுப்புமாயிற்று. கை வீசி நடக்கவும், நடனமாடவும், நதியில் நீராடவும் வெளி கிடைத்திருந்த ஊரை விட்டு ஒரு கூடாரத்தில் உட்கார்ந்துவிட வேண்டிய நிலைமை சூழ்ந்திருக்க, கோவிந்தன் குட்டி அவளைச் சந்தேகம் கொள்ளவும் துவங்கியது ஒரு உயிரின் சுவாசக் காற்றைத் தடுத்து நிறுத்துவது போலத்தான். 

விஜயன் என்கிற கதாபாத்திரத்தை மம்மூட்டி செய்திருந்தார். விஜயன் சர்க்கஸ் உலகில் ஒரு ஸ்டார் போல இருக்கிறவன். மோட்டார் சைக்கிள் வீரன். கொஞ்சம் இசையில் ஆர்வமும், தனிமை வாழ்வில் கிடைத்திருந்த நுட்பமான நல்ல குணங்களும் இருக்கிற ஒருவன். கோவிந்தன் குட்டியைத் தனக்கு வாய்த்த ஒற்றை நண்பன் என்று ஒருமுறை சொல்லுகிறான். அவனை முன்னிறுத்தித்தான் கோவிந்தனின் சந்தேகம் துவங்குகிறது. அதில் அமைகிற சமய சந்தர்ப்பங்கள் அதில் தீ வளர்க்கிறது.

கோவிந்தன் குட்டி தன் மீது வந்துவிழுகிற அத்தனை இடர்களுடனும் முழு சக்தியுடனும் போராடுகிறான். அது மனைவியை வதைசெய்வதிலும், நட்பை இழப்பதிலும் மட்டுமே முடிகிறது.

நாம் இப்போது முதலில் இருந்து கோவிந்தன் குட்டியில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

கோவிந்தன் குட்டி ‘நான் வளரவில்லை’ என்று நினைத்த நாள் ஒன்று இருந்திருக்கும். அன்றே அவன் மீது நாசத்தின் நிழல் விழுந்துவிட்டது. குடும்பத்திலும், அக்கம் பக்கத்திலும், ஊரிலும் அவனைச் சூழ்ந்திருந்த ஏளனத்தின் வெள்ளம் அவனை மூழ்கடிக்கும் முன்னே ஒருநாள் அவன் தப்பித்து வெளியேறிச் சென்றிருக்கலாம். தன்னை யாரும் கண்டறியாத நிலப்பரப்புகளில் ஒரு குள்ளனாகவே அனுமதித்து துயர்களை எல்லாம் அன்றாடம் வாரி விழுங்கி காசு சம்பாதித்து மிடுக்கின் துணையுடன் அவன் வீடு திரும்பினான். அவன் மற்றவர்களைப் போல ஒரு மனிதனாக கற்பனை செய்துகொண்டான். சாரதா என்கிற பெண்ணுடைய அழகின் விஸ்வரூபத்தை உண்மையில் அவன் அறிந்திருக்கவில்லை. ஒரு பட்டுப்புழு தனது வளர்ச்சிக்கு அப்புறம் பட்டாம்பூச்சியாக சிறகடித்துக் கொள்ளும்போது இந்தக் கற்பனைக் கூடுகள் தாக்குப் பிடிக்காது என்பதை யோசித்திருக்க வேண்டும். விஜயனின் விரல்கள்கூட, சாரதா மீது படவில்லை. சாரதா விஜயன் என்கிற ஆளுக்காகத் தன்னுடைய ஊன் உயிரைக் கரைத்துக்கொள்ளவில்லை. ஆனால் இருவருடைய இருப்பே இவனைத் தனிமைப்படுத்தப் போதுமானவை. இவனால் பதுக்கப்பட்டு காணாமல் போயிருந்த தாழ்வு மனப்பான்மை, எழுந்துவந்து முழுவதுமாக மூடுவதற்குக் காரணமாகப் போதுமானவை. 

நான் சொல்ல வேண்டி வந்த கதை அல்ல ஜார்ஜின் திரைக்கதை. அவர் மிகவும் துணிச்சலுடன், வதைகளை நிதானமாகச் சொல்லக்கூடிய உறுதியுடன் ராஜநடை நடந்திருக்கிறார். எப்பேர்ப்பட்ட இரும்பு மனம் என்று அவரைப் பற்றி வசைபாடவே முடியும்.

அதிலும் கதையின் இறுதி முடிவு கோவிந்தன் குட்டியின் ஆர்வக்கோளாறுதான். அவனுக்குத் தெரிந்த அறிவில் அதைச் செய்கிறான். அந்த அபத்தம், ஒரு சரியான தீர்வுதான் என்பதை ஜார்ஜ் முடிவுசெய்திருக்கிறார். அதை மிகவும் நம்பகத்தன்மையுடன் சொல்லிவந்து கடப்பதை நம்மால் அறிய முடியும். இனி அவன் வாழ்வின் மீது மோதுகிற போரை நடத்தப் போவதில்லை. தோல்வியை ஏற்றுக்கொண்டு விட்டான். இரண்டு பேரும் இருங்கள் என்று சொல்லிவிட்டு கோவிந்தன் குட்டி விடைபெற்றுக்கொண்டு விட்டான்.

