அகம் சுட்டும் முகம் (பகுதி 4): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

by எம்.கே.மணி
0 comment

நல்ல விஷயங்களைப் பார்த்தால் சிலருக்குச் சும்மா இருக்க முடியாது. அதை நாசம் செய்துவிட்டுத்தான் அடங்குவார்கள் என்கிற பொருளில் வருகிற ஒரு வசனம் உண்டு. சதயம் படத்துக்காக எம்.டி.வாசுதேவன் அதை எழுதினார். கோலங்கள் (1981) என்கிற இந்தப் படத்தின் அடிப்படை அம்சம் இதுதான். 

மனிதன் எப்படியிருப்பான் என்பதைக் கணிக்க முடியாது. அவனுடைய பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கைச் சூழ்நிலை எல்லாம் சேர்ந்து அவனை என்னவாக உருட்டித் திரட்டி கூட்டத்தில் தூக்கி எறிந்திருக்கிறது என்பதைப் பிறர் அறிய மாட்டார்கள். அப்படி நூறு பக்கத்தில் இருந்து வந்துவிட்ட ஜனத்திரள் எவ்விதமான மனநிலைகளில் சஞ்சரிக்கும் என்று அறியாத வெளியில்தான் ஒவ்வொருவருடைய வாழ்வும் இருக்கிறது. நமது விருப்பங்களை மீறின பிணைப்புகள் நாம் நகருகிற ஒவ்வொரு அங்குலத்திற்கும் காரணமாக இருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் சில கதாபாத்திரங்களை வியந்தேன். அதில் புதுமை அல்லது புரட்சியைக் கண்டு மலைக்க வேண்டியிருக்கவில்லை. அவர்கள் அன்றாடம் நமக்கு முன்னே வந்து போகிறவர்கள்தான். ஆனால் அவர்கள் ஏன் அப்படியிருக்க வேண்டும் என்கிற நெருடல். அப்படி இருக்கிறார்கள், அவ்வளவுதான் என்கிற சாந்தி சமாதானத்தைக் கடந்து போக முடியவில்லை. அவர்களை ஆட்டிப் படைப்பது எது? எதையாவது ஒன்றைச் சிதைத்துப் போட்டிருந்தவாறு ஆசுவாசம் கொள்கிற ஒரு அசுரம் ஆட்டம் போடுவதை நெடுமுடி வேணு செய்துகாட்டியிருக்கிறார். திலகன் குடிப்பதைத் தவிர வேறு ஒன்றையும் செய்யாமல் தனது இருப்பை மட்டுமே வைத்துப் பயமுறுத்தியிருக்கிறார். இவர்களைத் திரையில் கொண்டுவந்த இயக்குநரை அதிசயிக்காமல் இருக்கவே முடியாது. 

ஒரு நதியோர கிராமத்தின் கதை.

அங்கே ஒரு தேநீர்க் கடையைக் காட்டுகிறார்கள். அதில் நிலவுகிற வெறுமையை வைத்தே அந்த ஊர், குறைந்த மக்கள் வாழும் பின்தங்கிய ஒரு பகுதி என்று புரிந்துவிடும். இன்றைய கேரளம் அங்கிருந்து எங்கோ வந்துவிட்டது என்று சொல்லலாம், அந்த மாதிரி ஊர்கள் இன்றுமே இருக்க முடியும் என்றுமே சொல்லலாம். எப்படியாயினும் காலம் இப்படத்தில் காணும் மனிதர்களை மாற்றியிருக்கவில்லை. அவர்களுடைய எண்ணங்களை சீர் செய்திருக்கவில்லை. அப்படியாகத்தான் இந்தப் படம் மனிதர்களை ஆராய்வதில் வெற்றி பெற்றிருக்கிறது. நாம் இப்போதும் மனிதர்களை அடையும் முறையில் இருந்து, காலம் தாண்டி ஒரு சினிமா நிலைத்திருப்பதை அறிகிறோம். அதன் இயக்குநரின் மேதைமையை அறிகிறோம். 

