அதீத அப்பாவியாக இருப்பதன் அபாயம் – பால்சாக்

by விஜயராகவன்
0 comment

மாண்ட்கண்ட்டூர் பிரபு தீரமிக்கப் போர்வீரர் ஆவார். ஆஞ்ஜு (Anjou) சமஸ்தான சீமானின் மாட்சிமைக்காக நடந்த போரில் இவர் தன் தைரியத்தை வெளிப்படுத்தி மத வெறியர்களை வென்றதால் இவருக்கு இந்தப் பட்டப்பெயரைப் பின்னர் மன்னராக முடிசூட்டிக்கொண்ட ஆஞ்ஜுவின் சீமான் அளித்தார். ஊவ்ரே (Vouvre) பிரதேசத்தில் கட்டப்பட்ட கோட்டைக்கும் இப்பெயரே வாய்த்தது. இந்தப் போர்வீரருக்கு இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் நல்ல கத்தோலிக்கர்கள்தாம். இதில் மூத்த மகன் அரசவையில் இடம்பெற்றிருந்தார்.

புனித பார்த்தோலோமியோவின் தினத்தை முன்னிட்டு என, தந்திரமான உபாயமாக ஏற்பட்ட போர் அமைதிக்குப் பின், நம் போர் வீரர் தனது மாளிகைக்குத் திரும்பினார். தற்போது அலங்கரிக்கப்பட்டிருப்பது போல அப்போது அது சிங்காரிக்கப்பட்டிருக்கவில்லை. அப்போதுதான் வில்லெக்கியூ பிரபுவோடு இட்ட இருவர் சண்டையில் அவரது மூத்த மகன் கொல்லப்பட்ட துக்ககரமான செய்தி அவருக்குச் சொல்லப்பட்டது. இதைக் கேட்ட தகப்பன் மிகவும் நிலைகுலைந்து போனார்.

தன் மூத்த மகனுக்கு ஆம்போய்ஸ் சமஸ்தானத்தின் ஆண் கிளையைச் சேர்ந்த இளம் குலமகளுடன் மிகச் சிறப்பாகத் திருமணம் செய்ய நிச்சயித்திருந்தார். இந்த இறப்பினால் தனது பிரபுத்துவ இருப்பை உயர்த்திக்கொள்ள போட்டிருந்த திட்டம் கெட்டுவிட்டது. இத்திட்டத்தை மனதில் வைத்துத்தான் தனது இளைய மகனைக் கிறிஸ்துவத் துறவிகள் மடத்தில் இருந்த ஒரு புனிதமான துறவியின் மேற்பார்வையில் விட்டு அவனைப் பிற்காலத்தில் அனைத்து தேவாலயங்களிலும் பரிபாலனம் செலுத்தும் முக்கியமான கார்டினலாக வைக்க வேண்டும் எனும் ஆசையையும் தெரிவித்திருந்தார். இதனால் அந்தப் புனிதத் துறவி இந்த இளைஞனுக்கு எந்தக் கெட்ட எண்ணமும் மனதில் களை போல் முளைக்காத வண்ணம் தன்னுடனேயே வைத்திருந்து சீராக வளர்த்து வந்தார். இதனால் தூய உள்ளத்துடனும் பரிசுத்தமாகவும் ஒரு துறவி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி வளர்ந்து வந்தான். இந்த இளைஞனுக்குப் பத்தொன்பது வயதான போது கடவுளின் மேல் செலுத்தும் அன்பைத் தவிர வேறு எதிலும் அன்பைச் செலுத்துவது பற்றித் தெரிந்துகொள்ளவேயில்லை. புனித தேவதைகளைத் தவிர மற்றவற்றை அவன் அறியவும் இல்லை.

மேலும் இவர்களின் அரசரும், தனது துறவுப் பிரஜைகள் பரிசுத்தமாகவும் பாவங்களற்றும் இருக்க வேண்டும் என விரும்பினார். இந்த அரசரின் மக்களும் மற்ற ஆட்களைப் போல மதுக்கூடங்களில் குடித்து உருளாமலும் விலை மாதர்களின் வீடுகளில் இரகளை செய்யாமலும் ஒழுங்காக இருந்து வந்தனர். அரசருக்குத் தெய்வத்தின் கருணை மிகுந்திருந்தது. இறைவன் அனைவருக்கும் பிரபுவானவர் அல்லவா?

இம்மாதிரியான சூழலில் நம்முடைய மாண்ட்கண்ட்டூர் பிரபு தனது இளைய மகனைத் துறவிகள் மடாலயத்திலிருந்து வெளிக்கொணர்ந்து போர்வீரனுக்கும் அரசவையினனுக்குமான பழுப்புக் கொடிகளை அணிவிக்க விரும்பினார். தற்போது அவன் தரித்துள்ள துறவுக் கொடியைக் களையவும் நினைத்தார். இறந்துபோன மூத்த மகனுக்கு நிச்சயித்த பெண்ணையும் இவனுக்கே மணமுடிக்க முடிவெடுத்தார். இந்த முடிவால், அரசவைப் பெண்களால் நன்றாகக் கவனிக்கப்பட்டு கெட்டுக் குட்டிச்சுவராக இருந்த மூத்தவனைவிட, பிரம்மச்சாரியும் குடி போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவுமில்லாதவனுமாகிய இளையவனால் மணவாழ்வில் நன்றாகச் சுகப்பட அந்த மணப்பெண்ணுக்கு ஏதுவாகியது.

