தோற்றுப்போன புரட்சியாளனின் பிறந்தநாள் – எட்கர் கீரத்

by செங்கதிர்
0 comment

ஒரு காலத்தில் செல்வந்தன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் பெரும் செல்வந்தன். அளவுக்கு மீறி பணம் வைத்திருப்பதாகச் சிலர் சொல்லிக்கொண்டார்கள். பல வருடங்களுக்கு முன்பு அவன் எதையோ புதிதாகக் கண்டுபிடித்திருந்தான் அல்லது யாரோ ஒருவர் கண்டுபிடித்திருந்ததைக் களவாடியிருந்தான். அது நடந்து ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டதால் என்ன நடந்ததென்று அவனுக்கே ஞாபகமில்லை. அந்தக் கண்டுபிடிப்பைப் பெரும் நிறுவனம் ஒன்றுக்கு ஏராளமான தொகைக்கு விற்றுவிட்டான். கிடைத்த பணம் மொத்தத்தையும் நிலத்திலும் நீரிலும் முதலீடு செய்தான். வாங்கிய நிலத்தில் சிறு சிறு கான்கிரீட் சதுரங்களைக் கட்டி சுவர்களுக்காகவும் கூரைகளுக்காகவும் வெறிகொண்டு அலையும் மக்களிடம் விற்றான். தண்ணீரைப் புட்டிகளில் அடைத்து தாகங்கொண்ட ஜனங்களிடம் விற்றான்.

எல்லாவற்றையும் அளவுக்கு மீறிய விலைக்கு விற்று முடித்த பின் தனது பிரம்மாண்டமான அழகிய மாளிகைக்குத் திரும்பி சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தான். அப்படி யோசித்ததைவிட தனது இந்த வாழ்க்கையில் வேறென்ன செய்வது என்று அவன் சிந்தித்திருக்கலாம். சற்றும் சுவாரஸ்யம் குறைவில்லாத கேள்விதான் அது என்றாலும் அத்தனை பணம் வைத்திருக்கும் சீமான்களுக்கு இது மாதிரியான யோசனைகளுக்கு இடம் தருமளவுக்குப் போதிய நேரமிருப்பதில்லை. 

தனது மாளிகையில் அமர்ந்தவாறு குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துடன் விற்க வாய்ப்பிருக்கும் வேறு பல திட்டங்களைப் பற்றியும் தன்னை மகிழ்விக்கக்கூடிய மற்ற விஷயங்களைக் குறித்தும் அவன் யோசிக்க முயன்றான். தனிமையில் வசித்த அவனுக்கு சந்தோஷத்தை அளிக்கக்கூடிய விஷயங்கள் தேவையாக இருந்தன. அவன் தனிமையில் இருப்பதற்குக் காரணம், அவன் மோசமானவன் என்பதில்லை. மிகவும் நல்லவன். பிரபலமானவனும்கூட. எனவே, அவனுடன் பழகவெனப் பலரும் விரும்பினார்கள். ஆனால், நுண்ணுணர்வு மிக்கவனாகவும் சந்தேகப் புத்தியுள்ளவனாகவும் இருந்த காரணத்தால் தன்னிடம் உள்ள செல்வத்துக்காகத்தான் அவர்கள் தன்னிடம் நெருங்கிப் பழக விரும்புகிறார்கள் என்று எண்ணினான். அதனாலேயே அவர்கள் எல்லோரிடமும் இருந்து விலகி இருக்க விரும்பினான். 

உண்மையில் அவன் நினைத்தது சரிதான். அவனை நெருங்கிப் பழக நினைத்தவர்கள் பலரும், ஒரேயொருவனைத் தவிர, அவனிடமிருந்த செல்வத்தின் காரணமாகவே சுற்றி வந்தார்கள். அவர்களிடம் போதிய பணம் இல்லை. சரியாகச் சொல்லப்போனால், போதிய அளவு பணம் தங்களிடம் இல்லை என்றும் அவனிடம் அளவுக்கு அதிகமாகச் செல்வம் குவிந்திருக்கிறது என்றும் அதிலிருந்து சிறிதளவு பணத்தைத் தங்களுக்குக் கொடுப்பதால் அவனுக்கு எந்தக் குறைவும் வரப்போவதில்லை, ஆனால் அது தங்களது வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடும் என்றும் நம்பினார்கள். செல்வந்தனின் பணத்தின் மேலும் அது உருவாக்கித் தரக்கூடிய எதிர்காலத்தின் மீதும் சிறிதும் நாட்டமின்றி இருந்த அந்த ஒரேயொரு நபரும் தற்கொலை செய்துகொண்டான். 

