மீண்டுமொரு சந்திப்பு

by கமல தேவி
0 comment

தை மாதத்தின் பின்பனிப் புகைமூட்டம் சென்னையின் சாலையில் நகரும் திரையென நடக்க நடக்க முன் சென்றுகொண்டிருந்தது. சற்று மூச்சு வாங்க சாலையோர சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன். பின்னால் பன்னீர் மரம். இரவில் மலர்ந்த மலர்களின் நறுமணம் என்னைச் சுற்றிப் பரவியிருந்தது. ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டதும் மனதிற்குள் சின்னதொரு குதூகலம் போன்ற உணர்வு. பள்ளிக்கூடத்து மைதானம் நினைவிற்கு வந்தது. பக்கவாட்டிலிருந்த சுற்றுச்சுவரைத் தாண்டி எட்டிக்கொண்டிருந்த செம்பருத்திக் கிளையின் இலைகளில் இருந்து பனிநீர் ஒவ்வொரு சொட்டாக விழுவது போடியம் விளக்கொளியில் படக்காட்சி போலத் தோன்றி மறைந்துகொண்டிருந்தது. அடுத்தச் சொட்டு தாமதமாக நீட்டப்பட்ட என் கைகளிலிருந்து தப்பியது.

சென்ற மாதத்தோடு எழுபது வயது முடிந்துவிட்டது. கடற்கரைக்குச் செல்ல மாலாவிடம் அனுமதி கேட்டவுடன் வயதை முதலில் சொல்லிக்காட்டினாள். ‘விடிஞ்சு போனா என்ன?’ என்று கேட்டாள். குளிராடையின் பைகளில் கைகளை நுழைத்து அண்ணாந்து மேலே பார்த்தேன். முகத்தில் விழுந்த துளி நீரால் முழு உடலும் அதிர்ந்தது. தலைக்கு மாட்டும் துணியைச் சரிசெய்துகொண்டேன். உள்ளே சட்டைக்கும் பனி ஆடைக்கும் இடையில் சிக்க வைக்கப்பட்டிருந்த புத்தகம் அசைந்து நெஞ்சைத் தொட்டது. கைகளை மடியிலிருந்து எடுத்து புத்தகத்தையும் சேர்த்தபடி குறுக்காகக் கட்டிக்கொண்டேன். 

குளிருக்கு இவ்வாறு கைகளைக் கட்டிக்கொண்டு கல்கத்தாவின் அந்த இடுங்கல் தெருவின் சிறு வீட்டில் முதன்முறையாக நுழைந்தது நினைவில் வந்தது. சின்னச் சின்னத் தடுப்புகள், திரைச்சீலைகளை வைத்து அகன்றதோர் அறையை வீடாக மாற்றியிருந்தாள்.

என்னுடன் அரவிந்தனும் வந்திருந்தான். திருமகள் கதவைத் திறந்து, “வெல்கம்.. வெல்கம்..” என்றாள். அந்த அதிகாலை அமைதியில் அவளின் சிரிப்பொலி தனித்து ஒலித்தது.

கழிவறைக்குச் சென்று வந்ததும், “யாராச்சும் ஒருத்தர் எனக்கு ஹெல்ப் பண்ண வாங்க…” என்று சமைக்கும் இடத்திலிருந்த தடுப்பின் மேல் முகத்தை வைத்து அழைத்தாள். வட்டம் மாற்றிய சற்று சதுர முகம் என்று சொல்லலாம்.

முதன்முதலாக கலாசபையில்தான் அவளைப் பார்த்தேன். ஒத்த வயது. பரத நாட்டியத்திற்காகக் கட்டிய சிவப்புப் புடவையில் ஒல்லியான பெண்ணாக மேடையில் வந்து நின்றாள். கண்ணனை யமுனையின் கரைகளில் தேடினாள். பார்வையில் கண்ணன் பட்டதும் கண்களை அகல விரித்தாள். உடல் ததும்பும் பரவசத்தில் தத்தளித்தாள். அவன் பேச்சுக்கு நாணும் அவளின் முகவாயை நிமிர்த்தி நிமிர்த்திச் சலிக்கும் கண்ணனாக மாறினாள். எங்கோ மறைந்து போன அவனை மீண்டும் தேடினாள். அலைபாயும் விழிகளுடன் ராதையாகத் தனித்து சமைந்து நின்றாள்.