துறவாடையைத் துறந்து மண உடையைத் தரித்த இளையவன், மனைவி, திருமணம், பெண் போன்றவற்றைப் பற்றிச் சற்றும் அறிந்துகொள்ளாமல் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து மணந்துகொண்டான்.

இவனது அகப்பயணமானது இத்தகைய முரண்படும் தரப்புகளால் தொந்தரவிற்கு உள்ளானது. சட்ட முறைமைகளுக்கு உட்பட்டு ஒருவன் கடைபிடிக்கும் அப்பாவித்தனத்தைவிட இயல்பிலேயே அதீதமாக அப்பாவியாக இருந்த இளையவன், திருமணத்திற்கு முந்தைய முதல் நாள் மாலையில்தான் மாண்ட்கண்ட்டூர் மாளிகைக்கு வந்துசேர்ந்தான். இந்த இடத்தில் மணப்பெண்ணைப் பற்றியும் அவளது தாயாரைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். நீண்ட நாள் விதவையான தாயார், பாரீஸ் அரசவை உள்துறை அதிகாரி மாண்புமிகு ப்ராஜலோன் அவர்களின் இல்லத்தில் வசித்து வந்தாள். இந்த மாண்புமிகுவின் மனைவியானவள் லிக்னியரஸ் பிரபுவுடன் வாழ்ந்து வந்ததை அந்தக் காலத்தில் பெரும் கிசுகிசுவாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவரவர் கண்களிலேயே பல துரும்புகள் இருப்பதால் அடுத்தவர் கண்களில் இருக்கும் தும்பு தூசிகளைப் பற்றிப் பேச யாருக்கும் அருகதையில்லை. தற்போதைய நிலவரப்படி மக்கள் மற்றவர்களைக் குறித்துக் கண்டுகொள்ளாமல் எல்லாக் குடும்பங்களிலிருந்தும் அழிவை நோக்கியே போய்க்கொண்டுள்ளார்கள்.

சிலர் நடையிட்டும், சிலர் மித ஓட்டத்திலும், சிலர் நாலுகால் பாய்ச்சலிலும், மிகச்சிலர் மென் நடையிட்டும் கீழ்நோக்கி மட்டும் போகும் பாதையில் போய்க்கொண்டுள்ளனர். இதனால் சாத்தானுக்குப் பல கொண்டாட்டமான நிகழ்வுகளுக்குச் சாத்தியமானது. ஏனென்றால் தவறாக நடந்துகொள்வதே புது மோஸ்தர் என்றெண்ண மக்கள் தலைப்பட்டார்கள். “கற்புத் திருமகள்” மட்டும் இங்கும் அங்கும் அலைந்து திரிந்து நேர்மையும் ஒழுக்கமும் வாய்த்த சொற்ப எண்ணிக்கையிலான பெண்டீரோடு கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தாள். மிகவும் பிரபுத்துவம் வாய்ந்த ஆம்போய்ஸ் இல்லத்தில், சாமோண்ட் நகரத்தில் வாழ்க்கைப்பட்டு தற்சமயம் விதவையாகிவிட்ட மூதாட்டி வாழ்ந்து வந்தாள். ஒழுக்கசீலரான இவளிடம்தான் இக்குடும்பத்தின் நன்னடத்தைகளும் ஆசாரங்களும் மீதமிருக்கின்றன. இந்தச் சாகசக் கதையில் சொல்லப்படும் மணப்பெண், தனது பத்தாவது வயதிலிருந்து நமது வயதான சீமாட்டியிடம்தான் வளர்ந்து வருகிறாள். வருடம் ஒருமுறை அரசவைப் பக்கம் முகாமிடும் போது மட்டும் மகளைப் பார்ப்பதற்காகப் ப்ராஜலோன் இல்லத்திலிருந்து ஆம்போய்ஸ் கோமகள் வந்துபோவாள். இந்த அளவிற்குத் தாய்ப்பாசம் அற்று இருந்தாலும், மகளது திருமண வைபவத்திற்கு ஆம்போய்ஸ் கோமகளை அழைத்திருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் முக்கியமானவர்களைப் பற்றி அறிந்து வைத்திருந்த நமது போர்வீரர், ப்ராஜலோன் பிரபுவையும் திருமணத்திற்கு அழைத்திருந்தார். ஆனால், சளித் தொந்திரவாலும் முதுகு வலியாலும் மூட்டு வலியாலும், விதவைப் பட்டத்தைத் தரித்திருக்கும் வயதான சீமாட்டியால் தனது பேத்தியின் திருமணத்திற்குச் செல்ல முடியவில்லை. இதனால் அவள் அழுது புலம்பினாள். இந்த அழகான சின்னப் பெண்ணால் அரசவை வாழ்க்கையின் அபாயங்களைச் சமாளிக்க முடியுமா எனச் சந்தேகப்பட்டாலும், அழகிய மணமகனை மணமுடிக்க மனமார வாழ்த்தி அனுப்பி வைத்தாள். அதற்கும் முன்பாக ஒவ்வொரு நாளும் பல பிரார்த்தனைகளையும் ஜபதபங்களையும் அவளது நல்வாழ்க்கைக்காகவும் அவளது மணவாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் செய்வித்தாள். தான் வளர்த்த பெண் துறவி வாழ்க்கையை அறிந்த மணமகனைச் சேர்வதைக் கண்டு சற்றே ஆசுவாசமடைந்தாள். மணமகனை வளர்த்த புனிதத் துறவியை மூதாட்டி அறிந்து வைத்திருந்ததும் இவ்விருவருக்குமிடையே மணம் முடிக்கச் சம்மதம் தெரிவிக்கக் காரணமாயிற்று.

