லலிதாம்பிகை

2 comments

பெசண்ட் நகர் மின் மயானத்தில் பார்த்த சிலைதான் அதுவென்பது அம்மோன நிலையிலும் எனக்குத் துலக்கமாக நினைவில் இருந்தது. பாதித் தூக்கத்திலும் இருந்தேன் அப்போது. அதற்கு முன் இந்தப் பெயரை அந்த நிறத்தில் யோசித்ததே இல்லை. கன்னங்கரிய மார்பிள் கல்லில் செதுக்கப்பட்ட பூரணமான சிலை. கையில் குழந்தையொன்றை ஏந்தியிருந்தது. கழுத்தில் மட்டரகமான பச்சை நிறத்தில் பாசி மணிமாலை தவழ்ந்தது. நெற்றியில் நாணயம் அளவிற்குச் சிவந்த பொட்டு. 

கையில் இருக்கிற குழந்தையின் முகத்தில் புன்னகை தென்பட்டது. லலிதாம்பிகையின் முகத்தை நெருக்கத்தில் பார்க்கக் கண் கூசியது. அடர்த்தியாய் மயானப் புகை மணத்தை என்னுள் உணர்ந்தேன். அந்தச் சிலையின் இடுப்புப் பகுதியை நோக்கிக் கண் போன போது அங்கே வாழைத்தண்டு அளவில் வெந்நிற ஒளியைப் பார்த்தேன், பிறப்புறுப்பு இருக்குமிடத்தில். பாசிமணிகளை நெருக்கமாகக் கோர்த்த மாலை போலவோ, மணம் கமழும் மல்லி மொட்டுகளைப் போலவோ மயக்கம் தந்தன. சட்டென அக்காட்சி எனக்குத் திகட்டிவிட்டது. அந்த நேரத்தில் சஞ்சனாவை நினைத்துப் பார்க்க அச்சமாகவும் இருந்தது. அசூயையை மனம் முழுக்கப் பரப்பிய அக்காட்சி திரும்ப வந்துவிடக் கூடாதென ஏங்கினேன். அக்காட்சியில் இருந்து விடுபட்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சஞ்சனா இரவு ஒரு மணிக்கு எனக்குத் தொலைபேசி செய்த போது, நான் நன்றாக விழித்துதான் இருந்தேன். ஆனால் பொய்யாக அவளிடம் தூக்கக் கலக்கத்தில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளலாமா என யோசித்தேன். அவள் அதையெல்லாம் சட்டையே செய்ய மாட்டாள் என்பதை அறிந்தும் வைத்திருந்தேன்.

இரண்டாவது தடவை அழைத்தால் எடுக்கலாம் என அனிச்சையாகத் தோன்றியது. அவளைப் பற்றிய எண்ணங்கள் தன்னியல்பாய் உற்பத்தியாகின. அவளைப் பொறுத்தவரை எதிரே தெரிகிற சுவர்கூட ஒரு காதே. எதை நோக்கியும் வார்த்தைகளை விசிறி அடித்தபடியே இருப்பாள்.

“உன்னுடைய வார்த்தைகள் சில சமயம் சாக்கடையில் கிடக்கிற துருப்பிடித்த பிளேடினை போல. அது என் தொண்டைக் குழியை தினமும் அறுக்கின்றன” எனக் குறுஞ்செய்தி அனுப்பிய நாளொன்றில்தான் எனக்கும் அவளுக்கும் பெருஞ்சண்டை மூண்டது. வழக்கமாகப் பிரிவை நோக்கிச் சண்டைகள் போகாது. “இல்ல. நீ என்னைப் பத்தி என்ன நினைக்கிறங்கறது உன் மனசில இருக்கு. அதான் வார்த்தைகளா வருது. நீ அடியாழத்தில என்னை வெறுக்கிற”. சஞ்சனா வெடித்து அழுதாள். வழக்கமான அவளுடைய போர்க் குரல்கள் மட்டுப்பட்டிருந்தன. அடங்கிய குரலில், ஆனால் கூர்மையாய் வார்த்தைகளை விசிறி அடிக்கத் துவங்கினாள். காதுகளில் ஓங்கி அறை விழுந்து மூளை வீங்கியதைப் போல உணர்ந்தேன்.

சஞ்சனாவின் இயல்பு அது. எதையும் அவளால் சமாதானமான நிதானமான மொழியில் முன்னெடுக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கிற குண்டைப் போல மூர்க்கமாகவே எதையும் அணுகுவாள். அவள் தன்னைச் சுற்றி இருக்கிற தவறுகளை எல்லாம் குற்றமாகப் பார்த்தாள். தன்னைக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவளாகக் கொண்டுபோய் நிறுத்தினாள். அந்தக் கோட்டைத் தெரியாத்தனமாகத் தாண்டினால்கூட ஒரு மூர்க்கமான நாயைப் போலக் கடிக்க வந்தாள். எந்நேரமும் யாரையாவது தண்டிப்பதை சமீபமாக இரசிக்கவும் துவங்கி இருந்தாள். துக்கத்தில் இருக்கிற போதுதான் அவள் அதிஉற்சாகமாக இருந்தாள். அதனாலேயே தன்னை அவ்வாறாகவே எண்ணிக்கொண்டாள்.