ஒரு நாயகன், நாயகி என்று அவர்களைச் சுற்றும் கதை இல்லை. ஆனால் அவர்கள் இருக்கிறார்கள். பிற மனிதர்கள் சுற்றிச் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆசாபாசங்கள் இருக்கின்றன. விருப்பு, வெறுப்புகள் இருக்கின்றன. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் குஞ்சம்மா என்கிற ஒரு இயல்பான பெண்ணுக்கு என்ன வந்து விடிகிறது என்பதைச் சொல்லி வந்திருக்கிறார்கள். அவள் உழைத்துப் பிழைத்து பட்டினியில்லாமல் கடந்து போகிற ஒரு சாதாரண கும்பத்தின் அங்கம். படித்திருக்க மாட்டாள். ஓரிரு இடங்களுக்குப் பால் சப்ளை செய்து வீட்டுக்குத் திரும்பும்போது, எப்போதும் முரட்டுத்தனத்துடனும் எச்சரிக்கை உணர்ச்சியுடனும் இருக்கிற அவளுடைய அம்மா என்ன இவ்வளவு தாமதம் என்று அவளைக் கேட்காத நாளில்லை. பொழுது விடிந்து, அது முடிகிற வரை அவள் உழல வேண்டிய அலுவல்கள் ஆயிரம். அதற்கு எல்லாம் நடுவே அமைகிற இடைவெளியில் அவள் ஒரு ரிப்பன் வாங்க வேண்டுமென்றால்கூட, இப்போது எட்டணா கொடுத்துவிட்டு மீதி எட்டணாவை அடுத்த மாதம்தான் கொடுக்க முடியும். தன்னை அல்லது தனக்கு இயற்கை கொடுத்திருக்கிற இளமையை அறியும் வாய்ப்புகூட அமைந்திராத அவளை எவ்வளவோ ஆண்கள் பல்வேறு கோணங்களில் விரும்புகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அவளுமே ஒருவனை விரும்புகிறாள். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்கிறது படம்.

பேரழகிகளாக இருக்கும் பெண்களைப் பலரும் சுற்றிக்கொண்டிருப்பார்கள், ஆனால் அவர்களின் தலையெழுத்து வேறொன்றாக இருக்கும் என்பதாகச் சொல்லுவார்கள். அப்படி அதில் நடப்பதுதான் என்ன என்கிற உளவியலைச் சொல்லுகிற படமாகவும் கோலங்கள் படத்தை எடுத்துக்கொள்ளலாம்.

அனைத்திலிருந்தும் தப்பித்து நழுவக்கூடிய இந்தக் கோழைத்தனமான காலத்தில் சில்லறை அரசியல்களில் போலிக் கொந்தளிப்புகள் காட்டுவது தவிர்த்து உருப்படியாக ஒரு சாரமும் இல்லை என்பதை அறிவோம். இந்த வழியில் வந்த ஒரு கண்டுபிடிப்புதான் பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் என்பது. மனிதருடைய நல்லது மட்டுமே பார்க்கிறார்களாம். அப்படியென்றால் அல்லாததை மறைத்து வைக்க வேண்டும் என்பதுதானே பொருள்? அல்லது சினிமாக்களில் அதை ஒரு வில்லனின் தலையில் சுமத்திவிட்டு அப்படத்தில் இருக்கிற நாயகன் உள்ளிட்ட நாம் அத்தனை பேரும் அந்தத் தீமைகளை ஒழித்துக் கட்டுபவர்களாக மாறிவிடுகிறோம். சர்வ நேரமும், சர்வ மக்களும் அநீதிக்கு எதிராக வாள் ஏந்தியே நிற்கிறார்கள் என்றால் உலகில் எப்படி இந்தப் பட்டினிச் சாவுகள்? இந்தப் படம் எதிர்மறைகளைத்தான் அதிகம் பேசுகிறது. அவர்களுடைய வக்கிரங்களையும் சுயநலன்களையும் குறி வைத்துத் திறந்து காட்டியவாறு இருக்கிறது.