மணமகளைக் கட்டியணைத்தபடியே இந்த மூதாட்டி கடைசி நேர அறிவுரைகளை அள்ளித் தெளித்தாள். தாயாருக்கு மரியாதை செலுத்த வேண்டும், கணவன் என்ன சொன்னாலும் பணிந்து நடக்க வேண்டும் எனப் பல அறிவுரைகளைச் சொன்னாள். அதன்பின் கோமான்கள், கோமாட்டிகள், சிப்பந்திகள், வேலைக்காரர்கள், இசைக்கலைஞர்கள், சாமோண்ட் பிரதேச மக்கள் புடைசூழ மிகுந்த சத்தமும் ஆரவாரமும் கூடிய சூழலில் மணமகள் அரண்மனைக் கோட்டைக்குள் நுழைந்தாள். மண உறவை உறுதிசெய்ய, திருமணத்திற்கு முந்தைய மாலையில் மணமக்கள் இருவரும் பெரு விருந்தில் களித்தனர். விருந்து முடிந்தபின், பெரும் களியாட்டுடன், தேவனுக்குரிய நாளில் திருமணம் நடந்தேறியது. நமது மாண்ட்கண்ட்டூர் பிரபுவின் நண்பரான பிளாய்ஸ் நகரத்துப் பிஷப் திருமண மந்திரங்களைச் சொல்லி வைபவத்தை நடத்திவைத்தார்.

மொத்தத்தில், விருந்து, நடன களியாட்டம், மற்ற கொண்டாட்டங்கள் ஆகியவை மறுநாள் காலை வரை நீடித்தன. ஆனால், அதற்கு முன்னமே, டூவெய்ன் பிரதேசத்துச் சம்பிரதாய வழக்கப்படி நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மணப்பெண்ணின் தோழிகள் முதலிரவு படுக்கை அறைக்குள் மணப்பெண்ணை அனுப்பிவைத்தனர். அதே சமயம் மணமகனை அறைக்குள் அனுப்பாமல் வேண்டுமென்றே சச்சரவிட்டபடியே இருந்தனர். அப்பாவி மணமகனும் தனது அறியாமையால் அவர்களோடு பேசியபடியே இருந்தான். ஆனால் நமது மாண்ட்கண்ட்டூர் பிரபு, களியாட்டத்தில் ஈடுபட்டோரிடமிருந்து மணமகனைப் பிரித்துக் கூட்டிக்கொண்டு போய் முதலிரவு அறைக்குள் விட்டார். அப்போதுதானே அவன் நற்செயல் புரியமுடியும் என எண்ணினார்.

அப்பாவி கணவன், அப்பாவி மனைவியின் அறைக்குள் சென்று, அவளைக் கண் நிறைந்து நோக்கினான். இத்தாலிய, டச்சு ஓவியங்களில் இருக்கும் கன்னி மேரியைவிட இவள் அழகாக இருப்பதாக நினைத்தான். மடாலயத்தில் தினமும் கன்னி மேரியின் காலடியில் தொழுது தியானித்ததையும் நினைத்துக்கொண்டான். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் கணவனானது பற்றி கூச்சமான சங்கடத்தையும் அடைந்தான். கணவனின் அலுவல் குறித்து ஒன்றுமே தெரியாது என்பதாலும் தந்தையிடம் இது பற்றிக் கேட்க நேரமில்லாததாலும் தடுமாறினான்.

“உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்தானே? அங்கு கம்பீரமாக இரு” என்று அவனது தந்தை சொல்லியிருந்தார்.

அவனுக்கு வாழ்க்கைப்பட்ட அந்த மணப்பெண் போர்வையால் வசதியாகப் போர்த்திக்கொண்டு தலையை மட்டும் இலேசாக உயர்த்தி தன்னை எட்டிப் பார்த்தபடி படுத்திருப்பதைப் பார்த்தான். ஈட்டியும் கோடாலியும் இணைந்த ஆயுதத்தின் நுனியைப் பார்ப்பது போன்ற கூர்ந்த பார்வையை அவனை நோக்கி நுட்பமாகச் செலுத்திவிட்டு அவள் தனக்குள்ளாகச் சொல்லிக்கொண்டாள்.