“அது என் நேச்சர். எதையும் சத்தமா சொல்றது. எதையும் என்னால மாத்திக்க முடியாது. இருந்தா இரு. இல்லாட்டி உனக்கு ஏத்த மாதிரி பிள்ளையா பார்த்திட்டு போ. எப்டீ பேசணும்னு எல்லாம் எனக்கு க்ளாஸ் எடுக்காத. உனக்கு ஷார்ப்னஸ் பத்தாது. கெட் லாஸ்ட்” என்றாள் கடைசிச் சண்டையில்.

சஞ்சனாவை நான் கல்லூரியில் பார்த்தபோது அவள் இவ்வாறில்லை. எதற்கெடுத்தாலும் உணர்வுகளின் உச்சத்தில்தான் அப்போதும் இருந்தாள் என்றாலும், தோளில் கரம் போட்டுவிட்டால், உடனடியாகவே தணிந்துவிடுவாள். பல நேரங்களில் அப்படிக் கோபம் அடைந்ததற்கு நெஞ்சின் ஆழத்தில் இருந்து வருத்தங்களையும் தெரிவித்திருக்கிறாள். ஆனால் இப்போதெல்லாம் வருத்தங்கள் தெரிவிக்கிற பழக்கத்தையும் விட்டிருந்தாள். தன்னை முன்னிலைப்படுத்தி ஒரு புகைமூட்டத்தை உருவாக்குகிறாள் என்பதை அறிகிற நுண்ணுணர்வை இழந்திருந்தாள். அவளது கேட்கும் திறன் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டது. ஒருகட்டத்தில் அவள் தனக்குக் காது இருப்பதையே மறந்துபோனாள். வார்த்தைகளை முரசைப் போல எறிந்து முன்னோக்கிப் போனாள். எவருடைய தயவும் தனக்குத் தேவையில்லை என்கிற உச்சாணியில் அமர்ந்தாள். கையறு நிலையை அகமார அவள் விரும்பினாள்.

அவளை அவளுடைய தாயாராலும் கட்டுப்படுத்த இயலவில்லை. சஞ்சனாவின் அம்மாவும் அவளைக் கண்டு பயந்தார். மனதளவில் அவர் தன்னுடைய மகளைக் கைவிட்டிருந்தார். அவள் எடுக்கிற எல்லா முடிவுகளுக்கும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அவளிடமிருந்து தப்பித்து ஓடுகிற முனைப்பிலேயே இருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு கண்டங்கத்தரியைப் போலக் கசந்திருந்தது.

சஞ்சனா ஒன்றாம் வகுப்பு படிக்கையில் அவளுடைய அப்பா இறந்து போனார். அதற்கடுத்து இன்னொரு திருமணம் செய்துகொள்ளாமல் தன்னை வளர்த்தெடுத்த அம்மா குறித்து கல்லூரிக் காலங்களில் பெருமையாய்க் கதை சொல்வாள். எந்தப் புள்ளியில் அவள் இப்படி நேர் எதிர் மாதிரி மாறினாள் என்பதும் என்னால் கணிக்க முடியவில்லை.

சின்ன வயதில் அவளுடைய அம்மா அலுவலகம் சென்ற பிறகு, சஞ்சனாவிற்குத் தொலைபேசி ஒன்றே கதி. அவள் தன் பால்யத்தில் நேரத்தைக் கொல்ல எதையாவது யாரிடமாவது பேசியபடியே இருந்தாள். ஆனால் அதற்கு நேர் எதிரான சத்தங்கள் இல்லாத உலகத்தில் இருந்து வந்தவன் நான். சோற்றுக்கு இல்லாமல்கூட கிடந்திருக்கிறோம். ஆனால் சண்டை சச்சரவுகளே வீட்டில் நடந்ததில்லை. கொசுக்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதைப் போல, சத்தமே இல்லாமல் எதையும் பேசித் தீர்த்துக்கொள்வோம்.

சஞ்சனாவோடு எதற்கெடுத்தாலும் நித்தமும் கட்டிப்புரண்டு சண்டை போட வேண்டியிருந்தது. அடிக்கடி மூச்சு முட்டுவதைப் போல உணர்ந்தேன். அவள் என்னை வேண்டாம் என்று சொல்லிக் கிளம்பிப் போன நாளில் கொஞ்சம் ஆசுவாசமும் அடைந்தேன். பறவையொன்றைக் கூண்டிலிருந்து விடுவிக்கிற காட்சி ஒன்று நினைவில் வந்தது. யார் யாரைப் பறக்க விடுவது? 

என்னிடமிருந்து பிரிந்த மூன்று மாதங்களில் அவளுக்குப் பிரதீப்போடு உறவு ஏற்பட்ட போது, வீம்பிற்காகத்தான் அவள் அப்படிச் செய்வதாகத் தோன்றியது. ஒருவகையில் அவள் திரும்பி என்னை நோக்கி வரமாட்டாள் என்பதில் எனக்குத் திருப்தியும் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை மறக்கத் துவங்கினேன். கொஞ்சநாள் வேறு எந்தப் பெண் சகவாசமும் தேவையே இல்லை என்கிற அளவிற்கு சலிப்படைந்து இருந்தேன். சுயமைதுனங்களில்கூட சஞ்சனாவிற்கு இடமில்லை. 