தனது மாளிகையின் வரவேற்பறையில் பளிங்குத் தரையின் மேல் படுத்துக் கிடந்த செல்வந்தன் தன் மீதே கழிவிரக்கம் கொண்டான். இலையுதிர் காலத்தின் இதமான ஒரு நாள், பளிங்குத் தரையின் குளிர்ச்சி அவனது உடலைத் தழுவியிருந்தது. ஆனால் இவையெதுவும் அவன் தனக்காக வருந்துவதைத் தடுக்க முடியவில்லை. “எனக்கு வேண்டிய, என்னை சந்தோஷப்படுத்தும் ஏதோவொன்று இந்த உலகத்தில் உள்ளது. இன்னொருவன் தன் வாழ்நாள் முழுவதும் செலவு செய்து அடைய முயலும் அந்த ஒன்றை என்னால் அதிக முயற்சி ஏதுமில்லாமல் அடைந்துவிட முடியும்” என்றெண்ணினான். ஆனால், அவன் மனத்தில் எதுவும் தோன்றவில்லை. நான்கு நாட்கள் முழுவதும் தரையிலேயே படுத்துக் கிடந்திருந்தான். அவனது அலைபேசி ஒலித்தது. மறுமுனையில் அவனது தாயார். பிறந்த நாளுக்காக வாழ்த்துச் சொல்ல அழைத்திருந்தார். மிகவும் வயதான அவளிடம் இன்னும் மிச்சமாய் எஞ்சியிருந்த ஞாபகச் செல்களில் உறவினர்கள் சிலரது பெயர்களும் சில தேதிகளும் மட்டுமே சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.

அவளது குரலைக் கேட்ட செல்வந்தன் மிகவும் குதூகலம் கொண்டான். இருவரும் பேசி முடித்த அதே தருணத்தில் அழைப்பு மணி ஒலித்தது. பிறந்தநாள் வாழ்த்து அட்டையுடன் கூடிய ஒரு பூங்கொத்துடன் தலைக்கவசமணிந்த ஒரு விநியோகச் சிப்பந்தி கதவருகே நின்றிருந்தார். பூக்களை அனுப்பியிருந்த அந்த நபர் நல்லவர் இல்லையென்றாலும் பூக்கள் மிகவும் அழகாயிருந்தன. செல்வந்தனை அவை மிகவும் குதூகலப்படுத்தின. அந்தக் கணத்தின் சந்தோஷம் மொத்தமும் அவனது மூளைக்குள் புதிய வியாபார யோசனையை உண்டாக்கியது. ஒரு பிறந்தநாள் இத்தனை மகிழ்ச்சியை அளிக்க முடிகிறது என்றால் ஒரு வருடத்தில் ஏன் ஒரேயொரு பிறந்தநாளோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்? 

பிறரின் பிறந்தநாட்களை விலைக்கு வாங்கத் தயாராக இருப்பதாய் நாளிதழ் ஒன்றில் பிரம்மாண்டமாக விளம்பரம் தரத் தீர்மானித்தான் செல்வந்தன். அதன் பொருள் உண்மையிலேயே பிறந்த நாட்களை வாங்குவதல்ல. அவற்றை வாங்கவும் முடியாது. அவன் வாங்க நினைத்தது பிறந்த நாட்களின்போது கிடைக்கும் பெறுமதிகளையும் வாழ்த்து அட்டைகளையும் கொண்டாட்டங்களையும்தான். இதற்கான எதிர்வினை பிரமாதமாக இருந்தது. அதற்குக் காரணம் அந்தச் சமயத்தில் நிலவிய பொருளாதார மந்த நிலையோ அல்லது எவரும் தத்தமது பிறந்த நாட்களை அத்தனை முக்கியமானதாவோ மதிப்பு மிகுந்ததாகவோ கருதவில்லை என்பதாகவோ இருக்கலாம். காரணங்கள் எதுவாக இருந்தபோதும் அடுத்த ஒரு வாரத்துக்குள் செல்வந்தனின் நாட்குறிப்பில் எல்லாத் தேதிகளும் பிறந்தநாட்களால் நிறைந்துபோயின. 