“நான் அவரது சொல்லுக்கு அடிபணிந்து நடந்துகொள்ள வேண்டும்”.

நமது மணமகன் படுக்கை அருகே வந்து, காதைச் சொறிந்துகொண்டான். பின்பு படுக்கை அருகே மண்டியிட்டான். இது மட்டும் அவனுக்கு மிகவும் கைவந்த கலையாகும்.

“உனது பிரார்த்தனைகளைச் சொல்லிவிட்டாயா?” என்றான்.

“இல்லை. நான் மறந்தே போனேன், இப்போது சொல்லட்டுமா?”

பிறகென்ன, இளம் தம்பதிகள் கடவுளைத் தொழ ஆரம்பிக்க, துரதிர்ஷ்டவசமாக அவர்களது இறைஞ்சல்களைச் சாத்தான் கேட்டு வைத்து, அவர்களது முறையிடல்களுக்கு உடனடியாகப் பதில் கொடுத்தான். அப்போது கடவுளானவர் சீர்திருத்தங்களுக்கு உட்பட்ட மதத்தைப் புதிதாகத் தொடங்குவது பற்றிய வேலையில் ஆழ்ந்திருந்தார்.

“அவர்கள் உன்னிடம் என்ன செய்யச் சொன்னார்கள்?” என்றான் கணவன்.

“உங்களிடம் அன்பு செலுத்தச் சொன்னார்கள்” என்றாள் மிகவும் அப்பாவித்தனமாக.

“என்னிடம் இதைச் சொல்லவில்லையே? நான் உன்னை நேசிக்கிறேன், கடவுளைவிட அதிகமாக எனச் சொல்வதால் நான் கூச்சம்தான் அடைகிறேன்”.

இந்தப் பேச்சு மணப்பெண்ணுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை.

“உனக்குத் தொந்திரவாக இல்லை என்றால் நானும் உன்னுடைய படுக்கையில் படுத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றான் கணவன்.

“நானே தள்ளிப் படுத்துக்கொண்டு உங்களுக்கும் இடம் அளிக்கிறேன். ஏனென்றால் நான் உங்களுக்குக் கையளிக்கப்பட்டவள்”.

“நல்லது” என்றவன், மறுபடியும், “என்னைப் பார்க்காதே, நான் உடைகளைக் களைந்துவிட்டுப் படுக்கைக்கு வருகிறேன்” என்றான்.

இந்த இரசமான உரையாடலுக்குப் பின்பு அவ்விளம்பெண் பெரிய எதிர்பார்ப்போடு சுவர்ப்பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள். வெறும் மேலாடை மட்டும் அணிந்த ஓர் ஆணோடு இணைந்து சயனிக்கப் போவது இதுவே முதல்முறை. பின்பு அந்த அப்பாவி படுக்கையில் சரிந்து படுத்தான். இப்படியாக அவர்கள் படுக்கையில் இணைந்து படுத்ததாக ஒரு பேச்சுக்குச் சொல்லலாம்.

ஆனால் நீங்கள் கற்பனை செய்வதற்கு மிக தொலைவில் அவர்கள் இருந்தார்கள். கடலுக்கு அப்பாலிருந்து கொணர்ந்த குரங்கிற்கு முதன்முதலாக கொடுக்கப்பட்ட கொட்டையை அது உடைக்க முயன்றதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த வானரம் தனது வானரக் கற்பனையின் மூலம் ஓட்டிற்கு உள்ளே உள்ள உணவின் ருசியை உணர்ந்து, அந்தக் கொட்டையை முகர்ந்தும் உருட்டியும் புரட்டியும், வானரத்திற்கே உரிய கொணஷ்டைகளோடு, தனது தாடைகளை ஆட்டி ஆயிரம் விதமான பாஷையில் சொல்லக்கூடும். எனக்கு அதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. ஆஹா! என்னவொரு ஆவலோடு அதைப் பார்க்கிறது, என்னவொரு கவனத்தோடு அதை ஆராய்கிறது, எவ்வளவு தீவிரமான கவனத்தோடு அதைத் தாங்கிப் பிடிக்கிறது! பின்பு அதை உணர்ச்சி மிகுதியோடு எறிந்தும், உருட்டியும், புரட்டியும் பார்க்கிறது. பொதுவாக அவசரமும் மந்தப் புத்தியுமுடைய வானராமாயிருந்தால் கொட்டையைவிட்டு ஒதுங்கிவிடும். இதே போலத்தான் இந்த அப்பாவிக் கணவனும் விடியும் வரை முயன்றுவிட்டு தன் அன்பு மனைவியிடம், தனக்கான அலுவலை எங்ஙனம் செய்வது எனத் தெரியவில்லை எனவும், அது எம்மாதிரி அலுவல் என அறிந்துகொள்ள விசாரித்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மன்றாடி கேட்டுக்கொண்டான்.