சமையலறை தடுப்பிற்குப் பின்னே அவள் முதுகு தெரிகிறது. வயதைக் கடந்துவரும் வழியில் அந்தச் சிறுபெண்ணைத் தூக்கி எறிந்துவிட்டாளா, இல்லை.. ஔித்து வைத்திருக்கிறாளா? கறுப்பு டீ சர்ட்டும் அகன்ற கால்சராயும் அணிந்திருக்கிறாள். ஏன் இந்த நீ்ண்ட கூந்தலை மட்டும் விட்டுவைத்திருக்கிறாள் என்று தெரியவில்லை. 

என்னை ஒருமுறை பார்த்துவிட்டு அரவிந்தன் தன் கால்களை நீட்டி அமர்ந்தான். நான் எழுந்து சென்றேன். தேநீர்க் கோப்பைகளை மிகச்சிறிய கழுவுத்தொட்டியில் கழுவிக்கொண்டிருந்தாள். அடுப்பில் தேநீருக்கான நீரில் தேயிலைத்தூளை இடச்சொன்னாள். சென்னையின் வீட்டைவிட்டு, வேலையை விட்டு, இங்கு எதற்கு இப்படி இருக்க வேண்டும்? இவளுக்குப் புது இடங்களுக்குச் சென்றுகொண்டே இருக்க வேண்டும். படிப்பையும் வேலையையும் காரணமாகச் சொல்லி வீட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறாள். பத்து ஆண்டுகளில் இது நான்காவது ஊர்.

அடுப்பிற்குப் பக்கவாட்டிலிருந்த சிறு குப்பியை எடுத்தேன். அதற்கும் சற்று மேல் இருந்த தாங்கிப் பலகையில் பிளாஸ்ட்டிக் டாப்பாக்களின் மேல் புத்தகம் ஒன்று இருந்தது. திரும்பி தடுப்பைத் தாண்டி ஒரு சுற்று நோட்டம் விட்டேன். ஆங்காங்கே புத்தகங்கள். அரவிந்தன் அமர்ந்திருந்த நீண்ட பலகை மேலிருந்த மெத்தையில் நான்கு புத்தகங்கள். அதில்தான் உறங்குவாள் என்று தோன்றியது.

“ஜனா… ஏலப்பொடி தெரியுதா? மூணு சிட்டிகைக்கு மேல போனா தேவபானத்தை வாயில வைக்க முடியாது…”

நான் மிகக்கவனமாக அதை அளந்து கொதிக்கும் தேநீரில் கலந்தேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். வடிகட்டியுடன் தடுமாறிய என்னிடமிருந்து அதை வாங்கி உதவ மாட்டாள் என்பது நன்றாகத் தெரிந்ததால் ஆங்காங்கே சிந்திய தேநீருடன் வேலையை முடித்தேன்.

சமையல் மேடையைத் தூய்மை செய்துவிட்டு நாற்காலியில் அமர்ந்ததும் தேநீரை நீட்டினாள். பீடம் போலிருந்த ஒன்றில் அமர்ந்து சம்மணமிட்டபடி, “எப்படியோ முப்பத்தஞ்சு வயசுல விவாகத்த  முடிச்சுட்ட..” என்று என்னைப் பார்த்துச் சிரித்தாள். சிரிப்பு தேநீருக்கானது.

“வேணான்னுதான் இருந்தேன்னு ஒனக்கே நன்னா தெரியும். ஸ்ரீரங்கத்துக்கே காலு இழுத்துண்டு போறச்ச என்ன பண்றது… எஸ்.ஆர்.சி காலேஜ் வரைக்கும் மனசு அலையடிக்கறப்ப பண்ணின்டா என்னன்னு பண்ணியாச்சு.”

“எதோ ஸ்பீச்சுன்னுதானே போன? ஸ்டூடெண்ட்டா?”