படம் முடிந்துவிட்டது என்றாலுமே அதன் தொடர்ச்சியை யோசிக்காமல் முடியவில்லை. விஜயனும் சாரதாவும் கள்ளக்காதல் செய்யவில்லை என்றாலும் அவர்களுள் ஒருவரை நோக்கி மற்றொருவர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது திண்ணம். ஓர் ஆணாக எல்லாத் திக்கிலிருந்தும் முழுமையாகத் தோன்றக்கூடிய விஜயனை அவள் எப்படித் தன்னோடு இணைத்து கற்பனை செய்யாமலிருக்க முடியும்? அதைப் போலவே சுற்றமும் நட்பும் மனித அருகாமையும் இல்லாத விஜயனும் இப்படி ஒரு பெண்ணைச் சந்திக்கச் சாத்தியமில்லை. யாருக்கேனும் பகிர்ந்து கொடுக்க விரும்பும் அன்பு அவனைக் கலங்கடிக்கிறது என்பது நமக்குத் தெரியும். “மனம் ஒரு மாந்த்ரீகக் குதிரையாகப் பாய்கிறது, மனிதர் போகாத பாதைகளில்” என்று தன்னுடைய விசனத்தைப் பாடவே செய்திருந்தான். எனவே அவர்கள் இணையவே செய்வார்கள். ஒருவேளை கடைசி வரையில் இன்பமாக ஒரு வாழ்வு அவர்களிடம் வந்து பொருந்தவும் கூடும்.

குள்ளனை நினைப்பதில் இருந்து தப்பித்து, ஒருநாள் அதை அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். படத்தில் அவ்வப்போது கோவிந்தன்குட்டி சொல்லுவது போல, அது அவர்களுடைய குற்றமும் இல்லை.

This image has an empty alt attribute; its file name is Mela1.jpg

இப்படம் 1980இல் வெளிவந்திருக்கிறது.

நான் கடவுள் என்கிற படம் வந்தபோது, ஊனமுற்றவர்கள் எல்லோரும் சென்று செத்துவிட வேண்டுமா என்று கேட்கப்பட்டது. கட்டுடைப்பாளர்களின் புரட்சி என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்படத்தில் அவற்றிற்குப் பதில் இருப்பதாக நான் கருதுகிறேன். பதில் காண மறுத்து, ஒரு கூட்டத்தையே வம்படியாகக் கூட்டிக்கொண்டு கலையின் நோக்கத்தை மறுக்கிற நோயாளிகளுக்கு மருந்து கிடையாது.

இப்படத்தில் வேறு பல விஷயங்களும் இருந்தன. யாரோ நம்மை விரும்புகிறார்கள். அவர்கள் மீது நமக்கு விருப்பமில்லை. யாரையோ நாம் விரும்பி விடுவதற்கு அல்லது நம்மை யாரோ விரும்பி விடுவதற்கு இவற்றினுள் புகுந்து வருகிற சமூகக் காரணங்கள் அநியாயத்துக்கு உலர்ந்தவை.  நாம் பேசுகிற அன்பு, கருணை, மனிதத்தன்மை எல்லாவற்றிற்கும் எதிரானவை.

படம் நீதி சொல்லவில்லை. இப்படி இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நான் தனிப்பட்ட முறையில் படம் பார்க்கும்போது பாதிக்கப்பட்டேன். குள்ளமாயிருக்கிறோம் என்கிற ஆறாத இரணத்தில் இருந்து எனது தம்பியால் வெளியேற முடியாதிருந்ததை நான் அன்றாடம் பார்த்திருக்கிறேன். அவனது ஜென்மச் சுழியை அறியாதிருந்த உலகம் அவனை அதில் அமுக்கிக்கொண்டேயிருந்தது, அதை என்னால் தடுக்க முடியாதிருந்தது. ஒருநாள், ஒரு கடையில் நானும் அவனுமாக ஒரு பொருளை வாங்கித் திரும்பும் போது, “அக்கடைக்காரன் என்னைக் குள்ளா என்று கூப்பிட்டான் பார்த்தாயா?“ என்றான். அப்படி எதுவும் நடக்கவில்லை. அன்று எனக்குள் இடி விழுந்து உண்டான பீதி, அவன் தன்னை ஒரு சருகாகச் சுருட்டிக்கொண்டு மரணத்தில் நுழைத்துக்கொள்ளும் வரையில் விட்டுவைக்காமல் வேட்டையாடியது. அவன் சாவை சந்தோஷப்பட்டுக்கொண்டேன் என்பது எவ்வளவு பெரிய முரண்?

இப்படத்திலும் நான் கோவிந்தன்குட்டியின் மரணத்தை விரும்பினேன்.

துயர்களின் ஆழம்வரை தன்னைக் கொண்டுசென்று வந்து எவரையும் படைத்துக் காட்டுகிற ஒருவருக்கு மனிதர்களின் எந்த முகமூடியையும் அவிழ்த்து வீச உரிமையிருக்கிறது. ஜார்ஜ் அதனால்தான் அனைத்து விமர்சனங்களும் கொண்ட எப்படிப்பட்ட படங்களையும் இயக்குகிற தகுதிகொண்டவாராக இருந்தார். 

-இனியும் தொடருவோம்.

*

முந்தைய பகுதிகள்:

  1. ஸ்வப்னாடனம்
  2. உள்கடல்