“ஆம்” என்றாள் அவள். “நானும் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்க முடியாத நிலையில் அதுதான் சரி”. அவர்கள் முயன்ற எல்லா வழிமுறைகளும் அப்பாவித்தனமானவை. அது ஆயிரம் விதமாக இருந்தாலும், கத்துக்குட்டித்தனமானதாகும். இதைப் பற்றியெல்லாம் கல்வியில் கற்றுத் தேர்ந்தவர்கள் அறிந்திருக்க முடியாது. இப்படியாக இந்த இளம் தம்பதி திருமணப் பந்தத்தின் இரகசியத்தை அறியும்வரை, வெளியில் கேட்டால் “செய்து முடித்துவிட்டதாகச்” சொல்லிக்கொள்ள வேண்டும் என அறிவுப்பூர்வமாக பேசி வைத்துக்கொண்டனர். இன்னும் கன்னியாகவே உள்ள மணப்பெண் மலராவிட்டாலும், வெளியே வந்தவுடன் அந்த இரவைப் பற்றிப் பெருமை பீற்றலானாள். தன் கணவன் அரசன் போன்றவன் என்றாள். மற்றவர்களோடு பேசும் போது இல்லறத்தைப் பற்றி அறியாதவர்கள் பேசும் படோடோபத்தையும் பேச்சில் காட்டினாள். எல்லோரும் இந்தப் பெண்ணின் பேச்சில் இருந்த சறுக்கலைக் கண்டுகொண்டனர்.

ரோச்சி கார்பன் சீமாட்டி இதை அறிந்துகொள்வதற்காக, ஏதுமறியா இளம்பெண்ணான டி-லா-போர்டெஸியரைத் தூண்டிவிட்டு இரட்டை அர்த்தம் தொனிக்கும் கேள்வியாக மணப்பெண்ணிடம் கேட்க வைத்தாள்.

“எத்தனை ரொட்டியை உன் கணவன் அடுப்பில் வைத்தான்?”

“இருபத்திநான்கு” என மணப்பெண் பதிலிறுத்தாள்.

அப்பொழுது நம் மணமகன் கேளிக்கைக் கூட்டத்தைச் சோகமாகச் சுற்றி வந்தான். இதைக் கண்ணோட்டமிட்ட மனைவி இவனது அப்பாவித்தனம் எப்போது முடிவுக்கு வரும் என நினைத்து வருத்தமுற்றாள். மற்ற பெண்டிரோ, முதலிரவு களியாட்டத்தால்தான் மணமகன் ஓய்ந்து போனான் என்றும், உடனடியாக அவனைச் சீரழித்ததால்தான் மணப்பெண்ணும் வருத்தப்படுகிறாள் என்றும் நினைத்தனர். காலைச் சிற்றுண்டி மேசையில் நக்கல் நையாண்டி நிறைந்த பேச்சுகள் கொப்பளித்துக் கிளம்பின. ஒருவர், மணப்பெண்ணுக்கு வெளிப்படையான முகபாவமே சொல்கிறது என்றார். மற்றொருவர், நேற்று இரவு நல்ல தொழில் உபாயங்கள் நடந்தேறியிருக்கிறது, இதனால் அடுப்பே வெந்துபோனது என்றும் இரவில் இழந்ததை அந்த இரண்டு குடும்பங்களும் இனி எப்போதும் திரும்பப் பெறப் போவதில்லை என்றும் இன்னும் பல்லாயிரம் பகடிகளையும் இரட்டை அர்த்தம் தொனிக்கும் முட்டாள்தனமான சொல்லாடல்களையும் பொழியலானார்கள். ஆனால் இது அனைத்தும் துரதிர்ஷ்டவசமாக மணமகனுக்குப் புரியாமல் போனது. சுற்றத்தினர்களும், அக்கம்பக்கத்தாரும், மற்றோரும் நிறைந்திருந்ததால் ஒருவரும் படுக்கப் போகாமல், நடனமாடியும், கூத்தடித்தும், கும்மாளமிட்டும், பிரபுத்துவ திருமண நிகழ்வுகளில் வழக்கமாக நடக்கிற சடங்குகளைப் பின்பற்றலானார்கள்.