அவளுடைய அம்மாவின் ஒப்புதலோடுதான் பிரதீப்போடு திருமணம் நடந்ததாக நண்பர்கள் வட்டத்தில் பேசிக்கொண்டார்கள். அதெப்படி நல்ல புத்தியை அவர் சொல்லிக்கொடுக்காமலா இருந்திருப்பார்? கேட்டிருக்காது அவளுக்கு. அவள் யாருமே எதுவுமே என்னைக் கேட்கக்கூடாது என்கிற உச்சியில் போய் உளமார நின்றாள். கடவுள்கூட அவளுலகத்தில் இல்லை. பிறகு யார் பேச்சைத்தான் கேட்பாள்? அவளே அவளுக்குள் கேட்டால்தான் உண்டு. அந்தத் திருமணம் நடந்த போது, மூணாறில் அறை எடுத்து நான் விடிய விடியக் குடித்துக்கொண்டிருந்தேன். நெஞ்சிலிருந்து கசப்பும் புளிப்புமாய் கோழை வாந்தியாய் வெளியேறிக்கொண்டிருந்தது. நெஞ்சைப் போர்த்தி கசப்பு எரிந்து பரவியது.

அதுவரை திரண்ட அத்தனையையும் நான் கக்கி முடித்த பிறகு சஞ்சனாவை மறந்திருந்தேன். அவளுடைய பார்வையில் படாத இடங்களில் உலவத் தொடங்கினேன். அவ்வப்போது சஞ்சனா குறித்து உப்புக்கரசலைப் போல, வாந்தியெடுக்கத் தூண்டுகிற நமைச்சல் செய்திகளைக் கேட்பேன். உதட்டிற்குப் பக்கத்தில் இரத்தக் காயத்தோடு பிரதீப்பை ஒரு தடவை காஸ்மோபாலிடன் கிளப்பில் வைத்துப் பார்த்தேன்.

விஷயத்தை விசாரித்த போது அதிர்ச்சியாய் இருந்தது. எந்நேரமும் எதையாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற இக்கட்டான நிலையில் சஞ்சனா இருக்கிறாளாம். இவனால் பேசி மாளவில்லை என்பதால் உதட்டில் காயம் பண்ணித் தப்பித்துக்கொண்டானாம், தற்காலிகமாக. கேட்ட போது, ஒரு வார்த்தை சஞ்சனா குறித்து அவனிடம் சொல்லியிருக்கலாமோ என்கிற குற்றவுணர்வு எழுந்தது. சொல்லி இருந்தால் அவனுமே பெருமைக்காக அந்தத் தங்கக் குண்டூசி கொண்டு குத்துவதையே விரும்பி இருப்பான். சஞ்சனாவிடம் மிதமிஞ்சிய பணம் இருந்தது. சும்மா சொல்லக் கூடாது. வெறுப்பில்லாத சமயங்களில் அவள் யாரையும் ஒரு குழந்தையைப் போல போஷிப்பாள்.

எனக்கே நகம் வெட்டி விட்டு, உணவை ஊட்டி விடுவாள். கன்னத்தில் குழந்தையைப் போல விடாமல் சத்தம் போட்டு முத்தங்கள் கொடுத்துக்கொண்டிருப்பாள். மெல்ல நகர்த்தி மலையுச்சிக்கு அழைத்துப் போய், அங்கே இருந்து பொத்தென கீழே தள்ளிவிடுவாள். குத்திக் கிழிக்கிற வார்த்தைகள் வழிகிற பெரும்பாறையில் மோதிச் சிதறிக் கீழே வந்து விழுவோம்.

“அதெப்படி கீழே விழுந்தா உதட்டில ப்ளேட வச்சு வெட்டுனாப்பில காயம்? அவளுக்கு யோசிக்கத் தோணாதா?” என்றான் நண்பன் ஒருத்தன். 

பிரதீப்பின் மிச்சம் இருக்கும் வாழ்வு குறித்து நான் அனுதாபம் கொண்டேன். “அவள் அதையெல்லாம் புரிஞ்சுக்கிற கட்டத்தை தாண்டிட்டா. வன்மத்தை ரசிக்க ஆரம்பிச்சிட்டா. அவளுக்கு தோணறது மட்டும்தான் கரெக்டு. அதுதான் சரின்னு நம்ப ஆரம்பிச்சுட்டா” என்றேன் அவனிடம் பதிலுக்கு. 

அவன் போன பிறகு சஞ்சனா குறித்து யோசித்தேன். அவள் ஒரு சாவையோ தற்கொலையையோ நெருக்கத்தில் பார்க்காமல் ஓய மாட்டாள் என்று தோன்றியது. அப்போதாவது தன் நோக்கி அவள் கேள்வி கேட்பாளா? அவள் ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை என்பதை நினைக்கையில், கசப்பு நெஞ்சில் பரவியது.

அவளை நெஞ்சோடு அணைப்பதைப் போல நினைத்த போது, ஊடாக உதட்டில் இரத்தக் காயத்தோடு பிரதீப் காட்சியாக வந்து நின்றான். அந்த வீட்டில் யார் முதலில் சாவார்கள் என்கிற சிந்தனை வந்த போது என் மீதே வெறுப்பு படர்ந்தது. நானில்லாமல் அவள் நன்றாகவே வாழ்ந்துவிடக் கூடாது என என் ஆழ்மனம் விரும்புகிறதா?