“என்னைய பாத்தா உனக்கு எப்பிடி இருக்கு… சின்ன கொழந்தைகள் பின்னாடி சுத்துற ஆளாவா? எனக்கு கீழ பிறந்தவளுக்கே பதினைஞ்சு வயசுல கொழந்தை இருக்கா…”

அவள் என் கண்களைப் பார்த்துச் சிரித்தபடி, “இந்த நா.பா.வோட பொன்விலங்கு நாவல் ஞாபகம் வர்றது. சத்தியமூர்த்தி தன்னோட மோதிரவிரலை பாத்துண்டே மோகினி கிட்ட சொல்வானே? இந்த விலங்கைக் கழற்றினாலும் எனக்கு வேதனை, கழற்ற முடியாவிட்டாலும் வேதனைன்னு.. அந்த மாதிரியா?” என்று புருவங்களை உயர்த்தி மீண்டும் சிரித்தாள்.

அரவிந்தன் மௌனமாகத் தேநீர் உண்டு, தானுண்டு என்று இருந்தான். அவன் பொன்விலங்கு நாவலை மனப்பாடமாக ஒப்பிப்பவன். வேறு இடமாக இருந்தால் அவன் பேச்சை மீறி என் குரலைக் கொண்டுசெல்ல அத்தனை பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். 

“காவிரி கரைவேலி சம்மந்தம்… நல்ல வரும்படி வேற…” என்றாள். இதற்கு மேல் இவளிடம் பேசக்கூடாது என்று அமைதியானேன்.

“நீ எப்படி…” தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு மீண்டும் அவளே தொடங்கினாள்.

“நீ அந்த வட்டத்துக்கு வெளியே நிக்கறேன்னு நெனச்சேன். விருட்டுன்னு குறிவச்ச துப்பாக்கி குண்டு கணக்கா மையத்துக்கு போயிட்டியே? காதல்ங்கறது மேலதான் எனக்கு எல்லா கேள்விகளும் ஒத்த காலுல நின்னு சாதகம் பண்ணுது…”

சட்டென்று அரவிந்தன் சிரித்துவிட்டான்.

“நடராஜனோட தூக்கின பாதத்தைதான் பாக்க முடியும்.. ஆட்டத்த நாமதான் கற்பனை பண்ணனும். அந்த ஆட்டம் தான் புல், பூண்டு, மரஞ்செடியா, ஜீவனாக இந்த மண்ணுல உயிரா உருவாகறது. நாட்டியமாடற நோக்கு தெரியாதா?”

“கற்பனைன்னு நீயே சொல்லியாச்சு. அதுவுமில்லாம நான் பரதமாடியே வருஷக்கணக்காறது… அதைவிடு நீ எதுக்கு சிரிச்ச…”

இதோடு போனால் போகிறான் என்று என்னை விடுவித்துவிட்டு அமைதியாக இருந்த அரவிந்தனிடம் திரும்பினாள்.

அரவிந்தன் காலியான தேநீர்க் கோப்பையைச் சுற்றிக்கொண்டிருந்த வலது கையை எடுத்து நகத்தை கடிக்கத் தொடங்கினான். தன் இயல்பிற்கு மாறாக வார்த்தைகளைக் கவனமாகத் தணிக்கை செய்கிறான்.

எனக்குத்தான் அப்படிப் பேசத் தெரியவில்லை. இவளிடம் நீள நீளமாக உளறி வைக்கிறேன். நட்பில்கூட ஆளாளுக்கு இயல்பை மாற்றிக்கொண்டிருந்தால் நாம் என்னாவது என்ற சமாதானத்தை வேறு வைத்திருக்கிறேன்.

“கேள்விகள் எல்லாம் ஒரே புள்ளியில சேர்றதுன்னா பதில் கிடைச்சாச்சுன்னு அர்த்தமாகறது…” என்று அரவிந்தனின் குரல் சன்னமாகக் கேட்டது.