பிறந்தநாளை விற்பவர்கள் பலரும் நேர்மையானவர்கள். முதியவர் ஒருவர் மட்டும் சில ஈர முத்தங்களையும் பேரன் பேத்திகள் வரைந்து அவருக்காக அளித்த அசிங்கமான ஓவியத்தையும் தனக்காக எடுத்து வைத்துக்கொண்டார். மற்ற அனைவரும் ஒப்பந்தக் கடிதத்தில் எழுதித் தந்தது போல பிறந்த நாளில் தமக்குக் கிடைத்த எல்லாவற்றையும், அச்சுறுத்தலோ அல்லது வழக்காடவோ தேவையின்றி அவனிடம் ஒப்படைத்துவிட்டனர்.

இதனால் ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஏராளமான நட்பார்ந்த அழைப்புகள். எப்போதுமே அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டி வாழ்த்தினர். அவன் எதிர்பாராத விதமாக நிறைய குழந்தைகளும் மூதாட்டிகளும் தொலைபேசி மூலமாக அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடிப் பாராட்டினார்கள். அவனது மின்னஞ்சல் பெட்டி பிறந்த நாள் வாழ்த்துகளால் நிரம்பி வழிந்தது. இடைவெளி இல்லாமல் தொடர்ந்து அன்பளிப்புகள் வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தன. அவனது நாட்குறிப்பில் இன்னும் சில தேதிகள் காலியாக இருந்தன. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில். ஆனால் அவனது அலுவலக ஊழியர்கள் எண்ணற்ற கணித வரைபடங்களைக் காட்டி காலியாக இருக்கும் சில தேதிகளும்கூட விரைவில் நிரம்பிவிடும் என்று விளக்கினார்கள். 

செல்வந்தனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பிறந்த நாட்களை இவ்வாறு விலைக்கு வாங்குவது நேர்மையற்ற செயல் என்று பிறரது துரதிர்ஷ்டத்தைக் கண்டு மனம் வருந்தும் யாரோ ஒருவர் எழுதிய ஒரு கட்டுரையை நாளிதழ் ஒன்று நடுப்பக்கத்தில் பிரசுரித்திருந்தது. ஆனால் அதுவும்கூட அவனது உற்சாகமான மனநிலையை ஒன்றும் செய்துவிடவில்லை. அன்றைய நாள் ஒரு பதினெட்டு வயதுப் பெண்ணின் பிறந்தநாளை அவன் கொண்டாடிக்கொண்டிருந்த போது அவளது நெருங்கிய நண்பர்களிடமிருந்து வந்த மனத்தைத் தொடும் வாழ்த்துகள் பலவும் முன்பறியாத, ஆனால் சுவாரஸ்யமான, எதிர்காலத்தை அவன் முன்னால் இருப்பதாக உணரச் செய்தன. 