அவளைப் பற்றி எதுவும் எண்ணாமல் இருப்பதே சிறந்தது என்கிற முடிவிற்கு வந்துசேர்ந்தேன். அவள் நினைவிற்கு வருகிற சமயங்களில், எனக்குத் துவக்கத்தில் அவள் செய்த நற்காரியங்களை எண்ணிக்கொள்வேன். அவளைப் பற்றிய நேர்மறையான செய்திகளை எண்ணங்களில் திரட்டப் போராடுவேன். அவ்வப்போது வெறுப்பு தலைதட்டினாலும், வலுக்கட்டாயமாக இனிப்பை அவளது நினைவுகளின் மீது தூவத் துவங்கினேன். பிறகு அதுவே அவள் குறித்த என் நினைப்பின் இயல்பாகவும் மாறிப் போனது.

இப்படியான தருணம் ஒன்றில், நெகிழ்வின் உச்சத்தில் அவளோடு பேசலாம் எனத் தொலைபேசியைத் தற்செயலாக எடுத்தேன். வேதாளத்தை மரத்திலிருந்து பிய்த்து முதுகில் ஏற்றாதே என்கிற சிந்தனையும் கூடவே வந்தது. முற்றிலும் அது நான் திட்டமிடவே செய்திராத சிந்தனை. அதுதான் என் இயல்பா? அதையா அவள் சுட்டிக்காட்டினாள்? இந்தச் சிந்தனை அவளோடு இருந்த காலத்தில் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

பிரதீப்போடு ஒருநாள் அவளைக் கையாள்வது குறித்து மனம்விட்டுப் பேச வேண்டுமென எண்ணிக்கொண்டேன். வேப்பம் பழத்திலிருந்து எழும் இனிப்புச் சுவை நாக்கில் படர்ந்தது. அவளைத் திரும்பப் பார்க்கிற நாள் அதுவாகவே அமையட்டும் எனக் காத்திருந்தேன். அவளைக் கல்லூரிக் காலத்தில் பார்த்த சஞ்சனாவாக திரும்பவும் நெஞ்சில் ஏந்த வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது. ஏதோ ஒரு நம்பிக்கையோடு பிரதீப்பை அவளோடு இருத்தி வைத்து வலுக்கட்டாயமாக யோசித்தேன்.

பத்து நிமிட இடைவெளிக்குப் பிறகு சஞ்சனாவின் தொலைபேசி அழைப்பு மீண்டும் வந்தது. இரையாய் அகப்பட்ட மானொன்றைப் போல உள்ளம் ஒருகணம் ஒடிந்து அதிர்ந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, அவளது குரலைக் கேட்பது குறித்த பதற்றமே முந்தி நின்றது அப்போது. கவனமாக அழைப்பை உயிர்ப்பித்து, காதைக் கொடுத்தேன். இந்தக் குறுகிய இடைவெளியில் மரணங்கள் பலவற்றை நெருக்கத்தில் பார்த்துவிட்டேன். அதனால் அவளை வாரியணைத்து வாடி இராசாத்தி எனச் சொல்லத் தயாராய் உள்ளுக்குள் ஒரு குரல் உழற்றியும் கொண்டிருந்தது.

“ஏன் ரெண்டாவது தடவை கூப்ட மாட்டேன்னு நெனைச்சியா?” என்றாள் எடுத்த எடுப்பில். அவள் கூர்மையாய்த் தாக்கப்பட்டவளைப் போல உணர்ந்து விட்டாள் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்து கவனமாகப் பேசத் துவங்கினேன். 

அவள் குரலில் ஒரு பதற்றம் இருந்தது. அவள் சொல்ல வரும் விஷயத்தைவிட, கணக்குத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அவளுடைய முனைப்பே முன் நின்றது. விசிற வார்த்தைகளை அந்தரத்தில் தேடிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தின் அழைப்பின் நோக்கம் என்னவாக இருக்கக்கூடும் என நான் எண்ணத் துவங்கினேன். 

“சஞ்சனா ஏதாச்சும் பிரச்சினையா? முதல்ல அதைச் சொல்லு. அப்புறமா ஆற அமர என்னைக் குத்தலாம். எங்க போயிடப் போறேன்?” என்றேன். 

“ஆமாம் சரிதான். ஆனால் உன்னைக் குத்துவதற்கு நான் யார்? என் அதிகாரங்கள் போய் விட்டன. உன்னைக் குழந்தையைப் போல் பார்த்துக்கொண்டேன். நீ எனக்கு பைத்தியப் பட்டத்தைக் கட்டினாய். உன்னைத் தவிர எல்லோருமே சமநிலை குலைந்தவர்கள்தான் உனக்கு. நீ குத்திக் காட்டுவதற்காக சம்பவங்கள் நடைபெற வேண்டும் என வேண்டிக்கொள்பவன்”. அவள் நீட்டித்துக்கொண்டே போனாள்.

ஊரடங்கு காலத்தின் ஆம்புலன்ஸ் உறுமல்களை ஏற்கனவே நிறையப் பார்த்திருந்ததால், அவசர அழைப்பொன்றை எப்போதும் அறிந்திருந்தேன். “அம்மாக்கு உடம்பு எப்டீ இருக்கு? பிரதீப் எங்க இருக்கான்?” என்றேன் அவசரமாக. “அவனைப் பற்றி ஒரு வார்த்தைகூட என்னிடம் பேசாதே. அவன் உன் உளவாளி. மானம் கெட்டவன்” என்றாள்.

“கடைசி வரை உன் அம்மாவிற்கு என்ன ஆனது என்பதைச் சொல்லவே போவதில்லை. அப்படித்தானே?” என்றேன் சலிப்பாய்.