“அதெப்படி… ஆறெல்லாம் கடலில் சேருங்கறதால குடிக்கற தண்ணியாகுமோ? சகிக்க மாட்டாத உவர்ப்பால்ல போயிடறது… அதுலருந்துதான் மழ பெய்யறதுன்னு மறுபடி சுத்தி வரப்படாது…”

“அப்படி சுத்தி வராம பதில் எப்பிடி கண்டுபிடிக்கறது…”

“பதில் வேணுன்னு சொன்னேனா? கேள்வி இருக்குனுல்லா சொன்னேன்… எதுன்னாலும் ப்யூரஸ்ட் ஃபார்மா இருந்தா மனுஷாளுக்கு உபயோகப்படாதுன்னு நன்னா தெரியறது. மொத்த மானுசாளும்… கால தேச வர்த்தமானத்துல சலிக்காம காதலையே பேசிக் கொண்டாடி தீர்க்கறப்ப நமக்கும் புத்தி சும்மா நிக்க மாட்டேங்குது… என்னவாக்கும் அதுன்னு..”

“அதான் சொன்னியே… கொண்டாடி அப்புறம் தீர்த்துடறதா..”

“அதப்பத்தில்லாம் எனக்கு அக்கறையில்லை. அதை வச்சுண்டு நடக்கற ஆதிக்கம். அதோட பிரதிபலனா மிச்ச வாழ்க்கையையும் அடகு வைக்கறததான் சிக்கல்ன்னு சொல்றேன்…”

“ம்…” என்ற அரவிந்தன் அமைதியானான்.

“உன்னோட இசம் என்ன சொல்லுது ஜனா?”

நான் நிமிர்ந்து அமர்ந்தேன்.

“எல்லாமே சமத்துவம்ன்னா… காதல்லயும் அதுதானே…”

“அதெப்டி முடியும் ஜனா… சமமா இருக்கறதுதானே சமத்துவமாகும்? ஒசரத்தை கீழ எறக்கி வச்சுண்டு என்ன வியாக்கியானம் பண்ணினாலும் அசட்டுத்தனமால்ல இருக்கு.”

நான் பெருமூச்சுவிட்டேன். மேசையின் மீது துருவங்களை இணைத்த இரும்பு அரை வளையத்தினுள் பூமிப்பந்து சாய்ந்திருந்தது. அரவிந்தனின் கைப்பட்டு பூமி சுழன்றது.

“சரி… குளிச்சுட்டு வாங்க. நீங்க இருக்கற வரைக்கும் நீங்கதான் சமைக்கணும். எனக்கும் சேர்த்து…”

அரவிந்தன் எழுந்து அறையினுள் சென்றான்.

“ஒடம்புக்கு சுகமா திரு…”

“இந்த பொண்ணுங்களே இப்பிடித்தாம்பீங்க. சொல்லாமலே இருக்கலாம்…”

“அப்படீன்னா பிரச்சினை இருக்குல்ல? பாத்துக்கோ…”

“வலியில்லாத நாள் உண்டான்னு நீ கேட்டிருக்கணும்…”

எதிரே அமர்ந்திருப்பவளை ஒருபோதும், எந்த வார்த்தையாலும் சமாதானப்படுத்த முடியாது. யார் யார் மீது கோபம் என்று கேட்கவும் முடியாது. மொத்தச் சமூகத்தையும் வரலாறையும் கொண்டுவந்து நிறுத்துவாள்.

“புதுசா என்ன எழுதற…”

“எல்லோரையும் மனசுக்குள்ள ஏத்திண்டு அவாளா இருந்து எழுதறேன்…”

அவள் முகத்தைப் பார்த்தேன். நடுக்கடலைப் பார்ப்பதைப் போல முதலில் திகைப்பாக இருந்து, பின் பதற்றம் போல மாறியது. எப்போதும் கேட்க நினைக்கிற கேள்வி தயங்கி நின்றது.

“என்ன ஜனா… சொல்லு…”

“ஏன் உன் இயல்பை நீயே திரிச்சு வேறொன்னா மாத்தற…”

“திரிச்சு உருமாத்தம் பெறாத எதையும் இங்க யாரும் மதிக்கறதில்ல ஜனா…”

“அப்படீயில்ல…”

“நீ குழந்தையா இருக்கறச்ச உங்கம்மா கொஞ்சி பேசிறச்ச அத்தன ஆசையா இருக்கும். வயசாகியும் அப்படி பேசறது கொஞ்சம் மனசுக்கு ஒத்துக்காம ஆறதுன்னு நீயே சொல்லுவியே.”