உதாரணமாக குஞ்சம்மாவின் அம்மா, மகள் விரும்பிய ஒருவனைத் திருமணம் முடிக்கத் தடையாக இருக்கிறாள் என்பதில் அவள் வெளிப்படையாகச் சொல்கிற ஒன்றுமே உண்மையில்லை. அவளுக்கு வாழ்வதில் இருக்கிற ஆத்திரமே எதிர் வீட்டுக்காரியும் அவள் மீது இருக்கிற பகைமையும்தான். அதில் அவள் எடுக்கிற அற்புதமான முடிவு- ஊர் பேர் தெரியாத ஒரு காதலனுக்கு மகளைக் கட்டித் தருவதைக் காட்டிலும், ஊரே குடிகாரனாகக் காறியுமிழும் ஒரு கிழவனுக்கு இரண்டாம் தாரமாக அவளைத் தாரை வார்க்கலாம்! கே.ஜி.ஜார்ஜ் அவருடைய புகழ்பெற்ற எவ்வளவோ திரைப்படங்களைக் காட்டிலும் கூர்மையான திரைக்கதையை இதில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். இது பி.ஜெ.ஆண்டனியின் ‘ஒரு கிராமத்தின்ட ஆத்மாவு’ என்கிற நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டது. கிராமம் என்றாலே வெள்ளந்தியான கொஞ்சம் தேவ மனிதர்களை உள்ளடக்கிய சொர்க்கம் என்பதை இப்படம் முழுவதுமாகச் சிதறடிக்கிறது.

திரைக்கதையில் இருந்த, எனக்குப் பிடித்த முக்கியமான கதாபாத்திரம் செரியன் என்கிற வளையல் விற்கிற இளைஞன். அவன் பரதேசி. அவன் எங்கேயும் சுற்றித் திரிந்து, எங்கேயும் சாப்பிட்டு, எங்கேயும் படுத்துக்கொள்ள முடிகிறவன். நிரந்தரமாக இந்த ஊரில் தங்க ஆசை ஏற்பட்டு, அப்போதைக்குக் கிடைக்கிற நிலத்தில் குடிசை கட்டி, காதலியை அடைகிற நாளுக்குக் காத்திருப்பதற்குள் அவனுக்கு உண்டாகிற அனுபவங்கள் அவனை மீண்டும் பரதேசியாகப் புறப்பட வைத்துவிடுகின்றன. இனிவரும் காலத்தில் அவனால் மனிதர்களை முழுமையாக நம்ப முடியாது. அவன் காதலித்த குஞ்சம்மாவைப் பற்றி அவன் கேள்விப்படவும் விரும்ப மாட்டான். அவன் ஆசையாகக் கட்டிய வீட்டை குஞ்சம்மா பார்க்க வருகிற ஒரு காட்சி இருக்கிறது. அந்த வீட்டை முன்னிறுத்தி அவன் தனது கற்பனைகளைச் சொல்லுகிறான். குழந்தை பிறந்ததும் அதை படுக்க வைக்கக்கூடிய தொட்டில் எங்கே தொங்கும் என்பதைக்கூடச் சொல்லுகிறான். எதிர்காலத்தை அவனுடன் சேர்ந்து கனவு காணும்போது முகம் சிவந்த காதலி சென்று சேர்ந்த இடம்தான் எங்கே? அந்த ஊரில் இருந்துகொண்டு அவனால் அந்த அவலத்தைக் கண்டுகொண்டிருக்க முடியுமா? செரியன் கிளம்பும் போது சொப்பனங்கள் நொறுங்கிக் கிடக்கிற தனது வீட்டை எரித்து விட்டுத்தான் செல்லுகிறான்.

கேரளப் படங்களில் கிறிஸ்துமஸ் காலங்கள் வரும். இதிலும் இப்படத்தின் குணநலனைத் தாண்டிவிடாமல் அவை வருகின்றன. முக்கியமாக குஞ்சம்மாவின் வீட்டு கிறிஸ்துமஸ். அதில் அடுத்தவர்களை நோக்கி பொறாமை கொள்வதற்கான காரணங்கள் இருக்கட்டும், அதைக் காட்டிலும் ஆழமாக உள்ளோடிய ஒரு வலி இருந்ததோ என்கிற ஐயம் வருவதே மற்றப் படங்களுக்கும் இதற்கும் மத்தியில் உள்ள வித்தியாசம். ஏனெனில் படத்தின் காட்சிகள் அதன் விரிவுகொண்டு நகர்கின்றன. வசதி இல்லாதவர்களின் வீட்டிற்கு வருகிற திருநாட்கள் எப்படிப்பட்டவை? அதை முடிந்த வரையில் உத்வேகத்துடன் ஏறிட்டு, வலுக்கட்டாயமாக மகிழ்ச்சியை நுரைக்க வைக்கும்போது அந்த நாளின் மகிமைதான் என்ன, புரிவதில்லை. அந்தத் தேவகுமாரனை அவர்கள் தாழ் பணிவதில் உள்ள அச்சங்களும் புரிவதில்லை. படத்தின் ஒவ்வொரு துணுக்கிலும் நாம் இவைகளைச் சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். குஞ்சம்மாவிற்கு ஒரு தோழி. அதிகாரங்கள் நிரம்பிய வீடுகளுக்கு அப்புறமாக இருந்து அவர்கள் இருவரும் கிசுகிசுத்துப் பேசிச் சிரித்துக்கொள்கிற தருணங்களில்கூட இருப்பது சொல்ல முடியாத ஒரு வேதனைதான். உனது காதலனை அழைத்துக்கொண்டு எங்கேயாவது சென்றுவிடு என்பதை ஒரு தோழி அல்லாமல், அதை வேறு யாரால் கிசுகிசுக்க முடியும்? படம் முடியும் முன்னேயே அவர்கள் இருவரும் வெவ்வேறு உலகங்களுக்குள் சென்றுவிடுகிறார்கள். அந்தத் தருணங்கள் எல்லாம்கூட இனிமேல் அவளுடைய காதலைப் போல ஒரு கனவு. இது போல பல துயர்களைப் போகிற போக்கில் வெகு சகஜமாகச் சொல்லிப் போகிறது படம்.