“அம்மாவுக்கு கோவிட் பாஸிட்டிவ். மூச்சு திணறுது” என்றாள்.

“சி டி ஸ்கோர் என்ன? ஆக்சிஜன் லெவல் என்ன?” எனப் பரபரத்தேன். 

“நீ எப்ப டாக்டருக்கு படிச்ச? நீ ஒரு அடிமுட்டாள்” என இளித்துக்கொண்டாள். அமுதமான மனநிலையில் இதைச் சொன்னாள் என்பதை உணர்ந்ததும் எனக்கே சிரிப்பு வந்துவிட்டது. இறுதிச் சிரிப்பு அதுவாக இருக்குமோ எனவும் தோன்றியது. நான் பரிதாபமாக அவள் குறித்து எண்ணியபடி அமைதியாக இருந்தேன்.

அவள் அமைதியாக பெருமூச்சு விட்டபடி அந்தப் பக்கத்தில் இருந்தாள். அந்த அமைதியைக் குலைத்துவிடக் கூடாதென நானும் கவனமாகக் காத்திருந்தேன். 

“உடனடியா ஒரு ஐ சி யூ பெட் வேணும் அம்மாக்கு” என்றாள்.

நான் அவளுக்கு போனில் கட்டளை பிறப்பிக்கத் துவங்கினேன். ஆம்புலன்ஸ் வசதி? அவள் எல்லா முயற்சிகளையும் செய்து முடித்திருந்தாள். டிராவல்ஸ் ஒன்றில் காருக்கு சொல்லி இருந்தாள். அவளை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விரையச் சொன்னேன். “சஞ்சனா இது ஆற அமர செய்ற காரியம் இல்லை. சட்டுனு ஆக்ட் பண்ணனும். உன் கணக்கைத் தீர்க்கிற நேரமில்லை இது” என்றேன்.

“குத்திக் காட்டுறீயா?” என்று சொல்லிவிட்டு அமைதியானாள். ஒருவழியாய் அவளையும் அம்மாவையும் காரில் கிளப்பி இருந்தேன். அவர்களை ராயப்பேட்டைக்கு விரையச் சொல்லிவிட்டு, நான் வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளைத் தேடத் துவங்கினேன்.

எழுந்து விளக்கை போட்டு செயின்றெமி போத்தலில் இருந்து திரவத்தைக் கண்ணாடித் தம்ளரில் நிரப்பிக்கொண்டேன். அதை இரசித்துக் குடித்தபடி நான் ஒவ்வொரு மருத்துவமனையாக அழைத்துப் பேசத் துவங்கினேன். ஒவ்வொரு இடத்திலும் இல்லை என்று மறுத்துக்கொண்டே இருந்தார்கள். பல மருத்துவமனைகள் தொலைபேசி அழைப்பைக்கூட ஏற்கவில்லை. 

இடையில் ராயப்பேட்டையில் இருந்து சஞ்சனா அழைத்திருந்தாள். “ஒழுங்கா சொல்ல மாட்டீயா? இங்க நீ சொல்ற பேர்ல யாருமே இல்லை. அவங்க இங்க ட்ரீட்மெண்ட் தர மாட்டாங்களாம். ஓமந்தூரார் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிப் போகச் சொல்றாங்க” என்றாள். சொல்லும் போதே அவளுக்கும் மூச்சு வாங்குவதைப் போல இருந்தது. அவளுக்கும் கோவிட் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதையும் உணர்ந்தேன்.

ஆனால் அதை வெளிப்படையாகக் கேட்கப் பயமாக இருந்தது. அவளைக் கிளம்பி ஓமந்தூரார் போகச் சொன்ன போது, அந்தப் பக்கத்தில் அமைதியாக இருந்தாள். இரண்டாவது தடவை அதை அழுத்திச் சொல்ல வேண்டியிருந்தது.

“அப்ப நீ கிளம்பி வர மாட்ட?” என்றாள் கூர்மையான குரலில். நான் ஏன் போக வேண்டும் என்கிற எதிர்ப்புணர்வு எழுந்தது முதலில். பிரதீப்புடைய பொறுப்பு அது என எண்ணினேன். ஆனால் அவள் அப்படிக் கருதவில்லை என்பது போலப் பேசத் துவங்கினாள்.

“இந்த நேரத்தில நான் உன் இடத்தில இருந்தா கிளம்பி ஓடி வந்திருப்பேன். சொல்லிக் காட்டறதுக்காக சொல்லலை. உனக்கு உடம்பு சரி இல்லாதப்ப ஐ சி யூ வாசல்லயே கெடந்தவ. ஒன்னுக்குமே வொர்த் இல்லை” என்ற போது என்ன பதில் பேசுவதெனத் தெரியாமல் அமைதியாக இருந்தேன்.

“அன்பைக்கூட வலுக்கட்டாயமா கேட்டு கேட்டா வாங்குவாங்க? அதெல்லாம் தானா வரணும்” என்றாள். நான் வலுக்கட்டாயமாக எழுந்து சட்டையைப் போட்டேன். அப்போது ஓமந்தூரார் மருத்துவமனையிலும் கோவிட் நோயாளிகளைச் சேர்ப்பதில்லை எனச் சொல்லி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை நோக்கிப் போகச் சொன்னார்கள்.