“அது இன்னும் ஞாபத்துல இருக்கா! எப்பவோ ஒரு மனத்தாங்கல்ல சொன்னேன்.”

“அம்மாவோட சின்னபிள்ள குணாதிசயம் அவ முகத்துல வெளிப்படறது. உனக்கு ஒத்துக்கல. எல்லாவளுக்கும் குறைச்சோ நீட்டியோ அந்த குணம் உண்டு தெரியுமா? அவ மாத்திண்டு இருக்கணும். அது தெரியாத வெகுளியா போயிட்டா…”

பன்னீர் மரத்திலிருந்த இலை ஒன்று தரையில் விழும் சலனத்தில் மெதுவாய் கண்களைத் திருப்பினேன். மிக மெல்ல அந்த இலை தரையில் படர்வதைப் போல மிதந்து வந்து விழுந்தது. மெல்லிய ஔி வந்திருந்திருந்தது. கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

மணலில் கால்கள் புதைந்தன. அக்னி அவிந்தவிந்து உண்டான இந்த மண்ணுருண்டையின் எத்தனை மென்மையான ரூபம் இந்த மணல்! ஆனாலும் நடக்க எத்தனை சிரமம். இதன் கெட்டிப்பட்ட மேனி அழியாமல் இருந்திருந்தால் இத்தனை ஜீவகோடிகள் எப்படி வந்திருக்கும்? இத்தனை உதிரியாக இருந்தாலும் உபயோகமில்லை. இந்த மணலைத் திரித்துத் திரித்து மண்ணாக ஆக்குகிற ஒரு களிம்பு. மண்ணும் நீரும் காற்றும் ஔியும் ஆகாசமும் சேர்ந்து அந்தப் பிசுக்கை உண்டாக்கி ஜீவன்களை ஒட்டி வைத்திருக்கிறது.

மாலாவின் அழைப்பின் ஒலி மனதைக் கலைத்தது. அலைபேசியின் காதுக்கருவியைப் பொருத்திக்கொண்டேன். 

“உங்க ஃப்ரெண்டை பாத்தாச்சா…”

“எலியட்ஸ் மெமோரியலை பாத்துண்டே மணல்ல  நடக்கறேன்…”

“பாத்து பேசுங்கோ. இந்த வயசிலயும் மனஸ்தாபம் பண்ணிண்டு வந்து புலம்பாதீங்க…”

“நான் வம்புக்குன்னே போறாப்ல பேசறியே…”

“ஆமா நான்தான் வம்பு பேசறேன். உங்களுக்கும் அவாளுக்கும் எத்தனை எத்தனை மனஸ்தாபம்…”

“சரி விடு…”

“அவாளுக்கு என்ன எடுத்துண்டு போறேள்…”

“ஒன்னுமில்லை…”

“பார்த்து மூணு வருஷமாச்சே… ஏதானும் வாங்கிண்டு போறதில்லையா… வயசு ஆச்சு ஒருபாடு… ஒரு விவஸ்தையும் தெரியறதில்ல… என்னிட்ட கேட்டா என்ன?”

“அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது. கடற்கரையிலருந்தும் நான் செமையத் தூக்கிண்டு போணுமாம்பா…”

“நல்ல ஸ்னேகிதாள்…” என்று பேச்சை முடித்தாள்.

மாலா சொல்வதும் சரிதான். நாற்பது ஆண்டுகால நட்பில் பேசாமல் இருந்த மாதங்கள் எத்தனை எத்தனை! பார்த்து மூன்றாண்டுகளுக்கும் மேலாகிறது.

மாறாத குதூகலத்துடன் அலைகள் வந்து வந்து திரும்பிக்கொண்டிருந்தன. வந்து வந்து திரும்புவதன் ஓசை வலுவாகக் காதுகளை அறைந்தது. கடல் பக்கத்திற்குச் செல்லும்போது இளம் சிவப்புநிறக் குர்தா கண்களில் பட்டது. உற்றுப் பார்த்தேன். திரு நடந்து வந்துகொண்டிருக்கிறாள். நடையில் துவட்டம் தெரிகிறது. அவளும் எழுபதைத் தொடுபவள்தானே? நெற்றியின் வட்டப்பொட்டு முதலில் தெரிகிறது. பின் புன்னகை.