இவை அனைத்தையும் திருப்தியான பார்வையுடன் கண்டுகளித்துக்கொண்டிருந்த நமது ப்ராஜலோன் பிரபுவை நோக்கி கழுகுப் பார்வை பார்த்தாள் ஆம்போய்ஸ் சீமாட்டி. தனது மகளுக்கு நடந்துகொண்டிருக்கும் நல்நிகழ்வுகளால் கிளர்ந்தவள், பிரபுவை நோக்கி காமப் பார்வையை வீசினாள். பாரீஸ் நகரத்து ஜேப்படிக் கொள்ளையர்களையும் ரௌடிகளையும் நீதி பரிபாலனத்தில் தேர்ந்து, சுலபமாகப் பிடித்துச் சிறையில் அடைக்கும் நமது உள்துறை அதிகாரி, அதைக் காணாதது போல் நடிக்கலானார். பலமுறை இந்தப் பார்வை சமிக்ஞைகளைச் சீமாட்டி அனுப்பினாலும் அதைப் பார்க்காதது போல அவர் வாளாவிருந்தார். மேலும் சீமாட்டிதான் இவர் மேல் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தாளே ஒழிய, அவர் தார்மீகத்திற்குக் கட்டுப்பட்டுதான் அவளோடு வாழ்ந்து வந்தார். ஏனெனில் உள்துறை அதிகாரியான அவர் அறவொழுக்கம், காவல், மதம் போன்றவற்றைப் பரிபாலித்து வந்ததால், தனது வைப்பாட்டிகளை அடிக்கடி மாற்றுவது நன்றாக இருக்காது. எப்படியாகினும் இவரது கலகம் முடிவுக்கு வந்துதான் ஆக வேண்டும்.

மணநாளுக்கு மறுநாள், பெரும்பாலான மண விருந்தினர்கள் வெளியேறலானார்கள். அதன் பின்பு ஆம்போய்ஸ் சீமாட்டியும் ப்ராஜலோன் பிரபுவும் தங்கள் படுக்கையறைக்குப் போகலாம். இரவு உணவு மேஜையில், அவரை நோக்கி நூறு விதமான சைகைகளையும் பாதி வசன ஜாடைகளையும் சீமாட்டி காட்டியும் அவர் அதைக் கண்டுகொள்ளாமல் மணப்பெண்ணோடு உசாவிக்கொண்டிருந்தார். இம்மாதிரியான சைகைகளுக்குச் சட்டச் சம்பிரதாயங்களில் கடைபிடிக்கப்படும் சால்ஜாப்புகள் செல்லாது. அவரை எதிர்பார்த்துக் காத்திருந்த சீமாட்டியிடம் பிரபுவிற்குப் பதில் மணமகன் வந்து நின்றான். அந்த அப்பாவியின் மனதில் காளான் முளைத்தது போல ஓர் எண்ணம் உதித்தது. அதாவது இந்தப் பெண்மணியிடம் தனது சந்தேகங்களைக் கேட்டுத் தெளியலாம் என. ஏனெனில் தனது புனிதத் துறவியானவர் மடலாயத்திலிருந்த போது, வாழ்வின் பல ஆதாரமான கேள்விகளுக்கு வயது முதிர்ந்தவர்கள் தங்களின் அனுபவத்திலிருந்து அறிவுறுத்துவார்கள் எனச் சொல்லியது நினைவுக்கு வந்தது. அதனால் தனது பிரச்சினையை ஆம்போய்ஸ் கோமகளிடம் இரகசியமாகக் கேட்டுப் பார்க்கலாம் என எண்ணினான். ஆனாலும் நேரடியாகக் கேட்க முடியாமல் முதலில் தயங்கிக் கூச்சப்பட்டு, பின்பு நெளிந்து, தனது விஷயத்தை அவிழ்த்தான். சீமாட்டியும் நிச்சலனமாகக் கேட்டுக்கொண்டு யோசிக்கலானாள். ப்ராஜலோன் பிரபுவின் பாராமுகத்தைக் கண்டு கடுப்பானவள், தன் அருகே நடந்து வந்துகொண்டிருக்கும் ருசியான இளம் இரை இருக்க, பூனை எதற்கு முதியதை நினைத்துக்கொள்ள வேண்டும் எனக் கருதினாள்.

“இந்தக் கேனை, பழைய தாடி, முடி நரைத்த, பாழாய்ப் போன, சிக்கு பிடித்த, ஈயின் கால் மாதிரியான தாடி, புரிந்துகொள்ள முடியாத தாடி, வெட்கங்கெட்ட தாடி, பெண்டிரை மதிக்கத் தெரியாத தாடி, புரிந்துகொள்ளாத, கேட்கவும் பார்க்கவும் தெரியாத தாடி, நைந்து போன அழுக்குப் பிடித்த தாடி, எரிந்து போன தாடி. இத்தாலியக் கொள்ளை நோயில் இந்த மொண்ணை மூக்கன் போய்த் தொலையட்டும்! எரிந்த மூக்கன், உறைந்த மூக்கன், மதமற்ற மூக்கன், உலர்ந்த மூக்கன், வெளிறிய மூக்கன், ஆன்மா அற்ற மூக்கன், நிழல் போன்ற மூக்கைக் கொண்ட வீணன், கொடி இலை போலச் சுருங்கிய மூக்கன், நான் வெறுக்கும் மூக்கன், புராதன மூக்கன், களிமண் நிறைந்த மூக்கன், செத்த மூக்கன், எப்படித்தான் என் கண் இந்தக் காளான் மூக்கனைக் கண்டுகொண்டதோ? தன் போக்கைக் கணித்துக்கொள்ள முடியாத முதிய குண்டனிடம் எப்படித்தான் வீழ்ந்தேனோ? எனது பங்களிப்பை இந்த ஈரமற்ற தாடி, பழுப்புத் தாடி, குரங்கு முகத்தான், கிழிந்து போன முதியவனுக்கு அளித்ததெல்லாம் போதும். இந்த இளம் கணவனை நான் கவர்வேன், அவன் என்னை – தினமும்- பலமுறை…”