என் காரை எடுத்துக் கிளப்பி அவளோடு பேசியபடி ஓட்டிக்கொண்டு போனேன். நான்கு சர்ஜரி மாஸ்க் போட்டு அதற்கு மேல் என் நைண்ட்டி பைவ் மாஸ்க் ஒன்று போட்டிருந்தேன். சானிடைசரை அடிக்கடி பயன்படுத்தும் பழக்கத்திலும் இருந்தேன் அப்போது. கார் கண்ணாடிகளை அவசரமாக இறக்கிவிட்டேன். பூட்டியிருந்தால் அச்சமாக இருந்தது.

கோவிட் மரணங்கள் பலவற்றை நெருக்கத்தில் பார்த்துவிட்டதால் மரண பயம் என்னையும் தொடர்ந்தது. இந்த ஊரடங்கு முழுவதும் வீட்டை விட்டே வெளியேறவில்லை. சகலமும் வீட்டிற்குள்ளே இருந்தது. “தெருத் தெருவா இப்டீ தனியா நாய் மாதிரி சுத்துவ அப்படீன்னு ஒருதடவை சொன்ன. அது நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு” என்றாள். “உன் ஆணவம் வேறு எப்டீதான் அடங்கும்” என்றேன் எதையும் யோசிக்காமல். 

“அப்ப அது நடக்கணும்னு உனக்கு வேண்டுதல்” எனச் சொல்லிவிட்டுத் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தாள். 

அப்படியே திரும்பிப் போய்விடலாமா என யோசித்தேன். அப்படிப் போகக் குற்றவுணர்வு தடுத்தது. வெளியில் நின்றாவது பார்த்துவிட்டு வரலாம் என அவளைத் திரும்பி அழைக்காமல் ராஜீவ்காந்தி மருத்துவமனை நோக்கிப் போனேன்.

தூரத்தில் அவள் நகத்தைக் கடித்தபடி நின்றிருந்தாள். கார் டிரைவர் எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பரிதாபமாக நின்றார். இருகரம் நீட்டி வாவெனச் சொல்லவில்லையே தவிர, அவள் தூரத்தில் இருந்து விழிகளால் இறைஞ்சியபடி இருந்தாள்.

தூரத்தில் நடந்து போன போதே, அவளை மாஸ்க் அணியச் சொன்னேன். ஆனால் அதைக் கேட்காதது போல அவள் திரும்பிக்கொண்டாள். அப்படியே திரும்பிப் போய்விடலாமா என எரிச்சலும் வந்தது. எதற்காக என் உயிரைப் பணயம் வைக்க வேண்டும்? இவ்வளவு நாள் ஆண்டு அனுபவித்த பிரதீப் எங்கே போனான்? நான் தள்ளி நின்றேன் அவர்களிடம் இருந்து. அதை உணர்ந்தே இருந்தாள் அவளும்.

“நீ ஸ்போர்ட்ஸ்மேன்ங்கறதால இந்த உதாரணத்தை சொல்றேன். அதுவும் இந்த நேரத்தில. என் நேரம் உன்ட்ட எல்லாம் பேச்சு கேட்கணும். இந்தக் கையால எவ்ளோ அள்ளிக்கொடுத்திருப்பேன்” என்றாள் சத்தமாக. 

“எதையோ சொல்ல வந்தாய்?” என மடைமாற்றினேன். அப்படியே இன்னொன்றிற்குத் தாவிவிடுவது அவளது இயல்பு. ஒருவேளை அது அவளுடைய பலம்தானா? நீரையும் நெருப்பையும் எப்படி ஒரே குச்சியில் ஒருசேரக் கட்டிப்போட முடியும்? பாதாளத்தில் விழுந்து விழுந்து எழுவது அவளுக்கு வேண்டுமானால் இரசிக்க உகந்ததாக இருக்கலாம். எனக்கென்ன தலையெழுத்தா? இந்நேரம் அந்த உறவில் இருந்திருந்தால் என் குருவி இதயம் வெடித்திருக்கும் என்று தோன்றியது.

“பிட்ச்ல பந்தை பாக்குறது மட்டும்தான் மேனுவல். மத்தது எல்லாமே ஆட்டோமெட்டிக். அதுவா வரணும். உனக்கு என் மேல அதுவா வரவே இல்லை எதுவும். ஆனா எனக்கு அப்படி வந்திருக்கு” என்றாள் எதையோ திரட்டிச் சொல்கிறாள் என்ற உணர்வோடு.

அவளுடைய அம்மாவைக் காரில் இருந்து இறக்க முடியாமல் போராடிக்கொண்டிருந்தார் ட்ரைவர். பார்க்கப் பாவமாக இருந்தது. அவரிடம் உண்மையைச் சொல்லியிருந்தால், ஐந்து ரூபாய் துணி மாஸ்க்காவது போட்டுக்கொண்டு வந்திருப்பார். 

அவரது பாதுகாப்பு குறித்து அவள் யோசிக்காமல் இருந்தது குறித்து நினைக்கையில் வெறுப்பு எழுந்தது. “எப்பயுமே ரோட்டில போறவனா நானான்னு கேட்டா, நீ என்னைக் கைவிட்டிருவ” என முன்பு ஒருதடவை அவள் கேட்டது நினைவிற்கு வந்தது. ஏழையென்றால் இளக்காரம் அவளுக்கு. “நடு வீட்ல வச்சாலும் நாய் நடுத்தெருவிற்குத்தானே போகும்” என்றுகூட வெறுப்பில் ஒருதடவை சொல்லி இருக்கிறாள். 