“ஜனா… எப்பிடி இருக்க?”

நேற்று பார்த்துப் பேசிவிட்டு மறுபடியும் இன்று பார்ப்பதைப் போன்ற பாவனை. அவள் மாறவே இல்லை.

“வயசுக்குண்டான உடம்பு… நீ எப்படியிருக்க?”

“அதேதான்…”

அவள் முகத்தில் நன்றாக வயோதிகம் பழுத்திருந்தது. 

“இவ்வளவு தூரம் வரணுமேன்னு இருந்துச்சு. அப்பவே வரணுன்னு முடிவு பண்ணிட்டேன்…”

நான் சிரித்தேன். இன்றைய முதல் சிரிப்பு. சட்டென இன்னமும் இவள் பேச்சுக்குச் சிரிப்பு வருகிறது. யாருக்கான சுவையையோ எங்கேயோ மாற்றி வைத்து விளையாடும் இந்த லோகம் உண்மையில் மாயம்தான்.

மிக மெல்ல இருவரும் கடற்கரை மணலில் அமர்ந்தோம்.

“அரவிந்தனுக்கு என்னாச்சு திரு…”

“டிமென்சியான்னு சொல்றாங்க… ரொம்ப சிரமப்படறான்…”

“ஒரு நா வர்றேன்…”

“வந்துட்டு… என்னைய மறந்துட்டியேடான்னு புலம்பக்கூடாது.”

“எப்படி திடீர்னு?”

“படிப்படியாதான் தெரிஞ்சது. எங்க ரெண்டு பேரோட அம்மாக்கள் கிட்ட சேர்ந்து வாழறதுக்கு அனுமதி கேட்டப்பவே அரவிந்தனுக்கு பீ.பி இருந்துச்சுன்னு உனக்கே தெரியும். அதுதானே எல்லாத்துக்கும் ஆதிகர்த்தா… இந்த தேகத்துக்கு எதாவது ஒரு நோய் வந்தாகணுமே?”

“ம்..”

கொஞ்சநேரம் கடலையும் மணலையும் மாறி மாறிப் பார்த்தபடி இருந்தோம். இது பாலையும் இல்லை, சோலையும் இல்லை. விலகிச் செல்லச்செல்லக் களிம்புகளை உருவாக்கி ஒன்றாகும் இரண்டின் ஆதிமூலங்கள். ஏன் என் மனம் கண்ட கண்ட யோசனைகளைப் புரட்டிப் போடுகிறது! மனதை மாற்றித் திருப்பிவிடுவதற்காகச் சற்றுத் தொலைவில் மணல் மேட்டுப்பகுதியை நோக்கிப் பார்வையைத் திருப்பினேன். வாடாமல்லி நிறமாக மட்டும் அடம்பின் பூக்கள் மங்கலாகத் தெரிந்தன. அந்த மேடு முழுவதும் பசுமையாக அடம்பு படர்ந்திருந்தது. 

குளிர் ஆடைக்குள் இருந்த புத்தகத்தை எடுத்து அவளிடம் நீட்டினேன். அதை வாங்கி திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

“வாசிச்சுட்டு சொல்லு…”

“நான் ஒனக்கு ஒன்னுமே வாங்கிட்டு வரலயே…” என்று கைவிரித்தாள்.

“ஒருத்தர் எதானும் தந்தா இன்னொருத்தரும் தரணுன்னு அவசியமில்ல…”

“இந்த பிரபஞ்சமே ஒரு கணக்குதான். இல்லாட்டா எல்லாமே கொலாப்ஸ் ஆயிடுல்ல ஃப்ரோபசர் சார்…”

“….”

இவளுக்குப் பள்ளிக்கூடத்துப் பாடம் இத்தனை வயதிற்குப் பிறகு ஆச்சரியமாகத் தெரிகிறது. புதிதாக எதையோ தொடர்புபடுத்திப் பார்க்கிறாள். ஆமாம், சற்று முன் நான் மணல்வெளியையும் கடல்நீரையும் வம்பிற்கு இழுத்ததைப் போல எதுவோ ஒன்றை இவளும் பிடித்து இழுத்துப் பார்க்கிறாள். ஒத்த வயதின் இரட்டைச் சரடு.