இது மாதிரியான தீர்க்கமான சிந்தனையில் இருந்தவளிடம், நம் அப்பாவி தனது பல்லவியைத் தொடங்கியவுடனேயே, மிதமாகச் சூடாகிக் கிளர்ந்து, எரிபஞ்சின் நுனி துப்பாக்கியில் பற்ற வைக்கப்பட்டவுடன் சூடாவதைப் போல, தனது மருமகனைப் பரிசோதித்துப் பார்க்க நினைத்தாள்.

“ஆஹா, நறுமணம் வீசும் இளம் தாடியே! ஆ.. அழகிய புதிய மூக்கே, பசலைத் தாடியே, அப்பாவி மூக்கே, கன்னித்தன்மை நிறைந்த மகிழ்வான மூக்கே, வசந்தகாலத் தாடியே, காதலின் குறுஞ்சாவியே!” எனத் தோட்டத்தைச் சுற்றி உலா வந்தபடியே பலவாறு பேசிய பின்பு, அந்த அப்பாவியுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு வந்துசேர்ந்தாள். அதாவது அன்றிரவு தனது அறையிலிருந்து வெளியேறி அவன் அவளது அறைக்கு வந்துவிட்டால், அவனுக்கு எல்லாவற்றையும் தெளிவாகக் கற்றுக்கொடுப்பதாகவும், அதன்பின் அவன் அவனது தகப்பனாரைவிட தேர்ந்தவன் ஆகிவிடுவான் எனவும் சொல்லியிருந்தாள். மணமகன் மிகவும் திருப்தி அடைந்து, இதைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம் எனக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டு, நன்றியும் நவில்ந்து வெளியேறினான்.

இந்தச் சமயம், நமது முதிய ப்ராஜலோன் பிரபு, “கிழட்டு மூதி, கிழட்டுப் பிணமே, உன்னைக் கொள்ளை நோய் கொண்டுபோக, புத்து நோய் சாப்பிட்டுப் போக! மதிப்பற்ற கறிவேப்பிலையே, காலுக்குப் பெரிதான பழைய செருப்பே! துருப்பிடித்த பழைய முக்காலித் துப்பாக்கியே! பத்து வருடம் பழசான மீனே! வலை விரிக்காத பழைய சிலந்தியே! கண்ணைத் திறந்து கிடக்கும் முதிய பிணமே! பழைய சாத்தானின் தொட்டிலே! ஊர்கூவியின் பழைய லாந்தர் விளக்கே! பார்வையாலேயே கொல்லும் கிழவியே! கிழவனின் முதிய நைந்த மீசையே! இறந்தவர்களையே அழவைக்கும் கிழப்பீடையே! புராதன இசை மேசையின் கால் கட்டமே! நூறு கத்திகளைச் சொருகி வைக்கும் பழைய உறையே! மண்டியிட்டதால் தேய்ந்த பழைய தேவாலயப் படிக்கட்டே!” எனத் தமக்குள்ளாக உறுமியபடியே இருந்தார்.

“எல்லோரும் காசு போட்ட பழைய உண்டியலே! என் சொத்து பூராவையுமே கொடுத்துவிட்டாவது உன்னைவிட்டு ஒழிய வேண்டுமே” எனப் ப்ராஜலோன் பிரபு தன் வைப்பாட்டியைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கையில், தனது கணவனின் பிரச்சினையைத் தீர்த்து இல்லற உறவின் முக்கியமான ஒன்றை அவனை அறிந்துகொள்ள வைப்பதில், தனது பங்காக அதைத் தெரிந்துகொண்டு அவனுக்குச் சொல்லிக்கொடுக்க நினைத்து- அதைப் பற்றித் தனக்கு ஏதும் தெரியாததால்- அது குறித்து கேட்டு அறிந்துகொள்ளலாம் என நினைத்த மணமகள், நம் பிரபுவை அணுகினாள். அவளை வளர்த்து ஆளாக்கிய சாமோண்ட் நகர மூதாட்டியும் முதியவர்களிடம்தான் அறிவுரை பெற வேண்டும் எனக் கூறியிருந்ததும் ஒரு காரணம்.

இம்மாதிரி அறிவுரை பெற்று தெரிந்துகொண்டால் தனது அப்பாவிக் கணவனிடம், “இது இப்படித்தான் என் அன்பே எனக் கற்றும் கொடுத்துவிடலாம் அல்லவா?” என எண்ணினாள். மாலை நேரத்து நினைவுகளால் துக்கப்பட்டிருந்த பிரபு, தனது அருகே வந்த இளம்பெண்ணிடம் பொதுவான கேள்வியாகக் கேட்டார்.