“இப்ப எவ்ளோ காசு குடுத்தாலும் ஹாஸ்பிட்டல் கிடைக்காது” என்றேன்.

“நீ ஐ சி யூல கெடந்தப்ப அந்தக் காசுதான காப்பத்துச்சு” என்றாள் உடனடியாக.

என்ன செய்வது எனத் தெரியாமல் நான் தள்ளி நின்று டிரைவருக்கு கட்டளைகள் இட்டுக்கொண்டிருந்தேன். அங்கு உலவிய மனிதர்களில் பலர் எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களையும் அணியவில்லை என்பதைப் பார்த்தேன். அன்பு அப்படி ஓட வைத்து விடுகிறது. என்னை ஓடவிடாமல் தடுப்பது எது?

சஞ்சனா ஓடிப்போய் அவளுடைய அம்மாவின் காலைத் தூக்கி தள்ளுவண்டியில் வைக்கப் போராடினாள். அவளுடைய அம்மாவால் எழுந்து நிற்கவே முடியவில்லை. காலையில் இருந்து வாந்தியாம் என்றான் ட்ரைவர். இங்கிருந்து அப்படியே திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட வேண்டும் அல்லது தள்ளி நிற்காமல் களத்தில் குதித்துவிட வேண்டும்.

உடனே அங்கிருந்து நகர்ந்து தள்ளிப்போய் ஒரு சிகரெட் குடித்தேன். போய்விடலாமா? உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு போய்விடலாம் என மெல்ல விலகி நின்று பார்த்தேன். அவளுடைய அம்மாவை இன்னும் காரிலிருந்து இறக்கி வைக்க முடியவில்லை. காரில் சரிந்து அலங்கோலமாகக் கிடந்தார் அவர். என்னையறியாமல் அவர்களை நோக்கி நடக்கத் துவங்கினேன். காருக்குப் பின்புறமாய் போய் நின்ற போது, “நிதானமா ஒரு சிகரெட் குடிச்சிட்டீல்ல? உனக்கு அந்த வாய்ப்பிருக்கு. எனக்கு இல்லை” என்றாள்.

என்ன பதில் சொல்வது என விளங்காமல் அவளுடைய அம்மாவின் காலை கையால் தொட்டேன். சஞ்சனா மாஸ்க்கை எடுத்து அணிந்துகொண்டாள். மூவரும் சேர்ந்து அவளை நாற்காலியில் அமர வைத்தோம். இயற்கையாகவே நைந்து போயிருந்தாள் அவளுடைய அம்மா. சஞ்சனா குறித்த அச்சமும் எழுந்தது அப்போது. அவளுடைய அன்பெல்லாம் நிபந்தனைகளுக்கு உட்பட்டது மட்டுமே. வெறுப்பில் இருக்கையில் அவள்தான் மனமுவந்து சாகச் சொல்வாள். அப்போது அவளுடைய கண்களைப் பார்க்க வேண்டும், நன்றாக இரசித்து ருசித்துச் சொல்வாள் அதை.

நாற்காலியை அவள் தள்ளிக்கொண்டு போகையில், பின்னாலேயே போனேன். கோவிட் சிறப்பு வார்டு என்கிற பெயரில் ஒதுக்கப்பட்டிருந்த இடம் முழுக்க மனிதர்கள் கிடத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆக்ஸிஜன் குறைபாட்டால் ஒரு இளைஞனுக்கு கைகால் விறைத்துக்கொண்டு நின்றது. அவனது காலடியில் வாயில் நுரைதள்ள ஒரு மத்திய வயதுடைய பெண் வயிற்றைக் கவ்விப்பிடித்து உருண்டுகொண்டிருந்தார். சஞ்சனாவின் அம்மாவிற்கு அங்கும் இடம் இல்லை என மறுத்துவிட்டனர். வேண்டுமானால் ட்ரிப்ஸ் ஏற்றி முதலுதவி செய்ய மட்டும் ஒத்துக்கொண்டனர். அங்கேயும் ஆக்சிஜன் தட்டுப்பாடு.

அவர்களை உள்ளே அனுமதித்து விட்டு, வெளியே வந்து நின்றேன். சைக்கிளில் வைத்து விற்று வரும் டீயை வாங்கிக் குடிக்க நினைத்தேன். ஆனால் முகக் கவசத்தை அந்த இடத்தில் கழற்ற அச்சமாக இருந்தது.

இடையில் தொலைபேசி செய்து தனக்கு சார்ஜர் வேண்டும் என்றாள் சஞ்சனா. “உள்ள கொண்டு வர்றதுக்கு அவ்ளோ பயமா? ஏன் நான் இல்லை? உலகத்தில எந்த மூலையில போய் நுழைஞ்சாலும் கோவிட் வரணும்னா வரும். கெஞ்சிக் கெஞ்சிதான் உனக்கு தோண வைக்கணுமா?” என்றாள்.

கொண்டுபோய் தள்ளி நின்று நீட்டினேன் அதை. அவள் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள். மறுநாள் மதியம் அவளை அழைத்த போது, வேறு ஹாஸ்பிட்டலுக்கு மாறிவிட்டதாகச் சொன்னாள். அடிக்கடி அழைத்து நிலவரத்தைக் கேட்டுக்கொண்டேன். அவள் என்னைத் தள்ளி வைக்க முயல்வதை உணர்ந்தேன். 