ராமச்சந்திர பாபுவின் ஒளிப்பதிவு. அது ஒரு சிறிய இடத்திலும் தாவிக் குதிப்பதில்லை. ஒரு மனிதனின் முழு உடலிலும் மேவிய நிறத்தைப் போல படம் முழக்க ஒரே நிறம். அது அழகான ஒரு கிராமத்தைச் சொல்லுகிறதா, அல்லது அது அதன் வெளிறலைச் சொல்லுகிறதா? இருளை, ஒளியை,  வெயிலை, நிழலைச் சமமாகப் பாவித்து நியாயம் செய்திருந்தார்கள். முகங்களையும்கூட. நாயகியாக வந்த மேனகா அவ்வளவு சாதாரணமாக இருந்தார். நான் அவருடைய ஒப்பனையற்ற முகத்தைப் பற்றி சிலாகிக்கவில்லை, காலணிகள் அணியாத- அவருடைய இங்கிதம் இல்லாத நடையை நம்மால் இன்னொரு படத்தில் பார்த்திருக்க முடியாது. அத்தனை சாதாரணம். அப்புறம்  தீமைகளை உரக்கச் சொல்ல வந்த படத்தில் நன்மையின் முகங்களும் அவ்வளவு வலுவாக இருந்தன. யாரோ ஒரு பரோபகாரி நாயர், யாரோ ஓர் டீக்கடைக்காரன், குஞ்சம்மாவின் தகப்பன் இப்படிக் கொஞ்சம் பேர். யோசித்துப் பார்த்தால் ஆர்ப்பாட்டமில்லாத சிறிய ஊர்வலம்தான். 

அனைவராலும் கொண்டு சேர்க்கப்படுகிற படத்தின் முடிவு படம் பார்ப்பவர்களை நோக்கிச் சிரிப்பாகச் சிரித்து, கேலி செய்வதாக முடிகிறது. அதை ஒரு பொல்லாத சீண்டல் என்றுதான் கொள்ள வேண்டும். யாருமே தங்களைக் கொஞ்சம் அசட்டுத்தனமாக உணராமல் முடியாது. நான் சில கணங்கள் வெறுப்புடன் உறைந்திருந்தேன்.

கோலங்கள் என்கிற இந்தப் படத்தை நான் இப்போதுதான் முதன் முறையாகப் பார்த்தேன். படம் வெளியாகி நாற்பது வருடங்கள் முடிந்துவிட்டன. படம் இப்போதும் வீரியமாகவும், ரோஷமாகவும் இருப்பதற்கு நான் அலட்டிக்கொள்ளவில்லை. கல்லறையைக் கொத்தித் தோண்டி பெட்டியை உடைத்துப் பார்க்கும் போதுகூட, உண்மையின் கண்கள் திறந்துகொள்ளும். அதன் ஆணியை யாரும் பிடுங்கிப்போட வேண்டியதில்லை.

-தொடரும்.

*

முந்தைய பகுதிகள்:

  1. ஸ்வப்னாடனம்
  2. உள்கடல்
  3. மேள