“இந்த இளம் கணவனோடு நீ மகிழ்வாக இல்லையா?”

“அவர் மிகச் சிறந்தவர்” என்றாள் அவள்.

“ரொம்ப நல்லவன் போல” என்றார் பிரபு புன்னகைத்தவாறே! சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஆம்போய்ஸ் கோமகளின் மகளுக்கு எல்லாவற்றையும் பற்றி சிறப்பாகச் சொல்லிக்கொடுப்பதாகப் பிரபு ஒப்புக்கொண்டு அவளைத் தனது அறைக்கு வரும்படி ஏற்பாடுகளைச் செய்துகொண்டார்.

அன்று இரவு உணவிற்குப் பின்பு ஆம்போய்ஸ் சீமாட்டி நம் பிரபுவை நோக்கி, தனது செல்வத்தாலும் ஒழுக்கத்தாலும் பிரபுத்துவ இருப்பாலும் எவ்வளவு மதிப்பைச் சேர்த்து வருகிறாள் என்பதைப் பற்றியும், ஆனால் அதைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் நன்றி பாராட்டாமல் பாராமுகமாக இருக்கும் பிரபுவின் போக்கையும் அரை மணிநேரத்திற்குப் பிலாக்கணம் வைத்து ஓலமிட்டாள். இதனால் இவர்கள் இருவரும் நூறு விதக் கத்திகளை உருவ நேரிட்டாலும் அதை அனைத்தையும் உறையிலேயே வைத்திருந்தனர். இதே நேரம், தாங்களிருவரும் மகிழ்ந்திருக்க வேண்டி, புதிய தம்பதியினர் செய்ய வேண்டிய காரியத்திற்காகப் படுக்கையைவிட்டு நீங்க முற்பட்டனர். கணவன் தனக்கு ஏதோ தலைச்சுற்றல் போல் உள்ளது, அதனால் வெட்டவெளியில் உலவிவிட்டு வருவதாகச் சொன்னான். அவனது கன்னி மனைவியும் நிலவொளியில் வெளியே போய்விட்டு வரச்சொன்னாள். இருவரும் இருவேறு நேரங்களில் தங்களின் ஆசான்களை நோக்கி அவர்களின் அறைக்குச் சென்றனர். நீங்கள் நினைத்தபடியே அவர்களின் ஆசான்கள் பொறுமையற்று காத்துக் கிடந்தனர். அதன்பின் அவர்களுக்கு மிக நல்ல முறையில் படிப்பினைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

எப்படி என்பதை என்னால் சொல்லிக்காட்ட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான போக்கும் கருத்துருவாக்கமும் இதில் உள்ளது. எல்லா வகையான விஞ்ஞான முறைமைகளிலேயே இதில்தான் பலவகைப்பட்ட கருத்துருவாக்கங்கள் உள்ளன. இதில்தான் மாணவர்களும் இதன் இலக்கணங்களையும் பாடங்களையும் மொழியையும் மிகுந்த உற்சாகத்தோடும் ஈர்ப்போடும் படித்துக்கொள்கிறார்கள்.

தம்பதியினர் இருவரும் எல்லாம் முடிந்து தங்கள் கூட்டிற்குத் திரும்பினர். அதன்பின் தாங்கள் கற்ற கல்வியின் மூலம் பரஸ்பரம் மகிழ்வித்துக்கொண்டனர்.

“ஆ… என் அன்பே!” என்ற மணமகள், “நீங்கள் எனது ஆசானைவிட அதிகம் கற்றுள்ளீர்கள்”.

இம்மாதிரியான வித்தியாசமான செயல்பாடுகளால் அவர்கள் இருவரும் தாம்பத்திய சுகத்தின் துல்லியமான உச்சத்தை அடையவும் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்கவும் முடிந்தது. திருமணப் பந்தத்தில் நுழைந்தபின் அவர்கள் மற்ற அனைவரையும்விட, அவர்களின் ஆசான்களையும் சேர்த்துத்தான், எவ்வளவு சிறப்பான மண வாழ்வு வாழ முடிந்தது என்பதைப் பற்றி உணர்ந்தார்கள். அதன்பின் மீதமுள்ள நாட்கள் அனைத்திலும் அவர்கள் இருவரும் சட்டப்பூர்வமான இல்லற லௌகீகத்தைத் தவறாமல் கடைபிடித்து மகிழ்ந்திருந்தனர். தனது வயதான காலத்தில் மாண்ட்கண்ட்டூர் பிரபு தனது நண்பர்களிடம் சொல்வார்.

“என்னைப் போல இருங்கள். உறையில் இருக்கும்போது கத்தியை இலவு காக்கலாம், உருவும் போது அல்ல”.

உண்மையான தாம்பத்திய உறவின் தார்மீக அறம் அதுவே ஆகும்.

*

ஆங்கில மூலம்: The Danger of being too innocent, Honoré de Balzac, Published by Dodo Press, May 2008 Edition.