“எந்த ஹாஸ்பிட்டல்?” என்ற போது, “ஏன் கிளம்பி வந்து அணைச்சுக்கப் போறீயா?” என்றாள்.

“அம்மாவுக்கு இப்ப ஆக்சிஜன் லெவல் எப்டீ இருக்கு? லங்க்ஸ் டேமேஜ் என்ன நிலையில இருக்கு?” என்றேன் மேனுவல் தோரணையில்.

“அவங்களுக்கு வாழ்றதில உள்ள விருப்பம் போச்சு போல. நைட்டெல்லாம் மாஸ்க்கை கழட்டிப் போட்டிர்றாங்க. கையை காலை கட்டிப் போட்டும் பார்த்தாச்சு” என்றாள். பிறகு இணைப்பை அவளே துண்டித்துவிட்டாள். என்னுடைய அழைப்புகளையும் அந்த நாள் முழுக்கப் பொருட்படுத்தவே இல்லை.

யாரிடமாவது விசாரித்து நேரே போய் நிற்கலாம் எனத் தோன்றியது. இடையில் ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி இருந்தாள். “ஐ சி யூவில் அம்மாவின் உடல் ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளவில்லை. உடலெங்கும் கொப்புளங்கள். நான் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்.”

என்ன முடிவு? மறுநாள் அவளே அழைத்தாள். “நாளை மறுநாள் காலை பெசண்ட் நகர் மின் மயானத்தில் சொல்லி வைக்க முடியுமா?” என்ற போது, “ஏன்? எதற்கு? எதையும் சொல்லிவிட்டுச் செய்ய மாட்டாயா? ” என்றேன் கடுமையாக.

“மேனுவல் வாழ்க்கையில் சொல்வதற்கு என்ன இருக்கிறது?” என்றாள். இந்த நேரத்திலுமா என எனக்கு எரிச்சல்தான் வந்தது. 

“சாவுக்காச்சும் தைரியமா கிளம்பி வருவீயா” என்றாள் தொலைபேசி செய்து. “உன்ட்ட எதுவுமே சாதாரணமா பேச முடியாது” என்று மட்டும் சொல்லிவிட்டு உடனடியாகக் கிளம்பினேன்.

கையில் மாலை ஒன்றை இடுக்கிக்கொண்டு, இன்னொரு கையில் அஸ்தியை எடுக்க மண் சட்டி ஒன்றை ஏந்தி நின்றாள். அந்தச் சூழ்நிலையில் அப்படி அவளைப் பார்த்த போது அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனாலும் ஒட்டிப்போய் நிற்க முடியவில்லை. அவள் வா வாவெனப் பார்வையால் இறைஞ்சிக்கொண்டிருந்தாள். தள்ளிப் போய் நான் நின்றுகொண்டேன்.

அந்த உடல் இறக்கப்படுவதை எட்டி நின்று பார்த்தேன். அவள் தனியாகப் போய் காரியங்கள் செய்து திரும்புவதை தூரத்தில் நின்று பார்த்த போது, இடையில் அவள் என் கண்களைச் சந்திக்கவே இல்லை என்பதை உணர்ந்தேன். நின்றுகொண்டிருந்த இடத்தில் தற்செயலாகத் திரும்பிப் பார்த்த போதுதான் அங்கிருந்த லலிதாம்பிகை சிலையை முதன்முறையாகப் பார்த்தேன். கொஞ்ச நேரம் அதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அஸ்தியோடு திரும்பி அவள் காரில் ஏறி அமர்ந்துவிட்டு, “அம்மாவோட லைப் சப்போர்ட்ட எடுக்க வேண்டிய முடிவு எடுக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் அவங்க ரெம்ப பட்டிருவாங்கன்னு சொன்னாங்க. அதான் எடுத்திட்டேன். ஹேப்பியா இருக்கட்டும் அவங்க. உன் வேண்டுதலும் பலிச்சிருக்கும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனித்தாள்.

நான் அமைதியாக அவளைப் பார்த்து நின்றுகொண்டிருந்த போது, “இப்ப கூர்மையா ஏதாச்சும் சொல்லி என்னைக் குத்தி கிழிக்கணுமே? ஏன் வார்த்தை வரலீயா?” என்றாள். ஒன்றும் பேசாமல் கிளம்பு எனச் சைகை காட்டினேன். வானை நோக்கி நிமிர்ந்து பார்த்த போது, மின் மயானத்தில் உயர் கூண்டின் வழியாக வெளியேறிய புகை தன் போக்கில் சித்திரங்களை வரைந்தது. தனியாக லலிதாம்பிகை சிலைக்கு முன்னால் நிற்கப் பயமாக இருந்தது. 

அங்கிருந்து ஓடி வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரம் குளித்தேன். இனியொரு தடவை அந்தச் சிலையைப் பார்க்கப் போகவே கூடாதெனத் தோன்றியது. 

கனவு நிலையில் கடைசியாய்க் காட்டிய சித்திரத்தில் இருந்தது பாசி மணியா மல்லி மொட்டா என்கிற குழப்பம் எதுவரை எனக்கு நீடிக்கும்?

2 comments

Rens August 30, 2021 - 11:07 am

Story narrated with covid worries .but the love inside the story melting. Lalithambikai sees everything
.

Kamalaparan Pararajasekaram August 30, 2021 - 2:48 pm

??????

Comments are closed.