அந்த அற்புதமான காலம் மார்ச் முதல் தேதியன்று முடிந்துபோனது. மனைவியை இழந்த கோபக்காரன் ஒருவனின் பிறந்தநாளை அன்றைய தினம் அவன் கொண்டாடவிருந்தான். விழித்தெழுந்த போது வாழ்த்து அட்டை ஒன்றுகூட வரவில்லை, தொலைபேசி அழைப்புகள் இல்லை என்று அறிந்தபோது சற்றே ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தான். ஏராளமான வசதிகளைக் கொண்ட அந்தச் செல்வந்தன், அந்த ஏமாற்றம் தன்னைப் பாதிக்காமல் இருக்க வேண்டுமெனத் தீர்மானித்து வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என முடிவுசெய்தான். நாட்குறிப்பை மீண்டும் பார்த்தான். மார்ச் ஒன்றாம் தேதி. எதையுமே செல்வந்தனிடமிருந்து எதிர்பார்க்காத அந்த ஒரேயொரு மனிதன் தற்கொலை செய்துகொண்ட நாள் என்று தெரிந்ததும் அவரது கல்லறைக்கு செல்ல முடிவுசெய்தான் செல்வந்தன். இறந்த நண்பரின் கல்லறைக்குச் சென்று சேர்ந்தபோது வருடாந்திர நினைவுச் சடங்கில் பங்கேற்கவென நிறைய பேர் வந்திருப்பதைப் பார்த்தான். அவர்கள் அழுதபடியே கல்லறையின் மீது செந்நிற மலர்களை அர்ப்பணித்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் தழுவியபடியே இறந்துபோன அந்த நண்பரை அடிக்கடி நினைத்துக்கொள்வதாகவும் அவரது மரணம் வாழ்வில் பெரும் வெற்றிடத்தை உருவாக்கியிருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள். 

செல்வந்தன் யோசித்தான். “இதில் ஏதோவொன்று இருப்பதாகப் படுகிறது. தங்கள் மீது பொழியப்படும் அன்பு முழுவதையும் இறந்து போனவர்களால் அனுபவிக்க முடியாது. ஆனால் என்னால் முடியும். மற்றவர்களது இறந்த நாட்களை என்னால் விலைக்கு வாங்க முடியும். இறந்து போனவர்களிடமிருந்து அல்ல, அவர்களின் வாரிசுகளிடமிருந்து. ஒரு பக்கத்திலிருந்து மட்டும் பார்க்க முடிகிற அடர்த்தியான கண்ணாடியால் மூடப்பட்ட ஒரு பெட்டியைக் கல்லறைக்கு அருகில் இருத்தி அதில் நான் படுத்துக்கொள்வேன். மற்றவர்களின் அழுகையையும் அவர்கள் எந்தளவுக்கு என்னை இழந்துவிட்டார்கள் என்பதையும் கேட்டவாறு உள்ளே இருப்பேன்.”

அதுவொரு சுவாரஸ்யமான யோசனை. ஆனால் செல்வந்தன் அந்த யோசனையைச் செயல்படுத்த உயிருடன் இல்லை. மறுநாள் காலையில் அவன் இறந்துபோனான். அவன் அண்மையில் கொண்டாடிய விழாக்களைப் போலவே அவனது மரணமும் வேறொருவருக்குச் சொந்தமானது. தோற்றுப்போன புரட்சியாளன் ஒருவனிடமிருந்து அவன் விலைக்கு வாங்கியிருந்த பிறந்த நாளுக்காக வந்திருந்த வெகுமதிகளின் கிழிக்கப்பட்ட காகிதப் பொட்டலங்களுக்கு நடுவே அவனது உடல் கிடந்தது. வெகுமதிகளில் ஒன்றில் வெடிமருந்தை வைத்து ஒரு கொடூரமான சர்வாதிகார அரசு அனுப்பியிருந்ததாகப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. 

செல்வந்தனின் சவ அடக்க நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அவர்கள் எல்லோரும் செல்வந்தனின் பணத்துக்காக ஆசைப்பட்டவர்கள். கூடவே அவனையும் விரும்பியவர்கள் அவர்கள். அவனை மணிக்கணக்கில் விதந்தோதியும் துயரப் பாடல்களை பாடியும் திறந்த கல்லறையின் மீது சின்னஞ்சிறு கற்களை அடுக்கியும் தங்கள் மரியாதையைச் செலுத்தினார்கள். அவை அனைத்தும் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தன. இறந்துபோன செல்வந்தனின் வாரிசுகளிடமிருந்து நினைவுச்சடங்கை விலைக்கு வாங்கி சவக்குழியின் ஆழத்தில் இருண்ட பெட்டியின் கீழேயிருந்து இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த சீன நாட்டு இளம் செல்வந்தன்கூட உணர்ச்சிவசப்பட்டு ஒரு துளி கண்ணீரைச் சிந்தினான். 

*

ஆங்கில மூலம்: The Birthday of a Failed Revolutionary by Etgar Keret, “Fly Already”, Published by Granta, 1st Edition, September 2019.