“நீ எப்பவும் சொல்ற மாதிரி ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்பத்துல, சமூகத்துல இருக்கிற மேடு பள்ளங்களை அப்படியொன்னும் நிரப்ப முடியுன்னு தோனல…” என்றேன்.

அவள் புன்னகைத்தாள்.

“உன்னோட உமை எப்படி இருக்கா…?”

“லோ பிளட் ப்ரஷர்தான் அவளை படாப்படுத்தறது. மறந்துட்டனே… மாலா உன்னோட மனஸ்தாபம் பண்ணிக்காம வரச்சொன்னா…”

“நம்மள பத்தி அவ என்ன நெனச்சுருக்கா…”

“ரெண்டும் ரெண்டு பிரகஸ்பதிகள்… ஒன்னு தலையில ஒன்னு கால் வச்சு ஏறப் பாக்றதுன்னு நெனப்பாள்ன்னு தோணுது…”

“சரிதான்…”

“நேரமாச்சு… போலாமா?”

எழுந்து கையை நீட்டிய பின்தான் திரு என்று உறைத்தது. மாலாவிற்குக் கைநீட்டி நீட்டி அனிச்சைச் செயலாகவே மாறிவிட்டது. இவள், ‘உன்னால முடியறச்சே என்னால முடியாதாம்பா’ என்று நினைக்கும்போதே என் கையைப் பிடித்துக்கொண்டு எழுந்தாள்.

இன்னொரு கையையும் என் கை மேல் வைத்து, “நாளைக்கு கல்கத்தா கிளம்புறோம்” என்றாள்.

துள்ளி வரும் கடல் அலைகளின் அருகில் சென்றோம். இளம் சூரிய ஔியில் சிறுமியைப் போல ஒரு கையால் என் கையைப் பற்றியபடி குனிந்து கிளிஞ்சல்களை எடுத்தாள். என்னைக் குனியச் சொல்வாளோ என்று பதற்றமாக இருந்தது. இடுப்பில் வலி கடுகடுத்தது.

“கிளிஞ்சல் பொறுக்கறது எத்தனை சந்தோசம் பாத்தியா?” என்று கைகளில் தந்தாள்.

நான் தலையட்டிக்கொண்டேன். இருந்ததிலேயே அழகான கிளிஞ்சல் ஒன்றை வலது கையில் வைத்து விரலால் தடவினேன். மெல்லிய வரிகளின் சொரசொரப்பிற்கு அடியில் தண்ணீரை அடுக்காக்கிச் செய்த சிப்பியின் உள்புறம். தொடுதல் அறியாத தொடுதல் போல வழவழப்பாகச் சிப்பியென மாறிய ஒன்றிலிருந்து விரலை எடுக்க முடியாமல் வைத்துக்கொண்டிருந்தேன். சட்டென்று அதை வைத்திருப்பது அசௌகரியமாக இருந்தது. அலை வந்து தொடும் இடத்தில் வீசினேன். சற்று நேரம் சென்று திரும்பிப் பார்த்தேன். அது கடலிலா மணலிலா என்று தெரியாது கண்களில் இருந்து மறைந்திருந்தது. 

அன்று கலாசபாவில் திருவின் நாட்டியம் முடிந்தபின் கூட்டம் கலைந்திருந்தது. யாரும் கவனிக்காத பொழுதில் மேடையில் தொங்கிய வண்ணக் காகிதங்களை ஆசையாசையாய்ப் பிய்த்தெடுத்து கைகளில் வைத்துக்கொள்ளும் திரு கண்முன்னால் வந்தாள். 

குழந்தை அனுமன் விரும்பிய சிவந்த பழம் போலச் சூரியன் கடல் மேல் எழுந்துகொண்டிருந்தான். ஔியில் மின்னும் அலைகளையும் சிப்பிகளையும் பார்த்துக்கொண்டியிருந்தேன். திரு என் கைகளை இழுத்தபடி சிப்பிகளுக்காக நகர்ந்து நகர்ந்து சென்றாள். மனம் அனிச்சையாக ‘ஓம் அஸ்வத்வஜாய வித்மே’ என்று சொல்லத் தொடங்கியது.